சேவல் கூட உறங்கும் அதிகாலை நேரம். அந்த சின்னஞ்சிறிய கிராமத்திலிருந்து தொழிலாளிகளை ஏற்றிக் கொண்டு காற்றைக் கிழித்துக் கொண்டு புறப்படுகின்றன வாகனங்கள். சிவந்த விழிகள் இன்னும் கொஞ்சம் உறக்கத்திற்கு கெஞ்ச, காது வழி நுழையும் காற்று அவர்களின் உறக்கத்தை கலைத்துப்போடுகிறது. அருகருகே இருக்கும் கிராமத்திலும் தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு விடியும்முன் செங்கல் சூளைக்குள் நுழைகின்றன வாகனங்கள்.
காலைக் கடனும், காலை உணவும் விடிவதற்குள் அவசர அவசரமாக முடிக்கப்படுன்றன. செங்கல் உற்பத்தி செய்யும் இயந்திரம் இயக்கப்பட, இயந்திரத்தோடு இயந்திரமாக ஓடி ஓடி வேலை செய்கிறார்கள் தொழிலாளிகள். இடையில் ஒரு பதினைந்து நிமிடம் மட்டுமே ஓய்வு, பின்னர் மீண்டும் வேலை.
ஈர மண்ணை இயந்திரத்தில் கொட்டி குறுக்கெலும்பு ஒடிய வேலை செய்து, ஈரமான செங்கல்லை தயாரித்துக் கொடுக்கிறார்கள் அவர்கள். சூரியன் உச்சிக்கு வரும்போது மொத்த உடலும் தளர்ந்து இயந்திரத்தைவிட்டு பிய்த்துக் கொண்டு வெளியேறுகிறார்கள். பின்னர் அதை காயவைத்து சீவி, சூளையில் சுட்டு முழுமையான செங்கல் தயாரிக்கிறார்கள்.
படிக்க :
♦ அஸ்திவாரம் இழந்த செங்கல் தொழிலாளர்கள் ! – படக்கட்டுரை
♦ அதிகரிக்கும் பெண் தொழிலாளர்கள் வேலையிழப்பு விகிதம் !
உலகம் முழுக்க வானுயுர்ந்து நிற்கின்றன கட்டிடங்கள். நாள்தோறும் பல கட்டிடங்கள் முளைத்த வண்ணமுள்ளன. இத்தகைய கட்டுமான தொழிலில் மிகமுக்கியமானது செங்கல். ஆனால், அதை தயாரிக்கும் தொழிலாளிகளோ குடியிருப்பதற்கு லாயிக்கற்ற வகையிலான வீடு என்ற 4 சுவர்களுக்கு மத்தியில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த செங்கலை தயாரிப்பு தொழிலில் அவர்கள் படும் வேதனைகளோ வார்த்தைகளுள் அடங்காதவை.
விவசாயம் பொய்த்துப்போனதால் (அழிக்கப்பட்டதால்) இந்த வேலைக்கு வருகிறார்கள் இத்தொழிலாளிகள். கிட்டத்தட்ட ஒரு இயந்திரத்தில் 10 தொழிலாளிகள் வரை வேலை செய்து ஒரு நாளைக்கு 10,000 கற்கள் உற்பத்தி செய்தால்தான் ஒருவருக்கு ரூ.630 கூலி கிடைக்கும். ஒரு கல்லுக்கு அதை உற்பத்தி செய்யும் தொழிலாளிக்கு 6.3 பைசாதான் கிடைக்கிறது என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை.
ஆனால், ஒரு கல் ரூ.8-க்கும் குறையாமல் விற்கப்படுகிறது. பெரிய அளவிலான நட்டம் எதனையும் சூளை முதலாளிகள் சந்திப்பதில்லை. உற்பத்தி செய்த கல் சரியில்லை என்றாலோ, மழையில் நனைந்துவிட்டாலோ மறுபடியும் அந்த மண்ணை குழைத்து மீண்டும் செங்கல் தயாரித்து விடுகிறார்கள்.
மழைக்காலத்தில் செங்கல் உற்பத்தி செய்வது நிறுத்தப்படுவதால் தட்டுப்பாடு ஏற்படுவதுபோல் ஒரு தோற்றம் ஏற்படுகிறது. அவ்வேலையில் சேம்பரில் (Chamber) சேமித்து வைக்கப்பட்ட, ரூ.8-க்கு விற்ற செங்கல் அதிகப்படியான விலைக்கு விற்கப்பட்டு முதலாளிகளுக்கு மேலும் லாபத்தை தருகிறது. மழைக்காலத்தில் செங்கல் கட்டி தங்கக் கட்டியாகிவிடுகிறது முதலாளிகளுக்கு.
ஆனால், தொழிலாளிகள் மழைக்காலங்களில் வேலை இழக்கிறார்கள். கிடைத்தால் கொத்தனார் – சித்தாள் வேலைகளுக்கு செல்கிறார்கள், இல்லையேல் பசியோடு, கடன்பட்டு குடும்பம் நடத்துகிறார்கள்.
சூளை வேலையில் கூலி என்பது முதலாளிகளாக பார்த்துக் கொடுப்பதுதான். அதுவும் பரம ரகசியமாகத்தான் தீர்மானிக்கப்படுகிறது. ரூ.570 கூலி தங்கள் வாழ்க்கை நடத்தபோதாது என்று தொழிலாளிகள் வேலைக்கு வராமல் போனதால்தான் இந்த ரூ.630 கூலியும் முதலாளிகளால் தரப்பட்டிருக்கிறது. அதுவும் சேம்பர்கள் அனைத்திலும் ஒரே மாதிரியான சம்பளமும் கிடையாது. முதலாளிகள் மனம் வந்து கொடுப்பதுதான். நாங்கள்தான் போனஸ் தருகிறோமே என்ற முதலாளிகளின் வெற்று வார்த்தைகளை செங்கல் சூளையில் தயாரிக்கப்படும் செங்கலே உடைக்கிறது.
தினமும் தொழிலாளிகள் தங்களது கூலியைத் தாண்டி 100 செங்கல்களையாவது முதலாளிகளுக்கு உற்பத்தி செய்து கொடுத்துவிட்டுத்தான் வீட்டிற்குப் போகிறார்கள். அது அன்றைய கூலி கணக்கில் வருவதில்லை. அந்த செங்கல்லின் ஒரு பகுதியைத்தான் ஆண்டிறுதியில் போனஸாக கொடுக்கிறார்கள். முதலாளிகள் ஏதோ தங்கள் சொத்தில் ஒரு பகுதியை கொடுப்பதுபோல் பாவனை செய்து கொடுத்து தொழிலாளிகளை நேரடியாக ஏமாற்றுகிறார்கள்.
இயந்திரத்தில் சகதொழிலாளி உயிரிழந்ததை பார்த்த தொழிலாளிகள் உண்டு. இயந்திரத்தில் தலை சிக்கி உள்ளிழுக்கப்பட்டு இடுப்பு வரை நசுங்கி உயிரிழந்தவர்கள் உண்டு. இன்சூரன்ஸ் விசயத்திலும் தொழிலாளிகளை ஏமாற்றுகிறார்கள் முதலாளிகள்.
அடிபட்ட, உயிரிழந்த தொழிலாளிகளின் பெயரில் எந்தவொரு முதலாளியும் இன்சூரன்ஸ் எடுப்பதில்லை. தனது சேம்பரின் பெயரில் இன்சூரன்ஸ் எடுத்து தொழிலாளிக்கு ஐந்தோ, பத்தோ கொடுத்து ஏமாற்றிவிட்டு தொழிலாளிகளின் சாவிலும் லாபம் தேடுகின்றனர் சூளை முதலாளிகள்.
இயந்திரத்தை சுற்றி எப்போதும் தண்ணீர் இருக்கும். ஆதலால் மின்சாரம்(ஷாக்) அடிப்பதுவும் உண்டு. அதை சரி செய்வது சற்று செலவு பிடிக்கும் விசயம் எனபதால் பெரும்பாலான முதலாளிகள் அதை சரி செய்வதில்லை. எப்போதும் மண்ணுக்குள் நிற்கும் வேலை என்பதால் வாழும்போதே இந்த தொழிலாளர்களின் உடலை மண் தின்கிறது. எச்சிலை காறித் துப்பும்போது மண்ணும் சேர்ந்து வெளி வருவது இதற்கு ஓர் சான்று. வாழைப்பழம்தான் இதற்கு மருந்து என்று, வேறுவழியின்றி சொல்கிறார்கள் தொழிலாளிகள்.
வாரத்தில் ஆறு நாளும் வேலை செய்ய முடியாதபடிக்கான மிகவும் கடினமான பணிதான். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் அத்தொழிலாளர்களிடம் விவரங்களை திரட்டியபோதே அச்சத்துடன் தயங்கி தயங்கியே பேசுகின்றனர். “பேரு, போட்டோவெல்லாம் வேணாம் சார்” என்று சொல்கின்றனர். தொழிலாளர்கள் எந்தளவுக்கு கொத்தடிமையான வாழ்க்கையில் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. ஆனாலும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு தங்களது குடும்பத்திற்காக தொடர்ந்து வேலைக்குப் போகிறார்கள்.
பெண்களின் பணி இன்னும் கடினமானது. சமையல் செய்வதற்காக அதிகாலை 2 மணிக்கே எழுந்துவிடுகிறார்கள். உலகத்தின் அடுப்பங்கரைகளில் அதிகாலை 2 மணிக்கே அடுப்பு எரிவது செங்கல் சூளை தொழிலாளிகளின் வீடுகளில்தான் இருக்க முடியும். சமையல் முடித்து ஆண்களோடு வேலைக்கு புறப்படுகிறார்கள். இடுப்பு ஒடிய வேலை செய்து வந்து வீட்டில் எதுவும் செய்ய முடியாது, அப்படியே படுத்து விடுகிறார்கள். ஆண் தொழிலாளிகள் தங்களது உடல் வலியை கரைத்துக் கொள்ள குடியை நாடுகிறார்கள், பெண் தொழிலாளிகளோ வலியை சுமந்து கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
லாக்டவுன் காலத்தில் மிகவும் வேதனையான நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் இத்தொழிலாளிகள். இவ்வளவு நாள் வேலை பார்த்த செங்கல் சூளை முதலாளிகளிடமிருந்து எந்தவொரு உதவியும் இவர்களுக்கு கிடைக்கவில்லை.
