மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி., அம்பானி - அதானி போன்ற நச்சுப் பாம்புகளையும் ஒழித்துக்கட்ட கம்யூனிச இலட்சியத்தை உயர்த்திப் பிடித்து வர்க்கப் போராட்டத்தை  முன்னெடுத்துச் செல்லும் தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்துப் போராட வேண்டும்.

28.01.2022

மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

1. பற்றிப்படரும் காவி – கார்ப்பரேட் பாசிச சூழலில், முதலாளித்துவ முறைகளில் இருந்து மீட்டு மார்க்சிய – லெனினிய விதிப்படி செயல்படும் அமைப்பாகவும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் என்ற கொள்கையை முன்வைத்து அதற்கேற்ற அமைப்பு முறை – விதிகள், கொடி மாற்றம் ஆகியவற்றை வகுத்து தன்னை ஒரு கம்யூனிச அமைப்பாக மக்கள் அதிகாரம் பிரகடனப்படுத்திக் கொள்வதை மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வாழ்த்தி வரவேற்கிறது.
2. வேளாண் திருத்தச்சட்டங்களை கொண்டு வந்த பாசிச மோடி – அமித்ஷா கும்பலுக்கு எதிராக இந்திய விவசாயிகள் கடந்த ஓராண்டாக நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தில் கடும் குளிலும், வெயிலிலும், பனியிலும், கார் ஏற்றியும் கொல்லப்பட்ட 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மக்கள் அதிகாரத்தின் இம்மாநாடு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.
3. மக்கள் அதிகாரம் அமைப்பில் கடந்த ஓராண்டில் இறந்த தோழர்களுக்கு மக்கள் அதிகாரத்தின் இம்மாநாடு சிவப்பஞ்சலியை செலுத்துகிறது.
படிக்க :
மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெல்க! | தோழர் ஆ.கா.சிவா
மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
4. 2020-ம் ஆண்டு மக்கள் அதிகாரம் அமைப்பில் சீர்குலைவு சக்திகளால் உருவாக்கப்பட்ட சதிகளையும் துரோகத்தையும் முறியடித்து சீர்குலைவுவாதிகள், சதிகாரர்கள், முதலாளித்துவ சக்திகளை வெளியேற்றியதை வரவேற்று அங்கீகரிப்பதுடன் அமைப்பை பாதுகாக்க பாடுபட்ட தோழர்கள் அனைவரையும் மக்கள் அதிகாரம் முதலாவது இம்மாநாடு வாழ்த்துகிறது.
5. மண்டலங்கள், வட்டங்கள், கிளைகள், மாநில பொதுக்குழு, மாநில செயற்குழு உறுப்பினர்கள் என புதிதாக ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அனைவரையும் மக்கள் அதிகாரம் இம்மாநில மாநாடு வாழ்த்துகிறது.
6. தற்போது நமது நாட்டில் அரங்கேறி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசமானது அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற குஜராத்தி, மார்வாடி, இராஜஸ்தானி, பார்ப்பன பனியா சிந்தி கார்ப்பரேட் கும்பலின் கொள்ளையை அரங்கேற்றவும் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை மீண்டும் அடிமைப்படுத்துவதையும் நூறு ஆண்டுக்கால கொடிய பயங்கரவாத பாரம்பரியம் கொண்ட ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன சங்க பரிவார கும்பலின் பார்ப்பன சனாதன இந்து ராஷ்டிரத்தை நிறுவுவதையும் நோக்கமாக கொண்டு சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத வழியில் கொண்டு வருகின்ற நவீன பாசிசம் என்று இந்த மாநாடு வரையறுக்கிறது.
7. மோடி – அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.  தலைமையிலான பாசிசக் கும்பலானது, ஆகமிகமோசமான, படு பிற்போக்கான, ஆகமிக ஆரிய பார்ப்பன இனவெறியும் பகிரங்கமான பயங்கரவாதத் தன்மை கொண்ட மத, சாதிய ஒடுக்குமுறையும் இன, மொழி ஒடுக்குமுறையும் கொண்ட பாசிசத்தை நிறுவ முயல்கிறது. இந்த காவி – கார்ப்பரேட் பாசிச சக்திகளின் வர்க்க உள்ளடக்கத்தையும் பார்ப்பனிய சித்தாந்தத்தின் தன்மையையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, மக்களை திரட்டி இதனை வீழ்த்தும் பணியானது நம்முன்னுள்ள கடமைகளில் முதன்மையான அரசியல் கடமையாகும் என்பதை இம்மாநாடு வரையறுக்கிறது.
8. காவி – கார்ப்பரேட் பாசிச சக்திகள் அனைத்து அரசுத்துறைகளிலும் ஊடுருவி தனக்கான ஆட்சியை நிறுவுவதை நோக்கி படுவேகமாக செல்கின்றன. இந்த அரசமைப்புக்கு அப்பால் பல இந்து மதவெறி அமைப்புக்கள் மூலம் லட்சக்கணக்கானோரை ஆயுதபாணியாக்கியுள்ளன. ஆகவே, காவி – கார்ப்பரேட் பாசிசத்தை தேர்தல் மூலமாக வீழ்த்த முடியாது மக்களை திரட்டியே வீழ்த்த முடியும் என்பதால் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியையும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை கட்டியமைப்பதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
9. ஊபா, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம், பொதுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற கருப்புச் சட்டங்கள் மூலம் சிறுபான்மை மக்கள் – தலித் மக்கள் – கம்யூனிஸ்டுகள் – ஜனநாயக சக்திகள் கைது செய்யப்படுவதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுவதன் மூலம் கருப்புச் சட்டங்களை ஒழித்துக்கட்டுவதற்காக மக்களை அணிதிரட்ட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
10. சாதிவெறி, மதவெறி சக்திகள் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்துக்கு வருவதை தடுத்து நிறுத்தும் வகையில் அவர்களின் அமைப்புக்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மக்களைத் திரட்ட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

11. அனைத்து தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து மத, இன, மொழி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மக்களை அணி திரட்ட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
12. மக்களுக்கும் நாட்டுக்கும் எதிராக குற்றம் புரிந்த அனைத்து மக்கள் விரோதிகளையும் மதவெறியர்களையும் பகிரங்கமாக விசாரித்து உரிய தண்டனையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
13. மறுகாலனியாக்கக் கொள்கைகளால் முதன்மையாகப் பாதிக்கப்படும் வர்க்கங்களான, தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு – குறு தொழில் நிறுவனங்கள், சிறு – குறு வணிகர்கள் ஆகியோரின் பொருளாதார, வர்க்க நலன்களுக்கான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.
14. விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், மீனவர்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்வதற்காகவும், அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் போராட வேண்டும் என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.
15. கல்வி நிலையங்களில் கொண்டு வரப்படும் புதியக் கல்விக் கொள்கை உள்ளிட்ட மறுகாலனியாக்க மற்றும் பார்ப்பனியக் கொள்கைகளை ஒழித்துக்கட்டப் போராட வேண்டும் என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.
16. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க மக்கள் உடனடியாக களத்தில் இறங்கிப் போராட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு  அடிப்படையான நிலப்பிரபுத்துவ பிற்போக்கு பண்பாட்டையும் ஏகாதிபத்திய சீரழிவுப் பண்பாட்டையும் ஒழித்துக்கட்ட பகுத்தறிவு, சமதர்மக் கருத்துக்களை பரப்ப வேண்டும் என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.
17. புத்தர், சித்தர்கள், ஆசீவகர்கள் போன்றோரின் பார்ப்பனிய எதிர்ப்பு பாரம்பரியமிக்க இம்மண்ணில் தோன்றிய வள்ளலார், நாராயண குரு, ஐயா வைகுந்தர், அயோத்திதாசர், ஜோதிபா பூலே, பெரியார், அம்பேத்கர் போன்ற சமூக சீர்திருத்தத் தலைவர்களின் கருத்துக்களை பார்ப்பனியத்துக்கு எதிரான போரில் மக்களிடம் உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.
படிக்க :
மக்கள் அதிகாரம் தஞ்சை மண்டலத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!
மக்கள் அதிகாரம் – முதலாவது கடலூர் மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
18. ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி., அம்பானி – அதானி போன்ற நச்சுப் பாம்புகளையும் ஒழித்துக்கட்ட கம்யூனிச இலட்சியத்தை உயர்த்திப் பிடித்து வர்க்கப் போராட்டத்தை  முன்னெடுத்துச் செல்லும் தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்துப் போராட வேண்டும் என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.
19. உலக மேலாதிக்க வெறிப்பிடித்த அமெரிக்காவையும் மறுகாலனியாக்கத்தையும் முறியடிக்க சர்வதேச பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து போராட வேண்டும் என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.
20. உழைக்கும் மக்கள், ஒடுக்கப்படும் நாடுகள், தேசங்கள் மீதான அனைத்து வகை அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராட வேண்டும்; புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களை அணிதிரட்ட வேண்டும் என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.
மக்கள் அதிகாரம்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

2 மறுமொழிகள்

  1. மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றதற்கு வாழ்த்துக்கள். சில மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. எனினும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதற்கு வாழ்த்துக்கள். 🌷

  2. teermanam een. 11. pirinthupogum urimiyudan koodiya – enru sollirukirkala appadi enral enna artham. pirivinai-ia ukkivikirirkala? suyanalavathikal pirivinai kattal atharippirkala?

    teermanam een. 18 . tholilarvarkathudan enainthu enru sollierukkirkale – edathu, valathu sari iyakkathudan enainthu valai seiverkala?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க