privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்மக்களை எமனாய் அச்சுறுத்தும் ராம்கி நிறுவனம் !

மக்களை எமனாய் அச்சுறுத்தும் ராம்கி நிறுவனம் !

-

விருதுநகர் மாவட்டம், அ.முக்குளத்தில் அபாயகரமான மருத்துவக் கழிவுகளை எரித்து, நூற்றுக்கும் மேலான மக்களைக் கொன்று, பொது அமைதியை சீர்குலைக்கும் ராம்கி நிறுவனத்தை மூடு!

திருப்பூர்,ஈரோடு மாவட்ட சாயப்பட்டறை மற்றும் வெளிநாட்டு மின்னணுக் கழிவுகளைப் புதைக்கும் புதிய நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்!

பேரணி-பொதுக்கூட்டம்

நாள் : 25.05.2017 வியாழன்
நேரம் : மாலை 04.30 மணி
பேரணி துவங்குமிடம்:சந்தைகடை பஜார்,காரியாபட்டி
பொதுக்கூட்டம்: திருச்சுழி முக்கு ரோடு,காரியாபட்டி

தலைமை :

  • தோழர் சே.வாஞ்சிநாதன், சட்ட ஆலோசகர்,ராம்கி எதிர்ப்பு போராட்டக் குழு. மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம.

கண்டன உரை :

  • திரு.சொ.ராஜா,  மாவட்ட செயலாளர், இந்திய தேசிய காங்கிரஸ்
  • திரு.ஜெயராஜ்,முன்னாள் நரிக்குடி ஒன்றிய சேர்மன், அ.தி.மு.க(அம்மா) கட்சி
  • திரு. சண்முக சுந்தரம், மாவட்ட செயலாளர்,ம.தி.மு.க
  • திரு. அர்ச்சுனன், மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
  • திரு. ராமசாமி, மாவட்ட செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
  • திரு.பவுன்ராஜ்,மாவட்ட செயலாளர்,புதிய தமிழகம்
  • திரு. முருகன், மாவட்ட செயலாளர்,விடுதலை சிறுத்தைகள் கட்சி
  • திரு.கலைவேந்தன்,கொள்கை பரப்பு செயலாளர்,தமிழ் புலிகள் கட்சி
  • திரு. பாலகங்காதரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அ.தி.மு.க(புரட்சித் தலைவி)அம்மா கட்சி

சிறப்புரை :

  • திரு. தங்கம் தென்னரசு,சட்டமன்ற உறுப்பினர்,திருச்சுழி விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர், தி.மு.க

நன்றியுரை :

  • திரு.தங்கப்பண்டியன்,ஒருங்கிணைப்பாளர்,ராம்கி எதிர்ப்பு போராட்டக்குழு

அன்பார்ந்த பொதுமக்களே!

விருதுநகர் மாவட்டம்,திருச்சுழி வட்டம்,அ.முக்குளம் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது ராம்கி நிறுவனம்.அபாயகரமான மருத்துவக் கழிவுகளை எரித்து, நச்சுப் புகையை வெளியிடும் ராம்கி நிறுவனத்தால்,இன்றுவரை ஆயிரக்கணக்கான மக்கள் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.இதில், நூறுக்கும் மேலானோர் இறந்துவிட்டனர்.இன்னும் ஏராளமானோர் மருத்துவமனைக்கு அலைந்து கொஞ்சம்,கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறார்கள். டி.வேப்பங்குளத்தில் மட்டும் ஒரே குடும்பத்தில் 4 பேர் இறந்திருக்கிறார்கள்.5,10 வயது  குழந்தைகள் கூட டயாலிசிஸ் செய்து வருகிறார்கள்.கர்பப்பை பாதிப்பு,மலட்டுத்தன்மை,கேன்சர் எனப் புதுப்புது நோய்கள் அ.முக்குளத்தைச் சுற்றியுள்ள 20 கிராமங்களைச் சீரழித்து வருகின்றன.விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பெண் கொடுக்க,எடுக்க மறுக்கிறார்கள்.நோயால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் ஊரைக் காலி செய்து விட்டன.

ராம்கி நிறுவனத்தின் பின்னணி என்ன?

ராம்கி குரூப் என்ற பெயரில் பல தொழில்கள் நடத்திவரும் ஆந்திராவைச் சேர்ந்த அயோத்ய ராமிரெட்டி என்ற நபருக்குச் சொந்தமானது ராம்கி நிறுவனம்.தற்போது ஆந்திராவில் நடந்து வரும் 143 கோடி நில மோசடி ஊழல் வழக்கில், சி.பி.ஐ.  ராமிரெட்டியை பிரதான குற்றவாளியாகச் சேர்த்துள்ளது.இந்த ஊழல்பேர்வழி கோடி,கோடியாகச் சம்பாதிக்க மக்களைப் பலி கொடுக்கிறது விருதுநகர் மாவட்ட நிர்வாகமும்.

அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்ற துறையே ராம்கியின்  கீழ்தான் செயல்படுகிறது. ராம்கி-மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சேர்ந்து நிகழ்த்தும் இந்த அநீதிக்கு வருவாய், பொதுப்பணி, சுகாதாரம், உள்ளாட்சி, வேளாண்மை, காவல்துறை, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் துணை நிற்கின்றன.

அரசு தரப்பின் செயல்பாடுகள் என்ன?

கடந்த 2013-ஆம் ஆண்டு கலெக்டர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் ராம்கி நிறுவனத்தை ஆய்வு செய்து, பாதிப்புகள் இருப்பதை உறுதிசெய்து கம்பெனியை மூடி சீல் வைத்தனர்.அதன்பின் கலெக்டர் உத்தரவின்பேரில் மாசுகட்டுப்பாட்டு வாரியமும் கம்பெனியை சேலத்துக்கு மாற்றப் பரிந்துரைத்தது.கடந்த 2015 ஏப்ரல் 7-ஆம் தேதி திருச்சுழியில் நடந்த சமாதானக் கூட்டத்தில்  கம்பெனியை கு.வி.ச பிரிவு 133-ன் கீழ் மூட உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.பின்பு ஏப்.9,2015-ல் அருப்புக்கோட்டையில் டி.ஆர்.ஓ முன்பு நடந்த கூட்டத்தில்,புதிய கம்பெனி திறக்கப்படாது, பழைய கம்பெனியை மூடுகிறோம் என்றனர்.

ஆனால்  சமீபத்தில்(12.05.2017)  அருப்புக்கோட்டையில் நடந்த சமாதானக் கூட்டத்தில் புதிய கம்பெனிக்கு மூன்று மாதத்திற்கு முன்பு அனுமதி வழங்கியுள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி சொல்கிறார். மத்திய அரசும் அனுமதி அளித்துவிட்டது. திருப்பூர், ஈரோடு மாவட்ட பனியன் கம்பெனி, சாயப்பட்டறைக் கழிவுகளைச் சுத்திகரித்து வரும் அழிக்க முடியாத கழிவுகளைக் கொண்டுவந்து,  அ.முக்குளம் அருகே 200 ஏக்கர் நிலத்தில் புதைக்கப்போவதாகச் சொல்கின்றனர்.

நான்கு ஆண்டுகளாய் பழைய கம்பெனியை அகற்றச் சொல்லி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இச்சூழலில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல புதுக் கம்பெனிக்கு அனுமதி தந்துள்ளனர் அதிகாரிகள்.இந்த அதிகாரிகளை நம்ப முடியுமா? மக்களை, கிள்ளுக் கீரையை விடக் கேவலமாக மதித்து, புதிய கம்பெனியை அனுமதிக்கிறார்கள்.

இந்திய அரசியல் சட்டப்படி எல்லோருக்கும் வாழ்வுரிமை உண்டு.அந்த வாழ்வுரிமையை உத்தரவாதம் செய்ய வேண்டியது அரசின் கடமை.தங்களது அரசியல்சட்டக் கடமையை மீறும் அதிகாரிகள், விதிகளை மீறி மக்களைக் கொன்று, மலடாக்கும் கம்பெனிக்கு ஆதரவாக நிற்கிறார்கள்

ராம்கி ஓர் சட்டவிரோத நிறுவனம்

ராம்கி நிறுவனம் அடிப்படையில் ஓர் சட்டவிரோத நிறுவனம். பஞ்சாயத்தில் உரிய அனுமதி பெறாமல், மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறி மக்கள் குடியிருப்பு மற்றும் நீராதாரப் பகுதியில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் சுற்றுச் சூழல் சட்டம் என ஒன்று இருப்பதையே மதிப்பதில்லை. பணம், செல்வாக்கை வைத்து எதையும் சாதிக்கலாம் எனக் கருதுகிறார்கள். தன்னிடம் வேலை செய்து நச்சுப் புகையால் இறந்தவர்களுக்குக்கூட இழப்பீடு கொடுப்பதில்லை. 14 பஞ்சாயத்துகள் ராம்கியை மூடக்கோரி தீர்மானம் நிறைவேற்றியதை யாரும் மதிக்கவில்லை.

என்ன செய்யப் போகிறோம்?

அரசு அதிகாரிகள் கம்பெனிக்கு ஆதரவாக  நிற்கிறார்கள். போலீசு,அதிகார பலம் கம்பெனிக்கு உள்ளது. நமக்கோ மக்கள்தான் பலம். 20 கிராமங்களில் உள்ள அனைத்து மக்களும், ஆயிரக்கணக்கில் திரண்டு போராட வந்தால் ஒரே வாரத்தில் கம்பெனியை மூடலாம். தமிழகம் முழுக்க போராடியவர்கள் ஜெயிக்கிறார்கள். டாஸ்மாக் கடைகள் எல்லா ஊரிலும் பெண்களால் நொறுக்கப்படுகிறது. பெண்கள் முன்னே வரும்போது அரசு பணிகிறது. நாம், நம் குடும்பம், நமது தலைமுறை வாழ வேண்டுமானால் போராடியே தீர வேண்டும்.

ஆயிரக்கணக்கில் திரள்வோம்! தொடர்ந்து போராடுவோம்! கொலைகார ராம்கியை விரட்டுவோம்! தொடக்கமாக, காரியாபட்டி பேரணி,பொதுக்கூட்டத்தில் குடும்பத்தோடு, ஆயிரக்கணக்கில் பங்கேற்போம்!


கூட்டஏற்பாடு : அ.முக்குளம், எழுவணி, ஆலாத்தூர், திருவளர்நல்லூர், வி.கரிசல்குளம், திம்மாபுரம், பூலாங்குளம், வேப்பங்குளம், முடுக்கன்குளம், புல்வாய்கரை, அழகாபுரி, மறைக்குளம், பூம்பிடாகை, பிள்ளையார்குளம் பஞ்சாயத்துமக்கள், திருச்சுழி, காரியாபட்டி- வட்டம், விருதுநகர் மாவட்டம்.


தகவல் :
ராம்கி எதிர்ப்பு போராட்டக் குழு.
தொடர்புக்கு – 98434 87989, 86750 86377, 98653 48163.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க