கீழைக்காற்று அறிவிப்பு

நாள்: 14-11-2020

அன்பார்ந்த தோழர்களே, பதிப்புத்துறை நண்பர்களே, வாசகர்களே!

கீழைக்காற்று வெளியீட்டகம் மற்றும் விற்பனையகம் தொடங்கிய நாள் முதல் அதன் பணியை பலரும் அறிவீர்கள். புரட்சிகர மார்க்சிய – லெனினிய நூல்கள், பெரியாரிய, அம்பேத்கரிய, தமிழ் இன – மொழி உரிமை சார்ந்த பல்வேறு முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரியாக செயல்பட்டு வருகிறது. 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எமது நிறுவனம் ஒரு அமைப்பு, அரசியல் சார்ந்த நிறுவனம் என்பதை பெரும்பாலான நண்பர்கள் அறிவார்கள்.

பதிப்புத்துறை கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்ற இன்றைய அரசியல், சமூக சூழலில் இப்படி ஒரு பதிப்பகத்தையும் விற்பனையகத்தையும் நடத்துவது என்பது மிகவும் சிரமமானது. இந்த சிரமமான பணியை தோழர்கள், நண்பர்கள், பிற பதிப்பகத்தாரின் ஒத்துழைப்புடன் தான் இத்தனை ஆண்டுகளாக கீழைக்காற்று நிறுவனத்தை நடத்தி வருகிறோம்.

கீழைக்காற்றின் நிர்வாகியாக அது தொடங்கிய காலம் முதல் செயல்பட்டு வந்த துரை.சண்முகம் அதன் பொறுப்பில் இருந்து விலகிய பின்னர் பிற தோழர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த நண்பர்களின் உதவியுடன்தான் நிறுவனத்தை நடத்தி வருகிறோம் என்பதை பலரும் அறிவீர்கள்.

படிக்க :
♦ கட்சியை மிரட்டும் ‘தோழர்கள்’ ! || லியூ ஷோசி
♦ அருந்ததிராய் நூல் நீக்கம் : கருத்துக்களைக் கண்டு அஞ்சும் சங்க பரிவாரம் !

இவ்வாறு பொறுப்பை மாற்றும் போது அமைப்பின் சார்பாக பு.ஜ.தொ.மு.-வின் மாநிலத் தலைவராக இருந்த முகுந்தன் உரிமையாளராக நியமிக்கப்பட்டார். அவ்வாறு பொறுப்பை மாற்றும்போது அது தொடர்பான சில சட்ட உதவிகளை செய்தது தவிர இந்த நிறுவனத்தின் வரவு – செலவு, புத்தக விற்பனை, வினியோகம், பிற பதிப்பகத்தாரிடம் தொடர்பு வைத்துக் கொள்ளுதல், கணக்கு வழக்குகளை முறைப்படுத்துதல், கடன் அடைத்தல், புதிய நூல்களுக்கான உள்ளடக்கத்தை தீர்மானித்தல், அவற்றை எழுதுவதற்கான நண்பர்கள், தோழர்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறுதல், பதிப்பித்தற்கான முன்பணம் தயார் செய்தல், மெய்ப்புப் பார்த்தல், அச்சடித்தல், புதிய நூல்களின் தேவைகளைக் குறித்து வைத்துக் கொள்ளுதல், வெளியூர் திருமணங்கள், நிகழ்ச்சிகளுக்கு புத்தகங்களை பட்டியலிட்டு அனுப்பிவைத்தல், விற்பனையை சரிபார்த்தல் போன்ற பல வேலைகளையும், புத்தகங்களையும் அலுவலகப் பொருட்களையும் பராமரிக்கும் இடம், அதற்கான வாடகை, அப்பொருட்களை முறையாக கணக்கு வைத்து பராமரித்து வருவது, முகநூல் பராமரிப்பு, ஸ்வைப்பிங் மிசின் பராமரிப்பு போன்ற அனைத்து வேலைகளையும் அமைப்பின் உதவிடன் பிற தோழர்கள்தான் செய்து வந்தனர். அந்த வகையில் தற்போது தோழர் நிலவன் நிர்வாகப் பணிகளைச் செய்து வருகிறார்.

முகுந்தனின் வீட்டை அலுவலகமாக பதிவு செய்திருப்பதாலும், அவரது ஃபோன் எண் சில பதிப்பகத்தாரிடம் கொடுத்திருந்ததாலும் அரிதினும் அரிதாக சில பதிப்பகத்தினர், விவரம் தெரியாமல், அவருக்கு ஃபோன் செய்து கடன் அடைக்குமாறு கோரியிருக்கின்றனர். அவ்வாறு தவறுதலாக அவருக்கு சென்ற சில தொலைபேசி அழைப்புகளுக்காகவே, தனக்கு இது போன்ற தொல்லைகள் இருப்பதைக் கூட விரும்பவில்லை என்று அவர் அமைப்பிலும் நிர்வாக வேலையை செய்து வரும் தோழர்களிடமும் கோபப்பட்டுள்ளார்; கடிந்து கொண்டுள்ளார்.

இதுதான், செப்டம்பர் மாதம் இறுதி வரையிலான நிலைமை.

0000

நூல்களை இருப்பு வைத்திருக்கும் வீட்டை சுத்தம் செய்வது, நூல்களை ஒழுங்காக அடுக்கி வைப்பது, முறைப்படுத்துவது போன்ற மாதாந்திரம் மேற்கொண்டு வரும் பணிகளை செய்வதற்கு, அந்த வீட்டிற்கு தோழர்கள் சென்று வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 06-10-2020 அன்று மாலை வீட்டிற்குள் தோழர்கள் இருக்கும் போதே, வெளியே வாயிற்கதவு பூட்டப்பட்டிருந்தது. யார் இவ்வாறு பூட்டினார்கள் என்பது உள்ளே இருந்தவருக்கு தெரியவில்லை. வெளியில் உள்ள தோழர்களை அழைத்து அக்கம்பக்கம் விசாரித்த போது, வெளியே கதவைப் பூட்டிவிட்டு சென்ற நபரின் அங்க அடையாளங்களைச் தெரிவித்துள்ளனர். முன்பின் தெரியாதவர் வீட்டைப் பூட்டியிருப்பதால், பூட்டை உடைத்து வீட்டிற்குள் தோழர்கள் சென்றுள்ளனர்.

மீண்டும் அடுத்த நாள் (07-11-2020) காலை 10 மணிக்கு, நொளம்பூரில் வசிக்கும் – முன்பு பு.மா.இ.மு.வில் இருந்த சாரதி மற்றும் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த செந்தில் ஆகிய இருவரும், தோழர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து “இரண்டு மாதமாக வீட்டு வாடகை கட்டவில்லை என ஓனர் எங்களுக்கு போன் செய்கிறார். வீடு வாடகைக்கு அக்ரிமெண்ட நாங்கள்தான் போட்டுள்ளோம். அதனால் நீங்கள் வீட்டைக் காலிசெய்ய வேண்டும்” என்று தகராறு செய்துள்ளனர்.

வீட்டில் தங்கியிருந்த தோழர்கள் இருவரும், “நாங்கள் அமைப்பில் பேசினோம். வீட்டு வாடகை செலுத்த நிர்வாகி வந்து கொண்டிருக்கிறார். நாங்கள் வீட்டு வாடகையைக் கட்டிக் கொள்கிறோம். வீட்டு ஓனரிடம் நாங்கள் பேசிக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர். அது மட்டுமில்லாமல், வீட்டில் ஆள் இருக்கும்போதே ஏன் பூட்டி விட்டு சென்றீர்கள்? என்று தோழர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, முகுந்தனும், வாகன ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவரும் அங்கு வந்தனர்.

வீட்டில் தங்கியிருந்த தோழர்களிடமும், நிர்வாகியிடமும் விசாரித்த முகுந்தன், “42 ஆண்டுகாலமாக அமைப்பில் இருக்கிறேன். என்னையே நட்டாற்றில் விட்டுவிட்டார்கள். உங்களுக்கும் இதே கதிதான். இந்த கீழைக்காற்றுக்கு நான்தான் ஓனர். இதற்கு 3 இலட்ச ரூபாய் கடன் இருக்கிறது. கடன்காரர்கள் எல்லாம் எனக்குத்தான் போன் செய்கிறார்கள். எனக்குத் தூக்கமே வருவதில்லை. நான்தான் கடன்காரர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.” என்று பல்வேறு அவதூறுகளைக் கூறிவிட்டு, வீட்டில் தங்கியிருந்த தோழரைப் பார்த்து, “ நீ யாரு? நீ ஏன் இங்கு இருக்கிறாய்? பூட்டை உடைச்சு என் சொத்தைத் திருடப் பாக்கிறாயா?” என்று காட்டுக் கூச்சல் போட்டார்.

மேலும், பகுதியில் உள்ள அமைப்புத் தோழரிடமும் பதிப்பக நிர்வாகியிடமும், “சீக்கிரம் இங்கிருந்து கிளம்புங்க; இனி உங்களிடம் பேசி பலனில்லை; இனி இங்கிருந்தா அடி தான் விழும்” என விரட்ட முயற்சித்துள்ளனர். தோழர்கள் கடுமையாக எதிர்த்துச் சாடிய பின்னரே அடங்கியுள்ளனர்.

இந்தக் கூச்சலினூடே அடாவடியாக வீட்டுச் சாவியை எடுத்துக் கொண்டனர்.

இதற்கு முன்னரே வீட்டின் உரிமையாளரிடம் எந்த விவரத்தையும் தெரிவிக்காமல், சிலர் இந்த இடத்தை ஆக்கிரமித்திருப்பது போல பொய்யான காரணங்களைக் கூறியுள்ளனர். அதனால், வீட்டின் உரிமையாளர் ஒரு வழக்குரைஞருடன் அவ்விடத்துக்கு வந்துள்ளார்.

அராஜகமாக செயல்பட்டு பதிப்பகத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் நோக்குடன் வந்து முகுந்தன் உள்ளிட்டோர் கூச்சல் போட்டதாலும், வீட்டு உரிமையாளருக்கும் அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்களுக்கும் முழு விவரம் தெரியாது என்பதாலும், மேற்கொண்டு சச்சரவு செய்ய வேண்டாமென முடிவெடுத்த தோழர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.

படிக்க :
♦ மக்கள் அதிகாரம் செயற்குழு கூட்டம் : உறுப்பினர் தகுதியிலிருந்து த. கணேசன், காளியப்பன் நீக்கம் !
♦ வினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் !

அங்கு தங்கியிருந்த தோழர்களது உடைமைகளைக் கூட எடுக்கவிடாமல் வெளியேற்றி பூட்டு போட்டுள்ளனர். மாணவர் ஒருவரது கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சில பொருட்கள் உள்ளே சிக்கியுள்ளன, அவற்றை எடுத்துக் கொடுங்கள் என சாரதியிடம் கேட்டதற்கு, இரண்டு நாட்கள் இழுத்தடித்து துணிகள் இருந்த பையை மட்டுமே எடுத்து வந்து கொடுத்துள்ளார். சான்றிதழ்கள் இல்லையே என்று கேட்ட போது, அடுத்தநாள் எடுத்துத் தருவதாக முதலில் கூறிவிட்டு, எதுவாக இருந்தாலும் முகுந்தனிடம் பேசுங்கள் என பிறகு கூறினார்.

முகுந்தனோ, எதிர்முனையில் இருப்பவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைக்கூட காது கொடுத்துக் கேட்கும் மனநிலையில் இல்லாமல் எரிந்து விழுந்து, தவணை முறையில் கேட்டுக் கொண்டிருக்கிறாய், அதெல்லாம் தர முடியாது என்ற ரீதியில் பேசுகிறார். சான்றிதழ்கள் மற்றும் உடைமைகள் எடுத்துக் கொடுக்கும் அளவுக்குக் கூட ஜனநாயகப் பண்புகளற்றவர்களாக மாறியிருக்கிறார்கள் இவர்கள்.

தற்போது கீழைக்காற்று நிறுவனத்தில் சுமார் 20 இலட்ச ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் 5 இலட்ச ரூபாய் மதிப்புள்ள அலுவலகப் பொருட்கள், பப்பாசி நிறுவனத்தில் கீழைக்காற்றின் நிரந்த உறுப்பினர் உரிமை ஆகிய அனைத்தும் இந்த முகுந்தன் கும்பலால் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

அமைப்பு மற்றும் பல்வேறு தோழர்களது பொருள் உதவி, உடல் உழைப்பு மூலம் உருவாக்கப்பட்ட நிறுவனம் கீழைக்காற்று. அதற்கு நான்தான் உரிமையாளர் என சொல்லிக்கொண்டு முகுந்தன் மற்றும் அவருடன் வந்தவர்கள் காட்டுக்கூச்சல் போடுவது, அமைப்பின் உடைமையான கீழைக்காற்றுக்கு தனிநபர் உரிமை கொண்டாடுவது தனியுடமை சிந்தனையின் வெளிப்பாடே. இவையெல்லாம், முகுந்தனுக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் தெரியாததல்ல. இவ்வாறு இவர்கள் அடாவடியாக கீழைக்காற்றை அபகரிப்பதை ஒருசிலர் மட்டும் தனியாக செய்துவிட முடியாது. இந்த நபர்களை பின்னிருந்து இயக்கும் கேடான நபர்களின் தூண்டுதலின் விளைவே இது என்பது பளிச்செனத் தெரிகிறது. அதனால் தான் தோழர்களை ஒருமையில் பேசுவது; பேசிக் கொண்டிருக்கும் போதே வீட்டை விட்டு வெளியேறுமாறு விரட்டுவது; கழுத்தில் கையை வைத்துத் தள்ளுவது; போக மறுத்தால் தள்ளுவது, அடிக்க வருவது; உன்னை ஏதாவது செய்து விடுவோமென மிரட்டுவது போன்ற ரவுடித்தனங்களை அரங்கேற்றி, நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

தோழர்களின், ஆதரவாளர்களின் பண உதவியால், தோழர்களின் கூட்டு உழைப்பால் உருவாக்கப்பட்ட அமைப்பின் பதிப்பகத்தை, ‘கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடிகொண்ட கதை’ போல, சட்ட நடைமுறைக்காக உரிமையாளர் என பதிவு செய்யப்பட்ட முகுந்தனுக்கே சொந்தம் என்பது சகித்துக் கொள்ள முடியாததாகும். பொதுவுடைமை அமைப்பொன்றின் நிறுவனத்தை, தனிநபர் அபகரிக்க எக்காலத்திலும் அனுமதிக்க முடியாது. இது பொதுச்சொத்தைத் தனிநபர் அபகரிப்பதற்கு சமம் என்ற வகையில் இந்த அடாவடித்தனமான அபகரிப்பு நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கீழைக்காற்றை மீட்டெடுக்கப் போராடுவோம்!

தோழமையுடன்,
நிலவன்,
நிர்வாகி – கீழைக்காற்று வெளியீட்டகம்.
தொடர்பு எண் : 73959 37703