தமிழ்ப்பேழை: உலகின் மிகப்பெரிய தமிழ் அகராதி

தற்போது நிலவும் பாசிச சூழலில், இந்தி மேலாதிக்கத்திலிருந்து தேசிய இன மொழிகளை காப்பதும், மாறுகிற சூழலுக்கு ஏற்ப அவற்றை வளர்த்தெடுப்பதும் அவசர அவசியமாகிறது.

ரே நாடு ஒரே மொழி என தனது இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்ற தீவிரமாக முயற்சித்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க காவி பாசிச கும்பல். எப்படியேனும் தமிழ் நாவில் இந்தியைத் திணித்துவிட துடிக்கிறது. அதற்காக, அரசு அலுவலர்கள் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும், தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களில் இந்திதான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும், வேலை வாய்ப்புத் தேர்வுகளிலும் இந்தி மொழி அவசியமாக்கப்பட வேண்டும், பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு இந்தி மொழி அறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும், என்று அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்ற குழு பரிந்துரைத்திருக்கிறது.

ஒரு புறம் இந்தியைத் திணிக்கிற காவி கும்பல்தான், தமிழ்நாட்டில் ஆங்கில மோகத்தால் தமிழ் அழிந்து கொண்டு வருகிறது என்றும், தமிழைக் காக்கவும் வளர்க்கவும் காசியில் தமிழ்ச் சங்கமம் நடத்துவதாகவும் நீலிக்கண்ணீர் வடிக்கிறது.


படிக்க : சமூகக் கதைப் பாடல்களும் அவை சொல்லும் வரலாறும் || நா. வானமாமலை


இத்தகைய சூழலில், இந்தி மேலாதிக்கத்திலிருந்து தேசிய இன மொழிகளை காப்பதும், மாறுகிற சூழலுக்கு ஏற்ப அவற்றை வளர்த்தெடுப்பதும் அவசர அவசியமாகிறது. அந்த வகையில் தமிழ் மொழியை வளர்த்தெடுக்கும் பணியில், கணினியில் தமிழைக் கொண்டுவருவதோடு, அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட நூல்களை தமிழ்வழியில் படிக்க முடியும் என்ற சூழலை உருவாக்கவும் வேண்டியிருக்கிறது. அவ்வாறு தமிழ் நூல்களை உருவாக்க வேண்டுமானால் துறை சார்ந்த கலைச் சொற்களுக்கு உரிய, தகுந்த பொருத்தமான கலைச் சொற்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும்.

இதைதான் பாரதிதாசன், “கைத்திறச் சித்திரங்கள்
கணிதங்கள், வான்நூற்கள்
மெய்திற நூற்கள், சிற்பம்,
விஞ்ஞானம், காவியங்கள்
வைத்துள தமிழர் நூற்கள்
வையத்தின் புதுமை என்னப்
புத்தகசாலை எங்கும்
புதுக்கு நாள் எந்நாளோ?”
என்று உலகம் முழுவதும் உள்ள புதுமைகள் – அறிவியல் வளர்ச்சிகள் அனைத்தும் தமிழில் வர வேண்டும் என்று தன் ஏக்கத்தை கவிதையாய் வெளிப்படுத்தினார்.

பாரதிதாசனின் ஏக்கத்தை தணிக்க, துறை சார்ந்த கலைச் சொற்களை தமிழ்ப்படுத்துகிற பணியை பல்வேறு துறைசார்ந்த வல்லுநர்கள் தமிழின் மீதான காதலால், தம் மொழியை வளர்த்தெடுக்க வேண்டுமென்ற உந்துதலால் ஓசையின்றி செய்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ் மொழியை வளப்படுத்த, வலுப்படுத்த தமிழ்ப்பேழை என்கிற அகராதி களஞ்சியத்தை உருவாக்கியிருக்கிறார் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர். தமிழ்ப்பரிதி. ஆங்கில அகராதியில் 62 இலட்சத்திற்கும் மேற்பட்ட சொற்பதிவுகள் உள்ளன. தமிழில் 3.57 லட்சம் சொற்பதிவுகளே இருக்கின்றன. ஆங்கிலத்தில் அளவிற்கு சொற்பதிவுகளை உருவாக்க வேண்டும் என்பது தமிழ்ப்பேழையின் இலக்குகளில் ஒன்றாக இருக்கிறது.

www.MyDictionary.in என்ற இந்த இணையதளத்தில், அறிவியல், இலக்கணம், இலக்கியம், கணிதவியல், கலை வாழ்வியல், கல்வெட்டியல், சட்டவியல், நுண்கலையியல், பண்ணை அறிவியல் , பல்துறை, பொறியியல், மருத்துவம், வணிகவியல் என பல்வேறு துறை சார்ந்த 63 அகராதிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் வானியல், இயற்பியல், சட்டம், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட 150 துறைகள் சார்ந்த 7 லட்சம் கலைச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. இச்சொற்களுக்கு ஏற்ப பல்வேறு துறைசார்ந்த விளக்கங்கள் (65 இலட்சம்) கொடுக்கப்பட்டுள்ளன.
துறைசார்ந்த ஆங்கில மொழிக்குரிய தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்ள விரும்புவர்கள் எவரும் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தலாம். குறிப்பாக, பள்ளி ஆசிரியர்கள், தமிழ் வழி பயிற்றுநர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் என பலதரப்பினருக்கும் இந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும்.


படிக்க : வாரணாசியில் தமிழ் சங்கம்: ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் சதித் திட்டம்!


மேலும் இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவதும் எளிது. நாம் கூகுளில் தேடுவதுபோலவே, நமக்குத் தெரிய வேண்டிய ஆங்கிலச் சொல்லை “தேடுக” பகுதியில் உள்ளிட்டாலே அந்த சொல்லுக்குரிய பல்வேறு துறை சார்ந்த தமிழ்ச்சொற்கள், அவற்றிற்குரிய விளக்கங்கள் உடனடியாகக் கிடைக்குமளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்மொழியைப் வளப்படுத்துகிற இத்தகைய முயற்சிகளை தமிழ்கூறு நல்லுலகு ஆதரிப்பது அவசியமானதாகும். இந்த முயற்சியை இன்னும் செழுமையாக்கவும் முழுமையாக்கவும் ஏராளமான நிதி தேவையிருக்கிறது. தமிழை வளர்க்க என்னென்னெவோ செய்துகொண்டிருக்கும் தமிழக அரசு இந்த முயற்சிக்கு கரம்கொடுத்து துணை நின்றால, மெய்யாகவே தமிழ் வளம்பெறும், நிலைபெறும்.
தமிழை நவீனப்படுத்தவும், பயன்பாட்டுக்குப் பொருத்தமாக புதிய கலைச்சொற்களை உருவாக்கவும் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த உழைப்பையும், முன்முயற்சியையும் வினவு தளம் ஆதரிக்கிறது. தங்களின் தேவைகளுக்கு ஏற்ப இந்த இணையதளத்தைப் பயன்படுத்துமாறும், தமிழார்வலர்கள் மத்தியில் அறிமுகப்படுத்துமாறும் அன்புடன் கோருகிறோம்.

தொடர்புக்கு: பேராசிரியர் தமிழ்ப்பரிதி மாரி
மின்னஞ்சல்: tamil@parithi.org

63 அகராதிகளின் இணைப்பு: https://mydictionary.in/ListofDictionaries

அப்பு