திருச்சி – திருவெறும்பூரில் இஸ்லாமியர்களை தொழுகை நடத்தவிடாமல்
பா.ஜ.க. குண்டர்படை அட்டூழியம்

தமிழ்நாட்டிலும் மசூதிகளை இலக்காக்கும் பா.ஜ.க குண்டர்கள்!

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூரை அடுத்த வேங்கூர் –  இந்திரா நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் பள்ளிவாசலில் ரமலான் நோன்பை முன்னிட்டு வழிபாடு நடத்தச் சென்ற இஸ்லாமியர்களை திருவெறும்பூர் பா.ஜ.க. ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட பா.ஜ.க. குண்டர்கள் தடுத்து தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

“இது பூங்கா இடம்; இந்த இடத்தில் நீங்கள் பள்ளிவாசல் கட்ட அனுமதிக்க மாட்டோம்; அங்கு தொழுகையும் நடத்த விடமாட்டோம்” என்று சில நாட்களாகவே அங்கு வழிபாடு நடத்தச் செல்பவர்களை காவி குண்டர்கள் அச்சுறுத்தி வருகின்றனர். மேலும் நீதிமன்றத்தில் தடையாணையும் பெற்றுள்ளனர். அதனால் இஸ்லாமியர்கள் அவ்விடத்தில் கட்டுமானப்பணிகளை நிறுத்திவிட்டு வழிபாடு மட்டுமே நடத்தி வந்தனர்.

மசூதி கட்டுவதற்கான இடம் உரிய பத்திரங்களோடு வைத்திருக்கும் போதே, “விதி மீறல்; பள்ளிவாசல் இந்த இடத்தில் அமையக் கூடாது; அருகில் உள்ளவர்களிடம் அனுமதி பெற வேண்டும்”  என புதுப்புது நியாயங்களை பேசிக்கொண்டே கலவரம் உண்டாக்க முயற்சித்து வருகிறது பா.ஜ.க. கும்பல்.


படிக்க: தூத்துக்குடி பெரியார் மையத்தின் மீது தாக்குதல் ; RSS, BJPயை தடை செய்!


இதற்கிடையே நேற்று மாலை அப்பகுதிக்கு தொழுகை நடத்தச் சென்ற இஸ்லாமியர்களை சங்கிகளின் தூண்டுதலின் பேரில் போலீஸ் தடுத்து நிறுத்த முயன்றனர்.

இதைக் கண்டித்து நேற்று (18-03-2024) இரவு திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் அப்பகுதி இஸ்லாமியர்கள் பெருந்திரளாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியாக பா.ஜ.க. குண்டர் படையும் அப்பகுதியில் குவிந்தது.

இதன் பிறகு வட்டாட்சியர், காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பேச்சுவார்த்தையில் “சட்டபூர்வமாக எங்கள் தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் நிலைநாட்டி நாங்கள் பள்ளிவாசலைக் கட்டிக்கொள்கிறோம்; அதுவரை பள்ளிவாசலில் வழிபாடு நடத்தவும், மிரட்டல் விடுக்கும் பா.ஜ.க-வினரிடம் இருந்து என்களை பாதுகாக்கவும்  வேண்டும்” என இஸ்லாமியர்கள் கோரிக்கை வைத்தனர்.


படிக்க: உத்தராகண்ட் பொது சிவில் சட்டம்: இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் பாசிஸ்டுகள்!


வடமாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகளை ஏவிவிடும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி கும்பல், தமிழ்நாட்டிலும் வெகுநாட்களாகவே அதற்கான செயல்திட்டத்தில் உள்ளது; தனக்கிருக்கும் அதிகார பலத்தின் துணையோடு, கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் கவவரத்தை உண்டாக்க முயற்சித்து வருகிறது என்பது இந்த சம்பவத்திலிருந்து மீண்டும் நிரூபனமாகியுள்ளது.

சமீபத்தில் குஜராத் பல்கலைக்கழகத்தில் விடுதி அறையில் தொழுகையில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கையை சேர்ந்த ஐந்து மாணவர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தியது சங்க பரிவார கும்பல். இப்போது தமிழ்நாட்டிலேயே தொழுகை நடத்துவதற்கும் மசூதி கட்டுவதற்கும் எங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று மிரட்டல் விடுக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. சங்க பரிவார கும்பலின் இத்தகைய தாக்குதல்களை ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து முறியடிக்காவிட்டால் குஜராத்திலும் பசு வளைய மாநிலங்களிலும் நடந்தது போன்ற கலவரங்கள் நாளை தமிழ்நாட்டிலும் ஏற்படும் அபாயம் உள்ளது.


வினவு செய்தியாளர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க