Thursday, August 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 470

ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஆசியளிக்கும் தமிழ் ஃபேஸ்புக் ! மகிழ்ச்சி !

18

ரஜினி எனும் காரியவாதி, சந்தர்ப்பவாதி, பார்ப்பனிய மதவாதி, கோமாளி எல்லாம் அரசியல் பேசுவதும், அதை கறிக்கடையை சுற்றி வரும் கால பைரவர்கள் போல ஊடகங்கள் நாக்கைத் தொங்கப் போட்டு சுற்றி வருவதிலும் இருந்து தெரிகிறது, இந்த ‘சிஸ்டம் சரியில்லை’ என்று! தமிழ் ஃபேஸ்புக்கில் மக்கள் கருத்துக்கள் சில….

Arul Ezhilan

ஜெயலலிதா என்ற நபர் உயிரோடு இருந்தவரை ரஜினி பெட்டிப் பாம்பாக அடங்கி அஞ்சி கிடந்தார்.அருகில் இருந்த கோபாலபுரமும் கருணாநிதியும் இல்லை என்றால் அப்படியே நசுக்கி கஞ்சா கேஸ் போட்டிருப்பார் ஜெயலலிதா..!

____________________

Villavan Ramadoss

மண்டபத்துலயும் சிஸ்டம் சரியில்லை. ஒரிஜினல் ஓனர் லதா பாட்டியோட ஒரு போருக்கு தயாராகுங்க தலைவரே….

//உங்களுக்கெல்லாம் கெடா வெட்டி கறிசோறு போடணும்ணு எனக்கு ஆசைதான் ஆனா இங்க ராகவேந்திரா மண்டபத்துல சைவ உணவுக்கு மட்டும்தான் அனுமதி உண்டு – ரஜினிகாந்த்.//

____________________

Aazhi Senthil Nathan

இன்றைக்கு நியூஸ் 18 விவாதத்தில், ரஜினி பேசிய காட்சி முடிந்தவுடன், குணசேகரன் முதலில் என்னிடம் தான் கேட்டு விவாதத்தைத் தொடங்கினார். “சங் பரிவார் என்கிற குடும்பத்தில் மற்றுமொரு அமைப்பாகவே அவரது அமைப்பு இருக்கும்” என்று கூறினேன். இதுதான் என் முதல் கருத்து. மாலனும் ஜி.சி.சேகரும் அடுத்தடுத்து அப்படி இல்லை என்று சொல்வதற்கான வேலையில் இறங்கினார்கள்.

ஐயோ பாவம், அவர்கள். தமிழிசையும் அர்ஜூன் சம்பத்தும் நாராயணனும் உடனடியாக என் உதவிக்கு வந்தார்கள். நான் சொன்னக் கருத்தை உறுதிசெய்தார்கள். ஆர் கே நகர் தோல்விக்குப் பிறகு தங்களுக்கு பலம் தேவைப்படுகிறது, அந்த பலத்தை ரஜினி அளிப்பார் என தமிழிசை நம்புகிறார். இந்து மக்கள் கட்சியும் பாஜகவும் ரஜினி பின்னால் செல்லும் என்கிறார் சம்பத்.

ரைட்டு. இனிமேல் ரஜினியை பாஜகவின் மறைமுக ஆதரவைப் பெற்றவர். பாஜகவின் பினாமி என்றெல்லாம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக ரஜினியின் அமைப்பை இந்துத்துவ அமைப்பு என்று சொல்லி வேலையைச் செய்யவேண்டியதுதான்.

2018 இல் மேலும் ஒரு முனையில் யுத்தம் வெடிக்கிறது. தட்ஸ் ஆல். பாத்துக்கலாம்.

ஆனால் ரஜினியின் இந்த நகர்வு நமக்கெல்லாம் நிறைய வேலையைக் கொடுத்திருக்கிறது. அவருக்கு எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கிறதோ அந்த அளவுக்கு அது மக்களின் தோல்வியாக இருக்கும்.

தமிழ்நாட்டின் அத்தனை நியாயஸ்தர்களும் தமிழருவி மணியன்களும் இப்போது ரஜினி பக்கம் வருவார்கள். மாலன்களும் சேகர்களும் என மிகப்பெரிய ரஜினி மீடியா படை இன்றே உருவாகிவிட்டது. மீடியாவுக்கு 2018 முழுமைக்குமான பிரேக்கிங் நியூஸ் கிடைத்துவிட்டது. மீம்ஸ் இன்டஸ்ட்ரியின் வளர்ச்சி பல மடங்காக இருக்கும்.

நமக்குத்தான் வேலை அதிகம். மீம்ஸோடு முடங்கிவிடக்கூடாது, விவாதமேடைகளோடு நின்றுவிடக்கூடாது. செய்வோம். வச்சு செய்வோம்.

___________________

Deepa Lakshmi

காசு சேரும் வரை கம்யூனிசம்,
கல்யாணமாகும் வரை நாத்திகம் பெண்ணியம்,
அரசியல் கைகூடும் வரை சமூகநீதி,
சினிமாவில் வெற்றிப்படியாய் மட்டுமே இலக்கியப் பணி,
இப்படிப் பல ஆண்டுகளாய்த் தங்களின் ஆளுமையை நிறுவப் பயன்பட்ட கொள்கைகளை அவரவர் தனிப்பட்ட நியாயங்களுக்காகக் காற்றில் பறக்க விடும்போது…
நாடி தளர்ந்த பின் ‘ஆன்மிக அரசியல்’ பண்ண வரும் ரஜினிக்கு மட்டும் வரவேற்பு குறைந்து விடுமா என்ன?

🙂

Personal integrity matters, whatever you choose to blabber.

_____________

வாசுகி பாஸ்கர்

இதில் ரஜினி சொல்லும் ஆன்மீக அரசியல் எப்படியானதாக இருக்குமென்கிற புனைவுகளை அவர்தம் ரசிகர்கள் எத்தனை விதமாய் எடுத்துரைத்தாலும், ரஜினியின் பால் தாக்ரே வுடனான தொடர்பு, சிவ சேனா, பாபா, வட நாட்டு சாமியார்கள், பாஜக தொடர்பு என்று இவையெல்லாம் கண்முன் வந்து போவது மிக யதார்த்தமான ஒன்றே.” ரஜினி என்கிற புனித மனிதனை இப்படியாக சந்தேகப்படுவதா?” என்று வாதம் வைக்குமளவு எந்தவிதமான தெளிவான வரலாறும் கடந்த காலத்தில் இல்லை. ரஜினி தான் சார்ந்த ஹிந்து மதத்தின் ஒரு தீவிர பக்தியாளர் என்பதாக தான் அவர் செயற்பாடுகள் நமக்கு சொல்கிறது. ஒருவர் மற்ற மதங்களை பற்றி எதுவும் அவதூறாக சொல்ல வில்லை என்பதற்காகவே அதை எல்லோருக்குமானதாக எடுத்துக்கொள்ள இயலாது.

மதங்களையும், கடவுளர்களையும், எந்த வடிவத்தில் உள்ளே கொண்டு வந்தாலும் அது ஆதிக்கம் செலுத்தும் என்பதால் தான் பெரியார் கடவுளை சமூக சீர்திருத்தத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். உலகம் முழுக்க மக்களாட்சிக்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டபோது மதங்களின் தலையீடு இல்லாதிருப்பதே எல்லோருக்குமான அரசியல் சட்ட வடிவமாக முன் வைக்கப்பட்டது. அதுவே மதச்சார்பற்ற தன்மை என்று அங்கீகரிக்கப்பட்டது.

ஆகையால் ரஜினி; ஹிந்து மதத்தின் பிரதிநிதியாக இருந்துகொண்டு சாதி, மதமில்லாத ஆன்மீக அரசியல் என்று சொன்னாலும், ஆன்மீகத்திற்கும் அரசியலுக்கும் எந்த வகையிலும் நேரடி தொடர்பு இருக்கக்கூடாது என்பது தான் மதசார்பற்ற நிலை. மத ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டி, ஒரு அரசு அலுவலுகத்தில் எல்லா மத விழாக்களையும் கொண்டாடுவதை விட, எதையும் கொண்டாட கூடாது என்று தடை விதிப்பதே, அந்த இடம் எல்லோருக்குமான இடமாக கருதப்படும். நாத்திகர்கள், ஆத்திகர்கள், பன் சமூகத்தவர் என்று வாழும் ஒரு தேசத்தில், ஆன்மீக குறுக்கீடு இல்லாததே எல்லோருக்குமானதாக நிலைப்பாடாக இருக்க முடியும். பக்தி என்பது கட்டில் சமாச்சாரங்களை விட தனியறையில் இருப்பதே நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை சேர்ப்பதாக இருக்கும்.

__________________

Arul Ezhilan

ரஜினி 25 -இது ரஜினியோட 25 ஆண்டுகால சினிமா பணியை கொண்டாடும் விதமாக தலைப்பு வைத்து நடத்தப்பட்ட விழா. இதை நடத்தியவர் லதா ரஜினிகாந்த். மொத்தமாக அந்த விழாவை வைத்து ரசிகர்களிடம் இருந்து வசூலித்தது அளவில்லா தொகை. ரஜினி தொப்பு, ரஜினி கீ செயின், ரஜினி படம் என ஒவ்வொன்றிலும் பணம் பார்த்தார் லதா ரஜினிகாந்த்.

__________________________

Raja Rajendran

ஆன்மீக அரசியல் என்றால் என்ன ?

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் நடைபெற்ற சிலை ஆய்வின்போது, பழைய சோமாஸ்கந்தர் சிலையிலும் தங்கம் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

பழைய சிலையிலும்…. என்றால் என்ன அர்த்தம் ?

அதாகப்பட்டது மகா ஜனங்களே, புதிய சிலை செய்யப்போவதாய்ச் சொல்லி சுமார் 100 கிலோ (ஹல்லோவ் 100 கிராம் இல்ல) தங்கத்தை வசூலித்துவிட்டு ( என்று வைத்தால் பக்தாள்களிடம் பெறப்படும் நன்கொடை ஒய் ) புதிய சிலையில் அட்லீஸ்ட் சேர்க்க வேண்டிய 5 . 75 கிலோ தங்கத்தைக் கூடச் சேர்க்காமல் அமுக்கிட்டன்.

நன்னா கவனிக்கோணும். யாராரெல்லாம் இதற்கு உடந்தை என்று சிலை கடத்தல் தடுப்பு போலிசார் 9 பேரை எஃப் ஐ ஆரில் சேர்த்திருந்தும், ஒரே ஒரு கைது நடவடிக்கை கூட இல்லை. ஏனாம் ? அதாம்லே அரசியல், ஆன்மீக அரசியல்.

சரி. டுபாக்கூருங்க புது சிலையிலத்தான் தங்கத்தை அடிச்சிருக்கன், நம் முன்னோர்கள் ஒன்றும் மொடா முழுங்கிகள் கிடையாதே ? போக, பழைய சிலையில் 87 கிலோ தங்கம் நிச்சயம் கலந்திருக்காக்கும் என ஸ்தபதி அரசுக்குச் சொல்லியிருக்க, ச்சுரண்டிப் பாத்தா ஒரு கிராம், யெஸ் மகாஜனங்களே ஒரே ஒரு சொட்டு கிராம் தங்கம் இல்லை.

இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தங்கம் தோராயமா 25 – 26 லட்சம்ன்னு வச்சா, 87 கிலோவுக்கு என்ன வரும் ? நேக்கு அவ்ளவா கணக்கு வராது, நான் குமாரசாமி ஸ்டூடண்ட். நீங்க சொல்லுங்கோ.

2001-ல முகமது அலின்னு ஒரு ஸ்ட்ரிக்ட் போலிஸ் ஆப்பிஸர். அடையாறு மேம்பாலத்து மேல நின்னு தூணச் சுரண்டிப் பாத்துட்டு, சிமெண்ட்ல மண் ஜாஸ்தின்னு கருணாநிதிய நடு ராத்திரி போய்க் கைது பண்ணா.

இங்க என்னடான்னா குவிண்டால் கணக்குல தங்கத்தை அடிச்சும், இன்னும் ஆராய்ஞ்சுண்டு கிடக்கா. ஏன் ?

சிமெண்ட் மண் எனில் அது அரசியல். சாமி சிலை அவருக்குத் தங்கம்ன்னு மனுஷா புடுங்கி அமுக்கிண்டா அது ஆன்மீக அரசியல்

______________________

Thiru Yo

முன்பெல்லாம் கட்சி துவங்க கொள்கை, அடிமட்டத்தில் அணிதிரட்டல், கிளைகள் அமைத்தல், போராட்டங்கள், பிரச்சனைகளில் மக்களோடு நிற்றல் அடிப்படை.

இப்போது ஆன்மீக அரசியல் கட்சிகளுக்கு சந்தை ஆய்வு, நிகழ்ச்சி ஏற்பாடு மேலாண்மை, திறமையான நேரடி ஒளிப்பதிவு நிறுவனங்கள், பறக்கிற படப்பிடிப்புக் கருவிகள், அலைபேசி செயலிகள், நாக்பூர் கும்பலின் திட்டம், மயிலாப்பூர் மாஃபியா கும்பலின் ஆதரவு இவை இருந்தால் போதும். போராட்டங்களை, கொள்கைகளை எதிர்ப்பதையும், நிராகரிப்பதையும் வெளிப்படையாக அறிவித்து முடிந்தால் காக்கா பிக்காவென காக்கா குசுபோல சிரிக்க வேண்டும். ஊடகங்களில் நேரடியாக சென்று மாட்டாமல் ஏற்கனவே எழுதி தரப்பட்ட திரைக்கதைகளை மேடைகளில் ஒப்பித்து தப்பித்து ஓடல், மயிலாப்பூர் மாஃபியாக்கள் எழுதித் தருவதை அறிக்கையாக வெளியிட்டல், கண்ட மடங்களில் சாமியார் கும்பல்களின் காலடியில் விழுதல் இவற்றை தொடர வேண்டும். தயிர்வடை தின்று தூக்கத்தில் ஏப்பம் விடுவதைப் போல அவ்வப்போது உளற வேண்டும் அவை தத்துவமாக்கப்படும். ஊடகங்கள் தானாக ஒளிபரப்ப வந்துவிடும்.

___________________

Arul Ezhilan

ரஜினியை எதிர்க்கிறேன் அவர் கன்னடர் என்பதால் அல்ல…
பெரியாரை நேசிக்கிறேன் கிழவன் பலிஜா நாயுடு என்பதால் அல்ல..
சீனிவாசராவை ஏற்கிறேன் அவர் கன்னடர் என்பதால் அல்ல..
காமராஜரை நேசிப்பது அவர் தமிழர் என்பதாலும் அல்ல..
காரணங்கள்தான் முக்கியமே தவிற இனமோ, மொழியோ எனக்கு முக்கியமான ஒன்றல்ல..

___________________

ஜோதிஜி திருப்பூர்

ஆன்மீக அரசியல் என்றால் என்ன?

தீபம் காட்டும் அய்யருக்கு நூறு ரூபாய் போட்டு விட்டு கோவிலை விட்டு வெளியே வரும் போது அங்கே கோவில் வாசலில் பிச்சை எடுப்பவர்களைப் பார்த்து நாடு முழுக்க சோம்பேறிகள் அதிகமாகிவிட்டார்கள் என்று நாட்டைப் பற்றி கவலைப்படுவது.

___________________

Ravi Kumar

திரு ரஜினி இன்று ராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்று ஆசி பெற்றபோது அவரை அறிமுகம் செய்து கடைசியில் சுவாமி சொல்வதைக் கவனியுங்கள்: ” அரசியல்ல ஆன்மீகம் இருக்கணும்னு ஒப்பனா சொல்லிருக்கார். So called secularism இல்ல”

இதுதான் ரஜினி சொல்லும் மதச்சார்பில்லாத ஆன்மீகம்

______________________

Thiru Yo

அறிவித்த சூட்டோடு ராமகிருஷ்ண மடத்தில் சாமியார்களிடம் சரணடைவு. ராமகிருஷ்ண மடம் எதை வளர்க்கிறது என்பதை சொல்ல அவசியமில்லை.

சங்கிகளுக்கு களம் அமைக்கவே பெரியார் நீக்கம், திராவிட இயக்க நீக்கம் ஒரு பிரச்சாரமாக முன்வைக்கப்படுகிறது. அதன் ஒரு பரப்புரை தான் தமிழகம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பின்தங்கியதாக, ஐம்பது ஆண்டு காலத்தில் தமிழ்நாடு கெட்டுப்போனதாக சொல்லப்படுகிற போலி வாதங்கள். அதை செல்பவர்கள் ராஜாஜியின் ஆட்சி பற்றியோ, காங்கிரஸ் காலத்தில் (காமராசர்) தவிர மற்ற ஆட்சிகளில் சில ஆதிக்கச்சாதிகள் தவிர மற்றவர் நிலை பற்றி பேசுவதில்லை.

சங்பரிவாரக் கும்பல் ஏறி வருகிற பெட்டிக்குதிரை ரஜினி. பாஜக கும்பலை சுமந்து வருகிற ரஜினியை தமிழ்நாடு மக்கள் புறக்கணிக்க வேண்டும். இத்தகைய முதுகெலும்பற்ற நடிகர்களை நம்புவது ஆபத்தையும், அழிவையுமே ஏற்படுத்தும்.

_________

_____________

Arumugam Kr

எதுக்காகவும் போராட வேண்டாம்; அதுக்கெல்லாம் வேற ஆளிருக்கு!
எதைப்பத்தியும் கருத்துச் சொல்ல வேண்டாம்; அதுக்கெல்லாம் வேற ஆளிருக்கு!
யாரையும் விமரிசிக்க வேண்டாம்; அதுக்கெல்லாம் வேற ஆளிருக்கு!
சண்டைக் காட்சிகள்ல வேத்தாளு (டூப்பு) போட்டு நடிச்ச பழக்கம் இன்னும் போகலையோ?
அது சரிங்கிறேன்! எல்லாத்துக்கும் வேற ஆளிருக்குங்கையில, ஆள்றதுக்கு மட்டும் வேற ஆளில்லாமயா போயிரும்?

_____________________

Sukirtha Rani

சாதி அரசியல் கொடுமைகளுக்குச் சற்றும் குறைவில்லாதது ஆன்மீக அரசியல். அது காவி பயங்கரவாதத்திற்கே இட்டுச் செல்லும்.

__________________

Yuva Krishna

மதவெறியை எதிர்ப்பது உங்கள் கொள்கையெனில், இயல்பாகவே ரஜினியை எதிர்த்துதான் ஆகவேண்டும். பார்ப்பனீயம் எடுத்திருக்கும் பரிதாபமான ஆயுதம் அவர்.

_______________

Govi Lenin

திருக்குறளை கங்கையில் கரைத்து விட்டு, பகவத்கீதையை தமிழ்நாட்டில் விதைப்பதற்கு பெயர், ஆன்மிக அரசியல்.

_______________

Arul Ezhilan

ராமகிருஷ்ணா மடத்தின் தலைவரை சந்திக்கிறார் ரஜினி. ஒரு சாமியார் சொல்கிறார் //அரசியல்ல ஆன்மீகம் இருக்கணும்ணு சொல்லியிருக்கிறார். இந்த சோ கால்ட் செக்குலரிடம் இல்ல// என்கிறார் . ரஜினி தலையாட்டி அதை ஆமோதிக்கிறார். திராவிட இயக்கத்தின் ஆன்மாவே மதச்சார்பின்மைதான். ரஜினியின் ஆன்மீக அரசியலில் மதச்சார்புதான் இருக்கும் எனும் நிலையில் கருணாநிதியிடம் அந்த அரசியலுக்கு ஆசி வாங்கச் செல்வது எவளவு பெரிய மோசடி?

//புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல வேண்டும், அப்படியே உடல் நலம் விசாரிக்கணும் என்றுதான் ரஜினி தரப்பில் இருந்து கலைஞர் மகள் செல்வியிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஸ்டாலினும் அங்கு சென்றார். ஆனால் ரஜினி திடீரென அரசியலுக்கு வருகிறேன் ஆசி வேண்டும் என்று சொல்ல அது கலைஞருக்கு புரியவில்லை. அவர் யார் கை கொடுத்தாலும் கொடுப்பார். கை கொடுத்தார் அதை ரஜினி ஆசியாக எடுத்துக் கொண்டு ஊடகங்களிடம் பொய் சொல்ல கடைசியில் வாங்கிக் கட்டும் சூழல் உருவானது.

 

 

முடங்கியது மும்பை – நவீன பேஷ்வாக்களை எதிர்த்து தலித் மக்கள் ! படங்கள்

0

பார்ப்பன பேஷ்வாக்களை வீழ்த்திய பீமா கோரேகான் யுத்தத்தின் 200 -ம் ஆண்டு
நினைவு நாளில் வன்முறையை கட்டவிழ்த்து விட்ட காவிக் கும்பலை எதிர்த்து மகாராஷ்டிரா மாநிலம் முழுதுமான ஒருநாள் (03.01.2018) கடையடைப்பிற்கு தலித் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.

அதை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தால் முடங்கிய மும்பை மாநகரின் சில காட்சிகள் :

தலித் சமூகத்தினர் மும்பையில் நடந்த ஒரு எதிர்ப்புப் பேரணியில் முழக்கங்களை எழுப்புகின்றனர்.

மும்பையின் போராட்டங்கள் நடைபெறும் தருணத்தில் நெடுஞ்சாலை ஒன்று தலித் சமூகத்தினரால் மறிக்கப்பட்டதால் மக்கள் அதில் நடந்து செல்கின்றனர்.

மும்பையில் போராட்டம் ஒன்றின் போது சாலை மறியலுடன் தலித் மக்கள் முழக்கங்களை எழுப்புகிறார்கள்.

மும்பையில் போராட்டம் நடக்கும் போது காவல்துறையினர் ரோந்து செல்கின்றனர்.

மும்பை, நெடுஞ்சாலை ஒன்றில் தலித் மக்களின் மறியல், முழக்கம்!

மும்பையின் போக்குவரத்து சந்திப்பு ஒன்றில் பாதுகாப்பிற்கு நிற்கும் காவல்துறையினர்.

“மகாராஷ்டிரா பந்தை” முன்னிட்டு தானே தொடர்வண்டி நிலையத்தில் போராட்டம்.

பீமா கோரேகான் வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மும்பையில் புதன்கிழமை அன்று “மஹாராஷ்டிரா பந்திற்கு” தலித் மக்கள் அழைப்பு விடுத்த பின்னர் ஆளரவமற்ற சாலையில் சிறுவர்கள் சைக்கிளில் கொடியை ஏந்தி செல்கின்றனர்.

நன்றி : தி வயர்


 

புது தில்லி ஓபராய் விடுதியில் தரமான காற்று கிடைக்குமாம் !

0

புத்தாண்டு அன்று (2018, ஜனவரி, 1) புது டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு கடுமையான அளவீட்டை எட்டியதுடன் காற்று தர குறியீட்டெண் (AQI) 400 ஆக பதிவானது. மேலும் இதை ‘மிக மோசமானது’ என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) வகைப்படுத்தியிருக்கிறது.

நவம்பர் 7 -ம் தேதி காற்றுத் தர குறியீட்டெண் 999 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் அதிகமாக கூட இருந்திருக்கலாம். ஆனால் கருவி காட்டக் கூடிய அதிகபட்ச அளவு என்பது அதுதான்.

புது டெல்லியின் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முடியாமல் மாநில மத்திய அரசுகள் முழி பிதுங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஓபராய் நிறுவனம் புது டெல்லியில் உள்ள தன்னுடைய ஐந்து நட்சத்திர ஓட்டலை 500 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்துள்ளது. இதற்காக இரண்டாண்டுகள் தற்காலிகமாக இந்த ஓட்டலின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. இந்திய வரலாற்றில் நட்சத்திர விடுதியொன்றில் காற்று சுத்திகரிப்பானை பொருத்துவது இதுவே முதன்முறை என்பது தான் இதன் வரலாற்றுச் சிறப்பு.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 30 -க்கும் மேற்பட்ட ஆடம்பர விடுதிகளையும் இரண்டு சுற்றுலா கப்பல்களையும் ஒபேரா குழுமம் நடத்தி வருகிறது. புது டெல்லியில் காற்று மாசுபாடு மக்கள் வாழ முடியாத அளவு எட்டி விட்டதால் நான்கு அடுக்கு காற்று சுத்திகரிப்பான் அமைப்பை பொருத்தி தங்களது வாடிக்கையாளர்களுக்கு மிக தூய்மையான காற்றை வழங்க இருக்கிறது ஓபராய் விடுதி.

விடுதி வளாகத்திற்குள்ளே 40 -க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய கொள்ளளவு கொண்ட காற்று சுத்திகரிப்பு கருவிகளை நிர்வாகம் நிறுவியுள்ளது என்று ஓபராய் நிறுவன துணைத் தலைவர் சில்கி சீகால் தெரிவித்தார். இதற்காக மிக அதிக திறன் கொண்ட அதாவது 99.7 விழுக்காடு காற்று மாசுபாட்டை நீக்கக் கூடிய ப்ளூஏர் ப்ரோ எக்ஸ்எல் (BlueAir Pro XL) என்ற காற்று சுத்திகரிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி 1,180 சதுர அடி அளவுள்ள அறைக்கு பொறுத்த முடியும்.

பணக்கார சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவே 500 கோடி ரூபாயை கொட்டியுள்ளது ஒபேரா நிர்வாகம்.  இனி புது தில்லி வரும் சுற்றுலாப் பயணிகள், மாசில்லா காற்று உலவும் ஓபராய் விடுதியை தேடிச் செல்வர். ஆனால் இந்த வசதிகள் ஏதுமின்றி புது தில்லி அன்றாடம் இயங்குவதற்காக இலட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் அதே மாசடைந்த காற்றுடன் வாழ்ந்து வருகின்றனர்.

தலைநகரில் பார்ப்பனிய மாசுடன் ஆட்சி புரியும் மோடி மஸ்தான் ஆட்சியில் இனி காற்றும் மாசுதான்.புது தில்லி பணக்காரர்களுக்கு நல்ல காற்று கிடைப்பதற்கு ஓபராய் இருக்கிறது. மக்களுக்கு போராட்ட ஆயுதத்தை தவிர வேறு என்ன இருக்க முடியும்?

மேலும் :

In polluted Delhi, a super-luxury hotel will offer the ‘cleanest’ air to the rich & famous


 

ஆளை மாற்றாதே! அதிகாரத்தை மாற்று !! விருதை பொதுக்கூட்டம்

0

விருத்தாச்சலம் வானொலித் திடலில் மக்கள் அதிகாரத்தின் ” அரசியல் அராஜகங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் முடிவு கட்டு” – பொதுக்கூட்டம் 30/12/2017 சனி அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. தோழர் முருகானந்தம் தலைமை தாங்கினார், தோழர் காளியப்பன் மாநிலப் பொருளாளர், சி.ராஜு மாநில ஒருங்கிணைப்பாளர் சிறப்புரையாற்றினார்கள்.

தலைமை உரையில் தோழர் முருகானந்தம், ”விருத்தாச்சலம் வட்டத்திற்க்கு உட்பட்ட தே.புடையூர் கிராமத்தில் மருத்துவக்கழிவு கிடங்கை அரசு நிறுவ உள்ளது. கிடங்கில் கொட்டப்படும் மருத்துவக் கழிவினால் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர், விவசாயம், காற்று மாசுபடுவதினால் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட நேரிடும் என்று தங்களுடைய கிராமத்துக்கு அந்த மருத்துவக்கிடங்கு வரக்கூடாது என்று போராடுகின்றார்கள் தெ.புடையூர் கிராம மக்கள். அவர்களைக் கைது செய்கிறது காவல்துறை.

ஒக்கி புயலால் கடலில் இறந்த மீனவர்களின் பிணங்களைக்கூட மீட்பதற்கு வக்கற்றுப்போன மத்திய மாநில அரசுகள் தான் திட்டமிட்டு மீத்தேனுக்கும் ஷெல் கேஸ்க்கும் விவசாயிகளை அவர்களுடைய சொந்த நிலத்தை விட்டு துரத்துகிறது.  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடல் வளங்களை அள்ளிக்கொடுப்பதற்காக மீனவர்களை மீன்பிடி தொழிலிலிருந்து விரட்டுகிறது. அதற்காகத்தான் மீனவர்களை புயலிலிருந்து பாதுகாக்கத் தவறியது, முன் அறிவிப்பின்றி கொல்கிறது மத்திய மாநில அரசுகள்” என்று கூறி முடித்தார்.

வழக்கறிஞர் புஷ்பதேவன் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், ”நீதிமன்றங்கள்தான் ஆளும் காவிக் கும்பலுக்கு ஆதரவாகவும் மக்களுடைய உரிமைக்கான போராட்டங்களை ஒடுக்குவதற்கும் தன்னெழுச்சியாக முன்வருகிறது. இவர்கள் நம்முடைய பிரச்சனைகளை தீர்க்கப் போவதில்லை, நீதிமன்றங்களோ நமக்கானதாக ஜனநாயகமானதாக இல்லை. மக்கள் பிரச்சனைக்ளுக்கு தீர்வு  மக்கள் மன்றங்கள் – மக்கள் அதிகாரமாக மாறும்போதுதான் உழைக்கும் மக்களுக்கான வாழ்வு உறுதி செய்யப்படும் “என்று கூறி முடித்தார்

தோழர் காளியப்பன்

சிறப்புரை: தோழர் காளியப்பன், மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஆர்.கே. நகர் தொகுதியில் 89 கோடி ரூபாய்க்கு பணப்பட்டுவாட  நடைபெற்றதால் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது.  தற்போது இந்த தேர்தலிலும்  பணப்பட்டுவாடா நடந்துள்ளது. அதிமுக 100 கோடியென்றால் டிடிவி தினகரன் 200 கோடி என்ற அளவில் நடந்துள்ளது.  ஆனால் தேர்தல் ஆனையம் தேர்தலை ரத்து செய்யவில்லை, இப்போது நடந்த தேர்தல் செல்லும் என்கிறது. அராஜகமும் அக்கிரமும் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மறுபுறம் சட்டத்தின் ஆட்சி என்ற பேரில் உச்ச்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அரசியல் சட்டத்திற்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று கூறுகிறார். சட்டம் அனைவருக்கும் நியாயம், சமத்துவம், சகோதரத்துவம் என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது அப்படி எதுவுமே நடைமுறையில் இருப்பதாக தெரியவில்லை. திருச்சியில் உள்ள காவல்துறை உயர் அதிகாரி ஐஜி  சொல்கிறார், அரசு நிர்வாகத்தை பாதுகாக்கின்ற பொறுப்பில் நாங்கள் இருக்கின்றோம், நீங்கள் அரசுக்கு எதிராக பேசுகிறீர்கள் அதனை நாங்கள் அனுமதிக்க முடியாது என்கிறார். மக்களுடைய உரிமைக்குத்  தடையாக இருப்பதே இந்த அரசு தான்.

அ.தி.மு.க அரசு விவசாயிகளுடைய கரும்பு பாக்கியை கூட கொடுக்க முடியாதென்கிறது. மத்தியில் ஆளும்  மோடி அரசு விவசாயிகளிடம் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வசூலித்த ப்ரீமியத் தொகையை விளைச்சல் இல்லை  வறட்சி நிவாரணம் கொடு காப்பீட்டு நிதி கொடு என்று கேட்டால் தர மறுக்கிறது. அதோடு மட்டுமில்லை மக்கள் சொத்துகளை கொள்ளை அடிப்பது இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்கென்றே மத்திய அரசு (FRDI) என்ற திட்டத்தை கொண்டு வருகிறது.

கடந்த நவம்பர் மாத இறுதியில் ஒக்கி புயலால் மீனவ கிராமங்கள் பட்ட துயரங்கள் எண்ணி மாளாது. காப்பாற்ற வக்கில்லாத மோடி அரசின் கடலோர கப்பற்படை 25 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் சென்றால் எங்களுடைய உயிருக்கு ஆபத்து என்று சொல்கிறது. மக்களை பாதுகாக்க வக்கற்றுப்போய் தோற்று நிற்க்கும் கேவலமான அரசியலமைப்பை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம்.

சென்ற வாரம் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு செய்தி, ஒரு பெண் டிஎஸ்பி ஒரு தரப்புக்கு ஆதரவாக விளைந்த நெல் விளைச்சலை டிராக்டரை விட்டு ஓட்டி அழிக்கிறார். இன்னொரு அதிகாரி விவசாயத்தின் இணை இயக்குனர், விவசாயிகளின் மனுவைக்கூட வாங்க மறுக்கிறார். திக்குதிசை தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் மக்கள் அதிகாரமாக போராட்டங்களை ஒன்றிணைத்து மக்களை வாழவிடாமல் தடுக்கும் அரசியல் அக்கிரமங்களுக்கும் அராஜகங்களுக்கும் முடிவுகட்ட வேண்டும் என்று பேசினார் தோழர் காளியப்பன்.

தோழர் சி.ராஜு, மாநிலஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

ஒவ்வொரு தனி மனிதருக்கும் கல்வி ,மருத்துவம்,சுகாதாரமான காற்று, குடிநீர் இவையனைத்தும் தடையின்றி கிடைக்கும் பட்சத்தில்தான் ஒரு மனிதன் வாழ முடியும். ஆனால் காசு இருந்தால்தான் வாழ முடியும் என்ற நிலையை இந்த அரசு உருவாக்கியுள்ளது.

தோழர் ராஜூ

இதையும் தாண்டி கதிராமங்கலத்தில் எண்ணெய் எடுக்கின்றோம் என்ற பெயரில் நிலத்தடி நீரை நாசமாக்கினால் நாங்கள் எப்படி வாழமுடியும் என்று போராடுகின்றார்கள். போராடுகின்ற மக்களை குழந்தை முதியோர் என்று பாராமல் நாயை அடிப்பது போல் அடிக்கின்றது தமிழக காவல்துறை. புதுக்கோட்டை ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனமாகிவிடும் என்று நோட்டீஸ் கொடுத்ததற்க்காக மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்.

செவிலியர்கள் போராட்டம் சென்னையையே அதிரவைத்தது. நாங்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு பத்து ஆண்டுக்கு மேலாகியும் எந்தவித ஊதிய உயர்வும் கிடையாது. வெறும் 8 ஆயிரம் ரூபாய் ஊதியத்தை வைத்துக் கொண்டு தற்போது நிலவும் சூழ்நிலையில் வாழ முடியவில்லை. பணிநிரந்தரம் செய்து சம்பளத்தை உயர்த்திக்கொடு என்ற கோரிக்கையை முன்வைத்து போராடுகிறார்கள். போராட்டத்தை ஒடுக்குவதற்க்காக இயற்கை உபாதையை கழிக்கும் கழிவறைக்கு கூட பூட்டு போடுகிறது தமிழக அரசு. நீதிமனறம் போராட்டத்தை கைவிடவில்லை என்றால் வேலையை இழக்ககூடும் என்று மிரட்டுகிறது.

போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 40 ஆண்டு காலமாக சம்பளத்தில் பிடித்த பணம் எதையும் கொடுக்கவில்லை இந்த அரசு. உடனே பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று போராடுகிறார்கள். மக்கள் போராடக்கூடாது என்றால் மக்களுடைய பிரச்சினைகளை இந்த அரசு தீர்க்க வேண்டும்.

கந்துவட்டிக்கு ஜந்து முறை புகார் கொடுத்து கந்துவட்டிக் கொடுமைக்கு ஆதரவாக நடந்துகொண்ட காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்ககோரி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்தால் அந்த மனு யார் மீது விசாரிக்க கொடுக்கப்பட்டதோ, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியிடமே அந்த மனு செல்கிறது.  அதன் விளைவு நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன் தான் பெற்ற பிள்ளைக்கு தலையில் கொள்ளி வைக்கிறார், இசக்கிமுத்து. யாரெல்லாம் இந்த அரசு காப்பாற்றும் என்று போரடுகிறார்களோ அவர்கள் அனைவரும் இறந்து போகின்றார்கள்.

ஆர்.கே.  நகர் தொகுதியில் டிடிவி தினகரன் ஓட்டுக்கு பணம் என்ற நிலை மாறி டோக்கனே பணம் என்றாகி வெற்றியும் பெற்றுவிட்டார். இந்த வெற்றி தேர்தல் ஆணையம், ஊழல் அதிகாரிகள் காவல்துறை  இவர்களின் துணையில்லாமால் நடைபெறவில்லை.

கன்னியாகுமரியில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஒக்கி புயலை பற்றிய முன்னெச்சரிக்கை இருந்திருந்தால் அவர்கள் இறந்திருக்கமாட்டார்கள்.  கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஒரு குடும்பத்தில் தாயும் விதவை, மகளும் விதவை, மருமகளும் விதவை இவர்களுடைய குடும்பத்தில் சந்ததியே அழிந்து விட்டது. இவர்களுடைய நிவாரணம் யாருக்கு பயன்படப்போகிறது. மத்தியில் காவியும், மாநிலத்தில் ஆவியும் ஆட்சி செய்கிறது கிரிமினல் கூட்டம் நம்மை ஆளுகிறது. நூற்றுக்கணக்கான பொது நல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எதற்காகவாவது தீர்வு எட்டப்பட்டு இருக்கிறதா?

புரட்சிகர கலைநிகழ்ச்சி

இல்லை தாது மணல், கிரானைட், மணல் கொள்ளை குற்றவாளிகள் தண்டிக்கபட்டுள்ளனரா? இத்தனை கொள்ளைகளுக்கும் காரணமான, மக்கள் சொத்தை இயற்க்கை வளங்களை கொள்ளையடித்தவனுக்கு துணை நின்ற அனைத்து துறை அதிகாரிகள் தான் முதற் குற்றவாளிகள். குற்றம் நிருபிக்கப்பட்டதா எதுவும் இல்லை குட்கா ஊழல் பற்றி கண்டு பிடித்து விசாரித்த வருமான வரித்துறை அதிகாரி அஷோக்குமார் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்.

இந்தியாவில் மொத்த உற்பத்தியில் 70% மக்கள் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள் ஆனால் இந்த அரசு விசாயத்துக்கு ஒதுக்கும் நிதி 2.3%.  கடந்த பத்தாண்டுகளில் தமிழக மக்களை சுயமரியாதை அற்றவர்களாக மாற்றி இருக்கிறது அதிமுக கும்பல். விருத்தாசலத்தில் மருத்துவகழிவு கிடங்கை தடைசெய்யகோரி போராடுகிற மக்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். இதனை கேட்டால் மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரி மக்களுக்கு பாதிப்பு வராது என்கிறார். அப்படி சொல்கிற அதிகாரிகளின் ஆதாரை நாம் கைப்பற்றவேண்டும். பிரச்சனை என்றால் விடக்கூடாது பாதிப்பு ஏற்பட்டால் அவர் வேலையில் இல்லை என்றாலும் பதில் சொல் என்று கேள்வி எழுப்ப வேண்டும்.

வணிக ரீதியாகவும், நிறுவனங்கள் இவைகளின் மூலமாகவும் கோடிக்கணக்கானப் பணம் விருத்தாச்சலம் பகுதியில்  கிடைக்கிறது. நகராட்சியிலோ குப்பையை அள்ளுவதற்க்குகூட பணம் இல்லை. இதனை கேட்டால் பதில் இல்லை எதிரியாக பார்க்கிறது நகராட்சி நிர்வாகம். இந்த அரசுக்கு நாம் ஒன்றும் அடிமை கிடையாது மக்கள் கேள்வி கேட்கக் கூடாது போராடக்கூடாது என்று சட்டம் சொல்கிறதா? மக்களுடைய கருத்துகளை, ஜனநாயகத்தை மறுத்திட தடுத்திட யாருக்கும் அதிகாரம் கிடையது.  இசக்கிமுத்து தான் கொளுத்திக்கொண்டபோது கலெக்டரை கட்டி பிடிக்க எவ்வளவு நேரமாகும், மாணவர்கள் விவசாயிகள் வணிகர்கள் மீனவர்களின் அனைத்து போரட்டங்களும் ஒன்றிணையவேண்டும்.  கோரிக்கையை முடிவுசெய்யும் அதிகாரத்தை நாம் பெறவேண்டும்.

விருத்தாசலத்தில் 31 வார்டிலும் மக்கள் அதிகார கிளை இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வார்டுக்கு என்ன செய்ய வேண்டும்  என்று மக்கள் அதிகாரம் அதை தீர்மானிக்கும்.  மக்கள் அதிகாரம் என்பது நாம் உருவாக்கவில்லை. உருவாக்கியது இந்த அரசு கட்டமைப்புதான். மக்கள் அதிகாரம் தான் தீர்வு என்று நாம் சொல்லவில்லை வேறு வழி இல்லை. ஆளை மாற்றுவது தீர்வு அல்ல அதிகாரத்தை மாற்றுவதுதான் தீர்வு என நிறைவு செய்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
மக்கள் அதிகாரம்
விருத்தாச்சலம்


 

மக்கள் அதிகாரம் : கதறும் மீனவ குடும்பங்கள் ! வஞ்சிக்கும் அரசு !!

0

கதறுகின்றன மீனவக் குடும்பங்கள்!
வஞ்சிக்கிறது அரசு !

அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே,

கடற்கரையில் ஒதுங்கும் செத்த மீன்களைப் போல, தமிழக மீனவர்களின் பிணங்கள் சிதைந்து பல நாடுகளில் கரை ஒதுங்குகின்றன. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோரை ஒக்கிப் புயலுக்குக் காவு கொடுத்துவிட்டன, எடப்பாடி, மோடி அரசுகள் என்று ஆத்திரத்தில் நெருப்பாய்த் தகிக்கிறார்கள், மீனவ மக்கள். கிறிஸ்துமசுக்குள் வீடு திரும்பாத மீனவர் குடும்பங்களுக்கு இருபது லட்சம் ரூபாய் நிவாரணம் என்றது, அரசு. தாய்மார்களோ “ஒன்னு வேண்டா, எங்க மக்கள திருப்பித்தா’ என்று கதறுகிறார்கள். ஒரு குடும்பத்தில் கணவனும் இல்லை, சகோதரனும் இல்லை. ஒரு குடும்பத்தில் தந்தை, மகன், மருமகன் இல்லை. இது போன்று அதிகமான சம்பவங்களை தொலைக்காட்சிகள் வெளிக்கொணர்ந்துள்ளன. மீனவ மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியைக் கண்டு இனியும் நாம் அமைதி காக்கலாமா?

“குமரி மாவட்டம் கடந்த நூறாண்டுகளில் இத்தகைய உக்கிரத்தைக் கண்டதில்லை” என தப்பி வந்த மீனவர்கள் அதிர்ச்சியோடு கூறுகிறார்கள். புயல் ஓய்ந்ததும் மீட்பு பணிகளில் இறங்கியிருந்தால்; உரியகாலத்தில் ஆழ்கடலுக்கு சென்று இந்திய கப்பற்படையும், மோடி அரசும் உண்மையாகத் தேடி இருந்தால் நூற்றுக்கணக்கான மீனவர்களை உயிருடன் மீட்டிருக்க முடியும். எடப்பாடி அரசு முன்கூட்டியே எச்சரிக்கவுமில்லை; காணாமல் போன மீனவர்கள் எண்ணிக்கையைக் குறைத்து, கூசாமல் புளுகியது. பல்லாயிரம் மீனவர்கள் ரயில், பஸ் மறியல் போராட்டங்கள் நடத்திய பிறகுதான் ஒக்கிப்புயலுக்கு முன்பே தொழிலுக்கு சென்ற ஆயிரம் பேருக்கு மேல் கரை திரும்பவில்லை என்ற உண்மை வெளி உலகுக்கு தெரிய வந்தது. போராடிய பல ஆயிரம் மீனவர்கள் மீது வழக்கும் போட்டுள்ளது, அரசு.

மீனவ மக்களுக்கு ஆதரவு தரச் சென்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் ஏழு பேரை வன்முறையை தூண்டியதாகச் சொல்லி கொல்லங்கோடு போலீசு நிலையத்தில் வைத்து, ‘மீனவன் செத்தால் உனக்கென்ன? வெளி மாவட்டத்தில் இருந்து ஏன் இங்கு வந்த?” எனக் கேட்டு, நிர்வாணப்படுத்தி, அடித்து சித்ரவதை செய்து சிறையில் தள்ளியது, குமரி மாவட்ட போலீசு. மீனவ மக்களுக்கு ஆதரவாக ஏன் போராடக்கூடாது?

அரசு செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதால் அடையாறு வெள்ளம் நூற்றுக்கணக்கான தென் சென்னை மக்களைப் பலிகொண்டபோது, தங்கள் படகுகளோடு போய் மக்களை மீட்டது மீனவர்கள்தாம். மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது போலீசு கடலுக்குள்ளும் மீனவக் குப்பங்களுக்கும் விரட்டியபோதும் மாணவர்களுக்கு தஞ்சமளித்ததும் மீனவர்கள்தாம். அதற்காக அவர்களுக்கு எதிராக தமிழகப் போலீசே தீவைப்பு முதலிய குற்றச்செயல்களில் ஈடுபட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாகத் திரளும் மாணவர்களை விரட்டுகிறது. சென்னை மெரினா, கோவை, மதுரை, நாகர்கோவில் போன்ற நகரங்களில் மாணவர்கள், மீனவர்கள், விவசாயிகளை ஒன்று சேரவிடாமல் அரசும் போலீசும் தனிமைப்படுத்தி விரட்டுகிறது.

மீனவர்களைப் பலிகொண்டது ஒக்கிப் புயல் அல்ல; மோடி – எடப்பாடி அரசுகள் நடத்திய படுகொலை. நிவாரணம் கொடுப்பது மட்டும் இதற்கு தீர்வு அல்ல. பல நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களைக் காக்கத் தவறிய – அவர்கள் உயிரிழப்பிற்கு காரணமான, கடலோர காவல் படை, கப்பற்படை, மீன்வளத்துறை அதிகாரிகள், கிரிமினல் அலட்சியத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டும். மீனவர்கள் ஆண்டுக்கு அறுபதாயிரம் கோடி அந்நிய செலாவணி ஈட்டி தருகிறார்கள். ஒரு மீனவன் கடலுக்கு சென்றால் பதினாறு பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகிறது. இவர்களின் பாதுகாப்பிற்கு அரசிடம் எந்த கொள்கையும் இல்லை.

தமிழக கடற்கரை முழுவதும் அனல்மின் நிலையம், அணுமின் நிலையம், கப்பல் கட்டும் துறைமுகம், ரசாயன உரத் தொழிற்சாலை, சரக்கு பெட்டக துறைமுகம் என பன்னாட்டு கம்பெனிகளுக்கு முழுமையாக தாரை வார்க்கப்படுகின்றன. அதனால் தான் மீனவர்களை கடலில் இருந்து அப்புறப்படுத்தும் வாய்ப்பாக பியான் – ஒக்கிப் புயல்களையும் சுனாமியையும் கருதுகின்றன, மத்திய மாநில அரசுகள்.

உயிரிழந்தவர்களை காணாமல் போனவர்கள் என வெறும் காகித விபரங்களாக மாற்றி மீனவர்கள் வாழ்க்கையை அழிக்க நினைக்கிறது. கடைசி மீனவனையும் தேடுவோம் என இன்னும் வெறும் சவடால் அடிக்கிறது. மக்களை காக்கும் கடமையில் முழு தோல்வி அடைந்துவிட்டது இந்த அரசுக் கட்டமைப்பு. இந்த அரசுக் கட்டமைப்பை இனியும் நம்பினால் மேலும் மேலும் அழிவுகள்தான் ஏற்படும். ஆள்பவர்களால் இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் மக்கள் பிரச்சினைகள் எதையும் தீர்க்க முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. பழவேற்காடு தொடங்கி குமரி மாவட்ட நீரோடி வரை உள்ள கடற்கரை கிராம மீனவர்கள், மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் மக்கள் விரோத இந்த அரசை பணிய வைக்க முடியும். ஜல்லிக்கட்டு மெரினாவில் மாணவர்களோடு மீனவர்கள், கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டத்தில் விவசாயி களோடு மாணவர்கள். இந்த ஒற்றுமைதான் அரசை அச்சுறுத்தி பின்வாங்க வைத்தது.

புதிய மாற்றத்தை, தீர்வை, மக்கள் போராட்டங்களிலிருந்து உருவாக்குவோம் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மக்கள் அதிகாரம்
சென்னை

 

கொலைகார சவுதி அரசால் குதறப்படும் ஏமன் மக்கள் – படக் கட்டுரை

0

யிரக்கணக்கான அப்பாவி ஏமன் மக்களை மரணத்திலும் இலட்சக்கணக்கான மக்களை பஞ்சத்திலும் தள்ளிய சவூதிக் கூட்டணிப் படையினரின் தாக்குதல் 1000 நாட்களை கடந்து விட்டது. தென் மேற்கு ஏமனில் உள்ள ஒரு சந்தையில் சமீபத்தில் சவுதி நடத்திய வான்வெளித் தாக்குதலால் கிட்டத்தட்ட 20 ஏமன் மக்கள் கொல்லப்பட்டனர்.

தொடரும் இந்த கொடூரத்தின் விளைவால் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட ஏமனின் அடிப்படை கட்டமைப்பில் பணிப்புரியும் 12 இலட்சம் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஒரு ஆண்டாக சம்பளம் கிடையாது.

ஏமனின் உள்கட்டமைப்பும் பொதுமக்களின் குடியிருப்புகளும் நொறுங்கி விட்டன. 30 இலட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறி பணம், தண்ணீர், உணவு, மருந்துக்கள் கிடைக்காமல் கடுமையாக அவதியுறுகின்றனர். நார்வே அகதிகள் அமைப்பு எடுத்த இந்த பேரழிவின் காட்சிகள் சில இங்கே. இசுலாமிய சர்வதேசியம் பேசி ஏழை முஸ்லீம்களை மதவாதத்தால் ஏமாற்றும் கொலை கார சவுதி அரேபியவின் ‘சாதனைகள்’ இவை!

சனா(Sanaa), வான்வெளித் தாக்குதலால் நிலைகுலைந்த தனது வீட்டை ஒருவர் காட்டுகிறார். ஏமன் தலைநகர் முழுவதும் வீடுகள், திருமண மாளிகைகள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டு மைதானங்கள் ஆகியவை வான் தாக்குதல்களால் குறிவைக்கப்பட்டு வருகின்றன.

சனாவின் நிலைகுலைந்த குடியிருப்புகளை ஒருவர் கடந்து செல்கிறார்.

அல் தாலேவைச்(al-Dhalea) சேர்ந்த 50 வயதான அலி மோத்தனா அலியின் வீடு தாக்கப்பட்ட போது படுகாயமடைந்தார். “வீட்டைத் தாக்கிய அந்த வான் தாக்குதலில் வீட்டிற்கு வெளியில் நான் சிக்கிக்கொண்டேன். வெடித்துச் சிதறிய குண்டு என்னைத் தாக்கியது. நான் முகக்காயங்களுக்கு ஆட்பட்டேன். சிராய்ப்புகளை என்னுடைய இடுப்பில் இருந்து அகற்ற வேண்டியதாயிற்று. என்னுடைய காலில் ஒருப்பகுதியை உலோக துண்டு ஒன்று வெட்டியது. அண்டை வீட்டுக்காரர்கள் என்னை சிகிச்சைக்காக அருகிலிருக்கும் கிராமத்திற்கு அழைத்து சென்றதால் உயிர் தப்பினேன். காயங்களால் நான் ஊனமாகிவிட்டேன். இனி என் குடும்பத்திற்காக என்னால் உழைக்க முடியாது. குடும்பத்தில் பணம் சம்பாதிப்பவன் நான் மட்டுமே. என்னுடைய மூத்த மகனுக்கு 10 வயது ஆகிறது.” என்று கூறுகிறார்.

சனாவுக்கு வெளியே நடக்கும் தீவிரமான போர் நாடு முழுவதும் 30 இலட்சத்திற்கும் அதிகமான ஏமன் மக்களை சொந்த குடியிருப்புகளில் இருந்து காலி செய்திருக்கிறது. சாடாவைச் (Saada) சேர்ந்த மொலோக் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய சுற்றுப்புறம் தாக்கப்பட்டபோது தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் உட்பட 460 குடும்பங்களுடன் வெளியேற நேர்ந்தது. அதன் பிறகு ஹவுத்தில் (Houth) உள்ள ஒரு தற்காலிகக் குடியேற்றத்தில் வசித்து வருகிறார்.

டையிஸ் (Taiz), ஓமரின் முன்னால் வீட்டின் ஒரே ஒரு புகைப்படமும், கட்டிடத்தின் இடிந்த குவியல் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. “என் குழந்தைகளின் தலைக்கு மேல் ஒரு கூரையை உறுதி செய்ய, இந்த வீட்டை ஒவ்வொரு கல்லாகக் கட்டி முடிக்க, 10 ஆண்டுகள் எனக்குத் தேவைப்பட்டது”. ஆயுதக் குழுக்கள் 2015-ம் ஆண்டின் பிற்பகுதியில் அவரை வெளியேறுமாறு கட்டளையிட்டன; அதன் பிறகு அவரது கிராமம் ஒரு போர்க்களமாகியது. வான் தாக்குதல்களால் அவரது வீடு தரைமட்டம் ஆவதற்கு சில நாட்கள் முன்பு தான் அவரது குடும்பத்தார் வீட்டை விட்டு வெளியேறினர்.

ஜபல் அல்-நுக்மின்(Jabal al-Nugm) அருகே நடந்த ஒரு வான் தாக்குதலுக்கு பிறகு மஹ்மூத் ஸீத் மற்றும் அவரது மனைவி சபா இருவரும் தங்களது வீட்டை விட்டு வெளியேறிய அந்த நாள் பற்றி கூறினார்கள். முன்பு மஹ்முத் ஒரு தையல்காரராக பணிபுரிந்தார். ஆனால் போரும் முற்றுகையும் தொடங்கியதிலிருந்து அவருக்கு வேலையெதுவும் இல்லை. சிறுநீரக பிரச்சினையால் சபா அவதிப்படுகிறார். ஆறு குழந்தைகள் அவர்களுக்கு. ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் கீழ் நார்வே அகதிகள் அமைப்பு அவர்களுக்கு உணவு வழங்குகிறது. “நாங்கள் உயிர் பிழைக்க வேண்டும். முன்பு கிடைத்தது போல உணவு இல்லை, செலவழிக்க பணமும் இல்லை. எங்களுக்கு ஓரிரண்டு தட்டு உணவே கிடைக்கும் மேலும் அதை வைத்து தான் சமாளிக்க வேண்டும். அதோடு சேர்ந்து எங்களுக்கு சமையல் எரிவாயு கூட இல்லை” என்றார் மஹ்மூத்.

அம்ரானைச்(Amran) சேர்ந்த கைம்பெண்ணான வதேதாவிற்கு(Wedad) நான்கு குழந்தைகள். பசி மற்றும் வறுமையின் கொடுமை காரணமாக சாகவே அவர் விரும்புகிறார். “இந்த பிரச்சினையை சரி செய் அல்லது அமைதியாக சாக விடு – காலையில் மக்கள் எழுந்து பார்க்கும் போது நாங்கள் மடிந்து போயிருக்க வேண்டும் என்று நான் கடவுளை மன்றாடுகிறேன். நாங்கள் ஏற்கனவே இருக்கும் நிலையை விட அது ஒன்றும் மோசமில்லை. நாங்கள் பசியை பார்த்துவிட்டோம், கடுங்குளிரையும் பார்த்துவிட்டோம், அனைத்தையும் பார்த்துவிட்டோம்” என்று கூறினார்.

டையிசை சேர்ந்த 12 வயதான அம்மானி தனது தந்தையை இழந்துவிட்டார். அன்றிலிருந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். “மோதல்கள் கடுமையானதாக இருந்தன. கிராமத்தில் இருந்து தப்பிய கடைசி குடும்பம் நாங்கள் தான். ஒரு பாதுகாப்பான இடத்திற்கு தப்பி வந்த பிறகு எங்கள் பின்னால் சற்று தொலைவில் வந்து கொண்டிருந்த எங்கள் தந்தை ஒரு ஷெல் குண்டால் பலியானார். அந்த இடத்திலேயே அவர் இறந்து விட்டார் ஆனால் எங்களுக்கு தெரியவில்லை. அவரது தொலைபேசியை தொடர்ந்து அழைத்தோம் ஆனால் பதில் கிடைக்கவில்லை. பின்னர் அவர் இறந்துவிட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம். உங்கள் வீட்டை விட்டு வெளியேறிவிடுவது மிகவும் மோசமானது. இங்கே தண்ணீர் இல்லை, விறகும் இல்லை, எங்களுக்கு என்று எதுவும் இல்லை. வீட்டிற்கு திரும்பினால் எங்களுக்கு எல்லாம் இருக்கிறது. நான் பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்தேன் ஆனால் இப்போது முடியாது. நான் இந்த போரைக் கண்டு அஞ்சுகிறேன். வெடிகுண்டுகள், துப்பாக்கி குண்டுகள் வெடிக்க கேட்பது பயங்கரமானது. நாங்கள் அச்சுறுத்தப்பட்டோம். எங்கள் அறையில் மரண பயத்தில் ஒளிந்திருந்தோம்” என்று அவர் கூறினார்.

வடக்கு ஏமன், ஹௌத்திக்கு வெளியே ஒரு தற்காலிக குடியேற்றத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்த 4 வயதான அஹ்லம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறாள். 2015-ம் ஆண்டில் அவளது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தாக்குதல் தொடங்கப்பட்ட பிறகு சாடாவில் இருந்து தப்பி வெளியேறிவிட்டனர்.

ஹௌத்திக்கு வெளியே இந்த குடியேற்றத்தில் 9 வயதான ஒபைட் (இடது) மற்றும் அவனது நண்பன் மோட்ரெக் இருவரும் மறுசுழற்சிக்கான வெற்று நெகிழிப் புட்டிகளை சேகரிக்கிறார்கள். “நாங்கள் ஒரு பெரிய பை முழுதும் சேகரித்தால் எங்களுக்கு 150 ஏமன் ரியால் (38 ரூபாய்) கிடைக்கும் என்று ஒபைட் கூறினான். “நான் பள்ளி சென்றுக்கொண்டிருந்தேன். நான் படிக்க விரும்புகிறேன் ஆனால் இங்கே பள்ளிக்கூடம் இல்லை”. போருக்கு முன் ஏமன் மக்களில் 60 விழுக்காட்டினர் மட்டுமே வாசிக்கவும் எழுதவும் செய்தனர். போர் தொடர்வதால் ஏமனின் பல இலட்சக்கணக்கான குழந்தைகள் படிப்பை இழந்துவிட்டனர்.

ஏமனில் உள்ள நெருக்கடி காரணமாக குழந்தைகளில் பலர் பட்டினி மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் இறக்கின்றனர். 5 மாத குழந்தையான அமானியின் எடை 2 கிலோ மட்டுமே. அவள் சனாவில் உள்ள அல்-சபீன் மருத்துவமனையில் ஊட்டச்சத்து பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளாள். “அமானியை மருத்துவமனையில் சேர்க்க எங்கள் அண்டை வீட்டார் பணம் கொடுத்தனர்” என்று அவளது தாயார் பாத்திமா கூறினார். “நாங்கள் இந்த இடத்தை விட்டு அகன்ற பிறகு என் குழந்தைக்கு போதுமான உணவு கிடைக்காது என்று நான் மிகவும் கவலைப்படுகிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.

முஹம்மத் குடும்பத்தினர் பல்வேறு சோதனைச்சாவடிகளை கடந்து 15 மணிநேர பயணத்திற்குப் பின்னர் ஊட்டச்சத்து குறைபாடுடைய தங்களது குழந்தையுடன் அல்-சபீன் மருத்துவமனைக்குச் சென்றனர். “எங்களுக்கு வேறு வழியில்லை. இப்போது எங்கள் பகுதியில் எந்த வசதிகளும் இல்லை” என்று அவனது தந்தை வஹீப் கூறினார். இரண்டு வயதான முகமதுவின் எடை 5.9 கி.கி.

ஒரு வயது ஃபாத்திமாவின் எடை 4.2 கிலோ கிராம். அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல் ஏற்பட்டபோது அவளது தாயார் அவளை அல்-சபீன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்காக சிகிச்சை பெற்று வருகிறாள். ஃபாத்திமா, நான்கு குழந்தைகளில் ஒருவராக இருக்கிறார். ஆனால் அவருடைய மூத்த உடன்பிறந்தவர்களைப் போல ஊக்கமாக இல்லை. சரியும் பொருளாதாரம் மற்றும் மனிதாபிமானப் பொருட்கள் கொண்டு வருவதற்கான தடைகளால் இலட்சக்கணக்கான ஏமன் மக்களுக்கு உடனடியான உதவி மற்றும் பாதுகாப்பு தேவைப்படுகிறது.

ஏமன் மக்கள், சனாவில் உணவு உறுதிச்சீட்டு பகிர்மான மையத்தில் வரிசையாக நிற்கிறார்கள். கடுமையாக பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு உணவு உறுதிச்சீட்டுகள் மற்றும் பிற உதவிகளை நார்வே அகதிகள் அமைப்பு செய்கிறது. 1,000 நாட்களாக நடக்கும் போர் மற்றும் உணவு, எரிபொருள், மருந்து முற்றுகையைத் தொடர்ந்து 84 இலட்சம் ஏமன் மக்கள் இப்பொழுது பட்டினி பாதிப்புக்கு அருகில் உள்ளனர்.

சனாவில் உள்ள அல்-சபீன் மருத்துவமனையில் டாக்டர் ஜிக்ரா அப்துல்லா சைஃப் பணிபுரிகிறார். “கொடுமை என்னவெனில், உணவிற்காக நாங்கள் போராடும் போது எங்களது வேலையை எப்போதும் போல செய்ய முடியாது”. போர்த் தொடர்ந்தால், எங்களுக்கு சம்பளம் தொடர்ந்து மறுக்கப்பட்டால், நாங்கள் அனைவரும் கிராமங்களுக்கு தப்பிச்செல்ல தான் வேண்டும். நாங்கள் கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும். நகரங்களில் இருந்து வெளியேறி பழங்கால மக்கள் வாழ்ந்தது போல வாழ வேண்டும்” என்று கூறினார்.

நன்றி : அல்ஜசீரா
தமிழாக்கம் : சுந்தரம்

மேலும் :


 

மாட்டுக் கொட்டகை மனிதர்களும் தேநீர்க் கடையும் !

2

மாட்டுக்கொட்டகை மனிதர்களும் தேநீர் கடையும் !

படம் : ஓவியர் முகிலன்

மார்கழியின் அதிகாலைகள்
அவ்வளவு சுகமானவை…,
குளிர்மட்டும் செவிகளை அடைக்கும்.
மற்றபடி
பசு மாட்டுக்கு புல் அறுக்க
அம்மாவோடு சென்ற
பொழுதுகள் பொக்கிஷம் போன்றவை.

அம்மாவின் ஆட்காட்டி விரல் பிடித்து
வயல் வெளிகளில்
ஒரு படை வீரனைப் போல
பயணித்தது இன்றும்…
பசுமை பரப்பி
மனதில் பதிந்து கிடக்கிறது….

நடுங்கும் குளிரில்
லாவகமாய் அருகம்புல்
அறுத்திடும் அம்மாவை..,
புல்லின் நுனியில் நிற்கும்
பனித்துளியின் ஊடாக..,
குறும்பாய் பார்க்கையில்
‘அழுக்கான’ தேவதையை போல்
அம்மா அவ்வளவு
அழகாய் இருப்பாள்…

என்னதான் அருகம்புல்லும்
கோரைப்புற்களும்
அறுத்து வந்து கொட்டினாலும்…
சிறு நீரைப்போல
சில நேரங்களில்
சாணி கழித்திடும்
பிரியத்திற்குரிய
பசுக்களை என்னதான்
செய்துவிட முடியும்..?

நாற்றம் வீடு முழுக்க
பரவும் முன்
அத்தனையும் சுத்தம் செய்து
மாட்டுக்கொட்டகை முழுவதையும்
மணக்க செய்து விடுவாள்..,
சாம்பிராணி புகையுடன்
வலம் வரும் அம்மா.

அப்படி இருந்தும்
மாட்டுக் கொட்டகை குறித்து
பால் எடுக்க வரும்
பாண்டித்துரை உதிர்க்கும்
வார்த்தைகள் அவ்வளவு
பண்பானதாய் இருப்பதில்லை.
அசுத்தமே எங்களது அடையாளம் என்பது
அவருடைய அசைக்க முடியா
நம்பிக்கை போல!

எங்கள் பசுமாட்டின்
மடுவில் நீர் அடித்து
பால் கறந்தால்..,
இரண்டு லிட்டருக்கு மேல்
சாதாரணமாய்
பாத்திரத்தில் பால் நிரப்பும்.

ஆனாலும்
பால்கார பாண்டித்துரை
பால் கணக்கை
சிகரெட் பெட்டி அட்டையில்
குறைவாகவே குறித்து தருவார்.
தவறென்று சுட்டும் நிமிடத்தில் மட்டும்
முறைத்து கொண்டே
முச்சந்தியில் மறைவார்.

‘எளந்தாரியாய்’
ஆன பிறகு அவரைப் போல
வண்டியில் வலம் வர வேண்டும்,
என்ற ஆசைகள்
மனசுக்குள் பட்டாம்பூச்சியாய்
படபடக்கும்…
ஆனால்..,
மேலத்தெருவை நினைக்கையில்
அடி வயிற்றில் பயம் பரவும்.

எல்லா வேலைகளும்
முடித்துத்தான்,
இரவில் அம்மா
கஞ்சியில் கை வைப்பாள்.

பசுமாடு வாங்க
கந்து வட்டி கொடுத்தவன் குரல்
அப்பொழுதுதான்
அம்மாவின் செவிப்பறை கிழிக்கும்.
அந்த கொடுங்குரலின் முன்
தவளை சத்தங்களும்
தானாகவே அடங்கிவிடும்.

அதற்காகவே
அப்பா… எப்பொழுதும்
விரைவாக
வீட்டுக்கு வரமாட்டார்.

என்னதான்
ரத்தமும் வியர்வையும் சிந்தி
பசு வளர்த்து
பால் எடுத்து மேலத்தெரு
பாண்டித்துரைக்கு
கொடுத்தாலும்..,

அவரின் தேநீர்க் கடையருகே
அப்பாவும் நானும்
போய் நின்றால்..,
தனி டம்ளரில்
தேநீர் கொடுத்து..,
நாயைப்போல தரையில்
உட்காரச் சொல்லும்
அவரின்
ஆதிக்க சாதி வார்த்தைகள்
முரட்டுத் திமிருடன்
முகத்தில் அறையும்.

அந்த நிமிடங்கள் தான்
அழுகையையும்..,
கோபத்தையும்
ஒரே நேரத்தில்
கண்களுக்குள் கடத்தும்.

அப்பொழுது மட்டும்
விழிகளிலிருந்து வரும்
ஒவ்வொரு நீர்த்துளியும்
நெருப்பை விட சூடாக
நிலத்தில் ஒவ்வொன்றாய்
விழத் தொடங்கும்.

-முகிலன்

( மதுரை மாவட்டத்தில் மட்டும் 80 -க்கும் மேற்பட்ட கிராமங்களில்
இரட்டைக் குவளை முறை நடைமுறையில் உள்ளது.)


 

சென்னை திருவெற்றியூர் – குமரி வள்ளவிளை : கண்ணீர்க் கடல் ஆவணப்படம் திரையிடல்

0

சென்னை திருவெற்றியூர் பகுதியில் மீனவ சங்க பிரதிநிதிகள் முயற்சியால் ஒக்கி புயலில் மரணமடைந்த மீனவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அவர்களை நினைவு கூர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலியோடு “கண்ணீர்க் கடல்” ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான மீனவ மக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில்பல்வேறு மீனவ சங்கப் பிரதிநிதிகள், இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆவணப்படம் முடிந்த பிறகு பலரும் தாங்கள் உணர்ந்த கருத்துகளைப் பதிவு செய்தனர்.

இதில் மீனவர்கள் – வியாபாரி சங்க கெளரவத் தலைவர் ஒருவர் பேசும் போது “ஒக்கி புயலின் போது பாதிக்கப்பட்ட, மீனவ சொந்தங்களின் பாதிப்புகளை உணர்வுப் பூர்வமாக பதிவு செய்திருக்கும் இந்த ஆவணப்படம் என் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. அந்தக் கதறலை என்னால் தாங்க முடியவில்லை! இந்த ஆவணப்படத்தை தயாரித்த குழுவிருக்கு இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆவணப்படத்தின் மூலம் நான் ஒரு விசயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

நாம் பல சங்கங்களாகவும், கட்சிகளாகவும் பிரிந்து இருக்கிறோம். இது தான் நமது உரிமைகளை மீட்டெடுக்க தடையாக உள்ளது. நமக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு பொது காரியத்துக்காக நம் சமுதாய மக்களுக்காக ஒன்று கூடி முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.

சீன இஞ்ஜின் படகு இறக்குமதி செய்து நம் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் திட்டத்திற்கு நமது சமுதாயத்தை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சரே ஆதரவாக இருப்பது வருத்தமளிக்கிறது. மீன்கள் பெருக்கத்திற்காக அரசானது 2 மாத காலம் மீன் பிடி தடை காலம் என்று அறிவித்ததை ஏற்று அதற்கு நாம் கட்டுப்பட்டு இருக்கின்றோம் ஆனால் வெளிநாட்டு கம்பெனிக்காரன்களுக்கு அந்த இடைப்பட்ட காலத்துல அரசு அனுமதி கொடுக்குது. அவன் ராட்சச மீன்பிடி வலைகளை போட்டு குஞ்சுலருந்து எல்லாத்தையும் அள்ளிகிட்டு போயிடுறான். அவனுக்குத் தடை இல்லை.

அடுத்து நம்ம சங்கங்கள ஏற்றுமதிக்கான ஒரு கட்டிடம் கட்டுவதற்கு ஆலோசனை நடத்தினாங்க. ஆனால் இப்போ ஏற்றுமதி செய்யும் பெரிய கம்பெனிகளுக்கு ஆதரவாக அங்கு போய் மீன விக்க சொல்றாங்க. இது ஒரு கல்லுல ரெண்டு மாங்கா மாதிரி, நாம காலம் காலமாக வார்ப்பு இடங்களில் மீனை ஏலம் போட்டு வித்துட்டு வர்றோம். ஆனால் கரையோரம் இருக்கக்கூடிய வார்ப்பு இடமானது அதானி போன்ற பெரிய கம்பெனிகளுக்கு தேவை என்பதால அந்த இடத்துல இருந்து நம்மள காலி பண்ண வைக்கிறது, ரெண்டாவது ஏற்றுமதியாளர்கள் மொத்தமா மீன கொள்முதல் செய்யுறதால நம்ம வியாபாரிகளே அவங்ககிட்ட தான் மீனு வாங்கி விக்கக்கூடிய சூழ்நிலை உருவாகப் போகுது.

நாம எப்படி வாழறதுன்னு தெரியல. நாம் ஏற்கனவே டீசல் மானியம், இத்தொழிலில் மாற்று வேலை வாய்ப்பு, கூடுதல் உதவித்தொகை, மீனவர் குழந்தைகளுக்கான அரசு பள்ளிகூடம் போன்ற உரிமைகளுக்காக போராடனும்னு நினைக்கும் நேரத்தில், ஒக்கி புயலில் அரசின் மெத்தனத்தை பார்க்கும்போது மீனவன் அழிஞ்சா போதும்னு அரசு நினைக்குது என்ற விசயம் இந்த ஆவணப்படத்தின் மூலம் தெரியுது, ஆக நாம் மீனவனாக வாழனும்னாலே, நம்ம மீன்பிடித் தொழிலை தக்க வச்சிக்கனும்னாலே அனைத்து சங்கங்களும் ஒன்றிணைவது தான் நிரந்தர தீர்வு” என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து மீனவர் ஒருவர் கூறுகையில் ”அரசானது மீனவர்களுக்காக வயர்லஸ் கருவி வாங்கி சாக்கு மூட்டையில் வச்சிருக்கிறதா சொல்றாங்க. அது நமக்காக வாங்கியிருந்தா கொடுக்க வேண்டியதுதானே ஏன் கொடுக்கலே? நாமளும் அத பத்தின விழிப்புணர்வு இல்லாம இருந்திருக்கிறோம். நாமளும் விவசாயி மாதிரி தான் நம்ம பாட்டன், பூட்டனுங்க கத்து கொடுத்தததான் நடைமுறையில தொழில் பண்றோம், நாம் தனித்துவமாக இருக்கிறோம் நம்மளால தான் அரசுக்கு வருமானம் வருது. அதிலிருந்து தான் அரசும் சில சலுகைகள் அறிவிச்சிருக்கு அந்த சலுகைகள் கூட நமக்கு வந்து சேர தடையாக இருப்பதே இந்த மீன்வளத்துறை தான்.

குமரி மாவட்ட மீனவர்களுக்கு நிகழ்ந்த துயரம் நாளைக்கு நமக்கும் நடக்காம இருக்கனும்னா நாம ஒண்ணு சேரணும். சாவு இயற்கையாக வரலாம், செயற்கையாக வரக்கூடாது. ஒக்கி புயல் மரணங்கள் செயற்கையான மரணங்கள்” என்று கூறி தன் கண்டனத்தை பதிவு செய்தார்.

இவரைத் தொடர்ந்து அப்பகுதி மாணவர் கூறுகையில் “மீனவர்களாகிய நம் மூலம் அரசுக்கு சுமார் பல ஆயிரம் கோடி வருமானம் கிடைக்குது. ஆனால் மாநில அரசாலும் சரி, மத்திய அரசாலும் சரி மீனவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. மாநில அரசில் மீனவராகிய ஜெயக்குமார் சார் இருந்தாலும் பொம்மையாத்தான் இருக்குறாரு. இங்கு ஒவ்வொரு சங்க நிர்வாகிகளும் ஒவ்வொரு கட்சியில இருக்கீங்க ஏனென்றால் உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கவோ, குடும்பத்த காப்பாத்தவோ கட்சியில இருக்கீங்க. ஆனால் இன்று ஒக்கி புயலால நம்ம மீனவர்கள் செத்துகிட்டு இருக்காங்க. மீனவ சமுதாயம் அழிஞ்சிக்கிட்டு இருக்கு, இதே நிலைமை தான் நாளை நமக்கும்.

நீங்க கட்சியில இருக்கிறதாலேயே கட்சிகாரங்க உங்க பிள்ளைகளையோ, மீனவ சமுதாயத்தையோ காப்பாத்தப் போறதில்ல. அப்போ கட்சியெல்லாம் தாண்டி மீனவர்களாக வெளிய வந்து நம்ம சமுதாயத்திற்காக வாழனும். சில பேர் ஆசைக்காக கட்சிய சார்ந்து இருக்காங்க ஆனால் மீனவர் சமுதாயம் யாரையும் சார்ந்து வாழல. சட்டப்படியே நம்ம அரசானது செத்த பிறகு 7 வருடம் கழிச்சு தான் பத்து லட்சம் ரூபாய் பணம் தருது. ஆக மீனவர்களான நாமெல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டம் கூடி நமக்கான உரிமை சட்டத்தை மீட்கனும் உரிமையென்றால் என்ன என்பதை சொல்லித்தரனும்.

ஒரு மீனவனுக்குத் தர வேண்டிய தொலைத்தொடர்பு கருவி அரசாங்கம் தராது, ஏனெனில் அது அதானிக்கு தான் கைக்கூலியா இருக்கு. நம்ம மீனவர் சங்கங்களிலேயே பெரிய பெரிய சங்கங்களெல்லாம் இருக்கு அதெல்லாம் நம்ம சமுதாயத்திற்கு உதவி செய்யுமானு தெரியல, ஆனால் அந்த சங்கங்கள்ல படிச்சவங்களெல்லாம் இருக்காங்க அவங்க என்ன செய்யனும்னா இந்த சட்டம் எப்படி இருக்கு, நமக்கான உரிமைகள தெரிஞ்சுகிட்டு அப்டேட்டா இருந்து மத்தவங்களுக்கும் சொல்லித்தரனும்.

மீனவன் தான் உயிர பணயம் வச்சு கடலுக்கு போறான். அரசோ மீனவ மக்களின் உயிரை ஒரு உசுரா மதிக்கல என்பது இந்த படத்தின் மூலம் தெரியுது. ஒரு எம்.எல்.ஏ. -வோ எம்.பி. -யோ செத்திருந்தா இப்படி சும்மா இருப்பாங்களா! அப்போ மீனவ மக்கள் செத்தா சாகட்டும்னு இருக்குது அரசு. இங்கு பிரச்சன வேற மாதிரி முன்னமாதிரி சாதாரணமா இருக்க முடியாது”. என்று ஆதங்கத்தோடு முடித்தார்.

மேலும் இந்த ஆவணப்படத்தை CD யாக போட்டு மக்களிடம் பரவலாக எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்தனர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தயாரிப்பில் வினவு உருவாக்கிய இந்தஆவணப்படம் மீனவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

தகவல் :
வினவு செய்தியாளர், சென்னை.

________________

குமரி மாவட்டத்தின் மீனவ கிராமமான வள்ளவிளையில் “கண்ணீர்க்கடல்” ஆவணப்படத்தின் திரையிடல் கடந்த 30.12.2017 சனிக்கிழமை அன்று நடந்தது. 500-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். ஊர் மையத்தில் இருக்கும் கால்பந்து திடலில் புரோஜொக்டர் மூலம் படம் காட்டப்பட்டது.

வள்ளவிளையில் இருந்த தொழிலுக்குச் சென்ற 70 பேர் கடலில் காணாமல் போயிருக்கின்றனர். இதில் மூவரின் மரணம் நேரில் பார்த்தவர்களை வைத்து உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மற்றவரின் கதி இன்னமும் தெரியவில்லை. அதில் கடலூர், ஆந்திரா, அஸ்ஸாமைச் சேர்ந்த தொழிலாளிகளும் உண்டு.

தற்போது ஐந்து படகுகளில் மீனவர்கள் தெற்கே டீக்கோகார்சியா தீவு வரையிலும் தேடிப் பார்க்க சென்றிருக்கின்றனர். இப்படகுகள் ஜனவரி 5 அன்று திரும்பும் என்று பகுதி மீனவர்கள் கூறுகிறார்கள்.

“கண்ணீர்க் கடல்” ஆவணப்படத்தை மற்ற கிராமங்களில் திரையிடல் செய்யவும் ஏற்பாடுகளை செய்திருப்பதாக பகுதி மீனவர்கள் கூறுகிறார்கள்.

தகவல்: வினவு செய்தியாளர், குமரி

_____________________________

 

கல் குவாரிக்காக விவசாயிகளை விரட்டும் அரசு ! – PRPC ஆய்வறிக்கை !

0

கல் குவாரிக்காக விவசாயத்தை விரட்டும் மாவட்ட கலெக்டர் !

துரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் , ஜல்லிக்கட்டுப் புகழ் அலங்காநல்லூர் ஒன்றியம் வைகைப் பாசன வசதி பெற்ற வளமான பூமி. சமவெளிப் பகுதியைக் கடந்து வடக்கே சென்றால் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீட்சியாகச் சிறு சிறு மண் மலைகள். அதன் மேடான அடிவாரம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பழத்தோட்டங்கள் மற்றும் தென்னந்தோப்புகள் உள்ளன. அடர் சிவப்பு மண்ணால் போர்த்தப்பட்டுள்ள இந்த மண் மலைகளுக்கு உள்ளே புதைந்திருப்பது விளைந்த கரும் பாறைகள்.

விலை மதிப்புள்ள கனிம வளம் (புளு மெட்டல்).  அந்த மண் மலைகளில் ஒன்று பெருமாள் மலை. 66 மேட்டுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நான்கு கிராமங்கள் பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ளன. நெடுங்காலமாக உழைத்து அந்த மண்ணைச் செழிப்பாக்கி நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர் அந்த மக்கள். 66 மேட்டுப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த 4 கிராமங்களில் ஒன்று 66 M உசிலம்பட்டி .

எம்.உசிலம்பட்டி கிராமத்தில் 700 குடும்பங்கள் உள்ளன. எல்லோரும் சிறு விவசாயிகளாகவும், கூலி வேலைக்குச் செல்பவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களது விவசாய நிலங்களில் கொய்யா, மாமரத் தோட்டங்கள் நிறைந்து இருக்கின்றன. அந்தச் செவலை மண்ணில் விளையும் கொய்யாவுக்கு ஒரு தனிச் சுவையும் சந்தையில் அதற்கென தனி மவுசும் விலையும் இருக்கிறது. கொய்யாத் தோட்டங்களோடு சிறு தானியங்களையும் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். ஆழ்துளைக் கிணறுகள் தோண்டி தண்ணீரை உறிஞ்சி தொட்டிகளில் தேக்கி சொட்டு நீர்ப்பாசனம் மூலம் விவசாயம் செய்து எளிமையாக வாழ்ந்து வருகின்றனர்.

சேந்தமங்கலம், மேட்டுப்பட்டி, பள்ளப்பட்டி ,எம்.உசிலம்பட்டி மக்களின் வாழ்க்கையைப் பறிப்பதற்காக, பசுமையான பெருமாள் மலையையும் அதன் அடிவாரத்தையும் குடைந்து கல்குவாரி அமைக்க ஆதி முத்தன் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சாமர்த்தியமாகக் காய் நகர்த்தி வருகிறார். பக்கத்து கிராமமான பாலமேட்டில் அவர் ஏற்கனவே நடத்தி வந்த கல் குவாரியில் விபத்துக்கள், உயிரிழப்புகள், பாதிப்புகள் ஏற்பட்டதனால் அங்கிருந்து மக்களால் விரட்டப்பட்டார்.

இருந்தாலும் ருசிகண்ட பூனையாக பெருமாள் மலையைக் குறிவைத்து மலை அடிவாரத்தில் விவசாயம் செய்து வந்தவர்களில் சிலரை ஆசைகாட்டி வளைத்து, 4 கிராமத்தினரின் எதிர்ப்பையும் மீறி 30 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார் ஆதி முத்தன். இப்போது அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு 50 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை வளைத்து வேலி போட்டுள்ளார். குவாரி டெண்டர் அறிவிக்கப்பட்டபோதே எம்.உசிலம்பட்டி மக்கள் பல முறை போராடித் தடுத்துள்ளனர். மக்களின் கடும் எதிர்ப்பைக் காலில் போட்டு மிதித்து விட்டு மாவட்ட நிர்வாகம் ஆதி முத்தனுக்கு உரிமம் வழங்கி விட்டது.

ஏற்கனவே பாலமேடு பகுதியில் சில குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் சுற்றுச் சூழல் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மரம், செடி, கொடிகள், வீடு வாசல் அனைத்தும் குவாரி தூசியினால் போர்த்தப்பட்டுள்ளன. பலர் நுரைஈரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாகப் பூமிக்கு அடியில் பல மீட்டர் ஆழத்துக்குத் தோண்டியதால் அதில் நீர் ஊற்று ஏற்பட்டு நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்குப் போயுள்ளது.

கிரசர் இயந்திரங்களின் ஓயாத இரைச்சல், பாறையை உடைக்க வெடி வைப்பது ஒலி, காற்று மாசு ஏற்படுத்துகின்றது. டிப்பர் லாரிப் போக்குவரத்தினால் சாலைகள் பழுதுபட்டுள்ளன. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கிரமங்களுக்கு அரசு பேருந்துகள் வர மறுக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்டாண்டு காலமாய் நடைபெற்று வரும் விவசாயம் அழிக்கப்படுகிறது.

இந்த ஆபத்துக்கு எதிராகத் தொடர்ந்து 2 ஆண்டுகளாக இந்த மக்கள் போராடி வருகின்றனர். சாலை மறியல், முற்றுகைப் போராட்டம், செல்-கோபுரத்தில் ஏறிப் போராட்டம் என பல வகையிலும் போராடியதோடு உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டத்தையும் எந்த அரசியல் கட்சியின் துணையும் இன்றித் தாமாகவே நடத்தியுள்ளனர்.

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் 60-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களைக் கொடுத்துள்ளனர். ஆனால் அரசு இவர்களின் குரலைச் செவி கொடுத்துக் கேட்கவில்லை. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் எடுத்துச் சொன்னபோது, சட்ட விதிகளின்படி இரண்டு குவாரிகளுக்கு இடையே 300 மீட்டர் இடைவெளி இருந்தால் அனுமதி வழங்கலாம். அரசுக்கு வருவாய் வருவதைத் தடுக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார். என்னே,தேசப் பற்று! இவரது (மக்கள் விரோத) சேவையைப் பாராட்டி அண்மையில் இவருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 23.07.2017 அன்று இந்தப் பகுதியைப் பார்வையிட்ட வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன், பெருமாள் மலையில் கல் குவாரி வராது. மாவட்ட கலெக்டர் உறுதியளித்துள்ளார். மலைப் பகுதிக்குப் போவதற்கு பாதை கிடையாது. அரசு நிலத்தில் அனுமதி இல்லாமல் ரோடு போட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். மரம் வெட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். தரிசு நில மேம்பாட்டுத் திட்டம், சமூகக் காடு வளர்ப்புத் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலமும், இயற்கையாகவும் லட்சக் கணக்கான மரங்கள் பெருமாள் மலையில் உள்ளன. ஆனால் மரங்களே இல்லாத பொட்டல் காடு, அருகில் விளை நிலங்களே இல்லை என்று வருவாய்த் துறை நீதிமன்றத்தில் எழுத்துமூலம் பொய்யான தகவல் தெரிவித்துள்ளது. லட்சக் கணக்கான மரங்கள் இருப்பதற்கான ஆதாரம் இவர்களிடம் உள்ளது.

கிராம மக்கள் பலரையும் சந்தித்துக் கருத்துக்களைக் கேட்டோம். அவர்களின் குரலில் ஏமாற்றமும் வலியும் வெளிப்படுகிறது. அதே வேளையில் எது வந்தாலும் சந்திப்போம். குவாரியைத் தடுத்து நிறுத்துவோம் என்கிற உறுதியையும் காண முடிந்தது.

பலர் தங்கள் குடும்ப வாழ்வின் ஆதாரமாக இருந்து வரும் விவசாய நிலத்தை விட்டுத்தர முடியாது என்று போராடி வருகிறார்கள். அவர்களில் பலர் இளைஞர்கள். விவசாயத்தைத் தொடர்கின்றனர். பொறியாளர் முத்துராஜா, சொந்தமாகத் தொழில் செய்வதோடு விவசாயமும் செய்துவருகிறார் போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் அவர் கூறியது:

“ 10 வருசத்துக்கு முன்னால் பக்கத்துக் கிராமமான மாணிக்கம்பட்டிக்கு கல்குவாரி வந்தபோது அதன் பாதிப்பை நாங்கள் உணரவில்லை. இன்று தான் பாதிப்பு வெளிப்படையாகத் தெரிகிறது. நிலத்தடி நீர்நிலைகள் வற்றிப் போகிறது, மலை மொட்டையாகிறது, விளைநிலங்கள் மலடாகிறது, கிராமம் காலியாகிறது.

பெருமாள் மலையில் கல் குவாரி போட (ஆதி முத்தன்) ஆதிஷ் நிறுவனம் 2 ஆண்டுகளாக முயற்சிக்கிறது. நாங்களும் விடாமல் போராடி ஒவ்வொரு கட்டத்திலும் தடுத்து வருகிறோம். பக்கத்து கிராமத்தினரும் எங்களுக்கு ஆதரவு தருகின்றனர். ஆனாலும் மதுரை கலெக்டரால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டே வருகிறோம். இந்த முறையும் டெண்டர் விடப்பட்டபோது மிகப் பெரிய போராட்டம் நடத்தினோம். ஒவ்வொருமுறையும் கல்குவாரிக்கு அனுமதி தரமாட்டோம் என்று மாவட்ட கலெக்டரால் உறுதி அளிக்கப்படுகிறது. ஆனால் டெண்டர் விடப்பட்டு கல்குவாரி அமைக்கும் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆதிஷ் அரசு நிலத்தைக் கைப்பற்றி குவாரிக்காக சாலை போட முயன்ற போது 8 நாட்கள் விடாமல் போராடினோம். தாசில்தார் அந்த சாலை வராது என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை விலக்கிக் கொண்டோம். ஆனால் டிசம்பர் 2-ம் தேதி காலை 11 மணி அளவில் ஆதி முத்தன், டிராக்டர்களில் அடியாட்களையும் கற்களையும் கொண்டு வந்து சாலை போடத் தொடங்கினார். நாங்கள் தடுக்க முயற்சி செய்த போது சரமாரியாகக் கற்களை வீசி எங்களைத் தாக்கினார். 7 பேர் காயம் அடைந்தனர். ஒருவருக்குக் கால் முறிந்தது. ஒருவருக்குக் கை முறிந்தது. பொக்லைன் எந்திரத்தின் பக்கெட்டை வைத்து அடித்ததில் ஒருவருக்கு மண்டை உடைந்தது. வீட்டின் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டால் வீடு எரிந்தது. டிராக்டரையும், இரு சக்கர வாகனத்தையும் அவர்களே எரித்து விட்டு எங்கள் மீது பழிசுமத்தினார்கள். சம்பவம் நடந்து கொண்டிருந்த போது பாலமேடு போலீசுக்கு போன் போட்டேன். போலீசு வரவே இல்லை. புகார் கொடுக்கப் போன எங்களை அடித்து மிதித்து உட்கார வைத்தனர். எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோரிடம் எங்கள் தரப்பை எடுத்துக் கூறியபோது அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

சுற்றுப்பட்டு கிராமங்களில் இருந்து சம்பவத்தைக் கேள்விப்பட்டு மக்கள் பாலமேடு காவல் நிலையத்திற்கு வரத்தொடங்கினர். இதனால் உஷாரான, சமய நல்லூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மோகன் குமார், பாலமேடு கடைவீதியில் நிற்கிற மக்கள் அனைவரையும் அடித்து விரட்ட உத்தரவிட்டார். அத்துடன் கைது செய்யப்பட்ட எங்களை வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு உடனடியாகக் கொண்டுபோய் விட்டனர். இப்படி மக்களின் போராட்டத்தைக் காயடித்தது போலீசு.

அங்கேதான் தவமணி தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார். கொலை முயற்சி, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது போன்ற பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் பொய் வழக்குப் பதிவு செய்து மாஜிஸ்டிரேட் முன்பு நாங்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது எப்.ஐ.ஆர்.ஐப் படித்துப் பார்த்த நீதிபதி எஸ்.ஐ. வீரசோழியைப் பார்த்து, “தவமணி என்பவர் உங்களை அரிவாளால் வெட்ட வந்ததாகவும் அது தொப்பியில் பட்டதனால் தப்பித்ததாகவும் கொலை முயற்சி வழக்குப்போட்டுள்ளீர்களே. அப்படியானால் அவர் வெட்ட வந்தபோது நீங்கள் கையால் தடுத்து கையில் வெட்டுக்காயம் இருக்க வேண்டுமே. இருக்கா ? ஏனய்யா இப்படி பொய் வழக்குப் போட்டு ஏழை மக்களைக் கொடுமைப்படுத்துகின்றீர்கள்? இந்த வழக்கு நிலைக்காது, தோற்றுப் போகும்” என்று சொன்னார். ஆனால் அவர் எங்களை விடுவிக்கவில்லை. திண்டுக்கல் காவல் நிலையத்தில் ஒரு மாதம் கையெழுத்துப் போடவேண்டும் என்ற நிபந்தனையுடன் பதிமூன்று நாட்கள் கழித்து ஜாமீன் கொடுத்தார். 36 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. 26 பேர் சிறையில் அடைக்கப்பட்டோம்.

தவமணியைப் பணிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரச்சினையில் தொடர்பு இல்லாத, திருமணமாகி கோவையில் வசிக்கும் அவரது மகனும் திண்டுக்கல்லில் கல்லூரியில் படிக்கும் மகனும் வழக்கில் பொய்யாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாங்கள் ஆதி முத்தன் அடிஆட்கள் மீது கொடுத்த புகாரை காவல் ஆய்வாளர் கிழித்துப் போட்டுவிட்டு அவர்களாக ஒரு புகாரை எழுதி எங்கள் கிராமத்து இளைஞர்கள் இரண்டு பேரை நள்ளிரவில் தூக்கிப் போய் அடித்து உதைத்து கையெழுத்து வாங்கி அதை வைத்து அவர்கள் 10 பேர் மீது வழக்குப் போட்டுள்ளனர். 7 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மூல காரணமாகிய ஆதி முத்தன் கைது செய்யப்படவில்லை.

பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குச் செல்ல நீரோடை ஒன்றுதான் பாதையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆடுமடுகள் மேய்சலுக்காகப் போகும் 3 அடி பாதையை வருவாய் அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் அடாவடியாக விரிவுபடுத்த ஆதிமுத்தன் முயற்சி செய்ததை தடுத்த வட்டாட்சியர் ஒரே வாரத்தில் இடம் மாறுதல் செய்யப்பட்டார்.இது மாவட்ட ஆட்சியருக்குத் தெரியாமல் நடந்திருக்குமா? இப்போது புதிதாக வந்திருக்கும் வட்டாட்சியர் நிலம் எனக்குச் (அரசுக்கு) சொந்தமானது. நீங்கள் யார் கேள்வி கேட்க என்று மக்களைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார்.ஆனால் ஆதி முத்தனைப் பாதை போட அனுமதிக்கிறார். இது யாருக்கான நியாயம்? என்று கேட்கிறார் பொறியாளர் முத்து ராஜா.

”இந்தப் போராட்டத்துக்கு நான்தான் காரணம் என்று கூறி என்னைத் தனிமைப்படுத்திப் பாலமேடு காவல் நிலையத்திலும் ,பின்னர் வாடிப்பட்டி காவல் நிலையத்திலும் வைத்து கொடூரமாகத் தாக்கினர். கைவிரல்களை ஒடித்தனர். காவல் உதவி ஆய்வாளர்கள் வீரசோழி ,மருதமுத்து ஆகியோர் மிகக் கடுமையாகத் தாக்கினர். ’அந்த நிலத்தை நீ வைத்து மயிரா புடுங்கப் போற? அதான் கேட்கிற பணத்த தருறேன்னு சொல்லுறார்ல குடுக்க வேண்டியது தானே? உன்னாலதான மத்தவனுங்களும் நிலத்த குடுக்க மாட்டேன்கிறான்’ என்று சொல்லி அடித்தார்கள்.என்னுடைய மகன்களுடைய எதிர்காலத்தையும் பாழாக்கிவிடுவோம் என்று மிரட்டினார்கள்.என்னை அடித்து சித்திரவதை செய்ததை நீதிபதியிடம் சொல்வேன் என்று சொன்னதற்கு ,சொன்னால் கூடுதல் தண்டனை கிடைக்கும் என்று மிரட்டினார்கள்” என்றார் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்திவரும் விவசாயி தவமணி.

இவருடைய நிலத்துக்கு ரூ.ஒரு கோடி வரை பேரம் பேசியுள்ளார் ஆதி முத்தன். நிலத்தை விற்றுவிட்டு தரிசாகிப் போனவர்களை நினைத்துப் பார்த்த தவமணியும் அவரது மனைவியும் உயிரே போனாலும் நிலத்தைக் கொடுக்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர்.

மனைவி மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இவர்களுடைய மூத்த மகன் இந்திய ராணுவத்தில் பணி புரிகிறார்.இப்போது ஆதிமுத்தன் அந்தப் பாதையைப் பயன்படுத்துகிறார். யாரிடமும் புகார் தர முடியாது. வழக்கும் போட முடியாது. ஒரே தீர்வு நிலத்தை விட வேண்டும் அல்லது ஆதிமுத்தனை மக்கள் ஒன்று திரண்டு விரட்டவேண்டும்” என்கிறார் தவமணி மக்களின் பிரதிநிதியாக.

இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் மாபியாக்கள் கிரானைட் பி.ஆர்.பி.ஆகட்டும், ஆற்றுமணல் ஆறுமுகசாமி ஆகட்டும்,தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜன் ஆகட்டும் அவர்கள் தனியாக இல்லை.அரசு கட்டமைப்பு முழுவதுமே அவர்கள் பக்கம் தான் இருக்கிறது. அவர்கள் எந்த சட்ட திட்டங்களையும் கடைபிடிப்பதில்லை.அவர்களது ஒரே நோக்கம் கொள்ளை லாபம்.அதற்காக லஞ்சம்,ஊழல், முறைகேடு,கொலை கலவரங்களில் ஈடுபடுவது.சுற்றுச் சூழல் பாதிப்பு,லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் கிடையவே கிடையாது.விவசாயத்தை அழிக்கும் உலகமயமாக்கத் திட்டத்தில் இவர்கள் கருவியாக செயல்படுகின்றனர்.இன்னும் காவேரி டெல்டா,கதிராமங்கலம், நெடுவாசல்,காடு மலைகள்,ஆறுகள்,கனிம வளங்கள் அனைத்தும் அரசினால் சூறையாடப்படுகிறது. சமூகத்தின் கடைமடைப் பகுதியில் நிற்கும் விவசாயிகள் கேட்பாரின்றி பலியாக்கப்படுகின்றனர்.இதன் காரணமாக இந்த அரசு கட்டமைப்பை நம்பாமல் தாங்களே அதிகாரத்தைக் கையிலெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.அதுதான் எம்.உசிலம்பட்டி கிராமத்திலும் உண்மையாகி இருக்கிறது.

தகவல்: மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரைக் கிளை.செல்:9443471003

கடல் : பொது அறிவு வினாடி வினா 8

ந்த வினாடி வினாவில் கடல் குறித்த கேள்விகளைப் பார்க்க இருக்கிறோம். அதிலும் இந்தியப் பெருங்கடல் குறித்து கேள்விகள அதிகம் உள்ளன. முயன்று பாருங்கள்!

1. உலகில் உள்ள பெருங்கடல்களில் எண்ணிக்கை எவ்வளவு?
2. பூமியின் பரப்பளவில் பசிபிக் பெருங்கடலின் பங்கு விகிதம் என்ன?
3. உலகில் மிகப்பெரிய மீன் இனம் எது?
4. கடலின் அலைகளை நிலா பாதிப்பது உண்மையா?
5. உலகளவில் உள்ள கடல் பரப்பில் இந்தியப் பெருங்கடலின் பங்கு விகிதம் என்ன?
6. உலகின் மிகப்பெரிய வளைகுடா எது?
7. இந்தியப் பெருங்கடலின் எந்தப் பகுதியில் உப்புத் தன்மை குறைவு?
(இங்கே அதிக நதிகள் கடலில் கலப்பதால் கடலின் உப்புத் தன்மை ஒப்பீட்டளவில் குறைவு)
8. இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கனிம வளங்களில் எது அதிக மதிப்பையும், அதிக இருப்பையும் கொண்டிருக்கிறது?
9. கீழ்கண்ட நகரங்களில் எது இந்தியப் பெருங்கடலின் எல்லையில் இல்லை?
10. கீழ்க்கண்ட துறைமுகங்களில் எது இந்தியப் பெருங்கடலில் இல்லை?
(இந்த துறைமுகம் மட்டும் பசிபிக் கடலில் உள்ளது)
11. இந்தியப் பெருங்கடலில் இருக்கும் கடல்களில் எது பெரியது?
12. கீழ்க்கண்ட நதிகளில் எது இந்தியப் பெருங்கடலில் கலக்கவில்லை?
13. இந்தியப் பெருங்கடலைப் பற்றிய கீழ்க்கண்ட உண்மைகளில் ஒன்று மட்டும் பொருந்தாது, அது எது?

 


 

பார்ப்பனிய கொட்டத்தை அடக்கிய பீமா கோரேகான் போரின் 200-ம் ஆண்டு !

2

பீமா கோரேகான் போரில் மராத்திய பேஷ்வா அரச பரம்பரை வீழ்த்தப்பட்டு 2018, ஜனவரி முதல் நாளோடு 200 ஆண்டுகள் ஆகின்றது. ஷானிவார் வாடாவில் நடைபெற்ற நினைவுநாள் கூட்டத்தில் ரோகித் வெமுலாவின் தாயார் இராதிகா வெமுலா, குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி மற்றும் ஜெ.என்.யூ மாணவர் அமைப்பு தலைவர் உமர் காலித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கபீர் கலா மஞ்ச், சம்பாஜி பிரிகேட், முஸ்லிம் முல்னிவாசி, இராஷ்ட்ர சேவா தல் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட தலித் மற்றும் சிறுபான்மையின அமைப்புகள் அதில் பங்கேற்றன.

ஆனால் அகில பாரதிய பிராமண மகாசபா, இராஷ்ட்ரிய ஏகாதமடா இராஷ்டிரிய அபியான் உள்ளிட்ட பல்வேறு இந்துமதவெறி அமைப்புகள் இந்நிகழ்ச்சியை தேச விரோத செயல் என்றும் சாதிகளுக்கிடையே பாகுபாட்டை ஏற்படுத்துகிறது என்றும் குற்றஞ்சாட்டி தடை செய்ய முயற்சி செய்தன.

பீமா – கோரேகான் வெற்றித்தூண்

“இந்தியாவை கைப்பற்றுவதற்காக மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களின் அரசர்களுக்கு எதிராகவும் ஆங்கிலேயர்கள் போரிடத் தொடங்கினார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மராட்டியத்தை வெல்வதற்காக அதற்கு தலைமையேற்றிருந்த பேஷ்வாக்களுக்கு எதிராக அவர்கள் சண்டையிட்டார்கள். ஆங்கிலேயர்கள் படையில் மகர், மராத்தா மற்றும் பிராமணர்கள் உட்பட அனைத்து சாதியினரும் இருந்தனர். பேஷ்வா படையிலும் மகர், மரத்தா உட்பட அனைத்து சாதியினரும் இருந்தனர். இது பிரிட்டிஷ் மற்றும் இந்திய ஆட்சியாளர்களுக்கு இடையேயான ஒரு போராகும் மாறாக மகர் மற்றும் பேஷ்வாவிற்கு இடையில் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அவர்கள் எதைக் கொண்டாடுகிறார்கள்? மராத்தாவை வீழ்த்திய ஆங்கிலேயர்களின் வெற்றியையா?” என்று அகில பாரதீய பிராமண மகாசபாவின் தலைவரான ஆனந்த் தேவ் கூறினார்.

இதன் மூலம், சில அமைப்புகள் பேஷ்வாக்களை தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கியவர்களாக அவதூறு செய்ய முயற்சிக்கின்றன. அவர்கள் வேண்டுமென்றே பேஷ்வாவின் அரண்மனையாக இருந்த ஷானிவார் வாடாவில் ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு பா.ஜ.க அரசும் அனுமதியளித்திருப்பதைக் கண்டு நாங்கள் ஏமாற்றம் அடைகிறோம். குறைந்தபட்சம் சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு சாதியினரை பற்றி பேசி சமூகத்தில் மேலும் பதட்டம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய புனேவின் காவல்துறை ஆணையாளரை கேட்டிருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

“சாதி, மதத்தால் மக்களைப் பிரித்து நாட்டின் வளங்களை சில முதலாளிகளின் கைகளுக்கு பா.ஜ.க மற்றும் சங்க பரிவாரங்கள் தாரை வார்க்கின்றன” என்று நினைவு நாள் நிகழ்ச்சியில் கூறிய ஜிக்னேஷ் மேவானி அவர்களை “புதிய பேஷ்வாக்கள்” என்று எல்கார் பரிஷத்தில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க அரசை “புதிய பேஷ்வாக்கள்” என்று அழைப்பது அரசியலைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்று புனே நகர் இந்து மகா சபா கூறியிருக்கிறது. எனவே இது ஒரு தேச விரோத செயல் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறது.

இந்த ஒப்புதல் வாக்குமூலம் ஒருவகையில் ஒடுக்கப்படும் மக்கள் அதற்ககெதிராக ஒன்று கூடுவதை கண்டு ஏற்படும் அச்சம் தான்.

இந்துத்துவ கும்பல்கள் ஏன் அச்சம் கொள்கின்றன?

மராத்திய அரசர் சிவாஜியின் பழம்பெரும் வெற்றிகளில் மராத்திய மண்ணின் மைந்தர்களான மகர் சமூகத்தினர் இன்றியமையாத அங்கமாக இருந்து வந்தனர். ஆனால் சிவாஜிக்கு பின் ஆட்சியைக் கைப்பற்றிய பார்ப்பன பேஷ்வாக்கள் மனு தர்மத்தை நிலைநாட்டினர்.

மனுவின் படி சூத்திரனுக்கு ஆயுதம் தரிக்கும் உரிமை கிடையாது; கல்வி கற்கும் உரிமை கிடையாது; வணிகம் செய்யவும் உரிமை கிடையாது. இது பார்ப்பனர்கள் உள்ளிட்ட ஆதிக்க வருணத்தார் சூத்திர பஞ்சம மக்களை அடக்கியொடுக்க இன்றியமையாத ஒன்று.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜிக்னேஷ் மேவானி மற்றும் ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா

இடுப்பில் கட்டிய துடைப்பத்துடனும் கழுத்தில் தொங்கவிடப்பட்ட பானையுடனும் தான் பார்ப்பனர்கள் வாழும் நகரத்திற்குள் மகர் சமூகத்தினர் நுழைய முடியும். அவர்களது கால்களால் தீண்டப்பட்ட தரையைத் துடைப்பத்தைக் கொண்டு துடைத்துக் கொண்டும் எச்சிலை பானையில் துப்பிக் கொண்டும் நகரத்தினுள் அலைந்து திரிய வேண்டும் என்பது தான் பார்ப்பனர்கள் விதித்த மனுதர்மம். மகர் சமூகத்தினர் தங்களது சாதியையும் யாரிடமும் மறைக்கக் கூடாது. மற்றும் அவர்களுக்கு படிப்பறிவும் ஆயுதங்களைத் தூக்கும் உரிமையும் மறுக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால் கடுமையான தண்டனைகள் என விலங்குகளை விட மோசமாக மகர் சமூகத்தினர் நடத்தப்பட்டனர்.

வரலாற்றின் இத்தருணத்தில் தான் தலைநகர் புனேவைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் பேஷ்வா பாஜிராவ்-II யை நெருங்கிக் கொண்டிருந்தனர். தமது அரசு – இராணுவ எந்திரத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான உழைக்கும் மக்கள் தேவைப்பட்டனர் என்பதால் அவர்கள் சாதி பார்க்காமல் தலித் மக்களை இராணுவத்தில் சேர்த்துக் கொண்டனர்.

வரலாறு எப்பொழுதுமே பக்க சார்பு கொண்டது. இந்தியாவில் தேசியம் என்றாலே என்னவென்று தெரிந்திராத நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களா அல்லது பார்ப்பனியமா, சுயமரியாதையா அல்லது அடிமைத்தனமா என்பதில் முன்னதை தெரிவு செய்தனர் மகர் சமூகத்தினர். யுத்தமும் தொடங்கியது.

நூற்றாண்டுகள் கழிந்தும் ஆர்.எஸ்.எஸ்-ன் இதயத்தை குத்தும் முள்ளாக, வரலாற்றின் அழியாத சின்னமாய் பீமா-கோரேகான் நினைவுத் தூணாக பின்னர் இதுவே நிலைத்துவிட்டது.

பீமா-கோரேகான் யுத்தம் :

1818, ஜனவரி முதல் நாள் ஆங்கிலேயப் படைத்தளபதி எப்.எப். ஸ்டாண்டன் தலைமையில் கிழக்கிந்திய நிறுவனத்தின் பாம்பே காலாட்படை அணியின் 500 வீரர்கள் பீமா ஆற்றைக் கடந்து 25,000 வீரர்களைக் கொண்ட மராத்தியப் பெரும்படையை பீமா-கோரேகான் கிராமத்தில் எதிர்கொண்டனர்.

பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு எதிராகத் தலித் மக்களின் விடுதலைக்கான ஓர் இன்றியமையாத திருப்பமாக இந்தப் போரை தலித் ஆர்வலர்களில் பலர் கருதுகின்றனர். இந்தப் போரில் 12 ஆங்கிலேய அதிகாரிகளும் மகர் வீரர்கள் உள்ளிட்டு 834 வீரர்களும் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற வீர்களின் எண்ணிக்கையில் சில கருத்து வேற்றுமைகள் உண்டு. புள்ளிவிவரங்கள் எதுவாக இருப்பினும் இந்தப் போரானது அதுவரை வழக்கத்தில் இல்லாத புதுமையில் திகழ்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை.

இதில் பார்ப்பன பேஷ்வாக்களுக்கு எதிரான தங்களது வீரஞ்செறிந்த போரினால் ஆங்கிலேயர்களுக்கு மகர் வீரர்கள் வெற்றியைத் தேடித் தந்தனர். இதற்கு நன்றிக் கடனாகத் தான் போரில் இறந்த மகர் சமூக வீரர்களுக்கு நினைவுச் சின்னமாக வெற்றித்தூணை எழுப்பி அவர்களை வெள்ளையர்கள் பெருமைப்படுத்தினார்கள்.

இந்த நினைவு நாளை தேச விரோத செயல் என்று கரித்துக்கொட்டும் அதே நேரத்தில் அவர்கள் முன் மொழியும் தேசம் அகண்ட பாரதம்;  தேசியம் – இந்து; கலாச்சாரம் – மனுதர்மம்; மொழி – சமஸ்கிருதம். இதை ஆதரிப்பவர்கள் தேச பக்தர்கள். எதிர்பவர்கள் தேச விரோதிகள். இந்த தேசியத்திற்குள் தலைகீழாக எப்படி நின்றாலும் தலித்துக்கள் சுயமரியாதையுடன் வாழவே முடியாது.

உண்மையில் தலித்துக்களையும் உள்ளடக்கி பார்ப்பன வர்ணாஸ்ரம அடிப்படையிலான ஒரு தேசியத்தை கட்டமைப்பதற்கே ஆர்.எஸ்.எஸ் கும்பல் கனவு காண்கிறது. அனால் பீமா கோரேகான் யுத்தமும் அதன் நினைவுச்சின்னமும் ஆர்.எஸ்.எஸ் கும்பல்களின் தொண்டையில் சிக்கிக்கொண்ட முள்ளாக 200 ஆண்டுகள் கழித்தும் இன்னும் உறுத்திக் கொண்டே இருக்கிறது.

கடைசிச் செய்தி: இந்த நினைவுக் கூட்டத்தை அச்சுறுத்தி வந்த இந்துமதவெறி அமைப்புக்கள் இறுதியில் கல்லெறி மூலம் கலவரத்தை துவங்கியது. பல வாகனங்கள் எரிக்கப்பட்டும், உடைக்கப்பட்டும் இருக்கின்றன. ஒரு இளைஞர் கொல்லப்பட்டிருக்கிறார். பா.ஜ.க ஆளும் மாநிலம் என்பதாலும், மோடி அரசின் ஆசியாலும் ஆட்டம் போடும் இந்துமதவெறி அமைப்புக்களை கண்டும் காணாமலும் போலிசார் இருக்கின்றனர். இவைகளை மீறி இந்த பீமா கோரேகான் வெற்றிக் கூட்டம் நடந்தேறியது. இதுதான் இந்துமதவெறியர்களை அச்சுறுத்தும் செய்தி.

மேலும் :


 

குமரி கடற்கரையை அழிக்க வரும் சரக்குப் பெட்டக வர்த்தகத் துறைமுகம் !

0

கோவளம் கடற்கரையை அழிக்க  வரும் சரக்குப் பெட்டக வர்த்தகத் துறைமுகம் !
சாதி-மத வேறுபாடின்றி
எதிர்த்துப் போராடும் மக்கள் !
சாதி-மத அடிப்படையில் மக்களைப் பிளக்கும் பாஜக!

ன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே இனயம் கிராமத்தில் அமையவிருந்த சர்வதேச சரக்குப் பெட்டக முனையம்(துறைமுகம்) மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாகத் தற்போது கன்னியாகுமரி  அருகே உள்ள கோவளம் பகுதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கேயும் மக்கள் துறைமுகத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள். மக்கள் எதிர்ப்பின் அடிப்படை, துறைமுகம் வந்தால் இப்பகுதி கிராமங்கள் அழிந்து விடும் என்பதும், சரக்கு உற்பத்தி ஏதும் இல்லாத குமரி மாவட்டத்தில் துறைமுகத்திற்கான தேவையே எழவில்லை என்பதுமாகும். இதுதவிர  இராணுவ நோக்கங்களுக்காக மோடி அரசு இத்துறைமுகத்தை அமைக்கிறது என்ற  சந்தேகத்தையும் எழுப்புகிறார்கள். ஏற்கனவே அணு உலை, தாது மணல், இயற்கைச் சீற்றங்கள் எனப் பல பாதிப்புகளை எதிர்கொள்ளும் குமரி மாவட்டத்தை, கடற்கரையை அரசு ஏன் குறி வைக்கிறது? எனக் கேட்கிறார்கள்.

மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லாத பாஜக அரசு, தனது கட்சியினர் மூலம் கிருத்தவ மீனவர்கள் – இந்து நாடார்கள் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. இதற்காக துறைமுக ஆதரவுக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு ஆர் எஸ் எஸ் – பாஜக ஆட்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அறிக்கை, போஸ்டர் என இவர்கள் சாதி – மதப் பிரச்சனையைத் தூண்டி வருகிறார்கள். இது தவிர 19,000 கோடியில் வெறும் 10% கமிசன் என வைத்துக் கொண்டாலும் கிடைக்கப்போகும் 1,900 கோடி ஆர்எஸ்எஸ் – பாஜக கூட்டத்தையும், மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனையும் உந்தித் தள்ளுகிறது.

உண்மையில் துறைமுகம் வந்தால் பாதிக்கப்படும் மக்களில், இந்து நாடார் விவசாயிகள் ஏராளமானோர்  உள்ளனர். இவர்களின் விவசாய நிலங்கள், தென்னந் தோப்புகள் பறிபோகும் அபாயம் உள்ளது. எனவே இந்த மக்களும் போராடுகிறார்கள். இந்த உண்மை திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.

கோவளம் துறைமுகத்திற்கு எதிராக, கடந்த 28.12.2017 அன்று மாலை 5.00 மணியளவில் கோவளம் புனித இஞ்ஞாசியார் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள், இளைஞர்கள், கடலோடிகள், விவசாயிகள், அறிவுத்துறையினர் கலந்து கொண்டனர். இனயம் துறைமுகத் திட்ட எதிர்ப்புக் குழுவைச் சார்ந்த இளைஞர்கள் சிலர் சரவணன் என்பவர் தலைமையில், துறைமுகத் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து அவர்கள் ஏற்கனவே தயாரித்து இணையம் பகுதி மக்களிடம் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திய காணொளிக் காட்சிப் படங்களைக் கொண்டுவந்து திரையிட்டு விளக்கினர். கூடுதலாக பாதிரியார்களும் திட்டத்தினால் ஏற்படப்போகும் மோசமான விளைவுகளை எடுத்துச் சொல்லினர்.

வழக்கம் போல அரசு அதிகாரிகள் கோவளம் கடல் பகுதியில் விவசாயம், மீன் பிடிதொழில் எதுவும் இல்லை. தரிசு நிலமாகத்தான் உள்ளது என்று காட்டியுள்ளனர். துறைமுகம் வந்தால் இந்தப் பகுதி பொருளாதார ரீதியாக பெரிய முன்னேற்றம் அடையும். நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உள் நாட்டுப் பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதியாகும், நாடு வல்லரசாகும் என்றெல்லாம் கூறியுள்ளனர். ஆனால் இதை நம்பாது சில இளைஞர்கள் எதிர்த்து சுவரொட்டி ஒட்டியுள்ளனர். எதிர்ப்புத் தெரிவித்த இளைஞர்களை கைது செய்து காவல் துறை வழக்குப் போட்டுள்ளது.

துறைமுகத் திட்டம் பற்றிய வரைபடத்தைத் திரையிட்டு விளக்கிப் பேசியவர் அதன் பாதிப்புகளை நுணுக்கமாகச் சுட்டிக் காட்டினார். வர்த்தகத் துறைமுகம் அமைக்க 70 அடி கடல் ஆழம் வேண்டும். கரையிலிருந்து சுமார் 2 கி.மீ.தூரம் கடலில் தரை உருவாக்கப்படும். ஏராளமான பாறைகள் மண் கொட்டப்படும். கடலை ஆழப்படுத்த தோண்டும் போது கடற்கரை மணல் வெளியேற்றப்படும். அதன் மூலம் கடல் ஓரம் உருக்குலையும். கடல் நீர் ஊருக்குள் வரும். மீன்பிடி தொழில் பாதிக்கப்படும். கடற்கரையிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரம்வரை வேறு எந்த நடவடிக்கையும் நடைபெறாது. உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி அதன் பாரம்பரியத்தையும். எழிலையும் இழந்து பாலைவனமாகும். சுற்றுச் சூழல், நிலத்தடி நீர், விவசாயம், மீன்பிடி தொழில் அனைத்தும் பாதிக்கப்படும். எனவே மக்களுக்கு எதிராக யாருக்காக இந்த திட்டத்தை அரசு கொண்டுவருகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

அண்டை கிராமங்களின் தலைவர்கள், ஊர்த் தலைவர்கள். அமெரிக்காவில் பணியாற்றும் விஞ்ஞானி, கத்தோலிக்கப் பாதிரியார்கள் பலர் இதன் பாதிப்புகளை விளக்கிப் பேசினர். முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்த பார்த்தசாரதி என்பவர் பேசும்போது , “பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் என்னை அணுகி இந்த திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டனர். நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். எனக்கு இங்கே அதிகமான நிலம் இருக்கிறது. எனக்கு நாகர்கோவிலில் வீடு உள்ளது. இருந்தாலும் எனது மண்ணுக்காக, மக்களின் நலனுக்காக நான் சாதி, மதம் கடந்து போராட விரும்புகிறேன். எதற்காகவும் விலைபோக மாட்டேன் என்று பலத்த கர ஒலிக்கு நடுவே கருத்தைப் பதிவு செய்தார்.

அமெரிக்காவில் பணியாற்றும் விஞ்ஞானி பேசும் போது, சுற்றுச் சூழல் அறிஞர் லால் மோகன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி தேவசாகாயம் போன்றவர்கள் நமக்காகப் போராட முன்வந்துள்ளனர், துறைமுகத்திற்காக அனல் மின் நிலையங்கள் வந்தால்  நாம் இங்கு வாழ முடியாது, தூத்துக்குடி சென்று பார்த்தால் பாதிப்புகள் தெளிவாக புலப்படும், மேலும் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கான இடங்களுக்கு, கண்டெய்னர் லாரிகள் நிற்பதற்கு கூடுதல் இடங்களை கையகப்படுத்துவார்கள்,  நாம் இங்கு வாழ முடியாது  என்று தெரிவித்தார்.

இறுதியாகப் பேசிய பச்சைத்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், “கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தினால் என் மீது 300 -க்கும் மேற்பட்ட வழக்குகளை அரசு போட்டது. அமெரிக்காவிலிருந்து பணம் வாங்கிக்கொண்டு நாட்டுக்கு எதிராக சதி செய்வதாக பிரச்சாரம் செய்தார்கள். சாதி ரீதியாக என்னை நாடார் என்றும் மீனவர்கள் என்றும் பிரித்தார்கள். எனக்கு எந்த சாதியும் இல்லை. மதமும் இல்லை. இது என்னுடைய சொந்த மண். என்னுடைய ரத்த உறவுகள் இங்கே இருக்கின்றனர். உங்களோடு நான் எப்போதும் இருப்பேன். கிராமக் கமிட்டிகளை அமைத்து, நிதி ஆதாரங்களை உருவாக்கி விடாப்பிடியாகப் போராடுங்கள்.

இந்த திட்டம் ஒரு நாசகாரத் திட்டம். கடல் தொழில், விவசாயம், சுற்றுச் சூழல், நிலத்தடி நீர் அனைத்தும் பாழாகிவிடும். இந்த சரக்கு வர்த்தகத் துறைமுகத்திற்கு 2000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது என்றால் அதன் பிரம்மாண்டத்தைப் புரிந்துகொள்ளலாம். அதற்காக அனல் மின் நிலையத்தையும் அருகிலேயே அமைக்கப் போகிறார்கள். நிலக்கரி தூசியினால் இந்தப் பிரதேசமே சுடுகாடாகும். யாருக்கான திட்டம் இது?அம்பானி, அதானிகளை வாழவைப்பதற்காக எங்கள் மக்கள் சாக வேண்டுமா ? கிறிஸ்தவன், மீனவன், நாடார், இந்து, ஏழை, பணக்காரன் என்று சொல்லி மக்களைப் பிரிக்கப் பார்க்கிறது பி.ஜே.பி. இதற்கெல்லாம் நாம் மயங்கக்கூடாது”என்றார்.

மீன்வளத்துறை போர்டு உறுப்பினர் சகாயம் என்பவர் கூறும் போது, கோவளத்தில் துறைமுகம் அமைப்பதை மக்கள் எதிர்த்தவுடன் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் “கடற்கரை  மீனவ மக்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல. கோவளத்தில் துறைமுகம் வந்தே தீரும்” என்று கூறினார். சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தலாம் என்று கருதி பாஜகவுக்கு ஆதரவாக நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வருவார்கள் என்று அவர் கருதுகிறார். ஆனால் அவரது கனவு பலிக்காது. பாதிப்பு எல்லோருக்கும் தான் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்” இங்கு அனைத்து மக்களும் இணைந்துதான் போராடிகிறோம். இன்றைய கூட்டத்தில் பேசியவர்களில் அதிகமானோர் இந்துநாடார் விவசாயிகளே” என்றார்.

இதன்பின் 30.12.2017 அன்று கோவளம் பகுதியைப் பார்வையிட வந்த குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் மற்றும் அதிகாரிகளை மீனவர்கள் உள்ளிட்ட மக்கள் முற்றுகையிட்டு சிறைபிடித்ததாகவும், துறைமுகம் வராது என்று எழுதிக்கொடுக்க வேண்டும் என்று கோரியதாகவும் அதற்கு மாவட்ட ஆட்சியர், “அரசு எனக்கு அளித்த பணியைச் செய்ய வந்துள்ளேன். எழுதிக் கொடுக்க முடியாது” என்று சொன்னதாகவும், பின்னர் போராடிய மக்கள் மீது வழக்குப் பதியப்பட்டதாகவும்  செய்திகள் தெரிவிக்கின்றன.

சாகர் மாலா திட்டத்தின்படி தமிழ் நாட்டின் கடற்கரை முழுவதையும் ஆக்கிரமித்து கார்பரேட் முதலாளிகளுக்கு கையளித்துவிடுவதே மோடியின் திட்டம்.அதை நிறைவேற்றவும், கமிசனுக்காகவும் சாதி-மதப் பிரச்சனையைக் கையிலெடுத்துள்ளனர் பிஜேபியும், பொன்னாரும். மீண்டும் ஒரு மண்டைக் காடு கலவரத்தை நாங்கள் விரும்பவில்லை என வெளிப்படையாகப்  பேட்டி கொடுக்கின்றனர். அரசு இயந்திரம் முழுக்க இவர்களுக்கு ஆதரவாக உள்ளது. இந்தியாவிற்கு பல்லாயிரம் கோடிகள் அந்நியச் செலவாணி ஈட்டிக் கொடுத்து, இந்தியாவின் தென்மேற்குப் பகுதியைக் காத்து நிற்கும் சிறுபான்மை கிருத்துவ மீனவ மக்கள் மீதான பாஜக-வின் வெறுப்பும் பிரச்சனைக்கு முக்கியக் காரணம்.

மேற்கண்ட சூழலில் கோவளம் பகுதி மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி அப்பகுதி மக்களை அழிவிலிருந்து காப்பதும், ஆர் எஸ் எஸ் – பாஜகவின் மதக்கலவரத் திட்டத்தை  முறியடிப்பதும் தமிழகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளின் கடமையாக உள்ளது.

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
தமிழ்நாடு.

 

இரண்டு பீட்சா ஒரு கொசுவர்த்தி மற்றும் பாகுபலி – 2

3

சென்னை புறநகர் ஒன்றின் ஆவின் பால் நிறுவனத்துல ஒரு ஐஸ்க்ரீம வாங்கி எம்புள்ள கையில குடுத்துட்டு புல்லு தரையில குந்தி இருந்தேன். ஆறு துண்டா நறுக்குன ஒரு பீட்சா தட்ட வச்சுகிட்டு நாக்குல எச்சில் ஊற மூணு பசங்க குந்திருந்தாங்க. பீட்சா தின்னப் போறோம்னு அந்தன சந்தோசம் அவங்க முகத்துல. ஆனா இன்னொரு பீசா வாங்கிட்டு வரப்போன நண்பன் வர்ற வரைக்கும் பசங்ககிட்ட பொறுமை இல்ல. பசங்களாச்சே, கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம காத்துக் கிடக்கும் எரிச்சல் அவர்களுக்குள் சலசலப்ப ஏற்படுத்திருச்சு.

ன்னடா, இவன இன்னும் காணோம்.

கூட்டமாருக்குல்ல வாங்கிகினுதான்டா வரனும். இன்னாத்துக்கு அவுசரப்பட்ற நீ.

இவருக்கு மட்டும் அவுசரம் கெடையாதாக்கும். பீட்சாவ பாத்துனே இருக்க தோணுதா? துன்ன தோணலையா?

இவன இட்டாந்துருக்கவே கூடாதுடா!

ம்க்கூ. நீ ஏதோ துட்டு போட்டு இட்டாந்த மாறி சொல்ற. வெங்காயம் பொறுக்கி சேர்த்த துட்ட ஒனக்கு நாந்தாண்டி குடுத்துருக்கேன்.

உந்தம்பி தானடா. விட்டு குடுக்க மாட்டியா? அவனுக்கு செலவழிக்குற துட்டுக்கு கணக்கு பாக்குற. வந்த எடத்துல சண்ட வலிக்கிற. ஒனக்கே நல்லாருக்காடா.?

நீ நடிக்காதடா. ஒனக்கு மட்டும் சீக்கரம் துண்ணனும்னு ஆசையில்ல?

சண்டை பெருசாக மாறுவதற்குள் பீட்சா தட்டுடன் நண்பர்களே வந்துட்டாங்க. பீட்சாவ நடுவுல வச்சு, வட்டமா உக்காந்து சந்தோசமா சாப்பிட ஆரம்பிச்சாங்க.

இன்னாடா இது காக்கா முட்டை படத்துல சொன்னாப் போல நல்லாவே இல்லையே.

ஆமாடா! இதுக்கு ஐஸ்க்கிரீமே வாங்கினுருக்கலாம்.

ஒரு பால் பாக்கெட்டும் ப்ரட்டும் வாங்கினு வீட்டுக்கு போயிருந்தா டீ போட்டு நல்லா முக்கி சாப்ட்ருக்கலாம்.

சூப்பரா தானடா இருக்கு. எனக்கு புடிச்சுருக்குப்பா.

கை கழுவாமெ துன்னா நல்லாதாண்டா இருக்கும்.

அந்த பாப்பா பீட்சாவையே பாத்துகினு இருக்கு அதுக்கு ஒன்னு குடுடா.

இவர்கள் பேச்சில கவரபட்ட நான் என்னோட குழந்தைய மறந்துட்டேன். தான் கையில இருக்குற ஐஸ் க்ரீம் கரையறது தெரியாம பல கலர்ல பளிச்சினு இருக்குற பீட்சா தட்டையே வெறிச்சு பாத்துட்டுருந்த எம்பொண்ணுட்ட பசங்க பீட்சாவ எடுத்து நீட்டிட்டாங்க.

அதெல்லாம் வேண்டாப்பா நீங்க சாப்பிடுங்க.

பரவால்ல ஆன்டி. பாப்பாவுக்கும் குடுங்க.

எந்த ஏரீயாப்பா நீங்கள்ளாம்?

மதுரவாயல் ஆன்டி.

இன்ன படிக்கிறீங்க.?

நாங்க மூணு பேரும் 8 வது. அவனுங்க ரெண்டு பேரும் 7 வது.

எந்த ஸ்கூல்ல படிக்கிறீங்க.?

மதுரவாயல் கெவர்மெண்ட்டு ஸ்கூல்.

பீட்சா சாப்பிடவா இங்க வந்தீங்க?

இல்ல ஆன்டி. ஸ்கூலு லீவு, படம் பாக்கலாம்ன்னு வந்தோம்.

என்னா படம் பாத்தீங்க?

பாகுபலி -2 பாக்கலாம்ன்னு வந்தோம். டிக்கெட்டு கெடைக்கல.

பக்கத்துல வேற தியேட்டருல ஓடுதே போயி பாக்க வேண்டியதுதானே?

அதுக்கெல்லாம் துட்டு பத்தாது ஆன்டி. அஞ்சு பேரும் ஆளுக்கு அம்பதுதான் கொண்டாந்தோம். அதுக்கே இவங்க ஆயா அத்தன திட்டு திட்டுச்சு. பஸ்ல வந்தா துட்டு பத்தாதுன்னு சைக்கிள்ள வந்தோம். தியேட்டர்ல சைக்கிள் வச்சா காசு குடுக்கனுமேன்னு பக்கத்து ஏரியாவுல இவங்க அத்த வீட்டுல விட்டுட்டு நடந்தே போனோம்.

திரும்பவும் நாளைக்கி வருவீங்களா படம் பாக்க?

துட்டல்லாம் செலவு பண்ணிட்டோம். இனிமே வீட்டுல கேட்டா பூசதான் விழும்.

எல்லா துட்டுக்கும் பீட்சா சாப்பிட்டிங்களா?

இல்ல ஆன்டி. ரெண்டு பீட்சா  120 ரூபா. ஒரு கொசுவத்தி பாக்ஸ் 60 ரூபா. பத்துருவா பேனாவுல அஞ்சுது வாங்கிகினோம்.

கொசுவத்தியா அது எதுக்குடா வாங்குனீங்க?

பிக் பஜார சுத்திபாக்க போனோம் ஆன்டி. எதாவது ஒன்னு வாங்காம வர கூச்சமாருந்துச்சு. அதான் யூசாருக்குமேன்னு கொசு வத்தி வாங்கினு வந்தோம்.

என்னடா சொல்றீங்க? எனக்கு ஒன்னுமே புரியல?

ஆமா ஆன்டி. எங்க ஏரியாவுல ஒரே கொசு தொல்ல. பொழுதுக்கா நாங்க பேசினுருக்க சொல்ல கொசு கடி பின்னி எடுத்துரும். இவந்தா சொன்னா கொசு வத்தி வாங்குனா கத பேசும் போது கொளுத்தி வச்சுகலாமுன்னு…

அது இல்லடா பிக் பஜார எதுக்கு சுத்தி பாக்க போனீங்க?

அதுவா ஆன்டி. சினிமாவுக்கு டிக்கெட்டு இல்லாங்காட்டி விஜய் மால சுந்தி பாக்கலாமுன்னு போனோம்.

நா அப்பவே சொன்னன் ஆன்டி உள்ள விட மாட்டாங்கெடா வேணாமுடான்னு. இவந்தா சொன்னா, எங்க அப்பாவும் விஜய் மால் ஓனரும் திக் ப்ரண்டு. வாடா போடான்னுதா கூப்புடவாரு ஓனரு. இந்த கட்டடம் இம்மாம் பெரிசு வர்ரதுக்கு எங்க அப்பாதான் காரணமுன்னான். அளந்து விட்டான் ஆன்டி. ஆனா உள்ள விடலனுட்டாங்க.

அப்புடி சொல்லல ஆன்டி. இந்த கட்டடம் கட்டசொல்ல அங்க அப்பாவும் அம்மாவும் சித்தாள் வேல பாத்தாங்கன்னுதான் சொன்னேன். இவந்தான் ஓவரா பேசுரான்.

ஏய் கோச்சுக்காதடா விட்றா விட்றா.

ஏண்டா அவன வம்புக்கிழுத்துட்டே இருக்க. மாலுக்குள்ள போனீங்களா இல்லையா?

இல்ல ஆன்டி. வாட்சுமேனு அண்ணா சொன்னாரு நீங்க எதுக்குடா உள்ள போறீங்க தொறத்தி விட்ருவானுங்க. எந்த பொருளும் 250 -ரூபாய்க்கு கம்மியா கெடைக்காது. வடபழனி கோயில் பஜாருல இருக்கறததாங் இங்க கண்ணாடிக்குள்ள வச்சுருப்பாய்ங்க. காசு வச்சுருந்தா வாங்கி துன்னுட்டு வீட்டப்பக்க போங்க. இல்ல உள்ள போயித்தான் ஆகனுமுன்னா அம்மா அப்பாவ இட்டுனு வாங்கன்னு தொரத்திட்டாரு.

என்னங்கடா எங்குட்டு திரும்புனாலும் பெயிலியரா பூடுது. இன்னைக்கி ஏதாவது பாத்து எஞ்சாய் பண்ணிட்டுதான் போவனும். வாங்கடா அடுத்த அட்டம்ட்டா பிக் பஜாரு போவலாமுன்னு சொன்னான். இந்த ஐடியாவ குடுத்தவனும் இவந்தான் ஆன்டி.

விஜய் மால் போல இருந்துச்சா பிக் பஜாரு?

பிக் பஜாரு போல இருந்துச்சான்னு விஜய் மால பாத்துருந்தாதானே தெரியும். ஆனா பிக் பஜாருல யாரும் எங்கள தடுக்கல. வாச்சுமேன் அண்ணே சொன்னாப் போல இங்கேயும் எதுவும் வாங்கறாப் போல இல்ல. சுத்தி பாத்துட்டு சும்மா வர கூச்சமாருந்துச்சு. சரி இருக்குற காசுக்கு யூசாகரப் போல ஒரு பொருள (கொசுவத்தி) வாங்கினு வந்துட்டோம்.

லீவு விட்டா இது போல எங்கெல்லாம் போவீங்க?

எங்கயும் போக மாட்டோம். வீட்டாண்டதான் வெளையாண்டுகினு இருப்போம். எப்பனா ஒருக்க லீவுல எங்க ஆயக்கூட நானும் இவனும் கோயம்பேடு மார்கெட்டுக்கு காயி பிரிக்கப் போவோம். நல்லக் காய், கெட்டக் காய், பெரிசு, சின்னது இது போல பிரிச்சு குடுத்தா துட்டு குடுப்பாங்க. அந்த துட்டுல பம்பரம், பேட்டு பந்து எதுனா வாங்கிப்போம். வீட்டுல ஊரு சுத்திப் பாக்கெல்லாம் துட்டு கேட்டா அப்புரம் வாயி மேல போட்ருவாங்க.

ஆன்டி நாங்க ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே!

என்னங்கடா! மீதி இருக்குற பீசாவெ என்ன தின்ன சொல்ல போறீங்களா?

அது இல்ல ஆன்டி. இந்தா பக்கத்துல இருக்க மெகா மார்ட் கடைக்குள்ள போனா விடுவாங்களா?

எனக்கும் அதே சந்தேகம்தான்!

– சரசம்மா
(உண்மைச் சம்பவம்)


 

நீ ஏன் உன்னை டீ விற்றவன் என்று சொல்லிக் கொள்கிறாய் ?

4

ப்ரஜ் ரஞ்சன் மணி-யின் “கிஸ்கீ சாய் பேச்தா ஹை தூ”
என்ற இந்திக் கவிதையின் தமிழாக்கம்.

நீ ஏன் உன்னை டீவிற்றவன் என்று சொல்லிக் கொள்கிறாய்?
ஒவ்வொரு விஷயத்திலும் ஏன் நாடகமாடுகிறாய்?
டீவிற்பவர்களின் பெயரை ஏன் கெடுக்கிறாய் நீ?
தெளிவாகச் சொல்லிவிடு, யாருடைய டீயை நீ விற்கிறாய்?

விரல் நுனியிலும் காயம் படாமல்
உன்னைத் தியாகி என்று சொல்லிக் கொள்கிறாய்
கூட்டுக் குழுமங்களில் கிறிஸ்துக்களைத் தேடுகிறாய்
அம்பானி அதானி பேரரசை விகாசம் என்கிறாய்
அட பத்மாஷ், யாருடைய டீயை நீ விற்கிறாய்?

இந்துக் கயமையில் மூழ்கிக்கொண்டு
வர்ணாசிரமத்திலும் ஜாதியிலும் திமிர்பேசிக்கொண்டு
பூலே – பெரியார் – அம்பேத்கரிலிருந்து தூரத்தில் ஓடுகிறாய்
அடே ஓபிசி சிகண்டி, யாருடைய டீயை நீ விற்கிறாய்?

மசூதியையும், தேவாலயங்களையும் நொறுக்கி தேசபக்தன் ஆகிறாய்
கலகங்களை உற்பவித்து தாடிமீசையை வளர்க்கிறாய்
தர்மத்தின் பெயரால் ஏழை மக்களைக் கொல்கிறாய்
பயங்கரப் பேயே, சொல், யாருடைய டீயை நீ விற்கிறாய்?

மனைவியைக் கைவிட்டு பிரம்மச்சாரி ஆகிறாய்
நண்பனின் மகளுக்குத் தொல்லை கொடுக்கிறாய்
கருப்புக் குல்லாயும் காக்கிக் கால்சட்டையும் உன் மானத்தை மறைக்க,
அட வெட்கம் கெட்டவனே, யாருடைய டீயை நீ விற்கிறாய்?

கருப்புச் செயல்களில் வெட்கம் கொள்வதில்லை
மனிதன் ஆவதிலும் முயற்சி என்பதில்லை
டீ விற்பவர்களுக்கு இலவசமாகக் கெட்டபெயர் வாங்கித் தருகிறாய்
ஏமாற்றுக்காரனே, இப்போதாவது சொல்லிவிடு,
யாருடைய டீயை நீ விற்கிறாய்?

நீ ஏன் உன்னை டீவிற்றவன் என்று சொல்லிக் கொள்கிறாய்?
ஒவ்வொரு விஷயத்திலும் ஏன் நாடகமாடுகிறாய்?
டீவிற்பவர்களின் பெயரை ஏன் கெடுக்கிறாய் நீ?
தெளிவாகச் சொல்லிவிடு, யாருடைய டீயை நீ விற்கிறாய்

இந்தியிலிருந்து தமிழுக்கு: க. பூரணச்சந்திரன்

–ப்ரஜ் ரஞ்சன் மணி Debrahmanising History  : Dominance and Resistance in Indian Society, Knowledge and Power: A Discourse for Transformation நூல்களின் ஆசிரியர்.

 

நன்னிலம் : காவல் துறை ONGC கூட்டு சதியை முறியடித்த மக்கள் அதிகாரம் !

1

ஞ்சை டெல்டாவின் மையப்பகுதியான திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டம் உள்ளது. மத்திய அரசின் வஞ்சகத்தால் காவிரி பொய்த்துப் போன பின்பு தஞ்சை டெல்டாவில் விவசாயம் கேள்விக் குறியாகிவிட்டது. இப்படிப்பட்ட நிலையிலும் ஒருசில இடங்களில் மட்டும் விவசாயிகள் பம்புசெட்டுகள், குளங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட பகுதிகளில் நன்னிலமும் ஒன்று. இப்பகுதியில் பம்பு செட்டுகளை வைத்து விவசாயிகள் விவசாயம் செய்துவருகின்றனர். பகுதியே பசும்போர்வை போர்த்தியதுப் போல் தற்போதும் காட்சியளிக்கிறது, நன்னிலம் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் விவசாயிகளுக்கு வாழ்வளித்து வருகிறது.

நாகை மாவட்டத்தை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்த மோடி அரசுக்கும், ONGC என்ற நாசகார கும்பலுக்கும் இது கண்ணை உறுத்திக் கொண்டிருந்திருக்கலாம். ஆகவே மக்களுக்கு தெரியாமல் மெதுமெதுவாக இடத்தை ஆக்கிரமித்து தன்வேலையை தொடங்கினர். இன்றைய சூழலிலும் “பட்டிக் காடாக” இருக்கும் இந்த ஊருக்கு தீடீர் தீடீர் என்று புதிய பாலங்கள் முளைக்கின்றன, கப்பியும், செம்மண்ணுமாக இருந்த பேருந்து வழித்தடம் கனரக வாகனங்கள் வருவதற்கு ஏற்ப விரிவாக்கப்படுகின்றன.

டவர் அமைக்கப்பட்டவுடன் ONGC என தெரிந்துக்கொண்ட படித்த இளைஞர்கள், விவசாயிகள் அதை விரட்டியடிக்க ஆயத்தமானார்கள். நெடுவாசல், கதிராமங்கலத்தில் கிடைத்த அனுபவத்தில் இருந்து போலீசும், ONGC நிர்வாகமும் மக்கள் போராட்டங்களை முளையிலே கிள்ளியெறிய ஆயுத்தமாக இருந்தது. சில உள்ளூர் இளைஞர்கள் ONGC யை எதிர்த்து சுவரொட்டியை ஒட்டினர். இரவோடு இரவாக காவல்துறை பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 நபர்கள் மீது பொய்வழக்கு போட்டு 4 இளைஞர்களை சிறையில் அடைத்தது. மக்களை அச்சுறுத்தியது.

அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் போராடி 150 -க்கும் மேற்பட்ட மக்கள் கைதாகினர். ONGC க்கு எதிராக யாரும் மூச்சைக்கூட விடமுடியாதப்படி நன்னிலம் முழுக்க போலீசு அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது.

இந்த சூழலில் மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்த தோழர்கள் 28.12.2017 அன்று “ONGC யை எதிர்த்து” பொதுக்கூட்டம் என்ற அறிவிப்பை வெளியிட்டு பல்வேறு கிராமங்களில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அச்சமடைந்திருந்த மக்கள் நம்பிக்கையுற்றனர்.

மக்களை அச்சுறுத்த 10 மக்கள் அதிகார தோழர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பொய் வழக்கு போட்டது. பொதுக்கூட்டம் நடத்த மறுப்பு தெரிவித்தது. அத்துமீறும் போலீசின் அடாவடிதனத்தை உடைக்கவும், மக்களுக்கு போலீசு மீதுள்ள அச்சத்தை போக்கவும் 28.12.2017 அன்று காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் முடிவு செய்யப்பட்டு, விரிவாக சுவரொட்டி மூலம் தகவல் அறிவிக்கப்பட்டது. சுவரொட்டிகளை கண்டு மிரண்ட போலீசு தமது நாக்கால் துடைத்து சுத்தம் செய்தது. உள்ளுர் இளைஞர்கள் உத்தமன், திலக், அன்பு ஆகியோரை இரவோடு இரவாக கைது செய்தது. நன்னிலம் முழுக்க போலீசை குவித்து கலவர பூமியாக்கியது.

அத்தனை தடையையும் மீறி அறிவித்தபடி 28.11.2017 காலை 11 மணிக்கு நன்னிலம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 150 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மக்கள் அதிகார அமைப்பினர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். போலீசுக்கு தண்ணி காட்டிய மக்கள் அதிகார அமைப்பின் தொடர் போராட்டம் நன்னிலம் மக்களிடையே புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

பல ஆயிரம் செலவு செய்து பொதுக்கூட்டம் நடத்தி புரியவைக்க வேண்டிய விசயத்தை, போலீசை குவித்து நன்னிலம் முழுக்க பேசு பொருளாக்கி, ONGC -க்கு எதிரான கோபத்தை மக்களிடம் கிளப்பி, மண்டபம் ஏற்பாடு செய்து கொடுத்து, உணவையும் வழங்கி, தக்க பாதுகாப்பு கொடுத்து, மழை பெய்யும் சூழலில் அரங்கு கூட்டமாக நடத்தி வைத்து சாதாரணப் பொதுக்கூட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றிய திருவாரூர் காவல் துறையினருக்கு நன்றி.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்.

***

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பாரதிதாசன் உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், “விவசாயியை வாழவிடு! நன்னிலத்தை  நாசமகாதே! ஓ.என் .ஜி.சி- யே வெளியேறு!” என்கிற முழக்கத்தின் அடிப்படையில், 29.12.2017 அன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் ஒருங்கினைப்பில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது .

பு.மா.இ.மு திருவாரூர் மாவட்டம் அமைப்பாளர் தோழர் பாண்டி ,தஞ்சாவூர் மாவட்ட  அமைப்பாளர் தோழர் குஸ்தீனா, தஞ்சாவூர் மண்டல ஒருகிணைப்பாளர் தோழர் சங்கத்தமிழன் ஆகியோர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள், மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவர்களும் இதில் பங்கேற்றனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி