ரு தலைவர் மறைந்து 67 ஆண்டுகள் முடிந்த பின்னரும் கூட அவரை வரலாற்றில் இருந்து இருட்டடிப்பு மற்றும் அவதூறு செய்வதற்காக முதலாளித்துவவாதிகள் இன்றளவும் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் எனில் அது பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவராகிய தோழர் ஜோசப் ஸ்டாலின் தான்.

இன்று ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலையிலிருந்தும் முதலாளித்துவக் கட்டமைப்பு நெருக்கடியிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள, உலகம் முழுவதும் பாசிச சக்திகளை ஆட்சியதிகாரத்தில் வைத்து முதலாளித்துவம் தமது சுரண்டலை இன்னும் தீவிரமாக அமல்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், முதலாளித்துவத்துக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய தோழர் ஸ்டாலின் நமக்குத் தேவைப்படுகிறார்.

ஜார்ஜியாவில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்த தோழர்  ஸ்டாலின், உலக பாட்டாளிவர்க்கத்தின் மாபெரும் தலைவனாக வளர்ந்தது பற்றிய ஒரு  சிறு குறிப்பை அவரது 142-வது பிறந்தநாளில் பார்க்கலாம்.

படிக்க :
♦ ரசியர்களிடம் அதிகரித்து வரும் ஸ்டாலின் செல்வாக்கு !
♦ ‘புரட்சிகர’ சதிகாரர்களின் ரிஷி மூலம் !

இறையியல் பள்ளியில் தனது கல்வியைத் துவங்கிய இளம் வயது ஸ்டாலின், தடை செய்யப்பட்ட மார்க்சிய நூல்களை படித்த குற்றத்திற்குத் தண்டனையாக பள்ளி நிர்வாகத்தால் இருட்டறையில் அடைக்கப்பட்டார். வெளிச்சத்திற்கான அவரது தேடலை இருட்டறை தண்டனைகள் எதுவும் தடுத்துவிடவில்லை.

மார்க்சிய சித்தாந்தங்களைத் தேடிப் படித்த ஸ்டாலின், அது மட்டுமே தமது நாட்டையும் நாட்டு மக்களையும் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து தமது நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்கும் என்பதை உணர்ந்து கொண்டார். தனித்துச் செயல்படும் சித்தாந்தத் தெளிவும், போர்க்குணமும் அவரது பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் வெளிப்பட்டன.

1905-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம் தொழிலாளர் இயக்கத்தின் வலிமையையும், தீரத்தையும் வெளிப்படுத்தியது. இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தது ரசிய பாட்டாளி வர்க்கம். புரட்சியின் வெற்றிக்கு தேசந்தழுவிய  ஆயுதப் புரட்சி அவசியம் என்பதை வலியுறுத்தி “குடிமக்கள்” என்ற துண்டு பிரசுரத்தை அச்சமயத்தில் வெளியிட்டார் தோழர் ஸ்டாலின்.

தோழர் ஸ்டாலினின் இயற்பெயர் லோசிஃப் விசாரியனோவிச். அவரது முன்முயற்சிமிக்க பல்வேறு செயல்பாடுகள் குறித்து கேள்விப்பட்ட பின்னர், முதன் முதலில் அவரை லெனின் சந்தித்தபோது அவருடைய எஃகுறுதியைப் பாராட்டியே அவரை ஸ்டாலின் என்று விளித்தார் லெனின். அந்தப் பெயரே இன்றுவரை வரலாற்றில் நிலைத்து நின்றது.

ரசிய சமூக ஜனநாயகக் கட்சியில் செயல்பட்ட ஸ்டாலின், கட்சியின் அமைப்புகளை வலுப்படுத்தவும், மக்களிடையே தனது செல்வாக்கை பரப்பவும் போல்ஷ்விக் ஏடான “பிராவ்தா” இதழை வெளியிட்டார். கட்சியின் பிரச்சாரகனாக, அமைப்பாளனாக iருந்த அந்த பத்திரிகையை திறம்பட நடத்தினார் ஸ்டாலின். அந்தக்  ‘குற்றத்திற்காக’  ஜார் அரசால் சைபீரியாவுக்கு பலமுறை நாடு கடத்தப்பட்டார்.

1914-ம் ஆண்டு துவங்கிய முதலாம் உலகப் போரில் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி மட்டுமே போருக்கு எதிராகக் குரல் கொடுத்தது. மக்களிடம் போருக்கு எதிராக பிரச்சாரம் செய்தது. போரில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பேரிழப்புகளைச் சமாளிக்க மக்களை அதிகமாகச் சுரண்டத் துவங்கியது ஜார் அரசு.

இச்சூழலில் தந்தை நாட்டைக் காக்க வேண்டும், போரில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற பிற கட்சிகளின் நோக்கத்தை அம்பலப்படுத்தி, ரொட்டி, அமைதி, நிலம் என்ற முழக்கத்தை முன் வைத்து மக்களிடையே பிரச்சாரத்தை மேற்கொண்டு சரியான தருணத்தில் புரட்சியை நடத்து முடித்தது போல்ஷ்விக் கட்சி.

புரட்சி முடிந்த பின்னர், அடுத்த மூன்றாண்டுகள் நடந்த உள்நாட்டுப் போரில், வெண்படைகளை வீழ்த்த கட்சியின் சார்பில் தோழர் ஸ்டாலின் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். மூன்றே ஆண்டுகளில் எதிர்ப்புரட்சி சக்திகளை விரட்டியடித்தார் தோழர் ஸ்டாலின்.

தோழர் லெனின் மரணத்திற்குப் பின்னர், சோசலிசத்தையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் உறுதியாகக் கட்டியமைத்த பெருமை தோழர் ஸ்டாலினையே சாரும்.

சோசலிசத்தைக் கட்டியமைக்க, சோவியத் யூனியனில் ஐந்தாண்டு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார். இலவச கல்வி, சுகாதாரம், இராணுவப்படை, கூட்டுப் பண்ணைகள், தொழில்புரட்சி என முறையாகத் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளால், பூமியில் உழைக்கும் மக்களின் சொர்க்கத்தை படைத்தது சோவியத் அரசு.

கருத்துக்களை எடுத்துரைப்பதிலும், முழக்கங்களையும், கட்டளைகளையும் கவனத்துடன் தெரிவு செய்வதிலும் தோழர் ஸ்டாலினிடம் தெளிவு இருந்தது. ஊழியர்களை தேர்வு செய்வதிலும், செயல் முடிவுகளை சோதித்தறிவதிலும் இடையறாத கவனம் தலைமைக்கு தேவை என்பதை ஸ்டாலின் உணர்ந்தார்.

எளிதில் கையாள முடியாத பிரச்சனைகளுக்கும், நேர்மையுடன் தீர்வு காண அர்ப்பணிப்புமிக்க, மனசாட்சியிலிருந்து வழுவாத கடுமையான உழைப்பும் அவர் தலைவராக உருவாகக் காரணமாயிருந்தன.

1938-ம் ஆண்டில் உலகமே பெருமந்தத்தில் சிக்கியிருந்த நிலையில் உற்பத்தியை இருமடங்காகப் பெருக்கி சாதனை படைத்தது சோவியத் யூனியன். இதற்கு அடிப்படையான காரணம், சோசலிசப் பொருளாதாரத்தையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி இறுகப் பற்றிக் கொண்டதுதான்.

இரண்டாம் உலகப் போர் துவங்கிய சமயத்தில்,  மொத்த முதலாளித்துவ நாடுகளும் சோவியத் மீதான ஹிட்லரின் படையெடுப்பைக் கண்டு நாவில் எச்சில் ஒழுகக் காத்திருந்தன. ஹிட்லர் சோவியத்தை முடித்து விடுவார் என்று எண்ணிக் காத்திருந்தன. ஆனால் கோடிக்கணக்கான சோவியத் யூனியன் மக்களின் தியாகத்தாலும் தோழர் ஸ்டாலினின் சீரிய வழிகாட்டுதல் மற்றும் தலைமையினாலும் ஹிட்லரின் நாஜிக் கனவு தகர்க்கப்பட்டது.

ஹிட்லரின் நாஜிப்படைகளால் சிதைக்கப்பட்ட சோவியத் நகரங்களையும், விவசாயக் கட்டமைப்புகளையும் வெறூம் ஐந்தே ஆண்டுகளில் மறுசீரமைத்து அடுத்தகட்ட சாதனைகளை நோக்கி சோவியத்தை முன்னெடுத்துச் சென்றார் தோழர் ஸ்டாலின்.

படிக்க :
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!
♦ குஜராத் மாடல் : விவசாயிகளின் டெல்லி சலோவில் குஜராத் பங்கேற்காத பின்னணி ?

இன்றுவரை உலகப் பாட்டாளி வர்க்கம் ஸ்டாலினை போற்றுவதற்கும், முதலாளிகள் தூற்றுவதற்கும் மூன்று முக்கியமான விசயங்களைக் கூறலாம்.

1. சோவியத் அரசு அமைக்கப்பட்டப் பிறகு மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களை, அதன் இலக்கை விஞ்சி பல மடங்கு பெருக்கியது. பின்தங்கிய விவசாய உற்பத்தியை பெருக்கியது, மின்மயம், இராணுவ தளவாடங்கள் உற்பத்தி, சாலை – இரயில் போக்குவரத்து போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை சில பத்தாண்டுகளிலேயே நிறைவேற்றியது.

– சோசலிசமெல்லாம் வேலைக்கு ஆகாது. அடுத்த வேளை சோற்றுக்கும், தொழில்நுட்பத்திற்கும் நம்மிடம் தான் வந்து நிற்பார்கள் என்று கனவு கண்டு கொண்டிருந்த முதலாளிகளுக்கு விழுந்த முதல் அடி அது.

2. கம்யூனிஸ்ட் கட்சி்குள்ளேயே இருந்துகொண்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் டிராட்ஸ்கிய சீர்குலைவுவாதிகளையும், கலைப்புவாதிகளையும் களையெடுத்து கட்சியைப் பலப்படுத்தி நாட்டை மேம்படுத்தியது.

– சோசலிசத்தை உள்ளிருந்து ஒழித்துக் கட்டுவது என்ற ஏகாதிபத்தியங்களின் கெடுமுயற்சியை சரியான சமயத்தில் வெட்டி முறியடித்தார் ஸ்டாலின். இது ஏகாதிபத்தியங்களுக்குக் கிடைத்த இரண்டாவது அடி !

3. உள்நாட்டு யுத்தம் மற்றும் இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற்றது. உலகப்போரின்போது, சோவியத்தின் உயர் அதிகார அமைப்பு, ஸ்டாலினைப் பாதுகாப்பு தலைமைப் பொறுப்பாளராக நியமித்தது; பின்னர் தலைமைத் தளபதியாக்கப்பட்டார்.

–  உலகை கொடுங்கோன்மையிலிருந்து காப்பதற்குத் தகுதியானது சோசலிசமே என்பதை உலகிற்கு பகிரங்கமாக பிரகடனப்படுத்திய வெற்றி இது. ஸ்டாலினைப் பற்றி அவதூறு பரப்பிய முதலாளித்துவவாதிகளே அவ்வளவு எளிதாக ஸ்டாலினை தவிர்த்துவிட்டுச் செல்ல முடியாத வெற்றி இது.

இந்த மூன்று முக்கிய வெற்றிகளுக்கும் முக்கியக் காரணம், பாட்டாளிவர்க்க ஆசான் லெனின் தலைமையில் அமைக்கப்பட்ட கட்சியை, அவரது வழிகாட்டலின் படி, ஸ்டாலின் வழிநடத்தியதுதான்.

போல்ஷ்விக்மயமான, தோழர் லெனினின் உறுக்குவாய்ந்த கட்சியைக் கட்டியமைத்து, பாட்டாளி வர்க்கப் புரட்சியை முன்னெடுக்க பாடுபடுவோம் என்று, தோழர் ஸ்டாலின் 142-வது பிறந்த நாளான (சோவியத் அரசால் அதிகாரபூர்வமாக வெளியிட்ட நாள் டிசம்பர் 21) இன்று உறுதியேற்போம்.

மேகலை