ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் துப்பாக்கிச்சூடு படுகொலை! – திட்டமிட்ட இந்து மதவெறி பயங்கரவாதத் தாக்குதல் !

நாங்கள் எல்லா முனைகளிலும் தாக்குதல் தொடுப்போம், இஸ்லாமியர்களைக் கொல்வோம், கிறித்தவர்களைக் கொல்வோம், தலித்களையும் பழங்குடி மக்களையும் கொல்வோம், எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்று எங்களுக்கு அடிமையாக இரு… இல்லையேல் கொல்லப்படுவாய் என்பதுதான் காவி பாசிஸ்டுகள் உழைக்கும் மக்களுக்கும், ஜனநாயகத்தை நேசிப்போருக்கும் விடுக்கும் செய்தி…

இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மராட்டிய எல்லைக்குள் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 31) அதிகாலை வந்து கொண்டிருந்தபோது  இரயில்வே பாதுகாப்புப் படையைச் சார்ந்த சேத்தன் சிங் என்பவனால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவனது மேலதிகாரி திக்காராவ் மீனா மற்றும் மூன்று இஸ்லாமியப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

இது இந்துமதவெறியனால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு பயங்கரவாதத் தாக்குதல்தான் என்பதை அவனுடன் பணியாற்றும் காவலர் கன்ஷிராம் ஆச்சார்யாவின் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வாக்குமூலத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

சேத்தன் சிங் அவனது உயரதிகாரியான திக்காராவ் மீனாவிடம் உடல்நலக் குறைவின் காரணமாக பணி நேரம் முடியும் முன்பே அடுத்த இரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்வதாக கூறியுள்ளான். திக்காராவ் அதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால் சேத்தன் சிங் அதைப் பொருட்படுத்தவில்லை. அதன் பிறகு திக்காராவ் அவரது மேலதிகாரிகளிடம் பேசியுள்ளார். அதன் பிறகு பணிநேரம் முடிந்த பின்புதான் இறங்க முடியும், அதன் பிறகு சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அவனுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. சேத்தன் சிங் அதையும் பொருட்படுத்தவில்லை.

அதன் பிறகு திக்காராவ் “அவரிடமிருந்த துப்பாக்கியை வாங்கிக் கொள்ளுங்கள் இரயிலிலேயே ஓய்வெடுக்கட்டும், நீங்கள் அழைத்துச் செல்லுங்கள்” என்று கன்ஷிராம் ஆச்சார்யா விடம் கூறியுள்ளார்.


படிக்க: நம்பிக்கையில்லாத் தீர்மானம்: குட்டிச்சுவரைக் கட்டி அழாதீர்!


சேத்தன் சிங்கிடம் இருந்து துப்பாக்கியைப் பெற்றுக் கொண்டுள்ளார் ஆச்சார்யா. ரயிலில் காலியாக இருந்த இருக்கையில் சேத்தன் சிங்கை படுக்கச் சொல்லிவிட்டு அருகிலேயே அமர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் தனது துப்பாக்கியைக் கொடுக்குமாறு சேத்தன் சிங் ஆச்சார்யாவிடம் கேட்டுள்ளான். ஆச்சார்யா கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேத்தன் சிங் ஆச்சார்யாவின் கழுத்தை நெரித்து துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளான்.

துப்பாக்கியை மாற்றி எடுத்துக் கொண்டு சென்றதால் மீண்டும் அவனிடம் சென்று தனது துப்பாக்கியை வாங்கிக் கொண்டு அவனது துப்பாக்கியைக் கொடுத்துள்ளார் ஆச்சார்யா. சேத்தன் சிங் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு தயாரான நிலையில் அவனது துப்பாக்கியைக் கையாண்டதை உணர்ந்துள்ளார் ஆச்சார்யா.

சிறிது நேரத்தில் சேத்தன் சிங் B5 பெட்டியில் திக்காராவ் மற்றும் மற்றொரு பயணியை தனது தானியங்கி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்த சேத்தன் சிங் தயாராக இருப்பதை ஆச்சார்யா உணர்ந்துள்ளார். பயணிகளை ஆச்சார்யா எச்சரித்துள்ளார். சிறிது நேரத்தில் மறுபடியும் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.

அடுத்ததாக B 6 பெட்டியில் இருந்த மற்றொரு பயணியையும், B5 மற்றும் B6 பெட்டிகளுக்கு இடையில் அமைந்துள்ள பேன்ட்ரி காரில் மேலும் ஒருவரையும் அவன் சுட்டுக் கொன்றான்.

அதன் பிறகு சாவகாசமாக இரயிலில் இருந்து இறங்கி சேத்தன் சிங் சென்றுள்ளான். ஆச்சார்யா B5,  B6 உடனடியாக சென்று பார்த்தபோது, அங்கே மத அடையாளத்தோடு இருந்த மூன்று இஸ்லாமியர்கள் இரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர்.

இக்கொடூரமான படுகொலைகளை நிகழ்த்திய பிறகு “அவர்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படுபவர்கள் என்று ஊடகங்கள் கூறியுள்ளன. இந்துஸ்தானில் வாழ வேண்டுமானால்… மோடி, யோகி… இருவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும்” என்று சேத்தன் சிங் அங்கு பேசிய காணொலி வெளியாகியுள்ளது.


படிக்க: பத்ரி சேஷாத்ரி கைது – பாசிசக் கருத்துகளுக்கு ஜனநாயகம் வழங்க முடியுமா?


படுகொலையான அதிகாரி திக்காராவ் மீனா பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர். மற்ற மூவரும் இஸ்லாமியர்கள். இது திட்டமிட்ட இந்து மதவெறி, சாதிவெறி பயங்கரவாத தாக்குதல் அன்றி வேறென்ன?

அரசுக் கட்டமைப்பின் எல்லா அங்கங்களிலும் காவி பாசிஸ்டுகள் ஊடுருவி விட்டார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அது அன்றாட செய்தியாக மாறி இயல்புநிலையாக்கப்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடுகளை, கொடூர பாதிப்புகளை நாம் அனுபவித்து வருகிறோம். குறிப்பாக இராணுவம், போலீசு ஆகியவற்றில் பாசிஸ்டுகள் பரவலாக ஊடுருவியிருப்பது எவ்வளவு பெரிய பேரபாயம் கொண்டது என்பதை இச்சம்பவம் இன்னும் கூடுதலாக நமக்கு உணர்த்துகிறது.

நாங்கள் எல்லா முனைகளிலும் தாக்குதல் தொடுப்போம், இஸ்லாமியர்களைக் கொல்வோம், கிறித்தவர்களைக் கொல்வோம், தலித்களையும் பழங்குடி மக்களையும் கொல்வோம், எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்று எங்களுக்கு அடிமையாக இரு… இல்லையேல் கொல்லப்படுவாய் என்பதுதான் காவி பாசிஸ்டுகள் உழைக்கும் மக்களுக்கும், ஜனநாயகத்தை நேசிப்போருக்கும் விடுக்கும் செய்தி…

பார்ப்பன இந்துமதவெறி பாசிச கும்பலால் சேத்தன் சிங் கதாநாயகனாக்கப்படுவான். பிரக்யா சிங் தாக்கூரைப் போல் 2024 பாராளுமன்றத் தேர்தலில் பிஜேபி வேட்பாளராக நிறுத்தக்கூடப் படுவான். மணிப்பூர், அரியானா வன்முறை, ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் துப்பாக்கிச் சூடு பயங்கரவாதத் தாக்குதல் போன்ற சம்பவங்கள் மூலம் பாசிஸ்டுகள் இந்துராஷ்ரத்தை நோக்கி செல்வதற்கான பாதை எது என்பதை தெளிவாக அறிவித்து நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசுக்கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு, தேர்தலில் மட்டும் வெற்றி பெற்று பாசிஸ்டுகளை வீழ்த்தி விட முடியும் என்று நினைப்பது இந்நாட்டை முற்றாக அழிவுப் பாதைக்குள் கொண்டு சென்று விடும்.

இந்த அரசுக் கட்டமைப்புக்கு வெளியே, பாராளுமன்றத்திற்கு வெளியே காவி பாசிஸ்டுகளை நேரடியாக களத்தில் வீழ்த்துவது ஒன்றே நமக்கிருக்கும் வழி! பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை விரைவாக கட்டியமைப்பதன் வரலாற்று முக்கியத்துவத்தை பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் அனைவரும் உணர வேண்டிய தருணமிது.


இனியன

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க