ந்தியாவில் உள்ள பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள், பாண்டியர்கள் – சோழர்கள் போன்ற பல பேரரசுகளை புறக்கணித்து, முகலாயர்களின் வரலாற்றை மட்டுமே பதிவு செய்ய முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 10 அன்று தெரிவித்தார்.
“நான் வரலாற்றாசிரியர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். எங்களிடம் பல பேரரசுகள் உள்ளன. ஆனால், வரலாற்றாசிரியர்கள் முகலாயர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி அவர்களைப் பற்றியே அதிகம் எழுதியுள்ளனர். பாண்டியப் பேரரசு 800 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அஹோம் பேரரசு 650 ஆண்டுகள் அஸ்ஸாமை ஆண்டது. பல்லவப் பேரரசு 600 ஆண்டுகள் ஆட்சி செய்தது. சோழர்கள் 600 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்” என்றார்.
“மௌரியர்கள் முழு நாட்டையும் – ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை 550 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். சத்வஹனர்கள் 500 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். குப்தர்கள் 400 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் மற்றும் (குப்த பேரரசர்) சமுத்திரகுப்தர் முதல் முறையாக ஐக்கிய இந்தியாவை பார்வையிட்டு முழு நாட்டிலும் ஒரு பேரரசை நிறுவினார். ஆனால் அவற்றைப் பற்றிய குறிப்புப் புத்தகம் இல்லை” என்றார்.
படிக்க :
♦ கர்நாடகா : 10-ம் வகுப்பு பாடத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஹெட்கேவாரை புகுத்தும் காவிகள் !
♦ பல்கலை பாடத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் நூல்களை அனுமதிப்பது ஜனநாயகமா ?
இந்தப் பேரரசுகளைப் பற்றி குறிப்புப் புத்தகங்கள் எழுதப்பட வேண்டும் என்றும், அவை எழுதப்பட்டால், தவறு என்று நாங்கள் நம்பும் வரலாறு படிப்படியாக மறைந்து உண்மை வெளிவரும் என்றும் உள்துறை அமைச்சர் கூறினார்.
வரலாறு என்பது வெற்றி தோல்வியின் அடிப்படையில் எழுதப்படவில்லை என்றும், எந்த ஒரு நிகழ்வின் முடிவின் அடிப்படையில் எழுதப்பட்டது என்றும் ஷா கூறினார். “வரலாற்றை அதன் உண்மையான வடிவத்தில் முன்வைக்க சமூகம் முன்முயற்சி எடுக்க வேண்டும். உண்மையை எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது. நாங்கள் இப்போது சுதந்திரமாக இருக்கிறோம். நம் வரலாற்றை நாமே எழுதலாம்” என்றார்.
மத்திய உள்துறை அமைச்சரின் வரலாற்றை மாற்றி எழுதுவது குறித்த கருத்துக்கள், கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தின் “காவிமயமாக்கல்” என்ற அடிப்படையில் வெளிபடுகிறது.
மாவீரன் பகத்சிங்
உதாரணமாக, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கர்நாடக அரசு 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடப்புத்தகங்களையும், 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான கன்னட மொழி பாடப்புத்தகங்களையும் திருத்தியுள்ளது. புரட்சிகர மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங், மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தான், லிங்காயத் சமூக சீர்திருத்தவாதி பசவண்ணா, திராவிட இயக்க முன்னோடி பெரியார் மற்றும் சீர்திருத்தவாதி நாராயண குரு ஆகியோர் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பண்டைய இந்தியா பற்றிய ஆர்.எஸ்.சர்மாவின் புத்தகமும், இடைக்கால இந்தியா குறித்த இர்ஃபான் ஹபீப்பின் புத்தகமும் கைவிடப்பட்டன. இருப்பினும், அதிகம் அறியப்படாத சங்க பரிவார சார்புடைய ஆசிரியர்களின் புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவாரின் உரை 10-ம் வகுப்பு திருத்தப்பட்ட கன்னட பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம், குஜராத் அரசு 2022-2023-ம் கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பகவத் கீதையை பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்ற முடிவு செய்தது.
படிக்க :
♦ சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து ஜனநாயகம், பன்மைத்துவம் மதச்சார்பின்மை உள்ளிட்ட பகுதிகள் நீக்கம்!
♦ உத்தரகாண்ட் : பள்ளி பாடத்திட்டத்தில் புகுத்தப்படும் பகவத் கீதை !
உண்மை வரலாறுகளை காவிமயமாக்குவதற்கு அமித்ஷா அறைகூவல் விடுக்கிறார். வீரம், தியாகம், பகுத்தறிவு போன்றவையெல்லாம் கோழைகளுக்கும், காவி பாசிஸ்டுகளுக்கு கசக்கதானே செய்யும். பள்ளி – கல்லூரி பாடப்புத்தகங்களில் புராண குப்பைகளை, இந்து மதவெறி தலைவர்களை திணிப்பதன் மூலம், மாணவர்களை இந்து மதவெறியார்களாக மாற்ற துடிக்கிறது காவிக்கும்பல்.
அமித்ஷாவின் இந்த வரலாற்றை காவிமயமாக்கும் மிரட்டலை, வரலாற்று ஆசிரியர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். ஆரியர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இந்திய வரலாற்று முடிச்சுகளுக்குள் எப்படி தங்களை இணைத்துக்கொண்டார்கள்? என்பதை எல்லாம் வரலாற்று ஆய்வுகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது.
உண்மை வரலாற்றை அழித்து அறிவியலுக்கு எதிரான புராணக் குப்பைகளை, சாதிய – மத வருணாசிரம குப்பைகளை, காவி – கார்ப்பரேட் மோடி அரசு, பள்ளி – கல்லூரி பாடத்திட்டங்களில் திணிப்பதை, ஆசிரியர்கள் – பெற்றோர்கள் – மாணவர்கள் – வரலாற்று ஆய்வாளர்கள் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து முறியடிப்போம்.

காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க