நா. வானமாமலை
நா. வானமாமலை
தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 08
முதல் பாகம்
மூடுதிரை
(‘நாடும் நாயன்மாரும்என்றதோர் ஆராய்ச்சிக் கட்டுரையை இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை உரையாளர் க. கைலாசபதி அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். சைவம் பெருவெள்ளம் போலத் தமிழ்நாட்டில் பெருகிய காலத்தில் நிலவிய சமூக அடித்தளத்தையும், தத்துவ மேற்கோப்பையும் அவர் அக்கட்டுரையில் ஆராய்கிறார். இத்தகைய முயற்சி நம் நாட்டுத் தத்துவங்களை, சமூக அடித்தளத்தோடு சேர்த்துக் கற்றுக் கொள்வதற்கோர் வழிகாட்டியாக உள்ளது. இம்முயற்சி மிகவும் போற்றத்தக்கது.
ஆயினும் அவருடைய வரையறுப்புகளிலிருந்து நான் பல விஷயங்களில் மாறுபடுகிறேன். கண்ணோட்டம் ஒன்றாயினும் அது ஆதாரங்களை வரிசைப்படுத்தும் போது வேறுபடக் கூடும். அது கண்ணோட்டத்திலுள்ள குறைபாடாகவோ ஆதாரங்கள் போதிய அளவு சேகரிக்கப்படாததாலோ இருக்கலாம். இது அவருடைய கட்டுரைக்கு மட்டுமல்ல, என்னுடைய இச்சிறு கட்டுரைக்கும் பொருந்தும். இது போன்ற பல கட்டுரைகள் வெளியாகுமாயின், நமது கருத்துக்களைத் தொகுத்து விவாதித்து நமது பொதுவான கண்ணோட்டத்தையும் புரிந்து கொண்டு ஆதாரங்களை ஆராய்வதில் கருத்து ஒற்றுமை ஏற்படும் என்ற உறுதியான நம்பிக்கையோடு இதனை எழுதுகிறேன் நா.வா.)
நாயன்மாரது பக்தி வெள்ளமான இலக்கியத்தின் அடித்தளத்தைக் காண நாடும் நாயன்மாரும்என்ற கட்டுரை முயலுகிறது. இம்முயற்சி மிகவும் கடினமானது. கடினமான இப்பணியை மேற்கொண்ட கைலாசபதி அவர்களின் துணிவை நாம் போற்ற வேண்டும். அம்முயற்சி இத்துறையில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தினால் அதுவே மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தோன்ற வழிவகுக்கக் கூடும். இப்பயனை இக்கட்டுரைத் தோற்றுவிக்கும் என்பதே என் நம்பிக்கை.
படிக்க :
தமிழர் நிலத்தில் பௌத்தமும் சமணமும் வீழ காரணம் என்ன ? | நா. வானமாமலை
இந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன ? | பொ.வேல்சாமி
இக்கட்டுரையில் சைவம் தனக்கு முன் தமிழ்நாட்டில் வேரூன்றி நின்ற இரண்டு சமயங்களை எதிர்த்துப் போராடி வளர்ந்தது என்று ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். அதனைப் பற்றி அவர் தரும் முடிவுகளே பின்னர் சைவம் இவ்விரு சமயங்களை எதிர்க்க எத் தத்துவத்தை உருவாக்கிக் கொண்டது என்பதை விவரிக்க அடிப்படையாக அமைந்துள்ளது. ஆகவே இவ்விரு சமயங்களின் சமூக அடிப்படையை விரிவாக ஆராய்தல் அவசியம்.
கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் குலங்களும், குடிகளும் அழியத் தொடங்கி நிலவுடைமை முறை தோன்றத் தொடங்கிவிட்டது. அம்முறையின் அரசியல் வடிவம் குறுநில மன்னர் ஆட்சி, தென் தமிழ் நாட்டில் பொருநைக் கரையிலும், காவிரிக் கரையிலும், பெருவிளைச்சல் காரணமாக அரசுகள் எழுந்தன. இதுவும் இரண்டாம் நூற்றாண்டு முதல் நடைபெற்று வந்ததென ஆதாரத்தோடு சொல்லலாம்.*1
குலங்களையும், குடிகளையும் விழுங்கிவிட்ட சிற்றரசுகள் தம்முள் போட்டியிட்டு மூன்று முடியரசுகளாயின. அவை, சிதைவைத் தவிர்க்க பௌத்தத்தைக் கருவியாக்கிக் கொண்டன. பௌத்தம் இணைப்புக் கருவியாகப் பயன்பட்டது. குழுக்களிலுள்ள மாற்ற முடியாத பழைமைப் பற்றை ஒழிக்கப் பௌத்தம் பயன்பட்டது. குழுவினுள் அடங்கிச் சிறு தெய்வ வணக்கத்தில் ஆழ்ந்திருந்த மக்களை பௌத்தம் தனது ஜாதகக் கதைகளினாலும், எழுத்தறிவினாலும், நீதி போதனையாலும், புத்தனைக் கடவுளாக வழிபடும் வணக்க முறையைப் புகுத்தியதாலும், புதிய அகன்ற உலகத்தை கற்பனையில் காண உதவிற்று.*2
பேராசிரியர் கைலாசபதி
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வடமேற்கு இந்தியாவில் காணப்பட்ட நிலைமையையும், தமிழ் நாட்டில் கி.மு.2, 1-ம் நூற்றாண்டில் நிலவிய நிலைமையையும் ஒன்றெனக் கொள்ள முடியாது. இக்காலத்தில் தென்னாட்டில் அரசுகள் நிலைத்து விட்டன. வர்க்கப் பிரிவினைகள் தீவிரமடையத் தொடங்கி விட்டன. உணவுக்குத் திண்டாடிய நாட்டில் தேவைக்கு மிஞ்சும் உற்பத்தி தோன்றிவிட்டது. அதன் காரணமாக உள்நாட்டு வாணிபமும் தலைதூக்கத் தொடங்கிற்று.
முதலில் நிலக்கிழாரில் ஒரு பகுதியினரே வாணிபத் துறையில் இறங்கியிருக்க வேண்டும். ஏனெனில் அவர்களிடம் தானே தேவைக்குப் போக எஞ்சிய தானியம் இருக்கும்? விவசாய உற்பத்தி அதிகமாக வாணிபமும் செழித்தது. பல புதிய பொருள்களுக்குத் தேவை பிறந்தது. இத்தேவை வணிக வர்க்கத்தை வளர்த்தது.
முதலில் நிலக்கிழார் வர்க்கத்திலிருந்து தோன்றிய வணிக வர்க்கம் நிலக்கிழார்களின் நிலப்பிடிப்பை எதிர்த்து நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதுதான் கி.பி. முதல் நூற்றாண்டு முதல் 6-ம் நூற்றாண்டுவரை நிலவிய வர்க்க முரண்பாட்டின் சித்திரம்.*3
இந்நிலையில் பௌத்தம் தமிழ் நாட்டில் பரவியது. பிராமி பாசனங்களின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்பது உண்மையானால் அது அக்காலத்தில் பரவத் தொடங்கியது என்று கொள்ளலாம். ஆனால் செல்வாக்கு பெறவில்லை. அது தமிழ் நாட்டிற்கு வந்த காலத்தில் கி.மு. 6-ம் நூற்றாண்டில் தோன்றிய தர்மபாதையாக வரவில்லை. 6-ம் நூற்றாண்டில் சமூக மாறுதல்கள், பௌத்த தத்துவங்களையும் மாற்றியிருந்தது. இங்கு வந்த தத்துவம் ஹினாயன தத்துவம். இதில் விக்ரக வணக்கம் உண்டு.
சக்ரவர்த்திகளும் போதி சத்துவர்களும் சமமாகக் கருதப்படுகிறார்கள். சக்கரவர்த்திகள் பல பிறப்புகளில் செய்த புண்ணியம் காரணமாக அப்பதவியடைகிறார்கள் என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. ஆணைச் சக்கரமும், தர்ம சக்கரமும் இணைக்கப்படுகின்றன. நிலப்பிரபுத்துவம் வடநாட்டில் பரவி பேரரசு தோன்றிய காலத்தில் அதற்காதரவாகத் தோன்றிய தத்துவம் இது. இதுதான் தமிழ் நாட்டில் நிலப்பிரபுத்துவம் வளருவதற்கும் அவசியமான தத்துவமாக இருந்தது. இக்காலத்தில் போர் அவசியமில்லை. ஆகவே அஹிம்சையை ஒரு தத்துவமாகக் கொண்ட ஹினாயன பௌத்தம்ஆளும் வர்க்கத்தினரால் ஏற்றுக்கொள்ளப் பட்டது.
சமணம் தமிழ்நாட்டில் பின்னரே தோன்றியது. தோன்றும் காலத்தில் அது பேரரசு தோன்றவே ஆதரவான கொள்கைகளைக் கொண்டிருந்தது. பெருங்கதை முதலிய முற்காவியங்களின் அடிப்படைக் கருத்துக்களும் கதாநாயகர்களது பண்புகளும் இதற்குச் சான்று. ஜீவக சிந்தாமணி பேரரசு ஆதரவில் மிக மிக முன்னேறிச் சென்றது.*4
இவையாவும் சமணக் காப்பியங்களாயினும், உலகியலில் கௌடலியத்தைப் பின்பற்றுகின்றன. பேரரசுகள் நிலைக்கவே சாணக்கியர் தமது அர்த்த சாஸ்திரத்தை எழுதினார் என்பது அறிஞர்கள் ஒப்புக்கொள்ளும் உண்மையே.
இவ்விரு சமயங்களும், அவற்றின் வளர்ச்சிக் காலத்தில் சாதித்த மாறுதல்கள் எவை?
1. சிறு குழு உணர்வைத் தகர்த்தன.
2. பேரரசு தோன்றத் துணை செய்தன.
3. வாணிபம் வளரவும், வணிக வர்க்கம் தோன்றவும் துணை செய்தன.
4. குழுக்களையும் சாதிகளையும் ஓரளவு ஒன்றாக இணைத்தன.
5. மொழி வளர்ச்சிக்கு உதவின.
6. புதிய பாட்டுருவங்களைப் புகுத்தி காவிய காலத்துக்குப் பாதை அமைத்தன.
7. ஒரே தமிழ்நாடு என்ற அமைப்பை மக்களும், மன்னரும் வணிகரும், நோக்கமாகக் கொள்ள உதவின.
8. இதன் மூலம் கலாச்சார ஒருமையை வளர்த்தன.
9. காவியங்களின் மூலம் இந்தியப் பண்பாட்டோடு, தமிழ்நாட்டின் பண்பாட்டை இணைத்தன.
10. போரைத் தவிர்த்து வாணிப வளர்ச்சிக்கு உதவின.
இம்மாறுதல்களின் காரணமாக சமூகச் சித்திரம் மாறுபாடடைந்தது. மன்னர்கள், நிலக்கிழார் வர்க்கம் வலுப்பெற்றால் அதனோடும், வணிக வர்க்கம் வலுவடைந்தால் அதனோடும் மாறி மாறிச் சேர்ந்து கொண்டார்கள். சமூக மாறுதல்களால் தோன்றிய நிலமற்ற உழவரும், நிலத்தொடர்பிழந்த கைத்தொழிலாளரும், விதிக் கொள்கையால் உயர் வர்க்கங்களின் பிடிப்புக்குள்ளாயினர். அவற்றை எதிர்க்க முடியாதபடி விதிக்கொள்கை அவர்களைச் செயலற்றவராக்கியது.
களப்பிரர் காலத்தில் (இக்காலத்தில் தமிழ் மொழி இலக்கண அடிப்படை பெற்றது.) ஆரம்ப இலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. காவிய காலத்தின் தொடக்கமும், நீதி நூல்களின் ஆரம்பக் காலமும் அதுவே. இம்மாறுதல்கள் நெருக்கடியை நோக்கி விரைந்தன. நிலப் பிரபுத்துவவர்க்கம், நிலத் தொடர்புடைய தொழில் புரியும் மக்களைத் திரட்ட முயன்றது.
இவ்வர்க்கங்கள் சமூக அடிப்படை அமைத்துக் கொள்ளும் முயற்சியில் வர்க்கப் போராட்டம் முற்ற ஆரம்பித்தது. இச்சமயம் உழைக்காத ஆயிரக்கணக்கான பிரபுக்களும், திகம்பர ஸ்வேதாம்பரத் துறவிகளும், உணவு பெற பள்ளிச்சந்த நிலங்களை அரசர் உதவியால் பெருக்கிக் கொண்டனர். விகாரைகளும், சைத்தியங்களும் சமணப் பள்ளிகளும் நிலப்பிரபுத்துவ ஸ்தாபனங்களாயின. இவை வணிக வர்க்கத்தாரோடு பொருளாதாரத் தொடர்பு பூண்டன. அவர்கள் நிலத்தில் விளைந்தவற்றை வணிகர் வாங்கி விற்றனர், அல்லது கச்சாப் பொருளாக வாங்கிச் செய் பொருள்களைச் செய்தனர். இவைத் தவிர நிலக்கிழார்கள், சிறு நில உடைமையாளர்கள் ஏராளமாக இருந்தனர். சமண, பௌத்த சமய நிறுவனங்கள் பெரும் சுரண்டல் ஸ்தாபனங்களாயிருந்தன. அவைதாம் நேரடியாகச் சுரண்டும் உழவர்கள், தமது செல்வாக்கினால் பாதிக்கப்பட்ட நிலக்கிழார்கள், சிறு நில உடைமையாளர் ஆகிய பகுதியினரின் வெறுப்புக்களாயின. தம்மை ஆதரிக்கும் வியாபாரிகளின் நலனுக்காகவே மத ஸ்தாபனங்கள், நிலங்களை நிருவகித்தன. ‘மத்தவிலாசப் பிரகசனம்பௌத்த விகாரைகளின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் கூறுகிறது.
இவ் வர்க்கங்களில் பெருநிலக் கிழார்கள், சமண பௌத்த எதிர்ப்புக்குத் தலைமை தாங்கினர். அவர்களது போராட்டத்திற்கு பக்தி இயக்கம் உதவியாக இருந்தது. வெளிப்படையாக அது எந்த நலனையும் ஆதரிக்காவிட்டாலும் சமண, பௌத்த, எதிர்ப்பு பொருளாதாரத் துறையில் வாணிக வர்க்க எதிர்ப்பாகவே சாராம்சத்தில் இருந்தது.
நிலப்பிரபுத்துவ சமூக அடிப்படையை விரிவுபடுத்த எல்லோரையும் ஆகர்ஷிக்கும் வண்ணம், மக்கள் அனைவரும் சகோதரர்கள். ஒரே குலம் என்ற தத்துவத்தை சமயம் பரப்பியது. கொள்வினை, கொடுப்பு வினை செய்து கொள்ள ஆதரவு காட்டியது. உறவில்லாத உறவை சிருஷ்டித்தது. (Idyllic relations) சிவனை. விதியை வெல்ல வழி காட்டும் மூலத் தலைவனாக்கியது. நிலப்பிரபுத்துவச் சுரண்டலால் ஏற்படும் வேதனைகளுக்கும், துன்பங்களுக்கும் விகாரைகளும், பள்ளிகளும் காரணமயிருந்ததால், அவற்றை எதிர்த்து அவர்களுடைய விதிக் கொள்கையை எதிர்த்து, மக்களைத் திரட்டுவதற்காக வேதனை நீக்கச் சிவனிடம் சரணடையும்படி சைவம் கோரியது. விதியை வெல்லச் சிவனிடம் சரணடையக் கோரியது.
நமச்சிவாயம்என்ற சொல்லே இகபர செல்வங்களையெல்லாம் அளிக்குமென்றது. மக்கள் புரிந்து கொள்ள இது எளிதாயிருந்தது, புத்த, சமண தத்துவச் சுழல்கள் ஆரம்ப சைவ சமயத்தில் இல்லை , சிவன் யாரும் வழிபடக் கூடிய பொதுக் கடவுளாயிருந்தார். பிறவிப் பெருங்கடலை நீந்த பிரபுக்களின் தர்ம போதனையோ, சமணக் குரவர், குரத்தியரது துணையோ தேவையில்லை. சைவ மடங்களும் அப்பொழுது தோன்றவில்லை.
சைவம் தழைக்கப் பணி செய்த முதன் நாயன்மார்கள் நாடு முழுவதும் அலைந்து மக்களிடையே வழங்கி வந்த இனிய பண்களில் மனித உணர்வை உருவமாக்கிச் சிவனை மனிதருக்கு மட்டும் எட்டும் தந்தையாக, தாயாக வருணித்துப் பாடினார்கள். அறிவைப் பின் தள்ளி உணர்ச்சியை ஆழமாக்கி பக்தி வெள்ளத்தில் நாட்டை மூழ்கடித்தார்கள்.
இந்நிலையில் வாணிக வர்க்கம் பலம் குன்றியிருந்தது. மூவரசுகளிடையே வாணிகத் தடைகள் தோன்றியிருந்தன. மேனாட்டு வாணிபம் சீர்குலைந்தது. இஸ்லாமிய வளர்ச்சியாலும், வெற்றியாலும் அண்டை நாடுகளில் இவர்களது வாணிபம் நின்றது, நாட்டுக்குள் முடங்கிய வணிக வர்க்கம் வலிமை குன்றி இத்தாக்குதலைச் சமாளிக்க இயலாது நின்றது.
படிக்க :
உ. பி. விவசாயிகள் படுகொலை : பாஜக-வின் வெறியாட்டம் ஆரம்பம்
டெல்லி வன்முறையில் அமித் ஷாவின் பங்கு : உண்மை அறியும் குழு அறிக்கை !
இந்நிலையில் சைவம் சேர, சோழ, பாண்டிய நாடுகளிலும் பல்லவர் நாட்டிலும் பரவிற்று. சமூக ஒற்றுமைக்கு அது துணை செய்தது. சமண பௌத்த மடங்கள் செல்வாக்கிழந்தன. அரசர்கள், செல்வாக்குப் பெற்ற சைவத்தை ஆதரிக்கத் தொடங்கினர். சமண பௌத்த மடாலயங்களின் சொத்துக்கள் புதிதாகத் தோன்றிய சிவாலயங்களுக்கு மாறின. புதிய தேவ தானங்களும், பிரம தேசங்களுக் சிருஷ்டிக்கப் பட்டன.
பாண்டி நாட்டின் வேள்விக்குடி செப்பேடுகளும் திருநெல்வேலி செப்பேடுகளும் களப்பிரர் காலத்தில் அந்தணர்களிடமிருந்து பறித்துக் கொண்ட நிலங்களை மீண்டும் அவர்களுக்கு உரிமையாக்கியதைக் கூறுகின்றன. மகேந்திரன், மாமல்லன் காலத்துச் சாசனங்கள், காஞ்சி கைலாயநாதர் கோவிலுக்கு . பண்டைச் சமணப் பள்ளிகள் விகாரைகளின் நிலங்களை உரிமையாக்கியதைக் கூறுகின்றன. இவ்வாறு சிவன் கோயில்கள் படிப்படியாக நிலவுடைமை ஸ்தானங்களாயின. இம் முறை நாடு முழுதும் பரவிற்று. ஊர் நிலத்தின் பெரும் பகுதி கோயில்களுக்குச் சொந்தமாயிற்று. அதற்கடுத்தாற்போல நிலமுடைய பெரு நிலக் கிழார்கள் கோயில் நிலங்களை மேற்பார்வை செய்யும் சபையினராகவும், ஆயத்தினராகவும், வாரியத்தினராகவும், ஊரவராகவும் நாட்டினராகவும், அதிகாரம் பெற்றனர்.*5 இப்படி ஓர் புதிய நிலவுடைமை முறை உருவாகியது.
வாணிக வர்க்கத்தினரும் தமிழ்நாடு முழுவதும் வாணிபம் செய்யும் வாய்ப்பை மறுபடி பெற சைவத்தை அனுசரித்தனர். அவர்களில் பெரும் பகுதியினர் வீர சைவர்களாயினர். இது நிலவுடைமை வர்க்கத்தினரோடு வணிக வாக்கத்தின் நட்புறவு கொண்டதையே காட்டுகிறது. 8-ம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னும் வணிக வர்க்கத்தினர், பல சிவன் கோயில்களுக்குப் பொன்னளித்ததும், மகமை முறைகள் ஏற்படுத்தியதும் சமகாலச் சாசனங்களால் புலனாகின்றன. கூட்டுச் சுரண்டலுக்கு இவ்வுறவு காரணமாயிற்று.
(தொடரும்)

அடிக்குறிப்புகள் :
*1 தமிழ் நாடும் மோரியரும் நா. வா. (தாமரை பொங்கல் மலர் 1961)
*2 (Philosophies of India – Essay on Buddihism Zimmer).
*3 சிலப்பதிகாரத்தில் வர்க்கப் போராட்டம், நா.வா., ஜனசக்தி மே. மலர் 1957
*4 காவியக் கதைத் தலைவர்கள் நா.வா., தாமரை
*5 South Indian Polity – K.S.Krishnaswamy Iyengar உத்தர மேரூர் சாசனம்.
« முந்தைய பாகம் …………………………………………………………………………… அடுத்த பாகம் »
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க