Tuesday, August 5, 2025
முகப்பு பதிவு பக்கம் 501

எனது நண்பன் யமீன் ரஷீதைக் கொன்றது யார் ?

0

ந்த ஞாயிற்றுக் கிழமை காலை மாலத்தீவு வாசிகளுக்கு அதிர்ச்சிகரமாக விடிந்தது. 29 வயதே ஆன புகழ்பெற்ற இணைய எழுத்தாளர் யமீன் ரஷீது கொல்லப்பட்டார் என்கிற செய்தியே அதிர்ச்சிக்குக் காரணம்.

சுமார் நான்காண்டுகளுக்கு முன், 2012 அக்டோபர் மாதம், இதே போன்ற ஒரு கொடூரமான கொலை மாலத்தீவு வாசிகளை அதிர்ச்சியுறச் செய்திருந்தது. அப்போது புகழ்பெற்ற இசுலாம் மத அறிஞரும், சீர்திருத்தவாதியும் பாராளுமன்ற உறுப்பினருமான அஃப்ரஷீம் அலி கொல்லப்பட்டார். இருவருமே ஒரே விதமாக கொல்லப்பட்டிருந்தனர். உடல் முழுவது பல்வேறு வெட்டுக் காயங்களுடன் இருவரின் உடல்களும் மாலத்தீவின் தலைநகர் மாலேவில் அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மாடிப்படிகளின் கீழே கண்டெடுக்கப்பட்டன.

2014 ஆகஸ்ட்டிலிருந்து ரஷீதின் நெருங்கிய நண்பரும், இணைய எழுத்தாளருமான அகமது ரில்வான் காணாமல் போயிருக்கிறார். அனேகமாக அவர் கடத்தப்பட்டிருக்க வேண்டுமென்றே கருதப்படுகின்றது. போலீசாரால் குற்றவாளிகளை இது வரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், இந்தக் கொலைகளுக்கும் ஆட்கடத்தலுக்கும் யார் காரணம் என நம்மால் சொல்ல முடியாது.

இந்தக் குற்றச் செயல்களைத் தூண்டிருக்க கூடிய காரணங்கள் எவையாக இருப்பினும், இவை மாலத்தீவில் ஒரு புதிய வகை சித்தாந்தத்தின் பரவல் விளைவித்திருக்கும் புதிய வகை குற்றங்களின் பிரதிபலிப்புகள் என்பதில் சந்தேகமில்லை. நாட்டின் அரசியல் உள்ளடக்கத்துடன் தொடர்புடைய இந்த புதிய வகை சிந்தாந்தம், மதச்சார்பற்ற அரசியலின் தோல்வியின் மேலும், சிதறிய மத நம்பிக்கைகளின் மேலும் எழுகின்றது.

மத நம்பிக்கைகள்

கொலை செய்யப்பட்ட யமீன் ரஷீத்

மதம் தொடர்பான சர்ச்சைகளில் ரஷீதும், ரில்வானும், அலியும் வெளிப்படையாகப் பேசினர்.

சொல்ல போனால், அலி ஒரு முதிர்ச்சியடைந்த மத அறிஞரும் கூட. மதம் தொடர்பாக அவரிடம் ஒரு விதமான சீர்திருத்தவாத கண்ணோட்டம் இருந்தது. மாலத்தீவின் பாரம்பரிய இசை உள்ளிட்ட வெகுஜன கலாச்சாரங்களை மதித்த அலி, ஆண் பெண் சமத்துவத்தை ஆதரித்தார்.

ரஷீதும், ரில்வானும் இளைஞர்களிடம் செல்வாக்கு செலுத்திய நவீன சித்தாந்த போக்குகளை பிரதிபலித்தனர். இன்றைய காலகட்டத்தில் மாலத்தீவின் இளைஞர்களில் சிலர் பகுத்தறிவு இசுலாமிய போக்கான முத்தாஸிலிடெசையும், சூஃபியிசத்தையும் ஆதரிக்கின்றனர். மேலும், மாலத்தீவின் பழைய புத்தமத வரலாறும், இசுலாமிய பாரம்பரியம் அதன் கலாச்சாரம், இலக்கியங்களும் இளைஞர்களைக் கவர்கின்றன. ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால், மாலத்தீவின் இளைஞர்களை அறிவியல் பூர்வமான பகுத்தறிவும், மனிதாபிமான சித்தாந்தங்களும் பாதித்துள்ளன.

எனினும், இந்த இளைஞர்களில் சிலருக்கு அறிவியல் பூர்வமான புதிய நாத்திகவாதத்தின் மேலும், மதச்சார்பின்மையின் மீதும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மதம் தொடர்பான விவகாரங்களை தனிபட்ட சொந்த விசயங்களாக கையாள வேண்டும் என இவர்கள் வாதிடுகின்றனர். இவர்கள் கறாராக சட்டவாதம் பேசக் கூடியவர்களாகவும் இருப்பதில்லை. இளைஞர்களாக இருப்பதால் இயல்பாகவே தீராத பல கேள்விகளுக்கு இவர்களிடம் நிரந்தரமான, உத்திரவாதமான நிலைப்பாடுகள் இருப்பதில்லை.

ரஷீதும் ரில்வானும் இந்தப் புதிய தலைமுறை இளைஞர்களையே பிரதிபலித்தனர். அவர்களிடம் அறுதியான நம்பிக்கைகள் ஏதும் இல்லை. ஆனால், மனித உரிமை தொடர்பாக அவர்கள் என்ன பேசினார்களோ அதில் சமரசமற்றவர்களாக இருந்தனர். கடும் பிற்போக்குவாதத்தையும், தீவிரவாதத்தையும் தக்ஃபீரி போக்கையும் (தக்ஃபீர் பொருள் :- எது சரியான இசுலாம், யார் சரியான முசுலீம் என்று முத்திரை குத்துவது) இவர்கள் கடுமையாக எதிர்த்தனர். இவ்வாறாக மதவாதிகள் மற்றும் அரசியல்வாதிகளின் எதிர்ப்பை ஒரு சேர சம்பாதித்துக் கொண்டனர் இவ்விருவரும்.

 மதம் சாராத அரசியல்வாதிகளின் மிரட்டல்கள்

அரபு வசந்தத்திற்கு சில ஆண்டுகள் முன்பு, 2008-லேயே மாலத்தீவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக ஜனநாயகத்திற்கான எழுச்சி மலர்ந்தது. அதன் போக்கில் சுதந்திர மையம் (Freedom House) எனும் சிந்தனைக்குழாம் ஒன்று மாலத்தீவை முதன் முறையாக தேர்தல் ஜனநாயக நாடாக அறிவித்தது.

எனினும், 2012 பிப்ரவரி மாதம் முதன் முறையாக ஜனநாயகப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்ட அதிபரான மொகமது நஷீதின் ஆட்சிக்காலம் மேலும் இரண்டாண்டுகளுக்கு இருந்த போதே கட்டாயமாக பதவி விலக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மதம் சாராத அரசியல் சக்திகளின் மூலமே மெல்ல மெல்ல மாலத்தீவில் ஜனநாயக நீக்க நடவடிக்கைகள் துவங்கின.

கட்டாய பதவி விலக்கம் செய்யப்பட்ட மாலத்தீவு அதிபர் மொகமது நஷீத்

இந்த ஜனநாயக நீக்க நடவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட முறைமையில் நடந்தன. அதாவது, தேர்தல் ஜனநாயகத்திற்கும் சாதாரண மாலத்தீவுவாசிகள் பின்பற்றும் இசுலாத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் அதற்கு காரணமாக இல்லை – சொல்லப் போனால், மாலத்தீவுவாசிகள் ஜனநாயகத்திற்கு ஆதரவானவர்களாகவே இருந்தனர்.

நஷீதின் அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் தலைவர்கள் சிலரால் நிதியுதவி செய்து மேற்கொள்ளப்பட்ட அரசியல் நகர்வுகளின் பின் மதமும் ஒரு காரணியாக இருந்தது உண்மை தான். எனினும், மாலத்தீவின் இளம் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டதற்கு அடிப்படைக் காரணிகளான அரசியல் பொருளாதார மற்றும் ஆட்சிமுறை சார்ந்த சவால்கள் அந்நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் உள்ள மேட்டிமைத்தனத்திலிருந்தே கிளைத்து எழுந்தவையாகும்.

பழைய எதேச்சாதிகாரத்தின் இடத்தில் புதிய எதேச்சாதிகாரம் நுழைந்ததும் மாலத்தீவில் மனித உரிமைமீறல்கள் திடீரென அதிகரித்தன. இது எதேச்சாதிகாரத்தின் மிக மோசமான வடிவமாகும். வழமையான வடிவங்களையும் ஜனநாயக மேல்பூச்சுகளையும் பயன்படுத்திக் கொள்வதோடு உள்ளடக்கத்தில் முழுமையடைந்த ஊழல்மயமாகவும் கிரிமினல்மயமாகவும் இருக்கின்றது.

தங்களது நலன்களைக் காத்துக் கொள்ள அரசியல் ரீதியான வன்முறைகளைக் கையிலெடுக்கும் குற்ற கும்பல்களை தங்களது ஊழல்களாலும் கிரிமினல்தனத்தாலும் மேன்மையானவர்களாக்கி விட்டனர் அரசியல்வாதிகள்.

இந்தப் புதிய எதேச்சாதிகாரத்தையும், அதன் ஊழல்களையும் மனித உரிமை மீறல்களையும் ரஷீதும், ரில்வானும் கடுமையாகவும் வெளிப்படையாகவும் எதிர்த்தனர். அவர்களுக்கு பகடியும், நகைமுரணாக தங்களாது கருத்துக்களை முன்வைப்பதும் இயல்பாக கைவந்தது. ரஷீதின் கேலி கிண்டல்களுக்கு அவரது நையாண்டியான வலைப்பூவே சாட்சி. இந்த வலைப்பக்கங்கள் மாலத்தீவில் மிகவும் பிரபலமாயின.

மேற்படி போக்கின் விளைவாக அரசியல் வன்முறைகளின் சூத்திரதாரிகளே இந்தக் கொலைகளுக்கும் ஆட்கடத்தலுக்கும் காரணமாக இருந்திருக்க கூடிய வாய்ப்பு உள்ளது. தங்களுக்கு எதிரான குரல்களை மௌனமாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், வேறொரு வாய்ப்பும் உள்ளது.

சிதறிய மதப் பரப்பு

மாலத்தீவில் உருவாகியுள்ள ஒரு புதிய வகை – ஆனால், சிறிய – குழுக்கள் சிலவும் சமூகவலைத்தள பிரபலங்களான ரஷீத், ரில்வான் மற்றும் அலியைப் போன்ற சீர்திருத்தவாத தாராளவாத மத அறிஞர்களை தங்களுக்கான ஆபத்தாக பார்க்கிறார்கள். இவர்கள் மத தீவிரவாதிகள்.

சமீபமாக மாலத்தீவில் நடந்து வரும் நவீன வளர்ச்சிகளைத் தொடர்ந்து சமூகத்தில் மதத்தின் பங்கு என்னவென்பதைக் குறித்த கேள்வி மக்களிடையே விவாதங்களை எழுப்பியுள்ளது.

இதன் காரணமாக, அதிகாரப்பூர்வமாக ஒற்றை இசுலாமிய அடையாளம் வலியுறுத்தப்பட்டாலும் மத ரீதியான சிந்தனைப்போக்குகளில் ஆழமான பிளவு ஏற்பட்டுள்ளது. இரண்டாயிரங்களின் மத்தியில் அரசியலில் தாராளவாதப் போக்கு நுழைந்த பின் தீவிரவாத குழுக்களும் அபரிமிதமாக வளர்ந்து சமூக அந்தஸ்த்தைப் பெற்றன.

கடந்த ஆண்டுகளில் இது போன்ற குழுக்கள் மத ரீதியான வன்முறைகளை நிகழ்த்தியுள்ளன. இதில் சில குழுக்கள் வன்முறையான ஜிகாதை வெளிப்படையாகவே ஆதரிக்கவும் செய்கின்றன. இவர்களுக்குள் ’எதற்கு எதிராக ஜிகாது செய்ய வேண்டும்’ என்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும், செய்யப்படும் ஜிகாது வன்முறையாக இருக்க வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை நிலவுகின்றது.

இதை நாம் ‘சூழல் பொருத்தம் விலக்கப்பட்ட வன்முறை’ (Decontextualised Violence) என்று அழைக்கலாம். குறிப்பாக தக்ஃபீரி கொள்கை கொண்ட சில குழுக்கள் ரஷீதும் ரில்வானும் மதவிரோதிகள் என குற்றம் சுமத்தின. ரஷீதின் மரணத்திற்குப் பின் இந்தக் குழுக்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலரின் முகநூல் பதிவுகளில் அவர்கள் ரஷீதை மதவிரோதியென தூற்றியதைப் பார்க்க முடிந்தது.

ரஷீது ரில்வான் போன்றவர்களால் சொல்லப்படும் கருத்துக்களை மத அடிப்படையில் விதண்டாவாதமாக புரிந்து கொள்வதே மதரீதியான வன்முறைகளுக்கு காரணமாகிறது. மாலத்தீவில் இயங்கிவரும் இது போன்ற தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் சிலர் ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்காக சிரியா சென்றுள்ளனர்.

ஊழல்வாத அரசியல்வாதிகளைப் போன்றே இந்த மத தீவிரவாத கும்பல்களும் தீவிரவாத சிந்தனை கொண்ட இளைஞர்களுடன் கைகோர்த்துள்ளன. ”தீவிரவாதிகளை இசுலாமியமயமாக்குவது” என ஆலிவர் ராய் சொல்லும் ஒரு போக்கு மாலத்தீவில் உள்ளது. இது போல் “இசுலாமியமயமாக்கப்பட்ட தீவிரவாதிகள்” பலர் சிரியாவுக்குச் சென்றுள்ளனர். இந்தக் குழுக்களுக்கு சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களுடன் பரஸ்பர உறவு இருப்பதால் தங்கள் மீதான சட்டநடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்கின்றனர்.

ரஷீது, அலியின் கொலையின் பின்னும், ரில்வானின் கடத்திலின் பின்னும் மாலேவில் உள்ள இது போன்ற கும்பல்கள் இருக்குமென்றால், சர்வதேச அழுத்தங்கள் இருந்தால் அன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்கப் போவதில்லை. அப்படியே நீதி கிடைத்தாலும் குற்றம் அரசியலுக்காக நடந்ததா அல்லது மத காரணங்களுக்காக நடந்ததா என்கிற கேள்வி எஞ்சி நிற்கும்.

எப்படிப் பார்த்தாலும் மாலத்தீவில் மதம் சாராத அரசியலின் தோல்வி மற்றும் ஆழமாக பிளவுபட்ட மதப் பரப்பின் மேல் ஒரு புதியவகை வன்முறை தோன்றியிருப்பதைத் தான் ரஷீதின் கொடூரமான கொலை உணார்த்துகின்றது.

மூலக்கட்டுரை: Who killed my friend Yameen Rasheed?
நன்றி: Azim Zahir, ALJAZEERA
தமிழாக்கம்: முகில்

காட்டு தர்பார் நடத்திய நீட் தேர்வு !

5

‘நீட்’ இந்தியா

தில்லியில்
ஆடை களைந்தான் விவசாயி.
தேர்வில்
ஆடை அவிழ்க்கப்பட்டார்கள்
மாணவர்கள்.

பர்தா களையப்பட்டது
துப்பட்டா விலக்கப்பட்டது
கூந்தல் கலைக்கப்பட்டது
உள்ளாடையும் உருவப்பட்டது
அதாகப்பட்டது,
மோடி அரசின் தூய்மையைக் காட்ட
ஆணுடலும், பெண்ணுடலும்
அசிங்கப்பட்டது.

பதஞ்சலியின் கோவணமும்
ஈசாவின் தலைப்பாகையும்
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது,

படிக்கும் மாணவரின்
முழுக்கை சட்டையும்,
பைத்தியக்கார விதிகளால்
கிழிக்கப்பட்டது.
கழுத்தணியும், காதணியும்
பாதணியும் கூட
பறிக்கப்பட்டது.

எச்சரிக்கை விதிகளால்
எல்லா கயிறுகளும்
அறுக்கப்பட்டது.
ஆனால்,
பூணூல் கயிறு?

அன்று
கல்வி உரிமையே
மறுக்கப்பட்டது,
இன்று
சுயமரியாதையும்
பொசுக்கப்பட்டது!
இந்த காட்டு மிராண்டித்தனங்களுக்கு பெயர்
‘நீட்’!

  • துரை. சண்முகம்

பாபா ராம்தேவ் – பதஞ்சலி வெற்றியின் இரகசியம் என்ன ?

5

ந்த நபர் மேடைகளில் காட்டும் சேட்டைகளும், யோகா எனும் பெயரில் நடத்தும் ‘ஸ்டேண்டப் காமெடிகளும்’, நிகழ்ச்சிக்கு இடையிடையே சொல்லும் மலிவான நகைச்சுவைத் துணுக்குகளும் தென்நாட்டில் – குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு – வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இந்தி பேசும் வட மாநிலங்களில் அவர் கடவுளுக்கு நிகரானவர். சிக்கலான ஆன்மீக தத்துவங்களைச் சொல்லிக் குழப்பாமல் வெறுமனே சில எளிமையான ஜிம்னாஸ்டிக் வித்தைகளின் மூலம் சிறப்பாக கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார். வடக்கே கோடிக்கணக்கானவர்கள் – சகல வர்க்கப் பின்புலத்தைச் சார்ந்தவர்களையும் உள்ளிட்டு – அவருக்கு பக்தர்களாக இருக்கின்றனர். யோகாவைக் கடந்த மாபெரும் தொழில் சாம்ராஜ்ஜியம் ஒன்றின் அதிபதியான அவரின் பெயர், பாபா ராம்தேவ்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இந்தி பேசும் வட மாநிலங்களில் பாபா ராம்தேவ் கடவுளுக்கு நிகரானவர்.

பாபா ராம்தேவையும் அவரைப் பின்தொடரும் இந்தி பேசும் வடமாநில நடுத்தரவர்க்க பக்தர் கூட்டத்தையும், பாபா ராம்தேவின் தொழில் சாம்ராஜ்ஜியத்தின் சமீபத்திய அசுர வளர்ச்சியையும், பாரதிய ஜனதாவையும் அதன் தேர்தல் வெற்றிகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. ராம்தேவின் பதஞ்சலி 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெல்லும் குதிரையாக பாரதிய ஜனதாவைக் கணித்து அப்போதே அந்தக் கட்சிக்கு கனமாக தேர்தல் நன்கொடை வழங்கியதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமீபத்தில் பெறப்பட்ட விவரங்கள் உணர்த்துகின்றன.

பதஞ்சலி நிறுவனத்தின் மூலம் இன்றைய தேதியில் ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டுகிறார் ராம்தேவ். யோகாவின் மூலம் ஈட்டும் வருமானத்தின் கணக்கு தனி.  2011 – 2012 காலகட்டத்தில் லோக்பால் மசோதாவைக் கோரி அன்னா ஹசாரே களமாடிக் கொண்டிருந்த போது காங்கிரசின் ஊழல்களால் அதிருப்தியுற்று நாடெங்கும் திரண்ட மக்களின் கவனத்தைத் தம் பக்கம் திருப்புவதற்காக இந்துத்துவ முகாம் சார்பில் ராம்தேவ் களமிறக்கப்படுகிறார்.

ஜன்லோக்பால் கோரிக்கை மற்றும் ஊழலின் மீதான அதிருப்தியை மோடியின் வெற்றியாக மடை மாற்றிய பிறகு மிக குறுகிய காலத்தில் ராம்தேவின் தொழில் சாம்ராஜ்ஜியம் பல மடங்காக விரிவடைந்துள்ளது. மிக குறுகிய காலத்தில் ராம்தேவின் தொழில் கூட்டாளி பாலகிருஷ்ணா இந்தியாவின் 100 பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். இன்றைய தேதியில் பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பே 16,000 கோடிகள் என்றால், ராம்தேவின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

பற்பசையில் இருந்து அழகு சாதனப் பொருள் வரை சுமார் 445 பொருட்களை சந்தையின் விற்கும் பதஞ்சலியின் தொழில் வெற்றி என்பது பாரதிய ஜனதாவின் தேர்தல் அரசியல் வெற்றியோடும் பாரதிய ஜனதாவுடன் பாபா ராம்தேவுக்கு உள்ள உறவோடும் தொடர்புடையது. மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் அமைந்துள்ள பாரதிய அரசாங்கங்கள் பதஞ்சலிக்கு வாரி வழங்கியுள்ள சலுகைகளின் பட்டியல் மிக நீண்டது.

மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, “யோகாவை வளர்ப்பது” என்கிற முகாந்திரத்தில் அந்தமான் அருகே ஒரு தீவையே ராம்தேவுக்குப் பரிசளித்துள்ளார். கடந்த ஆண்டும் ஆகஸ்டில் இருந்து மத்திய பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறை (DRDO) பதஞ்சலியின் ‘மூலிகை’ பொருட்களை விற்பதற்கு அந்நிறுவனத்துடன் கூட்டு வைத்துக் கொள்வது குறித்து அறிவித்துள்ளது.

பல்லாயிரம் கோடிகளை கொட்டி டி.ஆர்.டி.ஓவால் உள்நாட்டிலேயே தயாரிக்கப் படுவதாக சொல்லப்படும் இலகு ரக போர் விமான இஞ்சினான காவேரி, டி.ஆர்.டி.ஓவின் பெங்களூரு மையத்தில் தூசு படிந்து கிடக்கின்றது. இந்நிலையில் பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தில் நடந்த தனது சொந்த  ஆராய்ச்சியை பரணில் போட்டு விட்டு ராம்தேவின் பதஞ்சலி ஊறுகாயை விற்பதற்கு முண்டியடிக்கிறது டி.ஆர்.டி.ஓ. இத்தனைக்கும் இராணுவ உணவு விடுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த பதஞ்சலியின் நெல்லிச்சாறு குடிப்பதற்கு ஒவ்வாதது என்பதைக் கண்டறிந்து அதன் விற்பனை சமீபத்தில் தான் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் மத்திய பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் ஜுவல் ஓரம், தமது அமைச்சகம் ராம்தேவுடன் இணைந்து ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அறிவித்துள்ளார். இதில் கொடுமை என்னவென்றால், பதஞ்சலி சந்தைப்படுத்தி வரும் பல்வேறு உணவுப் பொருட்கள் மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு மையத்தின் (FSSAI) சான்று பெறவே இல்லை. மட்டுமின்றி, பதஞ்சலியின் பல்வேறு உணவுப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

உதாரணமாக, எம்.பி எக்ஸிம் என்கிற வேறு ஒரு நிறுவனத்திடம் இருந்து தேனைக் கொள்முதல் செய்யும் பதஞ்சலி, அதன் மேல் தனது வணிக முத்திரையை ஒட்டி சந்தைப்படுத்துகின்றது. தேன் மட்டுமின்றி, பதஞ்சலி சந்தைப்படுத்தும் பல பொருட்களும் இவ்வாறே விற்கப்படுகின்றன. எம்.பி எக்ஸிம் உற்பத்தி செய்யும் தேனில் சர்க்கரை அல்லது சாக்ரினுடன் எதிர்உயிரிகளும் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பதஞ்சலியின் பொருகளுக்கு வட இந்தியாவில் சந்தை மதிப்பு அதிகம் என்பதைக் கணக்கில் கொண்டு வேறு ஒரு சில்லறைத்தனத்திலும் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. பதஞ்சலியின் பொருட்களுடைய முகப்பில் அந்தப் பொருளின் சேர்வையுறுப்புகள் (ingredients) எழுதப்பட்டிருக்கும். இதில், மூலிகைகளின் பெயர்கள் இந்தியிலும், வேதிப் பொருட்களின் பெயர்கள் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன. “முழுமையான ஆயுர்வேத தயாரிப்பு” என விளம்பரப்படுத்தி விற்கப்படும் பதஞ்சலியின் வேதிப் பொருட்களில் சில ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவையாகும்.

பதஞ்சலி பொருட்களின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையிலேயே மத்திய பிரதேச பாரதிய ஜனதா அரசு தமது மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அவற்றை விற்பதாக அறிவித்துள்ளது. இத்தனைக்கும் மத்திய பிரதேச மாநிலத்தின் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களே கூட கிடைப்பதில்லை. அம்மாநில விவசாயத் துறை அமைச்சர் கௌரிசங்கர் பிசென் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்பட வேண்டிய கோதுமையில் 90% சட்டவிரோதமான கள்ளச்சந்தைக்கு திருப்பி விடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2017 பிப்ரவரி மாதம் மத்திய வருமான வரித் தீர்ப்பாயம் (ITAT) பதஞ்சலி யோக பீடத்திற்கு  வருமான வரிவிலக்கு சலுகையும் அறிவித்துள்ளது. மேலும் பதஞ்சலி யோகபீடத்திற்கு வரும் நன்கொடைகளுக்கும் வருமான வரிவிலக்கு அறிவித்துள்ளது.

புதிய சுதேசி ரக கோதுமை மற்றும் மிளகாய் விதைகளை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளார் பாபா ராம்தேவ்.

இதற்கிடையே உத்திராகண்ட் மாநிலத்தில் ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை அமைத்துள்ள பதஞ்சலி, அதற்கென ஏக்கர் கணக்கில் நிலத்தையும் பெற்றுள்ளது. தற்போது சுமார் பத்தாயிரம் கோடி வருவாய் ஈட்டும் தனது நிறுவனத்தின் எதிர்கால வணிக இலக்காக ஆயுர்வேதத்துடன் விவசாயப் பொருட்களையும் இணைத்துள்ளது பதஞ்சலி. இதற்கான ஆராய்ச்சிகளை உத்திராகண்டில் அமைந்துள்ள ஆராய்ச்சி மையத்தில் மேற்கொண்டு வருகின்றது. மோடியால் கடந்த மே 4-ம் தேதி திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி மையத்தில் புதிய சுதேசி ரக கோதுமை மற்றும் மிளகாய் விதைகளை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளார் பாபா ராம்தேவ்.

மேலும், மாட்டின் கழிவில் இருந்து பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் ஆராய்ச்சியும் இந்த மையத்தில் நடந்து வருகின்றது. பினாயிலுக்கு மாற்றாக மாட்டு மூத்திரத்தில் இருந்து (கோனாயில் என்கிற வணிகப் பெயரில்) தரையைச் சுத்தமாக்கும் திரவம் உள்ளிட்டு பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் திட்டத்திற்காக மாதம் ஐயாயிரம் லிட்டர் மாட்டு மூத்திரத்தை உத்திராகண்ட் மாநில அரசிடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.

கோனாயில் வணிக ரீதியில் வெற்றி பெறுமா பெறாதா (அல்லது அது உண்மையிலேயே இயற்கையானதா இல்லையா) என்கிற வாதம் ஒருபுறம் இருக்க, வடமாநிலங்களில் இந்துமதவெறி குண்டர்கள் முன்னெடுத்து வரும் ‘கோமாதா’ அரசியலுக்கு ஒரு பொருளியல் அடிப்படையை உண்டாக்கித் தருகின்றது பாபா ராம்தேவின் பிராடு ஆராய்ச்சிகள். பதஞ்சலி ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் ஆய்வுகளின் விளைவாக நாட்டுப் பசுக்கள் அபிவிருத்தி அடைவதுடன், பால் பொருட்களின் மூலம் நெஸ்லே போன்ற விதேசி நிறுவனங்கள் லாபமடைவதைத் தடுப்பதே தனது நோக்கம் என்கிறார் பாபா ராம்தேவ். பன்னாட்டு நிறுவனங்களை இப்படி கேலி பேசுவதால் பெரிய பிரச்சினை இல்லை. இல்லையென்றால் அமெரிக்க அடிமைகளான சங்க வானரக் கூட்டத்தை பகவான் டொனால்ட் டிரம்ப் உண்டு இல்லை என்று பிய்த்து விடுவார்.

பா.ஜ.க. வின் வெற்றியையும் பதஞ்சலியின் வெற்றியையும் பிரித்து பார்க்கமுடியாது

இந்துத்துவ அரசியலின் அக்கம் பக்கமாகவே ஆயுர்வேதத்தையும் தனது பிற தொழில் நடவடிக்கைகளையும் சந்தைப்படுத்துகிறார் பாபா ராம்தேவ். பதஞ்சலி சந்தைப்படுத்தும் பொருட்களை கேள்வி கேட்பவர்களையும், அவற்றை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்பவர்களையும், அந்தப் பொருட்கள் கறாரான தரக்கட்டுப்பாட்டு முறைமைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்பவர்களையும் “இந்து வாழ்க்கை முறைக்கு” எதிரானவர்களாக சித்தரிக்கிறார் பாபா ராம்தேவ். அதாவது, அதிதீவிர இந்து தேசிய வெறியை அப்படியே வணிகமாக்குவதே இந்த உத்தி.

பசுப் பாதுகாப்பு, லவ் ஜிஹாத், ராமர் கோவில், இசுலாமிய வெறுப்பு என நேரடியாக இந்துத்துவ அரசியலை திணிக்கும் அதே நேரம், ஒவ்வொரு மாநிலத்தின் பிரத்யேக சாதிய சமன்பாட்டை தமக்குச் சாதகமாகத் திருப்புவது, மதச்சார்பற்ற, பல்தேசிய இந்தியா என்கிற கருத்தாக்கத்தின் இடத்தில் பார்ப்பன இந்து மத உணர்வையும் கலாச்சாரத்தையும் மாற்றீடு செய்வது உள்ளிட்ட தந்திரங்களைக் கையாள்கிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். கலாச்சார ரீதியில் நடுத்தரவர்க்க இந்துப் பொதுபுத்தியை தமது அரசியலுக்காக தயார்ப்படுத்த ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்களை பயன்படுத்திக் கொள்கின்றது.

வனங்களை வெட்டிச் சூறையாடிய ஜக்கி வாசுதேவுக்கு விருது, ஸ்ரீஸ்ரீ ரவி சங்கரின் யமுனை ஒழிப்பு விழாவை பெரிய அளவு கண்டுகொள்ளாமல் இருப்பது, பாபா ராம்தேவின் தொழில்களுக்கு விதிகளைத் தளர்த்துவது மற்றும் அரசுத் துறைகளைக் கொண்டே உதவுவது என கைமாறு செய்கிறது பாரதிய ஜனதா அரசு. இணைய தளங்களில் பாபா ராம்தேவின் யோகாவையோ, அவரது பதஞ்சலி பொருட்களையோ விமர்சிப்பதை ஏறக்குறைய இந்து மத துவேஷத்திற்கு இணையாக வைத்து வாதிடுகின்றனர் இணைய ஆர்.எஸ்.எஸ் கூலி கும்பல்.

போராடும் விவசாயிகளை ஏறெடுத்தும் பார்க்கத் தயாராக இல்லாத பிரதமர், ஃபிராடு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆராய்ச்சி மையத்தைத் துவங்க ஹெலிகாப்டரில் பறக்கிறார். இதைவிட இவர்கள் மக்கள் விரோதிகள் என்பதை நிரூபிக்க வேறு சான்றுகள் தேவையா என்ன?

– சாக்கியன்

செய்தி ஆதாரம் :

அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து – நேர்காணல்

0

ருத்துவ உயர்கல்வியில் ஏற்கனவே வழங்கப்பட்டுவந்த 50% இடஒதுக்கீட்டை இரத்து செய்யக்கூடாது என தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் போராடி வருகின்றனர். சென்னை டி.எம்.எஸ் வளாகத்துக்குள் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. அவர்களுக்கு பல மருத்துவ சங்ககள், அரசு ஊழியர்களின் சங்கங்கள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். தற்போது இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது. எனினும் இந்தப் போராட்டம் முடிவதற்கு முன்பாக 04.05.2017 அன்று மாலை தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மண்டல ஒருங்கிணைப்பு செயலாளர் மருத்துவர் அகிலன் அவர்களைச் சந்தித்தோம். அவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் இது.

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மண்டல ஒருங்கிணைப்பு செயலாளர் மருத்துவர் திரு.அகிலன்

இந்த போராட்டத்தின் துவக்கத்தை பற்றி சொல்லுங்களேன்.

சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் மருத்துவ உயர்படிப்புகளில் மாநில அரசு ஏற்கனவே வழங்கிவந்த 50% இடஒதுக்கீட்டு முறைக்கு பதிலாக, மத்திய அரசின் அனைத்திந்திய கலந்தாய்வு முறையை பின் பற்றபட வேண்டும் என ஒரு தீர்ப்பு வெளியானது.அதனைத் தொடர்ந்து தான் எங்களுடைய போராட்டம் தொடங்கியது.

இந்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் தான் இனி மருத்துவ படிப்புகளுக்கு இடம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் அது கட்டாயமாக திணிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தமிழக அரசு மருத்துவ உயர் படிப்புகளில் பழைய முறையே தொடரும், என்று அறிவித்ததன் அடிப்படையில் தான் மருத்துவர்கள் தேர்வெழுதிவிட்டு உயர்படிப்புக்கான கலந்தாய்வுக்காக காத்திருந்தோம்.

இந்த நிலையில் தற்போது உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை காரணம்காட்டி 50% இடஒதுக்கீடானது இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பழைய முறையே பின்பற்ற வேண்டும் எனக் கோரி போராடிவருகிறோம். வரும் 7-ம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வு நடைபெற வேண்டும் ஆனால் இது வரை எங்கள் கோரிக்கைக்கு முறையான பதில் இல்லை.

இந்த 50% இடஒதுக்கீடு முறை ஏன் கொண்டுவரப்பட்டது ?

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்த முறை கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்புவரை அரசு ஆரம்ப சுகாதாரங்களில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் இருந்தனர். இன்னும் சொல்லப் போனால் கிராமப்புறங்களில் முறையான மருத்துவர்களே இல்லாமல் இருந்தனர்.

அப்போது பரவலாக மருத்துவ இளங்கலை படித்தவர்கள் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்துக் கொண்டே மருத்துவ உயர்படிப்புக்கு தன்னை தயார் செய்து கொள்வது; அதன் பின் மருத்துவ உயர் படிப்பு முடித்து தனியார் மருத்துவமனைகளில் வேலைக்கு சேருவது என்ற போக்கு தான் இருந்தது. இதனால் கிராமப் பகுதிகளில் சிறப்பு மருத்துவம் மட்டுமல்ல பொது மருத்துவமே கூட கிடைக்காத நிலை உருவானது. இதனை சரி செய்வதற்காகத் தான் இந்த 50% இடஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட்டது. அதிலும் தொலைதூரப் பிரதேசங்கள் பழங்குடிமக்கள் பகுதியில் வேலை செய்தவர்களுக்கு அவர்களின் அனுபவத்தை பொருத்து அதிகபட்சமாக் 10 மதிப்பெண்கள் வரை சிறப்பு மதிப்பெண்ணாக வழங்கப்பட்டது. இதன் மூலம் கணிசமான அளவு மருத்துவம் படித்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் வேலைக்கு சேர ஆரம்பித்தனர்.

தமிழ்நாட்டில் தற்போது எத்தனை அரசு மருத்துவர்கள் உள்ளனர்?

ஒன்பது கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் சுமார் 1800 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 50 ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகள், 330 அரசு மருத்துவமனைகள், 19 மருத்துவ கல்லூரிகள் உள்ளன இதில் சுமார் 16,000 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பாதி பேர் கிராமப்புறங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகைக்கேற்றவகையில் போதுமானதாக உள்ளதா?

மருத்துவர்கள் போதுமான அளவில் கிடையாது தான். பல மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளது. எனக்குத் தெரிந்தே பரமக்குடியில் அரசு மருத்துவ மனையில் ஒரே ஒரு மகப்பேறு மருத்துவர் மட்டுமே உள்ளார். குறைந்தபட்சம் 4-பேர் செய்ய வேண்டிய வேலையை ஒருவர் மட்டுமே செய்து கொண்டு இருக்கிறார். இவ்வாறான நிலை ஒரு புறம் இருந்தாலும் பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது சற்று பரவாயில்லை என்ற நிலையே தமிழகத்தில் உள்ளது. தொடர்ந்து சிறப்பு மருத்துவர்களின் பற்றக்குறையும் உள்ளது.

தமிழகத்தில் எத்தனை முதுகலை மருத்துவ இடங்கள் உள்ளன ? அவற்றில் எத்தனை இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு தரப்படுகின்றது ?

தமிழகத்தில் சுமார் 1500 முதுகலை மருத்துவ இடங்கள் உள்ளன. அதில் 50% மத்திய அரசின் அனைத்திந்திய கலந்தாய்வுக்கு கொடுக்க வேண்டும். மீதம் உள்ள 750 இடங்களில்தான் தமிழக அரசு 50% இட ஒதுக்கீடும் அதிகபட்சமாக 10 மதிப்பெண்கள் சிறப்பு மதிப்பெண்களாகவும் வழங்கப்படுகின்றன. இது தவிர தனியார் பல்கலைக் கழகங்களிலும் மருத்துவ முதுகலைப் படிப்புகள் உள்ளன. மொத்தத்தில் 2 முதல் 3 சதவீதம் வரையிலான அரசு மருத்துவர்கள் தான் மேற்படிப்பை நோக்கி செல்ல முடிகிறது.

தனியார் பல்கலைக் கழகங்களில் முதுகலை இடங்களில் இடஒதுக்கீடு உண்டா? அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காத பட்சத்தில் தனியார் கல்லூரிகளில் ஏன் சேருவதில்லை ?

உங்களுக்கே தெரிந்திருக்கும், தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணத் தொகையானது கோடிகளில் உள்ளது. அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர்கள் பெரும்பாலும் அவ்வளவு பணம் படைத்தவர்களாக இல்லை. அதே போல பல கோடி செலவு செய்து தனியார் கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் யாரும் கிராமப்புறங்களுக்குச் சென்று சேவையாற்றப் போவது கிடையாது. சமீபத்தில் கூட மருத்துவ படிப்புகளில் தனியார் கல்வி நிறுவனங்களில் 50% இடங்கள் அரசுக்கு ஒதுக்கப் பட வேண்டும். அவற்றை முறையாக தமிழக கோரிப் பெறாததை கண்டித்து அரசுக்கு 1 கோடி ரூபாய் அபரதம் விதித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஆனாலும் அரசு மூலம் இடங்கள் நிரப்பப்பட்டாலும் தனியாரின் கல்விக்கட்டணத்தை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளும் நடைமுறை தான் உள்ளது.

அரசு மருத்துவர்களுக்கு ஏன் இந்த 50% இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும்? அவர்களும் நேரடிப் போட்டி மூலம் படிக்கலாமே?

அரசு மருத்துவர்களைப் பொருத்தவரை ஏழை மற்றும் கிராமப்புற மக்களுக்கு நேரடியாக தங்களது சேவையை வழங்கி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் 200 முதல் 300 நோயாளிககளை பார்க்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் பணிச்சுமையும் கடுமையான அளவில் உள்ளது.

இவற்றையெல்லாம் தாண்டி தான் நாங்கள் படிக்கிறோம் அந்த அடிப்படையில் தான் இந்த 50% இடஒதுக்கீடு தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இவ்வாறு அரசாங்கம் ஊக்குவித்ததால் தான் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகமானது இந்திய அளவில் அனைத்து சுகாதரக் குறியீட்டில் முன்னணியில் உள்ளது. மக்களுக்கு செய்யும் சேவைக்கு எங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு கைமாறாகத்தான் இதனை பார்கிறோம். மேலும் நாங்கள் பணி ஓய்வு பெரும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவோம் என்ற உத்திரவாத்தின் படி தான் இடஒதுக்கீட்டை பயன்படுத்துகிறோம்.

நீங்கள் உங்கள் சேவைக்கான வெகுமதியாக இடஒதுக்கீட்டை பார்த்தாலும், இடஒதுக்கீடுகளால் தான் மருத்துவர்களின் தரமும், மருத்துவத்தின் தரமும் குறைந்துவிடுகிறது என ‘உயர்சாதியினர்’ மற்றும் அவர்களை ஆதரிக்கும் ஊடகங்கள் கூறுவது குறித்து என்ன சொல்கிறீர்கள்?

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரசு மருத்துவமனைகளில் அதிக அளவு பல்வேறு நுட்பமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் புகழ் பெற்றது நமது சென்னை மருத்துவ கல்லூரி. இது போன்ற அரசுக் கல்லூரிகளில் பயின்ற அரசு மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளனர். ஆக இட ஒதுக்கீட்டால் தரம் குறையும் என்பதை ஏற்கமுடியாது.

உங்கள் போராட்டம் உங்களுக்கான நலன் மட்டும்தானே?

எங்களுடைய போராட்டமானது மருத்துவர்களின் கோரிக்கை என்பதைத் தாண்டி இது மக்களின் பிரச்சினை. தமிழகத்தில் பிற மாநிலங்களைக் காட்டிலும் ஓரளவு மருத்துவத்தில் முன்னேறிய நிலையில் இருந்தாலும். இன்றளவும் அனைத்து கிராமங்களுக்கும் அரசின் மருத்துவ சேவை முழுமையாக சென்றடையவில்லை.

நகர்புறங்களிலும் ஏழை மக்கள் அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு இரத்து செய்தால் அரசு மருத்துவமனைகளுக்குப் போதிய சிறப்பு மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்படும். கிராமப்புற சேவைகள் இல்லாமல் போகும். அரசு மருத்துவமனைகளில் சேரும் மருத்துவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையலாம். இதனால் சாதாரண மக்களுக்கு நேரடியான பாதிப்பு இருக்கும். ஆக இவற்றை கருத்தில் கொண்டுதான் நாங்களும் போராடி வருகிறோம்.

எங்களின் கோரிக்கை முந்தைய ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறைகளை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்பதே ஆகும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களின் போராட்டம் தொடரும்.

உங்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை பாதிப்படையாதா?

நாங்கள் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள். இங்கு போராடிக் கொண்டிருந்தாலும் அவசர சிகிச்சைகள் தடைபடாத வகையில் சில மருத்துவர்களை வேலைக்கு என ஒதுக்கிவிட்டுத் தான் போராடுகிறோம்.

அதே போல தமிழகம் முழுக்கவும் கூட போராடும் மருத்துவர்கள் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பு, இரண்டு மணி நேர வேலைப் புறக்கணிப்பு போன்று தான் போராடி வருகிறோம். எங்களை போராடுமாறு இந்த அரசு தான் தள்ளியுள்ளது. அரசை கேட்பதை விட்டு எங்கள் போராட்டத்தால் மக்கள் பாதிப்படைகிறார்கள் எனக் கூறுவது தவறானது ஆகும்.

உங்கள் போராட்டத்தை அடுத்தகட்டமாக எப்படி எடுத்துச் செல்வீர்கள்?

அனைத்து மருத்துவ சங்கங்களையும் இணைத்து போராட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம். மேலும் கிராமப்புற சேவைகளுக்கு கல்லறை கட்டப்பட்டுவிட்டதை குறிக்கும் கல்லறை கட்டுதல், கடவுளுக்கு மனு அளித்தல். போன்ற பல்வேறு நூதன முறைகளோடு மக்களிடம் எங்கள் கோரிக்கையின் நியாயத்தை விளக்கும் வகையில் நேரடியாகப் பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக கிராமப்புற மக்களைப் போராட்டத்தில் பங்கு பெறச் செய்ய முயன்று வருகிறோம். இவற்றை எங்கள் சங்க உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும்.

வ்வாறு தங்களின் போராட்டத்தை அடுத்த கட்டமாக, பெரும்பான்மை மக்களிடம் பரவலாக எடுத்துச் செல்ல மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்த நேரத்தில் அவர்களின் போராட்டத்தின் நியாயத்தை ஊடகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டடிப்பு செய்ய ஆரம்பித்தன. மருத்துவர்கள் போரட்டத்தால் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் பாதிப்பு என்பது போன்ற செய்திகளை அதிகம் வெளியிட ஆரம்பித்தனர். நீதி மன்றமும் உடனடியாக தமிழக அரசு மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் என உத்தரவிட்டு தன்னை உத்தமன் போல காட்டிக் கொண்டது. அதே நேரத்தில் தமிழக அரசின் பேச்சுவார்த்தைக்கு மருத்துவர்கள் பணியாவிட்டால், ஜெயலலிதா ஒரே ஆணையில் ஒரு லட்சக் கணக்கான அரசு ஊழியர்களை தூக்கியடித்ததைப் போல இவர்களையும் செய்யலாம் என தனது உண்மை முகத்தை காட்டிவிட்டது. இவ்வாறு கீழறுப்பு செய்து மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது நீதி மன்றம்.

இந்த அரசையோ, நீதிமன்றத்தையோ நம்பிப்பயன் இல்லை என்பதை அரசு மருத்துவர்களின் போராட்டமும் நிரூபித்துள்ளது. நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் எவ்வாறு அவமதிக்கப்பட்டனர் என்பதை சமீபத்தில் பார்த்தோம். எனவே மருத்துவர்கள் மற்ற பிரிவு தமிழக மக்களோடு இணைந்து இந்தப் போராட்டத்தை இன்னும் வீச்சாக நடத்தினால்தான் மோடி அரசையும், மோடி அரசுக்கு கொடி பிடிக்கும் எடப்பாடி அரசையும் பணிய வைக்க முடியும்.

-வினவு செய்தியாளர்

திருப்பூரில் மது ஒழிந்தது – தர்மபுரியில் குடிநீர் வந்தது

0

திருப்பூர் ராதா நகர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகாலமாக 21-வது வார்டில் டாஸ்மாக் கடை (எண் : 1937) ஊரின் முக்கிய தெருவில் அமைந்துள்ளது. மக்கள் குறிப்பாக பெண்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த பிரச்சினை மக்களிடையே நீறு பூத்த நெருப்பாக உள்ளது.

அந்த பகுதியில் வசிக்கும் குமார் என்பவர் மக்கள் அதிகாரத்தை தொடர்பு கொண்டார். அதனடிப்படையில் 07.05.2017 அன்று அப்பகுதி மக்கள் மத்தியில் டாஸ்மாக்கை மூடும் மக்கள் எழுச்சி பரவட்டும்! என்ற முழக்க பிரசுரத்தை வீடு வீடாக வினியோகித்து தோழர்கள் மக்கள் உதவியோடு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அதன் பின்னர் மக்கள் அனைவரையும் வீதி வீதியாகச் சென்று அழைப்பு விடுத்து, அணிதிரட்டி டாஸ்மாக் கடை முற்றுகையிடப்பட்டது. கடைக்கு முன்பாக மக்கள் சென்ற போது காலை 12:00 மணிக்கு முன்பாகவே மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதை கண்டு அந்த மது பாட்டில்களை உடைத்தெறிந்தனர். மக்கள் அதிகாரத்தின் முழக்கங்களை தங்கள் முழக்கமாக மாற்றி போர்க்குணத்தோடு போராட்டத்தினை தொடர்ந்தனர்.

சுட்டெரிக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாது கைக்குழந்தைகளுடன் பெண்கள் சாலையில் 4-மணி நேரத்திற்கும் மேலாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். கடையை இன்றே மூடினால் தான் கலைந்து செல்வோம் என உறுதியாக அறிவித்தனர். மாவட்ட ஆட்சியர் இங்கு வரவேண்டும் என்று மக்கள் முழக்கங்கள் எழுப்ப ஆரம்பித்தனர். அதனைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ பதறியடித்து மக்களைச் சந்திக்க வந்தார். அவர் 15 நாட்களில் கடை அகற்றப்படும் என பேச்சுவார்த்தையில் அறிவித்தார்.

ஆனால் இதனை மக்கள் நம்பத் தயாராக இல்லை. இன்றே கடையை மூடி சீல் வைக்கச் சொல்லி பேச ஆரம்பித்தனர். இந்த நிலையில் போலீசு மக்கள் அதிகாரம் தோழர்களைக் குறிவைத்து அவர்களை மக்களிடம் இருந்து பிரிக்கப் பார்த்தது. ஆனால் அதனை மக்களே முறியடித்தனர். ஒரு பக்கம் பேச்சுவார்த்தை என்று சொல்லிக் கொண்டே மக்களை கலைப்பதற்காக அதிரடிப்படை, வஜ்ரா வாகனம், பிளாஸ்டிக் லத்திகள், கவசங்கள், கேமரா வாகனம் என அனைத்தையும் கொண்டு வந்து இறக்கியது போலீசார்.

பின்னர் டி.எஸ்.பி கடை கட்டாயம் மூடப்படும் நீங்கள் கலைந்து செல்லுங்கள் என அறிவித்தார். மக்கள் ஆர்.டி.ஓ –வை சொல்லச் சொல்லி முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து கடை ஆர்.டி.ஓ-வால் சீல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் மக்கள் வெற்றி ஆரவாரத்தோடு முழக்கமிட்டனர்.

சில மணி நேரங்களில் மக்கள் தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டி இந்த அரசின் அதிகாரத்தை செல்லாக் காசாக்கினர். அது மட்டுமல்ல போராட்டத்தில் பெண்கள் தங்கள் போர்க்குணத்தால் எதையும் சாதிக்க முடியும் என உணர்ந்துள்ளனர். போராட்டத்தின் போது ஒரு பெண்ணின் கணவர் அதிகார தோரணையில் வீட்டுக்கு அழைத்தார். ஆனால் அப்பெண் விடாமல் போராட்டத்தில் மீண்டும் வந்து கலந்து கொண்டு கடையை சீல் வைத்த பின்னர் தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருப்பூர் – 97885 58526


ருமபுரி மாவட்டம், பென்னாகரம் நகரத்தை ஒட்டியவாறு உள்ள பகுதி அண்ணாநகர், இங்கு வசிக்கும் கல் உடைக்கும் தொழிலாளிகள் சுமார் 30 குடும்பங்கள் உள்ளன. மக்கள் கடும் வறட்சியின் காரணமாக குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வந்தனர். கடந்த ஓராண்டாக குடி தண்ணீர் கிடைக்காமல் தெருவிட்டு தெரு செல்வது,  ஊர் விட்டு ஊர்செல்வது, இரண்டு கிலோ மீட்டர் மேல் சென்றால் தான் உப்பு தண்ணீர் கிடைக்கும். குடிநீர் என்றால் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும். அப்போதும் கூட இரண்டு  குடம் தண்ணீர் பிடிக்கவே போட்டி போட வேண்டும்.

இந்த நிலையை கண்டு கொதித்து போன மக்கள், அரசு நமக்கு குடிநீரை கூட தீர்த்துக்கொடுக்காது என்று தங்கள் சொந்த அனுபவத்தில் புரிந்துக்கொண்டு, இனி போராடமல் தண்ணீர் பெற முடியாது என்று மக்கள் அதிகாரம் அமைப்பை நாடினர். குடிநீர் பிரச்சனையை தீர்த்து கொடுங்கள் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்க்கு பலமுறை மனுகொடுத்து பாத்துள்ளனர் அண்ணாநகர் மக்கள். இருந்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அரசோ செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இருக்கிறதே தவிர தண்ணீர் பிரச்சனையை தீர்த்த பாடில்லை.

வேறு வழியில்லாமல் கடந்த 5 -ம் தேதி பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலி குடங்கள் உடன் வந்து பெண்கள் மக்கள் அதிகாரம் தலைமையில் முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த அரசு அதிகாரிகள், போலீசாரும் சாமதனாம் செய்து, போராடிய பெண்களை அனுப்பி வைத்தனர். தலைமை தாங்கிய பெண் தோழர்களிடத்தில் உத்திரவாதம் கொடுத்தனர். உத்திரவாதம் கொடுத்து மூன்று நாட்கள் கடந்தும் குடிநீரை வழங்காமல் உதாசீனம் செய்து வந்தனர் அதிகாரிகள்.

தட்டினால் அரசு கதவு திறக்காது நாம் தான் திறக்க வைக்க வேண்டும் என்று மக்களிடம் பிரச்சாரத்தை செய்தது மக்கள் அதிகாரம். அடுத்த கட்டமாக மீண்டும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி 08.05.2017 திங்கள் அன்று பெண்கள் குழந்தைகள் அனைவரும் காலி குடங்களுடன் சென்று அலுவலத்தை முற்றுக்கையிட்டு முழக்கமிட்டனர். அரை மணி நேரத்திற்கு மேலாக எந்த அதிகாரிகளும் போராடும் மக்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை. உடனே மக்கள் அதிகாரம் தோழர்கள் நாம் முழக்கமிடுவது அதிகாரிகளுக்கு கேட்கவில்லை, அதனால் அதிகாரியின் காதில் போய் முழக்கமிடுவோம் என்று வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உள்ளே சென்று முழக்கமிட்டனர்.

சில ஊழியர்கள் இது என்ன முறை வெளியே போய் செய்யுங்க இது ஆபிஸ் என்றனர். பி.டி.ஓ- வை வர சொல்லுங்க இல்லையின்னா? தண்ணீர் கொடுங்க என்று பேசியவுடன் ஒதுங்கி கொண்டனர். அலுவலகத்திற்குள்ளும் முழக்கமிட்டு கொண்டே இருந்தும், எந்த அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்த முன்வரவில்லை. அப்போது மக்கள் அதிகாரம் தோழர்கள் அலுவலகத்திற்குள்ளே பேரணி சென்று அலுவலகத்தின் மைய பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனை கண்டு அருகில் இருந்த நூற்றுக்கானக்கான மக்கள் அலுவலகத்திற்கு வந்து என்ன நடக்கும் என்று கவனித்து கொண்டிருந்தனர். இறுதியாக அவசர அவசரமாக வந்தார், பெண் வட்டார வளர்ச்சி அலுவலர்.

போராட்டத்தின் தீவிரத்தை கண்டு உங்கள் பிரச்சனை உடனே தீர்க்கப்படும் வாருங்கள் என்று அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். மக்களும் தமது பிரச்சினையான குடிநீர் கிடைக்காததை விளக்கினர். அதன் பிறகு அதிகாரிகள் உடனே குடிநீர் ஏற்பாடு செய்வதற்கான ஆயத்தப் பணிகளை செய்தனர்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்  தண்ணீர் கேட்டு அதிகாரியிடம் மனுகொடுத்து கேட்கலாம் ஆனால் இப்படி எல்லாம் போராட கூடாது இது ரவுடித்தனம் என்றார். இதற்கு மக்கள் அதிகாரம் தோழர் ஒருவர் ‘சுதந்திரம்’ கிடைத்து 70 ஆண்டுக்கு மேலாகிவிட்டது, குடிநீர் கூட கொடுக்க முடியவில்லை இதற்கு பெயர் என்ன என்றார். தண்ணீர் கேட்டு போராடினால் ரவுடித்தனம், தண்ணீர் பிரச்சனையை கூட தீர்க்க முடியாத அதிகாரிகளும், அரசும் செய்வற்கு பெயர் என்ன? என்றவுடன், பேசுவதை நிறுத்திக்கொண்டார், அந்த அதிகாரி. அரசு கதவை தட்டுவதை விட்டு உடைப்பதுதான் பிரச்சனை தீர்க்கும் என்பதை மக்கள் உணர்ந்துக்கொண்டனர். நாம் வீதிக்கு வந்தால் தான் விடிவு பிறக்கும் என்பதை உணர்ந்து போராடுவதே ஒரே வழி.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம், தொடர்புக்கு – 81485 73417


டாஸ்மாக்கை மூடும் மக்கள் எழுச்சி பரவட்டும் !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
ஓலையூர் கிளை. 96591 94257

மதுரை டாஸ்மாக் கடைகளை மூடிய பெண்கள் போராட்டம் !

0

திருமங்கலம் அருகில் கண்டுகுளம் கிராமத்திற்குள் புதியதாக டாஸ்மாக் கடை திறக்க 7.5.2017- ல் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்குள்ள சில பெண்கள் முன்முயற்சி எடுத்து எங்கள் ஊருக்குள் டாஸ்மாக் கடை வரக்கூடாது, மீறி திறந்தால் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். என எழுதி சம்மந்தப்பட்ட எல்லா அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தார்கள். அந்த மனுவிற்கு அதிகாரிகள் மயிரளவும் மரியாதை கொடுக்கவில்லை.

இன்று கடை திறக்கப் போவதாக தகவலறிந்து அப்பகுதி பெண்கள், மக்கள் அதிகார தோழர் பரமனின் வீட்டைத் தேடி வந்து எங்கள் போராட்டத்திற்கு உதவுங்கள் எனக் கேட்டனர். கட்டாயம்  உதவுவோம், இன்று மாலை மக்களைக் கூட்டிவையுங்கள், நாங்கள் வந்து பேசுகிறோம், என்று கூறி அனுப்பி வைத்தோம். கூறியபடி மாலை 6 மணிக்கே அவர்கள் ஆட்களைக் கூட்டி வைத்துள்ளோம், வாருங்கள் என்று நமக்கு போன் செய்தார்கள், அங்கு ஒரு தெருமுனைக்கூட்டமாகவே நடத்தி, காலையில் அனைவரும் 9:00 மணிக்கு திரண்டு கடை திறக்கவிடாமல் மறிப்போம் என முடிவெடுத்தோம்.

அதன்படி 7.5.2017 காலை 9:00 மணிக்கு மக்கள் தாங்களாகவே ஒன்றுதிரண்டு வீதி வீதியாக சென்று 150 பெண்கள் 50 இளைஞர்கள், பெரியவர்கள் என திரண்டு திறக்கவிருக்கும் கடையை முற்றுகையிட்டார்கள். டாஸ்மாக்குக்கு இடம் கொடுத்தவர்களையும் பெண்கள் சரமாரியாக திட்டித்தீர்த்தார்கள். தகவலறிந்து வந்த 50-க்கும் மேற்பட்ட போலீசும், வி.ஏ.ஓ-வும் மக்களை சமாதானப்படுத்தி அனுப்ப முயற்சித்தார்கள். அந்த வீட்டுக்காரரை எழுதித்தர சொல்லுகிறோம் என்று திசை திருப்பினார்கள். சம்மந்தப்பட்ட அதிகாரி வந்து கடையைத் திறக்க மாட்டோம் என எழுதித் தரச்சொல் என்று மக்கள் உறுதியாக நின்றவுடன் எழுதித் தராமல் காலதாமதப்படுத்தினார்கள்.

3-மணி நேரம் மறியல் செய்தும் உரிய அதிகாரி வராததால் சாலை மறியல் செய்வோம் என முடிவெடுத்து உசிலை – திருமங்கலம் மெயின்ரோட்டை மறித்து 1-மணி நேரம் உட்கார்ந்தார்கள். அதன் பிறகு தான் மக்களின் உறுதியான போராட்டத்தால் மிரண்டு போன தாசில்தார் இங்கு கடை திறக்க அனுமதி தரமாட்டோம் என எழுதிக் கொடுத்த பின்தான் போராட்டம் முடிவுற்றது. மக்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது மக்கள் அதிகார அமைப்பாளர்களின் உதவியால்தான் எங்களால் வெற்றிகரமாக போராட முடிந்தது என வெளிப்படையாகப் பேசினார்கள்.

ஒரு பெரியவர் கம்யூனிஸ்ட் கட்சி முன்னமாதிரி இப்ப இல்ல… என்று ஏங்கியிருந்தேன், உங்களைப் பார்த்த பின் மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி உதித்தெழுவதைக் காண முடிகிறது என்றார். பெண்கள் நமது தோழர்களுக்கு நன்றி கூறியதோடு கட்டாயம் சாப்பிட்டு விட்டு போகனும் என அழைத்தனர்.

இறுதியாக மக்கள் அதிகார மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி அவர்கள்,  கண்டுகுளம் கிராம மக்களுக்கும் மக்கள் அதிகார அமைப்பிற்கும் இடையே டாஸ்மாக் போராட்டத்தில் ஏற்பட்ட இந்த ஒற்றுமை குடிநீர், ரேஷன்கடை ஒழுங்குபடுத்துதல் என தொடர வேண்டும். இனி இந்த ஆளும் அருகதை இழந்த அரசிடம் கெஞ்சியது போதும், ஒன்றுபட்டு போராடுவோம். தொடர்ந்து வெற்றி பெறுவோம் என பேசிய போது பெண்கள் கைதட்டி குரலெழுப்பி வரவேற்றார்கள்.

சென்ற ஆண்டு 2016 மே மாதம் மக்கள் அதிகாரத் தோழர்கள் டாஸ்மாக் கடையை அடைக்க பெண்களைப் போராட்டத்திற்கு வாருங்கள் என வீடு வீடாக சென்று அழைத்துள்ளனர். ஆனால் இன்று 2017  மே மாதம் பெண்களே மக்கள் அதிகாரத் தோழர்களை வீடு தேடி வந்து போராட்டத்திற்கு உதவுங்கள் என அழைக்கிறார்கள். காலம் மாறிப்போனது. இது வேறு தமிழகம்! எழுச்சித் தமிழகம்!! ஆண்கள் உதவியின்றி பெண்களே போராட்டத்தை தலைமையேற்று நடத்தும் வலிமை பெற்ற, எழுச்சியின் தமிழகம்! என்பதைக் காணமுடிகிறது. குறிப்பாக இந்திரா காலனி மக்களும் மக்கள் அதிகாரத்தின் தோழர்களை அழைத்துக் கொண்டு சென்று போராடி கடையை அடைத்தார்கள். அடுத்து கல்லூத்து கிராமப்பெண்கள் 10பேர் நம் தோழர்களைத் தேடி வந்து அழைத்திருக்கிறார்கள்.

பரவட்டும் போராட்டம்! இணையட்டும் மக்களின் தனித்தனிப் போராட்டங்கள்!! ஒன்றுபடட்டும் மக்களும் மக்கள் அதிகாரமும்!!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
உசிலை பகுதி.


நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர், அக்கடைகளை எல்லா விதிமுறைகளை மீறி மக்கள் குடியிருப்புகளில் வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வரும் வேளையில் மதுரை ஒத்தக்கடையில் இருந்த டாஸ்மாக் கடையை, ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கம் கிராமத்தில் அமைத்து டாஸ்மாக் நிர்வாகம் கல்லா கட்டிக்கொண்டிருந்தது.

இதனால் பெண்கள், மாணவிகள் ரோட்டில் நடமாட முடியாமலும், குழந்தைகள் வாசலில் விளையாடக் கூட முடியாமலும்  நரசிங்கம் மக்கள் குமுறிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக 07.05.2017 அன்று காலை  “டாஸ்மாக் கடைகளை மூடும் மக்கள் போராட்டம் பற்றிப் பரவட்டும், தமிழகத்தை பூரண மதுவிலக்கு மாநிலமாக மாற்றுவோம். உங்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் கடையை மூடுவோம் வாருங்கள்” என்று அப்பகுதி மக்களிடம் அழைப்பு விடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

காய்ந்த சருகுகள் தீப்பட்டவுடன் எரிவதை போல், நமது போராட்ட அறைகூவலை கேட்டவுடன் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பெண்கள், இளைஞர்கள் மக்கள் அதிகாரம் தலைமையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிடச்சென்றனர். முற்றிகையிட வரும் மக்களை பார்த்தவுடன் விற்பனையாளர் கடையை மூடிவிட்டு ஓடிவிட்டார்.

முற்றுகையிட்டு போராடி வரும் மக்களை பார்த்தவுடன் பதறி அடித்து ஓடி வந்தார்கள் போலீசும், வருவாய்த்துறையும். “கடையை உடனே அகற்ற  வேண்டும், அதுவரை நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம்” என மக்கள் உறுதியாக நின்றார்கள்.

மக்களின் உறுதியான போராட்டத்தை கண்ட அதிகார வர்க்கம் கடையை மூடுவதாக வாக்குறுதி அளித்தனர். “உங்கள்  வாக்குறுதியை எல்லாம் நாங்கள் நம்பவில்லை, நாளையில் இருந்து கடையை திறக்க கூடாது, திறந்தால் கடையை அடித்து நொறுக்குவோம்” என அதிகாரிகளுக்கு சவால் விடும் வகையில் எச்சரிக்கை செய்து கலைந்தனர். இப்போராட்டம் பகுதி மக்களிடம் உறுதியான நம்பிக்கையையும், போராட்டம் தான் தீர்வு என்ற உணர்வையும் ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை.

விழுப்புரம் கொளப்பாக்கத்தில் – டாஸ்மாக்கை நொறுக்கிய மக்கள் !

1

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கிராமம் செ.கொளப்பாக்கம். கோழிப்பண்ணையில் இருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டார் தூரம் உள்ளே செல்ல வேண்டும். கிராமத்திற்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் 70 ஆண்டுகளாக இல்லை. சாலைகளில் மின்சார வசதிகள் இல்லை. முட்புதர்களும், மலைகளும்  சூழ்ந்த பகுதி. கிணறுகள் அனைத்தும் வறண்ட நிலையில் இருந்தன.  தண்ணீர் இன்றி பயிர்கள்  அனைத்தும் காய்ந்து கிடந்தது. குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்படும் அந்த கிராமத்தில் டாஸ்மாக் கடையை கொண்டு வந்து வைத்தது இந்த கேடு கெட்ட அரசு. இதற்காக தனியார் நிலத்தில் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்துள்ளது. மாணவர்கள் படிப்பதற்கு ஒழுங்கான கட்டிடம் இல்லாமல் மர நிழலில் படிக்கும் இந்த ஊரில் தான் சாராயம் விற்பதற்கு கான்கிரீட் கட்டிடம் ஒரு கேடாம்.

தேசிய நெடுஞ்சாலை கோழிப்பண்ணையில்  இருந்த கடையைத் தான் ஊருக்கு உள்ளே  கொண்டு வந்து வைத்துள்ளார்கள். (கடை எண்:11477) இந்த கடைக்கான கட்டிடம் கட்டும் பொழுதே கிராம மக்கள்  எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும் மின்கொட்டகை கட்டுவதாக சமாளித்து வந்தனர்.

கடந்த ஏப்ரல் 6-ம் தேதி  இரவோடு இரவாக சாராய பாட்டில்களை கொண்டு வந்து இறக்கியது அரசு. அன்று முதல் பள்ளி மாணவிகள், வேலைக்கு சென்று வரும் பெண்களுக்கு ஆரம்பித்தது தலைவலி. வீட்டில் சண்டை, மாணவிகளை தரக்குறைவாக பேசுவது என்று குடிகார ஆண்களின் வக்கிரங்களுக்கு ஆளாகினார்கள்.

டாஸ்மாக் கடயை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் டி.எஸ்.பி -யை முற்றுகையிட்ட மக்கள்

கோழிப்பண்ணையில் இருந்த  கடையை எடுக்க கோரி  ஊர் தலைவர் ராஜாங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். எந்த நடவடிக்கையும் இல்லை. அவரும் விபத்தில் இறந்து விட்டார். அதன் பிறகு கிராம மக்களே ஒன்று கூடி கடையை எடுக்க முடிவெடுத்தனர். அதற்காக கிராமம் தோறும் கையெழுத்து இயக்கம் நடத்தி  அந்த மனுவை மாவட்ட ஆட்சியரிடம் 02.01.2017 அன்று மனுவாக கொடுத்தார்கள். அதனை மூடுவதாக ஆட்சியர் வாக்குறுதி கொடுத்தார், இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆத்திரமடைந்த மக்கள் இரண்டு முறை சாலை மறியல் செய்துள்ளார்கள்,. அப்பொழுதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

மக்கள் எவ்வளவோ போராடியும் இந்த டாஸ்மாக்  கடையை மூடாமல் அரசு தீவிரம் காட்டுவதற்கு முக்கிய காரணம், விழுப்புரத்தில் இருந்து செஞ்சி வரை சுமார் 40 கி.மீ. தூரத்திற்கு ஒரு கடை கூட இல்லை. மக்கள் வாடகைக்கு கடை கொடுக்கவும் தயாராக இல்லை. இதனையும் மூடிவிட்டால் தங்கள் “சேவை” தடைபட்டு விடுமோ என்ற அச்சம் தான் காரணம். இதே செஞ்சி சாலையில் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்த ஒரு டாஸ்மாக் கடையை மூடியது மக்கள் அதிகாரம்.

வேறு வழி தெரியாமல் இருந்த மக்களுக்கு மக்கள் அதிகாரம் தான் நினைவுக்கு வந்தது. அந்த ஊரில் இருந்த விசிக பிரமுகர் மக்கள் அதிகாரத்தை பற்றி  கூறியதால் உதவிக்கு மக்கள் அதிகாரத்தை அணுகியுள்ளனர். மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் 26 ம் தேதி கடையை முற்றுகையிட்டு போராடினார்கள். போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்த  விக்கிரவாண்டி தாசில்தார் அருங்குவளவன் கடையை இன்றே மூடிவிடுகிறேன் என்று கூறி மக்கள் முன்னிலையிலேயே கடைக்கு சீல் வைத்தார். மக்கள் நம்பிக்கையுடன் கலைந்து சென்றனர்.

“ருசி கண்ட பூனை சும்மா இருக்காது” என்பது போல 05.05.2017 அன்று  திடீரென முன்பக்க  வழியை மூடிவிட்டு பின்பக்க வழியாக கடையை திறந்து விற்பனையை நடத்தியுள்ளனர். இவ்வளவு விரைவாக கடையை திறக்க காரணம் அந்த ஊரில் பத்து நாட்களுக்கு தொடர் திருவிழா ஆரம்பித்துள்ளது. ஆத்திரமடைந்த மக்கள் அந்த “கடையை மூடுவது தான் எங்களுக்கு திருவிழா” ஆகவே   கடையை உடைப்பது என்றே முடிவுக்கு வந்துவிட்டனர். மக்களின் கோபம் ஊரெங்கும்  பற்றிப் பரவியதால் டாஸ்மாக் விற்பனையாளர் காதுக்கும் கேட்டுள்ளது. ஆகவே பயத்தால் கடையை மூடி விட்டார்.

கடை இருந்தால் தானே திறப்பதற்கு இனி அந்த கடை இல்லாமல் ஆக்கிவிடுவோம்  என்ற முடிவோடு மக்கள் அதிகாரம் தலைமையில் 06.05.2017 சனிக்கிழமை அன்று  திரண்ட மக்கள் தாங்கள் இதுவரை இந்த அரசின் மேல் கொண்ட கோபத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடப்பாரை, மண்வெட்டி கொண்டு பூட்டு போட்டியிருந்த கடையை உடைத்தனர்.

( படங்களைப்  பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாட்டில் கேஸ்களை வெளியில் எடுத்து போட்டுடைத்தனர். சிறியவர்கள் முதல் பெண்கள் வரை தங்களின் ஆவேசம் தீர உடைத்தார்கள்.  கிராம நிர்வாக அலுவலர் அங்கே வந்ததை சற்றும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. பாட்டிலை உடைப்பதிலேயே தீவிரமாக இருந்தனர்.

பெண்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் காதைப் பொத்திக் கொள்ளும் காவலர்

போராட்ட இடத்திற்கு வந்த  கஞ்சனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  மீதி சாராய பாட்டில்களை உடைக்காதவாறு பாதுகாப்பு கொடுத்தார். போலிசை பார்த்து கொஞ்சமும் அச்சப்படாத மக்கள் பாட்டிலுக்கு  பாதுகாப்பு கொடுத்த போலிசை “ கழுவி ஊற்றினார்கள்”. அத்துணை வசை சொற்களையும் சிரித்தவாறே ஏற்றுக் கொண்டு “என் கடமையை நான் செய்கிறேன்” என்றார்.

குறிப்பிட்ட நிமிட இடைவெளியில் விழுப்புரம் நகர சரகத்திற்குட்டபட்ட அனைத்து காவல் நிலைய போலிசு இன்ஸ்பெக்டர்கள், சட்டம் ஒழுங்கு சங்கர், கலால் பிரிவு வெள்ளைசாமி ஆகிய காவல் துணைக் கண்காணிப்பாளர்கள்   மற்றும் உளவுப்பிரிவு,  அதிரடிப்படை என அத்துணை படையையும் குவித்தனர். எந்த படைக்கும் பயப்படாத மக்கள் கடையை அகற்றாமல் இங்கிருந்து ஒரு அடி கூட நகர மாட்டோம். உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்றதும் செய்வதறியாமல் திகைத்த போலிசு வேறு வழியின்றி தாசில்தாரை வரவழைத்தது.

அந்த “தாசில்தார் உத்தமர்” வந்ததும் உடைந்த பாட்டில்கள், உடையாத பாட்டில்கள் அனைத்தையும் கணக்கெடுத்துக்கொண்டு இரண்டு மினி வேன்களில் மிச்ச மீதியிருந்த சாராய பாட்டில்களை  ஏற்றி அனுப்பி விட்டு கடையை மூடி விட்டோம். இனிமேல் திறக்க மாட்டோம் என்று கூறினார்கள்.

இத்தனை நாட்கள் தாங்கள் மடியில் கட்டிக்கொண்டு அலைந்த நெருப்பு இன்று அணைந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் மக்கள் அனைவரும் தங்கள் வீடு திரும்பினார்கள்.

தங்களின் அதிகாரத்தை இழந்து மக்களின் அதிகாரத்துக்கு பணிந்த போலிசு சும்மா இருக்குமா? மக்களிடம் தாங்கள் மண்ணை கவ்விய கோபத்தில் இதற்கெல்லாம் காரணம் மக்கள் அதிகாரம் அமைப்பு தான் என்றும், அவர்களை கைது செய்தால் தான் தங்கள் வெறி அடங்கும் என்று நினைத்து கிராமத்தில் இருந்து வெளியே செல்லக்கூடிய அனைத்து கிளை சாலைகளிலும் போலிசை  நிறுத்தி வைத்திருந்தது.

சரியாக மாலை ஆறு மணிக்கு கிராமத்தில் இருந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் புறப்பட்டு கொஞ்ச தூரம் சென்ற தோழர்களின்  வண்டியை நிறுத்தி  கைது செய்ய முயற்சி செய்தார் பெரியதச்சூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்.

அவரை எதிர்கொண்ட தோழர்கள்  மீண்டும் கிராமத்திற்குள் சென்று  எங்களை கைது செய்ய வருகிறார்கள் என்று மக்களிடம் கூறியதும், மக்கள் மக்கள் அனைவரும் ஒன்று கூடி விட்டனர். ஊருக்குள் பதுங்கியிருந்த வேட்டை நாய் போல் தபதபவென்று போலிசும் வந்து விட்டது.

போலிசை முற்றுகையிட்ட மக்கள் ஆளுக்கொரு திசையில் “எங்களுக்காக வந்தவர்கள் அவர்களை கைது செய்தால் எங்களையும் கைது செய்” என்று ஒரே குரலில் கூறியதால் என்ன சொல்வதென்று தெரியாமல், நாங்கள் அவர்களை கைது செய்யவில்லை வாகன சோதனையில் தான் ஈடுபட்டோம் என்று பச்சையாக புளுகியது. “என்னைக்கும் இல்லாம இன்னைக்கு என்ன சோதனை வேண்டி கெடக்கு. சாராயம் விக்கும் போது கூட வந்ததில்லை” யார்கிட்ட பொய் சொல்ற என்று மக்கள் கேட்க தன வாயை பொத்திக்கொண்டார் உதவி ஆய்வாளர்.

எப்படி பேசினாலும் கடிவாளம் போடுவதால், உங்கள் ஊரில் திருவிழா நடக்கிறது. எனவே நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம் என்றது போலிசு. “உங்களை நாங்கள் பாதுகாப்பு கொடுங்கள் என்று கேட்கவில்லை, உங்கள் பாதுகாப்பை நாங்கள் ஏற்கனவே பார்த்துவிட்டோம், எங்களை மீறி நீங்கள் எப்படி அவர்களை கைது செய்து விடுவீர்கள் என்று பார்த்து விடாலாம் என நேருக்கு நேராக மக்கள் கூறியதும் தங்கள் பாட்சா இனியும் இவர்களிடம் செல்லாது என்பதை எப்பொழுதும் போல் தாமதமாகவே புரிந்து கொண்டது போலிசு.

உடனடியாக அங்கிருந்து கிளம்பினால் பெரும் அவமானம் என்பதால் தொடர்ந்து அந்த ஊரில் உள்ள  கைக்கூலிகளின் உதவியோடு ஊரையே சுற்றி வந்தது.   விடியற்காலை வரை சுற்றி மக்களை பீதியூட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். விடிந்தும் தோழர்களை அவர்களால் கைது செய்ய முடியவில்லை.

இனிமேல் “சும்மா இருந்தால் ஊருக்குள்ள ஒரு பையனும் மதிக்க மாட்டான், அதனால் காசு கொடுத்தாவது பதக்கம் வாங்கி செல்வோம்” என்ற வடிவேல் காமெடி போல் வீட்டு வாசலில் கோலம் போட்டிருந்த தாய்மார்கள் இரண்டு பேரையும், காலைக்கடன் கழிக்க சென்றவர்களையும் “கையில் மாட்டியதை எடுத்துச் செல்லும் வழிப்பறி திருடன் போல்”  யாருக்கும் தெரியாமல் கைது செய்து வேனில் ஏற்றி கண்ணிமைக்கும் நேரத்தில் சென்றது  போலிசு.

மக்கள் பாதுகாப்பில் இருந்த தோழர்களை கைது செய்ய முடியாததால் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர் போஸ்கோவை அவருடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவரை அடாவடியாக கைது செய்தது.  எப்படியோ  ஒன்பது பேரை கைது செய்து தன்  வீரத்தை நிலைநாட்டியது காவல்துறை.

உள்ளூர் அதிமுக பிரமுகர் மூலம் மூளை சலவை செய்ய முயற்சிக்கும் போலீசு.

சம்பவம் அறிந்த கிராம மக்கள் சாலை மறியல் செய்வதென முடிவெடுத்தனர். மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் மோகன்ராஜ் தலையில் மீண்டும் திரண்ட மக்கள் சாரை சாரையாக கிளம்பினார்கள். மீண்டும் அதே போலிசு படை களமிறங்கியது. கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேரை ரிமாண்ட் செய்து விட்டு இரண்டு பெண்கள் உட்பட ஆறு  பேர் விடுதலை செயபட்டனர். மற்றவர்களையும் விடுதலை செய்யாமல் இங்கிருந்து கலைய மாட்டோம் என்று மக்கள் உறுதியாக நின்றனர்.

நேரடியாக மக்களிடம் பேசி எந்த பயனும் இல்லை என்பதால் அதிமுக வின் உள்ளூர் பிரமுகர் ஒருவரை களமிறக்கி மக்களைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. தன்னால் முடிந்த வரை மணிக்கணக்காக பேசியும் ஒருவர் கூட அவர் சொல்வதை கேட்கவில்லை. அவமானப்பட்டது தான் மிச்சம்.

நேரம் ஆகியும் காவல்துறை அவர்களை விடுவது குறித்து எதுவும் சொல்லாததால் அங்கேயே இந்த அரசையும் காவல்துறையின் காட்டுமிராண்டி தனத்தையும் கண்டித்து முழக்கமிட்டு ஆர்பாட்டம் நடத்தியாதல் மக்கள் அதிகாரம் தோழர்கள் உட்பட 65 பெண்கள் கைது செய்யப்பட்டனர். டாஸ்மாக்கிற்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யகூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்பளித்தும் சட்டவிரோதமாக கைது செய்கிறது போலிசு. இதன் மூலம் நீதி மன்ற தீர்ப்புகள் எல்லாம் எங்கள் காலுக்கு சமம் என்று பறைசாற்றி விட்டது காவல்துறை.

அரசுக்கட்டமைப்பே தோற்றுப் போய் விட்டதன் விளைவு தான் தாங்கள் வகுத்த சட்டத்தை அவர்களே மீறுகிறார்கள். இனி இவர்களிடம் கெஞ்சுவதில் எந்த பயனும்  இல்லை என்பதை மக்களே தங்கள் சொந்த அனுபவத்தில் உணர்ந்து விட்டார்கள். இன்று சாராய மதுக்கடையை நொறுக்கிய மக்கள் நாளை இந்த அரசையும் நொறுக்குவார்கள். அதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அதிகார வர்க்கத்திற்கும் உணர்த்துவார்கள்

-வினவு செய்தியாளர்.

நெல்லை, கோவையில் மே தினப் பேரணி

0

நெல்லை ஆர்ப்பாட்டம்
மே தின தியாகிகளது நினைவை நெஞ்சிலேந்துவோம் !
மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற மறுகாலனியாக்கத்தைத் தகர்த்திடுவோம்!

நெல்லையில் மே 1 2017   காலை 10.00 மணிக்கு இரயில் நிலையம் முன்பு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் நெல்லை மாவட்ட அமைப்பாளர் தோழர் சிவா தலைமை வகித்தார். சரியாக 10 மணிக்கு மே தின முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் துவங்கியது. சுற்றியிருந்த வியாபாரிகளும், இரயில் நிலையம் செல்வோரும் முழக்கங்களை ஆர்வத்துடன் கவனித்துச் சென்றனர்.

தலைமையுரையாற்றிய தோழர் சிவா, ஒட்டுமொத்தமாக அனைத்துப் பிரிவு மக்களும் இன்றைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர், கார்ப்பரேட் முதலாளிகள் இதற்கு எப்படி காரணமாக உள்ளனர்,  கார்ப்பரேட் முதலாளிகளை அரசு பாதுகாப்பதை அம்பலப்படுத்திப் பேசினார். அடுத்ததாக பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆதி  இந்த அரசுக் கட்டமைப்பு மக்களை ஆள தகுதியற்றுப் போய்விட்டதை உணர்த்தும் விதமாக பேசினார்.

அடுத்ததாக, சிறப்புரையாற்றிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலர் தோழர் லயனல் அந்தோணிராஜ் “ மறுகாலனியாக்கம் எப்படி தொழிலாளர்களை மட்டுமல்லாமல் விவசாயிகளையும் மிக கடுமையாக பாதித்துள்ளதைப் பற்றிப் பேசினார். விவசாயிகளை பாதுகாக்க துப்பில்லாமல், குறைவான கட்டணத்தில் விமானப் பயணம் என்ற மோடியின் திட்டத்தை எள்ளி நகையாடினார்.

கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளையைப் பாதுகாக்க இந்து மதவெறி பாசிஸ்டுகள் எப்படி நாடு முழுவதும் வெறிகொண்டு செயல்படுகிறார்கள், ஹெச்.ராஜா போன்றவர்கள் போராடுபவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவதை கடுமையாகச் சாடிப் பேசினார். இறுதியாக, எல்லாப் போராட்டங்களையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தையும், புரட்சிகர அமைப்புகளின் தலைமையின் கீழ்தான் அதற்குத் தீர்வு காண முடியும் என்பதையும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் இந்த அரசுக்கட்டமைப்பில் அது சாத்தியமில்லை என்பதையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே மாற்று என்பதையும் வலியுறுத்தினார். விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர சக்தி நன்றியுரையாற்றினார்.

அரசையும், இந்து மதவெறி பாசிஸ்டுகளையும் அம்பலப்படுத்திய பதாகைகள் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றன.

ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை ஜங்ஷன் போலீசு ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி கொடுத்தது. தொழிற்சங்கங்கள் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டம்  நடத்துவார்கள் அதனால் அதற்கு மேல் முடியாது என்பதை அதற்கு காரணமாக கூறியது. ஆனால் உண்மையில் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை.

ஆர்ப்பாட்டத்தில் பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது என்று அதற்கும் தடை விதித்தது. கேட்டால் பாடல்களில் உள்ள கருத்துக்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்கிறது. யாருக்கும் அனுமதியில்லையாம். இந்து மதவெறி பாசிஸ்டுகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் இந்த நாட்டையே சுடுகாடாக மாற்றுவதற்கு உரிமை உண்டு. ஆனால் கருத்துக்களை வெளிப்படுத்த ஜனநாயக வழியைப் பின்பற்றினால் அது சட்டம் ஒழுங்கு பிரச்சினை.

போலீசின் இந்த நெருக்கடிகளையும் தாண்டி தோழர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். உழைக்கும் மக்களின் உண்மையான விடுதலைக்கான பாதையை அறைகூவும் விதமாக போராட்டம் நடந்தேறி நிறைவுற்றது.

 

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

தகவல்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
நெல்லை மாவட்டம்

***

கம்யூனிசம் தோற்றுவிட்டதென்றால் வென்றது எது…? மே நாள் பேரணி, கூட்டம், கோவை.

மே ஒன்று உலகத் தொழிலாளர் தின பேரணியும் அதனை தொடர்ந்து தெருமுனைக் கூட்டமும் கோவை மண்ணில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்களால் நடத்தப்பட்டது.

கோவையை பொறுத்தவரை காக்கிகளும் காவிகளும் நிரந்தரக் கூட்டணி அமைத்துள்ளனர். போலீசின் நிறைவேற்றும் பொறுக்கிக் கும்பலாக ஜனநாயக சக்திகளின் மீதான அடக்கு முறைக்கு காரணங்களை உருவாக்குபவர்களாக அவ்வப்போது முதலாளிகளின் அடியாட்களாக என காக்கி மற்றும் காவிப் படையின் ஆளும் வர்க்க சேவைகளின் பரிணாமம் கோவையில் நமக்கு நிறைய காணக் கிடைக்கும்.

சி.‌ஆர்.‌ஐ நிறுவன சட்டவிரோத கதவடைப்புக்கு எதிரான போராட்டம் தீவிரமாக சென்று கொண்டிருந்த காலத்தில், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் போஸ்டர்கள் ஒட்டப்படும் இடங்களிலெல்லாம் பழைய சினிமா பட போஸ்டர்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு நமது போஸ்டர்கள் மீது ஒட்ட ஆளையும் பசையையும் காசையும் கொடுத்து அனுப்புவார் முதலாளி. அதே போல இப்போதும் மே நாள் சுவரொட்டிகள் மீதும் காவிக்கூட்டத்தைச்சேர்ந்த ஒருவரின் நினைவு நாளை போஸ்டரை ஒட்டியுள்ளார்கள். மே நாள் பி‌ஜெ‌பி காரனுக்கு எரிச்சலை தருகிறது.

மே தின சுவரொட்டிகளை மறைக்கும் வானரப்படைகள்

இடையர்பாளையத்தில் தொழிலாளிகள் போராடி களம் கண்ட மண்ணில் பேரணி துவங்கியது. ஓங்கி ஒலிக்கத் துவங்கிய மே நாள் முழக்கங்களும் மேற்கு மண்டல மண்ணின் இசைக்கருவி மத்தளம் பேரொலி எழுப்பி நாற்சந்தி அதிர எஸ்.‌ஆர்.‌ஐ தொழிலாளிகள் ஜி‌டி‌என் தொழிலாளிகள் இன்னும் பல நிறுவன தொழிலாளிகள் வண்ண வண்ண சீருடைகள் இவையனைத்திற்கும் இணையாய் செஞ்சட்டைகள் குழந்தைகள் பெண்கள் என பேரணி மெல்ல நகர்ந்தது.

இடையர்பாளையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி கடந்த வருடம் காவிகளின் கலவர பாளையமாக மாறிய மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையம் நோக்கி சென்றது.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் தோழர் சரவணன் தலைமையேற்று கூட்டத்தை நடத்தினார். தனது தலைமையுரையில் இந்த கூட்டத்தின் அவசியத்தை விளக்கினார்.

கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்க தோழர் ஜெகநாதன் மில் தொழிலாளிகளின் உணர்வை மேடையேற்றினார்.

அவரை தொடர்ந்து பேசிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் உமா,

“செய்தி தாள்களில் பேஸ்புக் எங்கும் மே தின வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். இது வாழ்த்து தெரிவிக்கும் நாளா..? மார்ச் எட்டு உழைக்கும் மகளிர் தினம் எப்படி கோலப்போட்டிகளாலும் பட்டுச் சேலை கட்டிக்கொண்டும் அற்பத்தனமாக சீரழிக்கப்பட்டதோ, அதே போல மே தினத்தையும் சீரழிக்க நாம் அனுமதிக்க கூடாது. போராட்டத்திற்கு யாரையும் கூப்பிடும் அவசியம் தமிழ்நாட்டில் இப்போது இல்லை. மக்கள் தன்னெழுச்சியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் அதிகாரம் தமிழகம் முழுவதும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. திருவாரூரில் மக்களிடம் மனுவாங்க அதிகாரி மறுக்கிறார், தாலுகா அலுவலகம் அடித்து நொறுக்கப்படுகிறது. டாஸ்மாக் போராட்டத்தில் இப்போது பெண்கள் உடைக்கும் அளவில் சென்று கொண்டிருக்கிறார்கள். இதனை வளர்த்தெடுக்க வேண்டும்.” என கூறினார்.

மக்கள் கலை இலக்கியக் கழக தோழர் சம்புகன்,

“போராடிப் பெற்ற உரிமைகளை தக்க வைக்க வேண்டிய அவசியத்தையும் பாசிச மோடியின் ஆட்சியில் எப்படி இயற்கையும் நாடும் சுரண்டப்படுகிறது என்பதை கூறினார்.” தேர்தல் பாதையை காறியுமிழ்ந்து போராட்டப் பாதைக்கு அறைகூவி முடித்தார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி தனது சிறப்புரையில்,

இந்த மே நாள் என்பது ரசியப் புரட்சியின் நூற்றாண்டில் வரும் மே தினம் 18ஆம் நூற்றாண்டில் சிக்காகோ தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலைக்காக போராட்டத்தை துவக்கினார்கள். அதனை ரசிய புரட்சி நடத்திக் காட்டியது. இந்த மே தினத்தில் மீண்டும் தொழிலாளி வர்க்கம் எட்டு மணி நேர வேலைக்காக குரல் கொடுக்கும் நிலைக்கு வந்து விட்டோம். முதாளித்துவம் நம்மை மீண்டும் பழைய நிலைக்கு இழுத்து வந்து விட்டது.

வரலாற்றின் சக்கரங்கள் மீண்டும் சுழலும். பாட்டாளி வர்க்கம் ஏற்கெனவே பெற்ற வெற்றியை விட கூடுதலாக வெற்றி அடையும். மே தினத் திருநாள் வாழ்த்தை எடப்பாடி முதற்கொண்டு சி‌பி‌ஐ, சி‌பி‌எம் என அனைவரும் கூறுகின்றனர். மே தினம் என்பது திருநாளல்ல. அது விடுதலைக்காக அறை கூவல் விடுக்கும் நாள். தமிழ் மாதங்களில் கொண்டாடப்படுகின்ற பௌர்ணமி, பிரதோஷம் ஆவணி அவிட்டம், மகா சிவராதிரி, தீபாவளி, பூசம், மகம் போல மே தினம் கொண்டாடப்படுகிறது. மூடத்தனம் நிரப்பிய பண்டிகை போல அது காட்டப்படுகிறது.

மேதினம் என்பது ஏதோ எட்டு மணி நேர வேலை என்பதுடன் குறுக்கப்படுகிறது. மேதினத்தின் கொள்கைகள் அதையும் தாண்டியது அரசியல் அதிகாரத்தை நோக்கி அது வளரும். வளர்த்த வேண்டும்.

நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது நாம் தான். போராட்டங்களின் தலைமை பாட்டாளி வர்க்கம்தான். வரலாறு நமக்கு அந்தக் கடமையை வழங்கியுள்ளது. அதன்படி நம் நாட்டின் அனைத்துப் போராட்டங்களுக்கும் தலைமை ஏற்போம். தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் குடிநீர் தட்டுப்பாடு வறட்சி பற்றி என்ன கூறுகிறார்கள்? இது 144 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் வந்துள்ளது. இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்புகின்றனர். இதனை நாம் பொய் என்கிறோம். இந்த வறட்சிக்கு காரணம் அரசியல்வாதிகளும் முதலாளிகளும்தான்.

நொய்யல் கோவைக்கு தாயாக ஓடிக் கொண்டிருந்தாள். நொய்யலில் நின்று ஒரு வெண்கல சொம்பை எடுத்து துண்டால் மூடி தண்ணீரை மொண்டு குடித்தால் தேனாய் இனிக்கும். சாயக்கழிவை கொட்டி நொய்யலை அழித்தது முதலாளித்துவ வர்க்கம்தான்.

நொய்யலில் இன்றும் தினசரி இரவு 10 மணிக்கு மேல் மணல் அள்ளுவது அமைச்சர் எஸ்‌பி வேலுமணிதான். இவருடைய கூட்டாளிதான் தாகம் தீர்க்கும் யாத்திரை நடத்திய வானதி சீனிவாசன். தொண்டாமுத்தூரில் தான் வானதியின் தோட்டமும் வீடும் உள்ளது. ஆனால் அக்கா அங்கே தேர்தலில் போட்டியிடாமல் கோவை தெற்கு தொகுதியில் நின்ற காரணமே எஸ்பி வேலுமணி கூடுதல் ஓட்டு வாங்கி ஜெயிக்க வேண்டும் என்பதற்கு தான். கூடுதல் ஓட்டு வாங்கி ஜெயித்தால் தான் மந்திரி பதவி என்பது செத்துப் போன அம்மாவின் கணக்கு எனவே தன் சாதிக்காரர்க்கு வானதி மேடம் இப்படியாக உதவினார். மக்கள் விரோதிகளுக்கு கட்சி லேபிள்கள் வேறு ஆனால் கொள்ளை அடிப்பதில் ஒரே அணி.

வானதி, வேலுமணியோடு ஈஷா ஜக்கியும் ஒரே அணி. மலையை அழித்து ஆசிரமம் கட்டி, ஆதீயோகி சிலை அமைத்து மேற்கு தொடர்ச்சி மலையை நாசமாக்கி வருகிறார்கள். நதியை, மலையை நாசமாக்கினால் வான்மழை எப்படி வரும் வறட்சி தான் வரும். எனவே சமீபத்திய வறட்சிக்கு இந்த சதிகாரர்களே காரணம். உழைக்கும் மக்கள் இவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றாமல் தடுக்கவே கலாச்சாரச் சீரழிவுகளை முன்நிறுத்துகின்றனர்.

இந்த படத்தை பார்த்தே ஆக வேண்டும் என பாகுபலிக்கு ஊடகங்கள் கவர் வாங்கிக் கொண்டு எழுதிக் கொண்டுள்ளார்கள். ஆனால் மக்கள் செங்கொடியை உயர்த்தினாள் உடனே முதலாளித்துவ கூலி எழுத்தாளர்கள், ஊடகங்கள் கம்யூனிசம் தோற்று விட்டது என்கிறார்கள்.

கம்யூனிசம் தோற்று விட்டால் வென்றது எது ?
காந்தியிசமா அல்லது முதலாளித்துவமா…?

எந்த இசம் வென்றது என்று இவர்களால் ஏன் சொல்ல முடியவில்லை. மேகங்களால் மறைக்கப்பட்டு நிலவின் ஒளி மங்கினால் நிலவு தோற்று விட்டதாக சொல்வது எப்படி மடமையோ அது போல கம்யூனிசம் தோற்று விட்டதாக சொல்வதும் ஆகும். இனி மே நாளை போராட்ட நாளாக மாற்றுவோம் என்று அறைகூவல் விடுத்து முடித்தார்.

தோழர் ஜோசப் குழுவினரின் பாடல்கள் கூட்டத்தை உற்சாகம்மூட்டியது. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர் தேவராஜ் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.
கோவை.

சென்னை, வேலூர், கோத்தகிரி – மார்க்ஸ் 200-வது பிறந்த நாள் விழா

0

நீலமலையில் ஆசான் காரல் மார்க்சின் 200வது பிறந்த நாள் !

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக உழைக்கும் மக்களின் விடிவெள்ளி காரல்மார்க்ஸின் 200 -வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக படம் திறந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

வாகனப்பிரிவு தலைவர் தோழர் சுப்பிரமணி மற்றும் செயலாளர் தோழர் கணேஷ் ஆகியோர் இனிப்புகள் வழங்கினர்.
மாவட்ட செயலர் தோழர் பாலன் உரையாற்றியதில் மூலதனத்தின் சுரண்டலில் ஏழை நாடுகள்  எவ்வாறு கொடுமையாக பாதிப்படைந்துள்ளது என்பதோடு, அப்பொழுதே ஆசான்கள் இந்த நிலைமையை கணிந்துள்ளதை உணர்ந்து பாட்டாளி வர்க்க விடுதலைக்கு நாம் தோழர் காரல் மார்க்ஸின் சிந்தனையை உயர்த்திப்பிடிப்போம் என்றார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்(இணைப்பு)
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கோத்தகிரி, நீலகிரி மாவட்டம்.
தொடர்புக்கு – 9047453204


காரல் மார்க்ஸ் 200வது பிறந்த நாள் நிகழ்ச்சி – வேலூரில் கொடியேற்றம் !

வேலூர் பழைய மீன்மார்கெட் அண்ணா சாலையில் பு.ஜ.தொ.மு. சார்பில், ஆசான் கார்ல் மார்க்சின் 200-வது பிறந்த நாள் நிகழ்ச்சியையொட்டி கொடி ஏற்றி படத்திறப்பு நடந்தது. இந்நிகழ்ச்சியில் தோழர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
வேலூர்.
_____
சென்னை மதுரவாயலில் மார்க்ஸ் பிறந்த நாள் படத்திறப்பு !
சென்னை மதுரவாயல் நொளம்பூர் பகுதி மக்கள் மத்தியில் ஆசான் காரல் மார்க்சின் 200-வது பிறந்தநாள் பிறந்த நாள் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன் பின்னர் மார்க்சின் படத்திறப்பு நிகழ்ச்சியும் கொடியேற்றமும் நடைபெற்றது. இதில் திரளான பொது மக்களும், தோழர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புரட்சிகர மானவர் இளைஞர் முன்னணி,
சென்னை – 94451 12675

ஆதார் கண்காணிப்பு : மக்களை அச்சுறுத்தும் சர்வாதிகார அரசு

14

போதை மருந்து கும்பல்களுக்கும் தீவிரவாதச் செயல்களுக்கும் நிதிமூலமாக கருப்புப்பணம் இருந்து வருகின்றது. எனவே, ஒரு நபரின் அடையாளத்தைப் போலி நகல் செய்ய முடியாத அளவுக்கு உறுதியான வழிமுறைகளை அமல்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது” என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் மத்திய அரசு வழக்குறைஞர் முகுல் ரோத்தகி.

முகுல் ரோத்தகி

வருமான வரி செலுத்துவதற்கும், பான் அட்டைகள் எடுப்பதற்கும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கின் போது கடந்த மே 2ம் தேதி மேற்படி வாதம் அரசு தரப்பில் வாதமாக சமர்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, பயன்பாட்டில் உள்ள பான் அட்டைகளில் நிறைய போலிகள் இருப்பதாகவும், போலி பான் எண்களின் மூலம் நடக்கும் வருமான வரி தாக்கலில் ஏராளமான தில்லுமுல்லுகள் நடப்பதாகவும், இதுவும் கருப்புப்பணத்திற்கு ஒரு முக்கிய காரணம் என்பதும் அரசின் வாதம்.

மேலும் தனது வாதத்தை முன்வைத்த மத்திய அரசு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, இதுவரை சுமார் 113.7 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இது நாள் வரை வழங்கப்பட்ட ஆதார் அட்டைகளில் போலிகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், உயிரியளவு விவரங்கள் (Biometric information), கருவிழிப் பதிவு மற்றும் கைரேகை விவரங்களின் அடிப்படையில் ஆதார் அட்டைகள் வழங்கப்படுவதால் போலி அட்டைகளுக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நெஞ்சறிந்து பொய் சொல்வது என்பதற்கு மத்திய அரசு வழக்கறிஞரின் மேற்படி வாதத்தை உதாரணமாக காட்டலாம்.

முகுல் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் களமாடியதற்கு சரியாக ஏழு நாட்கள் முன்பாக (ஏப்ரல் 26) குஜராத் மாநிலம் அகமதாபத் நகரைச் சேர்ந்த நிலேஷ் மிஸ்த்ரி என்பவர் கைது செய்யப்படுகிறார். நிலேஷ் ஏன் கைது செய்யப்படுகிறார்? அதற்கும் முகுல் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் வைத்த வாதத்திற்கும் என்ன தொடர்பு?

அலோபதி மருந்துகள் விற்பனைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன் தன்னார்வலர்களாக முன்வரும் மனிதர்களின் மேல் பரிசோதிக்கப்படும்(Clinical Trials). மேற்படி சோதனைகளுக்கு முன்வரும் ஒருவர், அதற்கு முன் குறைந்தது மூன்று மாதங்கள் வேறு கிளினிக்கல் டிரையலுக்கு சென்றிருக்க கூடாது என்பது விதிமுறை. நிலேஷ் மிஸ்த்ரி வேலையிழந்த மென்பொருள் பொறியாளர். அவருக்குப் பண நெருக்கடி இருந்ததால் இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறி குறுகிய காலத்தில் மீண்டும் சோதனைக்குச் செல்ல வேண்டுமென்பதற்காக புது புது அடையாளங்களுடன் போலி ஆதார் அட்டைகளை உருவாக்கியுள்ளார். தனக்கு மட்டுமின்றி, தன்னிடம் அறிமுகமான வேறு 100 பேர்களுக்கும் போலி ஆதார் அட்டைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

போலி ஆதார் அட்டைகள் தயாரித்தற்காக கைது செய்யப்பட்ட வேலையிழந்த மென்பொருள் பொறியாளர் மற்றும் அவருக்கு உதவியவர்கள்

போலி ஆதார் அட்டைகள் உருவாக்க முடியாது என்பது பொய். சட்டப்பூர்வமான முறைகளிலேயே போலி பான் அட்டைகள் பெற முடியும் என்றால், ஆதாரைப் பொருத்தவரை சட்டப்பூர்வமற்ற முறையில் போலி செய்ய முடியும். மேலும், ஆதார் விவரங்கள் அனைத்துமே மையப்படுத்தப்பட்ட கணினிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அது ஹேக்கர்களின் தாக்குதலுக்கு இலக்காகும் வாய்ப்பும் உள்ளது. உலகிலேயே அதிசக்தி வாய்ந்த பாதுகாப்பு வளையங்கள் கொண்ட கணினிகளுக்குள்ளேயே ஹேக்கர்கள் நுழைந்து விவரங்களைத் திருடுவது தொடர்பான செய்திகள் ஏராளமாக உள்ளது.

எனவே முகுல் ரோத்தகி பீற்றிக் கொள்வதைப் போல் அரசின் நோக்கம் போலி செய்யவே முடியாத ஆதாரின் மூலம் போலிப் பான் அட்டைகளை கட்டுப்படுத்துவது அல்ல என்பது அவரே முன்வைத்த பிற வாதங்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்துவது மற்றும் அதற்காக உயிரியளவு விவரங்கள், கருவிழிப் பதிவு மற்றும் கைரேகைப் பதிவு போன்றவற்றைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்குவது என்பது தனிநபர் ஒருவரின் தனியுரிமையில் (Privacy) தலையிடுவதாகும் என்றும், அவ்வாறு செய்வது ஒருவரின் உடலின் மேல் நிகழ்த்தப்படும் அத்துமீறல் என்றும் அது தனிநபர் ஒருவருக்கு அவரது உடலின் மேல் உள்ள உரிமையில் தலையிடுவதாகும் என்றும் தற்போது உச்சநீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக வழக்காடி வரும் எதிர்மனுதாரர்கள் வாதிட்டனர். இதற்கு பதிலளித்த முகுல் ரோத்தகி பின்வருமாறு வாதிட்டுள்ளார் –

”சொல்லிக் கொள்ளப்படும் தனியுரிமை மற்றும் உடல் ரீதியான அத்துமீறல் என்பதே பொய்யானதாகும். தனிநபர் ஒருவருக்கு அவரது உடலின் மேல் அறுதி உரிமை ஏதும் கிடையாது” என்ற முகுல் ரோத்தகி, மேலும் தனிநபர் ஒருவரைக் கொல்லும் உரிமையே அரசுக்கு உள்ளது என்றும், கைரேகைகள் மட்டுமின்றி மரபணு மாதிரிகளையும் கூட ஆதார் விவரங்களுடன் இணைக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளதென்றும் வாதிட்டார். மேலும், “ஒன்று உங்களிடம் ஆதார் அட்டை இருக்க வேண்டும்; இல்லையென்றால் நீங்கள் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும் – வேறு வாய்ப்புகள் எதையும் சட்டம் அனுமதிக்காது” என்றும் தெரிவித்தார்.

மத்திய அரசு வழக்கறிஞரின் வாதத்தில் தொனிப்பது திமிர் மட்டுமல்ல – இந்த நாட்டின் எல்லைகளுக்குள் வாழும் மக்கள் சகல வகைகளிலும் அரசு அதிகாரத்திற்கும் கீழ்படிய வேண்டும் என்கிற பாசிச வெறி. மக்களைக் கண்காணிப்பதற்கான அடிப்படை முறையாக ஆதார் அட்டையை முன்தள்ளுகிறது மோடி அரசு. கண்காணிப்பதே கட்டுப்படுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதே நிரந்தர அடிமைகளாக்குவதற்கும் முன்தேவைகள் என்பதன் அடிப்படையில் தான் வெறித்தனமாக ஆதாரை கட்டாயமாக்க முனைந்துள்ளது மோடி அரசு. இந்த எதேச்சதிகார நடவடிக்கைகளின் குறுக்கே எதுவும் வந்து விடக்கூடாது – நீதிமன்றம் உட்பட – என்பதில் மிகுந்த கவனத்துடன் உள்ளது மத்திய அரசு. இதை அமல்படுத்த நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் கூட காற்றில் பறக்க விட துணிந்துள்ளது.

ஆதாருக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், பல்வேறு சந்தர்பங்களில் அதைக் கட்டாயமாக்குவதோ, அரசின் திட்டங்களுக்கு முன்நிபந்தனையாக்குவதோ கூடாதென உச்சநீதிமன்றமே வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. “ஆதார் அட்டை இல்லை என்பதற்காக எந்த தனிநபரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. அரசின் சில துறைகள் தமது திட்டங்களை மக்கள் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என சுற்றறிக்கை விட்டிருந்தாலும், இறுதி தீர்ப்பு வரும் வரையில் அதை நடைமுறைப்படுத்தக் கூடாது” என 2013-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி அறிவித்தது உச்ச நீதிமன்றம். 2015 மார்ச் 16-ம் தேதி தனது முந்தைய வழிகாட்டுதலை அரசுக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டியது உச்ச நீதிமன்றம். ஆதார் கட்டாயமில்லை என அரசே அச்சு மற்றும் மின் ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என 2015 ஆகஸ்ட் 11-ம் தேதி அரசுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். 2016 செப்டெம்பர் 14-ம் தேதி தனது முந்தைய உத்தரவுகளை உறுதிப்படுத்தியதுடன், கல்வி உதவித் தொகை பெற ஆதார் அட்டையைக் கட்டாயமாக்க கூடாது என்கிற உத்தரவையும் அளித்தது

இன்னும் ஏராளமான சமயங்களில் ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கும் அரசின் முயற்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை போட்டுள்ளது. ஆனால், வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகள் அச்சிட்டப்பட்ட காகிதங்களைக் கொண்டு அதிகார வர்க்கம் மலம் துடைத்துப் போட்டுள்ளது. இது உச்சநீதிமன்றத்திற்கும் தெரியாத ஒன்றல்ல. போகப் போக நீதிபதிகளின் பார்வை மாறி வருகிறது அல்லது மத்திய அரசின் நிலையை ஏற்கும் திசையை நோக்கி செல்கிறது.

கல்வி உதவித் தொகை, ரயில்வே தேர்வாணையத் துறை, மத்திய சிறு மற்றும் குறுந்தொழில்கள் துறை உள்ளிட்டு, மாநில வேலை வாய்ப்பு அலுவலகங்கள், மாநில கல்வித் துறைகள், மதிய உணவுத் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம், தொழிலாளர் ஓய்வூதியத் துறை, பொது விநியோகத் துறை என மத்திய மாநில அரசின் வசமுள்ள எண்ணற்ற திட்டங்களுக்கு ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றது அரசு. பால்வாடிக்குச் செல்லும் குழந்தைகள் உள்ளிட்டு பள்ளிக் குழந்தைகள் அனைவரின் மேலும் ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கித் திணித்துள்ளது அரசு. பிறகு எதிர்ப்புகள் வந்த பிறகு குழந்தைகளுக்கு தேவையில்லை என்று சமாளிக்கிறது.

மத்திய மாநில அரசுகளின் சகல துறைகளும் ஆதார் அட்டையைக் கோருவதால் மக்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு சிறிய அசைவும், செயல்பாடுகளும் கூட ஆதார் இன்றி நிறைவேற்ற முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இவையனைத்தும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி நிறைவேற்றப்பட்டவை தாம்.

நீதிமன்றத்தின் சட்ட அதிகாரம், அதன் வரம்புகள் மற்றும் எல்லைகள் எல்லாம் ஆளும் வர்க்கத்தின் தேவைகளுக்கு உட்பட்டது என்பது ஆதார் விசயத்திலம் நடக்கிறது. ஏனெனில் மைனர் குஞ்சுகள் கைகோர்த்து உருவாக்கியிருக்கும் இந்த அரசு என்கிற கட்டமைப்பின் நடுமத்தியில் இருக்கும் புனிதப் பசு தான் நீதித்துறை. எனவே அதன் சவடால்களை எந்தளவுக்கு மதிக்க வேண்டும் என்பதை தன்னுணர்வாகவே ஆளும்வர்க்கம் அறிந்திருக்கும் என்றாலும், நீதிமன்றத்திற்கு என்றே உள்ளதாக சொல்லிக் கொள்ளப்படும் ‘புனிதம்’ எனப்படும் கந்தாயத்தை பெயருக்காகவாவது பராமரிக்க வேண்டிய தேவை குறித்து கூட அவர்கள் கவலைப்படவில்லை.

கண்காணிப்புக் கருவியான ஆதார் அட்டையை மக்களின் மேல் திணித்து ஒரு எதேச்சதிகார பாசிச அரசாங்கத்தை நிறுவும் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது மோடி அரசு – அப்படிப் போகிற போக்கில் ”நீதிமன்றத்தின் மாண்பு” மலக்குழிக்குள் இறக்கி விடப்பட்டிருப்பது ஒரு துணை விளைவு தான். ஒருவேளை மோடியின் அரசு தனது இலக்கை அடையும் நிலை ஏற்பட்டால், நாம் மீண்டும் வரலாற்றின் இருண்ட கட்டம் ஒன்றுக்குள் நுழைய வேண்டியிருக்கும்.

மோடியும் இந்துத்துவ பாசிஸ்டுகளும் தமது நோக்கத்தில் உறுதியாக இருக்கிறார்கள்;
ஜனநாயக சக்திகளின் முன் மிக நீண்ட போராட்டம் ஒன்று காத்துக் கிடக்கிறது.

– சாக்கியன்

மேலும் படிக்க:

சாகக் காத்திருக்கும் உகாண்டா புற்று நோயாளிகள் – படக் கட்டுரை

0
ப்ளோரன்ஸ் நபீதாவின் இடது மார்பகத்தின் மேல் வெடித்துள்ள புற்றுநோய்க் கட்டியின் மேல் அவரது மகள் ஆண்டிபயோடிக் மருந்தைத் தூவுகிறார்.

ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் நாடு உகாண்டா. ஆப்பிரிக்காவின் மற்ற வறிய தேசங்களின் கதைகளும் உகாண்டாவின் கதையும் சாராம்சத்தில் ஒன்று தான். நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த காலனிய சுரண்டலில் இருந்து உள்ளூர் யுத்த பிரபுகளின் கையில் மாட்டிக் கொண்ட ஒரு தேசம் அது. அள்ள அள்ளக் குறையாத இயற்கைச் செல்வங்களுக்காக ஏகாதிபத்தியங்களும் அவற்றின் உள்ளூர் தரகர்களுக்கும் நடத்தும் நாய்ச்சண்டையில் சிக்கிக் கொண்டுள்ளது மக்களின் வாழ்க்கை.

இதோ, உகாண்டாவின் புற்றுநோயாளிகள் குறித்து அல்ஜசீராவில் வெளியான புகைப்படக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு உங்கள் இதயத்தை அசைத்துப் பார்க்கும்.

ஜேம்ஸ் இஸாப்ரியா அந்தப் புழுதிபடிந்த சாலையை வெறித்துக் கொண்டிருக்கிறார். முன்னோக்கி வளைந்த அவரது தோள்களில் இருந்து நீண்ட கரங்கள் அந்த வாகனத்தின் ஸ்டியரிங்கின் மேல் ஓய்ந்துள்ளது. அவர் ஜேம்ஸ் ஜிங்கா மருத்துமனையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர். அங்கே பக்கத்தில் இருக்கும் கடைக்கும் ஆரம்ப பள்ளிக்கும் இடையே உள்ள குறுகிய சந்து ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் ஜேம்சும், அவரது சகா எஸ்தர் அபோலோட்டும்.

“மார்ஃபின்னை எடுத்துக் கொள்ள மறக்கவில்லையே” என்று கேட்ட எஸ்தர், ”நோயாளி மிக மோசமான நிலையில் இருக்கிறார்” என்றார்.

வண்டியை வலதுபுறம் ஒடித்த ஜேம்ஸ், எதிர்பட்ட குறுகிய மண் சாலைக்குள் வாகனத்தை நுழைக்கிறார். அது ஒரு முட்டுச் சந்து; அதன் முடிவில் சிதிலமான இரண்டு செம்மண் வீடுகளே தென்பட்டன.

”இங்கே தான். அவள் உள்ளே தான் இருக்கிறாள்” என்றார் எஸ்தர்

தகரக் கூரை வேயப்பட்டிருந்த அந்த வீட்டினுள் கான்க்ரீட் தளத்தின் மேல் விரிக்கப்பட்டிருந்த ஃபோம் மெத்தையில் அமர்ந்திருந்தார் 32 வயதான ஹார்ரியெட் நமுவோயா. ஏழு குழந்தைகளின் தாயான அவர் வயிற்றுக் கான்சரால் அவதியுற்று வருகிறார். தர்பூசணிப் பழம் அளவுக்குப் பெரிய கட்டி ஒன்று அவரது வயிற்றிப் பகுதியில் துருத்திக் கொண்டிருந்தது.

”முன்பே கண்டறியப்பட்டிருந்தால், கதிர்வீச்சு சிகிச்சையாவது பலனளித்திருக்கும்” என்ற எஸ்தர், “இப்போது அவளுக்கு நிறைய வலி இருக்கும்” என்றார்.

ஹார்ரியெட்டின் கதை தனித்த ஒன்றல்ல. உகாண்டாவில் இருந்த ஒரே ஒரு கதிரியக்க சிகிச்சை இயந்திரம் கடந்த ஏப்ரல் மாதம் பழுதடைந்த பின் குணமாகும் நிலையில் இருந்தும் சாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான புற்றுநோயாளிகளில் ஹார்ரியெட்டும் ஒருவர்.

கென்யாவின் நைரோபியில் கதிரியக்க சிகிச்சை இயந்திரம் ஒன்று உள்ளது. ஆனால், அங்கே பயணிப்பதற்கான வசதியில்லை. மேலும் கென்யாவில் சிகிச்சை மற்றும் தங்கும் செலவுகளே சுமார் 5000 அமெரிக்க டாலர்கள் வரை ஆகிவிடும். ஹார்ரியெட்டும் உகாண்டா முழுக்க அவரைப் போன்று புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் மரணத்திற்காக காத்திருக்கிறார்கள்.

ஹார்ரியெட் நமுவோயாவும் அவரது தாயாரும் தெற்கு உகாண்டாவில் உள்ள புசோகா பகுதியில் இருக்கும் தங்கள் வீட்டில் இருக்கிறார்கள். 21 ஆண்டு பழமையானதும் உகாண்டாவில் இருந்த ஒரே கான்சர் சிகிச்சை இயந்திரமும் ஆன வெளிக் கதிர்வீச்சுக் கதிரியக்க சிகிச்சை இயந்திரம் செயல்பாட்டில் இருந்திருந்தால், ஹாரியெட்டின் வயிற்றில் தர்பூசணி அளவுக்கு உருவாகியிருக்கும் புற்றுநோய்க் கட்டி குணமாகியிருக்கும் என்கிறார்கள் செவிலியர்கள்.

ஏழு பிள்ளைகளின் தாயான ஹார்ரியெட் முன்பொரு காலத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தார். தற்போது படுக்கையில் காலம் தள்ளி வருகிறார். ஜிங்கா மருத்துவமனையின் செவிலியர்கள் நாளொன்றுக்கு சுமார் 20 நோயாளிகளைப் பார்க்கிறார்கள். நோயாளிகளின் வலியைக் குறைக்கும் மருந்துகளை வழங்கும் செவிலியர்கள், நோயாளிகளின் மரணத் தருணங்களையும் கையாள்கின்றனர். பெரும்பாலான நோயாளிகள் ஏழைகள் என்பதால் அருகிலிருக்கும் கென்யாவுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வசதியில்லை. பலரும் குணப்படுத்தக்கூடிய அளவில் இருக்கும் புற்று நோயைச் சுமந்து கொண்டு மரணத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். “எங்கள் வேலையெல்லாம் வலியைக் குறைப்பதும், புண்களைச் சுத்தம் செய்வதும் மட்டும் தான்” என்கிறார் செவிலியர் எஸ்தர்.

ஜிங்கா மருத்துவமனையின் செவிலியர்கள் புற்றுநோயாளி கிரேஸ் அவுமாவுக்கு மாதாந்திர வலிநிவாரணி மாத்திரைகளைக் கொடுக்கின்றனர். கர்பப்பை வாய் புற்றுநோய் முற்றிய நிலையில் அவதியுற்று வருகிறார் கிரேஸ். உகாண்டாவின் ஒரே கதிரியக்க சிகிச்சை இயந்திரம் பழுதாகி ஏழு மாதம் கழித்து, 2016 அக்டோபர் மாதத்தில் இருந்து தான் கிரேஸ் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். ”அரசாங்கத்துக்கு மக்கள் இப்படியெல்லாம் துன்பத்தில் உழல்வது தெரியுமா? எனக் கேட்கிறார் எஸ்தர்.

முற்றிய நிலையில் இருக்கும் மார்பக புற்றுநோய் உண்டாக்கும் வலியைக் குறைக்க மார்ஃபின் பெற்றுக் கொள்கிறார் 50 வயதான காசிட்டா நாபியே. அரசு மருத்துவமனைகளில் திரவ நிலை மார்ஃபின் இருப்பு வைத்துக் கொள்வது மிக அரிதானது என்கிறார் புமான்யா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் பால் கிபிரிகே. சுமார் 20,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனது மருத்துவமனையால் புற்றுநோயால் ஏற்படும் மரணங்களுக்கு ஏதும் செய்ய முடியாது என்கிறார் மருத்துவர் பால். ”இவர்களெல்லாம் நைரோபிக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டாக வேண்டும். ஆனால் வசதியில்லை.. வலியால் சாவதைத் தவிற வேறெதுவும் செய்வதற்கில்லை” என்கிறார் பால்.

நாற்பத்தைந்து வயதான விவசாயி மூசா காலியின் கண்களில் புற்றுநோய்க் கட்டி உள்ளது. கடந்த ஆண்டு ஒரே ஒருமுறை கம்பாலாவில் உள்ள முலாகோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன் பின் கதிரியக்க இயந்திரம் பழுதடைந்து விட்டது. “அந்த இயந்திரம் இல்லாத நிலையில், இனி மூசா பயங்கரமான முறையில் சாவதைத் தவிற வேறு வழியில்லை” என்கிறார் ஜிங்கா மருத்துவமனையின் செயல் அதிகாரி சில்வியா நகாமி.

தனது வீட்டினுள் மௌனமாக அழுது கொண்டிருக்கும் 45 வயது தாய் மோனிகா நகாய்மா. கருப்பை புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறியாக மிகையான உதிரப் போக்கால் அவதிப்படுகிறார். கென்யாவுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வசதியில்லை. தனது குடிசையினுள்ளே தனிமையில் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார். மோனிகாவை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருப்பதாகச் சொல்கிறார் செவிலியர் எஸ்தர். ஜிங்கா மருத்துவமனை ஒன்று தான் இப்பகுதியில் செயல்பட்டு வரும் இலவச மருத்துவமனை. தங்களது மருத்துவமனை ஒன்று தான் “மரணத்தையும், கௌரவமாகச் சாதலையும்” குறித்து அக்கறை கொண்டிருப்பதாக அதன் செயல் அலுவலர் சில்வியா தெரிவிக்கிறார். 400க்கும் அதிகமான நோயாளிகளுக்கு ஆலோசனைகளையும், இலவச மருந்துகளையும் வழங்கி வருகின்றது ஜிங்கா மருத்துவமனை.

ப்ளோரன்ஸ் நபீதாவின் இடது மார்பகத்தின் மேல் வெடித்துள்ள புற்றுநோய்க் கட்டியின் மேல் அவரது மகள் ஆண்டிபயோடிக் மருந்தைத் தூவுகிறார்.

திரவ நிலை மார்ஃபின் தீர்ந்து போன நிலையில் வலியால் துடிக்கும் க்ரிஸ் வாக்கோ. கடந்த ஆண்டு க்ரிஸ் வாக்கோவுக்கு குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சுமார் 15 ஆயிரம் செலவாகும் கோலோனோஸ்கோபி என்கிற பரிசோதனையோ, 7 ஆயிரம் செலவாகும் சி.டி ஸ்கேனோ எடுத்துக் கொள்ளும் அளவுக்கு வசதியில்லை. புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை எடுத்துக் கொள்ளவே இந்த சோதனைகள் முன்தேவைகள் என்கிறார்கள் மருத்துவர்கள். தற்போது ஜிங்கா மருத்துவமனை செவிலியர்கள் தரும் இலவச வலிநிவாரணி மருந்துகளை மட்டுமே நம்பியிருக்கிறார் க்ரிஸ் வாக்கோ.

தனது தாயாரின் வலிநிவாரணி மருந்துப் புட்டியில் உள்ள வழிகாட்டுதல்களை வாசிக்கிறாள் 14 வயதான சௌலினா நாமிகோஸ். மார்பக புற்றுநோயால் இறந்து கொண்டிருக்கும் அந்த தாயின் இளைய மகளான சௌலினா தான் அவளைக் கவனித்துக் கொள்கிறாள். ”இவளைத் தவிற அவள் தாயை எவரும் கவனிப்பதில்லை” என்கிறார் செவிலியர் எஸ்தர்.

வலிநிவாரணி மருந்தைப் பெற்றுக் கொள்ளும் மதீனா நாமிகோஸ். கதிரியக்க சிகிச்சை இயந்திரம் பழுதான பின் பல நோயாளிகளின் எதிர்காலமே இருண்டு விட்டதாகச் சொல்கிறார் சில்வியா. “எத்தனையோ நோயாளிகள், குறிப்பாக ஏழைகள், தங்கள் முயற்சிகளைக் கைவிட்டு கடைசியாக… ‘எங்களை வலியில் தவிக்க விடாதீர்கள்…. எங்கள் சாவுக்காக அமைதியாக காத்திருந்து செத்துப் போகிறோம்’ என்று சொல்கிறார்கள்” என்கிறார் சில்வியா.

68 வயது நூஃகு மலிங்காவுக்கு சிறுநீரகப் புற்றுநோய். வீட்டுக்குள் வெப்பம் அதிகம் என்பதால் பெரும்பானான நேரம் வீட்டுக்கு வெளியே ஃபோம் மெத்தையில் படுத்துக் கிடக்கிறார்.

சாப்பிடவும் முடியாமல் தாங்க முடியாத வலியினாலும் ரணப்படுத்தும் படுக்கைப் புண்களாலும் தனது தந்தையின் வீட்டில் அழுது கொண்டிருக்கிறாள் 23 வயதான பீட்ரிஸ் அகோத். கடந்த மார்ச் மாதம் கல்லீரல் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. உகாண்டாவில் கதிரியக்க சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லை. உகாண்டா அரசு சுமார் 400 நோயாளிகளைத் தெரிவு செய்து கதிரியக்க சிகிச்சைக்காக கென்யாவுக்கு அனுப்பவுள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. ஆனால், உண்மையில் அதனால் எத்தனை பேர் பலனடைந்தார்கள் என்பது தெரியவில்லை.

பீட்ரிசின் தந்தை வீட்டுக்கு வெளியே அமர்ந்துள்ளார். உகாண்டாவின் மருத்துவ அமைச்சகம் இன்னும் சில மாதங்களில் புதிய கதிரியக்க சிகிச்சை இயந்திரம் ஒன்றை நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், அதற்கு பல மாதங்கள் ஆகலாம்.. அதுவரை பட்ரீஸ் அகோத் தாக்குப்பிடிக்க மாட்டார். செவிலியர்கள் இன்னும் மூன்று மாதங்களே அகோத் உயிர்வாழ்வார் எனச் சொல்கின்றனர்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் அவதியுறும் என்பது வயதான ஜோய்ஸ் மடாமா, இலவச வலிநிவாரணி மருந்துகளைத் தரும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். ”இன்றைக்கு வலி கட்டுக்குள் வந்து விட்டது” என்கிறார் செவிலியர். சுமார் 414 நோயாளிகள் ஜிங்கா மருத்துவமனையின் விலி நிவாரண சிகிச்சையால் பலனடைகிறார்கள். “இன்னும் எத்தனை எத்தனையோ பேர்களுக்கு எங்கள் உதவி தேவைப்படுகின்றது” என்கிறார் ஜிங்கா மருத்துவ மனையின் செயல் அலுவலர் சில்வியா.

– கேத்தி. ஜி. நெல்சன்

நன்றி: அல்ஜசிரா
தமிழாக்கம்: முகில்

மூலக்கட்டுரை: Waiting to die: Uganda’s untreated cancer patients

Add to Anti-Banner

துணைவேந்தரை உடனே போடு – அண்ணா பல்கலைக்கழக முற்றுகை !

0

சென்னை அண்ணா பல்கலைக்கழக வாயிலில் 4.5.2017 அன்று காலை 11.00 மணியளவில் பு.மா.இ.மு தலைமையில் பல்கலைக்கழகத்தில் உடனடியாக துணைவேந்தரை நியமனம் செய்யக்கோரி போராட்டம் நடைப்பெற்றது.

போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பு.மா.இ.மு சென்னை கிளை இணை செயலாளர் தோழர் சாரதி தனது கண்டன உரையில் “அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் இயங்கிவருகிறது. இன்றுவரை அரசு இதற்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழகமும்,  சென்னை பல்கலைக்கழகமும் இந்த மே மாதத்தில் பட்டமளிப்புவிழா நடத்தவுள்ளனர். மாணவர்கள் அந்த பட்டங்களை வாங்கினாலும் துணைவேந்தரின் கையெழுத்து இல்லாமல் தரப்படும் பட்டமானது குப்பை காகிதத்திற்கு சமமானது. எனவே இந்த பட்டத்தை மாணவர்கள் வாங்க விடமாட்டோம்.

மேலும், இந்த பிரச்சினையை பற்றி மற்ற கட்சிகள் ஏதும் வாய்கூட திறக்கவில்லை. சிலர் கருத்துக்கள் சொல்வதோடு நிறுத்திக் கொள்கின்றனர். யாரும் போராட்டத்தில் இறங்கவில்லை. மத்திய பாஜக கட்சியின் பினாமியை போல் செயல் படும் எடப்பாடி அரசு சரியான நபரை துணைவேந்தராக நியமிப்பதில் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த துணைவேந்தர் பதவிக்கு வருவதற்கு 50 கோடி போரம் பேசுகிறார்கள். இதுமட்டும் இல்லாமல் பேராசிரியர் பதவிக்கு 50 லட்சம் பேரம். இப்படி பேரம் பேசுவதே அ.தி.மு.க அரசின் வேலையாக இருக்கிறது.

அதனால், இந்த பிரச்சினையில் துனைவேந்தரை நியமிக்காமல் பட்டமளிப்பு விழாவை நடத்த விடமாட்டோம். மீறி நடத்தினால் தமிழகம் முழுவதும் போராட்டங்களை கட்டியமைப்போம்” என பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். அதன் பின் தோழர்களை வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்து கைதுசெய்து, மண்டபத்தில் அடைத்தது அ.தி.மு.கவின்  அடியாள்களான போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை. தொடர்புக்கு – 94451 12675.

மே 5 – 2017 பாட்டாளி வர்க்க ஆசான் – காரல் மார்க்சின் 200-வது பிறந்த நாள் !

0

மே 5 – 2017 பாட்டாளிவர்க்க ஆசான் – காரல் மார்க்ஸ் 200வது பிறந்த நாள் !

ம்யூனிஸ்டுகள் தமது கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடி மறைக்க மனம் ஒப்பாதவர்கள்; இன்றுள்ள சமுதாயத்தின் நிலைமைகள் யாவற்றையும் பலாத்காரமாய் வீழ்த்த வேண்டும். அப்போதுதான் தமது இலட்சியங்கள் நிறைவேறும் என்று கம்யூனிஸ்டுகள் ஒளிவுமறைவின்றி பறைசாற்றுகிறார்கள்.

அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள், கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று.

பாட்டாளிகள் தமது அடிமைச்சங்கிலியத் தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கல். அவர்கள் வென்று பெறுவதற்கு அனைத்து உலகும் இருக்கிறது.

உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள் !

-காரல் மார்க்ஸ்

இணையுங்கள்:

மதுரை, தர்மபுரியில் மே தின ஊர்வலம்

0

மதுரை மே  தினம் – பேரணி, பொதுக்கூட்டம்

சிலை, மதுரை, சிவகங்கை, ராஜபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ம.க.இ.க., பு.ஜ.தொ.மு., பு.ம.இ.மு., பெ.வி.மு., வி.வி.மு., ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் மே தினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நிகழ்த்தினர்.

பேரணியில் 200க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் புரட்சிகர முழக்கங்கள்,  ஆசானின் படங்களையும் பதாகைகளாக ஏந்தி, விண்ணதிர முழக்கமிட்டுச் சென்றது பார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது. அரசியலாலும் எழுச்சிமிக்க முழக்கங்களாலும் இவர்கள்தான் கம்யூனிச வாரிசுகள் என்று CPM ஆதரவாளர்களையே பேச வைத்தது பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மாலை 6 மணிக்கு தெற்குத்தெரு காந்தி சிலையில் தொடங்கிய பேரணி உசிலை ரோடு வழியாக சென்று ஸ்வீப்பர் காலணியில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு அருகில் முடிவடைந்தது. இரவு 7 மணிக்கு தோழர் வீரணன் தலைமையில் தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் பொதுக்கூட்டம் துவங்கியது.

பு.ஜ.தொ.மு., தோழர் ஆனந்தன், ம.க.இ.க., தோழர் ராமலிங்கம், தோழர் சினேகா, பு.மா.இ.மு., தோழர் ராஜ்குமார், வி.வி.மு., தோழர் ஆசை ஆகியோர் உரையாற்றினர்.

மக்கள் அதிகாரத்தின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் நாகராஜன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர் வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப்பகுதியில் உள்ள துப்புறவு பணிசெய்பவர்களின் வாழ்நிலையைத் தொட்டுப் பேசியது பெரும்பகுதி மக்களை ஈர்த்தது. இந்த அரசும் ஆட்சியாளர்களும் இந்த கட்டமைப்பும் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல விவசாயிகள், மாணவர்கள் என அனைத்து பிரினருக்கும் எதிரானது என்பதை பல்வேறு விளக்கங்களுடன் பேசியது மாற்று அரசியல் குறித்த பார்வையை உருவாக்கியது.

தேர்தலில் இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது ஒட்டு மொத்த மக்கள் எழுச்சியே தீர்வு என்பதை மே நாளில் சூளுரைப்போம் என்று கூறி சர்வதேச கீதத்துடன் கூட்டம் நிறைவுற்றது.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

தகவல்
மக்கள் கலை இலக்கிய கழகம்
மதுரை.


தருமபுரி  ஆர்ப்பாட்டம்

மே தினத்  தியாகிகள்  நினைவை  நெஞ்சிலேந்துவோம்!
மக்கள்  போராட்டங்களைஒன்றிணைப்போம்!   

மே  1   உலக  தொழிலாளர் தினம்.   முதலாளித்துவ  சுரண்டலுக்கு  எதிராக   அன்றைக்கு   தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டு செங்கொடி  ஏந்தி போராடி   பல  உரிமைகளை  பெற்றெடுத்த  போராட்ட நாள் தான்  மே  தினம்.  இன்றைக்கு  பல்வேறு  பிரச்சினைகளுக்கு   மக்கள்  தனித்தனியாக  போராடினால்  பிரச்சினையை  தீர்க்க  முடியாது  அனைத்து  போராட்டங்களும்   ஒரு தலைமையின் கீழ்  புரட்சிகர  இயக்கத்தின்  பின்னால்  செங்கொடி ஏந்தி  போராட  வேண்டும்  என்பதை   உணர்த்தும்  வகையில் தருமபுரியில்   விவசாயிகள்  விடுதலை  முன்னணி,  புரட்சிகர  மாணவர்  – இளைஞர்  முன்னணி  சார்பாக   கடந்த  ஒரு வாரமாக   மாவட்டம்  முழுவதும் வீச்சான  பிரச்சாரத்ததை  மேற்கொண்டு  01.05.2017  அன்று   மாலை  5 மணி அளவில்  தருமபுரி   தந்தி அலுவலகம்  அருகில்   கண்டன  ஆர்ப்பாட்டத்தை  நடத்தியது.

ஆர்ப்பாட்டத்தினை   விவசாயிகள்  விடுதலை  முன்னணி  வட்டார  செயலாளர்    தோழர்  கோபிநாத்  தலைமை தாங்கினார் அவர் பேசுகையில்,   மே  தினத்தில்  லட்சகணக்கான  மக்கள்   உயிர் தியாகம்  செய்து  8 மணி நேரம்  வேலை, 8 மணிநேர உறக்கம், 8 மணிநேர ஓய்வு, போன்ற  உரிமைககளை  பெற்றெடுத்தநாள் தான்  மே தினம்.   ஆனால்  இன்றைக்கு  அந்த  உரிமைகளை  இழந்து   நிற்கிறோம். தனியார்மயம் வந்தால்  நாடு வல்லரசு  ஆகிவிடும்  என்று  அமல்படுத்தினார்கள். ஆனால் இன்னைக்கு மக்கள்  வாழவே  முடியாது  என்கிற  கையறுநிலையை  அடைந்து இருக்கிறார்கள். விவசாயிகள்  இல்லை என்றார்  நாம்  சோறு  சப்பிட முடியாது, 40  நாட்களுக்கு  மேல்  டெல்லியில்  போராடிய விவசாயிகளை சந்தித்த  எடப்பாடி  பழனிச்சாமி   உங்களுடைய  கோரிக்கைகளை  எல்லாம்  நிறைவேற்றுவேன் என்று உறுதி  அளித்தார்.  ஆனால்  தமிழகம்  வந்த உடனே   80 விவசாயிகளுக்கு மட்டும்தான்  இழப்பீடு  கொடுக்கப்படும் மற்ற விவசாயிகள்  நோய்வாய்பட்டும்  சொந்த பிரச்சினையாலும்  இறந்துள்ளனர் என்று  பேசுகிறார். நீர் நிலைகளை  மேம்படுத்தாமல்  டாஸ்மாக்கை  திறக்கிறார்கள்,  இதுவரைக்கும்  3000-க்கும்  மேற்பட்ட  ஏரிகள்  காணாமல்  போயிருக்கிறது.

இப்படி  கடந்த  25  ஆண்டுகளாக  கடல் வளம்,  ஆறு, கனிம வளம் என  ஒட்டு மொத்த  இயற்கை  வளங்களையும்  அதிகார  வரக்கம்  பல அரசியல் கட்சிகளோடு  கூட்டு வத்துக்கொண்டு  கொள்ளையடித்துள்ளனர். இந்தியாவில்  400 பேரிடம்  60% சொத்துக்கள்  குவிந்திருக்கிறது.  இவர்கள் வைப்பதுதான்  சட்டம் .  50  பன்னாட்டு  நிறுவனங்களின்  கொள்ளைக்காக  நாட்டை  கூட்டிக்கொடுப்பவர்தான்  மோடி, அவருக்கு அதுதான் வேலை, எனவே  அரசிடம்  மனுக்கொடுப்பது, கெஞ்சுவதன்  மூலம்  பிரச்சினையை  தீர்க்க முடியாது. இதனை  தூக்கி எறிய  வேண்டும். புரட்சிகர  பாதையில்  செங்கொடி  ஏந்தி  போராடுவதுதான்  ஒரே  தீர்வு என்றார்.

அடுத்தாக  மக்கள்  அதிகாரம்  தோழர்  சிவா  பேசுகையில்,    அன்றைக்கு  18, 19  மணிநேரம்  என தொழிலாளர்களை   கொத்தடிமையாக  கசக்கி பிழியப்பட்டு  சக்கையாக  தூக்கி எறிந்தனர்.  அந்த சக்கைகள்  தான்  செங்கொடி கீழ் எழுந்து  நின்று   போராடி  8 மணிநேரம் உறக்கம்,  8  மணிநேர வேலை, 8 மணி நேர ஓய்வு, போன்ற  உரிமைகளை  மீட்டெடுத்தனர்.  ஆனால்  இன்றைக்கும்  அதே  நிலையில்  தான்  வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.  எனவே  திருப்பூர்,  கோவை,  பெங்களூரு என்று  போவதை  கைவிட்டுவிட்டு    இங்கே  நின்று  போராடும் போதுதான்  நமக்கான  நியாயம்  கிடைக்கும்.   அன்றைக்கு  முதலாளித்துவ  பயங்கரவாதம், இன்றைக்கு   அரசு  பயங்கரவாதம்.

தமிழகத்தில்  ஆயிரகணக்கான  விவசாயிகள்  போராடி கொண்டிருக்கிறார்கள், நூற்றுக்கணக்கான  விவசாயிகள்   செத்துகொண்டுருக்கிறார்கள்.  இவர்களை  பார்த்து   ஃபிராடு எச். ராஜா  தமிழக விவசாயிகள்  போடக்கூடிய  சாப்பாட்டை   சாப்பிட்டுவிட்டு   விவசாயிகளை  ஃபிராடு  என்று  கூறுவதற்கு   என்ன  அருகதை இருக்கிறது. மேலும்  வளர்ச்சி என்கிற  பெயரிலே   ஹைட்ரோ  கார்பன்    திட்டத்தை கொண்டுவந்து, விவசாயத்தை  அழித்து   பாலைவனமாக்குவது,  முதலாளிக்கு  வரிசலுகை அளிப்பது, விவாயிகளுக்கு   கடனை  தள்ளபடி செய்ய மறுப்பது, இதற்கு எதிராக  பல்வேறுக்கட்ட  போராட்டங்களை  மக்கள்    நடந்து வருகின்றனர்.  இதனையெல்லாம்   கண்டுகொள்ளாமல் தீர்க்க  துப்பில்லாமல்   அரசு  தோல்வி  அடைந்து , மக்களுக்கு எதிர்நிலை  சக்தியாக  மாறிவிட்டது.  எனவே   ஜல்லிக்கட்டுக்காக  கிராமங்கள், நகரம் தோறும்  எப்படி  போராட்டங்களை  கட்டி  அமைத்து  வெற்றிப் பெற்றோமோ  அதேபோல்  அணைத்து  பிரச்சினைக்கும்  ஒன்றினைய  வேண்டும் என்றார்.

புரட்சிகர மாணவர்- இளைஞர்  முன்னணி   மாவட்ட  அமைப்பாளர்  தோழர்  அன்பு  பேசுகையில், மே தினம் என்றால்  விழா?  சந்தோசமான  நாள்  என்று  பொதுவாக  பார்க்கபடுகிறது. ஆனால்  அது  தொழிலாளர்களுக்கு   பல உரிமைகளை  மீட்டெடுத்த    போராட்ட தினம்.  தொழிலாளர்களுக்கு  மட்டுமல்ல, அனைத்து தரப்பு  மக்களுக்குமானது. எனவே  முதலாளித்துவம்  தொழிலாளர்களை  மட்டும்  சுரண்டுவது இல்லை எல்லா  மக்களையும்  சுரண்டுகிறது.  இன்றைக்கு  காசு இருந்தால்தான்  கல்வி, காசு இருந்தால்தான்  மருத்துவம்   என்கிற  நிலையில்  தனியார் பள்ளிகள்   கொலை கூடாரமாகவே  மாறிவிட்டது. இவர்களின்  கொள்ளைக்காகத்தான்  அரசு இருக்கிறது.

37,000 அரசு பள்ளிகளில்   குடிநீர் , கழிப்பிடம் இல்லை,  பொறியியல்  படித்த பட்டதாரிகள்  2 லட்சத்திற்கும்  மேற்பட்டவர்க்கு   வேலையில்லை, 7 லட்சத்துக்கும்  மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு  படிப்புக்கேற்ற வேலை இல்லை, இதைபற்றியெல்லாம்  அரசுக்கு  கவலை இல்லை, மத்தியில் ஆளும்  பி.ஜே.பி   ஒட்டுமொத்த  கல்வித்துறையிலும்  காவிமயமாக்க  வேண்டும் என்று  இந்தியை  திணிக்கிறார்கள்.  இதனை எதிர்த்து கேட்டால்  தேசதுரோகி,  பயங்கரவாதி என்று  முத்திரை குத்துகிறார்கள்.  எனவே  ஆர்எஸ்எஸ், பிஜேபி  வானர கூட்டத்தை   விரட்டியடிக்காமல்  பிரச்சினைகளை  தீர்க்க முடியாது.  தமிழகத்தை  மெரினாவாக்க   புரட்சிகர   அமைப்பின்  கீழ்  ஒன்றிணைந்து  போராட வேண்டும். புதிய  இந்தியாவை, புதிய  ஜனநாயகத்தை  படைக்கும்  போதுதான்   அனைவருக்கும்   இலவச கல்வி, மருத்துவம், வேலை  பெறமுமடியும் என்றார்.

புரட்சிகர  மாணவர்- இளைஞர்  முன்னணி  சார்ந்த  தோழர் மலர் கொடி  பேசுகையில், மே தினம்  பெற்றெடுத்த  உரிமைகளையெல்லாம்  இழந்து  தெருவில்  நிற்கிறோம்.   இன்றைக்கு  பல தொழிற்சாலைகளில்   ஆண்களை விட  பெண்களை  அதிகம்  வேலைக்கு  எடுக்கிறார்கள். ஏனென்றால்  சங்கம் வைக்கமாட்டார்கள், கடுமையாக உழைப்பார்கள், அதிகம் பேசமாட்டார்கள்  இதனால்  அதிக உழைப்பை  சுரண்டலாம். அதோடு  நாடு  முன்னேற்றம் என்று  பேசுகிறார்கள். யாருக்கான  முன்னேற்றம்.  மக்களுக்கானதா?  கார்ப்பரேட்டுக்களுக்கானதா?  விவசாயத்தை  அழித்தன் விளைவாக  இன்றைக்கு  விவசாயிகள்   நடுத்தெருவில்  போராடுகிறார்கள்.  80 லட்சம்   மாணவர்களுக்கு  வேலையில்லை , ஐடி  ஊழியர்கள்  10,000 பேரை  தகுதி இல்லை என்று  வேலைநீக்கம்  செய்திருக்கிறார்கள். டாஸ்மாக்கால்  பாதிக்கப்பட்ட  பெண்களே  எச்சில் பாட்டில் கழுவி  பிழைப்பை நடத்தும் அவலம், இதனையெல்லாம்   தீர்க்க   துப்பியில்லாமல்  அரசு  வேடிக்கை  பார்த்துக்கொண்டுயிருக்கிறது.  இன்னொரு  பக்கம்  தொழிற்சங்க  தலைவர்களும்   முதலாளியோடு  கூட்டு வைத்துக்கொண்டு  தொழிலாளர்களுக்கு  துரோகம்  இழைக்கின்றனர்.  இந்த  துரோகத்தை  கண்டு  துவண்டு விடாமல்   புரட்சிகர  இயக்கத்தின்  கீழ்  செங்கொடி  ஏந்தி  போராடுவதின்  மூலம் தான்   உரிமைகளை, வாழ்வாதாரத்தை  மீட்டெடுக்க  முடியும் என்று  அறைகூவல்  விடுத்தார்.

ஆர்ப்பாட்டமானது   மே  தினத்தின்  போராட்ட  சிறப்பு அம்சங்களையும்,  பல்வேறு  பிரச்சினைகளுக்காக  நடக்கும்   தனித் தனியான போராட்டங்கள்  அனைத்தும்  ஒன்றிணைய வேண்டிய அவசியத்தையும்  உணர்த்துவதாக  அமைந்தது.

தகவல்
விவசாயிகள்  விடுதலை  முன்னணி.
புரட்சிகர  மாணவர்-  இளைஞர்  முன்னணி
தருமபுரி. தொடர்புக்கு;  99433   12467 .

திருச்சியில் மே தின பேரணி : செய்தி – படங்கள்

0

திருச்சியில் மே தின பேரணி
போராடு…ஒன்றிணைந்துபோராடு,  செங்கொடி எந்திபோராடு!

சிக்காக்கோவில்1886-ம் ஆண்டு கோடானு கோடி பாட்டாளி வர்க்கத்தின் உரிமைகளுக்குகாக போராடி தங்கள் இன்னுயிரை ஈர்ந்த தொழிலாளிகளின் நினைவாக உலகம் முழுவதும் மே முதல் நாள் உலகதொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி போன்ற புரட்சிகர அமைப்புகளின் சார்பாக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாலை 5 மணியளவில் மரக்கடை பகுதியிலிருந்து பறைமுழக்கத்துடன் பேரணி தொடங்கியது. ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர் கோபிநாத் பேரணியை துவக்கி வைத்தார். பேரணி பறைமுழக்கத்தோடு முன்னேறி செல்ல இளம்தோழர்களின் நடனம் பார்வையாளர்களைவெகுவாக கவர்ந்தது. தொழிலாளர்வர்க்கத்தின் கோரிக்கைகள் குறித்தும், இந்தியாவில் இன்று தொழிலாளர்களின் நிலைகுறித்தும், அரசின் பாசிச நடவடிக்கையை அம்பலப்படுத்தும் வகையிலும் “எல்லாமே கார்ப்பரேட்டுக்குனா என்னாமயித்துக்கு கவர்மெண்ட்டு”  முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சாலையின் இருபுறங்களிலும் உள்ள மக்கள் ஆர்வமாக பிரசுரங்களை வாங்கிபடித்து தங்கள் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர். சுமார் ஒன்றரை மணிநேரம் பேரணி சென்றது.

சரியாக 7 மணியளவில் ஆர்ப்பாட்டம் துவங்கியது. பாய்லர் ப்ளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் பொதுச்செயலர் தோழர் சுந்தரராசு அவர்கள் தலைமையேற்று பேசுகையில் “இந்தியா முழுவதும் RSS-BJP ன் பாசிச ஆட்சிக்கு எதிராக பல்வேறு மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். அப்போராட்டத்தை தனித்தனி பிரச்சினைகளாக பிரித்து போராட்டத்தின் தன்மையை சீர்குலைக்க முயல்கிறது RSS-BJP கும்பல். தனியார்மய, தாராளமய, உலகமய, மறுகாலனியாக்க கொள்கைகள் இன்று விவசாயிகள், தொழிலாளர்கள், சாமானிய மக்களின் வாழ்வாதாரங்களை பறித்து வருகிறது. இதைமுறியடிக்க வேண்டுமெனில் போராடக்கூடிய மக்கள் ஒன்றிணைந்து போராடவேண்டும், செங்கொடி ஏந்தி போராட வேண்டும்.” என்றார்.

அவரைத்தொடர்ந்து மக்கள் கலைஇலக்கியக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலர் தோழர் ஜீவா கண்டன உரையாற்றுகையில் “இது உழைப்பாளர்களின் தினம். 130 ஆண்டுகளுக்கு முன் தொழிலாளர்கள் தங்கள் உதிரம் சிந்தி உரிமைகளை பெற்றெடுத்த நாள்.  ஆனால் இன்று தொழிலாளர்களின் நிலை இதை கொண்டாடக்கூடிய நிலையில் இருக்கிறதா ? உரிமைக்கேட்டு போராடவேண்டிய தொழிலாளியை, வேலைப்பிச்சை கேட்கவேண்டிய நிலைக்கு தள்ளியிருக்கிறது முதலாளித்துவம். இன்று சாரயக்கடைக்கு எதிராகபோராடிக் கொண்டிருக்ககூடிய மக்கள், எந்தஅரசியல் கட்சிகளையும் நாடாமல்தன்னெழுச்சியாக தாமாகவே அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு போராடுகிறார்கள். அதுதான் விடுதலைக்கான வழி.” என்றார்.

அவரைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் பொருளாளர் தோழர்.செல்வராஜ் பேசுகையில் “இந்தஅரசு தான் எல்லாருக்கும் வேலை, உடை, இருப்பிடம், சுகாதாரம், ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் செய்யனும், ஆனா அது செய்யறது இல்ல, சரி நாமே பாத்துக்கலாம்னா அதையும் விட்டுவைக்கமாட்டேங்குது. கார்ப்பரேட் முதலாளிகளுடைய லாபத்துக்காக சட்டத்துக்கு மேல சட்டத்தைபோட்டு ஒட்ட சுரண்டுது. இத நம்பி வாழ முடியாது. இதமாத்தனும்னா பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தான் ஒரே தீர்வு” என்றார்.

அடுத்ததாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின்பொருளாளர் தோழர் பிரித்திவ் பேசுகையில் “இன்றைய சூல்நிலையில் கல்வியை கார்ப்பரேட்மயமாகவும், காவிமயமாகவும் மாற்றுவதற்க்காக RSS-BJP கும்பல் முயற்சி செய்து வருகிறது. இந்தியாவுல பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் கவர்மெண்டு கக்கூஸ விட கேவலமாகத்தான் இருக்கு. இதுல இந்தியாவின் கல்வி தரத்தை உலகத்தரத்துக்கு உயர்த்த போகுதாம் இந்த வானரக்கூட்டம். அடுத்து சாமானியன் யாரும் உயர்கல்வியில் நுழையவேக்கூடாதுனு நீட்நுழைவுத்தேர்வு கொண்டு வர்றான். ஏற்கனவே இந்தியாவுல 93% MBA படிச்சவன்,  80%  இன்ஜினீரிங் படிச்சவனுக்குவேலை இல்லை. ஆனால் தனியார் பொறியியல் மற்றும் மேலாண்மைகல்வி நிறுவனம்பெருகிக்கொண்டே போறதுக்கு காரணம் என்ன ? வேலையில்லா பட்டாளத்தை உருவாக்கி, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மலிவான கூலி உழைப்புக்கு இளைஞர்களை உருவாக்கி தருவதுதான் அதன் நோக்கம். அனைவருக்கும்கல்வி, அனைவருக்கும் வேலை வேண்டுமெனில்அது பகத்சிங் பாதையான புரட்சியால்தான் சாத்தியம்” என்றார்.

சுமைப்பணித் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்புத்தலைவர் தோழர் ராஜா பேசுகையில் இந்த சமூகம் ஒரு வரலாற்றுக் கடமையை நினைவு கூறுகின்றது  இந்தியாவில் தொழிலாளி வர்க்கம்  போராடி  பெற்ற உரிமைகளை பறித்தெடுத்துள்ளது. அதனை மீட்டெடுக்கும் வகையில் இன்றைய மே நாள் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. உதாரணமாக ஐல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் எந்த அரசியல் வாதிகளையும் அதிகாரிகளையும்    நம்ப வில்லை. கடைசி மூன்று நாட்கள் மக்கள் அதிகாரத்தின் பாடல்கள் மெரினா கடற்கரையெங்கும் பற்றி பரவியது. சீப்பை மறைத்தால் கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என அரசு நினைத்தது அது பலிக்கவில்லை. மாணவர்கள் இளைஞர்கள் சொந்த காலில் நின்று போராடினார்கள்; வெற்றியும் பெற்றார்கள்.

கீழடியில் நடந்த தொல் பொருள் ஆய்வில் BJP யின் துரோகத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் ஆய்வை பார்வையிட வந்த தமிழிசையை   விரட்டி அடித்துள்ளனர். டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் எங்களுடைய அமைப்புதான் துவங்கி வைத்தது. சில இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக போராடுகின்றார்கள்.  யாரையும் நம்பவில்லை.  இன்று டெல்லி தமிழகத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றது.   மோடி தமிழக மக்களின் போராட்டத்தை பார்த்து மிரண்டு போகின்றார். மத்திய அரசின் சொத்து ரயில்வே அவற்றின் ரயில் பெட்டிகள் தண்டவாளங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. இதனால் குட்செட் தொழிலாளர்கள் வாழ்வு கேள்விக்குறியாகிவிட்டது. BHEL போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமல்ல உங்கள் நிழலை தவிர உங்கள் உயிரை தவிர எதுவும் நமக்கு சொந்தமில்லை அனைத்தும் தனியார் முதலாளிகளிடம் ஒப்படைத்துவிட்டார் மோடி. இந்த அரசு நிர்வாக அமைப்புகள் நமக்காக இல்லை என்பதால் இந்த மே நாளில் நாம் இங்கு கூடியிருக்கின்றோம். நமக்கான அரசமைப்பை நாமே உருவாக்கிக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என கூறி தனது உரையை முடித்தக்கொண்டார்.

அடுத்தாக அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் தோழர் பழனிச்சாமி பேசுகையில் அரசு வேலை தரவில்லை என்பதால் MA,BA,BE  படித்த இளைஞர்கள் சொந்தமாக சிறு முதலீடு போட்டு தரைக்கடை போட்டால் அதற்கும் வேட்டு வைக்கின்றது இந்த அரசும் போலீசும். மக்களுக்கு தண்ணீர் தர வக்கில்ல அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியல. இதனால எந்த தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டாலும் நாங்கள் அவர்களுக்காக போராடுகின்றோம். பெரிய பெரிய கடைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கின்ற போலீசும் கமிஷ்னரும் எங்களை தெருவோர வியாபாரி என அடையாள அட்டை கொடுத்து ஓயாமேரி சுடுகாட்டுக்கு விரட்டப் பார்க்கின்றார். சென்னை சில்க்ஸ்சையும் போத்திசையும் சாரதாசையும் ஓயாமேரிக்கு விரட்டுவார்களா? முன்பெல்லாம் திருடனை பார்தது பயப்படுவோம் இன்று போலீசை பார்த்து பயப்பட வேண்டியுள்ளது. ட்ராபிக் போலீசு ஒரு பக்கம் இன்னொரு பக்கம் எல்லன்டோ என அடுத்தடுத்து வசூல் வேட்டை நடத்துகின்றனர். அன்றாடம் திருச்சி போலீசு  10 ஆயிரம் கல்லாக்கட்டுகின்றது.  இந்த கேவலத்தை கைவிடுங்கள் எங்களை போன்ற வியாபாரிகளை அடையாள அட்டைகளை காட்டி மிரட்டாமல் வாழவிடுங்கள் என முடித்தார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய மகஇக தோழர்  கோவன் பேசுகையில் தமிழகம் என்பது தற்போது அரசியல் போராட்டக்களமாக மாறி நிற்கின்றது. குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே! அடிக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே! மூடு கடையை எவன் வருவான் பார்ப்போம்! எங்க ஊரில் இனி டாஸ்மாக்கு கிடையாது அடிச்சித் தூக்கு! எங்கள் அமைப்பு பாடியதால கடைய அடிச்சி ஒடைக்கின்றார்களா? இல்லை அடிச்சி உடைக்கின்றதால நாங்க பாடினோமா? இதில் எது முந்தி என்றால் மக்களின் நடைமுறைதான் முந்தி என்று பார்க்க வேண்டும். மக்களின் போராட்டம் முன்பு போல் அரசிடம் மனுகொடுப்பதாக இல்லை. மாறாக சாராயக்கடை எங்க ஊருக்கு வேண்டாம் நாங்களே மூடிக்கொள்கின்றோம் என மக்கள் தங்கள் அதிகாரத்தை தாங்களே நிலைநாட்டிக் கொள்கின்றனர். அகவே தான் சொல்கின்றோம் மக்கள் அரசியல் கண்ணோட்டத்தை பெற தொடங்கிவிட்டனர். மக்களின் போராட்டம் பழைய மாதிரி இல்லை. புதிய வடிவத்தை கையில் எடுத்துவிட்டனர். மோடி போன்ற பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு இது வேறு தமிழகம் என்பதை மக்கள் புரியவைக்க துவங்கிவிட்டனர்.

மே தினம் என்பது உரிமைகளை மீட்டெடுத்த நாள் அந்தவகையில் இந்த மே நாளில் தமிழகம் போராட்டக்களமாக மாற்றியுள்ளது. இந்த அரசாங்கம் ஆளத்தகுதியிழந்துவிட்டது என்பதால் மக்கள் அரசியல் அறிவு பெற்று போராட துவங்கிவிட்டார்கள். அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட என்ற வடிவேலுவின் காமெடி தான் கவருமென்டு பற்றி மக்களின் கருத்தாக உள்ளது.  ஜல்லிக்கட்டு போராட்டத்தில் “ஜல்லிகட்டு வேண்டும் ! பீட்டாவை தடை செய்! என துவங்கிய போராட்டம் விசாயம் நீட் தேர்வு மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டம் காவிரி அனைத்திலும் தமிழகத்துக்கு துரோகம் செய்த மத்திய அரசின் துரோகத்தை புரிந்து கொண்டவுடன் போராட்டம் அரசியல் வடிவம் பெற்று “நரேந்திர மோடி நீ மெரினா பக்கம் வாடி” என மக்கள் முழங்கினர். நாடு நல்லா இருக்க ஒரு மாநிலம் தியாகம் பண்ணனும் என்கின்றான் BJP-க்காரன்; தமிழகமும் இந்த நாடும் நல்லாயிருக்க BJP யை தியாகம் பன்னுகின்றோம் என மக்கள் முடிவு செய்து விட்டனர். நாட்டின் வளங்களை பன்னாட்டு கம்பெனிக்கு தாரைவார்க்கும் செயலை மோடி விரைந்து செய்து வருகின்றார். தட்டிக் கேட்கும் மக்களை தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் தேசத்துரோகிகள் என முத்திரை குத்துகின்றது BJP-RSS கும்பல்.  மக்களை திசைதிருப்ப யோகா செய்யுங்கள் என பல கோடிகள் செலவில் விளம்பரம் செய்கின்றனர். விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு என்ன கேட்டார். அம்பானிக்கு 5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யிரிங்களே விவசாயி கடனை தள்ளுபடி செய்யிங்க என கேட்டால்  எச்சி ராஜா என்ன சொல்லுராரு அப்சல் குருவோட இவருக்கு தொடர்பு இருக்கு என அவதூறு செய்கின்றார்.

ஜல்லிகட்டுக்கு முன்னாடி தமிழ் மக்களை சாராயமும் இலவசமும் வழிநடத்தியது. ஜல்லிக்கட்டுக்கு பின்னாடி அரசியல் பார்வை வழிநடத்துகின்றது. எனவே இது வேற தமிழ்நாடு எவ்வளவு பேர வைச்சி பிளாக் பண்ணுனாலும் நெடுவாசலுக்கு மக்கள் போயே தீருவார்கள். உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. உலகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றது. அதில் தமிழகம் வேகமாக பயணிக்கிறது. அதை நோக்கி முன்னேறுவோம் தோழர்களே! என தனது உரையை முடித்தார்.

இறுதியாக விண்ணதிரும் முழக்கத்தோடு சுமைப்பணித் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர் குத்புதீன் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த பேரணி – ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள் பெண்கள் என சுமார் 350 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
திருச்சி


திருச்சி சுமைப்பணி தொழிலாளர்களின் மே தின கொடியேற்றம் !

  1. மே நாள் காலை 9 மணி அளவில் பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் திருச்சி BHEL கைசிலை அருகே கொடி யேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தோழர்.சுந்தரராசு தலைமையேற்றார். தோழர்.உத்ராபதி செங்கொடியேற்றி மே தின உரை நிகழ்த்தினார். தொழிலாளர்களும் தோழர்களும் திரளாக கலந்துகொண்டனர். குழுமியிருந்த தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
  2. திருச்சி ரயில்வே குட்செட்டில் இயங்கும் சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தலைவர் தோழர்.குத்புதின் தலைமையேற்றார். மகஇக தோழர்.ஜீவா அவர்கள் கொடியேற்றி வாழ்த்துரை வழங்கினார். மக்கள் அதிகாரத்தின் தோழர்கள் பாடிய புரட்சிகர பாடல்கள் குழுமிநின்ற தொழிலாளர்களுக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் அமைந்தது. இவ்வமைப்பின் தோழர்.நிர்மலா அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்.

இறுதியாக சு.தொ.பா.சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர்.ராஜா பேசுகையில் மே தின போராட்டம் என்றால்   ஆலைவாயில்களில் மட்டும் நடந்த நிலைமாறி ரோடெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ரயில்வே நிறுவனம் தனியார்வசம் ஒப்படைக்கப்படுகின்றது. சரக்கு  கட்டண உயர்வு தண்டத் தீர்வைகள் அதிகரிப்பினால் சிறு ஒப்பந்ததாரர்கள் வேலையெடுக்கவே அஞ்சுகின்றார்கள். நேரடியாக  சரக்கை கையாலும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விளைவு சுமைத்தூக்கும் தொழிலாளர் வேலை பறிபோகின்றது. டெல்ட்டாவின் வறட்சியால் ஏற்றுமதி (உரம், நெல் தானியங்கள், சிமெண்ட்) இறக்குமதி பாதிப்படைகின்றது. ஒரு நாளைக்கு 1000 பேருக்கு மேல் வேலைதரக்கூடிய இந்த இடத்தில் மாசத்துக்கு நான்கு நாட்களுக்கு கூட வேலையில்லாத பரிதாபத்தையும் வாகனப் போக்குவரத்துமில்லாத சுடுகாடுபோல் காட்சியளிக்கின்றது.  தொழிலாளர்களின் எதிரி ஒன்றாக நிற்க்கின்றான். தொழிலாளர்களாகிய நாம் மட்டும் பல சங்கங்களாக பிரிந்து கிடந்து என்ன பயன் ? எனவே சங்கங்கடந்து ஒரே அணியில் நின்று போராடுவதுதான் ஒரே தீர்வாக அமையும் என தனது உரையை முடித்துக் கொண்டார். இறுதியாக தோழர்.தனக்கொடி நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

கூட்டத்தின் இறுதயில் வெடி வெடித்து குழுமிநின்ற தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. வேலையே இல்லாத சூழ்நிலையிலும் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

தகவல்
சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம்
திருச்சி