Sunday, December 1, 2024
முகப்புமறுகாலனியாக்கம்கல்விசென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்ட புமாஇமு

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்ட புமாஇமு

-

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடக்கவிருப்பதை கண்டித்து, கடந்த 2017 மே 4 -ஆம் தேதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பு பல்கலைக் கழக வாயிலில் போராட்டம் நடத்தியது.

இந்த போராட்டத்தில் விளைவாக, அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள பேராசிரியர்கள் சங்கம் துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்தக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு நீதிமன்றம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் எப்படியாவது பட்டமளிப்பு விழாவை நடத்திவிட வேண்டும் என முடிவு செய்து வரும் மே 19-ம் தேதி திட்டமிட்டுள்ளது.

இந்த பட்டமளிப்பு விழாவை தடுத்து நிறுத்த வேண்டும். இலட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் எனற நோக்கத்தில், 17,18,19 ஆகிய மூன்று நாட்கள் தொடர் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புமாஇமு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பிரசுரங்கள் வியோகிக்கப்பட்டு, அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ளேயும், வெளியேயும், சென்னை பல்கழைக்கழகத்திலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

நேற்று 17.5.2017 காலை பல்கலைக்கழகத்தில் அனைத்து வாயிலிலும், பேருத்து நிறுத்தத்திலும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணித்துக் கொண்டிருந்தனர். காலை 11 மணிக்கு பு.மா.இ.மு-வின் மாணவர்கள், பெண்கள் உட்பட 70-க்கும் மேற்ப்பட்டோர் அண்ணா பல்கலைக் கழகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை முன்னேற விடாமல் காந்திமண்டபம் பேருந்து நிறுத்தத்திலேயே தடுத்து நிறுத்தியது போலீசு.

போராட்டத்தின் தலைவர் ராஜா (பு.மா.இ.மு சென்னைக்கிளை செயலர்) ஊடகங்களுக்கு அளித்த உரையில் “ரூபாய் நோட்டுக்களில் கவர்னர் கையெழுத்து இல்லையென்றால், அது கள்ள நோட்டு அதேபோல் படித்து வாங்கும் பட்டத்தில் துணைவேந்தர் கையெழுத்து இல்லையென்றால் அது போலியானது.

இது நாங்கள் கற்பனையாக கூறவில்லை, ஏற்கனவே திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரம் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் கையெழுத்து இல்லாமல் தரப்பட்ட சான்றிதழ்கள் வெளிமாநிலங்களில் செல்லாமல் போனது. அது போலி சான்றிதழ் தயாரித்தக் குற்றத்திற்கு சமமானது. இதே வேலையை ஒரு தனியார் கல்வி நிறுவனம் செய்தால், அது கடும் தண்டணைக்குறிய குற்றம். ஆனால், இந்த குற்றத்தைதான் தற்போது தமிழக அரசும், தமிழகக் கல்வித்துறையும் செய்து கொண்டிருக்கிறது.

மாணவர்கள் கடினமாக உழைத்து, பெற்றோர்கள் லட்ச லட்சமாக செலவழித்து வாங்கப் போகும் பட்டத்திற்கு எந்த மதிப்பும் கிடையாது.

ஏன் இந்த அரசால் துணைவேந்தரை நியமிக்க முடியவில்லை? ஏனெனில் ஒருவர் துணைவேந்தர் ஆகவேண்டும் என்றால் அதற்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என வெளிப்படையாகவே பேரம் நடக்கிறது. இதுமட்டுமல்லாமல், பேராசிரியர் பதவிக்கு 50 லட்சம், துணை பேராசிரியர் பதவிக்கு 30 லட்சம் ரூபாய் என பேரம் மறைமுகமாக அல்ல வெளிப்படையாகவே நடக்கிறது.

இப்படி பணம் லஞ்சம் கொடுத்துவரும் துணைவேந்தர் நல்ல கல்வியை தரவேண்டும் என கனவில் கூட நினைக்க மாட்டார். மாறாக எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்றுதான் நினைப்பார். எனவே தனியார் கல்லூரிகளிடம் பணம் வாங்கி கொண்டு கல்லூரி திறக்க அனுமதிப்பார். கட்டணக் கொள்ளையை நடத்துவார். இப்படிப்பட்ட ஊழல் நிறைந்த கல்வித்துறையில் எப்படி நம்மைப் போன்ற ஏழை மாணவர்கள் படித்து பொறியாளராகவோ, மருத்துவராகவோ வரமுடியும், கண்டிப்பாக முடியாது. தற்போது பேரங்கள் படியவில்லை என்பதாலும், பேரங்களுக்கு பலமுனைப் போட்டி இருப்பதாலும் துணை வேந்தர்களை நியமிக்காமல் இருக்கிறது எடப்பாடி அரசு.

எனவே அண்ணா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், சட்டப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் ஊழல் முறைகேடுகள் இன்றி உடனடியாக துணைவேந்தரை நியமிக்க வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து போராட்டுவோம்.” என கூறினார்.

அதன் பின் போராடிய மாணவர்களை தரதரவென இழுத்து வாகனத்தில் ஏற்றி, காட்டுமிராண்டித்தனமாக தாக்கியது போலீசு. ஊழல் செய்து மாணவர்களின் எதிர்கலத்தை சீரழிக்கும் இந்த அண்ணா பல்கலைக் கழகத்திற்கு போலீசு பாதுகாப்பு கொடுக்கிறது. மாணவர்களின் நலனுக்கான போராடுபவர்களை காட்டுமிராண்டிதனமாகத் தாக்குகிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை. தொடர்புக்கு – 94451 12675.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க