ஜியோ பேபி இயக்கிய “தி கிரேட் இந்தியன் கிச்சன்” எனும் மலையாள மொழி திரைப்படம் பெரும்பாலான மக்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளது. குடும்ப அமைப்பில் பெண்களின் நிலையை மையக் கருத்தாக கொண்டு இந்தியாவில் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. மேம்பட்ட எதார்த்த திரைமொழியைப் பயன்படுத்தி நுட்பமான ஆணாதிக்கக் கூறுகளை வெளிக்கொணர்ந்த விதத்தில் இத்திரைப்படம் வேறுபடுகிறது.

மிக முக்கியமாக, கதையமைப்பு காட்சிப் படிமங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அப்படிமங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் நமது சமூக அமைப்பில், குறிப்பாக குடும்ப அமைப்பில் பல அடுக்குகளாகப் படர்ந்திருக்கும் பெண் சார்ந்த மதிப்பீடுகளை நன்கு புரிந்து கொள்ள முடியும். ஒரு சரியான புரிதலின்றி அடுக்களையில் பெண்கள் படும் துயரம் என்றளவில் ஒரு தட்டையான வாசிப்பை தவிர்க்க வேண்டும்.

படிக்க :
♦ சைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் !
♦ திரை விமர்சனம் : அறம் ஒரு வரம்தான் ஆனாலும்….

மாறாக, பரந்த வாசிப்பும் நுண் அரசியல் பார்வையும் கொண்டு அக்கறையுள்ள பார்வையாளராக இத்திரைப்படத்தைப் பார்த்தால் ஒவ்வொரு படிமத்தையும் பெண்ணிய அரசியல் சார்ந்த விவாதங்களின் அடிப்படையில் வாசிக்க உந்துதல் ஏற்படும். அத்தகைய பார்வையாளரின் வாசிப்பை பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

000

திரைப்படத்தின் தொடக்கத்திலே நடனமும் சமையலும் மாறி மாறி வரும் காட்சிகள் முன்னுரை போல் செயல்படுகின்றன. தனது லட்சியத்தை விடுத்து திருமண வாழ்வில் சிக்கித் தவிக்கும் பெண்ணின் கதை என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திருமண முறையில் உள்ள அடிப்படை முரணைப் பிரதிபலிக்கும் வண்ணம் பெண் பார்க்கும் நிகழ்வின்போது சூரஜ், நிமிஷா  பேசிக் கொள்ளும் காட்சி வருகிறது.

இக்காட்சியில் ஒருவரையொருவர் அறிந்ததில்லை என்பதை ஒப்புக் கொண்டாலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கின்றனர். மாப்பிள்ளை பாரம்பரியமானக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது பெண் வீட்டார் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நம் நாட்டில் திருமணம் என்பது தனி நபர் விருப்பம் சார்ந்த ஒன்றாக என்றுமே இருந்ததில்லை. மாறாக மணமக்களின் வீட்டார் தீர்மானிக்கும் விதமாக இருந்து வருகிறது.

சூரஜ், நிமிஷாவிற்கு திருமணம் நடைபெறுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்திருமணத்தைக் கொண்டாடித் தீர்க்கின்றனர். பல சடங்குகளும் இடம்பெறுகின்றன. பொதுவாக திருமணத்திற்கு வருகைப் புரிபவர்கள் நல்ல ஆடை அணிந்து, ஒப்பனை செய்து கொண்டு, தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசி மகிழ்வார்கள்.

மொத்தத்தில், அவர்களுக்கு தங்களின் கொண்டாட்டமே முக்கியம். திருமணமுறைப் பற்றியோ தம்பதிகளின் இல்லற வாழ்க்கை பற்றியோ அவர்களுக்கு கவலை இல்லை. செய்யப்படும் சடங்குகளும் போலியான உணர்வுகளை வெளிப்படுத்தவே பயன்படுகின்றன. திருமணம் முடிந்து தம்பதிகள் வீட்டிற்கு வந்ததும் வாசலில் நிற்கும் வாகனங்கள் அனைத்தும் புறப்படும் காட்சியை இரண்டு விதமாகப் புரிந்துக் கொள்ளலாம்: திருமணக் கொண்டாட்டம் முடிந்து தம்பதிகள் சாதாரண வாழ்க்கைக்குள் நுழைகிறார்கள் என்பதையும் இனி அவர்களின் இல்லற வாழ்க்கையில் எந்தவிதமான தலையீடும் இருக்காது என்பதையும் குறிக்கும் விதமாக அக்காட்சி அமைகிறது.

திருமணத்தன்று இரவு சூரஜும், நிமிஷாவும் அவர்களது அறையில் முதன்முதலாக பேசிக் கொள்கின்றனர். அப்பொழுது சூரஜ் நிமிஷாவிடம் தனது வீட்டை, தனது பெற்றோரை பிடித்திருக்கிறதா என்று கேட்கிறான். அவன் தனது மனைவியின் சௌகரியத்தை விசாரிப்பதாக எண்ணி இக்கேள்வியை சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை.

எதிர்கேள்வி கேட்கவோ அல்லது எதிர்மறையாக பேசவோ நிமிஷாவிற்கும் அனுமதியில்லை. மேலும், மனைவி தனது கணவரின் குடும்பத்தை தன் குடும்பமாக நினைத்து அவர்களின் பழக்கவழக்கங்களை எந்த கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என இக்காட்சி உணர்த்துகிறது.

திருமணமான மறுநாள் நிமிஷா குளித்து விட்டு மகிழ்வுடன் அடுக்களையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். சூரஜ் தனது மனைவியிடம் நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருக்கிறான். நிமிஷாவின் மகிழ்ச்சியையும் அடுக்களையில் இருவரின் நெருக்கத்தையும் பின்வரும் காட்சிகளில் நம்மால் காண முடியாது. இதற்குக் காரணம் என்னவென்றால் திருமணமான புதிதில் பெண்கள் மகழ்ச்சி பொங்க அடுக்களையில் வேலை செய்வதும் கணவன் மனைவியிடம் அடுக்களை வரை சென்று நெருக்கமாக உரையாடுவதும் தற்காலிகமானவை தான்.

மறுபுறம், நிமிஷாவின் மாமியார் தனது கணவருக்கு டூத் பிரஷ் எடுத்து கொடுப்பதிலிருந்து விதவிதமாக சமைத்து கொடுப்பது வரை மிகப் பக்குவமாகப் பார்த்துக் கொள்கிறார். அவர் வேலை செய்யும் விதத்தை கடமை உணர்ச்சியின் வெளிப்பாடாகப் பார்ப்பதை விட சலிப்பின் உச்சம் என்று தான் புரிந்துக் கொள்ள முடிகிறது. அவர் தனது கருவுற்றிருக்கும் மகள் வெளிநாட்டிற்குக் கூப்பிடும் போது பலவித சமையல் பொருட்களையும், பாத்திரங்களையும் எடுத்துச் செல்கிறார். பொதுவாக இதை அம்மாவின் பொறுப்பு, நாட்டின் பாரம்பரியம் என புகழ்வார்கள். ஆனால், அனைத்து திறமைகளும் மழுங்கடிக்கப்பட்டு சமையல் செய்ய மட்டுமே பழகிய இயந்திராமாகத் தான் அவர் காட்சியளிக்கிறார்.

உடல் நலம், ஒய்வு, ஆன்மீகம் ஆகிய அனைத்தும் பெண்களுக்கு மறுக்கப்படுவதை அடுத்தடுத்து வரும் காட்சிகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அடுக்களையில் நிமிஷா தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் அதே வேளையில் அவரது கணவர் வெள்ளை உடை அணிந்துக் காற்றோட்டமான இடத்தில் யோகா செய்து கொண்டும் அவரது மாமனார் செய்தித்தாள் வாசித்துக் கொண்டும் இருக்கின்றனர்.

அடுக்களையும் படுக்கையறையும் மட்டுமே நிமிஷாவின் ஒரே வெளியாக மாறி மேற்கூறப்பட்ட சௌகரியங்கள் அனைத்தும் அவளுக்கு மறுக்கப்படுகிறது. சூரஜ் சமூகவியல் படித்திருந்தாலும் தனது மனைவி என்னென்ன வேலைகள் செய்கிறாள், அடுக்களையில் அவளது நிலைமையென்ன, அவளது மனநிலையென்ன என்பவைப் பற்றி எந்தவொரு அக்கறையும் இல்லை. மாறாக எவ்வித கஷ்டமுமின்றி தான் அவளைப் பார்த்துக் கொள்வதாக கருதுகிறார்.

ஒரு காட்சியில் நிமிஷா தான் அழுக்காக இருப்பதாக சொல்லிய பிறகும் அவளை சூரஜ் முத்தமிடுகிறார். அம்முத்தத்தோடு மட்டுமே நிறுத்திக் கொள்ளும் சூரஜ் தினம் தினம் சாப்பிட்ட எச்சங்களை எடுக்கும் போதும், பாத்திரங்களைக் கழுவும் போதும், பாத்திரம் கழுவும் தொட்டியில் கழிவு நீரை அகற்றும் போதும் தனது மனைவி அருவருப்பாக உணர்வதை கவனத்தில் கொள்ளவில்லை.

மற்றுமொரு காட்சியில் நிமிஷாவும் சூரஜும் ஹோட்டலில் சாப்பிடுகிறார்கள். சூரஜ் டேபிள் மேனர்ஸ் காரணமாக சாப்பிட்ட எச்சங்களை ஒரு தட்டில் ஒதுக்கி வைக்கிறார். இதைப் பார்த்ததும் ‘ஏன் வீட்டில் இந்த டேபிள் மேனர்ஸ் இல்லை’ என நிமிஷா சூரஜிடம் கேலியாகக் கேட்கிறார். ‘என் வீடு, என் சௌகரியம்’ என சூரஜ் கோபமாகப் பதில் கூறுகிறார். அப்படியொரு கேள்வியை ஏற்றுக் கொள்ள முடியாத சூரஜ் அக்கேள்வியைக் கேட்டதே தவறு என்றும் அதற்காக நிமிஷாவை மன்னிப்பும் கேட்க வைக்கிறார்.

இக்காட்சியின் மூலம் அழுக்கை அகற்றி வீட்டை சுத்தமாக வைப்பது மனைவியினது கடமையே என்ற செய்தியும் கடத்தப்படுகிறது. அடுக்களையில் பாத்திரம் கழுவும் தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேறும் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சீர் செய்ய வேண்டும் என்று நிமிஷா சூரஜிடம் கூறுகிறார். அப்போது ஹோட்டலில் நடைப்பெற்ற உரையாடலை மனதில் வைத்துக் கொண்டு கழிவைப் பற்றியே அவளுக்கு எப்போதும் கவலை இருப்பதாக நக்கலாகக் கூறிவிட்டு சூரஜ் நகர்கிறார்.

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவு நீங்க வேண்டும் என்று ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், வீட்டிற்குள்ளிருக்கும் அனைத்து விதமான கழிவுகளையும் தங்கள் கைகளால் அகற்றும் பெண்களின் நிலைப் பற்றியும் நாம் கவனிக்க வேண்டும்.

ஒரு கட்டத்தில் நிமிஷாவிற்கு திருமண வாழ்க்கையில் சலிப்பு ஏற்படவே நடன ஆசிரியராக வேலைப் பார்க்கலாம் என முடிவு செய்கிறார். தனது கணவரிடமும் மாமனாரிடமும் அம்முடிவை சொன்னதும் அவர்கள் இருவரும் அதிர்ந்துப் போகின்றனர். நிமிஷாவின் மாமனார் தங்களது குடும்பத்தில் பெண்கள் வேலைக்கு செல்லும் பழக்கமில்லை என்றும் சாப்பிட்டு முடித்து எழுந்து செல்லும் போது அவள் சமைத்த கடலை ருசியாக இருக்கிறது என்றும் கூறுகிறார்.

இக்காட்சியின் மூலம் அவளிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட சமையல் திறன் ஏற்கனவே செம்மையாக இருக்கும் பொழுது வேலைக்குப் போக நிர்பந்தமில்லை என்று அவர் குறிப்பிடுவது போல் புரிந்துக் கொள்ளலாம். மறுபுறமோ அவளது கணவன் பதட்டம் ஏதுமின்றி வேலையைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறுகிறான். இக்காட்சியில் சூரஜ் நிதானமாகப் பேசுவதை நல்ல விதம் என்று கருத முடியாது. ஏனென்றால் அவனது பதில் நாட்களைக் கடத்தி நிமிஷாவே அந்த எண்ணத்தை மறக்கும்படி செய்கின்ற முயற்சியே.

இவையனைத்தையும் மீறி வேலைக்குச் செல்ல முற்படும் பொழுது அவள் இருமுனைத் தாக்குதலை சந்திக்கிறாள். ஒன்று, அவள் வீட்டில் செய்யும் வேலைகள் அனைத்தையுமே மிகப் பெரும் சேவையாகக் கருத வேண்டும் என்றும் அவளே வீட்டின் ஐஸ்வர்யம் என்றும் அவளது மாமனார் கூறுகிறார்.

இக்கருத்தையொட்டி பல கேள்விகள் எழும்புகின்றன: நிமிஷாவின் அச்சேவையால் பயன்பெறுபவர்கள் யார்? அவள் பெரும் சேவை செய்கிறாள் என்று வைத்துக் கொண்டாலும் அது ஏன் அவளதுப் பொறுப்பாக மட்டுமே இருக்கிறது? எப்பொழுதும் அழுக்காகவும், கழிவுகளுடன் போராடிக் கொண்டிருக்கும் நிமிஷா திடீரென்று வீட்டின் ஐஸ்வர்யமாக ஆக முடியுமா? அவளின் உடல்நிலைப் பற்றி கவலைப்படுவது யார்? மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தேட முற்பட்டால் ஆணாதிக்கத்தின் வேர்கள் நன்கு புலப்படும்.

இரண்டாவது தாக்குதல் கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அதை அப்படியே பின்பற்றும் நாகரிகம் கூடத் தெரியாதவளாய் நிமிஷா இருப்பதாக சூரஜ் சுட்டிக் காட்டுகிறார். பெண்களும் ஆண்களைப் போல் அறிவு, திறமை, அனுபவ ஞானம் கொண்டவர்கள் என்பதையும் அவர்களால் சமூக வளர்ச்சிக்கு ஆண்களுக்கு நிகராகப் பங்களிக்க முடியும் என்பதையும் ஒத்துக் கொள்ளாததே சூரஜ் போன்றோரின் இத்தவறானப் புரிதலுக்கு காரணம்.

ஏற்கனவே உளவியல் நெருக்கடியில் இருக்கும் நிமிஷாவிற்கு தாம்பத்திய வாழ்க்கையிலும் பெருத்த ஏமாற்றமே. தனதுக் கணவனோடு கொள்ளும் உடலுறவு மிகவும் இயந்திரத்தனமாக இருக்கிறது. தனது கணவனின் காம இச்சையைத் தீர்க்க மட்டுமே பயன்படும் ஒரு கருவியாக இருப்பதை அறிகிறாள். ஒரு சமயம் உடலுறவு வைத்துக் கொள்வதற்கு முன்பு இருவரும் முன்னின்பத்தில் (foreplay) ஈடுபடலாமா என்று சூரஜிடம் நிமிஷா தயக்கத்தோடு கேட்கிறாள். இதைக் கேட்டதும் சூரஜ் உனக்கு முன்னின்பம் பற்றியெல்லாம் தெரியுமா எனக் கேலியாகக் கூறிவிட்டு அவளது உடல் தன்னை ஈர்க்கவில்லை என முகத்தில் அறைந்தது போல் பதில் தருகிறான்.

சூரஜால் இந்த ஒரு அடிப்படை எதிர்பார்ப்பைக் கூடப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. செக்ஸ் என்பது முற்றிலும் ஆண்களுக்கானது என்ற எண்ணம் கொண்ட சூரஜ் அவளது எதிர்பார்ப்பு தனது ஆண்மையைச் சோதிப்பதாக நினைக்கிறான். மேலும், தனது இயலாமையை மறைக்கப் பழியை நிமிஷாவின் உடல் மீது போடுகிறான். படுக்கறையிலும் தனித்து விடப்பட்டவளாகவே உணர்கிறாள்.

சூரஜும் அவனது தந்தையும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டதும் நிமிஷா அந்நியப்படுத்தப்படுகிறாள். அதே நேரத்தில் மாதவிடாய் ஏற்பட்டு முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப் படுகிறாள். இதன் காரணமாய் அவ்விருவரையும் கவனிக்க பெண் உறவினர் ஒருவர் வருகிறார். அவர் நிமிஷாவின் மாமியாரை விட ஒரு படி மேலே சென்று அன்றாட வீட்டு வேலைகளை சலனமின்றி செய்து முடிக்கிறார்.

வழக்கமாக மாதவிடாய் ஏற்படும் நாட்களில் அடுக்களையிலிருந்து ஒதுக்கி வைக்கப்படும் நிமிஷா இம்முறை சபரிமலைக்கு மாலைப் போட்டுள்ள சாமிகளின் கண்ணிலே படக் கூடாது என்று தனி அறையில் அடைத்து வைக்கப்படுகிறாள். வீட்டிற்குள் அவளுக்கான வெளி சுருக்கப் படுகிறது. மாதவிடாயை அறிவியல் பூர்வமாக அணுகாமல் அதையேக் காரணமாகக் காட்டி பெண்ணினத்தைப் புறக்கணிப்பது மாபெரும் குற்றமாகும்.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கை அசுத்தம், தீட்டு எனக் கூறி பெண் உடலின் இயல்பான தன்மைக்குத் தவறானக் கோணம் கற்பிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வீட்டிற்குள்ளே பல மதில் சுவர்கள் கட்டப்பட்டு பெண்ணின் இயக்கம் கட்டுப்படுத்தப் படுகிறது என்பதும் தெளிவாகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதால் அவர்கள் பிறக்கும் போதேத் தீட்டுப்பட்டவர்கள் என்ற கருத்துப் பரவலாக நம்பப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கபடாததற்கும் இதுவே காரணம். பெண்களை கோவிலுக்குள் அனுமதித்தால் சாமிக்கு தீட்டு என்று கூறுவது கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் கடவுளின் மீது கட்டமைத்திருக்கும் மதிப்பீடுகளைப் பொய்யாக்குகிறது.

இவ்விவாதத்தை முன்னெடுக்கும் பொருட்டு நமக்கு கிடைக்கும் ஒரே பதில்: ஒருவரின் மதநம்பிக்கை மீது சட்டமோ அரசாங்கமோ அதிகாரம் செலுத்தக் கூடாது என்பதே. இத்திரைப்படம் நேரடியாக இச்சிக்கலைப் பேசவில்லை என்றாலும் மாதவிடாய் பற்றிய தவறானப் புரிதல்களைக் கேள்விக்குட்படுத்துகிறது.

வீட்டிற்குள் தனக்கான வெளி இல்லாததாலும் தன் பிரச்சனையை பகிர்ந்துக் கொள்ள யாரும் இல்லாததாலும் சபரிமலை பிரச்சனைப் பற்றிய சமூக ஆர்வலர் ஒருவரின் காணொளியை தனது முகநூல் பக்கத்தில் நிமிஷா பகிர்கிறாள். இது அவளது குடும்பத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இதனைத் தொடர்ந்து சூரஜின் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சில முக்கிய ஆட்கள் அவரையும் அவரது தந்தையையும் சந்திக்க வருகின்றனர்.

தங்களின் சாதிக்கென்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது என்றும் அது சீர்குலையாமல் இருக்க அந்த பிரச்சனைக்குரிய காணொளியை நீக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சூரஜும் நிமிஷாவிடம் சென்று அக்காணொளியை நீக்க சொல்கிறான். இதில் கவனிக்க வேண்டிய விஷயமென்னவென்றால், அவன் அவளது அறைக்கு வெளியில் நின்று அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல் பேசுகிறான்.

ஏற்கனவே பல்வேறு வழிகளில் அடக்குமுறைக்கு உள்ளான நிமிஷா இம்முறை எதிர்மறையாகப் பதில் கூறுகிறாள். சொல்வதைக் கேட்டால் தான் இந்த வீட்டில் இருக்க முடியும் என்று கூறிவிட்டு சூரஜ் சென்றதும் அவளது உள்ளம் மிகவும் புண்படுகிறது.

பல முனைகளிலிருந்து தாக்குதலை சந்தித்த நிமிஷா கோபத்தின் உச்சத்தில் இருக்கிறாள். சபரிமலைக்கு மாலை போட்ட சாமிகள் வீட்டிற்கு வந்து பூஜைகளைத் தொடங்குகிறார்கள். அப்போது சொல்லப்படும் மந்திரங்களும் செய்யப்படும் சடங்குகளும் நிமிஷாவின் கோபத்திற்கு பின்புலமாக செயல்படுவது கூடுதல் சிறப்பு. உணர்ச்சி குழம்பாக இருந்தாலும் தனது எதிர்ப்பை தெளிவாக திட்டமிடுகிறாள்.

கடைசி வரை சூரஜ் கண்டுக் கொள்ளாத கழிவு நீரைத் தனது ஆயுதமாக மாற்றுகிறாள். முதலில், சூரஜும் அவரது தந்தையும் தேநீர் கேட்கும் போது கழிவு நீரை டம்ளரில் ஊற்றி கொடுக்கிறாள். இரண்டாவதாக, கழிவு நீரை குடித்த பிறகு சூரஜ் தன்னை தாக்க வரும் போது அதே கழிவு நீரை அவன் மேலே ஊற்றிவிடுகிறாள்.

தினமும் அடுக்களையில் வேலை செய்வதால் ஏற்பட்ட சலிப்பு, தனது கனவு வேலையில் சேர அனுமதி மறுக்கப்பட்டது, கழிவுகளை அகற்றியதால் அருவருப்பான உணர்வு, இயந்திரமயமாக்கப்பட்ட தாம்பத்திய வாழ்க்கை, மாதவிடாய் காலங்களில் தனது வீட்டுக்குள்ளே சிறைக் கைதியாய் வாழும் சூழல், சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட எதிர்ப்பு என்று அனைத்து விதத்திலும் நிமிஷாவின் கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சி இறுதிக் காட்சியில் வெளிப்படுகிறது.

கதையாடலில் எதார்த்தத்தை மீறி நிமிஷாவிற்கு ஒரு தற்காலிகமான சுதந்திரம் அளிக்கப்படுகிறது. இக்காட்சியைப் பார்க்கும் பார்வையாளர்களும் இந்த தற்காலிக சுதந்திரத்தில் கிடைத்த திருப்தியைக் கொண்டாடிவிட்டு திருமண அமைப்பிலிருந்து வெளியேறிய பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்காமல் இருந்துவிடக் கூடாது.

ஒரு சராசரி பார்வையாளர் நிமிஷாவின் அம்மாவை போன்று வீட்டிற்குள் நடக்கும் சாதாரணப் பிரச்சனைகளுக்காக ஒரு பெண் குடும்பத்தை விட்டு வெளியேறுவதற்கான அவசியம் இல்லை என்றே கூறுவார். பொதுவாகவே நமது சமூகம் பெண்களை உடலளவில் துன்புறுத்துதலை மட்டுமே வன்முறை எனக் கருதுகிறது.

இக்கதையில் வரும் சூரஜ் என்பவர் ஒரு நல்ல கணவர் என்ற சட்டகத்தில் மிக அருமையாகப் பொருந்திக் கொள்வார்: பாரம்பரியமானக் குடும்பத்தைச் சேர்ந்தவர், நல்லதொரு பணியிலுள்ளவர், குறிப்பாக குடிப்பழக்கம் இல்லாதவர், மனைவியை உடலளவில் துன்புறுத்தாதவர். ஆனால், சூரஜும் அவரது தந்தையும் மறைமுகமாக நிமிஷாவிற்கு தரும் ஒவ்வொரு நெருக்கடியும் வன்முறையே.

இத்திரைப்படத்தில் ஒவ்வொரு படிமமும் இந்த நெருக்கடியைத் துல்லியமாக காட்சிப் படுத்துகிறது. இந்நெருக்கடியை சற்றும் பொருட்படுத்தாமல் சில ஆண்கள் தாங்களே அனைத்து வீட்டு வேலைகளை செய்வதாகவும், வேறு சில ஆண்கள் நிமிஷாவைப் போன்ற பொறுப்பான பெண்கள் இன்றளவில் இல்லவே இல்லை எனவும் மற்றும் சிலர் வீட்டு வேலைகளை தங்களின் மனைவியோடுப் பகிர்ந்து செய்வதாகவும் கூறலாம்.

மேற்கூறப்பட்ட மூன்று சாராரின் கருத்துகளுமே ஏற்றுக் கொள்ளதக்கது. எனினும், பொது சமூகத்தின் ஒத்த மனப்பான்மை அல்ல. எனவே, இக்கருத்துகளைக் கொண்டு ஆணாதிக்கத்தின் ஆழத்தை ஆராய்வது சரியான அணுகுமுறையாக இருக்காது. உண்மையில் நம் சமூகத்தில் ஆணாதிக்கத்தால் கட்டமைக்கப்பட்ட சில கற்பிதங்களையும் தப்பெண்ணங்களையும் கேள்விக்குட்படுத்த வேண்டும்.

படிக்க :
♦ தி கிரேட் இந்தியன் கிச்சன் || ஆணாதிக்கமும் மதமும் இங்கு தோலுரிக்கப்படும்

♦ NGK : செல்வராகவன் – சூர்யா கூட்டணி Hangover-ல் ஒரு அரசியல் படம் !

எடுத்துக்காட்டாக, சமையல் வேலை பெண்களுக்கு மட்டும் ஆனது; அதை எளிதில் செய்து முடித்துவிடலாம்; இவ்வேலைகள் மட்டுமே பெண்ணின் தன்மையை வரையறுக்கக் கூடியது; ஆணும் பெண்ணும் பகிர்ந்து வேலை செய்வது கட்டாயம் கிடையாது; பெண் வேலைக்கு செல்வதற்கு அனுமதி அளிப்பது ஆணின் பெருந்தன்மை; உடலுறவு அனுபவத்தைப் பற்றி பெண் பேசவே கூடாது; பெண்ணை உடலளவில் துன்புறுத்தினால் மட்டுமே அது வன்முறை; பெண்ணின் இருத்தல் ஆணை மையமாகக் கொண்டே கட்டமைக்கப்படுகிறது.

மேலே கூறப்பட்டுள்ள இக்கற்பிதங்கள் அனைத்தும் ஆணாதிக்கத்தின் வேர் போன்றவை. இவற்றைத் தொடர்ச்சியாகக் கேள்விக்குட்படுத்துவது தான் பெண்ணின் உண்மையான சுதந்திரத்தை நோக்கி நகருவதற்கு நாம் எடுத்து வைக்கும் முதல் படி.


விஜயகணேஷ்