கொரோனா விலிருந்து மீண்டெழ சுய உதவி குழுக்கள் விவசாய, வாகன கடன்களை ரத்து செய் !

கடன் கட்ட நெருக்கடி கொடுக்கும் நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடு!

திருச்சி அரியமங்கலம், ஆழ்வார்தோப்பு, கெம்ஸ் டவுன் பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள், கிராம விடியல், தனியார் நுண் கடன் நிறுவனமான ஏவிஎம், ஐடிஎப்சி, சூர்யா டே நிதி நிறுவனங்களுக்காக வசூல் செய்யும் நபர்கள் மற்றும் வங்கி மேலாளர் ஆகியோர் கடன் வாங்கிய பெண்களிடம் பணம் கேட்டு போனில் திட்டுவதும், மிரட்டியும் வந்தனர்.

மேலும் நேரில் வீட்டிற்கு வந்து தெருவில் நின்று கொண்டு அவமானப்படுத்தியும் இழிவாகப் பேசியும் பணம் கேட்டு நெருக்கடி தந்தனர். பெண்களிடம் தகாத வார்த்தைகளில் பேசி பணம் கேட்டும் மிரட்டினர். இதனால் அவமானப்பட்ட பெண்கள் ஆயிரம் இரண்டாயிரம் என கந்துவட்டிக்கு பணம் பெற்று குழு கடன் அடைத்தனர்.

“கடனை கட்ட நெருக்கடி கொடுக்கும் நபர்களை பிடித்து கொடுப்போம்!” என்று மக்கள் அதிகாரம் மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் சில தினங்களுக்கு முன் ஒட்டிய போஸ்டர் எண்களை பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பு கொண்டனர். நிதி நிறுவனத்தினர், குழு கடனுக்காக தகாத வார்த்தையில் இழிவுபடுத்தி பேசியது பற்றி எடுத்து கூறினர். அவமானம் தாங்க முடியாமல் அழுதனர்.

இந்த பாதிப்புகளை மனுவாக எழுதி பத்துக்கும் மேற்பட்ட குழுத் தலைவி மற்றும் பெண்கள், ஆண்கள் என 60க்கும் மேற்பட்டவர்கள் மக்கள் அதிகாரம் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி , தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் உரிமை கூட்டணி, தமிழக விவசாயிகள் சங்கம் ( கட்சி சார்பற்றது) சார்பாக அமைப்பு நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன முழக்கமிட்டும் கையில் பதாகை உடனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுடைய பாதிப்புகளை கண்ணீர் மல்க தொலைக்காட்சிகளுக்கு பேட்டியும் தந்தனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க உள்ளே செல்ல அனுமதி மறுத்து போலீசார் தடுத்து, அதிமுக அமைச்சர்கள் கலெக்டர் ஆகியோர் மீட்டிங்கில் இருப்பதால் உடனே பார்க்க முடியாது என்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

எத்தனை மணி நேரமானாலும் கலெக்டரை பார்த்து தங்களுடைய பாதிப்புகளை சொல்லாமல் வீட்டிற்கு போவதில்லை! என பெண்கள் உறுதியாக இருந்தனர். “வீட்டிற்கு போனா கடன்காரன் வந்து மிரட்டுவான்… இன்னைக்கு நாங்க இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டணும்” என்று உறுதியாக சாலையிலே ஒன்றை மணி நேரம் காத்திருந்து கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் பிரச்சனைகளை கேட்டறிந்த பின்பு அனைவரிடமும் மனுவை பெற்றுக்கொண்டு “நான்… உடனடியாக சட்டபடி அரசு அறிவித்த உத்தரவுக்கு எதிராக செயல்படும் குழுக்கள், தனியார் நுண்கடன் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து நாளை பத்திரிக்கையில் அறிக்கை வெளியிடுகிறேன். என்று கூறி உறுதியளித்தார். மேலும்…. மிரட்டி வசூல் செய்பவர்கைளை பிடித்துக்கொண்டு வர வேண்டியது தானே என கலெக்டர் கூறவே “உங்கள் உத்தரவு இருந்தால் அதையும் நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம்” என்று அமைப்புகளின் நிர்வாகிகள் பேசினர். நான் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியதுடன் மறுநாள் ஊடகங்களுக்கு … ஆகஸ்ட் 31 வரை அரசு உத்தரவை மீறி யாரும் கடன் தொகை கேட்டு மிரட்டவோ, கட்டாய வசூல் செய்யவோ கூடாது! என அறிக்கை வெளியிட்டு உறுதி படுத்தினார்.

முன்னதாக ஆர்ப்பாட்டம் செய்யும் போது இரண்டு நிறுவனத்திலிருந்து தொலைபேசி மூலமாக பணம் கட்டவில்லையா? என்று கேட்டு மிரட்டினர். அதை உடனே எல்லா பத்திரிகையாளர்களுக்கும் தெரியும் வகையிலும் போனில் மிரட்டியதை ஸ்பீக்கரில் போட்டு அம்பலப்படுத்தினர். பத்திரிகையாளர்கள் அமைப்பு தலைவர்கள் எதிர் கேள்வி கேட்டபோது… உடனே பணம் கேட்ட நபர்கள் பயந்துகொண்டு போனை துண்டித்து விட்டனர். ஏற்கனவே குழு கடன் கட்டுபவர்கள் மீது நெருக்கடி கொடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் தெரிவித்தபோது யார்? எந்த நபர்? நெருக்கடி கொடுக்கிறார்கள். என்பதை மனுவாக எழுதி கொண்டு வாருங்கள்! என்று கூறி நடவடிக்கை எடுக்காமலும் பொது அறிக்கையை வெளியிடாமல் மாவட்ட ஆட்சியர் புறந்தள்ளி பேசினர். தற்போது யாரெல்லாம் நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று மனுவாக எழுதி பெண்களை அழைத்துக்கொண்டு அமைப்பு தோழர்கள் சென்ற போது வேறு வழியில்லாமல் கலெக்டர் பொது அறிக்கை வெளியிடுகிறேன் என்று கூறியதுடன் அறிவிப்பும் வெளியிட்டார்.

மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கண்டும் அலட்சியமாக, பொறுப்பற்ற வகையில் இருந்ததால் கடந்த 2ஆம் தேதி திருச்சி தில்லைநகர் பகுதியில் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் கடன் கேட்டு மிரட்டியதை கண்டித்து அலுவலக வாசலில் 20க்கு மேற்பட்டவர்கள் போராட்டம் செய்தனர். அதன் பின் பஜாஜ் நிறுவனம் ” இரண்டு மாதத்திற்கு நாங்கள் பணம் கேட்டு மிரட்ட மாட்டோம்” என எழுதி கொடுத்தனர். இப்படி மக்கள் போராடித் தான் தங்களுடைய உரிமைகளையும் நீதியையும் பெறுகின்றனர்.

இந்த அரசு கட்டமைப்பில் உள்ள அதிகாரிகள் மக்களுக்கு பணியாற்ற, மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகின்ற அந்தப் பொறுப்பில் இருந்து வேலை செய்யாமல் மக்கள் வாழ வழியின்றி துயரத்துடன் தொழில் செய்து கிடைக்கும் சொற்ப காசையும் குடும்பச் செலவுகளுக்கும் பிள்ளைகளுக்கும் செலவு செய்ய விடாமல் கந்து வட்டி காரன்கள் மிரட்டி “கடனை கட்டு என பணத்தை பறித்துக் கொண்டு போவதும் ” இந்த அநியாயங்களை கண்டு அரசு நிர்வாக அதிகாரிகள் மெத்தனமாக, நிறுவனங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர். கிராம விடியல் என்பது அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனம் . அந்த நிறுவனமும் தற்போது மக்களிடம் கடன் கேட்டு நெருக்கடி கொடுக்கிறது. ரிசர்வ் வங்கி உத்தரவு உடனடியாக எல்லா ஊடகங்களும் பிரேக்கிங் நியூஸ் மற்றும் பரபரப்பு செய்தியாக வெளியிடுகின்றன.

ஆனால் நடைமுறையில் இஎம்ஐ கட்டு, அதற்கு வட்டி கட்டு என பல சிறு குறு நிறுவனங்களையும், பொதுமக்களையும் வாகன கடன் தொகையை கேட்டு மிரட்டுகின்றனர். சொல்லமுடியாத பல இன்னல்களையும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டு தன்னுடைய சுகங்களை இழந்து வட்டி கட்டுவதும் கடன் தவணை கட்டுவதும் மக்கள் பரிதவிக்கின்றனர். இதை உணராத ஆட்சியாளர்களை, அமைச்சர்களை, மாவட்ட நிர்வாக அதிகாரிகளை தொடர்ந்து மக்களுக்காக செயல்படக்கூடிய இதுபோன்ற அமைப்புகள் தொடர்ந்து போராடி மக்களை திரட்டி இந்த உத்தரவுகளை வெளியிட வைக்கின்றோம். மேலும் மனு கொடுத்த பிறகு ஆழ்வார் தோப்பில் உள்ள மக்களை தனியார் நிறுவனம் மீண்டும் பணம் கேட்டு மிரட்டியது அந்த நிறுவனத்துக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

இனி மக்கள் தங்கள் அதிகாரத்தை கையில் எடுத்து தனியார் நிறுவனங்களும், சுய உதவி குழுக்கள், கிராம விடியல் போன்றவற்றின் வசூல் செய்யும் நபர்கள் வந்தால் அவர்களை பிடித்து மக்களே காவல்துறையில் ஒப்படைப்பது, என்பது தவிர வேறு வழி இல்லை. குழு கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யும்வரை போராட்டம் தொடரும் என்று மக்கள் அறிவித்தனர். அமைப்புகளும் ஒன்றிணைந்து மக்களுடன் போராடுவோம் என அறிவித்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.