தென்கரையில் கொள்ளிடத்தின் வடஎல்லையில் வெள்ளாறு என்ற டெல்டா  பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் – தமிழ்நாட்டின் சிறிய மாவட்டங்களில் ஒன்றான –  அரியலூர் அமைந்துள்ளது. தொண்ணூறுகளின் கடைசி வரை விவசாயத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
அரியலூர் மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் சிறுதானியப் பயிர்களான கம்பு, கேழ்வரகு, எள்ளு, சோளம், நிலக்கடலை, கொண்டக்கடலை, முந்தரி ஆகிவையும் டெல்டா பகுதிகளை ஒட்டியுள்ள நிலப்பரப்பில் நெல்லும் கரும்பும் அதிக அளவில் பயிரிடப்பட்டு வந்தன. மேலும், கொத்தமல்லி மற்றும் மிளகாய் என இரண்டுக்கும் பிரசித்தி பெற்ற மாவட்டமாகவும் அது அறியப்படுகிறது.
இப்படி அனைத்து வகையான பயிர்களும் விளைய முக்கியமான காரணம் அங்குள்ள நில அமைப்பு மற்றும் அங்குள்ள மண்ணின் தன்மையாகும். கரிசல் மண், மணல் மண், வண்டல் மண், செம்மண், சுண்ணாம்பு மண் என அனைத்து வகையான மண்ணும் பரவலாக அங்கு காணப்படுகிறது. இப்படி இயற்கையாகவே செழிப்போடு அமைந்த காரணத்தாலேயே அரியலூரானது கார்ப்பரேட்டுகளின் கோரப்பிடியிலும் சிக்கியது.
இம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள சுமார் 70 கி.மீ சுற்றளவு கொண்ட பகுதிகளில் பவளப் பாறைகள் மற்றும் சுண்ணாம்புப் பாறைகள் பூமிக்கு அடியில் உள்ளன. இந்தச் சுண்ணாம்புப் பாறைகள் அதிக செலவில்லாமல் சிமெண்ட் தாயரிப்பதற்குப் பயன்படுகிறது என்பதை அறிந்து கொண்ட பல்வேறு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் இவ்விடத்தை பாலைவனமாக மாற்றி வருகின்றன.
படிக்க :
கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு !
சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !
1979-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு டான்செம் (TANCEM – Tamilnadu Cement Corporation Limited) என்ற சிமெண்ட் ஆலை ஒன்றை முதன்முதலில் அரியலூரில் நிறுவியது. அதன்பிறகு 90-களில் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயயம் என்ற மறுகாலனியக் கொள்கைகள் அமுலாக்கப்பட்ட பின், வேறுசில தனியார் நிறுவனங்களும் சிமெண்ட் கம்பெனிகளை நிறுவத் தொடங்கின.
முதலில் ராம்கோ என்ற தனியார் நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தி சுண்ணாம்புக்கல் எடுப்பதற்கான சுரங்கங்களையும் அதை சிமெண்டாக மாற்றுவதற்கான தொழிற்சாலையையும் நிறுவியது. அதன்பிறகு ஒன்றன் பின் ஒன்றாக இந்தியா சிமெண்ட், டால்மியா சிமெண்ட், செட்டிநாடு சிமெண்ட், அல்ட்ராடெக் சிமெண்ட் போன்ற நிறுவனங்கள் சுமார் எட்டு இடங்களில் அரியலூரைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆக்கிரமித்தன. பூமியில் சுரங்கத்தை அமைத்து கிட்டத்தட்ட 100 அடிக்கு மேல் தோண்டி சுண்ணாம்புக்கல்லை வெளியில் எடுத்து தொழிற்சாலைகளில் சிமெண்ட் தாயரித்து வருகின்றன.
தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழிற்சாலைகள் நிறுவப்பட்ட ஆரம்ப காலங்களிலிருந்து இன்று வரை அங்குள்ள மக்கள் அதை எதிர்த்துப் போரடி வருகிறார்கள். காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, மண் மாசுபாடு என அனைத்து வகையான கொடூரங்களையும் இம்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அனுபவித்து வருகிறார்கள். ஆனால், இதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் இலாபவெறி பிடித்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் சுரண்டலைத் தீவிரப்படுத்தி வருகின்றன. அதைப்போலவே பல்வேறு விதிமீறல்களும் கொடூரங்களும் நிகழ்ந்து கொண்டு வருவதைக் கண்டுகொள்ளாமல் அரசும் அவர்களின் காவலாளியாகச் செயல்படுகிறது.
அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் சிமெண்ட் ஆலைகள் :
செந்துறை ஒன்றியத்தில் ராம்கோ சிமெண்ட் ஆலையின் யூனிட் 1 மற்றும் யூனிட் 2 ஆகியவை அமைந்துள்ளன. மேலும் அரியலூர் ஒன்றியத்திலும் ராம்கோ சிமிண்ட் ஆலையின் யூனிட் 1 மற்றும் யூனிட் 2 ஆகியவை அமைந்துள்ளன.
டால்மியா சிமெண்ட் ஆலைகள் கல்லக்குடியிலும் (டால்மியாபுரம்) தாமரைக்குளத்திலும் அமைந்துள்ளன. தளவாயில் இந்தியா சிமெண்ட் ஆலை அமைந்துள்ளது. கீழபழுவூரில் செட்டிநாடு சிமெண்ட் ஆலையின் யூனிட் 1, யூனிட் 2 செயல்படுகிறது. அரியலூரில் ரெட்டிப்பாளையத்தில் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. அரியலூரில் தமிழக அரசின் டான்செம் ஆலையும் செயல்படுகிறது.

 

சிமெண்ட் தொழிற்சாலைகளால் நேரடியாக பாதிக்கப்படும் கிராமங்கள் :
செந்துறை ஒன்றியத்தின் கீழ், வீராக்கன், வஞ்சினபுரம், உஞ்சினி, துளார், தளவாய், சிறுகளத்தூர், சிறுகடம்பூர், செந்துரை, சன்னாசிநல்லூர், பொன்பரப்பி, பிலாகுறிச்சி, பெரியாக்குறிச்சி, பரணம், பாளையகுடி, நமங்குணம், நல்லம்பாளையம், நக்கம்பாடி, நாகல்குழி, மருவத்தூர், மணப்பத்தூர், மணக்குடையான், குமிலியம், குழுமூர், கீழமாளிகை, இரும்பிலிகுறிச்சி, அயன்தத்தனூர், அசாவீரன் குடிக்காடு, ஆனந்தவாடி, ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி ஆகிய கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன.
அரியலூர் ஒன்றியத்தின் கீழ், அருங்கால், அஸ்தினாபுரம், ஆண்டிப்பட்டாகாடு, ஆலந்துறையார் கட்டளை, இடையத்தாங்குடி இராயம்புரம், இலுப்பையூர், உசேனாபாத், எருத்துக்காரன்பட்டி, ஓட்டக்கோவில், கடுகூர், கயர்லாபாத், கருப்பிலலாக்கட்டளை, கல்லங்குறிச்சி, காவனூர், கோவிந்தபுரம், சிறுவளூர், சீனிவாசபுரம் சுண்டக்குடி, சுப்புராயபுரம், சென்னிவனம், தவுத்தாய்குளம், தாமரைக்குளம், தேளூர், நாகமங்கலம், புங்கங்குழி, புதுப்பாளையம், பெரியதிருக்கோணம், பெரியநாகலூர், பொட்டவெளி, மணக்கால், மணக்குடி, மேலக்கருப்பூர், ரெட்டிப்பாளையம், வாலாஜாநகரம், விளாங்குடி, வெங்கடகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன.
அரியலுரை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த சிமெண்ட் ஆலைகள் ஆண்டுக்கு சுமார் 50 மில்லியன் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி செய்கின்றன.
1 மெட்ரிக் டன் சிமெண்ட் தாயரிப்பதற்கு 1.5-ல் இருந்து 2 மெட்ரிக் டன் சுண்ணாம்புக்கல் – அதாவது 1:1.5 – 2.0 என்ற அளவில் – தேவைப்படுகிறது. இம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 250 சுரங்கங்கள் உள்ளன. இப்படி பூமிக்கு அடியில் சுரங்கங்கள் அமைப்பதற்கு சில ‘வரம்புகளும்’ அரசின் தரப்பில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இவ்விதிகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை.
சுரங்கம் அமைக்கும் பகுதியைச் சுற்றி சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கப் பசுமைப் பகுதி ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். உதாரணத்துக்கு, 100 ஏக்கரில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டால் அதில் 33% பரப்பில் பசுமைப்பகுதியை உருவாக்கிப் பாரமரிக்க வேண்டும். ஆனால், இங்குள்ள நிறுவனங்களோ வெளிப்புறத்தில் வெறும் 5-10 ஏக்கர் அளவு மட்டும் சில மரங்களை நட்டு பசுமைப் பரப்பு எனக் காண்பிக்கிறார்கள்.
மேலும், சுரங்கங்கள் தோண்டுவதற்கு அந்தந்த நிலத்திற்கு ஏற்றவாறு 50 மீட்டர், 40 மீட்டர் என ஆழம் வரையரையறுக்கப்படுகிறது. ஆனால், இது எதையும் ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் சுண்ணாம்புக்கல் இருக்கும் வரை பூமியைத் தோண்டும் வேலையைச் செய்கின்றன இக்கார்ப்பரேட்டுகள். இதனால் நிலநடுக்கம் மற்றும் கடல்நீர் உட்புகும் அபாயம் ஏற்பட அதிகவாய்ப்பு இருக்கிறது என அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இப்படிச் சுண்ணாம்புக் கல்லுக்காக அடி ஆழம் வரை தோண்டப்பட்டு காலவதியான சுரங்கத்தை – அதாவது முழுவதுமாக சுண்ணாம்புக் கல்லை எடுத்தபிறகு – மூடாமல் அப்படியே விட்டுவிட்டு அடுத்த சுரங்கம் தோண்ட சென்று விடுகிறார்கள். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் இப்படி அளவுக்குமீறி தோண்டுவதால் சுரங்கத்தை மூடுவதற்கு மண்ணும் இருப்பது இல்லை.
இதுமட்டுமல்லாமல் சுரங்கத்தை மூடாமல் இருப்பதற்கு மற்றுமொரு காரணமுள்ளது. மேலே குறிப்பிட்ட அனைத்துத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களும் சொந்தமாக மின் உற்பத்தி (Thermal Plant) ஆலையை வைத்துள்ளன. இப்படித் தோண்டப்படும் சுரங்கத்தில் கிடைக்கும் தண்ணீரை மின் ஆலைகளுக்குக் குளிர்விப்பானாக அவை பயன்படுத்திக் கொள்கின்றன.
ராம்கோ நிறுவனமானது, சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலை மட்டுமல்லாமல் சுண்ணாம்புக்கல் கழுவும் ஆலை மற்றும் சுண்ணாம்பு கல் தூய்மித்தல் ஆலை என இரண்டு ஆலைகளை வைத்துள்ளது. இந்தச் சுண்ணாம்புக்கல்லை கழுவுவதற்கும் சுரங்கத்தில் இருக்கும் தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறார்கள். இப்படிச் சுத்திகரித்து வெளிவரும் ஆலைக்கழிவுகள் ஆறுகளில் விடப்படுகிறது.
சுண்ணாம்புக்கல்லைக் கழுவும் ஆலையில் பயன்படுத்தப்படும் பாலிமர் (polymer) எனும் வேதிப்பொருள் கலந்த நீரை, சுரங்கம் தோண்டப்பட்ட 200 அடி ஆழ பள்ளங்களில் விடப்படுவதினால் நிலத்தடிநீர் மாசுபடுகிறது. இப்படி மாசுப்படுத்தப்பட்ட தண்ணீரைக் குடிப்பதினால் அங்குள்ள மக்கள் புற்றுநோய் தோல்நோய், சிறுநீரகப் பிரச்சனை போன்றவற்றிற்கு ஆளாகி வருகிறார்கள்.
சுண்ணாம்புக் கல்லின் புழுதி மண், வெப்பக்காற்று, சிமெண்ட் புழுதி – என இவையனைத்தும் அங்குள்ள காற்றை மாசுபடுத்துகிறது. முக்கியமாக அங்கு அதிகமாகப் பயிரிடப்படும் முந்திரி முதல் வாழை பயிர் வரை பூ வைக்கும் நேரத்தில் அதன்மீது புழுதி படிவதினால் பூ கருகி மகசூல் கிடைப்பது இல்லை.
இரவு நேரங்களில் ஆலைகளிலிருந்து திறந்துவிடப்படும் புகையால், சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவு தொலைவிலுள்ள மக்களுக்கு சுவாச பாதிப்புகள் ஏற்படுகிறது. வெளிவரும் புகைப் படிமங்கள் வீடுகளின் மீதும் நீர்நிலைகளின் மீதும் படிந்து மாசுபடுத்துவது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது.
விவசாய நிலங்கள் பக்கத்தில் இருந்தால் 50 மீட்டர் தள்ளி சுரங்கத்தை அமைக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், அதுவும் பின்பற்றப்படுவது கிடையாது. விவசாயம் துளியளவும் நடைபெறக் கூடாது என விவசாயிகளுக்கு பல்வேறு முறையில் துன்புறுத்துகின்றன இந்நிறுவனங்கள். விவசாய நிலங்களை ஒட்டியே சுரங்கங்கள் தோண்டி மண்சரிவை எற்படுத்துவது, சுற்றியுள்ள நிலங்களை வாங்கிவிட்டு விவசாயிகள் பயன்படுத்தி வரும் வழிகளை ஆக்கரமிப்பு செய்வது என விவசாயிகள் மீது கொடூரமான தாக்குதல் தொடுக்கின்றன இந்நிறுவனங்கள்.
இவற்றைலெல்லாம் தாண்டி சுரங்கத்திலிருந்து ஆலைகளுக்குச் சுண்ணாம்புக் கல்லை எடுத்துச் செல்லும்போது லாரிகளில் அளவுக்கு மீறி கொண்டு செல்லப்படுகிறது. இப்படி எடைகள் அதிகமாக ஏற்றிச் செல்லப்படும் லாரிகள் மக்கள் பயன்படுத்தும் அதே சாலையைப் பயன்படுத்துவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு அதிகமனோர் இறக்கிறார்கள். இப்படி ஒரு லாரி பஸ் மீது மோதி விபத்து நடந்ததால் ஒரே நேரத்தில் 13 பேர் இறந்து இருக்கிறார்கள்.
சாலையில் மண்சகதி மேடுகள், லாரிகள் தொடர்வண்டி போல வரிசையாக செல்வதால் மற்ற எந்தப் போக்குவரத்தும் நடைபெறாத சூழல் அங்குள்ளது. குறைந்தபட்சம் லாரிகள் மீது தார்பாய்கள் கூடப் போடுவது கிடையது.
ஆரம்பத்தில் நிலத்தை விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கும்போது அங்குள்ள மக்களுக்கு வேலைவாப்பு கொடுக்கிறோம் என்றும் பெரிய அளவில் மருத்துவமனை கட்டித் தருகிறோம் என்றும் கூறிவிட்டுப் பின்னர் சொன்ன எதையும் செய்தது கிடையாது.
சிமெண்ட் தொழிற்சாலைகள் மூலம் கிடைக்கும் வருவாய் மிக அதிகமானதாக இருந்தாலும் அரியாலூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான எந்தச் செயல்பாடுகளையும் இந்நிறுவனங்கள் செய்தது கிடையாது. முழுக்க முழுக்க இங்குள்ள கிராமங்களை சிமெண்ட் ஆலைகள் சுரண்டுவதற்குரிய ஒரு வேட்டைக் காடாக மட்டுமே பார்க்கின்றன. “இப்படிப்பட்ட இயற்கைப் பேரழிவின் விளைவால் அடுத்த தலைமுறைகள் வாழ மண் கூட எங்கள் பகுதியில் கிடையாது” என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
இதையெல்லாம் தாண்டி சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலையோ இன்னும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. வேலை நேரங்களில் முறையான பாதுகாப்பின்மை, முறையான ஊதியம் வழங்கப்படாமல் இருப்பது, வேலை நேரத்தை விட அதிகளவு உழைப்பைச் சுரண்டுவது, ஒப்பந்தமுறையின் அடிப்படையில் ஆட்களை தேர்ந்தெடுப்பது, கேள்வி கேட்டால் வேலையை விட்டு தூக்குவது – எனப் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு சுரங்கத்திற்குள் ஒருவர் மர்மமான முறையில் இறந்தபோதும் கூட மருத்துவமனைக்குச் செல்லும் வழியில்தான் இறந்தார் என்று அந்நிறுவனமும், அவர் இதய அடைப்பால்தான் இறந்தார் என்று உடற்கூறு ஆய்வில் பொய்யான தகவலை மருத்துவமனையும் தெரிவிக்கிறது. இதை எதிர்த்து தன்னிச்சையாக சுமார் 500 பேர் போரட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆனால், வழிநடத்த முறையான அமைப்பு இல்லாத காரணத்தால் போரட்டம் அடுத்த கட்டதை நோக்கிச் செல்லவிடாமல் மக்களை அங்கிருக்கும் உள்ளூர் அரசியல்வாதிகள் புகுந்து கலைத்து விட்டார்கள்.
இப்படி அரியாலூரின் மேற்குப்பகுதியை சிமெண்ட் ஆலைகள் ஆக்கிரமித்துச் சுரண்டி வரும் நிலையில், கிழக்குப் பகுதியான ஜெயங்கொண்டத்தில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு 25 ஆண்டுக்கு முன்பே நிலத்தை கையகப்படுத்தி அதற்கான வேலைகளில் ஈடுப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதைத்தாண்டி ஜெயங்கொண்டம், டி.பழூர், ஆண்டிமடம் போன்ற பகுதிகளில் 10 இடங்களில் ‘ஹைட்ரோ கார்பன் ஆழ்துளை கிணறுகள்’ அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது. இப்படி அந்த மாவட்டமே கார்ப்பரேட் பகாசுர நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டுள்ளது.
பெயர் அளவில் நடத்தபடும் கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் பணம் கொடுத்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு ஆலைகளுக்கு ஆதரவான கருத்துகளை உருவாக்கி, ஆலைகள் தொடர்ந்து எந்த இடையூறும் இன்றி நடைபெற அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் துணையாக நிற்கிறார்கள். சமீபத்தில் ரெட்டிபாளையம், முனியக்குறிச்சி பகுதியில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் மக்களுக்கு இச்சிமெண்ட் ஆலைகளினால் ஏற்படும் எந்தவொரு பாதிப்பையும் பேச வாய்ப்பு வழங்காமல் முழுக்க ழுழுக்க ஆலைகளுக்கு ஆதரவான கூட்டமாகவே மடைமாற்றம் செய்யப்பட்டது.
சுற்றியுள்ள நிலங்களை – அதாவது கோயில் நிலங்கள், நீரோடைகள், புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றை – அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் தேவையில்லாத நிலங்கள் எனக் கூறி ஆக்கிரமிப்பு செய்துள்ளன இந்நிறுவனங்கள்.
அடுத்ததாக செந்துறை என்ற பகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தி வைத்துள்ளனர். மேலும், புதுபாளையம் கிராமத்தில் 120 அடிக்கு மேல்தான் சுண்ணாம்புக்கல் இருக்கிறதென்று அவ்வளவு அடிவரையிலும் மண்ணை எடுக்க திட்டம் போடப்பட்டுள்ளது. இப்படி 120 அடி வரைக்கும் வெறும் மண்ணை மட்டும் எடுத்தால் பெரும் நிலச்சரிவு ஏற்படும் என்று மக்கள் அதை எதிர்த்து வருகிறார்கள்.
ஆசியாவிலேயே அதிகளவில் சிமெண்ட் உற்பத்திக்கான நிலமாக உள்ள அரியலூரும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களும் இக்கார்ப்பரேட் ஓநாய்களின் இலாப வெறிக்காக தாரைவார்க்கப் பட்டிருப்பதைப் பற்றியும், இங்குள்ள மக்களின் எதிர்ப்பைப் பற்றியும் இம்மியளவும் வெளியேத் தெரியாமல் அரசு ஒருபுறம் மூடிமறைத்து வருகிறது. இன்னொருபுறம் இதுபற்றி ஊடகங்களும், மேலோட்டமாகவும் சிமெண்ட் ஆலைகளின் பெயர்களைக் கூடக் குறிப்பிடாமலும் செய்திகளை வெளியிட்டு இக்கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்து வருகின்றன.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உருவான இயற்கை வளங்களை ஒரே நொடிப்பொழுதில் சுரண்டிக் கொழுக்கும் இக்கார்ப்பரேட்டுகள், நிலத்தையும் நீரையும் காற்றையும் நஞ்சாக்கி, அரியலூரையே மக்கள் வாழத் தகுதியற்ற பாலைவனமாக்கி வருகின்றன.
படிக்க :
அரியலூர் : ராம்கோ சிமெண்ட் ஆலைக்கு துணைபோகும் மாவட்ட நிர்வாகம் !!
ராம்கோ ராஜாவுக்கு அடியாளாக போலிக் கம்யூனிஸ்டு தளபதிகள் !
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் எந்தக் கட்சியின் ஆட்சியமைந்தாலும், இந்நாசகர கார்ப்பரேட்டுகள் அரியலூரைப் பாலைவனமாக்குவது நாளுக்குநாள் தீவிரமடைந்துதான் வருகிறதே ஒழிய, குறைந்தபாடில்லை. அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டுள்ள இந்நிறுவனங்கள் எல்லாவித அட்டூழியங்களையும் செய்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மட்டுமல்ல கூடங்குளம் தொடங்கி தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரை இங்கு இருக்கும் அரசு, அரசியல் கட்சிகள், நீதிமன்றங்கள், அதிகார வர்க்கம், போலீசு, சட்டங்கள் – இவையெல்லாம் நாசகர கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்வதையும் அதற்காக மக்களை ஒடுக்குவதையும் நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.
இந்த மக்கள் விரோத, சுற்றுச்சூழல் விரோத முதலாளித்துவ அரசமைப்பை மாற்றியமைக்காமல் பெரு நிறுவனங்களின் அராஜக – லாபவெறி மிக்க நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்படும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை தீர்க்க முடியாது !

மா. கார்க்கி