டந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி காலையில் புத்தாண்டு வாழ்த்து செய்திகளை எதிர்நோக்கி தொலைபேசியை எடுத்த முசுலீம் பெண்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அவர்களை ‘புல்லி பாய்’ என்ற செயலியின் மூலம் ஏலம் விடும் செய்தி வந்தடைந்தது.
“இன்றைய நாளுக்கான ஏலம்” என்ற பெயரில், நூற்றுக்கும் மேற்பட்ட முசுலீம் பெண்களின் புகைப்படங்கள், அவர்களின் சமூக வலைதளங்களில் இருந்தே எடுத்து ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்டிருந்தது. முசுலீம் மக்களை உளவியல் ரீதியில் தாக்கித் துன்புறுத்துவதை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்ட இதில், 16 வயது குழந்தை முதல் JNU பல்கலைக்கழகத்திலிருந்து காணாமல் போன தன் மகன் நஜீப் அகமதுக்காக நீதி கேட்டு போராடிவரும் 65 வயதான தாய் வரை அனைவரின் புகைப்படங்களும் ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்டிருந்தது. இவற்றில், அவர்களின் தனிப்பட்ட விவரங்களும் இணைக்கப்பட்டிருந்தது.
இதுபோன்ற பதிவுகள், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் “இராமர் கோயில் கட்டுவதை எதிர்க்கும் பெண்கள்” என்ற தலைப்பில் விளம்பரமாக்கப்பட்டன. இந்த இணைய துன்புறுத்தலில், முக்கியமாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிஸ்டுகளின் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் முசுலீம் வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களே குறிவைத்து தாக்கப்பட்டிருந்தனர்.
படிக்க :
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை || மக்கள் அதிகாரம் அறிக்கை
உக்ரைன் : ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர் | தோழர் சுரேசு சக்தி முருகன்
மண்டை முழுவதும் காவி வெறி தலைக்கேறிய சில கேடுகெட்ட கும்பல்கள், சமூக வலைதளங்களை முசுலீம் வெறுப்பு ஆயுதமாக பயன்படுத்தும் – இதுபோன்ற ஏலம் விடும் முறைக்கு புல்லிபாய் செயலி புதிதல்ல. இது மூன்றாவது முறை.
முதலாவதாக, கடந்த ஆண்டு மே 13-ம் தேதி, இஸ்லாமியர்களின் ஈகை திருநாளன்று ‘லிபரல் டாகே’ என்ற யூடியூப் சேனலில் ஒரு காணொளி பரப்பப்பட்டது. “ஈத் சிறப்பு” என்ற பெயரில் அச்சேனலின் நேரடி ஒளிபரப்பில், பாகிஸ்தான் மற்றும் நம் நாட்டு முசுலீம் பெண்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்தி, பாலியல்ரீதியாக துன்புறுத்தும் வகையில் பேசி ஏலம் விட்ட சகிக்கமுடியாத கொடூரம் அரங்கேறியது. அக்காணொலி நீக்கப்படுவதற்கே பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் கொடுக்கப்பட வேண்டியிருந்தது.
இரண்டாவது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தற்போது பேசப்படும் “புல்லி பாய்” என்ற செயலியைப் போல “சுல்லி டீல்ஸ்” என்ற செயலி வெளிவந்து பெரும் சர்ச்சையாகியது. இதில் எண்பதுக்கும் மேற்பட்ட முசுலீம் பெண்களின் புகைப்படங்கள் ஏலம் விடப்பட்டிருந்தது..
இந்த ‘சுல்லி’ மற்றும் ‘புல்லி’ என்ற பெயர்கள் சங்க பரிவாரத்தினர், முசுலீம் பெண்களை இழிவாக பேச பயன்படுத்தும் ‘முல்லி’ என்ற சொல்லின் மாறுபாடாகும். “சுல்லி டீல்ஸ்“ செயலி வெளிவந்தபோதே பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக யாரும் கைதுசெய்யப்படவில்லை; வழக்கு விசாரணையே ஊற்றி மூடப்பட்டது.
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதிகள் 2021-ஐ கொண்டுவருவதற்காக, “இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் பெண்கள், சிறுமிகளை ஆபாசமாக சித்தரிக்கும் படங்கள், காணொளிகளை பகிர்வது அதிகரித்துவிட்டது. அவர்களை ஒடுக்க வேண்டும்” – என்றெல்லாம் மோடி அரசு கூறிய காரணங்கள் எத்தகைய அண்டப் புளுகு என்பதை இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.
000
தற்போதைய புல்லி பாய் விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புல்லி பாய் செயலியைக் கண்டித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என நாடு முழுவதிலிருந்து கிட்டத்தட்ட 4,500 பேர் கையெழுத்திட்டு ஒரு பகிரங்க கடிதத்தை எழுதியுள்ளார்கள்.
இவ்வாறு பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனங்களும் புகார்களும் வந்ததையடுத்து வேறு வழியின்றி காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இதுதொடர்பாக, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் பிஷ்னோய், பெங்களூருவை சேர்ந்த விஷால் குமார், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மயங்க் ராவல், ஸ்வேதா சிங் மற்றும் இந்தூரை சேர்ந்த உம்கரேஷ்வர் தாக்கூர் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த “புல்லி பாய்” என்ற செயலி கிட்ஹப் (GitHub) என்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தளத்தில் வெளியிடப்பட்டது. கிட்ஹப் என்பது உலகின் மிகப்பெரிய திறந்தவெளி பயன்பாடுகளை உருவாக்கும் தளமாகும். யார் வேண்டுமானாலும் இந்த தளத்தில் எந்த மென்பொருள் குறியீட்டையும் பதிவேற்ற முடியும். இதற்குமுன் வெளிவந்த சுல்லி டீல்ஸ் என்ற செயலியும் இந்த தளத்தில் வடிவமைக்கப்பட்டதுதான்.
இதில் சுல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கிய உம்கரேஷ்வர் தாக்கூரும் புல்லி பாய் பயன்பாட்டை உருவாக்கிய நீரஜ் பிஷ்னோய் என்பவனும் “ட்ரேட்ஸ்”(TRADS) என்ற குழுவைச் சார்ந்தவர்கள் என்றும் அங்கிருந்துதான் முசுலீம் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஏலம் நடத்தும் யோசனை வந்தது எனவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள். மேலும் கைதான நீரஜ் பிஷ்னோய் என்பவன் தாம் செய்ததில் தவறொன்றும் இல்லை, நான் செய்தது சரியே என்று கூறியுள்ளான்.
000
புல்லி பாய் மற்றும் சுல்லி டீல்ஸ் சம்பவங்களைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இளைஞர்களிடையே “ட்ரேட்ஸ்” என்ற பெயரில் ஒரு குழு செயல்படுவது தெரிய வந்துள்ளது. ட்ரேட்ஸ் (Trads) என்பது “Traditionalists – பழமைவாதிகள்” என்பதன் சுருக்கமாகும். இவர்கள் பெரும்பாலும் இணைய வழியில், தன்னிச்சையாக செயல்படுபவர்களாக உள்ளனர்.
இவர்கள் நவ நாஜிக்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் மாற்று வலது (alternate right) என்று அழைக்கப்படும் வெள்ளை இனவெறி இயக்கங்களை முன்மாதிரியாக கொண்டு செயல்படுகிறார்கள். ஹிட்லர் யூதர்களை செய்தது போல, இஸ்லாமியர்களை வதைமுகாம்களில் அடைத்து சித்திரவதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர்கள் உயர்வானவர்கள், மற்றவர்கள் கீழானவர்கள் என்ற வர்ணாசிரம கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்; ஆண்கள் சுகிப்பதற்கான சதைப் பிண்டமாகவும் அடிமைகளாகவுமே பெண்களை பார்க்கச் சொல்லும் மனு நீதியை இந்திய அரசியலமைப்புச் சாசனமாக மாற்றவேண்டும் – என்று இவர்கள் கூறுகிறார்கள்.
இவர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துராஷ்டிரக் கனவை கொண்டிருந்தாலும் அவர்களின் சில சாத்வீக (மென்மையான) வழிமுறையை கடுமையாக விமர்சிக்கிறார்கள். இவர்களை பொறுத்தவரை முஸ்லிம்கள், தலித்துகள், சீக்கியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறையை மேலும் பகிரங்கமாக செய்யவேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த செயலியை கூட சீக்கியர்களை இழிவுபடுத்த அவர்களின் பெயர்களை பயன்படுத்திதான் உருவாக்கியுள்ளார்கள்.
சிறுபான்மையினர் மீதான ட்ரேட்ஸ் குழுவினரின் வக்கிரங்களை அவர்கள் வடிவமைத்து பரப்பிய மீம்ஸ்-களில் தெளிவாக காணமுடியும். பாலியல் வல்லுறவினால் இறந்த சிறுபான்மையின பெண் மீது சிறுநீர் கழிப்பது, தலித்துகளை கரப்பான்பூச்சிகளாக சித்தரித்து விஷவாயு மூலம் கொல்வது, முசுலீம் பெண்களை வல்லுறவு கொள்வது போன்று குரூரமான வடிவங்களில் மீம்ஸ்-களை பதிவிடுகிறார்கள். இதையெல்லாம் நகைச்சுவையாக்கி மகிழும் அளவிற்கு இவர்களுக்கு வெறி தலைக்கு ஏற்றப்பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வெறுப்பை பிரச்சாரம் செய்ததற்காக தடை செய்யப்பட்ட பல டிவிட்டர் கணக்குகள் உண்மையில் ட்ரேட்ஸ்-ஆல் நடத்தப்பட்டதாக மும்பை காவல்துறை கண்டறிந்துள்ளது. இந்த புல்லி பாய் விவகாரத்தில் கைதானவர்கள் எல்லாரும் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பார்க்கும்போது இவர்களைப் போன்றவர்கள் நாடுமுழுவதும் பரவலாக இருப்பதை உணரமுடிகிறது.
படிக்க :
புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்
குறுஞ்செய்திகள் : புல்லிபாய், டெக் ஃபாக் செயலி விவகாரம் – கூடுதல் தகவல்கள்
மேலும், இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் என்னவெனில், இத்தகைய ஈனச் செயலில் ஈடுபட்டவர்கள் 18 முதல் 22 வயது வரை உள்ளவர்கள் என்பதோடு, அனைவரும் மாணவர்கள். இதில் மும்பை போலீசால் கைதுசெய்யபட்ட ஸ்வேதா சிங் என்பவர் 18 வயதே ஆன பெண். காவி பாசிசம் இளம் தலைமுறையினரில் ஒரு பகுதியினரை தனது வலுவான படையணிகளாக கட்டி வளர்த்துவருகிறது என்பதையே இவை காட்டுகிறது.
இவர்கள் ட்ரேட்ஸ் என்ற இணையவழி குழுவினர்தான். நேரடியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை என்ற தகவல் நம்மை மேலும் திடுக்கிடச் செய்கிறது. ஏனெனில், இது காவி பாசிச கருத்துகளுக்கு உள்ள செல்வாக்கினை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.
அமைப்பு சாராமலேயே கூட, உலகு தழுவிய ரீதியில் பாசிச கருத்துக்கள் மீண்டும் புத்தெழுச்சி பெற்றுவருவது ஒரு போக்காக உள்ளது என்பது உண்மைதான். தற்போது தெரியவந்துள்ள ட்ரேட்ஸ் என்ற குழுவினரையுமே அப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.
எனினும், இந்திய சூழலில் இதுபோன்ற பாசிஸ்டு கருத்தாளர்கள் உருவாவதற்கான அடித்தளமாக இருப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் பன்னெடுங்கால பிரச்சாரமே என்பதோடு இணைத்துதான் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வேதம், புராணம், மனு நீதி, பகவத் கீதை, இந்திய கலாச்சாரம் என பலபல வழிகளிலும் காவி பாசிசக் கருத்துக்களை மக்களிடையே, குறிப்பாக இளம் பிஞ்சுகளிடையே (இதை புதிய கல்விக் கொள்கை செய்கிறது) திணித்துவரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் கருத்துப் பிரச்சாரத்தையும் கள நடவடிக்கைகளையும் முறியடிக்கும் போராட்டத்தினால் மட்டுமே காவி பாசிசத்தின் கருத்தியல் செல்வாக்கை வீழ்த்த முடியும்.
இதில் நாம் கவனத்தை செலுத்தாத பட்சத்தில், இளம் தலைமுறை பாசிசத்திற்கு பலியாவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்!
மதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க