“அந்த இரண்டு மார்க்சிஸ்டுகள் உலகம் முழுவதும் சென்று உலகம் அழியப் போவதாக சொல்லிக் கொண்டிருப்பதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது”என ஒரு வசனம் Don’t look up படத்தில் வருகிறது.
நாயகனும் நாயகியும் விஞ்ஞானிகள். ஒருநாள் நாயகி ஆராய்ந்து கொண்டிருக்கும்போது ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கிறாள். வால் நட்சத்திரம்! புதிய கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் கொண்டாடுகின்றனர். நாயகன் வால் நட்சத்திரம் இருக்கும் தூரத்தைக் கணக்கிடுகிறான். வால் நட்சத்திரத்தின் தூரம் ஒவ்வொரு கணக்கிடலிலும் குறைந்து கொண்டே இருக்கிறது.
வால் நட்சத்திரம் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது! ஆறு மாதங்கள்தான் கெடு! நாம் அறிந்த வகையில் இருக்கும் உலகம் அழிந்துவிடும்!
இந்த மூன்று விஷயங்களை உலகுக்கு அறிவிக்க முயலும் இரு விஞ்ஞானிகளின் கதைதான் படம்.
படிக்க :
சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !
சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !
முதலில் அமெரிக்க ஜனாதிபதியிடம் பேச முயலுகிறார்கள். நடக்கவிருக்கும் தேர்தலை வால் நட்சத்திரம் பற்றிய செய்தி பாதிக்கும் என யோசிக்கிறார். தொலைக்காட்சியில் சொல்ல முயலுகிறார்கள். ‘இந்த வால் நட்சத்திரத்தை என் முன்னாள் மனைவியின் வீட்டு மேல் விழச் செய்ய முடியுமா?’ என சொல்லி விட்டு சிரிக்கிறார்.
இவை அன்றி, கூப்பிட்டால் ஜனாதிபதி பம்மி ஓடி நிற்கும் ஒரு முதலாளி, வால் நட்சத்திரத்தில் பல ட்ரில்லியன் டாலர் மதிப்பு வாய்ந்து மினரல்கள் இருப்பதாகச் சொல்கிறார். அவற்றை எப்படி எடுப்பது என்பதைப் பற்றி ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடக்கிறது.
சமூகதளங்கள் முழுக்க ‘க்ரெட்டா’வைப் போல் நாயகியை ட்ரோல் செய்யும் பிரச்சாரம் முடுக்கி விடப்படுகிறது. அரசு, முதலாளி என ஆளும்வர்க்கம் விரும்புகிற பாணியில் மக்களை மந்தைகளாக்க சமூக தளங்கள் பயன்படுகின்றன.
இறுதியில் என்னவாகிறது என்பது மிச்சக் கதை!
கதையில் வரும் வால் நட்சத்திரம், வால் நட்சத்திரம் அல்ல; நிகழ்ந்து கொண்டிருக்கும் காலநிலை மாற்றமே என்பதை மேற்கண்ட கதையிலேயே ஒருவர் புரிந்துகொள்ள முடியும். காலநிலை மாற்றத்துக்கான எல்லாவித சாட்சிகளும் நேரடியாக நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே எப்படி insensible ஆக அரசும் ஆளும்வர்க்கமும் இருக்கின்றன என்பதையும் காலநிலை மாற்றத்தை மறுக்கும் ஆளும் வர்க்க அடிவருடிகள் சமூக ஊடகங்களைக் கொண்டு எப்படி மக்களை முட்டாள்களாக்குகின்றனர் என்பதையும் முதலாளியம் ஏன் தீர்வாக முடியாது என்பதையும் அறிவியலில் முதலாளிக்கான அறிவியல், மக்களுக்கான அறிவியல் என இரு வகை இருப்பதையும் படம் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது.
இத்தகையக் கதைக்குள்தான் இரு விஞ்ஞானிகளையும் பிடிக்காத ஒரு நபர் அவர்களை மார்க்சிஸ்டுகள் எனக் குறிப்பிடுகிறார்.
விஞ்ஞானம் பேசுபவர்கள் எப்படி மார்க்சிஸ்டுகளாக முடியும்? ஆக முடியும். விஞ்ஞானம் முதலாளிகளுக்கானதாகவும் மக்களுக்கானதாகவும் இரு வகையாக இருப்பதை புரிந்து, மக்களுக்கான விஞ்ஞானத்தை அரச எதிர்ப்பு, மக்களின் பொதுப்புத்தி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பேசுபவர்கள் மார்க்சிஸ்டுகள்தான்.
அறிவியலுக்குள் இருக்கும் லாபவெறி, வர்க்கம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளாமல் ஒற்றையாய் அறிவியலைப் புரிந்து கொண்டு கண்மூடித்தனமாக பேசுபவர்கள் அறிவியல் பூசாரி கணக்கில்தான் வருவார்கள்.
காலநிலை மாற்றத்துக்கான தீர்வு அரசநிலை மாற்றமும் உற்பத்தி முறை மாற்றமும்தான் என்பதை முதலாளியமே ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்கு விஞ்ஞானம் அவர்களைத் தள்ளியிருக்கிறது. அதனால்தான் க்ரெட்டா உள்ளிட்டோர் ‘The system has to be changed’ என மார்க்சிய மொழியில் பேசுகிறார். உலகளாவிய இடதுசாரிகள் ‘System change, not climate change’ என அரசநிலை மாற்றத்தை பிரசாரம் செய்கின்றனர்.
மானுடத்தை அழிவிலிருந்து காக்க இயற்கையே முன் வைக்கும் தீர்வு, மார்க்சியம்தான். அதனால்தான் உலகமெங்கும் சூழலியலாளர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். சமூக ஊடகப் பதர்களைக் கொண்டு Cancel செய்யப்படுகிறார்கள். அரசுகள் காலநிலை மாற்றத்துக்கான தீர்வை முதலாளியத்துக்குள்ளேயே தேடுகின்றன.
பாசாங்கையோ வழக்கமான அரசியல் உத்திகளையே கதைக்குதவாத வாதங்களையோ முன்னெடுக்கும் காலத்தை தாண்டிவிட்டோம் என்கிறோம். ஆனால் கேட்பாரில்லை.
உண்மை என்னவோ பூமியை அழிக்க வந்த வால் நட்சத்திரம் போல் தெள்ளத்தெளிவாக வானில் தெரிகிறது. நாம்தான் மேலே பார்ப்பதைத் தவிர்க்கிறோம். படத்தைப் பார்த்துவிடுங்கள்!

முகநூலில் : Rajasangeethan
disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க