மிழ்நாட்டில் கடந்த 03-01-2022 முதல்  நீதிமன்றங்களுக்குள் வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் செல்வதற்கு தடை விதித்தும், உயர் நீதிமன்றங்களிலும்,  கீழமை நீதிமன்றங்களிலும் காணொலி மூலம் மட்டுமே  வழக்கு விசாரணை  நடைபெறும் என்றும், வழக்கறிஞர் சங்கங்கள், வழக்கறிஞர் சங்க நூலகங்கள், நீதிமன்ற வளாகங்களில் செயல்படும் கேன்டீன்களும் மூடப்படும் என்றும், குறிப்பிட்டு 02-01-2022-ம் தேதி இரவில் திடீரென்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது, சென்னை உயர் நீதிமன்றம்.
கொரோனா முதல் அலையின்போது அரசு ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே நீதிமன்றங்களை முடக்கி, அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்பும் நீதிமன்றங்களை முழுமையாக செயல்பட விடாமல் தொடர்ந்து முடக்கி வைத்துவிட்டு, கடந்த இருமாதங்களாக மட்டுமே கீழமை நீதிமன்றங்களை இயல்பாக செயல்பட அனுமதித்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆனாலும் காணொலி விசாரணை, நேரடி விசாரணை என்று இரு வடிவத்திலும் உயர்நீதி மன்றத்தில்  விசாரணை நடை பெற்று வந்தது. வழக்கறிஞர் சங்கங்களின் கோரிக்கைகள், அழுத்தங்கள், போராட்டங்களின் பின்பே இயல்பு நிலைக்கு வந்தடைந்துள்ளது நீதிமன்றங்களும், நீதிமன்ற வழாகங்களும்.
முடக்கப்பட்ட காலகட்டத்தில் வழக்காடிகள், வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் எழுத்தர்கள், நீதிமன்றத்தின் இயக்கத்தை சார்ந்து தொழில் புரிபவர்கள் ஆகியோர்  அனுபவித்த துன்பங்கள் சொல்லிமாளாது.
தற்பொழுதும் நீதிமன்றங்களை முடக்கி வைப்பதற்கான முடிவை எடுப்பதற்கு முன்பு அரசிடமோ, வழக்கறிஞர் சங்கங்களிடமோ கலந்து ஆலோசித்ததாக தனது அறிவிப்பில் சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிடவில்லை.
படிக்க :
இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை ! வழக்கறிஞர்கள் கோரிக்கை வெற்றி !
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீதான நடவடிக்கையை கைவிடு ! வழக்கறிஞர்கள் போராட்டம்
நீண்ட  கால இடைவெளிக்கு பின்பு மீண்டும் நீதிமன்றங்கள் முழுமையாகச் செயல்படத் துவங்கியதும் வழக்காடிகளும், வழக்கறிஞர்களும், வழக்கறிஞர் எழுத்தர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில், அடுத்த ஒரு மாதத்தில் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. (காணொலி விசாரணை என்பது நடைமுறையில் கீழமை நீதிமன்றங்களை முழுமையாக முடக்கி வைப்பதுதான்)
நீதிமன்றங்களை முடக்கி வைக்கும் அளவிற்கு  நீதிமன்றங்களில் ஆபத்தான சூழல் நிலவுகின்றது என்பதை எந்தத் தரவுகளின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் வந்தடைந்துள்ளது என்பதை தனது அறிவிப்பில் குறிப்பிடவில்லை. ஆனால் நீதிமன்றத்திற்கு வெளியில் ஒரு சில சிறிய கட்டுப்பாடுகளுடன் தமிழகமே இயல்பாக  இயங்கி வருகின்றது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனாலும் நீதிமன்றங்கள் திறப்பதைப் பற்றி உயர்நீதிமன்றம் வாய் திறக்கவில்லை.
காணொலி விசாரணை என்பது எந்த வகையிலும் சாத்தியம் இல்லை என்பதை கடந்த ஒன்றரை ஆண்டு கால நடைமுறை நிரூபித்து விட்டது.  அதன்பின்பும் காணொலி விசாரணை என்று அறிவித்திருப்பது கீழமை நீதிமன்றங்கள் நடை பெற்றுவரும் முறை என்ன என்பதை அறிந்து கொள்ளாததாலா? அல்லது மக்களை பற்றிய அக்கறை துளியளவும் இல்லாமல்  ஆணவத்தினாலா?
மக்கள் வரி பணத்தில் மக்களுக்காக  உருவாக்கப்பட்ட நீதி மன்றங்களுக்குள்  மக்கள் நுளைய எத்தனை எளிதாக தடை விதிக்கிறார்கள் நீதிபதிகள்!
ஏற்கனவே தமிழக உயர் நீதிமன்றங்களில் பொதுமக்கள் செல்வதற்காக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பது, தேவைக்கு ஏற்ப நீதிமன்றங்களின் எண்ணிக்கை குறைவு, நீதிபதிகள் விரும்பினால் மட்டுமே விசாரணை நடத்துவது, நீதிபதிகள் விடுப்பு, பணியில் இருக்கும் நீதிபதிகளில் பலரும் தாங்கள் பெற்றுக்கொள்ளும் ஊதியத்திற்கும், சலுகைகளுக்கும் உண்மையாக வேலை செய்யாமல் ஏமாற்றி வருவது, பள்ளிக்கூடங்களை விட கூடுதலான விடுமுறை நாட்கள்,  சட்டங்களின் சந்து பொந்துக்குள் வழக்கறிஞர்கள் நுழைந்து  வாய்தா வாங்குவது போன்றவற்றால் குறித்த நேரத்தில் வழக்காடிகளுக்கு நிவாரணமும், நியாயமும் கிடைக்காது என்பதை நீதிபதிகள் நன்கு தெரிந்து வைத்துள்ளதால், தற்போதைய முடக்கத்தால் கூடுதலாக வழக்காடிகள் எதுவும் இழக்கப்போவதில்லை என்ற முடிவிற்க்கு நீதிபதிகள் வந்திருக்கக்கூடும்.
ஆனால் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதால் மட்டுமே நீதிமன்றங்கள் நடத்த முடியாமல், வழக்குகள் தேங்கிவிட்டதாகவும், வழக்காடிகள் துன்பம் அடைவதாகவும் தொடர்ந்து பொய் பரப்பி வருகின்றனர் நீதிபதிகள். ஜனநாயகத்தை பற்றி வகுப்பெடுக்கும் நீதிபதிகள் நீதிமன்றங்களில் பணி புரியும் ஊழியர்களை மாண்புடன் நடத்துவதில்லை என்பது தனிக்கதை.
ஊழல்,  அதிகார முறைகேடுகள்  நிறைந்த இந்த நீதிமன்றங்களில் பல ஆண்டுகள்  விடாப்பிடியான சட்டப்போராட்டத்தின் மூலம் தங்கள் வழக்குகளில் இறுதி கட்டத்திற்கு வந்தடைந்த வழக்காடிகளின் நிலை,  நீதிமன்றங்கள் மூலம் மாதா மாதம் பராமரிப்பு பெற்று வரும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் நிலை, இழப்பீடு வழக்கில் இறுதி நிலையில் இருக்கும் வழக்குகள் இன்னும் ஏராளம்.  இந்த முடக்கத்தால் முடங்கிக் கிடப்பது பற்றி  நீதிபதிகள் என்ன கருதுகிறார்கள்?
வழக்கறிஞர்களை ஒடுக்க நினைப்பதும், ஒரு சில வழக்கறிஞர்கள் செய்யும் தவறை காரணம் காட்டி ஒட்டு மொத்த வழக்கறிஞர்களையும் குற்றவாளிகளாக சித்தரிப்பதும், வழக்காடிகளை அடிமைகளாகவே நடத்த நினைப்பதும்,
அரசு இயந்திரத்தை தன் சொந்த நலனுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பவற்றை பற்றியே எந்த நேரமும் சிந்திப்பதாக இருக்கும்  நீதிபதிகளுக்கு மக்கள் படும் துயரம் கண்ணில் தென்பட வாய்ப்பில்லை.
கீழமை நீதிமன்றங்களை பொறுத்தவரை  காணொளி விசாரணை என்பதால் நீதி மன்றங்களில் நீதிபதிகளுக்கும், நீதிமன்ற ஊழியர்களுக்கும் பொதுவாக நாள் முழுவதும் வேலை இருக்காது. இந்த நீதிமன்ற முடக்கமானது கீழமை நீதிமன்றத்தை பொறுத்தவரை  நீதிபதிகளுக்கும், நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கிடைத்திருக்கும்  ஓய்வு என்றே கூறவேண்டும். ஓய்வுடன் கூடிய, ஊதியம் கிடைப்பதால் தான்  வழக்காடிகள் நிலை  பற்றியும், வருமானமின்றி தவிக்கும் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் எழுத்தர்கள்  பற்றியும் நினைப்பதற்கு நேரமில்லாமல்  தங்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டுவிடுமோ என்று மட்டுமே நீதிபதிகளால் சிந்திக்க தோன்றுகின்றது. நீதிபதிகளிடம் நெருக்கமாக  இருப்பவர்கள் நீதிமன்ற ஊழியர்கள். வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் எப்பொழுதுமே நீதிபதிகளை
இடைவெளியுடன் அணுகும் நிலையில் தான் நீதிமன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பல பத்தாயிரத்தில் ஆரம்பித்து பல லட்சங்களைக் கட்டணமாகப் பெறும்,  சாமானியர்களால் நெருங்க இயலாத வழக்கறிஞர்களால் இந்த சூழலால் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இயலும். ஆனால் சில ஆயிரங்கள் கட்டணமாக பெறும் ஏழை, நடுத்தர மக்கள் எளிதில் அணுகக்கூடிய வழக்கறிஞர்களால் இந்த சூழலால் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியை தாங்கிப்பிடிப்பது கடும் சவாலானது.
மேலும்  உயர் நீதிமன்றங்களிலோ, கீழமை நீதிமன்றங்களிலோ அன்றாடம் நீதிமன்ற அலுவலங்களுக்குள் சென்று, எந்த சூழலிலும் பணி  செய்ய மனமின்றி பணிபுரிந்து வரும் நீதிமன்ற ஊழியர்களுடன் போராடி பணி புரிந்து (நகல் எடுப்பது, வழக்குகளை எண்ணிடுவதற்காக பார்வையிட வைப்பது உள்ளிட்ட) அதன் மூலம் தினமும் நூறு, இருநூறு, ஐநூறு என்று  வருமானம் ஈட்டி வரும் இளம் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் எழுத்தர்கள் இன்று வருமானமின்றி தவித்து வருகின்றனர்.  இளம் வழக்கறிஞராக தொழிலை துவங்கி இன்று நீதிபதிகளாக பணிபுரிந்து வரும் ஆகப்பெரும்பாலான நீதிபதிகளுக்கு ஆரம்ப காலத்தில் அந்த நாளின் டீயையும், ஒரு வேளை உணவையும் உத்தரவாதப்படுத்தியதும் மேல் குறிப்பிட்டுள்ள இந்தப் பணிதான்.
ஏழை, நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய கட்டணம் பெற்றுக்கொண்டு வழக்கு நடத்தக்கூடிய வழக்கறிஞர்கள் இந்த நெருக்கடியை சமாளிக்க இயலாமல் வழக்கறிஞர் தொழிலை கைவிட்டுவிட்டால் அதனால் ஏழை, நடுத்தர வழக்காடிகள் நீதிமன்ற படி ஏற முடியுமா?
வழக்கறிஞர் தொழில்செய்து கொண்டே வழக்கறிஞர்களால் வேறு தொழில் செய்ய தடை உள்ளது. இந்த கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி நீதிமன்ற வளாகங்களை, நீதிமன்றங்களைக் கைப்பற்றி வைத்துக்கொள்ள முயலுகின்றனர், நீதிபதிகள். நீதிமன்றங்களில் தாங்கள்தான் மன்னர்கள் என்பதை வழக்கறிஞர்களின் எதிர்ப்பு குறைவாக இருக்கும் நீதிமன்ற வளாகங்களில்  நடைமுறைபடுத்தி வருகின்றனர் நீதிபதிகள்.
பொதுவாகவே நீதிபதிகளுக்கு எதிராக பொதுமக்களோ, அரசியல் கட்சிகளோ தங்கள் எதிர்ப்பை நேரடியாக தெரிவிப்பது இல்லை.
பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கைகளில் கறை படிந்துள்ளதாலும் நீதிபதிகளின் தயவு அவர்களுக்கு  தேவைபடுவதாலும், அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் மக்கள் எதிர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள, மக்கள் விரோத திட்டங்களை நீதிமன்ற உத்தரவுகள் மூலம் நிறைவேற்றிக் கொள்வதாலும் அரசும், அரசியல் கட்சிகளும் நீதிமன்றத்தை பற்றி வாய் திறப்பதில்லை.
நீதிமன்றத்தை விமர்சிக்கும் தனிநபர்கள் நீதிமன்ற அவமதிப்பு என்று மிரட்டி அச்சுறுத்தப்படுகின்றனர். நீதிபதிகளை எதிர்த்து தைரியமாக போராடுவது வழக்கறிஞர் சங்கங்கள் மட்டுமே, வழக்கறிஞர்கள் போராடுவதாலேயே நீதி பரிபாலனம் கெட்டுவிட்டதாக நீண்டகாலமாக மிகப்பெரிய பொய்யை பிரச்சாரம் செய்துவருகின்றனர் நீதிபதிகள்.
வழக்கறிஞர்களாலேயே நீதி பரிபாலனம் கெட்டுவிட்டதாக கூறிவரும் நீதிபதிகள் சக நீதிபதிகள் செய்யும் ஊழல், லஞ்சம், பாலியல் குற்றங்கள் பற்றி வாய்திறப்பதில்லை.   இந்தியவிலேயே முதல் முறையாக தமிழக வழக்கறிஞர்கள் சுமார் 500 பேர் மதுரையில் ஒன்று கூடி பேரணி நடத்தி மதுரை உயர்நீதி மன்ற வாசலில் ஊழல் செய்த நீதிபதிகள் பெயர்களை வெளியிட்டு, ஊழல் நீதிபதிகள் மீது தமிழக ஆளுனரிடம் புகார் கொடுத்த வரலாறு தமிழக வழக்கறிஞர்களுக்கு உண்டு.
இந்த வரலாற்று நிகழ்விற்கு முன்னணியாக இருந்த  வழக்கறிஞர்களை குறிவைத்து இந்திய வழக்கறிஞர் குழுமத்தையும், தமிழக வழக்கறிஞர் குழுமத்தையும் கைப்பாவையாக பயன்படுத்தி சதி செய்து அவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்து  நீதிபதிகள் ‘சிஸ்டத்தை’ காப்பாற்றியதை எப்படி மறக்க முடியும்?
வழக்கறிஞர் குழுமத்தை தங்கள் கைப்பாவையாக பயன்படுத்தி சட்டத் திருத்தத்தின் மூலம் வழக்கறிஞர்களை தங்கள் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர  நீதிபதிகள்  எடுத்த முயற்சி நீண்ட போராட்டத்திற்கு பின்பு முறியடிக்கப்பட்டது.
இன்றும் வழக்கறிஞர் குழுமத்தை பயன்படுத்தி தவறு செய்யும் வழக்கறிஞர்களை தண்டிப்பது என்ற பெயரில் வழக்கறிஞர் சங்கங்களை அச்சுறுத்தும் வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர், உயர்நீதிமன்ற நீதிபதிகள்.
கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் வழக்கறிஞர்களை சமூக விரோதிகளாக சித்தரிக்கும் நீதிபதிகளுக்கு குறிப்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு, வழக்கறிஞர்களை தங்கள் கட்டிப்பாட்டிற்குள் வைத்து ரசிப்பதற்க்கு கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பம் கொரோனா. இந்த சந்தர்ப்பத்தை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுத்து விடுவார்களா என்ன?
நீதிமன்றம் அத்தியாவசியமாக இயங்க வேண்டிய ஒன்று என்பதை நீதிபதிகள் உணர வேண்டுமானால் பொதுமக்கள் ஏனைய அரசு அதிகாரிகளுக்கு எதிராக பேசுவது, போராடுவது போல நீதிமன்றங்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு என்ற பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சாமல் வெளிப்படையாக பேசவேண்டும், போராட வேண்டும்.
அரசையும், அரசு அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் எதிர்த்து பேசும் போதும், போராடும் போதும் எதிர்த்து பேசுபவர்கள் மீதும், போராடுபவர்கள் மீதும் வழக்கு தொடுக்கப்படுவதில்லையா? சிறையில் அடைக்கப்படுவதில்லையா?
படிக்க :
13 வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய் !
வழக்கறிஞர் போராட்டத்துக்கு ஆதரவாக மதுரை PRPC !
இந்த அடக்குமுறைகளுக்கெல்லாம் அஞ்சாமல்தானே தினமும் நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன?
நீதிமன்றங்கள் மக்களுக்கானது, நீதிபதிகளுக்கானது அல்ல என்பதை !
நீதிபதிகள் மக்களுக்கு பதில் சொல்ல கடமைபட்டவர்கள் என்பதை !
லஞ்சம், பாலியல் புகார் உள்ளிட்ட, நீதிபதிகள் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகள் மீதும் விசாரணை நடைபெறும் முறை, விசாரணையின் முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதை!
நீதிமன்றத்தில், வழக்காடிகளை நீதிபதிகள் அடிமைகளாக நடத்தக்கூடாது, ஒருமையில் பேசக்கூடாது என்பதை!
நீதிபதிகள் மன்னர்களுமல்ல.. மக்கள் அடிமைகளுமல்ல என்பதை!
– நீதிபதிகளுக்கு அவ்வப்போது மக்கள் உணர்த்தத் தவறியதன் விளைவு இன்று நீதிமன்றத்தை தங்கள் விருப்பம்போல் அடைத்து வைக்கலாம், முடக்கி வைக்கலாம் என்ற நிலைக்கு வந்தடைந்திருக்கிறார்கள் நீதிபதிகள்!
சுதந்திரமான நீதித்துறை என்பதற்காக மக்களிடமிருந்து அன்னியப்படுத்தப்பட்ட நீதிமன்றங்களால் மக்களுக்கு விசுவாசமாக செயல்பட முடிகின்றதா? இது  சர்வாதிகாரம் இல்லையா? இந்த, நீதிமன்ற நடவடிக்கையில் ஜனநாயகத்தின் கூறுகள் கண்ணில் தென்படுகின்றதா?
எனவே உடனடியாக நீதிமன்றத்தை திறக்க போராடுவோம், அதன் வழியாக நீதிமன்ற சர்வாதிகாரத்திற்க்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.

1 மறுமொழி

  1. வழக்கறிஞர்கள் your honour, my lord என்று சொல்லாமல் sir என்று சொல்லாதவரை, நீதிமன்றங்களில் மாற்றம் காண்பது சிரமமே. பஞ்சாப் மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் வழக்கறிஞர்களுக்கு sir என்றே சொல்ல அறிவுறித்தி இருக்கிறார் என்பதை ஊடக வாயிலாக அறிய முடிந்தது. நீதிமன்றங்களை நிர்வகிக்கும் central law minister திருத்தங்களை ஏற்படுத்தலாம். ஆனால் அதனால் அவருக்கென்ன லாபம் என்றுதான் பார்ப்பார். முயற்சி செய்யலாம்..!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க