நீர்மேலாண்மையை அலட்சியப்படுத்திய ஆட்சியாளர்களால் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 4000 டி.எம்.சி. அளவிற்கு மழைநீர் பயன்பாட்டுக்கு இல்லாமல் வீணடிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி மன்னன் கரிகாலனை நினைவில் கொண்டு வருகிறது.

கரைபுரண்டோடிய காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க கல்லணையைக் கட்டினான் கரிகாலன். கல்லணை மட்டுமல்ல கரைப்புரண்டோடும் காவிரியின் மொத்த நீரின் அளவைக் கணக்கிட்டு அதை மூன்றாகப் பிரித்து கொள்ளிடம், காவிரி, வெண்ணாறு என வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி வெள்ளாமைக்குப் பயன்படுத்தினான் கரிகாலன். இதேபோல் பாண்டிய நாட்டிலும் நீர்தேக்கி மதகுகள், கண்மாய்கள் அமைத்து நீர் மேலாண்மை செய்யப்பட்டது என்பதை வரலாறு பேசுகிறது.

இன்றைய ஆட்சியாளர்களும்தான் மழைநீர் வடிகால்கள் அமைத்துள்ளார்கள். அவைகள் வடிகால்களாக இல்லை; வடிகட்டிகளாக உள்ளன. அதனால்தான் மழைநீரை சேமிக்காமல் குப்பைக் கூளங்களை சேமிக்கும் வடிகட்டிகளாக அமைந்துவிட்டது. அதிகாரிகள் + ஆளும்கட்சி + கிரிமினல்கள் (காண்டிராக்ட் களவாணி) கூட்டுக் கொள்ளையடித்து வடிகாலுக்குரிய அகலமும், ஆழமும் முறையாக அமைக்கப்படவில்லை. விளைவு, மக்கள் வரிப்பணத்தில் உருவான வடிகால்கள் அனைத்தும் பல்லிளிப்பது எனும் கசப்பான உண்மை.

இதுபோல வெட்டப்பட்ட ஏரி-குளங்கள் அனைத்தும் இவர்களின் கூட்டுக்கொள்ளையின் விளைவால் ‘கிணற்றைக் காணோம்’ கதையாகிவிட்டன. மேலும், கட்டப்பட்ட தடுப்பணைகளும் தரைமட்டமாகிவிட்டன. அடிமை எடப்பாடி ஆட்சியில் முக்கொம்பு அணை உடைந்ததும், தர்மபுரியில் புதியதாக கட்டப்பட்ட அணை உடைந்ததும் நினைவிருக்கலாம். இதே தனியார் காண்ட்ராக்ட் மாஃபியாக்களிடம் மீண்டும் அணையைக் கட்டவும், தூர்வாரவும்  ஒப்பந்தம் மேற்கொண்டால் அது மக்கள் வரிப்பணத்திற்கு வந்த கேடாகத்தான் அமையும்.

படிக்க :

தர்மபுரியில் ஒரு நாள் மழைக்கு உடைந்த புதிய தடுப்பணை !

தமிழகத்திற்கு மழையை அள்ளித் தரவிருக்கும் கஜா புயல் !

இங்கு தேர்தல் ஜனநாயகம் எனும் பெயரில் தேர்ந்தெடுக்கப்படும் அரசு, தனியார்களின் (காண்ட்ராக்டர்கள் – அரசியல்வாதிகள் – அதிகாரிகள் கூட்டுக் கொள்ளையில் பெரும் பணத்தை அடைவது காண்ட்ராக்டர்களே) இலாபத்திற்காக மக்களைக் கொள்ளையிடும் அரசாகவே நீடிக்கிறது. ஏனெனில், இவர்களைப் பொருத்தவரை வறட்சியும், வெள்ளமும் வருமானத்திற்கான வரப்பிரசாதம், அட்சயப்பாத்திரம்.

தமிழகத்தின் இயல்பான மழைஅளவு எவ்வளவு? அதை வீணாகாமல் சேமித்து விவசாயம் + தொழில் + குடிநீர் போன்ற தேவைகளைப் பூர்த்திச் செய்வது எப்படி? அப்படியும் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் நிலத்தடி நீரை எப்படி, எவ்வளவு பயன்படுத்துவது? மீண்டும் பற்றாக்குறை ஏற்பட்டால் மாற்று வழிமுறைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசுதான் வடிவமைக்க முடியும். ஆனால் அரசு அப்படி முழுமையான பார்வையில் இருந்து திட்டங்களைத் தீட்டுவது இல்லை என்பதை கடந்த காலங்களில் நிகழ்ந்த வெள்ளப் பேரழிவு மற்றும் வறட்சி காலங்களில் பார்த்தே வந்திருக்கிறோம்.

இந்த அரசமைப்பிற்குள் நாம் எதிர்பார்க்கும் நிரந்தரத் தீர்வை காண முடியுமா என்றால் அது சாத்தியமில்லை என்பதில் சந்தேகமில்லை. அப்படியெனில் இதற்கு என்னதான் தீர்வு?

சீனாவின் துயரம் என்று அழைக்கப்பட்ட மஞ்சள் ஆற்றின் அழிவை மக்கள் சக்தியைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமாக மாற்றியமைத்து விவசாயம், குடிநீர், மின்சாரம் ஆகிய தேவைகளைப் பூர்த்தி செய்தது சீன மக்கள் அரசு. இதுபோன்றவற்றைச் செய்வதற்கு மக்கள் அரசு அல்லாமல் இன்றைய மக்கள் விரோத – கார்ப்பரேட் நல மாநில, ஒன்றிய அரசுகளால் எதுவும் செய்ய இயலாது. ஆற்றின் போக்கை அணைகள் மூலம் மாற்றியமைப்பது  போல இந்த மக்கள் விரோத அரசுகளின் போக்கை மாற்றியமைக்க கட்டாயம் தேவைப்படுவது அறுவைச் சிகிச்சை.

புரட்சி எனும் அறுவைச் சிகிச்சை சாத்தியப்படுவதற்கு முன்பு இக் கொள்ளைகளையும், அவற்றின் பின் விளைவுகளான வெள்ளப் பெருக்கையும், கடும் வறட்சியையும் சந்தித்துக் கொண்டேதான் இருக்க வேண்டுமா ? இடைப்பட்ட தற்காலிக தீர்வுகளும் அவசியமானதாகத் தான் இருக்கின்றன.

இராமநாதபுரம் திருப்புல்லாணி ஊராட்சியில் மழைக்காலங்களில் பல இலட்சம் லிட்டர் தன்ணீர் வீணாகக் கடலுக்குச் செல்லும் நிலைமை இருந்துவந்தது. தன்ணீரை மக்கள் பயன்பாட்டிற்கு மாற்றவும் ஊரின் நீர்மட்டத்தை உயர்த்தவும் பொதுமக்கள் இணைந்து பேசி ஊராட்சி நிர்வாகம் மூலம் நிறைவேற்ற கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டுள்ளனர். அதன்படி (அதாவது நீர் மேலாண்மை திட்டத்தின்படி) மழைநீரை சேமிப்பதற்கான முன்னேற்பாடுகளை கிராம மக்களின் உள்ளாட்சி நிர்வாகமும் இணைந்து தொடங்கியது.

பொன்னங்கழிக்கானல் ஓடையில் தடுப்பணை கட்டி, ஓடையிலிருந்து அரை கி.மீட்டர் தூரத்திற்கு ஊரணி வரையிலும் கால்வாய் வெட்டிதான் நீர் நிலையில் வைக்கப்பட்டது. பருவமழை துவங்கியதும் இந்த கால்வாய் வழியாக 40 அடி ஆழக் கிணறு போன்ற அமைக்கப்பட்ட சேமிப்பு கிடங்கிற்கு தண்ணீர் கொண்டு வந்து சேகரிக்கப்படுகிறது. அங்கு 24 மணி நேரமும் இயங்கும் வகையில் இரு மின்சார மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 15 ஏக்கர் பரப்பளவில் உள்ள “பெரிய மதகு குப்பம்” ஊரணிக்கு தண்ணிக் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த ஊரணி முழுமையாக நிறைந்ததும் அடுத்ததாக 6 ஏக்கர் பரப்பளவு உள்ள ‘சக்கடி தீர்த்த தெப்பக்குளம்’ அதைத் தொடர்ந்து 2 ஏக்கர் பரப்பளவுள்ள ‘முஸ்லீம் தெரு குட்டம்’ பின்னர் 12 ஏக்கர் பரப்பளவுள்ள ‘பிள்ளையார் குட்டம்’ என (என்ன ஒரு மத சமத்துவம்?) அடுத்தடுத்த ஊரணிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்படுகிறது. இதனால் கோடை காலத்திலும் ‘தண்ணீர் கிராமம்’  என்ற பெருமையுடன் திருபுல்லாணி ஊராட்சி மக்களின் தண்ணீர் தேவையோடு, விவசாய தேவையையும் நிறைவேறி வருவதோடு, தமிழகத்திற்கே ஒரு முன்னுதாரணமாகத் நிகழ்கிறது என்றால் அது மிகையல்ல.

ஒரு ஊராட்சியே தாங்கள் ஊரை ஒரு சோலையாக மாற்ற முடிந்தது என்றால் மக்களோடு இனைந்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊராட்சியும் பேருராட்சியும் நகராட்சியும் இவ்வழிமுறையை மேற்கொண்டால் மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, மழைநீர் கடலில் வீணாகக் கலப்பதைத் தடுக்கவும் டெண்டர் என்ற பெயரில் கூட்டுக் கொள்ளையின் மூலம் மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுவதையும் தடுக்க முடியும்.

படிக்க :

கனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை

மழையில் கரையும் தார் சாலை ! | பாகலூர் பகுதி மக்கள் போராட்டம்

அதே வேளையில் அதிகாரிகள் + ஆளும்கட்சி + காண்டிராக்ட் கிரிமினல்கள் அடங்கிய கொள்ளைக்கார கூட்டணி, இத்தகைய நடைமுறைகளைத் தொடர ஒருபோதும் அனுமதிக்காது.  ஆனால், மக்களின் பங்களிப்போடு எதையும் சாதிக்க முடியும் என்று இராமநாதபுரம் திருப்புல்லாணி ஊராட்சியும் அதன் மக்களும் நடைமுறையில் காட்டியிருக்கின்றனர். இந்த அனுபவங்களை படிப்பினையாக எடுத்துக் கொண்டு செயல்பட தமிழக அரசு தயாராக இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், மக்கள் அமைப்பாக – திருப்புல்லாணி ஊராட்சி மக்களைப் போல அணிதிரண்டால், வீதிதோறும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைத்தால் மட்டுமே, மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சிக் கொழுத்து வயிறு வீங்கி சோம்பிக்கிடக்கும் இந்த ஆசை உசுப்பிட்ட முடியும்.

மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமித்துள்ள கார்ப்பரேட்  நிறுவனங்கள், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அரசு நிறுவனங்களின் இடங்களையும் கையகப்படுத்தி மீண்டும் நீர் பிரிப்புகளாக மாற்றியமைக்கவும் வலியுறுத்தி மக்கள் திரள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும்.

கதிரவன்