இயற்கையை சிதைத்து, ஜம்புக்கல் மலையை சல்லி கற்களாக, சல்லி மணலாக மாற்றத் துடிக்கும் மணல் கொள்ளையர்களையும் துணை போகும் அரசு நிர்வாகத்தையும் முறியடிக்க ஒன்றிணைவோம் !
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தாலுக்காவில் உள்ள அமராவதி அணை எதிரே பெரும்பள்ளம் என்ற ஊர் உள்ளது. அதன் அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையின் தொடர்மலை பகுதியின் அருகில் ஆண்டியகவுண்டனூர் கிராமத்தின் தெற்கு பகுதியில் ஒரு பகுதியாக சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2 கிலோமீட்டர் உயரமுள்ளதாக அமைந்துள்ள மலைகரடு ஜம்புக்கல் மலை பகுதியாகும். இம்மலைப் பகுதியினை ஒட்டியும் சேர்ந்தும் தம்புரான் கோவில் மலை, வரையாட்டு கரடு, துருவத்து கோட்டைமலை, சாத்துவார் ஓடை மலை, தேவகங்காடு என சுமார் 10-க்கும் மேற்பட்ட மலைக் கரடுகள், குன்றுகள் உள்ளன. இம்மலை கரடுகளிலிருந்து மழைகாலங்களில் பெய்யும் மழை தண்ணீர் அமராவதி ஆற்றுக்கு நீர்வரத்து ஓடையாக அமைந்துள்ளது. கோடை காலத்திலும் வற்றாத நீருற்றுகள் இயற்கையாகவே அமைந்துள்ளன. இயற்கை வளம் நிறைந்த, பசுமை போர்த்திய அழகிய மலைப்பகுதிதான் மேற்சொன்னவை.
ஜம்புக்கல் மலையினை சுற்றியுள்ள ஏழ்மை நிலையில் வசித்து வரும் கிராம மக்களுக்கு விவசாயம் செய்துகொள்ள மட்டும் 1970-காலகட்டத்தில் அப்போதைய திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் சுமார் 350 பேர்களுக்கு 50 சென்ட் முதல் 2 ஏக்கர் வரை நிபந்தனைகளுடன் பட்டா வழங்கப்பட்டது. அருகிலுள்ள ஆண்டியகவுண்டனூர், எலையமுத்தூர், செல்வபுரம் என 18 கிராமங்களை சேர்ந்தவர்கள் மேற்கண்ட இடத்தில் ஆடு மாடுகள் மேய்த்து வருகின்றனர், ஏழை எளியோர் சுண்டைக்காய், அரப்பு தழை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாவில் மலையிலுள்ள மரங்கள், சந்தன மரங்களை அழிக்க கூடாது; ஓடைகள், பாறைகள் மாமுல் வழித்தடத்தை சேதப்படுத்தகூடாது. சாகுபடி செய்யும் மரங்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் இருக்க கூடாது. மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று தான் மரங்கள் வெட்ட வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகளுடன் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பகுதியில் சில ஆண்டுகள் தொடர்ந்து மழை இல்லாமையின் காரணமாக ஏற்பட்ட வறட்சியால் பட்டா பெற்றவர்கள் சரிவர பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது.
படிக்க :
காட்டுப் பன்றிகளிடமிருந்து விவசாயத்தைக் காப்பாற்று – உடுமலை விவசாயிகள் !
கடல் மணல் கடத்தும் மாஃபியா கும்பலுக்கு துணை போகும் அரசு !
உடுமலைப்பேட்டை நகரில் வசித்து வரும் வசந்தகுமார் (முன்னால் அதிமுக மந்திரியின் பினாமியாக இருப்பதாகக் கூறுகிறார்கள்) என்பவர் ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுக்கா, ஆண்டிப்பட்டி கிராமம் நாவல் ஓடை பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டு, போலி மணல் தயாரித்து விற்பனை செய்வதாக ஊர்க்காரர்கள் புகார் செய்து அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டவர். ருசி கண்ட பூனையாக கனிம வளங்களை கொள்ளையடித்த வசந்தகுமார் இதுதான் சந்தர்ப்பம் என ஜம்புக்கல் மலைப்பகுதியின் அருகாமையில் சில தரகர்களை பிடித்து மிகவும் குறைந்த விலைக்கு விலைபேசி கிரயம் மற்றும் சுவாதீனத்துடன் கூடிய குத்தகை ஆவணங்கள் பெற்றுள்ளார்.
வாரிசு இல்லாத, இறந்து போனவர்களின் சில இடங்களை போலியான நபர்களை வைத்து கிரயமும் நோட்டரி வக்கீல் மூலம் சுவாதீனத்துடன் கூடிய குத்தகை ஆவணங்களும் தயார் செய்து 99 ஆண்டுகளுக்கு அனுபவித்து கொள்ள ஒப்பந்தமும் செய்துள்ளார். மேலும், மேற்கண்ட ஆவணங்களில் நிலம் கொடுத்தவர்களிடம் இவருக்கு சாதகமாக 16 நிபந்தனைகளை ஒப்பந்தம் செய்துள்ளார்.
மோசடி நிபந்தனைகள் :
மேற்படி பூமியில் முட்புதர்களை நீக்கவும், கற்களை அகற்றி, வடிகால் அமைத்து, மழைநீர் சேகரித்து, சமன்படுத்தி,உழுது, அதற்கு தேவையான நீர், மின்சாரம் மற்றும் இதர கட்டமைப்புகளை ஏற்படுத்திக்கொள்ள ஆகும் செலவுகளை ஏற்று அபிவிருத்தி நடவடிக்கைளை மேற்கொள்ளுவதால் கெடுகாலம் முடியும் வரை எவ்வித ஆட்சேபனைகளும் தெரிவிக்ககூடாது, கெடுகாலத்திற்கு பின் அபிவிருத்தி செலவினங்கள் கணக்கிட்டு அன்றைய மதிப்பில் செய்த செலவினத் தொகையினை கொடுத்து பூமியை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும்; மேலும், மின் இணைப்பு பெறுவது, குடிநீர் , வாய்க்கால் பாசனம்,பைப்லைன் அமைத்து கொள்வது, கட்டிட அனுமதி, குவாரி அனுமதி செய்துகொள்ள வேண்டுமெனவும்; குத்தகை காலத்தில் உள் குத்தகைக்கு விடவும், வங்கி மூலம் கடன் பெறவும், அடமானக்கடன் பெறவும், கொலேட்டரல் செக்யூரிட்டியாக கொடுக்கவும், இந்த பூமியை பொருத்து அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் நஷ்ட ஈடு தொகை வந்தால் பெற்றுகொள்ளவும்;
குத்தகை காலம் முடியும்வரை நிலம் கொடுத்தவர்கள் எவ்வித உரிமையும் கொண்டாடி வரக்கூடாது எனவும்; இதுபோன்ற நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தில் நிலத்தை அபிவிருத்தி செய்யும் செலவுகளை பூமியை கொடுத்தவர்களே ஏற்றுகொள்ளவேண்டும் என்ற நிபந்தனை என்பது நிலம் கொடுத்தவர்களிடமோ, அவர்களின் வாரிசுகளிடமோ கோருவதற்கு வழிவகை செய்து ஒப்பந்தம்/ கிரயம் செய்யப்பட்டுள்ளது, நிலம் கொடுத்தவர்களின் தலைக்குமேல் கத்தி தொங்குவதாக உள்ளது.
ஜம்புக்கல் மலைகரடு –வசந்தகுமார் குடும்பத்தின் சூறையாடல் :
தரகர்கள் மூலம் ஒப்பந்தம் / பத்திரம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள தொகையினை முழுமையாக வழங்காமல் நிலம் கொடுத்தவர்களுக்கு பெயரளவுக்கே தொகை வழங்கிய வசந்தகுமார் குறிப்பிட்ட அளவு நிலம் சேர்ந்தவுடன் ஜம்புக்கல் மலைக் கரடு மேல்பகுதிக்குச் செல்வதற்கு மலை பகுதியினை சிதைத்து மலை ஓரமாக சுமார் 30 அடி முதல் 80 அடி அகலத்துக்கு சாலை அமைத்துள்ளனர். சுமார் 10 ஜே.சீ.பி மற்றும் கிட்டாச்சி இயந்திரங்கள் மூலம் மலைகளை சிதைத்தும், மலை ஓரமுள்ள மண்ணை கொண்டு மண்சாலை அமைத்தும், பொதுமக்கள் பயன்படுத்திய பொதுப் பாதையை தடுத்தும் கேட் அமைத்து உள்ளார்.
விவசாய நிலங்களுக்கு செல்வோர் இந்த பாதையை பயன்படுத்த முடியாத படி உள்ளது. ஆறு மாதங்கள் சுமார் 1000 ஏக்கர் பரப்புள்ள இடத்தில் உள்ள முட்புதர்களை அழிப்பதாகக் கூறி மரங்களை வெட்டி கடத்தி லட்சக்கணக்கில் விற்பனை செய்துள்ளார். ஏராளமான பெரிய மரங்களின் வேர் பகுதி எரிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்ட விரோதமாக 80 அடி ஆழத்திற்கு, 20 அடி அகலத்தில் வெடி வைத்து மலையினை உடைத்து கிணறு வெட்டியுள்ளார், நான்கு இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளார், கட்டிடம் கட்டியுள்ளார். மேற்கண்ட பணிகளுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
மலை அடிவாரங்களில் உள்ள குளங்களுக்கு வரும் நீரை வழி மறித்தும் திசைமாற்றி அமைத்தும் மலையின் சுற்று சூழலை முழுமையான நாசமாக்கியுள்ளார்.
ஜம்புக்கல் மலையின் மரங்கள், முட்செடிகள் அழிக்கப்பட்டு போடபட்ட பாதை கடந்த அக்டோபர் மாதம் பெய்த கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது, மலை அடிவாரத்தில் உள்ள பேச்சியாத்தாள் முடக்கு குட்டை, சில்லூத்து குளம் ஆகிய குளம் குட்டைகள் மண் அரிப்பால் சுமார் 20 அடி வரை மண் தேங்கி மூடப்பட்டுள்ளது. கன்னிமார் ஓடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் மண் மூடப்பட்டதால் மழைநீர் முழுவதும் வீணாகியுள்ளது.
மரங்கள் வெட்டபட்டு கடத்தலில் ஈடுபட்டதோடு மலைகளை அழித்து மணல்,மண், கல் கடத்தவும் மதிப்புமிக்க மலைகளையும், கனிம வளங்களையும் கொள்ளையடிக்கவும்,அபகரிக்கவும் திட்டமிட்டு செயல்படுவதாக பகுதி மக்கள் கூறுகின்றனர் . பழமையான மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்டும் , பசுமையான மலை அழிக்கப்பட்டும், கனிம வளங்கள் சூறையாடப்பட்டுள்ளது.
மலைகளை காக்கும் நோக்கத்துடன் முன்னோர்கள் பல நூற்றண்டுகளுக்கு முன்பே ஜம்புலிங்கேஸ்வரர் கோவில், தம்புரான் கோவில் போன்றவற்றை உருவாக்கி வழிபட்டு வருகின்றனர். மலை உச்சி பகுதியில் விளக்கு மாடங்களுடன் கூடிய குளம் புராதான சிலைகள், சின்னங்கள் உள்ளன.

This slideshow requires JavaScript.

அமராவதி ஆற்றின் அருகே உள்ள துருவத்து கோட்டை மலையில் இந்து முஸ்லிம் ஒற்றுமையாக வழிபாடு செய்த தென்புறம் துருவத்து பெருமாள் கோவில், வடபுறம் துருவத்து பாவா தர்க்கா உள்ளது. திப்புசுல்தான் வழிபாடு செய்து வந்திருக்கிறார். செங்கலால் ஆன கோட்டை கட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களுடன் போராடுவதற்காக மருந்து கிடங்கு, ஆயுத கிடங்கு சுண்ணாம்பு காரையால் கட்டப்பட்டுள்ளது. மலை உட்பகுதியில் நீருற்றும், தங்குவதற்கான வீடும், குளமும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த துருவத்து மலை பகுதியில்தான் சுமார் 70 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது.
கில் சாந்து, குடையன் குண்டு, தாலி மடை திட்டு, தேக்கங்காடு பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்புக்கு காடுகளை அழித்துள்ளனர். பழைமை வாய்ந்த பல்வேறு தொல்லியல் சின்னங்கள் அழிக்கப்படும் வகையில் மலை சமன் செய்யப்பட்டு வருகிறது.
கண்டுகொள்ளாத அரசாங்கம் :
மலை சூறையாடப்படுவதை பகுதிவாழ் மக்கள் புகார் மனுக்களாக வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட இலவச சட்ட உதவி முகாம், மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், காவல்துறை என மலைகளை காப்பாற்ற வேண்டி கடந்த ஓராண்டு காலமாக புகார் அளித்து வருகின்றனர், ஜம்புக்கல் மலை சேதமுறுவதை எதிர்த்து ஒருமுறை மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சட்ட விதிமுறைகளை நடைமுறைபடுத்தி மலைகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டியவர்கள் இவற்றை அழித்துவரும், மரங்களை வெட்டி கடத்தி மலையின் இயற்கை தன்மையை சிதைக்க காரணமான வசந்தகுமார் மீது அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையை பாதுகாக்க தவறும் குற்றவாளிகளாக நீடிப்பார்களோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. உடுமலை பகுதியில் மக்களின் போராட்டங்களுக்கும், கோரிக்கைகளுக்கும் செவி கொடுக்க மறுக்கும் அரசு இது போன்ற கொள்ளையர்களுக்கு உடந்தையாக இருக்கிறது.
போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும், கண்காணிப்பதற்கும்தான் உளவுப் பிரிவு போலிசு என்பதால் கொள்ளைக்காரர்கள், சமூக விரோதிகள் சுதந்திரமாக நடமாடும் இடமாக உடுமலைப் பகுதி உள்ளது.
படிக்க :
பருவநிலை மாற்றமும் – முதலாளித்துவ அரசுகளின் மாநாடும் !
சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !
ஜம்புக்கல் மலை பகுதியில் கிராவல் தொழில் செய்ய எவருக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. சட்ட விரோதமாக 99 ஆண்டுகளுக்கு வசந்தகுமார் கிரயம் செய்த, சுவாதீனத்துடன் கூடிய குத்தகை ஆவணங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
50 ஆண்டுகளுக்கு முன்பு நிபந்தனைகளுடன் வழங்கிய பட்டாக்களை மறு ஆய்வு செய்து தற்போது அதில் இருப்பவர்களுக்கும், நிலமற்ற ஏழை மக்களுக்கும் பட்டா மற்றும் ஆவணங்கள் வழங்கவேண்டும் .
மலை பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்ட கிரிமினல் வசந்தகுமார் என்பவர் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும், பொது மக்கள் போக்குவரத்தை தடை செய்து வசந்தகுமார் என்பவரால் அமைக்கபட்ட கம்பி கதவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
வசந்தகுமார் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும். வாரிசு இல்லாதவர்களிடம் போலி கிரயம், ஒப்பந்தம் செய்ததை முழுமையாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலை வளம், மண் வளம், நுண்ணுயிர் வளம், இயற்கை வளம் பாதுகாக்கப்பட வேண்டும்.
நில அளவை செய்து எல்லையை நிர்ணயித்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.
சுற்று வட்டார பகுதி மக்கள் ஆடு -மாடு மேய்க்கவும், வளர்க்கவும் மலைபகுதியை பயன்படுத்த வழக்கம் போல் உரிமை வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற பகுதி மக்கள் ஒன்றிணைந்து அமைப்பாகத் திரண்டு போராடுவது ஒன்றே முழுமையான தீர்வு கிடைக்கும் என பகுதி மக்கள் கருதுகின்றனர்.
இயற்கை எழில் மிகுந்த ஜம்புக்கல் மலை தனியாரின் கிராவலுக்குத் தாரை வார்க்கப்பட்டதோடு, பல ஆண்டுகளாக விவசாயம் செய்தும் மேய்ச்சல் நிலமாகவும் பயன்பட்டு வந்த மக்களின் வாழ்வாதரமான இந்த மலை தனியார் கிராவல் கொள்ளைக்காரர்களிடம் சிக்கி சின்னா பின்னமாக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங் கரையோரம் கிராவல்கள் அமைத்து மலையையும் ஆற்றையும் பெரும் நாசப்படுத்தி விட்டார்கள்.
தற்சமயம் அமராவதி ஆறும் அதை சுற்றியுள்ள மலைகளும் இக்கயவர்களின் கண்களை உறுத்துகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும், அதிகாரிகளும் இதையும் கண்டுகொள்ளப்போவதில்லை. எனவே, மக்கள் போராட்டம் ஒன்றே ஜம்புக்கல் மலை பாதுகாக்கப் படுவதற்கான வழி. அதனை முன்னெடுப்போம்! ஜம்புக்கல் மலையையும் இயற்கை சுற்றுச் சூழலையும் பாதுகாப்போம் !!

தகவல் :
மக்கள் அதிகாரம்,
உடுமலை பகுதி, கோவை
மண்டலம்
தொடர்புக்கு : 94889 02202

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க