உ.பி : மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றிய யோகி அரசு !

நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை மே 3-ம் தேதிக்குள் அகற்றவில்லையெனில், அனுமன் சாலிசா மசூதிகளுக்கு வெளியே அதிக ஒலியில் இசைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0
சூதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலி பெருக்கிகளை அகற்ற யோகி அரசு உத்தரவிட்டதன் காரணமாக உத்தரப்பிரதேசம் மாநிலம் முழுவதும் மசூதிகளில் பொருத்தப்பட்டிருந்த 10,923 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளது.
மாநிலத்தில் சட்ட அமலாக்கத் துறையால் அகற்றப்பட்ட இந்த ஒலிபெருக்கிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாதவை, சட்ட விரோதமானவை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினால் உரிய அனுமதியின்றி பொருத்தப்பட்டவை என்று கூறுகிறது அரசு.
“மசூதிகளிலிருந்து அங்கீகாரம் இல்லாத ஒலிபெருக்கிகளை அகற்றவும், மற்ற ஒலிபெருக்கிகளில் அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் மாநிலம் தழுவிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து மசூதிகளில் இருந்தும் எந்த பாகுபாடும் இல்லாமல் ஒலிபெருக்கிகள் அகற்றப்படுகின்றன” என்று கூடுதல் போலீசுத்துறை இயக்குநர் பிரசாந்த் குமார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
படிக்க :
♦ முதலில் ஹிஜாப் – தற்போது அசான் – அடுத்தது ?
♦ ஹிஜாப் தடை ; இதோ இந்து இராட்டிரத்துக்கு தயாராகிவிட்டது நாடு !
முதல்வர் ஆதித்யநாத் கடந்த வாரம் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில், மசூதியில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியின் சத்தம் மசூதி வளாகத்தைவிட்டு வெளியில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
ஏப்ரல் 30-ம் தேதிக்குள் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்றுவது தொடர்பாக மாவட்டங்களில் அறிக்கைகளை உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது. ஒலி மாசு (ஒழுங்குமுறை மற்றூம் கட்டுப்பாடு) விதிகள், 2000-ன் கீழ் உள்ள விதிமுறைகளையும் மக்களிடம் விளம்பரப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
“ஒலி வளாகத்திற்கு வெளியில் கேட்கக் கூடாது. உதாரணாமக ஒரு வளாகத்தில் ஐந்து ஒலிபெருக்கிகள் இருந்தால், அந்த வளாகத்தில் ஒலி மட்டுப்படுத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்ய மூன்று ஒலிபெருக்கிகள் வரை அகற்றப்படலாம்” என்று உத்தரவை அமல்படுத்துவதில் பின்பற்றப்படும் செயல்முறை குறித்து குமார் கூறினார்.
***
இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில், நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஏப்ரல் மாத தொடக்கத்தில் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை மே 3-ம் தேதிக்குள் அகற்றப்பட வேண்டும் இல்லையெனில், அனுமன் சாலிசா, மசூதிகளுக்கு வெளியே அதிக ஒலியில் இசைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உயர்நீதிமன்றங்கள் இவ்விவகாரத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கி வருகின்றன. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதித்த உச்சநீதிமன்றம் ஆண்டுக்கு 15 நாட்களுக்கு மட்டும் பயன்படுத்த மற்றும் பண்டிகை காலங்களில் நள்ளிரவு வரை ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதிக்கலாம் என 2005-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
தற்போது ரவுடி சாமியார் யோகி அரசின் உத்தரவின் காரணமாக, லக்னோ மாவட்டங்களில் இருந்து அதிகபட்சமாக 2,395 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கோரக்பூர் (1788), வாரணாசி (1366) மற்றும் மீரட் (1204) ஆகிய எண்ணிக்கையில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளது என்று ஏப்ரல் 27 பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு போலீசு கொடுத்த தகவல் கூறுகிறது. ஒலிபெருக்கிகளின் சத்தத்தின் அளவை குறைக்கும் நடவடிக்கையில் லக்னோ மாவட்டத்தில் மட்டும் 7397 ஒலிபெருக்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பரேலி (6,257) மற்றும் மீரட் (5976) ஆகிய இடங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
படிக்க :
♦ கர்நாடகா : மாம்பழச் சந்தையில் முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரம் செய்யும் காவிக் குண்டர்கள் !
♦ ‘ஹலால் ஜிகாத்’ : முஸ்லீம்களின் மீதான காவிகளின் அடுத்தக்கட்ட தாக்குதல் !
கல்வி நிறுவனங்களின் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவதை தடை செய்து கர்நாடகத்தில் காவி அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது. அதைத்தொடர்ந்து மசூதிகளில் இசைக்கப்படும் அசான் (பாங்கு) இசைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடகத்தில் காவிக் கும்பலின் நடவடிக்கையை தொடர்ந்து தற்போது, மதவெறியாட்டங்களின் முன்னோடியாக திகழும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றிய இந்த நிகழ்வு பாசிச செயல்பாட்டில் அடுத்தக்கட்ட நகர்வு.
தன் இந்துராஷ்டிர கனவிற்காக முஸ்லீம் சிறுபான்மை மக்கள் மீது மதவெறியூட்டி கலவரங்களை தூண்டும் வேலையை அடுத்தடுத்த திட்டத்தின் மூலம் முன்னேறிக்கொண்டிருக்கிறது காவிக்கும்பல். இந்த காவி – கார்ப்பரேட் கும்பலை உழைக்கும் மக்கள் படை களத்தில் இறங்கி முறியடிப்பது மட்டுமே ஒரே தீர்வாக இருக்கமுடியும்.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க