லகப் பொருளாதார வீழ்ச்சி கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்டதை தொடர்ந்து மந்த நிலையிலேயே நீடித்து வந்த பொருளாதாரம், கடந்த மூன்றாண்டுகளில் தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

உலகம் முழுவதுமான பொருளாதார வீழ்ச்சி ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் திருவாளர் நரேந்திர மோடி அவர்களின் பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி உள்ளிட்ட நடவடிக்கைகள் உள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீரழித்து பெருவாரியான உழைக்கும் மக்களை வீதியில் நிறுத்தினார்.

படிக்க :
♦ விவசாயப் போராட்டத்தை திசைத் திருப்பும் ஊடகங்கள்!!

♦ திருவாரூர் : விவசாயிகளுக்கு ஆதரவாக போராடினால் கொலை முயற்சி வழக்கு !

இந்த நெருக்கடிகளோடு கொரோனா பெருந்தொற்றும் அதன் காரணமாக பெருமளவிலான வேலையிழப்பு மற்றும் வருமானயிழப்பு ஏற்பட்டு மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை துளியேனும் முன்னேற்றும் விதத்தில் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை இருக்குமா என்ற எதிர்பார்ப்பு பல தரப்பினருக்கும் இருந்துவந்தது.

விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டு பல்வேறு போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வந்த நிலையில் மக்களை அமைதிப்படுத்தும் பொருட்டாவது இந்த நிதிநிலை அறிக்கை இருக்கும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஏமாற்றத்தையே பதிலாகக் கொடுத்திருக்கிறது மோடி அரசு.

மக்களுக்கு அளித்துவந்த மானியங்களை கடுமையாக வெட்டிச் சுருக்கியிருக்கிறது இந்த நிதிநிலை அறிக்கை.

கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து ஒருபுறத்தில் விவசாயத்தை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்த்துவிட்டு, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அவர்களுக்கான மானியத்தை வெட்டிச் சுருக்கியுள்ளது.

கடந்த 2020 – 2021-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் உரத்திற்கான மானியங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 1,33,947 கோடியாகும். ஆனால் இந்த ஆண்டு உர மானியத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை வெறுமனே ரூ. 79,530 கோடி மட்டுமே. கடந்த ஆண்டை விட 40.62% அளவிற்கு உர மானியம் வெட்டப்பட்டுள்ளது.

விவசாயிகளின் உரத்திற்கானது மட்டுமல்லாமல், ஏழை மக்களின் உணவிற்கான மானியத்தையும் வெட்டிச் சுருக்கியுள்ளது மோடி அரசு. குறிப்பாக கடந்த 2020-2021-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.4,22,618 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு இந்த ஆண்டுக்கான நிதிநிலையறிக்கையில் ரூ. 2,42, 836 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 42.54% அளவிற்கு மானியத்தை வெட்டிச் சுருக்கியுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 67% பேர் ரேசன் கடைகளில் உணவு தானியங்களைப் பெற்று வரும் நிலையில், இந்த மானிய வெட்டு பெரும்பான்மை உழைக்கும் மக்களை பசி பட்டினிக்கு பலி கொடுக்கவிருக்கிறது.

உணவு மானியத்தை வெட்டியதோடு மட்டுமல்லாமல் அனைத்து பொருட்களின் விலையையும் நிர்ணயிக்கும் சக்தி கொண்ட பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களுக்கான மானியத்தையும் குறைத்துள்ளது. கடந்த 2020-21 நிதிநிலையறிக்கையில் ரூ. 38,000 கோடி பெட்ரோல் டீசல் மானியத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நிதியாண்டில் வெறுமனே, ரூ. 12,995 கோடியை மட்டுமே ஒதுக்கியிருக்கிறது.

படிக்க:
♦ வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !
♦ வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் !

ஒரு வர்க்கத்திடமிருந்து சுரண்டி மற்றொரு வர்க்கத்துக்கு செல்வத்தை தாரைவார்ப்பதுதான் ஒரு அரசின் பாத்திரம். அது யாருக்கான அரசு என்பதிலிருந்துதான் எந்த வர்க்கத்திடமிருந்து எடுத்து எந்த வர்க்கத்திற்குக் கொடுக்கப்படுகிறது என்பது தீர்மானிக்கப்படுகிறது. அம்பானியும் அதானியும் இதர பெருமுதலாளிகளும் சிறப்பான பட்ஜெட் என இதனைப் புகழ்ந்திருக்கிறார்கள். மக்களின் மானியங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு என்பது அப்பட்டமாகத் தெரிய வந்திருக்கிறது.

இந்த நிதிநிலை அறிக்கை மக்களுக்கு புதியதாக எதையும் அள்ளிக் கொடுக்கவில்லை என்பதை வேண்டுமானால் ஏமாற்றம் எனக் கூறலாம். ஆனால் ஏற்கெனவே நலிந்து கொண்டிருக்கும் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட மானியங்களையும் பறித்துக் கொண்ட செயலை என்னவென்று சொல்வது ? திமிர்த்தனம் தான் ! இடர்பாடு நிறைந்த சூழலிலும் கூச்சமின்றி மானியங்கள் பறிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில், “மக்கள் நம்மை என்ன செய்துவிட முடியும்?” என்ற திமிரும் தெனாவெட்டும்தான் வெளிப்பட்டிருக்கிறது ! இத்திமிரை இப்போதே அடக்கத் தவறினால், நம்மை அடக்கம் செய்துவிடும் என்பது மட்டும் உறுதி !


கர்ணன்

செய்தி ஆதாரம் : Gonewsindia