மார்ச் 8 அரங்கக் கூட்டம் உசிலை பகுதியில் நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தலைமை உரையாக ம.க.இ.க தோழர் சுகுணா அவர்கள் தொடங்கி வைத்தார்.

இன்று எல்லாத் தளங்களிலும் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தினம் என்றால் என்ன என்று தெரியாமல் கொண்டாடப்படுகிறார்கள். தேர்தல் பரபரப்பில் ஓட்டுக்கட்சி அரசியல் கட்சிகள் எந்தக் கொள்கையும் இல்லாமல் கொண்டாட்டத்தில் திளைக்கின்றனர். இது ஒரு போலி ஜனநாயகம். ஆனால் இங்கு என்ன சுதந்திரம் இல்லை என்கிறார்கள்.

சுதந்திரம் எப்படி பொய்யோ அது போன்று தான் பெண் சுதந்திரமும். பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் முதல் சாதாரண பெண்கள் வரை கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். இது கொண்டாட்ட தினம் இல்லை உரிமையை பெற போராடக்கூடிய நாள் என போலி ஜனநாயக கட்டமைப்பை அம்பலப்படுத்தி தோழர் சுகுணா உரையாற்றினார்.

அடுத்ததாக தோழர் உமா அவர்கள் பேசுகையில், பெண்கள் படித்தும் வேலைக்கு சென்றும் அடிமைத்தனம் போகவில்லை. அடிமைத்தனத்தை புரிந்துகொள்ள நாம் முதலில் சமூகத்தை ஆய்வு செய்ய வேண்டும். ஆதி காலங்களில் தாய்வழிச் சமூகத்தில் பெண்கள் தான் தலைமை தாங்கினார்கள். பிறகு காலமாற்றத்தினால் மதம் உருவாக்கத்தினாலும் பெண்ணடிமைத்தனத்தை வளர்க்க காரணமாயிருந்தது. முதலாளித்துவ சமூகத்தில் பெண்கள் சுரண்டப்படுகிறார்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். இதையெல்லாம் யார் தடுப்பது போலீசா? சட்டமா? நீதிமன்றமா?
ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறது அதை அதிகாரிகளே முடக்கிறார்கள்.

படிக்க:
♦ பெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் !
♦ சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு !! || அலெக்சாந்த்ரா கொலந்தாய்

போஸ்கோ சட்டத்தில் பெண்களுக்கு எதிராகவே தீர்ப்பு சொல்லப்படுகிறது.
சமூக மாற்றம்தான் பெண்களுக்கு சமத்துவத்தை பெற்றுத்தரும் அதற்காக ஆண்களும் பெண்களும் இணைந்து சமூக மாற்றத்திற்காக போராடுவோம் என கூறி தன் உரையை முடித்தார்.

அடுத்ததாக தோழர் நதியா மகளிர் தின வாழ்த்துகளுடன் தன் உரையை துவங்கினார். “சவாலை தேர்ந்தெடு என்கிறார்கள். ஆனால் நிலவுகின்ற சமூக கட்டமைப்பு ஆண்களுக்கு சேவை செய்வதையே தேர்ந்தெடு என்கிறது. இதில் நீதிமன்றத்தின் நிலை உமா தோழர் கூறியது போல “நீ பாலியல் வன்முறை செய்த பெண்ணையே கல்யாணம் செய்து கொள்கிறாயா” என குற்றவாளியிடம் கேட்ட நீதிபதி, தோல் மீது தோல் படாவிட்டால் அது பாலியல் வன்முறை இல்லை என்கிற பெண் நீதிபதி தீர்ப்பு என இப்படி எந்த ஒரு தீர்ப்பும், ஆணாதிக்க சிந்தனையில் இருந்தே உருவாகிறது.

இவர்களை நாம் என்ன செய்யலாம். தண்டிக்க முடியுமா? திருப்பி அழைக்க முடியுமா? முடியாது!. ஏனென்றால் இவர்களை நாம் தேர்ந்தெடுக்கவில்லை அல்லது நாம் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ எம்.பி போன்றவர்கள் இவர்களை கேள்வி கேட்பார்களா? அதுவும் இல்லை. எனில் இங்கே எங்கு பெண் உரிமை இருக்கிறது ?
இதற்கு தீர்வு என்ன உழைக்கும் வர்க்கத்தினர் விடுதலையிலேயே பெண்கள் விடுதலை சாத்தியப்படும். உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்களில் பெண்கள் தன்னை இணைக்கும்போது தான் பெண் விடுதலை சாத்தியம்” என கூறி தன் உரையை முடிவு செய்தார்.

அடுத்ததாக தோழர் கவிதா பேசுகையில், 1910-ல் கிளாரா ஜெட்கின் போன்ற பெண் புரட்சியாளர்கள் மூலம் பெண்களுக்கு உரிமைகளை பேச ஒரு நாள் வேண்டும் என அறிவித்தார்கள். ரசியாவின் பிப்ரவரி புரட்சியில் உணவு, சமாதானம் வேண்டுமென பெண்கள் ஜார் அரசாங்கத்திற்கு எதிராக போராடி வென்றார்கள். இதையே பெண்கள் தினமாக கொண்டாட வேண்டுமென அலெக்சாந்தரா கொலந்தாய் கூறினார்.

இப்படியும் நமக்கு வரலாறு கற்றுக் கொடுத்திருக்கிறது. ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் பெண்களை வீட்டில் அடிமைப்படுத்தி திருமணத்திற்கு தயார் செய்யும் பண்டப் பொருளாக வளர்க்கிறார்கள். அடுத்தது தாய்மை, தாய்மை தான் பெண்கள் இலட்சியத்தை தடுக்கிறது. குழந்தைகளை பெற்றெடுப்பது முதல் பாதுகாப்பது வரை பெண் என்பவள் அதற்கு அடிமையாகவே இருக்க வைக்கப்படுகிறாள். அதைத்தாண்டி சமூகத்தைப் பற்றிய பொது சிந்தனை இல்லாமல் செய்கிறது. இந்த முதலாளித்துவ சமூக கட்டமைப்பு ஆட்சியில் பெண்கள் மீதான அடக்குமுறை அதிகரிக்கும். இதனை வீழ்த்த பெண்கள் ஆண்கள் என அனைவரும் வர்க்க ரீதியாக அணிதிரள வேண்டும் என கூறி தன் உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக தோழர் கயல்விழி பேசுகையில், “ஒரு பெண் ஊராட்சி தலைவராக இருந்தாலும் எல்லா செயல்பாடுகளிலும் ஒரு ஆணைச் சார்ந்தே இருக்க வேண்டியதாக உள்ளது. ஆட்சி மாற்றத்தினால் மட்டும் நம் நிலைமை மாறாது. இதை உணர்ந்து போராட நாம் முன்னேற வேண்டும்” எனக் கூறினார்.

தோழர் அர்ஜுன் பேசுகையில் எழுத்தாளர் அருந்ததி ராயின் வாழ்க்கைக் குறிப்பை பற்றி மிகச் சிறப்பாக விவரித்தார். அடுத்ததாக தோழர் குருசாமி “தேர்தல் நிலவரமும் அதில் பெண்கள் நிலையும்” என்கிற தலைப்பில் உரையாற்றினார்.

“இந்த சமூகத்தில் பிரச்சனையோடு வாழ்கிறோம் அதில் பெண்களுக்கு பிரச்சினை ஓரவஞ்சனை யோடு இருக்கிறது. ஆணாதிக்கம் உள்ளது. தலித்துகளாக பிறந்தால் கூடுதல் ஒடுக்குமுறை. பெண்கள் சுதந்திரம் அடைந்து விடக்கூடாது என்பதில் இந்த சமூகம் மூர்க்கமாக நடந்து கொள்கிறது.

இதை எப்படி மாற்றுவது என்பது முதன்மையானது. பெண்களை பொருளாக பார்க்கிறார்கள். பெண்கள் இன்றைய காலகட்டத்தில் பொருளாதார நெருக்கடியால் தள்ளப்பட்டும் முதலாளித்துவம் வழங்கி இருக்கும் குறைந்த பட்ச ஜனநாயக அடிப்படையில் வெளியில் சென்று உழைக்கிறார்கள். அங்கு பலருடன் பழக வாய்ப்பு ஏற்படுகிறது. ஆனால் அதனைக் கூட பெற அனுமதிப்பதில்லை நம் சமூக உறவுகள்.

ரவுடிகளை வைத்துக்கொண்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள் அ.தி.மு.க பிரமுகர்கள். பீகாரில் தலித் பெண்களை வெளியில் வரக்கூடாது வந்தால் கொள்வோம் என்று பகிரங்கமாக பிஜேபி ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பேசிவருகிறார்கள். சமீபத்தில் பெண் போலீஸ் ஐபிஎஸ் அதிகாரி உயர் அதிகாரியால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதை வெளியில் சொல்லாமல் தடுக்கவே அதிகாரவர்க்கம் செயல்படுகிறது. இப்படிப்பட்ட மிகக் கொடூரமான இந்த சமூக அமைப்பை எப்படி மாற்றுவது?

சோசலிச நாடுகளில் தான் பெண்கள் பிரச்சினை தீர்க்கப்பட்டு உள்ளது. பெற்றோர்களைச் சார்ந்து பெண்கள் வாழக்கூடாது. சொத்துரிமை இல்லாமல் போக வேண்டும். குழந்தை வளர்ப்பிற்கு இந்த சமுதாயம் பொறுப்பேற்க வேண்டும். உணவு சமைப்பது என்பது சமூக உடமை ஆக்கப்பட வேண்டும் இந்த மாதிரியான சமூக அமைப்பில் தான் பெண்கள் முழுமையான சுதந்திரம் அடைகிறார்கள் இது தான் சாத்தியம்.

ஆனால் பிஜேபி ஆட்சியோ மீண்டும் பழைய பார்ப்பனிய ஒடுக்குமுறையை கொண்டுவந்து பெண்கள் உரிமையை பறிக்க பார்க்கிறார்கள். பெண்கள் அனைவரும் அமைப்பாக திரண்டால் சாராயக் கடையை மூட முடியாத பெண்கள் இடங்களுக்காக மற்ற பெண்கள் சேர்ந்து நின்றால் சாராய கடை இருக்குமா ஆனால் தன் வீட்டில் யாரும் பாதிக்காமல் இருந்தால் அத்துடன் என்று கொள்வது என உள்ளனர்.

குழந்தைகள் எவ்வாறு தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக தொடர்ந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து அதை நிறைவேற்றிக் கொள்கிறதோ அதைப்போல பெண்களும் தொடர்ந்து ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் ஓயாமல் ஒன்றுகூடி போராடிக்கொண்டே இருக்க வேண்டும் இதன் மூலமாகத்தான் பெண்கள் தன் உரிமையை நிலைநாட்ட முடியும் என கூறி தன் உரையை நிறைவு செய்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர் ஒருவர் பேசுகையில், டெல்லியில் விவசாயி போராட்டத்தில் பெண்கள் ஏன் கலந்து கொள்கிறார்கள் என்று பிஜேபி ஆர்எஸ்எஸ் காரர்கள் கேள்வி கேட்கிறார்கள். வேளாண் துறையில் பெண்களின் பங்களிப்பு இல்லாமல் எங்கு விவசாயம் நடக்கிறது நாற்று நடுவது முதல் களை எடுப்பு வரை பெண்களின் பங்கு என்பது விவசாயத்தில் முக்கியத்துவமாக உள்ளது. அவர்கள் விவசாய வேலைகளில் இறங்கி வேலை செய்யவில்லை என்றால் ஆர்எஸ்எஸ் பிஜேபி அறிவுஜீவிகள் உணவு உட்கொள்ள முடியுமா? இவ்வாறுதான் நீதித் துறையில் இருந்து அதிகாரவர்க்கம் வரை பெண்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அவமதிப்பது என்பது ஒரு புறத்தில் நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே தான் பெண்கள் அனைவரும் ஒரு அமைப்பாக திரண்டு தங்களது பிரச்சினைகளை அந்த மன்றத்தில் வைத்துப் பேசி போராடி தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும் என பெண்களின் கூட்டியக்கத்தின் அவசியத்தை கூறி உரையை முடிவு செய்தார்.

படிக்க :
♦ பெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் !
♦ லாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் !

அடுத்ததாக தோழர் அனு அவர்கள் தான் வசிக்கும் தான்சானியாவில் நிகழும் பெண்களின் நிலைமை பற்றி தன் அனுபவத்தில் கூறினார். நாம் இங்கு பெண்ணடிமை சமுதாயத்தில் வாழ்கிறோம். பெண்களுக்கு சமத்துவம் உள்ள நாடு எப்படி இருக்கும். அதை நான் வசிக்கும் தான்சானியாவில் கண்டேன். அங்கு பெண்களுக்கு முன்னுரிமை உள்ளது. எந்த நிறுவனத்திற்கு போனாலும் பெண்கள்தான் அதிகம். ஆனால் இங்கோ இலகுவான துறையில்தான் பெண்கள் உள்ளனர். கடினமான துறைகளில் பெண்களுக்கு வேலை இல்லை என இங்கு ஒதுக்குகிறார்கள். ஆனால் அங்கு கனரக வாகனங்கள் பெண்கள் ஓட்டுகிறார்கள்.

டிராபிக் போலீசாக ஏராளமான பெண்கள் உள்ளனர். அந்நாட்டில் பெண்கள் மிகக் குறைவான விலையில் உணவுகளை வாங்கிக் கொள்ள முடியும் சமைக்கத் தேவையில்லை. திருமணம் என்பது பிடிக்கும் வரை சேர்ந்து கொள்ளலாம் என்று தான் உள்ளது. தங்களுக்கான துணையை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் நிலைமை அங்கு உள்ளது பெண்கள் சுயமாக இயங்குகின்றனர். மத பள்ளிகள் வைத்துள்ளார்கள் அங்கு குழந்தைகளை விட்டு விட்டு வேலைக்கு செல்கின்றனர்.

அசைவ உணவே அங்கே பிரதானம் ஆகவேதான் அவர்கள் மகப்பேறு காலங்களில் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று இருக்கிறார்கள். பெண்கள் விளையாட்டுகளுக்கு முன்னுரிமை உள்ளது. கருவுற்ற பெண்கள் கூட மாரத்தான் போட்டியில் கலந்து கொள்கின்றனர். இதுபோன்ற சமூக கட்டமைப்பு தான் நமக்கு தேவை பெண் விடுதலை என்பது இதை முன்னிறுத்தி வழிநடத்த வேண்டும் என்று கூறி உரையை முடித்தார்.

இறுதியாக தோழர் ராமலிங்கம் நன்றி உரையாற்றினார்: நிகழ்ச்சிநிரலை தாண்டி பல பெண்கள் முன்வந்து பேசியது, இந்த கூட்டத்தில் சிறப்பு. டில்லியில் ஒரு பக்கம் 100 நாள் தாண்டி விவசாயிகள் போராட்டம் உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை இப்படிப் பல பகுதிகளில் உழைக்கும் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக ஒடுக்குமுறைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆகவே நாம் பெண் விடுதலையை மட்டும் பேசிக்கொண்டு கலைவது என்பது இருக்கக் கூடாது. சமூக மாற்றத்திற்கான போராட்ட வடிவத்தில்தான் பெண்விடுதலையும் இருக்கிறது. ஆகவே சமூக மாற்றத்துக்கான போராட்டத்தில் ஆணும் பெண்ணும் இணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறி நன்றி உரையை முடித்துக்கொண்டார்.

தகவல்
ம.க.இ.க
மதுரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க