நாடும் மாடும் ஒன்று – அலகாபாத் ‘நீதி’மன்றம்
இந்திய நீதிமன்றங்கள் மிகவும் வினோதமானவை மட்டுமல்ல அபாயகரமானவையும் கூட. தங்கள் மேசையின் மீது எந்த வழக்கு வந்திருக்கிறது என்றெல்லாம் பார்க்காது ஆளும் வர்க்கக் கருத்தை எப்போதும் பேசும்.
மயில் பிரம்மச்சாரி என்று கூறிய நீதிபதியின் வார்த்தைகள் அறிவற்றவையாகத் தோன்றலாம். அதிலிருந்து என்ன கூற வருகிறார் என்பதே அதில் உள்ள அபாயகரமான விவகாரம். வழக்கிற்கும், நீதிபதியின் வாய்வழி கருத்துக்களுக்கும் தொடர்பே இல்லாததுபோல தோன்றலாம். தொடர்பை மிகவும் நைச்சியமாக பின்னுவதில் நீதிபதிகள் கெட்டிக்காரர்கள்.
பல வழக்குகளிலும் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்த – மறுக்கும் நீதித்துறையானது, இந்திய அரசியலமைப்பின் மூன்றாவது பிரிவின், அடிப்படை உரிமைகளின் எல்லை மாடுகளுக்கும் பொருந்தும் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
படிக்க :
♦ கோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் !
♦ பாஜக மாநிலங்களில் அமல்படுத்தப்படும் பசுப் பாதுகாப்பு சட்டங்கள் !
ஸ்டான் சாமி பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு உறிஞ்சு குழலுக்காக எத்தனைமுறை நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டி இருந்தது? கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட அந்த முதியவருக்கு மருத்துவம் பார்க்காமல் கொன்றதில், நீதித்துறைக்கு எவ்விதப்பங்கும் இல்லையா?
பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் கருப்புச்சட்டமான ஊ.பா-வின் கீழ் அறிவுத்துறையின பலர் கைது செய்யப்பட்டிருப்பதை இதுவரை நியாயப்படுத்தியே இருக்கின்றன நீதிமன்றங்கள்.
தப்லீக் ஜமாத் பற்றி யூடியூப் சேனல்கள் மற்றும் சில செய்தி ஊடகங்கள் தவறான செய்தியை அளித்ததாக சொல்லும் நீதிபதிகள், அப்படி ஒரு செய்தியை முசுலீம் மக்கள் மீது பரப்பி வன்முறையை உருவாக்கிய பாஜக அரசைப்பற்றி எதுவும் பேசுவதில்லை.
மாடு வெட்டும் குற்றத்தை செய்ததற்காக கைது செய்யப்பட்ட ஒருவர், தனக்கு பிணை வழங்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது நீதிபதி சேகர் குமார் யாதவ் என்பவர் “மாட்டினை தேசிய விலங்காக அறிவிக்க பாராளுமன்றமானது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளின் எல்லையானது மாடுகளையும் உள்ளடக்கியது. மாடுகளைக் காப்பாற்றுவது மதம் சார்ந்த நடவடிக்கை மட்டுமல்ல; மாடுகள் இந்தியாவின் கலாச்சாரமாகும். இந்திய கலாச்சாரத்தைக் காப்பாற்றுவது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்” என்று கூறியிருக்கிறார். மேலும் “மாடுகளை வழிபடும் நாடே செழிப்படையும்” என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இது மனிதருக்காக நாடு அல்ல மாடுகளுக்கான நாடு என்பதை நீதி மன்றத் தீர்ப்பு மீண்டும் உறுதி செய்துள்ளது.