விருத்தாச்சலத்தில் தாழ்த்தப்பட்ட – மனவளம் குன்றிய பெண் மீது பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு ஆதரவாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பாமலும் தடயங்களை அழிக்கும் வகையில் செயல்பட்ட விருத்தாச்சலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு வேல்முருகனையும் பணி நீக்கம் செய்து கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பலமுறை அனுமதி கோரியும் போலீசு அனுமதி தர மறுத்துவிட்டது. அதனால் இன்று (30/11/24) தடையை மீறி விருதாச்சலம் பாலக்கரையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தோழர் அசோக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்த அனைத்து தோழர்களையும் போலீசு கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ளது.
தகவல் மக்கள் அதிகாரம், கடலூர் மண்டலம், 7200112838.
***
தாழ்த்தப்பட்ட மற்றும் மனவளம் குன்றிய பெண் பாலியல் வன்கொடுமை!
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அநீதி இழைத்த விருத்தாச்சலம் இன்ஸ்பெக்டர் முருகேசன்!
பாட்டாளி வர்க்க ஆசான் பிரெடெரிக் எங்கெல்ஸின் 205ஆவது பிறந்த தினம் இன்று. எங்கெல்ஸை நினைவுகூரும் வகையில் அவரது சமூகப் பார்வை எவ்வாறு மாற்றமடைந்தது என்பது குறித்த இக்கட்டுரையை வாசகர்களுக்கு மீள்பதிவு செய்கிறோம்.
***
“ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது – அது கம்யூனிசம் எனும் பூதம். போப்பாண்டவரும் ஜார் அரசனும், மெட்டர்னிக்கும், கிஸோவும், பிரெஞ்சுத் தீவிரக் கொள்கையினரும் (radicals) ஜெர்மன் போலீஸ் ஒற்றர்களும் எனப் பழைய ஐரோப்பாவின் அதிகார சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை விரட்டுவதற்காக ஒரு புனிதக் கூட்டணியை அமைத்துள்ளன.”
– கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தொடக்கத்தில் மார்க்சும் எங்கெல்சும் குறிப்பிட்ட இந்தப் பூதம் இன்றும் அடங்க மறுக்கிறது. அன்று ஐரோப்பாவை ஆட்டிப் படைத்த பூதம் இன்று சோசலிச முகாம் என்ற ஒன்று இல்லையென்றாலும் உலகம் முழுவதிலும் பரவியிருக்கிறது.
ஒவ்வொரு நாட்டிலும் வீதிகளில் இறங்கி, அமெரிக்க ஏகாதிபத்தியமே வெளியேறு ! ஐ.எம்.எஃப், உலக வங்கியே வெளியேறு என்ற முழக்கங்களோடு போராட்டங்கள் வீதியில் அரங்கேறுகின்றன. “ஏழைகளே பணக்காரர்களைத் தின்று பசியாறுங்கள்” என்று அமெரிக்காவின் வால்வீதியில் முழக்கம் கேட்கிறது.
இன்றும் கூட மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் பெயர்களைக் கேட்டாலே முதலாளித்துவத்தின் முகம் இருளக் காரணம் என்ன ? ஏனெனில் தரணியில் இனி தனது ராஜ்ஜியம்தான் என எண்ணி இருமாந்திருந்த முதலாளித்துவத்தின் செவிப்பறையில் அதன் இறுதி நாட்கள் நெருங்கிக் கொண்டிருப்பதை உறைக்கும்படி சொன்னவர்கள் அவர்கள்தான்.
மார்க்சும் எங்கெல்ஸும் கம்யூனிச சித்தாந்தத்தை வந்தடைந்தது எப்படி ? உலகில் இருக்கும் ஒவ்வொன்றையும் அது இருப்பதற்கான அவசியத்தைக் கேள்விகளாகக் கேட்டு விடை தேடியவர்கள். ஒவ்வொன்றையும் ஈவிரக்கமின்றி விமர்சனம் செய்தவர்களாக விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் சமூகத்தை மாற்றும் முனைப்போடு வாழ்ந்ததன் விளைவாகவே மார்க்சியம் என்றொரு புரட்சிகர சித்தாந்ததை நாம் பெற்றிருக்கிறோம்.
இன்று (28-11-2019) தோழர் எங்கெல்ஸின் 200-ம் ஆண்டு துவங்குகிறது. மார்க்ஸ் இன்றி எங்கெல்ஸ் இல்லை; எங்கெல்ஸ் இன்றி மார்க்ஸ் இல்லை என்று சொன்னால் அது மிகையல்ல. ஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக – கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் – அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன் அடிப்படை என்ன ?
எ.ஸ்தெபனாவா எழுதிய “பிரெடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கைச் சுருக்கம்” என்ற நூலில் பிரெடெரிக் எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக – கம்யூனிஸ்டாக மாறிய பின்னணி குறித்த பகுதியை மட்டும் வாசகர்களுக்கு வழங்குகிறோம் !
***
1842-ம் ஆண்டு நவம்பர் மாதம் மூட்டம் நிறைந்த நாள் ஒன்றில் பிரெடெரிக் எங்கெல்ஸ் லண்டனுக்கு வந்து சேர்ந்தார். சரியான முதலாளித்துவ நாடும் பெரும் இயந்திரத் தொழிலின் தாயகமுமான பிரிட்டன் பிரதானமாக விவசாய நாடாக இருந்த பின்தங்கிய ஜெர்மனியிலிருந்து எந்த அளவுக்கு வேறுபட்டிருந்ததோ, அதே அளவுக்கு இங்கிலாந்தின் தலைநகர் பிரஷ்யத் தலைநகரிலிருந்து அந்தக் காலத்தில் வேறுபட்டிருந்தது.
தோழர் எங்கெல்ஸ்
18-ம் நூற்றாண்டின் மத்தியில் பிரிட்டன் சிறு நகரங்களை உடைய, அதிக வளர்ச்சியற்ற தொழில் துறையையும் பெரும்பாலும் விவசாய மக்களையும் கொண்டிருந்த நாடாயிருந்தது. 18-ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கிய தொழிற் புரட்சி நாட்டை மாற்றியது. காகித, கம்பள நெசவுத் துறை, இன்னும் பிற துறைகளில் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீராவி இயந்திரம் தோன்றி ஆலைகள் உருவானதும் பிரிட்டன் தொழில்துறை நாடாக மாறியது.
தலைநகரோடு கூட ஏராளமான தொழிலாளர்களுடன் பெரிய ஆலை நகரங்கள் வளர்ந்தன. தொழில் துறை முதலாளி வர்க்கம், “இந்தத் தொழிற் புரட்சியின் மிக முக்கியக் குழந்தையான” (எங்கெல்ஸ்) ஆங்கிலேயப் பாட்டாளி வர்க்கம் ஆகிய இரண்டு புதிய வர்க்கங்கள் தோன்றின.
ஒருபுறத்தில் தொழிலாளர்களின் ஏழ்மையும் துன்பங்களும், மறுபுறத்தில் உடைமையாளர் வர்க்கங்களின் செல்வமும் ஆடம்பரமும் பிரிட்டனைப் போல் வேறெங்கும், எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு வெளிப்படையாகத் தெரியவில்லை; பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையில் இருந்த முரண்பாடுகள் பிரிட்டனில் இருந்தது போல வேறெங்கும், உலகத்தின் வேறெந்த நாட்டிலும் இவ்வளவு தெளிவாகக் காணப்படவில்லை. இந்த நாட்டில் நிலவிய வர்க்க முரண்பாடுகளின் கூரிய தன்மை எங்கெல்சைப் பெருமளவிற்கு வியப்பிற்குள்ளாக்கியது.
இதனால் பிரிட்டனுக்கு வந்தவுடன் அவர் எழுதிய முதல் கட்டுரைகளில் ஒன்றையே, பிரிட்டனில் புரட்சி வருவதற்குச் சாத்தியமுண்டா, வாய்ப்பு உண்டா? என்ற கேள்வியுடன் துவக்கினார். இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கையில், உடைமை அற்றவர்கள் என்ற ஒரு வர்க்கத்தை இங்கிலாந்தின் இயந்திரத் தொழில்துறை தோற்றுவித்திருக்கிறது என்றும் இந்த வர்க்கம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து நிலவி வரும் உறவுமுறைகளைப் பலவந்தமாகத் தூக்கியெறிவதன் மூலமாகவும் பிரபுக்கள், இயந்திரத் தொழிலதிபர்கள் ஆகியோரடங்கிய உயர் வகுப்பை வீழ்த்துவதன் மூலமாகவும்தான் பாட்டாளிகளின் பொருளாயத நிலையை மேம்படுத்த முடியும் என்ற உணர்வைப் பெற்று வருகிறது என்றும் எங்கெல்ஸ் எழுதினார். சமூக மாற்றத்தை ஏற்படுத்தவல்ல ஒரு சமுதாயச் சக்தி பாட்டாளி வர்க்கத்திற்குள் அடங்கிக் கிடப்பதை எங்கெல்ஸ் தெளிவாகக் கண்டார்.
தொழிலாளர்களின் நிலைமையையும் அவர்களது வாழ்க்கை முறை, கண்ணோட்டங்கள், அவர்கள் நடத்தும் போராட்ட வடிவங்கள், வழிமுறைகள் ஆகியவற்றையும் மிகக் கவனத்துடனும் ஆழ்ந்த அனுதாபத்துடனும் ஆய்வு செய்தார் எங்கெல்ஸ். வெறும் புத்தகங்களையும் அதிகாரபூர்வமான ஆவணங்களையும் படிப்பதுடன் அவர் நின்றுவிடவில்லை. பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ற புத்தகத்தை எங்கெல்ஸ் பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு அர்ப்பணித்தார்;
பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு விடுத்த அறிக்கையில் அவர் பின்வருமாறு எழுதினார்: “…உங்களை உங்களுடைய இல்லங்களில் காண, உங்களது அன்றாட வாழ்க்கையைப் பார்க்க, உங்களது நிலைமையையும் தேவைகளையும் பற்றி உங்களுடன் பேச, உங்களை அடக்கி ஆள்வோரின் சமுதாய, அரசியல் ஆட்சிக்கு எதிராக நீங்கள் தொடுக்கும் போராட்டத்தைக் காண நான் விரும்புகிறேன்… நான் மேற்குடியினரையும் விருந்துகளையும் பூர்ஷ்வாவின் மதுபானங்களையும் ஒதுக்கிவிட்டு எனது ஓய்வு நேரங்களை உண்மையான தொழிலாளர்களுடன் கலந்து பழகுவதற்குக் கிட்டத்தட்ட முற்றிலுமாக அர்ப்பணித்தேன்; இதைப் பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமை கொள்கிறேன்”1.
1842-ல் மான்செஸ்டர் நகர தொழிலாளர் போராட்ட்டம்
லண்டன், லீட்ஸ், மாஞ்செஸ்டர் ஆகிய நகரங்களில் கூச்சல் நிறைந்த தெருக்களிலும் தொழிலாளர்கள் அடைந்து கிடந்த குடியிருப்புப் பகுதிகளிலும் அலைந்து திரிந்தார் எங்கெல்ஸ். இங்கிலாந்தில் இருந்த காலத்தின் பெரும் பகுதியைத் தான் கழித்த நகரமான மாஞ்செஸ்டரை எங்கெல்ஸ் குறிப்பாக நன்கு ஆராய்ந்தார். அலுவலக வேலையில்லாத ஓய்வு நேரங்களில் அவர் நகரின் வர்த்தகப் பகுதியிலிருந்து தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்றார். பல நேரங்களில் இவரது மனதிற்குப் பிடித்தமான மேரி பியோர்ன்ஸ் இவரோடு வருவார்; அயர்லாந்து உழைப்பாளியாகிய இப்பெண்ணை எங்கெல்ஸ் மாஞ்செஸ்டரில் சந்தித்தார்.
சில நேரங்களில் ஜெர்மன் கவிஞர் கியோர்க் வேயெர்த் எங்கெல்சுடன் கூட வருவதுண்டு. பிரிட்டிஷ் தொழிலாளர்களின் நிலைமையைப் பற்றி சில கட்டுரைகளை எழுதிய இவர் தனது ஒரு கட்டுரையைப் பின்வரும் வார்த்தைகளோடு முடிக்கின்றார்: ”…. பிரிட்டனிலுள்ள பாட்டாளிகளைப் பற்றிய எனது மேலோட்டமான குறிப்பை நான் முடிக்கிறேன்; இப்போது ஜெர்மனியின் மிகச் சிறந்த தத்துவஞானிகளில் ஒருவர் பிரிட்டிஷ் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றிய விளக்கமான படைப்பை எழுத முனைந்துள்ளது குறித்து மகிழ்கிறேன்; இது விலைமதிக்க இயலா முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படைப்பாக இருக்கும்”2.
எங்கெல்ஸ் இங்கிலாந்தில் வசித்த போதுதான் சார்ட்டிச இயக்கம் எழுச்சி பெற்று வந்தது. உலகிலேயே முதலாவதான ”பரந்த, உண்மையிலேயே வெகுஜன , அரசியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட, பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கம்”3 Charter (சாசனம்) எனும் ஆங்கிலேயச் சொல்லிலிருந்து தனது பெயரைப் பெற்றது. மக்கள் சாசனம் நாட்டை ஜனநாயகமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தொழிலாளர்களும் தமது பொருளாயத நிலையை மேம்படுத்தும் நம்பிக்கைகளை இதனுடன்தான் தொடர்புபடுத்தினர்.
வெளிப்புற பார்வையாளராக எங்கெல்ஸ் சார்ட்டிச இயக்கத்தை ஆராயவில்லை. இவருடைய சொந்த வார்த்தைகளின்படி இவர் ”சார்ட்டிச இயக்கத்தோடு வெளிப்படையாகச் சேர்ந்திருந்தார்”4
இவர் சார்ட்டிஸ்டுகளின் கூட்டங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் சென்றார்; சார்ட்டிச இயக்கத்தின் இடதுசாரித் தலைவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இப்பிரிவின் தலைவர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜூலியன் கார்னி, The Northern Star (”வடக்கு விண்மீன்”) எனும் சார்ட்டிசப் பத்திரிகைப் பதிப்பாசிரியர், அலுவலகத்தினுள் அழகாக ஆங்கிலந்தில் பேசிய, பாங்கான, அழகிய இளைஞர் ஒருவர் எப்படி நுழைந்தார் என்று பல ஆண்டுகளுக்குப் பின் நினைவு கூர்ந்தார். தான் பத்திரிகையின் நிரந்தர வாசகர் என்றும் சார்ட்டிச இயக்கத்தில் ஆர்வமுள்ளவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அதுதான் எங்கெல்ஸ்.5
விரைவிலேயே எங்கெல்ஸ் இப்பத்திரிகையின் தீவிர ஊழியரானார்; ஐரோப்பியக் கண்டத்தின், குறிப்பாக ஜெர்மனியின் – இங்கே புரட்சி முதிர்ந்து வருகிறதென அவர் எழுதினார் – சமூக மற்றும் சோஷலிச இயக்கத்தைப் பற்றி எழுதினார். 1844-ம் ஆண்டு ஜூனில் நடைபெற்ற சிலேஸ் நெசவாளர்களின் எழுச்சிக்கு எங்கெல்ஸ் பெரும் முக்கியமளித்தார். ஒடுக்குமுறையும் மிகக் கடும் உழைப்பும் அதிருப்தியும் ஆத்திரமும் அளவிற்கதிகமான மக்கள் வாழும் லன்காஷியரிலும் யோர்க்ஷியரிலும் உள்ளதைப் போன்றே சிலேசியாவின் குன்றுகளிலும் உள்ளன”6 என்று அவர் எழுதினார்.
ராபெர்ட் ஓவன் என்ற கற்பனாவாத சோஷலிஸ்டினுடைய கருத்துக்களைப் பின்பற்றி வந்த பிரிட்டிஷ் சோஷலிஸ்டுகளுடனும் எங்கெல்ஸ் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.
மனித குலத்தின் விடுதலைகான தத்துவ ஆய்வில் இரு மேதைகள் !
The New Moral World (“ஒழுக்கம் நிறைந்த புத்துலகம்’) என்ற அவர்களின் பத்திரிகையில் அவர் பணி புரியத் துவங்கினார். பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்தின் சோஷலிச மற்றும் கம்யூனிச இயக்கத்தையும் மாபெரும் பிரெஞ்சுக் கற்பனாவாத சோஷலிஸ்டுகளான அன்ரீ சான்-சிமோன், ஷார்ல் ஃபூரியே ஆகியோரின் கண்ணோட்டங்களையும் எத்தியேன் காபே, பியேர் லெரூ, பியேர் ழொஸேப் புரூதோன், வில்ஹெல்ம் வெயித்லிங் ஆகியோரின் கருத்துக்களையும் ஆங்கிலேயத் தொழிலாளிகளுக்கு எங்கெல்ஸ் அறிமுகப்படுத்தினார்.
ஜெர்மானிய தத்துவஞானிகளாகிய கான்ட், ஃபிஹ்தெ, ஷெல்லிங் ஆகியோரைப் பற்றியும் ஹெகலின் கருத்துக்களைப் பற்றியும் இவர் சுருக்கமான வடிவத்தில் எடுத்துரைத்தார். பிரெஞ்சு கற்பனாவாத சோஷலிசம் மற்றும் ஜெர்மன் மூலச்சிறப்புள்ள தத்துவஞானம் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கண்ணோட்டங்களை வருணிக்கும் போது, இக்கண்ணோட்டங்களில் இருந்த பலவீனங்களையும் குறைகளையும் விமர்சனம் செய்யும் பொழுதே, உலகக் கலாச்சாரக் களஞ்சியத்துக்கு இவர்கள் ஒவ்வொருவரும் கொண்டு வந்து சேர்த்த பயன்மிக்க விஷயங்களையும் குறிப்பிட்டார்.
ஜெர்மனியில் சோஷலிசம் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகளைப் பற்றி ஆய்வு செய்கையில் ஜெர்மானியர்களைத் தத்துவஞானத் தேசத்தவர் என்று வர்ணித்து இவர்கள் தமது தனித் “தத்துவ ஞானப்’ பாதையின் மூலமாக கம்யூனிசத்தை வந்து அடைவார்கள் என்றும் எனவே படித்தவர்கள், வசதிபடைத்தோர் ஆகிய வர்க்கங்களின் இடையில் கம்யூனிஸ்டுக் கட்சி ஒன்றை அமைப்பது சாத்தியமே என்றும் எங்கெல்ஸ் அப்பொழுது அபிப்பிராயப்பட்டார்.
இளம் ஹெகல்வாதிகளில் சிலர் 1842-ம் ஆண்டின் இலையுதிர் காலத்திலேயே ”வெறும் அரசியல் சீர்திருத்தங்கள் மட்டும் போதாது என்ற முடிவிற்கு வந்து கூட்டுச் சொத்துரிமையின் அடிப்படையில் நிகழும் சமூகப் புரட்சியின் விளைவாகத்தான் தமது சூட்சுமமான கோட்பாடுகளுக்கு ஏற்புள்ள சமுதாய அமைப்பு வந்து சேரும்” என்று அறிவித்தனர்7 என கண்டத்தில் சமுதாய மாற்றம் ஏற்படுத்துவதற்கான இயக்கத்தின் வெற்றிகள் என்ற கட்டுரையில் எங்கெல்ஸ் சொல்லுகிறார். இத்தகைய இடதுசாரி ஹெகல்வாதிகளில் கார்ல் மார்க்சின் பெயரையும் தமது பெயரையும் குறிப்பிடுகிறார் எங்கெல்ஸ். எனவே இங்கிலாந்துக்குக் கிளம்புவதற்கு முன்பாகவே கம்யூனிசத்தை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்தார் எங்கெல்ஸ்; ஆனால் அந்தக் கம்யூனிசம் திட்டவட்டமாயில்லாத, தெளிவற்ற தன்மையை உடையதாய் இருந்தது.
இங்கிலாந்தில் இருந்த காலத்தில்தான் எங்கெல்ஸ் முற்றாகக் கம்யூனிஸ்டாக மாறினார். இந்தக் காலத்தில் இவர் எழுதிய படைப்புகளில் பொருள்முதல்வாதத்தையும் கம்யூனிசத்தையும் நோக்கிய சொந்த விஞ்ஞான மற்றும் வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையிலான, சுயேச்சையான பாதை தெளிவாகப் பிரதிபலித்தது.
“அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கான குறிப்புகள்“8 என்னும் படைப்பு எங்கெல்சின் கருத்துக்கள் உருப்பெற்றதில் முக்கியக் கட்டமாகத் திகழ்ந்தது. இது, 1844-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாரிசில் கா. மார்க்சினாலும் அ. ரூகேயினாலும் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்த Deutsch-Franzosische Jahrbicher (”ஜெர்மன்-பிரெஞ்சு ஆண்டுமலர்”) என்ற சஞ்சிகையில் பிரசுரமானது. எங்கெல்சினுடைய இந்த நூல் முதிர்ச்சி பெற்ற மார்க்சிய நூலாக இருக்கவில்லையாயினும், மார்க்சியக் கருத்துக்களின் முளைகள் இதில் அடங்கியுள்ளன.
”மேதைமை நிறைந்த முதற்குறிப்புகள்” என்று மார்க்ஸ் பின்னர் இந்த நூலை வர்ணித்தார்; சமூக விஞ்ஞானத் துறை சம்பந்தமான இந்த முதல் நூலில் பலவீனங்கள் பலவிருப்பினும், இதற்காகத் தான் சற்றே பெருமைப்படுவதாக எங்கெல்ஸ் 1884-ம் ஆண்டு எழுதினார்.
மால்தஸ் பாதிரியார்
இந்த நூலில் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்தையும் அதன் மூலமாக பாட்டாளி வர்க்க நிலையிலிருந்து முதலாளித்துவத்தை விமர்சனம் செய்வதையும் தொடங்கி வைத்தார் எங்கெல்ஸ். பூர்ஷ்வாப் பொருளாதார வல்லுனர்கள் – அவர்களில் சிறந்தவர்களான அரசியல் பொருளாதாரத்தின் பிரிட்டிஷ் மூலவர்கள் ஆ. ஸ்மித், டே. ரிக்கார்டோ உட்பட- முதலாளித்துவத்தின் பொருளாதார விதிகள் நிலையானவை, மாற்ற முடியாதவை என்று கருதியதற்கு மாறாக எங்கெல்ஸ் இவற்றை வரலாற்று ரீதியாக நிபந்தனைக்குட்பட்டவை, மாறக் கூடியவை என்று கருதினார். லெனினது வார்த்தைகளில், எங்கெல்ஸ் இங்கே, “தனிச்சொத்தின் ஆதிக்கத்தால் ஏற்பட்டுத் தீரும் விளைவுகள் என்ற முறையில், நவீன காலப் பொருளாதார அமைப்பு முறையின் முதன்மையான தோற்றங்களைச் சோஷலிச நோக்கு நிலையிலிருந்து பரிசீலித்தார்”9
பூர்ஷ்வாக்களின் தன்னல நோக்கங்களை முகஸ்துதியான தெளிவற்றக் கோஷங்களால் மூடிமறைக்கும் பூர்ஷ்வா பொருளாதார நிபுணர்களை விமர்சனம் செய்யும் எங்கெல்ஸ் பொருளாதார நிபுணர்கள் எவ்வளவுக்கெவ்வளவு நம் காலத்துடன் நெருங்கியிருக்கின்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் நேர்மையிலிருந்து தள்ளி நிற்கின்றனர்”10என்ற முடிவிற்கு வருகிறார்.
பிற்போக்குத்தனமான, மனித விரோத மால்தஸ் ”தத்துவத்தை” எங்கெல்ஸ் மிகக் கடுமையாகத் தாக்கினார். மனித குலத்தின் இனப்பெருக்கம் இதன் வசம் உள்ள வாழ்க்கை சாதனங்களை ஏதோ எப்போதுமே விஞ்சி நிற்பதாக மால்தஸ் கூறினார். இவ்வாறாக முதலாளித்துவத்தின் கேடுகளுக்கும் குறைகளுக்குமான காரணத்தை மால்தஸ் இயற்கையின் மீது சுமத்தினார். ‘இந்த இழிவார்ந்த, கீழ்மையான கருத்தை, இயற்கைக்கும் மனித குலத்திற்கும் எதிரான இந்த வெறுக்கத்தகு அகந்தையை’11 எங்கெல்ஸ் – ஆத்திரத்தோடு கண்டிக்கிறார்.
மனித குலத்தின் வசமுள்ள உற்பத்திச் சக்தி எல்லையற்றது, விஞ்ஞானம் ஒவ்வொரு நாளும் இயற்கையை மேன்மேலும் மனிதர்களின் ஆளுகைக்கு உட்படுத்தி வருகிறது என்பதற்கான நிரூபணங்களை எங்கெல்ஸ் தருகிறார். உணர்வுப் பூர்வமாக, எல்லா மக்களின் நலன்களுக்காக இந்த உற்பத்திச் சக்தி பயன்படுத்தப்பட வேண்டியதுதான் அவசியம். எந்த ஒரு சமுதாயத்தில் தனிச் சொத்துடைமையின் ஆதிக்கமும் எனவே ஒரு துருவத்தில் ஏழ்மையும் மறு துருவத்தில் மிதமிஞ்சிய செல்வமும் இருக்காதோ அந்தச் சமுதாயத்தில் மட்டுமே இது சாத்தியமானது.
எங்கெல்ஸ் கம்யூனிசக் கண்ணோட்டத்தை வந்தடைந்ததும் கருத்து முதல்வாதத்திலிருந்து பொருள் முதல்வாதத்திற்கு வந்து சேர்ந்ததும் ஒன்றுடன் ஒன்று இடையறா தொடர்பு கொண்டு ஒரே நேரத்தில் நடந்தன.
சிந்தனைக்கும் வாழ்நிலைக்கும், ஆன்மாவுக்கும் இயற்கைக்கும் இடையே நிலவுகின்ற உறவு பற்றிய கேள்விக்குத் தரும் பதிலைப் பொறுத்து பொருள் முதல்வாதிகள், கருத்துமுதல்வாதிகள் என்று தத்துவஞானிகள் இரண்டு பெரும் முகாம்களாகப் பிரிக்கப்படுகின்றனர். ஆன்மாவின் வளர்ச்சியே இயற்கையின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது என்று கருதுகிறவர்கள், எனவே இறுதியில் உலகமானது படைக்கப்பட்ட ஒன்று என்று ஏதாவது ஒரு வழியில் ஒத்துக் கொள்கிறவர்கள் கருத்து முதல்வாத முகாமைச் சேர்ந்தவர்கள். மாறாக, இயற்கைதான் ஆதிமுதல் அடிப்படை என்று கருதுகிறவர்கள் பொருள்முதல்வாதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.
பிரிட்டனில் இருந்த பொழுது எங்கெல்ஸ் எழுதிய நூல்களில் அவர் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திற்கு மாறிக் கொண்டிருந்தது மேலும் மேலும் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் தெரிகிறது. உதாரணமாக, டி. கார்லைல் என்பவர் எழுதிய கடந்த காலமும் நிகழ் காலமும் என்ற புத்தகத்தைப் பற்றி எங்கெல்ஸ் எழுதிய கட்டுரையில் பொருள்முதல்வாத, நாத்திகக் கண்ணோட்டங்களிலிருந்து, புதுச் சமயம் ஒன்று தோற்றுவிப்பதற்காகக் கார்லைல் செய்யும் முயற்சிகளை அவர் கண்டிக்கிறார். ”வீர வழிபாடு” பற்றிப் பிரச்சாரம் செய்யும் கார்லைலினுடைய கருத்துமுதல்வாதத் தத்துவஞானக் கண்ணோட்டத்தை எதிர்த்த எங்கெல்ஸ் முற்போக்குக் கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதில் பொதுமக்கள் வகிக்கும் தீர்மானமான பாத்திரத்தைக் கோடிட்டுக் காட்டினார்.
இந்தக் காலத்தில் Rheinische Zeitung மற்றும் Schweizerischer Republikaner (‘ஸ்விட்சர்லாந்து குடியரசுவாதி”) இதழ்களில் வெளியான எங்கெல்சின் கட்டுரைகளில் இடம்பெற்றிருந்த பிரிட்டனின் சமுதாய, அரசியல் அமைப்பு மற்றும் சமுதாய
இயக்கம் பற்றிய ஆய்வுகளில் அவர் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்திற்கு மாறிக் கொண்டிருந்தது திட்டவட்டமாய்த் தெரிகிறது. பிரிட்டனில் நடந்து கொண்டிருந்த அரசியல் போராட்டத்துக்குப் பல்வேறு வர்க்கங்களின் பொருளாயத நலன்களே அடித்தளமாய் இருந்தன என்ற முடிவுக்கு வந்தார் எங்கெல்ஸ்; அரசியல் அரங்கில் போராடிக் கொண்டிருந்த பல்வேறு கட்சிகளின் வர்க்கத் தன்மையையும் பிரிட்டிஷ் அரசின் வர்க்க இயல்பையும் அவர் வெளிப்படுத்தினார். எங்கெல்ஸ் கன்சர்வேட்டிவ் – டோரிகளின் – கட்சியைப் பிரபுக்குலம் மற்றும் பிற்போக்கு மதகுருமார்களின் கட்சி என்றும், லிபெரல் – விக் – கட்சியை ஆலை முதலாளிகள், வியாபாரிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கட்சி என்றும் இறுதியாக சார்ட்டிஸ்டுகளை பிரிட்டிஷ் தொழிலாளர்களின் கூட்டு உணர்வை வெளிப்படுத்தும் கோட்பாடுகளைக் கொண்ட கட்சி என்றும் வருணித்தார்.
சார்ட்டிஸ்ட் இயக்கத்தின் பொதுக் கூட்டம்
பாரிசிலிருந்து வெளிவந்த Vorwarts! (”முன்னே செல்!”) எனும் ஜெர்மன் பத்திரிகையில் பிரசுரமான பிரிட்டிஷ் நிலைமை. பிரிட்டிஷ் அரசியல் சட்டம் எனும் கட்டுரையில் எங்கெல்ஸ் பெரும்பான்மை தொழிலாளர்களைத் தேர்தல்களிலிருந்து விலக்கிய பிரிட்டிஷ் தேர்தல் சட்டத்தை விரிவாகப் பகுப்பாய்வு செய்து நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நுணுக்கங்களை- கிராமப்புறங்களில் வாக்காளர்கள் நிலப் பிரபுக்களின் விருப்பு வெறுப்பைச் சார்ந்திருப்பது, தேர்தல்களில் எல்லா இடங்களிலும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் முறையும் தனக்கடங்கிய நாடாளுமன்றப் பெரும்பான்மைக்கு வகை செய்வதற்காக உடைமை வர்க்கங்கள் பயன்படுத்தும் மற்ற முறைகளும் ஆதிக்கம் செலுத்துவது, முதலியவற்றை வெளிப்படுத்தினார்.
“பிரிட்டனை உண்மையில் ஆள்வது யார்?” என்ற கேள்விக்கு, “பிரிட்டனில் ஆட்சி புரிவது சொத்துதான்” என்று எங்கெல்ஸ் விடையளித்தார். பிரிட்டிஷ் அரசியல் சட்டத்தின் வர்க்கத் தன்மையையும் குறுகிய எல்லைக்குட்பட்ட அதன் முதலாளித்துவச் “சுதந்திரத்தையும்” வெளிப்படுத்தி எங்கெல்ஸ் முதலாளி வர்க்கத்திற்கும் தனியார் சொத்துரிமைக்கும் எதிராகப் பாட்டாளி வர்க்கம் நடத்துகின்ற போராட்டத்தில் கிடைக்கின்ற வெற்றியில் பிறக்க வேண்டிய உண்மையான சமூக ஜனநாயகத்தை இவையனைத்திற்கும் மாற்றாக முன்வைத்தார். சோஷலிசக் கோட்பாடுதான் இந்த ஜனநாயகத்தின் கோட்பாடாயிருக்கும் என்று எங்கெல்ஸ் எழுதினார்.
பிரிட்டனில் நிலவுகின்ற சமுதாய உறவுகளை, முதலாவதாக பாட்டாளி வர்க்கத்தின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் பற்றிய ஆய்வின் முடிவுகளை பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை12 என்ற தமது சிறந்த நூலில் எங்கெல்ஸ் தொகுத்துக் கொடுக்கிறார். இந்நூல் மார்க்சைச் சந்தித்த பின் எழுதி முடித்து 1845-ம் ஆண்டு ஜெர்மனியில் வெளியிடப்பட்டது. எங்கெல்சே பின்னர் குறிப்பிட்டபடி, இந்நூல் விஞ்ஞானக் கம்யூனிச வளர்ச்சியின் தொடக்க நிலைக் கட்டங்களில் ஒன்றாக விளங்கியது; இதில் விஞ்ஞானக் கம்யூனிசம் தனது மூல ஊற்றுகளில் ஒன்றான மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்திலிருந்து தோன்றியதன் சுவடுகளைக் காணலாம். அதே நேரத்தில் – எங்கெல்சின் வார்த்தைகளின்படி – இந்நூல், 40-ம் ஆண்டுகளின் மத்தியில் சமுதாய வளர்ச்சியில் பொருளாதாரக் காரணியின் பாத்திரத்தைப் புரிந்து கொள்வதை நோக்கி, அதாவது வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை நோக்கி தானாகவே முன்னேற இவரால் எவ்வளவு முடிந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. எங்கெல்சின் இந்த ஆரம்ப கால படைப்பு உலக சோஷலிச இலக்கியத்தின் தலை சிறந்த நூல்களில் ஒன்றாக இருந்தது, இருந்து வருகிறது.
பிரிட்டனில் பெரும் இயந்திரத் தொழில் துறையைத் தோற்றுவித்து இயந்திரத் தொழில் சார்ந்த பாட்டாளி வர்க்கத்தை உருவாக்கித் தந்த இயந்திரத் தொழிற்புரட்சியின் ஆழ்ந்த விளைவுகளை இந்த நூலில் எங்கெல்ஸ் ஆய்வு செய்கிறார். முறையாகத் திரும்பத் திரும்ப வெடிக்கிற பொருளாதார நெருக்கடிகள், வேலையில்லா இயந்திரத் தொழில் துறை தொழிலாளர்களின் சேமப் படை உருவாவது, முதலாளித்துவ உற்பத்தி விரிவடைய விரிவடைய தொழிலாளி வர்க்கமும் உழைப்பாளிகளும் மேலும் கடுமையான சுரண்டலுக்கு ஆளாவது போன்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் நியதிகள் பலவற்றை எங்கெல்ஸ் வெளிப்படுத்துகிறார். தொழிலாளர்கள் வேலை செய்யும் நிலைமைகள், அவர்களின் சம்பளம், வேலை நாள், அவர்களின் வீட்டு நிலைமைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கடுமையான உழைப்பு ஆகியவற்றைத் தெளிவாகவும் உண்மையாகவும் சித்திரம் தீட்டி வேலையற்று இருப்போரின் கையறு நிலையைப் படம் பிடித்தும் காட்டிய எங்கெல்ஸ் முதலாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கமும் சமரசத்திற்கு இடமில்லாத இரு வேறு நலன்களால் எதிரும் புதிருமாய் நிற்கின்றன என்ற முடிவுக்கு வருகிறார்.
நவீன கூலித் தொழிலாளிக்கும் அடிமை, பண்ணையடிமைக்கும் இடையிலுள்ள கோட்பாட்டு ரீதியான வேறுபாடு எதில் அடங்கியுள்ளது என்று எங்கெல்ஸ் காட்டுகிறார். “அடிமை குறைந்தபட்சம் அவனுடைய சொந்தக்காரனுக்கு தனிப்பட்ட முறையில் ஆதாயமானதால், இவனது வாழ்க்கைக்கு வழியுள்ளது; பண்ணையடிமைக்கோ சோறு போடுவதற்கான துண்டு நிலம் உள்ளது; இருவருக்கும் குறைந்தபட்சம் பட்டினிச் சாவிலிருந்து உத்திரவாதம் உள்ளது; ஆனால் பாட்டாளி முற்றிலுமாகத் தனக்காகவே இருக்கிறான் என்றாலும், அதே நேரத்தில் தனது சக்திகளை அவன் முழுமையாகக் கணக்கில் கொள்ளும் அளவிற்கு இவற்றைப் பயன்படுத்த அவனுக்கு வாய்ப்பளிப்பதில்லை.” 13
தொழிலாளி வர்க்கத்திற்கும் ஒடுக்கப்படுகின்ற, சுரண்டப்படுகின்ற மற்ற வர்க்கங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை எங்கெல்ஸ் அதனது வாழ்க்கை வசதிகளைத் தேடிக் கொள்ளுவதற்கு முடியாத மிக மோசமான நிலையிலும் நாளைய தினத்தைப் பற்றிய இடையறா உறுதியின்மையிலும் மட்டும் காணவில்லை. பாட்டாளி வர்க்கம் வாழுகின்ற சூழ்நிலைகளே, அது ஒன்றுபட்டு உறுதியுறுவதற்கும் அணி திரளுவதற்கும் முதலாளித்துவத்தை அழித்தொழிக்கும் புரட்சிகரப் பணியினைச் செய்து முடிப்பதற்கும் தேவையான அடிப்படைகளைப் படைத்துக் கொடுத்திருக்கின்றன என்று எங்கெல்ஸ் கண்டதில்தான் இவரது முக்கிய சேவை அடங்கியுள்ளது.
தொழிலாளி வர்க்கம் எத்தகைய போராட்ட முறைகளையும் போராட்ட வடிவங்களையும் மேற்கொள்ளுகிறது, மனிதத் தன்மையற்ற சுரண்டலை எதிர்த்து அவ்வர்க்கம் வெளிப்படுத்திய ஆரம்ப காலத்திய மற்றும் தன்னிச்சையான கண்டன வடிவங்களிலிருந்து அமைப்பு ரீதியிலும் உணர்வு பூர்வமாகவும் மேலும் சிறந்த போராட்ட முறைகளுக்கு இவ்வர்க்கம் எப்படி மாறிச் செல்கிறது என்று எங்கெல்ஸ் இந்தப் புத்தகத்தில் ஆய்வு செய்கிறார்.
முதலாளி வர்க்கத்தினரை எதிர்த்து தொழிலாளிகள் அடைந்த ஆத்திரம் ஆரம்பத்தில் இயந்திரங்களைப் புகுத்துவதையே எதிர்க்கும் ஒரு போராட்டமாக வெடித்தது. இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்களைத் தொழிலாளர்கள் துன்புறுத்துவது, அவ்வியந்திரங்களை உடைத்து அழிப்பது, எழுச்சிகள் நடத்தி அவற்றின் மூலம் தொழிற் சாலைகளையே நிர்மூலமாக்குவது போன்ற தொழிலாளர்களின் செய்கைகளை – உதாரணத்திற்குக் குறிப்பிடுகிறார் எங்கெல்ஸ். கொடுமையான துன்பங்களைக் கொண்டு வருவது இயந்திரங்கள் அல்ல என்றும் மாறாக இவ்வியந்திரங்களையும் ஆலைக் கட்டிடங்களையும் மூலப் பொருள்களையும் தனிச் சொத்தாகக் கொண்டிருக்கிற முதலாளித்துவ உற்பத்தி முறைதான் இத்துன்பங்களுக்குக் காரணம் என்றும் தொழிலாளர்களால் இந்தக் காலத்தில் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. சுருங்கக் கூறின், அவர்களால் இன்னமும் இயந்திரத்தையும் அதன் முதலாளித்துவ பிரயோகத்தையும் வேறுபடுத்திப் பார்க்க இயலவில்லை.
ஆயினும் இயந்திர முறையையும் ஆலை முறையையும் அழித்தொழிக்கும் தமது முயற்சிகள் எந்தப் பலனையும் தரவில்லை என்று தொழிலாளர்கள் விரைவில் நன்கு உணர்ந்து கொண்டார்கள். தமது எதிர்ப்புகளைத் தெரிவிக்கப் புது வடிவங்களைக் கண்டு பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தொழிற்சங்க அமைப்பும் வேலைநிறுத்தப் போராட்டமும் இத்தகைய ஒரு புது வடிவ எதிர்ப்பாக அமைந்தன. கற்பனாவாத சோஷலிஸ்டுகளுக்கு மாறாக, தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்கும் அவர்களின் அமைப்புறுதியும் ஒற்றுமையும் மேம்பட்டு வருவதற்கும் எத்தகைய பெரும் சக்தியாய் வேலைநிறுத்தங்கள் விளங்குகின்றன என்று எங்கெல்சினால் மதிப்பிட முடிந்தது. “வேலைநிறுத்தங்கள் இராணுவப் பள்ளிகளாகும்; இவற்றில் தொழிலாளர்கள் ஏற்கெனவே தவிர்க்க இயலாததாக மாறியுள்ள மாபெரும் போராட்டத்திற்குத் தயாராகுகின்றனர்; மாபெரும் தொழிலாளர் இயக்கத்துடன் தான் இணைந்து விட்டதைப் பறைசாற்றும் தொழிலாளி வர்க்கத்து தனிப்படைகளின் நடவடிக்கையாக இவை விளங்குகின்றன.”14
போராட்டத்தின் இன்னும் சிறந்த வடிவங்களின் மாதிரிகளை பிரிட்டிஷ் தொழிலாளர்கள் ஏற்கெனவே உருவாக்கி இருந்தனர். தனித்தனி முதலாளிகளை எதிர்த்து முழுமையற்ற பொருளாதாரப் போராட்டங்களை நடத்தி வந்த தொழிலாளர்கள், ஆதிக்கம் செலுத்தி வந்த வர்க்கங்களின் கூட்டாட்சியை – முதலாளித்துவ அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தத் தொடங்கினார்கள்.
”சார்ட்டிசம் என்பது முதலாளி வர்க்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் ஒருமுகப்பட்ட வடிவம். தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளிலும் வேலை நிறுத்தங்களிலும் இந்த எதிர்ப்பு எப்போதுமே துண்டு துண்டாகப் பிரிந்து நின்றது; தனித்தனித் தொழிலாளர்களோ, தொழிலாளர் குழுக்களோ தனித்தனி முதலாளிகளை எதிர்த்துப் போராடி வந்தனர்… சார்ட்டிச இயக்கத்திலோ, முதலாளி வர்க்கத்திற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கம் முழுமையுமே கிளர்ந்து எழுகிறது, முதலாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தையே பிரதானமாக எதிர்த்துத் தாக்குகிறது, முதலாளி வர்க்கம் தனது பாதுகாப்புக்காகப் போட்டுக் கொண்டிருந்த சட்டங்கள் என்ற வேலியின் மீது சார்ட்டிச இயக்கம் பாய்கிறது”15 என்று எங்கெல்ஸ் எழுதினார்.
மார்க்ஸ் குடும்பத்துடன் எங்கெல்ஸ்
லெனின் சொன்னபடி, எதிர்கால மார்க்சியத்தின் பல விஷயங்களைப் பெரும் புலமையுடன் முன்னறிவித்த சார்ட்டிச இயக்கம் எங்கெல்சின் மீது மிகப் பெரும் செல்வாக்கு செலுத்தியது. சார்ட்டிச இயக்கத்தின் முக்கியத்துவத்தை உயர்வாக மதிப்பிட்டு அதில் செயல் வேகத்துடன் ஈடுபட்ட எங்கெல்ஸ் இந்த இயக்கத்திற்கே உரியதாய் இருந்த பெரும் பலவீனங்களையும் சுட்டிக் காட்டினார். “சட்ட பூர்வமாகப்” புரட்சியைக் கொண்டு வர வேண்டும் என்னும் சார்ட்டிசக் கருத்தைச் சாடினார் எங்கெல்ஸ்; இது தானாகவே ஒரு முரண்பாடு எனவும் நடைமுறையில் சாத்தியமற்றது என்றும் அவர் நிரூபித்தார். “அவர்களின் சோஷலிசம் இன்னும் கருநிலையிலேயே இருக்கிறது” என்பதுதான் சார்ட்டிஸ்டுகளின் முக்கியமான பலவீனம் என்றும் ஏழ்மையை ஒழிப்பதற்காக இவ்வியக்கத்தின் தனித்தனித் தலைவர்கள் முன்வைக்கும் சமூகப் – பொருளாதாரச் சீர்திருத்தங்கள் – அதாவது, நிலத்தைத் துண்டு துண்டாகப் பிரித்துத் தொழிலாளர்களுக்கு வழங்கி விட வேண்டும் என்று அவர்கள் சொல்வதானது வளர்ந்து வரும் பெரும் இயந்திரத் தொழில் துறையைப் பார்க்கும் பொழுது அர்த்தமற்றதாக இருக்கின்றன என்றும் எங்கெல்ஸ் கருதினார்.
உற்பத்திச் சாதனங்கள் தனியார் கைகளில் இருப்பதை ஒழிப்பது அவசியம் என்று சார்ட்டிசம் புரிந்து கொள்ளும் அளவுக்குச் செல்லவில்லை என்றால், தனது பதாகையில் சோஷலிச முழக்கங்களை இவ்வியக்கம் இன்னும் பொறித்துக் கொள்ளவில்லை என்றால், அதற்கு பிரிட்டிஷ் சோஷலிஸ்டுகள்தான் கணிசமான அளவுக்குக் காரணம். பிரிட்டிஷ் சோஷலிசத்தின் தலைவரும் சித்தாந்தவாதியுமான ஓவன், மாபெரும் பிரெஞ்சுக் கற்பனாவாத சோஷலிஸ்டுகளான சான்-சிமோனையும் ஃபூரியேயையும் போலவே வெகுஜனத் தொழிலாளர் இயக்கம் வேண்டாமென்று ஒதுங்கி நின்று அரசியல் போராட்டம் என்பதையே ஏற்றுக் கொள்ள மறுத்தார்.
முதலாளித்துவச் சமுதாயத்தின் தீங்குகளையும் தீப்புண்களையும் ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்தி உழைக்கும் மக்களின் துயரங்களைக் கண்டு மிகப் பெரும் அனுதாபத்துடன் அவர்களை அணுகினார் என்பதே ஓவன் ஆற்றிய சந்தேகத்திற்கிடமற்ற பணியாகும். முன்னாள் ஆலை முதலாளியும் கொடைவள்ளலும் பின்னால் சோஷலிஸ்டுமான ஓவன் சமுதாயத்தை இன்னல்களிலிருந்து விடுவிப்பதைத் தம் கடமையாகக் கொண்டார். ஆனால் சான்-சிமோன், ஃபூரியே ஆகியோரின் சோஷலிசத்தைப் போலவே ஓவனுடைய கற்பனாவாத சோஷலிசத்தாலும் விடுதலைக்கான மெய்யான வழியைக் காட்ட முடியவில்லை. முதலாளித்துவத்தில் நிலவும் கூலி அடிமை முறையின் சாராம்சத்தை அதனால் விளக்க முடியவில்லை; முதலாளித்துவ முறையின் வளர்ச்சி பற்றிய விதிகளை அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை; ஒரு புதிய சமுதாயத்தின் படைப்பாளியாக அமைய வல்ல சமுதாயச் சக்தியை அதனால் சுட்டிக் காட்டவும் முடியவில்லை.”16
மேலிருந்து, உடைமை வர்க்கங்களிடமிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் தனது விடுதலையை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் உதவியற்றுத் தவிக்கும் மக்கள் திரளாகத்தான் கற்பனாவாத சோஷலிஸ்டுகள் பாட்டாளி வர்க்கத்தைப் பார்த்தார்கள். புதிய சமுதாயத்தைப் பற்றி தான் விரிவாகத் தீட்டியுள்ள திட்டத்தை நிறைவேற்றுவதற்காகத் தமது உதவியை அளிக்கவல்ல செல்வந்தர்கள் தன்னைப் போலவே முன்வருவார்கள் என்று ஓவன் நம்பினார். அமெரிக்காவில் ”புதிய சீரிசைவு” என்ற கம்யூனிசக் காலனியைத் தான் உருவாக்கியதன் மூலம் துவக்கி வைத்த கம்யூனிசக் காலனி கட்டுமான அனுபவம் உதாரணமாகத் திகழ்ந்து மனித குலம் முழுவதையும் இப்பாதையில் செல்லுமாறு நம்ப வைக்கும் என்று கருதினார். ஆனால் எதிர்பார்க்கப்பட்டபடியே, உடைமை வர்க்கங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் ஓவன் விடுத்த அறைகூவல் பயனற்ற பேச்சாக இருந்தது. தொழிலாளர்களின் நடைமுறைப் போராட்டத்திலிருந்து விலகிய ராபெர்ட் ஓவனின் சோஷலிசம் கற்பனையாகவே இருக்கும்படி நேரிட்டது.
பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ற புத்தகத்தில் பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கத்தின் பிரதானமான, தீர்மானகரமான கடமை சார்ட்டிசத்துடன் சோஷலிசத்தை இணைப்பதுதான் என்ற முக்கியமான முடிவுக்கு வந்தார் – எங்கெல்ஸ். அரசியல் போராட்டமும் தொழிலாளர்களின் வெகுஜனப் புரட்சி இயக்கமும் அத்தொழிலாளர்களைச் சோஷலிசத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும் என்று எங்கெல்ஸ் நிரூபித்தார். மறுபுறத்தில், சோஷலிசமானது தன்னந்தனிக் கற்பனாவாதிகளின் கனவுகளிலிருந்து விடுபட்டு ஒரு எதார்த்த சக்தியாக மாற வேண்டும் என்றால், அந்தச் சோஷலிசம் தொழிலாளி வர்க்கத்தின் வெகுஜன அரசியல் போராட்டத்தின் குறிக்கோளாக மாற வேண்டும் என்று அவர் காட்டினார்.
சோஷலிசத்தையும் தொழிலாளர் இயக்கத்தையும் ஒன்றிணைப்பது, கற்பனாவாத சோஷலிசமாக இருந்த ஒன்றை விஞ்ஞான சோஷலிசமாக மாற்றுவது, பலவீனமான தன்னந்தனி மனிதர்களின் கனவாக இருந்த, அளவில் பெரிய, வல்லமைமிக்க வர்க்கத்தின் கோட்பாடாக மாற்றுவது என்ற உலகம் தழுவிய வரலாற்றுப் பணி, கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்சின் தோள்களில் வீழ்ந்தது.
1 K. Marx, F. Engels, Collected Works, Vol. 4, p. 297. 2கி. வேயெர்த், தேர்வு நூல்கள், மாஸ்கோ, 1953, பக்கம் 302 (ருஷ்ய மொழியில்). 3 V. I. Lenin, Collected Works, Vol. 29, Progress Publi shers, Moscow, p. 309. – 4 K. Marx, F. Engels, Collected Works, Vol. 6, p. 389. 5 மார்க்சையும் எங்கெல்சையும் பற்றிய நினைவுக் குறிப்புகள், பக்கம் 287 பார்க்க. 6 K. Marx, F. Engels, Collected Works, Vol. 3, p. 531. 7 K. Marx, F. Engels, Collected Works, Vol. 3, p. 406. 8 K. Marx, F. Engels, Collected Works, Vol. 3, pp. 418-443. 9 வி. இ. லெனின், கார்ல் மார்க்சும் அவரது போதனையும், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1981, பக்கம் 71. 10 K. Marx, F. Engels, Collected Works, Vol. 3, p. 420. 11 K. Marx, F. Engels, Collected Works, Vol. 3, p. 437 12 K. Marx, F. Engels, Collected Works, Vol. 4, pp. 295– 583. 13 K. Marx, F. Engels, Collected Works, Vol. 4, p. 413. 14 K. Marx, F. Engels, Collected Works, Vol. 4, p. 512. 15 K. Marx, F. Engels, Collected Works, Vol. 4, p. 517. 16 வி. இ. லெனின், நூல் திரட்டு, நான்கு பாகங்களில், முதற் பாகம், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1977, பக்கம் 33.
நவ: 26. நாடு தழுவிய தொழிலாளர் – விவசாயிகள் கூட்டுப்போராட்டம் வெல்லட்டும்!
ஒன்றிய மோடி 3.0 அரசின் மக்கள் விரோத,தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோதக் கொள்கைகளையும் ஜனநாயக சக்திகள் மீதான அடக்குமுறையையும் எதிர்த்து எதிர்வரும் நவம்பர் 26 அன்று நாடு தழுவிய அளவில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள், இன்னவகைப் போராட்டங்களை நடத்த விவசாயிகளது ஐக்கிய அமைப்பும் (SKM), மத்திய தொழிற்சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளன.
2020 ஆம் ஆண்டில் இதே நவம்பர் 26- ல் தான் விவசாயிகள் நடத்திய தலைநகர் (டெல்லி) முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட நவ.26 என்கிற தினத்தைத் தான் விவசாய பெருமக்கள் தங்கள் போராட்டத்தின் துவக்க நாளாக அறிவித்தனர்.
2020 -இல் துவங்கப்பட்ட முற்றுகைப் போராட்டத்தின் நான்காவது ஆண்டு நிறைவு தினத்தில் SKM அமைப்புடன் மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து உழைக்கும் மக்களது வாழ்வாதாரத்தையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க 22 கோரிக்கைகளுடன் நாடுதழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்த போராட்டத்தில் அமைப்புசாரா இயக்கங்கள், துறைவாரியான தொழில்வாரியான பகுதி – பிராந்தியவாரியான தொழிற்சங்கங்களும், சுயேச்சையான தொழிற்சங்க அமைப்புகளும், பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் இணைந்து கொள்வதாக அறிவித்துள்ளன.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயம் செய்தல், காண்டிராக்ட் வேலைமுறையை ஒழித்தல், 4 புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை (Labor Codes) கைவிடுதல் உள்ளிட்ட 22 கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெறுகின்ற இந்த ஒன்றுபட்ட போராட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தன்னை இணைத்துக் கொள்கிறது. மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளவும், ஆலைவாயில்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் அறைகூவல் விடுக்கிறது.
மாநில ஒருங்கிணைப்புக்குழு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
பெரும் போராட்டங்களின் மூலம் வெற்றி பெறலாம் | முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்
ஒன்றிய அரசின் மூன்று புதிய குற்றவியல் கருப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களில் கூட்டுக் குழு (JAAC) சார்பில் “தென்னிந்திய வழக்கறிஞர்களின் கருத்தரங்கம்” நவம்பர் 17 அன்று நடைபெற்றது.
அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹரியானா தேர்தல் முடிவு வெளியாகி ஜனநாயக சக்திகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, காங்கிரசின் கூட்டணி கட்சிகளையே ஆத்திரமூட்டியுள்ளது. காங்கிரசின் தோல்வியை நேரடியாக விமர்சித்துள்ள (உத்தவ்) சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா “வெற்றியை தோல்வியாக்குவது எப்படி என்ற கலையை காங்கிரசிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று சாடியுள்ளது.
ஏனெனில், பா.ஜ.க. ஆதரவு ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறுவது உறுதி என்றே தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளை வெளியிட்டன. அதேபோல், ஹரியானாவில் கடந்தாண்டு கள ஆய்வு மேற்கொண்ட தேர்தல் பகுப்பாய்வாளர் யோகேந்திர யாதவ் உட்பட இந்தியாவிலுள்ள ஆகப்பெரும்பான்மையான தேர்தல் பகுப்பாய்வாளர்களும் (Election analyst) இதே கருத்தைக் கூறி வந்தனர். மேலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஹரியானாவில் மொத்தமுள்ள பத்து தொகுதிகளிலும் வென்ற பா.ஜ.க., 2024 தேர்தலில் ஐந்து இடங்களை காங்கிரசிடம் பறிகொடுத்த சம்பவமும் மேற்கூறிய கணிப்புகளை உறுதிப்படுத்தின. சொல்லபோனால், ஹரியானா தேர்தலில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை பா.ஜ.க-விற்கே இல்லாததால் வாக்கு எண்ணிக்கையன்று வாக்குச்சாவடிகளில் கூட பா.ஜ.க-வினரை காண முடியவில்லை.
இவ்வாறு, ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இக்கணிப்புகளுக்கும் களநிலவரத்திற்கும் நேர்மாறாக ஹரியானாவில் 48 இடங்களில் வெற்றிபெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையை பெற்றிருப்பது இந்தியா கூட்டணி ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், களச்சூழல் பா.ஜ.க. கும்பலுக்கு எதிராக இருந்தாலும் அடுத்தடுத்து தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று காங்கிரஸ் தோல்வியடைவது எப்படி? என்பதற்கு விடைக்காண பலரும் முயற்சிக்கின்றனர்.
இதில் ஒரு பிரிவினர், காங்கிரஸ் சில உத்திகளை கையாள்வதில்தான் தவறிழைத்துவிட்டதாகவும் அது சரிசெய்துகொள்ளக் கூடியதுதான் என்றும் அதற்காக அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தோற்றுவிடும் என்று கருதிவிட வேண்டாம் என்றும் காங்கிரசை விமர்சிப்பவர்களுக்கு ‘இடித்துரைக்கின்றனர்’. சான்றாக, பல மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றிபெற வேலைசெய்த, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-விற்கு பிரஷாந்த் கிஷோரை பரிந்துரைத்த “தேர்தல் வியூக வகுப்பாளர்” (Election strategist) சுனில் கனுகோலுவை ஹரியானா தேர்தலுக்கு பொறுப்பாக்கியதில் மட்டும்தான் காங்கிரஸ் வழுக்கி விழுந்துவிட்டது, மற்றபடி அனைத்தும் சரியாகத்தான் இருந்தது என்பதுபோல விவாதத்தை கட்டியமைக்கின்றனர். பாசிச பா.ஜ.க-வை வீழ்த்தப்போவதாக சொல்லும் காங்கிரஸ், காசுக்காக எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் வேலைபார்க்கும் இதுபோன்ற புரோக்கர்களை நம்பித்தான் தேர்தலை அணுகுகிறது என்ற கேலிக்கூத்தை இவர்கள் கேள்வி எழுப்புவதில்லை. மாறாக, இத்தகைய வாதங்களானது தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்துவதில் உள்ள சவால்களை பரிசீலிக்காமல் திசைதிருப்புவதற்கும் அதற்கு ஓர் காரணமாக உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மக்கள்விரோதத் தன்மையை மூடிமறைப்பதற்குமே வழிவகுக்கும்.
இன்னொருபுறத்தில், பத்திரிகையாளர்கள் பலர் இத்தேர்தல் முடிவையொட்டி காங்கிரசின் தவறுகள் குறித்தும், பா.ஜ.க-வின் அணுகுமுறைகள் குறித்தும் எதார்த்தமான மதிப்பீடுகளை முன்வைப்பதையும் காண முடிகிறது. சான்றாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்றது குறித்து “2024: இந்தியாவை ஆச்சரியப்படுத்திய தேர்தல்” என்ற நூலை எழுதி வெளியிடயிருக்கும் பத்திரிகையாளரான ராஜ்தீப் சர்தேசாய், ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் தோற்றதற்கான பத்து காரணங்களை பட்டியலிட்டு “இந்தியா டுடே” செய்தி இணையதளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அக்கட்டுரையின் பின்குறிப்பில், “அனைத்து கருத்துக்கணிப்பு நிபுணர்களையும் போலவே, ஹரியானாவில் காங்கிரஸ் எளிதாக வெற்றிபெறும் என்று கணித்தவர்களில் நானும் ஒருவன். தேர்தலின் போட்டித் தன்மையையும், தோல்வியிலிருந்து வெற்றிபெறும் பா.ஜ.க-வின் திறனையும் நானும் தவறாக மதிப்பிட்டுவிட்டேன். மீ குல்பா, மீ அதிகபட்ச குல்பா (லத்தீன் மொழியில் எனது தவறு எனப் பொருள்படும் ரோமன் கத்தோலிக்க வழி பாவ மன்னிப்பு சொற்றொடர்)” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், களத்தில் பா.ஜ.க-விற்கு கடுமையான நெருக்கடிகளும் எதிர்ப்புணர்வும் இருந்தபோதிலும் தேர்தலில் பா.ஜ.க. வெற்றியடைவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்பும் இதேபோன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.
குறிப்பாக, கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானது. பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என்றே தெரிவித்தன. ஆனால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் தோற்கடித்து பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அதனைத்தொடர்ந்து நடந்துமுடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், பா.ஜ.க. கடுமையான நெருக்கடிகளை சந்தித்தாலும் பெரும்பான்மை பெறமுடியாமல் போனாலும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.
பா.ஜ.க-வின் இத்தகைய வெற்றிக்கு, அரசு கட்டமைப்பு மற்றும் அதிகார, பணபலம் ஆகியவை காரணங்களாக இருந்தாலும், மக்களால் இந்த தேர்தல் கட்டமைப்பில் பா.ஜ.க-விற்கு மாற்றான சக்தியை காண முடியாமல் இருப்பதுதான் முக்கியமான காரணமாக இருக்கிறது. அப்படியெனில், பா.ஜ.க-விற்கு மாற்று தாங்கள்தான் என்று சொல்லி பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்யும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் என்ன செய்துக்கொண்டிருக்கின்றன என்பதுதான் பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்துவதில் பரிசீலனைக்குரிய இடமாகும்.
மோடி தலைக்காட்ட அஞ்சியத் தேர்தல்
மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் பாசிசக் கும்பலை முதன்முதலில் பின்வாங்க வைத்த போராட்டமாக அமைந்தது. இது பாசிசக் கும்பலை தோல்வி முகத்திற்கு தள்ளியதோடு, இந்தியா முழுவதும் பாசிசக் கும்பலுக்கு பல நெருக்கடிகளையும் தேர்தல் களத்தில் தோல்வியையும் பெற்று தந்தது. அதிலும் குறிப்பாக, இப்போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்ட விவசாயிகளின் சொந்த மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதி போன்றவற்றில் பாசிச பா.ஜ.க. நேரடியாகவே பல இழப்புகளையும் சவால்களையும் சந்தித்தது.
‘நட்சத்திர பிரச்சாரகரான’ மோடி ஹரியானாவில் மொத்தமாகவே நான்கு பேரணிகள் மட்டுமே மேற்கொண்டார்.
இதனாலேயே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான தொகுதிகளை பா.ஜ.க. எதிர்க்கட்சிகளிடம் பறிக்கொடுத்தது. மேலும், குறைந்தபட்ச ஆதார விலை கோரும் டெல்லி சலோ 2.0 போராட்டத்தில் பங்கேற்க கிளம்பிய விவசாயிகளை அம்மாநில பா.ஜ.க. அரசு போலீசை கொண்டு கடுமையாக ஒடுக்கியது விவசாயிகளை மேலும் ஆத்திரமூட்டியது. இதன் காரணமாகவே, “எங்களை எல்லைக்குள் அனுமதிக்காத பா.ஜ.க-வினரை நாங்கள் அனுமதியோம்” என்று ஹரியானா விவசாயிகள் பா.ஜ.க-வினரை ஓட ஓட விரட்டியடித்தனர். ஹரியானா சட்டமன்றத் தேர்தலின் போதும் இக்காட்சிகளை காண முடிந்தது. மேலும், விவசாயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிறுவத் துடிக்கும் பா.ஜ.க-வின் கார்ப்பரேட் சேவையால் இம்மாநிலத்தில் விவசாய நெருக்கடி (Agrarian crisis) கடுமையாக உள்ளது. டன் கணக்கான நெற்பயிற்கள் கொள்முதல் செய்யப்படாமல் வீதிகளிலும் வயல்வெளிகளிலும் காய்ந்து கொண்டிருப்பதாக விவசாயிகள் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.
அதேபோல், மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில், தங்களை ‘பசு ரட்சகர்கள்’ என்று சொல்லிக்கொண்டும் லவ் ஜிகாத், மதமாற்ற தடைச் சட்டம் போன்ற பெயர்களிலும் இஸ்லாமிய மக்கள் மீது தொடுக்கப்பட்ட நரவேட்டைகள் கொஞ்சநஞ்சமல்ல. இந்த இந்துத்துவ பயங்கரவாதத் தாக்குதலால் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி தலித் மக்களும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க. இடஒதுக்கீட்டை பறித்துவிடும் என்ற அச்சம் காரணமாகவும் தலித் மக்கள் மத்தியில் பா.ஜ.க. எதிர்ப்பு மேலோங்கியிருந்தது.
மறுகாலனியாக்க திட்டங்களை தீவிரமாக அமல்படுத்திவரும் பா.ஜ.க., அரசு வேலைகளை ஒழித்துக்கட்டிவருவதன் விளைவாக ஹரியானாவில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதால் லட்சகணக்கான இளைஞர்களும் அவர்களது குடும்பத்தினரும் கடும் ஆத்திரமடைந்துள்ளனர். வறுமை பிடியிலிருந்து மீள உயிரை பணயம் வைத்து போர் சூழல் நிலவும் இஸ்ரேலுக்கு ஹரியானா இளைஞர்கள் வேலைக்கு செல்கின்றனர். குறிப்பாக, இந்திய மக்கள்தொகையில் இரண்டே சதவிகிதமாக உள்ள ஹரியானா மக்கள் இந்திய ராணுவத்தில் 11 சதவிகித பங்களிப்பு செய்யும் நிலையில், ராணுவத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்காக பா.ஜ.க. கொண்டுவந்த அக்னிபாத் திட்டம் ஹரியானா இளைஞர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. இத்திட்டத்திற்கு எதிராக ஹரியானாவில் நடந்த போராட்டங்களின் தாக்கம் இன்னமும் இளைஞர்கள் மத்தியில் நீடிக்கவே செய்கிறது.
இதேபோல், தங்களை பாலியல் வன்கொடுமை செய்த பா.ஜ.க-வை சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டுமென்று போராடிய மல்யுத்த வீராங்கனைகளை பா.ஜ.க. அரசு கடுமையாக ஒடுக்கிய சம்பவம் ஏற்கெனவே ஹரியானா மக்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியிருந்தது. இந்நிலையில், ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்திற்கு கிடைக்கவிருந்த பதக்கத்தை பாசிசக் கும்பல் பறித்த சம்பவம் எதிர்ப்பை தீவிரமாக்கியது. இதன்காரணமாகவே, ஒலிம்பிக் போட்டியின்போது மோடி பணிந்துவந்து வினேஷ் போகத்தை தொலைபேசியில் அழைத்து பேசிய சம்பவமும், வினேஷை வெள்ளி பதக்கம் வென்ற வீராங்கனையாகவே நடத்துவோம் என்று ஹரியானா பா.ஜ.க. அரசு அறிவிக்க வேண்டிய கட்டாயமும் உருவானது. மேலும், எந்த எதிர்விளைவுகள் குறித்தும் கவலைபடாமல் நாக்கில் நரம்பின்றி பேசுவதையே வழக்கமாகக் கொண்ட பாசிசக் கும்பல் இத்தேர்தலின்போது விவசாயிகள், மல்யுத்த வீராங்கனைகளை இழிவுப்படுத்தி பேசிய கங்கனா ரனாவத்தை நாவடக்க சொன்னதும் இந்த பீதியின் காரணமாகவே.
இந்த ஒட்டுமொத்த மக்கள் எதிர்ப்பையும் நெருக்கடிகளையும் சமாளிக்க முடியாமல் நடந்துமுடிந்த ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் விழிபிதுங்கிப்போனது பாசிசக் கும்பல். இதனால் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஹரியானாவை ஆட்சி செய்துவந்த பா.ஜ.க. முதல்வர் மனோகர் லால் கட்டாரை நீக்கிவிட்டு தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நயாப் சிங் சைனியை முதல்வராக்க வேண்டிய நிலைக்கு பாசிசக் கும்பல் தள்ளப்பட்டது. மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி மனோகர் லால் கட்டாரை தேர்தல் பரப்புரையிலோ குறைந்தபட்சம் சுவரொட்டிகளிலோ கூட பெரியளவில் அனுமதிக்கவில்லை.
ஒன்பது ஆண்டுகால முதல்வருக்கே இதுதான் நிலைமையா என்று கேட்டால், ‘விஷ்வகுரு’ மோடிக்கே இத்தேர்தலில் இதுதான் நிலைமை. பா.ஜ.க-வின் ‘நட்சத்திர பிரச்சாரகரான’ மோடி ஹரியானாவில் மொத்தமாகவே நான்கு பேரணிகள் மட்டுமே மேற்கொண்டார். அதிலும் கடைசிநேர பிரச்சாரத்தின்போது தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தவங்கிடக்கும் மோடி, இத்தேர்தலிலோ ஹரியானா பக்கமே வரவில்லை. மோடியின் முகத்தை காட்டினால் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்று அஞ்சிய பாசிசக் கும்பல், மோடியை ஒரு சடங்குக்காக மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதித்தது.
மேலும், ஹரியானா மாநிலத்தில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை பாசிசக் கும்பலுக்கே கிடையாது. ஏற்கெனவே, 2024 தேர்தல் கொடுத்த அதிர்ச்சியிலிருந்தும் அடியிலிருந்துமே மீளாத மோடியின் பிம்பத்தை ஹரியானா தேர்தல் தோல்வி மேலும் சேதமாக்கும் என பாசிசக் கும்பல் பீதியுற்றது. இந்த நம்பிக்கையின்மையின் வெளிப்பாடாகவே புதிதாக முதல்வரான நயாப் சிங் சைனியைத் தவிர, மோடி உட்பட வேறு எந்த பா.ஜ.க. தலைவரும் பெயருக்கு கூட பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரும் என்று பேசவில்லை.
தோல்விக்கு காங்கிரஸ் முன்வைக்கும் காரணம்
ஹரியானா தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரசின் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ஹரியானா தேர்தல் முடிவை ஏற்க முடியாது என்றும் இது தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட வெற்றி என்றும் கூறியுள்ளார். மேலும், “இம்முடிவுகள் முற்றிலும் எதிர்பாராதது, ஆச்சரியமளிப்பது; அவை அடிப்படை யதார்த்தத்திற்கு எதிரானவை” என்றும் “இது சூழ்ச்சிகளின் வெற்றி. வெளிப்படையான, ஜனநாயக செயல்முறைகளின் தோல்வி. மக்களின் உணர்வுக்கு எதிரான முடிவு” என்றும் தெரிவித்துள்ளார். இவர் ஹரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்துக்கொண்டிருக்கும்போதே தேர்தல் மோசடிகள் நடப்பதாகவும் தேர்தல் ஆணையம் இதில் தலையிட வேண்டும் என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஹரியானா தேர்தலின் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. குறிப்பாக, பல தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் பேட்டரி அளவு (Charge) 99 சதவிகிதம் வரை இருந்ததாகவும் இது சாத்தியமற்றது என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 90-99 சதவிகிதம் சார்ஜ் செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்ட இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளதாகவும் 60-70 சதவிகிதம் வரை பேட்டரி சார்ஜ் செய்யப்பட்ட இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாகவும் அக்கட்சி ஆதாரங்களை முன்வைத்துள்ளது.
176 நாடாளுமன்றத் தொகுதிகளில், பதியப்பட்ட வாக்குகளை விட 35 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்து பா.ஜ.க. தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டு வருவது ஏற்கெனவே பலமுறை அம்பலமாகியுள்ள நிலையில் காங்கிரஸ் முன்வைக்கும் இந்த புது வகையிலான மோசடி கவனிக்கத்தக்கதாகும். மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் ஆணையம் நீண்ட நேரம் ஹரியானா தேர்தல் முடிவுகளை இணையத்தில் புதுபிக்காமல் இருந்ததும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
ஹரியானாவில் பாசிசக் கும்பலின் தில்லுமுல்லுகள் தேர்தல் தேதி அறிவிப்பதிலிருந்தே தொடங்கிவிட்டன. ஹரியானா மற்றும் ஜம்மு&காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை வெளியிடும் தேதியை தள்ளிவைக்குமாறு தனது அடிமையான தேர்தல் ஆணையத்திற்கு பா.ஜ.க. கடிதம் எழுதியபோது, அந்த உத்தரவை தேர்தல் ஆணையம் அப்படியே நடைமுறைப்படுத்தியது. அப்போதே ஹரியானாவில் தேர்தல் மோசடிகளில் ஈடுபட பா.ஜ.க. தயாராகிவிட்டது என்பது வெட்டவெளிச்சமாகின. ஆனால், அதனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்கு பதிலாக, “பா.ஜ.க. தனது தேர்தல் தோல்வியை தள்ளிவைக்கிறது” என்று நக்கலடித்ததோடு காங்கிரஸ் நிறுத்திக்கொண்டது. அதன் விளைவையே தற்போது அறுவடை செய்துள்ளது.
இந்த தேர்தலில் மட்டுமின்றி, 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் இதனைக் காட்டிலும் பல மடங்கு மோசடிகளை பாசிசக் கும்பல் அரங்கேற்றியிருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில், 176 நாடாளுமன்றத் தொகுதிகளில், பதியப்பட்ட வாக்குகளை விட 35 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டுள்ளது என்பதை “தி குயிண்ட்” இணையதள கட்டுரை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. இதனை இந்தியாவில் உள்ள பல சிவில் அமைப்புகள் கடுமையாக விமர்சித்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெற்று கண்டனங்களுடன் நிறுத்திக்கொண்டன.
மொத்தத்தில், தேர்தல் சமயத்தில் மட்டும், தேர்தல், தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு இயந்திர மோசடி-முறைகேடுகளை பேசுவது மற்ற நேரத்தில் கள்ளமௌனம் சாதிப்பது என்ற காங்கிரசின் இந்த அணுகுமுறையானது தேர்தல் மீது மக்களுக்கு எந்தவித கேள்வியும் அவநம்பிக்கையும் எழுந்துவிடக் கூடாது என்ற மக்கள்விரோதத் தன்மையிலிருந்தே எழுகிறது.
அதேசமயம், பாசிசக் கும்பல் ஒவ்வொரு தேர்தலிலும் பலவிதமான தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டாலும் பா.ஜ.க. வெற்றிபெறுவதற்கு மோசடி-முறைகேடுகள் மட்டுமே காரணமல்ல. அது பா.ஜ.க-வின் ஒற்றை வழிமுறையுமல்ல, பத்தில் ஒரு வழிமுறையாகத்தான் பா.ஜ.க. தேர்தல் மோசடிகளை பயன்படுத்துகிறது. மற்றபடி, பா.ஜ.க. வென்றதற்கு பல முக்கியமான காரணங்கள் உள்ளன. அதனை பரிசீலிக்காமல் தேர்தல் மோசடிகளை மட்டும் கைக்காட்டிவிட்டு காங்கிரஸ் நழுவுவது என்பது மக்கள் மத்தியில் பா.ஜ.க-வை ஜனநாயகமான கட்சியாக கொண்டு சென்று சேர்ப்பதற்கே வழிவகுக்கிறது.
பா.ஜ.க. வழியில் ‘பாசிச எதிர்ப்பு’
ஹரியானா தேர்தலில் “கிசான் (விவசாயிகள்), ஜவான் (ராணுவ வீரர்கள்), பைல்வான் (மல்யுத்த வீராங்கனைகள்)” என்ற முழக்கங்களை முன்வைத்துதான் காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. அதாவது, இந்த மூன்று பிரிவினரின் போராட்டத்திலும் பிரதானமாக பங்கெடுத்துக்கொண்டது ஜாட் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள். இந்த போராட்டங்கள் பாசிச பா.ஜ.க-வை நெருக்கடிகளுக்கு உட்படுத்தியதிலும் இந்தியா முழுவதும் பா.ஜ.க. எதிர்ப்புணர்வை வளர்த்தெடுப்பதிலும் முக்கிய பங்கு வகித்தது. இப்பிரிவினரை முன்வைத்து பிரச்சாரத்தை முன்னெடுப்பதன் மூலம் ஹரியானாவில் 27 சதவிகிதமாக உள்ள ஜாட் சாதியினரின் வாக்குகளை அறுவடை செய்துக் கொள்ளலாம் என்பதே காங்கிரசின் தேர்தல் உத்தியாக இருந்தது.
மத்தியப்பிரதேசத்தின் இந்துத்துவ அரசியலுக்கான முகமாக கமல்நாத்தை முன்னிறுத்தியது போல ஹரியானாவில் சாதி அரசியலுக்கு பூபிந்தர் சிங் ஹூடாவை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும் இத்தேர்தலில் காங்கிரசின் அறிவிக்கப்படாத முதல்வர் வேட்பாளருமாக முன்னிறுத்தப்பட்டவருமான பூபிந்தர் ஹூடா மற்றும் அவரது மகன் தீபிந்தர் ஹூடா, ஜாட் சாதி ஆதிக்கத்தை நிறுவும் வகையிலேயே தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இது கட்சிக்குள்ளேயே பல நெருக்கடிகளை உருவாக்கியது. சான்றாக, மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 72 வேட்பாளர்களுக்கான சீட்டு ஹூடாவின் அதிகாரத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. இது குமாரி செல்ஜா போன்ற பிற காங்கிரஸ் தலைவர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. மேலும், காங்கிரசின் தலித் தலைவரான குமாரி செல்ஜாவை ஹூடா ஓரங்கட்டியதாலும் காங்கிரஸ் மேடையிலேயே குமாரி செல்ஜா அவமானப்படுத்தப்பட்டதாலும் பத்து நாட்களுக்கு மேலாக அவர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடாமல் ஒதுங்கிக்கொண்டார். பின்னர் காங்கிரஸ் மேலிடம் தலையிட்ட பிறகே ஹூடாவுடன் இணைந்து பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஆனால், இவை தலித் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. பா.ஜ.க-விற்கு எதிரான தலித் மக்களின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு அறுவடையாகாமல், சந்திர சேகர ஆசாத்தும் மாயாவதியும் ஆதரவளித்திருந்த ஜே.ஜே.பி-ஐ.என்.எல்.டி.பி. கூட்டணிக்கு பிரிவதற்கு இவையும் காரணமாக அமைந்தது. மேலும், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்காதது பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை சிதறடித்து சில தொகுதிகளில் காங்கிரஸ் தோல்விக்கு காரணமாகிப் போனது.
இவை கட்சிக்குள் காங்கிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது மட்டுமின்றி பொதுவெளியிலும் பா.ஜ.க-விற்கு சாதகமாக மாறியது. ஏனெனில், கடந்த 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஜாட் ஆதிக்கம் தலைவிரித்தாடுகிறது என்ற பிரச்சாரத்தை முன்வைத்தே பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், ஹரியானா காங்கிரசில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த பூபிந்தர் ஹூடாவின் சாதி ஆதிக்கம் பா.ஜ.க-வின் வெறுப்பு பிரச்சாரத்திற்கே சாதகமாக அமைந்தது.
இன்னொருபுறம், பா.ஜ.க. கட்சியானது ஜாட் மக்கள் மத்தியில் தனக்கிருக்கும் எதிர்ப்பின் காரணமாக ஜாட் அல்லாத ஓ.பி.சி. மக்களின் தொகுதிகளில் கவனம் செலுத்தி அதில் கணிசமான இடங்களில் வெற்றிபெற்றது. மேலும், பா.ஜ.க-வின் நெடுங்கால அடித்தளமாக இருந்துவரும் பார்ப்பனர்கள், பனியாக்கள், பஞ்சாபிகள் போன்ற ஆதிக்கச்சாதி, அதிகார வர்க்கத்தினர் வாழும் பகுதியான ஜி.டி. சாலை மற்றும் அதிர்வார் பகுதிகளில் கவனம் கொடுத்து அங்கு வெற்றியை தக்கவைத்துள்ளது. அதேசமயம் பா.ஜ.க-வை விட அதிக ஜாட் வேட்பாளர்களை காங்கிரஸ் நிறுத்திய நிலையில், காங்கிரசை விட அதிகமான ஜாட் தொகுதிகளை பா.ஜ.க. வென்றிருப்பது சாதிய பிளவுவாத அரசியலில் பாசிஸ்டுகள் முன் பிற கட்சிகள் தோற்றுதான் போகும் என்பதை நிரூபித்துள்ளது.
மத்தியப்பிரதேசத்தின் இந்துத்துவ அரசியலுக்கான முகமாக கமல்நாத்தை முன்னிறுத்தியது போல ஹரியானாவில் சாதி அரசியலுக்கு பூபிந்தர் சிங் ஹூடாவை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தது காங்கிரஸ்.
மொத்தத்தில், பா.ஜ.க-விற்கு போட்டியாக இந்துத்துவ அரசியலை முன்னெடுப்பது எதிர்க்கட்சிகளுக்கு பயனளிக்காது என்பது 2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நிரூபணமானது எனில், சாதிய பிளவுவாத அரசியலை முன்னெடுப்பதும் எதிர்க்கட்சிகளுக்கு பயனளிக்காது, அது இயல்பிலேயே பாசிசக் கும்பலுக்கே சாதகமாக சென்று முடியும் என்பதை ஹரியானா தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது.
நினைவிருக்கட்டும்! பா.ஜ.க. ஓர் பாசிச கட்சி
இவை அனைத்தையும் காட்டிலும் இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகள் தேர்தல் களத்தில் எதிர்த்துக்கொண்டிருப்பது வெறும் தேர்தல் கட்சி மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். என்னும் நூற்றாண்டுகால பாசிச இயக்கத்தை தனது பின்புலமாக கொண்டுள்ள பாசிசக் கட்சி என்பது கவனிக்கப்பட வேண்டியது. இக்கட்சியை குறை மதிப்பீடு செய்வதையும் ஜனநாயகமாக அணுகுவதையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. ஆனால், பாசிச பா.ஜ.க-வோ 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொண்டு அதனை இத்தேர்தலில் நடைமுறைப்படுத்தியுள்ளது.
சான்றாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. முரண்பாடு காரணமாக சில இடங்களில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாதது பா.ஜ.க-விற்கு குறிப்பிடத்தக்க நெருக்கடியையும் அதன் வாக்கு சதவிகிதம் குறைவதிலும் முக்கிய பங்காற்றியது. இந்நிலையில், இத்தேர்தலை அணுகுவது குறித்து கடந்த செப்டம்பர் மாதத்தில் பாலக்காட்டில் நடந்தக் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-விற்கு இடையிலான முரண்பாட்டில் பா.ஜ.க. தற்காலிகமாக பணிந்து வந்துள்ளதை ஹரியானா தேர்தல் களம் காட்டியது.
ஏனெனில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோ அங்கெல்லாம் ராஜஸ்தானிலிருந்து நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ்-காரர்களை வரவழைத்து ஆர்.எஸ்.எஸ். தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. விவசாயிகள் வசிக்கும் கிராமப்புற பகுதிகள் பா.ஜ.க-விற்கு சவாலானதாக இருக்கிறது என்பதால் அப்பகுதிகளில் கவனம் கொடுத்து ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் பிரச்சாரம் செய்துள்ளனர். மொத்தமாக இத்தேர்தலில் 16 ஆயிரம் கூட்டங்களை நடத்தியதாக ஆர்.எஸ்.எஸ். சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். இல்லாமல் பா.ஜ.க-வால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றும் இது மோடி அல்லாத பா.ஜ.க-வின் முதல் வெற்றி என்றும் இத்தேர்தல் வெற்றிக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் மார்த்தட்டி பிரச்சாரம் செய்தனர்.
இன்னொருபுறத்தில், கடந்த கால போராட்டங்களால் சரிந்துவரும் மக்கள் அடித்தளத்தை தக்கவைப்பதற்கும் பா.ஜ.க. முயற்சிப்பதை இத்தேர்தல் காட்டியுள்ளது. இத்தேர்தலில் பா.ஜ.க-விற்கு கணிசமான அளவில் தலித்துகள் வாக்கு விழுந்துள்ளது இதனை நிரூபிக்கிறது.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடும் என்றும் அதனால் தலித் மக்களின் இட ஒதுக்கீடு பறிபோகும் என்றும் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தன. இதனால் பசுவளைய மாநிலங்களில் கணிசமான தலித் மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தனர். ஆனால், இத்தேர்தலில் அதே இட ஒதுக்கீட்டை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி, உள்-இடஒதுக்கீடு மூலம் தலித் மக்களை இரண்டாக பிளவுப்படுத்தி, கணிசமான தலித் மக்கள் வாக்குகளை அறுவடை பாசிசக் கும்பல் செய்துக் கொண்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ஆகஸ்ட் மாதத்தில் ஹரியானா எஸ்.சி. கமிஷன், தலித் மக்களை இரண்டு வகைகளாகப் பிரிக்க பரிந்துரைத்தது. பால்மிகிகள், தனக்ஸ், மசாபி சீக்கியர்கள் மற்றும் காதிக்ஸ் உள்ளிட்ட 36 பிரிவினை உள்ளடக்கி தாழ்த்தப்பட்ட அட்டவணை சாதிகள் (டி.எஸ்.சி) என்றும் சாமர், ஜாதியா சாமர், ரெஹ்கர், ராய்கர், ராம்தாசி, ரவிதாசி மற்றும் ஜாதவ் ஆகியோரை உள்ளடக்கி பிற அட்டவணை சாதிகள் (ஓ.எஸ்.சி.) என்றும் தலித் மக்களை இரண்டாகப் பிரித்தது பாசிசக் கும்பல். உள் இட ஒதுக்கீடுக்கு அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து, அரசுப் பணிகளில் பட்டியல் சாதியினருக்குள்ள 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு இரண்டு பிரிவினருக்கும் தலா 50 சதவிகிதம் வழங்கப்படும் என்று பிரச்சாரம் செய்தது. தற்போது பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிலையில் சைனி அரசு இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
நவம்பரில் மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த நரித்தனத்தை மகாராஷ்டிராவில் அமல்படுத்துவதற்கான முயற்சியிலும் பாசிசக் கும்பல் தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும், கடந்த ஜூன் மாதத்திலேயே ஹரியானாவில் ஓ.பி.சி. மக்களுக்கான “கிரீமி லேயர்” வருமான வரம்பை ஆறு லட்சத்திலிருந்து எட்டு லட்சமாக உயர்த்தியதன் மூலம் அம்மக்களின் வாக்குகளையும் குறிவைத்தது.
அதேபோல், இத்தேர்தலில் பா.ஜ.க-வின் வாக்கு எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் கவனிக்க வேண்டியது. ஹரியானாவில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த பா.ஜ.க. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதோடு 40 சதவிகித இடங்களையும் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது.
மற்றொருபுறம் கடந்த தேர்தல் தோல்விகளிலிருந்து எந்த படிப்பினையும் எடுக்காமல் மீண்டும் மீண்டும் காங்கிரஸ் மக்களுக்கு துரோகமிழைக்கிறது. பாசிசக் கும்பலுக்கு எதிரான மாற்று அரசியல் சித்தாந்தத்தை முன்வைக்காமல் பா.ஜ.க. எதிர்ப்பை காட்டி மட்டுமே தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என்ற மக்கள் விரோதத் தன்மையை காங்கிரஸ் மாற்றிக்கொள்ள தயாராக இல்லை.
மக்களுக்கு தேவை மாற்று
ஹரியானாவில், தங்கள் மீதான கார்ப்பரேட் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராகவும் தங்களது உரிமைக்காகவும் போராடிய விவசாயிகளும் வீராங்கனைகளும் இளைஞர்களும் தங்கள் போராட்டங்களை ஜாட் சாதி என்ற வரையறைக்கு வெளியே வளர்த்தெடுக்கவே முயற்சிக்கின்றனர்.
குறிப்பாக, கடந்த காலங்களில் ஹரியானாவில் தலித்துகள் மீது தீண்டாமையையும் வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டிருந்த ஜாட் சாதியை சேர்ந்த விவசாயிகளை மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் ஜனநாயகப்படுத்தியது. அதன்விளைவாக, விவசாயிகள் தங்களுடன் தலித் மக்களையும் போராட்டத்தில் இணைத்துக்கொண்டனர். இது மூன்று வேளான் சட்டங்களை அமல்படுத்துவதிலிருந்து பாசிசக் கும்பல் பின்வாங்கியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றால் மிகையல்ல.
இதன் ஊடாக விவசாயிகள் பிற வர்க்கத்தினரின் பிரச்சினைகளிலும் தலையிட்டனர். கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் காவி கும்பல் இஸ்லாமியர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு அதனை கலவரமாக மாற்ற முயற்சித்தது. உடனடியாக காப் பஞ்சாயத்தை கூட்டி, “ஹரியானா இஸ்லாமியர்களை காப்பது காப் பஞ்சாயத்து விவசாயிகளின் கடமை. நம்மை மீறி நூஹ்-வில் ஒரு இஸ்லாமியர் மீதும் யாரும் கைகூட வைக்க முடியாது” என்று முழங்கிய விவசாயிகள் பாசிசக் கும்பலுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தினர். அதேபோல், பாசிச மோடி அரசின் கொடுங்கோன்மையை இந்தியா முழுவதும் அம்பலப்படுத்தும் நோக்கத்துடன் இந்தாண்டு தொடக்கத்தில் இளைஞர்கள் நாடாளுமன்றத்தில் புகைக்குப்பி வீசியபோது, மொத்த எதிர்க்கட்சிகளும் “பாதுகாப்பு அச்சுறுத்தல்” எனக் கூச்சலிட்டு போராடிய இளைஞர்களுக்கு துரோகமிழைத்தது. ஆனால், விவசாயிகளோ உடனடியாக பஞ்சாயத்தைக் கூட்டி இளைஞர்களுக்கு பகிரங்கமாக ஆதரவளித்ததுடன் அவர்கள் மீது போடப்பட்ட ஊபா வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
மேலும், தங்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது பாசிச மோடி அரசு ஒடுக்குமுறைகளை செலுத்திய போது விவசாயிகளே அவர்களுக்கு பக்கபலமாக இருந்தனர். மேலும், இந்தியா முழுவதும் பாசிச மோடி அரசுக்கு எதிரான எதிர்ப்பை ஒருங்கிணைப்பதற்கும் விவசாயிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய பிரிவினரைக் கொண்டு ஹரியானா முழுவதும் பா.ஜ.க. எதிர்ப்புணர்வை வளர்த்தெடுப்பதற்கு பதிலாக, பிற வர்க்கத்தினரும் போராட்டக் களத்தில் இணைய வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கு பதிலாக, விவசாயிகள், வீராங்கனைகள், அக்னிவீரர்கள் பெயரை சொல்லி மக்களை சாதி ரீதியாக பிளவுப்படுத்தி வாக்குகளை கவருவது என்ற கேடுக்கெட்ட பிழைப்புவாத அரசியலைத்தான் காங்கிரஸ் முன்னெடுத்தது. இங்குதான், எந்த இடத்திலும் மக்கள் போராட்டக்களத்திற்கு வந்துவிடக் கூடாது என்று பா.ஜ.க-வின் நோக்கத்துடன் காங்கிரஸ் கைக்கோர்க்கிறது.
அதேபோல், இத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹரியானாவில் “இது அன்புக்கான புல்டோசர்” என தேசியக் கொடிகளுடன் புல்டோசர் ஊர்வலம் நடத்தியது, காங்கிரஸ். மேலும், கடைசிநேர தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் “ஜடோ” (நடைபயணம்) ஒன்றை நடத்தியுள்ளது. ஆனால், இதனையெல்லாம் காங்கிரஸ் ஏன் முன்னரே செய்யாமல் தேர்தல் சமயத்தில் செய்கிறது என்பதுதான் நாம் முன்வைக்கும் கேள்வி. புல்டோசர் ராஜ்ஜியத்தாலும் இந்துமதவெறி வன்முறைகளாலும் விவசாயிகள், வீராங்கனைகள் மீதான பா.ஜ.க-வின் வன்முறையாட்டங்களாலும் ஹரியானா மக்கள் பாதிக்கப்பட்டபோது கண்டனங்களோடு நிறுத்திக்கொண்டு தேர்தல் சமயத்தில் இத்தகைய ஊர்வலங்களை நடத்துவதன் மூலம் பாதிக்கப்படும் மக்களின் நம்பிக்கையை பெற்றுவிடலாம் என்பதே காங்கிரசின் தேர்தல் கணக்கு. ஆனால், இதனையெல்லாம் மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதையே ஹரியானா தேர்தல் முடிவு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
சொல்லப்போனால், ஹரியானா தேர்தல் வெற்றி கொடுத்த உத்வேகத்தில்தான் பாசிசக் கும்பல் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தலை உற்சாகமாக அணுகுகிறது. இதேபோல்தான் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலின்போது தோல்வி பயத்தில் இருந்த பாசிசக் கும்பலுக்கு காங்கிரஸ் கட்சி வெற்றியைக் கொடுத்து 2024 தேர்தலை அணுக வைத்தது. ஆனால், பா.ஜ.க-வை எதிர்க்க சொந்த பலத்தில் இந்தியா முழுவதும் எந்த போராட்டத்தையும் கட்டியமைக்கவில்லை. மாறாக, 2024-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அடுத்தடுத்து எழுந்த மக்கள் போராட்டங்களே பாசிசக் கும்பலுக்கு கிலியூட்டி, தேர்தலிலும் பாசிசக் கும்பலை நடுநடுங்கச் செய்தது. ஆக, காங்கிரசின் இந்த மக்கள் விரோதத் தன்மையை நாம் சரியாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. இதனை பாசிச எதிர்ப்பு சக்திகளும் தேர்தலில் பா.ஜ.க. வீழ்த்தப்பட வேண்டும் என்று நினைக்கும் ஜனநாயக சக்திகளும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அந்தவகையில், அடுத்தடுத்துவரும் சட்டமன்றத் தேர்தல்களின் போது அந்தந்த மாநிலங்களில் பா.ஜ.க-விற்கு எதிரான மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பது என்பது இன்றியமையாதது.
மக்கள் விரோத இந்துத்துவ சித்தாந்தம் திணிக்கப்படுகிறது பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா
ஒன்றிய அரசின் மூன்று புதிய குற்றவியல் கருப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களில் கூட்டுக் குழு (JAAC) சார்பில் “தென்னிந்திய வழக்கறிஞர்களின் கருத்தரங்கம்” நவம்பர் 17 அன்று நடைபெற்றது.