போராடும் விவசாயிகளைக் கண்டு அஞ்சி நடுங்கும் பாசிச மோடி அரசு!

விவசாயிகள் போராட்டத்தின் உள்ளடக்கமும், வடிவமும், போராடும் செய்முறையும் வர்க்க அரசியலை வலியுறுத்துவதாக, வர்க்க அணி திரட்டலை முன்வைப்பதாக இருக்கிறது. இது தான் பாசிச கும்பலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

ன்னதான் “மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கப்போவதாக” சங்கப் பரிவாரங்களும், ஊடகங்களும் பரப்பினாலும், தேர்தல் தேதி நெருங்க நெருங்க பாஜக கும்பல் செய்யும் தகிடுதித்தங்கள் அவர்களின் பயத்தை அப்பட்டமாக காட்டுகிறது. கருத்துக் கணிப்பில் தனது வெற்றி உறுதியானதாக சொல்லிக்கொண்டாலும், எதிர் கட்சிகளை உடைப்பதில் பாஜக தனது அனைத்து பலத்தையும் பயன்படுத்துவது ஏன்?

“பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்” என்று உறுதியாக பிரச்சாரம் செய்வது ஒருவகையான எதிர்மறை தேர்தல் உத்தி தான். தேர்தலில் “மக்கள் தங்களது வாக்குகள் வீணாவதை விருப்ப மாட்டார்கள்” என்று ஒரு மனநிலை உண்டு. அதனால் வெற்றி பெற அதிகமாக வாய்ப்பிருக்கும் கட்சிக்கே நடுநிலை வாக்காளர்கள் பெரும்பாலாக வாக்களிப்பார்கள் என்பதற்காக கூட பாஜக தனது ஊடக பிரிவினர் மூலமாக இந்த செய்தியை பரப்பி இருக்கலாம்.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் கமல் நாத், விஜயதரணி போன்றோரை பாஜக தனது கட்சிக்கு இழுக்கப் பார்க்கிறது என்ற தகவல் ஊடகங்களில் வெளியானது. இவர்கள் இருவரும், இந்த கட்சி தாவுதல் பற்றிய தகவல் “பொய்” என்று திட்டவட்டமாக சொல்லாமல், மழுப்பலாக பேசி வருகின்றனர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டது.

ஆனால், இவையெல்லாம் ஒன்றை தெளிவாக காட்டுகிறது. எதிர் கட்சிகள் தங்களுக்கென பாசிச எதிர்ப்பு திட்டம் ஏதும் இல்லாமல், அவ்வப்போது பாஜக தொடுக்கும் தாக்குதலை சமாளிப்பதையே முழுநேர வேலையாக செய்து வருகிறார்கள். கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்குவது, கட்சி பிரமுகர்களை பாஜக கவர்ந்திழுக்க முயற்சிப்பது ஆகியவற்றால் காங்கிரஸ் தற்போது பாஜகவின் தோல்விகளை, அடக்குமுறைகளை அம்பலப்படுத்துவதை விட்டுவிட்டு, தன்னுடைய கட்சியையும் பிரமுகர்களையும் காப்பாற்றுவதில் தனது நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறது. இந்தவகையில் தான் எதிர் கட்சிகள் பாஜக எதிர்ப்பு என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன. தேர்தல் காலத்தில் கூட மக்களின் உண்மையான கோரிக்கைகளை முன்வைத்து பாசிஸ்டுகளை பணிய வைக்கும் எந்தவொரு இயக்கத்தையும் நடத்த எதிர்கட்சிகள் அனைத்தும் வக்கற்றதாக இருக்கின்றன. இது நவ-தாராளவாத பொருளாதார சட்டகத்தில் அனைத்து தேர்தல் கட்சிகளும் பிழைப்புவாதமாக மாறிப்போனதால் ஏற்பட்ட உள்ளார்ந்த பிரச்சினையாகும். அதை பாஜக தன்னுடைய நலனுக்காக நன்கு பயன்படுத்திக் கொள்கிறது.


படிக்க: மோடி அரசை எதிர்த்து டெல்லிக்குள் நுழையும் விவசாயிகள் போராட்டம் | புகைப்பட கட்டுரை


ஆனால் விவசாயிகளின் டெல்லிச் சாலோ 2.0 போராட்டம், இதிலிருந்து மாறுபட்டு மக்களின் உண்மையான கோரிக்கைகளை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

பொதுத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியானது மத்திய அரசின் நிறுவனத்தால் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதை பாஜக முதல்முறையாக செய்யவில்லை. மத்திய அரசு முகமைகளை பாஜக கடந்த 10 ஆண்டுகளாக எதிர் கட்சிகளை முடக்கவும் , மோடி அரசை எதிர்த்துப் போராடும் சமூக செயல்பாட்டாளர்களை வேட்டையாடவும் பயன்படுத்தி வருகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்திலும் மத்திய அரசு முகமைகளை இவ்வாறு பயன்படுத்துவதால் தனது ஆட்சிக்கு கெட்ட பெயர் வரும், வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்ற எந்த அச்சமும் இல்லாமல் பாஜக இதை செய்வது, பாஜகவின் பாசிசத்தன்மையை காட்டுவதாக உள்ளது. மேலும், தேர்தல் வெற்றிக்காக கூட ஜனநாயக முகமூடியை அணிந்துகொள்ள வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை. மதவாதமும், பாசிச அதிகாரங்களும், இந்துத்துவ சங்க பரிவார படைகளும் தேர்தலில் வெற்றியை சாதிக்கப் போதுமானது என்ற நிலையில் தான் பாசிஸ்டுகள் இந்த தேர்தலை சந்திக்கிறார்கள்.

அதனால்தான் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகள் மீது ட்ரோன் மூலமாக வான்வெளியில் இருந்து கண்ணீர் புகை குண்டு வீசுவது, பெல்லட் குண்டுகளால் சுடுவது, முள்வேலிகளை அமைப்பது, சாலைகளில் ஆணிகளை பதிப்பது என மனிதத்தன்மையற்ற முறையில் தாக்குதல் தொடுக்கிறது பாசிச மோடி கும்பல். இந்த மனிதத்தன்மையற்ற தாக்குதல் தேர்தலில் பாஜகவிற்கு எதிரான வாக்குகளாக திரும்பும் என்ற கவலை மோடி கும்பலிடம் சிறிதும் இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.


படிக்க: விவசாயிகள் போராட்டமும் எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதமும்


ஒன்று, போராடும் விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகள், பாஜக கும்பல் எந்த கார்ப்பரேட்களின் புரவலராக செயல்படுகிறதோ அந்த கார்ப்பரேட் வர்க்கத்தின் நலன்களுக்கு எதிரானது. மேலும் இந்த போராட்டத்தின் உள்ளடக்கமும், வடிவமும், போராடும் செய்முறையும் வர்க்க அரசியலை வலியுறுத்துவதாக, வர்க்க அணி திரட்டலை முன்வைப்பதாக இருக்கிறது. மற்றொன்று, “வெல்லப்பட முடியாத வலிமையான தலைவர்” என்ற மோடியின் பிம்பத்தை இந்த போராட்டத்தின் வெற்றி சுக்குநூறாக உடைந்துவிடும். ஏற்கெனவே, 2021 ஆம் ஆண்டு இதைப்போன்ற போராட்டத்தால் விவசாயிகள் மோடி அரசை பணிய வைத்தது குறிப்படத்தக்கது.

இந்த போராட்டத்தை ஒடுக்க மோடி அரசாங்கம் மேற்கொண்ட சாதி மத பிளவுவாதத்தை விதைப்பது, அரசு ஒடுக்குமுறை, போராடும் விவசாயிகளை தீவிரவாதிகளாக சித்தரிப்பது, போராட்டத்தையும் போராடும் விவசாயிகளையும் கொச்சைப்படுத்துவது என அனைத்து உத்திகளையும் மீறி விவசாயிகள் 700-க்கும் மேற்பட்டோரின் இன்னுயிரை தியாகம் செய்து 2021 ஆம் ஆண்டு வெற்றி பெற்றனர்.

இவையெல்லாம் “வெல்லப்பட முடியாத தலைவர்” என்ற மோடியின் பிம்பத்தை உடைத்தது மட்டுமல்லாது, பாசிஸ்டுகளால் ஊழல்படுத்த முடியாத, அடக்குமுறைகளால் உடைக்க முடியாத போராட்ட அனுபவத்தை இந்த சமூகத்திற்கு கொடுத்தது. இந்த போர்க்குணத்தை கண்டுதான் மோடி கும்பல் அஞ்சுகிறது.

தேர்தல் வெற்றிக்காக கூட, மக்களுடைய அவசியமான பிரச்சினைகளான வேலை வாய்ப்பின்மை, வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு, அரசு அடக்குமுறைகள், உரிமைகள் பறிக்கப்படுதல், கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் என எதையும் பேசு பொருளாக்காமல், தங்களது கட்சி பிரமுகர்களையும் கூட்டணி கட்சிகளையும் எதிரணிக்கு சென்று விடாமல் தடுக்கும் பணியை செய்துகொண்டிருப்பது தான் “பாஜகவிற்கு மாற்று” என்று சொல்லிக்கொள்ளப்படும் காங்கிரஸ் கட்சியின் நிலை.

இந்த நிலையில் தான் தங்களது அடிப்படை வர்க்க நலன்களை வலியுறுத்தி நடத்தப்படும் விவசாயிகளின் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக மாற்றுவது, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது, உலக வர்த்தக கழகத்தில் இருந்து இந்தியா விலக வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் தருவது போன்ற தங்களது வர்க்க நலன்களை விவசாயிகள் முன்வைத்து போராடுகிறார்கள். இதற்கு நேர் எதிரான நலன்களை உடைய கார்ப்பரேட்டுகளின் சேவகனாக செயல்படும் மோடி அரசு மறுமுனையில் நிற்கிறது. விவசாயிகளின் போர்க்குணமிக்க போராட்டத்தையும் மோடி அரசின் மனிதத்தன்மையற்ற ஒடுக்குமுறைகளையும் இந்த சமரசப்படுத்த முடியாத வர்க்க நலன்களின் பின்புலத்தில் இருந்துதான் பார்க்கவேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் போராட்டம் இந்த காலத்தின் முன்மாதிரியான போராட்டம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க