கொரோனா ஊரடங்கு காலத்தில், முதலாளிகள் தமது தொழிலாளிகளுக்கு முழுமையாக சம்பளம் கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டது மத்திய அரசு. உடனே, “தொழிலாளிகள் எந்தவொரு வேலையும் செய்யாதபோது, சம்பளம் கொடுக்காமல் இருக்க ஒரு முதலாளிக்கு உரிமை உண்டு” என்று முதலாளின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றது உச்ச நீதிமன்றம். மத்திய அரசோ, நீதிமன்றத்துக்குச் சென்று பதில் அளிக்கும் வரைகூட காத்திராமல், தான் போட்ட உத்தரவை உடனடியாக வாபஸ் வாங்கியது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு ஒரு நிவாரணமாக அமைந்திருக்கும் இந்த உதவியை அரசு திரும்பப் பறித்துக் கொண்டது என்பது தற்செயலானதல்ல, அரசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒரு உத்தரவைப் போட்டதுதான் தற்செயலானதாக உள்ளது.

கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை இத்தனை ஆண்டுகாலம் குறைந்த கூலி கொடுத்து சுரண்டிக் கொழுத்த முதலாளிகளும், கமிசன் வாங்கிய ஒப்பந்தக்காரர்களும் கைவிட்ட நிலையில், அரசின் நிவாரணமோ உணவோ கிடைக்காதததால், உயிரைப் பணயம் வைத்து வேகாத வெயிலில் சொந்த கிராமங்களை நோக்கி நடந்து கொண்டிருக்கிறார்கள் தொழிலாளார்கள்.

காலில் செருப்பில்லாமல் நடப்போர், கைக்குழந்தையுடன் செல்வோர், கால் ஒடிந்த மனைவியைத் தோளில் சுமக்கும் கணவன், வெயில்கொடுமைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பாதிவழியில் செத்துமடியும் குழந்தைகள் – தொழிலாளிகள் எனக் காண்போரைக் கண்ணீர்விடச் செய்கின்றன புலம்பெயர்த் தொழிலாளரின் துயரங்கள்.

வருடக்கணக்கில் அடிமாட்டுக் கூலி கொடுத்து 12, 14 மணி நேரம் வேலைவாங்கிய முதலாளிகளுக்கு ஈவிரக்கம் இல்லாமல் போனது ஏன்? தானியக் கிடங்குகள் நிரம்பி வழியும் போதும், கோடிக்கணக்கான மக்களைப் பட்டினி போடுகிறதே அரசு, இது நியாயமா? உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இப்படி நடக்கலாமா? என்றெல்லாம் பலரும் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

படிக்க:
அந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா ? – ஒரு வேடிக்கைப் பேச்சு
♦ மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் !

ஆனால், எதார்த்தம் வேறுமாதிரியாக உள்ளது. ஊரடங்கு காலத்தில் சம்பளம் கொடுக்காமல் தொழிலாளிகளை விரட்டியிருப்பது மட்டுமல்ல, ஊரடங்கிற்கு பிறகு வேலைக்கு வரும் தொழிலாளி வர்க்கத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என்றல்லவா இந்த அரசு அறிவிக்கிறது.

ஆம், இனி இந்த ‘ஜனநாயக’ நாட்டின் பல மாநிலங்களிலும் தொழிலாளிகள் 8 மணிநேர வேலையையோ, தமது உழைப்புக்கேற்ற ஊதியத்தையோ கேட்க முடியாது. தமது உரிமை கேட்டுப் போராட சங்கம் வைக்க முடியாது. குடிநீர், உணவு, கழிவறை, காற்றோட்டமான சூழல், பாதுகாப்பான வேலைநிலைமை என எந்தவித அடிப்படைத் தேவைகளையும் கேட்க முடியாது. முதலாளிகளின் பொருளாதார வளர்ச்சிக்காக, தொழிலாளி வர்க்கத்தை வலுக்கட்டாயமாக ‘தியாகம்’ செய்ய வைத்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

இதையெல்லாம் மீறி, 8 மணி நேரத்துக்கு மேல் உழைக்க மறுத்தாலோ, உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்டாலோ, முதலாளியின் அனுமதியின்றி சிறுநீர் கழிக்கச் சென்றாலோ அவை தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படும். இதற்காக, வேலைநீக்கம் என்ற பழைய பாணியில் முதலாளிகள் நடந்து கொள்வார்கள் என்று நாம் கருதக் கூடாது; உரிமை கேட்ட தொழிலாளியைக் கட்டிவைத்து அடிப்பது அல்லது போலீசை வைத்து தாக்குவது, சிறையில் அடைப்பது போன்ற அடக்குமுறைகளைத்தான் இனி எதிர்பார்க்க நேரிடும்.

இந்த அடக்குமுறைகளுக்கு அஞ்சியோ, வேலையில் இருந்து துரத்தப்பட்டோ வெளியேறுபவர்கள், வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை பெருகினால் என்ன நடக்கும். நாடு முழுவதும் கொள்ளையும், கொலையும் பெருகி சமூகமே சீரழியும். பிச்சைக்காரர்கள், நாடோடிகள் கூட்டம் அலைமோதும். ஆனால், அரசு இவர்களை எல்லாம் குற்றவாளிகள் என அறிவித்து கொடூர அடக்குமுறைகளை ஏவும். இது உங்களுக்கு மிகையான கற்பனை போலத் தோன்றலாம், ஊரடங்கின் போது வெளியே வந்தவர்களையே கொடிய குற்றவாளிகள் போல போலீசு தாக்கியதையும் சொந்த ஊருக்குத் திரும்ப விரும்பும் தொழிலாளர்கள் மீது தடியடி நடத்துவதும், அவர்களை சிறையில் அடைப்பதையும் நாம் இன்றைக்கு அன்றாட செய்திகளாகப் பார்த்து வருகிறோம் அல்லவா? இதில் இருந்தே, எதிர்காலம் எப்படி இருக்குமென ஊகிக்க முடியும்.

***

ப்படியெல்லாம் நடக்குமா, முதலாளிகளும் ஆட்சியாளர்களும் அவ்வளவு கொடூரமானவர்களா என அப்பாவித்தனமாக நம்மில் பலர் கேட்கலாம். உங்களது இந்தக் கேள்விக்கு வரலாறு விடை தருகிறது.

இந்த முதலாளிகள் தாம் உருவான காலந்தொட்டே தொழிலாளி வர்க்கத்தை அடிமை நிலைக்குத் தாழ்த்தி அவர்களின் உழைப்போடு சேர்த்து இரத்தத்தையும் உயிரையும் குடித்து வளர்ந்தவர்கள்தான் என்பதை தனது “மூலதனம்” என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார் பேராசான் காரல்மார்க்ஸ்.

முதலாளி வர்க்கமானது அரசு அதிகாரத்தின் துணையோடு, விவசாய நிலவுடைமை வர்க்கத்தினரை உடைமையிழக்கச் செய்து ஏதுமற்றவர்களாக மாற்றியது குறித்தும், கொடிய சுரண்டல் மிகுந்த உழைப்புக்கு அவர்களைப் பழக்கப்படுத்த அரசுகள் போட்ட கொடூர சட்டங்கள் – தண்டனை முறைகள் குறித்தும் தனது மூலதனம் நூலில் விளக்கியிருக்கிறார்.

தொழிற்புரட்சி ஏற்பட்ட நவீன தேசங்கள் எனப் புகழப்படும் இங்கிலாந்திலும், பிரான்சிலும் பாட்டாளி வர்க்கமானது இரத்தச்சகதியில் தோய்த்தெடுத்து உருவாக்கப்பட்டது. இதைத் தமது மூலதனம் நூலின் முதல்பாகத்தில், “உடைமை பறிக்கப்பட்டோருக்கு எதிரான கொலைகாரச் சட்டங்கள்” என்ற தலைப்பிலான 28-வது அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறார் மார்க்ஸ்.

“… முதலில் விவசாயக் குடிகளின் நிலவுடைமையை வலுவந்தமாகப் பறித்து, அவர்களை வீடுவாசல்களில் இருந்து விரட்டியடித்து, வேலையற்ற ஊர்சுற்றிகளாய் மாற்றி, பின்னர் கசையால் அடித்து, சூட்டுக் குறியிட்டு, அகோரமான பயங்கரச் சட்டங்களால் வதைத்து கூலியுழைப்பு முறைக்கு வேண்டிய கட்டுப்பாட்டுக்குப் பணிய வைத்தார்கள்.” என்கிறார் மார்க்ஸ்.

1530-ஆம் ஆண்டு முதலே உழைப்பாளிகளுக்கு எதிரான கொடிய சட்டங்கள் இங்கிலாந்தில் போடப்பட்டு வந்தன. அதில் ஒருவகை மாதிரிதான், எலிசபெத் இராணியின் ஆட்சியில் 1572-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டம்:

“14 வயதுக்கு மேற்பட்டவர்கள் உரிமம் இல்லாமல் பிச்சையெடுத்தால், யாரும் அவர்களை ஈராண்டு காலத்துக்கு வேலைக்கு எடுத்துக் கொள்ளாதபட்சத்தில் அவர்களுக்கு கடும் கசையடி தந்து, இடது காதில் சூட்டுக்குறி பொறிக்க வேண்டும். மீண்டும் குற்றம் புரிந்தால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களானால், யாரும் அவர்களை ஈராண்டு காலத்துக்கு வேலைக்கு எடுத்துக் கொள்ளாதபட்சத்தில் மரண தண்டனை கிடைக்கும். மூன்றாவது முறை குற்றம் புரிந்தால், கடுங்குற்றவாளிகளாகக் கருதி கருணை காட்டாமல் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும்.”

கிராமத்தில் விவசாயக் குடிகளாக இருந்தவர்களை, சொந்த நிலங்களில் இருந்து விரட்டியதோடு அல்லாமல், நகரங்களில் அவர்களுக்கு வேலையும் கொடுக்காமல், வேலையற்றவர்கள் – ஊர்சுற்றிகள் என்று முத்திரை குத்துவது எவ்வளவு கொடூரமானது. தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்து கொண்டிருக்கும் புலம்பெயர்த் தொழிலாளர்களின் எதிர்காலம் இப்படித்தானே இருக்கப் போகிறது.

தொழிலாளி வர்க்கத்தை நாள் முழுக்கக் கசக்கிப் பிழிந்த பின்னரும் முதலாளிகளின் இலாபவெறி அடங்கவில்லை. அதே சமயத்தில், கடுமையான சுரண்டலுக்கு ஆளாகும் தொழிலாளி வர்க்கத்தைக் கண்டு அவர்கள் அஞ்சவும் செய்தார்கள். தனது உழைப்புக்கேற்ற்ற கூலி கேட்பதே, மிகப்பெரிய குற்றம்; தாம் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாய்திறவாது உழைக்க வேண்டுமென முதலாளிகள் கருதினார்கள். இதைச் சட்டமாகவும் ஆக்கிக் கொண்டார்கள்.

படிக்க:
காயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா ? பெருமையா ?
♦ வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்

இங்கிலாந்தில் மூன்றாம் எட்வர்டு மன்னனின் ஆட்சியில் 1349 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொழிலாளர் சட்டத்தில்,

“நகரத்துக்கும் கிராமத்துக்கும், பலன்வீத வேலைக்கும் நாள்வீத வேலைக்கும் கூலி விகிதம் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டது. விவசாயத் தொழிலாளர்கள் ஆண்டுக்கு இவ்வளவு கூலி என்ற அடிப்படையில் வேலைசெய்ய வேண்டும்; நகரத் தொழிலாளர்கள் “பகிரங்கச் சந்தை” நிலவரப்படி கூலிக்கு வேலைசெய்ய வேண்டும். சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டதைக் காட்டிலும் உயர்ந்த கூலி கொடுப்பது தடை செய்யப்பட்டது; தடையை மீறினால் சிறை தண்டனை கிடைக்கும். ஆனால், உயர்ந்த கூலி கொடுப்பதற்குரிய தண்டனையைவிட பெறுவதற்குரிய தண்டனை கடுமையானதாக இருந்தது. [இவ்வாறே எலிசபெத்தின் பழகு தொழிலாளர் சட்டத்தின் பிரிவுகள் 18,19 இல், உயர்ந்த கூலி கொடுத்தால் 10 நாள் சிறைத் தண்டனையும், பெற்றால் 21 நாள் சிறைத் தண்டனையும் விதிக்க ஆணையிடப்படுகிறது]” என்று உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்பதையே மாபெரும் குற்றமாகக் காட்டப்பட்டிருக்கிறது.

தொழிலாளிக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கலாம் என்று வரம்பிடுவதில், அரசு எவ்வளவு அயோக்கியத்தனமாக, முதலாளி வர்க்க ஆதரவாக நடந்து கொண்டது என்பதை,

“அரசானது கூலிக்குத் திட்டவட்டமான உச்சவரம்பு விதிக்கிறதே தவிர, எவ்விதத்திலும் அடிவரம்பு நிர்ணயிக்கவில்லை.” என்று அம்பலப்படுத்துகிறார் மார்க்ஸ்.

அடுத்தடுத்து வந்த நூற்றாண்டுகளில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை மென்மேலும் மோசமடைந்து விட்டதைப் பின்வரும் வரிகளில் மார்க்ஸ் விளக்குகிறார்.

“16-ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் படுமோசமாகி விட்டதென்பது தெரிந்ததே. பணக் கூலி உயர்ந்தது; ஆனால் பணத்தின் மதிப்பிறக்கத்துக்கும், அதையொட்டி சரக்குகளின் விலைகளில் நேரிட்ட உயர்வுக்கும் ஏற்ற விகிதத்தில் உயரவில்லை. எனவே உண்மைக் கூலி குறைந்தது. ஆனால், கூலி உயர்ந்து விடாமல் தடுப்பதற்கான சட்டங்கள் அமலில் இருந்தன;”

கூலியைத் தொடர்ந்து குறைத்துக்கொண்டே வந்ததோடு மட்டுமல்லாமல், இந்த அடிமாட்டுக் கூலிக்கு உழைக்க மறுத்த தொழிலாளர்களைக் கொடுமையான முறையில் ஆட்சியாளர்கள் தண்டிக்கவும் செய்திருக்கிறார்கள். “யாரும் வேலைக்கு எடுத்துக் கொள்ள விரும்பாத ஆட்களை” காதறுப்பதும், சூட்டுக் குறியிடுவதும் நூற்றாண்டுகள் கடந்தும் தொடர்ந்து நீடித்தன.

கூலி கேட்பவர்களையும், குறைவான கூலிக்கு உழைக்க மறுப்பவர்களையும் தண்டித்த முதலாளிகள், தம்மிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் சங்கமாக ஒன்றுசேர்வதை ஒருபோதும் விரும்புவதில்லை. 200 ஆண்டுகளுக்கு முன்பே இப்படியொரு சட்டத்தைப் போட்டதன் மூலம், இப்போதைய மோடிக்கும் ஆதித்யநாத்துக்கும் முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள் பிரெஞ்சு ஆட்சியாளர்கள்.

“பிரெஞ்சு முதலாளிகள், 1791 – ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை மூலம், தொழிலாளர்கள் சங்கங்கள் யாவும், “சுதந்திரத்திற்கும் மனித உரிமைகள் பிரகடனத்திற்கும் எதிரான முயற்சி” என்று அறிவித்தார்கள்; இந்தக் குற்றத்தைச் செய்தால் அதற்குத் தண்டனையாக 500 லீவர் அபராதம் விதிக்கப்படும்; செயல்படும் குடிமகனுக்குரிய உரிமைகளையும் ஓராண்டு காலத்துக்கு இழக்க நேரிடும்.” என்று அறிவித்தார்கள்.

அன்று முதல் இன்று வரை தொழிலாளி வர்க்கம் அமைப்பாக, சங்கமாக சேர்வதை, உரிமைகள் கேட்பதையே வெறுத்து வருகிறார்கள் முதலாளிகள். அவர்களது விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றிக் கொடுக்கும் ஆட்சியாளர்கள் மன்னராட்சி முதல் ‘மக்களாட்சி’ வரை தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறார்கள். அன்று ஆறாம் ஹென்றி, எட்டாம் ஜேம்ஸ் என்றால் இன்று மோடி, ஆதித்யநாத்.

தன்மீது ஏவப்பட்ட இத்தனை அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு, அமைப்பாய் – சங்கமாய்த் திரண்டு அடக்குமுறைகளுக்கு எதிராய் சமர் புரிந்து, எண்ணற்ற தொழிலாளிகளின் உதிரத்தையும், உயிரையும் கொடுத்து பல்வேறு உரிமைகளைப் பெற்றது தொழிலாளி வர்க்கம்.

ஆனால் இன்றோ, தனது தேவைகளுக்காக கிராமத்து விவசாயிகளின் உடைமைகளைப் பறித்து நகரங்களில் குவித்து, குறைந்த கூலிக்கு அவர்களைச் சுரண்டிக் கொண்டிருந்த முதலாளி வர்க்கம், தனக்கு தேவை குறைந்தபின், தொழிலாளி வர்க்கத்தை ஊரைவிட்டே விரட்டுகிறது.

16, 17-ஆம் நூற்றாண்டுகளில் ஆலை முதலாளித்துவ வர்க்கத்தால் ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் முன்னோடிகள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த அந்த இருண்ட காலம் இப்போது மீண்டும் நம்முன் விரிகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் தமது இரத்தச்சுவடுகளைப் பதித்து, இருண்ட காலத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிறது இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மிகப்பெரும் பகுதி.

தொழிலாளிகளை கிராமங்களை நோக்கி விரட்டி சிதறவைத்து, முதலாளிகளும் ஆட்சியாளர்களும் காலச்சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்ற நினைப்பதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? அல்லது அமைப்பாய்த் திரட்டி அடிமைத்தளையை உடைக்கப் போகிறோமா?

– புதியவன் (அரசியல் சமூக ஆர்வலர்)

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க