தஞ்சை மாவட்டம், வல்லத்திற்கு அருகே அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் பயிற்சி முகாம் நடந்து வருகிறது, தமிழகம் முழுவதிலுமிருந்து பொறுக்கியெடுத்த 145 இளைய குண்டர்களுக்கு நடத்தப்படும் இப்பயிற்சியின் இறுதி கட்ட பயிற்சியளிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்-ன் தேசிய தலைவர் மோகன் பகவத் கடந்த 12-ம் தேதி முதல் இங்கு வந்து பயிற்சியளித்து வருவதாக ஓரிரு செய்தித்தாள்களில் மட்டும் செய்தி வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் அப்பல்கலைக் கழகத்தில் 400-க்கும் மேற்ப்பட்ட போலீசைக் குவித்தும், பயிற்ச்சி நடக்கும் 2 கட்டிடங்களைச் சுற்றி இரும்புத்திரை கொண்டு மறைக்கப்பட்டும், கண்காணிப்பு கோபுரம், வெள்ளமென ஒளி உமிழும் விளக்குகள் அமைத்தும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குஜராத்திலும் பிற வட மாநிலங்களிலும் கலவரத்தை நடத்தியே கட்சியைக் கட்டியும் சிறுபான்மையினருக்கெதிரான பச்சைப் படுகொலைகளை நடத்தி ஆட்சியைக் கைப்பற்றிய ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தமிழகத்தில் காலூன்ற முடியாததால் தமிழிசை தலைவிரி கோலாமாக திரிய, பொன்னாரும் எச்.ராஜாவும் புலம்பியும் வருகின்ற சூழலில் ஜெயலலிதா மரணத்தை ஒட்டி எழுந்துள்ள அரசியல் சூழலைப் பயன்படுத்தி அ.தி.மு.க-வை பிளவு படுத்தியும் அதன் இரண்டு அணியினரின் கிரிமினல்-குற்றச் செயல்களை வைத்து மிரட்டி, ஒரு பினாமி ஆட்சியை நடத்தி வரும் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் பகிரங்கமாக ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தினர். சில நட்களுக்கு முன்பு கோவையில் அமிர்தா கல்லுரியிலும் கடந்த திருச்சி சாஸ்த்ரா போன்ற பல கல்லூரிகளிளும் சித்தாந்த மற்றும் ஆயுத பயிற்சியை அளித்து வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் தலைவன் மோகன் பகவத்
உலகில் ஹிட்லருக்கு அடுத்து மிக கொடூரமான மனித குல விரோத சித்தாந்தத்தை வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்-ம் பா.ஜ.க உள்ளிட்ட அதன் பல்வேறு உறுப்புக்களும் இந்தியாவிலிருப்பதே நமக்கு அவமானகரமானது. இந்திய மக்களை உலக அரங்கில் வெட்கித் தலை குனிய வைக்கிறது. பெரியார் பிறந்த தமிழகம் ஆரிய-பார்ப்பனிய சித்தாந்தத்துக்கும் அதன் அடிப்படையிலான சாதிய கட்டமைப்புக்கும் எதிரான போராட்டத்தில் கணிசமான வெற்றிகளைப் பெற்ற மாநிலமாகும். மத நல்லிணக்கத்துக்கு அடையாளமான பூமியாகும். இங்கு குஜராத் போன்ற ஒரு கொடூர மதக் கலவரத்தைப் பற்றி சிந்திப்பதே அதிர்ச்சியளிக்கிறது.
ஆனால், பா.ஜ.க, இந்து முன்னணியில் இருந்த சிலர் தங்கள் தொழில் போட்டி, கிரிமினல் நடவடிக்கைகள், கள்ளத் தொடர்புகள் போன்றவற்றால் கொல்லப் பட்டதையெல்லாம் கூட மத விவகாரமாக்கி கலவரத்தை தூண்டி வருகின்றனர். தங்கள் வீடுகளில் தாங்களே பெட்ரோல் குண்டு வீசிக்கொண்டும், தன்னைக் கடத்தியதாக தானே நாடகமாடியும் அம்பலப்பட்டுப் போயுள்ளனர். இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் இந்த பயிற்சியும் இதில் அதன் தேசிய தலைவர் மேகன்பகவத் பங்கேற்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
தஞ்சை – திருச்சி சாலையில் இருக்கும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மதில்களுக்கும் பரந்து விரிந்த கட்டிடங்களுக்கும் மத்தியில் சிலம்பு மற்றும் கத்திச்சண்டைக்கான பயிற்சிகள் நடப்பதாக தகவல் கிடைக்கிறது. வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் துப்பாக்கி பயிற்சி எடுப்பது போல இங்கும் பயிற்சியளிக்கப்படலாமென சந்தேகம் எழுகிறது. இது முற்போக்கு சக்திகள், ஜனநாயக வாதிகள், தலித்துகள், இசுலாமியர்கள் அனைவரையும் கவலை கொள்ளச்செய்யும் செய்தியாகும். இத்தகைய கொலைபாதக செயலை தடுக்காமல் அதற்கு 300-க்கு மேற்பட்ட காவல்துறையினரை நிறுத்தி பாதுகாப்பு அளிக்கும் தமிழக அரசின் செயல் கடும் கண்டனத்துக்குறியது.
ஆட்சியையும் பதவியையும் காத்துக் கொள்வதற்காகவும் தங்கள் ஊழல் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் எடப்பாடி அரசு தமிழ்ச்சமூகத்துக்கு எதிரான இச்செயலில் ஈடுபட்டிருப்பதை வன்மையாக கண்டித்தும்,இதற்கு இடமளித்து, பல்கலைக்கழகம் என்ற அர்த்தத்துக்கே எதிராக செயல்படும் சாஸ்திரா-வை இனியும் பல்கலைக்கழகமாக பார்க்க முடியாது. எனவே, சாஸ்திரா பல்கலைக்கழகத்தை உடனடியாக அரசுடமையாக்க வேண்டும் என்று கோரியும். மதக்கலவரத்தைத் தூண்டும் நோக்கில் பயிற்சியளிக்க வந்துள்ள மோகன் பகவத்தை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்றும் 15.05.2017 அன்று காலை 11மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலையின் முன்பாக ஆர்.எஸ்.எஸ் கிரிமினல் கூட்டத் தலைவர் மோகன் பகவத்தின் உருவ பொம்மையை புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாவட்ட துணை செயலர் தோழர் விஜய் தலைமையில் எரிக்க முயன்றனர்.
ஆனால் பா.ஜ.க.வின் அடிமை விசுவாசி ஈ.பி.எஸ்-ன் காவல் துறையோ எரிக்க விடாமல் தடுக்க முயன்று இறுதியில் மோகன் பகவத்தை(உருவ பொம்மையை) தலை தனி முண்டம் தனியாக பிய்த்து எடுத்தனர். இந்த போராட்டத்தில் ஈடுப்பட்ட தோழர் விஜய், தோழர் துடிமாறனை காவல் துறை வெறி கொண்டு தாக்கி ரத்த காயத்தை ஏற்ப்படுத்தியது. தோழர் லதாவின் உடையை கிழித்து வெறித்தனமாக “பெண்” காவலர்கள் நடந்து கொண்டனர். அருகில் உள்ள டீ கடை, ஜூஸ் கடைகளில் இருந்தவர்கள், பேருந்து பயணிகள் காவல் துறையின் இந்த அராஜகத்தை கண்டு எள்ளி நகையாடினர்.
மக்கள் கூட்டத்தை கலைந்து போகுமாறு காவல் துறை கூற அவர்கள் எங்களுக்காகத்தானே போறாடுராங்க நாங்க இங்கதான் நிப்போம் என்று கூறி செல்போனில் படம் எடுக்க ஆரம்பித்தனர். எதுவும் செய்யமுடியாமல் காவல் துறை பின்வாங்கியது. இப்போராட்டத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தில் அருகில் இருந்த ஒரு ஆர்.எஸ்.எஸ் அபிமானி மோகன் பகவத் என்ன சமூக விரோதியா இவங்க யாரு அவர வரக்கூடாதுனு சொல்ல” என்றார். அருகில் இருந்த மற்றொருவர் “இவங்களுக்கெல்லாம் என்னங்க குஜராத்துக்கு போயி பாத்தாதாங்க தெரியும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜெ.பி காரன் எப்படி மக்கள கொல்றானு. இவங்க பன்றதுதான் தம்பி சரி ” என்றார்.
கைதாகி மண்டபத்தில் காவல்துறை நடந்து கொண்ட அராஜகத்தை கண்டித்து தோழர்கள் வழக்குப் போடுவதாக கூறியதும் காவல்துறை பணிந்து போய் இனி இது போன்று நடக்காது அவர்களுக்காக நாங்கள் மனிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என் கெஞ்சியதன் அடிப்படையில் இந்த விசயம் கைவிடப்பட்டது. அதன் பிறகு மண்டபத்தில் நிகழ்ச்சிகள் ஒருங்கினணக்கப்பட்டு பாடல், பேச்சு என நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இம்மண்டபத்தில் போக்குவரத்து தொழிலாளர்களும் கைதாகி இருந்தனர். அவர்கள் பு.மா.இ.மு வின் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர் . மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் போஜகுமார் மற்றும் ஆதியும் வாழ்த்திப் பேசினர்.
வறட்சியும், வறுமையும் கடன் சுமையும் ஆளான விவசாயிகளின் தற்கொலை, தொழில் முடக்கம், டாஸ்மாக் சீரழிவு, இளைஞர்கள் உரிய வேலை வாய்ப்பின்றி தவிக்கும் அவலச் சூழல் ஆகியவற்றால் குமுறிக்கொண்டிருக்கும் தமிழகத்தை அப்பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி மதக்கலவர பூமியாக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்.-ன் கொடும் செயலை அனைத்து ஜனநாயக சக்திகளும் எதிர்த்து நிற்க வேண்டியது அவசர அவசியம் என்று பு.மா.இ.மு தோழர்கள் போரட்டத்தை பார்த்து கொண்டிருந்த மக்களிடம் கேட்டுக் கொண்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி. தொடர்புக்கு : 99431 76246.
ஒரு மாத காலமாக மீஞ்சூர் பக்கத்தில் திருவெள்ளைவாயில் சுற்றியுள்ள கிராமங்களில் டாஸ்மாக் எதிர்ப்பு குழு கட்டி மக்கள் அதிகாரம் தோழர்கள் வேலைகளை செய்து வந்தனர். இளைஞர்கள் உடனே போராட்டம் நடத்த வேண்டும் என்று முன் வைத்தனர். நாம் மட்டும் சென்று போராடுவது தீர்வில்லை. அனைத்து ஊர் மக்களையும் அணிதிரட்டி போராட்டம் செய்தால் தான் கடையை மூட முடியும் என நாம் முன் வைத்தோம். அனைவரும் அதை ஏற்று கொண்டனர். முதலில் மனு கொடுக்கலாம் என டாஸ்மாக் குழுவில் உள்ளவர்கள் சொன்னார்கள். அதனடிப்படையில் ஒவ்வொருவரும் வேலை பிரிவினை செய்து கொண்டு மக்கள் மத்தியில் அனைவரும் ஒரு வாரம் காலம் சென்று கையெழுத்து வாங்கினர்.
4.5.2017 அன்று பொன்னேரி கோட்டாச்சியர் அலுவலகத்திலும், கலெக்டரிடமும் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் மனு கொடுக்க சென்றனர். நெடுஞ்சாலையில் உள்ள கடையாக இருந்தும் ஏன் அகற்றவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். கலெக்டர், அலுவலகத்தில் இருந்து கொண்டே இல்லை என பொய் சொல்லியுள்ளார். சார் ஆட்சியர் என் மீது நம்பிக்கை இல்லையா? கண்டிப்பாக மூடி விடுவேன் என்று கூறினார். ஆனால் யாரும் வந்து எட்டி கூட பார்க்கவில்லை.
டாஸ்மாக்கை முற்றுகையிட்ட மக்கள்
அதற்கு பிறகு மக்களின் கோபம் அதிகமாகிறது. பத்து ஊரை சேர்ந்த கிராம மக்களும் சேர்ந்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு ஊருக்கும் ஒருத்தர் பொறுப்பெடுத்து கொண்டனர். மொத்த 600 பேர்கள், பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என சமமாக போராட்டத்தில் கலந்து கொண்டனர். வழக்கமாக டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்கள் தான் அதிக அளவில் கலந்து கொண்டு போராடுவார்கள். ஆனால் ஆண்களும் பெண்களின் எண்ணிக்கைக்கு சமமாக இந்த போராட்டத்தில் கலந்து கொண்டது ஆச்சரியமாக இருந்தது. மக்கள் திரண்டு போராட்டத்திற்கு வந்த போது போலீஸ் தடுத்தது. தடுப்பையும் மீறி மக்கள் போராட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தனர். உணர்வு பூர்வமாக முழக்கங்களை மக்கள் எழுப்ப தொடங்கினர்.
டி.எஸ்.பி வந்து மக்கள் மத்தியில் பேசினார். நீங்கள் ஏன் வருகிறீர்கள், கடையை மூடும் அதிகாரம் யாருக்கு இருக்கிறதோ அவர்களை வர சொல்லுங்கள் என மக்கள் பதிலளித்தனர். உடனே தொலைபேசியில் பேசி வருவாய்துறை அதிகாரிகளை வரவழைத்தனர். கலால்துறை அதிகாரிகள் வந்து கடிதம் எழுதி அதில் டி.எஸ்.பியும் அந்த அதிகாரியும் கையெழுத்து போட்டு கடையை மூடுவதாக தெரிவித்தனர். மக்கள், நீங்கள் சொல்வதை நம்ப மாட்டோம் என கூறிவிட்டு போராட்டத்தை தொடந்தனர். மக்களுக்கு போலீஸ் மீதோ, அதிகாரிகள் மீதோ கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. இவர்கள் சொல்வதை செய்வார்கள் என்ற நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை.
சுற்றியுள்ள கடைக்காரர்கள் போராடும் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்தனர். எந்த கட்சிக்காரர்களும் வர கூடாது என தெரிவித்தனர். சில கட்சிக்காரர்கள் வந்து பணம் கொடுத்த போது மக்கள் வாங்க மறுத்து விட்டனர். மக்களோடு மக்களாக போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என கூறினர்.
தொடர்ந்து போராடி கொண்டிருந்த போது மண்டல துணை தாசில்தார் வந்தார். அவரும் கடிதத்தில் கையெழுத்து போட்டு கடையை நிரந்தரமாக மூடி விடுகிறோம் என்று அறிவித்தார். சுற்றுவட்டாரத்தில் உள்ள பத்து கிராமத்திலும் கடை வரக் கூடாது என மக்கள் முழக்கமிட்டனர். வேறு வழியின்றி நாளை இதைப்பற்றி கோட்டாச்சியர் அலுவலகத்தில் பேசி சுமுகமாக ஒரு முடிவிற்கு வரலாம் என கூறினார். அங்கெல்லாம் வர முடியாது, இங்க வர சொல்லுங்க, நாங்க எங்கும் வர முடியாது என மக்கள் தெரிவித்தனர். உடனே கடைக்கு சீல் வைத்தார்கள். சீல் வைத்து கடிதத்தை மக்களிடம் கொடுத்தனர். மக்கள் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்து வெற்றியைக் கொண்டாடினர்.
இனி மனு கொடுத்து பயனில்லை, மக்கள் சக்தி மட்டுமே தீர்வு என்பதை உணர்ந்து வீடு திரும்பினர். இனி எந்த பிரச்சனைக்கும் இவர்களை நம்ப கூடாது நாம் தான் களத்தில் இறங்கனும் என சிலர் பேசுவதை கேட்க முடிந்தது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
பேராசான் மார்க்ஸின் இருநூறாவது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் முன்னெடுப்பில் கோவை கணுவாய் பகுதியில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமையேற்ற தோழர் கோபி எளிமையாக தனது தலைமையுரையை நிகழ்த்தினார். தோழர் சரவணன் உரை வீச்சினாலும் பாடல்களாலும் கூட்டத்தை சிறப்பித்தார். மாவட்ட பொருளாளர் தோழர் நித்தியானந்தன் தனது உரை வீச்சில் தொழிலாளியின் கோணத்தில் மார்க்ஸை நினைவு கூர்ந்தார். ம.க.இ.க. தோழர் சித்தார்த்தன் அவர்கள் மார்க்ஸின் சமூகப் பங்களிப்பை கோட்டு சித்திரமாக சொன்னார்.
பு.மா.இ.மு. தோழர் சக்தி, சம காலத்தில் கல்வியின் நிலையும் அது புதிய கல்விக் கொள்கை நீட் போன்ற தேர்வுகளாலும் எப்படியான நிலையை சென்றடையும் என்பதை தனது உரையில் குறிப்பிட்டார். காவிரி நீரில் மத்திய அரசின் வஞ்சகத்தையும் அதன் பின்னுள்ள ஆளும் வர்க்க நலன்களையும் தோலுரித்தார். கர்ணன் விவகாரத்தை கொண்டு நீதித்துறையையும் இன்ன பிற அரசு உறுப்புகளின் நெருக்கடி மற்றும் எதிர்நிலை தன்மையையும் அது எப்படி மக்களுக்கு சுமையாக மாறியுள்ளது என்பதையும் இதற்கான மாற்று மக்கள் அதிகாரம் தான் என்பதாக கூறி தனது உரையை முடித்தார்.
பு.ஜ.தொ.மு -வின் மாநில துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி தனது சிறப்புரையில், “1818 இல் துவங்கி 1883 -ல் தனது மண்ணுலக வாழ்வை தோழர் மார்க்ஸ் நிறைவு செய்தார். ஏங்கெல்ஸ் வார்த்தைகளில் கூறினால் “சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.” தனது 65 ஆண்டு கால வாழ்க்கையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மனித குலம் மறக்க முடியாத அளவுக்கு மகத்தான பங்களிப்பை செய்து முடித்தார். இன்று அவரது 200 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறோம் என்றாலே அதை தோழர் மார்க்ஸ் விரும்ப மாட்டார். உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் அனைவரும் தங்களது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும்; அந்த நிலை வர போராடுங்கள் அதன் பிறகு எனது பிறந்த நாளை கொண்டாடுவது பற்றி யோசிக்கலாம் என்பார்.
காரல் மார்க்ஸ் காலத்தில் டெலிவிஷன் இல்லை. செல்போன் இல்லை. வாட்ஸ் அப் இல்லை. முகநூல் இல்லை. நமக்கு இருந்த வசதிகள் எதுவும் அவருக்கு இல்லை. ஆனால் லண்டனில் அகதிகளின் குடியிருப்பில் அந்த சின்னஞ் சிறு அறைக்குள் மனித குலத்தின் கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் அனைத்தும் வந்து போனது. கணுவாய் பகுதியில் மக்கள் மத்தியில் மார்க்ஸ் பிறந்த நாளை நடத்திக் கொண்டிருக்கிறோம். மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான குருடி மலை உயர்ந்து நின்று நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. குருடி மலை உச்சியிலே இயற்கையான ஊற்று உண்டு. நம் முன்னோர்கள் அதற்கு பொன்னூத்து என பெயர் வைத்தார்கள். பொன்னூத்து தண்ணீரைக் குடித்தால் தேன் தான். அடிவாரத்தில் வரப்பாளையத்தில் நின்று கொண்டு இருந்தால் அதனை சுவைக்க முடியாது. கஷ்டப்பட்டு கால் கடுக்க நடந்து மலை ஏற வேண்டும். உச்சியை அடைய வேண்டும். அதன் பின்பு தான் தண்ணீரின் ருசி நமக்கு கிடைக்கும். அது போல மார்க்சியத்தின் மகத்துவத்தை அறிய அந்த முக்கனி சாற்றை மொத்தமாக பருக போராட்டம் எனும் மலை ஏறுவது போன்ற கடும் பயிற்சி வேண்டும். செங்கொடி நம் தலைக்கு மேலே சுடர் விட வேண்டும். அதற்காகத் தான் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மக்கள் மத்தியில் மார்க்ஸ் நிகழ்ச்சியை நடத்துகிறது.
“கருத்து என்பது காகிதத்தில் இருக்கும் வரைதான் கருத்து அது மக்கள் மனங்களை பற்றிக் கொண்டால் பௌதீக சக்தி” என்றார் மார்க்ஸ். ரசிய தொழிலாளர்கள் மத்தியில் மார்க்சியம் எனும் கருத்தை தோழர் லெனின் கொண்டு சென்றார். பனிப்பிரதேசம் பற்றி எரிந்தது. முதலாளித்துவம் முறியடிக்கப்பட்டது. உலகின் முதல் சோசலிச அரசு உதித்தது.
சீனா மக்கள் மத்தியில் மார்க்சியம் கொண்டு செல்லப்பட்டது. அபினி மயக்கத்தில் இருந்த சீனா விவசாயிகள் செஞ்சேனையாய் சிலிர்த்து எழுந்தார்கள். மாவோ எனும் மகத்தான ஆளுமை உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கு கிடைத்தது. நாமும் தடாகம் ரோட்டில் செங்கொடியை உயர்த்தினோம் டுகெதர் தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். என்பெஸ்ட், ரோடோரோ, கௌரி மெட்டல், நமது தோழர்கள் முதலாளித்துவ பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், இவை அனைத்திற்கும் சேர்த்து மொத்தமாய் முடிவு காட்டுவோம். முதலாளித்துவ பயங்கரவாதத்தை முட்டி போட வைப்போம். இன்றும் பல்லடம் ஜி.டி.என் போராட்டப் பந்தல் கடந்த மார்ச் 24 முதல் 50 நாட்களாக பற்றி எரிகிறது. நாம் பணிவதாகவும் இல்லை. அடங்குவதாகவும் இல்லை. மார்க்சினுடைய பிறந்த நாளுக்காக கூட்டம் நடத்துவதோ துண்டுப் பிரசுரம் அடிப்பதோ சுவரொட்டி போடுவதோ போதாது. மார்க்சியம் என்பது ஒரு ஜீவனுள்ள தத்துவம். போராட்ட நடைமுறையில் தான் அதன் ஆற்றல் வெளிப்படும். அந்த அடிப்படையில் ஜிடிஎன் போராட்டம் என்பது மார்க்ஸுக்கு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி செய்யும் மகத்தான பிறந்தநாள் மரியாதை.” எனக் கூறி நிறைவு செய்தார்.
நன்றியுரை கூறிய மாவட்ட செயலர் தோழர் வரதராஜன் நிகழ்ச்சி சிறப்புற நடைபெற உதவிய கூட்டத்தினருக்கும் தோழர்களுக்கும் நன்றி கூறி முடித்தார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
நியூயார்க்கைச் சேர்ந்த கன்ஸ்ட்ரக்சன் ரோபாடிக்ஸ் (construction robotics) என்ற நிறுவனம் சாம் (Semi-Automated Mason – SAM) என்ற தானியங்கி கொத்தனாரை உருவாக்கியுள்ளது. தானியங்கி இயந்திரங்களின் தோற்றமும் வளர்ச்சியும் வரும் 2050 ஆம் ஆண்டிற்குள் உலகின் பாதி வேலை வாய்ப்புகளை குறிப்பாக கட்டுமானத் துறையில் காலி செய்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
எந்திரக் கொத்தனார் (Robot Bricklayer) மனிதனை விட ஆறு மடங்கு விரைவாக செங்கலுடன் சிமிட்டிக் கலவையைச் சேர்த்து சுவரை எழுப்பும் திறனைக் கொண்டது. அதாவது நாள் ஒன்றிற்கு சராசரியாக 500 செங்கற்களை தொழிலாளியால் அடுக்க முடிந்தால் இயந்திர மனிதனால் 3000 செங்கற்களை அலுக்காமல் சலிக்காமல் அடுக்க முடியும். இந்த இயந்திரத்திற்கு செங்கற்களையும் சிமிட்டிக் கலவையையும் உள்ளீடு செய்து கட்டளையிடவும் பராமரிக்கவும் ஒருவர் மட்டுமே போதும்.
சாம் (Semi-Automated Mason – SAM) என்ற தானியங்கி கொத்தனார் இயந்திரம்
இந்நிறுவனத்திற்கு முன்பே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாஸ்ட்பிரிக் ரோபாடிக்ஸ் (Fastbrick Robotics) என்ற நிறுவனம் ஹட்ரியன் எக்ஸ் என்ற சோதனை முயற்சி எந்திரக் கொத்தனாரை 2016 ஆம் ஆண்டு உருவாக்கியது. வணிக மதிப்பிலான வடிவமாக இது முழுமையடையும் போது எந்திரம் ஒன்றிற்கு இந்திய மதிப்பில் சுமார் 13 கோடி ரூபாய் (2 மில்லியன் டாலர்கள்) என அந்நிறுவனம் விலை மதிப்பீடு செய்துள்ளது.
மனமகிழ் வீட்டினைக் கட்டுவதற்குத் தேவையான தகவல்களை ஹட்ரியன் எக்ஸிற்கு உள்ளீடு செய்தால் மட்டுமே போதும் வெறும் இரண்டு நாட்களிலேயே உங்கள் விருப்பமுள்ள வீட்டை உருவாக்க முடியும். ஒரு மணி நேரத்திற்குள்ளேயே சுமார் 1000 செங்கற்களை அடுக்கக் கூடிய திறன் படைத்தது ஹட்ரியன் எக்ஸ். அதையே நாளொன்றிற்கு 24 ஆயிரம் செங்கற்கள் எனக் கொண்டால் சுமார் 48 தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். இது போன்ற வேலையிழப்புகளைத் தொழில்நுட்ப வேலையின்மை(Technological Unemployment) என்று முதலாளித்துவம் வகைப்படுத்திக் கொண்டு தனது பாவத்தை மறைக்கிறது.
ஒரு நாளின் 24 மணிநேரமும் வாரத்தின் ஏழு நாட்களிலும் தேனீர் இல்லாமலும் உணவு இடைவேளை இல்லாமலும் தொடர்ச்சியாக வேலை செய்ய எந்திர மனிதன் அலுப்பேதும் கொள்வதில்லை. விபத்துக்கள் நேரிடினும் நட்டஈடுக் கொடுக்க தேவையில்லை. வைப்பு நிதியும், காப்பீடும், ஓய்வூதியமும் இன்னப்பிற இத்தியாதிகள் எதுவும் எந்திர மனிதனுக்குத் தேவையில்லை. ஆனால் இவையெல்லாம் மனிதர்களுக்கு கொடுக்க வேண்டியதாய் இருப்பது முதலாளித்துவத்திற்கு வேப்பங்காயாய் கசக்கிறது.
முதலாளித்துவத்தின் முடிவிலா இலாபவெறிக்கு சிலப் பொருளாதார அறிஞர்கள் கடிவாளம் போட்டு முட்டுக் கொடுத்து பாதுகாக்க நினைக்கிறார்கள். ஒருவேளை தானியங்கி தொழில்நுட்பத்தால் 20 விழுக்காடு அளவிற்கு வேலையிழப்பு ஏற்படுவதாக எடுத்துக்கொண்டால் 20 விழுக்காட்டு வேலை நேரத்தை குறைத்து கொள்ள வேண்டும் அதாவது வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதுமானது என்று நியூயார்க்கைச் சேர்ந்த ரூஸ்வேல்ட் பல்கலைகழகத்தின் பொருளாதார அறிஞர் மைக் கொன்செல் அறிவுறுத்துகிறார். மேலும் உலகளாவிய அடிப்படை வருமானம் ஒன்றை நிர்ணயித்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறுகிறார். ஆனால் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. ஏனெனில் தொழிலாளர்கள் நாளொன்றிற்கு குறைந்தது எட்டு மணி நேரம் வேலை செய்வதாக கொண்டால் 48 தொழிலாளர்களின் எதிர்காலத்தை ஒரே நாளில் ஹட்ரியன் எக்ஸ் கபளீகரம் செய்துவிடும். எனவே இது வெறும் விழுக்காடு பிரச்சினை அல்ல என்பது வெள்ளிடைமலை.
இன்றே உலகமயத்தால் ஊதிப்பெருக்கப்பட்ட செயற்கையான பொருளாதார அமைப்பில் மாதத்தின் எல்லா நாட்களிலும் கட்டிடத் தொழிலாளிகளுக்கு வேலை கிடைப்பதில்லை. கிடைக்கும் நாட்களில் வரும் ஊதியத்தை வைத்து ஏதோ காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் தொழிலாளிகள். இதனிடையில் தானியங்கி வந்து வேலை நேரத்தை குறைத்தாலும் சரி, வேலையே பறிபோனாலும் சரி அவர்களது குடும்பம் வறுமையில் உழல்வது உறுதி.
ஒரு நாளின் 24 மணிநேரமும் வாரத்தின் ஏழு நாட்களிலும் தேனீர் இல்லாமலும் உணவு இடைவேளை இல்லாமலும் தொடர்ச்சியாக வேலை செய்ய எந்திர மனிதன் அலுப்பேதும் கொள்ளப்போவது இல்லை
தானியங்கி இயந்திரங்களின் தோற்றமும் வளர்ச்சியும் வளர்ந்த நாடுகளின் தொழிலாளர்களை தான் முதலில் பதம் பாக்கிறது. இது ஏற்கனவே அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. கூடிய விரைவில் இங்கிலாந்திலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
எந்திரங்களின் வளர்ச்சி அமெரிக்க வேலைவாய்ப்புகளுக்கு உலகமயமாதலை விட பெரிய ஒரு அச்சுறுத்தல் என்று 2015 ஆம் ஆண்டு நோபெல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஆங்குஸ் டீட்டோன் எச்சரிக்கிறார்.
எந்திரங்கள் ஏற்கனவே பாரம்பரிய உற்பத்தித்துறையின் வேலைகளை கபளீகரம் செய்து விட்டது. தானியங்கு எந்திரங்களின் வளர்ச்சியானது குறிப்பாக நடுத்தர வகுப்பு மக்களின் வேலை வாய்ப்புகளை அழிப்பதில் தீவிரமாக ஈடுபடும். எனவே ஆக்கப்பூர்வமான அல்லது மேற்பார்வையிடும் வேலைகள் மட்டுமே மிச்சமிருக்கும் என்று எச்சரிக்கிறார் ஸ்டீபன் ஹாகிங்ஸ்.
இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளில் தொழிலாளர்களுக்கான கூலி மற்றும் சலுகைகள் பணக்கார நாடுகளை ஒப்பிடும் போது மிகவும் குறைவு. அது மட்டுமல்லாமல் மனித உயிர்களுக்கும் சமூக பொருளாதார மதிப்பென்பதே கிடையாது. எனவே இயந்திரங்களுக்கும் மனிதர்களுக்குமான போட்டி என்பது உடலுழைப்பு சார்ந்த துறைகளில் இன்றுவரை அரிதாகவே இருக்கிறது.
இந்தியக் கட்டுமானத் துறையில் பணிபுரியும் தொழிலாளிகளின் எண்ணிக்கை மூன்று கோடியே 30 இலட்சம் என்கிறது ஒரு புள்ளி விவரம். இந்தியக் கட்டுமானத்துறையின் சாமுத்திரிகா லட்சணத்திற்கு நாடு முழுதும் நடந்து வரும் எண்ணிலடங்கா விபத்துக்களும் உயிரிழப்புகளும் சாட்சியாக இருகிறது. எனினும் வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் கட்டுமானத் துறையில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய வல்லரசாகிவிடும் என்று முதலாளித்துவ ஆய்வுகள் ஆருடம் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல் ஒரு கோடியே 15 இலட்சம் அடுக்குமாடி வீடுகளுக்கான சந்தை மதிப்பு 128 இலட்சம் கோடி சொச்சம் (ஒரு டிரில்லியன் டாலர்) ஆக இருக்கும் என்று ஆக்ஸ்போர்டு பொருளாதாரம் (Oxford Economics) மற்றும் உலகளாவிய கட்டுமானக் கண்ணோட்டங்கள் (Global construction perspectives) என்ற அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வில் கட்டியங் கூறியிருக்கின்றன.
கட்டுமானப் பணிகளில் இனி மனித எந்திரத்துக்கு பதிலாக எந்திர மனிதன்.
புதியத் தொழில்நுட்பம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதும் அதற்கேற்றாற்போல வலியது தப்பும் என்ற இயற்கை விதிக்கு ஒப்ப தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் முதலாளித்துவவாதிகள் ஓயாமல் முணுமுணுக்கப்படும் காயத்ரி மந்திரம். கட்டுமானம், தானியங்கி மகிழுந்து(Self-Driving car), இணைய கண்ணாடிகள்(Internet Glasses), ட்ரோன் பட்டுவாடா பணிவிடை(Drone delivery service) என மெருகேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் தானியங்கி இயந்திரங்கள் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் உழைப்பு நேரத்தைப் பாரிய அளவு குறைப்பதற்காகத்தான் என்றும் ஓயாமல் விதந்தோதப்படுகின்றது.
நிலவுடைமை சமூகத்தின் அடிமைத்தளைகளை மாபெரும் பிரெஞ்சு புரட்சியினால் உடைத்தெறிந்து மனிதகுலத்தை விடுதலை செய்ததற்காக மார்தட்டிய முதலாளித்துவம் பின்னர் மனிதர்களை தங்களது உழைப்பை விற்று வாழ வேண்டிய அவலநிலைக்குத் தள்ளிவிட்டது. மேலும் அறிவியல் தொழில்நுட்பங்களைச் சமூகத் தேவைகளுக்காக என்று அல்லாமல் தம்முடைய சொந்த இலாப நோக்கிற்காக மட்டுமே கட்டுப்படுத்தி ஒட்டுமொத்த சமூக உழைப்பின் அனுபவத்தை வெறும் இயந்திரங்களாக அடித்துவிட்டு மனிதர்களை சக்கைகளாக தெருவில் வீசி விட்டிருக்கிறது முதலாளித்துவம்.
தொழிற்சாலைகளில் மனிதன் இயந்திரமாக வேலை செய்ததில் இருந்து இயந்திரங்கள் மனிதனின் உழைப்பை காலி செய்யும் வரை ஒன்றும் மட்டும் உறுதி. தன்னுடைய இலாப நோக்கிற்காக பலநூறு பேரை வேலையை விட்டு துரத்திவிட்டு அந்த இடத்திற்காக சில பேரை மல்லுக்கட்ட வைக்கும் முதலாளித்துவ அமைப்பைத் தூக்கியெறியாமல் தீர்வேதுமில்லை.
இறுதியில் அனைத்தும் தானியங்கி முறையில் உற்பத்தி செய்யப்படும் போது இவர்கள் உற்பத்தி செய்தவற்றை வாங்குவதற்கு பல சதித்திட்டங்கள் போடுகிறார்கள். பிறகு அந்த சதித்திட்டங்களும் தோல்வியடைந்த பிறகு வாங்குவோர் இல்லாமல் பொருளாதாரம் சரிகிறது. இதுதான் 2008 அமெரிக்க பொருளாதார நெருக்கடியில் நடைபெற்றது.
ஆகவே தானியங்கி முன்னேற்றத்தை வெறுமனே தொழில் நுட்ப புரட்சி, மனிதர்களின் வேலை நேரக்குறைப்பு என்று இனியும் ஏமாற்ற முடியாது. அது உலக மக்களை உயிரோடு கொல்லும் முதலாளித்துவத்தின் இலாப வைரஸ்!
தருமபுரி பாலக்கோடு அருகே அண்ணாமலைஅள்ளி பகுதி பொதுமக்கள், பெண்கள் மக்கள் அதிகாரம் அமைப்புடன் இணைந்து அப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கை அடித்துநொறுக்கி போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டதை அடுத்து ஊருக்குள் டாஸ்மாக் திறந்து ஊரை கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரனைப் போல ஆட்டம் போடுகிறது தமிழக அரசு.
இதற்கு எதிராக எங்கள் ஊரில் டாஸ்மாக்கை அனுமதிக்க மாட்டோம் என்று அன்றாடம் டாஸ்மாக்கை அடித்து நொறுக்குகின்றனர் மக்கள். இந்நிலையில் உயர்நீதி மன்றம் டாஸ்மாக்கை எதிர்த்து போராடக் கூடிய மக்களை கைது செய்ய கூடாது என்று உத்தரவு இருந்தும் அதனை மாவட்ட நிர்வாகம் கால்தூசுக்கும் மதிப்பதில்லை. அதைத்தான் தருமபுரியிலும் அரங்கேற்றியிருக்கிறது .
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அண்ணாமலைஅள்ளி பகுதியில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி டாஸ்மாக் கடை செயல்படுவதை அறிந்த மக்கள் உடனே மக்கள் அதிகாரம் அமைப்பை அழைத்தனர். கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் மக்கள் அணிதிரண்டு 13.05.2017 அன்று காலை 10 மணியளவில் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்களை எடுத்து வெளியே வீசி, உடைத்து நொறுக்கி சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர். அதுவரை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல்துறை திடீரென்று போராடியவர்களை தரதரவென்று இழுத்து 80 பெண்கள், 30 ஆண்கள் என அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தது.
பிறகு மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்த தோழர்கள் சிவா,கோபிநாத் இருவரையும் மண்டபத்தில் இருந்து தனியாக கடத்த முயற்சித்தனர். அப்போது அந்த பெண்கள் தோழர்களின் கையை பிடித்துக்கொண்டு நாங்கள் அவர்களை தனியாக விடமாட்டோம் . அவர்களை விடவில்லை என்றால் நாங்களும் அவர்களோடு வருவோம். என்று விடாப்பிடியாக போராடினர். இருந்தும் அவர்களை தனியாக கடத்தி சென்றது போலீசு. இதனை அறிந்து வெளியில் நின்று கொண்டிருந்த அப்பகுதி பெண்கள் 40-க்கும் மேற்பட்டோர் மறியல் செய்வதற்கு தயாராகும் போது இடைமறித்த காவல்துறை, மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்களை குறிப்பிட்டு அவர்கள் நக்ஸலட்டுக்கள், தீவிரவாதிகள் அவர்களோடு போராட வந்துட்டீங்க என்று அப்பெண்களை அச்சுறுத்தியது.
அதற்கு அந்த பெண்கள் யாரை பார்த்து தீவிரவாதி என்கிறீர்கள் ,நக்ஸலட்டுகள் என்கிறீர்கள் அவர்கள் எங்களுக்காக போராட வந்துருக்கிறார்கள். நீங்கதான் தீவிரவாதி என்று காவல்துறையின் அச்சுறுத்துலுக்கு அஞ்சாமல் பெண்கள் பதிலடிகொடுத்தது காவல்துறையை அச்சம் கொள்ள வைத்தது.
கடத்தி சென்ற தோழர்களை விடவில்லை என்றால் நாங்கள் இரவு ஆனாலும் போகமாட்டம் என்று தொடர்ந்து போராடினர். ஆனால் இந்த இரண்டு தோழர்களையும் கடத்தி சென்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளது போலீசு. இந்நிலையில் மண்டபத்திற்கு வெளியில் இருக்கும் அப்பகுதி பெண்கள், ஆண்களை மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கினைப்பாளர் முத்துக்குமார் மீண்டும் போராடுவதற்கு ஒருங்கிணைக்கும் போது, தருமபுரி எஸ்பி முத்துக்குமாரை அவர் யார்? என்று அப்பகுதி மக்களிடம் கேட்டு அவரை கைது செய்ய காவல் துறை முயற்சித்தது.
அப்பகுதி மக்கள் அவரும் எங்க ஊருக்காரர்தான் என்று அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களோடு அழைத்து சென்றனர். காவல்துறை ஆதரவோடு மீண்டும் இந்த கடையை திறந்தால் நாங்கள் மீண்டும் அடித்து நொறுக்குவோம், என்று போராட தயாராகி வருகின்றனர். இனியும் தீவிரவாத பீதியூட்டி மக்கள் போராட்டங்களை ஒடிக்கிவிடலாம் என்று நினைக்கும் ஆளும் வர்க்க கனவை அண்ணாமலைஅள்ளி மக்கள் தவிடு பொடியாக்கி விட்டனர். இதுபோன்ற துணிச்சலான மக்கள் போராட்டங்கள் தான் அனைத்து பிரச்சனையையும் தீர்க்க முடியும் என்பதை அப்பகுதி மக்களுக்கு அரசும் போலீசும் உணர்த்திவிட்டது.
பாலக்கோடு பகுதி மக்கள் போராட்டம் ( கோப்புப் படம் )
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், தருமபுரி தொடர்புக்கு: 80152 69381.
“எங்களது குறிக்கோள் என்னவென்றால், உத்தமமான சந்ததியினரை உற்பத்தி செய்வதும் அவர்கள் மூலம் வலிமையான பாரதத்தைப் படைப்பதும் தான்” என்கிறார் மருத்துவர் கரிஷ்மா மோகன் தாஸ் நார்வானி.
”பெற்றோர் அறிவற்றவர்களாக இருந்தாலும், படிப்பறிவற்ற பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களது குழந்தை அதீத புத்திசாலியாக பிறக்கும். சரியான முறைகளைப் பின்பற்றினால், கருப்பான நிறம் கொண்ட, குள்ளமான பெற்றோர்களுக்கும் கூட நல்ல வெளுப்பு நிறத்திலும் குழந்தை பிறக்கும்; அக்குழந்தை உயரமாகவும் வளரும்” என்கிறார் மருத்துவர் ஹித்தேஷ் ஜனி.
இவர்கள் கர்ப விஞ்ஞான கலாச்சாரத் திட்டத்தின் (Garbh Vigyan Sanskar Project) தேசிய பொறுப்பில் உள்ள மருத்துவர்கள்.
நீங்கள் சந்தேகப்பட்டது சரிதான். இந்த திட்டம் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்பான வித்யா பாரதியின் துணை அமைப்பான ஆரோக்கிய பாரதியினுடையது. மேற்படி திட்டத்தின் நோக்கம் ’உத்தம சந்ததி’ ஒன்றை உருவாக்குவது. உத்தம சந்ததி என்பதை முன்வடிவமைக்கப்பட்ட குழந்தைகள் (Designer Babies) என்று சரியாக புரிந்து கொள்ளலாம். இவ்வாறான ’உத்தம சந்ததியை’ உற்பத்தி செய்ய இவர்கள் பின்பற்றச் சொல்லும் வழிமுறைகள் என்ன?
பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன் எங்கள் கிராமத்து ஆலமரத்தடிக்கு எப்போதாவது ஒரு ‘மருத்துவர்’ ஒருவர் வருவார். சுற்றிலும் மூலிகைகளைப் பரப்பி வைத்துக் கொண்டு “ஒருமண்டலம் சுயமைதுனம் செய்யாமல் விரதமிருந்து பின் மனைவியின் மாதவிலக்காகிய 12-ம் நாள் அவரோடு கூடினால் பிறக்கும் குழந்தை பெரும் அறிவோடு பிறக்கும்” என்று நீட்டி முழக்குவார். ஒருவேளை உங்களால் ‘சுத்தபத்தமாக’ இருக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவர் முன் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் மூலிகையில் ஒன்றை ஐந்தாயிரம் கொடுத்து வாங்கித் தின்றால் (தேனில் கலந்து; அந்த தேனையும் அவரிடம் ஆயிரம் ரூபாய்க்கு வாங்க வேண்டும்) அதே அளவுக்கு பலன் கிடைக்கும் என்று அடித்து விடுவார். கூட்டம் அதிரும். அதிலும் ஒற்றைப்படை நாட்களில் கூடினால் பெண் குழந்தைகளும், இரட்டைப்படை நாட்களில் கூடினால் ஆண் குழந்தைகளும் பிறக்குமென கொளுத்திப் போடுவார் (பெண் குழந்தைகளால் அறிவாளி ஆகவே முடியாதோ).
அந்த ஆலமரத்தடி வில்லேஜ் விஞ்ஞானியின் இன்றைய வடிவம் தான் ஆரோக்கிய பாரதி.
சரி,அது என்ன உத்தமமான சந்ததி? அதை எப்படி உருவாக்கப் போகிறார்கள்?
உத்தம சந்ததி என்பது இந்து சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட (Customized) குழந்தைகள் என்கிறார் மருத்துவர் ஜனி. இவ்வாறு ’வடிவமைப்பதற்கு’ தேவையான விவரங்கள் ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதாக குறிப்பிடும் மருத்துவ நார்வானி, குழந்தைகள் கருவுற்றுள்ள சமயத்தில் தாய் எதைத் தின்ன வேண்டும், எதைக் கேட்க வேண்டும் என்பதற்கெல்லாம் விரிவான விதிமுறைகள் இருப்பதாகவும், அவற்றைப் பின்பற்றினால் நாம் விரும்பும் விதமான குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கிறார்.
அது மட்டுமின்றி பழைய இந்து சாஸ்திரங்களில் தங்களுடைய ராசி, நட்சத்திரங்களின் அடிப்படையிலும், கோள்கள் எந்தக் கட்டத்தில் சஞ்சாரம் செய்கின்றன என்பதன் அடிப்படையிலும் பெற்றோர் எந்த சமயத்தில் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களும் இருப்பதாக நார்வானி குறிப்பிடுகிறார். எந்த நேரத்தில் தம்பதியினர் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதைக் குறித்துக் கொடுத்துடன், சம்பவம் நடப்பதற்கு 90 நாட்களுக்கு முன்னிருந்து பின்பற்றப்பட வேண்டிய ‘தேக சுத்தி’ மற்றும் ‘நாடி சுத்தி’ பயிற்சிகளையும் வழங்குகின்றனர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த’வில்லேஜ் விஞ்ஞானிகள்’
இவை மட்டுமின்றி கர்ப காலத்தில் குறிப்பிட்ட சில சமஸ்கிருத மந்திரங்களை உச்சாடனம் செய்தால் குழந்தையின் அறிவு வளருமாம். இதன் மூலம் பிரசவ வலி இருக்காதென்றும், பிறக்கும் குழந்தை மற்ற குழந்தைகளை விட 300 கிராம் வரை அதிக எடையுடன் பிறக்குமென்றும் சொல்கிறார் அதே அமைப்பைச் சேர்ந்த மற்றொரு வில்லேஜ் விஞ்ஞானினும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குமான அசோக் குமார் வார்ஷினி.
இந்தளவுக்கு கேடுகெட்ட லூசுத்தனங்கள் முதன் முதலில் எங்கே துவங்கியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? வேறெங்கே, குஜராத்தில் தான்.
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே குஜராத்தில் முயற்சித்துப் பார்க்கப்பட்ட மேற்படி திட்டம், 2015-ம் ஆண்டுக்குப் பின் நாடெங்கும் விரிவுபடுத்தப்பட்டதாக ஆரோக்கிய பாரதியின் தேசிய தலைவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளனர். தற்போது குஜராத்திலும், மத்திய பிரதேசத்திலும் சுமார் பத்து கிளைகளில் செயல்பட்டு வரும் இத்திட்டம், விரைவில் உத்திரபிரதேசத்திற்கும் மேற்கு வங்க மாநிலத்துக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.
மேற்படி திட்டத்தின் அடிப்படையில் கொல்கத்தாவில் கர்ப சன்ஸ்கார் என்கிற பெயரில் மூன்று நாள் ’பயிற்சிப் பட்டறை’ ஒன்றுக்கு சமீபத்தில் ஏற்பாடு செய்துள்ளது ஆரோக்கிய பாரதி. நிகழ்ச்சிக்கு பரவலாக செய்யப்பட்ட விளம்பரங்கள் மேற்கு வங்க குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு கமிஷனின் (WBCPCR) கவனத்தை ஈர்க்கவே அவர்கள் நீதிமன்றத்தை நாடி தடை கோரியுள்ளனர். மத்தியில் நடப்பது மோடி அரசு என்பதால், பெயருக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து முகாமை நடத்த அனுமதி வழங்கியது நீதிமன்றம்.
முகாம் நடந்த நாட்களில் அதைப் பார்வையிடச் சென்ற குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு கமிஷனின் தலைவர் அநன்யா சக்ரபர்த்தி மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் டிங்கு கன்னா, ருச்சிரா குப்தா போன்றோர், நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகள் மற்றும் நோட்டீசுகளின் வாசகங்களில் ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை ஊக்குவிப்பதைப் போன்றும், அதற்கான பயிற்சிகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் குறித்தும் வாசகங்கள் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கும் ஆரோக்கிய பாரதியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அசோக் வர்சினி, மேற்படி திட்டத்திற்கான ஜெர்மனியிடமிருந்து கடன் வாங்கியது என்கிறார். இதே போன்ற திட்டம் ஒன்றின் மூலம் குழந்தைகளைப் பெற்றதன் மூலமாகவே இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய இருபதே ஆண்டுகளில் ஜெர்மன் மீண்டும் வல்லரசானதாக ஆரோக்கிய பாரதியின் பிற நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குழந்தைகள் கருத்தரிக்கும் நேரமும், கருவில் இருக்கும் காலமும் அது பிறந்த பின் அதன் ஆளுமையில் எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே உண்மை. குழந்தைகள் பிறந்த பின் அவர்கள் வளரும் சூழலே அக்குழந்தைகளின் அறிவாற்றலையும் இன்னபிற திறமைகளையும் தீர்மானிக்கின்றன. எனினும், அபூர்வமாக சில குழந்தைகள் தாங்கள் வளரும் சூழலையும் எதிர்த்துப் போராடி புதிய திறமைகளை வளர்த்துக் கொள்கின்றன. ஆனாலும், அவ்வாறான குழந்தைகள் விதிவிலக்குகளே.
ஒரு சமூகத்தில் பிறக்கும் குழந்தையை, அது வளரும் போது என்ன வகையான சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது – அல்லது ஈடுபடுத்தப்படுகின்றது – என்பதன் அடிப்படையிலேயே அதன் ஆளுமையும் அறிவுத்திறனும் உருவாகின்றன. ஆனால், தங்கள் பிள்ளைகளை ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் விற்பன்னராக்குவது எப்படி என்பதைச் சுற்றியே இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் கனவு கண்டு வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ் கும்பலின் டிசைனர் குழந்தைகள் திட்டம் நடுத்தர வர்க்கத்தினரிடையே வரவேற்பு பெறும் என்பதில் சந்தேகமில்லை.
கர்ப காலத்துக்கு முன்னும் பின்னும் பின்பற்றப்பட வேண்டியவைகள் என ஆர்.எஸ்.எஸ் வகுத்துக் கொடுக்கும் நடைமுறைகளின் விளைவாக பிறக்கும் குழந்தை ’உத்தம சந்ததியாக’ பிறக்கிறதோ இல்லையோ பெற்றோர்கள் இந்துத்துவ கும்பல் எதிர்பார்க்கும் ‘உத்தமர்களாகி’ விடுவர். சமஸ்கிருத மந்திரங்கள், பார்ப்பன வாழ்க்கைமுறை, பார்ப்பன உணவுப்பழக்கங்கள் என ’உத்தம’ குழந்தைக்கு கனவு காணும் பெற்றோர்களுக்கு அவர்கள் அறியாமலேயே காக்கி டவுசரை மாட்டி விடுவதே ஆர்.எஸ்.எஸ் திட்டம்.
இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகளை வளர்க்கவும், அவர்களுக்கு சமூக எதார்த்தத்தை உணர்த்தும் நடைமுறைகளின் ஊடே தங்கள் பிள்ளைகளை நடத்திச் சென்று வழிகாட்டவும் நேரம் வாய்க்கப்பெறாத நடுத்தர வர்க்க மக்கள், ஏதாவது குறுக்குவழியில் தங்கள் பிள்ளைகளை சூப்பர் மேன்களாகவும் ஸ்பைடர் மேன்களாகவும் ஆக்கி விடமுடியுமா என ஆலாய்ப் பறக்கின்றனர். இதற்காக எவ்வளவு செலவு செய்யவும் தயங்குவதில்லை. கோடை விடுமுறைக் காலங்களில் இது போன்ற பொருளாதாரப் பின்னணி கொண்ட குழந்தைகளை மையப்படுத்தி நடக்கும் (ஆயகலை அறுபத்து நான்குக்கான) பயிற்சி வகுப்புகளும், அதைச் சுற்றிய பொருளாதாரமும் தனி கணக்கு.
தொலைக்காட்சியிலும், பிற ஊடகங்களிலும் குழந்தைகளை மையப்படுத்தி வரும் விளம்பரங்களை கவனித்தாலே இதைப் புரிந்து கொள்ள முடியும். அதிக உடல் மற்றும் அறிவு வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து பானங்களில் இருந்து அபாகஸ் வரை “கட்டணமாக செலுத்தும் பணத்தின் அளவைப் பொறுத்து’ உங்களுக்கு ஸ்பைடர்மேனையோ சூப்பர்மேனையோ உருவாக்கித் தருவதாக மேற்படி விளம்பரங்கள் உத்தரவாதம் தருகின்றன.
குழந்தைகள் பெறுவது மட்டுமின்றி அவர்களை வளர்ப்பதே பெரும் வணிகச் சந்தையாக உள்ளது – இந்த வணிகச் சந்தைக்கு அடித்தளமாக இருப்பது பெரும்பாலும் உயர் மற்றும் நடுத்தரவர்க்க பெற்றோர்களே. இவர்களின் சபலத்தையும் பலகீனத்தையும் மூலதனமாக கொண்டு ஆர்.எஸ்.எஸ் கும்பல் களமிறங்கியுள்ளது. பார்ப்பன கலாச்சாரத்தையும் விழுமியங்களையும் மனதளவில் ஏற்றுக் கொண்டவர்களும் கூட அதை எதார்த்தத்தில் ஒரு வாழ்க்கை முறையாக அமல்படுத்துவதில் இருக்கும் மனத்தடைகளை “குழந்தைக்காக” என்கிற ஒரே காரணம் தகர்த்து விடும்.
அந்த வகையில் தான் பிறக்கப் போகும் குழந்தைகளை முன்வைத்து பெற்றோரை முழுவதுமாக காவிமயமாக்குவது, பின்னர் எதிர்காலத்தில் அதே சூழலில் வளரும் குழந்தைகளுக்கு பிஞ்சிலேயே இந்துத்துவ நஞ்சைப் புகட்டுவது என்பதை ஆர்.எஸ்.எஸ் பரிவாரமான ஆரோக்கிய பாரதி தனது செயல்திட்டமாக கொண்டுள்ளது.
ஏற்கனவே மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளிகள் என சமூகத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு பரிவார அமைப்பு என்கிற கணக்கில் நூற்றுக்கணக்கான அமைப்புகளைக் களமிறக்கி சமூகத்தின் சகல பிரிவுகளிலும் இந்துத்துவ வெறுப்பரசியலை முன்னெடுத்து வருகின்றது ஆர்.எஸ்.எஸ். இப்போது ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே அதற்கு காக்கி டவுசர் மாட்டிவிடும் திட்டத்துடன் களமிறங்கியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகளை விமர்சிக்கும் ஜனநாயக சிந்தனை கொண்டவர்கள் அவற்றை ஆக்டோபசுடன் ஒப்பிட்டுச் சொல்வார்கள் – அது காரணமின்றிச் செய்யப்பட்ட ஒப்பீடல்ல.
போராடும் போக்குவரத்து தொழிலாளர்கள் ( கோப்புப் படம் )
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! தொழிலாளர்களே!
உணவு உற்பத்திக்கு விவசாயி என்றால், துணி மணி உற்பத்திக்கு நெசவாளர்கள், குடியிருப்புகளை உருவாக்குவது கட்டிடத் தொழிலாளி போல அரசுப் போக்குவரத்து என்றால் அதன் ரத்தமும் சதையுமாக இருப்பவர்கள் போக்குவரத்துத் தொழிலாளர்கள். இவர்கள் சமூகத்திற்கு ஆற்றும் உழைப்பும் தியாகமும் சொல்லிமாளாது. தங்களது உயிரையே கொடுத்து, பயணம் செய்யும் மக்களின் உயிரைக் காப்பாற்றியவர்கள் மட்டுமல்ல, ஓட்டைப் பேருந்துகளின் ஸ்பேர்பார்ட்ஸை தமது சொந்த உழைப்பில் வாங்கிப் போட்டு போக்குவரத்தை மக்களுக்கு அன்றாடம் வழங்கும் தொழிலாளர்களும் உள்ளனர்.
இப்படிப்பட்ட தொழிலாளர்களின் உழைப்பில் உயர்ந்து வளர்ந்த, ஆலமரமாக தழைத்து நிற்கும் போக்குவரத்துக் கழகம், மக்கள் வரிப்பணத்தில் முதலீடாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இன்று தமிழகம் முழுவதும் பல நூறு கிளைகள், 24,000 பேருந்துகள், ஒன்றரை லட்சம் தொழிலாளர்களைக் கொண்டு பரந்து விரிந்துள்ளது. இவையனைத்தும் பொருத்துக் கொள்ள முடியாத தனியார்மய-தாராளமயவாதிகள் இச்சொத்துக்களைத் தின்று ஏப்பம் விடுவதற்கென நாக்கில் எச்சியூற ஓநாயாக அலைகின்றனர்.
போராடும் போக்குவரத்து தொழிலாளர்கள் ( கோப்புப் படம் )
தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய நியாயமான பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன்கள், பென்சன் போன்றவற்றை தடுத்து நிறுத்தியுள்ளது தமிழக அரசு. அற்பக் கூலிக்கு தொழிலாளர்களின் வாழ்வை நசுக்கி வருகின்றது. பல நூறு முறை போராடிப் பெற்ற இந்த உரிமைகளை தொழிலாளர்களுக்கு வழங்காமல் தடுத்து வருகின்றது. இவ்வாறு தொழிலாளர்களை வஞ்சிப்பதற்கு காரணம், போக்குவரத்துத் துறை நட்டத்தில் இயங்குவதாகக் கூறுகின்றது.
அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் இந்தக் கூற்று உண்மையா? இல்லை. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழல் தான் போக்குவரத்துக் கழக நட்டத்திற்கு முக்கியக் காரணம். அண்மையில் பண மதிப்பிழக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதுகூட போக்குவரத்து துறையில் தொழிலாளர்களுக்கு முழுமையான ஊதியத்தை வழங்காமல் கருப்புப் பணத்தை வெள்ளையாக் கியதை நாடே அறியும். இந்த ஊழல் குற்றவாளிகள் தான் போக்குவரத்துத் துறை நட்டமடைவதற்கு காரணமாக இருக்கின்றனர். மேலும், இந்தக் குற்றவாளிகள் தொழிலாளர்களது சேமிப்புப் பணம் ரூ.7,000 கோடியை தொழிலாளர்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றி கபளீகரம் செய்யத் துடிக்கின்றனர்.
மற்றொருபுறம், ஆம்னி பேருந்து, தனியார் பேருந்துகளை 7,500-க்கும் அதிகமாக பெருக்கி போலியான பர்மீட்களை அவற்றிற்கு அளித்து, பொதுப்போக்குவரத்தை நாசப்படுத்தி வருகின்றனர். அரசுப் பேருந்தின் மீது டோல்கேட் வரி, டீசல் மீதான வரி என அனைத்து வழிமுறைகளிலும் சூறையாடி அரசு போக்குவரத்துத் துறையை சுக்குநூறாக்கியுள்ளனர். இந்த நிலையிலும் அரசுப் பேருந்து சாலையில் செல்கிறது என்றால் அதற்கு காரணம், தொழிலாளர்களின் கடுமையான உழைப்புதான். தொழிலாளர்களின் நியாயமான பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, பென்சன், ஓய்வுகாலப் பலன்களை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வஞ்சிக்க அரசு சதித்தனமாக நடந்து கொண்டு வருகிறது.
தனியார் பேருந்துகளுக்கு உரிமம் கொடுத்து அரசுப் போக்குவரத்தை நாசமாக்குகிறது போக்குவரத்துத் துறை
விவசாயிகளுக்குச் சேரவேண்டிய உரிமைகளைப் பறித்து அவர்களை ஓட்டாண்டிகளாக்கி விவசாயிகளைத் தற்கொலைக்கு தள்ளுவது , நீட் தேர்வைக் கொண்டுவந்து தமிழக மாணவர்களை மருத்துவத்துறையில் இருந்து விரட்டியடிப்பது போல, மீனவர்களை கடலில் மீன்பிடிக்கவிடாமல் சுட்டுத் தள்ளுவது போல இந்தப் போக்குவரத்துத் துறையையும் நாசப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறது.
ஆகையால், தொழிலாளர்களின் உரிமைப் பறிப்பு என்பது தனியார்மயமாக்க சதித்திட்டத்தின் ஒரு பகுதியே. தமிழக அரசு இவ்வாறு தனியார்மயத்திற்கு சதித்திட்டம் தீட்டிவரும் போது, மத்தியில் ஆளும் மோடி அரசோ, ஒட்டுமொத்த பொதுப்போக்குவரத்தையே பன்னாட்டு, கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் கொண்டு செல்லும் வகையில் போக்குவரத்துச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது.
எனவே, தனியார்மயம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதன் மூலம்தான் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நியாயமான ஊதிய உயர்வைப் பெற முடியும், பொது மக்களும் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக பயணிக்க முடியும். தனது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக போராடும் போலவே, தனியார்மயம் தாராளமயத்தாலும் இந்த அரசு ஆளத் தகுதியிழந்ததாலும் பாதிக்கப்படும் பிற உழைக்கும் மக்களுடன் இணைந்து இந்த அரசை நிர்பந்திக்கும் போராட்டங்களே தீர்வாக இருக்க முடியும். அந்த வகையில், ஒன்றிணைந்து போராடுவோம்!
ஊதிய உயர்வு, பணிநிரந்தரம், பணி ஓய்வுப் பலன்கள், பென்சன் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தொழிலாளர்களை வஞ்சிப்பது – தமிழக அரசின் தனியார்மயமாக்க சதித்திட்டமே!
போக்குவரத்துக் கழக நட்டத்திற்கு காரணமான அமைச்சர்கள் – அதிகாரிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யப் போராடுவோம்! கடனில் தத்தளிக்கும் கழகத்தை மீட்டெடுப்போம்!
தனியார்மயத்தால் பாதிகப்படும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து போராடுவோம்!
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள் தொடர்புக்கு: 97880 11784 email: ndlfhosur2004@gmail.com
மே 15 : போக்குவரத்துத் தொழிலாளிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்போம் !
தகவல் : மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம். தொடர்புக்கு : 81485 73417, 80152 69381.
சத்தீஸ்கரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய முகநூல் பதிவு (அருகில் – வர்ஷா டோங்ரே)
சத்தீஷ்கர் மாநிலம், பஸ்தார் பகுதியில் அரசுப் படைகளால் அன்றாடம் அரங்கேற்றப்படும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து வாரம் ஒரு செய்தியாவது வெளியாகிக் கொண்டிருக்கிறது. பல்வேறு மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வக்கீல்கள், தகவல் அறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அங்கு இது குறித்து அம்பலப்படுத்தி வந்தனர். இவ்வாறு அம்பலப்படுத்தியவர்கள் தங்கியிருக்கும் வீடுகளின் உரிமையாளர்களை மிரட்டி அவர்களை அப்பகுதியிலிருந்து வெளியேறச் செய்தது அரசு.
அதோடு அவர்களை மாவோயிஸ்ட் ஆதரவாளர்களாகக் காட்டி அவர்கள் மீது பொய்வழக்குகளைப் போட்டு சிறையில் அடைத்தது சத்தீஸ்கர் அரசு. ஆனால் தற்போது அரசுத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரியே அதுவும் சிறைத்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரியே, அரசின் அத்துமீறல்கள் குறித்து சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.
ராய்ப்பூர், மத்திய சிறையில் இணை எஸ்.பி.யாக பணிபுரிந்து வருகிறார், வர்ஷா டோங்ரே. கடந்த ஏப்ரல்-24 அன்று மாவோயிஸ்ட்டுகளால் தொடுக்கப்பட்ட சுக்மா தாக்குதல் முடிந்து சில நாட்களுக்குப் பின்னர் தனது முகநூலில் பஸ்தார் பகுதியில் நீடித்து வரும் நிலைமைகளைப் பற்றி நீண்டதொரு பதிவை எழுதி வெளியிட்டுள்ளார். அப்பதிவை வெளியிட்டு சில நாட்களிலேயே அது சமூக வலைத்தளங்கள் முழுவதும் மிக அதிகமாகப் பகிரப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே தனது முகநூல் பக்கத்திலிருந்து அந்தப் பதிவை நீக்கி விட்டார். ஒரு வேளை அரசால் மிரட்டப்பட்டிருக்கலாம். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது,
“எந்தஒருசம்பவத்திலும்இருபக்கத்தில்யார்கொல்லப்பட்டாலும்அவர்கள்நமதுநாட்டுமக்களே. அவர்கள்அனைவரும்இந்தியர்கள், அதனால்தான்யார்கொல்லப்பட்டாலும்அதுநம்அனைவரையும்பாதிக்கிறது. இது குறித்து நாம்அனைவரும்இணைந்து விசாரிக்கவேண்டும்அப்படிசெய்தால்உண்மைவெளிவரும்எனநம்புகிறேன்.
ஆதிவாசிகள்குடியிருக்கும்பகுதிகளில்முதலாளித்துவஅமைப்புதிணிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தகிராமமும்எரிக்கப்பட்டு, பெண்கள்கற்பழிக்கப்படுகிறார்கள். ஆதிவாசிகளைஅந்தநிலத்திலிருந்துவெளியேற்றிமொத்தவனப்பகுதியையும்தமதுகட்டுப்பாட்டுக்கள்கொண்டுவரவேண்டும்என்பதற்காகவே அவ்வாறு செய்கிறார்கள். ஆதிவாசிப்பெண்கள் மீது நக்சல்கள் என்ற சந்தேகம் வந்தால் அதனை தீர்த்துக் கொள்ள, அப்பெண்களின் மார்பகங்களைஅழுத்திபால்வருகிறதாஎனப் (போலீசும், துணை இராணுவப் படைகளும்)பார்க்கிறார்கள்.
உண்மைக்காரணம் என்னவென்றால், இவ்வனங்களில் அபரிதமாக உள்ள இயற்கைத் தாதுவளங்களை முதலாளிகளுக்கு அள்ளிக்கொடுக்க, இந்த காடுகளில் வசிப்பவர்களை விரட்ட வேண்டும். ஆனால் அங்கு வசித்து வரும் பழங்குடியினர் வெளியேறமாட்டார்கள், ஏனெனில் அந்த வனம் அவர்களது வீடு.
அவர்களும் நக்சலிசம் முடிவுக்கு வர வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஆனால் இந்த நாட்டைக் காப்பவர்களே ஆதிவாசிகளின் வீட்டுப் பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, அவர்களது வீடுகளை எரித்து, அவர்கள் மீது பொய்வழக்குகள் போட்டால் அவர்கள் யாரிடம் நீதி கேட்டு செல்வார்கள் ?.
சி.பி.ஐ., மற்றும் உச்சநீதிமன்றமும் இதையே கூறுகின்றன. அது தான் யதார்த்தமாகவும் இருக்கிறது. யாரேனும் மனித உரிமை ஆர்வலர்கள் அல்லது பத்திரிக்கையாளர்கள் இதற்குத் தீர்வு காண எத்தனித்தால், அவர்கள் மீதும் பொய்வழக்குகள் போட்டு சிறையில் தள்ளுகிறார்கள்.
ஆதிவாசிகள் பகுதிகளில் எவ்விதப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தால் அரசாங்கம் ஏன் பயப்பட வேண்டும்?. அங்கு சென்று உண்மை அறிய அவர்கள் ஏன் யாரையும் அனுமதிப்பதில்லை ?
பதினான்கிலிருந்துபதினாறுவயதுக்குட்பட்ட பழங்குடி இனப் பெண் குழந்தைகள், ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வானமாக்கப்பட்டு போலீசு நிலையங்களில் சித்திரவதை செய்யப்படுவதை என் கண்களால் கண்டிருக்கிறேன். அவர்களது மணிக்கட்டிலும், மார்பகங்களிலும் மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. நான் அந்தத் தழும்புகளைப் பார்த்திருக்கிறேன். அது என் அடி வயிற்றைக் கலங்கச் செய்திருக்கிறது. அந்தச் சிறுமிகளிடம் கூட அவர்கள் ஏன் மூன்றாம் தர சித்திரவதையை மேற்கொள்ளுகிறார்கள்? அச்சிறுமிகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் தரவும், அவசியமான நடவடிக்கைகள் எடுக்கவும் நான் உத்தரவிட்டிருக்கிறேன்.
நமது அரசியல் சாசனம், யாரும் யாரையும் சித்திரவதை செய்யவோ, துன்புறுத்தவோ அனுமதிக்கவில்லை. அதன் ஐந்தாம் பிரிவு இம்மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட வகையான வளர்ச்சி, ஆதிவாசி மக்களின் மீது திணிக்கப்படக் கூடாது.
ஆதிவாசிகள் , இயற்கையைக் காப்பவர்கள். நாமும் இயற்கையை அழிப்பவர்களாக இல்லாமல், அதனைக் காப்பவர்களாக இருக்க வேண்டும். அனைவரும் முதலாளித்துவ தரகர்களின் இரு முகம் கொண்ட கொள்கைகளைப் பற்றி புரிந்து கொள்ளுங்கள். விவசாயிகளும், படைவீரர்களும் சகோதரர்களே.. ஒருவர் மற்றொருவரைக் கொல்வது என்பது அமைதியையோ வளர்ச்சியையோ தராது. அரசியல் சாசனம் அனைவருக்குமானது. அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.
இந்த அமைப்பு முறையால் நானும் பாதிக்கப்பட்டவள் தான். ஆனால் அநீதிக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன். அவர்கள் தங்களது சதிகளால் என்னை தகர்க்க முயற்சித்தனர். எனக்கு பணம் கொடுப்பதாகக் கூறினர். கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 அன்று சத்தீஷ்கர், பிலாஸ்பூர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முடிவின் 69வது பத்தியை எவரொருவரும் பார்க்கலாம். ஆனால் அவர்களது திட்டங்கள் அனைத்தும் வீணாகின. உண்மை வென்றது. அது எப்போதும் வெல்லும்.
நமக்கு இன்னமும் நேரம் இருக்கிறது. ஆனால் நாம் உண்மைக்காக நிற்கத் தவறினால் முதலாளித்துவவாதிகள் நம்மை சிப்பாய்களாக உபயோகித்து இந்த நாட்டில் இருந்து அனைத்து மனிதத் தன்மையையும் துடைத்தெறிந்து விடுவார்கள். அநீதிக்குத் துணை செல்ல மாட்டோம் என்றும் அதனை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்றும் உறுதி ஏற்போம். அரசியல் சாசனம் வாழ்க, இந்தியா வாழ்க!! “
வர்ஷா டோங்ரே, கடந்த 2003-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொது சேவைக் கமிசனுக்கான போட்டித் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக கடந்த 2006-ம் ஆண்டு சத்தீஸ்கர் உயர்நீதி மன்றத்தில் வழக்காடி வெற்றி பெற்று அதனடிப்படையிலேயே சிறைத்துறை துணை எஸ்.பி.யாக பதவி ஏற்றிருக்கிறார்.
வர்ஷா டோங்ரேயின் முகநூல் பதிவு, பகிர்வுகளின் மூலமாகவும் பல்வேறு சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பரவுவதை அறிந்த்தும், சத்தீஸ்கர் அரசு உடனடியாக வர்ஷா டோங்ரே மீது நடவடிக்கை எடுக்க சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. சிறை நிர்வாகம், ஆரம்ப கட்ட விசாரணையை ஆரம்பித்து அதனடிப்படையில் 32 பக்கக் கடிதத்தைக் கொடுத்து 2 நாட்களுக்குள் பதிலளிக்கக் கூறியது. அதற்கு சுமார் 376 பக்கத்திற்கு தனது முகநூல் பதிவிற்கான நியாயங்களை, ஆதாரங்களோடு சேர்த்து பதிலாக அளித்தார் வர்ஷா டோங்ரே.
பணி இடைநீக்க உத்தரவை எதிர்த்துப் போராடுவேன் – வர்ஷா டோங்ரே
அவரது பதில் குறித்து எவ்வித விசாரணையும் இல்லாமல் கடந்த மே, 5-ம் தேதி அன்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அரசு ஊழியர்களுக்கு சத்தீஸ்கர் அரசு விதித்துள்ள சேவை விதிகளையும் மற்ற விதிகளையும் மீறியதற்காகவும், பணியில் முன்னறிவிப்பின்றி விடுமுறை எடுத்ததற்காகவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
அரசின் இந்த நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சாமல் தாம் கூறியது சரி தான் என உறுதியாக நிற்கிறார் வர்ஷா டோங்ரே. தமது முகநூல் பதிவில் தாம் கூறிய அனைத்தும் புதியதாகக் கூறப்பட்ட விசயங்கள் இல்லை எனவும், அவை அனைத்தும் ஏற்கனவே உச்சநீதிமன்றத் தீர்ப்புகளிலும், மத்திய புலனாய்வுத்துறை அறிக்கைகளிலும், தேசிய மனித உரிமைக் கமிஷனின் அறிக்கைகளிலும், மத்திய அரசின் அலுவலக கெசட்டுகளிலும், திட்டக்கமிஷனின் வல்லுனர்கள் குழுவின் அறிக்கையிலும் இருப்பவை தாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் மீதான இந்த பணி இடைநீக்கத்தை எதிர்த்து அரசியல் சாசன வழியில் நின்று எதிர்த்துப் போராடப் போவதாகவும், அரசியல் சாசன சட்டத்தின் ஐந்தாவது பிரிவை ஆதிவாசிகள் வாழும் பகுதிகளில் நடைமுறைப்படுத்த மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.
வர்ஷா டோங்ரேயின் மீதான துறைரீதியான நடவடிக்கைக்கு அரசு கூறியிருக்கும் காரணங்கள் சட்டரீதியாக வேண்டுமானால் சரியானதாக இருந்திருக்கலாம். ஆனால் தனக்கு வேண்டப்பட்ட அரசு ஊழியர்களின் விதிமீறல்களுக்கும் சத்தீஸ்கர் அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இதற்கு முன்னர், சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியின் ஐ,ஜி. –யாக இருந்த கல்லுரி என்னும் போலீசு அதிகாரி, அப்பகுதியைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் விருந்துகளில் கலந்து கொண்டு அந்த புகைப்படத்தைத் தனது முகநூலில் பகிர்ந்து கொண்டார். இதுவும் சத்தீஸ்கர் அரசின், அரசு ஊழியர்களுக்கான விதிமுறைகளுக்கு முரணானது. ஆனால் கல்லுரியை பணி இடைநீக்கமோ, விசாரணையோ செய்யவில்லை. மாறாக கல்லுரிக்கு மருத்துவ விடுப்பு கொடுத்து அனுப்பியது, அரசு.
அதே போல சுக்மா பகுதியின் எஸ்.பி. இந்திர கல்யான் எலெசெலா, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் கூட்டத்தில் பேசும் போது, இஷா கந்தெல்வால், ஷாலினி கெரா போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களை, வாகனங்களைக் கொண்டு சாலையில் நசுக்கிக் கொல்ல வேண்டும் என்று கூறினார். ஆனால் இதற்காக இன்றுவரை அவரிடம் ஒரு விசாரணையோ, அல்லது பணி இடைநீக்கமோ செய்யப்படவில்லை.
இவ்விவகாரத்தில் இவர்கள் இருவருக்கும் சட்டம் ஒரு மாதிரியாகவும், வர்ஷா டோங்ரேக்கு சட்டம் வேறு மாதிரியாகவும் செயல்பட்டிருக்கிறது. காரணம் அவர்கள் இருவரும் கார்ப்பரேட்டின் நலனைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள், வர்ஷா டோங்ரே மக்களின் நலனைப் பற்றிப் பேசியுள்ளார்.
அநீதிக்கு எதிரான வர்ஷா டோங்ரேயின் உறுதியைப் பாராட்டும் அதே வேலையில் அவர் இந்தக் கட்டமைப்பிற்குள்ளேயே இதற்கான தீர்வைத் தேடுகிறார், தீர்வு கிடைக்கும் என நம்புகிறார் என்பதை வருத்தத்தோடும் பார்க்க வேண்டியது இருக்கிறது. இந்தக் கட்டமைப்பின் ஒவ்வொரு செல்லும் இற்றுப் போய் நீடிக்கத் தகுதியில்லாத்தாகி விட்டது என்பதை விரைவில் வர்ஷா டோங்ரேவிற்கு அவர் நம்பும் இந்தக் கட்டமைப்பே உணர்த்தும்.
வென்றது பெண்களின் உறுதிமிக்க போராட்டம் ! பணிந்தது ‘டாஸ்மாக் அரசு’ !!
கடந்த ஏப்ரல் 18 ம் தேதி தஞ்சை மானோஜிப்பட்டியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தலைமையில் அப்பகுதி பெண்கள் அணிதிரண்டு முற்றுகை போராட்டம் நடத்தி டாஸ்மாக் கடையை மூட மே 5 தேதிவரை திமிர் பிடித்த அதிகார கும்பலுக்கு கெடு விதித்தனர். மே 5 -க்குள் மூடவில்லை எனில் கடை இருந்த சுவடு இருக்காது என அதிகாரிகளை எச்சரித்து அனுப்பினர் அப்பகுதி பெண்கள்.
மே 5 ம் தேதி கடை காலி செய்யவில்லை எனில் சாணி, குப்பை விளக்கமாற்றோடு “எப்படி கடைய திறப்பானு பார்ப்போம்?” என்று கடையை மூட பெண்களும், இளைஞர்களும் தயாராக இருந்தனர். இதை அறிந்த அதிகாரிகள் பெண்களின் உறுதியை கண்டு அஞ்சி 4 -ம் தேதி மாலையிலே பாட்டிலையாவது காப்பாற்றினால் போது என இரவோடு இராவாக கடையை ஏறக்கட்டினர்.
மே 5 தேதி, பல நூறு ‘குடி’மகன்களுடன் திருவிழா கோலமாக காட்சியளித்த அந்த கடை பெண்களின் உறுதிமிக்க போராட்டத்தால் டாஸ்மாக் கடை ஒன்று இருந்ததற்கான சுவடுகள் கூட இல்லாமல் போனது. பெண்கள், மாணவர்களிடத்தில் சாதித்த வெற்றிக் கொண்டாட்டத்தைக் காண கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆறு ஆண்டுகளாக மனு கொடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி மூட முடியாத கடையை மக்களே அதிகாரத்தை கையிலெடுத்ததால் மூடப்பட்டது. அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
“டாஸ்மாக் கடை 5.5.2017 அன்று இயற்கை எய்தியதை மகிழ்ச்சியோடு தொரிவித்து கொள்கிறோம்! இப்படிக்கு மானோஜிப்பட்டி கிராம மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம்” என ‘கண்ணீர்’ அஞ்சலி பதாகை வைத்து அதற்கு மாலை மரியாதை செய்து ‘சிறப்பித்தனர்’ பகுதி மக்கள்.
“ குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே! மூடு டாஸ்மாக்கை!” என முழங்கி மக்கள் அதிகாரம் தொடர் போராட்டங்களை நடத்தியது. இப்போது மக்கள், மக்கள் அதிகாரத்தின் துணையுடன் போலீசைக் கண்டு அஞ்சாமல் டாஸ்மாக் கடைகளுக்கு பாடை கட்டுகிறார்கள். அரசு பல அடக்குமுறைகள் செய்து மக்கள் அதிகாரத் தோழர்களை மக்களிடமிருந்து பிரிக்க நினைத்தாலும் மக்கள் அதிகாரமும் மக்களும் ஒன்றுதான் என நிரூபிக்கின்றன மக்களது போராட்டங்கள்.
அரசு நம்மை ஆளும் தகுதி இழந்ததையும் நம் அனைத்து பிரச்சனைகளுக்கான தீர்வு மக்கள் அதிகாரத்தை கையிலெடுப்பதே என நடைமுறையில் மக்கள் உணர்ந்ததன் வெளிபாடே மக்களது இன்றைய தொடர் போராட்டங்கள்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், தஞ்சை.
மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கத்தின் கீழ் கடந்த 16.04.2017 அன்று மக்கள் அதிகரம் பெரும்பன்னையூர், காப்பனமங்கலம் மக்களை திரட்டி சாலை மறியல் 10.00 மணி அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.
மீண்டும் அந்த பகுதியில், மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கத்தின் கீழ் 10.05.2017 அன்று மக்கள் அதிகரம் அமைப்பினர் மற்றும் ஊர் டாஸ்மாக் எதிர்ப்பு போரட்ட குழு கிராம மக்கள் இணைந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட திட்டமிட்டிருந்தனர்.
இதனை அறிந்த அப்பகுதி போலீசு டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக குண்டர் படையைப் போல் மக்களைத் தடுத்தது. இதைக் கண்டு அஞ்சாத மக்கள், மக்கள் அதிகாரம் தோழர்களை இணைத்து கொண்டு பேரணியாக சென்று டாஸ்மாக் கடையை முற்றுக்கையிட்டனர்.
அங்கு வந்த தாசில்தார் பேச்சுவர்தை நடத்தினார். மக்கள் கடையை மூடுறதை பத்தி பேசுங்க என்றனர். 90 நாள் அவகாசம் வேண்டும் என்றார் தாசில்தார். நாங்களே கடைய மூடிக்கிறோம், நீங்க போங்க என்று மக்கள் முழக்கம் போட்டனர். அதன் பிறகு 30 நாள் அவகாசம் வேண்டும் என்றார். அதற்கு உத்திரவாதமாக கடிதம் எழுதி கையொப்பம் போட்டுக் கொடுத்தார் தாசில்தார். சொன்ன தேதியில் மூடுலேன்னா எவன் வந்தலும் கடையை அடித்து நொறுக்குவோம் என்று மக்கள் எச்சரித்துவிட்டு வந்தனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகரம்,
திருவரூர் மாவட்டம்.
தொடர்புக்கு – 94454 75157.
அண்ணாபல்கலைக்கழகத்தில் துணைவேந்தரைநியமிக்காமல் பட்டமளிப்பு விழா நடத்தாதே!
மே.17,18,19 – 2017 அண்ணா பல்கலைக் கழகம் தொடர் முற்றுகை!
அண்ணா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக் கழகம் போன்றவை துணைவேந்தரே இல்லாமல் இயங்கி வருகின்றன. இதனால் பல்கலைக் கழகங்களின் நிர்வாகப் பணிகள் அனைத்தும் முடங்கிப் போயுள்ளன. அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டமளிப்பு விழாவே நடைபெறவில்லை. இப்பல்கலைக் கழகத்தில் மட்டும் 2 லட்சம் இளநிலை, முதுநிலை பொறியியல் படித்த மாணவர்களும், 1500 பி.எச்டி மாணவர்களும் பட்டம் பெற முடியவில்லை. இதனால், மேற்படிப்புகளுக்கும், உரிய வேலைகளுக்கும் செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் மே.19 ந்தேதி அண்ணா பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது வெட்கக் கேடான செயல். இதனை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
துணைவேந்தரை நியமனம் செய்வதில் என்ன பிரச்சனை? துணைவேந்தரை நியமிக்காமலேயே பல்கலைக் கழகங்களை தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியம் என்ன? இதற்கெல்லாம் இந்த அரசிடம் எந்தவித நியாயமான காரணங்களும் இல்லை. துணைவேந்தர் பதவிக்கு 50 கோடி, பேராசிரியர் வேலைக்கு 50 லட்சம், உதவி பேராசிரியர் வேலைக்கு 30 லட்சம். தகுதி, திறமை, பணி அனுபவம் எதுவும் தேவையில்லை, பணம் இருந்தால் பதவி. நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், கோவை பாரதியார் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் போன்றவைகளில் வரலாறு காணாத ஊழல் முறைகேடுகள் நடந்தது நாள் தோறும் அம்பலமாகி வருகின்றன. முதலமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், உயர் கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் என அனவரும் கூட்டு சேர்ந்து கல்வித்துறையை கல்லா கட்டும் துறையாக மாற்றியிருக்கிறார்கள்.
பல்கலைக்கழகங்கள் லஞ்சம் ஊழலில் ஊறித்திளைக்கிறது என்பது மட்டுமல்ல, கல்வியில் தனியார்மயம் புகுத்தப்பட்டதன் விளைவாக, இப்போது ஒட்டுமொத்த கல்வித்துறையுமே மாணவர்களுக்கு எதிரானதாக மாறியுள்ளது. சரியாக சொல்வதென்றால் கல்வித்துறையை நிர்வகிக்கும் ஆற்றலை, தகுதியை இந்த அரசு இழந்துவிட்டது. கல்வித்துறை மாணவர்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதில்லை, ஒரு கிரிமினல் மாஃபியா கும்பல்போல் செயல்படுகிறது.
துணைவேந்தர் கையெழுத்தில்லாமல் வேறொருவர் கையெழுத்திட்டு பட்டங்களை வழங்குவது மோசடி ஆகும். அந்த மோசடியை இப்போது அரசே செய்கிறது. ஏற்கனவே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் கையெழுத்தில்லாமல் கொடுத்த பட்டங்கள் வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் செல்லாமல், வெறும் குப்பைக் காகிதங்களாகின. இதே அநீதியை மீண்டும் அண்ணா பல்கலைக் கழகம் அரங்கேற்ற இருப்பதை எதிர்த்து எமது பு.மா.இ.மு போராட்டம் நடத்தியது. கல்வியாளர்களும், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்களும் எதிர்க்கிறார்கள். ஆனால், இந்த எதிர்ப்புகளை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல், உயர் கல்வித்துறை செயலர் கையெழுத்திட்டு பட்டமளிக்க திட்டமிட்டுள்ளது எடப்பாடி அரசு.
இப்படித்தான் செய்வேன், என்ன முடியும்? என்று மாணவர்கள், பேராசியர்கள், பெற்றோர்களுக்கு சவால் விடுகிறது இந்த அரசு. இந்த அநீதியை வேடிக்கை பார்க்கக் கூடாது. இது பட்டம் வாங்க காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள், வாழ்க்கை பாதிப்பு மட்டுமல்ல, கல்வியையே நாசப்படுத்துகின்ற நடவடிக்கை. இவர்களிடம் கெஞ்சுவதில் பயனில்லை. மெரினா எழுச்சியைப் போல், டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கி மூடி வரும் பெண்கள் போராட்டத்தைப்போல், விடாப்பிடியாக போராடித்தான் தீர்க்க முடியும்.
எனவேதான், “துணைவேந்தரை போடாமல் பட்டமளிப்பு விழாவை நடத்தாதே!” என்று பு.மா.இமு வரும் மே 17 -ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை அண்ணா பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. மீனவர்கள், விவசாயிகள் வாழ்வைக் காக்க போராடிய மாணவர்களோடு கரம் கோர்க்க மே.17 -ம் தேதி அண்ணா பல்கலைக் கழகத்திற்கு வாருங்கள். கல்வியின் மீதும், மாணவர்கள் நலனிலும் அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைவோம். மாணவர் நலனை காப்போம்!
தகவல் : புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சென்னை. தொடர்புக்கு – 94451 12675.
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:00 முதல் 11:00 மணி வரை, ரமோனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) லண்டனின் வணிக இதயமான ஃபின்ஸ்பரி சதுக்கத்திற்கு அருகிலுள்ள அலுவலக கட்டிடத்தில் வேலை செய்கிறார். கடைசி ஊழியர் சுழற்கண்ணாடிக் கதவுகள் வழியே வெளியேறும் போது அவர் தமது சீருடையை அணிகிறார்.
மாதிரிப் படம்
பின்னர் அவர் சுத்தம் செய்யத் தொடங்குகிறார். ஐந்து மாடிகளை மற்றொரு பணியாளருடன் தூசுறிஞ்சியைக் (Vacuum Cleaner) கொண்டு எல்லா குப்பைகளையும் அகற்றுகிறார். மேலும், சமையலைறைகளில் பெரும்பாலும் அவர் வரும் நேரத்தில் அசுத்தமும் அருவருப்புமாக இருக்கும் தட்டுகள் கருவிகளை கழுவி உலர்த்துகிறார். அவருடைய வேலையை முடிக்க இரண்டு மணிநேரம் மட்டுமே இருக்கிறது.
கழிப்பறைகளை சுத்தம் செய்வது அவருக்கு விருப்பக்குறைவான வேலை என குறிப்பிடுகிறார். “மனிதக் கழிவுகளின் நாற்றத்தை விட வெளுப்பான்கள் (Bleach) நெடி உங்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும்” என்று 36 வயதான அவர் விளக்குகிறார். மதிய நேரத்தில் மற்றொரு சுத்தம் செய்யும் வேலையும் இருப்பதால், இது களைப்பூட்டக்கூடியதாக இருக்கிறது. ஆயினும் ரமோனா காது கேட்பொறியில் (earphones) சல்சா இசையைக் கேட்பதன் மூலம் தனது மனநிலையை சமப்படுத்த முயல்கிறார். அவரைக் கடந்து அலுவலகத்திலிருந்து வெளியேறி செல்வோரின் விகாரமான வாழ்த்துக்களை தவிர, ரமோனா அரிதாகவே யாருடனும் பேசுகிறார். ஆனால் அவர் அதுபற்றி கவலைப்படவில்லை என்கிறார். “என் வாழ்க்கை இப்போது நன்றாக இல்லை, ஆனால் நான் லண்டனில் முதன்முதலாக வந்தபோது இருந்ததை விட மிகவும் நன்றாக இருக்கிறது” என்கிறார் அவர்.
இளஞ்சிவப்பு கன்னங்களையும் பொன்னிற பின்னப்பட்ட கூந்தலையும் கொண்ட மகிழ்ச்சியான பெண்ணான ரமோனா, சிறந்த வேலைவாய்ப்புகளைத் தேடி லண்டனுக்கு வந்தார். அவர் தனது தாய்நாடான பொலிவியாவை விட்டு, 2006-ம் ஆண்டில் எவா மொராலஸ் அதிபராவதற்கு சிறிது முன்னர், நாட்டின் வறுமை விகிதம் 38.2 சதவீதமாக உயர்ந்திருந்த போது வெளியேறினார். அவர் தனது சகோதரி மற்றும் உறவினருடன் கிட்டத்தட்ட ஒரு வருடம் குடியிருப்பைப் பகிர்ந்து கொண்டு, முறைசாரா அடிப்படையில் பல்வேறு அலுவலகங்களில் இரவில் சுத்தம் செய்யும் வேலைகளை செய்துவந்தார். அவர் சக லத்தீன் அமெரிக்கர்களிடமிருந்து வாய்மொழியாக வேலை பற்றிய தகவல்களை அறிந்து கொண்டார்.
“நான் முதலில் துவங்கிய போது சீருடைகள் இல்லை, ஒப்பந்தங்கள் இல்லை, எதுவுமே இல்லை” என ரொக்கப் பணமாக ஊதியம் பெற்றதையும் ரமோனா நினைவு கூர்கிறார். “ சில சமயங்களில், ஒரு வாரத்திற்கு மேல் வேலை செய்தபின் ஊதியம் எப்போது கொடுக்கப்படும் என்பதை அறிய நான் மேலாளரை அழைத்தபோது, அவர் ‘அப்படியானால் உனக்கு இந்த வேலை வேண்டுமா வேண்டாமா?’ என்று கேட்டிருக்கிறார்”. அவர் தனது கணவரைக் கூட இன்னும் சந்திக்கவில்லை. மேலும், ஆளரவமற்ற வேளையில் பணிபுரிவதால் அவர் எவருடனும் பேசாமல் நாட்கள் அல்லது வாரங்கள் கூட கடந்து போகும்.
லண்டனில் கண்ணுக்குத் தெரியாத மற்றும் பாதிப்படைய ஏதுவான நிலையிலுள்ள நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகளில் ரமோனாவும் ஒருவர். அவரது பிரிட்டன் பயணம், அத்தொழிலிலுள்ள மற்ற அனைவரின் வகைமாதிரியாகும். அவர்கள் பெரும்பாலும் வறுமையிலிருந்து விடுபடும் வழியைத் தேடி சுற்றுலாப் பயணிகளாக பிரிட்டனுக்குள் நுழைகின்றனர். முதலில் முறைசாரா ஏற்பாடுகளில் சட்டவிரோதமாக வேலை செய்கின்றனர். அது அவர்களை பணிப்பாதுகாப்பற்ற மற்றும் துஷ்பிரயோகத்திற்குட்படும் நிலைக்குத் தள்ளுகிறது. ஆவணங்களின்றி புலம்பெயர்ந்தோர் தங்களுக்கான சட்ட ஆலோசனைக்கு சில வழிகளைக் கொண்டுள்ளனர். ஆனால் நீதிமன்றத்திற்கு வழக்கை எடுத்துச் செல்வது அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
ஈக்வாடர் வம்சாவளியைச் சேர்ந்த ஸ்பானிய குடிமகனான தனது கணவரை திருமணம் செய்து கொண்ட பின் இங்கிலாந்தில் குடியுரிமை பெற தகுதிபெற்றார், ரமோனா. ஆனால் இங்கிலாந்தில் சட்டப்பூர்வமாக நுழையும் அந்த தொழிலாளர்களுக்கும் வாழ்க்கை மிகவும் கடினமானதாகவே இருக்கும். அல் ஜசீராவுடன் பேசிய சுத்தப்படுத்தும் தொழிலாளிகள் பலர் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை சந்தை கொள்கையின் அடிப்படையில் இங்கிலாந்திற்குள் நுழையும் உரிமையைப் பெறுவதற்காக மற்ற ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாகவும், சட்டபூர்வமாகவும் சில ஆண்டுகள் வேலைசெய்து சில பிரச்சினைகளுக்கு உட்படுகின்றனர். இந்த பத்திரிக்கையாளர் பேசிய ஒன்பது சுத்தப்படுத்தும் தொழிலாளிகளும் இந்த நேர்காணலின் போது இங்கிலாந்தின் குடியுரிமையைப் பெற்றிருந்தனர்.
ஆங்கில வகுப்புகள்
ரமோனா எதிர்கொள்ளும் நிச்சயமற்ற ஆபத்தான நிலை குளோரியா(43) மற்றும் டெஸ்டெமோனா (47) ஆகிய கொலம்பிய சகோதரிகள் எதிர்கொள்வதை ஒத்திருக்கிறது. ஆனால் அவர்கள் லண்டனை வந்தடைந்த பாதை மிகவும் கடினமானது. 2001-ல் அவர்கள் ஸ்பெயினுக்கு தங்களை கடத்திக் கொண்டனர். அங்கு மூன்றாண்டுகள் முன்புவரை ஆவணங்களின்றி சட்டவிரோதமாக பழம் சேகரிப்பவர்களாகவும், வீட்டை சுத்தப்படுத்துபவர்களாகவும் வேலை செய்தனர்.
மாதிரிப்படம்
ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமையைப் பெற்ற பின் லண்டனில் உள்ள மைத்துனர் ஒருவர் அவர்களை இங்கிலாந்திற்கு அழைத்துள்ளார். அவர்கள் சிறிது காலத்திற்கு அவருடன் தங்கியிருந்து, வர்த்தக சுத்தப்படுத்துபவர்களாக பணியாற்றத் தொடங்கினர்.
“வாழ்க்கை கடினமானது,” குளோரியா ஸ்பானிய மொழியில் கூறுகிறார். “புனித பால் தேவாலயத்திற்கு அருகிலிருக்கும் எனது பணியிடத்திற்கு செல்ல பேருந்தைப் பிடிக்க தினமும் அதிகாலை 1 மணிக்கு எழுகிறேன். எனது தினசரி வேலை நேரங்கள் 2-லிருந்து 4 மணிக்குள் மற்றும் 5-லிருந்து 7 மணி வரை”.
“நாங்கள் முதலில் இங்கு வந்தபோது, நீலக் கண்களும் பொன்னிறமுடைய கைநிறையப் பணம் வைத்திருக்கும் பணக்காரர்கள் நிறைந்த நகரம் லண்டன் என்று எண்ணியிருந்தோம். எங்களைப் போன்ற மற்ற ஏழை மக்களும் இங்கிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.” சொல்லிவிட்டு டெஸ்டெமோனா சிரிக்கிறார். இரு சகோதரிகளுக்கும் ஆங்கிலம் பேச தெரியவில்லை.
ஒரு பல்பொருள் அங்காடியில் மளிகை சாமான்களை வாங்கச் செல்வதுகூட மிகக்கடினமாக இருக்கிறது, ஏனென்றால் உதவி கேட்க எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது” என்று குளோரியா கூறுகிறார்.
2016, செப்டம்பரில் கொலம்பியாவின் காலி நகரில் இவர்களது மூத்த சகோதரி இறந்துவிட்டார். ஆனால் பணமின்மையால் இவர்களால் சவ அடக்கத்திற்கு செல்ல முடியவில்லை. மேலும், ஊருக்கு சென்றால் இங்கிலாந்திற்கு திரும்ப முடியாது என்ற அச்சமும் குளோரியாவுக்கு இருந்தது. பெரும்பாலான நேரம், எங்கு வேலை செய்யப்போகிறோம் என்பது முதல்நாள் வரை தெரியாது என்கின்றனர் சுத்தப்படுத்தும் தொழிலாளிகள்.
“நான் உண்மையாகவே ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பினேன், ஒரு வருடத்திற்கும் மேலாக சேமித்து வைத்த பிறகு, இறுதியாக 1,400 பவுண்டுகள் செலுத்தி (சுமார் 1,17,041 ரூபாய்) கட்டணம் செலுத்தி ஒரு மொழி மையத்தில் காலை வகுப்புகளுக்குச் சென்றேன்” என்று ராமோனா கூறுகிறார். அவர் படிப்பை முடிக்கத் தவறிய காரணத்தினால் தான் செலுத்திய கட்டணத்தை மிகச்சரியாக நினைவில் வைத்துள்ளார்.
“நான் ஒவ்வொரு பாடத்தோடும் தூங்கினேன். இரவில் 14 மணி நேரம் நான் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது கவனம் செலுத்த கடினமாக இருந்தது.” அதன் பின் ரமோனாவின் முதலாளிகளில் ஒருவன் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் ஊதியமளிக்காத துன்பம் மிகுந்த காலம் வந்தது.
ஒப்பந்த நிறுவனத்திற்கு அழைத்த போது எந்த பதிலுமில்லை. இறுதியாக மேலாளரை பிடித்துக் கேட்ட போது, அவர் வேலைநீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அவருக்கு சொல்லப்பட்டது.
“உன் ஒப்பந்தம் முடிந்துவிட்டது இனி அழைக்காதே என்று அவர் சொன்னார்” வருத்தத்துடன் சொல்கிறார் ரமோனா. அந்த நேரத்தில் சட்டவிரோதமாக வேலை செய்து கொண்டிருந்த காரணத்தினால் பொலிவியாவுக்கு அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
அவரது சேமிப்பு ஒரு ஆபத்தான வீதத்தில் குறைந்து கொண்டிருந்தது. மேலும், பஸ் கட்டணங்களை சேமிப்பதற்காக ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு ஒரு மணிநேரமானாலும் கூட நடந்தே சென்றார். சட்ட உதவி பெறுவதையோ அல்லது பணியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அம்பலப்படுத்துவதையோ பற்றி அவர் சிந்திக்கவேயில்லை. “வேலையின்றி இருப்பதைவிட சுரண்டப்படுவது மேலானது” என்று அவர் கூறுகிறார்.
டெஸ்டெமோனாவும் குளோரியாவும் தங்களது வேலையை ஒரு பொறியாக (Trap) பார்க்கிறார்கள். “எங்களது வீட்டில் தொலைக்காட்சி இல்லை, இணையம் இல்லை. எங்களது ஓய்வு நேரத்தில் தூக்கம் பிடிக்கவில்லையென்றால், பூங்காவிற்கு சென்று வெளியே குளிரில் உணவருந்துவோம்” என்கிறார் டெஸ்டெமோனா. “இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது?” கேட்கிறார்.
வேதங்கள், உபநிடதங்கள் போன்றவற்றின் சமூகப் பங்கு பற்றி அந்தப் போலி மார்க்சிஸ்டுகளே “நால்வருண முறையின், இந்திய அடிமை முறையின் தத்துவங்கள்தான் வேதங்களும் உபநிடதங்களும், பிராமண ஆதிக்கத்திலான சாதீய முறையின் தத்துவங்களும் இவைகள்தான்.” (மார்க்சிஸ்ட்”93, அக் பக்: 34) என்கின்றனர்.
“வேதங்களின் இறுதிப்பகுதி என்ற முறையில் பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் என்று ஏராளமான புதிய தத்துவ விளக்கங்களை உருவாக்கியுள்ளனர். இந்த வளர்ச்சிப் போக்கில் வேத காலத்தின் – வேதமதத்தின் எளிமை மறைந்தது. பிராமண ஆதிக்கம் வலுவடைந்தது. இந்த புதிய தத்துவங்கள் எல்லாம் பிராமண ஆதிக்கத்தின் தத்துவ அடிப்படையாக அமைந்தது.”
“இக்காலத்தில் தான், பிரம்மம் தான் உண்மை உலகு மாயை என்று ஒரு உபநிடத விளக்கத்தை – பிரம்ம சூத்திரம் என்ற விளக்க உரையை பாதராயணன் (வேத வியாசர்) உருவாக்கினார். இதனை அடிப்படையாகக் கொண்டு தான் பிற்காலத்தில் சங்கராச்சாரியார் தன்னுடைய பிரம்மசூத்திரத்தை எழுதினார். உபநிடத காலத்தில் தான் முன்பிறப்பு. மறுபிறப்பு, கருமபலன், தலையெழுத்து, நரகம், சொர்க்கம் போன்ற தத்துவங்கள் எல்லாம் பரப்பத் தொடங்கினார். உபநிடத காலத் தத்துவங்கள் இந்திய சமுதாயத்தில் ஒரு பின்னடைவை அல்லது தேக்க நிலையை உருவாக்கியது என்று கூறினால் மிகையாகாது.”
உபநிடத காலத்தைத் தொடர்ந்து, பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய லோகாயத, சார்வாக, ஆஜீவக, புத்த, சமண, தத்துவங்களின் வீழ்ச்சியும், சாதீய அமைப்பிலும், புராதன ஆச்சாரங்களிலும் வேரூன்றிய இந்து மதத்தின் முன்னேற்றமும் புதிய தத்துவ இயக்கத்திற்குப் பாதை திறந்து விட்டது; பழைய வைதீக ஆச்சாரங்களின் புனரமைப்பு என்ற முறையில்தான் இந்துமதம் வலுவடைந்தது; ஆனால், புதிய தத்துவ சிந்தனைகளின் புதுவடிவம் என்ற முறையில் மதத்தின் கையைப் பற்றிக் கொண்டுதான் தத்துவங்கள் முன்னேற வேண்டியிருந்தது. சங்கரன், இராமானுஜர், மத்வர் முதலிய புகழ்பெற்ற சிந்தனையாளர்கள் எல்லாம் உபநிடதத் தத்துவங்களையும் புராண வேதாந்தத்தையும் பகவத் கீதையையும் சனாதன தர்மங்களையும் உயர்த்திப் பிடித்துக் கொண்டுதான் தங்களின் தத்துவங்களுக்கு வடிவம் அளித்தனர் என்கின்றனர் போலி மார்க்சிஸ்டுகள்.
வர்க்க சார்பற்ற முறையில் பொதுநிலையில் நின்று மனித சிந்தனை, தத்துவார்த்த போக்கை ஆய்வு மதிப்பீடு செய்வதைப் போல பித்தலாட்டம் செய்கிறார் நம்பூதிரி.
ஆக, வேத உபநிடத காலத்திலும் அதற்குப் பின்வரும் ஆரிய – பார்ப்பன சனாதனிகளால் உருவாக்கப்பட்ட தத்துவங்கள் எல்லாம் வர்ண – சாதி ஒடுக்குமுறைக்கான ஆயுதங்களாகவும், சமுதாய முன்னேற்றத்துக்குத் தடைகளாகவும், பிற்போக்கானவைகளாகவும் இருந்தன என்கிற முடிவுக்குத்தான் மேற்கண்ட போலிமார்க்சிஸ்டுகளின் தொகுப்பில் இருந்து வரமுடியும். ஆனால் தமது ஆரிய – பார்ப்பனத் தன்மையின் காரணமாக அவற்றையே இவர்கள் தலைசிறந்த, தன்னிகரற்ற தத்துவ அறிவுச் சாதனைகள் என்று போற்றுகின்றனர்.
“உலகில் முதன் முதலாக தத்துவ சிந்தனை வளர்ச்சி அடைந்த மிகச்சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவும் கிரேக்கமும் தான் அவைகளில் முதலில் இடம்பெறும் நாடுகள். இன்று உலகில் மிகவும் முன்னேறியுள்ள ஐரோப்பாவும் அமெரிக்காவும் மிகவும் பின்தங்கியிருந்த காலத்தில் தத்துவச் சிந்தனையில் ஈடுபடும் அளவிற்கு இந்தியநாடு வளர்ச்சியடைந்திருந்தது.” (“93 ஜீலை, மார்க்சிஸ்ட் பக்: 29) என்று பீற்றிக் கொள்கின்றனர்.
குறிப்பாக ஆதிசங்கரனின் தத்துவ வெற்றி, பிராமணர் மற்றும் மற்ற ஆதிக்க ஜாதிகளின் வெற்றி, இந்தியச் சமுதாயத்தின் மற்ற பகுதியின் தோல்வி என்பதை சங்கரன் நம்பூதிரி ஒப்புக் கொள்கிறார். “பிராமண மேலாதிக்கத்தின் கையில் ஒடுக்கப்பட்ட சாதிகளின் தோல்வி, கருத்து முதல்வாதத்திடம் பொருள்முதல் வாதம் அடைந்த தோல்வி ஆகியவை, இந்திய நாகரீகம் மற்றும் கலாச்சாரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பமாக அமைந்தது. இது இறுதியில் தேச சுதந்திரத்தை இழப்பதற்கு இட்டுச் சென்றது” என்பதை நம்பூதிரி ஏற்கிறார். இருந்தாலும் இதற்குரிய தத்துவத்தை உருவாக்கிய ஆதிசங்கரனை கேரள மைந்தர், மாமுனிவர் என்று போற்றுகிறார்.
“சங்கரர் இந்தியாவின் (மேலும் உலகத்தின்) கருத்து முதல்வாத தத்துவ ஞானிகளில் மிக உயர்ந்தவர். அவருடைய அத்வைத வேதாந்தம், இந்திய மனித சமுதாய அறிவுக் களஞ்சியத்துக்கு அளித்த விலை மதிப்பற்ற அன்பளிப்பாகும்.” என்கிறார் நம்பூதிரி “ஆதிசங்கரனின் திறமை அசாதாரணமானது; அவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். வேதங்கள், உபநிடதங்கள் அவர் காலத்தின் பல்வேறு தத்துவங்கள் ஆகிய அனைத்திலும் ஆழமான புலமைபெற்று எதிர்த்தரப்பு தத்துவ சிந்தனையாளர்களையெல்லாம் தோற்கடித்து இந்திய நாட்டின் சிந்தனைத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்” என்று நம்பூதிரியின் தமிழ்நாட்டுத் தத்துவத்தரகர் பரமேசுவரன் புகழ்கிறார்.
சங்கராச்சாரியார்
ஆதிசங்கரனின் தத்துவத்தை இவ்வளவு தூரம் தாங்கிப் பிடிப்பதற்கு ஏதோ மார்க்சிய – லெனினியத் தத்துவ அடிப்படையிருப்பதைப் போல இந்தியப் போலி மார்க்சிஸ்டுகளின் குரு சங்கரன் நம்பூதிரி வாதிடுகிறார். “இந்தியத் தத்துவத்தின் மிக உயர்ந்த வடிவமான சங்கரனின் தத்துவம் மார்க்சிய லெனினிய இயக்க இயல் பொருள் முதல்வாதத்துக்கு எதிரானது என்றாலும் எந்த ஒரு மார்க்சியவாதியும், அத்தத்தத்துவத்தின் பரிணாம வளர்ச்சி, இந்திய சிந்தனை வளர்ச்சியின் ஒரு முக்கிய கட்டம் என்பதையும், அது இந்திய சமுதாய வளர்ச்சியோடு பிரிக்க முடியாத அளவுக்கு இணைந்தது என்பதையும் காணாமல் இருக்க முடியாது” என்கிற பொது அணுகுமுறையைப் பயன்படுத்தி பின்வரும் முடிவுக்கு வருகிறார் சங்கரன் நம்பூதிரி. அவர் கேரளாவில் பிறந்தாலும் இந்திய கருத்து முதல்வாதத்தின் நல்ல அம்சங்களை முன்னுக்கு எடுத்துச் சென்ற மிக உயர்ந்த அறிஞர் என்ற பெயரையும், புகழையும் பெற்றிருந்தார். அவருடைய வாழ்க்கையையும் எண்ணங்களையும், கேரளம் மட்டும் அல்லாது, முழுமையான இந்தியாவும் உருவாக்கியது – என்கிறார்.
மார்க்சிய லெனினிய இயக்க இயல் பொருள்முதல்வாதத்துக்கு எதிரான கருத்துமுதல்வாதத் தத்துவத்தையே ஆதிசங்கரன் முன் வைத்தாலும் அதை இவ்வளவு தூரம் போற்றுவதற்கு நம்பூதிரி சொல்லும் காரணம் மிகப் பெரிய தத்துவ மோசடியாகும்.
கருத்துமுதல்வாதமும், பொருள்முதல்வாதமும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் ஒன்றுக்கொன்று எதிரான, எதிர்மறைத் துருவங்கள் அல்ல என்கிறார். அவற்றுக்கிடையிலான உறவு பற்றி பின்வருமாறு விளக்குகிறார்: “இது நிஜ வாழ்க்கையிலும், மனித சிந்தனையிலும் உள்ள எதிர்மறைகளைப் போல், கருத்துமுதல்வாத, பொருள்மதல்வாத கருத்துப் போக்குகள், இயக்க மறுப்பு நிலையை விட (Metaphysics) இயக்க இயல்முறையோடு உறவுள்ளது என்பதைக் காணத்தவறுகிறது. கருத்துமுதல் வாதம், பொருள்முதல்வாதம் ஆகிய எதுவுமே ஒரே நிலையில் இருப்பது கிடையாது. எப்பொழுதும் அவை ஒன்றை ஒன்று நிராகரித்து முன்னேறுவது, புதிய, புதிய வடிவங்களில் அவைகளுக்கு இடையிலான போராட்டம் நடப்பது ஆகியவை, மனித சிந்தனையின் வளர்ச்சி விதியாகும். ஆகவே, பொருள் முதல்வாதம் என்ற வகையில் அது கருத்து முதல்வாதத்தைவிட உயர்ந்தது அல்லது கருத்து முதல்வாதம் எனற வகையில் அது பொருள் முதல்வாதத்தை விட தாழ்ந்தது என்ற கேள்விக்கே இடமில்லை.” (89 அக், மார்க்சிஸ்ட் பக்1)
சங்கரன் நம்பூதிரியின் மேற்கண்ட விளக்கமே அவரது தத்துவப் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி விடுகிறது. முதலில் அவரே கருத்து முதல்வாதமும் பொருள்முதல் வாதமும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் ஒன்றுக்கொன்று எதிரான, எதிர்மறைத் துருவங்கள் அல்ல என்கிறார். ஐந்தே வரிகளுக்குப் பிறகு, அவை எப்பொழுதும் ஒன்றை ஒன்று நிராகரித்து முன்னேறுவது புதிய, புதிய வடிவங்களில் அவைகளுக்கு இடையிலான போராட்டம் நடப்பது ஆகியவை மனித சிந்தனையின் வளர்ச்சி விதியாகும் என்கிறார், வேறொரு இடத்தில் மார்க்சிய-லெனினிய இயக்கஇயல் பொருள் முதல்வாதம் ஆதிசங்கரனின் தத்தவத்திற்கு எதிரானது என்கிறார்.
உண்மையில், கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் ஆகிய இரு எதிரெதிரான அம்சங்களைக் கொண்ட முரண்பாட்டின் நிகழ்ச்சிப் போக்குத்தான் மனித சிந்தனையின் தத்துவ இயலின் வளர்ச்சி விதியாகும். இவை இரண்டும் எப்போதும் எந்த இடத்திலும் எதிர்மறைத் துருவங்கள் தாம். அவை சம நிலையிலோ, இணக்கமான உறவுடனோ ஒருபோதும் நிலவ முடியாது; இரண்டில் ஏதாவது ஒன்று ஆதிக்கநிலையில் இருக்கும்; சமனற்ற, எதிரெதிரான மாறுகின்ற மோதிக்கொள்ளும் நிலை இல்லை என்றால் மனித சிந்தனை, தத்தவ இயல் வளர்ச்சிப் போக்குக்கு அடிப்படையான முரண்பாடே இல்லாமல் போகும்.
இவ்விரு தத்துவப் போக்குகளுக்கு இடையிலான முரண்பாடு மோதலுக்கு அப்பால் ஒரு பொதுநிலை, நடுநிலையில் நின்று யாருமே மதிப்பீடு ஆய்வு செய்வது முடியாது. குறிப்பாக மார்க்சிய – லெனினியவாதிகளுக்கு இது சாத்தியமே இல்லை. ஏனெனில் இரண்டு போக்குகளில், பொருள் முதல்வாதம் பாட்டாளி வர்க்க சார்புடையது; கருத்து முதல்வாதம் அதற்கு எதிரான வர்க்கங்களின் சார்புடையது. ஆனால் வர்க்க சார்பற்ற முறையில் பொதுநிலையில் நின்று மனித சிந்தனை, தத்துவார்த்த போக்கை ஆய்வு மதிப்பீடு செய்வதைப் போல பித்தலாட்டம் செய்கிறார் நம்பூதிரி. வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையிலான முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான முரண்பாட்டில் எப்படி நடுநிலை கிடையாதோ, “ஒரு வர்க்கமின்றி மற்ற வர்க்கம் கிடையாது, இரண்டும் சேர்த்து நடத்தும் வர்க்கப் போராட்டத்தில் தான் சமுதாய வளர்ச்சிப் போக்கு நிகழ்கிறது” என்று கூறி அவ்வர்க்கங்களுக்குத் தூரத்தில் நின்று மதிப்பீடு – ஆய்வு செய்ய முடியாதோ அதே போன்றதுதான் இதுவும்.
“கருத்து முதல்வாத, பொருள் முதல்வாத, கருத்துப்போக்குகள், இயக்க மறுப்பு நிலையைவிட இயக்க இயல்முறையோடு உறவுள்ளது” என்கிற வாதம் நம்பூதிரியின் இன்னொரு தத்துவப் பித்தலாட்டம். இந்த வாதத்தின் பொருள் என்னவென்றால், கருத்து முதல்வாதம் என்றாலே இயக்க இயல் முறையை அடிப்படையாகக் கொண்டது என்றும், அதனால் இயக்க மறுப்பு நிலையை விடவும், (இயக்க மறுப்புநிலை பொருள் முதல்வாதத்தை விடவும் என்பதை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்) இயக்க இயல்முறை உறவுகளை கருத்து முதல்வாதத்தை தனக்கு சமநிலை உடையதாக நெருக்கமானதாக பொருள்முதல்வாதம் மதிக்கிறது” என்கிறார். கருத்து முதல்வாதமெல்லாம் இயக்க இயல் அடிப்படையிலானது என்பதே தவறானது; இயக்க இயல் அடிப்படையிலான கருத்துமுதல்வாதமோ, இயக்க மறுப்புநிலைவாத பொருள்முதல்வாதமோ, இரண்டுமே தவறானதாம்; ஒன்றைவிட ஒன்று மேலானது, பின்னதைவிட முன்னது தனக்கு நெருக்கமானது என்று மார்க்சிய – லெனினியப் பொருள் முதல்வாதம் எப்போதுமே கருதியது கிடையாது.
கருத்து முதல்வாதம் முட்டாள்தனமானது என்று இயக்கமறுப்பு பொருள் முதல்வாதம் கருதியது; ஆனால் கருத்து முதல்வாதம் ஒரு ஒருதலைப்பட்சமாக, மிகைப்படுத்தப்பட்ட, பொருளில் இருந்தும் இயற்கையில் இருந்தும் பிரித்து அறிவின் ஒரு பகுதியை, ஒரு அம்சத்தை, அதன் பன்முகங்களின் ஒன்றை முழுமையான கருத்தாகவும் தெய்வீகமானதாகவும் ஆக்குகிறது என்று இயக்க இயல் பொருள் முதல்வாதம் கருதுகிறது. மத மூடநம்பிக்கையான கருத்து முதல்வாதத் தத்துவம் எல்லையில்லாத சிக்கல் நிறைந்த அறிவின் சாயலில் ஒன்றின் மூலமாக, மதமூடநம்பிக்கைக்கு இட்டுச்செல்லும் பகுதியாக உள்ளது – இந்த லெனினுடைய வரையறுப்பைக் காட்டி, மனித சிந்தனையில் கருத்து முதல்வாதத்தின் பங்கை மார்க்ஸ், எங்கெல்சைப் போலவே லெனினும் மதித்தார் என்கிறார் நம்பூதிரி.
ஃபாயர்பாக் மற்றும் ஹெகல்
இங்கே கருத்துமுதல்வாதம் பற்றிய இயக்க மறுப்புநிலை மற்றும் இயக்க இயல்நிலை எடுக்கும் பொருள் முதல்வாதிகளின் மாறுப்பட்ட, கண்ணோட்டங்களைத் தான் லெனின் விளக்குகிறார். இது எப்படி மனித சிந்தனையில் கருத்து முதல்வாதத்தின் பங்கை மதிப்பதாகும்? இதை வைத்து ஃபயர்பாகின் இயக்க மறுப்பு நிலை பொருள் முதல்வாதத்தை விட ஹெகலின் இயக்க இயல் கருத்து முதல்வாதம் மனித சிந்தனையின் வளர்ச்சியில் மேலான பங்கு வகிப்பதாக மார்க்சிய லெனினிய ஆசான்கள் மதிக்கின்றனர் என்று நம்பூதிரி புளுகுகிறார். ஹெகலின் கருத்து முதல்வாதத்தை நிராகரித்து இயக்க இயல் அணுகு முறையையும், ஃபாயர்பாகின் இயக்க மறுப்புநிலையை நிராகரித்து பொருள் முதல்வாதத்தையும் எடுத்து செழுமைப்படுத்தி இயக்க இயல் பொருள் முதல்வாதத் தத்துவத்தை உருவாக்கினார் என்பதுதான் உண்மை. ஆனால் ஹெகலின் கருத்து முதல்வாதத்தைப் போலவே ஃபாயர்பாகின் பொருள் முதல்வாதத்தையும் நிராகரித்து வந்ததுதான் இயக்க இயல் பொருள்முதல்வாதம் என்று பச்சையாகப் புளுகுகிறார் நம்பூதிரி (மேற் படி பக் 2).
அதே சமயம் ஆதிசங்கரனின் தத்துவத்தை இவ்வளவு தூரம் ஏற்றிப் போற்றும் நம்பூதிரி, அது ஹெகலியத் தத்துவத்தைப் போல இயக்க இயல் அடிப்படையிலானது என்று எங்கேயும் கூறவோ, நிரூபிக்கவோ முயலவில்லை. ஆகவே அதில் மதிக்கத்தக்க அம்சம் எதுவுமே கிடையாது என்பதுதான் உண்மை, ஆனால், சங்கரனின் தத்துவம் இன்றைய காலத்துக்கும், இடத்துக்கும் ஏற்புடையதல்ல; அதையும் இந்து மறுமலர்ச்சியாளர்களையும், வேத உபநிடத உணர்வுகளுக்கு எதிராகவும் போராடுவதன் அவசியத்தை ஒருபுறம் குறிப்பிட்டாலும், அடுத்த மறுபுறம் பின் வருமாறு எழுதுகிறார் நம்பூதிரி.
“எனினும், இதைச் செய்யும்போது மார்க்சிய லெனினிஸ்டுகளாகிய நாம், எப்பொழுதும் கருத்து முதல்வாதக் குழுக்களின் பிரதிநிதியாக விளங்கிய சங்கரர் மற்றும் கருத்து முதல்வாத பிரிவினரின் கோட்பாடுகள் அனைத்தையும் மறுக்கும் போக்கினைப் பின்பற்றக்கூடாது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல மார்க்சிய அறிஞர்கள் இந்தத் தவறை செய்திருக்கிறார்கள்” என்கிறார் நம்பூதிரி
இதைத் தொடர்ந்து ஒரு சோவியத் திருத்தல்வாதியின் பின்வரும் கூற்றை தனக்கு ஆதரவு வாதமாக வைக்கிறார். “சில மார்க்சிய அறிஞர்கள் அடிக்கடி பொருள் முதல்வாதத்துடன், பிராமண எதிர்ப்பு மனோபாவம், அல்லது ’விடுதலை’ (ஆன்மா) தத்துவத்தை நிராகரிப்பது போன்ற பொருள் முதல்வாதம் இல்லாத தத்துவங்களை இணைத்துப் பார்க்கிறார்கள். லோகாயத தத்துவம் ஒரு தலைப்பட்சமாக மேல்மட்டத்திற்கு தள்ளப்பட்டு அதே நேரத்தில் வேதாந்த தத்துவம் ஏழாவதாகவும், கடைசியாகவும் வைக்கப்பட்டுள்ளது” என்று சொல்கிறார்.
இந்த ஆசிரியர், “வேதாந்தம் அன்றும் இன்றும் இந்தியத் தத்துவங்களிலேயே செல்வாக்கு படைத்தது, மேலும் சங்கரர், இந்திய தத்துவத்தில், ஏறக்குறைய மேற்கு ஐரோப்பிய தத்துவங்களில் பிளாட்டோவின் தத்துவம் பெற்றிருக்கும் இடத்தை, பெற்றிருக்கிறார்” என்று கூறுகிறார். (அக்’89 மார்க்சிஸ்ட் பக்: 12-13)
இப்படிப் போலிகளினால் போற்றப்படும் ஆதிசங்கரனின் அத்வைதமோ, பிற பிரம்ம சூத்திர ஆன்ம தத்துவங்களோ உலகிலேயே தனிச் சிறப்பானவையா என்றால் எதுவும் கிடையாது. போலி மார்க்சிஸ்டுகளே ஒப்புக் கொண்டுள்ளவாறு ஆதி சங்கரனின் அத்வைத தத்துவம் என்பது ஆரிய-பார்ப்பன சனாதன அமைப்பை உருவாக்கிக் காத்துக் கொள்வதற்காக வேதங்கள், உபநிடதங்கள் பிராமணங்கள், ஆரணியங்கள், இதிகாச-புராணங்கள், இறுதியாக வேதாந்தங்கள் ஆகியவற்றின் மூலத் தத்துவமான பிரம்ம சூத்திரத்தின் புதிய விளக்கம் தான். இவற்றுக்கெதிராக லோகாயதம், சார்வாகம், ஆஜீவகம், பெளத்தம், சமணம் ஆகிய பொருள் முதல்வாதம் மற்றும் பார்ப்பன எதிர்ப்பு மதங்களின் தாக்குதலால் சனாதன வருணாசிரம, சாதிய அமைப்பு ஆட்டங்கண்டபோது அதற்கு முட்டுக் கொடுத்துப் புத்துயிர் ஊட்டுவதற்காக பல்வேறு தத்துவப் பித்தலாட்டங்கள், அரசியல் சூழ்ச்சி மோசடிகள், அராஜக – அடாவடிகள், ஆளுவோரின் துணையுடன் கூடிய அக்கிரமங்கள், அடக்குமுறைகள் மூலமாக நிறுவப்பட்டதுதான் சங்கரனின் அத்வைதத் தத்துவம். இவற்றையெல்லாம் மிக விரிவாகவும், ஆழமாகவும், ஆதாரத்துடனும் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
ஆகவே, போலி மார்க்சிஸ்டுகள் வாதிடுவதைப் போல ஆதிசங்கரன் தனது அசாதாரணத் திறமையினாலோ, அறிவு ஆழத்தினாலோ, வெற்றி ஈட்டிடவில்லை. ஆதிசங்கரனின் அத்வைத தத்துவம் என்பது அறிவுத் தெளிவு பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் தடுத்து மனித உடற்கூறுகளுக்கும் புலனுணர்ச்சிக்கும் – சிந்தனைக்கும் இடையிலான இயக்க இயல் உறவை பற்றிய அறியாமையை ஆதாயமாகக் கொண்டு, அதை மேலும் சூட்சுமப்படுத்தி தமது சனாதன சுயநலன்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதுதான்.
இதைப் பின்வருமாறு எங்கெல்சு விளக்குகிறார்: “..எல்லாத் தத்துவ ஞானத்துக்கும் – குறிப்பாக நவீன காலத்திய தத்தவ ஞானத்துக்கும் – அடிப்படையான மாபெரும் பிரச்சனை, சிந்தனைக்கும் வாழ்நிலைக்கு முள்ள உறவு பற்றிய பிரச்சனையாகும். மிகப் பழங்காலத்திலிருந்தே மனிதர்கள் தங்களுடைய உடலின் கட்டுமானத்தைப் பற்றி ஒன்றும் அறியாதிருந்த போது, கனவுகளுக்குக் காரணம் விளங்காத போது, தமது சிந்தனையும், புலனுணர்ச்சியும் தமது உடலின் நடவடிக்கைகள் அல்லவென்றும், உடம்பில் தங்கியிருந்து சாவுக்குப் பின் வெளியேறிவிடுகிற ஒரு தனிவேறான ஆன்மாவின் நடவடிக்கைகளே என்றும் நம்பத் தொடங்கியபோது இந்த ஆன்மாவுக்கும் வெளியுலகத்துக்கும் இடையேயுள்ள உறவு பற்றி சிந்தித்துப் பார்க்கும் கட்டாயத்துக்கு ஆளானார்கள்.
சாவுக்குப் பின் உடலை விட்டு வெளியேறி, ஆன்மா தொடர்ந்து வாழ்கிறதென்றால், அதற்கென்று ஒரு தனி வேறான சாவைப் புனைவதற்கான சந்தர்ப்பம் இருக்கவில்லை. இவ்வழியே தான் அதன் சாகாநிலை பற்றிய கருத்து உதித்தது. இக்கருத்து அந்த வளர்ச்சிக் கட்டத்தில் ஓர் ஆறுதலாக நிச்சயமாகத் தோன்றவில்லை. எதிர்த்துப் போராடுவதால் பயனில்லை என்று அமைந்த ஒரு தலை விதியாகவும், அடிக்கடி (கிரேக்கர்கள் கருதியதுபோல்) நேருறுதியான துரதிர்ஷ்டமாகவும் அது தோன்றியது.
ஆன்மா ஒன்று இருக்கிறதாக ஒப்புக் கொண்டு விட்டால், பிறகு உடல் மாண்டபின் இந்த ஆன்மா எங்கே போய் ஒளிந்து கொள்கிறது என்று தமக்குத் தாமே விளக்கிக் கொள்ள முடியாமல் இருந்த, எங்கும் நிலவிய அறியாமை தான் தனிநபர் வகைப்பட்ட அமரநிலை பற்றி சலிப்பூட்டும் எண்ணப் போக்குக்குப் பொதுவான வழியில் கொண்டு சென்றதே ஒழிய, மன ஆறுதலுக்கான மத விருப்பம் அல்ல. இதே போன்ற முறையிலேதான் இயற்கைச் சக்திகளை உருவகப்படுத்துவதின் மூலமாக முதன் முதலாக கடவுளர்கள் தோன்றினர். சமயங்கள் மேன்மேலும் வளர்ச்சி பெற்றதையொட்டி இக்கடவுளர்கள் மேன்மேலும் உலகியலுக்கு அப்பாற்பட்ட வடிவம் எடுத்துக் கொண்டு, மனிதரின் அறிவு வளர்ச்சிப் போக்கில் இயற்கையாக நடந்து வரும் சூட்சுமப்படுத்தும் ஒரு நிகழ்வுப் போக்கின் மூலமாக – வடிகட்டி இறக்கு நிகழ்வுப் போக்கு மூலமாக என்றுகூட அனேகமாக நான் சொல்லக்கூடும் – இறுதியில் ஏறத்தாழ வரம்பிட்ட மூர்த்தியுடைய, ஒருவருக்கொருவர் வரம்பிட்டுக் கொள்கிற பல கடவுளர்களிடையேயிருந்து ஒன்றே கடவுள் என்று சொல்லும் சமயங்களின் தனியொரு கடவுள் பற்றிய கருத்து மனிதர்களின் மனத்திலே உதித்தது.. (லுத்விக் ஃபாயர்பாகும் மூலச் சிறப்புள்ள ஜெர்மன் தத்துவ ஞானத்தின் முடிவும் – பக் 28, 29), (மார்க்சிஸ்ட் 94 ஜூன் பக். 58-59).
தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா
இதைக் கூட சங்கரன் சுயமான மூல அறிவைக் கொண்டு செய்யவில்லை. அப்போது உருவாகியிருந்த கிறித்தவ, இசுலாமியர்களின் ஒரிறை என்ற தத்துவ நம்பிக்கையைத் திருடிக் கொண்டார். வருண-சாதி அமைப்பினால் வெறுப்புற்று ஆரிய – பார்ப்பன சனாதனத்தை எதிர்த்துப் போராடிய சக்திகளை இழுப்பதற்காக, காளி, மாரி, துர்க்கை முதல் பெரியபாளையத்தம்மன், துலுக்காணத்தம்மன் உட்பட எல்லாம் சக்தியின் வடிவம் என்றும் அவதாரக் கதைகளைப் புனைந்தும், ஒன்றே கடவுள் – அது பிரம்மம் என்றும் மாயாவாத அத்வைத – ஆன்மா பற்றிய கோட்பாட்டை முன்னிறுத்தியும் தத்துவ மோசடி செய்தார்; அதை நிலை நாட்டுவதற்கும் அனைத்து அதர்ம வழிகளையும் பின்பற்றினார்.
ஆரிய-பார்ப்பன சனாதன பிரம்ம சூத்திரத் தத்துவத்தை எதிர்த்துப் போராடி, நிலைகுலையச் செய்த சார்வாகம், ஆஜிவகம், பெளத்தம், சமணம் போன்ற தத்துவங்களையெல்லாம் அடக்குமுறை, அராஜகம், அக்கிரம வழிகளிலோ அல்லது எதிராளிகளின் தத்துவக் கோட்பாடுகளைத் திரித்தும், ஊடுருவிச் சிதைத்தும், மக்களை ஈர்த்த அவற்றின் முக்கிய அம்சங்களைத் திருடியும் இந்து மதம் தன்னைக் காத்துக் கொண்டது. இந்திய தத்துவ வரலாறு என்பதே இப்படி முரண்பட்ட, எதிரெதிரான இரண்டு வருண – சாதீய – வர்க்கப் பிரிவுகளுக்கிடையிலான போராட்டங்கள் நிறைந்ததுதான். இந்த உண்மையையும் ஒப்புக் கொண்டு திரித்துச் சொல்லுகிறார்கள், போலி மார்க்சிஸ்டுகள். அவை ஆதி முதல் வேதமாகிய ரிக் வேதத்தில் மாயாவாதத் தத்துவம் இல்லை; தெய்வீக சக்தியுடையதெனக் கருதப்பட்ட இயற்கை வழிபாடுதான் இருக்கிறது; அதில் நால் வருண சாதியப் பாகுபாடு கிடையாது; அதன் இறுதியில் யாராலேயோ “புருஷ சூக்தம்” என்கிற நால்வருண விளக்கம் புகுத்தப்பட்டு விட்டது. அந்த வேதமும், வால்மீகி இராமாயணமும் மத நூல்களல்ல; மிகச்சிறந்த இலக்கியங்கள்தாம் என்கின்றனர் போலி மார்க்சிஸ்டுகள்.
வேத உபநிடத, வேதாந்த பிராமண, ஆரண்ய, புராண – இதிகாசங்களில் உள்ள கருத்து முதல்வாதம் தோன்றியபோதே, அதற்கு எதிரான லோகாயதம், சார்வாகம், சாங்கியம் வைசேடிகம், ஆஜீவகம் போன்ற பொருள் முதல்வாதமும் தோன்றி விட்டது; இவை வேதங்களிலும், உபநிடதங்களிலும் வேதாந்தங்களிலும் அடங்கியுள்ளன; அதாவது அவற்றின் ஒரு பகுதியாக உள்ளன. வேத உபநிடத கால ரிஷிகளே, ஆரிய – பிராமண முனிவர்களே பொருள் முதல்வாதத்தையும் உருவாக்கி வளர்த்தனர் என்று பச்சையாகப் புளுகுகின்றனர். (93 ஜூலை மார்க்சிஸ்ட் பக் 35-40, 93 டிச, மார்க்சிஸ்ட் பக் 31-33)
ஆனால், “லோகாயத – சார்வாகர்கள்” முதலிய பொருள் முதல்வாதத் தத்துவவாதிகளும், அவர்களது சிந்தனைகள் அடங்கிய நூல்களும் பார்ப்பன ஆதிக்கத்திலிருந்த அரசு அதிகாரத்தினால் முற்றாக அழிக்கப்பட்டன, ஆதிசங்கரன் போன்ற தத்துவவாதிகள், வேத உபநிடதங்கள் போன்ற நூல்கள் தமது சனாதனவாதங்களை நியாயப்படுத்துவதற்காக எதிர்த்தரப்பு என்ற முறையில் குறிப்பிட்டுள்ள ஆதாரங்களில் இருந்துதான் அடக்கப்பட்ட, ஒழிக்கப்பட்ட பொருள் முதல்வாத சிந்தனை பற்றிய ஆதாரங்கள் கிடைக்கின்றன. அதேபோல ஆரிய பார்ப்பன சனாதனத் தத்துவம் தோன்றுவதற்கு முன்பே இங்கு நிலவிய புராதனப் பொருள் முதல்வாதத் தத்துவமும் ஆரியப் படையெடுப்பினாலும் அழிக்கப்பட்டன என்று தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா நிரூபித்துள்ளார். “பண்டைய இந்தியாவின் பொருள் முதல்வாதத்துக்கு ஆதரவாக” “இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பதும் மறைந்து போனதும் என்ன?” “இந்தியப் பொருள் முதல்வாதம் பற்றிய மேலும் சில ஆய்வுகள்” “பண்டைய இந்தியாவில் மருத்துவ அறிவியல்” “பண்டைய இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வரலாறு” “ஒவ்வொரு மனிதனுக்குமான பூவுலகத் தத்துவம்” ஆகிய தொடர்ச்சியான ஆய்வு நூல்கள் மூலம் லோகாயதர்கள் – சாருவாகர்கள் போன்ற பொருள் முதல்வாதிகளின் தத்துவங்களை ஒழித்து கட்டுவதற்கு சங்கரன் முதலிய ஆரிய பார்ப்பன சனாதனங்கள் செய்த இழிசெயல்கள், சூழ்ச்சிகளை தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அம்பலபடுத்தியுள்ளார்.
ஆனால், இத்தகைய ஆய்வாளர்களின் பெயர்களையும், மேற்கோள்களையும் உச்சாடனம் செய்து கொண்டே, ஆதி சங்கரன் முன்பு செய்ததைப் போல பல்வேறு திரிபுகள், சூழ்ச்சிகள் மூலம் இந்திய உழைக்கும் மக்களை ஏமாற்ற முயலுகிறார்கள் சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும். நேரடியான, அப்பட்டமான எதிரிகளைவிட, மூடிமறைக்கப்பட்ட கபட வேடதாரிகளான இவர்கள்தாம் லெனின் சொன்னதைப் போல மிகவும் அபாயகரமானவர்கள் அம்பலப்படுத்தி முறியடிக்கப்பட வேண்டியவர்கள்.
திருப்பூர் 21-வது வார்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை (கடை எண் : 1937) கடந்த 07.05.2017 அன்று அப்பகுதி பெண்கள், மக்கள் அதிகாரம் அமைப்பின் உதவியுடன் மூடினர். வட்டாட்சியர் திரு சுப்ரமணி என்பவர் அக்கடைக்கு மக்கள் முன் சீல் வைத்தார்.
இந்நிலையில் நேற்று 10.05.2017 டாஸ்மாக் கடை முன்பு பார் உரிமையாளர், கூலிக்கு ஆட்களை அழைத்துவந்து மூடிய கடையை திறக்க வேண்டும் என ‘போராடியுள்னர்’. இந்த தகவலை அறிந்த அப்பகுதி பெண்கள் திரண்டு வந்து முழக்கமிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அங்கிருந்த காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை டி.எஸ்.பி. அண்ணாதுரை டாஸ்மாக் பார் உரிமையளருக்கு தனது ஆதரவை நிலைநாட்டும் வகையில் செயல்பட்டார். போராடும் மக்களிடம் முறைப்படி தாசில்தார் அலுவலகம் வந்து புகார் மனு அளித்தால் தான் கடையை மூட முடியும் எனக் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் மக்கள் போராடினால் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டியிருக்கிறார்.
நாளை (11.05.2017) கடை திறக்கும் போது யாரும் கடைக்கு முன்னால் போராட்டம் நடத்தக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார். வெளியூர் தீவிரவாதிகளை ( மக்கள் அதிகாரம் அமைப்பை ) உங்களுக்கு எப்படி தெரியும்? எந்தனை ஆண்டுகள் இந்த பகுதியில் நீங்கள் வசிக்கிறீர்கள்? சொந்த வீடு உண்ட? என கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார்.
அவர்கள் (மக்கள் அதிகாரத்தினர்) உங்களை மூளைச்சலவை செய்து அவர்கள் இயக்கத்தில் சேர்த்துவிடுவார்கள் என்று ‘நல்ல’விதமாகவும் எடுத்துச் சொல்லியுள்ளார். பச்சையாகச் சொல்வதாக இருந்தால் பார் உரிமையாளருக்கு ஆதரவாக டி.எஸ்.பி. அண்ணாதுரை தான் போராடும் மக்களை மூளைச்சலவை அல்ல அதிகார வெறியுடன் பணிய வைக்க முனைகிறார்.ஆனால் அதிகார மிரட்டலுக்கும், நைச்சிய பேச்சுக்கும் மயங்காத பொதுமக்களும், பெண்களும் மீண்டும் கடை திறக்கப்பட்டால், சாராயக்கடை அடித்து நொறுக்கப்படும் என தங்கள் முடிவை அறிவித்துவிட்டு திரும்பியுள்ளனர். இது வேற தமிழ்நாடு! காக்கிகளே புரிந்து கொண்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள்! தமிழகப் பெண்களின் தாலியறுக்கும் டாஸ்மாக்கின் மீதான உங்கள் பாசத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்!
தகவல் : மக்கள் அதிகாரம்,
திருப்பூர். தொடர்புக்கு – 9788 58526.
கடந்த 07.05.2017 – ஞாயிற்றுக் கிழமையன்று இந்தியா முழுவதும் சுமார் 104 நகரங்களில் பல் மற்றும் மருத்துவக் கல்லூரிக்கான தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கு இந்தியா முழுவதில் இருந்தும் சுமார் 11 இலட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான தேர்வு விதிமுறைகளை சி.பி.எஸ்.ஈ உருவாக்கி கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அறிக்கையாக வெளியிட்டது. அதில் மாணவர்களின் கல்வித் தகுதி, மதிப்பெண் தகுதி உள்ளிட்ட விவரங்களோடு, உடைகளுக்கான விதிமுறைகளையும் சேர்த்து வெளியிட்டிருந்தது. அவை,
கருப்பு நிற உடைகளையோ, அடர் நிற உடைகளையோ அணியக்கூடாது. வெளிர் நிற உடைகளையே அணிய வேண்டும்.
ஆண்களும் பெண்களும் முழுக்கை மேலாடை அணியக் கூடாது. மேலாடைகளிலோ, கீழாடைகளிலோ பெரிய பட்டன்கள் இருக்கக் கூடாது.
உடம்பில் / துணியில் துளி கூட உலோகங்கள் இருக்கக் கூடாது.
பூட்ஸ் அணியக் கூடாது. ’ஹை-ஹீல்ஸ்’ அணியக் கூடாது.
மோதிரம், வளையல், ப்ரேஸ்லெட், செயின், நெக்லெஸ், மூக்குத்தி, தோடு உள்ளிட்ட ஆபரணங்கள் அணியக் கூடாது. திருமணமான பெண்களுக்கு மட்டும் தாலியும், வளையலும் அணிந்து கொள்ள அனுமதி உண்டு.
தலைமுடியைக் கட்டும் பெரிய ரப்பர் பேண்டுகள், பெல்ட், தொப்பி, புர்கா, பைஜாமா, குர்தா, சேலை ஆகியவை அணியக்கூடாது.
மாணவர்கள் ‘பிட்’ மற்றும் ‘காப்பி’ யடிப்பதைத் தடுக்கும் பொருட்டே இத்தகைய கறாரான உடைக் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாகக் கூறியிருக்கிறது சி.பி.எஸ்.ஈ. அதாவது, கருப்பு / அடர் நிற உடைகள் மூலமும், உடையில் இருக்கும் உலோகங்கள் மூலமும், காதில் போடும் தோடுகளின் மூலமும் முறைகேடுகளில் ஈடுபட முடியும் எனத் ‘தொலைநோக்குப்’ பார்வையோடு சிந்தித்து இவற்றை எல்லாம் தேர்வு அறைக்கு வெளியே விடவேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றது சி.பி.எஸ்.ஈ.
சி.பி.எஸ்.ஈ இந்த ஆடை விதிமுறைகளை, அனைத்துத் தேர்வு மையங்களிலும் கறாராக நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது. அந்த அடிப்படையில் கடந்த 07.05.2017 ஞாயிறு அன்று நடைபெற்ற நீட் தேர்வில் குறிப்பாக தென்னிந்தியா முழுவதும் பல்வேறு அவலங்கள் அரங்கேறின.
சென்னையில் இரண்டு நிமிடம் தாமதமாக வந்த மாணவியர் மூவரை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது எனக் கூறி வெளியேற்றியிருக்கின்றனர். அதனைக் கண்டித்து மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் சேர்ந்து போராடிய பின்னும் போலீசை வைத்து மிரட்டி, அப்பெண்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர். சென்னையில் முழுக்கைச் சட்டை அணிந்து வந்த மாணவர்களின் சட்டையின் கைகளை அரைக்கைச் சட்டை அளவிற்கு கிழித்த பின்னரே அவர்களைத் தேர்வு எழுத அனுமதித்தனர். ஆனால் குஜராத்தில் முழுக்கைச் சட்டையுடன் மாணவர்கள் எவ்விதத் தடையுமின்றி தேர்வு எழுதியிருக்கிறார்கள்
பெங்களூருவில் ஒரு மாணவியின் காதணிகளைக் கழற்ற முடியாதபடி அதன் திருகாணி கழண்டு வராத நிலையில் அப்பெண்ணை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் கூறிய பிறகு, அப்பெண் தனது தந்தையுடன் உடனடியாக அருகில் உள்ள தங்க நகை ஆசாரியிடம் சென்று காதணியை வெட்டி எடுத்த பின்னரே தேர்வு எழுத அனுமதித்தனர்.
ஆந்திராவில் பல இடங்களில் தலைமுடியை கட்டும் முடி பேண்டுகள் நீக்கப்பட்டால் தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இந்தக் கெடுபிடிகளால் அங்கு மாணவிகள் அனைவரும் தலைவிரி கோலமாகவே தேர்வு எழுதினர்.
தென்னிந்தியா முழுவதும் கருமை நிற மற்றும் அடர் நிற ஆடைகள் அணிந்துள்ள மாணவர்களை பரீட்சை எழுத அனுமதிக்கவில்லை. பல மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அவசர அவசரமாக வெளியில் சென்று தேடிப்பிடித்து வெளிர் நிற ஆடைகளை வாங்கி வந்தனர்.
கேரளாவில் பெண் ஒருவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டில் இருக்கும் உலோக பட்டன் ’மெட்டல் டிடெக்டர்’ கருவியில் சத்தம் கொடுத்ததும் அப்பெண்ணை தேர்வு எழுத அனுமதி மறுத்தனர். அப்பெண் தனது தந்தையிடம் இது குறித்துக் கூறியதும், அவர் தனது மகளின் ஜீன்ஸ் பேண்டில் இருந்த உலோக பட்டனை அறுத்தெடுத்தார். அதன் பின்னரே அப்பெண்ணை தேர்வுக்கு அனுமதித்தனர்.
இவை அனைத்திற்கும் மேலாக, இழிவுகளின் உச்சமாக நடைபெற்ற ஒரு சம்பவம் இந்தியாவையே உலுக்கிவிட்டது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே அடர் நிற ஆடை அணிந்திருந்த ஒரு மாணவியை தேர்வு எழுத அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதன் பின்னர், அப்பெண்ணின் தாயார் அருகில் உள்ள பகுதிகளில் அலைந்து தேடி ஒரு மாற்று உடையை அம்மாணவிக்கு வாங்கி வந்து கொடுத்துள்ளார். தேர்வு ஆரம்பிக்க 10 நிமிடம் மட்டுமே உள்ள சூழலில் அப்பெண் மீண்டும் பரிசோதனை வளையத்திற்குள் செல்லும் போது மெட்டல் டிடெக்டர் பரிசோதனையில் அப்பெண்ணின் உள்ளாடையின் கொக்கிக்கு ‘மெட்டல் டிடெக்டர்’ சத்தம் எழுப்பியுள்ளது. அப்பெண்ணின் உள்ளாடையைக் கழட்டினால் தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்றும், அதுவும் தேர்வு தொடங்கும் நேரத்திற்குள் உள்ளாடையைக் கழற்றிவிட்டு வந்தால் தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அம்மாணவி வேறு வழியில்லாமல் அலுவலர்கள் இருந்த பரிசோதனை அறையிலேயே தனது மேல் உள்ளாடையைக் கழட்டி அதனை வாயிலில் இருந்த தனது தாயாரிடம் ஒப்படைத்து விட்டு அவசர அவசரமாகத் தேர்வுக்குச் சென்றுள்ளார்
இச்சம்பவங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்கும் போது, அவர்கள் கூறிய ஒரே பதில், “விதிமுறைகளில் கூறியதை நாங்கள் அப்படியே பின்பற்றினோம், இதில் தவறு ஏதும் இல்லை” என்பது தான். விதிகளைக் காரணம் காட்டி ஒரு பெண்ணின் உள்ளாடையைக் கழட்டச் சொன்ன அந்த அலுவலர் தனது மகளை அவ்வாறு பொதுவெளியில் நடத்தியிருப்பாரா ? அல்லது தனது மகளுக்கு அவ்வாறு நிகழ்ந்திருந்தால் சும்மாயிருந்திருப்பாரா? பிழைப்புவாதமும் அடிமைத்தனமும் நமது மூளைக்குள் குடில் போட்டு குடித்தனம் செய்யும் போது தான் நாமும் இந்த ரூல்ஸ் ராமானுஜங்களை, ‘பாவம், அவர்கள் என்ன செய்வார்கள்?, அவர்கள் தங்கள் கடமையைத் தானே செய்தார்கள்’ என்று அங்கீகரிக்கிறோம்.
தங்கள் வாழ்வாதாரங்களுக்காகப் போராடும் மக்களின் மீது தமது மேலதிகாரிகளின் உத்தரவிற்கிணங்க வெறிநாய் போல பாய்ந்து குதறும் போலீசுக்கும், இராணுவத்திற்கும் இதே அடிமைத்தனம் தான் தலையில் ஏற்றப்பட்டிருக்கிறது. இந்த அடிமைத்தனத்தைத் தான் இராணுவப் பயிற்சியிலும், போலீசுப் பயிற்சியிலும் பிரதானமாக சொல்லித் தருகின்றனர். இந்த அடிமைத்தனம் தான் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சாதியப் படிநிலையின் ‘ஒழுக்கமாக’ நமக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது.
மாணவர்கள் மீதான இந்தக் கடுமையான ஒழுங்கு விதிமுறைகள் மற்றும் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாக விமர்சித்த பெற்றோர்கள் வெகு சிலரே. இது குறித்து மூச்சே விடாமல் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு ‘அட்ஜஸ்ட்’ செய்யும் பெற்றோர்களின் எண்ணிக்கையே பெரும்பான்மை. “நான் சொல்வதே சட்டம், அதுவே சாசனம்” என்ற பாகுபலியின் எதேச்சதிகார வசனத்திற்கு கைதட்டி ரசிக்கும் கூட்டம் இருக்கும் போது சுய மரியாதைக்கு எங்கே போவது?
டாஸ்மாக்கை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் என போராடிக் கொண்டிருந்த போது, குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சிப் பயணில்லை. மக்களே டாஸ்மாக் கடைகளை மூடும் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என முன் மாதிரியான போராட்டங்களை நடத்திக் காட்டியது மக்கள் அதிகாரம்.
நூற்றுக் கணக்கான மாணவர்களை அணி திரட்டி பச்சையப்பன் கல்லூரி அருகில் இருந்த டாஸ்மாக் கடையை நொறுக்கித் தள்ளினர். மதுரவாயல், மீஞ்சூர், விருத்தாச்சலம், நாகர்கோவில், தர்மபுரி என பல இடங்களில் டாஸ்மாக் கடையை அகற்ற மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராடினர். அந்த போராட்டங்களை காவல் துறை கொடூரமாக ஒடுக்கியது. பச்சையப்பன் கல்லூரி போராட்டத்தில் மாணவிகளை பூட்ஸ் காலால் மிதித்தது. மதுரவாயல் போராட்டத்தில் 50 வயதுப் பெண்மணியின் மண்டையை உடைத்தது காவல்துறை. தன்னெழுச்சியாக தமிழகமெங்கும் போராடியவர்களையும் கொடூரமாகத் தாக்கியது. சசி பெருமாள் அவர்களைக் கொன்றே போட்டது தமிழக அரசு. இப்போராட்டங்களின் போது மக்கள் அதிகார தோழர்கள் பலர் பல நாட்கள் சிறை வைக்கப்பட்டனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் சிறை வைக்கப்பட்டனர்.
மூடு டாஸ்மாக்கை !
குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே ! அடிக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே ! மூடு கடையை எவன் வருவான் பார்ப்போம் ! நம்ம ஊரில் இனி கிடையாது டாஸ்மாக்கு , அடிச்சு தூக்கு !
இந்த பாடலுக்காக தோழர் கோவன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். எந்த பாடலுக்காக அவர் கைது செய்யப்பட்டாரோ அந்த பாடலானது தற்போது தமிழக மக்களால் செயல் வடிவம் பெற்றுள்ளது. தற்போது தமிழகமெங்கும் மக்கள் கொதித்தெழுந்து டாஸ்மாக்கை உடைத்து போராடுகின்றனர். விழிபிதுங்கி நிற்கிறது காவல்துறையும் அதிகாரவர்க்கமும்.
டாஸ்மாக்குக்கு எதிரான இந்த போராட்டத் தீ பரவட்டும் !