மெரிக்கா தன் துருப்புக்களை ஆப்கானிலிருந்து திருப்பி அழைத்துக் கொள்வதாக அறிவித்ததிலிருந்து, பல்லாயிரக் கணக்கான ஆப்கான் மக்கள் காபூல் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி படையெடுத்தனர். அதன்பிறகு காபூல் விமான நிலையத்தின் மிகவும் கொடூரமான காட்சிகள் வெளியாகி உலகையே உளுக்கியது.
ஆப்கானிலிருந்து கிளம்பத் தயாரான விமானத்தின் வெளிப்புறத்தில் மக்கள் ஏறிக் கொள்ளும் காட்சியும், விமானம் உயரத்தில் பறக்கும்போது, சிலர் கீழேவிழுத்து இறக்கும் காட்சியும் காண்போர் நெஞ்சை உலுக்கியது.
பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், காபூல் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மக்களின் கூட்ட நெரிசலால் குறைந்தது ஏழு ஆப்கான் பொதுமக்கள் இறந்திருப்பார்கள் என்பதை உறுதி செய்துள்ளது.
தலிபான்கள் ஆப்கான் தலைநகரை கைப்பற்றிய பின்னர், ஒரே வாரத்தில் காபூல் விமான நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்தது 20 பேர் இறந்துள்ளனர் என்று கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி நேட்டோ அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த வாரத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆப்கான் விமான நிலையம் அருகே நிகழ்த்திய குண்டுவெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் பலியாகினர்.

படிக்க :
ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?
தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஆப்கானிய மக்களுக்காக எங்களுடன் பணியாற்றிய தூதரக ஊழியர்களுக்கு அமெரிக்கா தனது தனிப்பட்ட கடமையை செய்யும். மேலும், விமானம் அனைவருக்கும் கிடைக்கும் ஏற்பாட்டை அமெரிக்கா அயராது செய்து வருகிறது” என்றார்.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், தலிபான்கள் கட்டுபாட்டில் ஆப்கான் முழுவதும் வந்த இரண்டே வாரத்தில், காபூலிலிருந்து 60 விமானங்களில் 8,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள் என்றும், நான்கு கண்டங்களில் உள்ள சுமார் 24 நாடுகளுடன் அமெரிக்கா ஆப்கான் மக்களுக்கு போக்குவரத்து ரீதியாக உதவ ஒப்பந்தமிட்டிருப்பதாகவும் கூறினார்.
மீதமுள்ள பெரும்பாலான அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான ஆகஸ்ட் 31-ம் தேதிக்கான நேரம் நெருங்கிவிட்டது. இருப்பினும் அனைத்துப் படைகளையும் திரும்பிப் பெற முயற்சித்து வருகிறோம் என்றார்.
அமெரிக்க அதிகாரிகள் இப்படி கூறிவரும் நிலையில், ஆப்கானில் தூதரக ஊழியர்கள் மற்றும் அமெரிக்காவிற்கு உதவியர்களின் நிலையோ படுமோசமாக உள்ளது.
காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வேலை செய்யும் உள்நாட்டு ஊழியர்களை அமெரிக்கா பாதுகாத்து ஆப்கானிலிருந்து வெளியே செல்ல உதவாததால், மிகவும் மனச்சோர்வு அடைந்துள்ளார்கள். மேலும், அமெரிக்க அரசின் துரோகத்தையும், அவநம்பிக்கையையும் வெளிபடுத்தியதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சோதனைச் சாவடிகளில் தூதரக ஊழியர்கள் தலிபான்களால் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். சிலர் தங்களின் குழந்தைகளிடமிருந்து முற்றிலும் பிரிந்துவிட்டனர். சிலர் கூட்ட நெரிசலில் விழுந்து காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். மேலும் பலர் வெயிலில் கொடுமையால் சோர்வடைந்து சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.
மீண்டும் விமான நிலைய கூட்ட நெரிசலை எதிர்கொள்வதை விட “தலிபான்களின் தோட்டாவின் கீழ் இறப்பதே நல்லது” என்று ஒரு தூதரக ஊழியர் கூறினார். இங்கே “இறப்பதில் மகிழ்ச்சி ஆனால் கண்ணியத்துடனும் பெருமையுடனும் இறக்க வேண்டும்” என்று மற்றொரு தூதரக ஊழியர் கூறினார்.
ஆப்கானிஸ்தான் அமெரிக்க தூதரக ஊழியர் ஒருவர், “தலிபான்கள் எங்கள் வீட்டில் விசாரணை மேற்கொள்வதற்காக வீட்டு வாயிலில் குறியீடுகளை இட்டுச் சென்றுள்ளனர். நாங்கள் குடும்பத்துடன் வீட்டைவிட்டு தப்பி வந்துவிட்டோம். ஆனால், எங்களால் விமான நிலையத்திற்கு செல்ல முடியவில்லை” என்றார்.
அமெரிக்கா தன் துருப்புக்களை பின்வாங்கிய அதே நேரத்தில் தூதரகத்தில் பணிபுரிந்த ஆப்கானை சார்ந்த ஊழியர்களை வெளியேற்ற ஏற்பாடு செய்யவில்லை என்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு மட்டும் முன் உரிமை வழங்கியதாகவும் ஒரு ஊழியர் குற்றம் சாட்டினார்.
000
காபூல் விமான நிலையத்தின் உள்ளே அமெரிக்க துருப்புகள் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், விமான நிலையத்தின் வெளியில் உள்ள அனைத்து பகுதிகளையும் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிகள் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. தொடந்து இடையூறுகள் அதிகரிக்கிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அதிகாரி ஜோசப் பொரெல் ஆகஸ்ட் 21 அன்று கூறியுள்ளார்.
மேலும், ஆகஸ்ட் இறுதிக்குள் ஆப்கானிலிருந்து கடைசி அமெரிக்க துருப்புகள் வெளியேறும் போது பல்லாயிரக்கணக்கான ஆப்கான் ஊழியர்கள் காபூலில் இருந்து வெளியேற்றுவது சாத்தியமற்றது, என்று பொரெல் கூறினார்.
ஆகஸ்டு மாத முதல் வாரத்தில் தலிபான்கள் முழு ஆப்கானையும் கைப்பற்றும் முன்பு, ஆப்கானில் இருந்த இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் வெளியேற உதவி செய்யப்பட்டது. மேலும், தூதரகத்தில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களின் வேலைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டது. ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூதரகத்தில் பணிபுரிந்த சில ஊழியர்கள், தற்போது வேலை இழந்த நிலையில் தலிபான்களால் தாங்கள் கொல்லப்படுவோம் என்றும் அஞ்சுகிறார்கள்.
“நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோமா இல்லையா என்று யாரும் கேட்கவில்லை. எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறதா இல்லையா என்று யாரும் அக்கறைப்படவில்லை” என்று இங்கிலாந்து தூதரகத்தில் பணியாற்றிய ஆப்கான்  ஊழியர் ஒருவர் கூறினார்.
படிக்க :
ஆப்கானிஸ்தான் குறித்து ஒரு சுருக்கமான பார்வை || சந்திரசேகரன்
தாலிபான்களின் கையில் ஆப்கானின் எதிர்காலம் ?
ஆனால், ஒரு நேர்காணலில் ஜேம்ஸ் ஹெப்பி, காபூல் விமான நிலையத்திற்கு அனைத்து ஊழியர்களும் வந்துவிட்டதாகவும், அவர்கள் உண்மையில் ஆப்கானைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறினார். ஆனால், இந்தக் கூற்றை தூதரக ஊழியர்கள் மறுக்கின்றனர்.
“அது உண்மை இல்லை. வெளியேற்றப்படுவதற்கான செய்தி எங்களுக்கு வரவில்லை. எங்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல யாரும் அனுப்பப்படவில்லை” என்று ஒரு தூதரக ஊழியர் கூறினார்.
000
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆப்கானில் தங்கள் தூரகங்களில் பணிபுரிந்த ஆப்கான் பெரும்பான்மையான ஆப்கானியர்களை கைவிட்டுவிட்டன என்பதையே இந்த சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன.
போர் ஆக்கிரமிப்பு என்பது அந்த நாட்டின் இயற்கை வளங்கள் முதல் மனித வளம் வரை அனைத்தையும் ஒட்டச் சுரண்டும் நோக்கத்திற்காக நடத்தப்படுபவையே. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற 20 ஆண்டு ஆக்கிரமிப்பின் பின்னே ஜனநாயகம் எனும் நோக்கம் துளியும் கிடையாது.

அந்த மக்களை மனிதர்களாக மதிக்காமல், தாம் சுகிப்பதற்கான பொருளாகத்தான் அமெரிக்காவும் பிற ஏகாதிபத்தியங்களும் நினைக்கின்றன. தூதரக கட்டிடங்களில் உள்ள நாற்காலி, மேஜையைப் போலவே அந்த ஊழியர்களையும் கைவிட்டுச் சென்றிருக்கின்றன இந்த மேற்கத்திய வல்லரசுகள். ஏகாதிபத்தியங்கள் தங்கள் நலனுக்கு உதவாத எந்த நாட்டு அரசையும், அதன் மக்களையும் கைவிட்டுவிடும் என்பதற்கு ஆப்கான் நாட்டில் இவர்களின் கீழ் பணியாற்றிய ஊழியர்களே துலக்கமான சான்று !!


சந்துரு
செய்தி ஆதாரம் : RT.COM

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க