மீண்டும் தொடங்கிய விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்!

விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தடுத்து நிறுத்த முடியாததால், போலீசு மற்றும் துணை இராணுவப் படைகளைக் கொண்டு விவசாயிகளின் மீது அடக்குமுறை செலுத்தி போராட்டத்தை தடுத்து நிறுத்தவும் ஆயத்தமாகி வருகிறது, பாசிச மோடி அரசு.

டந்த 2020 ஆம் ஆண்டின் இறுதியில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் டெல்லி முற்றுகை (டெல்லி சலோ) போராட்டமானது தொடங்கியது. பாசிச மோடி அரசின் பல்வேறு அடக்குமுறைகளையும் மீறி 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிர்த்தியாகத்தால் ஓர் ஆண்டிற்கும் மேலாக நீடித்து மோடி அரசை அடிப்பணிய வைத்து மூன்று வேளாண் சட்டங்களை தற்காலிகமாக பின்வாங்க வைத்தது.

குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்குவது, மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறுவது, விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறுவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மோடி அரசு ஏற்றிருந்தது. ஆனால் அவை ஏதும் நிறைவேற்றப்படாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல கட்டப் போராட்டங்களை நடத்தி வந்த விவசாய சங்கங்கள், தற்போது பிப்ரவரி 13 ஆம் தேதியன்று மீண்டும் டெல்லி சலோ போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

நாடு முழுவதிலிருந்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது), கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகளின் தலைமையிலான 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லி முற்றுகை போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இப்போராட்டத்தில் மேலும் பல விவசாய சங்கங்களும் பங்கேற்பதாக தெரிவித்துள்ளனர். பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

தங்களுடைய கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்காக பலமுறை டிராக்டர்களுடன் ஒத்திகை பார்த்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.


படிக்க: மீண்டும் தில்லியில் விவசாயிகள் போராட்டம் – பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை இதுதான்!


2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் விவசாயிகள் போராட்டத்தை அறிவித்துள்ளதால் பீதியடைந்த மோடி அரசானது, சண்டிகரில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், ஒன்றிய இணை அமைச்சர்கள் நித்யானந்த் ராய், அர்ஜுன் முண்டா மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

ஒன்றிய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கூறினாலும், தங்களுடைய போராட்ட அனுபவத்தில் இருந்து மோடி அரசை சரியாக புரிந்துவைத்துள்ள விவசாயிகள், கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த எட்டாம் தேதி ஒன்றிய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, “எங்களது 10 அம்ச கோரிக்கைகளை சுட்டிக்காட்டி நாங்கள் பேசினோம். அதை அரசு பரீசிலீக்கும் என ஒன்றிய அமைச்சர்கள் தெரிவித்தனர்” என்றும் “டெல்லி நோக்கிய பேரணி திட்டத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதற்குள் அரசு அதற்கு தீர்வு கண்டால் சிறப்பு” என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்துள்ளதே அதற்கு சான்றாகும்.

விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தடுத்து நிறுத்த முடியாததால், போலீசு மற்றும் துணை இராணுவப் படைகளைக் கொண்டு விவசாயிகளின் மீது அடக்குமுறை செலுத்தி போராட்டத்தை தடுத்து நிறுத்தவும் ஆயத்தமாகி வருகிறது, பாசிச மோடி அரசு. விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் ஹரியானா-டெல்லி எல்லையிலே தடுத்து நிறுத்தவும் முடிவு செய்துள்ளது.


படிக்க: பாசிச மோடியின் ஆட்சியை வீழ்த்த டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகளை வரவேற்போம்!


ஹரியானா எல்லையில் சிமெண்ட் மற்றும் மணல் மூட்டைகளை கொண்டு தடுப்புகளை அமைத்துள்ளனர். தடுப்புகளை நகர்த்தி வைப்பதற்காக கிரேன்களையும் கொண்டுவந்து நிறுத்தியுள்ளனர். விவசாயிகள் தடுப்புகளை மீறி செல்ல முயன்றால் அவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசுவது, தண்ணீரை பீய்ச்சி அடிப்பது எனத் திட்டமிட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தை கலைப்பதற்கான ஒத்திகையிலும் போலீசு ஈடுபட்டுள்ளது.

மேலும், விவசாயிகள் மீது மிருகத்தனமான அடக்குமுறையை செலுத்துவதற்கு சாதகமாக ஹரியானா – பஞ்சாப் எல்லையில் அமைந்திருக்கும் அம்பாலா, குருஷேத்ரா, கைதல், ஜிந்த போன்ற கிராமங்களில் பிப்ரவரி 11 காலை 6 மணியில் இருந்து பிப்ரவரி 13 இரவு 11.59 மணி வரை இணையம் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகளை துண்டித்துள்ளனர்.

மேலும், பிற மாநில விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்வதை தடுப்பதற்காக, அந்தந்த மாநில போலீசுத்துறை, போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக செல்லும் விவசாயிகளைக் கைது செய்து வருகிறது. டெல்லி சலோ போராட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்ற கர்நாடக விவசாயிகளை இன்று போபால் இரயில் நிலையத்தில் வழிமறித்து தாக்கியுள்ளது அந்நகர போலீசு. மேலும், விவசாயிகளின் தொலைபேசிகளை பறித்து அடாவடித்தனத்தில் ஈடுபடுவதுடன் அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளது.

சண்டிகரில் விவசாயிகள் போராட்டத்தைத் தடுக்கும் வகையில், 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது யூனியன் பிரதேச நிர்வாகம். டெல்லியை சுற்றியுள்ள டெல்லி- உத்தரப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாவட்ட எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதுடன், உத்தரப்பிரதேசத்திலிருந்து டெல்லிக்குள் நுழையும் போராட்டக்காரர்களை தடுக்கும் விதமாக, டிராக்டர்கள், தள்ளுவண்டிகள், பேருந்துகள், டிரக்குகள், வணிக வாகனங்கள், தனிநபர் வாகனங்கள் மற்றும் குதிரைகள் போன்றவை டெல்லிக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகளின் கூட்டமைப்பும் ’குடியரசு’ தினத்தன்று நாட்டின் 484 மாவட்டங்களில் மிகப்பெரிய டிராக்டர் பேரணியை நடத்தியது. வருகின்ற பிப்ரவரி 16 அன்று கிராமப்புற கடையடைப்பு போராட்டத்தையும் அறிவித்துள்ளது. இவ்வாறு தொடர் போராட்டங்கள் மூலம் பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை எது என்பதையும் விவசாயிகள் நமக்கு உணர்த்தி வருகிறார்கள்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ராமர் கோவில் திறப்பு, இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமாரை ஈர்த்துக் கொண்டது, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது, உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டம் அமல் எனத் தொடர்ந்து தன்னுடைய நிகழ்ச்சிநிரல் கண்ணிகளை அமைத்து அதை ஒட்டி விவாதத்தை கட்டமைத்து வந்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு, அந்த நிகழ்ச்சிநிரல் கண்ணியை உடைக்கும் விதமாக விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் அமைந்துள்ளது.


கார்த்திக்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க