Wednesday, August 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 498

சகரான்பூர் எரிகிறது – ஆதித்யநாத்துக்கு ஆப்பு !

0

கரான்பூர் எரிகிறது. மதவெறியைத் தூண்டும் பேச்சுக்கு புகழ் பெற்ற முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “வெறியூட்டும் பேச்சுக்கு பலியாகாதீர்கள்”  என்று தொலைக்காட்சியில் வேண்டுகோள் விடவேண்டிய நிலமைக்கு ஆளாகியிருக்கிறார்.

144 தடை உத்தரவு, இணைய சேவைகள் முடக்கம், எஸ்.எம்.எஸ் சேவைகள் முடக்கம், மாவட்ட ஆட்சியர் மாற்றம், சீனியர் போலீசு சூப்பிரெண்டு மாற்றம், டி.ஐ.ஜி மாற்றம் – இவையெல்லாம் வரலாறு காணாத தனிப்பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைத்த உ.பி மாநிலத்திலிருந்து வரும் செய்திகள்.

சகரான்பூர் மேற்கு உ.பியில் உள்ள மாவட்டம். இந்த மேற்கு உ.பி-யில் முசாபர்நகரில்தான் இசுலாமியர்களுக்கு எதிராக மத வன்முறையைத் தூண்டி நாடாளுன்றத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியது மோடி – அமித் ஷா கூட்டணி.

இந்த ஏப்ரல் மாதம் அம்பேத்கர் ஜெயந்தியை ஒட்டி தலித் – முஸ்லிம் மோதலை உருவாக்க இதே மாவட்டத்தை சேர்ந்த “சதாக் துத்லி” என்ற ஊரில் பாஜக முயன்றது. முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலும் நடந்தது. இதனையொட்டி ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக பாஜக வின் பேரணிக்கு அனுமதி மறுத்தார் போலீசு சூப்பிரெண்டு லவ் குமார். உடனே அவரது வீட்டை பாஜக எம்பி ராகவ் லகன்பால் சர்மா தலைமையிலான கும்பல் தாக்கியது. அனுமதி மறுத்த போலீசு அதிகாரியை வேறு ஊருக்கு தூக்கி அடித்தார் யோகி ஆதித்ய நாத்.

நண்டு கொழுத்தால் வளையில் தங்காதல்லவா? முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்த இந்துத்துவ கும்பலின் ஆதிக்க சாதி புத்தி, அடுத்தபடியாக தலித் மக்களுக்கு எதிராகத் திரும்பியது. இதே மாவட்டத்தைச் சேர்ந்த ஷபிர்பூர் கிராமத்தில் தலித் மக்கள் வழிபடுகின்ற ரவிதாஸ் கோயிலில், அம்பேத்கரின் சிலையை நிறுவுவதற்கு அம்பேத்கர் ஜெயந்தியன்று அவர்கள் திட்டமிட்ட போது தாகூர் சாதி வெறியர்கள் அதனைத் தடுத்தனர். தலித் மக்கள் மீது தாக்குதலும் தொடுத்தனர். யோகி ஆதித்யநாத் தாகூர் சாதி என்பது இவர்களுடைய சாதித்திமிருக்கு இன்னொரு காரணம்.

டெல்லியில் நடைபெற்ற பீம் ஆர்மீ கூட்டத்தில் உரையாற்றும் சந்திர சேகர் ஆசாத்

டில்லியிலிருந்து சுமார் 150 கி.மீ தூரத்தில் உள்ள சகரான்பூர், கிழக்கு உ.பியைப் போன்ற பின்தங்கிய பகுதியல்ல. நகரமயமாக்கம் உள்ளிட்ட பல காரணங்களினால், தலித் மக்களின் எதிர்ப்புக்கு முக்கியமான மையம் இந்த மாவட்டம்.

மாயாவதியின் அரசியல் செல்வாக்கிற்கு அடித்தளமாக இருந்த மாவட்டமும் இதுதான். ஆனால், 2012 தேர்தலில் இம்மாவட்டத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளில் நான்கை கைப்பற்றிய மாயாவதியால் கடந்த தேர்தலில் ஒரு தொகுதியைக் கூடப் பெற முடியவில்லை. பிழைப்புவாத, ஊழல், ஆடம்பர அரசியல் காரணமாக மாயாவதி, தலித் மக்கள் மத்தியிலேயே மாயாவதியின் செல்வாக்கு சரியத் தொடங்கிவிட்டது.

இதன் விளைவாக சந்திரசேகர் ஆசாத் என்ற இளம் வழக்கறிஞரின் தலைமையில் பீம் ஆர்மி என்ற அமைப்பு உருவாகியிருக்கிறது. சகரான்பூர் தாக்குதலுக்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தரில் இவர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் தலித் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பங்கேற்றனர். உ.பியில் தலைமறைவாக இருந்த சந்திரசேகர் ஆசாத்தும் டெல்லி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்.

இதற்கிடையில் மே 5 ஆம் தேதியன்று ஷபிர்பூர் என்ற கிராமத்தில் மன்னன் ராணா பிரதாப் சிங்கின் பிறந்த நாள் ஊர்வலத்தை தலித் குடியிருப்பு வழியாக நடத்துவதற்கு தாகூர் சாதியினர் திட்டமிட்டிருக்கின்றனர். ராணா பிரதாப் சிங்கை இசுலாமியர்களுக்கு எதிரான இந்து வீரனாக ஆர்.எஸ்.எஸ் முன்னிறுத்துகிறது. தாகூர் சாதியினரோ, தமது சாதிப் பெருமிதத்தின் அடையாளமாக ராணாவை முன்னிறுத்துகின்றனர்.

மேற்கூறிய நிகழ்ச்சியில் ராணா பிரதாப் சிங் சிலைக்கு மாலையிடுவதற்கு பூலன் தேவியை சுட்டுக்கொன்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியான தாகூர் சாதிவெறியன் ஷேர் சிங் ராணா என்பவனை தாகூர் சாதியினர் அழைத்திருக்கின்றனர். தலித் மக்களை அச்சுறுத்திப் பணிய வைப்பதுதான் இதன் நோக்கம் என்பதை சொல்லத் தேவையில்லை. தலித் மக்கள் பணியவில்லை என்பது மட்டுமல்ல, எதிர்த்து மோதியிருக்கின்றனர்.

மே 23 ஆம் தேதியன்றி இங்கு மாயாவதி நடத்திய கண்டனப் பேரணிக்கு வந்து விட்டு திரும்பியவர்கள் மீது தாகூர் சாதி வெறியர்கள் தொடுத்த தாக்குதலில் தலித் ஒருவர் கொல்லப்பட்டார். பதிலடியாக தாகூர் சாதி இளைஞர் ஒருவர் சுடப்பட்டிருக்கிறார்.

பீம் ஆர்மீ டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய போராட்டதின் போது

“பீம் ஆர்மிக்குப் பின்னால் நக்சலைட்டுகள் இருக்கிறார்கள்” என்று சந்தேகிப்பதாக உ.பி அரசு கூறியிருக்கிறது. இந்தப் பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சும் நிலையில் தலித் மக்கள் இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்ததை ஒட்டி ஆதிக்க சாதியினரின் திமிர் அதிகரித்திருப்பதாகவும், வெளிப்படையாகவே தங்களை சாதி ரீதியாக இழிவு படுத்துவதாகவும் இதனை ஒரு கணமும் சகித்துக் கொள்ள இயலாது என்றும் சீறுகின்றனர். அரிஜன் என்று தங்களை அழைப்பதை சாதாரண கிராமத்துப் பெண்கள் கூட கடுமையாக எதிர்த்துப் பேசுகிறார்கள்.

2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது இசுலாமிய மக்களுக்கு எதிராக மதவெறியைத் தூண்டி விட்டு உ.பி யின் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றியது அமித் ஷா – மோடி கிரிமினல் கூட்டணி. சட்டமன்றத் தேர்தலில் அது செல்லுபடியாகாது என்று தெரிந்து விட்டதால், யாதவ் சாதியினருக்கும், மாயாவதியின் ஜாதவ் (தலித்) சாதியினருக்கும் எதிராக பிற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரின் சாதி உணர்வைத் தூண்டி விட்டும், பார்ப்பன, தாகூர் சாதியினரின் ஆதரவுடனும்தான் பாஜக வெற்றி பெற்றது.

அந்த வெற்றி இப்போது பல்லிளிக்கத் தொடங்கிவிட்டது. இசுலாமிய மக்களை எதிரிகளாக காட்டி, ஏதோ ஒரு வகையில் இந்து சாதி ஆதிக்க கட்டமைப்பை காலத்துக்கேற்ப பேணிக்கொள்ளலாம் என்று சங்க பரிவாரத்தின் சதி மூளை சிந்திக்கிறது. தேர்தல் நேரத்தில் தற்காலிகமாக அத்தகைய சதிக்கு மக்கள் பலியாகவும் செய்கின்றனர்.

ஆனால் அடுத்த கணமே, சாதி ஆதிக்கம் என்கிற சமூக எதார்த்தம் வேலை செய்யத் தொடங்குகிறது. சாதிக்கு அப்பாற்பட்ட இந்து சாமியார் என்ற யோகி ஆதித்யநாத்தின் பிம்பத்தைக் காட்டி பாஜக ஏமாற்றியிருந்தாலும், மக்களுக்கு தெளிவு எற்படுத்தும் வேலையை சாதி வெறியர்களே செய்கிறார்கள்.

தீண்டாமைக் கொடுமைக்கும் சாதி ஆதிக்கத்துக்கும் எதிராக மக்கள் தாங்களே களத்தில் இறங்கிப் போராடுகிறார்கள். சென்ற மாதம் இசுலாமியர்களுக்கு எதிராக கலவரம் நடத்திய பாஜக எம்பி ராகவ் லகன்பால் சர்மா, “சகாரன்பூரை காஷ்மீராக்க விடமாட்டோம்” என்று முழக்கம் எழுப்பியிருக்கிறார்.

“சகாரன்பூரை காஷ்மீர் ஆக்காமல் விடமாட்டோம்” என்று முழங்கியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். சகரான்பூரில் தலித் மக்கள் தாகூர் சாதி வெறியர்களுக்கு எதிராக நேருக்கு நேர் நின்று கல்லெறிவதைப் பார்க்கிறோம். காஷ்மீரைப் போலவே இணையம், செல்பேசி உள்ளிட்ட அனைத்தும் முடக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். காஷ்மீரை பாரதிய ஜனதா உ.பி க்கும் அழைத்து வந்திருக்கிறது.

தனது நடவடிக்கைகளின் மூலம் சங்க பரிவாரம், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் காஷ்மீராக மாற்றும் பணியை விரைவிலேயே செய்து முடிக்கும்.

  • பேகன்

டாஸ்மாக் உடைப்புப் போராட்டங்கள் : மக்கள் அதிகாரத்தின் வெற்றி !

1

டப்பாரை ஏந்திய பெண்கள் டாஸ்மாக் கடைகளை இடித்துத் தள்ளுகிறார்கள். பெட்டிபெட்டியாகச் சாராய புட்டிகளை வீதியில் போட்டு உடைக்கிறார்கள். அதிகாரிகள் ஒரு பொட்டல்காட்டுப் புறம்போக்கில் இடம் பிடித்துக் கடை கட்டினாலும், மறுநாளே மக்களால் அது முற்றுகையிடப்படுகிறது. இரவு பகலாக கடை அகற்றப்படும் வரை முற்றுகை தொடர்கிறது. சாராய பாட்டில் லாரிகள் மறித்து விரட்டப்படுகின்றன. கடைக்கு இடத்தை வாடகைக்கு விட முனையும் நபர்களை ஊரே கூடி நின்று எதிர்க்கிறது.

இந்த எழுச்சி இன்று தோன்றியதல்ல, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நீதிமன்ற உத்தரவின்படி கடையை அகற்று என்று நடத்திய போராட்டத்தில்தான் சசி பெருமாள் மரணமடைந்தார். ஜெயா அரசு நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படாது என்பதையும், நீதிமன்றமே தனது உத்தரவு மீறப்படுவதைத் தட்டிக் கேட்காது என்பதையும் மக்கள் புரிந்து கொண்ட தருணம் அது. அடுத்த சில நாட்களில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை நொறுக்கிய போது, போலீசின் தாக்குதலுக்கு அஞ்சாத அவர்களது உறுதி புதியதோர் பாதையைக் காட்டியது.

தமிழகம் முழுவதும் போராட்டங்கள் பற்றிப் பரவத் தொடங்கின. ம.க.இ.க. பாடகர் தோழர் கோவனைத் தேசத்துரோக வழக்கில் கைது செய்தபோது, அரசுக்கு ஆதரவாக வாதாட அ.தி.மு.க. அடிமைகளும் ஆர்.எஸ்.எஸ். பங்காளிகளும் மட்டுமே ஜெயலலிதாவுடன் நின்றனர். 2015-இல் சசிபெருமாள் மரணத்தைக் கொச்சைப்படுத்திய ஜெயலலிதா, “படிப்படியாகக் குறைத்து, மொத்தமாக மூடுவேன்” என்று 2016-இல் ஒரு  “போங்காட்டம்” ஆடவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இவையனைத்தும் மெரினா எழுச்சிக்கு முந்தைய நிகழ்வுகள். அதன் பின்புலங்களில் ஒன்று எனவும் கூறலாம். தற்போது நடந்து வரும் மக்கள் எழுச்சி, நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வேறொரு வடிவிலான தொடர்ச்சி. நடந்து வரும் போராட்டங்களைக் கவனியுங்கள். போலீசுடன் இழைவதற்கும் வேனில் ஏறியபடி போஸ் கொடுப்பதற்கும் கட்சித்தலைவர்கள் யாரும் இல்லை. அதிகார வர்க்கத்துடன் மக்கள் நேருக்குநேர் பொருதுகிறார்கள். கன்னத்தில் அறைந்தாலும், தடிக்கம்பால் தாக்கினாலும் அடங்காமல் சீறிச் சினந்து வருகிறார்கள். இது அடிக்கு அஞ்சாத போர்க்குணம் மட்டுமல்ல. இந்த போர்க்குணத்தை உள்ளிருந்து கிளர்த்துவது இந்த அரசமைப்பின் மீதான வெறுப்பு. போராட்டக் களங்களில் வெற்றி பெறும் பெண்கள், மக்களின் அதிகாரத்தை நாம் நிலைநாட்டிக் கொண்டிருக்கிறோம் என்று உணராமல் இருக்கக்கூடும். ஆனால், தமது அதிகாரம் செல்லாக்காசாகிப் வருவதை அதிகாரவர்க்கம் ஒவ்வொரு கணமும் உணர்ந்து புழுங்கிக் கொண்டிருக்கிறது.

“மூடு டாஸ்மாக்கை!” என்ற முழக்கத்தை முன்வைத்துப் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தலைமையில் சென்னை-பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம். (கோப்புப் படம்)

இன்று 3000 கடைகளுக்கு மேல் மூடப்படுவதற்குக் காரணம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது உண்மைதான். எனினும், இதுவே முழு  உண்மையல்ல. “கோயில், பள்ளி, மருத்துவமனைக்கு அருகில் மதுக்கடை கூடாது” என்ற விதி மீறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, அத்தகைய கடைகளை மூடச்சொல்லி சென்னை உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவுகள் ஒன்றா, இரண்டா? ஒரு கடையைக்கூட அரசு மூடியதில்லை. நெடுஞ்சாலைக் கடைகளை மூடுமாறு நீதிமன்றம் கூறியபோது, பின்வாசலை முன்வாசலாக்கி, “இது வேறு கடை” என்று நீதிமன்றத்துக்குச் சொன்ன அரசு இது. அதையும் வேடிக்கை பார்த்த நீதிமன்றம்தான் இது.

தற்போது மட்டுமென்ன? தீர்ப்பை மீறிக் கடை திறப்பதற்கு தன்னாலான முயற்சிகளையெல்லாம் அரசு செய்துதான் பார்த்தது. அரசை முடக்கியிருப்பது, நீதிமன்றத்தின் அதிகாரம் அல்ல, மக்களின் அதிகாரம்! கடப்பாரையும் துடைப்பமும் ஏந்திய பெண்கள்! “மக்கள் எதிர்ப்பு காட்டும் இடங்களில் நாங்கள் கடை திறக்க முயற்சிக்க மாட்டோம்” என்று உயர் நீதிமன்றத்தில் வாக்குறுதி அளிக்கிறார் அரசு வழக்கறிஞர். இது மக்கள் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத நிலையில் போடப்படும் யோக்கிய வேடமல்லவா?

வேடம் போடுவது அரசு மட்டுமா? “மதுக்கடை திறந்திருக்கும் நேரத்தை சற்றுக் குறைப்பதற்காவது உத்தரவிடுங்கள்” என்று பா.ம.க. வழக்கறிஞர் பாலு 2015-இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் கேட்டபோது, “அதெல்லாம் அரசின் கொள்கைப் பிரச்சினை, நாங்கள் தலையிட முடியாது” என்று கூறியது உயர் நீதிமன்றம். இன்றோ “குடியிருப்புப் பகுதிகளில் கடை வைக்காதீர்கள்” என்று கொள்கைப் பிரச்சினையில் “தலையீடு” செய்கிறது.

பச்சையப்பன் கல்லூரி வாயிலில் வைத்திருந்த மதுக்கடையை “சட்டவிரோதமானது” என உயர் நீதிமன்றம் அன்று கண்டிக்கவில்லை. மாறாக, “சட்டத்தை மாணவர்கள் கையில் எடுத்துக் கொள்ள முடியாது” என்று கூறி, அவர்களைச் சட்டவிரோதிகள் ஆக்கியது. கடையை உடைத்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட மாணவனைப் பிணையில் விட வேண்டுமானால், “50,000 ரூபாய் டாஸ்மாக்கிற்கு இழப்பீடு கட்ட வேண்டும்” என அன்று உத்தரவிட்டது. இன்றோ சிறை, போலீசு அதிகாரிகளைக் கண்டிக்கிறது.

“மூடு டாஸ்மாக்கை!” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பு திருச்சியில் நடத்திய சிறப்பு மாநாட்டில் திரண்ட மக்கள் திரளின் ஒரு பகுதி. (கோப்புப் படம்)

இந்த மாற்றங்களுக்கு என்னதான் காரணம்? நிச்சயமாக “சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவேண்டும்” என்ற அக்கறையோ, “மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்ற ஜனநாயகப் பண்போ காரணமல்ல. தங்கள் அதிகாரம் செல்லுபடியாகவில்லை என்பதனால் இவர்கள் பின் வாங்குகிறார்கள். இப்போதைக்கு பின்வாங்குவதன் மூலம்தான் தங்கள் அதிகாரத்தின் கவுரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று பதுங்குகிறார்கள். மக்களின் குரலுக்கு மேலே தங்கள் குரலை ஓங்கி ஒலித்துத் தலைப்புச் செய்தியாக்குவதன் மூலம், “நிலைநாட்டப்படுவது நீதிமன்றத்தின் அதிகாரம்தான்” என்ற மயக்கத்தை மக்களுக்கு ஏற்படுத்துகிறார்கள்.

கடைகள் உடைபடுகின்றன என்பதைக் காட்டிலும், இந்த அரசமைப்பு குறித்த பிரமைகள் உடைபடத் தொடங்கிவிட்டன என்பதே இன்றைய போராட்டங்களின் முக்கியத்துவம். “கள்ளச்சாராயம் விற்பவனிடம் மனுக் கொடுப்பதும், கலெக்டரிடம் கொடுப்பதும் ஒன்றுதான்” என்று மக்கள் தெளிந்து விட்டார்கள். இந்த அரசதிகாரத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக கோபுரத்தில் ஏறிக் கூவினாலும் பயனில்லை என்று உணர்ந்து விட்டதனால்தான், அத்தகைய போராட்ட வடிவங்கள் உதிர்ந்து விட்டன.

தமிழகத்தின் தற்போதைய டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களை டில்லியில் நடத்தப்பட்ட விவசாயிகளின் போராட்டத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்கள் கையாண்ட “போராட்ட வடிவங்கள்” விவசாயிகளின் சுயமரியாதையைக் குலைக்கின்ற வகையிலானவை என்பது மட்டுமல்ல, அவையெல்லாம் மோடியின் கவனத்தை ஈர்ப்பதற்கான முயற்சிகள் என்று அவர்கள் கூறிக் கொண்டார்கள்.

விவசாயத்தைப் புறக்கணிப்பதையும் விவசாயியை வாழ விடாமல் அழிப்பதையுமே தனது கொள்கையாகக் கொண்டிருக்கும் அரசின் “கவனத்தை ஈர்த்து” கருணையைப் பெற முயற்சித்த அந்த அணுகுமுறை ஒருபுறம். “எங்கள் குடியைக் கெடுப்பதுதான் உன் கொள்கை எனும்போது, நாங்கள் ஏன் உன்னிடம் மனுக் கொடுக்க வேண்டும்” எனக் கேட்டு, மதுக்கடைகளை உடைத்தெறிகின்ற தமிழகம் ஒருபுறம்.

இது போராட்ட வடிவம் குறித்த பிரச்சினையல்ல. அரசிடம் பணிந்து மன்றாடப் போகிறோமா – அரசைப் பணிய வைக்கப்போகிறோமா என்பது குறித்த பிரச்சினை. கல்விக்கொள்ளையோ, மணற்கொள்ளையோ, தண்ணீர்க்கொள்ளையோ எதுவும் இந்த அரசின் உறுப்புகளை மீறி நடப்பதல்ல. அனைத்தும் அவற்றால் நடத்தப்படுபவை. முறைகேடுகளே முறையாகிப்போயிருக்கும் சூழல் இது. எனவேதான், முறையீடுகளும் மன்றாட்டங்களும் முட்டுச்சந்துக்கு வந்துவிட்டன.

ஆம். இது முட்டுச்சந்து. கையில் கடப்பாரை ஏந்தியிருக்கும் பெண்கள் மதுக்கடையை மட்டும் தகர்க்கவில்லை. “இந்த அரசமைப்பின் அதிகாரத்துக்குட்பட்டுத்தான் தீர்வு காண முடியும்” என்று மக்களின் மூளைக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் முட்டுச்சந்தையும் சேர்த்துத் தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தை மாற்றியமைக்கும் மக்கள், தம் நடவடிக்கையின் ஊடாக தங்கள் சிந்தனையையும் மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். அதை அவர்கள் அந்தத் தருணத்திலேயே உணர்ந்து விடுவதில்லை. பின்னர் உணராமல் இருப்பதுமில்லை.

-மருதையன்

புதிய ஜனநாயகம், மே 2017

பாலக்கோடு : அந்த கிணறும் வத்திருச்சுன்னா போய்ச் சேர வேண்டியதுதான் !

2

ருமபுரி மாவட்டத்தில் உள்ள 9 அணைகளில் ஒன்று பாலக்கோடு கெசர்குளி அணைக்கட்டு . 25.20 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 134 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். 2014-க்குப் பிறகு மழை பொய்த்துப் போனதால் இந்த அணையில் சொற்ப நீரே இருந்தது. இந்த வருடம் இந்த அணைக்கட்டு முற்றிலும் வறண்டு போய் ஒன்றிரண்டு அடிகள் அளவுள்ள தண்ணீரே தேங்கியுள்ளது.

பல கிராமங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள இந்த அணையில் நீர் நிரம்பினால் ஏறக்குறைய 4000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன உதவியளிக்கிறது. இதையன்றி கோட்டூர் ஏரி உள்ளிட்ட சில ஏரிகளுக்கும் தண்ணீர் வழங்கும் ஆதாரமாக இருக்கிறது.

செல்லமுத்து – பெல்ராம்பட்டி

டேம் பகுதிய ஒட்டி இருக்குறதுனால இங்க கொஞ்சம் நிலத்தடி நீர் இருக்குங்க! தக்காளி தான் அறுவடை பண்ணிட்டிருக்கோம். பெட்டி ஒன்னு(23 கிலோ கொள்ளளவு) 1000 ரூவா வித்த காலம் போயி இப்ப வெறும் 120 ரூபாய்க்கு தான் விக்கிறோம். இலாபமேயில்ல, வர்ற காசெல்லாம் கூலிக்குத்தான் சரியா இருக்கும்.

கிருஷ்ணப்பா(75) – சீரியம்பட்டி

நமக்கு பொறந்ததுல இருந்தே இந்தூர்தா கண்ணு. நெல்லு,எள்ளு, சோளம், வாழை வேர்கடலைன்னு என் நிலத்துல வெளையாத பயிரே இல்லப்பா. இப்ப பூரா காஞ்சு போயி கிடக்கு குடிக்கவே தண்ணியில்ல இதுல எங்குட்டு போயி நா விவசாயம் பாக்க. எனக்கு விவரம் தெருஞ்ச நாள்ல இருந்து இப்புடி ஒரு வறட்சிய பாத்ததேயில்ல. நமக்கு 3 மாடு ஒரு கண்ணு நிக்குதுப்பா. மாட்டுக்கு தீவனம் போடனும், தண்ணி வைக்கனும் ரொம்ப சிரமமா இருக்கு. இந்த கஷ்டத்துல மாட்டுக்கு எப்புடி தனியா பயிர் பண்ண முடியும். அந்தா தெரியுதுல புல்கட்டு  அத வச்சுதா இப்போதைக்கு ஒப்பேத்திட்டு இருக்கோம். கறக்குர பாலு வீட்டுக்கே சரியாப் போயிடும் சோத்துக்கு ரொம்ப சிரமமாயிருச்சுப்பா.

இந்த புல்லுகட்டு ஒரு மாசங்கூட தாங்காது. அடுத்த மாசத்துக்கு என்ன பண்ணப் போறேனோ, ஆண்டவனுக்குத்தான் வெளுச்சம். மாட்ட சந்தைல விக்கவும் முடியலை, அதுக்கேத்த வெலை கெடைக்க மாட்டேங்கிது. ஏதோ ரேசன் இருக்கறதுனால கிடைக்கறத தின்னுபுட்டு இருக்கோம். ஊர்ல யாரு கேணிலையும் தண்ணியில்லப்பா, ஒரே ஒருத்தர் கிணத்துலதான் கிடக்கு ஊரே அங்க வந்துதான் புடிக்குது. 3 கி.மீ தொலவுல இருந்தெல்லாம் ஆள் வருது. அந்த கிணறு வத்திருச்சுன்னா போய்சேர வேன்டியதுதான்.

நூறு நாள் வேலைல 6 மாசம் மண் வெட்டுனோம், செடி புடுங்குனோம் அல்லா வேலையும் பாத்தோம். ஆனா ஒரு மாசத்துக்குக் கூட சம்பளமே வரலைப்பா. 6 மாசமா விவசாயிக்கு பணத்த குடுக்காம ஒளிச்சு வச்சுருக்கானுவலே, இதுவே ஒரு விவசாயி, அரசாங்க பணத்தை 3 நாள் வச்சுருந்தா சும்மா உடுவியா நீ.  நம்ம வூடு பக்கத்து வூட்டுக்காரங்க கரும்பு போட்ட கதய சொல்லிமாளாது. விளைஞ்சவனுக்கு வெலையில்லைன்னு பொலம்புரான், எங்க கரும்போ கருகிப்போயி கிடக்கு. இனி எத்தனை மழை பேஞ்சாலும் மீளாது. நம்ம கோட்டூர் ஏரி  நெரஞ்சிருந்த காலத்தை நினைச்சா ம்ம்ம், ஏரி நொம்புணாலே வீட்டுல தங்கம் வெள்ளி வந்ததா நெனச்சுக்குவோம்.

நமக்கு களிதான் புடிச்ச சாப்பாடு. அந்த களிய கண்ணுல பாத்து நாள் கணக்காயிடுச்சு இப்ப ஏதோ இருக்க உயிரை கட்டிவைக்க கிடைக்கிறத தின்னுக்குட்டு இருக்கோம். நாங்க இங்க வறட்சியில செத்துக்குட்டு இருக்கோம், நம்ம பிரதமர் ஊர் ஊரா சுத்திக்கிட்டிருக்காரு, அவருக்கு விவசாயிங்க கஷ்டம் எங்க தெரியப்போவுது, ஜெயா செத்த மாதிரி இந்த மோடியும் செத்திருந்தா நல்லாயிருந்துருக்கும்பா. அவருக்கு விவசாயிங்கன்னா ஏனோ கசக்குது.

எவ எவனோ மண்ண அள்ளி ஆட்டையப் போட்டு பணம் பாக்குறான், நாங்க அந்த ஏரி மண்ணை தொட்டா அடிக்க வர்றானுவ. அதனாலயே ஏரி ஆழமான பாடில்ல. கொத்தனார் வேலை, கூலி வேலைக்குன்னு ஒவ்வொருத்தரா போயிக்கிட்டிருக்காங்கப்பா.

யானை தொல்லை அதிகம்தாம்பா, அந்தாண்ட ஈச்சம்பள்ளத்துல கூட ஒரு பொண்ணை அடிச்சு புடுச்சு. நாம மனுச பயலுக, ஒரு 5000 லிட்டர் பிடிக்குற டிரம்ம,  700 ரூபா குடுத்து வாங்கி குடுச்சுக்குவோம். நிலமை மோசமானா, அதுங்க என்னா பன்னும் பாவம், மாட்டுக்கு வாய தொறந்து கேட்கவா தெரியும். சொக்கங்கொட்டாய், கருவூர்க்கு மேலலா ரொம்ப பஞ்சம்பா, பாவம் என்னா பண்ணுதோ அந்த ஊர் சனங்க. முன்னைலா வாரம் ரெண்டு நாள் தலைக்கு ஊத்திக் குளிப்போம். இப்ப குளிக்கவே மனசு வரமாட்டிங்கிதுப்பா. 10 வருஷமா சரியான மழையேயில்லை. ஏதோ புயல் கியல்னு வந்து மழை கொட்டுனாதான் உண்டு.

E.V.ரெங்கசாமி – கோட்டூர்

நாங்க வெளிகை வேளாளக் கவுண்டருப்பா..எனக்கு 3 மகனுவ, ஒரு பொம்பளப்புள்ள. எல்லாருக்கும் திருமணமாகி பேரப்புள்ளைகள் வரைக்கும் திருமணம் முடிஞ்சிகிட்டிருக்கு. 87 வயசுக்கும் மேல ஆயிடுச்சு. தண்ணிக்கி தாம்பா ரொம்ப செரமப்படுறோம்.  நான் அந்தக்காலத்து எம்.ஜி.ஆர் ரசிகன். புள்ளங்க எல்லாம் ஒரு திக்குப் போயிடுச்சுங்க.

தென்னை எல்லாம் பட்டுப்போச்சு, எல்லாத்தயும் அறுத்துர வேண்டியதுதான், வீட்டு வேலைக்கும் ஒதவாது. 3 சீம மாடு, 30 பட்டி மாடுங்க இருக்கு. சீம மாடு மட்டும் வீட்ல இருக்குது, பட்டி மாடுங்கள்லாம் அதோ பாரு அந்த காட்டுக்குள்ள போச்சு, தை மாசத்துல தான் திரும்பி வரும்; இப்ப இருக்குற வறட்சியில எத்தன செத்துச்சோ தெரியல.

ஒரு காலத்துல 80 மாடுகள வெச்சு மேச்சுகிட்டிருந்தேன், இப்ப பாரு செருப்புக்குக் கூட வழியில்ல. 2 ஏக்கரா நிலமிருக்குது ரெண்டு மூனு வருசமா ஒரு வெளச்சலுமில்ல.

நமக்குச் சொந்தமான கெணத்துல தண்ணி வத்திப்போச்சு. குடிக்கிற தண்ணிக்கி பொது கெணறு ஒன்னு இருக்கு அதுல இருந்து எடுத்துக்குறோம்; செல நேரத்துல ரோட்டுக்கு அந்தாண்ட போர் போட்ருக்காங்க; அதுல இருந்தும் எடுத்துக்குவோம். என்ன பண்ணுறது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

தாதம்மாள் – கரகூர்

50 வயதைக் கடந்த தாதம்மாளுக்கு 2 மகன்கள் 4 பேரப்பிள்ளைகள். கணவர் உடல்நலக்குறைவால் இறந்து 4 வருடங்கள் ஆகின்றன. குரும்பக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த இவர் காட்டுவேலைக்குச் சென்றுகொண்டிருந்த நிலையில் வெயிலில் தொடர்ந்து வேலை செய்ய முடியாததால் தன்னுடைய முதல் மகன் மற்றும் இரு மருமகள்களுடன் இணைந்து டாஸ்மாக் பாட்டில்களைக் கழுவும் வேலை செய்து வருகிறார். அத்தனை பொறுமையாகவும், தான் பட்ட இன்னல்களை நினைவு கூறுகையில் கண்கலங்காமல் உயிரிருக்கும் வரை உழைத்து தன் பிள்ளைகளுக்குத் தொந்தரவாக அமைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

“4 வருசத்துக்கு முன்னாடி என் வூட்டுக்காரர் செத்துப்போயிட்டாரு, 2 மவங்கள்ல சின்னவன் பெங்களூருல வாட்ச்-க்கு பாலிஷ் போடுற வேலை செய்யுறான். மூத்தவன் இங்கேயே இருந்து இந்த பாட்டில் கழுவுற வேலைய பாக்குறான். ரெண்டு மருமவளும் எங்கூடத்தான் இங்கயே வேல பாக்குறாங்க. ரெண்டு பேத்துக்கும் ரெண்டு மவனுங்க இருக்காங்க. இந்த வேல  கஷ்டந்தான். வவுறு இருக்குல்ல, அது இருக்குற வரைக்கும் வேல செஞ்சுத்தான ஆகனும். 5, 10 சம்பாதிக்கனும்னா சும்மா யாராவது கொடுப்பாங்களா?

ஈரத்துலயே நிக்கிறதுனால கை காலெல்லாம் வலியாத் துடிக்கும். சின்ன அடிபட்டாக்கூட இப்பல்லாம் தாங்கிக்க முடியல. இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. புள்ளங்கல்லாம் ஏதாச்சும் சமைச்சு சாப்பிட்டுட்டு கொண்டாருங்க, நான் சும்மா தானே இருக்கேன்னு வேலைக்கு வந்துட்டேன்.

தண்ணீர் பற்றாக்குறையால உங்க தொழிலுக்கு பாதிப்பு இருக்கா?

ஆமாம்பா! பக்கத்து வூட்டாண்ட இருக்க கெணத்துலேருந்து தான் தண்ணி மொண்டு எடுத்துக்குவோம், எல்லாம் நம்ம ஆளுங்கதான். இப்போ அவுங்க கெணத்துலயும் தண்ணி வத்திப்போச்சு, வாரத்துக்கு ஒரு வாட்டி 700 ரூபா கொடுத்து தண்ணிய வாங்கி தொட்டில ஊத்திக்கிறோம்.

நாலஞ்சு நாளைக்கு மேல தொட்டித்தண்ணிய பயன்படுத்தமுடியல, சோப்புத்தண்ணியும் சாராயத் தண்ணியும் கலக்குறதுனால ஒரே நாத்தமா இருக்கு, வேணுன்னா போயிப்பாரேன்…

இப்ப இதுல என்னான்னா மிடாசு காரன் வேற பாட்டிலெல்லாம் ஒடனேயே எடுக்க மாட்டேங்குறான், கம்பெனில ஏற்கனவே சரக்கு பூரா தேங்கிக் கெடக்காம். ரெண்டு லோடு அனுப்பியும் இன்னும் காசு வரல…இதுல பாட்டிலுக்கு 10 காசுன்னு கொடுத்துட்டிருந்தத மாத்தி 5 காச்சுன்னு கொறக்கப் போறானாம். எல்லா கஷ்டந்தாப்பா!

ஒரு லாரிக்கு 500 மூட்டை வரைக்கும் ஏத்துவோம், இதுல ஒடஞ்சது போக மீதியுள்ள எல்லாத்தயும் ஸ்டிக்கர கிழிச்சி, பாட்டில்ல இருக்குற வளயத்த கோணியால ஒடச்சு, கழுவி காயவெச்சு புது பாட்டில் மாதிரி பேக் பண்ணி அனுப்பி வெக்கனும்.

இந்த வேலயும் போச்சுன்னா என்ன பண்ணுவீங்க?

ஈரத்துல நின்னு நின்னு வேல பாக்குறதுனால, கையெல்லாம் ரொம்ப இலகுவாயிருச்சு, அழுத்தமான பொருளெல்லாம் புடிச்சா வலி தாங்கமுடியல; ஆனா என்ன பண்ணுறது, காட்டு வேல தான் வழின்னா அதயும் செஞ்சு தான ஆகனும்.

சரோஜா – பூமரத்துப்பள்ளம்

வறட்சினால ரொம்ப பாதிக்கப்பட்டுருக்கோம்பா! டிவி-ல எதும் போட்டு கொஞ்ச ஒதவி பண்ணா ஒனக்கு புண்ணியமா போவும்பா? பாத்தியா இந்த மாமரத்தயும், தென்ன மரத்தயும். அத வுடு அங்க இருக்குற பன மரமே பட்டுப்போச்சு பாத்தியா? எங்க கஷ்டமெல்லாம் ஒங்களுக்கு எப்புடி புரியும்?

மனுசனுக்கும் குடிக்கத் தண்ணியில்ல, அதுகளுக்கும் குடிக்கத் தண்ணியில்ல….வீட்ல அஞ்சாறு ஆடுங்களும், 3 சீமப் பசுவும் இருக்குதுப்பா. சோளமெல்லாம் காஞ்சு போச்சு! கெணறு வத்திப் போச்சு! பட்டி மாடெல்லாம் வெச்சுருந்தோம், போன வருசமே எல்லாத்தயும் வித்துப்புட்டோம், 3 வேளையும் வயிறார தண்ணி குடுச்சுட்டு இருந்த ஆடு மாடுகளுக்கெல்லாம் ரெண்டு வேளக்கி தான் தண்ணி தர முடியுது.

ஆறு, ஏரி, குட்டை, கெணறு எல்லாமே வத்திப்போச்சு, அந்த ஆண்டவனா பாத்து மழய கொடுத்தா தான் நாங்க இங்க இருக்க முடியும், இல்லாட்டி ஊரக் காலிபண்ணிட்டு கெளம்பவேண்டியது தான். ரேசன் அரிசிய வெச்சுத்தான் பொழப்ப ஓட்டிக்கிட்டிருக்கோம்; கேவூர், சோளம்-னு வீட்டுல வெளயறத வெச்சே சாப்புட்டுக்குவோம்; இப்பல்லாம் வெறும் ரேசன் அரிசி மட்டுந்தான் திங்கிறோம்.

செங்கோடப்பட்டி ஏரி – பாலக்கோடு

ஒரு காலத்தில் கடல் போலக் காட்சியளித்த இந்த ஏரி இன்று நீரின்றி பாலம் பாலமாகப் பிளந்து வறண்டு விட்டது. அருகில் உள்ள கிணறுகளும் நீரின்றி வறண்டு விட்டன. பாலக்கோடு இரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள இந்த ஏரி குறித்து ஒரு தோழர் கூறுகையில்…

நான் வீட்ல ஏழாவது பையனாப் பொறந்தேனாம். ஏழாவதும் பையனாகிப் போச்சேன்னு எங்கப்பா கடுப்பாயி இவன அந்த ஏரிக்குள்ள தூக்கிப்போடு என்று அம்மாகிட்ட சொல்ல அவுங்க அத கடுமையா எதுத்திருக்காங்க..இத ஏன் சொல்றேன்னா இப்ப பாத்தா அந்த ஏரியில ஒரு சொட்டு தண்ணி கூட இல்ல..சின்னப்புள்ளயா இருக்கும் போது தண்ணியில குளிச்சி வெளையாடிட்டே இருப்போம்..

மகேஸ்வரி அக்கா – ஆடு மேய்ப்பவர்,

கூலிக்கு ஆடு மேக்கிறேங்க. காட்டு வேல எதுவுமில்ல அதனால இந்த வேல செஞ்சுட்டிருக்கேன். ஆடுங்கள வீட்டிலேருந்து ஓட்டிட்டு வர்றப்பவே தண்ணி காட்டி தான் ஓட்டிட்டு வருவோம். இங்க வந்து கொஞ்ச மேவு கெடைக்கும், சாயந்தரமா  ஓட்டிட்டு போயி பட்டில அடச்சுருவோம். மறுபடியும் வீடு போய்ச் சேர வரைக்கும் அதுகளுக்குத் தண்ணி கெடைக்காது.

4 மணி நேரம் வரைக்கும் ஆடு மேய்க்கவேண்டும்; ஆனால் அரை லிட்டர் தண்ணீரை மட்டும் இடுப்பில் கட்டி வைத்திருக்கிறார்.

நேர்காணல்,படங்கள் : வினவு செய்தியாளர்கள்

இஸ்லாமிக் ஸ்டேட் கொல்கிறது – கொயாரா மருத்துவர்கள் காப்பாற்றுகிறார்கள்

0

ஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ்.ஐ.எல் (Islamic State of Iraq and the Levant) குழுவிடமிருந்து ஈராக்கில் 2016, ஆகஸ்டு மாதம் மீட்கப்பட்ட கொயாரா நகரில் தான் அந்தப் பிரதேசத்தின் முக்கியமான மகப்பேறு மருத்துவமனை அமைந்துள்ளது. முன்பு ஐ.எஸ்.ஐ.எல் குழுவினரால் காயமுற்ற தமது போராளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்ட இந்த மருத்துவமனைக்கு தற்போது அந்தப் பகுதி முழுவதும் இருந்து சிசேரியன் மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள இராக்கியர்கள் வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் சுமார் 10 குழந்தைகள் இங்கே பிறப்பதாகச் சொல்கிறார் மருத்துவர் இமான் நோரி: “பத்தில் இரண்டு பிரசவங்கள் சிசேரியன் மூலம் நடக்கின்றது. உள்ளடங்கிய பிரதேசங்களில் அமைந்துள்ள முகாம்களில் இருந்து வரும் பெண்களுக்கே சிசேரியன் தேவைப்படுகின்றது. ஏனெனில், பொதுவாக அந்தப் பெண்களுக்கு சரியான ஊட்டச்சத்து உணவு கிடைப்பது இல்லை என்பதோடு நீண்ட தொலைவு நடந்தே வருவதாலும் உளவியல் ரீதியான அதிர்ச்சிக்கும் உள்ளாகியிருக்கின்றனர்” என்கிறார் மருத்துவர் இமான்.

சுமார் 450 இராக்கியர்களுடன் செயல்பட்டு வரும் “பெண்கள் மற்றும் சுகாதாரத்துக்கான சர்வதேச கூட்டுத்தாபனம்” (The Women and Health Alliance International) என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் தான் வடக்கு ஈராக்கில் பிரசவ கால சுகாதார சேவை அளித்து வரும் ஒரே அமைப்பு.

முன்பு ஐ.எஸ்.ஐ.எல் குழுவால் மொசூல் நகரில் நடத்தப்பட்ட மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்த மருத்துவர் மரியம் நாசர், இங்கே மருத்துவ வசதிகளும் போதுமான உபகரணங்களும் இல்லை என்று குறிப்பிடுகிறார். கொயாரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதில் அவருக்கு மிகவும் பெருமை; “பெரும்பாலும் மனிதாபிமானப் பணியாளரைப் போல் உணர்கிறேன்.. ஏனெனில் இங்கே பெண்கள் தான் ஐ.எஸ்.ஐ.எல் அமைப்பால் பாதிக்கப்பட்டனர்” என்கிறார்.

கொயாரா மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக செயல்படுவதற்கு சில மாதங்களுக்கு முன் ஐ.எஸ்.ஐ.எல் குழுவால் கைப்பற்றப்பட்டது.

ஐ.எஸ்.ஐ.எல் குழுவால் கொயாரா நகரம் விடுவிக்கப்பட்டு ஏழு மாதங்கள் ஆன பின்னும், ஒவ்வொருவரின் மனதிலும் போர் உறைந்துள்ளது. இராணுவ வாகனங்கள் வரையப்பட்ட சுவர் ஒன்றை கடந்து செல்லும் இளையோர்.

ஐம்பத்தைந்து வயதான செவிலியர் மரியல் அலி ஹுசைன் கொயாரா நகரைப் பூர்வீகமாக கொண்டவர். “இப்போதும் பொதுமக்களிடையே கலந்துள்ள முன்னாள் ஐ.எஸ்.ஐ.எல் போராளிகள் மக்களைப் போல் நடித்துக் கொண்டு சிகிச்சைக்கு வருகின்றனர்” என்கிறார் மரியம்.

இந்தப் பிராந்தியத்தில் கொயாரா மருத்துவமனை ஒன்றில் தான் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் வசதி உள்ளது.

ஐ.எஸ்.ஐ.எல் கட்டுப்பாட்டில் இந்நகரம் இருந்த போது நோயாளிகளிடம் கட்டாயமாக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் குறித்து மருத்துவ பணியாளர் ஒருவர் விளக்கினார் : மருத்துவமனையில் நுழைய 2,000 ஈராக்கிய தினார் (110 ரூபாய்), ஒரு நாளுக்கான படுக்கை கட்டணம் 5,000 தினார் (273 ரூபாய்), சிசேரியன் சிகிச்சைக்கு 75,000 தினார் (4,160 ரூபாய்).

ஒவ்வொரு நாளும் புதிதாக சுமார் 10 பத்துக் குழந்தைகளின் பிறப்பு பதியப்படுகின்றது.

சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட தாய்மார்கள் 24 மணி நேரத்திற்கு பிரசவ வார்டில் அனுமதிக்கப்படுகின்றனர். இயற்கையாக குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் ஓரிரண்டு மணி நேரங்களுக்குப் பின் வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

இருபத்தைந்து வயதான மருத்துவர் மரியம் நாசர் (நடுவில் நிற்பவர்) உள்ளிட்டு பெரும்பாலான மருத்துவப் பணியாளர்கள் ஐ.எஸ்.ஐ.எல் கட்டுப்பாட்டில் இருந்த போதும் பணிபுரிந்துள்ளனர். ஐ.எஸ்.ஐ.எல் பிடியில் இருந்து நகரம் மீட்கப்பட்ட உடனேயே கட்டாயமாக்கப்பட்டிருந்த கருப்பு நிற பர்தாவை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார் மருத்துவர் மரியம்.

ஐ.எஸ்.ஐ.எல் பெண்களுக்கு கடுமையான உடைக்கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. உடல் முழுவதும் மறைக்கும் பர்த்தாவும், கண்களை மட்டும் வெளிக்காட்டும்படியான அபயாவும், கைகளுக்கும் கால்களுக்கும் கருப்பு நிற உறைகளும் கட்டாயமாக்கப்பட்டிருந்தன.

ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்த போது ஒரு நாள் சிவப்பு நிற காலணியோடு நகருக்குச் சென்ற கொயாரா மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியரான ஷாஹாத் முதானாவுக்கு 50,000 (2,750 ரூபாய்) தினார்கள் அபராதமாக விதிக்கப்பட்டது

பத்தொன்பது வயதான சாரா இப்ராஹிம் தனது மூன்றாவது குழந்தையின் பிறப்புக்காக காத்திருக்கிறார். அவரது முதல் இரண்டு குழந்தைகள் பிறந்து சில மாதங்களிலேயெ இறந்து விட்டன.

2016 ஆகஸ்டு மாதம் கொயாரா நகரம் ஈராக்கிய படைகளால் விடுவிக்கப்பட்ட போது இந்த மருத்துவமனையின் ஒரு பகுதியை வெடிவைத்துத் தகர்த்தனர் ஐ.எஸ்.ஐ.எல் அமைப்பினர். “இன்னும் சில மாதங்களில் மருத்துவமனையின் மேல் தளங்கள் இரண்டையும் புனர் நிர்மாணம் செய்ய முடியும் என்று நம்புகிறேன்” என்கிறார் மருத்துவமனையின் இயக்குனரான மருத்துவர், மாஜித் ரமதான்.

“கொயாராவின் நிலைமை சீரடையாமலே உள்ளது” எனக் குறிப்பிடும் ஹுசென், “எந்த நேரமும் கருவுற்ற பெண்ணைப் போல் நடித்து வயிற்றில் குண்டுகளைக் கட்டி வந்து தகர்த்து விடும் வாய்ப்புகள் உள்ளன” என்கிறார்.

கொயாராவில் இருந்து தப்பிச் செல்லும் வழியில் இருந்த எண்ணை வயல்களை தீயிட்டுக் கொளுத்தி விட்டுச் சென்றனர் ஐ.எஸ்.ஐ.எல் தீவிரவாதிகள். இதன் காரணமாக நகர மக்கள் எந்நேரமும் ஆபத்தான புகையைச் சுவாசித்துக் கொண்டும் கருமேகங்களாய்த் திரண்டுள்ள புகையின் கீழுமே வாழ்ந்து வருகின்றனர்.

கொயாராவின் சுவர்கள் இன்னமும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடி உள்ளிட்டு ஆக்கிரமிப்பின் அசிங்கமான கதைகளைச் சுமந்து கொண்டுள்ளன. அவற்றில் சில அடையாளங்களின் மேல் தற்போது வெள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நன்றி : அல்ஜசீரா
– தமிழாக்கம்: முகில்

காரியாபட்டி பொதுக்கூட்டம் : கொலைகார ராம்கி நிறுவனத்தை இழுத்து மூடு !

0

மருத்துவக் கழிவுகளை எரித்து நூற்றுக்கும் மேலான மக்களைக் கொன்ற சட்டவிரோத ராம்கி நிறுவனத்தை மூடு !
திருப்பூர் சாயப்பட்டறை மற்றும் வெளிநாட்டு மின்னணுக் கழிவுகளையும் புதைக்கும் புதிய நிறுவன அனுமதியை இரத்து செய்!

பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

நாள் : 25.05.2017
இடம் : காரியாபட்டி

தலைமை :

  • தோழர் சே.வாஞ்சிநாதன், சட்ட ஆலோசகர்,ராம்கி எதிர்ப்பு போராட்டக் குழு. மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம.

கண்டன உரை :

  • திரு.சொ.ராஜா,  மாவட்ட செயலாளர், இந்திய தேசிய காங்கிரஸ்
  • திரு.ஜெயராஜ்,முன்னாள் நரிக்குடி ஒன்றிய சேர்மன், அ.தி.மு.க(அம்மா) கட்சி
  • திரு. சண்முக சுந்தரம், மாவட்ட செயலாளர்,ம.தி.மு.க
  • திரு. அர்ச்சுனன், மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
  • திரு. ராமசாமி, மாவட்ட செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
  • திரு.பவுன்ராஜ்,மாவட்ட செயலாளர்,புதிய தமிழகம்
  • திரு. முருகன், மாவட்ட செயலாளர்,விடுதலை சிறுத்தைகள் கட்சி
  • திரு.கலைவேந்தன்,கொள்கை பரப்பு செயலாளர்,தமிழ் புலிகள் கட்சி
  • திரு. பாலகங்காதரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அ.தி.மு.க(புரட்சித் தலைவி)அம்மா கட்சி

சிறப்புரை :

  • திரு. தங்கம் தென்னரசு,சட்டமன்ற உறுப்பினர்,திருச்சுழி விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர், தி.மு.க

நன்றியுரை :

  • திரு.தங்கப்பண்டியன்,ஒருங்கிணைப்பாளர்,ராம்கி எதிர்ப்பு போராட்டக்குழு

 

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
ராம்கி எதிர்ப்பு போராட்டக்குழு,
தொடர்புக்கு – 98434 87989, 86750 86377, 98653 48163.

 

கடலூர் திருத்துறையூரில் மதுக்கடையை மூடிய மாணவர்கள்

0

டலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியான புதுப்பேட்டைக்கு அருகில் உள்ள, திருத்துறையூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள மக்கள் விவசாயிகளாகவும் விவசாயக் கூலிகளாகவும் உள்ளனர். எப்போது விடியும் விதைக்கலாம் அறுக்கலாம் என்று இருந்த, இந்த உழைக்கும் மக்களின் சிந்தனையை, தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் எப்போது விடியும் பணமுடிச்சை அவிழ்க்கலாம் குடிக்கலாம் என்று சிந்திக்க வைத்து தன்னுடைய நிர்வாகத் திறனை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வந்தது.

கோப்புப்படம்

விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்த மக்கள் இன்று அரசால் உருவாக்கப்பட்ட குடிமகன்களுக்கு வாட்டர்பாக்கெட் விற்பது, வேர்க்கடலை விற்பது, கருவாடு வறுப்பது, மீன்வருவல், ஆட்டுக்கறி மற்றும் குடல் வறுவல், மாட்டுக்கறி வருவல் மற்றும் சூப், பன்றிக்கறி வறுவல், பானிபூரி, சிலர் முன்கூட்டியே மது பாட்டில்களை வாங்கி வைத்து இரவு பத்துமணிக்குமேல் மன்டைகாய்ந்து ஓடி வருபவர்களுக்கு அதிக விலைவைத்து விற்பது, காலிபாட்டில்களை பொறுக்குவது,  பாட்டில்களில் உள்ள மூடிகளை பொறுக்குவது என மக்களின் தொழில்முறையாக மாற்றப்பட்டுள்ளது.

டாஸ்மாக் அமைந்துள்ள தெருக்காரர்கள் மட்டுமே மேற்கண்ட தொழிலை நடத்த இடம் பிடித்துக் கொண்டனர், மற்றவர்களுக்கு வாய்ப்பில்லை என்ற ஏக்கமும் அப்பகுதி மக்களிடம் வெளிப்படுகின்றன.

சுமார் இரண்டான்டிற்கு முன் இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் மனு கொடுத்து அலுத்துபோய், அனைத்து மக்களையும் திரட்டி மதுக்கடை எதிராக முற்றுகையிடப்பட்டது. அப்போது புதுப்பேட்டைக் காவல் துறையினர் மூர்க்கமான முறையில் தாக்கி, போராடிய மக்களை கலைத்தனர், அஞ்சி ஓடிய மக்களை வீடு வீடாக நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் கடுமையாக தாக்கி கைது செய்தனர். இப்பகுதியில் டாஸ்மாக்கிற்கு இடமளித்து அப்பாவிகளான கூலி விவசாயிகளையும் மாணவர்களையும் சீரழித்தவர் பண்ருட்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள இராதாகிருஷ்ணன், இவர் அதிமுக-வை சார்ந்தவர். டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடிய திமுக-வை சார்ந்த ஒருவரின்  கரும்பை வெட்டி வெளியே எடுத்துவர வழிவிடாமல் தடுத்துள்ளார் இந்த வழக்கறிஞர். இந்த நடவடிக்கைகளினால் மிரண்டுபோன மக்கள் பிளவுபட்டு தங்களுக்குள்ளே மோதிக்கொண்டது டாஸ்மாக்கிற்கு ரானாட்டா முறுக்குக் கம்பியால் அடித்தளம் போட்டதாய் அமைந்தது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் குடிவெறிகொண்டு அரசே ஆடுகிறது  தாய்மார்களே டாஸ்மாக் கடையை விளக்குமாற்றால் அடித்துவிரட்டுங்கள் என்ற சுவரொட்டியை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் சத்தியக்குமார், தோழர் செந்தமிழ் மூலமாக இப்பகுதியில் ஒட்டப்பட்டது. அப்போது மிகுந்த வரவேற்பு இருந்தது, பெண்களே இவர்களை அழைத்து அங்கு ஒட்டுபா இங்கு ஒட்டுபா என உரிமையோடு கேட்டுக்கொண்டனர். CPI கட்சியை சார்ந்த ஆதவன் எங்களால் முடிய வில்லை நீங்கள் செய்தால் சந்தோஷம் தான் என்றார்

இரண்டு வாரம் கடந்த பின்னர் இதே பகுதிக்கு சென்று பார்த்ததில் நாம் ஒட்டிய சுவரொட்டிகள் எதுவும் கிழிக்கப்படவில்லை. இந்த ஊரில் இவ்வளவு நாட்களாக ஒரு போஸ்ட்டர் கிழிக்காமல் இருக்கிறது என்றால் அது உங்கள் போஸ்டர்தான் என மகிழ்ச்சியோடு கூறினர். தொடர்பு எண் கொடுத்த அப்பகுதி இளைஞர்களை சந்தித்து நாங்கள் ஒட்டிய சுவரொட்டி எப்படி உள்ளது என்று கேட்டதற்கு, வாசகம் எதுவும் சரியில்லை, படித்தால் வீரம் பீய்ச்சி அடிக்கவேண்டாமா, மொக்கையாக இருக்கிறது என்றும், நாங்கள் கொடுக்கும் வாசகத்தைப் போட்டுப் பாருங்கள் என அவர்கள் பேசியது தோழர்களையே சற்று திணர வைப்பதாக இருந்தது.

அரசு இந்த கிராமத்தை சுமார் 70 கிராமங்களுக்கு ஊத்திக்கொடுக்கும் மதுக்குடமாக வைத்துள்ளது. ஆதலால் மொத்த மக்களையும் திரட்டி டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும். இளைஞர்களாகிய நீங்கள் முன்வந்தால் மொத்த மக்களையும் ஒன்று திரட்டி உங்களிடம் ஒப்படைக்கிறோம். அதுமட்டும் அல்லாமல் இந்த மதுக்கடையை மூடிய பின்னரே நாங்கள் இந்த ஊரைவிட்டுப் போகிறோம் என்று தோழர் சத்தியகுமார் தலைமையில் சென்ற தோழர்கள் பேசியதைக் கேட்டதும், அவர்கள் நாங்கள் பாமக-வில் உள்ளோம், மனுகொடுத்தும் மூடவில்லை, வழக்குபோட்டும் மூட முடிய வில்லை, நாங்கள் படித்துள்ளோம் எங்களுக்கு சென்னையில் வேலை உள்ளது, எங்கள் மீது வழக்கு வந்தால் என்ன செய்வது என்று கூறி வீர முழக்கம் தருகிறோம் என்றவர்கள் ஒவ்வொருவராக அம்மா கூப்பிடுறாங்க அப்பா கூப்பிடுறாங்க என்று கூறி இடத்தைக் காலிசெய்து கொண்டனர்.

மாதிரி படம் : மக்கள் அதிகாரம்

பிறகு அடுத்த கட்டமாக சத்தியகுமார் தலைமையில் அன்குசெட்டிப்பாளையம் மாணவர்கள் தோழர் ஆகாஷ், தோழர் செந்தமிழ், தோழர் கலைமணி, தோழர் ஹரி, தோழர் தரணி, தோழர் விஜயராஜ் இவர்கள் குழுவாக சென்று

மூடு டாஸ்மாக்கை !
குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே
அடிக்கவரும் போலிசுக்கு அஞ்சாதே
மூடுகடையை எவன் வருவான் பார்ப்போம்
நம்ம ஊரில் இனி டாஸ்மாக் கிடையாது, அடிச்சி தூக்கு!! – என்ற முழக்கத்தின் அடிப்படையில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

அப்போது மாணவர்களாகிய நாங்கள் எங்கள் ஊரில் இருந்த டாஸ்மாக்கை அடித்து விரட்டிவிட்டோம், நீங்களும் வாருங்கள் மாணவர்கள் நாங்கள் இருக்கிறோம் எங்களின் தலைமையில் திரளுங்கள் யாராலும் மூடமுடியாத கடையை நாங்கள் மூடுகிறோம். எங்களைப்போன்ற மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர் என வீச்சாக கடுமையான வெய்யலிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அப்போது ஏராளமானவர்கள் மாணவர்களாகிய நீங்கள்  வந்துவிட்டீர்கள் கண்டிப்பாக நாங்கள் வருவோம் என்று மக்கள் உற்சாகமாக கூறினர். சிலர் போராட்டத் தேதியே இல்லாமல் உள்ளது, என்று போராட்டம் என்று ஆர்வமாக கேட்டனர். ஒருபெண் அனைவருக்கும் குளிர்பானம் கொடுத்து உங்களைப் பார்த்தால் எனக்கு பெருமையாக உள்ளது என பெருமிதமாக கூறினார்.

கடந்த 21 05 2017 அன்று மாலை சுமார் 500 பேர், மக்கள் அதிகாரத்தின் துண்டு பிரசுரத்தாலும் மாணவர்களின் பிரச்சாரத்தாலும் உந்தப்பட்டு, எந்த கட்சிகளின் தலைமையும் வேண்டாம் மக்களே ஒன்றிணைந்து போராடுவோம் என முடிவெடுத்து டாஸ்மாக் கடையை முற்றுகை இட்டனர். அப்போது அங்குவந்த தாசில்தார் 15 நாட்களுக்குள் மூடிவிடுவதாக கூறினார், அதற்கு மக்கள் மூடுவது என முடிவு செய்த பிறகு அதை இப்போதே மூடுங்கள் என உறுதியாக நின்றனர். மக்களின் உறுதியையும் தமிழகத்தின் நிலையையும் கண்டுகொண்டிருக்கும் அரசு அப்போதே டாஸ்மாக் கடையை மூடுவதாய் மனமில்லாமல் அறிவித்து மூடியது.

தகவல்
புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணி
கடலூர்

திருப்பூர் : நரகத்திலிருந்து ஒரு ரிப்போர்ட் !

0

திருப்பூர் ரிப்போர்ட் – பகுதி 1

“இங்கே தண்ணீ கிடைக்காத நிலைமை இல்லீங்க.. ஆனா, கிடைக்கிற தண்ணீர் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள்னு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலர்ல வருதுங்க.. குடிக்கிற நல்ல தண்ணி தான் அப்படி வருது..”

என அங்கலாய்த்தார் திருப்பூர் ராதா நகரைச் சேர்ந்த லட்சுமி. ஊடகங்களாலும், ஓட்டுக்கட்சி அரசியல் தலைவர்களின் வாயில் புரள்வதாலும் “வரலாறு காணாத வறட்சி” என்கிற வார்த்தைகள் தேய்வழக்காகிப் போன நிலையில் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் படும் பாடுகளை நேரில் கண்டுணர்ந்து மக்களுக்கு அறியத்தரும் நோக்கில் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் கள ஆய்வுகள் திட்டமிடப்பட்டு அதன் ஒரு பகுதியாக வினவின் செய்தியாளர் குழு திருப்பூரில் களமிறங்கியது.

“இப்போவெல்லாம் குடி தண்ணீர் காசு கொடுத்து வாங்கறாங்களே?” என்றோம்.

“காசு குடுத்து வாங்கலாம்… அதுக்கு முதல்லே காசு வேணுமே சார்? வாங்குற 200 ரூவா கூலிக்கு தண்ணீருக்கு செலவழிக்க முடியுமா? வீட்ல நாங்க நாலு பேரு இருக்கோம்.. வாரத்துக்கு ஆறு கேன் தண்ணீ ஆவும்.. ஒரு கேன் இப்ப 40 ரூபா வரைக்கும் விக்கிறாங்க. மாசத்துக்கு ஆயிரம் ரூபா குடி தண்ணிக்கு மட்டும் செலவழிச்சிட்டா சாப்பாட்டுக்கும் மத்ததற்கும் எங்கே போவோம்?” என்கிறார் லட்சுமி.

கணவருடன் லட்சுமியும் வேலைக்குச் செல்கிறார். கணவருக்கு நானூறு ரூபாயும், லட்சுமிக்கு இருநூறு ரூபாயும் கூலி. இரண்டு பிள்ளைகள். கணவரின் சம்பளத்தில் பெரும்பகுதி டாஸ்மாக் மூலம் அரசுக்கே சென்றடைந்து விடுவதால், லட்சுமியின் சம்பளத்தை நம்பியே குடும்பம் நடக்கிறது.

“தண்ணீர் பஞ்சம்” எனச் சொல்லப்பட்டாலும், அது வெவ்வேறு வர்க்கப் பிரிவைச் சேர்ந்த மக்களை வெவ்வேறு விதத்தில் பாதித்துள்ளது. தொழிலாளர்களிலேயே சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், குடும்பத்தோடு தங்கியிருப்பவர்கள், திருமணமாகாமல் நண்பர்களோடு சேர்ந்து தங்குகிறவர்கள், வடமாநிலத் தொழிலாளர்கள் என ஒவ்வொரு தரப்பினருக்கும் சில குறிப்பான மற்றும் பொதுவான பிரச்சினைகள் உள்ளன.

கூலித் தொழிலாளிகள் காசு கொடுத்து நல்ல தண்ணீரை வாங்கும் சக்தியற்ற நிலையில் குழாயில் விசமே வழிந்தாலும், அதைத் தண்ணீராய் பாவித்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். சுகாதாரமற்ற நீரால் ஏற்படும் நோய்களை சந்திக்கும் நிலையிலும் அதைத் தங்களது தலைவிதியாய் நினைத்துக் கடந்து செல்கின்றனர்.

“பாருங்க சார், எல் & டி தண்ணீல துணி தோய்ச்சி கையெல்லாம் செரங்கு” என்றார் லட்சுமி. லட்சுமிக்கு அருகில் அமர்ந்திருந்த மூதாட்டி ஒருவர்,  “அந்த கெரகம் புடிச்ச தண்ணீல குளிச்சி உடம்பு முழுக்க ஒரே அரிப்புங்க” என்கிறார்.

சிதிலமடைந்து போயுள்ள கங்கா நகர் நீரேற்று நிலையம்

ராதா நகரைச் சேர்ந்த அக்கம்மாளுக்குச் சொந்த வீடு உள்ளது. ஐந்து செண்ட் இடத்தில் ஒரு படுக்கையறையுடன் கட்டப்பட்ட மூன்று வீடுகள் உள்ளன – அதில் ஒன்றில் அவரது குடும்பம் தங்கியிருக்க, மற்ற இரண்டும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

“நாங்க ரெண்டு பைப் கனெக்சன் வாங்கியிருக்கோம்.. பத்து நாளுக்கு ஒரு வாட்டி குடி தண்ணியும் தினசரி உப்புத் தண்ணியும் விடறாங்க. ஆனா, நாங்க புழங்குறதுக்கும், குடிக்கிறதுக்கும் காசு குடுத்து தான் தண்ணி வாங்கிக்கறோம்” என்றார்.

“புழங்குவதற்கு” என்றால், பாத்திரம் கழுவ, துணி துவைக்க, சமையல் செய்ய என்று பொருள். இதற்கு லாரித் தண்ணீர் வாங்கிக் கொள்கின்றனர். ஒரு லோடு தண்ணீர் 850 ரூபாய். தவிர குடிப்பதற்கு கேன் தண்ணீர் – அதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் தனியே செலவாகும். மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டம் எனப்படும் பவானி-கூடுதுறை குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் இணைப்பு பெற்றுள்ளார் ராதாம்மாள். இத்திட்டத்தின் குடிநீர் வழங்கல் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால், இதற்கென வருடம் 3000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். வருடம் சுமார் முப்பதாயிரம் வரை தண்ணீருக்கே செலவழித்தாக வேண்டும். இந்த வாய்ப்புகள் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கு வாய்ப்பதில்லை.

“சாணிப் பவுடரு கலந்த மாதிரி தண்ணீர் வரும். அதுல தான் சமைச்சாகனும். வேற வழி? நல்ல தண்ணியை காசு குடுத்து வாங்கனும்னு ஆசை தான்.. ஆனா முடியனுமே? என்கிறார் லட்சுமி.

மூன்றாம் கூட்டுக் குடிநீர் வழங்கல் மற்றும் பராமரிப்பு மகிந்திரா & மகிந்திரா நிறுவனத்திடம் உள்ளது. ஆனால், அந்த திட்டத்திற்கான வேலைகளை காண்டிராக்ட் எடுத்து செயல்படுத்தியது எல் & டி என்பதால் மக்கள் பொதுவாக எல் & டி தண்ணீர் என்றே அழைக்கின்றனர். பொதுவாக குடிநீரில் உள்ள பி.பி.எம் (Parts per million) அளவு 50ல் இருந்து 100 வரை இருக்கலாம். பி.பி.எம்மின் அளவு 500க்கும் அதிகமாக இருந்தால் பயன்படுத்தக்கூடாது என்கிறது அமெரிக்க சூழல் பாதுகாப்பு மையம். மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் திருப்பூரில் விநியோகிக்கப்படும் தண்ணீரின் பி.பி.எம் அளவு 700ல் இருந்து 800 வரை இருக்கின்றது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே தனியார் கிளினிக் ஒன்றை நடத்தி வரும் மருத்துவர் இளங்கோவைச் சந்தித்தோம். தோல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவரான இளங்கோவிடம் தண்ணீர் தொடர்பாக வரும் நோய்கள் குறித்த கேள்விகளை முன்வைத்தோம்.

தோல் நோய் நிபுணர் மருத்துவர் இளங்கோ

“திருப்பூரில் உள்ள தண்ணீரின் காரணமாக சொரியாசிஸ் நோய் அதிகமாக உள்ளது எனச் சொல்லப்படுகிறதே?” என்றோம்.

“அது தவறான தகவல் சார். சொரியாசிஸ் நோய்க்கு மரபணு சார்ந்த மற்றும் மன அழுத்தப் பிரச்சினைகளுக் தான் காரணம். ஆனால், கெட்ட நீரால் ஏற்படும் பிற நோய்கள் அதிகமாக இருப்பது உண்மை தான்”

“அப்படியென்றால், திருப்பூரில் சொரியாசிஸ் நோயாளிகள் அதிகம் என்று சொல்லப்படுவது பொய்யா?” என்றோம்.

“சொரியாசிஸ் இங்கே அதிகம் தான். ஏன்னா இங்கே மக்கள் அடர்த்தி அதிகம். அதே மாதிரி வேலை தொடர்பான அழுத்தங்களும் அதிகம். மற்றபடி தண்ணீரால் சொரியாசிஸ் அதிகரிப்பது என்பது மருத்துவ ரீதியாக சரியான தகவல் அல்ல” என்றார்.

“மக்களிடம் பேசியபோது தண்ணீரால் அரிப்பு சிரங்கு போன்ற பிரச்சினைகள் இருப்பதாக சொல்கிறார்களே?”

“அது கடின நீரைப் பயன்படுத்தும் போது ஏற்படும் ஒவ்வாமை. இர்ரிட்டண்ட் டெர்மடிடஸ் என்பார்கள். இந்நோய் சாய பட்டரைகளில் வேலை செய்கிறவர்களுக்கும் ஏற்படும்.  சொரியாசிஸைப் போல் இது நிரந்தரமானதல்ல. இந்த சூழலில் இருந்து நல்ல தண்ணீர் கிடைக்கும் பகுதிகளுக்கு மாறிச் சென்றால் பிரச்சினை தீர்ந்து விடும்”

“நல்ல சூழலுக்குச் செல்வதென்றால், திருப்பூரை விட்டே வெளியேறியாக வேண்டுமே. அவர்களது ஊரில் பிழைக்க வழியின்றி தானே இங்கே வந்துள்ளனர்?”

“நோயில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அப்படித் தான் செய்ய வேண்டும். ஆனால், வெளியே பிழைக்க வழியில்லை என்றால் நோயோடு திருப்பூரில் காலம் தள்ளுவதைத் தவிற வேறு வழியில்லை”

“தண்ணீர் பயன்பாடு, அல்லது திருப்பூருக்கென்றே பிரத்யேகமாக உள்ள தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏதாவது உள்ளதா?”

“ஸ்கேபிஸ் (Scabies) நோயை அப்படிச் சொல்லலாம். இது பெரும்பாலும் அடைந்து வாழ்வதாலும், சுகாதாரமற்று இருப்பதாலும் வரும் நோய். இது திரூப்பூரில் அதிக அளவில் உள்ளது”

“சுகாதாரமற்று என்றால்?”

“தினசரி குளிக்காமல், துவைக்காத ஆடைகள் அணிவதாலும் இந்த நோய் வரும்”

விரல் இடுக்குகளிலும், புறங்கையிலும் சிரங்காக பரவும் இந்நோயின் தாக்கம் திருப்பூரில் மிக அதிகமாக இருப்பதற்கான காரணத்தை மருத்துவர் விளக்கினார். வெளியூர்களில் இருந்து – குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து – திருமணமாகாத இளைஞர்கள் பலர் திருப்பூர் பனியன் கம்பெனிகளில் கீழ்மட்ட கூலி வேலைகளுக்கு வருகின்றனர். பத்துக்குப் பத்து அளவுள்ள அறைகளில் ஐந்தாறு பேர்களாக அடைந்து வசிக்கின்றனர். வாரத்துக்கு ஒருமுறை குளியல், துவைக்காத துணிகளைகளே நாள் கணக்கில் போட்டுக் கொள்வது என்பதாக இவர்களது சூழல் உள்ளது.

நாங்கள் அருணாச்சல பிரதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்து திருப்பூரில் தொழிலாளியாக உள்ள ஜெகத்திடம் பேசினோம்.

ஜெகத்

“கூட்டமாகச் சேர்ந்து வாழ்வதை விட வேறு வழியில்லை. இந்த அறையில் நாங்கள் இரண்டு பேர் வசிக்கிறோம்.. மாதம் 1600 ரூபாய் வாடகை. வசதியாக இருக்க வேண்டுமென்றால் ஐயாயிரத்துக்கு மேல் வாடகைக்கு வீடு பிடிக்க வேண்டும்.. அப்படியென்றால் ஊருக்கு பணம் அனுப்ப முடியாதே?” என்றார்.

“சேர்ந்து வாழ்வதைத் தவிற வேறு வழியில்லை என்றால், குளிப்பதற்கும் துவைத்த துணிகளை அணிவதற்கும் என்ன பிரச்சினை” என்றோம். அவர் எங்களை தாங்கள் தங்கியிருக்கும் அறையினுள் அனுமதித்தார்.

எங்கள் கேள்விக்கான பதிலை அவர் சொல்லாமலே நாங்கள் புரிந்து கொண்டோம். திருப்பூரில் நல்ல தண்ணீரைச் சேகரித்து வைப்பதற்கே நிறைய மெனக்கெட வேண்டும். அஸ்பெஸ்டாஸ் கூரை இடப்பட்ட அந்த பத்துக்குப் பத்து அறையில் ஐந்தாறு குடங்கள் வைப்பதற்கே போதுமான இடம் இருந்தது. மேலும், உள்ளூர் தொழிலாளிகளே ஒரு சிப்டுக்கு 12 மணி நேரங்கள் வேலை செய்யும் நிலையில், வடமாநில தொழிலாளர்களுக்கோ நேர வரையறை ஏதும் இருப்பதில்லை – இவர்கள் பீஸ் ரேட் அடிப்படையில் வேலை செய்கின்றனர். எவ்வளது நேரம் வேலை செய்கிறார்களோ அவ்வளவு கூலி – இவர்களது உழைப்புக்கு வழங்கப்படும் குறைந்த கூலியை அதிக நேரம் வேலை செய்வதன் மூலம் ஈடுகட்டிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம். எனவே, நல்ல தண்ணீரைத் தேடியலைந்து சேகரிப்பதற்கு நேரமும் இருப்பதில்லை.

அருணாச்சல பிரதேசத்திலிருந்து இங்கு வந்து வேலை செய்வது எப்படி இருக்கிறது என்று ஜெகத்திடம் கேட்டோம்.

“அங்க காசு கிடையாது. ஆனா அது சொர்க்கம். இங்க காசு கிடைக்கிறது. ஆனா இது நரகம்” என்றார். திருப்பூர் குறித்த சித்திரத்திற்கு இக்கவிதையே போதுமானது.

ஜெகத் குடியிருக்கும் வீட்டின் உள்தோற்றம்

தண்ணீர் விடப்படும் நேரம் இன்னொரு பிரச்சினை. சில பகுதிகளில் வாரம் ஒருமுறையும், வேறு சில பகுதிகளில் பத்து நாட்களுக்கு ஒருமுறையும் நல்ல தண்ணீர் விடப்படுகின்றது. அதுவும், ஒரு மணி நேரம் தான் வரும். அந்த ஒரு மணி நேரம் எப்போது என்பது யாருக்கும் தெரியாது.

“திடீர்னு தண்ணி விடுவாங்க. நாள் பொழுதெல்லாம் கிடையாதுங்க.. ராத்திரி கூட வரும். தண்ணி விட்டு ஒரு வாரம் ஆச்சின்னா வீட்டுக்கு ஒருத்தர் குழாய் மேல ஒரு கண்ணு வச்சிகிட்டே இருப்போம். காலைல மூணு மணிக்கு கூட வரும். முழிச்சிருந்தா கிடைக்கும் இல்லேன்னா இல்ல” என்கிறார் கங்கா நகரைச் சேர்ந்த சுமதி.

தொழிலாளர்களின் வரிசை வீடுகள்

தண்ணீரைச் சேமித்து வைப்பதில் வேறு சிக்கல்கள் உள்ளன. பொதுவாக திருப்பூரில் தொழிலாளிகள் லைன் வீடுகளில் வசிக்கின்றனர். ஒரு காம்பவுண்டில் சுமார் நான்கு அல்லது ஐந்து குடித்தன வீடுகள் இருக்கும் – இத்தனை வீடுகளுக்கும் சேர்த்து இரண்டு குடிநீர்க் குழாய்கள் இருக்கும். ஒரு மணிநேரமே தண்ணீர் வருவதால், ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சம் பதினைந்திலிருந்து இருபது குடம் தண்ணீர் வரை கிடைக்கும். இந்த தண்ணீரை சிறு சிறு குடங்களில் சேமிப்பதென்றால், வீட்டில் பாதி இடத்தை அடைத்துக் கொள்ளும் – எனவே பல வீடுகளில் பிளாஸ்டிக் டிரம்களை வாங்கி வைத்துள்ளனர்.

பிளாஸ்டிக் டிரம்களில் சேமிக்கப்படும் நீர் இரண்டு அல்லது மூன்று நாட்களில் புழு பிடித்துக் கொள்ளும். எனவே மூன்று நாட்களுக்குப் பின் காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டும் – அல்லது, துவைக்க வேண்டிய அழுக்குத் துணிகளை அடுத்த நான்கு நாட்களுக்கு எங்காவது குவித்து வைக்க வேண்டும். நாங்கள் பேசிய பலரும், குடிநீர் தட்டுப்பாட்டை ஒரு பாரிய பிரச்சினையாக கருதாமலே பேசினர். சம்பாத்தியத்தில் கணிசமான பகுதியை தண்ணீர் வாங்க செலவழிப்பதை முன்னிட்டு எவருக்கும் ஆத்திரமோ கோபமோ ஏற்படவில்லை என்பது எங்களுக்கு வியப்பளித்தது. ஆனால், இதற்கான காரணத்தை விளக்கினார் முன்னாள் சி.பி.ஐ பிரமுகரும், பஞ்சாயத்து தலைவராக இருந்தவருமான தோழர் மோகன்.

“மக்களை இதுக்கு மெல்ல மெல்ல பழக்கப் படுத்தினாங்க தோழர். மூன்றாம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் அமல்படுத்தும் வரை தண்ணீரைக் காசு கொடுத்து வாங்க வேண்டிய ஒரு நிலை இங்கே இல்லாமல் தான் இருந்தது. கேன் தண்ணீர் என்பதெல்லாம் மிக அபூர்வம்” எனக் குறிப்பிட்ட தோழர் மோகன் தற்போது சி.பி.ஐ கட்சியிலிருந்து விலகி மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைந்துள்ளார்.

தோழர் மோகன்

திருப்பூர் பிழைக்க வருகின்றவர்களின் ஊராக இருக்கிறது. மண்ணின் மைந்தர்கள் சொந்த இடம் வைத்துள்ளனர் – அதில் வீடோ கடையோ கட்டி வாடகைக்கும் விடுகின்றனர். பார்க்கும் வேலையில் குறைந்தபட்ச சம்பளம் கிடைத்தாலும், வாடகை வருமானம் அதை ஓரளவுக்கு ஈடுகட்டி விடுவதால் மண்ணின் மைந்தர்களுக்கு தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவது பொருளாதார ரீதியில் பெரியளவுக்கு நெருக்கடி அளிப்பதில்லை. வெளியூரில் இருந்து வந்தவர்களோ – அதிலும் குறிப்பாக வாடகை வீடுகளில் குடியிருக்கும் தொழிலாளிகள் – பிழைக்க வந்த ஊரில் போராட்டம், வம்பு தும்பு என இறங்குவதை விட தண்ணீருக்கு செலவழிக்கும் தொகையை ஈடுகட்ட அதிக நேரம் உழைப்பது, குடும்பத்தில் எல்லோரும் உழைப்பது என்கிற ரீதியிலேயே சிந்திக்கின்றனர்.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வருகின்றவர்களாவது தண்ணீர் பிரச்சினைக்காக எப்போதாவது போராடினாலும், வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றவர்களோ நிலைமையை அப்படியே சகித்துக் கொள்கின்றனர். மெல்ல மெல்ல நல்ல குடிநீர் என்றாலே காசு கொடுத்து தான் வாங்கியாக வேண்டும் என்கிற நிலைமையை நிலை நாட்டியுள்ளது அரசு. காசுக்கேற்ற தோசையாக குடிநீரையும் சந்தையின் பண்டமாக நிலைநாட்டுவதில் வெற்றி பெற்றுள்ளது அரசு.

நாங்கள் சந்தித்த மக்களில் பெரும்பாலனவர்கள் காசு கொடுக்கவும் தயார், ஆனால் நல்ல குடிநீர் கிடைத்தாலே போதும் என்கிற மனநிலைக்கு வந்து விட்டனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு மேலும் மேலும் திருப்பூரின் குடிநீர் வழங்கலை தனியாருக்குத் தாரை வார்க்கத் தயாராகி வருகின்றது அரசு. முதல் இரண்டு கூட்டுக் குடிநீர் திட்டத்தை திட்டமிட்டு சீர்குலைப்பது, திருப்பூரின் அனைத்துப் பகுதிகளையும் மூன்றாம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து மொத்தமாக தனியார் முதலாளிகளின் கையில் கொடுத்து விடுவது என்பதை நோக்கி அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

இந்த நிலையை பின்னலாடை நிறுவனங்கள் எவ்வாறு சமாளிக்கின்றன? திருப்பூரில் அமல்படுத்தப்பட்ட குடிநீர் திட்டங்கள் உண்மையில் மக்களுக்குப் பலனளித்ததா? திருப்பூரின் நீராதாரங்கள் திட்டமிட்டு பாழாக்கப்பட்ட வரலாறு என்ன?

( தொடரும் )

– வினவு செய்தியாளர்கள்

வாழ வழி காட்டுயான்னா பேள வழி காட்டுறாரு மோடி !

1

ற்ற மாவட்டங்களை விட தஞ்சையின் பசுமைக்கு தனி அழகுண்டு. அடர்ந்த மரங்கள் கிடையாது. மலை குன்றுகள் கிடையாது. பரந்த வெளியில் பயிர்களும் அதன் மேல் கடல் அலை போல வருடும் காற்றும் தனியொரு கவர்ச்சிதான். ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையின் காட்சியை விவரித்தும் வர்ணித்தும் எழுத வேண்டிய அந்த் மண் இன்று வறண்ட கற்பாறை போல கண்ணை உறுத்துகிறது. தஞ்சையின் கடந்த கால  பசுமையை நினைத்துப் பார்க்கும் நேரத்தில் தமிழகத்திற்கு இனி எந்த நெற்களஞ்சியம் சோறு போடும் என்ற பயமும் வருகிறது.

மே தினத்தன்று விவசாயத் தொழிலாளர்களை சந்திக்க வெகு தூரம் அலைந்தோம். ஆழ் குழாய் பாசனம் வைத்துள்ள வெகு சிலரே விவசாயம் செய்திருந்தனர். அங்கு மட்டுமே சிலரை சந்திக்க முடிந்தது. நிலத்தடி நீர் குறைந்து விட்டதால் ஆழ்குழாய் பாசனத்திலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பாதி பயிரைத்தான் காப்பாற்றி உள்ளனர். கண்ணுக்கு எதிரே குழந்தை நோய்வாய்பட்டு இறக்கும் போது காப்பாற்ற முடியாத கையறு நிலையை போன்றதுதான் பாதியிலே பயிர் வாடும் காட்சியும். அதை ஒரு விவசாயி போல நம்மால் கற்பனை செய்ய முடியாது.

தட்டுப்படும் சில விவசாயத் தொழிலாளிகளிடம் அரசியல் தவிர்த்து அன்றாட வேலைகளைப் பற்றிதான் கேட்டோம். ஆனால் அவர்களோ எதை ஆரம்பித்தாலும் அரசியல் ரீதியிலேயே பேசினார்கள். பார்க்கும் வேலைக்கும் பாராளுமன்றத்துக்கும் முடிச்சுப் போட்டு பேசுவதை பார்த்து வியப்பதா? விழிப்புணர்வு என்பதா? சற்று கவனித்தால் தம் வாழ்வில் நடக்கும் நல்லது கெட்டதுக்கு விதியையும் கடவுளையும் கைக்காட்டும் மக்கள் இப்போது அடிப்படையானகாரணத்தை தேட தொடங்கிவிட்டார்கள் என்பது தெரிகிறது. மெரினாவிற்கு பிறகு தமிழகத்த்தில் தோன்றியுள்ள மாற்றமிது.

எள்ளு செடி எடுக்கும் விவசாயத் தொழிலாளிகள், சேதுராயன் குடிகாடு.

“எங்கள ஆத்துதண்ணியும் ஏமாத்திட்டு மழத்தண்ணியும் ஏமாத்திட்டு. எங்குட்டு திரும்புனாலும் வேல இல்ல. ஐநூறுவா கூலி வாங்குனா அடுத்த நிமுசம் போன எடந்தெரியல. என்னத்த சொல்ல எங்கப் பொழப்பப்பத்தி.”

ஏனுங்கக்கா அம்புட்டு செலவு செஞ்சு அப்படி என்ன ஆடம்பரமான வாழ்க்கை வாழ்றீங்க?

“ஏஞ்சொல்ல மாட்டிங்க. ஒங்களுக்கு மாசம் பொறந்தா 1 தேதி சம்பளம் வந்துரும். ஆத்துல தண்ணி வந்தா ஒங்களுக்கென்ன வரலண்ணா ஒங்களுக்கென்ன. பின்ன என்னங்க! ஒரு ஆளு கூலி மிச்சமாகாதான்னு வயக்காரவங்களும் எங்கக்கூட வேல செய்ராங்க. நீங்க சொல்றாப் போல வெவசாயத்துல மட்டும் லாபம் பாத்து பெருங்குடியா ஆக முடியாது.

இந்த வருசம் ஆத்துல தண்ணி வராம வேலையே இல்ல. வெவசாய வேல இல்லாங்காட்டி நூறு நாள் வேலைக்கி போறோம். வெறும் 60 ரூவாதேன் சம்பளம் தாராக. ஏன்னு கேட்டா வேல இல்லேங்குறாக. அதையும் விட்டுபுட்டு எங்குட்டு போறது நாங்க. வாய மூடிக்கிட்டு வேல செய்றோம். அதுலயும் 240 ரூவா இன்சூரன்சு கட்ட செல்றாக. ஏதாவது அடிபட்டு கெடந்தா தருவாகளாம். வாழும்போது இல்லாத பணம் செத்தப்பொறவு எதுக்கு?

நூறு நாள் வேலைக்கான கூலியெ பேங்குல போயித்தேன் எடுக்கனும். அதுலயும் மோடி ஒரு ஆப்பு வச்சுட்டாரு. அக்கவுண்டுல 500 கொறையாம இருக்கனுமாம். ஒரு நாளைக்கி 60 ரூபா கூலி வாங்கி பேங்குல எப்படிங்க இருப்புப்பணம் வைக்க முடியும். எல்லாரும் பேங்குல அக்கவுண்டு பன்னுங்க லட்ச கணக்குல பணம் போடப்போறேன்னாரு மோடி. இன்னைக்கி கணக்குல இருக்குற ஐநூறையும் எடுக்க முடியல. நாங்க பாக்குற வேலைக்கி பேங்கு எதுக்குங்க?

நாங்க என்ன படிச்சுட்டா உத்தியோத்துக்கு வர்ரோம். யாருக்கு என்ன திட்டம் போட்றதுன்னு தெரிய வேணாம். இப்ப பாருங்க ரேசன் அட்ட, ஆதாரு அட்ட, பேங்கு அட்ட, குழு லோனுக்காக பேனு அட்ட (பேன் கார்டு) எந்த அட்ட எதுக்கு உண்டானதுன்னு ஒரு மண்ணும் தெரியமாட்டேங்குது. வாழ வழி காட்டுய்யான்னா பேல வழி காட்டுறாரு மோடி.

களையெடுக்கும் விவசாயத் தொழிலாளிகள்,  தென்னமநாடு.

ன்னைக்கி தொழிலாளர் தினம் அதுக்காக உக்கள்ள பாத்து பேசிட்டு போகலான்னு வந்தோம், யாராவது பேசுங்கக்கா.

“தொழிலாளர் தெனமா எனக்கு தெரியும்” என்றார் ஒருவர்.

“ஏன்டி நெதமும் எங்க கூடதான் வயக்காட்டுக்கு வர்ரவ நீ எப்படி காலேசல்லாம் போயி படிச்ச?” என்றார் மற்றவர். “டிவியில புதுப் படம் போட்றாக தொழிலாளி தெனமுன்னு சொன்னத வச்சுத்தேன் சொன்னே”
“தொழிலாளர் தெனமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் எங்கள படம் புடிச்சு மோடிக்கி அனுப்பி வையிங்க. எத்தன செரமப்பட்டு விவசாயம் செய்றமுன்னு தெரிஞ்சுக்கட்டும்.

“இவ ஒருத்தி. மோடி ஊருக்கே போயி நம்ம அய்யாக்கண்ணு ஆயிரத்தெட்டு தினுசுல போராட்டம் பண்ணிப் பாத்தும் என்னான்னு கேக்காத மோடி நம்ம போட்டவ பாத்த்தும் மனசு எறங்கி நம்ம கஷ்டத்த தீத்து வெக்கப் போறாரு. அவருக்கும் நமக்கும் சம்மந்தம் இல்லன்னு நெனைக்காராரு அவரு நெனப்ப நாம நெசமாக்கிற வேண்டியதுதான்.” மற்றவர்களும் சிரித்தபடி ஆமோதித்தனர்.

கதிரு வந்த வயல்ல என்ன வேலை செய்றீங்க?

நெல்லு வயலுல புல்லு அருக்குறோம். நெல்லுக்கு சமமா புல்லும் வெளஞ்சுருக்கு. நெல்லுக்கு மேல தெரியுது பாருங்க இந்த குதுரவாலி புல்லு இத அப்புடியே வச்சு கருதறுத்தா எந்த யாவாரியும் வாங்கவே மாட்டாங்க. சோத்துக்கே ஒதவாத நெல்லு நாத்துக்கு ஒதவுமா.? ஒரு நெல்லு போட்டா பத்து புல்லு மொளைக்கும். இது அத்தனையும் அரசாங்கத்து ஆபீஸ்சுல வாங்குன வெதைங்க. எங்க அனுபவத்துல இதுபோல வேல பாத்த்தே கெடையாது. வயக்காரவுக கணக்குப் பாத்தா நட்டந்தே. அதுக்காக வெளஞ்சத விட்டுற முடியுமா?

உங்க வேலையில லீவெலாம் உண்டாக்கா?

“நீங்க எந்த ஊருலேருந்து வர்ரீங்க. வெவசாயிக்கு ஏதுங்க லீவு. நாங்க லீவு போட்டா நீங்கள்ளாம் எப்புடி சாப்புடுவிங்க. நாங்க வருசம் பூறா வேல செஞ்சாத்தான் உங்களப்போல பேனா தூக்குற ஆளுகளுக்கு சோறு. வேலை இல்லாத நாளு எங்களுக்கு லீவு. லீவுன்னா ஊர சுத்த கெளம்பிருவோன்னு நெனச்சுராதீக. வீட்டு மராமத்து வேலையே சரியாருக்கும்.

வயசான பாட்டி வேல செய்றாங்களே புல்லு எது நெல்லு எதுன்னு கண்ணுக்கு தெரியுமா?

“எங்க வேலைக்கெல்லாம் ரிட்டேர்மெண்டு கெடையாது கண்ணு. எங்கள போட்டா புடிக்க நீங்க வயல்ல எறங்க சொல்ல எத்தன மொற தடுமாறினிங்க. நீங்க சொன்ன பாட்டி இத்தன வயசாகுதே சேத்துல கால விட்டுவிட்டு புடுங்குதே எங்காச்சும் விழுந்துச்சா பாத்திங்களா. அந்தாத்தா பூச்சி மருந்து கலக்காத அந்த காலத்து கேப்ப களி தின்னு வளந்த வைரம் பாஞ்ச ஒடம்பு.

சோமு, உளுந்து செடி காயவைக்கும் விவசாயி, ஊர் பருத்திக்கோட்டை.

“எந்த விவசாயும் நிம்மதியா இல்லன்னு இந்த நாளுல பதிவு பண்ணிக்கங்க. மூனு ஏக்கரு நடவு நட்டேன், ஒரு புடி நெல்லு அறுக்கல. அத்தனையும் காஞ்சுப் போச்சு. சரி போனது போச்சுன்னு மனச தேத்திக்கிட்டு உழுது உளுந்து வெதச்சேன். 1 யூனிட்டு ஒழவு ஓட்ட டிராக்டருக்கு 100 ரூபா. 12 யூனிட்டு ஓடுச்சு. ஒரம் போட்டது பூச்சி மருந்து அடிச்சது 4000 ரூபா. அங்கொன்னும் இங்கொன்னுமா இருந்த உளுந்து பயிர புடுங்க 15 ஆளு. ஒரு ஆளுக்கு 75 ரூபா கூலி.

கணக்குப் போட்டு பாருங்க 6500 ரூபா ஆச்சா. ஈரம் இல்லாததால களையெடுக்கல இல்லாங்காட்டி அது ஒரு செலவு வந்துருக்கும். வெத உளுந்து வீட்டுலேயே இருந்தது. எனக்கு கூலின்னு எதுவும் இல்ல. உங்களால முடிஞ்சா இந்த கணக்க நோட்டிசு அடிச்சு தெரிஞ்சவங்களுக்கு வினியோகம் பன்னுங்க. விவசாயிங்க நெலமைய ஊரெல்லாம் தெரிஞ்சுக்கட்டும்.

விவசாயி அருவண்டு, ஒரத்தநாடு

“உங்கள நெனச்சா பரிதாபமா இருக்கு. ஊரே வறண்டு கெடக்கு எந்த தைரியத்துல தொழிலாளர் தினத்துக்கு விவசாயிகள வயல்லையே சந்திக்க வந்திங்கன்னு தெரியல.

அக்கம் பக்கம் எல்லா நெலமும் காஞ்சு கெடக்கு உங்க நெலம் மட்டும் பசுமையா இருக்கே எப்படி?

உயிர குடுத்து பாடுபடுறேன். எனக்கு எட்டு ஏக்கர் நெலம் இருக்கு. ஆனா நாலு ஏக்கர் நெத்துல மட்டுந்தான் வெவசாயம் பன்னிருக்கேன். அதுக்கும் தண்ணி பத்தல. மனுசனுக்கு தொண்ட காயாம உயிர் தண்ணி விடுவாங்க அதுபோல பயிரு காஞ்சு சுருண்டு வரும் போது தண்ணி விட்டு உயிரு உண்டாக்குறேன். நடுராத்திரி ஒரு மணிக்கி திரிஃபேஸ் கரண்டு வந்தாலும் அலுத்துக்காம வந்து தண்ணி பாச்சுவேன். இத விட்டா எனக்கு வேற தொழில் தெரியாது.

லீவு பொழுது போக்கல்லாம் உங்க வாழ்க்கையில உண்டா? எங்கெல்லாம் போவீங்க.?

நேரம் கெடச்சா சம்சாரத்த கூட்டிட்டு மாமியாரு வீட்டுக்கு போவேன் அவ்வளவுதான். சொந்தமா உழவு டிராக்டர் வச்சுருக்கேன். என்னோட நெலத்துக்கு ஓட்டுன நேரம் போக கூலிக்கி ஓட்ட போவேன். இளையராஜாவோட பழய பாட்ட போட்டுட்டு ஆனந்தமா ஏறு ஓட்டுவேன். அதுதான் எனக்கு புடிச்ச பொழுது போக்கு.

விவசாய தொழிலாளருக்கு அரசு நிர்ணயித்த கூலி தொகை எவ்வளவுன்னு தெரியுமா?

அதெல்லாம் நமக்கு தெரியாதுங்க. நம்ம பக்கம் குடுக்குற கூலி நாள் பூறா வேல செஞ்சா ஆம்பளைக்கு 500 பெம்பளைக்கு 300. அரசு இதுபோல சட்ட நடவடிக்கையை நமக்காகவா போடுது நிர்வாக நடைமுறையை சட்டப்பூர்வமா காட்டுரதுக்குத்தானே போடுது. அது நமக்கு ஒதவாதுங்க.

முரளி, டிராக்டர் டிரைவர், ஊர் கண்ணந்தங்குடி.

“தொழிலாளர் தினம் தெரியும் அன்னைக்கிதான் தல அஜித்துக்கு பொறந்த நாள். அம்புட்டுதான் தெரியும்.

“எனக்கு ஒரு நாள் கூலி 500 ரூபா. வேலைக்கி வந்தா பேட்டா காசு 100 தருவாங்க. பொதுவா எல்லா நாளும் வேல இருக்கும். இந்த வருசம் சொல்ல முடியாத அளவு வெவசாயம் நெடிச்சுப் போச்சு. இந்த நெலம இப்படியே போச்சுன்னா விவசாயி மட்டும் தற்கொலை பண்ணிக்க மாட்டான். குடும்பத்தோட வெசத்த குடிச்சுட்டு போக வேண்டியதுதான்.

வீராயி, குத்தகை விவசாயி, ஊர் ஒரத்தநாடு.

“இன்னைக்கி தொழிலாளர் தினம் பாட்டி அதுக்கு உங்கள பாத்து பேசிட்டு போகலான்னு வந்தோம்.”

“அம்புட்டு வெவரமெல்லாம் எனக்கு தெரியாதுங்களே. எம்மொவ(ன்) இதுவரைக்கும் எள்ளுக்காய் அறுத்துப்புட்டு இப்பதானுங்க வீட்டுக்கு போனான். நானு இந்த மாட்ட மேயவிட்டு ஓட்டிட்டு போகலான்னு நிக்கே. செத்த முன்னாடி வந்துருந்தா அவன பாத்துருக்காம்.”

எங்களுக்கு சொந்த நெலமெல்லாம் இல்லைங்க. நாங்க தோப்பு ஆளுக. குத்தகைக்குத்தே வெவசாயம் பாக்குறோம். ஒரு ஏக்கர் நெலத்துக்கு 12 மூட்ட நெல்லு தரனும். இந்த வருசம் நட்ட பயிரெல்லாம் தண்ணி இல்லாமெ பட்டுப்போச்சு. ஆனாலும் குத்தக குடுத்துத்தேன் ஆகனுனுட்டாக. நாமெ அப்புடி இப்புடி பேசுனா நெலத்த புடுங்கிபுடுவாக. எம்பையனும் அடுத்த வெள்ளாமையில பாத்துக்கலாமின்னு நெனச்சு கடன ஒடன வாங்கி குத்தகய குடுத்தான். அடுத்து எள்ளு வெதச்சோம் அதுவும் சரியில்ல. ஒவ்வொரு காய வச்சுகிட்டு ஈக்குமாறு போல நின்னுச்சு. இன்னைக்கிதான் ஒத்த ஒத்தையா அறுத்து சேத்தோம். வெதச்ச கூலிக்கு கண்டாலே சந்தோசந்தேன்.

– நேர்காணல், புகைப்படங்கள்: வினவு செய்தியாளர்கள்

இந்தித் திணிப்பு : பிரிவினைவாதி மோடி !

1

மைய அரசின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக இருந்துவரும் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, இந்தியை ஒற்றை ஆட்சிமொழியாகக் கொண்டுவருவது; தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களின் நிர்வாகம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய ஆதாரமான துறைகளில் இந்தி ஆதிக்கத்தைத் திணிப்பது எனும் நோக்கில் தயாரிக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளுக்கு அரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, அவற்றை நாடாளுமன்றம் உள்ளிட்டு மைய அரசின் துறைகளுக்கும், மாநில அரசுகளுக்கும் மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைத்திருக்கிறது, மோடி அரசு.

1950-இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் சாசனம், அடுத்த பதினைந்து ஆண்டுகளில் (1965-இல்) ஆங்கிலத்தை அலுவல் மொழியாகப் பயன்படுத்துவதை அகற்றிவிட்டு, இந்தியை மட்டும் அலுவல் மொழியாக்கப் பரிந்துரைத்தது. இந்த அடிப்படையில் அன்றிருந்த நேரு அரசாங்கம் இந்தியை மைய அரசின் ஒரே அலுவல் மொழியாக அறிவிக்க முயன்றதையடுத்துதான், தமிழகத்தில் மொழிப் போராட்டம் வெடித்தது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களும் நேரு அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்தன. மொழிப் போரில் தமிழக இளைஞர்களும் மாணவர்களும் செய்த தியாகத்தின் விளைவாகத்தான், “இந்தி பேசாத மாநிலங்கள் இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றும்வரை, இந்தியோடு, ஆங்கிலமும் மைய அரசின் அலுவல் மொழியாகத் தொடரும்” என்ற திருத்தம் இந்திய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டது.

இத்திருத்தம் கொண்டுவரப்பட்ட நாள் தொடங்கியே அதனைச் சிறுகச்சிறுகக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிகளை மைய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்காகவே, மைய அரசின் அலுவல் மொழி தொடர்பான சட்டத்தின்கீழ் இந்தியை ஊக்குவிப்பதற்கான நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டு, அக்குழு பல்வேறு பரிந்துரைகளை ஒன்றன்பின் ஒன்றாக அளித்து வருகிறது. இப்பொழுது அரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிருக்கும் பரிந்துரைகள், அக்கமிட்டி அளித்திருக்கும் ஒன்பதாவது அறிக்கையாகும்.

தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தித் திணிப்பு.

இந்தியைத் திணிப்பதில் காங்கிரசு எட்டடி பாய்ந்தால், பா.ஜ.க. பதினாறு அடி பாயும். மேலும், இந்து மதவெறிக் கும்பலுக்கு நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பான்மை பலம் இருப்பதால், இந்தியைத் திணிக்கும் கயமைத்தனங்களைப் பதவியேற்றவுடனே தொடங்கிவிட்டது மோடி அரசு. மைய அரசு அதிகாரிகள் தமது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும், மைய அரசின் கோப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி, இந்தியிலும் தயாரிக்கப்பட வேண்டும் என அடுத்தடுத்து உத்தரவுகளை இட்ட பா.ஜ.க. அரசு, மைய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் இந்திப் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான கமிட்டிகளை அமைத்தது. தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியைத் திணித்த மோடி அரசு, அதற்கு எதிரான எதிர்வினைகள் அடங்கும் முன்பே, நாடு தழுவிய அளவில் இந்தியை மென்மேலும் வலுக்கட்டாயமாகத் திணிப்பது தொடர்பான 110 பரிந்துரைகளை வெளியிட்டிருக்கிறது.

  • இந்தி மொழியைப் பாடத் திட்டங்களில் கட்டாயமாக்குவது தொடர்பாக மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் முதல்கட்டமாக, மைய அரசு பாட வாரியத்தின்கீழ் இயங்கும் (சி.பி.எஸ்.இ.) பள்ளிகள் மற்றும் மைய அரசு நேரடியாக நடத்திவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அனைத்திலும் பத்தாம் வகுப்பு முடிய இந்தி மொழி பயிலுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.

  • அனைத்திந்திய அளவில் இந்தியைக் கட்டாய மொழிப்பாடம் ஆக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திட்டங்கள் வைக்கப்பட வேண்டும்.

  • மாநில அரசுகள் நடத்தும் பள்ளிகளில் இந்தியைக் கட்டாய மொழிப் பாடமாக்குவது தொடர்பாக மாநில அரசுகளோடு மைய அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும்.

  • பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தி வழி வகுப்புகளைத் தொடங்குவதற்கான செயல் திட்டத்தை வகுப்பதோடு, அதற்கேற்ப நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

  • இந்தி பேசாத மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியில் தேர்வு எழுதவும், நேர்முகத் தேர்வுகளை நடத்தவும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

  • மைய அரசு நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்களில் ஐம்பது சதவீதம் இந்தி மொழியிலும் மீதமுள்ள 50 சதவீதம் ஆங்கிலம் அல்லது பிராந்திய மொழிகளிலும் இருக்க வேண்டும்.

  • இந்தி மொழி விளம்பரங்களை செய்தித் தாள்களின் முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும், ஆங்கில மொழி விளம்பரங்களை உட்பக்கங்களில் வெளியிட வேண்டும்.

  • குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள் ஆகியோர் இந்தி மொழியைப் படிக்கவும், பேசவும் அறிந்திருக்கும் பட்சத்தில், அவர்கள் இந்தி மொழியில் மட்டுமே பேசவும், இந்தி மொழியில் மட்டுமே அறிக்கைகளை வெளியிடவும் வேண்டும்.

இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழக மாணவர்களும் இளைஞர்களும் நடத்திய மொழிப் போர். (கோப்புப் படம்)

இவை தவிர, மைய அரசின் ரயில்வே துறை, விமான போக்குவரத்துத் துறை, வெளியுறவுத் துறை ஆகியவற்றில் இந்திப் பயன்படுத்தப்படுவதை அதிகரிப்பதற்குப் பல பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த 117 பரிந்துரைகளுள் 110 பரிந்துரைகளுக்கு அரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்திருக்கிறார். மீதமுள்ள ஏழு பரிந்துரைகள் அவராலேயே நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்றால், அவை எத்துணை கொடூர இந்தி ஆதிக்கச் சிந்தனையைக் கொண்டிருக்கும்?

நிராகரிக்கப்பட்ட பரிந்துரைகளுள் ஒன்று, நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தை ஒழித்துக் கட்டும் நோக்கத்தைச் சதித்தனமான முறையில் முன்வைக்கிறது. மற்றொன்று, நாடெங்கும் இந்தி வழி கல்விக்கூடங்கள் தொடங்கப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கில் பிராந்திய மொழிகளுக்கோ, இந்திக்கோ முன்னுரிமை அளிக்காத ஆங்கில வழி பள்ளிக்கூடங்களுக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாது என்கிறது. வேறொன்று, இந்தி மொழியைப் பயன்படுத்தாக மைய அரசு ஊழியர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறது.

தமிழைப் பயிற்று மொழியாக, ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாகக் கொண்டுவர வேண்டும், அதற்கான அங்கீகாரம் தமிழுக்கு அளிக்கப்பட வேண்டும் எனத் தமிழகத்தில் கோரிக்கைகளும், அதற்கான போராட்டங்களும் நடந்துவரும் நிலையில், அதனையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல், தமிழை இரண்டாம், மூன்றாம் நிலைக்குத் தள்ளக்கூடிய இப்பரிந்துரைகளைத் தமிழகத்தின் மீது திணித்துவிட முயற்சிக்கிறது, மோடி அரசு. தமிழகத்தின் பள்ளிக் கல்வியில் தமிழ் மொழி ஏற்கெனவே இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், தமிழை ஒரு மொழிப் பாடமாகக்கூடப் படிக்காமல் உயர் கல்வியை முடித்துவிடக் கூடிய அவலமான நிலை தமிழகத்தில் நிலவிவரும் நிலையில், மோடி அரசு அளித்துள்ள பரிந்துரைகள் எதிர்காலத்தில் தமிழுக்குப் பெருங்கேட்டினையே ஏற்படுத்தும்.

தமிழை, சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாக அங்கீகரிக்கக் கோரி உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகத்தினுள் நடத்திய போராட்டம். (கோப்புப் படம்)

எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்கும் தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும் நீட் தேர்வு, முதுகலை மருத்துவப் பட்டப் படிப்பில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த இட ஒதுக்கீடு ரத்து, ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்துவதன் மூலம் விற்பனை வரியை விதிக்கவும், வசூலிக்கவும் இதுகாறும் தமிழக அரசிற்கு இருந்துவந்த உரிமை பறிப்பு, ரேஷன் கடையில் அரிசி, பருப்பு வழங்குவதற்குக்கூட மைய அரசின் அனுமதி தேவை என்ற இழிநிலை – இப்படித் தமிழக அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டுவரும் வேளையில், தமிழக மக்களை இரண்டாம்தர குடிமக்களாக, தமிழை இந்தி ஆதிக்கத்திற்கு அடிபணிந்து கிடக்கும் குற்றேவல் மொழியாக மாற்றும் தீய நோக்கத்தோடு இந்தி-இந்துவெறி பிடித்த மோடி அரசு இப்பரிந்துரைகளைத் தமிழகத்தின் மீது சுமத்தியிருக்கிறது.

தமிழ், தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்தி பேசாத மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா, பஞ்சாப், மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களை, பெரும்பான்மையான மக்களை, அம்மக்களின் தாய்மொழிகளை இரண்டாம்தர நிலைக்குத் தள்ளும் அபாயகரமான சதித் திட்டம்தான் இப்பரிந்துரைகள். ஒரே தேசம், ஒரே பண்பாடு, ஒரே சந்தை என்ற இந்து மதவெறிக் கும்பலின் பேராசையின் நீட்சியாகத்தான் இந்தியை முதன்மைப்படுத்தும் இப்பரிந்துரைகள் கொண்டுவரப்படுகின்றன.

நாடு தழுவிய அளவில் இந்தியைத் திணிக்கும் இப்பரிந்துரைகள், தி.மு.க.வும் பங்கு பெற்றிருந்த காங்கிரசு கூட்டணி ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டன. அதனைக் காரணமாகக் காட்டி, வேறு வழியில்லாமல்தான் இப்பரிந்துரைகளை மோடி அரசு நடைமுறைப்படுத்துவதாகக் கூறித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது, இந்து மதவெறிக் கும்பல். இந்த வாதம் மிகப்பெரிய மோசடி, பார்ப்பனக் களவாணித்தனத்தின் வெளிப்பாடு.

காங்கிரசு இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் எனத் தேர்தலுக்குத் தேர்தல் முழக்கமிடும் மோடி, முந்தைய காங்கிரசு அரசால் உருவாக்கப்பட்ட இப்பரிந்துரைகளைக் கைவிட மறுப்பதேன்? திட்டக் கமிசன் உள்ளிட்டு காங்கிரசால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களை, திட்டங்களைக் கைகழுவிவரும் மோடி அரசு, காங்கிரசால் உருவாக்கப்பட்ட இப்பரிந்துரைகளை, மன்மோகன் சிங் அரசுகூட நடைமுறைப்படுத்த்த் துணியாத இப்பரிந்துரைகளை நிறைவேற்றத் துடிப்பதேன்?

மொழிப் போர் தியாகிகளை நினைவுகூர்ந்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் மக்களை கலை இலக்கியக் கழகமும் இணைந்து சென்னையில் நடத்திய பேரணி. (கோப்புப் படம்)

காரணம், அனைவரும் அறிந்ததுதான். நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அதன் புத்தி போகாது என்பார்களே, அதுபோலத்தான் பா.ஜ.க.வும். மாநில உணர்வுகளை மதிக்கத் தெரிந்தவர் மோடி என அதன் சுயதம்பட்டமெல்லாம் மோசடியானது. உச்சி முதல் உள்ளங்கால் வரை இந்து-இந்தி, ஆரிய பார்ப்பன மேலாதிக்கம், சமஸ்கிருத வெறி கொண்டதுதான் அக்கட்சி. ஆட்சியைப் பிடித்தவுடன், ஆசிரியர் தினத்தை “குரு உத்ஸ்வ்’’ என சமஸ்கிருத மொழியில் மாற்றியது ஒன்றே அக்கட்சியின் ஆரிய பார்ப்பன வெறியை அம்பலப்படுத்திவிட்டது.

பல்வேறு தேசிய இனங்கள், மதச் சிறுபான்மையினர், பல்வேறு மொழிகள், பண்பாடு எனப் பன்முகம் கொண்டிருக்கும் இந்திய நாட்டை, இந்து-இந்தி-இந்தியா என்ற அடிப்படையில் ஒற்றைத் தேசமாக வலுக்கட்டாயமாக மாற்றியமைப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிஸ்டுகளின் இலட்சியம். அந்த அடிப்படையில்தான், பசுவதைச் சட்டத்தை நாடெங்கும் கொண்டுவர வேண்டுமெனத் துடிக்கிறார்கள். சமஸ்கிருதமயமான இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக மட்டுமல்ல, தேசிய மொழியாகவும் அறிவித்துவிட முயலுகிறார்கள். நாடெங்கும் ஒரே சமயத்தில் ஒரே தேர்தல் என்ற மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறார்கள். அரசியல் சாசனச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின்கீழ் காஷ்மீருக்கு  அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு உரிமையை மட்டுமல்ல, மாநில அரசுகளுக்கு கல்வி, சுகாதாரம், பொது விநியோகம், வரி வசூலிப்பு உள்ளிட்ட துறைகளில் அளிக்கப்பட்டிருக்கும் உரிமைகளையும் பறித்து, இந்திய யூனியன் என்பதைச் சட்டபூர்வமாகவே அழித்து, இந்தியாவில் ஒற்றையாட்சி முறையை ஏற்படுத்திவிடவும் திட்டமிடுகிறார்கள்.

இப்பார்ப்பன பாசிச நோக்கங்களை நிறைவேற்றுவதில் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே உள்ள வேறுபாடு, விஷத்தைப் பாலில் கலந்து நைச்சியமாகக் கொடுப்பதா, அல்லது நேரடியாக வாயில் ஊற்றுவதா என்பதுதான். மேலும், இந்தியாவை ஆரிய பார்ப்பன தேசமாக உருவாக்குவது இந்த தேசியக் கட்சிகளின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல, இந்திய அரசியல் சாசனச் சட்டமே இந்து-இந்தி-இந்தியாவை உருவாக்குவதை இலட்சியமாகக் கொண்டிருக்கிறது. பசுவதைச் சட்டத்தைக் கொண்டுவருவது, இந்தியை ஆட்சி மொழியாகத் திணிப்பது, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைப் பறிப்பது, கோயில் கருவறையில் சூத்திரச் சாதியினர் நுழைவதைத் தடை செய்வது – என பார்ப்பன பாசிஸ்டுகளின் நோக்கத்தை, மேலாதிக்கத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டுதான் இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

“வேற்றுமையில் ஒற்றுமை”யாக இருந்துவரும் இந்தியாவை உடைக்க “பிரிவினைவாதிகள்”, “பாக். கைக்கூலி”களெல்லாம் தேவையில்லை. அந்த வேலையை மோடி அண்ட் கம்பெனியே சுறுசுறுப்பாகச் செய்து வருகிறது. தமது இந்து-இந்தி-இந்தியா திட்டத்தின் மூலம், அரசியல் சாசனத்தின் துணையோடு!

-குப்பன் 

புதிய ஜனநாயகம், மே 2017

பாலஸ்தீன் நாக்பா பேரணி : நாங்கள் மீண்டும் வருவோம்

1

டந்த 2017, மே 15-ம் தேதி 69 வது நாக்பா அல்லது பேரழிவு நாளை பாலஸ்தீன மக்கள் நினைவு கூர்ந்தனர். 1948 ஆம் ஆண்டு இசுரேல்  நாட்டை உருவாக்குவதற்காக 7,50,000 பாலஸ்தீனிய மக்கள் அவர்களது சொந்த மண்ணை விட்டு துரத்தப்பட்டு அகதிகளாக்கப்பட்டனர். 1947 மற்றும் 1949 ஆண்டுகளுக்கிடையில் பாலஸ்தீனர்களின் 500 கிராமங்கள் மற்றும் நகரங்கள் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் உலகம் முழுவதும் இருந்து யூதர்கள் குடியமர்த்தப்பட்டார்கள். உரிமைகள் பறிக்கப்பட்ட இந்த நாளையே நாக்பா அல்லது பேரழிவு என்ற பெயரில் ஆண்டுதோறும் மே மாதம் 15-ம் நாளில் பாலஸ்தீனியர்கள் நினைவு கூர்கிறார்கள்.

இசுரேல் உருவாக்கப்பட்ட ஏழு பத்தாண்டுகளுக்குப் பின்னர் அகதிகளாக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தையும் தாண்டி விட்டது. 1948 ஆம் ஆண்டிலிருந்து இலட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் அகதிகள் முகாம்களில் தான் வசிக்கின்றனர். உள்நாட்டு அகதிகள் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் (ADRID) புள்ளிவிவரங்கள் படி ஐந்து பாலஸ்தீனியர்களில் ஒருவர் அகதியாக இருக்கிறார்.  இந்த பிரச்சினையை சட்டவழியில் தீர்ப்பதற்குத் தேவையான ஆவணங்களை இசுரேல் குழி தோண்டி புதைத்து விட்டது. “ஐக்கிய நாடுகளின் சபையின் தீர்மானத்திற்கு விரோதமாக பாலஸ்தீனர்களை அவர்களது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் இசுரேல் தடுத்து வருகிறது. என்னைப்பொறுத்த வரையில் ஆக்கிரமிப்பில் தான் பிறந்தேன். ஆக்கிரமிப்பிற்கு இடையே தான் நான வளர்ந்தேன். என்னுடைய ஒவ்வொரு நாளும் ஆக்கிரமிப்பினுள் தான் கழிகிறது” என்று பாலஸ்தீன பத்திரிக்கையாளர் எலியியா கோர்பியா கூறுகிறார்.  “சட்டவிரோத இசுரேலிய குடியிருப்புகள் அதிகரித்து விட்டன. புதிய குடியிருப்புகளுக்காக இடங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சிறையில் இருக்கும் பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது” என்கிறார்.

இசுரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடுபவர்கள் ஒன்று பாசில் அல்-அராஜை போல படுகொலை செய்யப்படுகிறார்கள் அல்லது இசுரேலிய சிறையில் அவர்கள் தம் வாழ்க்கையைத் தொலைக்க வேண்டியிருக்கும். இசுரேலின் அதிகாரத்திற்கு அடிபணியாதீர்கள் என்று நாக்பா நினைவு நாளில் பாலஸ்தீனிய மக்களை வலியுறுத்தியிருப்பதுடன் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் பாலஸ்தீனிய அரசியல் கைதிகள் 1500 பேர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்ணாவிரதப் போராட்டக்காரர்களில் ஒருவரான மஜ்த் ஸைடேஹ் கடந்த 2002 ஆண்டில் அரசியல் கைதியாக சிறை பிடிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 18. “நான் இந்த ஆக்கிரமிப்பிற்கு எதிரானவன். நான் ஆக்கிரமிப்பை வெறுக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் யூதர்களுக்கும் ஆக்கிரமிப்பிற்கு இடையே ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது…. நான் நீதிமன்றத்தை அங்கீகரிக்கவில்லை. எனக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் என்னை அது பெருமைபடுத்துவதாகவே இருக்கும்” என்று நீதிமன்றத்தில் தான் கூறியவற்றை நினைவு கூறுகிறார் மஜ்த். நீதிமன்றத்தில் அவர் பேசிய இந்த வார்த்தைகளால் அவரின் மேல் முறையீட்டு விண்ணப்பத்தை நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டனர்.

“எனது மகனும் மற்ற அரசியல் கைதிகளும் விடுதலைக்காக மட்டுமே போராடுகிறார்கள். மற்ற எல்லோரையும் போல தான் நாங்களும். எங்களுக்கும் தாய்மார்கள் இருக்கிறார்கள். எங்கள் கண்களிலும் நிறம் இருக்கிறது. நாங்களும் நேசிக்கிறோம். ஆனால் மற்றவர்களுக்கு போல் எங்களுக்கு தாய் நாடு என்று ஒன்றில்லை” என்று மஜ்தின் தந்தை மஹ்மூத் ஸைடேஹ் கூறுகிறார்.

“பாலஸ்தீனத்திற்கு நாங்கள் திரும்ப வருகிறோம்” என்று அரபு மொழியில் பொறிக்கப்பட்ட ஒரு சாவி சின்னத்தை பாலஸ்தீனியர்கள் எடுத்து வருகின்றனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை நகரான ரமல்லாஹில் 69 ஆவது நாக்பா நினைவு நாளை நினைவு கூர்ந்து திரண்ட பேரணி ஒன்றில் பாலஸ்தீனக் கொடியையும் பதாகைகளையும் எடுத்துச் செல்கின்றனர் போராட்டக்காரர்கள்.

நாக்பா நினைவு நாளை அரங்கேற்றுவதற்காகத் திரண்ட பாலஸ்தீன மக்கள் கூட்டமொன்றில் தன்னுடைய பழைய குடும்ப வீட்டிற்கான சாவியை கையில் பிடித்திருக்கிறார் பாலஸ்தீன பெண்மணி ஒருவர்.

இசுரேலை உள்ளடக்கிய பழைமையான பாலஸ்தீனம், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை மற்றும் காசாவைச் சேர்ந்த மக்கள் திங்கள்கிழமை அன்று பேரணிகள், கூட்டங்கள் மற்றும் மெழுகுவர்த்தி ஊர்வலங்களை நடத்தினர்.

இசுரேல் தன்னுடைய விடுதலைப் பிரகடனத்தை 1948 ஆம் ஆண்டு வெளியிட்டதற்கு இடையில் நாக்பா அல்லது பேரழிவு நிகழ்ந்தது.

நாக்பா நாள் பேரணி ஒன்றில் பாலஸ்தீன முதன்மை அமைச்சர் ரமி ஹம்தல்லாக் கலந்து கொண்டார்.

திங்கள்கிழமை – நாக்பா நினைவு நாள் மட்டுமல்ல இசுரேலிய சிறைகளில் இருக்கும் பாலஸ்தீனிய அரசியல் கைதிகள் 1500 பேர் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தின் 29 ஆவது நாளும் ஆகும்.

யூத குடியேற்றமான பெய்ட் எல்லுக்கு அருகே ஒருப் போராட்டத்தில் இசுரேலியப் படைகளுடன் நடக்கும் மோதல்களுக்கு நடுவில் ஒரு பெண் போராட்டக்காரர் .

ஆக்கிரமிப்பு மேற்குக்கரை நகரமான பெத்லஹேமில் நடந்த மோதல்களில் இசுரேலியப் படையினரால் வீசப்பட்டக் கண்ணீர் புகை குண்டுகளில் இருந்துத் தப்ப மறைவிடத்தை நோக்கி ஓடுகின்றனர் பாலஸ்தீனப் பள்ளி மாணவிகள்.

பெத்லஹேமில் நடைபெற்ற 69 வது நாக்பா நினைவு நாளில் நடந்த போராட்டம் ஒன்றில் ஏற்பட்ட மோதல்களில் இசுரேலியப் படைகளை நோக்கி பாலஸ்தீனியர் ஒருவர் கற்களை எறிகிறார்.

நன்றி : அல்ஜசீரா
தமிழாக்கம்: சுந்தரம்

ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?

1

மார்க்ஸ் பிறந்தார் – 3

(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

1. “கிளர்ச்சியற்ற மந்த நிலைமையின்” விலங்குகளில்

ஆ) ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?

க்காலத்திய பிரஷ்ய அற்பவாதி கட்டுப்பாட்டின் மீது மோகம் கொண்டிருந்தார். மாட்சிமை பொருந்திய சக்கரவர்த்தியின் மாடிவீடுகளில் – இராணுவ ரீதி, ஆன்மீக ரீதி ஆகிய இரண்டிலுமே- பயிற்சி பெற்ற அற்பவாதி பிரம்பின் மூலம் ஏற்படும் கட்டுப்பாட்டை உடனே ஏற்றுக் கொண்டார். உலகமே அதைப் பொறுத்திருக்கிறது என்று மனப்பூர்வமாக நம்பினும் பிரம்பின் மீது உண்மையிலேயே நாயைப் போன்ற பிரியம் அவருக்கு ஏற்பட்டிருந்தது; தன்னுடைய எசமான விசுவாசத்தை நிரூபிப்பதற்காக அதன் மீது கை வைத்த நபருடைய குரல்வளையைக் கடிப்பதற்குத் தயாராக இருந்தார். அவரே பிரம்பின் பாத்திரத்தை மனமுவந்து நிறைவேற்றினர். “கலவரம் செய்பவர்களைத்” தண்டித்தார்.

அற்பவாதி தன்னுடைய சொந்தப் புனிதத் தன்மை, தன்னுடைய நடத்தையின் குறை சொல்ல முடியாத ஒழுக்கத்தில் மிகவும் போதையடைந்திருப்பதால் எல்லோருக்கும் ‘ஒழுக்கத்தைப் போதிப்பது’ எல்லோரையும் சரியான பாதையில் இட்டுச் செல்வது தன்னுடைய புனிதமான கடமை என்று கருதுகிறார், ஒரு நபர் வசதியாக வாழ்க்கை நடத்த உதவி செய்யாத எப்பொருளைப் பற்றியும் அறியாதிருப்பது உயர்வுடையது என்று கருதுகிறார். அப்படியே அவர் தன்னுடைய சொந்த அறிவின்மையை மிகவும் உயர்வுடைய நற்பண்பு என்று அகம்பாவமான முறையில் பாராட்டுகிறார்.

இப்படிப்பட்ட ஒரு நபரை மார்க்ஸ் பின்வருமாறு வர்ணிக்கிறார்; நேற்று கிரைஃப்ஸ்வால்டிலிருந்து ஹாஸ்லே வந்தார். அவரைப் பொறுத்தமட்டில் கிராம மதகுருவைப் போல அவர் அணிந்திருக்கும் பெரிய பூட்ஸ்கள் நான் எப்பொழுதும் வியப்படைய செய்யும் ஒரே விஷயமாகும். அவர் கிராம மதகுருவின் பூட்ஸ்களைப் போலவே பேசினார், அவருக்கு எந்த விஷயத்தைப் பற்றியும் ஒன்றுமே தெரியவில்லை. அவர் களைப்புத் தருகின்ற கன்டெர்பெரி அன் ஸெல்மைப் பற்றி சில தொகுதிகளடங்கிய ஒரு நூலை வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார், அவர் பத்து வருடங்களாக இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார், இன்றுள்ள விமர்சனப் போக்கைத் தூக்கியெறிய வேண்டும் என்று நினைக்கிறார், மத உணர்வு என்பது வாழ்க்கை அனுபவத்தின் வெளியீடு என்று கருதுகிறார், அப்படிக் கூறும் பொழுது ஒரு வேளை குழந்தைகளை வெற்றிகரமாக வளர்ப்பதை மற்றும் அவருடைய பருத்த தொந்தியைக் குறிப்பிடுகிறார் போலும்; ஏனென்றால் பருத்த தொந்திகள் பலவிதமான அனுபவங்களுக்கு ஆளாகின்றன; கான்ட் சொல்வதைப் போல அது கீழே போனால் நயமற்ற செயல் ஆகிறது, அது மேலே போனால் மத ரீதியான அகத் தூண்டுதலாகிறது. மத மலச்சிக்கலைக் கொண்ட இந்த சமயவாதி ஹாஸ்ஸே என்ன மனிதர்!”(1)

காண்ட்

ஹாஸ்ஸே ரகத்தைச் சேர்ந்த அற்பவாதிகள் ஆர்ப்பாட்டமான சொற்பொழிவுகள் செய்வதை மிகவும் விரும்புகிறார்கள்; அவர்களுடைய இழிவான, வரையறுக்கப்பட்ட தேவைகளின் உலகத்தைத் ‘தலை மற்றும் இதயத்தின்’ தேவைகள் என்று கவனத்தைத் திருப்புவதற்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் போராட்டக்காரர்களைப் போல நடிப்பதையும் விரும்பாதவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் எப்பொழுதுமே “மரணமடையும் வரை’ போராடுபவர்களல்ல, ஆனால் வயிற்றுக்காகப்’ போராடுபவர்கள்.

அவர்களுடைய நட்சத்திரக் கனவுச் சிந்தனையின் ஒழுக்கங்கெட்ட தன்மையை உண்மையைத் தேடுகின்ற புத்தார்வக் கற்பனையான முயற்சி என்று ஏமாற்றுகின்ற பொழுது அவர்கள் சிந்தனையாளர்களைப் போல நடிக்க முயற்சிக்கின்றார்கள்; ஆனால் சாதாரணமாக “தெய்வச் செயல்’ என்பதற்கு மேல் அவர்களால் போக முடியவில்லை. அலுப்புத் தருகின்ற, சிறுதரமான செய்திகளிலும் “ஆன்மீக அறிவுரைகளைக்’ கொண்ட வீண் பேச்சுக்களிலும் தங்களுடைய அறிவு மந்தத்தை நயப்படுத்துகிறார்கள்.

ஆங்கில அறவியல்வாதியான ஜெரிமி பெந்தாம் (1748-1832) “அற்பவாதிகளின் தந்தை’’ என்று மார்க்ஸ் பெயரிட்டார். அவர் 19ம் நூற்றாண்டின் முதலாளி வர்க்க அறிவின் நிதானமான ஏட்டுப் புலமையும் தொணதொணக்கும் அசிரீரி போன்றவர், “முதலாளி வர்க்க முட்டாள்தனத்தின் மேதை”(2). தன்னுடைய சொந்த ஆணவ முன்னேற்றத்தை சமூகத்தில் “உபயோகமாகவுள்ள” அனைத்துக்கும் அளவுகோலாகக் கருதுகின்ற அற்பவாதியை முன்மாதிரியான மனிதன் என்று பெந்தாம் “வெகுளித்தனமான அறிவு மந்தத்தில்” பிரகடனம் செய்தார்.

‘கவிஞர்கள் மத்தியில் மார்ட்டின் டப்பருடைய இடத்தைத் தத்துவஞானிகள் மத்தியில் பெந்தாம் கொண்டிருக்கிறார்'(3) என்று மார்க்ஸ் மூலதனத்தில் எழுதினார். சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்தின் அற்பவாத வட்டாரங்களில் மார்ட்டின் டப்பர் அதிகமான செல்வாக்குப் பெற்றிருந்தார். அவருடைய கவிதையின் ஆர்ப்பாட்டமான கொச்சைத் தனமும் போலியான ஆழமும் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தன. மார்க்சின் புதல்வியர் மார்க்சிடம் 1865இல் சில வினாக்களுக்கு விடைகளே ஒப்புதல்களில் பதிவு செய்தார்கள். “நீங்கள் வெறுப்பது என்ன” என்று கேட்கப்பட்ட பொழுது “மார்ட்டின் டப்பர்”(4) என்று மார்க்ஸ் பதிலளித்தார். மார்க்சின் வாழ்க்கை முழுவதும் கூலி எழுத்தாளர்கள், திருட்டுத்தனமான அரசியல் சதிகாரர்கள், திறமையற்ற வாய்வீச்சுக்காரர்களைக் கொண்ட பெரும்கூட்டம் அவரை ஈவிரக்கமற்ற முறையில் சித்திரவதைச் செய்தது. அக்கூட்டத்திலிருந்து மார்க்ஸ் ஒரே ஒரு நபரை, தன்னுடன் தனிப்பட்ட முறையில் எத்தகைய சம்பந்தமும் இல்லாத ஒரு நபரின் பெயரைச் சிறிதும் குறிதவறாமல் மார்க்ஸ் தேர்ந்தெடுத்தார். அற்பவாதியின் கீழ்த்தரமான ஆசைகளுக்குத் தீனி போடுகின்ற மலிவான வெற்றியின், இலக்கிய ரீதியான அற்பவாதத்தின் உருவகம் என்று மார்ட்டின் டப்பரைப் பற்றி மார்க்ஸ் கருதினார்.

மார்ட்டின் டப்பர்

அத்தகைய அற்பவாதத் ‘தத்துவாசிரியர்’ “மேன்மையான, புனேவியலான, இலட்சிய வடிவமான” அனைத்தையும் வழிபாடு செய்கிறார், ‘கொச்சையான பொருள்முதல்வாதத்தை வெறுக்கிறார். பொருள்முதல்வாதம் என்ற சொல் பெருந்தீனி, மதுமயக்கம், காமவெறி, உடலின்பங்கள், ஆணவம், தன்னலம், கருமித்தனம், பேராசை, லாபவேட்டை, பங்குச் சந்தை மோசடிகளை – சுருக்கமாகச் சொல்வதென்றால் அவர் இரகசியமாக ஈடுபடுகின்ற இழிவான தீச்செயல்கள் அனைத்தையுமே குறிப்பதாக அற்பவாதி புரிந்து கொள்கிறார். “கருத்து முதல்வாதம்’’ என்ற சொல் நல்லனவற்றில் நம்பிக்கை, எல்லோருக்கும் பரோபகாரம், பொதுவான முறையில் “அதிகச் சிறப்பான உலகத்தில்’’ நம்பிக்கையைக் குறிப்பதாக அவர் புரிந்து கொண்டார். “அதிகச் சிறப்பான உலகத்தைப் பற்றி அவர் மற்றவர்களுக்கு முன்னால் செருக்காகப் பேசினாலும் அவர் கஷ்டப்படுகின்ற பொழுது அல்லது அவருக்கு வழக்கமான “பொருள்முதல்வாத” மிகைப் பழக்கங்களால் அவர் ஒட்டாண்டியாகிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் மட்டுமே அவர் அதன் மீது நம்பிக்கை வைக்கிறார், அப்பொழுது அவர் தனக்கு மிகவும் பிடித்தமான பாட்டைப் பாடுகிறார் ‘மனிதன் என்பவன் யார்?-பாதி மிருகம், பாதி தேவதை’ “(5) .

அற்பவாதியின் இந்தப் பாடலே மனத்தில் கொண்டுதான் ஹென்ரிஹ் ஹேய்னெ பின்வரும் கவிதையை எழுதியிருப்பாரோ?

நான் கெட்டவனல்ல, நல்லவனுமல்ல;
என்னிடம் வேகமில்லை, கணக்கமுமில்லை.
நான் நேற்று முன்னே சென்றால்,
நான் இன்று பின்னால் செல்வேன்.
ஒளி மிக்க மதவாதி நான்
பெண்குதிரையல்ல, ஆண்குதிரையுமல்ல;
ஸோஃபோக்ளிஸ், சாட்டை இருவருமே
என்னுடைய எழுச்சியின் ஊற்றுக்கள்.”(6)

“ஸோஃபோக்ளிசையும் சாட்டையையும்” தீவிரமாக நேசிக்கின்ற இவர்கள் மிகவும் உணர்ச்சிக் கனிவானவர்கள்! ‘பாட்டாளியை அருவருப்பான, கெட்டுப்போன கீழ்மகன் என்பதற்கு மாறாக வேறு எவ்விதத்திலும் பார்க்காத அதே அற்பவாதக் கொச்சைத்தனம், 1848 ஜூன் மாதத்தில் பாரிசில் நடைபெற்ற படு கொலைகளே – அவற்றில் மூவாயிரத்துக்கும் அதிகமான இந்தக் கீழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் – பற்றி திருப்தியுடன் கைகளைத் தேய்த்துக் கொள்வது, மிருகங்களை இரக்கமில்லாமல் நடத்துவதைத் தடுக்கின்ற உணர்ச்சிப் பசப்பான சங்கங்களைக் கேலி செய்வதைப் பற்றி ஆவேசமடைகின்ற அதே அற்பவாதக் கொச்சைத்தனம்”.(7) அற்பவாதத்துக்குப் பல முகங்கள் உண்டு என்பது உண்மையே. அது நயமான, பண்படுத்தப்பட்ட வடிவங்களை மேற்கொள்வதும் உண்டு; அப்பொழுது அதைச் சுலபமாக அடையாளங் காண முடியாது. அது நவீன ஒப்பனையைப் பின்பற்றி ஒவ்வொரு புதிய யுகத்திலும் தன்னுடைய உடையலங்காரத்தை மாற்றிக் கொள்கிறது.

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜெர்மானிய சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் அற்பவாதம் உறுதியாக இடம்பெற்றிருந்தது. விஞ்ஞானம், கவிதை, அரசியலை அது கெடுத்திருந்தது.

ஆனால் அற்பவாத ஜெர்மனி மொத்த ஜெர்மனி அல்ல என்பது உண்மையே; பிறந்து கொண்டிருந்த பாட்டாளி வர்க்கத்தின், “போலித் தந்தையர் நாட்டின் மீது சாபத்தை’ (ஹேய்னெ) நெய்து கொண்டிருந்த ‘சைலி ஸிய நெசவாளர்களின்” ஜெர்மனியும் இருந்தது. லேஸ்ஸிங், கேதே, கான்ட், ஃபிஹ்டே, ஹெகல் ஆகியோருடைய ஜெர்மனியும் இருந்தது. ஆனால் கேதே, ஹெகலைப் போன்ற மாபெரும் மேதைகள் தங்களுடைய காலத்துக்கு மேலே, அற்பவாதச் சதுப்புக்கு மேலே உயர்ந்து நின்றவர்கள் கூட அவ்வப்பொழுது அந்தச் சதுப்பில் சிக்கிக் கொண்டார்கள். ஆனால் “பூமியில் சொர்க்கத்தைப் படைப்பதைப்” பற்றி “புதிய பாடலைத் தொடங்கியவர்கள்’ அவர்களிடம் நம்பிக்கை வைத்தார்கள்.

ஹெகல்

1840க்களில், அதாவது சமூக நடவடிக்கைக் களத்தில் மார்க்சும் எங்கெல்சும் தோன்றிய காலத்தில் ஜெர்மனி “கிளர்ச்சியற்ற மந்த நிலைமையிலிருந்து’ வெளிவரத் தொடங்கியிருந்தது. ஜெர்மனி புரட்சியைச் சூல் கொண்டிருந்தது; ஜெர்மன் மூலச்சிறப்பான தத்துவஞானம் அதற்கு ஒரு வகையான தத்துவத் தயாரிப்பாக உதவியது.

ஹேய்னெ மிகவும் பொருத்தமாகக் கூறியதைப் போல அரசரின் தலையின் மேல் கில்லட்டின் விழுவதற்கு முன்பாக வொல்தேரினுடைய சிரிப்பு ஒலிக்க வேண்டியிருந்ததென்றல், பிரெஞ்சு சமூக உணர்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய மாண்டெஸ்கியே, ரூஸோ மற்றும் டிட்ரோவின் கருத்துக்கள் 18ம் நூற்றாண்டின் இறுதியில் அந்த நாட்டில் நடைபெற்ற அரசியல் புரட்சிக்கு முன்னர் வந்தன என்றால் அதே முறையில் கேதேயின் இருளடர்ந்த மெஃபிஸ்டோபிலியச் சிரிப்பும் கான்ட் ஹெகல் ஆகியோருடைய செறிவு மிக்க தத்துவக் கட்டுமானங்களும் ஜெர்மனியில் புரட்சி ஏற்படப் போகிறது என்று உலகத்துக்குப் பிரகடனம் செய்தன.

கான்ட்டின் தத்துவஞானம் ஒரு பக்கத்தில் பிரெஞ்சுப் புரட்சியின் கருத்துக்களிலும் மறு பக்கத்தில் அக்காலத்திய இயற்கை விஞ்ஞானத்தின் சாதனைகளினாலும் பேணி வளர்க்கப்பட்டது. அவருடைய பரந்த அறிவு பிரபஞ்சம் அனைத்தையுமே அறிவதற்கு, வானியல் மற்றும் கணிதம் முதல் அறவியல் மற்றும் அழகியல் முடிய, முந்திய காலச் சிந்தனை முன்வைத்த கேள்விகள் அனைத்துக்குமே விடைகளைத் தருவதற்கு முயற்சித்தது.

மனிதன் மற்ற இலட்சியங்களை அடைவதற்குச் சாதனம் அல்ல, அவன் சமூக வளர்ச்சியின் தன்னிலை முடிவு என்று ரூஸோ வழியில் கான்ட் அறிவித்தார். தற்செருக்கான, உடைமை நலன்களுடைய போராட்டத்துக்கு எதிராக தார்மிகக் கடமை என்ற தலைமையான அவசியத்தை அவர் முன்வைத்தார்: பகுத்தறிவின் ஆணைகளுக்குத் தக்க முறையில் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நட. மக்கள் அதிகாரம் சுயேச்சையானது மற்றும் சட்டத்தின் முன்னிலையில் எல்லோரும் சமம் என்ற கருத்துக்களே அவர் வளர்த்துக் கூறினார்.

ரூஸோ

கான்ட் மனிதனுடைய அறிவை, புரிந்து கொள்வதற்கும் படைப்பதற்கும் அவனுடைய திறமையை தத்துவஞான ஆராய்ச்சியின் மையப் பொருளாக வைத்தார். சிந்தனை பற்றிய எதேச்சாதிகார-மத அமைப்பின் விலங்குகளிலிருந்து அவர் சந்தேகம் என்ற ஆவியை – “கடவுளால் வழங்கப்பட்ட” உண்மைகளின் முடிவான மற்றும் தனிமுதலான தன்மை பற்றி சந்தேகம், முழுமையான மற்றும் அகல்விரிவான அறிவை நாம் என்றேனும் அடைவதற்குரிய திறமையைப் பற்றி சந்தேகம்-விடுதலை செய்து வெளியே அனுப்பினார்.

அறிய முடியாத ‘’தன்னிலைப் பொருள்களுடன்” கான்ட் கடவுளையும் சேர்த்தார்; அதன் மூலம் ஜெர்மனியில் மதத்தைப் பற்றிய தத்துவஞான விமர்சனத்துக்கு அடிப்படை அமைத்தார். ஆனால் கான்ட்டிடம் அதிகமான துணிச்சலேயோ அல்லது குறையில்லாத சிந்தனைத் தொடர்ச்சியையோ நாம் அநேகமாகக் காண முடியாது. அவர் தத்துவத் துறையில் கூட பிறவிப் புரட்சிக்காரர் அல்ல. ஓர் அடி முன்னே வைக்கும் பொழுது அவர் எப்பொழுதுமே பின்னால் பார்த்துக் கொள்வார். பிரெஞ்சுப் புரட்சியினாலும் இயற்கை விஞ்ஞானங்களில் ஏற்பட்ட புரட்சியினாலும் தூண்டிவிடப்பட்ட மேதா விலாசம் நிறைந்த கருத்துக்களை ஜெர்மன் தத்துவஞானத்துக்குள் இரகசியமாக, “பின் கதவின்’’ வழியாகக் கொண்டு வருவதற்கு, குறுகிய மனப்பான்மை கொண்ட ஜெர்மன் அற்பவாதிக்கு அதிர்ச்சியளிக்காத வடிவத்தில் அவற்றை எடுத்துக் கூறுவதற்கு அவர் முயற்சி செய்தார். கான்ட் தன்னிடத்தில் முதலாளி வர்க்க மிதவாதியையும் முடியாட்சிவாதியையும், ஐயுறவுவாதியையும், பகுத்தறிவுவாதியையும், பொருள்முதல்வாதியையும், கருத்துமுதல்வாதியையும், நாத்திகவாதியையும் மதத்துக்கு நாகரிகமாக ஆதரவளிப்பவரையும் மிகவும் நம்ப முடியாத விதத்தில் ஒன்று சேர்த்திருந்தார்.

கான்ட்டின் குறைகளை, அவருடைய அரை மனசுத் தன்மை, முன் ஜாக்கிரதை ஆகியவற்றைப் பரிகாசம் செய்த ஹேய்னெ இந்த “சிந்தனை உலகத்தை அழிப்பவரை” பிரெஞ்சு ஜாக்கொபின்வாதிகளின் தலைவரான மக்சிமிலியான் ரொபெஸ்பியேருடன- பிரெஞ்சுப் பிரபுக்களைப் பயமுறுத்துவதற்கு அவருடைய பெயரை உச்சரித்தால் போதும்- ஒப்பிட்டார். மற்றவை எப்படியிருந்தாலும் அவர்களிடத்தில் பொதுவான சில குணாம்சங்கள் இருப்பதை ஹேய்னெ கண்டறிந்தார். முதலாவதாகவும் முதன்மையாகவும் அதே உறுதியான, சமரசம் செய்யாத, உணர்ச்சியற்ற, நிதானமான நேர்மை. இதைத் தவிர இருவரிடமும் எதையும் ‘நம்ப மறுக்கும் திறமை’ இருக்கிறது. ஒரே வேறுபாடு என்னவென்றால் ஒருவர் அதைக் கருத்துக்களுக்குக் கையாண்டு விமர்சனம் என்று பெயரிட்டார், அடுத்தவர் அதை மனிதர்களுக்குக் கையாண்டு குடியரசுவாத நற்பண்பு என்று பெயரிட்டார். முடிவில் ‘இருவரிடமும் அற்பவாத வரிச் சட்டம் மிகவும் அதிகமான அளவுக்கு இடம் பெற்றிருந்தது- அவர்கள் காபிக் கொட்டைகளையும் ஜீனியையும் நிறுத்துக் கொடுக்க வேண்டுமென்று இயற்கை முடிவு செய்திருந்தது; ஆனால் அவர்கள் மற்றவற்றை நிறுத்த வேண்டுமென்று விதி கட்டளையிட்டது; அவர்களுடைய தராசுகளில், ஒருவருடைய தட்டில் அரசரையும் அடுத்தவருடைய தட்டில் கடவுளையும் வைத்தது….”(8) ரொபெஸ்பியேரைப் பொறுத்தமட்டில் ஒரு வேளை இது மிகவும் வன்மையானதாக இருக்கலாம்; ஆனால் ஒரு கையில் கடவுளுக்கு “மரண தண்டனையையும்’ மறு கையில் “மன்னிப்பையும்’ வைத்துக் கொண்டிருக்கும் கான்ட்டுக்கு இது மிகச் சரியானதே.

ஹேய்னெ பின்வரும் காட்சியை வேடிக்கையான முறையில் சித்தரிக்கிறார். அதில் சோகநாடகத்துக்குப் பிறகு கேலிக்கூத்து தொடர்கிறது. முதலில் இம்மனுயேல் கான்ட் இரக்கமேயில்லாத தத்துவஞானியாக நடிக்கிறார். அவர் விண்ணேச் சாடுகிறார், மொத்தக் காவற்படையையும் வாளுக்கு இரையாக்குகிறார், கடவுள் இருக்கிறார் என்கின்ற எல்லா வாதங்களையும் தவிடு பொடியாக்குகிறார். உலகத்தின் கர்த்தா வான கடவுள் இப்பொழுது மறுக்கப்பட்டு, தன் உடலிலிருந்து பெருகும் இரத்த வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்கிறார். எல்லோரிடமும் கருணை காட்டிய கடவுள் இனிமேல் கிடையாது, தகப்பனாருக்குரிய அன்பு இல்லை, இந்த உலகத்தில் சுய தவிர்ப்புக்காக மறு உலகத்தில் வெகுமதி இல்லை. அழியாத ஆன்மா அதன் கடைசியான வேதனையில் மூச்சுத் திணறிப் புலம்பிக் கொண்டிருக்கிறது……

கிழவன் என்பவர் காண்ட் அவர்களின் பனியாள் லாம்ப்பெ (இடது ஓரம் உள்ளவர்)

கிழவன் லாம்ப்பெ, கான்ட்டின் விசுவாசமிக்க ஊழியன், வாழ்நாள் முழுவதும் பேராசியருக்குப் பின்னால் அவருடைய குடையைத் தூக்கிக் கொண்டு போனவன். அவன் அங்கே நடைபெற்ற அனைத்தையும் பீதியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் முகத்திலிருந்து வியர்வையும் கண்ணீர்த் துளிகளும் விழுந்து கொண்டிருக்கின்றன.

இம்மனுவேல் கான்ட் இதைக் கண்டு அனுதாபப்படுகிறார்; தான் ஒரு மாபெரும் தத்துவஞானி மட்டுமல்ல, அன்புமிக்கவர் என்பதை எடுத்துக்காட்டுகிறார், அவர் சிந்திக்கிறார், பாதி நல்லெண்ணத்துடனும் பாதி பரிகாசத்துடனும் பேசுகிறார்: ‘’கிழவன் லாம்ப்பெக்கு ஒரு கடவுள் அவசியம். இல்லாவிட்டால் அந்த ஏழை மனிதன் மகிழ்ச்சியோடிருக்க மாட்டான்; ஆனால் பூமியில் மனிதன் மகிழ்ச்சியோடிருக்க வேண்டும்- அதாவது செய்முறைப் பகுத்தறிவுக்குத் தகுந்தவாறு; மிகவும் சரி, செய்முறைப் பகுத்தறிவு கடவுள் இருக்கட்டும் என்று உத்தரவிடட்டும்.”(9)

கான்ட்டின் தத்துவஞான முடிவுகளில் கூட அவருக்குள்ளிருந்த அற்பவாதியின் கை மேலோங்கியிருந்தாலும் அவருடைய எழுத்துக்களில் இருந்த விமர்சன உணர்ச்சி ஜெர்மனியில் மாபெரும் அறிவுக் கிளர்ச்சியைத் தூண்டியது: அந்த அறிவுக் கிளர்ச்சி ஃபிஹ்டே, ஷேல்லிங், குறிப்பாக ஹெகலின் தத்துவஞானத்தில் நிறைவடைந்தது. கான்ட் தொடங்கிய தத்துவஞானப் புரட்சியை ஹெகல் அதன் தர்க்க ரீதியான முடிவுக்குக் கொண்டு வந்தார். அவருடைய எழுத்துக்களிலடங்கிய தத்துவச் சிந்தனையின் விமர்சனச் சக்தி அவரால் வளர்க்கப்பட்ட இயக்கவியல் முறையின் உதவியுடன் வன்மையான ஆயுதத்தைப் பெற்றது. எந்தத் தத்துவ ரீதியான வறட்டுச் சூத்திரம் தனிமுதலானது, அழிக்கப்பட முடியாதது என்ற கருத்தை -அதே சமயத்தில் எந்தச் சமூக அமைப்பும் அழிக்கப்பட முடியாதது, நிரந்தரமானது என்பதையும் ஹெகலிய இயக்கவியல் உறுதியாக மறுத்தது. ஹெகலினால் வளர்க்கப்பட்ட இயக்கவியல் தத்துவஞானத்தை வர்ணிக்கின்ற பொழுது, அது ஒன்றையுமே முடிவானதாக, புனிதமானதாகக் கருதவில்லை என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டார். “அது ஒவ்வொன்றின், ஒவ்வொன்றிலுமுள்ள தற்காலிகத் தன்மையை வெளிப்படுத்துகிறது.”(10)

“மெய்யானவை ஒவ்வொன்றும் அறிவு பூர்வமானது; அறிவு பூர்வமானவை அனைத்தும் மெய்யானவை’’ என்பது ஹெகலின் பிரபலமான ஆய்வுரையாகும். மனிதகுல வரலாற்றுக் களத்தில் மெய்யானவை ஒவ்வொன்றுமே காலப்போக்கில் பகுத்தறிவுக்கு முரணாகி விடுவதால் அவை புரட்சியினால் ஒழிக்கப்படுவதற்குரிய நிலையை அடைகின்றன என்ற பொருளில் மேற்கூறிய ஆய்வுரையை விளக்க முடியும். ஹென்ரிஹ் ஹேய்னெ மாபெரும் கவிஞர் மட்டுமல்ல, அவர் ஒரு ஆழமான தத்துவஞானியாகவும் இருந்தார். அவர் ஹெகலிடம் தத்துவஞானத்தைப் பயின்றவர். ஹெகல் தன்னுடைய இயக்கவியல் கட்டுமானங்களே அமைத்துக் கொண்டிருந்த பொழுது “இசையமைப்பாளருக்குப் பின்னால்” அவர் எப்படி நின்று கொண்டிருந்தார்’ என்பதை அவர் வர்ணித்தார்.

உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக அவர் அதை மிகவும் தெளிவில்லாத, செயற்கையான முறைகளில் எழுதினார். யாராவது அதைப் புரிந்து கொண்டு விடலாமோ என்ற அச்சத்தில் அவர் சில சமயங்களில் கவலையோடு சுற்றுமுற்றும் பார்ப்பதை நான் கண்டிருக்கிறேன். அவருக்கு என்னிடத்தில் அதிகமான பிரியம், ஏனென்றால் நான் அவருக்கு துரோகம் செய்யமாட்டேன் என்று அவர் உறுதியாக நம்பினார், அந்தச் சமயத்தில் அவர் அடிமைப் புத்தி உடையவர் என்று கூட நான் நினைத்தேன். ஒரு நாள் மெய்யானவை ஒவ்வொன்றும் அறிவு பூர்வமானது என்ற சொற்களை நான் ஆட்சேபித்த பொழுது அவர் விசித்திரமான முறையில் சிரித்தார்: “அறிவு பூர்வமானவை அனைத்தும் மெய்யானவை” என்றும் அதற்குப் பொருள் காணலாம்” என்றார், அவர் அவசரமாகச் சுற்று முற்றும் பார்த்தார், ஆனால் சீக்கிரத்திலேயே அமைதியடைந்தார். ஏனென்றால் அவர் கூறியதை ஹென்ரிஹ் பெர் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தார். நான் இந்த அணியலங்காரங்களைப் பிற்காலத்தில்தான் புரிந்து கொண்டேன். கிறிஸ்துவ சமயம் முற்போக்கானது, ஏனென்றால் அது மரணமடைந்த கடவுளைப் பற்றி போதிக்கிறது, ஆனால் புறச்சமய வழிபாட்டில் கடவுள்களுக்கு மரணத்தைப் பற்றி எதுவுமே தெரியாது என்று வரலாற்றுத் தத்துவஞானத்தில் அவர் ஏன் கூறினார் என்பதையும் நான் பிற்காலத்தில் தான் புரிந்து கொண்டேன். ஆகவே கடவுள் இருக்கவில்லை என்றால் அது எத்தகைய முன்னேற்றமாக இருந்திருக்கும்!”

ஃபாவுஸ்டு நாடகத்தில் வருகின்ற மெஃபிஸ் டோபிலேப் போல ஹெகல் கூறியிருக்க முடியும்: “மென்மேலும் அதிகமாக மறுக்கின்ற ஆன்மா நான், அது மிகச் சரியே-ஏனென்றால் தோன்றியவை அனைத்துமே அழியக் கடவன.”

ஆனால் ஹெகல் தன்னுடைய இயக்கவியலிருந்து உலகைக் குலுக்குகின்ற ”மெஃபிஸ் டோபிலிய” முடிவுகளைப் பெறவில்லை. அவர் மிக அதிகமான அளவுக்கு கெளரவமான குடிமகனாகவும் பிரஷ்ய அரசரின் விசுவாசமான ஊழியனாகவும் இருந்தார். கான்ட்டைப் போல ஹெகல் விஞ்ஞானத்தில் அற்பவாதியாக இருந்தார். அவர் இயக்கவியல் என்ற வாளை உறையிலிருந்து வெளியே எடுத்தார்; அதை உடனடியாகத் தன்னுடைய அமைப்பு என்னும் துருப்பிடித்த உறைக்குள் மறைத்துவிட்டார். உறையை உயர்த்தி உதடுகளில் முத்தமிட்டார், தன்னுடைய அரசரான மூன்றாவது பிரெடெரிக் வில்ஹெல்முக்கு முன்னால் ‘வீரப்பெருந்தகைமையுடன்’ முழந்தாளிட்டு பிரபலமான இரவுத் தொப்பி அணிந்திருக்கும் தன் தலையையும் குனிந்து வணங்கினார், அதற்காக அரசாங்கத் தத்துவஞானி என்ற பட்டத்தையும் பெற்றார்.

மூலச்சிறப்பான ஜெர்மானியத் தத்துவஞானப் பாரம்பரியத்திலிருந்து “புரட்சியின் இயற்கணிதத்தைப்” படைப்பதற்கு – அந்த வார்த்தைகளின் உண்மையான பொருளில் மற்ற தலைகள், மற்ற குணாம்சங்கள் அவசியமாக இருந்தன. பழைய சமூகத்தின் அற்பவாத விலங்குகள் அனைத்திலிருந்தும் விடுதலையடைந்தவர்கள், தங்கள் காலத்துக்கு மேல் உயர்ந்து நின்றவர்கள், தங்களுடைய சொந்தச் சிந்தனையின் விளைவுகளைக் கண்டு அஞ்சாதவர்கள்,அவற்றைத் துணிவுடன் செயல்படுத்தக் கூடியவர்கள், விஞ்ஞானத்துக்கு மாறா உறுதிப்பாடும் புரட்சிக்கு விசுவாசமுமே ஒரே உறுதியாகக் கொண்டவர்கள் அப்படிப்பட்டவர்கள்.

மாபெரும் மனிதர்கள் அவர்களுடைய மாபெரும் நடவடிக்கைகளுக்கு நிலைமைகள் முதிர்ச்சி அடைந்திருக்கும் இடங்களில், நேரங்களில் தோன்றுகிறார்கள். ஹெகல் மரணமடைந்த வருடத்தில் கார்ல் மார்க்ஸ் என்ற பதின்மூன்று வயதுச் சிறுவன் டிரியர் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். அந்த நகரத்துக்குப் பக்கத்திலுள்ள பார்மன் என்ற இடத்தில் பதினொன்று வயதான பிரெடெரிக் எங்கெல்ஸ் வசித்தார்.

அவர்கள் இருவரும் பிறப்பால் ரைன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இது முற்றிலும் தற்செயலான நிகழ்வுதானா?

ரைன் பிரதேசம் இரண்டு மாபெரும் பண்பாடுகளின்-ஜெர்மானிய, பிரெஞ்சுப் பண்பாடுகளின்-தாக்கத்துக்கு உட்பட்டிருந்தது. நெப்போலியன் காலத்தில் அது பிரான்சின் ஒரு பகுதியாகக் கூட ஆயிற்று. ஜெர்மனியின் மற்ற பகுதிகளைப் போலல்லாமல் அங்கே நிலப்பிரபுத்துவ மரபுகள் முழுமையாக ஒழிக்கப்பட்டிருந்தன.

ஆனால் ரைன் பிரதேசம் பிற்போக்கான பிரஷ்ய எதேச்சாதிகாரத்தின் ஆட்சிக்குள் வந்த பொழுது அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் மிக அதிகமாக ஏமாற்றமடைந்தார்கள். வேறுபாடு பளிச்சென்று தெரிந்தது! ரைன் பிரதேசத்தில் சில அரசு அதிகாரிகள் கூட மிதவாத மற்றும் தீவிரவாதக் கருத்துக்களைப் பேசியது இயற்கையே.

அண்டை நாடாகிய பிரான்சைக் குலுக்கிக் கொண்டிருந்த புரட்சிகரமான புயல்களின் இடியோசை ரைன் பிரதேசத்தில் மிகவும் தெளிவாகக் கேட்டது. பிரெஞ்சுப் பொருள்முதல்வாதம் மற்றும் அறிவியக்கத்தின் கருத்துக்கள் ரைன் பிரதேசத்தின் மூலமாக ஜெர்மனிக்குள் வந்து கொண்டிருந்தன. மற்ற எல்லா இடங்களைக் காட்டிலும் அதிக இயற்கையான முறையில் இங்கே மூலச்சிறப்பான ஜெர்மன் தத்துவஞானக் கருத்துக்கள் கற்பனாவாத சோஷலிச (குறிப்பாக சான்-சிமோனின்) கருத்துக்களுடன் மோதிக் கொண்டன. உணர்ச்சிமிக்க, கற்பனையான கவிதை, மத்திய காலத்தின் அரசகுலக் காதற் கதைகள், மாதாகோவில் இசை ஆகியவற்றில் வளர்க்கப்பட்ட ஜெர்மானியர்களுடைய சிந்தனைகள் மற்றும் உணர்ச்சிகளின் மீது அண்டை நாட்டின் நகைச்சுவையான, பரிகாசமான கலை புத்துணர்வூட்டுகின்ற தாக்கத்தைக் கொண்டிருந்தது.

இவை தவிர, ஜெர்மனியிலேயே அதிகமாக வளர்ச்சியடைந்த, பல்வகையான தொழில்துறை ரைன் பிரதேசத்தில் இருந்தது. எனவே அங்கே பழைய சமூகத்துக்குப் “புதைகுழி தோண்டுகின்ற” தொழில்துறைப் பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருந்தது.

இல்லை, ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ், எங்கெல்ஸ் பிறந்தது தற்செயலானதல்ல.

குறிப்புகள் :
(1) Marx, Engels, Collected Works, Vol. 1, Moscow, 1975, pp. 387-88.
(2) ” K. Marx, Capital, Vol. 1, p. 571,
(3)  Ibid.
(4) Reminiscences of Marx and Engels, Moscow, 1957, p. 266,
(5)  Karl Marx and Frederick Engels, Selected Works, in three volumes, Vol. 3, Moscow, 1976, p. 353.
(6)  The Works of Heinrich Heine, New Poems, Vol. 10, London, 1904, p. 189.
(7)Marx, Engels, Collected Works, Vol. 10, Moscow, 1978, p.242.
(8)s Heinrich Heine, Works of Prose, New York, 1943, p. 198.
(9)Heinrich Heine, Works of Prose, p. 200.
(10)Karl Marx and Frederick Engels, Selected Works, in three volumes, Vol. 3, p. 339.

  • கில்லட்டின் (guilotine) – மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களைச் சிரச்சேதம் செய்வதற்குப் பிரான்சில் மாபெரும் பிரெஞ்சுப் புரட்சியின் போது உபயோகிக்கப்பட்ட இயந்திரம் டாக்டர் கியோட்டேன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. – மொ-ர்,

– தொடரும்


நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகத்துக்கு இந்த சுட்டியை சொடுக்கவும் :

இந்துத்துவப் பிணந்தின்னிகளுடன் நாம் சேர்ந்து வாழ இயலுமா ?

1
பஜ்ரங் தள் குண்டர்களால் கொலைவெறியோடு கொடூரமாகத் தாக்கப்படும் பால் வியாபாரி பெஹ்லு கான்.

சுவின் பெயரால் இன்னொரு கொலை நடந்திருக்கிறது. கறவை மாடு வாங்கிச் சென்ற பெஹ்லு கான் என்ற 55 வயது பால் வியாபாரி, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் இந்துத்துவ கிரிமினல்களால் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார்.

பஜ்ரங் தள் குண்டர்களால் கொலைவெறியோடு கொடூரமாகத் தாக்கப்படும் பால் வியாபாரி பெஹ்லு கான்.

அக்லக் கொலை, ஊனாவில் தலித் மக்கள் மீதான தாக்குதல் போன்ற ஒரு சில நிகழ்வுகள் தேசிய ஊடகங்களில் பேசப்படுகின்றன. அவ்வாறு பேசப்படாமல், கணக்கில் வராத தாக்குதல்களும் கொலைகளும் அதிகரித்து வருகின்றன. எப்படி அன்றாட நிகழ்வாக நிறுவனப் படுத்தப்பட்டிருக்கும் தலித் மக்களின் மீதான தீண்டாமைக் கொடுமைகளில் ஒரு சில மட்டும்தான் வெளியுலகுக்குத் தெரிய வருகின்றனவோ, அப்படி மாறி வருகின்றன இஸ்லாமிய மக்களின் மீதான தாக்குதல்கள்.

மாட்டைக் கொன்றார்கள் என்பதில் தொடங்கி “மாட்டைக் கொண்டு சென்றார்கள், மாட்டுக்கறி வைத்திருந்தார்கள், வைத்திருப்பதாக சந்தேகிக்கப் பட்டார்கள்” என்று கொலைகளுக்கும் தாக்குதல்களுக்குமான காரணங்கள் மென்மேலும் அற்பமானவையாக மாறி வருவதை சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்துள்ள சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

பெஹ்லு கான் அரியானா மாநிலம் ஜெய்சிங்பூரைச் சேர்ந்தவர். ராஜ்புத் சாதியிலிருந்து இஸ்லாமியர்களாக மாறிய மியோ முஸ்லீம்கள் என்ற பிரிவைச் சேர்ந்தவர். அந்த ஊரின் மியோ முஸ்லீம்களில் பெரும்பான்மையோர் நிலமற்ற விவசாயிகள். கான், அவ்வப்போது காய்கறி விற்பார். குத்தகை விவசாயமும் செய்வார். வயதான தாய், மனைவி, இரண்டு மகன்கள், திருமணமாகாத இரண்டு பெண்கள் உள்ளிட்ட குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு இப்படிப் பல தொழில்கள் செய்து அவர் ஈட்டும் வருமானம் மாதம் 8,000 முதல் 12,000 ரூபாய்.

பஜ்ரங் தள் குண்டர்களின் தாக்குதலுக்கு ஆளாகி உயிர் பிழைத்த பெஹ்லு கானின் மகன் ஆரிஃப்.

ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று புதிதாகப் பசுமாடு வாங்க ஜெய்ப்பூர் கால்நடைச் சந்தைக்கு தன் இரண்டு மகன்களுடன் சென்றிருக்கிறார் கான். எருமை மாட்டைவிடப் பசுமாடு விலை குறைவு என்பதால், கன்றுகளுடன் இரண்டு பசுமாடுகளை வாங்கி வண்டியில் ஏற்றிக் கொண்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, டில்லி – ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், ஆல்வார் என்ற இடத்துக்கு அருகே பஜ்ரங் தள் கும்பலைச் சேர்ந்த பத்து பேர் அவரை வழி மறித்திருக்கின்றனர். இதற்கிடையில் இந்த தாக்குதல் நடந்து கொண்டிருந்த போதே, அவருடன் சந்தைக்கு வந்த ஊர்க்காரரின் இன்னொரு வண்டியும் வந்திருக்கிறது. அதையும் தடுத்து நிறுத்திவிட்டனர்.

பெஹ்லு கானும் மற்றவர்களும் சந்தையில் நகராட்சி அதிகாரிகள் கொடுத்த ரசீதைக் காட்டியவுடன் அதை வாங்கி கிழித்தெறிந்திருக்கின்றனர். வண்டியின் ஓட்டுனர் தன்னுடைய சாதியைச் சொல்லி, தான் ஒரு இந்து என்று நிரூபித்ததால், அவரை ஒரு அறைவிட்டுத் துரத்தி விட்டனர்.

பிறகு பெஹ்லு கானையும் அவரது இரு மகன்களையும் ஹாக்கி மட்டைகளால் தாக்கியிருக்கின்றனர். பிறகு, “பாவம்பா, பாத்தா சாதுவா தெரியுது. விட்டுவிடுவோம். சரி ஓடிப் போயிடுங்கடா” என்று கருணை காட்டுவது போல நடித்திருக்கின்றனர். ஓடத் தொடங்கியவுடன் நாயை அடிப்பது போல விரட்டி விரட்டி அடித்திருக்கின்றனர். வேடிக்கை பார்க்க சேர்ந்த கூட்டமும் சேர்ந்து அடிக்கத் தொடங்கியிருக்கிறது. இறுதியில் அவர்களை உயிரோடு கொளுத்துவதற்காக அவர்கள் மீது பெட்ரோலைத் தெளித்திருக்கின்றனர். நடந்த இடம் டில்லி -ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை என்பதால் ரோந்து போலீசு வந்து விட்டது. ஆனால், தாக்கியவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

சுமார் ஒன்றேகால் லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து மாடுகள் ஐந்து கன்றுகளையும், பெஹ்லு கானின் கையிலிருந்த 75,000 ரூபாயையும் பஜ்ரங் தள் கும்பல் பிடுங்கிக் கொண்டுவிட்டது. மாடுகள் கோசாலைக்குப் போய்விட்டதாகச் சொல்கின்றனர். இரண்டு வண்டிகளும் போலீசால் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன.

இராஜஸ்தான் மாநிலம்-ஜெய்ப்பூர் நகரில் அமைந்துள்ள ஹிங்கோனியா கோசாலையில் உணவின்றி இறந்துபோன மாடு அப்புறப்படுத்தப்படுகிறது.

அடிபட்டவர்களை மருத்துவமனையில் பார்ப்பதற்கே அவர்களது குடும்பத்தினரிடம் 5,000 ரூபாயைக் கறந்திருக்கிறது போலீசு. அது மட்டுமல்ல, மருத்துவமனையில் இருப்பவர்களை வீட்டுக்கு அழைத்துப்போக வேண்டுமானால், ஒரு லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று பேரம் பேசியிருக்கிறான் போலீசு இன்ஸ்பெக்டர்.

அந்த பரிதாபத்துக்குரிய ஏழைகள், அரும்பாடுபட்டு 75,000 ரூபாய் பணத்தைப் புரட்டி எடுத்துக் கொண்டு வந்து, பெஹ்லு கானைக் கண்ணில் காட்டுமாறு கெஞ்சியிருக்கின்றனர். ஆனால், ஏப்ரல் 4-ஆம் தேதியன்று அவர் இறந்து விட்டார். ஹாக்கி மட்டையால் அடித்த அடியில், மார்பெலும்பு நொறுங்கி, நுரையீரல், இதயம் உள்ளிட்ட உள் உறுப்புகளில் இரத்தம் உறைந்து, அவர் இறந்து விட்டார்.

மரண வாக்குமூலத்தில் தன்னைத் தாக்கியவர்கள் விசுவ இந்து பரிசத், பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் பெஹ்லு கான் கூறியிருக்கிறார். அதேபோல காயம்பட்ட மற்றவர்களும் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் கைது செய்யப்படவில்லை. மாறாக, பெஹ்லு கான் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 16 பேர் மீது பசுவதை தடை சட்டத்தின் கீழ் (Rajasthan Bovine Animals (Prohibition of Slaughter and Regulation of Temporary Migration or Export) Act, 1995) போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். கான் இறந்து விட்டதால், வேறு வழியின்றி இந்துத்துவ காலிகள் 6 பேர் மீது கொலை வழக்கும் பதிவு செய்திருக்கிறார்கள்.

மேற்கூறிய சட்டத்தின்படி பெஹ்லு கானும் மற்றவர்களும் செய்திருக்கும் குற்றம் என்ன? ஜெய்ப்பூர் கால்நடைச் சந்தையில் மாடுகளை வாங்கினார் என்பதற்கான ரசீது அவரிடம் இருந்தது. மாடுகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சட்டவிரோதமாக கொண்டு சென்றதாக போலீசு வழக்கு போட்டிருக்கிறது. அவ்வாறு கொண்டுசெல்ல வேண்டுமானால், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிச் சீட்டு பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகிறது அந்த சட்டம். அப்படி ஒரு அனுமதிச்சீட்டு பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை என்று ஜெய்ப்பூர் ஆர்.டி.ஓ. பல்தேவ்ராம் போஜக் கூறியதாகப் பத்திரிகையாளர்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். (Anand kochukudy, thewire.in, 14.4.2017)

இல்லாத ஒரு அனுமதிச் சீட்டை வாங்காத குற்றத்துக்காக அந்த இஸ்லாமியர்கள் மீது வழக்கு போடுகிறது போலீசு. எந்த சீட்டைக் காட்டினாலும், அதை வாங்கி கிழித்துப் போட்டுவிட்டு தாக்குதல் தொடுக்கின்றனர் இந்துத்துவ காலிகள். அப்படியானால் இந்த சட்டத்தின் நோக்கம் என்ன?

பசு பாதுகாப்பு என்ற பெயரில் இந்து மதவெறிக் கும்பல் ஊனாவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோரைத் தாக்கியதைக் கண்டித்து ஊனாவில் தாழ்த்தப்பட்ட அமைப்புகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்த சட்டத்தின் நோக்கம் பசுக்களைப் பாதுகாப்பதல்ல, இஸ்லாமியர்களையும் தலித் மக்களையும் அச்சுறுத்தி ஓடுக்குவதுதான். “பசுக்களை எங்கள் குழந்தைகளைப் போலப் பார்ப்பவர்கள் நாங்கள். மாட்டின் வாலைக்கூடக் கழுவத் தெரியாத ஆட்கள் எங்களுக்கு பசுப் பாதுகாப்பு பற்றி சொல்லிக்கொடுக்கிறார்களா? பிடுங்கிக் கொண்டு போன எங்கள் பசுக்களையும் கன்றுகளையும் இவர்களுடைய கோசாலையில் பட்டினி போட்டே கொன்றுவிடுவார்கள். அதை நினைத்தால்தான் வேதனையாக இருக்கிறது” என்று குமுறுகிறார்கள் பெஹ்லு கானின் குடும்பத்தினர்.

அவர்கள் கூறுவது மிகையல்ல. நாட்டிலேயே மிகச்சிறந்த கோசாலை என்று  பீற்றிக் கொள்ளப்படும் ஜெய்ப்பூரில் உள்ள ஹிங்கோனியா கோசாலையில் மாதந்தோறும் சுமார் 1050 மாடுகள் சாகின்றன. அவற்றில் ஆகப் பெரும்பான்மையானவை இயற்கையான மரணங்கள் அல்ல. தீவனமின்றி, சேற்றிலும் சாணத்திலும் சிக்கி நோய்வாய்ப்பட்டு மெல்ல அழுகித் துடித்துச் சாகின்ற பரிதாபத்துக்குரிய மரணங்கள். கோமாதா பெயரில் வசூலிக்கப்படும் பணத்தை கோமாதாவின் காவலர்கள் தின்றுவிடுவதால் நடக்கும் மரணங்கள்.

ஆகஸ்டு 2016-இல் இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்திய ஜெய்ப்பூர் உயர் நீதிமன்றம், “அது கோசாலையல்ல, கசாப்புக்கடை” என்று சாடியது. பத்திரப் பதிவுக்கான ஸ்டாம்ப் கட்டணத்தில் 10% ‘கோமாதா வரி’யாக (சர்சார்ஜ்) மக்களிடம் வசூலிக்கிறது ராஜஸ்தான் அரசு என்பதை இங்கே நினைவிற் கொள்ளவேண்டும்.

குஜராத் அரசோ, பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் ஆல்வாரில் நடந்த ரவுடித்தனத்தையே சட்டமாக்கி விட்டது. காங்கிரசு உள்ளிட்ட  எதிர்க்கட்சியினரையெல்லாம் அவையிலிருந்து வெளியேற்றி விட்டு, பார்வையாளர் மாடம் முழுவதும் சாமியார்களை உட்கார வைத்துக் கொண்டு, பசுவைக் கொலை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை என்ற சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது.

விசுவ ஹிந்து பரிஷத்தின் மதிப்பீட்டின்படியே, மஹாராஷ்டிராவில் மட்டும் சுமார் 7,50,000 பசுக்களும் எருதுகளும் கேட்பாரற்று, கவனிப்பாரற்று, வீதியில் அலைகின்றன. இக்கால்நடைகள் அனைத்தும் விவசாயிகளால், விற்பனை செய்ய முடியாமலும், உபயோகப்படுத்த முடியாமலும் வீதியில் விடப்பட்டவையே.

இத்தகைய சட்டங்கள் எப்படிப் பயன்படுத்தப்படும் என்பதை பெஹ்லு கானின் கொலை காட்டுகிறது. செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக துலினாவில் 5 தலித்துக்களை அடித்தே கொன்றார்கள். ஊனாவில் தலித்துகளுக்கு கசையடி. வீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டி அக்லக்கைக் கொன்றார்கள். பையில் மாட்டுக்கறி எடுத்துச் சென்றதாகக் கூறி போபால் ரயில் நிலையத்தில் வைத்தே இஸ்லாமியப் பெண்களை அடித்துத் துவைத்தார்கள். ஆட்டுக்கறி கடைகளை மாட்டுக்கறி கடைகள் என்று வதந்தி பரப்பி, உ.பி.யில் கறிக்கடைகளை மூடினார்கள். இப்போது பால் வியாபாரம் செய்த குற்றத்துக்காக பெஹ்லு கானைக் கொலை செய்திருக்கிறார்கள். இறைச்சிக்கடைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இலட்சக்கணக்கான குரேஷி பிரிவு இஸ்லாமியர்களை அந்தத் தொழிலிலிருந்து விரட்டுவதற்கு பா.ஜ.க.வினர் பசுவதை தடைச் சட்டத்தைப் பயன்படுத்தினர். இப்போது பால் வியாபாரம் செய்யும் மியோ முஸ்லிம்களையும் குறி வைத்திருக்கின்றனர்.

கண் தெரியாத தாய், தன் கணவன் கொலை செய்யப்படும் காட்சியைக் கண்டும் ஏதும் செய்ய இயலாமல் ஆற்றாமையால் துடிக்கும் மனைவி, நிர்க்கதியாக நிற்கும் இளம் மகள்கள், எலும்புகள் நொறுக்கப்பட்ட மகன்கள், தீவனத்துக்கு வழியின்றி கோசாலையில் வாடும் பெஹ்லு கானின் மாடுகள், கன்றுகள்!

“தென்னிந்திய கருப்பர்களுடன் நாங்கள் சேர்ந்து வாழவில்லையா?” என்று தருண் விஜய் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும். இந்தக் காவி காட்டுமிராண்டிகளுடன் மனிதர்களாகிய நாம் சேர்ந்து வாழ இயலுமா?

பாஜக X அதிமுக : திருடன் – போலீசா, திருட்டு போலீசா ?

0

போலீசின் உண்மையான முகத்தைப் புரிய வைக்கும் ஆற்றல் கிரிமினல்களுக்குத்தான் உண்டு. தாங்கள் அரும்பாடுபட்டுத் திருடிக் கொண்டுவந்த நகையை, போலீசார் தங்களிடமிருந்து திருடிவிடாமல் காப்பாற்றுவதற்குத் திருடர்கள் படும்பாடு கொஞ்சமல்ல. இருந்தாலும், நூறு பவுன் திருடியிருந்தால், அதில் 50 பவுனை போலீசு பிடுங்கிக் கொள்ளும். 25 பவுனைத் திருடனுக்கு ஊதியமாகக் கொடுத்துவிட்டு, மீதி 25 பவுனை மேசையின் மீது பரப்பி வைத்து, புகைப்படம் எடுத்துக்கொண்டு மக்களிடம் நற்பெயர் ஈட்டுவார் புலனாய்வு அதிகாரி. கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் அரங்கேறி வரும் வருமானவரித்துறை சோதனைகள் – கைதுகள், “திருடன் – போலீசு கதை”யைத்தான் அப்படியே பிரதிபலிக்கின்றன.

எடப்பாடி, நத்தம், பன்னீரின் பினாமிகள், சைதை துரைசாமி, பிறகு சட்டமன்றத் தேர்தலின்போது அன்புநாதன், கன்டெயினர்கள், ஜெயா மரணத்துக்குப் பின் ராம மோகனராவ், சேகர் ரெட்டி, விஜயபாஸ்கர், கீதாலட்சுமி, தினகரன் என்று வரிசையாக நடந்து வரும் ரெய்டுகள், போலீசின் மாமூல் வேட்டை நடவடிக்கையை அப்படியே பிரதிபலிக்கின்றன. இந்த வேட்டையில் பா.ஜ.க.வினரும் அதிகார வர்க்கமும் மிரட்டிப் பிடுங்கியது எவ்வளவு என்பது திருடர்களுக்குத்தான் வெளிச்சம்.

எவ்வளவு பிடுங்கப்பட்டதோ திருடர்களுக்கு தான் வெளிச்சம்

“சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டயரியில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகளில் உள்ள அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை சிபாரிசு செய்திருக்கிறதாம். இது, திருடனிடமிருந்து பிடுங்க வேண்டியதைப் பிடுங்கிக் கொண்டு, அதன் பிறகு விடுதலையாவதற்குத் தோதாக ஒரு கேசைப் போட்டு உள்ளே தள்ளும் போலீசின் நடவடிக்கையன்றி வேறென்ன?

அ.தி.மு.க. என்பது ஒரு பாளையக்காரர் கூட்டம். பாளையக்காரர்களின் உட்பகையைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டைப் பிடித்த கும்பினிக்காரனின் இடத்தில் இருக்கிறது பாரதிய ஜனதா. தங்கள் பதவியையும் சொத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக, நாட்டின் பகுதிகளைக் கூறு போட்டு வெள்ளையனுக்கு எழுதிக் கொடுத்த மன்னர்களைப் போல, “காவிரி, நீட் தேர்வு, உதய் திட்டம், ஜி.எஸ்.டி.” உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டு வருகிறார்கள் அ.தி.மு.க. அமைச்சர்கள்.

அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையிலான வேறுபாடு திருடனுக்கும் போலீசுக்கும் இடையிலான வேறுபாட்டைப் போன்றதுதான்.

“வாரிசு இல்லாத மன்னர்களின் சமஸ்தானங்களை கும்பினி கைப்பற்றிக் கொள்ளலாம்” என அன்றைய கவர்னர் ஜெனரல் டல்ஹௌசி ஒரு சட்டம் இயற்றினான். அப்படி ஒரு சட்டத்தை இயற்றித் தமிழகத்தை முழுவதுமாகக் கைப்பற்றிக் கொள்ள முடியுமானால், மோடி அரசு பெரிதும் மகிழ்ந்திருக்கும். அவ்வாறு அவர்கள் கைப்பற்றிக் கொள்ளத் தடையாக அ.தி.மு.க.வில் யாரும் இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க.வைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பது, தமிழ் மக்களின் எதிர்ப்புணர்வுதான்.

அ.தி.மு.க.வின் தலைவி ஜெயலலிதா ஒரு பார்ப்பன பாசிஸ்டு. பாரதிய ஜனதாவோ பார்ப்பன பாசிசக் கட்சி. அந்தக் கழிசடை அரசியல் நாயகியை தாங்கிப் பிடித்து, ஊழல் வழக்குகளிலிருந்து காப்பாற்றிக் கரை சேர்த்ததில் முக்கியமான பங்கு பாரதிய ஜனதாவுக்குரியது. அ.தி.மு.க. என்பது ஒரு உதிரியான கிரிமினல்களைச் சேர்த்துக் கட்டப்பட்ட ஒரு மாபியா கும்பல். பாரதிய ஜனதாவோ முறைப்படி ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கிரிமினல் கும்பல்.

அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையிலான வேறுபாடு திருடனுக்கும் போலீசுக்கும் இடையிலான வேறுபாட்டைப் போன்றதுதான். அ.தி.மு.க. என்ற திருடர் கூட்டத்தை இணைத்துக் கட்டியிருந்த பார்ப்பன பாசிஸ்டு மறைந்த பிறகு, அந்தப் பாத்திரத்தை பார்ப்பன பாசிசக் கட்சி எடுத்துக் கொண்டிருக்கிறது. போலீசின் ஆசியுடன்தான் திருடர்கள் ஆட்சி நீடித்துக் கொண்டிருக்கிறது. திருடர்களை மக்கள் அறிவார்கள். இது திருட்டு போலீசு என்பதை அறியச் செய்யவேண்டும்.

புதிய ஜனநாயகம், மே 2017

சோமபானத்துக்கும் சுவயம் சேவக்குக்கும் போலீசு காவல் !

0

திருப்பூர் ராதா நகர் 21-வது வார்டு ( டாஸ்மாக் கடை எண் : 1937 ) டாஸ்மாக் கடையை கடந்த 07.05.2017 அன்று அப்பகுதி பெண்களும், மக்கள் அதிகாரம் அமைப்பினரும் முற்றுகையிட்டு மதுபாட்டில்களை அடித்து நொறுக்கி போராட்டம் நடத்தினர். அதையொட்டி சுமார் நான்கு மணி நேரம் சாலை மறியல் நடத்தப்பட்டது. அதன் பின்னர் வந்த காவல் துறை துணைக் கண்கானிப்பாளர் அண்ணாதுரை மற்றும் திருப்பூர் வடக்கு தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடிவதாக உத்திரவாதமளித்து சீல் வைத்தனர். அதன் பிறகே மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இரண்டு நாள் கழித்து டாஸ்மாக் பார் உரிமையாளர் கடையைத் திறக்க வேண்டும் என கூலிக்கு மாரடிக்கும் குடிகாரர்களை வைத்து கடை முன் ‘போராடினார்’. இத்தகவல் அறிந்து அங்கு அப்பகுதி மக்கள் கூடிவிட்டனர். உடனே சாராயக் கடைக்கு காவலாக போலீசு வந்தது. அங்கு கூடியிருந்த பெண்களிடம் நைச்சியமாக பேசி சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுங்கள் கடை நிரந்தரமாக மூடப்படும் என்று கூறி அப்பகுதி மக்களை போராடவிடாமல் கலைத்தனர்.

எதை செய்தாலும் சட்டப்படித் தான் செய்ய வேண்டும் என சட்டவாதம் பேசியுள்ளனர். அதன் பின்னர் மனு கொடுக்கச் சென்ற மக்களில் இருந்து 5-பெண்களை மட்டும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அப்பெண்களிடம் காவல்துறை அக்கறையாக பேசுவது போல இனி குடிப்பவர்களால் உங்களுக்கு பிரச்சினை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளனர்.

அதன் பின்னர் தனது இன்னொரு முகத்தைக் காட்டியது. மக்கள் அதிகாரம் அமைப்பினர் தீவிரவாதிகள். அவர்களுடன் இணைந்து போராடக் கூடாது. மீறி போராட்டம் செய்தால் உங்கள் அனைவரையும் 3-மாதம் வெளியில் வரமுடியாதபடி கேஸ் போடுவோம்.. எனவும் மிரட்டியுள்ளது போலீசு.

அரண் அமைத்து டாஸ்மாக்கை பாதுகாக்கும் போலீசு

மறுநாளே 20 போலீசு புடைசூழ பாதுகாப்புடன் டாஸ்மாக் திறக்கப்பட்டுவிட்டது. மேலும் போராட்டத்தில் முன்னணியாக இருந்த தோழர் காஞ்சனா உட்பட 6-பேர் மீது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக PPDACT-ன் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது ( வழக்கு எண் CR:552 ).

தற்போது மீண்டும் பழையபடி டாஸ்மாக் குடிமகன்களின் அட்டகாசம் ஆரம்பித்துவிட்டது. இதனால் எப்படியேனும் அக்கடையை மூட வேண்டும் என மீண்டும் மக்கள் அதிகாரத்தை தொடர்பு கொண்டனர் அப்பகுதி பெண்கள். அதைத் தொடர்ந்து இந்த அரசும் போலீசும் நடத்திய நாடகத்தை அம்பலப்படுத்தி ஊர் முழுவதும் 19.05.2017 அன்று ராதா நகர், கஞ்சம்பாளையம், அறிவொளி நகர் ஆகிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. தோழர்கள் சுவரொட்டிகள் ஒட்டிவிட்டு நள்ளிரவு தாண்டி வீட்டுக்கு வரும் போதும் கூட அந்த டாஸ்மாக் கடையில் சரக்கு கேட்டு நான்கைந்து பேர் காத்திருக்கின்றனர்.

இதனால் பதறியடித்துக் கொண்டு போலீசு 20.05.2017 அன்று காலையே 30-க்கும் மேற்பட்ட காவலர்களைக் கொண்டு சுவரொட்டிகளை கிழித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மக்கள் அதிகாரம் தொடர்பு எண்ணுக்கு உளவுப்பிரிவு போலீசார் பத்திரிக்கையாளர் என்ற பேரில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். எப்ப சார் கடைய ஒடைப்பீங்க என கேட்டுள்ளனர். அதற்கு அப்பகுதி பெண்களிடம் தான் அதைக் கேட்க வேண்டும் என பதிலளித்தார் மக்கள் அதிகார தோழர்.

பெண்களும், பொதுமக்களும் தங்களைப் பிடித்த சனியனாக உள்ள டாஸ்மாக் ஒழிந்தால் சரி என உள்ளனர். காவல் துறையும், அரசும் டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பாக நிற்கின்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
உடுமலை – 97885 58526.


தஞ்சை ஆர்.எஸ்.எஸ் காவி(லி) களுக்கு எதிராகப் போர்க்குரல்

றட்சியால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களை அக்கினி வெயில் மேலும் கருக்கிக் கொண்டிருந்தது. மக்கள் வாழவழியின்றி அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையிலும், பிள்ளையார் கும்பாபிஷேகத்திலிருந்து கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் பிறந்தநாள் வரை கோலாகோலமாகக் கொண்டாடப்படுகிறது.

புதிது புதிதாகப் பிழைப்புவாத தர்மகர்த்தாக்கள் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள். கோயில் குளத்தைத் தூர்வாருகிறேன், களிமண்ணை (வண்டல் மண்) விற்கிறேன், கோயில் கட்டுகிறேன் லக்‌ஷார்சனை செய்கிறேன், பள்ளி திறக்கும் நேரத்தில் ஹயக்ரீவர் ஹோமம் செய்கிறேன், என்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் புனித கொள்ளை கிரானைட், மணல், PWD கான்ட்ராக்ட் கொள்ளைகளை விஞ்சிவிடும் போல் உள்ளது.

இதனை சுத்தசுயம் பிரகாசமான ஆர்.எஸ்.எஸ் பின்னிருந்து ஊக்குவித்து வளர்க்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று. நுண்அரசியல் ஆய்வாளர்களின் மைக்ரோஸ்கோப் சிந்தனைகளுக்கு இவைகள் எட்டுவதில்லை. பெரியார் பிறந்த மண் என்ற இறுமாப்பு எவ்வளவு காலம் கைகொடுக்கும் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸி-ன் இரண்டாம் ஆண்டு தக்க்ஷின மண்டல  சங்க சிக்‌ஷா (தென்மண்டல பயிற்சி முகாம்) முகாம் 28-04-2017 அன்று தொடங்கி 18-05-2017 அன்று முடிவுற்றது. 140 பேர் பயிற்சியில் சேர்ந்து சிக்‌ஷை(கல்வி) பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு முகாமில் 431பேர் பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது.

தஞ்சை திருமலைசமுத்திரம் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் காஞ்சிமடம் மற்றும் ஜெயேந்திரனின் இரகசிய உலகமாக இருந்து வருகிறது. தற்போது இந்த ஆண்டு RSS பயிற்சிமுகாம் எடப்பாடி அரசின் போலீசு காவலுடன் நடைபெற்றுள்ளது. சாஸ்த்ரா பல்கலைக்கழக முதல்வர் வைத்தியா சுப்ரமணியன் குத்துவிளக்கேற்றி பயிற்சி முகாமை தொடங்கி வைத்துள்ளார்.

தஞ்சை வீரராகவா மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியரும், ராஜராஜசோழன் பண்பாட்டு மையத்தலைவருமான மணிமொழியான், வாண்டையார் பொறியியல் கல்லூரி தாளாளரும், ஜெயா அமைச்சரவையின் ஒருநாள் அமைச்சர் என்று புகழப்பட்ட அய்யாறு வாண்டையாரின் மகளுமான  கே.ஏ.வி.பொன்னம்மாளும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று உள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத் மூன்றுநாள் முகாமில் தங்கி பயிற்சியாளர்களுக்கு பாடம் நடத்தியிருக்கிறார். பயிற்சிமுகாமில் என்ன வெறுப்பு அரசியல் போதிக்கப்பட்டிருக்கும் என்பதைத் தத்துவஞானிகள் யாரும் கூறப்போவது இல்லை. ஊர் தேர்த்திருவிழா, சாதி மோதல், வினாயகர் ஊர்வல கலவரம் இவைகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதன் அபாயத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

பயிற்சி முகாமிற்கு 300 போலீசு காவல் காத்தது என்பதை விட 18-05-2017 அன்று சாகா பேரணி நிகழ்வு முக்கியமானது. 20 நாட்களாக நடைபெற்ற பயிற்சி முகாம் குறித்த செய்தி ஒருசில பத்திரிகைகளில் மட்டுமே வெளிவந்தது என்றாலும் அனைத்து முற்போக்காளர்கள், பகுத்தறிவாளர்களும் அறிந்த ஒன்றாகத்தான் இருந்தது. முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மே 18 நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ம.நடராசன் “காங்கிரஸ் செய்த தவறுகளை சரிசெய்து கொண்டிருக்கும் மோடி அரசு, ஈழப்பிரச்சனையில் காங்கிரஸ் அரசு செய்த தவறுகளை சரிசெய்ய வேண்டும்” என்று அடக்கி வாசித்து தூது விட்டார்.

ஊடகங்களின் இருட்டடிப்பு  இருந்தாலும் எதிர்ப்பும் வலுவாக இல்லை என்பதுதான் உண்மை. இந்திய மாணவர் சங்கம் ஒட்டியிருந்த கண்டன சுவரொட்டி மீது திட்டமிட்டே விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மறைக்கப்பட்டது.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஒட்டியிருந்த சுவரொட்டிகளைக் காவல்துறை ஆள் வைத்து கிழித்தது. மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒட்டிய சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன. சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டவுடன் அடுத்தடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்களுக்கும், போலீசுக்கும் சுவரொட்டி யுத்தம் நடைபெற்றது.

தஞ்சை கோர்ட்ரோட்டில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியைக் கான்ஸ்டபிள் ஒருவர் கிழித்துக் கொண்டிருந்தார். புகைப்படம் எடுக்க முயற்சிப்பதைப் பார்த்தவுடன் வடிவேலு பாணியில் உதார்விட்டுப் பின்வாங்கி சென்றுவிட்டார்.

சாகா ஊர்வலம் நடந்த அன்று தஞ்சை நகர விடுதிகள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். மாலை 4 மணிக்கு போலீசு பட்டாளம் குவிக்கப்பட்டு சாகா ஊர்வலம் நான்கு வீதிகளையும் சுற்றிவந்தது.

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தைத் தடை செய்! சாஸ்த்ரா பல்கலைக்கழக அங்கீகாரத்தை ரத்து செய்! என்ற முழக்கத்துடன் ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் 18-04-2017 அன்று காலை 10.30 மணிக்கு அணிதிரண்டனர். ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்குப் பாதுகாப்பு கொடுத்து காவல்காத்த எடப்பாடி அரசின் போலீசு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து தோழர்களைக் கைது செய்தது.

ம.க.இ.க மாநில இணைச் செயலர் காளியப்பன், ம.க.இ.க தஞ்சை கிளைச்செயலர் இராவணன், பு.மா.இ.மு தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சங்கத்தமிழன், பத்துப் பெண்கள் உள்ளிட்ண் தோழர்கள் 53 பேர் கைது செய்யப்பட்டு புறநகரில் உள்ள திருமணம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். திருமண மண்டபம் பின்புறமாக யாரும் தப்பி ஓடிவிடக் கூடாது என்பதற்காகக் கக்கூசு ஓரம் அமர்ந்து ஒரு காவலர் காவல் காத்தார். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் முடிந்து பயிற்சி முகாம் நடந்த இடத்திற்கு அனைவரும் சென்றபின் கைது செய்யப்பட்ட தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

எதிர்ப்பின்றி இருந்த நிலையில் தோழர்களின் பிரச்சார கிளர்ச்சி நடவடிக்கைகள் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி வாணரங்களுக்கு எரிச்சலூட்டியுள்ளது. சுவரொட்டியில் கொடுக்கப்பட்டிருந்த தொடர்பு எண்ணுக்குத் தொடர்பு கொண்டு ஆர்.எஸ்.எஸின் வசவு மொழிகளில் எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் வெளிநாட்டு அம்பிகளின் போன்கால்களும் அடங்கும்.

சட்ட விரோதமாக கூடியதற்காகவும்,பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகவும்,சுவரொட்டி ஒட்டியதற்காகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுபோன்ற வழக்குகள் தோழர்களின் உணர்வுகளுக்கு உரம்போட்டு வளர்க்கும் என்பதில் அய்யமில்லை. திருவரங்கம் கருவறை நுழைவுப்போராட்டம், தியாகய்யர் கல்லறையில் தமிழில் பாடும் போராட்டம், சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடும் போராட்டம் என பார்ப்பனியத்திற்கெதிராக ம.க.இ.க,பு.மா.இ.மு தோழர்களின் போராட்டங்கள் தமிழ்மண்ணின் பார்ப்பன எதிர்ப்பு மரபை மீட்டெடுத்துள்ளது. மக்கள் அதிகாரத்தின் மூடு டாஸ்மாக்கை போராட்டங்கள் பெண்கள் கையில் கடப்பாரையை எடுக்க வைத்ததைப்போல ஆர்.எஸ்.எஸ்,சங்பரிவார் கருநாகப்புற்றுகளை அடித்து நொறுக்கி அகற்றும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்.


அறிவிப்பு !

நேற்று 22.05.2017 அன்று சீர்காழியில் நடப்பதாக இருந்த விவசாயிகளை வாழவிடு பொதுக்கூட்டம் காவல்துறை அனுமதி மறுப்பால் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று 23.05.2012 காலையில் சீர்காழியில் திரண்ட மக்கள் அதிகாரம் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தோழர் ராஜு தலைமையில் மறியல் போராட்டம் செய்தனர். அவர்களை கைது செய்து கொண்டு சென்றது போலீசு. பொதுக்கூட்டம் அனுமதி மறுப்புக்கு காரணம் கேட்டால் நீதிமன்றம் சென்று அனுமதி வாங்குங்கள் என்று போலீசு தட்டிக் கழிக்கப் பார்த்தது. அதை ஏற்காமல் மக்கள் அதிகாரம் தோழர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். போலீசு கைது செய்து வைத்திருக்கும் மண்டபத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்து பொதுக்கூட்டம் அனுமதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று போராடி வருகின்றனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி – 98434 80587.

சமஸ் வழங்கும் இட்டிலி – உப்புமா !

6
samas (4)

மஸ் தமிழ் இந்து நாளேட்டின் நடுப்பக்க பொறுப்பாளர் என்ற முறையில் வாரம் ஒரு புரட்சியை அல்லது அதிர்ச்சியை வாசகர்களுக்கு வழங்க வேண்டிய நிலையில் இருப்பவர். அது அவர் சம்பளத்துக்கு செய்ய வேண்டிய வேலை. அதுவன்றி, நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் வழிகாட்டும் பொறுப்பையும் தன்னந்தனியாக அவர் தன் தோள் மேல் சுமக்கிறார். இதற்கும் சேர்த்துத்தான் இந்து நிர்வாகம் அவருக்கு சம்பளம் வழங்குகிறதா, அல்லது கொழுந்து விட்டெரியும் தேசபக்தியின் காரணமாக இந்தப் பெருஞ்சுமையை அவர் தானாக முன்வந்து ஏற்றிருக்கிறாரா தெரியவில்லை.

பிரபல தேர்தல் ஈவென்ட் மானேஜர் பிரசாந்த் கிஷோர் கூட மோடி, நிதீஷ், ராகுல் போன்ற பலருக்கும் வழிகாட்டியிருக்கிறார். ஆனால் ஒரு நேரத்தில் ஒருவருக்கு மட்டும்தான் அவரால் வழிகாட்ட முடிந்திருக்கிறது. திருவாளர் சமஸோ நேரெதிர் துருவங்களுக்கும் ஒரே நேரத்தில் வழிகாட்டும் ஆற்றல் பெற்றவர்.

அவர் அ.தி.மு.க வில் ஜனநாயகத்தை கொண்டுவருவதற்கு வழி சொல்கிறார். அடுத்த வாரத்தில் திமுக வின் பிரகாசமான எதிர்காலத்துக்கு திராவிட அரசியலைக் கைவிடுவது அவசியம் என்று ஸ்டாலினை எச்சரிக்கிறார். “இந்து மதத்தைக் காப்பாற்றும் பொருட்டு சாதியை ஒழிக்குமாறு” சங்க பரிவாரத்துக்கு வேண்டுகோள் விடுக்கிறார். “காங்கிரசைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்” என ராகுல் காந்திக்கு கண்டிப்புடன் எடுத்துச் சொல்கிறார். அது மட்டுமல்ல, உலகமயமாக்கலின் வெற்றிக்கும், கம்யூனிஸ்டு கட்சிகளின் வெற்றிக்கும் ஒரே நேரத்தில் வழிகாட்டுகிறார். நம்மைப்போல ஒரே ஒரு மூளையுடன் பிறந்த சராசரி மனிதனுக்கு இதெல்லாம் சாத்தியமா என்ற பிரமிப்புதான் எற்படுகிறது.

மனநலம் பாதிக்கப்பட்டு கவனிப்பாரின்றி வீதியில் விடப்பட்ட பரிதாபத்துக்குரிய மனிதர்களில் சிலர் முச்சந்தியில் நின்றபடி, டிராபிக் கான்ஸ்டபிள் வேலை செய்வதை பார்த்திருப்பீர்கள். கார், டூ வீலர், சைக்கிள் முதல் லாரிகள், பேருந்துகள், பாதசாரிகள் வரையிலான அனைவரையும் “நீ அப்படிப்போ, நீ இப்படிப்போ” என்று கடும் கண்டிப்புடன் இவர்கள் நெறிப்படுத்தும் தோரணை இருக்கிறதே, அதைக் கூர்ந்து கவனியுங்கள். மொத்த நகரத்தின் போக்குவரத்தையும் தன்னந்தனியாகச் சமாளிக்க வேண்டிய பொறுப்பை சுமந்து தவிக்கும் ஒரு மனிதனின் மன அவஸ்தை அவர்களது முகத்தில் வெளிப்படுவதை நீங்கள் காண முடியும்.

பரிதாபத்துக்குரிய இத்தகைய மனிதர்களின் அகவுலகமும், “தி நேஷன் வான்ட்ஸ் டு நோ” என்று ராத்திரி 9 மணிக்கு கத்துவாரே, அந்த அர்னாப் கோஸ்வாமியின் அகவுலகமும் ஏதோவொரு விகிதத்தில் கலந்திருப்பதன் விளைவாகக் கிடைக்கும் ஆபாசம்தான், “நான் நினைக்கிறேன், நான் கவனித்து வருகிறேன்” என்ற சமஸின் தோரணை.

மூன்று மந்திரச் சொற்கள்!

“மோடியின் காலத்தை உணர்தல்” என்ற தொடரில் “வெறுப்பரசியலில் நக்சல்பாரிகளின் பங்கு” என்ற தலைப்பில் வன்முறை, சகிப்பின்மை, தூய்மைவாதம் என்ற மூன்று சொற்களை நம் மீது கடாசியிருக்கிறார் சமஸ். பொருள் புரிவதற்கு அவசியமில்லாமல், சில ஒலித்துணுக்குகள் நம் மனதைக் கொள்ளை கொண்டு, மீண்டும் மீண்டும் முணுமுணுக்க வைக்குமல்லவா? அப்படி இந்த சொற்கள் அவரிடம் எப்போது இறங்கின, யாரிடத்திலிருந்து இறங்கின என்று அவருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மூளைக்குள் பல்பு எரிகின்ற படைப்பின் உன்மத்த நிலையில், அப்படி யோசித்துப் பார்க்கின்ற மனநிலை ஞானியர்க்கு இருப்பதில்லை.

அஞ்ஞானிகளுக்கு உபதேசிக்கும் பொறுப்பெடுத்துள்ள ஜெயமோகன்  ம.க.இ.க வை குறிவைத்து வெகுநாட்களாக எழுதி வரும் புளித்துப் போன சரக்குதான் சகிப்பின்மை, வெறுப்பரசியல் போன்றவை. அந்த புளித்துப்போன இட்லியை உப்புமாவாக தயாரித்திருக்கிறார் சமஸ். இந்த இட்டிலி ஒரு நடுப்பக்க பிளேகியரிசம்!

அத்வானியின் ரத யாத்திரை காலத்தில் தொடங்கி, தற்போதைய மோடியின் காலம் வரையில் சங்க பரிவாரத்தினை  எதிர்த்து வருபவர்கள் ம.க.இ.க-வினர் என்பது எச்.ராஜாவும் கூட ஒப்புக்கொள்ளக் கூடிய உண்மை. “அது உண்மையல்ல, இடதுசாரி ஜனநாயகக் குரல்களை வீழ்ச்சியை நோக்கித் தள்ளியதன் மூலம், ம.க.இ.கவும் நாடு முழுவதும் உள்ள நக்சல்பாரி அமைப்புகளும் மறைமுகமாக வலதுசாரிகளுக்கு (சங்க பரிவாருக்கு) உதவியிருக்கிறார்கள்” என்பது சமஸின் குற்றச்சாட்டு.

இந்தக் குற்றச்சாட்டின் அருகதையைப் பரிசீலிப்போம்.

அஞ்ஞானிகளுக்கு உபதேசிக்கும் பொறுப்பெடுத்துள்ள ஜெயமோகன் ம.க.இ.க வை குறிவைத்து வெகுநாட்களாக எழுதி வரும் புளித்துப் போன சரக்குதான் சகிப்பின்மை, வெறுப்பரசியல் போன்றவை. அந்த புளித்துப்போன இட்லியை உப்புமாவாக தயாரித்திருக்கிறார் சமஸ்.

மோடியின் காலம் எப்படி இருக்கிறது? மூன்றாண்டு காலத்தில் வாக்குறுதிகள் எதையும் மோடி நிறைவேற்றவில்லை. “அச்சே தின்” சந்தி சிரிக்கிறது. பஞ்ச் டயலாக்குகளும் காகித திட்டங்களும்தான் அறிவிக்கப்படுகின்றனவே தவிர காரியத்தில் எதுவும் இல்லை. பொருளாதாரம் எழுந்து நிற்க மறுக்கிறது. வேலைவாய்ப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.  பண மதிப்புநீக்கம், ஆதார் திணிப்பு முதலான பல நடவடிக்கைகள் மக்களுக்கு கடும் துன்பத்தையே கொடுத்திருக்கின்றன. இருப்பினும் சமீபத்திய தேர்தல்களில் மோடி வெற்றி பெற்றிருக்கிறார். காரணம் என்ன என்பது ஆய்வாளர்கள் பலர் விவாதித்து வருகின்ற கேள்வி.

எதிர்க்கட்சிகளின் ஊழல், பிழைப்புவாதம், குடும்ப அரசியல், பாஜக வுக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைக்கப்படாமல் இருப்பது, மாற்றுத் தலைமையில்லாமலிருப்பது – என்பன போன்ற காரணங்களையும் இவையன்றி ஒவ்வொரு மாநிலத்தின் விசேடமான காரணங்களையும் எதிர்க்கட்சிகளின் தவறுகளாகவும் பலவீனங்களாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

மதவெறியைத் திட்டமிட்டே தூண்டுவது, சாதிப் பிளவுகளைப் பயன்படுத்திக் கொள்வது, எதிர்க்கட்சி அதிருப்தியாளர்களை வலை வீசிப்பிடிப்பது, மையப்படுத்தப்பட்ட பொய்ப்பிரச்சார நடவடிக்கைகள், ஊடகங்கள் மற்றும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் ஏகோபித்த ஆதரவு, ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் குறிவைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் துணையுடன் நடத்தப்பட்ட தேர்தல் வேலை போன்றவற்றின் மூலம்தான் மோடியின் இமேஜ் முட்டுக்கொடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

ஜனநாயக உணர்வற்ற நாயக வழிபாட்டு மனோபாவம், சாதி – மதவெறிக்கு ஆட்படுவது, மோடியை சூப்பர்மேனாக காட்டும் விளம்பர மோசடிக்கு இரையாவது, எதிர்க்கட்சிகளின் மீதான நம்பிக்கையின்மை போன்ற பல காரணங்கள், மோடியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த வாக்காளர்களின் பலவீனங்களாக ஆய்வாளர்களால் கூறப்படுகின்றன.

நேர்மறையில் எதையும் சாதிக்க இயலாத மோடியின் கையில் இருக்கும் ஆயுதங்கள் இரண்டு. ஒன்று மதவெறியைத் தூண்டுவது, இரண்டாவது – தனது எதிர் தரப்பினரை ஒடுக்குவது, மதிப்பிழக்கச் செய்வது, தோல்வி மனப்பான்மையில் ஆழ்த்துவது.

தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக அரசு மோடியின் அடிமையாக நடந்து கொண்டபோதிலும், தமிழ்ச் சமூகம் மோடியையும் பாரதிய ஜனதாவையும் வெறுக்கிறது. பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் பாஜகவை தமிழக மக்களின் தலையில் கட்டுவதற்கு பெருமுயற்சி செய்துதான் பார்க்கிறார்கள். இருப்பினும் சமூக ஊடகங்களும் சமூகத்தின் பொதுக்கருத்தும் ஆர்.எஸ்.எஸ் கும்பலை கூர்மையாகத் தாக்கித் தனிமைப் படுத்துகின்றன. இந்தப் பின்புலத்தில் சமஸின் புளித்த இட்லி உப்புமாவைக் கிளறிப் பார்ப்போம்.

ஒடுக்கச்சொல்லும் எச்.ராஜா, ஒதுக்கச் சொல்லும் சமஸ்!

ஹெச்.ராஜாவும், பொன்னாரும் நக்சல் ஆதரவு இயக்கங்களை ஒடுக்கச் சொல்கிறார்கள். சமஸ் ஒதுக்கச் சொல்கிறார். இரண்டு சொற்களுக்கும் அவற்றின் பொருளுக்கும் ஒரு எழுத்துக்கு மேல் வேறுபாடு இல்லை.

“நக்சல் ஆதரவு இயக்கங்கள், (தமிழகத்தில் ம.க.இ.க, புதிய ஜனநாயகம் போன்றவை)  இடதுசாரி ஜனநாயக சக்திகளை கண்ணியப் படுகொலை செய்ததன் மூலம் அவர்களை மதிப்பிழக்க வைத்து, மோடியின் வெற்றிக்கு உதவியிருக்கிறார்கள்” என்பது சமஸின் ஆய்வு முடிவு.

மோடி அரசை முறியடிக்க விரும்புகிறவர்கள் ம.க.இ.க வினரை ஒதுக்கவேண்டும் என்பதுதான் சமஸ் கூறவரும் செய்தி. சமஸின் இந்த “மொழி” நமக்கு ஏற்கெனவே பரிச்சயப்பட்ட போலீசின் “மொழி”தான்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் நடக்கும் நெடுவாசல், நல்லாண்டார் கொல்லை உள்ளிட்ட கிராமங்களை மொய்க்கும் உளவுத்துறையினர் அந்த மக்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை, “மக்கள் அதிகாரம் அமைப்பினரை உள்ளே விடாதீர்கள்” என்பதுதான். டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிவாரணம் கோரி விவசாயிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரினால், அதில் “மக்கள் அதிகாரம் அமைப்பினர் உரையாற்றக் கூடாது” என்பதை நிபந்தனையாகவே விதிக்கிறது போலீசு. தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு போலீசு வழங்கும் அறிவுரையும் இதுவேதான்.

எச்.ராஜாவின் கூற்றுப்படி நெடுவாசல் போராட்டம் ஒரு நக்சலைட் சதி, தமிழிசையின் கூற்றுப்படி மருத்துவர்கள் போராட்டமும் நக்சலைட்டு சதி, பொன்னாரின் கருத்துப்படி (சமஸ் கருத்தின்படியும்) மெரினா போராட்டம் வன்முறையில் முடிந்தது நக்சலைட் சதி! மோடி வறட்சி நிவாரணம் வழங்காததை நிருபர்கள் கேள்விக்குள்ளாக்கினால், ஏச். ராஜா கூற்றுப்படி அது பிரதமருக்கு எதிரான கண்ணியப் படுகொலை (belittling the prime minister).

போலீசின் மொழியையும் சங்க பரிவாரத்தின் மொழியையும் மோடி எதிர்ப்பு போர்க்குரல் போல மார்க்கெட்டிங் செய்கிறாரே சமஸ், இதன் பொருள் என்ன?

தாக்குதல் இலக்கு – “தாராளர்கள்”!

வளர்ச்சி என்ற பொய்மானைக் காட்டி அதிகாரத்தைக் கைப்பற்றிய மோடியின் ஆட்சியின் கீழ், நிர்வாகம், கல்வி போன்றவற்றில் தொடங்கி இராணுவம், நீதித்துறை வரையிலான எல்லா நிறுவனங்களையும் சங்க பரிவாரம் கைப்பற்றி வருகிறது. இதற்கு எதிராக குரல் கொடுப்பவர்களில் பலர் அறிவுத்துறையினர் என்பதும் எதார்த்தம்.

மோடி அரசின் தாக்குதல் லிபரல் அறிவுத்துறையினர் முதல் இடதுசாரி அறிவுத்துறையினர் வரையிலானோர் மத்தியில் தெளிவையும் தடுமாற்றத்தையும் ஒரே நேரத்தில் தோற்றுவித்திருக்கிறது.

சான்றாக கோமாதாவின் பெயரால் நடத்தப்படும் படுகொலைகள் குறித்து, “அரசியல் சட்டம் – மத நல்லிணக்கம்” என்ற வரம்புகளுக்குள் நின்று மட்டுமே பேசிக்கொண்டிருந்த பலரும் பார்ப்பன மதம் என்ற கோணத்தில் இந்து மதவெறியை எதிர்த்துப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதே போல தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகள் குறித்து உருவாக்கப்பட்ட பொய் பிம்பங்கள் நொறுங்கி, மனித முகம் கொண்ட உலகமயம் என்ற கருத்தாக்கமே “கவைக்குதவாத கற்பனை” என்பது மக்களிடையே அம்பலமாகி வருகிறது. அதற்குச் சான்றுதான் கெயில் எதிர்ப்பு, மீதேன் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டங்கள்.

மனித முகம் கொண்ட பார்ப்பனியமும் இல்லை, மனித முகம் கொண்ட உலகமயமும் இல்லை என்கின்ற தெளிவு பரவி வருவதைத்தான் “நெகிழ்வுத் தன்மைக்கு எதிரான போக்கு” வளர்ந்து வருவதாகவும் வெறுப்புச் சொல்லாடல் வளர்ந்து வருவதாகவும் சொல்கிறார் சமஸ்.

இனி, அறிவுத் துறையினரின் தடுமாற்றம் குறித்த பிரச்சினைக்கு வருவோம்.

லிபரல் அறிவுத் துறையினருக்கு மோடியைத் தோற்கடிப்பது முயற்கொம்பாகவே தெரிகிறது. எதிர்க் கட்சிகளின் இயலாமை மட்டுமல்ல, அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறை உள்ளிட்ட இந்த அரசமைப்பு, பார்ப்பன பாசிசத்துக்கு ஒத்துப் போவதை அவர்கள் காண்கிறார்கள். அவர்கள் நம்பிக்கொண்டிருந்த இந்த நிறுவனங்கள் அனைத்தும், சட்டத்தின் ஆட்சிக்கு எதிராகத் திரும்பியிருப்பதையும் காண்கிறார்கள். இந்த எதார்த்த நிலைமைகள், அரசமைப்பின் வரம்பைத் தாண்டி சிந்திக்குமாறு அவர்களை நிர்ப்பந்திக்கின்றன. எனினும், அவ்வாறு சிந்திக்க இயலாமல் அவர்கள் தடுமாறுகிறார்கள்.

இந்த தடுமாற்றத்தை ஆள் வைத்து மோப்பம் பிடித்துவிட்ட சமஸ், அவர்களுக்குத் தூண்டில் வீசுகிறார். கொள்கைப் பிடிப்பு கொண்டவர்களைத் தூய்மைவாதிகள் என்று தூற்றுகிறார். தூய்மைவாதம் காரணமாகத்தான் கம்யூனிஸ்டு கட்சிகள் வளர முடியவில்லை என்று குற்றவுணர்வுக்கும் ஆளாக்குகிறார்.

சித்தாந்த ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் தடுமாற்றமின்றி பாசிசத்தை எதிர்த்து நிற்கும் சக்திகள்தான் பாசிச எதிர்ப்பின் கூர்முனையாக இருக்க முடியும். இட்லர் காலம் தொடங்கி இன்று வரை இதுதான் உண்மை. அத்தகையவர்கள் யார் என்று எச்.ராஜாவுக்கும் பொன்னாருக்கும் தெரிந்திருப்பதனால்தான் அவர்கள் நக்சல் ஆதரவு இயக்கங்களை ஒடுக்கச் சொல்கிறார்கள். சமஸ் ஒதுக்கச் சொல்கிறார். இரண்டு சொற்களுக்கும் அவற்றின் பொருளுக்கும் ஒரு எழுத்துக்கு மேல் வேறுபாடு இல்லை.

மக்களை சகிப்பின்மைக்குத் தூண்டியது யார்?

தோல்வியடைந்த நக்சல்பாரிகளின் மொழி மட்டும் வெற்றியடைந்திருப்பதாக அவரே கூறியிருப்பதால், அவரது ‘ஆய்வே’ கேலிக்குறிய முறையில் தோல்வியை ஒப்புக் கொள்கிறது.

“நக்சல் ஆதரவு இயக்கங்கள் தோல்வி அடைந்து விட்டன” என்ற திருப்தியான பிரகடனத்துடன் தனது கட்டுரையைத் தொடங்குகிறார் சமஸ். அடுத்தடுத்த பத்திகள் “யு டர்ன்” எடுக்கின்றன. தமிழக ஊடகவியலாளர்களின் மொழி நடையில் புதிய ஜனநாயகத்தின் சகிப்பின்மை மொழி, முன்னணி வார இதழ் ஒன்றின் அட்டையில் புதிய ஜனநாயகம் அட்டையின் சாயல், இடது சாரி இளைஞர்கள் சமூக வலைதளத்தில் கையாளும் மொழியும் புதிய ஜனநாயகத்தின் சகிப்பின்மை மொழி என்று பட்டியலிடுகிறார் சமஸ்.

தோல்வியடைந்த நக்சல்பாரிகளின் மொழி மட்டும் வெற்றியடைந்திருப்பதாக அவரே கூறியிருப்பதால், அவரது ‘ஆய்வே’ கேலிக்குறிய முறையில் தோல்வியை ஒப்புக் கொள்கிறது. சகிப்பின்மை ஊடகங்களில் மட்டும் அதிகரிக்கவில்லை. சமூகம் முழுதும் அதிகரித்து வருகிறது என்பதை அவருக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது. பெண்கள் கடப்பாரை ஏந்தி டாஸ்மாக் கடைகளை இடிக்கிறார்களே, அது ஊடகங்களின் மொழியைக் காட்டிலும் “வலிமையான சகிப்பின்மை”யில்லையா? காந்திய வழியிலிருந்து இவர்களை வன்முறைக்கும் சகிப்பின்மைக்கும் திருப்பியவர்கள் யார்?

“இந்த அரசமைப்பிடம் முறையிட்டுப் பயனில்லை. அதிகாரத்தை மக்கள் தம் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். நம் ஊரில் இனி டாஸ்மாக் கிடையாது அடிச்சு தூக்கு” என்று இரண்டாண்டுகளுக்கு முன்னரே மக்கள் அதிகாரம் அறைகூவல் விடுத்தது உண்மை. அடித்து தூக்கியதும் உண்மைதான். இருப்பினும், மக்களை கடப்பாரை ஏந்த வைத்த பெருமை இந்த அரசையும், போலீசையும், நீதிமன்றத்தையுமே சாரும்.  தமது நடவடிக்கைகள் மூலம் மக்கள் அதிகாரத்தின் அறைகூவல் சரியானது என்று மக்களுக்குப் புரியவைத்தவர்கள் அவர்களல்லவா?

சமஸின் சகிப்பு – ஊடகங்களின் சகிப்பின்மை!

ஊடகங்களின் மொழி மாறி வருகிறது என்று சமஸ் தன்னை மறந்து கூறுவதும் உண்மைதான். அதற்கு புதிய ஜனநாயகம் எள்ளளவேனும் காரணமாக இருந்தால் அது குறித்து பெருமை கொள்கிறோம். லஞ்ச ஊழல்களை, சமூக ஒடுக்குமுறைகளைப் பற்றி எழுதிவிட்டு, “முதல்வர் கவனிப்பாரா, ஆட்சியர் கவனிப்பாரா, அரசு பரிசீலிக்குமா” என்றெல்லாம் கட்டுரையை முடித்த காலம் ஒன்றிருந்தது. “அவர்கள்தான் திருடர்கள்” என்று தெரிந்த பின்னால், “எந்தக் கொடுமையை அம்பலப்படுத்தினாலும் நீதி கிடைக்காது” என்று தெளிந்த பின்னால் சொரணையும் நேர்மையும் உள்ள பத்திரிகையாளனாக இருப்பின், அவனை கோபமும் கையறு நிலையும் பற்றிக் கொள்கின்றன. அவனுடைய மொழியில் சகிப்பின்மை வெளிப்படத்தான் செய்யும்.

“தமிழ்ச் சமூகத்தை சீரழித்த சதிகாரி” என்று ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது புதிய ஜனநாயகம். “அடிமைகளே உங்கள் ஊழல் ராணியின் கல்லறையை கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்துங்கள், இல்லையேல் மக்கள் அதை அகற்றுவார்கள்” என்று வீடியோ வெளியிட்டது விகடன். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நக்சல்பாரிகள் தகர்ப்பது குறித்து சமஸ் ரொம்பவும்தான் பதறுகிறார். குன்ஹா தீர்ப்புக்கெதிராக வெறியாட்டம் நடத்தி ஜனநாயக அமைப்பின் மீதான நம்பிக்கையை அதிமுகவினர் தகர்த்தார்களே, அப்போது அவர் என்ன செய்தார்?

அன்றைய கடையடைப்பை பயன்படுத்தி பால் பாக்கெட்டுக்கு விலையேற்றிய வியாபாரிகளை, ஜெயலலிதாவுடன் இணை வைத்து, “குன்ஹா அவர்களே எங்களுக்கு என்ன தண்டனை?” என்று தலைப்பு போட்டு கட்டுரை எழுதினார்.  ஜெ வின் ஊழல் குறித்து குற்றம் சாட்டினால், “எவன் யோக்கியன்” என்று நாஞ்சில் சம்பத் எழுப்பக்கூடிய கேள்வியையே தத்துவ விசாரம் போன்ற பாவனையில் ஒளித்து எழுதிய கயமையல்லவா அந்த எழுத்து?

 “ஊத்திக்கொடுத்த உத்தமி”யும் “கண்ணியக் கொலை”யும்!

வெள்ளை மாளிகை முன் படுத்திருக்கும் நாயாக மன்மோகன் சிங்கை சித்தரித்து புதிய ஜனநாயகம் வெளியிட்ட புகைப்படம் சமஸின் நினைவிலேயே இருக்கிறதாம்! ஏன், நாடாளுமன்றத்துக்கும் தெரியாமல் காட் ஒப்பந்தத்தில் கள்ளத்தனமாக அவர் கையெழுத்திட்டதும், அதே முறையில் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை இந்தியா பெற்ற பேறு என்று ஆக்ஸ்போர்டுக்குச் சென்று போற்றிப் பேசியதும் சமஸின் நினைவில் நிற்கவில்லை போலும்! புதிய ஜனநாயகம் வரைந்தது வெறும் படம் மட்டும்தான். மேற்சொன்ன நடவடிக்கைகள் மூலம் இந்திய மக்களை நாயினும் கீழாக நடத்தியவர் மன்மோகன் சிங் அல்லவா?

காங்கிரசு முதல் கம்யூனிஸ்டு கட்சி வரையிலான எல்லாக் கட்சிகளையும் விமரிசித்திருக்கிறோம். புலிகள், மண்டல் அரசியல், தமிழினவாதம் போன்ற, மற்ற கட்சியினர் தவறென்று தெரிந்தாலும் பேசத்தயங்குகின்ற விசயங்களைப் பேசியிருக்கிறோம். பதிலுக்கு விமரிசிக்கப்பட்டிருக்கிறோம். அனைத்தும் பொதுவெளியில் நடந்தவைதான். இவற்றிலெல்லாம் புதிய ஜனநாயகத்தின் கருத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். அதை சகித்துக் கொள்ள முடியாததன் விளைவே இந்த புளித்த உப்புமா.

கோவன் கைது செய்யப்பட்டதை காங்கிரசு கட்சியினரும் திமுகவினரும் கண்டித்தபோது, “ம.க.இ.க காரர்கள் உங்கள் தலைவரை எப்படி தாக்கியிருக்கிறார்கள் தெரியுமா?” என்று கேட்டு தரம் தாழ்ந்த விதத்தில் கோஷ்டி சேர்க்க முயன்றார் சி.கே சரஸ்வதி. தனது கட்டுரையில் சமஸ் செய்திருப்பதும் அதே வேலைதான்.

சில நாட்களுக்கு முன், “வலது கம்யூனிஸ்டு கட்சி அலுவலகமும் ரிலையன்ஸ் அலுவலகமும் ஒரே மாதிரி இருப்பதாக” எழுதியிருந்தார் சமஸ். பதிலுக்கு அவரை “சகுனி” என்று சாடியிருந்தது ஜனசக்தி. அடுத்த கட்டுரையில் “அவர்களை போலி கம்யூனிஸ்டு என்று எப்படி சொல்லப்போச்சு?’ என்று நம்மிடம் சாமியாடுகிறார். இரண்டு நாட்களுக்குப் பின் “சீக்கிரம் ஐக்கியப்படுமாறு” வலது இடது கம்யூனிஸ்டுகளுக்கு அறிவுரை கூறுகிறார். சமஸின் எழுத்தை ஆபாசம் என்று நிரூபிக்கும் சான்றுகள் இவை.

முதலாளித்துவ அரசியலில் மூழ்கி முத்தெடுக்கும் கட்சிகள் என்ற காரணத்தினால்தான் போலி கம்யூனிஸ்டு என்று இரு கட்சிகளையும் விமரிசிக்கிறோம்.  “இன்னும் போதுமான அளவுக்கு உலகமயமாக்கத்தை ஆதரிக்கவில்லை” என்று அந்தப்பக்கம் திரும்பி அவர்களை விமரிசிக்கிறார் சமஸ், இந்தப்பக்கம் திரும்பி, “அவர்களை போலிகள் என்று எப்படி நீங்கள் கண்ணியப் படுகொலை செய்யலாம்?” என்று நம்மிடம் எகிறுகிறார்.

போலி கம்யூனிஸ்டு என்ற எங்களது விமரிசனத்தில் அக்கட்சி அணிகளுக்கு உடன்பாடு இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் அது கம்யூனிசத்தின் பால் நாங்கள் கொண்ட அக்கறையிலிருந்து பிறந்த விமரிசனம் என்பதை அவர்களும் அறிவார்கள். சமஸ் வெளிப்படுத்தும் “மிகை நடிப்பு அக்கறை” சந்தேகத்துக்குரியது என்பதையும் விளங்கிக் கொள்வார்கள்.

“நல்லகண்ணுவே போலி கம்யூனிஸ்டா?” என்று கொதிக்கிறார் சமஸ். “அப்படியானால், அவரைத்தவிர மற்றவர்களெல்லாம் போலி கம்யூனிஸ்டுகளா?” என்றுதான் பதில் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கும். தளி ராமச்சந்திரனின் ஊரறிந்த குற்றங்கள், தா.பா போயசுடன் பேணும் நெருக்கம்,  விஜயகாந்தை முதல்வராக்கும் முடிவு – போன்றவை குறித்த நல்லகண்ணுவின் கருத்து என்ன? அநீதியைக் கண்டுங்காணாமல் ஒதுங்குபவர்களும், மவுனம் சாதிப்பவர்களும் நல்லவர்களா? தா.பாண்டியனை நல்லகண்ணுவிடமிருந்து பிரித்துக் காட்டுவதும், கம்யூனிஸ்டு கட்சியை மற்ற முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்து பிரித்துக் காட்டுவதும் “நல்லகண்ணுவின் எளிமை”தான் என்றால், அந்த எளிமை தவறுகளை மறைக்கின்ற முகமூடி அல்லவா?

நல்லெண்ணத் தூதர் – சமஸ்

“நக்சல்பாரிகள் உரையாட மறுப்பவர்கள். ஏனென்றால் அடிப்படையில் மனிதர்களின் நல்லெண்ணத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எதிர்தரப்பை அழித்தொழிப்பதே அவர்களது வழிமுறை. காரணம் அவர்களுடைய வெறுப்பரசியல், அதற்குப் பின்னால் இருப்பது சகிப்பின்மை, அதற்குப் பின்னால் இருப்பது தூய்மைவாதம். தூய்மைவாதிகள் என்ற முறையில் வகையில் இந்துத்துவ பாசிஸ்டுகளும் நக்சல்பாரிகளும் ஒன்றே” – என்றவாறு போகிறது அவரது ஆய்வு.

சுரண்டும் வர்க்கம் – சுரண்டப்படும் வர்க்கம் என்று பகைமையான வர்க்கங்களாகப் பிரிந்திருக்கும் சமூகத்தில், ஒடுக்கும் சாதி – ஒடுக்கப்படும் சாதி என்று பிளவு பட்டிருக்கும் சமூகத்தில், “நல்லெண்ணம், சகிப்புத்தன்மை, வெறுப்பு, தூய்மை” ஆகியவற்றை அனைவருக்கும் பொதுவானவை போலப் பேச முடியுமா?

தீண்டாமை ஒழிப்புக்கு ஆதிக்க சாதியினரின் “நல்லெண்ணத்தின்” மீது தாழ்த்தப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமா? பன்னாட்டு முதலாளி வர்க்கத்தின் நல்லெண்ணத்தின் மீது தொழிலாளி வர்க்கம் நம்பிக்கை வைக்க வேண்டுமா? பசுப்பாதுகாவலர்களின் நல்லெண்ணத்தின் மீது முசுலீம்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமா?  “சப் கா சாத் சப் கா விகாஸ்” (எல்லோருடனும் – எல்லோருக்கும் முன்னேற்றம்) என்ற மோடியின் நல்லெண்ணத்தின் மீது நம்பிக்கை வைத்ததன் விளைவு நரகம்தான் என்பதை மக்களின் அனுபவம் காட்டவில்லையா?

“புறவயமான உண்மைகளிலிருந்து தொடங்கு” என்பது மார்க்சியம். “நல்லெண்ணத்திலிருந்து தொடங்கு” என்பது காந்தியப் பித்தலாட்டம். தீண்டாமை ஒழிப்புக்கு ஆதிக்க சாதியினரின் நல்லெண்ணத்தில் நம்பிக்கை வைக்கச் சொன்னார் காந்தி. மறுத்தார் அம்பேத்கர். இன்று அந்த நல்லெண்ணத்தின் கோரைப்பற்களில் ரத்தம் வழிகிறது. அதுதான் இந்துத்துவம்.

வர்க்க ரீதியாகவும், சாதி, மத, இன ரீதியாகவும் ஆதிக்கம் செய்பவர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் அடக்கப்படுபவர்களின் பால் சகிப்புத்தன்மை காட்ட வேண்டுமா, அல்லது அடக்கப்படுபவர்கள் ஆண்டைகளின் பால் “சகிப்புத்தன்மை” காட்ட வேண்டுமா? “நீ தீண்டத்தகாதவன்” என்று ஆதிக்க சாதிக்காரன் சொல்வதும், “தொழிலாளர் நல சட்டங்கள் ரத்து செய்யப்படவேண்டும்” என்று மோடி அரசு கூறுவதும், சகிப்புத்தன்மையுடன் காது கொடுக்க வேண்டிய “மாற்றுக் கருத்து”களா?

“எதிரிகளிடம் மட்டுமல்ல, நண்பர்களிடமும் சகிப்புத்தன்மை காட்டாதவர்களே நக்சல்பாரிகள்” என்கிறார் சமஸ். நண்பர்கள் என்று அறியப்படுவோரே ஆயினும், அவர்களது சொல்லும் செயலும் சகித்துக் கொள்ள இயலாதவையாக, மக்கள் விரோதமானவையாக இருக்கும் பட்சத்தில் அவற்றின் பால் எப்படி சகிப்புத்தன்மை காட்ட இயலும்?

“மாவோயிஸ்டுகள் இவர்கள் எந்த தரப்புக்காக பரிந்து பேசுவதாக சொல்கிறார்களோ, அந்த்த் தரப்பினரைத்தான் அதிகம் கொல்கிறார்கள். தண்டகாரண்யத்தில் கான்ஸ்டபிள் உடையில் நிற்பவர்கள் பழங்குடிகள்தானே” என்கிறார் சமஸ். அடேயப்பா, இந்த அறிவுக்காகத்தான் இந்து நாளேட்டின் நடுப்பக்கத்தை இவரிடம் லீசுக்கு விட்டிருக்கிறார்களா? அம்பானியும் அதானியும் யூனிபார்ம் போட்டு சி.ஆர்.பி.எப் இல் துப்பாக்கியை ஏந்தி நின்ற பின்னால் ஆயுதப் போராட்டம் நடத்துமாறு மாவோயிஸ்டுகளுக்கு அறிவுருத்த வேண்டுமோ!

“ஓநாய்க்கும் ஆட்டுக்கும் இடையில் சமரசம் கிடையாது” என்று பேசுவது நக்சல்பாரி அரசியல். “தமிழிசையுடன் பேசு, அமித் ஷாவுடன் பேசு, மோடியுடன் பேசு” என்கிறார் சமஸ்.

இந்து மதவெறி என்று சொல்லத் தயங்குவோரால் புழக்கத்தில் விடப்பட்ட “வெறுப்பு அரசியல்” என்ற சொற்றொடரை நக்சல்பாரிகளுக்கு எதிராக ஏவுகிறார் சமஸ். சுரண்டலையும் ஆதிக்கத்தையும் வெறுக்கச் சொல்லும் நக்சல்பாரி அரசியல், ஒடுக்கப்படும் சமூகத்தினரை வெறுக்கச் சொல்லும் இந்துத்துவ அரசியல் ஆகிய இரண்டுமே வெறுப்பு அரசியலாம்! உழைக்கும் வர்க்கத்தின் மீது பணக்கார வர்க்கம் காட்டும் வெறுப்பும், தன்னைச் சுரண்டும் பணக்கார வர்க்கத்தின் மீது உழைக்கும் வர்க்கம் காட்டும் வெறுப்பும் ஒன்றா? பார்ப்பன, ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்படும் சாதிகள் மீது காட்டும் வெறுப்பும், ஒடுக்கப்படும் சாதிகள் ஆதிக்கசாதியினர் மீது கொண்டுள்ள வெறுப்பும் ஒன்றா?

உழைக்கும் மக்களுக்கு எதிரான வெறுப்பரசியல் நடத்துவது அரசும் ஆளும் வர்க்கங்களும்தான். அவர்களுக்கு சொம்படிக்கும் ஊடகங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.  “விவசாயிகள் வறட்சியால் சாகவில்லை” என்று கூறுகின்ற, “சாராயக்கடைகளை நடத்தியே தீருவேன்” என்று வெறி பிடித்து அலைகின்ற, “தொழிலாளிகளின் ஓய்வூதியத்தை திருடிக்கொண்டு, அதைத் தட்டிக்கேட்டால் வேலைநீக்கம்” என்று மிரட்டுகின்ற – இந்த அரசின் மீது பாதிக்கப்பட்ட மக்கள் காட்ட வேண்டிய உணர்ச்சி – வெறுப்பைத் தவிர வேறு என்ன?

“தொட்டால் தீட்டு” என்று தாழ்த்தப்பட்ட மக்களை ஒதுக்கி வைக்கும் பார்ப்பனியத் தூய்மைவாதமும், சாதி ஆதிக்கவாதிகளை ஒதுக்கி வைக்கும் கம்யூனிஸ்டுகளின் தூய்மைவாதமும் ஒன்றா? கம்யூனிசத்தை ஒழித்துக் கட்ட விரும்பும் மெக்கார்த்தியிச தூய்மை வாதமும், முதலாளித்துவக் கருத்தியலின் கறை படியாமல் தன் தூய்மையைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடும் கம்யூனிஸ்டு கட்சியின் தூய்மைவாதமும் ஒன்றா? “லஞ்சம் வாங்காதே, பொதுச் சொத்தை திருடாதே” என்று கூறுபவர்களைக்கூட தூய்மைவாதி என்று தூற்றும் நபர்கள் இருக்கிறார்கள். அவ்வாறு தூற்றுவோர் பிழைப்புவாதிகள் என்றல்லவா அறியப்படுகிறார்கள்!

இந்துத்துவ மண் வாசனை!

“ஓநாய்க்கும் ஆட்டுக்கும் இடையில் சமரசம் கிடையாது” என்று பேசுவது நக்சல்பாரி அரசியல். “தமிழிசையுடன் பேசு, அமித் ஷாவுடன் பேசு, மோடியுடன் பேசு” என்கிறார் சமஸ். எதிரியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும், தற்காலிக சமரசம் மேற்கொள்வதும் இல்லாத போராட்டங்கள் உலகத்தில் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். சமஸ் பேசச் சொல்வதன் பொருள் வேறு. அவர் பாசிஸ்டுகளுடன் பேசி கருத்தொற்றுமைக்கு வரச்சொல்கிறார். பேச மறுப்பவர்களும் பாசிஸ்டுகளே என்று முத்திரை குத்துகிறார்.

ஏனென்றால், “இந்த மண்ணில் ஆயுதப் பாதையும் வன்முறை அரசியலும் ஒருநாளும் எடுபடாது” என்று நக்சல்பாரிகளுக்கு அறிவுரை சொல்கிறார் சமஸ். ஆயுதமும் வன்முறையும் இல்லாமலும், அந்த வன்முறைக்கு இந்து பொது உளவியலின் ஒப்புதல் இல்லாமலும்தான் இந்த மண்ணில் இந்துத்துவம் அரியணை ஏறியிருக்கிறதா? தீண்டாமைக் கொலைகளும் ஆணவக் கொலைகளும் வேறு ஏதோவொரு மண்ணில் நடக்கும் வன்முறைகளா?

அரச பயங்கரவாதத்தை வன்முறை என்றே கருதாத ஐ.பி.எஸ் அதிகாரி போல, சாதி ஒடுக்குமுறையை பாரதப் பண்பாடாக போற்றுகின்ற பார்ப்பனியர்கள் போல சிந்திப்பவர் சமஸ். அதனால்தான் போலீசு காவலில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட தோழர் சாரு மஜும்தாரை, “இறந்தார்” என்று எழுதுவதற்கு அவர் கூசவில்லை. கார்ப்பரேட் ஆதரவு நரவேட்டைக்காக, மாவோயிஸ்டுகளை “நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல்” என்று கூறிய மன்மோகன் சிங்கின் வருணனையை அப்படியே வழிமொழிவதிலும் அவருக்கு உறுத்தல் இல்லை.

நக்சல்பாரி இயக்கத்தை இந்துத்துவ பாசிச எதிர்ப்பின் ஈட்டி முனை என்று நாம் கருதுகிறோம். பாஜக வினரும் அவ்வாறே கருதுகிறார்கள். ஆனால் “எதிர்ப்பு சக்திகளை பலவீனப்படுத்தி சங்க பரிவாரத்துக்கு உதவியிருப்பவர்கள் நக்சல்பாரிகள்” என்கிறார் சமஸ்.

“தோற்றுப்போய் பல்லிளித்து மக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட இந்த அரசமைப்புக்கு மாற்றாக மக்கள் அதிகாரத்தைக் கட்டியமைக்க வேண்டும்” என்று நாம் கூறுகிறோம். “ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைத்தவர்களே நக்சல்பாரிகள்தான்” என்று நம்மைக் குற்றம் சாட்டுகிறார் சமஸ்.

இந்த அரசமைப்பின் துணை கொண்டு இந்துத்துவத்தை வீழ்த்த சண்டமாருதம் செய்யும் சமஸ், “இப்போது கூட இல்லையென்றால் எப்போது இணையப்போகிறீர்கள்” என்று கம்யூனிஸ்டுகளை கடிந்து கொள்கிறார். இணைந்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான பதில் அடுத்த நாள் வருகிறது. “தமிழிசையிடமே பேச முடியாவிட்டால், மோடியிடம் எப்படி பேசப்போகிறோம்?”

எட்டப்பன் கூட தனியாகத்தான் கும்பினிக்காரனின் காலில் விழுந்திருக்கிறான். “கும்பினிக்கு எதிரான பாளையக்காரர்களை அணிதிரட்டி, போர் போர் என்று சங்க நாதம் செய்து, பிறகு கூட்டமாகப் போய் காலில் விழுந்தால், சன்மானம் வெயிட்டாக கிடைக்கும்” என்ற சாமர்த்தியம் எட்டப்பனுக்கு இல்லை. என்ன செய்வது கொஞ்சம் பிந்திப் பிறந்து விட்டார் சமஸ்!