சங்கப் பரிவார கும்பலின் கைகளில் சைனிக் பள்ளிகள்

மே 05, 2022 மற்றும் டிசம்பர் 27, 2023 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், 40 புதிய ராணுவப் பள்ளிகளை நிறுவ தனியார் நிறுவனங்கள் சைனிக் பள்ளிகள் சங்கத்தோடு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இதில் குறைந்தது 25 பள்ளிகளை அமைக்கும் உரிமம் சங்கப் பரிவார கும்பல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

0

ன்றிய அரசின் 62 சதவிகித புதிய சைனிக் பள்ளிகளை (Sainik Schools) நிர்வகிக்கும் பொறுப்பு ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவார அமைப்புகளையும் பா.ஜ.க-வையும் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியளிக்கும் தகவல் ஆர்.டி.ஐ (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) மூலம் அம்பலமாகியுள்ளது.

ஒன்றிய அரசின் சைனிக் பள்ளிகள் எனப்படும் இராணுவ பள்ளிகள், இந்திய இராணுவத்தில் சேருவதற்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பள்ளிகள் ஆகும். சைனிக் பள்ளிகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான சைனிக் பள்ளிகள் சங்கத்தால் (Sainik Schools Society) நிர்வகிக்கப்படுகின்றன. 2013 – 2014 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற நிலைக்குழு வெளியிட்ட அறிக்கையின்படி, தேசிய பாதுகாப்பு அகாடமி (National Defence Academy) மற்றும் இந்திய கடற்படை அகாடமியில் (Indian Naval Academy) சேர்ந்த கேடட்களில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் பேர் சைனிக் பள்ளிகளின் மாணவர்கள் ஆவர்.

2022-ஆம் ஆண்டுக்கு முன்னதாக, நாடு முழுவதும் ஒன்றிய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் 33 சைனிக் பள்ளிகள் இயங்கி வந்தன. இந்நிலையில், அக்டோபர் 2021-இல் ஒன்றிய பா.ஜ.க அரசு, தனியார் நிறுவனங்கள் சைனிக் பள்ளிகள் சங்கத்துடன் இணைந்து புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் மேலும் 100 சைனிக் பள்ளிகளை நிறுவ அனுமதி அளித்தது.

அதன்படி மே 05, 2022 மற்றும் டிசம்பர் 27, 2023 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், 40 புதிய இராணுவப் பள்ளிகளை நிறுவ தனியார் நிறுவனங்கள் சைனிக் பள்ளிகள் சங்கத்தோடு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இதில் குறைந்தது 25 பள்ளிகளை (62 சதவிகித பள்ளிகளை) அமைக்கும் உரிமம் சங்கப் பரிவார கும்பல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், 11 பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பை பா.ஜ.க-வினர் பெற்றுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் வசம் 8 சைனிக் பள்ளிகள் சென்றுள்ளன; பிற இந்துத்துவ அமைப்புகளிடம் 6 சைனிக் பள்ளிகள் சென்றுள்ளன. அதானி குழுமத்தின் கீழ் செயல்படும் அறக்கட்டளை ஒன்றும் ஒரு பள்ளியை நிர்வகிக்கும் உரிமையைப் பெற்றுள்ளது.


படிக்க: உ.பி. யில் இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது ஆர்எஸ்எஸ் !


ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்பின் கீழ் செயல்படும் இந்தியாவின் எந்தவொரு மத சிறுபான்மையின அமைப்புகளுக்கும் இதுவரை சைனிக் பள்ளிகளை நடத்தும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

குஜராத், உத்தரப் பிரதேசம், ஹரியானா, அருணாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பா.ஜ.க ஆளும் / ஆதரவு மாநிலங்களில் மட்டுமே புதிய சைனிக் பள்ளிகளை நடத்தும் ஒப்பந்தம் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தியாவின் முதல் பெண்கள் இராணுவப் பள்ளிகளை இந்துத்துவவாதி சாத்வி ரிதம்பரா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் பெண்கள் பிரிவான துர்கா வாஹினியின் நிறுவனர் சாத்வி ரிதம்பரா என்பது குறிப்பிடத்தக்கது. பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான ராம ஜன்மபூமி இயக்கத்தை முன்னின்று நடத்திய நபர்களில் ஒருவராக இவர் இருந்துள்ளார். ஜனவரி 2-ஆம் தேதி சைனிக் பள்ளி திறப்பு விழாவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரிதம்பராவின் இந்த ’கரசேவை’யை அங்கீகரித்துப் பேசியுள்ளார்.


படிக்க: தயாராகிறது இந்துராஷ்டிர இராணுவம் !


ஆர்.எஸ்.எஸ்-இன் கல்விப் பிரிவான வித்யா பாரதி அகில பாரதிய சிக்ஷா சன்ஸ்தானுக்கு (Vidya Bharati Akhil Bharatiya Shiksha Sansthan), 7 சைனிக் பள்ளி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

1937 ஆம் ஆண்டில் மூஞ்சேவால் நிறுவப்பட்டு, தற்போது மத்திய இந்து இராணுவ கல்வி சங்கத்தால் (Central Hindu Military Education Society) நடத்தப்படும் நாசிக்கின் போன்சாலா இராணுவப் பள்ளியும் சைனிக் பள்ளியாக செயல்பட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2006 நாந்தேட் குண்டுவெடிப்பு மற்றும் 2008 மாலேகான் குண்டுவெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் போன்சாலா இராணுவப் பள்ளியில் பயிற்சி பெற்றதாக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை (Anti-Terror Squad) குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு கட்டமைப்பை பாசிசமயமாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் செயல்பாடுகள் தீவிரமடைந்து வருவதையே இது நமக்கு உணர்த்துகிறது. இராணுவத்தில் நேரடியாக ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு ஆட்பட்டவர்களை உள்ளே நுழைப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதன்மூலம் காவி கும்பல் தனது இந்துராஷ்டிர இலட்சியத்தை அடைவதற்கு இராணுவத்தை நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய பேரபாயம் ஏற்பட்டுள்ளது.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க