ரு நாட்டையோ அல்லது மக்கள் கூட்டத்தையோ புரிந்து கொள்ள வேண்டுமானால் அவர்களின் உற்பத்தி முறையை அதாவது அவர்களின் பொருளாதார வாழ்வை ஆய்வு செய்ய வேண்டும் என்பதே மார்க்சியத்தின் அரிச்சுவடி ஆகும்.
அதை விடுத்து ஒரு மக்கள் கூட்டத்தை மதவெறியர்களாகவும் காட்டுமிராண்டிகளாகவும் சித்தரிப்பது அறிவியல் கண்ணோட்டம் ஆகாது.
ஆப்கானிஸ்தான் ஒரு நீண்ட நெடுங்கால வரலாறை கொண்டிருந்தபோதும் அது வளர்ச்சியடையாத பழங்குடி மக்களை பிரதானமாக கொண்ட நாடு.
ஆப்கனில் விவசாய நிலம் ஏறத்தாழ எட்டு லட்சம் மில்லியன் கெக்டேராகும். ஆனால், மேய்ச்சல் நிலம் 30 மில்லியன் கெக்டேராகும்.
பெரும்பான்மை மக்கள் நிலவுடமை உற்பத்தி முறைக்கே மாறாத சமுதாயம் அது. எனவே அங்கு மதம் தான் அம்மக்களை வழி நடத்தும் அமைப்பாக இருக்கும்.
பழங்குடிகள் அல்லது நிலவுடமை சமூகங்களை வழிநடத்தும் அமைப்பாக எப்போதும் மதங்கள் இருக்கும். கடந்தகால ஐரோப்பாவை போல் மதங்களே ஆட்சி செய்யும் அல்லது இந்தியாவின் நிலவுடமை காலத்தின் நிலவுடமை அரசனின் அக்கம் பக்கமாக மதம் இருக்கும்.
படிக்க :
ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?
தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !
எனவே, ஒரு சமுதாயப் பொருளாதார வாழ்வை புரிந்து கொள்ளாமல் மதத்தை தனித்து புரிந்து கொள்வது என்பது அம்பேத்கரிய பெரியாரிய கருத்தாகும். அது மார்க்சியம் ஆகாது.
வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் கிறிஸ்துவத்தையும் வளர்ச்சியடையாத நாடுகளான இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கும் மதங்களையும் ஒப்பிட்டு நோக்குவது அறியாமை ஆகும். இந்த அறியாமை கிறித்துவத்தை முற்போக்கானதாகவும் மற்ற மதங்களை பிற்போக்கானதாகவும் கருதுகிறது.
ஐரோப்பாவில் நிலவுடமை முறை இருந்த காலத்தில் கிபி 1500-களுக்கு முன்பு கிறிஸ்தவம் எப்படி இருந்தது என பார்க்க வேண்டும். அப்போது புரியும் அது எவ்வளவு கொடூரமான பிற்போக்கான கொலைகளையும் கொள்ளைகளையும் உலகின் பெரும் நிலப்பரப்புக்களில் நிகழ்த்தியதை அறியலாம்.
அது பெண்களையும் முற்போக்காளர்களையும் தீயிட்டு கொளுத்தி ‘முற்போக்கு’ பாத்திரம் ஆற்றியதை புரிந்து கொள்ள முடியும்.
எனவே, இஸ்லாமோ கிறித்தவமோ இந்து மதமோ. இவற்றை தனித்தனியாக பார்க்காமல் சமுதாய வளர்ச்சியோடு இணைத்து பார்த்தல் வேண்டும்.
பொதுவாக மேய்ச்சல் குடி சமுதாயங்கள் ஆண்களை சார்ந்ததாக இருப்பதால் இயல்பாகவே அது ஆணாதிக்க சமுதாயமாக இருக்கும். அங்கு பெண்களே ஒரு அடிமை பொருள்தான். எனவேதான் ஆப்கனிலும் இந்நிலை.
அதுபோல் மேய்ச்சல் தொழிலுக்கும், வேளாண்மை தொழிலுக்கும் நவீன முறையிலான கல்வி தேவை அற்றது. முதலாளிய உற்பத்தி முறை எங்கு தனது உற்பத்தியை தொடங்குகிறதோ அங்கிருந்துதான் நவீன கல்வியின் தேவை உருவாகிறது.
எனவே ஏகாதிபத்தியங்கள் ஆப்கனில் நுழைந்த பின்புதான் நவீன கல்விக்கான தேவையும் அது சார்ந்த கல்விக் கூடங்களும் உதயமாகின்றன.
ஆனால், பல நூற்றாண்டுகள் ஏகாதிபத்தியங்கள் ஆப்கனை ஆண்டபோதும் குறிப்பிட்டு கூறும்படி, அங்கு எந்த வளர்ச்சியையும் காண முடியவில்லை. மதவாத அமைப்புகளை உருவாக்கி அவற்றுக்கு வெறியேற்றி அவர்களை ஆயுத பாணியாக்கியதுதான் ஏகாதிபத்தியங்களின் சாதனை ஆகும்.
ஆப்கனின் யுத்த பிரபுக்களும் பழங்குடிகளின் தலைவர்களும் பழைய பிற்போக்கான உற்பத்தி முறை சார்ந்தவர்களாக இருப்பதால் இயல்பாகவே ஆணாதிக்க வெறியர்களாக கல்வி குறித்த அடிப்படை அறிவற்றவர்களாக இருக்கிறார்கள்.
ஏகாதிபத்தியங்கள் தங்கள் பழங்குடி அல்லது நிலவுடமை முறையின் தந்தை ஆதிக்க சமுதாய ஏற்றதாழ்வுகளை உடைப்பதை அவர்கள் விரும்பாத காரணத்தால் ஏகாதிபத்தியங்களை எதிர்க்கிறார்கள்.
இன்னொரு புறம் ஆப்கனின் யுத்தப்பிரபுக்களும் பழங்குடி தலைவர்களில் பெரும்பான்மையினரும் நீண்ட காலமாக ஏகாதிபத்தியங்களுடன் நெருங்கி பழகி ஏகாதிபத்தியங்களால் நஞ்சூட்டப்பட்டுள்ளனர்.
இப்போது இவர்களுக்கு ஏகாதிபத்தியங்களின் பணம் தேவையாக இருக்கிறது அதேவேளை ஏகாதிபத்தியங்களால் தமது சமுக கட்டுமானம் சிதைவதையும் அவர்களால் அங்கீகரிக்க முடியவில்லை.
எனவே, ஆப்கன் யுத்த பிரபுக்கள், ஏகாதிபத்திய மூலதனத்துக்கும், தங்களின் பழங்குடி மரபிலான வாழ்வுக்கும் இடையில் ஊசலாடுகிறார்கள். ஆனால், வெல்லப்போவது என்னவோ ஏகாதிபத்தியங்களின் மூலதனமே.
அங்கு இப்போது ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உருவாகும் சமுதாய சூழல் இல்லை. அப்படி உருவானாலும் அதுவும் நிலவுடமை சார்ந்த ஒரு அடக்குமுறை அமைப்பாகவேதான் இருக்கும்.
அங்கு இருக்கும் எம்.எல் அமைப்புகளும் ரசியாவால் உருவாக்கப்பட்ட இன்னொரு முஜாகிதின் அமைப்புதான்.
இப்போது நாம் சொல்லக் கூடிய ஒரே தீர்வு அந்த பின்தங்கிய சமுதாயத்தை அங்கீகரித்து அதன் சொந்த முயற்சியால் போராடி வளர்ந்து வர அனுமதிப்பது மட்டுமே.
ஏகாதிபத்தியங்களான சீனமோ, அமெரிக்காவோ ரசியாவோ அம்மக்களுக்கு எதையும் கொடுக்காது; இருப்பதையும் பறித்துக் கொள்ளும்.
எனவே, ஆப்கனின் தலைவிதியை ஆப்கன் மக்கள் பார்த்துக் கொள்ளட்டும். அவர்கள் ஆயிரம் வழிகளில் பின்தங்கியவர்களாக பிற்போக்காளர்களாக இருந்தாலும் அவர்களின் சொந்த முயற்சியால்தான் அவர்கள் முன்னேறி வரமுடியும். அதுதான் தீர்வும் கூட.
ஆப்கன் மக்களுக்காக எந்த ஏகாதிபத்திய ஓநாய்களும் நீலிக்கண்ணீர் வடிக்காமல் ஆப்கனை விட்டு வெளியேறுங்கள் அல்லது உங்களுக்கு ஆப்கன் மக்கள் இன்னொரு புதை குழியை தோண்டுவார்கள்.
படிக்க :
“போ.. போய் உன் பர்காவை போடு” – ஆப்கான் அவலம் !
தாலிபான்களின் கையில் ஆப்கானின் எதிர்காலம் ?
ஏகாதிபத்தியங்களே நீங்கள் பல நூற்றாண்டுக்கும் மேல் ஆப்கனை ஆண்டு அதை சீரழித்ததும் மதவெறியர்களை ஊட்டி வளர்த்து அவர்கள் கையில் ஆப்கன் மக்களை ஒப்படைத்ததுமே உங்களின் சாதனை என்பதை உலகம் புரிந்து கொண்டுதான் இருக்கிறது. உலகின் மிகவும் வெறுக்கத்தக்க பிற்போக்காளர்கள் நீங்கள் மட்டுமே.
நாம் எவ்வளவுதான் நல்லவர்களாக அறிவாளிகளாக இருந்தாலும் நமது எண்ணங்களை ஒரு மக்கள் கூட்டத்தின் மீது திணிக்க முயல்வது மிகவும் ஈனத்தனமான வெறுக்கத்தக்க செயலாகும். அது சர்வாதிகாரமே ஆகும்.
முகநூலில் : R Chandrasekaran
disclaimer