அசாம் இயற்கை பேரிடர்: வீடிழந்து 30 ஆண்டுகளாக வாடும்(போராடும்) கிராமம் – அரசின் பாராமுகம்!

இயற்கை சீற்றங்களால் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழந்த மக்களுக்கு 30 ஆண்டுகளாக எவ்வித மாற்று ஏற்பாடும் செய்யாமல் 24 குடும்பங்களுக்கு பாராமுகமாக செயல்பட்டுள்ளது அசாம் அரசு.

0

வெள்ளம், மண் அரிப்பு போன்றவற்றால் வாழ்விடத்தை இழந்து தலைக்கு மேல் கூரை அமைக்க 30 ஆண்டுகளாக நீண்ட காத்திருப்பு, நிர்வாகம் நிலம் ஒதுக்கிய பின்னரும் 24 குடும்பங்களின் போராட்டம் தொடர்கிறது.

1992-93-ல் டின்சுகியா மாவட்டத்தின் பிலோபரி போலீசு நிலையப் பகுதியில் உள்ள கோர்டோய்குரி கிராமத்தில் உள்ள தங்கோரி ஆற்றின் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் அரிப்பு காரணமாக பழங்குடி மோரன் சமூகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைத்தையும் இழந்தன. அப்போதிருந்து, அந்த 24 குடும்பங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் அரசாங்க நிலத்தில் கூடாரங்களில் வசித்து வருகின்றனர். அவர்களின் மறுவாழ்வுக்காக 30 ஆண்டுகளாக பொறுமையாக காத்திருக்கிறார்கள்.

பல ஆண்டுகால போராட்டம், அக்கறையின்மை மற்றும் விரக்தியான காத்திருப்புக்குப் பிறகு, டின்சுகியா மாவட்டத்தின் நில ஆலோசனைக் குழு இந்த ஆண்டு(2022) ஜூன் 15 அன்று அவர்களின் கிராமத்திலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள தெங்கோனி ஹுஜி கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பிகா நிலத்தை வழங்கியது.

இருப்பினும், இந்த முன்மொழியப்பட்ட அரசு நிலத்தை உள்ளூர் தொழிலதிபர் ஒருவர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அதில் தேயிலைத் தோட்டம் அமைத்துள்ளார் என்று தூம்தூமா வட்ட அதிகாரி ரணமய் பரத்வாஜ் தெரிவித்தார்.


படிக்க : அசாம் : 70 ஆண்டுகளாக வீடு, சாலை, மின்சாரம் இல்லாமல் வாழும் பழங்குடிகள் !


மண் அரிப்பினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதை அடுத்து, சட்டவிரோத தேயிலைத் தோட்டத்தை கடந்த ஜூலை மாதம் மாவட்ட நிர்வாகம் அகற்றும் பணியை மேற்கொண்டது. ஜூலை 22 அன்று, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், பரத்வாஜ், 24 குடும்பங்களுக்கும் உடைமைக் கடிதங்களை அளித்து, அரசு நிலத்தில் வீடு கட்ட அனுமதித்தார். ஆனால், அவர்களுக்கு புதிய வீடுகள் கட்ட நிர்வாகம் எவ்வித இழப்பீடும், பணமும் வழங்கவில்லை.

ஜூலை 30 அன்று, உள்ளூர் தொழிலதிபர் சுமார் 40-50 நபர்களுடன் அந்த இடத்திற்குத் திரும்பினார். அவரது தேயிலைத் தோட்டத்தில் இருந்து 24 குடும்பங்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டார்கள் என்று குடியிருப்பாளர்களில் ஒருவர் கூறினார். “நாங்கள் மீண்டும் நிலத்திற்கு திரும்பினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எங்களை மிரட்டினார்” என்று பாதிக்கப்பட்ட நபர் கூறினார்.

இதையடுத்து தூம்தூம் வட்ட அலுவலக வளாகத்தில் அனைத்து குடும்பத்தினரும் கூடாரம் அமைத்து ஒரு வாரத்துக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

“குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, அரசாங்கம் எங்களுக்கு வழங்கிய அதே நிலத்தில் உடனடியாக மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்” என்று அசோம் மோரன் சபா (AMS) உதவிப் பொதுச் செயலாளர் பிதுபன் மோரன் கூறினார்.

ஏ.எம்.எஸ் மற்றும் பிற மோரன் சமூகக் குழுக்களின் தலைமையில், ஆகஸ்ட் 8 அன்று கிராம மக்கள் எதிர்ப்பு பேரணி நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையே ஒரு கூட்டம் நடந்தது.

“தொழிலதிபர் ஆகஸ்ட் 8 அன்று இரவு கைது செய்யப்பட்டார். வட்ட அலுவலக வளாகத்தை காலி செய்யும்படி கிராம மக்களை கேட்டுக் கொண்டுள்ளோம். சுதந்திர தின விழா முடிந்ததும் அதே இடத்தில் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என உறுதியளித்துள்ளோம்” என்றார் பரத்வாஜ்.

கிராம மக்கள் உடனடியாக மறுவாழ்வு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து, வட்ட அலுவலகத்தில் இருந்து போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.


படிக்க : அசாம் : ஒரே ஆண்டில் 51 போலி என்கவுண்டர் கொலைகள் செய்த கொலைகார போலீசு !


இயற்கை சீற்றங்களால் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழந்த மக்களுக்கு 30 ஆண்டுகளாக எவ்வித மாற்று ஏற்பாடும் செய்யாமல் 24 குடும்பங்களுக்கு பாராமுகமாக செயல்பட்டுள்ளது அசாம் அரசு. இவர்களின் நீண்ட போராட்டத்தின் விளைவாக நிலம் கிடைத்தாலும் வீடுகள் கட்டித்தரவில்லை. நிலத்தை உள்ளூர் பணக்கார ரவுடிகள் அபகரித்து கொண்டபோதிலும் போராட்டத்திற்கு பிறகு நடவடிக்கை எடுத்துள்ளது போலீசு. சுதந்திர தினத்திற்கு பின்பு மறுவாழ்வு அளிக்கிறோம் என்று கூறியுள்ளதாம் டின்சுகியா மாவட்ட நிர்வாகம்.

அதிகார வர்க்கத்திடம் கெஞ்சிக்கேட்காமல் தனது உரிமைக்காக போராடுவதே உழைக்கும் மக்களுக்கு இருக்கும் ஒரே வழி! அனைத்து இயற்கை பேரிடரின் போதும் மத்திய மாநில அரசுகள் உழைக்கும் மக்களின் துயர் துடைக்க ஒருபோதும் வந்ததில்லை. வரப்போவதுமில்லை என்பதே நிதர்சனமான உண்மை!


கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க