2022-2023-ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் இந்தியாவின் பழங்குடி மக்களின் தேவைகளுக்கு துரோகம் இழைத்துள்ளதாக ஆதிவாசி அதிகார் ராஷ்ட்ரிய மஞ்ச் கூறுகிறது. பழங்குடி மக்களின் பட்டினி, வேலையின்மை, வாழ்வாதாரம் இழப்பு போன்ற பிரச்சினைகள் எதுவும் இந்த பட்ஜெட் தடுக்கப் போவதில்லை.
உலகிலேயே மிகவும் ஏற்றத்தாழ்வான நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற சாதனையை இந்த பட்ஜெட் மேலும் தீவிரப்படுத்தும் என்பதற்கு பழங்குடியின மக்களுக்கான நிதிஒதுக்கீடு ஓர் உதாரணம்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி, மக்கள் தொகையில் எஸ்.சி. – எஸ்.டி. மக்களின் சதவீதத்திலிருந்து பட்ஜெட் நிதியை அரசு ஒதுக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பின் பழைய மதிப்பீடுகளான 2011-ம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் படி மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் 8.6 சதவீதம் பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், வெறும் 2.26 சதவீதத்தை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
படிக்க :
சத்தீஸ்கர் : போலீசு முகாமிற்கு எதிராக பழங்குடி கிராமங்கள் போராட்டம் !
அசாம் : 70 ஆண்டுகளாக வீடு, சாலை, மின்சாரம் இல்லாமல் வாழும் பழங்குடிகள் !
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.7,484 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த ஒதுக்கீட்டில் 6,126 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. அதாவது பழங்குடியினர் அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் 19 சதவீதம் செலவிடப்படவில்லை. ஆன்லைன் கல்வியைப் பெற முடியாத நிலையில் இருப்பதால், பழங்குடி மாணவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட நேரத்தில்கூட கல்வி உதவித்தொகை ரூ.292 கோடி வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சியூட்டும் செய்தி. பழங்குடி குழந்தைகளுக்காக ஏக்லவ்யா குடியிருப்பு பள்ளிகள் அமைக்க ஒதுக்கப்பட்ட ரூ.400 கோடி செலவிடப்படவில்லை.
பழங்குடி மாணவர்களின் மதிய உணவுக்காக ரூ.300 கோடி செலவிடப்படவில்லை. பழங்குடி குழந்தைகள் கொரோனா காலங்களில் பட்டினியால் இறந்த போதும் கூட ஒதுக்கப்பட்ட தொகை செலவிடப்படவில்லை. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பழங்குடி மாணவர்களுக்கான பல்கலைக் கழகங்களுக்கு வெறும் ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டது. அதிலும் உண்மையில் ரூ.47 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. தற்போதைய பட்ஜெட்டில் கூட ரூ. 1.50 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதாரத்தைப் பொறுத்தவரை சிறு வன விளைபொருட்கள் கொள்முதல் செய்யாமல் பழங்குடி மக்களை வஞ்சிக்கிறது அரசு. ஒவ்வொரு ஆண்டும் பழங்குடி மக்களுக்கான நிதி குறைக்கப்படும் போதும், ஒதுக்கப்படும் கொஞ்ச நெஞ்ச நிதியும் கூட முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை என்பதுதான் வேதனை தரும் செய்தி.
குறிப்பான, இந்த பட்ஜெட் சமூக மானியங்கள், உணவு, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, விவசாயம், உரங்கள் போன்றவற்றுக்கான செலவினங்களைக் குறைத்துள்ளது. உணவு மானியத்தில் ரூ.80,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 28 சதவீதத்திலிருந்து (MNREGA – தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், 2005-க்கான நிதி) 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செலவழிக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் இச்சதவீதம் ரூ.25,000 கோடி குறைவாகும். இந்த மானிய வெட்டுகளால் கிராமப்புற ஏழைகளின் அனைத்து பிரிவினரும் மோசமாகப் பாதிக்கப்படும் அதே வேளையில் பழங்குடி மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.
பழங்குடி மக்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 10 கோடி டன் உணவு தானியங்கள் கையிருப்பில் அரசு குடோன்கள் நிரம்பி வழியும் நேரத்தில் உணவு மானியங்கள் வெட்டப்படுவது பேரழிவை ஏற்படுத்தும்; பசி, பட்டினியை மேலும் தீவிரப்படுத்தவே வழிவகுக்கும்.
படிக்க :
சத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் !
“கொரானா ஜிஹாத்” சங்கிகளின் பொய்ப் பிரச்சாரம் – பஞ்சாப் குஜ்ஜார் பழங்குடியின முசுலீம்கள் மீது தாக்குதல் !
MNREGA-ஐ பொறுத்தவரை அதன் தொழிலாளர்கள் 20 சதவீதம் பேர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் – மக்கள் தொகையில் அவர்கள் பங்கு இருமடங்கு அதிகம் – குறிப்பாக பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் கொரோனா பெருந்தொற்று காலங்களில் தேவையான சுகாதார உள்கட்டமைப்பை கூட மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை மேம்படுத்தவும், பணக்காரர்களை மேலும், பணக்காரர்களாக மாற்றவுமே இந்த பட்ஜெட் உதவி புரியும். இந்த பட்ஜெட்டில் ஏழைகளுக்கு இடமில்லை. கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளின் கொடிய விளைவுகளை ஏற்கனவே அனுபவித்து வரும் பழங்குடி மக்களுக்கு இந்த பட்ஜெட் நிதிச்சுமையை அதிகரித்திருப்பதோடு, அவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியையும் வெட்டிச் சுருக்கியுள்ளது.
வினவு செய்திப் பிரிவு
சந்துரு
செய்தி ஆதாரம் : Countercurrents

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க