ம.பி : பசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட இரண்டு பழங்குடியினர் !
அக்லக், பெக்லுகான் போன்றவர்கள் பசு குண்டர்களால் அடித்த கொல்லப்பட்டார்கள். தற்போது பழங்குடியின மக்களில் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளது காவிக் கும்பல்.
மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் பசுவைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் 15 – 20 பேர் கொண்ட குண்டர் படையால் தாக்குதலுக்குள்ளான இரண்டு பழக்குடியினர் மே 3-ம் தேதி உயிரிழந்ததாக போலீசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் வழக்கில் புகார்தாரரும், பாஜக ஆளும் மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸும் தாக்கியவர்கள் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
மே 2-ம் தேதி அதிகாலை 2:30 மணி முதல் 3 மணி வரை குரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிமாரியாவில் நடந்த இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இதில் ஆறு பேர் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுன் சிங் ககோடியா தலைமையிலான குழு ஜபல்பூர் – நாக்பூர் நெடுஞ்சாலையில் போராட்டத்தைத் தொடங்கியது.
“இரண்டு பழங்குடியினர் இறந்துவிட்டனர். 15-20 பேர் கொண்ட குண்டர்படை கொலை செய்யப்பட பழங்குடியினரின் வீட்டிற்குச் சென்று, அவர்கள் ஒரு பசுவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டி, அவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது இருவரும் இறந்தனர். பிரேதப் பரிசோதனை இன்னும் நடத்தப்படவில்லை” என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.கே.மரவி தெரிவித்தார்.
“குரை போலீசு நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரின் பெயர், அடையாளம் தெரிவாதவர்கள் என்று புகாரி கூறப்பட்டுள்ளதால் நாங்கள் 2-3 சந்தேகத்திற்குரிய நபர்களை காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிலிருந்து 12 கிலோ இறைச்சி இருந்தது” என்று மராவி கூறினார்.
சம்பவத்தில் காயமடைந்த புகார்தாரர் பிரஜேஷ் பாட்டி கூறுகையில், சாகர் பகுதியைச் சேர்ந்த சம்பத் பாட்டி மற்றும் சிமாரியாவைச் சேர்ந்த தன்சா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தபோது குண்டர் படை தடிகளால் இறந்த இருவரை தாக்கியதாகவும், அவரும் தாக்கப்பட்டதாகவும் கூறினார்.
இந்த தாக்குதல் மற்றும் கொலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏ ககோடியா, தாக்குதல் நடத்தியவர்கள் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் என்று கூறி அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றார்.
பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களில் மாநிலங்களில் மத்தியப்பிரதேசம் முதலிடத்தில் இருப்பதாக என்.சி.ஆர்.பி (தேசிய குற்ற ஆவணக் காப்பகம்) தரவு காட்டுகிறது என்று முன்னாள் முதல்வர் கமல்நாத் கூறினார்.
பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் பஜரங் தள் உள்ளிட்ட இந்துமதவெறி அமைப்புகள் தங்களில் குண்டர் படை கொண்டு மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள், மாட்டை வெட்டினார்கள் என்று சந்தேகத்தின் பெயரில் அக்லக், பெக்லுகான் போன்றவர்கள் அடித்த கொல்லப்பட்டார்கள். தற்போது சிறுபான்மை பழங்குடியின மக்களில் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளது காவிக்கும்பல்.
பசு புனிதம் என்று கூறி, மனிதர்களை கொலை செய்யும் இந்த காவி பயங்கரவாதிகளை, உழைக்கும் மக்கள் ஒன்றியணைந்து வீழ்த்தாத வரை, முஸ்லீம், கிருத்துவ சிறுபான்மை மக்களும், பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களும் இவர்களால் கொலை செய்யப்படுவதை தடுக்கு முடியாது.