Thursday, June 18, 2026
முகப்பு பதிவு பக்கம் 499

கடனைக் கட்டாதே ! கந்து வட்டிக் கொடுமைக்கு முடிவு கட்டு ! கரூர் ஆர்ப்பாட்டம்

0

கடனைக் கட்டாதே ! கந்து வட்டிக் கொடுமைக்கு முடிவு கட்டு !! கண்டன ஆர்ப்பாட்டம்

டந்த 15.11.2017 கரூர் பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மேற்கண்ட தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டதிற்கு மக்கள் அதிகாரம் கரூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்திவேல் தலைமையேற்று நடத்தினர். பறையிசையுடன் துவங்கிய ஆர்ப்பாட்டம் மக்களை வரவழைத்தது.

போலீசின் அயோக்கியத்தனத்தை கிழிக்க போறாங்கன்னு தெரிந்து காவல்துறை ஆர்ப்பாட்டத்தை கலைத்து விட சிந்தித்தது. ஆர்ப்பாட்டத்தில் நாற்காலி போடக்கூடாது இதற்கெல்லாம் அனுமதி இல்லை என்றது. பெண்கள்,குழந்தைகள்,பெரியவர்கள் எல்லாம் கால் வலிக்க நிற்க வேண்டுமா சொல்லுங்க என  தோழர்கள், வழக்கறிஞர்கள் கேட்க சரி எப்படியோ செய்யுங்க என்றது.

“நெல்லை இசக்கி முத்து மரணத்துக்கு காரணமான கலெக்டர், எஸ்.பி ஆகியோரை கைது செய்ய வேண்டுமென சுவரொட்டி ஒட்டிய தோழர்களை வழக்கு போட்டு சிறையில் தள்ளியது கரூர் நகர காவல்துறை.”

கருத்து சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை போன்றவை பெயரளவுக்குதான் அதுவும் ஆளும் கட்சிகளுக்குதான்! போராடுகின்ற மக்களுக்கும், அமைப்புகளுக்கும் இல்லை. இந்த அடக்குமுறையெல்லாம் கொஞ்சம் நாள் தான்? மக்கள் தங்கள் அதிகாரத்தை எடுக்கும் போது காவல்துறையின் வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வரும் என்று தலைமையுரையில் தோழர் சக்திவேல் பேசினார்.

அடுத்ததாக கண்டன உரையாற்றிய கரூர் பகுதி மக்கள் அதிகாரத்தின் தோழர் இராமசாமி அவர்கள் “கந்து வட்டி கும்பலின் பிறப்பிடம் கரூர் மாவட்டம், அரவாக்குறிச்சி மண்மாரி கிராமம்தான். இந்த கரூர் மாவட்டம்தான் கந்து வட்டிக்கு தாய் வீடு போல உள்ளது. குறிப்பிட்ட சாதியினர் இந்தியா முழுவதும் வட்டிக்கு விட்டு கரூரில் பல மாடி கொண்ட கண்ணாடி மாளிகை கட்டியதுதான் உதாரணம்.

பல குடும்பங்களின் வறுமையை பயன்படுத்தி வட்டி தொழிலில் ஊறி திளைத்து வருகின்றனர் ரவுடிகள். இவர்களுக்கு அதிகாரிகள், போலீசு பாதுகாப்பாக உள்ளது. இவர்களின் கொடுமையால் பலரும் இறந்து உள்ளனர். மக்கள் அமைப்பாக திரண்டு போராடினால் கந்து வட்டி காரர்களை ஒழிக்க முடியும்” என்று பேசினார்.

பிறகு உரையாற்றிய கரூர் பகுதி தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் தோழர் கு.கி.தனபால் “மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர்கள் போஸ்டர்கள் ஒட்டியதற்கு வழக்கு போட்டு சிறையில் தள்ளியதை கண்டித்து பேசினார். வட்டி கொடுமைக்கு முடிவு கட்ட ஒன்று திரண்டு போராடுவோம்” என்றார்.

கரூர் பகுதி CPI(ML) விடுதலை அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் தோழர் மு.ராமச்சந்திரன் “கந்து வட்டிக்கெதிராக இடதுசாரி அமைப்புகள் ஒன்று சேர்ந்துள்ளோம். காவல்துறை நடவடிக்கை கந்துவட்டி நபர்களுக்கு ஆதரவாக உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கின்றோம். தொழிற்சங்கம் வைத்து போராடினாலும் போலீசு மிரட்டுவதும் உள்ளது. நமது ஒருங்கிணைந்த நடவடிக்கை அடக்கு முறைக்கு எதிராக மாறும். இணைந்து செய்வோம்!” என்று பேசினார்.

கரூர் பகுதி வழக்கறிஞர் தோழர் புகழேந்தி பேசுகையில் “போஸ்டர் ஒட்டிய மக்கள் அதிகார தோழர்களை வழக்கு போட்டு சிறையில் தள்ளியது, “இங்க அடிச்சா அங்க வலிப்பதை” போல நெல்லை சம்பவத்தையொட்டி கலெக்டர், எஸ்.பி -ஐ கைது செய் என்றால் இந்த குற்றவாளிகளுக்கு வலிக்கிது என்றும். கந்துவட்டி கொடுமைக்கு குடும்பமே தீயில் கருகியது கண்டு எந்தவித உணர்வின்றி மனசாட்சி இல்லாமல் வழக்கு போடுவதை கண்டித்தார்.”

ஆதித்தமிழர் பேரவையின் கரூர் மாவட்ட செயலாளர் தோழர் முல்லையரசு பேசுகையில் “சாதாரண கூலி தொழிலாளர்கள் கந்து வட்டிக்கு வாங்கி குடும்பங்கள் மிகவும் பாதிக்கிறது பல வட்டிகள் உள்ளது ராக்கெட் வட்டி, ரன்வட்டி, மீட்டர்வட்டி என அட்டைபோல உறிஞ்சுகின்றனர். இந்த கொடுமைக்கு முடிவு கட்ட மக்கள் அதிகாரம் தோழர்களுடன் இணைந்து செயல்படுவோம்!” என்றார்.

கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட கரூர் மாவட்டம் கடவூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கங்கா ஸ்ரீ என்ற பெண்மணி பேசினார். அவர் “இந்த போலீசு கந்துவட்டி பிரச்சனையை தீர்த்து தரவில்லை. பலமுறை புகார் செய்தும் எவரும் கண்டு கொள்ளவில்லை. அதனால்தான் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக்கிறாங்க. மக்கள் அதிகாரத்தை எடுக்கனுங்க அதான் தீர்வு போலீசு எல்லாம் உதவாது” என்றார்.

அடுத்து பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் பேசுகையில் “கந்து வட்டியை ஒழிக்க கடனைக் கட்டாதே கலகம் செய்! என்ற முழக்கம் அரசுக்கு கோரிக்கை வைப்பதல்ல? மக்களுக்கு வைக்கின்ற முழக்கம். ஏன் என்றால் கந்து வட்டியை இந்த அரசு ஒழிக்காது நெல்லையில் கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இசக்கி முத்து குடும்பம் தீக்கீரையானது. இப்படி பல குடும்பங்கள் பலியாகின்றன.

ஏன் மக்கள் கந்து வட்டி வாங்குகின்றனர். விவசாயம் இல்லை, வேலையில்லை, விலைவாசி உயர்வு, வாழவழியில்லாமல் கந்து வட்டி வாங்குறான் இந்த நிலைக்கு தள்ளியது அரசு. விவசாயிகளின் மொத்த கடன் முதலாளிகளின் கடனில் 1% தான் அதை தள்ளுபடி செய்யவில்லை மோடி – எடப்பாடி அரசு. ஆறு இலட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறது முதலாளிகளுக்கு.

கடன் கொடுப்பது கூட மக்களுக்கு கடன் கட்ட முடியுமா? என்று பார்த்துதான் கொடுக்கிறது வங்கிகள். மக்களை விளிம்பு நிலைக்கு தள்ளியது இந்த அரசுதான் கந்து வட்டி கொடுமையை தடுக்கவில்லை போலீசு. அதிகாரிகள்,போலீசு துறையே ஒரு கிரிமினல் மாஃபியா கும்பலாக உள்ளது. இவர்கள் கந்துவட்டியை ஒழிப்பார்களா?

கரூரில் உள்ள தரைக்கடை முதல் சாதாரண கடை வியாபாரிகளிடம் மாமுல் வாங்குவது, லைசென்ஸ், ஹெல்மெட் பிடிப்பதாக வசூல்வேட்டை நடத்துவது சிவகங்கை சிறுமி பாலியல் கொடுமை என பாதிக்கப்பட்டு புகார் கொடுத்தால் ஏட்டு முதல் ஐ.ஜி வரை பல நாட்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வது. பாண்டிச்சேரியில் கிரிமினல் கும்பலுடன் கூட்டு சேர்ந்து போலீசு கொள்ளையடித்தது.

கரூரில் ஹவாலா ஊழல் பணத்தை காவல் ஆய்வாளர் ஆட்டைய போட்டது. மணல் கொள்ளையர்களிடம் இலஞ்சம் பெறுவது போன்ற பல மோசடி, பித்தலாட்டம் போலீசுக்கும் அதிகாரிகளுக்கும் என்ன யோக்கியதை உள்ளது. இந்த கட்டமைப்பு முழுவதும் தோல்வியுற்று, எதிர்நிலையாக மாறிவிட்டது. இதை நம்பி பலனில்லை. மக்கள் அதிகாரத்தில் உறுப்பினராக சேருங்கள் அப்போதுதான் கந்து வட்டியை ஒழிக்க முடியும்” என்று பேசினார்.

சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் அவர்கள் பேசுகையில் “கந்து வட்டி கொடுமையால் நெல்லையில் ஒரு குடும்பமே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான அரசை கண்டித்து  போஸ்டர் ஒட்டியதற்காக கரூர் பகுதி தோழர் பாக்கியராஜ் மீது வழக்கு போட்டு சிறையில் தள்ளியது போலீசு.

இந்த நாட்டில் பேச்சுரிமை, எழுத்துரிமை, ஜனநாயகம் என்ற கொஞ்ச நஞ்ச உரிமை கூட காலில் போட்டு மித்திக்கிறது இந்த அரசு. ஆனால் கவர்னர் கோவையில் திடீர் என்று ஆய்வு செய்கிறார். அனைவருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது என்று பேசுகின்றனர். ஆனால் இங்கு போஸ்டர் ஒட்டி ஒரு கருத்து தெரிவிக்க கூட உரிமை இல்லை.

இந்த சட்டம் அனைவருக்கும் சமம் என்கிறார்கள். மோடி வாய்கிழிய பல வெளிநாட்டு கூட்டங்களில் பேசுகின்றார். ஆனால் அதே சட்டத்தை கரூரில் உள்ள காவல்துறையினர் மதிப்பதில்லை. தோழர் பாக்கியராஜை கைது செய்யும் போது ஆய்வாளர் நீயெல்லாம் ஒரு ஆளு, உன்னை தேடி வந்து கைது செய்ய வேண்டியது உள்ளது. என்று அத்துமீறி வீட்டில் நுழைந்து எளக்காரமாக பேசினார். எங்கள் தோழர் பாக்கியராஜ்  பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.

மக்களுக்காக போராட்டம் என தன் வாழ்கையையே தியாகம் செய்கிறார். ஆனால் இந்த காவல்துறை, மாமுல் வாங்கிக் கொண்டு கஞ்சா விற்பவனுக்கும் மணல் கொள்ளையனுக்கு ஆதரவாக இருப்பது தியாகமா? என சாடினார்.

கந்து வட்டிக்கு மக்கள் பணம் வாங்கி விளிம்பு நிலையில் உள்ளனர். மக்களை பாதுகாக்க, ரவுடிகளை ஒழிக்க இந்த அரசு வக்கற்று, தகுதியிழந்து, தோற்றுப்போய் உள்ளது இதை நம்பி எதுவும் செய்ய முடியாது என்றார்.

செந்தில் பாலாஜி போன்ற அமைச்சர்கள் எல்லாம் கோடி கோடியாய் சொத்து சேர்த்து வைத்துள்ளான். கரூரில் பல வகையில் மோசடியாக சேர்த்த சொத்துக்கள், இவர்கள்தான் கந்து வட்டி கும்பலின் புகலிடம். கந்து வட்டி மட்டுமல்ல பல நிறுவனங்களின் டிவி விளம்பரத்தில் வாட்டிக்கா கோல்டு லோன் என்ற பெயரில் சேமித்து வைத்திருக்கும் தங்க நகைகளை கூட பொது மக்களிடம் விட்டு வைப்பதில்லை. அடகு வைங்க என ஆட்டைய போட விளம்பரம். இதுவும் கந்து வட்டிக் கணக்கில் வராத கருப்பு பணம்தான்.

விஜய் மல்லையா போன்ற முதலாளிகளுக்கு கடன் கொடுத்து ஏப்பம் விட்டு போனவர்களை பிடிக்கவில்லை இந்த அரசு. ஆனால் திருவண்ணாமலையில் கடன் கட்டாத விவசாயியை SBI வங்கி குண்டர்களை வைத்து அடித்தே கொலை செய்து இருக்கிறது. இதுதான் இந்தியாவின் நம்பர் ஒன் வங்கி என பெயர் எடுத்தது. இது தான் மோடி அரசின் யோக்கியதை.
மக்களே தங்கள் அதிகாரத்தை கையிலெடுத்து போராடும்போது மட்டுமே மக்கள் நிம்மதியாக வாழமுடியும். இன்று ரெய்டு என்று CBI அதிகாரிகள் 2000 -பேர் வரலாறு காணாத வகையில் அதிரடி ரெய்டு என்று தினகரன், சசிகலா, ஜெயலலிதா வீடுகளில் 1,493 கோடி சொத்துக்களையும், ஆவணங்களையும் கைப்பற்றியதாக கூறுகின்றனர்.

ஆனால் ஜெயாவின் கொடநாடு எஸ்டேட்டின் மதிப்பு 5,000கோடி, சிறுதாவூர் போன்ற பல பங்களாக்களின் மதிப்போ பல இலட்சம் கோடி வரும் இதை யார் பறிமுதல் செய்வது? யாரை ஏமாற்ற மோடி அரசின் ரெய்டு நாடகம்? மோடி அரசு மற்றும் எடப்பாடி அடிமை அரசை எதிர்த்து போராட மக்கள் அதிகாரம் அமைப்பில் இணையுங்கள்!” என்று பேசினார்.

ம.க.இ.க கலைக்குழு தோழர்களின் புரட்சிகர பாடல்கள் மோடி, எடப்பாடி அரசின் அயோக்கியத்தனத்தையும், பித்தலாட்டத்தையும் அம்பலப்படுத்தியது.

இறுதியாக  மக்கள் அதிகாரத்தின் கரூர் பகுதி தோழர் சுதர்சனம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டு முழக்கத்தின் மூலம் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கந்து வட்டிக் கொடுமையை முடிவு கட்ட மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் வகையில் இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கரூர். தொடர்புக்கு : 97913 01097.


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

புரட்சியின் தருணங்கள் – திரைச் சித்திரம் !

4

கார்ல் மார்க்சின் மூலதனம் 150-ம் ஆண்டு, ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு சிறப்புக் கூட்டம்,  கடந்த நவம்பர் 19, 2017 அன்று சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் இரசியப் புரட்சியின் சிறப்பு குறித்த இத்திரைச்சித்திரம் வினவு இணையதளத்தின் சார்பில் திரையிடப்பட்டது.

இப்படத்தில் உலகம் முழுவதும் முதலாளித்துவத்தின் அகோர இலாபவெறிக்காக சூறையாடப்படும் உலக மக்களின் நிலை குறித்து விளக்கி அதிலிருந்து தப்புவதற்கான வழி என்ன என்ற கேள்வியை முன்வைக்கிறது. சோசலிசப் புரட்சிக்கு முந்தைய இரசியாவின் நிலையையும் அதன் தொடர்ச்சியாக அங்கு தோழர் லெனின் தலைமையில் நடைபெற்ற புரட்சியையும் கண் முன் நிறுத்துகிறது.

மேலும், இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் பாசிசத்திலிருந்து இந்த உலகைக் காத்ததையும் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. சோசலிசத்தினால் ஒரு நாட்டில் எத்தகைய சாதனைகளை சாதிக்க முடியும் என்பதையும், சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதையும் கண் முன்னே காட்டுகிறது.

இப்படம் நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் உற்சாகப்படுத்தி ரசிய சோசலிசப் புரட்சியைப் போன்று நம் நாட்டில் எப்போது வரும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.

பாருங்கள் பகிருங்கள் !


இந்த திரைச் சித்திரம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா ?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

பாலாவின் நாச்சியார் – நக்கலைட்சின் நோச்சியார் !

7

யக்குநர் பாலாவின் நாச்சியார் படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. பிதமாகன் விக்ரம் போல ஜி.வி பிரகாஷ் ஓடுகிறார், ஆடுகிறார், பார்க்கிறார். ஜோதிகா கடைசியில் தே … பயலே என்கிறார். இத்தகைய ஆணாதிக்க வார்த்தையை பயன்படுத்தலாமா, ஜோதிகாவுக்கு அடுக்குமா என்று சமூக வலைத்தளங்களில் விவாதம் சூடுபிடித்தது.

ஒரு கதையில் அதன் பாத்திரத்திற்கேற்ற உரையாடல்கள் வருவதில் என்ன பிரச்சினை? நடிகர் பிரகாஷ் ராஜ், மோடியாக ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தால் இந்துமதவெறி வசனங்களை பேசித்தான் நடிக்க வேண்டும். மோடியை எதிர்க்கும் அவர் இத்தகைய வெறிப்பேச்சுக்களை பேசலாமா என்று கேட்பது அபத்தம்.

ஒரு படத்தில் குறிப்பிட்ட சமூகப் பின்னணியில் ஒரு இயக்குநர் படம் எடுக்கிறார். அதற்கேற்ப பாத்திரங்களையோ, வசனங்களையோ வைக்கிறார். இதில் பிரச்சினை ஏதுமில்லை. ஆனால் அந்த சமூகப் பின்னணியோ இல்லை பாத்திரங்களின் வகை மாதிரியோ யதார்த்தமாக இல்லை, தவறாக இருக்கிறது என்று விமரிசிப்போர் இயக்குநரை தாராளமாய் விமரிசிக்கலாம்.

அந்த வகையில் பாலா படங்களில்  நடிப்போரோ இல்லை பேசப்படும் வசனங்களோ பிரச்சினை இல்லை. மாறாக பாலாவின் அகவுலகமே பிரச்சினையாக இருக்கிறது. அதனால்தான் கடைசியாக வந்த தாரை தப்பட்டையில் அவரது ரசிகர்களே வெறுப்படைந்தனர். ஊரோடு முரண்படும் விட்டேத்தி சாமியார்கள் எப்போதும் கஞ்சாவோடும், கடுப்போடும் சுற்றி வருவதைப் போன்ற பாத்திரங்களை வைத்தே பல்வேறு நேரங்களில் பாலா படமாக எடுக்கிறார்.

எந்தக் கதையும் அவரது சன்னிதானத்தில் படைக்கப்படும் போது மேற்கண்டவாறு அரையும் குறையுமாக சமைக்கப்படுகிறது. சமூகத்தோடு முரண்படும் ஒரு கதாபாத்திரத்தை இயல்பாக காட்ட தெரியாத அல்லது விரும்பாத பாலா இப்படி எதிர்மறை வில்லத்தனம் நிரம்பிய சூப்பர்மேன்களாக காட்டுகிறார். அதையே எத்தனை தடவை பார்ப்பது என்பது ரசிகர்களது பிரச்சினை!

இதோ பாலாவின் பாத்திரங்களை ‘அழகாக’ காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் நக்கலைட்ஸ் நண்பர்கள்! வாழ்த்துக்கள்!

இது பாலாவின் நாச்சியார்!

இது நக்கலைட்சின் நோச்சியார்!


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

திரிபுரா : இராணுவ ஊழலை அம்பலப்படுத்தினால் சுட்டுக் கொல்வார்கள் !

1

திரிபுரா மாநிலத்தில் கடந்த நவம்பர் 21 அன்று பத்திரிகையாளர் ஒருவர் திரிபுரா மாநில ரைபிள் படையின் அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். திரிபுராவில் கடந்த 3 மாதங்களுக்குள் நடைபெறும் இரண்டாவது பத்திரிகையாளர் படுகொலைச் சம்பவம் இது.

திரிபுரா மாநிலத்தில் ‘ஸ்யந்தன் பத்திரிகா’ எனும் நாளேடு வெளிவருகிறது. இந்நாளேட்டின் ஆசிரியர் சுபல் டேய். இங்கு நான்காண்டுகளுக்கு முன்னர் செய்தியாளராக சேர்ந்தவர் சுதீப் தத்தா பௌமிக். புலனாய்வுக் கட்டுரைகள் மற்றும் அம்பலப்படுத்தல்கள் போன்றவற்றில் திறன் மிக்கவர் சுதீப் தத்தா.

சுதீப் தத்தா மூன்று மாதங்களுக்கு முன்பு, திரிபுரா மாநில ரைபிள் படையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து புலனாய்வு செய்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய நபரான கமாண்டர் தப்பான் டெபர்மாவை அம்பலப்படுத்தி எழுதியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் சுதீப் தத்தா

இந்நிலையில் பொய்க்கணக்கு எழுதி சுமார் ரூ.10 கோடிக்கும் மேலாக முறைகேடு செய்திருந்த கமாண்டர் தப்பான் டெபர்மாவின் புதிய ஊழலை அம்பலப்படுத்தி கடந்த நவம்பர் 2 -ம் தேதியன்று ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார் சுதீப் தத்தா.

இதனையடுத்து கடந்த நவம்பர் 21 -ம் தேதி காலை சுமார் 10 மணியளவில் சுதீப் தத்தாவை தொலைபேசியில் அழைத்து, வெளியான கட்டுரை குறித்து தனது விளக்கத்தைக் கேட்க தன்னை நேரில் வந்து சந்திக்கும் படி கூறியுள்ளார் தப்பான் டெபர்மா. சுதீப் தத்தா, ஸ்யந்தன் பத்திரிகாவின் ஆசிரியரான சுபல் டே-க்கு அலைபேசியில் தகவலைத் தெரிவித்திருக்கிறார். சுபல் டே, ஒலிப்பதிவு செய்யும் கருவியை எடுத்துச் செல்லுமாறு சுதீப் தத்தாவிடம் கூறியுள்ளார்.

அகர்த்தலாவின் புறநகர்ப் பகுதியான ஆர்.கே. நகர் பகுதியில் உள்ள திரிபுரா மாநில ரைபிள் படையின் இரண்டாவது படையின் கமாண்டர் அலுவலகத்திற்கு காலை 10.30 மணிக்குச் சென்றுள்ளார் சுதீப் தத்தா. இதனை அங்கிருந்த பார்வையாளர் பதிவேடு உறுதி செய்திருக்கிறது.

பின்னர் 11 மணியளவில் பத்திரிக்கை ஆசிரியரின் அலைபேசிக்கு வந்த அழைப்பில் சுதீப் தத்தா சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது . உடனடியாக சுதீப் தத்தாவின் உதவி நிருபரான திப்பு சுல்தானை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார் சுபல் டே.

அங்கு சென்ற திப்பு சுல்தானிடம் அப்படி யாரும் இங்கு வரவில்லை என வாயிற்காப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சுதீப் தத்தாவின் வண்டி உள்ளே நின்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார் திப்பு. இதனைத் தொடர்ந்து மற்ற பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் பரவ சுமார் 60 -க்கும் மேற்பட்டவர்கள் கமாண்டர் அலுவலகத்தின் முன்னர் திரண்டுள்ளனர்.

சுதீப் தத்தாவின் நிலை பற்றி அதிகாரப் பூர்வமாக யாருக்கும் எவ்வித தகவலும் தரப்படவில்லை. மதியம் 2.30 மணிக்கு அதிகாரப் பூர்வமாக சுதீப் தத்தா சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியிடப்பட்டது.

சுதீப் தத்தா தனது அலுவலகத்தில் இருந்து கிளம்புகையில் சில ஆவணங்களைத் திருடிச் செல்ல முயன்றதாகவும், உடலைப் பரிசோதனை செய்ய வந்த காப்பாளர் நந்தா ரியங்-க்கு  ஒத்துழைக்க மறுத்ததாகவும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தகராறில் நந்தா ரியங், சுதீப் தத்தாவை சுட்டுக் கொன்றதாகவும் தப்பான் டெபர்மா போலீசிடம் தெரிவித்திருக்கிறார்.

பத்திரிக்கையாளர் சாந்தனு படுகொலையைக் கண்டித்து கடந்த 20.10.2017 அன்று நடந்த போராட்டம்

போலீசும் பாதுகாவலருடன் ஏற்பட்ட தகராறில் சுதீப் தத்தா சுட்டுக் கொல்லப்பட்டார் என்றே செய்தியாளர்களிடம் தெரிவித்தது. நந்தா ரீயங் உடனடியாக கைது செய்யப்பட்டு 10 நாள் போலீசு விசாரணைக் காவலில் அடைக்கப்பட்டார்.  இத்தோடு வழக்கை ஊற்றி மூட எத்தனித்தது போலீசு.

இந்நிலையில் ‘ஸ்யந்தன் பத்திரிகா’ நாளேட்டின் ஆசிரியரான சுபல் டே, கமாண்டர் தப்பான் டெபர்மாவின் ஊழலை வெளிக் கொண்டு வந்ததற்காக,  டெபர்மாவால் வரவழைக்கப்பட்ட சூழலில் கொல்லப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, இது ஒரு திட்டமிட்ட கொலை என்பதை அம்பலப்படுத்தினார்.

பத்திரிக்கையாளர் சங்கங்கள் போராடத் தொடங்கின. இச்சூழல் ஏற்படுத்திய நெருக்குதலின் காரணமாக படுகொலை நடத்தப்பட்ட மறுநாள் (நவம்பர் 22) தப்பான் டெபர்மா கைது செய்யப்பட்டு 10 நாள் போலீசு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சுதீப் தத்தாவின் அலைபேசி மற்றும் அவரது சட்டையில் இருந்த பொருட்களும் சம்பவ இடத்திலோ போலீசு வசமோ இல்லை. அவையும் கமாண்டர் தப்பான் டெபர்மாவால் எடுத்து மறைக்கப்பட்டிருக்கலாம் எனத் தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றனர் சுபல் டே-யும் சுதீப் தத்தாவின் சக பத்திரிக்கை நண்பர்களும்.

பாசிச பாஜக ஆட்சியில் இந்தியா முழுவதும் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட்டு வருவது நாடறிந்த விசயமே. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் சமீபத்தில் கொல்லப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ்.

தமக்கு எதிரான கருத்துக்களை அதிகாரவர்க்கம் எப்போதுமே விரும்புவதில்லை. அதுவும் தங்களுக்கு ஆதரவாக மத்தியில் ஒரு பாசிஸ்டின் ஆட்சியும், மாநிலத்தில் அதே பாசிசக் கட்சியின் ஆட்சி நீடிக்கும் போது, இது போன்ற இராணுவ ‘தப்பான் டெபர்மாக்கள்’ கொலை செய்வதற்கும் கவலைப்படுவதில்லை.

பாஜக-வையும், இராணுவத்தையும் எதிர்த்து எழுதினால் இதுதான் நிலைமை என்று அவர்கள் பகிரங்கமாக தெரிவிக்கிறார்கள். மக்களும் – மக்கள் நலன் சார்ந்து செயல்படும் பத்திரிகையாளர்களும்  என்ன செய்யப் போகின்றோம்?

மேலும் :


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மூளையைக் கைது செய்யும் மதம் ! கருத்துப்படங்கள்

1

மனித மூளையில் மத நம்பிக்கை இருக்கும் வரை சுதந்திரம் என்பது இருக்கவே இயலாது !

பக்தி உருவாக்குவது கேள்விக்கிடமற்ற நம்பிக்கை பகுத்தறிவு உண்டாக்குவது கேள்வி கேட்க்கும் மனப்பான்மை !


தலைமலையில் கிரிவலம் சென்ற போது 3,500 அடி உயரத்திலிருந்து விழுந்து இறந்த இளைஞர் ஆறுமுகம்.

இருளை சிதறடித்த மெரினா இளைஞர்கள் !


கடவுளை நம்புவதே ஒழுக்கம் என்கிறது ஆத்திகம் !
மக்களை நம்புவதே ஒழுக்கம் என்கிறது நாத்திகம் !

எல்லாம் புனித நூலில் அடக்கம் !


எந்தப் பிரச்சினையையும் ஆய்வு செய்து விடை தேடுவோம் என்று போராடுகிறது மார்க்சியம் !
எல்லாப் பிரச்சினைகளுக்கும் புனித நூல்களில் ஆறுதல் இருப்பதாக முடக்குகிறது மத நம்பிக்கை !

படங்கள் : வேலன்

இணையுங்கள்:


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சத்தியபாமா பல்கலை ராகமோனிகா தற்கொலை ! நிர்வாகத்தை எதிர்த்து மாணவர் கலகம் !

1
ராகமோனிகா விடுதியில் தூக்கில் தொங்கிய போதும், மருத்துவமனையிலும் "நான் ராகமோனிகாவின் தம்பி என்று போட்டோ, வீடியோ ஆதாரங்களை காட்டி பார்க்க அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டபோதும் போலீசார் அனுமதிக்கவில்லை.

சத்தியபாமா பல்கலைக் கழகத்தில் மாணவி ராகமோனிகா படுகொலை !
தனியார் கல்விக் கொள்ளைக்கு எதிராக மாணவர்கள் மூட்டிய தீ பரவட்டும் !

தெலுங்கானாவில் இருந்து சத்தியபாமா பல்கலைக்கழகத்தில்  பொறியியல் படிக்க வந்த ராகமோனிகா என்ற மாணவி, நிர்வாகத்தினரில் உளவியல் சித்திரவதை செய்யப்பட்டு பிறகு தூக்கிடடு தற்கொலை செய்திருக்கிறார். மறைந்த சாராய ரவுடி ஜேப்பியாருக்கு சொந்தமான  பல்கலைக்கழகம் உள்ளிட்ட இதர கல்வி நிறுவனங்களிலும் கடந்த சில ஆண்டுகளில் சுமார் 30 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர்.

22.11.2017  அன்று  பல்கலைகழகத்தேர்வு நடைபெற்றது. அந்தத் தேர்வில் ராகமோனிகா சக மாணவியின் பேப்பரை பார்த்து எழுதியதாக கூறி (பிட் அடித்ததாக) ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் கேவலாமன வார்த்தைகளால் திட்டிக்கொண்டே அறைவாசலுக்கு அழைத்து வந்துள்ளார். அந்த மாணவி தன்னை மன்னித்துவிடுமாறு கெஞ்சியிருக்கிறார்.

இதை காதில் வாங்காத அந்த ஆசிரியர் தேர்வை மேற்பார்வை பார்த்த மற்றொரு ஆசிரியரான விமல் என்பவரையும் அழைத்துக்கொண்டு “உன்னுடைய டிரஸ் மொத்தத்தையும் கழட்டி சோதன போட்டாத்தான் பிட் வைத்திருப்பதை கண்டுபிடிக்க முடியும்’’ என்று வக்கிரமாக மிரட்டியிருக்கின்றனர்.

மாணவி ராகமோனிகா

மீண்டும் தன்னை மன்னித்து விடுமாறு அந்த மாணவி கெஞ்சியிருக்கிறார். ஆசிரியர்கள் போர்வையில் திரியும் அந்த ரவுடிகள் உன்னை எந்த தேர்வையும் எழுதவிட முடியாது,  உன் அப்பா, அம்மாவை வரவழைக்கிறோம், நீ  போதை மருந்துக்கு அடிமையாகிவிட்டாய், நீ கர்ப்பமாக இருக்கிறாய் என்று சொல்லப்போகிறோம் என்று ஆபாசமாகவும், இழிவாகவும் பேசி சித்திரவதை செய்திருக்கிறார்கள்.

இறுதிவரை தேர்வு எழுத அனுமதிக்கவே இல்லை. தேர்வு  முடிந்ததும் அதே கல்லூரியில் படிக்கும் ராகமோனிகாவின் தம்பி அக்காவை அடுத்தடுத்த தேர்வு எழுதவிட வேண்டும் என்று கூறி நிர்வாகத்தினரின் காலில் விழுந்து கெஞ்சியிருக்கிறார். எதுவும் ஏற்கப்படவில்லை. பிட் அடித்ததை ஒரு குற்றமாக்கி அந்த குற்றத்திற்காக  விபச்சாரப்பட்டமும் கட்டிவிட்டதால், அவமானம் தாங்க முடியாத மோனிகா பரீட்சை நேரம் முடிந்த பின்னர் காலை 11.45 -க்கு தனது அறையில்  தூக்கில் தொங்கிவிட்டார். இது தற்கொலையல்ல, பல்கலைக் கழக ஆசிரியர்கள் மீனாட்சிசுந்தரம், விமல் மற்றும் நிர்வாகத்தினர்  சேர்ந்து செய்த படுகொலை.

ராகமோனிகா விடுதியில் தூக்கில் தொங்கிய போதும், மருத்துவமனையிலும் “நான் ராகமோனிகாவின் தம்பி என்று போட்டோ, வீடியோ ஆதாரங்களை காட்டி பார்க்க அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டபோதும் போலீசார் அனுமதிக்கவில்லை.

மாலையில் விசயம் தெரிந்து மாணவர்கள் பதறியடித்து நிர்வாகத்திடம் சொல்லியிருக்கிறார்கள். நிர்வாகத்தினரோ ராகமோனிகாவை  பல்கலைகழகத்திலேயே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அந்த மாணவி இறந்துவிட்டது உறுதிசெய்யப்படுகிறது. ஆனால், பல்கலைக்கழக சேர்மன் மரிய ஜான்சன் உத்தரவின் பேரில் உண்மை மறைக்கப்பட்டு,  உயிர் இருப்பதாகவும் மேல்சிகிச்சைக்கு குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் என்று கூறி அங்கு கொண்டு சென்று இறந்ததை மீண்டும் ஒரு சம்பிரதாயத்திற்காக உறுதிசெய்துவிட்டு  ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்ள பிணவறையில் கொண்டு போய் போட்டுவிட்டார்கள்.

மாணவி ராகமோனிகா இறந்த தகவலை பல்கலைக் கழக நிர்வாகம் அவருடைய பெற்றோருக்கு தெரிவிக்கவே இல்லை. தம்பியைக்கூட பார்க்க அனுமதிக்கவில்லை. போலீசை வைத்து விரட்டியிருக்கிறார்கள். ராகமோனிகா விடுதியில் தூக்கில் தொங்கிய போதும், மருத்துவமனையிலும் “நான் ராகமோனிகாவின் தம்பி என்று போட்டோ, வீடியோ ஆதாரங்களை காட்டி பார்க்க அனுமதிக்க வேண்டும்” என்று அவர் கேட்டபோதும் போலீசார் அனுமதிக்கவில்லை.

மாணவி ராக மோனிகாவின் தந்தை

இதற்கிடையே ஊடகங்களிடம் அப்பெண் கருவுற்றிருந்தார் என்றும் போதைப்பழக்கம் உடையவர் என்றும் அவதூறுளை கிளப்பி வாங்கிய காசுக்கு வேலைபார்க்க ஆரம்பித்தனர் ஜேப்பியார் கல்விக்குழுமங்களின் சட்டப்பூர்வ ரவுடிகளாக செயல்பட்டு வரும்  செம்மஞ்சேரி போலீசார். இந்த அநீதிகளையெல்லாம் பார்த்த மாணவர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். அந்த கொந்தளிப்பில் பற்றி எரிந்தது கல்லூரி வளாகம். பீதியான பல்கலைக்கழக நிர்வாகம் போலீசை குவித்தது, எதற்கும் அஞ்சாத மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடி கல்லூரி வளாகங்களை அடித்து நொறுக்கினார்கள்.

சுமார் 300 -க்கும் மேற்பட்ட போலீசாரை குவித்து மாணவர்களை அடித்து விரட்டினார்கள். அந்த இடமே போர்க்களம் போல் இருந்தது.

தேர்வில் பிட் அடித்தால் அந்தத் தவறை சுட்டிக்காட்டி அனுப்பி இருக்க வேண்டும், அவ்வளவுதான். அதை விடுத்து மாணவி கல்லூரியின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் இரவு 3 மணிக்கு பேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். தன்னுடன் படித்த மாணவியைக்கொன்ற நிர்வாகத்தை என்ன செய்வதென்று தெரியாமல் கோபத்துடன் அதிகாலை 4 மணிவரை சாலையில் அலைந்து கொண்டிருந்தார்கள் மாணவர்கள். அவர்களில் பெரும்பாலோர் தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். ராஜீவ் காந்தி சாலை முழுவதும் போலீசால் நிரப்பப்பட்டு இருந்தது. கொல்லப்பட்ட மாணவியின் பெற்றோரை வரவைத்து மிரட்டி நிர்வாகம் ராகமோனிகாவின் பிணத்தை வாங்க வைத்துவிட்டது.

மாணவர்களின் கொந்தளிப்பில் பற்றி எரியும் விடுதி.

ஊரைஅடித்து உலையில் போட்ட கிரிமினல் ஜேப்பியாருக்கு தண்டனையாக கல்வித்தந்தைபட்டம் கிடைத்தது. பிட் அடித்தற்காக ராக மோனிகாவுக்கு மரணம் தண்டனையாக கிடைத்திருக்கிறது.

எனில் பொது நிலங்களை ஆக்கிரமித்து, மக்களிடம் கட்டாய நன்கொடை கொள்ளை நடத்தி ஆட்டும் போடும் ஜேப்பியார் கல்லூரி முதலாளிகளுக்கு என்ன தண்டனை?

சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் ராகமோனிகா படுகொலை!

மாணவியை இழிவுபடுத்தி, சித்திரவதை செய்ததே மரணத்திற்கு காரணம்!
கொலைகூடாரமான சத்தியபாமா தலைவர் மரிய ஜான்சன்
பேராசிரியர் போர்வையில் திரியும் பொறுக்கிகள்
மீனாட்சிசுந்தரம், விமல் ஆகியோரை கைது செய்!

மாணவர்கள் மூட்டிய போராட்டத் தீ பரவட்டும்!
தனியார் கல்விக் கொள்ளையர்களின் அட்டூழியம் ஒழியட்டும்!

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை. 9445112675


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

அப்பல்லோ கார்களுக்காக காலி செய்யப்படும் திடீர் நகர் – படங்கள்

1

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கிரீம்ஸ் சாலையில் கூவம் கரையோரம் அமைந்திருக்கும் குடிசைப்பகுதி திடீர் நகர். இப்பகுதி கூவம் கரையின் ஆக்கிரமிப்பு எனவும், இங்கு வாழும் மக்களுக்கு நிரந்தர வீட்டு வசதியை ஏற்படுத்துவதாக கூறியும், 21.11.2017 இரவு எட்டு மணியளவில் திடீர் நகரை தரைமட்டமாக்கும் வேலையை தொடங்கியது தமிழக அரசு.

திடீர் நகரில் கிட்டத்தட்ட 2,500 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றன. இங்கே சுமார் 70 வருடங்களுக்கு மேலாக வசிப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர். 2001 தி.மு.க ஆட்சியில் 800 காங்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அடுத்து வந்த அதே தி.மு.க. ஆட்சியில் தான் சிங்கார சென்னை என்ற பெயரில் இம்மக்களை காலி செய்யத் திட்டமிடப்பட்டதாகவும், போராட்டம் மறியல் என மக்கள் எதிர்ப்பு குரல் எழுப்பவும் காலிசெய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என பேதம் இல்லாமல் உழைக்கும் வர்க்கமாக சேர்ந்து வாழ்கின்றனர் இப்பகுதி மக்கள். திடீர் நகரை சேர்ந்த பெண்கள் அருகாமையில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் வீட்டு வேலை செய்வதற்கும், ஆண்கள் துப்புரவு, பெயிண்டிங், கம்பி கட்டுவது, ஆட்டோ ஓட்டுவது போன்ற வேலைகளையும் செய்து வருகின்றனர். பள்ளிப் படிப்பை முடித்த சில இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இவர்களது குழந்தைகள் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர்.

இப்பகுதியை சுற்றியே இவர்கள் வாழ்க்கை தேவைகளுக்கான வேலைகளை அமைத்துக் கொண்டுள்ளனர். இந்த பகுதிக்கு என அங்கன்வாடியும் திருச்சபையும் கோவிலும் இருக்கிறது. நகரின் மையப்பகுதியில் இருப்பதால் பள்ளி, போக்குவரத்து, மருத்துவமனை, வேலை என அனைத்து அத்தியாவசிய தேவைகளும் இம்மக்களுக்கு இங்கே கிடைக்கிறது. இப்பகுதியில் வாழ்ந்ததற்கு சாட்சியாக அரசு ஆதாரம் அனைத்தும் வைத்துள்ள மக்களை அகதிகளைப் போல் அடித்து துரத்துகிறது அ.தி.மு.க அரசு.

( வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்து காலி செய்யும் மக்கள் – படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கிரீம்ஸ் சாலையில் பத்தடிக்கு ஒரு போலீசு நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் போராட்டம் மறியல் என போய்விட கூடாது என பயம் காட்டும் தோரணையில் கைது செய்து ஏற்ற வண்டிகளையும் ஆங்காங்கே நிறுத்தியிருந்தனர். உடைமைகளை எடுக்கக் கூட அவகாசம் கொடுக்காமல் அவர்களை துரத்துகிறது போலீசு. போலீசே உடைமைகளை தூக்குகின்றனர். மறுபக்கம் ஜே.சி.பி-யை வைத்து  வீடுகளை தரைமட்டமாக்குகின்றனர்.

பெரும்பாக்கம் நகராட்சியை சேர்ந்த அரசு அதிகாரிகள் ஒரு பக்கம் பந்தல் போட்டு அமர்ந்துள்ளனர். திடிர் நகரில் துரத்தப்படும் மக்கள் பெரும்பாக்கம் பகுதியில் கட்டிக் கொடுத்துள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குதான் அனுப்படுகிறார்கள். மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகூட சரிவர செய்யப்படாத அப்பகுதிக்கு துரத்தப்படுகிறோம் என வேதனையில் மக்கள் கண்கலங்குகிறார்கள்.

மக்களே அவரவர் உடைமைகளை கிடைக்கும் கோணிப்பையில் வாரி எடுப்பதும், இங்கும் அங்கும் குழந்தைகள் ஓடுவதும், பொருளை எடுத்துக் கொண்டு ஆசையாக வளர்த்த நம்மை விட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் ஆடுகள் உரிமையாளர்கள் அருகாமையிலேயே இருப்பதும், அப்படியே ஒரு போர்க்களம் போல் இருந்தது அந்த காட்சி. மக்களுக்கு இருக்கும் நெருக்கடியும் அவசரமும் நம்மை யாரிடமும் நெருங்கிப் பேச தயக்கம் கொள்ள செய்தது.

கிரீம்ஸ் சாலை முழுவதையுமே அப்பல்லோ மருத்துவமனை ஆக்கிரமித்து வருகிறது. தற்போது இந்த திடீர் நகரைக் காலி செய்து பிரம்மாண்டமான கார் நிறுத்தம் உருவாக்குவதே அவர்களது நோக்கம் என மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறுகிறார்கள்.

மங்கலெட்சுமி

“அப்பல்லோ ஆஸ்பத்திரிக்காக அரசாங்கம் எங்கள அடிச்சு தொரத்துறாங்க. நான் சொன்னத அப்படியே டிவில போடுங்க. நாலு நாளைக்கி முன்ன வந்து எல்லா குடும்பத்துக்கும் பெரும்பாக்கத்துல வீடு இருக்கு. தேவைக்கி அதிகமாவே கட்டிருக்கு அரசாங்கம். அங்கப் போயி சந்தோசமா இருக்கலாம் அப்படின்னானுங்க. இப்ப மூணு குடும்பம் இருக்குற வீட்டுக்கு ஒருத்தருக்கு மட்டும் வீடுன்னு அடாவடியா காலி பன்றானுக. குருவி கூடுபோல இருந்தாலும் இந்த குடிசக்குள்ள தாயா பிள்ளையா ஒன்னா இருந்ததுங்க, வீடு டோக்கன் யாரு பேருக்குன்னு இப்ப அடிச்சுகினு சாவுதுங்க.”

ஆரோக்கிய ராஜ்

“நான் ஹாக்கி விளையாட்டு நடுவர். ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். வசதி வாய்ப்போடு வாழும் அளவு சம்பளம் இருந்தும் பொறந்து வழந்த எடத்த விட்டு போக மனசில்லாம 9 அக்கா தங்கச்சி அண்ணங்களோட இங்கனக்குள்ளேயே வாழ்ந்துட்டேன். இன்னைக்கி போகச்சொன்னா கண்ணுல தண்ணி அடங்க மாட்டேங்குதேம்மா”

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்துலேயே இதெல்லாம் நடந்துருக்கும் ஓட்டுக்காக விட்டு வச்சானுங்க. இப்ப ஒட்டு மொத்தமா சோலிய முடிச்சுப்புட்டானுங்க. ஏழைங்களுக்கு நாலனா செஞ்சுட்டு அதுல எட்டனா லாபம் பாக்குற ஆளு ஜெயலலிதா. அந்தம்மா போன வருசமே ஆக்கிரமிப்ப அகற்றப் போறேன்னு ஆரம்பிச்சது. ஆனா நோயி வந்து இங்கேயே படுத்துப் போச்சு.”

மாற்றுத் திறனாளி (பார்வையற்றவர்)

“எனக்கு ஆப்ரேசன் பண்ணிருக்கு பார்வை தெரியலங்கம்மா எம்பொண்ணு வீடு டோக்கனு தாராங்கன்னு காலையிலேயே போச்சு இன்னும் வரலைங்க. ஆபீசருங்க வந்து மூட்டைய தூக்குங்க மூட்டைய தூக்குங்கன்னு சத்தம் போடறாங்க. எங்கனக்குள்ள டோக்கனு தாராங்கன்னு பாத்து எம்பொண்ண கொஞ்சம் வீட்டுக்கு வரச்சொல்லுங்க.”

     பெயர் குறிப்பிடாதவர்

“இன்னாமா பேரு பேருனுகிற. ஓட்டு அட்ட ஆதார் அட்ட எல்லாம் வச்சுகினுகிறே என்னோட சீரிலு நம்பரு வர்லே வீடு இல்லேன்றானுங்க. பேற வச்சுகினு இன்னா பன்ன சொல்றே. எம்பொட்டாட்டிக்கி ரெண்டு காலும் ஆப்ரேசன் பன்னி ஒரு மாசம் கூட ஆவுல. இங்கனக்குள்ள இருந்தா யாராச்சும் பாத்துப்பாங்க. பத்தாவது மாடியில வீடு குடுத்தா மேல வந்து பாத்துப்பாங்களா. இந்த ஒங்க கண்ணு முன்னாலேயே கிஸ்னாயல ஊத்திகினு கொழுத்திகினு போப்பறேன் பாரு.” என்று அருகில் மண்ணெண்ணெயுடன் சென்றவரிடம் மற்றொருவர் கேனை புடுங்க முற்பட்டார். மக்கள் சமாதானம் செய்தனர்.

ஜான்சி என்ற குழந்தை

“புது வீட்டுக்குதான் போறோம் ஆனா எனக்கு புது வீடு பிடிக்கல. இங்கதான் புடிச்சுருக்கு. ஏன்னு சொல்ல தெரியல.”

நாகம்மா பாட்டி

“நா இந்த எடத்துக்கு வந்து 66 ஆறு வருசமாகுது. தாயா புள்ளையா பழகிகினு இங்குனக்குள்ளேயே பொழப்பு பாத்துகினு இருந்தோம். எங்கள இட்டுனு போயி எங்கேயோ காட்டுல விடப்போறான்றானுங்க. எப்படிம்மே வாழ்றது. ஆமாம்மாம்மா கெவுருமெண்டுக்கு கொல்ல நோயி வந்துட்டு அதா எங்கள இப்புடி வாரிகினு போறானுங்க. இப்ப இருக்கவனுங்கள்ளாம் கூட்டிக்குடுத்த பயலுகம்மா. அவனுக்கு என்ன ஆதாயம்னு மட்டுத்தான் பாக்குறான். அப்பல்லோ ஆஸ்பத்திரி காரனுங்க காரு நிறுத்தத்தான் இந்தன சனத்தையும் தெரத்துறானுங்க.”

பவானி

“பைத்தியம் புடிச்சாப்போல இருக்கு. வீடு ரெடியாருக்கு எல்லா தட்டுமுட்டு சாமனையும் ஏத்துறாங்க. போயி பாத்தாத்தானே தெரியும் யாருக்கு வீடு, எப்புடி வீடுன்னெல்லாம். புருசன் விட்டுட்டு ஓடிட்டான் ரெண்டு வயசு பையன வச்சுட்டு தெருவுல நிக்கிறேன்.

ஒரு தகவலு சொல்லனும். நோட்டிசு கொடுக்கனும் ஒன்னுமே இல்லாது கைய புடிச்சு இழுத்து தெருவுல தூக்கிப் போட்டா எங்கம்மா போவாம் நாங்க. வீடு குடுத்தா மட்டும் போதுமா பொழப்புக்கு இன்னா செய்வ. அங்க பெரிய பெரிய ஆபீஸுங்க இருக்கு கடை போடலாம், வீடுங்களுக்கு வேலைக்கி போலாம் எல்லாம் இருக்குன்றானுங்க இவனுங்கள நம்ப முடியாது.”

ஜெபாஸ்டின்

“நான் பள்ளி படிப்ப முடிச்சுட்டு இங்க 4 கி.மீட்டருக்குள்ள வேலை பாக்குறேன். என்னப்போலதான் இங்க உள்ள அத்தன பேரும் வேலைக்கி போய் வாரோம். எங்கள கூட்டிப்போயி 30, 40 மைலுக்கு அப்பால விட்டா வண்டி கூட கிடையாது. எப்படிங்க சரியான நேத்துக்கு வர முடியும்.”

கன்னிகா (குழந்தை)

“வீட்ட காலிபன்றாங்க. எனக்கு பரிச்ச நடந்துட்டு இருக்கு ஸ்கூலுக்கு எப்படி போறதுன்னு தெரியல. எங்க அம்மா எம் பொம்மையெல்லாம் எடுக்க மாட்டேங்குது அதுநால நான் எடுத்துகிட்டேன்.”

மேரி

“இங்கன இருக்குற ஆறு ஏழு வீடு மட்டும் கோயிலு எடம். (அறநிலைத் துறை) அதனால எங்கள மட்டும் காலிப்பன்னல. ஊரையே காலிபன்னி அகதிகளாட்டம் ஏத்துறாங்க. நாங்க இங்க அனாதையா இருக்கோம்.”

ராணி

மழை வெள்ளம் வந்தாலும் நீந்திகினே போயி எங்க தேவைங்கள செஞ்சுப்போம். நேத்துதான் போயி பாத்துனு வந்தே பெரும்பாக்கம் வீட்ட. ரமணா படத்துல வராமெரி அம்மாம்பெரிய ஒயரமாக்குது அது. என்னைக்கி தலையில விழுமோன்னுக்குது.

ஆரோக்கிய மேரி

“எங்க ஆயா காலத்துல பர்மாவுலேருந்து வந்தவங்கதான் இந்த குப்பத்து மக்கள். நான் பொறந்து வளந்தது எல்லாமே இங்கதான். எனக்கு இந்த எடத்த விட்டு போக புடிக்கலங்க.”

கன்னியம்மா

“நான் வாடகைக்கி வந்து 22 வருசமாச்சு. எங்களுக்கு வீடு இருக்குன்னு டோக்கனு கொடுத்தாங்க. சொந்த வீடு கெடைச்சது சந்தோசந்தேன். ஆனா என்னால அம்மாம்பெரிய கட்டடத்துல ஏரி ஏறங்க முடியுமா? மிசுனு இருக்குன்றாக ஆனா எத்தன நாளைக்கி ஓடும்.”

அரவிந்த்

“எங்ககிட்ட சாமான கட்றதுக்கு கோணி இல்லைங்க. எல்லாம் அப்படியே அள்ளிப்போட்டதுல பல பொருளு ஒடஞ்சுப்போச்சு. பாத்து ஏத்துங்கன்னு அம்மா சொன்னதால தனி வண்டி புடிச்சு போங்கன்னு திட்றாங்க.”

செய்தி, புகைப்படம் : வினவு செய்தியாளர்


 

திரை விமர்சனம் : அறம் ஒரு வரம்தான் ஆனாலும்….

22

ரக்கமற்ற வாழ்வில் கரை சேர வழியின்றி நீந்திக் கொண்டிருக்கும் எளிய மக்களைக் கூட, ஒரு மேட்டுக்குடி குழந்தையின் மூலம் இரங்க வைத்தார் “அஞ்சலி” திரைப்பட இயக்குநர் மணிரத்தினம். புதிய கலாச்சாரத்தில் அந்தப் படம் குறித்த விமரிசனத்தை படித்த போது, தமிழ் சினிமாவில் இதற்கு நேரெதிரான கதைக்கருவில் ஒரு படம் வருமென்று கற்பனை கூட செய்திருக்க முடியாது.

அந்தக் கனவை நனவாக்கியிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். வாழ்த்துக்கள் கோபி! நிச்சயம் “இது வேற தமிழ்நாடு”!

இரவுப் படுக்கையில் கதை கேட்கும் குழந்தையிடம் போட்டி போட்டுக் கொண்டு அம்மாவும், அப்பாவும் கதை சொல்வதில்லை. முழு உலகின் விசித்திரங்களை கற்கும் வாயிலைத் திறப்பதற்கு கதை ஒரு திறவு கோல் என்றாலும், பெற்றோருக்கு அந்தப் பொறுமையும் அருமையும் ஆற்றலும் இருப்பதில்லை.

ஆனால் அதே பெற்றோருக்கு ஒரு மழலையின் மூலம் வாழ்க்கை குறித்த கதை சொல்லும் போது அனேகமாக நிபந்தனைகள் ஏதுமின்றி ஒன்றிவிடுகிறார்கள். கதை என்று அல்ல, களத்திலும் இந்த விதி அதற்குரிய விளைவுகளை தோற்றுவிக்கவே செய்கிறது.

நெல்லை தீக்குளிப்பில் கையில் தின்பண்டத்தோடு தீயில் வேகும் அந்தக் குழந்தையின் மங்கலான உருவம் தமிழ் சமூகத்தின் ஆத்திரத்தையும், கையறு நிலையையும் தெளிவாகக் கிளப்பி விட்டது.

மத்திய தரைக்கடலில் குப்புற விழுந்து கிடக்கும் அய்லான் குர்தி எனும் ஒரு மழலையின் சடலம் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த வரிசையில் ஆழ்துளைக் குழியில் விழுந்து தவிக்கும் தன்ஷிகா மூலம் பார்ப்போரை பதற வைப்பதில் இயக்குநர் கோபி நயினார் வெற்றி பெற்றிருக்கிறார்.

அந்தப் பதற்றத்தை அதற்குரிய சமூக பின்னணி, இயக்கத்தோடு காட்டியிருப்பதே கோபியின் தனித்துவம். இதை வெறும் சென்டிமெண்டு சரடுகளால் பின்னியிருந்தால் அது மணிரத்தினத்தின் கிராமப்புற அஞ்சலி படமாக சரிந்திருக்கும்.

அரசு, அதிகார வர்க்கம், மக்கள் குறித்து கோபிக்கு ஒரு தெளிவான பார்வை இருக்கிறது. தமிழ் சினிமாவின் புதிய இயக்குநர்கள் பலரிடம் கதையில் நின்று கொண்டு பேசும் அரசியல் புரிதல் மட்டுமே இருப்பதால் கதைக்கு வெளியே பேசும் போது அந்த அரசியல் தெளிவின்றி திகைக்கிறது. கோபியோ இந்தப் படம் குறித்து வெளியே நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எளிமையாகவும், உறுதியாகவும், பெருமளவு சரியாகவும் பதிலளிக்கிறார். இப்படி அரசியலும், கலையும் சங்கமிக்கும் கலைஞர்கள் அபூர்வம்.

இயக்குநர் கோபி நயினார்.

ஏழைகளுக்கு இந்த அரசமைப்பில் இடமில்லை என்பது ஆரம்ப காட்சியான ராக்கெட்  பறப்பதிலிருந்து, கடைசி காட்சியான நயன்தாரா பதவி விலகும் காட்சி வரை கதையிலும், காட்சி அமைப்பிலும், குறியீடுகளிலும், உரையாடல்களிலும் நச்சென்றும், நளினமாகவும் வருகின்றது.

ராக்கெட் பறப்பதற்கு மகிழும் ஏழைகள், காசு இல்லாமல் காது டாக்டரை தவிர்த்து விட்டு மருந்துக்கடைக்கு போவது, 650 ரூபாய் கேக்குக்கு பதில் 250 ரூபாய் கேக்கை தெரிவு செய்வது, கபடி – நீச்சல் திறமைகளின் யதார்த்த நிலை, குடிநீரின் ஏற்றத்தாழ்வுகள், சோம்பிக் கிடக்கும் அதிகார வர்க்கம், கயிற்றைத் தவிர வேறு ஏதுமின்றி மீட்புப் பணிக்கு வரும் படைகள், சோகத்தை பணத்தால் பஞ்சாயத்து பண்ண விரும்பும் சுயநல அரசியல்வாதிகள், கலெக்டரை விசாரிக்கும் மேலதிகாரியின் விசாரணைக் காட்சிகள்…….

இந்தக் கதையை பலரிடம் சொன்னாலும் யாரும் இதை தயாரிக்க முன்வரவில்லை என்று கோபி கூறியிருக்கிறார். இது ஒரு முழு முற்றான சோகம் மற்றும் ஆவணப்படக் கதையாக அந்த தயாரிப்பாளர்களுக்கு தோன்றியிருப்பதில் அதிசயமில்லை. சினிமாவின் மசாலா மட்டுமல்ல, கதை என்ற வஸ்துவில் இடம் பெறக்கூடிய வேகம், முடிச்சு, நகைச்சுவை, துள்ள வைக்கும் பாடல், திருப்பம் போன்றவை கூட இல்லையென அவர்கள் நினைத்திருக்கலாம்.

ஆனால் இந்த ஐயம் நயன்தாராவுக்கு ஏன் தோன்றவில்லை என்பது மற்றொரு அதிசயம். வாழ்த்துக்கள் நயன்தாரா! நம்மைப் பொறுத்த வரை இந்தப்படத்தில் நயன்தாரா சிறப்பாக நடித்திருப்பதாகத் தோன்றவில்லை. இந்தப் படத்தில் அவர் நடிக்க முன் வந்ததே சிறப்பு! எனினும் இந்த மாதிரி படங்களில் நடிக்க கூடாது என திரைத்துறை மேட்டுக்குடி வர்க்கமும், பாரதிய ஜனதாவும் நயன்தாராவை வற்புறுத்தப் போவது உறுதி.

இந்தப் படம் சமூகக் கருத்துக்களை பேசினாலும் ஒரு பிரச்சாரப் படம் போல இல்லாமல் கலை நேர்த்தியோடு இருப்பதாக கூறுகிறார் நியூஸ் 18 தமிழ் குணசேகரன். பிரச்சாரமற்ற கலை ஏதுமில்லை என பலமுறை எழுதினாலும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

உப்பரிகையில் நின்று கொண்டு மேட்டுக்குடி வாழ்வின் மனிதாபிமானப் பார்வை வழி, தூரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் இலட்சிய மாந்தர்களை தேடிக் ‘கண்டுபிடித்து’, அவர்களுக்கு ஒளிவட்டம் போட்டுவிட்டு பிறகு அருகாமையில் இருக்கும் எளிய மாந்தர்களை சராசரியாக இறக்கிவிட்டு தூற்றச் சொல்லும் ஜெயமோகனின் அறம் வரிசைக் கதைகளோ, தூரத்தில் இருக்கும் மனிதர்களின் எளிய வாழ்க்கையை அருகாமையில் உணர்த்தி எவரையும் எளிய மக்களின் வாழ்வியலையோ அழகியலையோ ரசிக்க வைக்கும் கோபியின் அறம் திரைப்படமோ அனைத்தும் பிரச்சாரங்கள்தான்.

ஏற்றத்தாழ்வுகளால் பிரிந்திருக்கும் இச்சமூக்தில் நாம் எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பதன்றி பிரச்சாரமின்றி ஒரு பக்கமோ, இலக்கியமோ இல்லை.

இந்தப் படத்தில் பிரச்சாரம் இல்லையென கூறினால் இயக்குநர் கோபியே சிரிப்பார். ஒரு கதையோ கலையோ சொல்ல வந்த பொருளை பேராற்றலுடன் கூறுவதே அதன் வெற்றியே அன்றி மேற்கண்ட பிரச்சாரம் இருக்கிறதா என்ற தவறான ஆய்வு அல்ல. சமூக அக்கறை கொண்ட கதைகளை வெற்றி பெற வைக்க தேவை ஆழமான அரசியல், தத்துவ, கலைப் பார்வையே தவிர பிரச்சாரம் தேவையல்ல என்ற நாசுக்கு அல்ல.

அனேகமாக வெறும் கலையின் பால் நின்று கொண்டு பிரச்சார வாடை அடிக்கிறது என்று தமிழின் சிறுபத்திரிக்கை மரபு செய்த பிரச்சாரத்திற்கு குணசேகரன் போன்றோர் பலியாகக் கூடாது.

நியூஸ் 18 விவாதத்தில் கலந்து கொண்ட இயக்குநர் வசந்தபாலன் இந்தப்படம் திருவள்ளூர் மாவட்ட மக்களின் வாழ்வியல், கலாச்சாரத்தை காட்டுவதாகவும், இத்தகைய எண்ணிறந்த தமிழ் வாழ்க்கையை காட்டும் படங்கள் வரவேண்டும் என அங்காடித் தெருவை சான்று கூறினார். இல்லை, இப்படத்திற்கு சப்டைட்டில் போட்டு உலகமெங்கும் போட்டுக் காட்டினால் கூட சிலியில் இருக்கும் மக்களோ, இல்லை ஈரானில் இருக்கும் மாணவர்களோ அனைவரும் திரைப்படத்தோடு ஒன்ற முடியும். அதாவது தங்களது வாழ்வை திரையில் காணமுடியும்.

இந்தப் படம் உணர்த்தும் ஏழ்மை X அதிகார வர்க்கம் – மேட்டுக்குடி எனும் முரண்பாடு உலகெங்கும் எளிதில் ஒன்றக் கூடிய கரு மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் பரவி நிற்கும் யதார்த்தமும் கூட.

தன்ஷிகா எனும் அந்தச் சிறுமி கறுப்பாகவோ, சாமுத்ரிகா இலட்சணங்கள் இல்லாதவாளகவோ அழகுப் போட்டிகளை ஆராதிக்கும் பியூட்டி பார்லர் கலைஞர்கள் மதிப்பிடக் கூடும். தன்ஷிகா எனும் குழந்தையை மணிரத்தினம் வகைப்படங்களில் வரும் ஹார்லிக்ஸ், அமுல் பேபி குழந்தைகளுக்கு நேரெதிராக படைத்திருப்பதை வெறுமனே அடையாள அரசியலில் காலம் போக்கும் சில ஓய்வு நேர அரசியல் போராளிகள் பாராட்டியிருக்க கூடும். இரண்டுமே தவறு.

ஆழ்துளையின் கும்மிருட்டில் ஒடுங்கிக் கொண்டு, ஜட்டியோடு சிறுநீர் கழித்தால் அம்மா திட்டும் என்று சொல்வதாகட்டும், அப்பா பயமாயிருக்கு, சீக்கிரம் கூட்டிட்டு போ என்று சொல்வதாகட்டும், இத்தகைய காட்சிகள் மூலம் தன்ஷிகா பார்வையாளர்களை கொள்ளை கொள்கிறாள்.

வேறு வகையில் சொன்னால் ஏழைகளின் வேகமான வாழ்க்கை ஓட்டமும், சோகமோ, காதலோ, வறுமையோ அவற்றில் பல்வேறு உணர்ச்சிகள், உடல் மொழிகள், வழக்குகள் ஏராளம் உண்டு. அவற்றை இன்னும் சினிமா கைப்பற்றவில்லை.  சத்யம் சினிமா வளாகத்தில் வரும் மேன்மக்களின் உடல்மொழிகள், பேசும் பாணிகள் அனைத்தையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் அரசுப் பள்ளி ஒன்றின் மாணவர்களிடம் நீங்கள் நூற்றுக்கணக்கான உடல்மொழிகள், வசனங்கள், சேட்டைகளை காணலாம்.

காலம் கடந்தும் எம்.ஆர்.ராதா இன்றும் ஒரு ஹீரோ!

அதனால்தான் சார்லி சாப்ளின், எம்.ஆர்.ராதா போன்றோர் காலம் கடந்தும் இன்றும் ஒரு ஹீரோவாக அறியப்படுகின்றனர். ரஜினியையே எடுத்துக் கொள்ளுங்கள். அவரது கண்டக்டர் வாழ்வின் வேகமான உடல் மொழியே அவரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்துகின்றன. பாட்சா படத்தில் நாற்காலியைத் திருப்பிக் கொண்டு அவர் ஏய்… ஏய்… என்று வில்லனை விசாரிக்கும் “ஸ்டைலை” உலக நாயகனால் ஒரு போதும் செய்ய முடியாது. ஜிகர்தண்டாவில் வரும் அந்த நடிப்பு மாஸ்டரைக் கொண்டு நூறு நாட்கள் பயிற்சி கொடுத்தாலும் கமலால் அப்படி நடிக்கவே முடியாது. காரணம் அவரது மேட்டுக்குடி தந்தையின் வழக்கறிஞர் குடும்பப் பின்னணி!

சிறுமி தன்ஷிகா, அவளது அம்மா, அப்பா, அண்ணன், காட்டூர், காட்டூர் மக்கள் அனைவரும் அச்சு அசலாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் கலெக்டர் என்று வரும் போது நயன்தாரா எனும் வெற்றியடைந்த ஒரு ‘அழகான’ நடிகை தேவைப்படுகிறது. ஒரு அறிமுக இயக்குநருக்கு இத்தகைய முகம் அதுவும் மசாலா அல்லாத ஒரு யதார்த்த பாணி படத்திற்கு தேவை என்றே வைப்போம். அது பிரச்சினை அல்ல.

படம் முழுக்க நயன்தாரா அதிகார வர்க்கத்தின் அலட்சியம், மெத்தனம், மக்கள் விரோத தன்மை அனைத்தையும் பார்க்கிறார், பேசுகிறார் என்றாலும் அவர் ஆரம்பத்திலிருந்தே ஒரு நல்ல கலெக்டர் என்பதாக சித்தரிக்கப்படுகிறார். பாம்புகளில் நல்ல பாம்பு, கெட்ட பாம்பு இல்லை என்பது போல கலெக்டர்களிலும் நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடுக்கு அடிப்படையே இல்லை. காரணம் அரசியல் அமைப்புச் சட்டப்படி அவர் அரசு, அரசாங்கங்களின் முடிவுகளை அமல்படுத்தும் நிர்வாகியாகவும், அதற்கான அதிகாரங்களையுமே கொண்டிருக்கிறார்.

ஒரு கலெக்டர் ஊழல் செய்ய மாட்டார், ஏதோ சில ஏழைகளுக்கு சான்றிதழ் வாங்கித் தருவார், சில பல புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பார் என்பதைத் தாண்டி அவர் அரசின் கொள்கைகளையே அமல்படுத்துகிறார். சான்றாக ரேசன் கடைகளில் இனி பருப்பு வகைகள் இல்லை என அரசு உத்திரவிடும் போது, காட்டூர் மக்கள், அம்மா எங்க பிள்ளைகளுக்கு பருப்பு போடுங்கமா என்று கேட்டால் நயன்தாரா தனது ஊதியத்திலிருந்து சில பல கிலோக்களை வாங்கித் தரலாமே அன்றி அதிகாரியாக உத்தரவு போட முடியாது.

எனினும் நயன்தாரா இறுதியில் மக்களுக்கு சேவை செய்ய வழியற்ற இந்த அமைப்பில் இருந்து ராஜினாமா செய்கிறார். ஆனால் அவரது பாத்திரப் படைப்பு ஆரம்பத்தில் இருந்தே இந்த முடிவை நோக்கி பயணிப்பதால் கலெக்டர் எனும் பாத்திரத்தின் சட்டப்பூர்வ பரிமாணங்கள் இக்கதையில் பதிவு செய்யப்படவில்லை. அல்லது ஐ.ஏ.எஸ். பயிற்சி முடித்த ஒரு கலெக்டர் கறாரான வகையில் அரசு கொள்கைகளை அமல்படுத்தும் போக்கில் பிறகு அவர் இந்த அமைப்பே மக்களுக்கு பணியாற்றும் வகையில் இல்லை என்று பட்டுத் தெளிவதோ இல்லை சமரசப்படுத்திக் கொள்வதோ வந்தால் மக்கள் மாவட்ட ஆட்சியரின் இலக்கணத்தை புரிந்து கொள்வார்கள்.

இந்த அரசு செயல்படவில்லை, மக்களுக்கு எதிரானது என்று அதிகாரி வட்டத்தில் ஒரு ஸ்டேட்மெண்ட் தேவைப்பட்டதால்தான் கலெக்டர் பாத்திரத்தை வைத்தேன் என்று இயக்குநர் கூறினாலும், அந்த ஸ்டேட்மெண்ட் நடுநிலையாகவும், யதார்த்தமாகவும் வரவில்லை.

தகழியின் “ஏணிப்படிகள்” நாவலில் நல்லவனாக சேரும் அரசு குமாஸ்தா இறுதியில் தலைமைச் செயலளாராக மாறும் போது பெரும் காரியவாதியாக உருவெடுத்திருப்பான். உண்மையில் அரசு ஊழியர்களின் பரிணாம வளர்ச்சி இப்படித்தான இருக்கின்றது. ஒரு நேர்மையான கலெக்டர் நேரடியாக காசு வாங்க வில்லை என்றாலும் வரும் அரசு அதிகாரிகள் – அமைச்சரின் உண்டு விடுதி செலவுகளுக்காக துறைசார்ந்து மாவட்ட அதிகாரிகள் வசூலிப்பதையோ இல்லை மந்திரி வீட்டு மகளின் திருமணத்திற்கு அளிக்கப்படும் மாவட்ட மொய் தொகையையோ நிறுத்த முடியாது. சகாயமே ஆனாலும் கூடங்குளத்தில் அணு உலையை ஆரம்பிக்க இடிந்த கரை மக்களை ஒடுக்கவே செய்ய வேண்டும்.

அதே போன்று ஊடக விவாதம் படத்தின் சோகக் காட்சிகளிலிருந்து அவ்வப்போது மக்களை விடுவித்து கருத்துக்களை அசை போடும் நல்ல உத்திதான். என்றாலும் அங்கேயும் கலெக்டர் போன்று அனைவரும் மக்கள் சார்பில் நின்று அதுவும் கொஞ்சம் செயற்கையாக விவாதிக்கின்றனர். இதுதான் கொஞ்சம் ‘பிரச்சார’ தொனியில் இருக்கிறது என்பது அண்ணன் குணசேகரனுக்கு தெரியவில்லை.

உண்மையில் இந்த ஊடக விவாதம் பாண்டே தலைமையில், பானு கோம்ஸ், டாக்டர் சுமந்த் சி ராமன், ராமசுப்ரமணியன் போன்ற பாஜக சமூக ஆர்வலர்களோடு நடந்திருந்தால் அதுவும் மக்களுக்கு சார்பாக பேசும் பாணியில் நைச்சியமாக அதிகார வர்க்கத்தை ஆதரித்தும், மக்களின் அறியாமையை விமர்சித்துப் பேசுவதாக இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். கீழே களத்தில் இருக்கும் பத்திரிகையாளர்கள், தலைமையில் இருக்கும் எடிட்டோரியில் கொள்கையோடு முரண்படாமல் கள நிலவரத்தை சொல்லத் திணறும் பட்சத்தில் அந்த யதார்த்தம் படத்திற்கு வலு சேர்த்திருக்கும்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இப்படிச் சொல்லலாம். இந்தப் படத்தில் அதிகார வர்க்கம், அரசு நிர்வாகம், ஊடக முதலாளிகளுக்கான ‘நியாயம்’ பொருத்தமாக வைக்கப்பட்டிருந்தால், நயன்தாராவின் நல்ல கலெக்டர் பரிமாணம் இன்னும் பல முரண்பாடுகளோடு வெளியே வந்திருக்கும்.

இதனால் இந்தப் படம் தனது பேசுபொருளில் பலவீனமாய் இருப்பதாக பொருளில்லை. அதே நேரம் பலமாக இருப்பதாகவும் தோன்றவில்லை. அடுத்து குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அரசை செயல்படவைக்க வேண்டும் என்பதைத்தாண்டி ஒரு சிறுவனை குழியில் இறக்குவதை ஒரு  கையறு நிலை என்று குறிப்பிடலாமே அன்றி அதை மக்கள் தமது அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டார்கள் என்று பொருளாகாது.

ஏனெனில் அதே சிறுமிக்கு வெறிநாய்க் கடியோ இல்லை, பாம்புக் கடியோ நடந்து ஒரு அரசு மருத்துவமனையில் கதை நடப்பதாக வைப்போம். மருத்துவமனையில் மருந்தில்லை, பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லை என்றால் மக்கள், கலெக்டர் தலைமையில் நாட்டு வைத்தியம் செய்வது சாத்தியமில்லையே?

கல்வி, சுகாதாரம், வேலை, விலைவாசி உயர்வு அனைத்திலும் உலகமயம், தனியார்மயம், தாராளமயம் கோலொச்சும் நாட்களில் நாம் அரசை தட்டிக் கேட்டால்தான் மேற்கண்ட மூன்று மயங்களில் இருந்து நாட்டை மீட்கும் போராட்டத்தை கண்டுபிடித்துக் கட்டியமைக்க முடியும்.

இல்லையேல் நாமே சாலை போடுவது, பள்ளி நடத்துவது, மருத்துவமனை நடத்துவது என்று என்.ஜி.வோ. டைப்பில் அப்துல் கலாம், சகாயம் பாணியில் அரசியலற்ற முறையில் மக்களை காயடிப்பதாக இருக்கும். இந்தப் படம் அப்படி சொல்லவில்லை என்றாலும், இயக்குநர் கோபிக்கும் இந்த அரசியல் தெரியுமென்றாலும் படத்தின் கதையில் அது வலுவாக வரவில்லை என்பதே நமது தோழமையான விமர்சனம். இந்தக் குறைபாடுகளோடு சிறுமியின் உயிரைக் காப்பாற்ற முடியாதா எனும் பரபரப்பும் மனிதாபிமானமும் சேர்ந்து பார்வையாளர்களை கட்டிப் போடவைக்கிறது. அந்த பரபரப்பு அரசு குறித்த விமர்சனங்களில் எளிமைப்படுத்தப்பட்ட நல்லவன் – கெட்டவனாக மட்டுமே விஞ்சுகிறது.

இருப்பினும் ஒரு சிறுகதை போல ஒரு கிராமத்தின் பார்வையில் இந்த அரசு அமைப்பை இப்படம் சிறப்பாகவே அம்பலப்படுத்துகிறது. இயக்குநருக்கும், படக்குழுவினருக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்!


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கருத்துக் கணிப்பு : அன்புச் செழியனை சிறையில் அடைக்க தடுப்பது யார் ?

7

டிகர் சசிக்குமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார். தனது மரணக் குறிப்பில் மதுரை அன்புச் செழியன் எனும் கந்து வட்டி மாஃபியாவின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த கந்து வட்டி ரவுடி தொடர்பாகவே இயக்குநர் மணிரத்தினத்தின் சகோதரர் ஜி.வெங்கடேஸ்வரன் 2003 -ம் ஆண்டு தற்கொலை செய்தார்.

தற்கொலை செய்து கொண்ட அசோக் குமார்

அதன் பிறகு ரம்பா, தேவயானியை மிரட்டினார், அஜித்தை ஒரு அறையில் பூட்டி வைத்தார் என்று நிறைய தகவல்கள் வந்தாலும் அன்புச் செழியனை அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அ.தி.மு.க அமைச்சர்கள், சாதி பலம், போலீசு, நீதித்துறை, ஊடக முதலாளிகளுக்கு இறைக்கப்படும் பணம் ஆகியவற்றால் அன்புச்செழியன் செல்வாக்கோடு இருக்கிறார்.

சினிமாத்துறையில் இருக்கும் நெறிமுறையற்ற முறையில் பணம் சம்பாதிக்கும் நிலையும் இதற்கு காரணம். சந்தையில் வெற்றிகரமாக இருக்கும் நட்சத்திரங்களுக்கு அதிக பணம் கொடுத்து அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்யும் தயாரிப்பாளர்கள் அந்த அதிகப் பணத்தை இத்தகைய கந்து வட்டிக்காரர்களிடமே வாங்குகிறார்கள். சினிமா திரையரங்குகளில் அதிக விலையில் டிக்கெட் விற்கப்படுவதற்கும் இதுவே காரணம்.

இந்நிலையில் கந்து வட்டி தடைச் சட்டமே இந்த அன்புவின் அடாவடியை அடுத்து கொண்டு வரப்பட்டாலும் அடாவடிகள் தொடர்கின்றன.

மதுரை அன்புச்செழியனை சிறையில் அடைக்க தடுப்பது யார்?

  • அ.தி.மு.க அமைச்சர்கள்
  • பெரும் ஊதியத்தை வாங்கும் நட்சத்திர நடிகர்கள்
  • ஊழல் போலீசு, நீதிமன்றம்
  • நட்சத்திர நடிகருக்கு கொட்டிக் கொடுக்கும் தயாரிப்பாளர்கள்
  • அன்புச் செழியனை வெளிப்படையாக கண்டிக்க முன்வராத சினிமா பிரபலங்கள்

(பதில்களில் மூன்றைத் தேர்ந்தெடுக்கலாம்)


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

பத்மாவதி திரைப்படம் – பொது அறிவு வினாடி வினா 6

த்மாவதி – சஞ்செய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியாக இருக்கும் இந்திப் படம். ரஜபுத்ர ராணி பத்மினி அல்லது பத்மாவதியின் கதையை ஒரு இலக்கியத்தின் அடிப்படையில் கூறும் இந்த மசாலா படத்தை பல்வேறு இந்துமத இயக்கங்கள் எதிர்க்கின்றன. ஒருவேளை இந்த எதிர்ப்பு கூட விளம்பரத்திற்கான செட்டப்பாகவும் இருக்கலாம். ஏனெனில் தயாரிப்பாளர்களில் ஒருவர் அந்த சந்தேகத்தை எழுப்புகிறார். இது போக ஒரு புகழ்பெற்ற இந்து ராணியை படத்தில் கேவலப்படுத்தி விட்டார்கள் என்பதே இந்து மதவெறியர்களின் குற்றச்சாட்டு. இனி வினாடி வினாவில் பதிலளிப்பதன் மூலம் இதன் வரலாற்றுப் பின்னணியை நீங்களும் அறியலாம்.

  1. பத்மாவதி திரைப்படத்தின் கதையை தீர்மானிக்கும் பத்மாவத் நெடுங்கவிதையை கி.பி 1540-ம் ஆண்டில் எழுதியவர் யார்?மாலிக் முகமது ஜெயஷி
    ராணா பிரதாப் சிங்
    காளிதாசர்
    துளசிதாசர்
  2. ராஜ்புத் வார்த்தையின் மூலமான சம்ஸ்கிருத வார்த்தையின் பொருள் என்ன?மன்னனின் மகன்
    ஆண்ட பரம்பரை
    அரசர்களின் அரசன்
    சக்கரவர்த்தி
  3. ராஜபுத்திரர்கள் எனப்படும் குழு அல்லது சாதி என்ன தொழிலை அடிப்படையாக கொண்டிருந்தது?போர் தொழில் முதல் விவசாயம் வரை
    போர் வீரர்கள்
    புரோகிதர் வேலை
    கிராம தலைவர்கள்
  4. பத்மாவதி திரைப்படத்தை பன்சாலியுடன் தயாரித்திருக்கும் Viacom 18 நிறுவனம் யாருடையது?முகேஷ் அம்பானி
    கோயங்கா
    அமிதாப் பச்சன்
    அதானி
  5. ராணி பத்மினியின் கதையைக் கூறும் பத்மாவத் நெடுங்கவிதை எந்த மொழியில் எழுதப்பட்டது?அவாதி
    சம்ஸ்கிருதம்
    இந்தி
    உருது
  6. பத்மாவத் காப்பியத்தின்படி ராணி பத்மினி பிறந்த பகுதியாக கூறப்படும் சிம்கலவிபா எந்த இடத்தில் உள்ளது?இலங்கை
    பாகிஸ்தான்
    ராஜஸ்தான்
    குஜராத்
  7. ராணி பத்மினியின் நாடான சித்தூர் மீது படையெடுத்துச் சென்ற அலாவுதீன் கில்ஜியின் காலம் என்ன?கி.பி 1296 – 1316
    கி.பி 1415 – 1466
    கி.பி 1695 – 1712
    கி.பி 1332 – 1378
  8. அலாவுதீன் கில்ஜியோடு சென்ற இந்த அரசவைக் கவிஞர், தனது மன்னன் பத்மாவதிக்காக படையெடுத்தார் என்று குறிப்பிடவில்லை. அவர் யார்?அமீர் குஸ்ரோ
    அல்பரூணி
    மாலிக் கபூர்
    சையத் அஸ்ரப்
  9. ராணி பத்மினியின் கணவரான ரத்தன்சென்னின் பெயரில் 16 -ம் நூற்றாண்டில் ஒரு மன்னன் சித்தூரை ஆண்டான். அவனது ஆட்சிக் காலத்தில் குஜராத்தின் பகதூர் ஷா படையெடுத்த போது உயர்குடி ரஜபுத்ர பெண்கள் தீக்குளித்தனர். இந்த சம்பவமே இதற்கு முந்தைய பத்மினியின் காலத்தில் கடத்தப்பட்டு காவியமாக்கப்பட்டிருக்கலாம். இதைக் கூறும் வரலாற்றறிஞர் யார்?ரம்யா ஸ்ரீனிவாசன்
    ரொமிலா தாப்பார்
    டிடி கோசாம்பி
    எம் சீனிவாசன்
  10. டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி, சித்தூர் மீது படையெடுத்த ஆண்டு எது?கி.பி 1303
    கி.பி 1374
    கி.பி 1456
    கி.பி 1572
  11. பத்மாவத் புராணப் பாடல் படி அலாவுதீன் கில்ஜி, சித்தூர் மீது படையெடுக்க முதன்மையான காரணம் என்ன?பத்மினியின் கணவன் ரத்தன்சென்னால் வெளியேற்றப்பட்ட பார்ப்பனர்
    அலாவுதீன் கில்ஜியின் பெண்ணாசை
    அலாவுதீன் கில்ஜியின் போர் வெறி
    ரத்தன்சென்னின் போட்டி ரஜபுத் அரசர்கள்
  12. வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் அலாவுதீன் கில்ஜி யார்?ராஜதந்திரம் மற்றும் சிறப்பான நிர்வாகத்துடன் ஆண்ட மன்னன்
    சுகபோகி
    படையெடுப்பில் ஆர்வம் கொண்டவர்
    கலை இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவர்
  13. அலாவுதீன் கில்ஜி, சித்தூரை வென்றிருந்தாலும், வரலாற்றில் பத்மாவதி என்ற பாத்திரத்திற்கு ஆதரமோ தடயமோ இல்லை என்று வரலாற்றறிஞர்கள் கூறுவது உண்மையா?உண்மை
    இல்லை
    அப்படி அறுதியிட்டு கூறவில்லை
  14. பன்சாலியின் திரைப்படம் சித்தரிப்பது போன்று அலாவுதீன் கில்ஜி ஒரு காட்டுமிராண்டி என்பதை வரலாற்றறிஞர்கள் ஒத்துக் கொள்கிறார்களா?நிச்சயம் இல்லை
    ஓரளவுக்கு ஏற்கிறார்கள்
    முழுமையாக ஏற்கிறார்கள்
  15. ஒரு ஸ்டிங் ஆபரேசனின் படி பத்மாவதி திரைப்படத்தை எதிர்க்கும் ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா எனும் ராஜபுத்திர சாதி சங்கத்தின் நோக்கம் என்ன?தயாரிப்பாளரிடம் பணம் பறிக்கும் திட்டம்
    சாதிப் பெருமை
    வரலாற்று அறியாமை
  16. படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்து விட்டு இந்தப் படம் ரஜபுத்திரர்களின் குலப்பெருமையை நிலைநாட்டுகிறது என்று கூறிய புகழ்பெற்ற ஊடகவியலாளர் யார்?அர்னாப் கோஸ்வாமி
    ராஜ்தீப் சர்தேசாய்
    பர்காதத்
  17. இந்தப் படமும், பத்மாவத் நெடுங்கவிதையும் கூறும் பத்மாவதியின் பாத்திரப் படைப்பு என்ன?அழகான பெண் கற்புக்காக தீக்குளிக்கும் பெண்ண்டிமைத்தனம்
    படையெடுக்கும் மன்னனின் கைகளில் சிக்காமல் மாண்ட வீரம்
    அழகான பெண்ணை அடைய விரும்பும் ஆணாதிக்கம்
  18. இந்தப் படம் ரஜபுத்த்திர மக்களின் உணர்வை புண்படுத்துகிறது என்று கூறிய கட்சிகள் யார்? (இரண்டு தெரிவுகள் செய்ய வேண்டும்)காங்கிரஸ்
    பாஜக
    கம்யூனிஸ்டு
    திரிணாமூல் காங்கிரஸ்
  19. பன்சாலி மற்றும் தீபிகா படுகோனே தலைகளைக் கொண்டு வருவோருக்கு ஹரியாணா பாஜக ஊடக தலைவர் நிர்ணயித்த தொகை எவ்வளவு?பத்து கோடி ரூபாய்
    ஐந்து கோடி ரூபாய்
    பதினைந்து  கோடி ரூபாய்
    இரண்டு கோடி ரூபாய்
  20. இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் – ஒரு ராஜபுத்திர ராணி கூன்காட் இல்லாமல் எப்படி நடனமாட முடியும் என்று பாஜக தலைவர் ராஜ் கே புரோகித் கூறியிருக்கிறார். கூன்காட் என்றால் என்ன?முகத்தை மறைக்கும் தடுப்புத் துணி
    முழு உடலையும் மறைக்கும் புர்கா
    நெற்றியில் பெரிதாக வைக்கப்பட்டிருக்கும் பொட்டு

இந்தியாவிற்குத் தேவை புரட்சி – தோழர் மருதையன் உரை !

4

“கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!” சிறப்புக் கூட்டம் சென்னை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் அரங்கில் நவம்பர் 19, 2017 அன்று நடைபெற்றது.

அக்கூட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் “இந்த வருடம் மார்க்சின் மூலதனம் நூலின் 150 -வது ஆண்டு மற்றும் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு மட்டுமல்ல சீனத்தின் கலாச்சாரப் புரட்சிக்கும், இந்தியாவில் நடைபெற்ற நக்சல்பாரி எழுச்சிக்கும் 50 -வது ஆண்டு”

” ரசியப் புரட்சி என்பது வெறுமனே ஒரு நாட்டில் ஏற்பட்ட புரட்சி அல்ல. அதன் தாக்கம் உலகம் முழுவதும்  பல்வேறு நாடுகளில் எதிரொலித்தது. சோவியத் ரசியா என்பது மக்களுக்கான அரசாக இருந்தது. உழைக்கும் மக்கள் அரசாளும் ஒரு மக்கள் அரசாக இருந்தது. முதலாளித்துவம் தான் இறுதி சமூகம் என கொக்கரித்துக் கொண்டிருந்த முதலாளித்துவவாதிகள் இன்று சிஸ்டம் சரியில்லை எனப் புலம்புகிறார்கள். ரசியப் புரட்சியை இந்தியாவில் கொண்டு வரவேண்டும். 1917ஐ மீண்டும் படைப்போம்” என்பதை தனது உரையில் பேசினார்.

 

 

அவரது உரையை பாருங்கள்… பகிருங்கள்…


  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

காலத்தை வென்ற மூலதனம் – தோழர் தியாகு உரை !

0

சென்னை நவம்பர் 19, 2017 அன்று நந்தனம் – ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் நடைபெற்ற “கார்ல் மார்க்சின் மூலதனம் 150-ம் ஆண்டு ! நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு !!” சிறப்புக் கூட்டத்தில் மூலதனம் தமிழ்பதிப்பின் மொழிபெயர்ப்பாளர், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் மூலதனம் நூலைப் பற்றி மிகவும் சிறப்பாகவும், செறிவாகவும் விளக்கிப் பேசினார். “மூலதனம் நூலை மார்க்ஸ் படைத்தளித்த வரலாற்றுச் சூழலைப் பற்றியும் அவருக்கு உறுதுணையாக இருந்த தோழர் எங்கெல்ஸ் அவர்களின் பங்களிப்பையும்” பதிவு செய்தார். மேலும் “மூலதனம் நூல் தமிழில் பெற்ற வரவேற்ப்பையும் அதனை மொழிபெயர்த்த அனுபவத்தையும். தனது மொழிபெயர்ப்பு இன்னமும் நிறைவடையவில்லை. அதனை மேலும் செழுமைப்படுத்த வேண்டும்” என்ற அவரது அவாவையும் வெளிப்படுத்தினார்.

 

 

பாருங்கள்… பகிருங்கள்…


  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

ரஃபேல் விமானம் : மூட்டைப் பூச்சி மிசின் தயாரிக்க அம்பானிக்கு அள்ளிக் கொடுக்கும் மோடி

5

‘உத்தமர்’ மோடியின் மற்றுமொரு ஊழல் நம் கண்ணெதிரே நடத்தப்பட்டு வருகின்றது. பிரெஞ்சு நாட்டு விமான நிறுவனமான “தஸ்ஸால்டிடம்” (Dassault) இருந்து 36 ரஃபேல் வகைப் போர் விமானங்களை வாங்க சுமார் 57 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றை மோடி உறுதி செய்துள்ளார்.

2015 -ம் ஆண்டு பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த மோடி, தஸ்ஸால்ட் நிறுவனத்திடம் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்திருந்தார்; எனினும், அப்போது அந்த ஒப்பந்த அடிப்படையில் விமானங்களின் உண்மையான விலை வெளியிடப்படாமல் இருந்தது.

2015 ஃப்ரான்ஸ் நாட்டு பயணத்தின் போது மோடியின் தலைமையில் கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள்

2015 -ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட போதே ரஃபேல் விமானங்கள் தகுதி குறைவானது என்பதையும், தஸ்ஸால்ட் நிறுவனம் ஏறத்தாழ போண்டியாக வேண்டிய நிலையில் இருந்ததையும், இந்த ஒப்பந்தம் பிரான்சுக்கு சேவை செய்யும் நோக்கம் கொண்டதாக இருப்பதையும் சுட்டிக்காட்டி வினவில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். (பவர் ஸ்டார் மோடி பாரிசில் வாங்கிய மூட்டை பூச்சி மிஷின்).

தற்போது மேற்படி ஒப்பந்தத்தின் மதிப்பு வெளியாகி இருப்பதோடு மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிதாக வெளியாகி உள்ள தகவல்களின் படி, மோடி செய்து கொண்ட ஒப்பந்தம் ஏகாதிபத்திய பிரான்சுக்கு மட்டுமல்ல உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் வைக்கப்படும் கறி விருந்து என்பது அம்பலமாகியுள்ளது.

மேற்கொண்டு விவரங்களுக்குள் செல்வதற்கு முன் சில அடிப்படைத் தகவல்களைப் பார்த்து விடுவோம்.

இந்திய விமானப்படையில் செயல்பட்டு வந்த மிக் ரக விமானங்கள் தொடர்ந்து பயிற்சியின் போது விபத்துக்குள்ளாவது, ரசிய இந்திய கூட்டுத் தயாரிப்பான சுகோய் ரக விமானங்களும் வயதாகிக் கொண்டிருப்பது போன்ற காரணங்களால், சுமார் 200 மத்திய ரக பல்நோக்குப் போர் விமானங்கள் (MMRCA – Medium Multi-Role Combat Aircraft) தேவைப்படுவதாக 2001 -ம் ஆண்டு இராணுவம் அரசுக்குத் தெரிவித்தது. 2007 -ம் ஆண்டு இராணுவத்தின் இந்தக் கோரிக்கையை அங்கீகரித்த மத்திய அரசு, விமானங்களைக் கொள்முதல் செய்ய டென்டர் அறிவித்தது.

பலநாடுகளைச் சேர்ந்த விமானக் கம்பெனிகள் கலந்து கொண்ட டென்டரின் இறுதியில் சர்வதேச அளவில் நடந்த பல்வேறு போர் பயிற்சிகளில் தொடர்ந்து மோசமாக செயல்பட்ட தகுதி குறைவான ரஃபேல் விமானங்கள் தெரிவு செய்யப்பட்டன. எனினும் அப்போது செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் படி, மொத்தம் 126 விமானங்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அதன் மொத்த மதிப்பு 10.2 பில்லியன் டாலராக இருக்கும் எனவும், ஒரு விமானத்தின் விலை 81 மில்லியன் டாலர்களாக இருக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், இந்தியாவின் பொதுத்துறை இராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு தொழில்நுட்பங்களை மாற்றித் தருவது, 108 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது, இந்த ஒப்பந்தத்தின் மூலம் தஸ்ஸாட் நிறுவனத்திற்கு கிடைக்கும் மொத்த வருவாயில் 50 சதவீதத்தை இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்பன போன்ற விதிகளுக்கு ரஃபேல் நிறுவனம் ஒப்புக் கொண்டிருந்தது. அன்றைய நிலையில் பிற நாட்டு இராணுவங்கள் ரஃபேல் விமானங்களை வாங்கத் தயாராக இல்லாத காரணத்தால் ஏறத்தாழ திவாலாகும் நிலையில் இருந்த தஸ்ஸாட் நிறுவனம், பேரத்தின் போது இந்தியா விதித்த அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்த பின் ரஃபேல் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. கடந்த 2015 ஏப்ரல் 13 -ம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிகர், 126 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு 90 ஆயிரம் கோடி ஆகும் (14 பில்லியன் டாலர்) என தெரிவித்தார். 2012 -ம் ஆண்டு 10.2 பில்லியன் டாலராக இருந்தது, முன்றே ஆண்டுகளில் 14 பில்லியன் டாலராக எதன் அடிப்படையில் அதிகரித்தது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை.

சரியாக ஒரே மாதம் கழித்து 2015, மே 31 -ம் தேதி பத்திரிகையாளர்களிடம் பேசிய பாரிகர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரஃபேல் விமானங்களை வாங்குவதால் நாட்டுக்கு 1.3 லட்சம் கோடி செலவாகும் என தெரிவித்தார். ஒரே மாதத்தில் 40 ஆயிரம் கோடி விலை அதிகரித்த இந்த அதிசயம் எதன் அடிப்படையில் நடந்தது என்பதற்கும் விளக்கமில்லை. இதற்கிடையே ஒப்பந்தம் குறித்தும் விலை குறித்தும் கருத்து தெரிவித்த தஸ்ஸாட் நிறுவனம், தாம் டெண்டருக்கான ஆரம்ப முன்மொழிதல் ஆவணங்களில் (RFP – Request for Proposal) உள்ள விலைகளை உயர்த்தவில்லை என குறிப்பிட்டது.

முன்னால் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர்

இதற்கிடையே 2015 -ம் ஆண்டு பிரான்ஸ் சென்ற மோடி, 36 விமானங்கள் மட்டும் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டார். பாதுகாப்புத் துறை சம்பந்தமான ஒரு முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தான இந்த வைபவத்தின் போது அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிகர் உடனிருக்கவில்லை; மோடியே முன்னின்று ஒப்பந்தத்தை நிறைவேற்றினார். பிரான்சில் ஒப்பந்தம் கையெழுத்தாகிக் கொண்டிருந்த போது, கோவாவில் நடமாடும் மீன் கடையைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர். அப்போதே விமானங்களின் விலை குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. அதற்கும் ஓராண்டு கழித்து சத்தமின்றி தனியே அறிவித்துக் கொண்டார்கள்.

மனோகர் பாரிகர் ஆரம்பத்தில் சொன்படி 90 ஆயிரம் கோடி என்று வைத்துக் கொண்டாலும் கூட, ஒரு விமானத்தின் விலை 71.414 கோடியாக இருந்திருக்க வேண்டும் – ஆனால், மோடியின் ஒப்பந்தப்படி ஒரு விமானத்தின் விலை 1666.66 கோடி. அதாவது வெறும் 36 விமானங்களுக்கு 60 ஆயிரம் கோடி தண்டம் கட்டப் போகிறது இந்திய அரசு. மேலும், முந்தைய ஒப்பந்தம் போல் தொழில்நுட்பங்களையும் ரஃபேல் நிறுவனம் இந்தியாவுக்கு மாற்றித் தரப் போவதில்லை.

இந்த இமாலய விலையேற்றத்துக்கு என்ன காரணம்? இடையில் நடந்தது என்ன?

2012 -ம் ஆண்டு தஸ்ஸாட் நிறுவனம் டெண்டரை வென்ற இரண்டே வாரத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தோடும் பின்னர் சில மாதங்கள் கழித்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தோடும் கூட்டுத் தயாரிப்புக்கான (JV) ஒப்பந்தங்களைச் செய்து கொள்கின்றது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தஸ்ஸால்ட்டுக்கு உதிரிபாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் இசுரேல் நிறுவனம் ஒன்றுடனும் கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தியாவில் விமான இரக்கை மற்றும் அதன் இன்ஜினின் பாகங்களைத் தயாரிப்பதற்கு முகேஷ் அம்பானி நிறுவனத்துடனும், பிற உதிரிபாகங்களைத் தயாரிக்க அனில் அம்பானியின் நிறுவனத்தோடும் தனித்தனியே ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது தஸ்ஸால்ட்.

இதன் பின் நடந்த பேச்சுவார்த்தைகளில் தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தொனி மாறத் துவங்குகின்றது. அதற்கு முன் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்சுடன் இணைந்து 108 விமானங்களைத் தயாரிக்கவும், அந்நிறுவனத்துக்கு தொழில்நுட்பங்களை மாற்றிக் கொடுக்கவும் இசைந்திருந்த தஸ்ஸால்ட், அதன்பின் ஏராளமான நிபந்தனைகளை விதிக்கத் துவங்கியது.

குறிப்பாக, சில நவீன ஆயுதங்களை விமானத்தோடு இணைப்பதற்கு கூடுதல் செலவாகும் என ஆரம்பித்த தஸ்ஸால்ட், 126 விமானங்களுக்கான விலையை 14 பில்லியன்களாக்கியது. மேலும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தயாரிக்கும் விமானங்களுக்கான உத்திரவாதத்தை தரமுடியாதெனவும், தொழில்நுட்பத்தை கையளிக்க முடியாதெனவும் பின்வாங்கியது – இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டே அதே சமயத்தில் தான் “மேக் இன் இந்தியா” திட்டத்திற்காக பலூன்களைப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார் மோடி.

தற்போது இந்த ஊழலை முட்டுக் கொடுக்க கையால் கரணம் போட்டுக் கொண்டிருக்கும் மோடி பக்தர்கள் சில வாதங்களை வைக்கிறார்கள். அதில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் கடந்த காலங்களில் (குறிப்பாக தேஜஸ் விமானத் தயாரிப்பில்) சிறப்பாக செயல்படவில்லை என்று புதிதாக கண்டுபிடித்துள்ளனர். ஆனால், விமானத் தயாரிப்பில் எந்த முன் அனுபவமும் இல்லாத அம்பானி சகோதரர்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று வினோதமான தர்க்கத்தை வைக்கிறார்கள்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

அடுத்து, மன்மோகன் சிங் காலத்தில் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் படி நமக்கு கிடைக்கவிருந்த விமானங்கள் அடிப்படை மாடல்கள் எனவும், தற்போது கிடைக்கவிருப்பது கூடுதல் ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருப்பதால் விலை அதிகம் என்கிறார்கள். துப்பாக்கியை விட தோட்டாக்களுக்கு அதிக விலை என்கிற முட்டாள்தனமான தர்க்கத்துக்கு ஒரே உதாரணத்தை மட்டும் பார்க்கலாம்.

விமானத்தில் பொருத்தப்படவுள்ள மெட்டியார் ரக ஏவுகணையின் சந்தை விலையே 2.1 மில்லியன் டாலர் தான். அதே போல் HDMS எனப்படும் ஹெல்மெட்டில் பொருத்தப்படும் வழிகாட்டும் அமைப்பின் விலை 0.4 மில்லியன் டாலர். இவ்வாறு தனித்தனியே விமானத்தில் பொருத்தப்பட உள்ளதாக சொல்லப்படும் ஆயுதங்களின் சந்தை விலையைக் கூட்டினால் ஒரு விமானத்திற்கு 10 மில்லியன் டாலர் அதிகரிக்கலாம். ஆனால், தற்போது ஊதிப் பெறுக்கப்பட்டுள்ள விலையோ 100 சதவீதத்துக்கும் அதிகம்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இவ்வாறு குற்றம் சாட்டுவது வெட்கக்கேடானது என்றும் தேசத்தின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்குவதாகும் என்றும் எச்சரித்துள்ளார். இதே தர்க்கம் காங்கிரசின் போஃபர்ஸ் ஊழலுக்கும் பொருந்துமா என்பதைப் பற்றி நிர்மலா சீதாராமன் தெரிவிக்கவில்லை.

சுருக்கமாகச் சொல்வதானால் – இது பச்சையான ஊழல். அதுவும் தனியார் முதலாளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை எடுத்து கறி விருந்து வைக்கிறார் மோடி. தனது ஊழலைக் கேள்விக்குள்ளாக்குபவர்களை ஒரேயடியாக தேசதுரோகிகளாக சித்தரிக்கும் முயற்சியில் பாரதிய ஜனதா ஈடுபட்டுள்ளது.

மேலும் :


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கருத்துக் கணிப்பு : இன்றைய செய்திகளில் சிரிக்கத் தக்கவை எவை ?

1

வினவு தளத்தில் அன்றாடம் கருத்துக் கணிப்பு போடுவதில்லையே ஏன்?

து ஒரு வாசகரின் கேள்வி. என்ன கருத்துக் கணிப்பு நடத்துவது? திணறி வருகிறோம். அ.தி.மு.க காமெடி அக்கப்போர்கள் ஓ.பி.எஸ். தியானத்தில் இருந்த போது ஆரம்பித்தது… இன்றும் நிற்கவில்லை. வளைத்து வளைத்து ஒரே விசயத்தை பேசுவதோடு, காதுகளே நாணப்படும் அளவுக்கு ஃபோன் ஒயர் அந்து போன வார்த்தைகளை சலிக்காமல் வீசுகிறார்கள்.

மோடி அரசின் பொருளாதார ஒடுக்குமுறையும், அதனோடு கூட சேர்ந்து வரும் பார்ப்பனிய அடக்குமுறையும் அன்றாடம் நடக்கின்றன. இடங்களும் காலமும் மாறினாலும் இந்த ஒடுக்குமுறையின் கரு ஒன்றுதான். பிறகு ஊடகங்கள் பாஜக -விற்கு சொம்படிக்கின்றன. சமூகவலைத்தளங்களில் அந்த வார சினிமா செய்திகள் பேசப்படுகின்றன.

இந்நிலையில் கருத்துக் கணிப்பிற்கு நீங்கள்தான் ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும்.

ஆகவே இன்றைய கருத்துக் கணிப்பு :

இன்றைய செய்திகளில் சிரிக்கத் தக்கவை எவை?

  • என்னை ‘டுமிலிசை’ என்று அழைப்பதில் கவலை இல்லை – தமிழிசை சௌந்தர்ராஜன்
  • சூர்யாவுக்கு கார்த்தி கடும் போட்டியாக இருக்கிறார் – சென்னை மாநகர காவல் துணை ஆணையர் பாராட்டு
  • உலகின் மிகமிக சுவையான உணவு கருவாடுதான் – இயக்குநர் மிஷ்கின்
  • ‘தமிழகத்தில் மக்களாட்சியை உருவாக்க திமுக, அதிமுக அல்லாத கட்சிகள் பாமக தலைமையை ஏற்க வேண்டும்’ – டாக்டர் ராமதாஸ்
  • யூனிசெஃப்பின்குழந்தைகள் உரிமை தூதராக த்ரிஷா நியமனம்
  • கமல் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது – அமைச்சர் ஜெயக்குமார்

( பதில்களில் ஏதேனும் இரண்டைத் தெரிவு செய்யலாம் )


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கார்ல் மார்க்ஸின் மூலதனம் – 150 ரசியப் புரட்சி – 100 – சென்னை சிறப்புக் கூட்டம் !

8

கார்ல் மார்க்சின் மூலதனம் 150-ம் ஆண்டு நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு விழா சிறப்புக் கூட்டம் நவம்பர் 19, 2017 அன்று நடைபெற்றது.

ந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி செல்லும் பாதை நெடுகிலும் செங்கொடிகள் பறக்க, ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி அரங்க வளாகம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது.

( மக்கள் வெள்ளத்தில் ஒய்.எம்.சி.ஏ. அரங்கம் – படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

( அரங்கத்திற்கு வெளியே – படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மாலை 3.30 மணிக்கு கருத்துப்படக் காட்சி ஒளிபரப்பப்பட்டது.  முதலாளித்துவத்தின் முரண்பாடுகளையும், அதன் ஈவிரக்கமற்ற கொடுமைகளையும், அது தனக்குத் தானே சமாதி கட்டிக் கொண்டிருப்பதையும் விளக்கும் விதமான படங்களும், கேலிச்சித்திரங்களும் கருத்துப்படக் காட்சியை சிறப்பித்தன.

( தப்பாட்டம் – படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மேலும் இரசியப் புரட்சி பற்றியும், அது உலகத்திற்கு வழங்கிய கொடையைப் பற்றியும் கருத்துப்படக் காட்சியில் படங்கள் இடம்பெற்றன. அரங்கத்திற்கு வெளியே திரையிடப்பட்ட கருத்துப்படக் காட்சியை மக்கள் பார்த்து இரசித்தனர்

கூட்டம் தொடங்குவதற்கு முன்பே ஒய்.எம்.சி.ஏ. அரங்கம் நிரம்பி வழிந்தது. உட்காருவதற்கு இடமில்லாத காரணத்தால், அரங்கத்திற்கு வெளியே 1200 -க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்தனர், அவர்களுக்கு தொலைக்காட்சி திரையில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

மாலை 3.45 மணியளவில் தப்பாட்டம் தொடங்கியது. பறையிசையின் உணர்ச்சிப் பெருக்கோடு, கூட்டம் தொடங்கியது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்தினார். முதலில் பாட்டாளிவர்க்க சர்வர்தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பங்கேற்றோர் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

தோழர் முகுந்தன்

அதன் தொடர்ச்சியாக, “ரிசர்ச் யூனிட் ஃபார் பொலிட்டிகல் எக்கானமி” (RUPE) என்ற அரசியல் பொருளாதார பத்திரிக்கையின்  ஆசிரியர் ரஜனி எக்ஸ் தேசாய் , இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கத்தை தோழர் மருதையன் கூட்டத்தினர் முன் வாசித்தார்.

வழக்கறிஞர் பாலன்

அதன் பின்னர், பெங்களூரு வழக்கறிஞர் பாலன், சிறப்புரையாற்றினார். “இரசியப் புரட்சிதான் நாம் இன்று அனுபவிக்கும் அனைத்து மக்கள் நலத் திட்டங்களுக்கும் காரணம் என்பதையும், தொழிலாளி வர்க்கம் எவ்வாறு போராடிப் பெற்ற தனது உரிமைகளை இன்று இழந்து நிற்கிறது என்பதையும் விளக்கிப் பேசினார்.”

அடுத்தபடியாக, வினவு வழங்கிய “புரட்சியின் தருணங்கள்” இசைச்சித்திரம் ஒளிபரப்பட்டது. மேடையின் பின்னணியில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான திரையில் இசைச்சித்திரம் ஒளிபரப்பப்பட்டது. இரசியப் புரட்சியின் காலகட்டத்தையும், உலகின் முதல் சோசலிச அரசின் சாதனைகளையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் விதமான காட்சிகளோடு 35 நிமிட இசைச்சித்திரம் ஒளிபரப்பப் பட்டது.

அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர். லெனின் படம்

இரசிய சோசலிசப் புரட்சியின் தாக்கத்தினால் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஏற்பட்ட விடுதலை இயக்க எழுச்சி, சோசலிசக் குடியரசுகளின் தோற்றம் மற்றும் உலகெங்கும் நடைபெற்ற நவம்பர் புரட்சி நூற்றாண்டு கொண்டாட்டங்களையும் கண்முன்னே காட்டியது “புரட்சியின் தருணங்கள்’ இசைச் சித்திரம்.இசைச் சித்திரத்தின் பல்வேறு காட்சிகளுக்கு மக்கள் ஆரவாரமாக கைதட்டினர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற தப்பாட்டம், பார்வையாளர்களுக்கு உணர்ச்சிப் பூர்வமான எழுச்சியைக் கொடுத்தது என்றால், “புரட்சியின் தருணங்கள்” இசைச்சித்திரம் உணர்வுப்பூர்வமான எழுச்சியை பார்வையாளர்களின் மத்தியில் ஏற்படுத்தியது.

தோழர் தியாகு

அதனைத் தொடர்ந்து மூலதனம் நூலின் தமிழ் பதிப்பின் மொழி பெயர்ப்பாளரும், தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவருமான தோழர் தியாகு உரையாற்றினார்.

“கார்ல் மார்க்சின் மூலதனம் நூலை மொழிபெயர்க்கும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், மார்க்சின் மூலதனம் நூலைப் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.”

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஒவ்வொரு உரைகளுக்கும் இடையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தோழர்களின் பாடல்கள் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

தோழர் மருதையன்

அதன் பின்னர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றினார். “முதலாளித்துவம் இன்று அதற்கான சவக்குழியை தானே தோண்டிக் கொண்டுள்ளது. அதனை சவக்குழிக்கு அனுப்ப வேண்டிய வேலையை பாட்டாளி வர்க்கம் செய்து முடிக்க வேண்டும்” எனக் கூறினார்.

அவரின் உரையைத் தொடர்ந்து வினவு வழங்கிய “மார்க்ஸ் எனும் அரக்கன்” இசைச் சித்திரம் திரையிடப்பட்டது. மார்க்ஸின் சமகால அரசியல் சூழல்குறித்தும், முதலாளித்துவவாதிகளால் கூட தவிர்க்கப்பட முடியாதவராக இன்று மார்க்ஸ் அவசியப்படுவதையும் எடுத்துக்காட்டியது இசைச்சித்திரம்

 

தோழர் கணேசன்

நிகழ்ச்சியின் இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் நன்றியுரையாற்றினார்.

-வினவு செய்தியாளர்.

குறிப்பு: –

முழுக் கூட்டத்தையும் வினவு இணையதளத்தில் நேரலை செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. தொழில் நுட்பச் சிக்கல் மற்றும் அனுபவக் குறைவு காரணமாக அது கடைசி நிமிடத்தில் இரத்து செய்யப்பட்டது. எதிர்பார்த்துக் காத்திருந்த நண்பர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு வருந்துகிறோம். இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறோம். அதேநேரத்தில் இத்தகைய நிகழ்ச்சிகளை தவறே இல்லாமல் தொழில் நுட்ப நேர்த்தியுடன் நேரலையாக காட்டும் சோதனையில் வெற்றி பெற்றிருக்கிறோம்.  அடுத்து வரும் நேரலைகள் பிரச்சினையின்றி இருக்குமென நம்புகிறோம். நவம்பர் கூட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் வீடியோக்களாக ஓரிரு தினங்களில் வெளியிடப்படும்.


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி