Thursday, July 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 562

தூத்துக்குடி : தேவர் சாதி வெறியை எதிர்த்த PRPC தோழர் அரிராகவன் கைது !

38

தூத்துக்குடியில் தேவர் சாதிவெறியர்களை அம்பலப்படுத்தி சுவரொட்டி ஒட்டிய PRPC தோழர் அரிராகவன் கைது! ஆதிக்க சாதிவெறிக்கு ஒத்தூதும் அதிகார வர்க்கம்!

டுமலையில் தலித் இளைஞர் சங்கர், தேவர்சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் 18 &19.03.16 ல் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. பொதுவாக ஆணவக்கொலை என்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வரும் சூழலில் குறிப்பாக தேவர்சாதி வெறியை அம்பலப்படுத்தி நம் அமைப்பு மட்டுமே சுவரொட்டி ஒட்டியது. அதிலும் அரசு வேலைக்கு கெஞ்சும்போது பிற்பட்ட சாதியாக பம்மி பதுங்குவதையும், ஊருக்குள் தாழ்த்தப்பட்டவர் களிடம் மட்டும் சத்ரியனாக அருவா தூக்குவதையும் அம்பலப்படுத்தி, இந்த சாதிவெறியர்களுக்கு இடஒதுக்கீட்டை ரத்து செய்யும்படி வலியுறுத்தி முழக்கம் வடிக்கப்பட்டிருந்தது.

PRPC-Poster

இது வன்முறையை தூண்டும் விதமாகவும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாகவும் இருப்பதாக கூறி மீளவிட்டான் கிராம நிர்வாக அலுவலர் சிவபெருமாள், தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார். உடனே களமிறங்கினர் ‘ஆய்’வாளர் சுரேஷ்குமார் தலைமியிலான சட்டத்தின் காவலர்கள்! இதற்கு பின்னால் இருந்து தாசில்தாரும் கண்காணித்துள்ளார். என்னே கடமை உணர்ச்சி!

இப்படித்தான் சுவரொட்டி ஒட்டிய 19.03.16 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் PRPC மாவட்ட தலைவர் தோழர் அரிராகவனின் வீட்டுக்கு வந்தது போலீசு படை. என்ன விசயம் என்று விசாரித்த தோழர் அரி தான் கைது செய்யப்படுவதை உடனே தோழர்களுக்கும், சக வழக்குரைஞர் களுக்கும் தகவல் தந்தார். அவரை கைது செய்த தெற்கு காவல் நிலைய ஆய்வாளர்,தோழரிடம் “போஸ்டரை யார் யார் ஒட்டினீர்கள்? எங்கு அச்சிட்டீர்கள்” என்று கேட்டார். “நான் மட்டும்தான் ஒட்டினேன்; மற்ற விசயங்களை நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்” என்று காவல்துறையின் விசாரணைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அரிராகவன். போலீசோ “நான் ஒட்டவில்லை” என்று கூறினால் போதும் விட்டுவிடுகிறோம் என்று ஆசைகாட்டியது.

கைது செய்யப்பட்டது சனிக்கிழமை என்பதால் எப்படியாவது “உள்ளே தள்ளிவிடுவது” என்று சதியுடன் செயல்பட்டது அதிகார வர்க்கம். வேண்டுமென்றே தாமதப்படுத்தி இரவு 7.00 மணிக்குமேல் நீதிபதியின் வீட்டிற்கு தோழரை கொண்டு சென்றனர்.

கைதைக் கேள்விப்பட்டு சனி இரவிலும் சுமார் 30 வழக்கறிஞர்கள் தோழர் அரிக்கு ஆதரவாக அணிதிரண்டு நீதிபதியைprpc-ariragavan-arrested-4 முற்றுகையிட்டனர். அதில் தூத்துக்குடி பார் கவுன்சிலின் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துவிட்ட நம் அமைப்பு வழக்கறிஞர்களும் அடக்கம்.

காவல்துறையினர் குற்றம் சாட்டும் ஒருவரை (7 ஆண்டுகளுக்கு உட்பட்டு தணடனை தரக்கூடிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும் பட்சத்தில்) நீதிமன்றக்காவலில் வைக்க நினைத்தால் அதற்கான விளக்கத்தை தரவேண்டும். அப்படி எதையும் போலீசார் முன்வைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி வழக்கறிஞர்கள் விளக்கும்போது நீதிபதியின் செல்போன் ஒலித்தது. உடனே எழுந்து சற்று தள்ளிச்சென்று “அவர்கள்தான் வந்திருக்கிறார்கள்” என்று யாருக்கோ விளக்கிவிட்டு வந்தார்.

வழக்கறிஞர்கள் வாதத்தை தொடர்ந்தனர். “வழக்கறிஞராக 13 ஆண்டுகளாக இதே கோர்ட்டில் வாதாடிவரும் அரிராகவன் பலவேறு சமூகப் பிரச்சினை களுக்காக தொடர்ந்து போராடிவருபவர். மக்கள் உரிமைப்பாதுகாப்பு மையத்தின் பிரதிநிதியும் கூட. இவரை நீதிமன்றக்காவலில் அடைக்க எந்த அவசியமும் இல்லை. ஏற்கனவே சுவரொட்டிக்கான ஆதாரம் உங்கள் வசம் உள்ளது. சாட்சியாக இருப்பது VAO., போலீசுதான். இவர் இவர் எந்த ஆதாரத்தை அழிக்கப் போகிறார்? எந்த சாட்சியை கலைக்கபோகிறார்? இல்லை தலைமறைவாகத்தான் போகப் போகிறாரா?” என்று போலீசின் நோக்கத்தை தோலுரித்தனர். வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் சுரேஷ்குமார் தேவர் சாதியை சேர்ந்தவர். ஆனால் தோழர் அரியோ சம்மந்தப்பட்ட இரண்டில் எந்த சாதியையும் சேர்ந்தவரல்ல. பொதுநலனுக்காகவே இந்த சுவரொட்டியை ஒட்டியுள்ளார் என்று காவல்துறையை குறிப்பாக குற்றம் சாட்டினர். இது குறித்த அர்னேஷ்குமார் வழக்கின் தீர்ப்பு உதாரணத்தையும், வழிகாட்டுதலையும் சுட்டிக்காட்டினர்.

ஓராண்டுக்கு முன் (2015-ல்) நம் அலுவலக சுவற்றில் உள்ள பெயர்ப் பலகையை பார்த்துவிட்டு மனித உரிமை என்ற பெயரை பயன்படுத்தியதாக வழக்கு பதிவுசெய்து வைத்திருந்தனர். அந்த காரணத்தையும் போலீசார் இப்பொழுது முன்வைத்தனர். நாம் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற பெயரில் செயல்பட்டதையும், அந்த பெயரிலேயே கடந்த காலத்தில் உச்ச நீதிமன்றம் வரை பல வழக்குகளில் வாதிட்டு வருவதையும் விளக்கினர். இப்பொழுது அமைப்பின் பெயரை மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் என்று மாற்றி செயல்பட்டு வருவதையும் விளக்கினர்.

நம்தரப்பு வாதங்களை கேட்டபின் “ கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் நான் கன்சல்ட் பண்ணிவிட்டு வந்துடரேன்” என்று கூறிவிட்டு மீண்டும் செல்போனில் பேசியபடி சென்றார். யாரிடம் கன்சல்ட் செய்யப் போயுள்ளார்? அல்லது யாரிடம் உத்தரவு பெற்றுவருகிறார்? இது என்ன நீதிபரிபாலனை? என்று அனைவருமே சந்தேகத்துடன் நீதிபதியின் செயல்பாடுகளை பார்த்தனர். திரும்பி வந்தவுடன் “ரிமாண்ட் பண்ணுகிறேன்” என்று அறிவித்தார்.

வழக்கறிஞர்களோ “நாங்கள் பிணை மனு தாக்கல் செய்கிறோம். இப்பொழுதே பிணை தர 437 CRPC படி உங்களுக்கு அதிகாரம் உள்ளது. செய்யுங்கள்” என்றனர். மீண்டும் செல்போனை எடுத்துக்கொண்டு எழுந்து சென்றுவிட்டு வந்து “பிணை வழங்கமாட்டேன்” என்றார். முன்கூட்டியே எழுதப்பட்ட நாடகத்தின் ஒத்திகையைப்போல இருந்தது இக்காட்சி.

தெருவில் திடீரென முளைத்த போலீசு வாகனங்கள், பைக்குகள், கார்கள்; வீட்டிலிருந்து வாசலையும் தாண்டி கேட்கும் வாதங்கள் என பிரையண்ட் நகர் 4வது தெரு களைகட்டியது. என்ன? என்ன? என்று அனைவரும் நின்று விசாரித்து சென்றவண்ணம் இருந்தனர். நேரம் கடந்து கொண்டிருந்தது.

முடிவாக தோழரின் உடல்நலைக் குறைவை முன்வைத்து மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப உத்தரவிட கோரி மனுதாக்கல் செய்தோம். வேறு வழியின்றி இம்மனுவை ஏற்றுக்கொண்டார் நீதிபதி. இரவு 9.00 மணிக்கு மேல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அட்மிட் செய்தனர். உடனே பரிசோதனைகள் துரிதமாக நடத்தப்பட்டன.

இரவு 1.00 மணிக்கு எக்ஸ்ரே எடுத்ததிலிருந்தே அரசின் வேகத்தையும், விரைவில் சிறைக்குள் தள்ளவேண்டும் என்ற நோக்கத்தையும் புரிந்துகொள்ள முடிந்தது. தவிர்க்க முடியாமல் சிகிச்சை தொடரவே இரு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கண்காணிக்க வைத்ததை தாண்டி எதுவும் செய்யமுடியாமல் கையைப் பிசைந்தபடி தவித்தனர் அதிகாரிகள். ஒருவழியாக திங்கள் காலை மருத்துவமனையிலிருந்து சிறைக்கு கொண்டு சென்றனர்.

இந்த கைது ஏன்? அதுவும் ரிமாண்டா? – என்பதை புரிந்துகொள்ள முடியாமல் தன்னிடம் கேள்விகேட்ட வழக்கறிஞர்களுக்கு தோழர் அரி நம் நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை முன்வைத்து விளக்கினார். உயர்கல்வித் துறையைப் போலவே நீதித்துறையை பார்ப்பன இந்துமதவெறி அமைப்புக்கள் கைப்பற்ற செய்துவரும் எத்தனிப்புகளையும், உழைக்கும் மக்களை பிளவுபடுத்த சாதிவெறியூட்டுவதையும், இந்தியாவை சுரண்ட இவர்கள் ஆதரிக்கும் பன்னாட்டு கன்பெனிகளையும், எதிர்த்து நிற்பதுதான் காரணம் என்பதை அரசின் இந்த கைதின் மூலம் புரிய வைத்தார்.

நாம் வழக்கு பதிவு செய்தவர் தேவர் சாதியை சேர்ந்தவர் என்று வாதிட்டதால், உடனே தூத்துக்குடியிலுள்ள பிற காவல்நிலையங்களிலும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சுவரொட்டியால் பாதிக்கப்பட்டதாக யாராவது புகார் தந்தனரா? என்று கேள்வி எழுப்பியதால் மறுநாளே தேவர் ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் தேவர்சாதி வெறியினர் ASP அருண் சக்தி குமாரிடம் புகார் அளித்துள்ளனர். ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று பீற்றிக்கொள்ளும் பத்திரிக்கைகள் இவ்வழக்கு பற்றிய போலீசின் செய்தியையே (வன்முறையை தூண்டும் சுவரொட்டி ஒடியதாக) வெளியிட்டனர். நடுநிலை, பத்திரிக்கை தர்மம் என்பதெல்லாம் ஏமாற்று என்பதை, உண்மையை எழுதும் தகுதியை இழந்துவிட்டதை உணர்த்திக்கொண்டனர் ஊடகவியலாளர்கள். அதேநேரம் தேவர் சாதியினர் தமது புகார் மனுவில் தாங்கள் சாதி மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாகவும், உடுமலையில் நடந்தது ஒரு தனிப்பட்ட நபரின் குடும்ப பிரச்சினையில் நடந்த கொலைதான் என்றும் கூறியுள்ளதை அப்படியே போட்டு தமது உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளது தினகரன் நாளேடு.

திங்கட்கிழமை நீதிமன்றத்தில் பிணை கிடைத்துவிடும் என்று கணித்த அதிகார வர்க்கம் தோழரை முதலில் தூத்துக்குடி கிளைச்சிறையில் அடைத்தனர். பின்னர் பெயில் கிடைத்தாலும் உடனே வெளியே வரவிடக் கூடாது என்று தாமதப்படுத்தவே பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பினர்.

பிணை மனு மீதான விசாரணை மதியம் 3.00 மணிக்கு விசாரணைக்கு வந்தது. சுமார் 20 வழக்குரைஞர்கள் அரியின் சார்பில் ஆஜராகினர். நீண்ட வாதப் பிரதிவாதங்களை நீதிபதியுடன் நடத்தினர். முடிவில் எதிர்ப்பார்த்தது போல பிணை வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி.

பன்னாட்டு முதலாளிகளின், தரகு முதலாளிகளின் எடுபிடுகளான, ஆதிக்க சாதிவெறியர்களுக்கும் இந்து மதவெறியர்களுக்கும், பாசிச ஜெயாவுக்கும் அடியாட் படையான போலீசு அவ்வளவு எளிதாக நம்மை விட்டுவிடுவார்களா என்ன? சந்தேகத்துடன் விசாரித்தோம். வடபாகம் மற்றும் சிப்காட் போலீசார் தென்பாகத்தினரின் வழியில் தமது பங்கிற்க்கு களமிறங்கினர்.

இப்படி தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனையோ, ஸ்டெர்லைட்டின் அதிகாரிகளையோ இப்படி எந்த போலீசும் உள்ளே தள்ள முயற்சித்ததில்லை. உண்மையில் இவர்களை எதிர்த்த நம் தோழர்களை ஒடுக்கத்தான் அதிகார வர்க்கம் ஆலாய்ப் பறக்கிறது.

ஒரு நீதிபதி பிணை தருகிறார். ஆனால் அதே கட்டிடத்தின் மற்றொரு அறையில் மற்றொரு நீதிபதி இதே குற்றத்திற்காக ரிமாண்ட் செய்ய உத்தரவிடுகிறார். நாளை 22.03.2016 செவ்வாயில் இன்றைய நாடகத்தின் காட்சிகள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து அரங்கேறும். இந்த கட்டமைப்பு தோற்றுவிட்டது. தான் எதற்காக இருப்பதாக சொல்லிக் கொள்கிறதோ அதற்கு எதிர்நிலையாக மாறிவிட்டது. ஆதிக்க சாதி வெறிப்படுகொலைகள் அன்றாட நிகழ்வாகிவிட்ட தென்மாவட்டத்தில் தான் அதை எதிர்ப்பவர்களும், கண்டிப்பவர்களும்தான் அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள். இந்த காவல்துறையும், நீதித்துறையும் இங்கு எதற்காக இருப்பதாக சொல்லப்படுகிறதோ அதற்கு எதிராகத்தான் செயல்படுகிறது என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்?

தோழரை மீண்டும் அடுத்தடுத்த வழக்கில் இருந்து பிணையில் எடுக்கவும், ஆதிக்க சாதிவெறிக்கும், (அ)நீதித்துறை மற்றும் இந்து மதவெறி பாசிசத்திற்க்கும் எதிராக அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்கவும் தோழர்கள் முனைந்துள்ளனர்.

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், தூத்துக்குடி.

ஜே.என்.யூ – ஹைதராபாத் மாணவர்கள் உரை – வீடியோ

1

Speech by JNU student Anand

எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஜே.என்.யூ மாணவர் ஆனந்த் ஆற்றிய உரை! பாருங்கள் – பகிருங்கள்!

ஆனந்த், ஜே.என்.யு

_______________________

எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஜே.என்.யூ முன்னாள் மாணவர் சின்னப்ப ராஜன் ஆற்றிய உரை! பாருங்கள் – பகிருங்கள்!

திரு. சின்னப்ப ராஜன், ஊடகவியலாளர்

__________________________

எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஹைதராபாத் பல்கலை மாணவர் வெங்கட் ராவ் ஆற்றிய உரை! பாருங்கள் – பகிருங்கள்!

வெங்கட் ராவ், ஹைதாராபாத் பல்கலைக்கழக மாணவர்

____________________________

கத்தினால் பொய் உண்மையாகுமா ? கேலிச்சித்திரங்கள்

0
கத்தினால் உண்மை என்கிறது டைம்ஸ் நவ்

ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக ஹோண்டா தொழிலாளிகள்

தொழிலாளிகளும் மாணவர்களும் ஒரணியில் மோடி அரசோ பீதியில்!

ஹரியானாவில் இருக்கும் ஹோண்டா ஸ்கூட்டர் தொழிலாளிகளுக்கு ஆதரவாக ஜே.என்.யூ மாணவர்களும், ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக ஹோண்டா தொழிலாளிகளும் போராடுகிறார்கள். மோடி அரசுக்கு இதை விட அதிர்ச்சியளிக்க கூடிய செய்தி எது?

கேலிச்சித்திரம்: V. Arun / Rebel Politik

_______________________________________

இந்தியப் பெண்கள் மீதான பாலியவல் வன்முறைஇந்தியப் பெண்கள் மீதான வன்முறை – கியூபாவின் Alex Falcó Chang பார்வையில்!

நன்றி: Cartoon Movement

__________________________________

கத்தினால் உண்மை என்கிறது டைம்ஸ் நவ்கத்திப் பேசினால் பொய்யும் உண்மையாகும் என்கிறது டைம்ஸ் நவ்!
கேலிச்சித்திரம்: V. Arun / Rebel Politik

___________________________________

டொனால்ட் ட்ரம்ப் கேலிச்சித்திரம்டொனால்ட் டிரம்ப் – சுதந்திர தேவி சிலையை உடைத்து குளிர்காயும் அமெரிக்காவின் ஐ.எஸ்.ஐ.எஸ் வேட்பாளர்!
கேலிச்சித்திரம் – Ramses Morales Izquierdo, Cuba
நன்றி: cartoon movement

__________________________________

பேஸ்புக் – வினவு கேலிச்சித்திரம் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள்

இராணுவத்துடன் படுப்பதா தேசபக்தி ? காஷ்மீர் மாணவி நேர்காணல்

63
காஷ்மீர் மக்களின் போராட்டம்: "இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம்,"
காஷ்மீர் மக்களின் போராட்டம்: "இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம்,"

JNU நேரடி ரிப்போர்ட் – 6

ஸ்ரீநகரில் இருக்கும் தர்ஹா
ஸ்ரீநகரில் இருக்கும் தர்ஹா

“தோழர், எனது பெயர், புகைப்படம் மற்றும் வேறு அடையாள விவரங்களை நீங்கள் வெளியிடக் கூடாது என்கிற உத்திரவாதம் கொடுத்தால் தான் என்னால் பேச முடியும்”.

“ஏன்”

”உங்களுக்கே தெரிந்திருக்கும்.. இப்போது கண்ணையா குமாரை பயங்கரமான அரக்கனாக காட்டி விடலாம் என்கிற அவர்களது உத்தி பூமராங் ஆகி விட்டது. அடுத்து உமரை அப்படி சித்தரிக்கத் துவங்கியிருக்கிறார்கள். இப்போது புதிதாக வளாகத்தில் உள்ள காஷ்மீரிகளை குறிவைத்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்… எனவே “ஒரு காஷ்மீரி மாணவி” என்று மட்டும் குறிப்பிடுங்கள் போதும்”

“நிச்சயம் அவ்வாறே குறிப்பிடுகிறோம் தோழர்.. சரி, இந்தியா நூறு துண்டுகளாக உடையட்டும் என்கிற முழக்கத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?”

“இப்போது மட்டும் என்ன அது ஒரே துண்டாகவா இருக்கிறது?”

“நீங்கள் யோசித்து தான் பேசுகிறீர்களா?”

“இன்றைய நிலையில் காஷ்மீரிகளோ, வட கிழக்கு இந்தியர்களோ.. எங்களுக்கெல்லாம் யோசிப்பதற்கு நேரமில்லை. எங்களுக்காக நீங்கள் தான் யோசிக்க வேண்டும்”

“இப்படிக் குதர்க்கமாக பேசினால் எப்படி? ஏற்கனவே நீங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்கள் என்றல்லவா இங்கே பிரச்சாரம் செய்யப்படுகிறது?”

“நாங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்களா? நாங்கள் இந்தியாவை எந்தளவுக்கு வெறுக்கிறோமோ அதே அளவுக்கு பாகிஸ்தானையும் வெறுக்கிறோம். எங்களை சுதந்திரமாக விட்டால் போதும் பிழைத்துக் கொள்வோம்”

”இந்திய அரசு உங்களுக்காக நிறைய செலவு செய்கிறது நிறைய சலுகைகள் கொடுத்துள்ளது என்றெல்லாம் வெளியே பிரச்சாரம் செய்யப் படுகிறதே? அவ்வளவையும் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக பேசுவது நன்றி கெட்டத்தனம் என்றல்லவா ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சொல்கிறார்கள்?”

”முதலில் எங்களுக்காக செலவு செய்கிறது என்று சொல்வதே பித்தலாட்டமான வாதம்… எங்களை வைத்து செல்வு செய்கிறது என்று சொல்ல வேண்டும். அப்படி செலவு செய்யப்படும் பணம் எங்கே போகிறது தெரியுமா? ஒவ்வொரு காஷ்மீரிக்கும் ஒரு இராணுவ வீரரை நிறுத்தியிருக்கிறது மத்திய அரசு. இராணுவம்தான் அத்தனை காசையும் தின்கிறது. இவர்களின் வேலை என்ன தெரியுமா? நல்ல வளமான இடத்தை ஆக்கிரமித்து முகாம் போட்டுக் கொள்கிறார்கள்.. அரசு ஒதுக்கும் காசில் நன்றாக குடித்து விட்டு பெண்கள் தனியே எதிர்ப்படும் போது அவர்கள் பார்க்கும் விதமாக தங்கள் ஜிப்பைத் திறந்து காட்டுகிறார்கள்….. உங்கள் குடும்பத்துப் பெண் பிள்ளைகளை அந்த இடத்தில் வைத்து யோசித்துப் பார்த்தால் தான் உங்களுக்கு எங்கள் வலி புரியும்”

“இந்த மாதிரியான அத்துமீறல்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கிறதல்லவா?”

“அத்துமீறல்கள் என்று ஒரே வார்த்தையில் எங்கள் வாழ்க்கையை நீங்கள் சுருக்க முடியாது. ஒன்றரை லட்சம் மக்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.. சுமார் பத்தாயிரம் பெண்கள் அரை விதவைகளாக இருக்கிறார்கள்… அரை விதவை என்ற பதத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

”சொல்லுங்கள்”

”இந்தப் பெண்களின் கணவன்மார்களெல்லாம் இராணுவத்தால் ‘விசாரணை’ என்ற பேரிலோ அல்லது வேறு முகாந்திரங்களைச் சொல்லியோ அழைத்துச் செல்லப்பட்டவர்கள்… எத்தனையோ ஆண்டுகளாகியும் அவர்களெல்லாம் திரும்பவில்லை.. கட்டியவன் இருக்கிறானா செத்துப் போய் விட்டானா என்று கூட இவர்களுக்குத் தெரியாது. இறந்து விட்டான் என்று உத்திரவாதமாக தெரிந்தால் கூட மறுமணம் செய்து கொண்டு புது வாழ்க்கையைத் தொடங்கலாம்.. அல்லது மனதை சமாதானப்படுத்திக் கொண்டு எஞ்சிய வாழ்க்கையைக் கழிக்கலாம்.. தங்கள் கணவன்மார்களுக்கு என்ன நேர்ந்ததென்றே இவர்களுக்குத் தெரியாது… ஆண்டுக்கணக்கில் இப்படி அரை விதவைகளாகவே கழித்து வருகிறார்கள்…”

”இதெல்லாம் இந்தியாவின் முக்கிய ஊடகங்களில் வந்ததில்லையே…”

“எப்படி வரும்? ஜே.என்.யு விவகாரத்தில் பார்க்கிறீர்கள் அல்லவா? வேட்டையாடும் வெறியோடு எங்கள் மீது பாய்ந்து குதறும் வாய்ப்புக்காகத்தானே காத்திருக்கின்றன இந்த ஊடகங்கள்.. அரை விதவைகள் பற்றிச் சொன்னேன் அல்லவா..? அதே போல் எண்பதினாயிரம் அனாதைகளை உங்கள் இராணுவம் எங்களுக்குப் பரிசளித்துள்ளது தெரியுமா. இப்போது சொல்லுங்கள் இதெல்லாம் எங்களுக்கு உங்கள் அரசாங்கம் கொடுத்த சலுகைகளா?”

“ஆனால் இவற்றையெல்லாம் நீங்கள் ஏன் இந்தியாவின் மற்ற பகுதி மக்களிடம் எடுத்துச் செல்லக் கூடாது?”

“தோழர்.. புரிந்து கொள்ளுங்கள்.. அங்கே ஒவ்வொரு காஷ்மீரிக்கும் ஒரு இராணுவ வீரனையோ போலீசையோ உளவாளியையோ நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.. நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியாது.. நாங்கள் எங்களைச் சுற்றி இருக்கும் யாரையும் நம்ப முடியாது. யாரையும், எதையும் சந்தேகத்தோடு பார்த்தால் தான் பிழைத்துக் கிடக்கவே முடியும்.. ஆள் தெரியாமல் யாரிடமாவது எதையாவது பேசப் போனால் ‘எல்லையைக் கடக்க முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதியின் புகைப்படம் இதோ’ என்று மறுநாள் ரத்தம் தோய்ந்த எங்கள் சடலங்கள் தலைப்புச் செய்தியில் வந்து விடும்.. எப்போதும் யாரோ உங்களைக் கவனித்துக் கொண்டே இருக்கும் அந்த உளவியல் சித்திரவதையை மற்றவர்கள் உணர்வது கடினம்.”

”ஆனால், இது ஒடுக்கப்படும் எல்லா மக்களும் எதிர் கொள்வது தானே? தண்டகாரண்யாவிலும் வட கிழக்கிலும் கூட மக்கள் இதே துயரங்களைத் தானே எதிர் கொள்கிறார்கள்?”

“நான் தெளிவாக ஒன்றைச் சொல்லி விடுகிறேன். நாங்கள் புரட்சிக்காக காத்துக் கொண்டிருக்க முடியாது. இந்திய துணைக்கண்டமெங்கும் ஒடுக்கப்படும் மக்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை தான். அவர்களோடெல்லாம் ஒரு ஐக்கியத்தைக் கட்டமைப்பதன் மூலம் தான் இந்திய ஆளும் வர்க்கத்தை வெல்ல முடியும் என்பதும் எதார்த்தமானது தான்… ஆனால், அப்படியான ஒரு ஐக்கியம் வரும் வரைக்கும் எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? செத்து மடிய வேண்டுமா? என்றோ ஒரு நாள் வரும் புரட்சிக்காக இன்றைக்கு நாங்கள் பிணங்களை எண்ணி விளையாடிக் கொண்டிருக்க வேண்டுமா? எங்கள் மாநிலத்தில் மூன்றில் ஒருவர் உளவியல் ரீதியாக மன அழுத்த நோயால் (Dipression) பீடிக்கப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? தோழர்… நாங்கள் செத்து வீழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். முதலில் உடனடியாக நாங்கள் எங்கள் எதிர்ப்பை பதிய வைக்க வேண்டும்.. எங்கள் குரல்கள் நின்று விட்டால் குரல்வளைகள் அறுத்து எரியப்பட்டு விடும். ஒடுக்கப்பட்ட மக்களின் பரந்துபட்ட ஒற்றுமைக்காக நாங்கள் என்றுமே நிற்கிறோம்.. ஆனால் அதுவரை சும்மா இருக்க முடியாது..”

”சரி. இதை ஊடகங்கள் தான் கண்டு கொள்ள மறுக்கின்றன. ஆனால், நீங்கள் அதை ஊடகங்களிடம் எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளீர்களா?

”குனான் போஷ்புரா சம்பவங்களைப் பற்றி வாசித்திருப்பீர்களே… 90 பெண்கள் உங்கள் இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டனர். அதில் எட்டு வயது சிறுமியும் 84 வயது கிழவியும் அடக்கம். நாங்கள் என்ன செய்யட்டும்? உங்கள் இராணுவம் வரும் போது எங்கள் பெண்கள் தயாராக படுத்துக் கொள்ள வேண்டுமா? அதைத் தான் தேசபக்தி என்பீர்களா? ஒன்று தெரியுமா… இந்த சம்பவங்கள் அம்பலமான போது சில இந்திய பத்திரிகையாளர்கள், காஷ்மீரி பெண்களை அவர்களது கணவன்மார்களால் திருப்திபடுத்த முடியவில்லை என்பதால் தான் இந்திய இராணுவ வீரர்களை உறவுக்கு அழைத்துள்ளனர் என்று எழுதினர்..  இப்பேர்பட்ட ஊடகங்களிடமா எங்கள் வலிகளைச் சொல்ல முடியும் என்கிறீர்கள்?”

”தோழர்.. எங்களால் உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது… ஆனால், ஆர்.எஸ்.எஸ் காரர்கள் காஷ்மீரி பண்டிட்டுகளை முன்னிறுத்திக் காட்டுகிறார்கள். நீங்கள் தான் பண்டிட்டுகளை விரட்டியடித்தீர்களாமே? பண்டிட்டுகளின் துயரம் மட்டும் துயரம் இல்லையா?”

”பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறியது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது தான்…. ஆனால், நீங்கள் கதையின் ஒரு பக்கத்தை மட்டுமே வாசித்திருக்கிறீர்கள். மறுபக்கத்தையும் பாருங்கள்.. நான் எனது அம்மாவிடம் இது பற்றி கேட்டிருக்கிறேன். பண்டிட்டுகள் வாழ்ந்த பகுதிகளில் திடீரென முஜாஹிதின்கள் பெயரில் சில நோட்டீசுகள் தோன்றியிருக்கின்றன. அதில் பண்டிட்டுகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. உடனடியா இந்திய இராணுவம் அவர்களை பாதுகாப்பாக இராணுவ ட்ரக்குகளில் ஏற்றி வெளியேற்றியது என்று என் அம்மா என்னிடம் சொல்லி இருக்கிறார்… நான் ஒன்று கேட்கிறேன்.. ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு ஏதாவது பாதுகாப்புப் பிரச்சினை என்றால் அரசு என்ன செய்ய வேண்டும்? அவர்களைப் பாதுகாக்க வேண்டுமா வெளியேற்ற வேண்டுமா?”

காஷ்மீர் மக்களின் போராட்டம்: "இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம்,"
காஷ்மீர் மக்களின் போராட்டம்: “இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம்,”

“நீங்கள் இதை சதித்திட்டம் என்கிற கோணத்தில் மட்டுமே பார்க்கிறீர்களா?”

”இல்லை அப்படியும் ஒரு கோணம் இருக்கிறது என்பதை முன்வைக்கிறேன். மற்றபடி போராளிகள் பண்டிட்டுகளோடு முறையான ஒரு உரையாடலை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்பதும்… சுதந்திர காஷ்மீரில் அவர்களும் ஒரு அங்கம் என்பதையும் புரிய வைத்திருக்க வேண்டும் என்பது தான் எனது கருத்தும் கூட.. அந்த வகையில் இதில் போராளிகளின் தவறும் உள்ளது. நான் கதையின் மறுபக்கம் என்று சொன்னதில் வேறு சில அம்சங்களும் உள்ளன,,,”

“அதைப் பற்றி விளக்குங்களேன்”

”ஷேக் அப்துல்லா நிலச்சீர்திருத்தத்தை அமல் செய்வதற்கு முன் பெரும்பாலான நிலங்கள் காஷ்மீரில் சிறுபான்மையினராக இருந்த பண்டிட்டுகளிடம் தான் இருந்தது. நாங்களெல்லாம் அவர்களிடம் கூலிகளாக இருந்தோம். நிலம் பகிர்ந்து கொடுக்கப்பட்ட பின்பு அவர்களே கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறத் துவங்கியிருந்தனர். அதற்கும் முன் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் எனது தாத்தாவின் காலத்தில் பண்டிட்டுகள் தான் பெரும்பான்மையான அரசு வேலைகளில் இருந்தார்கள்.. நாங்களோ படிப்பறிவற்றவர்கள்.. எங்களை அவர்கள் தீண்டத்தகாதவர்களாகவே நடத்தினர். எங்கள் சமூகங்களுக்குள் கலப்புத் திருமணம் போன்ற எந்த சம்பந்தங்களும் ஏற்பட்டதில்லை… நாங்கள் கிட்டத்தட்ட இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டோம். சொல்லப் போனால் பண்டிட்டுகள் வெளியேறியது தான் நான் இப்போது ஜே.என்.யுவில் சேர்ந்து படிக்கவும், உங்கள் முன் அமர்ந்து ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருக்கவும் காரணம்”

”சம உரிமை என்கிற அளவில் சொல்கிறீர்கள்… மற்றபடி நடைமுறையில் பண்டிட்டுகளோடு உங்களுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தன?”

”தோழர் அதெல்லாம் மிகப் பழைய விவகாரங்கள்… சிலவற்றை எனது தாத்தா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் அரசு பதவிகளில் இருப்பதால் எங்களை கிள்ளுக்கீரைகளாகவே மதிப்பார்கள்.. உதாரணமாக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நாங்கள் எங்கள் நிலத்தைப் பதிவு செய்யச் செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்… ஒரு பண்டிட் என்ன செய்வார் என்றால்.. பத்திரத்தின் வாக்கியங்களை வேண்டுமென்றே தவறாக பொருள் வரும் படி எழுதி விடுவார்… பிறப்பு இறப்பு சான்றிதழ் தரும் அதிகாரி என்றால் குலாம் முகமது என்கிற பெயரை வேண்டுமென்றே கும்மு என்று எழுதி விடுவார்.. இதையெல்லாம் சரிசெய்ய நாங்கள் ஆண்டுக் கணக்கில் அரசாங்க அலுவலங்களின் படிகளில் ஏறி இறங்க வேண்டும்… இந்த மாதிரி நிறைய சொல்லலாம்.. ஒன்று சொல்லுங்கள், பண்டிட்டுகள் உள்நாட்டு அகதிகளாக இருக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் நீலிக்கண்ணீர் வடிக்கிறதே… எங்காவது ஒரு பண்டிட் பிச்சையெடுப்பதையோ சோற்றுக்கே சிரமப்படுவதையோ காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்..”

“இருபதாம் நூற்றாண்டுத் துவக்கத்தின் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களின் கதையைப் போன்றதுதானோ இது?”

”உண்மை தான்.. சமீபத்தில் நான் ஒரு கட்டுரை வாசித்தேன். தமிழ்நாட்டுப் பார்ப்பனர் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை.. அவர்களை திராவிட இயக்கம் தான் திட்டமிட்டு வெளியே விரட்டியடித்ததைப் போல் எழுதியிருந்தார்..”

”எல்லா பார்ப்பனர்களும் ஒன்றே போல் சிந்திப்பது ஒரு ஆச்சர்யம் தான்.. சரி, இந்து பண்டிட்டுகளை விடுங்கள்.. ஜம்மு காஷ்மீரின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் சுதந்திர கோரிக்கை குறித்து என்ன கருதுகிறார்கள்?”

”ஜம்மு மற்றும் லடாக் பகுதி மக்கள் விடுதலையை ஆதரிக்கவில்லை. விடுதலைக்கான கோரிக்கை காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் தான் உயிர்ப்போடு இருக்கிறது. இதில் என்னுடைய கருத்து என்னவென்றால், மற்ற மக்கள் பிரிவுகளிடையே முறையான ஒரு உரையாடலை முன்னெடுக்க போராளிகள் தவறி விட்டார்கள் என்றே கருதுகிறேன். காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள இசுலாமிய மத அடையாளம் மற்றவர்களை நெருங்கவிடாமல் செய்கிறது”

”மத அடையாளம் பற்றிக் குறிப்பிட்டீர்கள்… வகாபிசம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.. எங்கள் பக்கத்தில் முசுலீம்களிடையே வகாபிய போக்கு தற்போது செல்வாக்கோடு வளர்ந்து வருகிறது…”

”சரியான கேடுகெட்டவர்கள் இந்த வகாபிகள்.. இப்போது காஷ்மீரில் தர்காக்களை இடிக்க வேண்டும் அது இது என்று உளறிக் கொண்டு திரிகிறார்கள். வகாபிய இழிமகன்கள் இந்திய அரசின் உளவாளிகளாக இருப்பார்கள் என்று எனக்கு நீண்ட நாட்களாக சந்தேகம் உள்ளது”

“கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்களே?”

”மேலும் கடுமையான வார்த்தைகள் கிடைக்கவில்லை தோழர். வரலாற்று ரீதியில் எங்களுக்கு இசுலாம் அறிமுகமானதே சூஃபி ஞானிகளின் வழியே தான். அது மிகவும் சகிப்புத்தன்மை கொண்டது என்பதை நான் சொல்லத் தேவையில்லை என்று கருதுகிறேன்… இப்போது வகாபியம் என்ன செய்கிறதென்றால் எங்கள் சுதந்திர போராட்டத்திற்கு இனம் கடந்து மத சாயம் பூசுகிறது. இசுலாமிய வெறியையும் பாகிஸ்தானையும் தாலிபானையும் முடிச்சுப் போடுவதும் அதன் தொடர்ச்சியாக எங்கள் சுதந்திரப் போராட்டத்தை பயங்கரவாதமாக கட்டமைத்துக் காட்டுவதும் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எளிதானது தானே? அந்த வகையில் இவர்கள் மறைமுகமாக இந்திய ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்கிறார்கள்”

”எப்படி அவ்வளவு உத்திரவாதமாகச் சொல்கிறீர்கள்?”

“சமீபத்தில் ஒரு தர்ஹா இடிக்கப்பட்டது… எல்லாருக்கும் அதை இடித்த வஹாபிய கும்பல் யாரென்பது நன்றாகவே தெரியும்.. இந்தியாவுக்கும் தெரியும் – அங்கே தான் இந்தியாவுக்குத் தெரியாமல் ஒரு அணுவும் அசையாதே.. ஆனால், ஒருவர் மீது கூட போலீசு நடவடிக்கை எடுக்கவில்லை. தர்ஹா இடிக்கப்பட்ட பின் மக்களிடையே இரண்டு பிரிவினரும் அடித்துக் கொண்டனர். இந்த சண்டை சச்சரவுகளின் போக்கில் எங்களது சுயநிர்ணய உரிமை குறித்த கேள்வியே மறந்து போனது. இந்திய ஆளும் வர்க்கம் எதிர்பார்ப்பதும் இதைத் தானே?”

”போராளி இயக்கத்திற்குள் சாதிய வேறுபாடுகள் உள்ளதெனச் சொல்லப்படுவது பற்றி?

”பக்கர்வாலா மற்றும் குஜ்ஜார் சாதி இசுலாமியர்கள் அனேகமாக போராளிகளாகவும், சையது, கான் போன்ற உயர்சாதிகளாக கருதப்படும் இசுலாமிய பிரிவினர் மட்டுமே இவ்வியக்கங்களின் தலைமையில் இருப்பதாகவும் சொல்லப்படுவதுண்டு. இந்தக் கூற்று முழுமையாக உண்மையும் அல்ல முழுப்பொய்யும் அல்ல. சையது, கான் பிரிவினரும் கூட போராளிகளாக மடிந்துள்ளனர். இசுலாம் காஷ்மீருக்கு அறிமுகமான போது அங்கே இருந்த அத்தனை சாதிப் பிரிவுகளையும் அப்படியே ஏற்றுக் கொண்டது. ஏற்றத்தாழ்வுகள் எந்த மாற்றமும் இன்றி நூற்றாண்டுகளாக அப்படியே நிலவி வந்தன. போராளி இயக்கங்களை விடுங்கள், காஷ்மீரி இசுலாமிய சமுதாயத்தில் பல்லாண்டுகளாக இந்த சாதிப் பாகுபாடு நிலவி வந்தது. இப்போதும் கூட சையது மற்றும் குஜ்ஜார் பிரிவினரிடையே திருமண பந்தங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றல்ல. அவ்வாறு அரிதாக நடக்கும் திருமண உறவுகள் கூட வர்க்கச் சமன்பாட்டை கணக்கிலெடுத்துக் கொண்டே நடக்கின்றன.  விமர்சனங்கள் வைப்பதென்றால், சமூகத்தில் நிலவிய சாதிப் பாகுபாடுகளை போக்குவதற்கு போராளி இயக்கங்கள் முழு மனதோடு முயற்சிக்கவில்லை என்று வைக்கலாம்”

”இந்திய இராணுவத்தால் நீங்கள் எதிர் கொள்ளும் துன்பங்களைப் பற்றிச் சொன்னீர்கள்… ஈழம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

”ஓ… நிறைய.. எங்களுக்கெல்லாம் பிரபாகரன் ஒரு மிகப் பெரிய நாயகன் தெரியுமா? அவரை எங்கள் சகோதரராகத் தான் நாங்கள் கருதுகிறோம். பிரபாகரன் மரணம் அடைந்த அன்று நாங்கள் பள்ளத்தாக்கில் பந்த் அனுசரித்தோம்… அதே போல் பிரபாகரனின் மகன் புகைப்படங்கள் வெளியான போதும் நாங்கள் எங்கள் குழந்தைகளில் ஒருவன் இறந்து போனதைப் போல் உணர்ந்தோம்.. அன்றைக்கு மக்கள் கூடும் பொதுவிடங்களில் எல்லாம் மரண வீட்டைப் போல் அமைதி நிலவியதை நானே பார்த்தேன்…”

“பெரியார், திராவிட இயக்கங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

“காஷ்மீரில் இருந்த வரை கேள்விப்பட்டதில்லை.  இங்கே ஜே.என்.யு வந்த பிறகு நிறைய கேள்விப்படுகிறேன்… பெரியாரை வாசிக்க வேண்டும் என்று உத்தேசித்திருக்கிறேன்”

“தமிழ்நாட்டைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்”

காஷ்மீரில் இந்திய இராணுவம்
காஷ்மீரில் இந்திய இராணுவம்

”ஓ… நீங்கள் மற்ற இந்தியர்களைப் போல் அல்லவென்று தெரியும். வடக்கே இருக்கும் தேசியக் கற்பிதங்கள் உங்களிடம் செல்லாது என்று தெரியும். ஆர்.எஸ்.எஸ் போற்றிக் கொண்டிருக்கும் தேசியம் என்கிற சித்திரத்தை நீங்கள் மதிப்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எங்களைப் பொறுத்தவரை, பாகிஸ்தானின் எல்லைக் கோடு எங்கள் பக்கத்தில் தானே இருக்கிறது? மேலும் நாங்கள் முசுலீம்களாகவும் பிறந்து தொலைத்து விட்டோமே?”

”சரி, பாரதிய ஜனதா பி.டி.பி கூட்டணி பற்றி சொல்லுங்களேன். பி.டி.பி ஒரு பிரிவினைவாதக் கட்சி என்றல்லவா அறியப்படுகிறது.. அப்படி இருக்கும் போது பாரதிய ஜனதா எப்படி அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டது?”

”தவறான தகவல்… பி.டி.பி போலி விடுதலை பேசும் – அதையும் மென்மையான குரலில் பேசும் – ஒரு துரோகத்தனமான கட்சி. போராளி இயக்கங்களில் இருந்து சரணடையும் கைக்கூலிகள் மற்றும் இராணுவமே உருவாக்கி வைத்திருக்கும் உளவாளிகளின் கட்சி தான் பி.டி.பி. நீங்கள் தோழர் தானே.. உங்களுக்குப் புரியும் விதமாக சொல்கிறேன் – இவர்கள் முதலாளிகளே உருவாக்கி விடும் தொழிற்சங்கங்களைப் போன்ற கருங்காலிகள்”

“ஆனால், அவர்கள் தானே தேர்தலில் வென்றார்கள்?”

”உண்மை தான்.. மோடியின் நாடாளுமன்ற பிரச்சாரத்திற்கு ஜம்மு ஏமாந்து போனது…. அதே நேரம் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் உமர் அப்துல்லா கெட்ட பெயர் வாங்கியிருந்தார்.. இதெல்லாம் தேர்தலில் அந்தக் கூட்டணிக்கு சாதகமாகப் போய் விட்டது.. ஆனால் இந்தக் கூட்டணி பி.டி.பியின் அரசியல் தற்கொலை என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்”

“எப்படிச் சொல்கிறீர்கள்?”

“ஒரு சிறிய உதாரணம் மட்டும் சொல்கிறேன்.. சாதாரணமாக இராணுவத்தால் கொல்லப்படும் போராளி ஒருவரின் சவ ஊர்வலத்திற்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள்.. ஆனால், சமீபத்தில் இறந்து போன முப்தி முகமதுவின் சாவுக்கு சில ஆயிரம் மக்கள் கூட வரவில்லை.. ஒரு அனாதைத் தெருநாயைப் போல முப்தியை குழியில் இட்டு மூடினார்கள்..”

”சரி தோழர்.. எமது கேள்விகள் முடிந்தன. எங்களுக்கு நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி நீங்கள் ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?…”

”தமிழ்நாட்டு மக்களை எங்கள் பக்கம் நிற்கச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறேன்.. “எங்கள்” என்பதில் காஷ்மீரிகள் மட்டுமல்ல ஜே.என்.யுவையும் சேர்ந்தே குறிப்பிடுகிறேன்.. மிக்க நன்றி!”

–    தொடரும்

– வினவு செய்தியாளர்கள்.

முந்தைய பாகங்கள்:

inner_design2

JNU மாணவர் விஷ்மய் நேர்காணல்

0

JNU நேரடி ரிப்போர்ட் 5

”பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளையும், கல்வி முறையையும், கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களையும் இந்துத்துவம் குறி வைப்பது இது முதல் முறை அல்ல. ஒரு நீண்ட தாக்குதல் வரிசை நம்முன் இருக்கிறது.. அந்த அடிப்படையில் ஜே.என்.யு மீதான தாக்குதல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

”சரி தான்.. இந்த சண்டையில் நாங்கள் மட்டும் எதிரணியில் நிற்கவில்லை.. எங்கள் வரிசையில் சென்னை ஐ.ஐ.டி, பூனா திரைப்படக்கல்லூரி மாணவர்கள் என்று நிறைய பேர் நிற்கிறார்கள். ஆனால், இவைகளெல்லாம் வெறும் தாக்குதல் என்கிற நிலையில் தான் உள்ளது. அவர்கள் இறுதி வெற்றியை இன்னமும் அடைந்து விடவில்லை.. மாணவர் சமுதாயம் அத்தனை சுலபத்தில் அவர்களை வெற்றியடைய விடாது”

Comrade Vishmay
AISA அமைப்பின் நீண்ட கால உறுப்பினரான விஷ்மய்

AISA அமைப்பின் நீண்ட கால உறுப்பினரான விஷ்மய் மிக நிதானமாகப் பேசுகிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விமர்சன கண்ணோட்டத்தோடும், அது முன்வைக்கும் தேசியத்தை ஆய்வுக் கண்ணோட்டத்தோடும் அணுகுகிறார். தங்களது போராட்டங்கள் குறித்தும், தற்போதைய நெருக்கடியையும் மிகவும் நம்பிக்கையோடு அலசுகிறார். நாங்கள் உரையாடிக் கொண்டிருந்தது ஜே.என்.யு வளாகத்தில் அமைந்திருக்கும் நிர்வாக அலுவலக கட்டிடத்திற்கு நேர் எதிரே இருந்த பூங்காவில்.

பூங்காவிற்கும் அலுவலக கட்டிடத்திற்கும் இடையில் இருந்த பகுதியில் ஜே.என்.யு-வின் சமூக அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த பெண்களுக்கான கல்வி மையத்தின் பேராசிரியர் அருணிமா “தேசியம்” குறித்த கற்பிதங்கள் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார். சுற்றிலும் சில ஆயிரம் மாணவ மாணவிகள் அமைதியாக அந்த உரையைக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஹோண்டா தொழிற்சங்கத்திலிருந்து வந்திருந்த ஒருசில தோழர்களும் அந்தக் கூட்டத்தினிடையே காணப்பட்டனர்.

”தோழர், ஒவ்வொரு தாக்குதலின் போதும் அவர்கள் அடுத்த தாக்குதலை நீங்கள் எந்த விதிகளின் அடிப்படையில் எதிர் கொள்ள வேண்டும் என்பதை நிர்ணயித்து விடுகிறார்கள். இந்த முறையும் கூட ஜே.என்.யு மாணவர்கள் தங்கள் ”தேசி பக்தியை” உத்திரவாதம் செய்ய வைத்துள்ளார்கள். தேசியம், அரசியல் சாசனம் போன்றவற்றின் புனிதத்தை ஜே.என்.யு ஏற்றுக் கொண்டு விட்டதாக சொல்லலாமா?

”நான் அப்படிக் கருதவில்லை தோழர். எந்த விவாதங்களிலும் இது வரை ‘விலக்கப்பட்டதாக’ புனிதமானதாக கருதப்பட்ட தேசியத்தை நாங்கள் விவாத மேடைக்கு இழுத்து வந்துள்ளோம் என்றே கருதுகிறேன்”

“அப்படியென்றால், நீங்கள் அரசியல் சாசனத்தின் புனிதம், நாட்டின் எல்லைக் கோட்டின் மீது சொல்லப்படும் புனிதம் போன்றவைகளை உள்ளடக்கி அவர்கள் முன்வைக்கும் தேசியம் பற்றிய கற்பிதங்களை எதிர்ப்பீர்கள் என்று எடுத்துக் கொள்ளவா?”

”தோழர், இந்த விவாதங்களில் எமது அமைப்புக்கென்று உள்ள நிலைப்பாடுகளின் வரம்பில் நின்று நான் உரையாடுவேன் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். மற்றபடி விவாதம் என்று வந்த பின் எல்லா முரண்பட்ட கருத்துக்களும் மேடைக்கு வந்தாக வேண்டும் அல்லவா? ஆர்.எஸ்.எஸ் சொல்லும் தேசியம் பற்றிய கற்பிதங்களும், நாங்கள் சொல்லும் தேசியமும் மட்டுமில்லை, சுயநிர்ணய உரிமையை முன்வைப்பவர்களின் வாதங்களும் கூட விவாத மேடைக்கு வந்தாக வேண்டும் தானே? அனைத்து கருத்துக்களும் மோதிக் கொள்ளும் விவாதத்தின் போக்கில் சரியானது தன்னை நிலை நிறுத்திக் கொள்ளட்டும்”

“சரிசமமாக வைத்து விவாதிக்கும் அருகதை ஆர்.எஸ்.எஸ்-க்கு உண்டா என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது. அந்த விவாதத்திற்குள் நான் செல்லவில்லை. தற்போது சூடாக நகர்ந்து கொண்டிருக்கும் பிரச்சினையின் தாக்கத்தில் யு.ஜி.சி ஆக்கிரமிப்பையும் புதிய கல்விக் கொள்கை தொடர்பான பிரச்சினைகளையும் மறந்து விட்டீர்கள் தானே?”

jnu-discussion“இல்லை.. மாணவர்களின் நினைவுத் திறனை அவர்கள் குறைத்து மதிப்பிட்டார்கள் எனில் அதைத் தவறு என்பதைப் புரிய வைப்போம். அவர்கள் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் சூழ்ந்து நின்று தாக்குகிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை, அதில் ஏதாவது ஒரு முனையில் அவர்களை முறியடித்து விட்டால் மொத்தமாகச் சரிந்து விடுவார்கள் என்பது. அவர்களின் திட்டங்கள் ஒவ்வொன்றும் உள்ளூர பிணைக்கப்பட்டவை. புதிய கல்விக் கொள்கை கல்வி உதவித் தொகையில் கைவைக்கும் திட்டமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.. நாங்கள் யு.ஜி.சி முற்றுகை போராட்டத்தைத் துவங்கினோம்.. மாணவர்களின் கவனத்தைக் ரோஹித்தைக் கொன்றதன் மூலம் கலைக்கப் பார்த்தார்கள், ரோஹித்திடமிருந்து பார்வையை விலக்க ஜே.என்.யு-வில் கால் வைத்துள்ளார்கள். நீங்கள் ஒரு முனையில் அவர்களை வென்று முன்னேறினீர்கள் என்றால் அனைத்துக்கும் மையமாக உள்ள நாக்பூரை அடைவீர்கள்”

”ஜே.என்.யுவின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதல் ஓய்ந்த பின் வளாகத்தின் சூழலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்று கருதுகிறீர்கள்”

“ஜே.என்.யு வளாகம் என்பது இந்த நாட்டிற்குள் தானே இருக்கிறது? எனவே மொத்த நாடும் என்ன நிலைக்குச் செல்கிறதோ அதைத் தான் இந்த வளாகமும் பிரதிபலிக்கும் என்று கருதுகிறேன். எனது யூகம் என்னவென்றால், நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது – அந்த வாய்ப்பு நமக்கு மட்டுமின்றி அவர்களுக்கும்(ஆர்.எஸ்.எஸ்) சேர்த்தே கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நாட்டின் அரசியல் சூழலை முன்னேற்றப் பாதையில் செலுத்தும் சாத்தியம் எமக்கும், அதில் நாம் தோற்றுப் போனால் பிற்போக்கான பாதையில் செலுத்தும் சாத்தியம் அவர்களுக்கும் உள்ளது. ஆக, இந்தப் பிரச்சினையில் வெற்றி தோல்வி என்பதைக் கடந்து, விவாத மேடைக்கு வந்துள்ள தேசியத்தை முழுமையான பரிசோதனைக்கும் அலசலுக்கும் உட்படுத்த வேண்டும். மிக அரிதான சந்தர்பங்களில் தான் இந்த வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்”

“உங்கள் போராட்டம் இந்த வளாகத்திற்குள் மட்டுமே முடங்கிக் கிடப்பதாக இருக்கிறதே… தில்லி நடுத்தர வர்க்க மனநிலையில் உறைந்து போயிருக்கும் இந்துத்துவ அரசியலையும் அது ஏற்படுத்தியிருக்கும் ஒரு பொதுபுத்தியையும் உங்களால் இந்த வளாகத்திற்குள் இருந்து கொண்டு மாற்றியமைத்து விட முடியும் என்று கருதுகிறீர்களா?”

“குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் தோழர். வளாகத்திற்கு வெளியே நாங்கள் செல்லவில்லை என்பது முழு உண்மையில்லை. அதே போல் வளாகத்திற்கு வெளியே உள்ளவர்கள் எங்கள் அரசியலை சுத்தமாக புரிந்து கொள்ளவில்லை என்பதிலும் முழு உண்மையில்லை. நீங்களே கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்… ஹோண்டா ஆலைத் தொழிலாளர்கள் ஆதரவு தெரிவிக்க வந்துள்ளார்கள். மாருதி தொழிலாளர்களும் வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்துத்துவம் மக்கள் மத்தியில் விதைத்துள்ள நச்சுக் கருத்துக்களை முழு வீச்சில் எதிர்த்து முறியடிக்கும் அளவுக்கு நாங்கள் மக்களோடு ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பது ஓரளவுக்கு உண்மைதான். மேலும் ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு ஏற்கனவே தேசத்தின் புனித பிம்பம் என்கிற நிலைநிறுத்தப்பட்ட ஒரு உளவியல் உதவி செய்கிறது.. நாமோ மக்களின் மனங்களில் ஆழமான படிமங்களாய் உறைந்து விட்ட விசயங்களைக் கையாள்கிறோம். சொல்லப் போனால், நாம் எதிர் திசையில் பயணிக்கிறோம். உண்மை இருப்பது நாம் செல்லும் திசையில் தான் என்பதை மக்களை ஏற்றுக் கொள்ள வைப்பது மிகவும் கடினமான பணி. இப்போது தானே இவையெல்லாம் விவாதத்திற்கு வந்துள்ளது… போகப் போக நிலைமை மாறும். மோடியின் பொருளாதார தோல்விகள் எழுப்பும் நெருப்பின் மீது தேசியம் என்கிற பட்டுத்துணியைப் போட்டு மூடி விட நினைக்கிறார்கள்.. அது இறுதியில் எமக்கே சாதகமாக முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது…”

“ஆனால், இடதுசாரி சக்திகள் பிளவுண்டு கிடக்கிறதே? ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ரீதியில் ஒன்று திரட்டப்பட்ட சக்தியாக இருக்கும் அதே நேரம் அவர்களுடைய தாக்குதல்களை எதிர்கொள்பவர்கள் சிதறிக் கிடக்கிறார்கள் அல்லவா?”

“இந்தப் பிளவுகள் ஏற்பட்டதற்கு எப்படி பிரத்யேகமான வரலாற்றுக் காரணங்கள் இருந்ததோ அதே போல் மீண்டும் நாமெல்லாம் ஒரு நாள் இணைவதற்குத் தேவையான வரலாற்றுத் தேவைகளை இந்துத்துத்துவ பாசிசமே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது”

“எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?”

”தமிழ்நாட்டிலிருந்து ஒரு தோழர் வந்து ஜே.என்.யு வளாகத்தில் அமர்ந்து என்னோடு உரையாடுவார் என்றோ, என்னால் அவரோடு சுமார் ஒரு மணிநேரம் முரண்படாமல் பேச முடியும் என்றோ சில வருடங்களுக்கு முன் நான் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டேன். உண்மையில் அவர்கள் நம்மை ஒடுக்குவதாக நினைத்துக் கொண்டு தங்களின் கல்லறையைத் தாங்களே தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்”

நாங்கள் பேசிக் கொண்டே மெல்ல பூங்காவில் இருந்து வெளியே வந்தோம்… மாலை மணி ஏழாகியிருந்தது. வானம் வழங்கிய வெளிச்சத்தில் செம்மை ஏறியிருந்தது. மெல்லக் குளிர் பரவத் துவங்கியிருந்தது. அருணிமாவின் உரையை கை தட்டல்களோடு மாணவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். தமிழகத்திலும் கேரளத்திலும் தேசியம் என்கிற கற்பிதம் மக்களிடம் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதைக் குறித்து பேராசிரியர் அருணிமா பேசிக்கொண்டிருந்தார். பெரியாரின் தாக்கம் தமிழகத்தில் தேசியம் குறித்த புரிதலில் ஏற்படுத்தியிருக்கும் செல்வாக்கை விவரித்துக் கொண்டிருந்தார். அவரது உரையில் பெரியாரைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் வடக்கு மற்றும் வடகிழக்கு மாணவர்கள் ஆச்சர்யத்தோடு வரவேற்றுக் கரவொலி எழுப்பிக் கொண்டிருந்தனர். விஷ்மய் ஒரு புன்னகையோடு பேசினார்..

“பார்த்தீர்களா தோழர்? முன்பெல்லாம் நாங்கள் இங்கே கூட்டம் போட்டால் சில பத்து மாணவர்கள் தான் வருவார்கள். இப்போது ஆயிரக்கணக்கான மாணவர்களை நம்மை நோக்கித் தள்ளி விட்டுள்ளார்கள். பெரியாரை நாங்கள் கேள்விப்பட்டதோடு சரி. இப்போது அவரைக் குறித்து அறிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறோம். இந்துத்துவத்திற்கு எதிரான விவாதங்களில் சாத்தியமான எல்லா ஆயுதங்களையும் எடுக்க நம்மை அவர்கள் நிர்பந்தித்துள்ளார்கள்… இந்தப் போராட்டம் நிச்சயமாக முன்னேறிச் செல்லும் என்று நான் நம்புகிறேன்”

இந்த எதார்த்தம் தான் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு குலை நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய சிக்ஷக் மண்டல், அகில பாரதிய வித்யார்த்தி பரிசத், வித்யா பாரதி, இதிகாஸ் சங்கலன் சமிதி போன்ற பரிவார அமைப்புகளைக் கொண்டு கல்வித் துறையை ஆக்டோபசின் கரங்களைப் போல் வளைத்துள்ளது இந்துத்துவ கும்பல். கல்வித் திட்டத்தை மேலிருந்து இந்துத்துவமயமாக்குவது, அதற்கு எழும் எதிர்ப்புகளை ஏ.பி.வி.பி கும்பலைக் கொண்டு கீழிருந்து மடையடைப்பது என்கிற ஆர்.எஸ்.எஸ் திட்டத்திற்கு அவர்களே எதிர்பாராத திசைகளில் இருந்தெல்லாம் எதிர்ப்புகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.

இந்துத்துவ கும்பல் கல்வித்துறையின் மேல் கட்டவிழ்த்து விட்டுள்ள கொடூரத் தாக்குதல்கள் பல்வேறு முனைகளில் இருந்து தொடுக்கப்பட்டுள்ளன. ஒரு புறம், புதிய கல்விக் கொள்கை-2015 என்கிற பெயரில் மோடி அரசு அறிமுகப்படுத்தவுள்ள கல்வித் துறை சீர்திருந்தங்கள் கல்வித் துறைக்குள் கார்ப்பரேட்டுகளும் பன்னாட்டுக் கொள்ளையர்களும் நுழைய வழிவகை செய்கின்றது. நாம் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயிலிருந்தும் கல்வி வரி என்கிற பெயரில் வசூலிக்கப்படும் தொகையிலிருந்து தான் அரசு சார்பாக நடத்தப்படும் உயர் கல்வி நிலையங்களும், மற்ற அரசு கல்வி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.

தற்போது காட்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களின் படி, கார்ப்பரேட் நிறுவனங்களின் கல்வி வியாபாரக் கூடங்களுக்கும் நமது வரிப்பணம் திசை திருப்பி விடப்படும். மேலும், இடைநிலை பள்ளிக் கல்வியிலிருந்தே மாணவர்களுக்கு தொழிற்கல்வி வழங்குவது என்கிற பெயரில் நவீன குலக்கல்வி முறையையும் இத்திட்டம் உள்ளடக்கி இருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்திற்காக கார்ப்பரேட் கொள்ளைகளுக்கு அத்துக்கூலிகளாக மாணவர்களை பிடித்துக் கொடுக்கும் ஆள்பிடி ஏஜெண்டாக தனது அரசு இருக்க வேண்டும் என்பதற்காகவே குழந்தைத் தொழிலாளர் சட்டத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபக்கம் கல்வி வழங்க வேண்டிய கடமையில் இருந்து முற்றாக தனது பொறுப்புகளைக் கைகழுவ உள்ள மோடி அரசு, இன்னொரு பக்கம் அப்படி வழங்கப்படும் கல்வி முழுவதும் காவிமயமாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் அவிழ்த்து விடப்படும் அறிவியலுக்குப் புறம்பான உளறல்களின் தொகுப்புகளாக பாட புத்தகங்களை மாற்றி வருகிறது. புராண காலத்தில் விமானம், விநாயகனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி, மகாபாரதத்தில் அணுகுண்டு போன்ற புளுகு மூட்டைகளையே இனி வரலாறாக மாணவர்கள் படிக்க உள்ளனர்.

மாணவர்களின் சுயசிந்தனையை ஒழித்துக் கட்டி, அவர்களை இந்து வெறியேறிய மிருகங்களாகவும் கார்ப்பரேட்டுகளின் உழைப்புச் சுரண்டலை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் அடிமைகளாகவும் மாற்றியமைப்பதே ஆர்.எஸ்.எஸ் கும்பலின் திட்டம். பசு ஏன் புனிதம் என்றோ, சம்பூகனைக் கொன்ற ராமனை ஏன் தேசிய நாயகனாக ஏற்க வேண்டுமென்றோ கேள்வி எழுப்புவது தேசியத்தையே மறுப்பதற்கு ஒப்பானதாக சித்தரிக்கப்படுகிறது. ஜே.என்.யு விவகாரத்தை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தில்லி போலீசார் சமர்பித்த அறிக்கையில் மாணவர்களின் தேச விரோத செயல்களாக மாட்டுக்கறி தின்பதையும், மகிஷாசுரனை வணங்கியதையும் குறிப்பிட்டிருப்பது வெறும் முட்டாள்தனங்கள் அல்ல. இவையெல்லாம் இனி தேச துரோகங்கள்!

jnu-idea-ex-759மோடி முழு மெஜாரிடியுடன் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் கும்பல் களத்திலிறங்கி விட்டது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக காத்திருந்த திருடனின் கையில் வாக்காளர்கள் மே 2014ல் சாவியைக் கொடுத்தனர். ”வளர்ச்சி” என்கிற முகமூடியை உடனடியாக தூக்கியெறிந்து விட்டு இந்துத்துவ செயல்திட்டங்களை முழுமூச்சோடு அமல்படுத்த துவங்கினர். இதற்கிடையே 50 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் கிடைத்த அடி, தில்லியிலும் பீகாரிலும் கிடைத்த மரண அடி உள்ளிட்ட தோல்விகள் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் வேகத்தை மட்டுப்படுத்தும் என்று முதலாளிய அறிஞர்கள் கனவு கண்டனர்.

சர்வதேச ஏகாதிபத்திய மூலதனத்திற்கு தொண்டூழியம் செய்வதை சலசலப்புகளின்றியும் கவனச் சிதறல்களின்றியும் மோடி செய்ய வேண்டும் என்பது முதலாளிய அறிஞர்களின் எதிர்பார்ப்பு. ஆர்.எஸ்.எஸ் கும்பலோ மூலதன அடிமைச் சேவகத்திற்கு புதிய விளக்கங்களை எழுதிக் கொண்டிருக்கிறது. ஒரே கல்லில் கார்ப்பரேட் சேவையையும் காவிமயமாக்கலையும் நிறைவேற்றி விடத் துடிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கும்பலைப் பொறுத்தவரை தேர்தல் வெற்றி தோல்விகளை அவர்கள் இரண்டாம் பட்சமாகவே கருதுகின்றனர். இப்போதைய அதிகாரத்தைக் கொண்டு ஒவ்வொரு துறையாக – அதிலும் குறிப்பாக கல்வித் துறையை – மாற்றியமைத்து விட்டால் அதன் பாதிப்புகள் பல்லாண்டுகளாகத் தொடரும் என்றும் அதன் பலன்களை அறுவடை செய்வது சுலபம் என்று கணக்குப் போடுகிறது,

எனினும், காவி பயங்கரவாதிகள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றனர். சென்னை ஐ.ஐ.டியின் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திற்கு வந்த நெருக்கடியை பு.மா.இ.மு மாநிலம் தழுவிய அளவில் எடுத்துச் சென்று சிறப்பான பதில் மரியாதை வழங்கியதில் பின்வாங்கியது காவி கும்பல். பூனா திரைப்படக் கல்லூரியும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும் பணிய மறுத்து இன்றளவும் போராட்ட உறுதியோடு நிற்கின்றன. ஜே.என்.யுவின் சிலிர்ப்பு அடங்கும் முன் அலகாபாத் பல்கலைக்கழகத்திலிருந்து கலகக்குரல் எழுகின்றது.

பேராசிரியர் அருணிமாவின் உரை முடிந்து ஹோண்டா தொழிலாளர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். ”செவ்வணக்கம் செவ்வணக்கம்… நக்சல்பாரிக்கு செவ்வணக்கம்!” “ஒன்றே பாதை ஒன்றே பாதை நக்சல்பாரி ஒன்றே பாதை!”. சில மாணவர்களிடம் புழங்கிக் கொண்டிருந்த புரட்சிகர முழக்கங்களை ஆயிரக்கணக்கான மாணவர்களின் குரல்வளையில் திணித்து பெரும் சாதனையைப் புரிந்துள்ளது 56 இன்ச் மார்பு கொண்ட மத்திய அரசு. பாசிசத்தை எதிர்க்கும் இந்தப் போரில் தாம் மட்டும் தனியே நிற்கவில்லை என்பதை மாணவர்கள் தெளிவாக உணர்ந்து விட்டனர். மற்ற ஒடுக்கப்படும் பிரிவுகளைச் சேர்ந்த மக்களை நோக்கி மாணவர்கள் திரும்பியுள்ளனர்.

ஜே.என்.யு மாணவர்களுக்கு மக்களோடு ஐக்கியப்படுவதிலும், பாசிச எதிர்ப்பிலும் ஒளிமிக்க பாரம்பரியம் ஒன்றுள்ளது என்றாலும், இம்முறை அதை மீண்டும் நிரூபிக்க களமிறங்கியுள்ளனர். இந்த முறை ஜே.என்.யு தணித்து விடப்படவில்லை. அறிவித்துறையினர் மட்டுமின்றி நாடெங்கிலும் மாணவர் சமுதாயம் ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர். வடக்கே தில்லியில் வாலாட்டினால் தென்கோடித் தமிழகத்தின் தேனி மாணவர்கள் கொந்தளிப்பார்கள் என்பதை ஆர்.எஸ்.எஸ் கும்பல் எதிர்பார்த்திருக்காது. இந்த முறை புலியின் வாலில் நெருப்பைப் பற்ற வைத்துள்ளனர், அழியப்போவது ராவண ராஜ்ஜியமல்ல – ராம ராஜ்ஜியம் என்பதை உணர்த்தும் ஆவேசத்தில் அணிதிரள்கிறது மாணவர் சமுதாயம்.

Prof Arunima Speaking 550
பேராசிரியர் அருணிமா பேசுவதை கேட்கும் திரளான மாணவர்கள்

பல்கலைக்கழக வளாகங்களுக்குள் இந்துத்துவ திணிப்புகளுக்கு வருகின்ற எதிர்ப்புகளை வளாகங்களுக்கு வெளியே ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் கூலிப்பட்டாளங்கள் துணையுடன் எதிர்கொள்கின்றனர் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள். ஜனநாயகப்பூர்வமான அறிவுத்துறையினரை மொத்தமாக ”தேசவிரோதிகளாக” கட்டமைப்பது, தங்களது ‘உணர்வுகள்’ பாதிக்கப்பட்டதைப் போல் காட்டிக் கொண்டு ஊடகங்கள் வழியாக வெறியூட்டுவது, இவ்வாறு செயற்கையாக உருவாக்கப்பட்ட “பதட்டமான” சூழலைப் பயன்படுத்திக் கொண்டு நேரடியாகவும் தாக்குதல் தொடுப்பது என்ற வழிமுறையைப் பின்பற்றுகிறது சங்க பரிவாரம்.

கல்புர்கி, பன்சாராவைக் கொன்றவர்கள் மட்டுமின்றி தற்போது தில்லியில் கண்ணையாவின் நாக்குக்கும் தலைக்கும் விலை வைத்து போஸ்டர் அடித்துள்ளவர்கள் வரை சொல்லி வைத்தாற்போல் ”சில்லறைக் கும்பல்களாக” (Fringe Elements) இருப்பதும் அதை ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் தற்செயலானதல்ல. தேசிய ஊடகங்களின் மாமாத்தனங்கள் மக்கள் அறியாதவையல்ல என்றாலும் இம்முறை ஆர்.எஸ்.எஸ் கும்பலே எதிர்பாராத ஒரு பிளவு ஊடகங்களிடையே ஏற்பட்டுள்ளாது. அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

தொடரும்

– வினவு செய்தியாளர்கள்

சங்கரின் கொமரலிங்கம் : தமிழகத்தின் பெருமை – நேரடி ரிப்போர்ட்

39

ந்த வீடியோவைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி மட்டும் அடையவில்லை. இன்னவென்று விளக்க முடியாத ஒரு பயம், அவலம், கையறு நிலை, வாழ்க்கை குறித்த நம்பிக்கையின்மை அனைத்தும் அந்த இரண்டு நிமிட காட்சி சடுதியில் ஏற்படுத்திவிட்டது. அந்த உணர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி? உடன் கொமரலிங்கத்திற்கு புறப்பட்டோம்.

தேவர் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் கிராமம்தான் கொமரலிங்கம். 16.03.2016 அன்று அங்கே நுழையும் போது கிராமமே மயான அமைதியுடன் இருந்தது. சுவரொட்டியோ, அரசியல் கட்சி தலைவர்களின் வருகையோ எதுவுமில்லை. தெருவுக்கு தெரு குவிக்கப்பட்டிருந்த போலீசை தவிர ஒரு தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட கிராமத்திற்கான தடையமே இல்லை. முந்தைய நாள் 15.03.2016 இரவு போலீஸ் நடத்திய தடியடியின் விளைவு தான் அந்த அமைதி என்பதை பின்னர் அறிந்தோம்.

கொமரலிங்கம் கிராமம் ஒரு அறிமுகம்

kumaralingam-dalit-murder-report-9
கொமரலிங்கம் கிராமம்

டுகொலை நடந்த உடுமலைப்பேட்டையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் இருக்கிறது கொமரலிங்கம் கிராமம். தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினரான பள்ளர்கள் எனும் தேவேந்திரகுல வேளாளர்கள் கணிசமாக வசிக்கும் கிராமம் இது. திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் இருக்கிறது கொமரலிங்கம்.

பள்ளர் சாதி தவிர முஸ்லீம்கள், நாயக்கர்கள், கவுண்டர்கள், அருந்ததியர்கள் உள்ளிட்ட பல சாதியினர் இருக்கிறார்கள். பொருளாதார நிலைமையைப் பொறுத்தவரை கவுண்டர்கள் மற்றும் நாயக்கர்கள் நிலவுடைமையாளர்களாகவும், பள்ளர்கள் அவர்களின் நிலங்களில் வேலை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் மட்டும் சொந்த நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள்.

“நாங்க 1500 குடும்பம் இருந்தா மத்தவங்க ஒரு 50-60 குடும்பம் இருப்பாங்க; நாங்க தான் மெஜாரிட்டி. பெரும்பாலும் கரும்பு அறுக்குறது, நடவு வேலை, நெல் அறுக்கன்னு போவாங்க. 100-ல 5 பேரு தான் எங்காளுங்கல்ல வசதியானவங்க” என்றார் ஜான்பாண்டியன் கட்சியில் இருக்கும் தமிழ் மணி.

இளைஞர்களிடம் கூட விவசாய வேலைதான் முதன்மையானது. திருப்பூர் போன்ற நகரங்களுக்கும் மில் வேலைகளுக்கும் ஓரளவு இளைஞர்கள் செல்கிறார்கள். முன்பு அதிகம் சென்ற நிலைமை இப்போது இல்லை.

படிப்பை பொறுத்தவரை பெரும்பாலும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படிக்கிறார்கள். ஒரு சிலரே பொறியியல் படிக்கிறார்கள். சங்கரின் தந்தை சுமார் 4 லட்ச ரூபாய்க்கும் மேல் கடன் பெற்று மகனைப் படிக்க வைத்திருக்கிறார். இந்த தொகை என்பது அவரது முழு ஆயுள் உழைப்பையும் கோரக்கூடியது. அப்படித்தான் சங்கரும் படித்து தற்போது கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்திருந்த சமயத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஒரு ஏழை தலித் குடும்பத்தில் இது வெறும் மகனை மட்டும் பறிகொடுத்த இழப்பல்ல. அவனை வைத்து கனவுகளும், சமூகத்தில் பெறப்போகும் மதிப்புகளும் என்று ஒரு பெரும் வலி நிறைந்த நினைவுகள் இங்கே பின்னிப் பிணைந்திருக்கின்றன.

கொமரலிங்கம் கிராமத்தில் பள்ளர்களின் சமூக நிலைமை

தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களானாலும் பள்ளர்கள் அப்படி அழைக்கப்படுவதை விரும்புவதில்லை. ஆனால் ஆதிக்க சாதிகளின் தீண்டாமை இதர ஒடுக்குமுறைகளை குறிப்பாக கேட்டால் அவை இருப்பதையும் எதிர்ப்பதையும் கூறுவார்கள். சமூக ரீதியாக பறையர்கள் மற்றும் அருந்ததியினர் வாழும் நிலைமையில் பள்ளர்கள் இல்லை. இதற்கு காரணம் நிலமில்லாவிட்டாலும் நகரங்களுக்கும் வேறு மாநிலங்கள், வெளிநாடுகளுக்குச் சென்று சுய பொருளாதாரத்தை அவர்கள் ஓரளவேனும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த பலத்திலிருந்தே அவர்கள் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகிறார்கள். 90-களில் நடந்த கொடியங்குளம் ‘கலவரம்’ அப்படித்தான் தேவர் சாதியினரின் ஆதிக்கத்தை தட்டிக் கேட்டது. வட தமிழகத்தில் பறையர் இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களிலும், கோவை பகுதியில் நகரங்களுக்கு வேலை செய்யும் அருந்ததி மக்களிடத்திலும் இந்த பொருளாதார மாற்றம் தற்போது ஓரளவிற்கேனும் ஏற்பட்டு வருகிறது.

kumaralingam-dalit-murder-report-10
கொமரலிங்கத்தில் உள்ள ஒரு கோவில்

கோவை பகுதியைப் பொறுத்த வரை பள்ளர்கள் மீது சொல்லிக் கொள்ளப்படும் தீண்டாமைகளோ இதர ஒடுக்குமுறைகளோ பெருமளவு கிடையாது. கவுண்டர்கள் கூட பள்ளர்களின் கிராமங்களுக்கு அஞ்சும் நிலைமை இருக்கத்தான் செய்கிறது. சுற்றியுள்ள பிற கிராமங்களில் கொமரலிங்கம் கிராமம் என்றால் அவர்களிடம் வைத்துக்கொள்ளக்கூடாது என்று அஞ்சும் நிலைமையை பலரும் அங்கீகரித்தார்கள். “கொமர்லிங்கம் பள்ளன்னு சொன்னாலே வேற ஊருல பயப்படுவாங்க சார்” என்று ஊர் இளைஞர்கள் கூறியதை, வெளியூர் ஆட்கள் முதல் நமக்கு வழிகாட்ட அழைத்து சென்ற தோழர்கள் வரை அனைவரும் உறுதிப்படுத்தினார்கள்.

தென்மாவட்டங்களில் ஒரு பள்ளர் கிராமத்தில் இப்படி ஒரு ஆதிக்க சாதிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டு அங்கேயே வாழ்வது அரிதினும் அரிது. சங்கர் இங்கே அப்படி வாழ முடிந்ததற்கு இத்தகைய பின்னணியும் ஒரு காரணம்.

இக்கிராமத்தில் பள்ளர்களுக்கான பஞ்சாயத்து இருக்கிறது. சாவடி என்று அழைக்கப்படும் பஞ்சாயத்தில் தான் ஊர் முடிவு எடுக்கிறார்கள். சங்கரின் உடலை வாங்க கூடாது சாலை மறியல் செய்ய வேண்டும் என்ற முடிவும் அங்கே எடுக்கப்பட்டு ஊருக்கு தண்டோரா போட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவுகளுக்கு ஊரில் இருக்கும் பிற சாதியினரும் கட்டுப்படுகிறார்கள்.

கிராமத்தில் பள்ளர்கள் தெருக்களை ஒட்டி மதுரை வீரன் கோவிலும், அருந்ததியர் மக்களின் 20-30 வீடுகளும் இருக்கின்றன. புதிதாக வருபவர்கள் பிரித்தறிய முடியாதபடி இருபிரிவினரின் வீடுகளும் பொருளாதார நிலைமைகளும் சற்றேறக் குறைய ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆயினும் அருந்ததியர் மக்கள், பள்ளர்களால் சமூக ரீதியில் ஓரளவுக்கு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதும் உண்மை. இந்த முரண்பாடு ஆதிக்கசாதி – தலித் போல கடும் முரண்பாடாக இல்லை என்றாலும் சில பிரச்சினைகளில் உக்கிரமாகவும் இருக்கின்றது. சாதி மறுப்புத் திருமணம் செய்தால் ஆதிக்க சாதியினர் வெட்டுகிறார்கள் என்றால் இங்கே அந்த அளவுக்கு போகாது என்று வேண்டுமானால் சொல்லலாம். காரணம் இவர்களில் பெரும்பாலானோர் வர்க்கம் என்ற முறையில் ஏழைகளாகவும், நிலமற்றவர்களாகவுமே இருக்கிறார்கள்.

சாதி மறுப்புத் திருமணங்கள் சாத்தியமான மண்ணிது

மிழகத்தில் சாதி மறுப்புத் திருமணங்கள் அதிகம் நடப்பதில்லை என்ற பொதுக்கருத்திற்கு மாறாக இப்பகுதியில் கணிசமான அளவு சாதி மறுப்பு திருமணங்கள் நடந்துள்ளன. ஈஸ்வரன் என்பவரிடம் பேசினோம்.

“உங்க கிராமத்தில கலப்பு திருமணம் நடந்திருக்கா”?

“என்ன இப்படி கேட்டுட்டீங்க! நிறைய பேர் இருக்காங்க. எனக்கு தெரிஞ்சே 25-லிருந்து 30 குடும்பத்துல நடந்திருக்கும். என் அக்கா பையன் கூட வேற வூட்டு பொண்ண தான் கல்யாணம் பன்னிருக்க்கான்.”

அந்த வழியாக போய் கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்ணை அழைத்து “இதோ இவங்க கூட கலப்புத் திருமணம் தான்.” என்றார்.

நாங்கள் வற்புறுத்தி கேட்ட பிறகு அப்பெண்மணி தன்னைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.

kumaralingam-dalit-murder-report-8
பள்ளர் சாதியைச் சேர்ந்த சுப்பிரமணியனை காதல் திருமணம் செய்து கொண்ட மும்தாஜ்

(வெட்கப்பட்டுக்கொண்டே) எம்பேரு மும்தாஜ். எங்கூட்டுக்காரர் பேரு சுப்பிரமணியன். ரெண்டு பசங்க இருக்காங்க. துரையம்மா 9-வது படிக்குது, இன்னொரு பொண்ணு 7-வது படிக்குது. எங்களுக்கு கலியாணம் முடிஞ்சு 17 வருசமாச்சி. எனக்கும் அவருக்கும் இதே ஊருதான். எனக்கு ரெண்டு தெரு தள்ளி. நாங்க இஷ்டப்பட்டு கலியாணம் பண்ணிக்கிட்டோம்.”

“உங்க வீட்டுக்காரர் கூட ஒரு போட்டோ எடுத்துக்கிறோம்” என்றோம்.

“அவரு வீரப்பூர் கோவில் திருவிழாவுக்கு போயிருக்கார். நான் போகலை.” என்றார் அந்த பெண்மணி.

ஊர் இளைஞர்களிடம் பேசியதிலிருந்து முஸ்லீம்-பள்ளர் காதல் திருமணங்களில் சிலர் முஸ்லீம்களாக மாறி திருமணம் செய்திருக்கிறார்கள் பலர் மும்தாஜை போன்று குழந்தைகளுக்கு இந்து பெயரிட்டு இரண்டு நம்பிக்கைகளையும் தாங்கி வாழ்கிறார்கள்.

“உங்க வீட்ல ஏத்துகிட்டாங்களா?”

“இப்போ கூட அக்கா வீட்டிலிருந்தான் வாரேன். நாங்க யாரு வந்தாலும் ஏத்துக்குற சாதி.”

“உங்களே மாதிரி இஷ்டப்பட்டு சாதி மாறி கலியாணம் பண்ணவங்க இந்தூர்ல இருக்காங்களா?”

“நெறய பேரு இருக்காங்க. எல்லாரும் வீராப்பூர் கோவிலுக்கு போயிருக்காங்க.”

இதே பகுதியின் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் ரவிச்சந்திரன் வன்னியர் சாதியை சேர்ந்தவர் – கவிதா பள்ளர் சாதியை சேர்ந்தவர். இவர்களது காதல் திருமணம் குறித்து கவிதா கூறுகிறார்.

“மில்லுல ஸ்கீம் வேலைக்கு வந்திருந்தேன். என் நம்பரை பிரெண்ட்ஸ்கிட்டருந்து இவரு வாங்கி மெசேஜ் அனுப்புனாரு. அப்புறம் பேச ஆரம்பிச்சோம். புடிச்சி போய் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டோம்.”

“உங்க வீட்ல ஏதும் சொல்லலியா”

kumaralingam-dalit-murder-report-1
ரவிச்சந்திரன் – கவிதா தம்பதியினர் – கவிதாவின் மாமியார்

“முதல்ல ஏத்துக்கல. அப்படியே போயிறுனு சொல்லிட்டாங்க. எங்க பெரியப்பா போலீஸ்ல எஸ்-ஐ யா இருககரு. அவரு ஆளுங்கள கூட்டிட்டு வந்து கொமரலிங்கம் ஸ்டேசன்ல வெச்சி இனி இந்த பொண்ணுக்கு எது நடந்தாலும் அதுக்கு என் புருசன் இவரு தான் காரணமும்னு எழுதிதர சொன்னாங்க. அப்படி பஞ்சாயத்து பேசி முடிச்சிட்டோம்.”

“ஆனா எங்கப்பாவுக்கு தெரியாம எங்கம்மா ஃபோனுல பேசுவாங்க. பழநி கோயிலுக்கு வரச் சொல்லி ரெண்டு பேரும் பாத்துப்போம். குழந்தை பெறந்த பிறகு அப்பாவும் சமாதானமாயிட்டாரு. இப்போ நாங்க எங்க வீட்டுக்கு போவோம். அவங்களும் வருவாங்க”

“சரி உங்க மாமியார் ஒத்துக்கிட்டாங்களா”

“அவங்களையே கேளுங்க” எனறு அருகில் சிரித்தபடியே இருந்த மாமியாரை கை காட்டினார். நீயே சொல்லு என்று அவர்களுக்குள் நடந்த சிறு உரையாடலுக்கு பிறகு மாமியார் சரங்கம்மாள் பேச ஆரம்பித்தார்.

“திடு திப்புனு கலியாணம் செஞ்சிகிட்டான். எனக்கு மொதல்ல பிடிக்கல. மொத ஆறு மாசம் எப்படியாவது பிரிச்சரனும்னு பாத்தேன். சொந்தக்காரரு போலீஸ்ல இருக்காரு, அவர வெச்சி முயற்சி செஞ்சேன். இருந்தா இந்த பொண்ணோட தான் இருப்பேன் இல்லைனா உன்ன விட்டு பிரிஞ்சி தனியா போயிருதேனு சொல்லிட்டான். அதனால ஏத்துக்கிட்டேன். அப்புறம் ஒரே வீட்டுல இருக்கோம். மூஞ்ச திருப்பிட்டா போக முடியும்.”

இப்போ உங்க மருமகளை பத்தி என்ன சொல்றீங்க

“இப்போ நான் அடிச்சு வெளிய அனுப்புனாகூட இந்த ரெண்டும் போகாதுங்க” சொல்லிவிட்டு மூவரும் சிரிக்கிறார்கள்.

ஏதோ புது ஆட்கள் வீட்டிற்கு வந்திருப்பதை பாத்து இவர்களது உறவினர் வந்து விசாரித்தார். “ தம்பி நான் சொல்றேனு எழுதிக்குங்க. எனக்கும் இந்த மாதிரி மருமக கெடச்ச நால்லா இருக்கும்னு நெனக்கேன்.”

“அப்போ உங்களுக்கும் பள்ளர் வீட்டு பொண்ணுதானா?”

“ஆமா. இதே மாதிரி பொண்ணு கெடச்சா சம்மதம்தான்.”

சங்கரின் கொலை குறித்த பேச ஆரம்பித்தபோது முன்னர் சாதி மறுப்பு திருமணத்தை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று முயற்சித்த அந்த மாமியார் கூறினார், “அந்த பொண்ணு அவங்க அப்பனை கொலை செஞ்சிட்டு ஜெயிலுக்கு போவோனும்; அப்ப தான் என் மனசுக்கு ஆறும். பாவிப்பய சின்ன பிள்ளைகளை இப்படி தவிக்கவெச்சுட்டானே.”

பேச்சுவாக்கில் சரங்கம்மாள் “பள்ளரா இருந்தால கொஞ்சம் பரவாயில்ல __(அருந்ததியராக) இருந்தால் கொஞ்சம் கஷ்டமாயிருக்கும்.” – என்றார். கோவை மண்டலத்தை பொருத்தவரை அருந்ததியினர் தான் தாழ்த்தப்பட மக்களில் பெரும்பான்மையினர். சாதிய அடுக்கின் கீழ் நிலையில் கொடூரமான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுவர்களும் இவர்களே.

அருந்ததியினர் – பிற சாதியினர் காதல் திருமணம் குறித்து பார்த்தால் அது மற்ற பிரிவினரின் காதலை விட குறைவாக இருக்கிறது. அடுத்ததாக அருந்ததியர் குடியிருப்புக்குள் நுழைந்தோம்.

அங்கிருந்த 20 குடும்பங்களில் 2 குடும்பங்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். அதில் ஒருவரான முத்துலெட்சுமி பள்ளர் சாதியைச் சார்ந்தவர். அருந்ததிய சாதியை சேர்ந்த சண்முகவேலை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

kumaralingam-dalit-murder-report-25
அருந்ததியர் ஆணை மணந்த பள்ளர் சாதியைச் சேர்ந்த முத்துலட்சுமி

“நான் R.R மில்லில் வேலை செய்து வந்தேன். அங்க தான் இவரும் பழகுனோம். வீட்டுக்கு தெரியாம கலியாணம் செஞ்சிகிட்டோம். முதல்ல எங்க வீட்ல ஏத்துக்கல். அப்புறம் பஞ்சாயத்து பேசி அனுப்பிட்டாங்க. இப்போ அம்மா வந்து பாப்பாங்க. சொந்தக்காரங்க இன்னும் ஏத்துக்கல.” என்றார்.

ஆதிக்க சாதிகளுக்கும் தலித்துகளுக்கும் உள்ள முரண்பாடு போல தலித்துக்களிடையே இல்லை என்பதற்கு இது ஒரு சான்றி. எனினும் விதிவிலக்காக இங்கேயும் சாதி மறுப்பு திருமணங்களுக்கு வன்முறைகள் நடக்காது என்றில்லை. ஏனெனில் இக்குடியிருப்பு மக்கள் விவாதித்தினூடாக ஒரு பிரச்சினையே பேச வந்து பிறகு நிறுத்திவிட்டார்கள். அதை பேசினால் பிரச்சினையாகும் என்ற பயம் அவர்களிடையே இருந்தது.

அந்த கிராமத்தை அறிந்த தோழர் ஒருவரிடம் அது குறித்து கேட்டோம்.

அருந்ததிய இளைஞர் ஒருவர் பள்ளர் பெண்ணைக் காதலித்து மணம் செய்து ஊரை விட்டு சென்றுவிட்டார். அதை தொடர்ந்து அருந்ததியர் பகுதிக்கு வந்த பள்ளர்கள் நீங்கள் தான மறைத்துவைத்திருக்கிறீர்கள் என்று கூறி வீடுகளில் புகுந்து சராமாரியாக தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

பின்னர் வீட்டைவிட்டு வெளியே செல்லும் ஆண்ககளை பார்த்த இடத்தில் அடிப்பது என தொடர்ந்திருக்கிறார்கள். அது சிறுவர்களோ இல்லை முதியவர்களோ யாராக இருந்தாலும் அடிதான்.

இதை தாங்க முடியாமல் அருந்ததிய மக்கள் சுமார் 10 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்திருக்கிறாரகள். பின்னர் திரும்ப வந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தாலும் பலனில்லை. ஒப்பீட்டளவில் பள்ளர்கள் இவர்களை விட சமூகரீதியாக கொஞ்சம் மேம்பட்டிருப்பதே காரணம்.

சில நாட்களுக்கு காவல்துறையே இப்பகுதிகளில் பாதுகாப்பு கொடுத்திருந்தது. பின்னர் பல மாதங்கள் கழித்து காதல் ஜோடி திரும்பியிருக்கிறது. காவல் நிலையத்தில் வைத்து பஞ்சாயத்து செய்து எழுதி வாங்கி தற்போது பிரச்சனையின்றி வசித்துவருகிறார்கள். ஆம். தலித்துக்களிடையே ஏற்படும் முரண்பாடு ஆதிக்க சாதிகள் நடத்தும் ஒடுக்குமுறைபோல இருக்க வேண்டியதில்லை. இதுவே ஒரு தேவர் கிராமத்தில் நடக்கவே நடக்காது.

காதலையும் சாதி மறுப்பு திருமணத்தையும் சாத்தியமாக்கியது எது?

பொதுவில் சொல்லப்படுவதற்கு மாறாக இப்பகுதியில் சாதி மறுப்பு திருமணம் சகஜமாக நடைபெறுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிடத் தகுந்த அளவில் காதல் திருமணங்கள் நடக்கின்றன. மேலும் நமக்குத் தெரிய வந்த காதல் கதைகள் அனைத்தும் தொழிற்சாலைகளான மில்களில் தோன்றியது ஒரு தவிர்க்கவியலாத உண்மை.

kumaralingam-dalit-murder-report-22
கொமரமங்கல் ஊர் இளைஞர்கள்

திருப்பூர் உள்ளிட்ட அருகாமை நகரங்களுக்கும் இதர ஆலைகளுக்கும் கணிசமான அளவில் ஆண்களும் பெண்களும் வருகிறார்கள். இங்கே இருக்கும் தொழிற்துறை மற்றும் தொழிலாளர் சூழல் காதல்களின் எண்ணிக்கை அதிகமாவதவற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

ஆதிக்க சாதியினரின் தலையீடுகளிலிருந்து இந்த ஜோடிகளை பாதுகாப்பதில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்கு (சி.பி.ஐ, சி.பி.எம்) முக்கியமானது. இது குறித்து உறுமிய கொங்கு சாதி சங்க பிரமுகரின் பேட்டியை கட்டுரையில் இறுதியில் பார்க்கலாம்.

தென்தமிழகத்தை போல காதலித்தால் கொலை செய்வது என்பது இப்பகுதியில் மிக மிக அரிது. இப்பகுதிகளில் நடக்கும் காதல் திருமணங்களின் ஒப்பிடும் போது ‘கௌரவக் கொலை’ எனப்படும் சாதிவெறிக் கொலைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

கவுண்டர் உள்ளிட்ட எந்த சாதியாக இருந்தாலும் காதல் திருமணங்கள் நடந்தால் பெண்ணை தலைமுழுகுவதை தான் பிரதான எதிர்ப்பாக பதிவு செய்கிறார்கள். தந்தையின் விவசாய நிலத்தை சாராமல் நகரங்களில் தொழில்கள் வந்துவிட்ட பிறகு இந்த தலை முழுகுதல் என்பது பொருளாதார அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. நல்லது கெட்டது போன்ற விசேசங்களுக்க்கு போகமுடிவதில்லை என்பதை தாண்டி வேறு பிரச்சினை இல்லை.

சாதிப் படிநிலையைப் பொறுத்து குழந்தை பிறந்த பிறகு சேர்த்துக் கொள்வதோ இல்லை கடைசிவரை சேர்த்துக் கொள்ள மறுப்பதோ நடக்கிறது. கொலை செய்வது என்பது இந்த பகுதிகளில் அனேகமாக இல்லை.

உடன் வந்த தோழர்களிடம் “ஏன் தோழர் கவுண்டர்கள் கொலை செய்வதில்லையா?” என்று கேட்டோம்.

“இவங்களுக்கு அது தேவையில்லை. எப்படியாவது பிரிச்சிருவாங்க. காவல் நிலையத்தில் வைத்து பஞ்சாயத்து நடக்கும். கவண்டர் சாதியினர் தான் காவல்துறையிலும் வழக்கறிஞர்களாகவும் உடன் இருப்பார்கள். ‘தம்பி உன் பாதுக்காப்புக்குதான் சொல்கிறேன். இவனுங்க மோசமாவனுங்க தட்டிருவானுங்க.’ என்று மென்மையாக மிரட்டுவார்கள்.”

“இப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே கவுண்டர் சாதியினர் வெளியிலிருந்து வெட்டுவேன் குத்துவேன் என்று சவுண்டு விடுவார்கள். தேவைப்பட்டால் அப்பகுதி தலித் அமைப்பினரை அழைத்து ‘ஜோடிகளுக்கு’ அறிவுரை கூறுவார்கள். யாரும் துணைக்கு இல்லாத நிலையில் வேறு வழியில்லாமல் உயிருக்கு பயந்து அவர்களும் சம்மதிப்பாரகள். இப்படி சவுண்ட் விடுவதை கடந்து வெற்றி கண்டுவிட்டால் பெரும்பாலும் தலைமுழுகிவிட்டு நகைகள், சொத்துக்களில் பங்கில்லை போன்றவைகளை எழுதி வாங்கி பொருளாதார நலன்களை பாதுகாத்துக் கொள்ளும் வேலைகளில் ஈடுபடுவார்கள். ஒரு சில பகுதிகளில் தான் கொலை செய்வது நடக்கிறது.” என்றார் அந்த தோழர். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமான அந்த ஆடியோவில் கூட அந்த கவுண்டர் சாதி வெறியர் அப்படித்தான் பாடியும் ஆடியும் பிறகு மிரட்டவும் செய்கிறார்.

சங்கரின் காதல் கொலையில் முடிந்தது எப்படி?

ப்பகுதிகளில் இதுவரை நடந்திருக்கும் காதலுக்கும் சங்கரின் காதலுக்கும் முதல் வேறுபாடு பெண்ணின் சாதி மற்றும் வர்க்கம். சங்கர் திருமணம் செய்து கொண்ட கவுசல்யா, பழநி பகுதியை சேர்ந்த தேவர் சாதியை சேர்ந்தவர். கவுசல்யாவின் தந்தை டிராவல்ஸ், பைனான்ஸ், ரியல் எஸ்டேட் தொழில் செய்வது வருவதாக சங்கரின் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் தி.மு.க, மற்றும் அ.தி.மு.கவின் மாநில பிரமுகர்களின் உறவும், நட்பும் அவருக்கிருப்பதாக சங்கரின் கிராம மக்கள் கூறுகிறார்கள்.

kumaralingam-dalit-murder-report-2
சங்கரின் கல்லூரி அடையாள அட்டை

டிப்ளமோ முடித்து பொள்ளாச்சி P.A இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு பிரிவில் படித்து வந்த சங்கருக்கும் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர்ந்த கவுசல்யாவும் காதலிக்க ஆரம்பித்தனர்.

இச்செய்தி பெண்ணின் வீட்டிற்கு எட்டவே அவருக்கு சாதிக்குள்ளேயே திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். இதை அறிந்த சங்கர் – கவுசல்யா 11.07.15 அன்று பழநி பாத விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

“எனக்கு இவன் லவ் பண்றானு எதுவும் தெரியாது. தம்பிகிட்ட சொல்லிருக்கான். திடிர்னு ஒரு நாள் போலீஸ் ஸ்டடேசன்லிருந்து கூப்புடுறோம் இந்த மாறி உங்க பையன் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான்னு சொல்லவும் நானும் ஊர்க்காரங்கள ஏழு எட்டுபேர கூட்டுட்டு போனேன். அங்க போனா பொண்ணோட அப்பா அம்மா சொந்தகாரங்கனு ரொம்ப பேரு காருல வந்திருந்தாங்க.

நான் சங்கரோடதான் போவேனு சொல்லி அது போட்டிருந்த தங்க கம்மல், கொலுசு, செருப்பு, செயின், டிரெஸ் முதற்கொண்டு எல்லாத்தையும் அவங்க அப்பாகிட்ட கொடுத்திருச்சி. போலீஸ்காரங்களும் இதயெல்லாம் எழுதி தரச்சொல்லி கையெழுத்து வாங்கிகிட்டாங்க”.உங்களை கொன்னுருவேன் வெட்டிருவேன் என்று அவங்க வீட்டுக்காரங்க மிரட்டவும் அப்படிலாம் செய்யக்கூடாதுனு லேடி இன்ஸ்பெக்டர் சத்தம் போட்டு இவங்க வாழ்க்கையில பிரச்சனை பண்ண மாட்டேனு எழுதி கொடுக்க வெச்சாங்க.” என்று காவல் நிலையத்தில் நடந்ததை விவரிக்கிறார் சங்கரின் தந்தை வேலுச்சாமி.

(காவல் நிலையத்தில் கவுசல்யா, அவரது தந்தை ஆகியோர் கையெழுத்திட்டு கொடுத்த கடிதங்கள் இணைக்கப்பட்டுள்ளது.) படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்.

இதன் பின்னர் பத்து நாட்கள் கழித்து கவுசல்யாவின் தாத்தா ஜெயராம் மட்டும் சங்கரின் வீட்டிற்கு ஒரு சதித்திட்டத்தோடு வந்துள்ளார். தனது பேத்தியை பார்க்க வந்ததாக தெரிவித்த அவர் சங்கர் வீட்டார் அனைவரிடமும் சகஜமாக பழகியுள்ளார்.

கறி சமைத்து சங்கரின் தந்தை வேலுச்சாமி மது வாங்கி வர இருவரும் குடித்திருக்கிறார்கள். பின்னர் இரவில் சென்றுவிட்ட அவர் மறுநாள் காலை மீண்டும் வந்துள்ளார். காலை ஒரு 10 மணி அளவில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். தனக்கு வயல் வேலை இருப்பதால் கவுசல்யாவையும் சங்கரின் அக்கா முறையான மாரியம்மாளையும் ஜெயராமுடன் அனுப்பி வைத்துள்ளார் வேலுச்சாமி.

ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு சென்றதும் தனக்கு ஒருவர் பணம் தரவேண்டும் என்றும் அதை வாங்கி வருவதாகவும் அது வரை மாரியம்மாள் அங்கு காத்திருக்க வேண்டும் என்று கூறி கவுசல்யாவை மட்டும் அழைத்து சென்றுள்ளார். மாலை 4 மணி வரை அவர்கள் திரும்பாததை கண்டு வீடு திரும்பி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர் சங்கர் குடும்பத்தின்ர்.

kumaralingam-dalit-murder-report-21
சங்கரின் தந்தை வேலுச்சாமி

கவுசல்யாவை மட்டும் தனிமைபடுத்தி அழைத்து சென்ற ஜெயராம் மூலம் கவுசல்யாவை கடத்தி சென்று மிரட்டியிருக்கின்றனர். அடித்து துன்புறுத்தியிருக்கின்றனர். பணிய வைக்க முடியாத நிலையில் காவல்துறையினரும் குடைச்சல் கொடுக்கவே சில நாட்கள் கழித்து பெண்ணை மீண்டும் காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர் பெண் வீட்டார்.

கவுசல்யாவின் தந்தை மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை இருவரையும் கொமரலிங்கத்தில் வைக்கவேண்டாம் எனவும் வேறு இடத்திற்கு மாற்றி தங்கவைக்கமாறும் வேலுச்சாமியிடம் கூறியிருக்கிறது.

“நீங்க அப்பவே வேறு எங்கேயாவது அனுப்பியிருக்கலாம்ல”

“அவன் காலேஜ் முடிக்கனும், அதுக்கு பணம் கட்டவே கடன் வாங்கியிருக்கேன். மத்த இரண்டு புள்ளைகளையும் படிக்க வைக்கனும். இதுல வெளியூர்ல வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைக்க என்னால முடியல. எனக்கு சப்போர்ட் இல்லை. இருந்தா என பையன காப்பாத்தியிருப்பேனே” என்று அழுகிறார்.

அவரால் இருவரையும் இன்ஜினியரிங் படிக்க வைக்க முடியாத நிலையில் சங்கர் மட்டும் படிப்பை தொடர்ந்திருக்கிறார். கவுசல்யா அப்பகுதியிலிருந்த டைல்ஸ் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அக்கடையில் சென்று நாங்கள் விசாரித்த போது அன்று காலை டி.எஸ்.பி கடைக்கு வந்து விசாரித்து சென்றதையும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று பேச மறுத்தனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே போன்று உடுமலைக்கு சங்கரோடு சென்ற கவுசல்யா ஒரு காரில் தங்கள் குடும்பத்தினர் காத்திருப்பதை பார்த்துவிடுகிறார். அவர்கள் ஏதோ திட்டத்தோடுதான் வந்திருக்க கூடும் என யூகித்து சங்கரிடம் ஓடு என்று கூறி ஓடத் துவங்குகிறார். அவர் வீட்டார் துரத்தவும் அக்கம் பக்கத்தினர் மூலம் போலீஸ் வரவே மூன்றாம் முறையாக காவல் நிலையத்திற்கு பஞ்சாயத்து வந்திருக்கிறது.

“எனக்கு மாலை 5 மணிக்கு தகவல் வந்தது. உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து தகவல் வந்தது. என் பையனும் பொண்ணும் அங்க இருக்கங்கனு. நான் போயி கூட்டி வந்தேன்.”

“போன மாசம் அவங்க அப்பா அம்மா பாட்டி எல்லோரும் வந்தாங்க. புள்ளைய மட்டும் கூப்பிட்டாங்க. சங்கரை பிரிந்து வர சொன்னாங்க. அது முடியாதுனுருச்சி.”

kumaralingam-report-1
கொமரலிங்கத்தில் இருக்கும் சங்கரின் வீடு

இந்நிலையில் தான் சங்கருக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்த்ருக்கிறது. அவர் சென்னைக்கு சென்று வேலையில் சேர வேண்டியது தான் பாக்கி.

இனி தங்கள் குடும்பம் கஷ்டத்திலிருந்து மீளும் என்று சங்கரின் தந்தையும், தன் குடும்பத்தார் முன்பு தானும் ஒரு ஆளாய் வாழ்ந்து காட்ட முடியும் என்று கவுசல்யாவும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தான் சங்கர் தேவர சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்ட வீடியோ காட்சி வாட்ஸ் ஆப் மூலமாக பரவி பரபரப்பு உண்டாகவே அது செய்தி சானல்களிலும் ஒளிபரப்பாகி தேசிய செய்தியானது.

இப்பிரச்சனையை பெரிதாக்கவிடாமல் அமுக்க நினைத்த ஜெயா அரசு அப்பகுதி எம்.எல்.ஏ மற்றும் பஞ்சாயத்து தலைவரை களமிறக்கியது.

“ஜி.எச்ல என்னையும் அப்பாவையும் மட்டும் தனியா கூட்டிட்டு போனாங்க. எங்க கூட யாரையும் விடலை. அங்க ரூம்ல எஸ்.பி, டி.எஸ்.பி, எம்.எல்.ஏ, பிரெசிடென்ட் எல்லாரும் இருந்தாங்க. அவங்க மிரட்டின மாதிரியும் பேசல, ஆனா சாதாரணமாவும் பேசல, இரண்டும் கலந்து பேசினாங்க. அப்பாவுக்கு என்ன பண்றதுன்னு தெரியல. பாடி வாங்குறேனு ஒத்துக்கிட்டாரு. கையெழுத்து போட்டாரு. ஆனா வெளிய வந்தா ஏன் வாங்குறேனு சொன்னீங்க? கொலையாளிகளை கைது பண்ண பிறகு வாங்காணும்-னு பல அமைப்புகளிலிருந்து வந்தவங்க சொன்னாங்க.

எங்களுக்கு ஒன்னும் புரியல. இவங்க சொல்றதுதான் சரியா இருந்தது. திருப்பியும் போராட்டத்துல ஈடுபட்டோம். ஆனா அண்ணன் பாடிய எங்களுக்கு தெரியாமலேயே பொள்ளாச்சி வரை கொண்டு வந்து நிறுத்திட்டாங்க. அப்புறம் என்னையும் அப்பாவையும் போலிஸ் வண்டியில கூட்டிட்டு வந்து காத்துட்டு இருந்த அம்புலன்ஸ்ல ஏத்துனாங்க.

kumaralingam-dalit-murder-report-18
சங்கரின் தம்பி விக்னேஷ்

ஊர்லயும் போராட்டம் பண்ணிட்டிருந்தாங்க. அதனால வீட்டுக்கு வராம நேரா பின்புறம் வழியா சுடுகாட்டுக்கு கொண்டு போயிட்டாங்க. இத தெரிஞ்சு ஊர்காரங்க வந்து பிரச்சனை செய்து சடங்கு செய்யாம புதைக்க கூடாதுனு சொல்லி வீட்டுக்கு எடுத்துட்டு போயிட்டோம்.

பின்னர் ஊர்காரங்க குற்றவாளிகளை கைது செய்யாம புதைக்கவிட மாட்டோம்னு போராட்டம் செய்யயும் போலீஸ் சுத்தி வளைச்சு அடிச்சாங்க. ஆம்பிளைங்க சிதறி ஓடுனாங்க பொம்பளைங்களால ஒட முடியல். அவங்களே பாடிய எடுத்துட்டு சுடுகாட்டுக்கு போயி எங்களையும் கூட்டிட்டு போயி பொதச்சிட்டாங்க” என்று நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்கிறார் சங்கரின் தம்பி விக்னேஷ்.

தற்போது ஊரில் பெரும்பாலானவர்கள் வீராப்பூர் கோவில் திருவிழாவிற்கு (கரூர் அருகே பொன்னர் சங்கர் கோவிலில் நடக்கும் விழா) சென்றிருப்பதாகவும் அவர்கள் வந்தவுடன் பஞ்சாயத்து கூடி முடிவு செய்து அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனவும் ஊர் மக்கள் தெரிவித்தனர்.

சங்கர் கொலை குறித்து கொங்கு வேளாளக் கவுண்டர்கள் என்ன கருதுகிறார்கள்?

ந்த ஆதிக்கசாதி வெறிக்கொலை குறித்து ஏரியா நாட்டாமைகளான கொங்கு வேளாள கவுண்டர்கள் என்ன நினைக்கின்றனர் என்று தெரிந்து கொள்ள உடுமலைப்பேட்டையில் உள்ள ஏதோ ஒரு கொங்கு அறக்கட்டளை தலைவரை அணுகினோம்.

“நடந்ததுக்கும் கொங்கு வேளாள சமூகத்துக்கும் சம்பந்தமில்லை. எங்களை மாதிரி பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவங்க தாக்குதல் நடத்தியிருக்காங்க.

யுவாராஜில ஆரம்பிச்சி, இப்போ தேவர் பண்ண மாதிரி செட்டியார் நாடார்னு பண்ண ஆரம்பிச்சாதான் இந்த மாதிரி காதல் முடிவுக்கு வரும். வீச்சரிவாள் பயம் வந்தால் தான் செய்ய மாட்டான். அதுக்காக இந்த கொலைய ஆதரிக்கிறேன்னு அர்த்தமில்ல. ஆனா இப்படி நடந்தாதான் புத்திவரும்.

எல்லாரும் சமம்னு சொல்லி வீட்டு விசேசத்துக்கு கூப்பிடலாம்; பக்கத்துல உக்காரவெச்ச சாப்பாடு போடலாம். ஆனா சொந்தம் கொண்டாட முடியாது.

பி.ஜே.பி, பா.ம.க போன்ற கட்சிகள் கூட இந்த கொலையை தேர்தலுக்காக கண்டிக்கிறாங்க. டிவி-ல பொன்.ராதாகிருஷ்ணன் ……என்ன சொன்னரும்மா? என்று தன் மனைவியை பார்த்து கேட்க மனைவி தொடர்ந்தார். அதாங்க குடும்பத்துக்கு மானமரியாதை இருக்கு; இப்படி லவ் பண்ணி கல்யாணம் செய்றதால பெத்தவங்க எவ்ளோ பாதிக்கப்படுறாங்க. அத மனசில வெச்சி பிள்ளைங்க…. அதான் நமக்கு ஆதரவா தான் சொல்றாரு. அதே மாதிரிதான் ராமதாஸ். அவரு சொல்றதுல தப்பில்லை. நாடக காதல்னு எல்லா ஜாதிகாரங்களையும் வெச்சி ஒரு அமைப்பு உருவாக்குனாங்க.

இல்லையே பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ்-லாம் ஜாதி கூடாது-னு தான சொல்றாங்க.- என்று நாம் சும்மா தூண்டி விட்டோம்.

அது சும்மா. . இத்துனை ஓட்டுக்காக சொல்றது. மோடி ஆட்சிய தக்கவெச்சுக்கனும்னு சொல்றது.

இப்போ கூட சாதி மறுப்பு திருமணத்தை ஆதரிப்பதாதான ஆர்.எஸ்.எஸ் தீர்மானம் போட்டுருக்காங்களாமே?

ஆர்.எஸ்.எஸ் ஓட அடிப்படை நிலப்பாட்டுல இது இருக்கா. ஆரம்பிச்சி இத்தனை வருசம் சொல்லாம இப்போ ஏன் சொல்லுறான். ஏன்னா மோடி ஆட்சிய தக்க வெச்சிக்க.

இல்லைங்க அவங்க காலை வணக்கத்துல கூட அம்பேத்கர் பத்தி பாடுறாங்க.

சங்கர் புதைக்கப்பட்ட இடம்.
சங்கர் புதைக்கப்பட்ட இடம்.

சிரிக்கிறார். தம்பி..நாங்க கூட கொங்கு வேளாளர் திருமண தகவல் மையம்னு வெச்சா அடுத்தவன் ஏதாவது நினைப்பானு கொங்கு அனைத்து சமுதாய திருமண தகவல் மையம்னு வைப்போம். அது கண்துடைப்புக்கு. வெற சாதிகாரங்க வந்த இல்லைங்க உங்க இதுல போய் பாத்துக்கோங்கனு சொல்லுவோம். நம்ம கட்சிகளில்கூட எல்லா படமும் போடுவோம். அம்பேத்கர், காமராஜர் எல்லா போடுவோம். அது எல்லாம் வெளி – ஒரு இதுக்காக.

நான் இது வரைக்கும் 10 காதல் பஞ்சாயத்துகளுக்கு போயிருக்கேன்.கொங்கு பிள்ளைங்க ஓடிபோயிரும். அந்த பையன் கம்யூனிஸ்ட் கட்சி ஆபீசுக்கு கூட்டிட்டு போயிருவான். இது வரை ஒரு கேசில கூட நாம் ஜெயிச்சதில்லை தம்பி.

எவ்ளோ கொடூரமானவங்களா இருந்தாகூட அப்பா அம்மாவ அழுறத பாத்தா மனசு மாறும். அனா இந்த பொண்ணுங்க மாற மாட்டாங்க. ஏன் தெரியுமா? மனசு இல்லைனு இல்ல. அதுக்கு முன்னாடியே கம்யூனிஸ்ட் கட்சிகாரன் கிளாஸ் எடுத்து வெச்சிருப்பான். இப்படி இப்படி நடக்கும் அழுவாங்க காலுல விழுவாங்க அதில நீ ஒத்துக்கிட்டனா இப்படி நடக்கும்னு எல்லாத்தையும் கிளாஸ் எடுத்து வெச்சிருப்பான்.

நம்ம கிட்ட பொண்ணு விரும்புனா கூட்டிட்டு போனு சொல்லிருவான். பொண்ணு வராது. இது மாதிரி ஒன்னுல்ல 10 பஞ்சாயத்து நானே பண்ணிருக்கேன். நம்ம புள்ளைங்கதான் காரணம். இப்படி பண்ணுனா தான் எல்லாம் மாறும்.

என்று கூறி முடித்தார்.

______________________________________________

ண்பர்களே இந்தக் கள ஆய்வின் செய்திகள், கதைகள், உண்மைகள் அனைத்தையும் ஒரு சேர நினைவில் நிறுத்திப் பாருங்கள். சங்கரின் கொமரமங்கலம் பொதுவில் சாதி மறுப்புத் திருமணத்திற்கு பெயர் பெற்றது. அந்த கிராமம் மட்டுமல்ல அந்த வட்டாரத்தில் பல இடங்களில் அதை பார்க்க முடியும். இந்த கிராமத்திற்குள் பா.ம.க ராமதாஸ், டி.என்.டி.ஜே ஜெய்னுலாபிதீன், கொங்கு வேளாளக் கட்சி ஈஸ்வரன், தனியரசு, ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பள்ளர் பிரிவு மா.தங்கராஜு, மா.வெங்கடேசன் அனைவரும் நுழைந்தால் அதிர்ச்சியடைவார்கள். அவர்களின் சாதி வெறி, மதப்புனிதம் அனைத்தும் இங்கே நடைமுறையில் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. சாதிப் படிநிலையின் கீழேயும், வர்க்க பிரிவில் ஏழைத் தொழிலாளிகளாகவும் இருக்கும் இம்மக்களிடையே எந்த சாதிப் பற்றும் இல்லை. குறைந்த பட்சம் சாதி மறுப்புத் திருமணங்களை மறுப்பதில் இல்லை. ஒரு அருந்ததி ஆண் ஒரு பள்ளர் பெண்ணையும், ஒரு பள்ளர் ஆண் வன்னியப் பெண்ணையும், ஒரு கவுண்டர் பெண் ஒரு பள்ளர் ஆணையும் மணம் செய்து வாழும் பூமியிது.

இந்தப் பின்னணியில்தான் சங்கர் – கவுசல்யாவின் மணத்தை பார்க்க வேண்டும். கோவைப் பகுதியில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த செங்கொடி இயக்கத்தின் செல்வாக்கு சாதி மறுப்பு எனும் சாதிக்க முடியாத ஒன்றை இன்றும் சாதிக்க முடியும் என்று காட்டி வருகிறது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் திட்டமிட்டு நுழைவதற்கு நம்பியிருக்கும் இறுதி அஸ்திரம் சாதிவெறிதான். பல்வேறு சாதி வெறியர்களும், மதவெறியர்களும் இயல்பான கூட்டணியில் தமது நோக்கத்தை நிறைவேற்ற காத்திருக்கிறார்கள். அவர்களை கண்டிக்க வக்கற்ற ஊடகங்களும், ஏனைய ஒட்டுப் பொறுக்கிக் கட்சிகளும் இருக்கும் வரை இவர்கள்தான் தனிக்காட்டு ராஜாக்கள்.

பெருமாள் முருகன் நாவல் தடை செய்யப்பட்டது, இளவரசன் தற்கொலை, கோகுல்ராஜ் கொலை என்று ஒவ்வொன்றிலும் பார்ப்பன இந்துமதவெறியர்களும், அவர்களின் பங்காளிகளான ஆதிக்க சாதிவெறியர்களும்தான் காரணமாக இருக்கிறார்கள்.

இவர்களை தமிழ் மண்ணிலிருந்து விரட்டும் வரை சங்கரைக் கொல்வதற்கு எப்போதும் சிலர் பின் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். தமிழகம் பெருமைப்படும் கொமரலிங்கத்தை காப்பாற்றப் போகிறோமா, பலி கொடுக்கப் போகிறோமா?

வினவு செய்தியாளர்கள்.

மகிந்திரா வங்கிக்கு அடியாளாக செயல்படும் தஞ்சை போலீசு !

0
தஞ்சை ஆர்பாட்டம்

thanjai mariyal posterவிவசாயிகளின் போராட்டங்களை ஆளும் அரசுகள் ஒரு பிரச்சனையாகக் கருதுவதில்லை. பட்டை நாமப் போராட்டம், திருவோடு போராட்டம், அரை நிர்வாணப் போராட்டம் என அந்த போராட்ட வடிவங்கள் மாறிக் கொண்டிருந்ததே ஒழிய தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. அரசின் கடன் பாக்கிகளைத் தள்ளுபடி செய்யக்கோரி மாநாடுகள் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் தலைவலியோடு திருகுவலியாகத் தனியார் வங்கிகளின் கடன் வசூல் ஜப்தி நடவடிக்கை அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

கோட்டாக் மகிந்திரா வங்கியில் டிராக்டர் கடன் வாங்கியிருந்த தஞ்சைச் சோழகன் குடிகாடு விவசாயி பாலன் மீது வங்கியின் அடியாளாக நின்று ஒரத்தநாடு காவல்துறை தாக்குதல் நடத்தியது. தாக்குதல் சம்பவக் காட்சிப் பதிவும், “அடிக்காதீங்க…” என்ற அவலக் குரலும் வாட்ஸ் அப் மூலமாக மூன்று நாள் சுற்றி வந்தது. இச்செய்தியைப் பாலிமர் தொலைக்காட்சி முதலில் வெளியிட்டுப் பிற ஊடகங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கவனத்தைத் திருப்பியது.

விவாதங்கள் சூடுபறக்கச் சினிமா நடிகர் சங்கத் தலைவர் விஷால், வங்கி மற்றும் போலிஸ் குண்டர்களை கண்டிக்காமல் விவசாயி பாலனின் கடனைக் கட்டி டிராக்டரை மீட்டுத் தந்து உதவுவதாக அறிவிப்பை வெளியிட்டு வங்கி நிர்வாகத்தை நல்ல பிள்ளையாக காட்டினார். ஆனால் இந்த தனியார் வங்கி முதலாளகளின் உண்மை முகத்தை காட்டும் வண்ணம் அரியலூர் விவசாயி அழகர், சோழமண்டலம் பைனான்சின் அடாவடி நடவடிக்கையால் தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சை ஆர்பாட்டம்தஞ்சை விவசாயிகள் மத்தியில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு போராட்டங்கள் வலு பெறத் தொடங்கியது. விடுமுறை நாளில் மூடிக்கிடந்த கோட்டாக் மகிந்திரா வங்கிக்குப் பூட்டு போடும் போராட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் போன்ற போராட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மறியல் போராட்ட அறிவிப்பு சுவரொட்டி, தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு நம்பிக்கையும், அரசு இயந்திரத்திற்கு பீதியையும் ஊட்டியது.

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் தலைமையில் தோழர்கள் கூடினர். மற்ற தோழர்கள் விவசாயிகளின் வருகையை எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். தோழர்களைக் கைது செய்யக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசு பட்டாளம் குவிக்கப்பட்டிருந்தது.

சாராயக் கடையை முடக்கக்கோரும் பிரச்சாரத்திற்கும் கண்ணையாகுமார் கைதைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி அனுமதி மறுத்து வந்த தஞ்சை போலீசு, “மறியலைக் கைவிடுங்கள்! ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தருகிறோம்” என்று சமரசம் பேசியது. ஆனால் அதை மறுத்துப் பேசி மறியலில் ஈடுபடுவோம் என்று தோழர்கள் அறிவித்தனர்.

தோழர் காளியப்பன் மற்றும் தோழர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்ய முயற்சித்தபோலீசின் பாதுகாப்பு வளையத்தை உடைத்து வெளியேறி, தோழர்கள் மறியலில் ஈடுபட்டன ர். ஒரு பக்கம் தோழர் காளியப்பன் மற்றும் தோழர்களிடம் பேச்சு வார்த்தை இன்னொரு பக்கம் கைது என்று போலீசு நாடகமாடிக் கொண்டிருந்தது. பேருந்துகளை மறித்து மறியலில் ஈடுபட்ட தோழர்களுக்கும், போலீசுக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசு அராஜகத்தையும், கோட்டாக் மகேந்திரா வங்கிக்கு அடியாளாகச் செயல்படும் போலிசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பியபடி, சாலையில் அமர்ந்து படுத்துப் போராடிய தோழர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி வண்டியில் ஏற்றியது போலிசு.

மக்கள் அதிகாரம் திருவாரூர் தோழர்கள் முரளி, ஆசாத் – தஞ்சை தோழர். தேவன், பட்டுக்கோட்டைத் தோழர் மாரிமுத்து, விவசாயிகள் விடுதலை முன்னணித் தோழர் பாலு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணித் தோழர் கோகிலநாதன், மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர் இராவணன் உள்ளிட்ட தோழர்கள் தலைமையில் நகரப்பேருந்துகள் பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருச்சி பேருந்துகள் மறிக்கப்பட்டு, ஐம்பத்து மூன்று தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதுக்குப் பிறகு திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த தோழர்களை இரவு எட்டு மணி வரை விடுதலை செய்யாமல் பழி வாங்கியது போலீசு.

மறியலைக் கேள்விப்பட்டு வந்த விவசாயிகள் சிலர் மண்டபத்திற்கு வந்து தோழர்களைச் சந்தித்து நன்றி கூறினர். விவசாயி மதியழகன் கூறிய போது, ஐந்து ஏக்கர் நிலம் உடைய சிறு விவசாயி நான். சிறு வயதிலிருந்தே விவசாயத்தில் – ஈடுபாடு உண்டு. ஐந்து ஏக்கரில் கரும்புப் பயிர் செய்தால் செலவு போக இரண்டு இலட்சம் கிடைக்கும் என்று வேளாண் அதிகாரிகள் அலுவலர்கள் கூறியதை நம்பி கரும்புச் சாகுபடி செய்தேன். உரம் பூச்சி மருந்துகள் போட்டு, கரும்பு நன்றாகவே வளர்ந்து இருந்தது. கட்டிங் ஆர்டர் கிடைக்கவில்லை. கரும்பை வெட்டி ரோட்டில் அடுக்கிப் பதினைந்து நாட்கள் காய்ந்து கொண்டிருந்தது. கடைசியாக 1 ட ன் கரும்புக்கு ரூ. 1200 என்று கட்டிங் ஆர்டர் கிடைத்தது. கரும்பு பாக்கிப் பணத்தை வாங்க அலைந்து கால்கள் தேய்ந்து போனதுதான் மிச்சம்.

இனி கரும்பு வேண்டாம் என்று சவுக்குப் பயிரிட்டு வெளிநாடு சென்று விட்டேன். மலேசியா-விலிருந்து திரும்பி வந்து விட்டேன். எப்படி விவசாயம் செய்வது? அடுத்து என்ன செய்வது? என்று புரியாமல் சவுக்கு, பாமாயில், தென்னை என்று பயிரிட்டு விவசாயிகள் போண்டியாகிக் கொண்டிருக்கிறார்கள். கறவை மாடு வாங்க வங்கிக்கு அலைந்து கடன் கிடைக்கவில்லை என்றார். தேர்தலில் ஓட்டு போட்டு மாற்றம் நிகழப் போவதில்லைஎன்றார். டாஸ்மாக் அம்மாவின் சீர்மிகு ஆட்சியில் விவசாயிகளின் நிலை எப்படி உள்ளது என்பதற்கு விவசாயி மதியழகனின் கருத்தும், ஒரத்தநாடு, அரியலூர், லேலூர் என்று அடுத்தடுத்த சம்பவங்க ளும் சாட்சிகளாக உள்ளன.

மறியலுக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் சோழகன்குடிக்காடு விவசாயி பாலன் மீது தாக்குதல் நடத்திய பாப்பாநாடு ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் மற்றும் தனியார் வங்கியான கோட்டக் மகிந்திரா அதிகாரிகள் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.

அரியலூர் மாவட்டம், ஒரத்துர் ஊராட்சி விவசாயி அழகரைத் தற்கொலைக்குத் தள்ளிய சோழ மண்டலம் பைனான்ஸ் அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும். தனியார் நிதி நிறுவனங்கள் வசூல் முகவர்கள் என்ற பெயரில் அடியாட்களை வைத்துக் கொள்வதையும் அத்தகைய அடியாட்களாக ஓய்வு பெற்ற போலீசார் செயல்படுவதையும் தடை செய்ய வேண்டும். பஞ்சாயத்து முறையான ஆர்பிட்டேஷன் ஆக்டை நீக்க வேண்டும்.

கந்து வட்டிக் கொடுமைக்கும், சாதிவெறிக் கொலைகளுக்கும் முடிவு கட்ட ஆதிக்கச் சாதி வெறிச் சங்கங்களை முற்றாகத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

 முழக்கங்கள்:

கைது செய்… கைது செய்… கிரிமினல் வழக்குப் பதிவு செய் !
விவசாயி பாலன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய
போலீசைக் கைது செய்!
கோட்டக் மகேந்திரா அதிகாரிகளைக் – குண்டர் சட்டத்தில் கைது செய் !!!
அரியலூர் விவசாயி அழகரைக் கொலை செய்த
சோழ மண்டலம் பைனான்சின் அதிகாரிகளைக் கைது செய்! தமிழக அரசே கைது செய் !!

ஒன்பதாயிரம் கோடியை ஒரேயடியாய்ச் சுருட்டிய
சாராய மன்னன் மல்லையாவுக்கு லண்டனிலே உல்லாசம்
மாமா வேலை பார்த்தது மோடியோட சர்க்காரு !
அறுபதாயிரம் கட்டலேண்ணு அடிச்சு உதைச்சு வதைக்குது லேடியோட சர்க்காரு !!

அம்பானியும் அதானியும் இன்னும் பல முதலாளிகளும்
கடன் பாக்கி கோடி கோடி கமுக்கமாக தள்ளுபடி !
நட்டமான விவசாயத்தால் கட்ட முடியாத
விவசாயிக்கு அடிமை போல சவுக்கடி !!

அனுமதியோம். அனுமதியோம்.
தனியார் வங்கிக் கொள்ளையர்கள்
அடியாள் கும்பல் போலீசு ரவுடித்தனத்தை அனுமதியோம்!

சட்டத்திற்கும் தீர்ப்புகளுக்கு டாடா காட்டி ஆட்டம் போடும்
தனியார் வங்கிக் குண்டர்களின் அடாவடிக்கு முடிவு கட்டுவோம்!

சட்டமும், நீதியும் தோற்றுப்போனது!
அதிகாரவர்க்கமும் போலீசும் மக்கள் விரோதக் கும்பலாச்சு!!
கையிலெடுப்போம். கையிலெடுப்போம்.
அதிகாரத்தைக் கையிலேடுப்போம்!!!
மக்கள் அதிகாரம் உயர்த்திப் பிடிப்போம்!

இவண்

மக்கள் அதிகாரம், தஞ்சாவூர்.

___________________________

ஓசூர் மக்கள் அதிகாரம்

ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு அலைகள் – ஒரு எளிய விளக்கம்

4

சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் ஐன்ஸ்டீன் தனது புகழ் பெற்ற பொது சார்பியல் கோட்பாட்டில் முன்வைத்த கருதுகோளான ஈர்ப்பு அலைகள் தற்போது கண்டறியப்பட்டு துல்லியமாக அளவிடப் பட்டுள்ளது.

ஆப்பிள் கீழே விழுவதைப் பார்த்து நியூட்டன் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்று நாம் இயற்பியல் பாடத்தில் படித்திருக்கிறோம். எனில் ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன? ஈர்ப்பு அலைகளை புரிந்து கொள்வதற்கு நாம் நியூட்டனிடம் இருந்து துவங்குவோம்.

isaac_newton_large
நியூட்டன்

1687-ம் ஆண்டு நியூட்டன் தனது புகழ் மிக்க இயற்கை தத்துவத்தின் கணிதக் கோட்பாடுகள் (பிரின்ஸ்சிபியா) புத்தகத்தைவெளியிட்டார். பிரின்ஸ்சிபியாவில் வெளியான நியூட்டனின் மூன்று இயக்க விதிகள் மற்றும் பிரபஞ்ச ஈர்ப்பு விசையின் விதிகள் அக்கால அறிவியலில் புரட்சியை ஏற்படுத்தின.

முன்னதாக, 17-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜோனாதன் கெப்ளர் கோள்கள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருவதை கணக்கிடும் கோள்களின் இயக்க விதிகளை வெளியிட்டார். இவ்விதிகள் அரிஸ்ட்டாடில் காலம் தொட்டு நிலவி வந்த புவி மையக் கோட்பாட்டை தவறென்றும், கோபர்நிகசும் கலிலியோவும் முன்வைத்த சூரிய மையக் கோட்பாடே சரியென்றும் நிரூபணம் செய்தன.

நியூட்டனின் முதல் விதியின் படி ஒரு பொருளின் மீது வெளிப்புறவிசையொன்று செயல்படாத வரை தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டிலான சீரான இயக்க நிலையையோ மாற்றிக்கொள்ளாது. இதை மரத்திலிருந்து விழும் ஆப்பிளுக்கும், கெப்ளர் முன்வைத்த கோள்களின் இயக்க விதிகளுக்கும் பொருத்துகிறார் நியூட்டன். ஆப்பிள் மரத்திலிருந்து கீழே விழுவதற்கு அதன் மீது ஒரு விசை செயல் பட்டிருக்க வேண்டும். இந்த விசைக்கு “ஈர்ப்பு விசை” எனப் பெயரிட்டார்.

ஆப்பிளைப் போலவே, நிலவின் மீதும் பூமி ஒரு இழு விசையை செலுத்துகிறது, இவ்விசை இல்லையெனில் நிலவு அண்டத்தில் தெடர்ந்து நகர்ந்து செல்லும். அதாவது நிலவு பூமியின் ஈர்ப்பு புலத்திற்குள் இருக்கிறது, ஆனால் அவற்றுக்கிடையிலான தூரம் அதிகமாக இருப்பதால் இவ்விசை நிலவு பூமியின் மீது விழாமல் புவியைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் சுற்றி வரச்செய்கிறது. இதையே பூமி – சூரியனுக்கும், மற்ற கோள்களுக்கும் பொருத்தி மொத்த சூரியக் குடும்பத்த்தின் இயக்கத்தையும் விளக்கி கெப்ளரின் விதிகள் சரியென நிறுவினார் நியூட்டன். இயற்கையின் இயக்கத்தை இப்படி ஒரு பகுதியிலிருந்து புரிந்து கொண்டு அதை முழுமைக்கும் பொருத்தி புரிந்து கொள்ள முடியும். சமூகத்தின் இயக்கத்தை தனியானதிலிருந்து முழுமையை பொருத்தி புரிந்து கொள்வதற்கும் இந்த ஆய்வு முறை பொருந்தும். இதில் கண்டறியப்படும் சரி தவறுகள் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு நாம் இயக்கத்தின் விதிகளை மேன்மேலும் அறிகிறோம்.

அண்டத்தில் நிறையுள்ள எல்லா பருப்பொருளும் மற்ற பொருட்களின் மீது இழுவிசையை செலுத்துகிறது; இவ்விசை பருப்பொருளின் நிறைக்கு நேர் விகித்தத்திலும், அவற்றிற்கிடையிலான தூரத்திற்கு எதிர் விகிதத்திலும் இருக்கும் என்ற பிரபஞ்ச ஈர்ப்பு விசையின் விதியை வெளியிட்டார் நியூட்டன். ஆனால், நியூட்டனின் விதிகள் ஈர்ப்பு விசையின் தோற்றுவாயை கண்டறிந்து கூறவில்லை.

நியூட்டனின் இந்த விதிகள் கேள்விக்கு இடமில்லாத வகையில் சுமார் 220 ஆண்டுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தது.

நியூட்டனின் விதிகள் ஒரு குறிப்பிட்ட நிலைமச் சட்டத்திற்குள் (Inertial Reference Frame) சரியாக இருப்பதையும், வெவ்வேறு நிலைமச் சட்டங்களின் நோக்கு நிலைகளில் தவறாகிவிடுவதையும், மேக்ஸ்வெல்லின் மின்காந்த அலை விதிகளுடன் முரண்படுவதையும் கண்டு கொண்ட ஐன்ஸ்டீன், இயற்கை விதிகள் எல்லா நிலைமச் சட்டங்களுக்கும் பொதுவானவையாக, பொருந்தக் கூடியவையாக இருக்கவேண்டும் என்று நினைத்தார்.

06-speech-7-einstein
ஐன்ஸ்டீன்

இந்நிலையில் தான் ஐன்ஸ்டீன் 1905-ம் ஆண்டில் ‘சிறப்பு சார்பியல் கேட்பாட்டையும்’ 1915-ம் ஆண்டில் ‘பொது சார்பியல் கோட்பாட்டையும்’ முன்வைத்தார்.

இடம் (வெளி), காலம், பருப்பொருளின் நிறை அனைத்தும் அறுதியான மாறிலிகள் என்ற நியூட்டனின் இயக்க விதிகள் குறைவான வேகத்தில் சரியாகவும், ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க தவறாகிவிடுவதையும்; பிரபஞ்ச ஈர்ப்பு விதிகள், குறை வலுவுள்ள ஈர்ப்பு புலத்தில் சரியாகவும், மிக மிக வலுவான ஈர்ப்பு புலங்களில் தவறாகிவிடுவதையும் தனது சார்பியல் கோட்பாடுகளில் நிறுவினார் ஐன்ஸ்டீன்.

ஐன்ஸ்டீன் தனது பொது சார்பியல் கோட்பாட்டில் இடம் (வெளி), காலம், பருப்பொருளின் நிறை அனைத்தும் அறுதியான மாறிலிகள் அல்ல என்றார். குறிப்பாக வெளி, காலம் இவை இரண்டும் தனித்தனியான அறுதியான மாறிலிகள் அல்ல, அவை ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை என்றார்.

நாம் புற உலகை நீள, அகல, உயரமாக (x, y, z) முப்பரிமாணத்தில் தான் பார்க்கிறோம். அண்டவெளி என்பது இந்த முப்பரிமாண வெளி தான். இந்த முப்பரிமாணத்தையும் ஒரு நூலாக உருவகம் செய்து கொள்வோம். இரண்டு இயக்கங்களுக்கு இடையிலான இடைவெளி தான் காலம். காலத்தை மற்றொரு நூலாக உருவகம் செய்து கொள்வோம். இந்த இரு நூல்களையும் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக (நீள வாக்கிலும், அகலவாக்கிலும்) துணி நெய்தால், அது தான் நான்கு பரிமாண கால-வெளி தொடர்-பத்தை (Space-Time Continuum).

நாற்புறமும் இழுத்துக்கட்டிய இத்துணியின் மீது நிறை அதிகமுள்ள பருப்பொருளை வைத்தால், பொருளின் நிறைக்கு ஏற்றவாறு துணி வளைகிறது. அதாவது வெளி வளைகிறது. வெளி வளைவதால், அதன் மீதான பருப்பொருளின் இயக்கம் மாறுதல் அடைகிறது. இயக்க மாற்றம், இயக்கங்களுக்கு இடையிலான இடைவெளியை (காலத்தை) நீட்டிக்கிறது அல்லது குறுக்குகிறது. இவ்விதம் காலமும் வெளியும் ஒன்றோடொன்று பிணைந்துள்ளன.

பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள இந்த கால-வெளி துணியின் மீதுதான் நமது பூமி முதல் சூரியன் ஈராக விண்மீன்கள் அனைத்தும்162571main_GPB_circling_earth3_516 இருக்கின்றன. அவை தனது நிறைக்கேற்றவாறு துணியில் வளைவை (பள்ளத்தை) ஏற்படுத்துகிறது. இந்த வளைவுகள் தான் ஈர்ப்பு புலம், பொருட்கள் ஒன்றை ஒன்று ஈர்ப்பதன் தோற்றுவாய். புலத்தின் வலிமை (பள்ளத்தின் அளவு) பொருளின் நிறையை மட்டுமின்றி, அதனுள் இருக்கும் ஆற்றல், அழுத்தத்தையும் பொறுத்தது என்றார். இந்தப்புலம் மிக வலிமையாக இருக்கும் பட்சத்தில் ஒளியையும் வளைக்கவல்லது, ஈர்க்கவல்லது என்றார் ஐன்ஸ்டீன்.

மேலும், இம்மேடு பள்ளங்களில், ஒரு பனிச்சறுக்கு வீரனைப் போல கோள்களும், நட்சத்திரங்களும் சுற்றிவருகின்றன, ஒட்டு மொத்த பிரபஞ்சமும் இயங்குகிறது என்று முன்வைத்தார் ஐன்ஸ்டீன். இந்த இயக்கங்கள் துணியில் அலையை ஏற்படுத்துகின்றன. அவை ஒளியின் வேகமான வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பிரபஞ்சம் முழுவதற்கும் பரவிவருகின்றன என்றார் ஐன்ஸ்டீன்.

விளக்கமெல்லாம் சரிதான் நடமுறைச் சான்று எங்கே?

நமது சூரியனை விட மிக அதிக நிறை கொண்ட விண்மீன்களிலிருந்து வெளியாகும் ஒளியின் அலைநீளம் (Wave Length), அவ்விண்மீன்களின் ஈர்ப்பால் மாற்றமடைந்து சிகப்பு விலகலடைவதை (Red Shift) விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

சூரியனை விட பல மடங்கு நிறை கொண்ட விண்மீன்களின் எரிபொருள் தீர்ந்து (அதாவது அவற்றின்  ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் அனைத்தும் அணுக்கரு பிணைப்பின் மூலம் கனமான தனிம அணுக்களாக மாறி) அவற்றின் உளழுத்ததினால் சுருங்கி ‘கருந்துளையாக’ மாறும். இந்தக் கருந்துளைகள் ஒளியையும் ஈர்க்குமளவு ஈர்ப்பு வலிமை கொண்டவை. அதனால், இவற்றை காணமுடியாது.

கருந்துளைகளும், அதிநிறை கொண்ட நட்சத்திர எச்சங்களும், ஒளியை வளைப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். எனில், ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு அலைகளும் பிரபஞ்சத்தில் இருக்க வேண்டும், பரவ வேண்டும் என அவற்றை கண்டும் விண்டும் சொல்ல ஆய்வுகள் துவக்கப்பட்டன.

Laser Interferometer Gravitational-Wave Observatory (LIGO)

1960-களில் துவக்கப்பட்ட ஈர்ப்பு அலைகளை உணர்ந்து, அளவிடும் கருவியை உருவாக்கும் ஆய்வுகள், பல படிநிலைகளையும், நிதிசார் இன்னல்களையும் தாண்டி 2000-களில் முடிவுற்றது.

லிகோ (LIGO) பெயரிடப்பட்ட இக்கருவியில் லேசர் ஒளிக்கற்றை ஒன்று முதலில் உருவாக்கப்படும், அது பின்னர் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒன்றுக்கொன்று செங்குத்தான இரண்டு சுரங்கக் குழாய்களில் அனுப்பப்படும். இரண்டும் துல்லியமாக சமதூரம் (4 கிலோமீட்டர்) சென்று அங்குள்ள கண்ணாடியில் பட்டு மீண்டும் ஒரு இடத்திற்கு வரும். பல முறை இவ்வாறு பயணப்பட்ட பின் இரு கற்றைகளும் ஒப்பு நோக்கப்படும். இரண்டு ஒளிக்கற்றைகளும் பயணித்த தூரம் ஒன்றாக இருந்தால், இரண்டு ஒளிக்கற்றைகளின் அதிர்வெண் – அலைநீளம் ஒன்றை ஒன்று சமன் செய்துவிடும். இரண்டு ஒளிக்கற்றைகளின் அதிர்வெண் – அலைநீளம் சமமாக இல்லையெனில், இரண்டும் பயணித்த தூரத்தில் மாற்றம் இருப்பதை உணரலாம். இந்த மாறுபாட்டை LIGO கருவி கண்டறியும்.

LIGO2
LIGO’s Growing Universe

LIGO கருவியில் 2002 முதல் 2010 வரை முதல் சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் குறிப்பிடத்தகுந்த வெற்றி கிடைக்கவில்லை. பின்னர், கருவி மேம்படுத்தப்பட்டு 2015-ல் மீண்டும் தனது சோதனைகளை துவக்கியது.

நிறையுடன் கூடிய இரு பருப்பொருட்கள் கால-வெளி துணியில் ஒன்றை ஒன்று சுற்றி வருவதாக உருவகம் செய்து கொள்வோம். அவை ஒன்றை ஒன்று சுற்றுவதால் அவற்றின் பள்ளங்கள் (வளைவுகள்), அலை போன்ற அதிர்வுகளை துணியில் ஏற்படுத்தும். இந்த அலைகள் வேறொரு பொருளை கடந்து செல்லும் போது, அப்பொருளின் காலம், வெளியில் ஏற்றத்தாழ்வை உருவாக்கும். அதாவது காலமும் வெளியும் ஒரு புறம் விரியும், அதன் செங்கோட்டு எதிர்த் திசையில் குறுகும்.

காலத்திலும், வெளியிலும் (தூரத்திலும்) ஏற்படும் இம்மாற்றம், LIGO-வின் இரண்டு செங்குத்துக் குழாய்களில் ஒன்றை நீட்டும், மற்றொன்றை சுருக்கும். அணுவின் அளவில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவிற்கே இருக்கும் மிக மிகச் சிறியதான இம்மாற்றத்தைக் கைப்பற்றி அளவிடுவது எளியதல்ல.

LIGO-வின் சுரங்கப்பாதைகளில் பயணித்த லேசர் ஒளிக்கற்றைகளுக்கு இடையில் மிகச் சிறிய வேறுபாடு தெரியும். இந்த வேறுபாட்டைத்தான் 14-09-2015 அன்று முதல் முறையாக கண்டறிந்து அளவிட்டுள்ளதாக, பிப்ரவரி 11, 2016அன்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

மட்டுமின்றி அவ்வலைகளின் தோற்றுவாயையும் கணக்கிட்டுள்ளனர். பூமியிலிருந்து 130 கோடி (1.3 பில்லியன்) ஒளியாண்டுகள் தொலைவில் நமது சூரியனைப்போல முறையே 36 மடங்கு நிறையும், 29 மடங்கு நிறையும் கொண்ட இரண்டு கருந்துளைகள் ஒன்றை ஒன்று சுற்றிச் சுழன்று கொண்டிருந்தன. அவை படிப்படியாக நெருங்கி ஒன்றோடொன்று மோதி சூரியனைப் போல 62 மடங்கு நிறை கொண்ட கருந்துளையாக மாறின. அவற்றிலிருந்து வெளியான ஆற்றல் ஈர்ப்பு அலைகளாக பரவின. அதாவது, தொலைதூரத்தில் சுமார் 130 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டு கருந்துளைகள் ஒன்றோடு ஒன்று இணைந்ததால் வெளியான ஈர்ப்பு அலைகள் ஒளியின் வேகத்தில் பயணித்து 14-09-2015 அன்று நமது பூமியைக் கடந்து சென்றன.

இந்த நூற்றாண்டின் சிறந்த சாதனை கண்டுபிடிப்பாக இதை கொண்டாடுகின்றனர் விஞ்ஞானிகள்.

MIT-LIGO-2_3
கருந்துளைகள்

ஒவ்வொரு பொருளையும் நாம் எப்படி பார்க்கிறோம்?
ஒரு பொருள் வெளியிடும் ஒளி அல்லது பொருளின் மீது பட்டு பிரதிபலிக்கும் ஒளியைக் கொண்டு தான் நாம் எல்லா பொருட்களையும் கண்களால் காண்கிறோம். கலிலியோவின் தொலைநோக்கியால் நட்சத்திரங்கள் வெளியிடுகிற கண்ணால் காணும் ஒளியையும், ஒளியை பிரதிபலிக்கும் கோள்களையும் மட்டுமே காணமுடிந்தது.

பின்னர் அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்து, ஈர்ப்பு விசையால் அதிர்வெண்ணும், அலை நீளமும் மாற்றப்பட்டு இதர மின் காந்த அலைகளான அகச்சிவப்பு, புற ஊதா, நுண்ணலை, ரேடியோ அலைகள், எக்ஸ் கதிர்கள் (X-Ray) போன்றவற்றை வெளியிடும் அல்லது பிரதிபலிக்கும் பொருட்களை காணவும், ஆராயவும் முடிந்தது.

சரி, ஒளி – மின் காந்த அலைகளை வெளியிடாத, அவற்றையும் ஈர்க்கக்கூடிய கருந்துளைகளை எப்படி பார்ப்பது, ஆய்வு செய்வது? பெரு வெடிப்பு நிகழ்ந்ததிலிருந்து 3,78,000 ஆண்டுகளுக்கு பின்னர் தான் நாம் காணக்கூடிய ஒளியும், மின்காந்த அலைகளும் தோன்றி பரவ ஆரம்பித்தன. அந்த முதல் மூன்று இலட்சத்தி எழுபத்தெட்டாயிரம் ஆண்டுகளை எப்படி ஆய்ந்தறிவது?

மின் காந்த அலைகள் தவிர்த்த வேறு அலைகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை உணர்ந்து கணக்கிட முடிந்தால், அவற்றைக் கொண்டு கருந்துளைகளையும், முதல் மூன்று லட்சம் ஆண்டுகளின் விண்பொருட்களை காணவும், ஆராயவும் முடியலாம். மின் காந்த அலைகளை தவிர்த்து வேறு அலை ஒன்று இருப்பதை தான் ஐன்ஸ்ட்டின் தனது பொது சார்பியல் கோட்பாட்டில் விளக்கி அதற்கு ஈர்ப்பு அலைகள் எனப் பெயரிட்டார்.

அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஈர்ப்பு அலைகளின் இருப்பு, இப்பிரபஞ்சத்தை மேலும் புதிய கோணத்தில் ஆய்ந்தறிய உதவி செய்யும். உதாரணமாக, தற்போது கண்டறியப்பட்ட ஈர்ப்பு அலைகளைக் கொண்டு அதன் தோற்றுவாயான கருந்துளை இணைவை கணக்கிட்டுள்ளனர்.

இந்த ஈர்ப்பலை சோதனைகளை மேலும் மேம்படுத்திச் செல்லும் போது, இது வரை நாம் கண்டிராத விண்பொருட்களை தெரிந்து கொள்ளமுடியும், அது விடை தெரியாத புதிர்களை அவிழ்க்கும். இன்றளவிலும் கருதுகோள் நிலையிலேயே உள்ள பெருவெடிப்பின் மூலம் பிரபஞ்சம் தோன்றிய ஆரம்பக் கட்டங்களை தெரிந்து கொள்ள உதவும். நமது ஒட்டு மொத்த பார்வை கோணத்தை விரிவும் ஆழமும் கொண்டதாக மாற்றும் தன்மையுள்ளது இக்கண்டுபிடிப்பு.

நூற்றாண்டுகால தேடலுக்கு விடை கிடைத்துவிட்டது, ஆனால் பேரண்ட ஆய்வுகள் புத்தம் புதிய திசையில் முதல் அடியெடுத்து வைக்க தொடங்கி விட்டது.

இந்த உலகை படைத்தவன் ஒருவன் இருக்கிறான், அவன் படைப்பு பேரகசியத்தை யாரும் அறிய முடியாது என்றபடி ஆத்திகர்களும், யாரும் எதையும் முழுமையாக அறியமுடியாது – அறியமுடியும் என்று சொல்வதே அறியாமை என்று தத்துவம் பேசியவர்களும் இந்த முறையும் நிறையவே வெட்கப்பட வேண்டும்.

– மார்ட்டின்.

மேலும் ஈர்ப்பு அலைகளை பற்றி தெரிந்துக் கொள்ள :

 

 

ஐன்ஸ்டீனின் இரு சார்பியல் கோட்பாடுகளை அறிந்து கொள்ள :

http://www.einstein-online.info/

http://www.relativity.li/en/epstein2/read/a0_en/

JNU வளாகத்தில் மாணவர் அமைப்புகளும் கருத்துச் சுதந்திரமும்

5

JNU நேரடி ரிப்போர்ட் 4

”படிக்கிற காலத்தில் படிப்பில் கவனம் செலுத்தாமல் அரசியலில் ஈடுபடுவது சரியல்ல என்பது ஜே.என்.யு மாணவர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று.. இதற்கென்ன சொல்கிறீர்கள்?”

“விவசாயி விவசாயத்தை மட்டும் கவனிக்க வேண்டும். தொழிலாளி வேலை செய்வதை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும். மீனவர் மீன் பிடிப்பதை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பம் இருப்பவர்கள் குடும்பத்தையும், இல்லாதவர்கள் எப்படி ஒரு குடும்பத்தை ஏற்படுத்துவது என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்ல வருகிறீர்களா?”

”உங்கள் பதில் இடக்கு மடக்காக இருக்கிறதே?”

“சரி, இப்படிக் கேட்கிறேன் – மாணவர்களின் கோரிக்கைகளை மாணவர்கள் தானே முன்வைக்க வேண்டும்? மாணவர்கள் சமுதாயத்தின் ஒரு அங்கம் என்கிற வகையில் அவர் சமுதாயத்தை பாதிக்கும் விசயங்களில் தங்களது கருத்தை ஏன் சொல்லக் கூடாது?”

“நீங்கள் சொல்வதில் எமக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனால், இந்துத்துவ சாய்வுள்ளவர்கள் மிக இயல்பாக உங்கள் வாதங்களை ஒற்றை வரியில் எதிர் கொண்டு விடுவார்கள்..”

”இருக்கலாம்.. பதிலுக்கு நாங்களும் கேட்போம், உங்களது ஏ.பி.வி.பி என்ன கிழவர்கள் அமைப்பா?”

”ஏ.பி.வி.பி பற்றி சொன்னீர்கள்.. பொதுவாக அவர்கள் குருபூர்ணிமா நடத்துவது, ஆசிரியர்களை குருவாக உருவகித்து அவர்களின் கால்களுக்கு பாத பூஜை செய்வது என்று தான் தங்களது அமைப்புச் செயல்பாடுகளை வைத்துக் கொள்கிறார்கள். பொதுவாக நிர்வாகத்தைக் கேள்வி கேட்க மாட்டார்கள் – அப்படியே கேட்டாலும் அது இந்துத்துவ அரசியலின் நலன்களுக்கு உட்பட்டதாகவே இருக்கும். ஜே.என்.யுவில் எப்படி?”

“இங்கே வளாகத்திற்குள் அந்தமாதிரி கோமாளித்தனங்களை அவர்கள் வைத்துக் கொள்வதில்லை. வளாகத்திற்குள் ஏ.பி.வி.பியினர் புகை பிடிப்பதைக் கூட நீங்கள் பார்க்கலாம். சாதி வெறியை பச்சையாக வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். எங்களோடான விவாதங்களில் அம்பலப்பட்டு விடுவார்கள். விவாத மேடையில் வலதுசாரித் தத்துவமும் இடதுசாரித் தத்துவமும் நேரிட்டு சந்தித்துக் கொண்டால் அவர்களின் போலித்தனங்களை உரித்து அம்மணமாக நிறுத்துவது எளிதானது. வலதுசாரிகளுக்கும் அறிவுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று கருதுகிறீர்கள்?”

”மற்ற அமைப்புகள்…?”

”வெளியே சமூகத்தில் எத்தனை விதமான அமைப்புகள் உண்டோ அத்தனை விதமான அமைப்புகளுக்கும் இங்கே பிரதிநிதித்துவம் உண்டு. என்ன, விகிதாச்சாரங்களில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்”

“ஆம் ஆத்மி?”

”ஆம் ஆத்மி என்பது அரசியல் அமைப்பாக இல்லை.. அது ஒரு சமரச போக்கு. இங்கே அரசியலற்ற நபர்களிடம் அந்தப் போக்கிற்கு ஓரளவு செல்வாக்கு உண்டு. குறிப்பாக சி.பி.எம்மின் மாணவர் சங்கத்திலிருந்து விலகி டி.எஸ்.எஃப் என்று தனி அமைப்பாக செயல்படுபவர்கள் ஆம் ஆத்மி அரசியலைத் தான் பேசுகிறார்கள்”

jnu-ground-report-4-4ஜே.என்.யு வளாகத்தில் பல்வேறு அரசியல் அமைப்புகளின் மாணவர் பிரிவுகள் செயல்பட்டாலும் அப்பல்கலைக்கழகத்தின் அரசியல் சூழலில் இடதுசாரி மற்றும் தலித் ஆதரவுக் குரல்களே செல்வாக்கோடு ஒலிக்கின்றன. சி.பி.எம்(எம்.எல்) லிபரேசன் கட்சியின் அனைத்திந்திய மாணவர் அமைப்பு (AISA) பிரதானமான அமைப்பாக இருக்கிறது. சி.பி,.எம் கட்சியின் இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI), சி.பி.ஐ கட்சியின் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) போன்றவற்றுக்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது. இவை தவிர மாவோயிச கொள்கைகளைப் பேசும் (மாவோயிஸ்ட் கட்சி சார்பற்ற) ஜனநாயக மாணவர் சங்கம் (DSU) மற்றும் காங்கிரசின் இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI) போன்றவற்றுக்கும் ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கிறது.

இந்த அமைப்புகளைத் தவிர, மேற்குவங்க மாணவர்களால் நடத்தப்படும் Collective, பின்நவீன சித்தாந்தம் கொண்ட KNS, அம்பேத்கரிய BAPSA, உள்ளிட்ட அமைப்புகளுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஆதரவுத் தளம் உள்ளது. இவற்றோடு புதிய பொருள்முதல்வாதிகள் (TNM) என்கிற அமைப்பு எண்ணிக்கையில் குறைவானவர்களைக் கொண்டிருந்தாலும், கருத்துத் தளத்தில் குறிப்பிடும்படியான அமைப்பாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் பரிவாரமான ஏ.பி.வி.பி அமைப்பிற்கு குறிப்பிட்ட சில கல்லூரிகளில் ஆதரவுத் தளம் உள்ளது. சுமார் முன்னூறு மாணவர்கள் வரை அவ்வமைப்பின் ஆதரவாளர்களாக உள்ளனர்.

இவை தவிர இஸ்லாமிய மாணவர் சங்கம் (SIO) மற்றும் பாபுலர் பிரண்ட் அமைப்பின் மாணவர் பிரிவான CFI போன்ற வகாபிய அடிப்படைவாத மாணவர் அமைப்புகளுக்கும் ஓரிரு பிரதிநிகள் உள்ளனர். இஸ்லாமிய மாணவர்கள் பெரும்பான்மையாக இடதுசாரி மாணவர் அமைப்புகளிலேயே உள்ளனர். வகாபிய கருத்துக்களுக்கு வளாகத்தில் அனேகமாக இடமில்லை என்றே சொல்லலாம்.

மாணவர் அமைப்புகள் பங்கு கொள்ளும் மாணவர் சங்கத் தேர்தல் சுமார் ஒரு மாத கால திருவிழாவைப் போன்றே நடத்தப்படுகின்றது. தேர்தலுக்கு முன் அதைக் கண்காணித்து முறைப்படுத்த மாணவர்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தேர்தல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டு அது நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்படுகின்றது. வளாகத்தினுள் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனி கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கவுன்சிலர்களோடு சேர்த்து தலைவர், துணைத்தலைவர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர்களும் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

தேர்தல் முறையைப் பொறுத்தளவில், லிங்டோ குழு பரிந்துரைத்த மாணவர் தேர்தல் சீர்திருத்தங்களுக்கு பல்வேறு மாணவர் அமைப்புகளிடம் எதிர்ப்பு நிலவுகின்றது. தேர்தலில் பங்கேற்க வயது வரம்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும், மொத்த தேர்தல் நடைமுறையை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் உள்நோக்கங்களையும் லிங்டோ குழு பரிந்துரைகள் கொண்டிருப்பதால், புதிய பொருள்முதல்வாதிகள் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் மாணவர் சங்கத் தேர்தலில் பழைய முறையைக் கொண்டு வரக் கோரி தேர்தலைப் புறக்கணித்து வருகின்றன.

தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிகள் அடங்கிய பொதுக்குழு (General Body Meeting) ஒவ்வொரு கல்லூரிவாரியாக அவ்வப் போது கூடி மாணவர்களின் தேவைகள், கோரிக்கைகள் ஆகியவற்றைப் பரிசீலிக்கிறது. வருடாந்திரம் நடக்கும் தேர்தலில் கல்லூரிகளுக்கான பிரதிநிதிகளோடு சேர்த்து பல்கலைக்கழக அளவிலான கவுன்சிலர்கள், தலைவர், துணைத் தலைவர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மாணவரும் இந்தப் பதவிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே வக்களிக்க வேண்டும். ஒரு கல்லூரியின் மொத்த மாணவர் எண்ணிக்கையை பொருத்து ஒன்றுக்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு மாணவரும் தேர்தலின் போது ஏறக்குறைய பத்து வெவ்வேறு பதவிகளுக்கான வாக்குகளைத் தனித்தனியே பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறாக ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்படும் மாணவர் சங்கம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்குமான ஒரு ஊடகமாக செயல்படுகின்றது. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பின் ஜோசியத்தையும் யோகாவையும் ஒரு பாடமாக உள்ளே நுழைக்க முயற்சித்ததை மாணவர் சங்கமே முன்னின்று முறியடித்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் மாணவர் சங்கம் ஒரு தீர்மானகரமான குரலாக விளங்குவதன் காரணமாகவே இந்துத்துவ செயல்திட்டங்களை எதிர்ப்பின்றி உள்ளே புகுத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டங்கள் தோல்வியடைகின்றன.

jnu-ground-report-4-3ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிவருடிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் ஜே.என்.யுவிற்கு எதிராக முன்னெடுத்து வரும் நச்சுப் பிரச்சாரங்களுக்கு கலாச்சார தளத்தில் நோக்கங்கள் உள்ளதென்றால், மத்திய பாரதிய ஜனதா அரசுக்கோ பல்கலைக்கழகங்களை தனியார்மயமாக்குவது, உதவித் தொகையை நிறுத்துவது உள்ளிட்ட மறுகாலனியாக்க திட்டங்களை இடதுசாரி மாணவர் அமைப்புகள் போர்க்குணத்தோடு எதிர்த்து நிற்பது கண்ணில் ஊசியைப் பாய்ச்சுவதாக உள்ளது.

”தோழர், இத்தனை அமைப்புகளும் மாறுபட்ட கண்ணோட்டங்களும் உள்ள இடத்தில் ஒரு பிரச்சினைக்கான விவாதம் என்றால் தலையைக் கிறுகிறுக்க வைக்கும் அனுபவமாக அல்லவா இருக்கும்?”

”விவாதங்கள் நீண்ட நேரம் நடக்கும்… இங்கே நிலவும் விவாதச் சூழல் பலரும் நினைப்பது போல் முற்றிலுமாக இடதுசாரி சாய்வோடு நடக்கும் ஒன்றல்ல. ஒருவகையான லிபரல் ஜனநாயகத்தின் அடிப்படையிலான விவாதங்களே இங்கே நடக்கின்றன. அதில் எல்லா கருத்துக்களுக்கும் இடமுண்டு. எல்லா வர்க்க சார்புள்ள கருத்துக்களும் மோதும் ஒரு விவாத வெளியில் இறுதியாக இடதுசாரிக் கருத்துக்கள் வெல்கின்றன என்பதே உண்மை..”

“உதாரணம் ஏதாவது சொல்லுங்களேன்…”

“ஏதாவது ஒரு விசயம் பற்றி முடிவெடுக்க அனைத்து மாணவர் சங்க அமைப்புகளும் கூடுகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்… அப்போது காங்கிரசு கட்சியின் மாணவர் அமைப்பு தனது கட்சியின் நிலைப்பாடுகளுக்கு பொருத்தமான கருத்துக்களை முன்வைத்து வாதாடும்… அதே போல் ஏ.பி.வி.பி அமைப்பினர் தனது இந்துத்துவ கருத்தியலுக்கு பொருத்தமான வாதங்களை முன்வைப்பார்கள்.. யாரும் இவர்களுக்குத் தடை போட மாட்டார்கள்.. அவர்களின் கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்பதை தீவிர இடதுசாரி கருத்தியல் கொண்ட சங்கங்கள் கூட ஆதரிப்பார்கள். அனைத்துமே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். விவாதத்தின் போக்கில் இந்துத்துவர்களால் தங்களது வாதங்களை தற்காத்துக் கொள்ள முடியாமல் தோற்றுப் போவார்கள். என்றாலும் கூட இடதுசாரி கருத்து கொண்டவர்கள் அவர்களை இழிவு படுத்தவோ, கேவலமாக பேசவோ செய்ய மாட்டார்கள். அவர்களுடையதும் ஒரு கருத்து தான் என்கிற அளவில் தான் எடுத்துக் கொள்வார்கள். ஜனநாயகப் பூர்வமான விவாதமே சரி தவறு எதுவென்பதை நிலைநாட்டும்”

DSU-naxalbariஇந்த ஜனநாயகம் தான் இந்துத்துவ கும்பலின் தலையாய பிரச்சினையாக உள்ளது. மாட்டுக்கறி வேண்டுமா வேண்டாமா? ராமன் தேசிய நாயகனா இல்லையா? மகிஷாசுரனை வணங்கும் உரிமை சரியா தவறா? காஷ்மீர் இந்தியாவோடு இருப்பதை நாம் தீர்மானிப்பதா காஷ்மீரிகளே தீர்மானிப்பதா? போன்ற எதிரெதிரான நிலைப்பாடுகளில், கருத்து மோதல்களில், இந்துத்துவம் விவாதத்தைக் கண்டு அஞ்சுவது ஏன் என்பதை விளக்கத் தேவையில்லை. இது போன்ற விவாதங்களில் முன்வைக்கப்படும் இந்துத்துவத்துக்கு எதிரான மாற்றுக் கருத்துக்களைத்தான் அவர்கள் தேச விரோதம் என்பதாக சித்தரிக்கின்றனர்.

வளாகத்தில் நிலவும் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் லிபரல் ஜனநாயகத்தின் சூழலை இந்துத்துவ கும்பலால் எதிர் கொள்ளவே முடியவில்லை. ராமனோ கோமாதாவோ… அவர்கள் புனிதம் என்று கருதுவதை ஏன் புனிதம் என்று நிலைநாட்டுவதற்கு அவர்கள் கருத்து மோதலை எதிர்கொண்டாக வேண்டும்.

குழந்தைத் திருமணம், விதவைகளைத் தீயில் தூக்கி எறியும் சதி முறை, தேவதாசி முறை, போன்றவை முன்பொரு காலத்தில் சமூகத்தின் பொதுபுத்தியில் “சரி” என்பதாக நிலைநாட்டப்பட்டிருந்தன. புதிய சமூகத்தின் கருத்துக்கள்தாம் பழையனவற்றைத் தவறென நிறுவி புதிய நியதிகளை நிலைநாட்டியுள்ளன.

ஒரு வேளை விதவைகளை உயிரோடு கொளுத்தும் உடன்கட்டை ஏறும் முறையை எதிர்த்து முறியடித்த ராம் மோகன் ராயின் காலத்தில், நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இருந்திருந்தால், ராம் மோகன் ராயை தேச துரோகியென அறிவித்திருப்பார்கள்.

விவாதம் எதைப் பற்றியதாக இருந்தாலும் அந்த விவாதப் பொருள் குறித்து ஆதரவாகவோ எதிராகவோ அல்லது முற்றிலும் வேறு நிலையிலிருந்தோ கருத்தை வைத்து வாதாடலாம் என்பதுதான் ஜே.என்.யு வில் நிலவும் விவாதக் கலாச்சாரம். தேசம் என்பது விவாதப் பொருள் என்றால், அதன் மேலான ’பக்தி’ மட்டுமல்ல – அந்த வழிபாட்டு மூடத்தனத்திற்கு எதிரான கருத்துக்களும் கூட முன்வைக்கப் படும். இதில் எது சரி என்பதை விவாதமே முடிவு செய்யும். ஆனால், விவாதங்களில் மாற்றுத் தரப்பால் சொல்லப்படும் கருத்துக்களை கத்தரித்து எடுத்து வந்து விஜயகாந்த் ரசிகரிடம் போட்டுக் காட்டுகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

ஐ.எஸ்.ஐ.எஸ், தாலிபான் போன்றவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலோ ஹிட்லரின் ஜெர்மனியிலோ எதிர்கருத்துக்களை எப்படி கையாண்டனரோ அப்படியே கையாள வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் விருப்பம். அல்லாவை மறுத்து வாதாடக் கூடாது, குரானை வார்த்தை பிசகாமல் தாங்கள் சொல்லும் விதமாக மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தாலிபான்கள் சொல்வதற்கும் – மாட்டுக்கறி, ராமன், சமஸ்கிருதம் உள்ளிட்டு தாங்கள் முன்வைக்கும் தேசிய அடையாளங்களை மற்றவர்கள் கேள்விக்கிடமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் – மறுப்பவர்கள் தேசத் துரோகியாக்கப்படுவார்கள் என்கிற இந்துத்துவ கும்பலின் அணுகுமுறைக்கும் எள் முனையளவுக்கும் வேறுபாடு இல்லை.

எனினும், ஆர்.எஸ்.எஸ்சின் பிரச்சினை அந்த வளாகத்தில் நிலவும் கருத்து சுதந்திரம் மட்டுமில்லை. அதையும் தாண்டி பல்வேறு பரிமானங்களைக் கொண்ட வேறு நோக்கங்களும் உள்ளன. அந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் சதித் திட்டங்களோடு இப்போது அவர்கள் களமிறங்கியுள்ளனர்.

(தொடரும்)

– வினவு செய்தியாளர்கள்

மங்காத்தா மல்லையா – கேலிச்சித்திரங்கள்

2
மல்லையாவின் கேலிசித்திரங்கள்

ஆமா ஜி! ரெகுலர் டெக்னிக் தான்! மல்லையா அண்ணனை எதிர்ப்பவர்கள் தேசவிரோதிகள்-ன்னு நம்மாட்களை வெச்சி கிளப்பி விடுங்க… மக்கள் அடங்கிடுவாங்க!

lalith-mallaya 600 ps

கேலிச்சித்திரம்: சர்தார்

_____________________________

அரசு வங்கிகளிடம் 900 கோடி வாங்கிய கடனை கட்டாமல் விஜய்மல்லையா தப்பி ஓட்டம்

 

vijaimallaiya-cartoon

விவசாயி கடன் வாங்கினா ‘பலி கொடுப்போம்’…
விஜய் மல்லையா கடன் வாங்கினா பறக்க விடுவோம்… எப்புடி!

கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்

—————————————————————

 

மல்லையாவுக்கு சட்டப்படி விடுதலை – இர்ஷத் ஜஹானுக்கு சட்ட விரோதமாக தண்டனை !

vijaimallaiya arunjaitley
மல்லையாவுக்கு சட்டப்படி விடுதலை – இர்ஷத் ஜஹானுக்கு சட்ட விரோதமாக தண்டனை !

He had left before instructions to seize his passports were sent. There was no way to stop him without the right documents.

கடவுச் சீட்டை முடக்குமாறு உத்திரவிடுவதற்கு முன்பே அவர் (விஜய் மல்லையா) சென்று விட்டார். முறையான ஆவணங்கள் இல்லாமல் அவரை தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லை!

– நிதியமைச்சர் அருண் ஜெட்லி. (விஜய் மல்லையா பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களிலிருந்து)

2004-ம் ஆண்டில் இஷ்ரத் ஜஹான் எனும் அப்பாவி இளம் பெண்ணை, குஜராத் போலீசு கடத்திச் சென்று சுட்டுக் கொன்றதற்கு எந்த ஆணவங்களை வைத்திருந்தது உங்கள் மோடி அரசு?

—————————————————————

மார்ச் 2-ம் தேதி தலைமறைவான கேடி மல்லையா குறித்து பிப்.17-ம் தேதி வினவு வெளியிட்ட எச்சரிக்கை!

vijaimallaiya fraud
மார்ச் 2-ம் தேதி தலைமறைவான கேடி மல்லையா குறித்து பிப்.17-ம் தேதி வினவு வெளியிட்ட எச்சரிக்கை!

—————————————————————

மல்லையாவை உங்களுக்கு பெருமையுடன் அளிப்பவர்கள் பாரதிய ஜனதா பார்ட்டி !

vijaimallaiya bjp
மல்லையாவை உங்களுக்கு பெருமையுடன் அளிப்பவர்கள் பாரதிய ஜனதா பார்ட்டி !

2010-ல் சாராய அதிபர் விஜய் மல்லையா கர்நாடகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி பதவிக்கு போட்டியிட்ட போது அவருக்கு ஜனதா தள கட்சி மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ போக 12 வாக்குகள் தேவைப்பட்டன. மல்லையாஜியின் நிலை கண்டு வருந்திய பா.ஜ.கவோ 26 வாக்குகள் அளித்து எம்.பியாக்கியது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மூலம் பொதுத்துறை வங்கிகளின் மக்கள் பணத்தை மல்லையா ஸ்வாகா செய்தது, மேலவை உறுப்பினராக இருந்து கொண்டே நீதிமன்றங்களை தூக்கி ஏறிந்து விட்டு நாட்டை விட்டு ஓடிப் போனது அனைத்தும் பா.ஜ.க ஆசியுடன் நடக்கவில்லை என்று எவர் மறுக்க முடியும்?

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்

தேவர் சாதிவெறி – கேலிச்சித்திரம்

0
தேவர் ஜாதி வெறி
என்னா பங்காளி! இந்நேரம் நம்ம யுவராஜ் மாதிரி வாட்ஸ் அப், பேஸ்புக், சேனல்….ன்னு புகுந்து கெத்து பண்ண வேணாமா…!

தேவர் சாதி வெறி

தேவர் ஜாதி வெறி
என்னா பங்காளி!
இந்நேரம் நம்ம யுவராஜ் மாதிரி வாட்ஸ் அப், பேஸ்புக், சேனல்….ன்னு புகுந்து
கெத்து பண்ண வேணாமா…!

கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்

___________________________________

உடுமலையில் தலித் இளைஞன் வெட்டிப்படுகொலை!

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் நடத்தப்பட்ட ஆதிக்க சாதிவெறிப் படுகொலை

நேற்று இளவரசன், கோகுல் ராஜ்,
இன்று சங்கர் சாதிவெறிக்கு பலி!
இனியும் வேடிக்கை பார்ப்பது அவமானம்!
ஒன்றிணைவோம்!
கொலையாளிகளை நாமே தண்டிப்போம்!
அரசுக்கு இணையான அதிகாரம் கொண்ட சாதிய கட்டமைத்தைத் தகர்த்தெறிவோம்!

 

உடுமலையில் தலித் இளைஞன் வெட்டிப்படுகொலை!

 

நான் ஒரு தேசியவாதி அல்ல ! டி.எம்.கிருஷ்ணா

3

இந்த மண்ணை நேசிப்போம், தேசிய அரசு பித்தை விட்டொழிப்போம் – டி.எம். கிருஷ்ணா

ரு பிரகடனத்தோடு இந்தக் கட்டுரையைத் தொடங்க விரும்புகிறேன்.

நான் ஒரு தேசியவாதி அல்ல. குறிப்பாக, இந்த அரசு உருவாக்கியுள்ள தேச அடையாளத்தை பொறுத்தவரை நான் தேசப்பற்றாளன் கூட அல்ல! இந்த அரசியல் அமைப்பைக் கேள்விக்குள்ளாக்காத அதன் விசுவாசமான சேவகனாக என்னால் இருக்க இயலாது!

டி.எம்.கிருஷ்ணா
டி.எம்.கிருஷ்ணா

இந்த அரசு தன் அடையாளங்களாக காட்டிக்கொள்ளும் எவற்றின் மீதும் அளப்பரிய வியப்பேதும் எனக்கில்லை. அனைத்து வகையான கொலைக் கருவிகளும் பகட்டாக ஊர்வலம் விடப்படும் குடியரசு தின விழா நேரடி ஒளிபரப்பைக் காண்பதில் துளியும் மகிழ்ச்சியோ, விருப்பமோ எனக்கு என்றுமே இருந்ததில்லை. பயங்கரவாதிகளாக இருப்பினும் மரண தண்டனை விதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இருப்பினும், நான் இந்த மண்ணுக்குரியவனே! இந்த மண்ணிண் மைந்தனே! இந்த மண்ணின் தழுவுதலுக்கு பாத்தியப்பட்டவனே! நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றங்கள் உட்பட யாராயிருந்தாலும் இந்த உரிமையை என்னிடமிருந்து பறித்துவிட முடியாது என்று உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்.

இந்த மண்ணுக்குச் சொந்தமானவன் என்ற உணர்வு என்னுள் இயங்குகிறது, நான் இந்த மண்ணை விட்டுப் போகும் நாள் வரையில் அது என்னுள் உயிர்த்திருக்கும். “இந்தியா” வைப் பற்றிய தன்னுடைய கருத்தியலுக்கு எனது நேசத்தையும், வணக்கத்தையும், பணிவையும் யாரும் கட்டாயப்படுத்திக் கோருவதை நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

அப்படியானால், நான் யார்? நான் எதற்கு சொந்தமானவன்?

கேள்வி கேட்கும் உரிமை

கடந்த சில வாரங்களாக அவர்களது நாட்டைப் பற்றியும் அதன் நோக்கத்தைப் பற்றியும் மாற்று சிந்தனை கொண்டிருந்த காரணத்திற்காக மாணவர்கள் மீது கொலைகார நஞ்சு உமிழப்படுவதை பார்த்தோம். சட்டரீதியான தாக்குதல்களைத் தாண்டி கலப்படமில்லாத வெறுப்பு வீசப்படுவதை கண்ணுற்றோம், அது கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்.

வெள்ளை வாக்காளர் அடையாள அட்டையும், பச்சை பாஸ்போர்ட்டும் வைத்திருக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் எந்த விதமான நேசம் எதிர்பார்க்கப்படுகிறது என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டும். எதிர்பார்க்கப்படுவது உண்மையிலேயே நேசம்தானா அல்லது நமது அரசியல் அமைப்பின் அடித்தளத்தையே கேள்விக்குள்ளாக்குபவர்களுக்கு எதிரான வெறும் சுயநலம் நிரம்பிய பாதுகாப்பு வாதமும், வன்முறையான வலியுறுத்தலும், கண்மூடித்தனமான பதில் மறுப்பும்தானா?

ஆனால், அப்படிப்பட்ட விவாதங்கள்தானே, “இப்போது உள்ளதை” மறுபரிசீலனை செய்யவும், நிராகரிக்கவும் வாய்ப்புகளை உருவாக்குகின்றன! இவ்வாறு கேள்வி எழுப்புவோரும், அரசின் கொள்கைகளை விமர்சிப்போரும் எதிர்மறையாக பேசுவதாகவும், நாட்டுக்கு அவமானத்தை கொண்டு வருவதாகவும், தேசக் கட்டுமானத்துக்கு எந்த பங்களிப்பும் செய்யாதவர்களாகவும் சிறுமைப் படுத்தப்படுகின்றனர்.

patriotismதேசக் கட்டுமானத்திற்கான இந்தத் திட்டவரைவு வேறு எங்கிருந்து வர முடியும்? பல்வேறு பதத்திலான, ஒலியிலான குரல்கள் எழுப்பும் கடினமான, சங்கடமான, தொந்தரவு செய்யும் கேள்விகளிலிருந்துதான் அது பரிணமித்து வர முடியும். என்னைப் பொறுத்தவரை, நாம் பேசும் வாக்கியங்களை உருவாக்கும் சொற்களின் பொருளை அத்தகைய குரல்கள் கேள்விக்குள்ளாக்குவது நடக்காமல் நாம் முன்னேறிச் செல்வது சாத்தியமில்லாத ஒன்று. அதாவது கோபம், மனத்தடை அல்லது பகைமை இல்லாமல் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள தயாராக இருப்பதைக் குறிக்கிறது இது.

நடப்பவை அனைத்தையும் வால்டேரின் “பேச்சுரிமை” குறித்த பிரச்சினையாகவும் சுருக்கி விட வேண்டாம். இது ஒரு குடிமகன் தேசத்தோடு எந்த வகையில் பிணைக்கப்பட்டிருக்கிறான் என்பது பற்றிய ஆழமான, மென்மையான விசாரணை. பேச்சுரிமை என்பதைத் தாண்டிச் சென்று கருத்தின் பின் இருக்கும் சிந்தனையை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அந்த முயற்சியிலிருந்து நாம் புனிதமாகவும் அவசியமானதாகவும் கருதும் ஒவ்வொன்றைப் பற்றியுமான அடக்க உணர்வும், பணிவும் தோன்ற வேண்டும். பல்வேறு புரிதல்களை வழங்கும் பல்வேறு வகையான குரல்கள் ஒலிக்கத்தான் செய்யும். ஒவ்வொருவரையும் நமக்குள் வரவேற்கத் தயாராக இல்லாத வரை, நாம் உயிரற்றுதான் இருப்போம்.

“பிறரை” உருவாக்குதல்

carnatic-musician-tm-krishn
பெசன்ட் நகர் கடற்கரையில் பாடும் டி.எம். கிருஷ்ணா (படம் : kafila.org)

பல்வேறு தரப்பிலிருந்தும் எழும் குரல்களை பிற்போக்குவாதியாக மாறாமல் நம்மால் ஏன் எதிர்கொள்ள முடியவில்லை? எதைப் பார்த்து நமக்கு அச்சம் பிறக்கிறது? நான் குழம்பித்தான் போயிருக்கிறேன் : ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்திலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் மாணவர்கள் எவரும் எந்தக் கட்டத்திலும் ஆயுதத்தைத் தூக்கவில்லை, யாரையும் தாக்கவில்லை. அவர்கள் எந்த மனிதப் பிறவியையும் கொல்லும் படியோ அல்லது இயற்கை வளங்களை அழிக்கும்படியோ கேட்கவில்லை. இருப்பினும் அவர்களை நாம் ஒழித்துக் கட்ட விரும்புகிறோம். அதே வேளையில், உலகெங்கிலுமான பன்னாட்டு நிறுவனங்களும், தொழில் குழுமங்களும் அரசின் ஆசீர்வாதத்தோடு நமது நாட்டை மொட்டையடித்து மக்களை அவர்களது மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறிந்து அகதிகளாக்கி அலைய விடுகின்றன; இன்னொரு பக்கம், மதவாத ரவுடிகள் மக்கள் மத்தியில் வெறுப்பை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த தேசிய பெருமித வெறி எங்கிருந்து தோன்றியது? நம்மைச் சுற்றி புள்ளியிட்ட கோடு கிழித்து, நம்மை பிறரிடமிருந்து பிரித்துக் கொள்வதன் மூலம் நாம் அனைவரும் நமக்கே நமக்கான பெருமித அடையாளம் ஒன்றை தூக்கிப் பிடிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம். உண்மையில் பெருமிதம் என்பதே சமநிலை தவறிய ஒரு உணர்ச்சிதான்.

ஹைதராபாத், ஜே.என்.யு மாணவர்கள் யாரும் எந்தப் பொருளிலும் தேச-விரோதிகள் அல்ல, இருந்தாலும் ஒரு பேச்சுக்காக அவர்கள் தேசவிரோதிகள் என்றே வைத்துக் கொள்வோம், எனக்கு அது ஒரு பிரச்சனையாக தெரியவில்லை. அவர்கள் மக்கள் விரோதிகள், வாழ்வு விரோதிகள், இயற்கை விரோதிகள், காதல் விரோதிகள், கருணை விரோதிகள், நலவாழ்வு விரோதிகள் இல்லையே! நம்முடன் வசிப்பவர்களிடம் நாம் எதை எதிர்பார்க்கிறோம் என்று நம்மை நாமே தீவிரமாக கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. தன்னைப் போல் பிறரையும் பாவிக்கும் தேசவிரோதியைக் காட்டிலும் மனிதத் தன்மையற்ற தேசியவாதி மோசமானவன் இல்லையா?

இன்று இந்திய தேசத்துக்கு தமது விசுவாசத்தை பறை சாற்றுபவர்களில் பலரை கவனமாக பாருங்கள், அவர்கள் மதரீதியாக பிளவுபடுத்துபவர்களாகவும், சாதிவெறியர்களாகவும், ஆணாதிக்கவாதிகளாகவும், ஏழை மக்கள் குறித்தோ ஒடுக்கப்பட்ட மக்களைக் குறித்த துளியும் அக்கறை இல்லாதவர்களாகவும் இருப்பதைப் பார்க்கலாம். சமூக முன்னேற்றத்தில் அத்தகையோரது பங்களிப்பு தான/தர்மம் செய்வதிலிருந்தோ அல்லது அவற்றை தவறாகப் பயன்படுத்தி அவர்களுக்கு ஆதாயம் தரும் பிளவுகளை முற்றச் செய்வதிலிருந்துதான் வருகின்றன.

நம்மை பாதுகாப்பாக வைத்திருப்பது எது?

நாம் இந்த மண்ணை நேசிப்போம், தேசிய அரசின் மீதான பித்தை விட்டொழிப்போம். ஏனெனில், தேசிய அரசு என்பதின் மரபணுவிலேயே நம்ம ஆள் – வேற்றாள் என்ற இருமை உள்ளது. இந்தப் பிளவு நாட்டின் எல்லைகளுக்கு வெளியே இயங்கும் அதே அளவுக்கு எல்லைகளுக்கு உள்ளும் செயல்படுகிறது. நமது தேசத்தை உருவாக்கியவர்கள் இந்தப் பிரச்சனையை அங்கீகரித்து அதன் கட்டமைப்பு சிக்கலை தீர்ப்பதற்கு முயற்சி செய்தது அவர்களது சிறப்பைக் காட்டுகிறது. ஆனால், விவாதம் தொடர்கிறது, தொடர வேண்டும். நமது அரசியல் சட்டம் மகத்தான பல விஷயங்களை நமக்கு அளித்துள்ளது. அதே நேரம் கால மாற்றத்திற்கும், மனித வாழ்வுக்கும் ஏற்ப மாற்றங்களை அனுமதிக்கும் ஒரு ஆவணம் முழு முற்றானதோ, இறுதியானதோ அல்ல !

அரசியல் கட்சிகள் மக்களின் கருத்துக்களை கட்சி நிலைப்பாடுகளுக்கு ஏற்ப திரித்து நிலைமையை மோசமாக்கியிருக்கின்றன. பா.ஜ.க, காங்கிரஸ் முதலான கட்சிகள் தமது சொந்த மூக்குக்கு அப்பால் எதையும் பார்க்க முடியாதவர்கள், ஆனால், குழப்பத்தை விதைக்கவும், மனங்களை திரிக்கவும், சாதாரண மக்கள் கோரும் விவாதத்தை திசை திருப்பவும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். கட்சி அமைப்புகளுக்கு அப்பால் எழுப்பப்படும் அரசியல் கேள்விகளை காது கொடுக்கக் கூட யாரும் தயாராக இல்லாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதும் உண்மைதான்.

அடுத்ததாக, இந்தக் கூச்சலுக்கும், எதிர் கத்தலுக்கும் சேர்க்கப்பட்ட இன்னொரு பரிமாணம், நமது இராணுவ வீரர்களின் தியாகத்தை மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு எதிராக நிறுத்துவது. துரதிருஷ்டவசமாக மகேந்திர சிங் தோனி, மோகன்லால் போன்றவர்கள் எதிர்ப்புக் குரலை சிறுமைப்படுத்துவதற்கு படைவீரர்களின் மரணத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். இராணுவ வீரர்களது தியாகங்கள் ஒருபோதும் மறக்க முடியாதவை, குறைத்து மதிப்பிட முடியாதவை. ஆனால் நமது எல்லைகளை சிலர் பாதுகாப்பதால்தான் நாம் இரவில் நிம்மதியாக தூங்க முடிகிறது என்ற வாதம் எனக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. அது உண்மையாக இருந்தாலும், அது முழுமையான உண்மை அல்ல. இந்திய விவசாயி என்பவர் நமக்கான உணவு உணவு தானியங்களை விளைவித்துக் கொண்டிருப்பதாலும், லைன் பொறியாளர் என்பவரும், துப்புரவுப் பணியாளர்களும் நமது தண்ணீர் குழாய்களையும், கழிவுநீர் குழாய்களையும் அடைப்பின்றி பராமரித்துக் கொண்டிருப்பதாலும், நமது சாயங்களை பாதுகாப்பானதாக செய்யும் அபாயகரமான இரசாயனங்களை ஒருவர் தொடர்ந்து கையாண்டு கொண்டிருப்பதாலும், தேச பக்தர்களான நாம் தொடர்ந்து கொட்டும் குப்பைகளை அனைத்தையும் அள்ளி ஒருவர் தெருக்களை சுத்தம் செய்து கொண்டிருப்பதாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக ஒருவர் போராடிக் கொண்டிருப்பதாலும் நமது ஆசிரியர்கள் அறிவை தாராளமாக பகிர்ந்து கொள்வதாலும், நமது காவல்துறையின் ஆண் பெண் காவலர்கள் தன்னலமின்றி சாலைகளை பாதுகாப்பதாலும்தான் இரவில் நம் மீது தூக்கம் படர முடிகிறது. மேலும், காலையில் உற்சாகமும், இரவில் அமைதியான ஓய்வும் நமக்குக் கிடைப்பதற்கு கலைஞர் என்று அழைக்கப்படும் ஒருவர் நமக்காக பாடுவது அல்லது ஆடுவது காரணமாக இருக்கிறது என்பதையும் மறந்து விட வேண்டாம். சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நாம் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் தூங்குவதற்கு உதவி செய்கின்றனர், யாரையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ வைக்க முடியாது.

மேலும், நமது நாட்டின் போர் எந்திரத்துக்கு போற்ற முடியாத இன்னொரு பக்கம் உள்ளது. நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும் அந்த எந்திரம் பிறரை அச்சுறுத்துகிறது, இல்லையா? குண்டு போடும் விமானத்தையும், நெருப்பைக் கக்கும் பீரங்கி வண்டியையும் நான் அங்கீகரிக்க மறுக்கிறேன்.

அனைத்துக்கும் மேலாக மனிதத்தன்மை

இந்த மண்ணின் காற்று, மணம், மண் வாசனை, சப்தங்கள், மொழிகள், இசை, நடனம், நாடகம், சடங்குகள், உணவு, சொல்லப்படாத வார்த்தைகள், சிரிப்பு, விசித்திரங்கள், பழக்க வழக்கங்கள், போராட்டங்கள், சமத்துவமின்மைகள், பகிர்தல் என பலதும் சேர்ந்துதான் நான் யார் என்பதையும் என்னவாக இருக்கிறேன் என்பதையும் தீர்மானிக்கின்றன. இவை அனைத்தும் அரசுக்கு அப்பாற்பட்டு உயிர்த்திருக்கின்றன.

இது என் மண், என் மக்கள், என் வாழ்க்கை. “இங்கே” என்ற எனது அடையாளம் ஒருபடித்தானதாக்கும் இந்திய குடிமகனுக்கான எந்த ஒரு அடையாளத்திலும், அது சாதாரண குடிமகனாகவோ, வெளிநாட்டு வாழ் இந்தியன் என்ற வகையினதாகவோ அல்லது கடல் கடந்த இந்தியக் குடிமகன் என்ற வகையிலோ அடங்கி விடுவதில்லை.

என்னுடைய மண் இயங்கிக் கொண்டிருப்பது இருப்பது, தேங்கியிருப்பது அல்ல, தொடர்ச்சியாக தன்னை புதுப்பித்துக் கொண்டு, தன்னை வரையறுத்துக் கொண்டு, எந்த ஒரு பாடலையும் பாட எனக்கு சுதந்திரமளித்துக் கொண்டிருக்கிறது.

இந்த அரசு எனது வாழ்க்கைக்கு வசதி செய்து தந்திருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அரசே நான் மேலே விவரித்திருக்கும் அனுபவங்களிலிருந்துதான் தோன்றுகிறது தவிர, நான் யார் என்பதை என்னிடமிருந்து அது பறிக்க முடியாது. அரசு நமக்கு தரப்பட்டுள்ள தனிச்சிறப்பான ஒரு பரிசு அல்ல. ஏற்கனவே இருப்பதை புரிந்து கொள்வதன் மீதும், கேள்வி கேட்பதன் மீதும், உருக்கொடுப்பதன் மீதும்தான் அது கட்டப்பட்டுள்ளது. அரசு தான் இருப்பதற்கான நோக்கத்தை மறந்து விட்டால் அது கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும், கேள்விக்குள்ளாக்கப்படும்.

நமக்கு தேசியகீதத்தை அளித்த தாகூர், “வைரத்தை விலையாகக் கொடுத்து கண்ணாடிக் கல்லை நான் வாங்க மாட்டேன். மனிதத்தன்மையை தேசப்பற்று வெற்றி கொள்வதை நான் உயிரோடு இருக்கும் வரை ஒரு போதும் அனுமதியேன்” என்றும் கூறியிருக்கிறார்.

அரசுக்கு அடிபணிவதன் மூலம் மனித வாழ்வை அழித்து விடாமல் இருப்போம்.

– டி.எம். கிருஷ்ணா

தமிழாக்கம்: மேகலை

நன்றி scroll.in

பேசுவது தேசபக்தி செய்வது தேசத் துரோகம் – மார்ச் 23 ஆர்ப்பாட்டம்

1

பேசுவது தேசபக்தி, செய்வது நாட்டை மறுகாலனியாக்குவது!
பார்ப்பன பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம்!
– மார்ச் 23 ஆர்ப்பாட்டம்

ன்பார்ந்த நண்பர்களே,

march-23-notice-1நிரந்தர தொழிலாளர்களே நாட்டில் இருக்கக் கூடாது என்பதிலும், எல்லா வேலைகளிலும் காண்டிராக்ட் முறையை அமல்படுத்துவதிலும் சேட்டுக்களின் (மோடியின்) அரசாங்கம் குறியாய் இருக்கிறது. நேரடி உற்பத்தியில் காண்டிராக்ட் தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது என்பதை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்து விட்டது. எல்லா வேலைகளிலும் காண்டிராக்ட் தொழிலாளர்களை ஈடுபடுத்த வழிவகை செய்து வருகிறது. 20 தொழிலாளிக்கு மேல் காண்டிராக்ட் முறையில் ஈடுபடுத்தப்பட்டால் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்கிற உச்சவரம்பை 100-ஆக உயர்த்துவதன் மூலம் லைசென்ஸ் இல்லாமலேயே பல காண்டிராக்ட்டுக்களை வைத்துக் கொள்ளவும் சதிகள் தயாராகி வருகின்றன.

இரவுப் பணிகளில் பெண் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதில் இருக்கின்ற கட்டுப்பாடுகளை ஒழித்துக்கட்டுவதற்கு வசதியாக கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தயாராகி வருகிறது, மத்திய அரசு. எந்தக் கடையையும் விடிய, விடிய திறந்து வைத்துக் கொள்ள அனுமதிப்பதன் மூலம் ஷாப்பிங் மால்கள், வலைப்பின்னல் நிறுவனங்கள் 24 மணிநேரமும் கல்லா கட்டிக் கொள்ளவும், சிறுவணிகத்தை ஒழித்துக் கட்டவும் ஏற்பாடு செய்துள்ளது.

ஆட்டோமொபைல், ஜவுளி, ஐ.டி மற்றும் ஐ.டி சார்புத் தொழில்கள், காலணி தயாரிப்பு, எலெக்ட்ரானிக்ஸ் போன்ற தொழில்களை அத்தியாவசியப் பணிகள் என்று அறிவிக்க உத்தேசித்துள்ளதாக அரியானா மாநில பா.ஜ.க அரசு அறிவித்துள்ளது. பெங்களூர், திருப்பெரும்புதூர், பூனா போன்ற தொழில் நகரங்களில் இயங்கி வருகின்ற ஆட்டோமொபைல் உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் பலவும் இதே போல் அத்தியாவசியப் பணிகள் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேநேரத்தில் கண்காணிப்பு கட்டமைப்பை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே ஓய்வறை, கேண்டீன் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் காமிராக்கள் வைத்துக் கண்காணித்து வருகின்றனர். இது போதாது என்று ஒவ்வொரு தொழிற்பேட்டையிலும் சிறப்பு போலிசு நிலையங்கள் வைக்கவும், தொழிலாளர்களது நடமாட்டத்தை மோப்பம் பிடிப்பதற்காக தொழிலக உளவு போலிசுப் பிரிவை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மோடியின் மைய அரசு மட்டுமின்றி, பா.ஜ.க ஆளுகின்ற ராஜஸ்தான், அரியானா, மகாராஷ்டிரா போன்ற மாநில அரசுகளும் ஜெட் வேகத்தில் செயல்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் குவிந்து கிடக்கின்ற அரியானா மாநிலத்தில் தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதல் கொடூரத்தின் உச்சத்தை தொட்டுள்ளது.
ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்தையே எந்த உரிமைகளுமற்ற கொத்தடிமைகளாக்கி வருகின்ற அதே தருணத்தில், நாட்டின் பொருளாதாரத்தை தாங்கிப் பிடித்து வருகின்ற பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக் கட்டுவதையும் தீவிரப்படுத்தி வருகிறது. தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்கிற, நமது நாட்டை அமெரிக்காவிற்கும் பிற வல்லரசுகளுக்கு மறுகாலனியாக்கும் கொள்கைகளை காங்கிரசு கட்சிதான் அறிமுகம் செய்து, அமல்படுத்தியது. ஆனால், காங்கிரசு கட்சி 20 வருடங்களில் செய்ததை, ஐந்தே வருடங்களில் மிஞ்சிவிட வேண்டும் என்று துடிக்கிறார், மோடி.

தொழிலாளி வர்க்கமும் ஏனைய ஒடுக்கப்படும் வர்க்கங்களும் இதையெல்லாம் உணர்ந்து விடக்கூடாது என்பதற்காக மதவெறி-சாதிவெறி போதையூட்டி அவர்களை பிளவுபடுத்தி வருகிறது. மதக்கலவரங்களை திட்டமிட்டு நடத்தி அச்சுறுத்தியும் வருகிறது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்.
தாய்மதம் திரும்புதல் என்கிற பெயரில் முசுலீம்கள், கிருத்துவர்கள், பழங்குடி மக்களை கட்டாய மதமாற்றம் செய்ய வைத்து பூஜைகள்-விழாக்களை நடத்தினர். தில்லியில் கிருத்துவ வழிபாட்டுத்தலங்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன. பல இடங்களில் மசூதி இருக்கின்ற இடங்களை ஆக்கிரமித்து கோவில்கள் கட்ட எத்தணித்துள்ளனர். எதிர்ப்புகள் எழுந்ததையே காரணம் காட்டி மதக்கலவரங்களை நடத்தி பல அப்பாவிகளது உயிரைக் குடித்தனர். முசாபர்பூர் துவங்கி ஆக்ரா வரை வாரத்துக்கொரு மதவெறித் தாக்குதல் நடத்தி வருகிறது.

மசூதிகளுக்கு குண்டு வைப்பது, பொது இடங்களில் குண்டு வைத்து முசுலீம்கள் மீது பழி சுமத்துவது என்கிற சதித்தனத்தோடு செயல்படுகிறது, ஆர்.எஸ்.எஸ் கும்பல். சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ், அஜ்மீர், மக்கா மஸ்ஜித், தானே, கான்பூர், நந்தித், மாலேகான் (2 முறை), ஹூப்ளி, கோவா என கடந்த 4 ஆண்டுகளில் 10 குண்டு வெடிப்புகளை செய்த ஆர்.எஸ்.எஸ் கும்பல், பயங்கரவாதத்தின் உறைவிடமாக இருக்கிறது. இந்த இலட்சணத்தில் தீவிரவாதம் ஒழிய வேண்டும் என்றால் இசுலாம் ஒழிய வேண்டும் என்று பகிரங்கமாக அறிவிக்கிறார், பி.ஜே.பி எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே.
பார்ப்பன (வைதீக) இந்து மதத்தின் உடன்பிறந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்ததற்காக பகுத்தறிவாளர்களான தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகியோரை பட்டப்பகலில் கொலை செய்தது, இந்து மதவெறி கும்பல். அதேபோல உத்திரப்பிரதேசத்திலுள்ள தாத்ரி நகரில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக பொய் சொல்லி அக்லக் என்கிற இசுலாமிய முதியவரை கொன்றுள்ளது. மாட்டுக்கறி தின்பதையும், விற்பதையும் தேசத்துரோக நடவடிக்கை போல சித்தரித்து, தாங்கள் ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் தடை செய்து கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை இழிவுபடுத்தி வருகிறது.

இந்துவாகப் பிறந்த நான், இந்துவாக சாகமாட்டேன் என்று முழங்கிய அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதாக நாடகமாடியது, இந்துத்துவா கும்பல். உண்மையில் சாதிவெறியும், இந்துமதமும் பிரிக்க முடியாத இரட்டைக்குழல் துப்பாக்கிகள். இதை நடவடிக்கைகளிலும் நிரூபித்து வருகின்றனர். அரியானா மாநிலத்தில் இரண்டு தலித் சிறுமிகளை சாதி வெறியர்கள் கொன்ற போது, நாய்கள் கொல்லப்படுவதற்கெல்லாம் அரசு பொறுப்பேற்க முடியுமா என்று கொழுப்புடன் பதில் சொன்னார், பா.ஜ.க அமைச்சர் வி.கே.சிங். சாதிக்கட்டமைப்பில்தான் இந்துமதம் உயிர் வாழ்கிறது என்பதை எவராவது மறுக்க முடியுமா?

ஹைதராபாத் மத்திய பல்கலைகழக ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா தலைமையிலான அம்பேத்கர் மாணவர் சங்கமானது ஆர்.எஸ்.எஸ் நச்சுப்பாம்பினையும், அதன் குட்டியான ஏ.பி.வி.பி என்கிற மாணவர் அமைப்பையும் அம்பலப்படுத்தியதை சகித்துக் கொள்ளாமல் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்து வதை செய்தது, பா.ஜ.க அரசு. இறுதியில் இந்த கும்பலின் சித்திரவதைகளுக்குப் பலியானார், ரோகித் வெமுலா. செத்த பின்னரும் அவரை தேசத்துரோகி என்றும், இன்னபிற குற்றச்சாட்டுகளைக் கூறியும் பிணத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது, பாசிசக் கும்பல்.

சென்னை ஐ.ஐ.டி-யில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தின் மீது தடை விதித்து தன்னுடைய பார்ப்பனத் திமிரைக் காட்டிக் கொண்டது, இந்த கும்பல். பெரியாரின் மண்ணிலே பார்ப்பன பாசிஸ்டுகளுக்குக் கொடுத்த பதிலடி காரணமாக வாலைச் சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தவர்கள், ஹைதராபாத்தில் ரோகித்தின் உயிரைக் குடித்த வெறியோடு, தற்போது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆட்டம் போடத் துவங்கியுள்ளனர். மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் உள்ளிட்ட 20 முன்னணியாளர்கள் மீது தேசத்துரோக வழக்கினைப் பதிவு செய்து அச்சுறுத்தி வருகிறது.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற நாட்டை மறுகாலனியாக்கும் பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லுகின்ற பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கும்பல் தற்போது தேசபக்தி என்கிற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது; மொத்த ‘தேசபக்தி’யையும் குத்தகைக்கு எடுத்துள்ள மோடி கும்பல், இந்திய நாட்டின் உள்நாட்டு தொழில்வளம் அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கூட சூரிய ஒளி மின் தயாரிப்பில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்ற உரிமையை அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆதரவாக உலக வர்த்தகக் கழகம் பறித்த போது அமைதி காத்தது, மோடி அரசு. அணு உலை விபத்து ஏற்பட்டால் அணு உலை அமைக்கின்ற நிறுவனங்கள் அதற்கு பொறுப்பேற்று நட்ட ஈடு தரத் தேவையில்லை என்கிற ஒப்பந்தம் போட்டு அமெரிக்கா, ரசியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டு நிறுவனங்களுக்கு இந்த நாட்டு மக்களை அடமானம் வைத்தது மோடி கும்பல்!

தேசத்துரோகிகளாகவும், ஒட்டுமொத்த சமூகத்துக்கே அச்சுறுத்தலாகவும் விளங்குகின்ற பார்ப்பன இந்துமதவெறி பாசிச கும்பல் நாட்டுப்பற்று குறித்தோ, தியாகம் குறித்தோ பேசுவதற்கு கிஞ்சித்தும் அருகதையற்றது. காலனியாதிக்க காலத்தில் விடுதலைப் போராட்டத்தையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் காட்டிக் கொடுத்த பாரம்பரியம் அவர்களுடையது. ஆங்கிலேயக் காலனி ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு தியாகியான மருது சகோதரர்கள் – திப்பு சுல்தான் – பகத்சிங்கின் பாரம்பரியம் நமது பாரம்பரியம். பார்ப்பன மதவெறியைத் திரைகிழித்த புத்தர்-பூலே-அம்பேத்கர்-பெரியாரின் மரபு நம்முடையது. வேதமத பார்ப்பனிய எதிர்ப்பு நமது தமிழ் மரபு. திராவிட – தமிழ் பாரம்பரியத்தை படைக்கலனாக ஏந்துவோம்! படையெடுத்து வருகின்ற ஆரிய – பார்ப்பனக் கும்பலை விரட்டியடிப்போம்!

தொழிலாளர்களே, உழைக்கும் மக்களே, அணிதிரண்டு வாரீர்!

பகத் சிங் நினைவு நாளில் ஆர்ப்பாட்டம்

நாள் : மார்ச் 23, 2016 நேரம்:  மாலை 4.30 மணி
இடம் : ராஜா திரையரங்கம் அருகில், புதுச்சேரி

[நோட்டீசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி

திருச்சி, விருத்தாசலத்தில் உழைக்கும் பெண்கள் தினம்

0

குருதியில் மலர்ந்த உழைக்கும் பெண்கள் தினம் -விருத்தாசலம் ஆர்ப்பாட்டம்

பெண் விடுதலையை முன்னெடுப்போம், சமூக விடுதலையை சாதிப்போம் என்ற தலைப்பில் பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் விருத்தாசலத்தில் உழைக்கும் பெண்கள் தின ஆர்ப்பாட்டம் மார்ச் 8-ம் தேதி நடத்தப்பட்டது.

wwd-virudhai-02தலைமை தாங்கிய தோழர் ரேவதி “இன்று நம் நாட்டில் பெண்களை ஆராதிப்பதாக கூறுகிறார்கள். ஆனால் நடப்பது 47 நிமிடத்திற்கு ஒரு பாலியல் பலாத்காரம், 7 நிமிடத்தில் ஒரு பெண் மீது வன்முறை கட்ட விழ்த்து விடப்படுகிறது. இந்த நிலைமையில் பெண்கள் தினத்தின் முக்கியத்துவம் என்ன? அன்று நியூயார்க்கில் பல்லாயிரம் பெண்கள் உரிமைக்காக சம ஊதியத்துக்காக போராடி உயிர் நீத்தனர், சிறை சென்றனர். அதன் நினைவாக தான் மார்ச் 8 உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் இன்று அது பல்வேறு முதலாளித்துவ கட்சிகளால், அமைப்புகளால் கோலப்போட்டி, அழகிப்போட்டி என பெண்களின் போராட்டக்குணத்தை மழுங்கடிக்கும் விதமாக கொண்டாடுகிறார்கள். இதை முறியடிக்கும் விதமாக தான் விருத்தாசலம் பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக குருதியில் மலர்ந்த உழைக்கும் பெண்கள் தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது” என விளக்கி பேசினார்.

wwd-virudhai-07மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க செயலாளர் அன்பழகன், “பெண் என்பவள் சமுதாயத்தில் சமபங்கு உடையவள். சமுதாயத்தில் மட்டுமல்ல வீட்டிலும் தான். பெண்கள் உரிமைகள் உள்ளது. அதை யாரும் தரமாட்டார்கள் நீங்கள் கேட்டு போராட வேண்டும். குறிப்பாக சொத்தில் உரிமை. திருமணம் நடந்து செல்லும் போதே பிரித்து கொடுத்தாக வேண்டும். அது கலப்பு திருமணமாக இருந்தாலும் சரி. உள்ளாட்சி துறையில் 50% ஒதுக்கீடு என்கிறார்கள். வேலையில் ஒதுக்கீடு என்கிறார்கள். எதுவும் நடைபெற்றதாக சரித்திரமில்லை. இப்படி இந்த அரசு எதையும் கொடுக்காது. விடுதலைக்கு பெண்கள் போராடித்தான் தீர வேண்டும்” என விளக்கி பேசினார்.

wwd-virudhai-04சென்னை பெண்கள் விடுதலை முன்னணி தோழர் விசாலாட்சி, “மார்ச் 8 கொண்டாடக் கூடிய நாள் அல்ல, போராட்ட நாள். போராடி உரிமைகளை பெற்ற நாள். இதை மழுக்கடிப்பதை ஏற்க முடியாது. இன்று காதலர் தினம், எயிட்ஸ் தினம் என பல்வேறு தினங்கள் கொண்டாடுகின்றனர். அவற்றை போல அர்த்தமற்றது அல்ல.

1910-ல் சமூக ஜனநாயக கட்சி பல்லாயிரம் பெண்களை உறுப்பினராக சேர்த்தது அவர்களை அரசியலற்றவர்களாக மாற்ற முயற்சித்தது. புரட்சியை நோக்கி அணிதிரள விடாமல் மழுங்கடித்தது. அதை கிளார ஜெட்கின் அம்பலப்படுத்தினார், எதிர்த்து பேராடினார் பெண்கள் புரட்சிக்கு அணிதிரள வேண்டுமென அறைகூவினார்.

wwd-virudhai-06அதே நிலை தான் இன்று இந்தியாவில் பொருளாதார ரீதியில் விடுதலை ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை பெறாத நிலையில் உள்ளனர். முதலாளித்துவ அமைப்புகள் இந்த அரசு கட்டமைப்புக்குள்ளயே தீர்வு கிடைத்து விடும் என கூறுகிறார்கள். சாராயம் விற்று ஆட்சி நடத்தும் இந்த அமைப்புக்குள் எப்படி தீர்வு கிடைக்கும்? வாக்குரிமை சொத்துரிமை விவகாரத்து உரிமை கிடைத்து விட்டால் போதும் என்கின்றனர். அவை உழைக்கும் வர்க்க பெண்களுக்கானதல்ல, சில மேட்டுக்குடி பெண்களுக்கு மட்டுமே உதவுவது.

உண்மையான விடுதலை என்பது ஆணாதிக்க சிந்தனை, மறுகாலனியாக்க சீரழிவுகள் ஆகியவற்றை தகர்த்து எறிவதே. அது புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் தான் சாத்தியம். பெண்களின் விடுதலை உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கு உட்பட்டதே ஆகையால் உழைக்கும் வர்க்கமாக அணிதிரள வேண்டும்” என அறை கூவினார்.

wwd-virudhai-03மேலும் தோழர் விருத்தாம்பிகை, வழக்கறிஞர் தாழை கருணாநிதி, கச்சிராயநத்தம் மந்திரிகுமாரி உள்ளிட்டோர்கள் உரையாற்றினார்கள். விருத்தாசலம் பெண்கள் விடுதலை முன்னணி தோழர் பார்வதி நன்றியுரையாற்றினார்.

கூட்டத்திற்கு இடையில் வந்த போலீசு, “பெண்கள் தினம் என்று அனுமதி கேட்டு விட்டு அரசியல் பேசுகிறீர்கள் என்றும் நாங்கள் மைக் செட் வைப்பதற்கு அனுமதியே கொடுக்கவில்லை” என பலவாறாக பேசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதை எதிர்கொண்ட பெ.வி.மு தோழர்கள் வாக்குவாதம் செய்து ஆர்ப்பாட்டத்தை சிறப்பான முறையில் முழுமையாக முடித்தனர்.

தகவல்
பெண்கள் விடுதலை முன்னணி- தமிழ்நாடு
விருத்தாசலம்

திருச்சி

சமூக விடுதலையே! பெண் விடுதலை! மார்ச் 8 – குருதியில் மலர்ந்த அனைத்துலக பெண்கள் தினம்.

periyar statueஅரங்குக்கூட்டம்களிர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் மார்ச் 8ம் தேதி காலை 11 மணியளவில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அங்கு கூடி இருந்த மக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் அவர்களிடம் பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக பெண் தோழர்கள் சைக்கிள் பிரச்சாரமாக நகர் முழுவதும் சென்று மக்கள் கூடும் இடங்களில் நின்று பிரசுரம் கொடுத்து மகளிர் தினத்தை நினைவூட்டினர். பெண்கள் சீருடையுடன் தொப்பி, பேட்ஜ் அணிந்து சென்றது மக்களிடம் வரவேற்பை பெற்றது.

மாலை 6.30 மணியளவில் சிங்காரத்தோப்பு தமிழ்ச் சங்க கட்டிடத்தில் அரங்குக்கூட்டம் புகைப்படக் கண்காட்சியுடன் துவங்கியது.

கூட்டத்தை தலைமை ஏற்று நடத்திய பெண்கள் விடுதலை முன்னணியின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் நாகேஸ்வரி பேசும் போது, “உலகம் முழுதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் ரத்தம் சிந்தி போராடிய நாள் என்பதை மறைத்து கோலப் போட்டி, அழகி போட்டி என மிக கேவலமாக கொச்சைப் படுத்தப்படுகிறது” என ஆத்திரத்துடன் சாடினார்.

தோழர்-நாகேஸ்வரி“பெண்ணை சமூகம் மிக கீழ்த்தரமாக சித்தரிப்பதையும், நிலப்பிரபுத்துவ சமூகம் பெண்ணை அடக்கி வைத்ததை போலவே இன்று முதலாளித்துவம் முன்னேறிய நாடாக ஆன பிறகும் உழைப்பு சுரண்டல், பாலியல் சுரண்டல் எனும் பேரில் கையையும் வாயையும் கட்டிப்போட்டு பெண்ணை நசுக்குகிறது. இந்த கொடுமைகளை எதிர்த்து போராடும் ஆற்றல் பெண்ணுக்கு வேண்டும், தனியே சாதிக்க முடியாது, அமைப்பாக திரண்டால் மட்டுமே விடிவு” என கூறினார்.

முனைவர், இரா.சக்குபாய், மேனாள் தலைவர் பெரியார் உயராய்வு மையம் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி

முனைவர் சக்குபாய்“பெண் பிள்ளையாய் பிறந்தாலே இந்த சமூகம் விதிக்கும் கட்டுபாடுகள் ஏராளம், அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பு எதற்கு! என்பதே சமூகத்தின் கேள்வி, பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள், அதை இன்றும் நிரூபித்துக் கொண்டுள்ளனர்.”

பேராசிரியர் தன் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களை பகிர்ந்து கொண்டார், தனது வீட்டில் சிறுவயதில் பெண் பிள்ளை வளர்ப்பு எவ்வளவு கண்டிப்புடன் இருந்தது, வெளியே சென்றால் குனிந்த தலை நிமிரக்கூடாது, ஆண்களுடன் பேசக்கூடாது, இது உயர்சாதி பெண்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையாகவே இருந்தது, தந்தை பெரியாரின் கருத்துகள் முட்டி மோதும் போது, பெண்கள் தலை நிமிரவைக்கும் தேவை எழுந்தது, துணிச்சலுடன் பெண்கள் போராட வேண்டும், என பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி சென்றார்.

சிறப்புரை : தோழர் துரை.சண்முகம், கவிஞர், மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.

“பெண்கள் விடுதலை முன்னணி, தோழர்களின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பொலிவுடன் உள்ளது, பெண் தோழர்கள் வேலைகளை எடுத்து செய்வது, உழைக்கும் வர்க்கமாக ஆற்றலுடன் உழைப்பது என்பது மகிழ்ச்சியாக உள்ளது.

தேர்தல் விதிமுறைகள் எனும் பேரில் மக்களை இழிவு படுத்துவது, பிரச்சாரம் செய்யும் உரிமை பறிப்பது என மோசமான அணுகுமுறையுடன் அரசு நடந்துள்ளது.

தோழர் துரைமுருகன்பெண்கள் சமுதாயத்தை முன்னேற்ற பாடுபட்ட தந்தை பெரியாருக்கு, பெரியார் எனும் பட்டத்தை பெண்கள் தான் கொடுத்தனர்.

முதலாளித்துவம் பற்றி கூறும் செய்தி, மகளிர் உழைப்பை சுரண்டுவதை மட்டும் அல்லாமல் பெண்கள் இனத்தையே சுரண்டும் கொடூரம் அரங்கேறுகிறது.

நுகர்பொருளை விற்பதற்கு கூட பெண்களை விளம்பரபடுத்தும் முதலாளித்துவம், பெண்களை சதைப் பிண்டமாக பார்ப்பதை எச்சரித்தார்.

மகளிர் தினத்தை பற்றி பிரசுரம் கொடுக்கும் போது பெண்களே வாங்க தயங்குவது என்பதை, நாம் இன்னும் வேகமாக வேலை செய்ய வேண்டும், தொடர்ந்து தயங்காமல் செல்ல வேண்டும்,

வரலாற்று வழியிலே 18ம் நூற்றாண்டில் போராடி பெற்றதன் விளைவாக, சில உரிமைகளை பெறவைத்தது அனுபவம், பெண்களின் போராட்ட குணம் பற்றி மதிப்புக்குரிய சக்குபாய் அவர்கள் பேசினார்கள், அதை உணர்வதற்கு நீங்கள் தாய் நாவலின் உள்ளே போய் பாருங்கள்,

கோவன் கலைநிகழ்ச்சிஅப்பாவி தாயின் புரட்சி கோபம் வெடிப்பதை கண்டு உணரலாம் என்றார்

மொத்தத்தில் பெண்ணை, ஆணை உழைக்கும் வர்க்கத்தை சிதைக்கும் சமூகத்தை தூள் தூளாக்காமல் ஓய்வில்லை, என எழுச்சியுடன் பேசினார்.

பேச்சுக்கிடையில் பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் இரண்டு பாடல்களை பாடினர்.

இறுதியில் மக்கள் கலை இலக்கியக் கழக மையக் கலைக்குழுவினரின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைப்பெற்றது.

அரங்கு நிறைந்த கூட்டமாக 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

தகவல்
பெண்கள் விடுதல் விடுதலை முன்னணி,
திருச்சி

JNU நேரடி ரிப்போர்ட் 3 – ‘தேசத் துரோகிகளுக்கு’ அரசு உதவித் தொகை ஏன் ?

10

பொதுவாக இருபத்தைந்து வயதுக்குள் படித்து முடித்து விட்டு வேலையில் செட்டில் ஆனால் தான் முப்பதுக்குள் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆக முடியும் என்பது போன்ற எல்லைக் கோடுகளுக்குள் நின்று தான் எங்கள் இளைஞர்கள் ‘அறிவுத் தேடலில்’ ஈடுபட முடிகிறது. நீங்களோ முப்பத்தைந்து வயதில் கூட மாணவர்களாகவே இருக்கிறீர்கள்… எப்போது தான் ’செட்டில்’ ஆவதாக உத்தேசம்?

”ஏன் இப்போதே செட்டில் ஆகித் தானே இருக்கிறோம்? மேலும் அறிவுத் தேடலுக்கும் கற்றுக் கொள்வதற்கும் வயது வரம்பு ஏதும் இல்லை அல்லவா?”

“அப்படியென்றால், உங்கள் செலவுகளுக்கு என்ன செய்கிறீர்கள்?”

”எங்களுக்கு அரசு உதவித் தொகை கிடைக்கிறது. அதை வைத்து சமாளித்துக் கொள்கிறோம்”

ஜே.என்.யு மட்டுமின்றி அரசு உயர்கல்வி நிலையங்களில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் அரசின் உதவித் தொகையை மிகவும் சார்ந்துள்ளார்கள். மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் யு.ஜி.சி (University Grants Commision) தகுதித் தேர்வு ஒன்றை நடத்துகின்றது. வருடாந்திரம் நடக்கும் தேசிய தகுதித் தேர்வில் (National Eligibility Test) தேர்வு பெரும் மாணவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கிறது. முதுகலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் முனைவர் படிப்பு படிக்க மாதம் 25,000 ரூபாயும், ஆராய்ச்சி மாணவர்களுக்கு 28,000 ரூபாயும் உதவித் தொகையாக கிடைக்கிறது.

DE23_PAGE3_JNU1_1594132gலட்சக்கணக்கான மாணவர்கள் வருடம் தோறும் தேசியத் தகுதித் தேர்வை எழுதினாலும், சில ஆயிரம் மாணவர்களே அதில் தேர்ச்சியடைகின்றனர். இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள உயர்கல்வி நிலையங்களில் முனைவர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களாக உள்ளனர். ஜே.என்.யுவில் மொத்தமுள்ள சுமார் 8000 மாணவர்களில் சுமார் 15 சதவீதம் பேர் தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள். தேர்ச்சியடையாத மாணவர்களே பெரும்பான்மையினர்.

இவ்வாறு தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களைப் பொருத்தவரை, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்திற்காக பயில்வோருக்கு மாதம் 5000 ரூபாயும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு 8000 ரூபாயும் உதவித் தொகையாக கிடைகின்றது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிப்பது, உயர் கல்வியை முற்றிலுமாகத் தனியார் மயமாக்குவது என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் மோடி அரசு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோரையும் பெறாதவர்களையும் பிளவு படுத்தும் விதத்தில், தேர்ச்சியடையாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை நிறுத்தவுள்ளதாக கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தது.

மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து மாணவர்கள் மத்தியில் பெரும் போராட்டம் வெடிக்கவே தற்காலிகமாக மத்திய அரசு பின்வாங்கியது. அப்போது தில்லியில் உள்ள யு.ஜி.சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் முன்னின்றது ஜே.என்.யு மாணவர்கள் தாம். தற்போது அரசின் உதவித் தொகையை “தேசவிரோதிகளுக்கு” வழங்கக் கூடாது என்று இந்துத்துவ கைக்கூலிகள் இணையத்தில் முன்னெடுத்து வரும் பிரச்சாரங்களின் பின்னணி இதுதான்.

”தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சியடையாதவர்களுக்கு ஏன் அரசு உதவித் தொகை வழங்க வேண்டும்? தகுதி இல்லாதவர்களுக்கு ஏன் மக்களின் வரிப்பணத்தைக் கொட்டியழ வேண்டும் என்பது வெளியே சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று. அதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டோம்.

”முதலில் ஒரு மாணவர் இளங்கலை, முதுகலை படிப்புகளில் தேறி முனைவர் பட்டத்திற்கும் ஆராய்ச்சிப் படிப்புக்கும் வருகிறார் என்றால் அவர் திறமையற்றவராகவா இருப்பார்? ஒருவரை முனைவராகவும், ஆராய்ச்சி மாணவராகவும் சேர எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு போன்றவற்றைக் கடந்து தானே வருகிறார்? அடுத்து, இந்த தேசிய தகுதித் தேர்வு என்பது துறை சார்ந்த ஒன்றல்ல. அதற்கென்று தனியே தயாரிக்க வேண்டும். தேர்வு பெற்ற சிலர் ஆண்டுக்கணக்கில் இதற்காக செலவிட்டுப் படித்துள்ளனர்”

”சரி, இந்தக் காரணங்களுக்காக தகுதியற்றவர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என்கிறீர்களா?”

“மீண்டும் நீங்கள் புரிந்து கொள்வதில் தவறிழைக்கிறீர்கள். இது துறைவாரியான தேர்வல்ல என்று சொன்னேன். கணிதத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் ஒரு மாணவனுக்கு இந்தியாவின் மூன்றாவது நிதியமைச்சர் யார் என்பது தெரிந்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? துறைசார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர் ஒருவருக்கு அந்தத் துறையில் திறமை உள்ளதா இல்லையா என்பது தான் பிரதானமே ஒழிய இதுவல்ல”

”நீங்கள் சொல்வது புரிகிறது. எனினும், வெளியே முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களுக்கு உங்கள் பதில் பொருத்தமானதாக இருக்கும் என்று நீங்களே நினைக்கிறீர்களா?”

”பொதுபுத்தியை ஆளும் வர்க்கம் தங்களுக்கு சாதகமாக கட்டமைக்க எளிமையான குற்றச்சாட்டுகளே போதுமானது தான். ”தகுதியற்றவர்கள்” என்று ஒரேugc-protest
வார்த்தையில் அவர்கள் முடித்துக் கொள்வார்கள். இப்போது நீங்கள் கேட்ட முதல் கேள்விக்கு வாருங்கள்.. இங்கே படிப்பவர்களில் சுமார் 20 சதவீதமானோர் வசதியுள்ள குடும்ப பின்னணி கொண்டவர்கள். மீதமுள்ளோர் நடுத்தர வர்க்கத்தினர் – இதில் கணிசமானோர் வறுமையான பொருளாதார பின்னணி கொண்டவர்கள். 21 வயதுக்குள் இளங்கலையும், 25 வயதுக்குள் முதுகலையும் முடிக்கும் இவர்கள், அடுத்த சில ஆண்டுகள் முயற்சி செய்து தான் முனைவர் பட்ட படிப்புக்கு வருகிறார்கள். அதில் இரண்டு மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டு ஆராய்ச்சி மாணவராகும் போது வயது முப்பதை நெருங்கி விடுகிறது. பின்னர் ஆராய்ச்சிப் படிப்பை முடிக்கும் போது அவரவர்க்குக் கிடைக்கும் வழிகாட்டிகளைப் பொறுத்து முப்பத்தைந்தைக் கூட நெருங்கி விடுகிறார்கள்..”

“இவர்களை பொருளாதார ரீதியில் தாங்கும் நிலையில் இவர்கள் குடும்பங்கள் இருப்பதில்லை. அரசு கொடுக்கும் எட்டாயிரம் ரூபாய் தான் ஒரே வழி. அதை நிறுத்துவது என்பதன் பொருள் ஏழைகளைத் தொடர்ந்து அறிவுக்கண் அற்றவர்களாகவே வைத்திருக்க வேண்டும் என்கிற அரசின் உள்நோக்கத்தைத் தான் காட்டுகிறது. காசு கட்டி சிறப்பு டியூசன்கள் போயோ அல்லது வீட்டாரின் பொருளாதார நெருக்கடி இன்றி ஒரே மூச்சாக சொந்த முறையில் படித்தோ தேசிய தகுதித் தேர்வை வெல்வது பொரும்பான்மையான மாணவர்களுக்கு எதார்த்தமாகவே சாத்தியமில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்”

அன்றாட உணவுக்கும் சொந்தப் பராமரிப்பு செலவுக்கும் என்ன செய்யப் போகிறோமோ என்கிற நெருக்கடி மாணவர்களுக்கு இல்லை என்பதும், வளாகத்தில் நிலவும் விவாதச் சூழலுக்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். மாதாந்திர உணவுக் கட்டணம் ரூ. 2500 வரை ஆகிறது. மாணவர் விடுதிகளில் உள்ள உணவகங்கள் தவிர்த்து வளாகத்துக்குள்ளேயே தாபாக்கள் உள்ளன. இங்கும் உணவுப் பொருட்களின் விலை குறைவு தான். தேனீரின் விலையும் ஐந்து ரூபாய்தான், ஆலூ பரோட்டாவின் விலையும் ஐந்து தான். உணவுக்கான செலவைத் தவிர செல்பேசி மற்றும் இணையத்திற்கு தோராயமாக ஐநூறு ரூபாய்கள் வரை செலவாகிறது. மீதமுள்ள தொகையில் பெரும்பாலும் புத்தககங்கள் வாங்குகிறார்கள்.

ஒவ்வொரு மாணவரின் அறையிலும் ஒரு குட்டி நூலகம் போல் துறைவாரியான நூல்கள் குவிந்து கிடக்கின்றன. இந்தச் செலவுகளைத் தாண்டி அரசு வழங்கும் எட்டாயிரம் ரூபாயில் வீட்டுக்கு காசு அனுப்புவதெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. எங்கோ பீகாரின் கிராமம் ஒன்றில் கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பேராசிரியர்களாவதற்கு கடனாளிகள் ஆகத் தேவையில்லை என்கிற அளவுக்கு அரசின் உதவித் தொகை உதவுகின்றது.

ஜே.என்.யு வளாகத்தை ஒரு குட்டி இந்தியா என்று சொல்லலாம். 25 சதவீதமானோர் பீகாரிகள். அதற்கடுத்தபடியாக பெங்காலிகள் சுமார் 15 – 20 சதவீதமானோரும் உத்திர பிரதேசத்திலிருந்து சுமார் 15 சதவீதம் பேரும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து சுமார் பத்து சதவீதம் பேரும் உள்ளனர். ஒரிசா மற்றும் கேரளாவில் இருந்து பத்துக்கும் குறைவான சதவீத மாணவர்கள் உள்ளனர். காஷ்மீரிகள் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு கணிசமாக உள்ளார்கள். தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சொற்ப அளவில் உள்ளனர்.

”இங்கே பயிலும் மாணவர்களில் பெரும்பான்மையானோர் பழைய சமூக அமைப்புகளும் சாதியும் வலுவாக உள்ள மாநிலங்களில் இருந்து வருகிறவர்களாக இருக்கிறார்கள். வளாகத்திற்குள் மாணவர்களுக்குள் சாதிப் பாகுபாடு உள்ளதா?”

”வளாகத்திற்குள் சாதி உள்ளது. ஆனால், மாணவர்களுக்கிடையே சாதிப் பாகுபாடுகள் நிச்சயமாக இல்லை”

“கொஞ்சம் புரியும் விதமாக விளக்குங்களேன்”

jnu_2744857g”மாணவர்களைப் பொருத்தளவில் தங்களுக்கிடையே சாதி வேறுபாடு பார்ப்பதில்லை. ஏன் மத, இன வேறுபாடு கூட பார்ப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் இங்கே ஓரிரு பாகிஸ்தானிகளும், சில பங்களாதேஷிகளும் சில இலங்கையர்களும் கூட உண்டு. இவர்களையும் நாங்கள் ஒதுக்குவதில்லை.. தேச வேறுபாடுகள் கூட பார்ப்பதில்லை. ஒவ்வொருவரும் மாணவர்கள் – அவ்வளவு தான். அவர்களின் பார்வைக் கோணங்களும் இங்கே முக்கியமானது”

”ஆனால், வளாகத்திற்குள் சாதி இருக்கிறது என்றீர்கள்”

“ஜே.என்.யு என்பதால் கொஞ்சம் சுலபமாக கண்டுபிடிக்க முடியாதபடி நுணுக்கமாக இருக்கும். இங்கே சுமாராக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உள்ளனர். இந்த மொத்த எண்ணிக்கையில் தலித்துகள் என்று எடுத்துக் கொண்டால் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இருக்கிறார்கள். அதே போல், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரும் வெகு சொற்பமாகவே உள்ளனர்.

“சில பேராசிரியர்கள் தன்னிடம் படிக்கும் தலித் மற்றும் ஓ.பி.சி வகுப்புகளைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவருக்கு ஊக்கமாக உதவமாட்டார்கள். சமர்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளில் சில்லறையான விசயங்களை சுட்டிக்காட்டி மதிப்பெண்களைக் குறைப்பது.. இயல்பாக பழகாமல் இருப்பது… ஆராய்ச்சிப் படிப்பைப் பொருத்தவரை உங்கள் வழிகாட்டி எந்தளவுக்கு உங்களோடு இயல்பாக பழகி வழிகாட்டுகிறாரோ அந்தளவுக்குத் தான் அது வெற்றியடையும். உங்கள் வழிகாட்டி உங்களிடம் ஏனோதானோவென்று கொஞ்சம் இயந்திரத்தனமாக முகத்தைக் காட்டி நடந்து கொள்வாரென்றால் நீங்கள் உளவியல் ரீதியிலேயே நம்பிக்கை இழந்து விடுவீர்கள்…”

எனினும், சமீப காலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தலித்துகளின் வரவு அதிகரித்துள்ளது. இம்மாணவர்களுக்கான வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தற்போது நேர்முகத் தேர்வுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 25 மதிப்பெண்களைக் குறைத்து எழுத்துத் தேர்வுக்கு அதிக மதிப்பெண்கள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றன மாணவர் அமைப்புகள்.

இப்படி வெவ்வேறு சாதி, மத, இன, மொழிப் பின்னணிகளில் இருந்து வளாகத்திற்கு வந்து சேரும் மாணவர்களை அங்கே நிலவும் அரசியல் சூழல் மொத்தமாக மாற்றியமைக்கிறது. பெரும்பாலும் நிலப்பிரபுத்துவ பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் வளாகத்திற்குள் நுழைந்ததும் எதிர்கொள்ளும் ஜனநாயக மதிப்பீடுகள் முதலில் அதிர்ச்சியடைய வைக்கின்றன.

எப்படி ஆசிரியர்களுக்கு அடிமையாக அல்லாமல், சமமாக பேசுகிறார்கள்? எப்படி பெண்களை கண்ணியமாக நடத்துகிறார்கள்? எப்படி சாதி வேறுபாடு பாராட்டாமல் கருத்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பழகுகிறார்கள்? பாலியல் கண்ணோட்டம் இன்றி ஆணும் பெண்ணும் பழகுவது சாத்தியமா? இரவு நேரமானாலும் பெண்கள் இவ்வளவு துணிச்சலாக நடமாட முடியுமா? மாணவர்களுக்கென்று உரிமைகள் இருக்குமா? அந்த உரிமைகளுக்காக போராடுவது சாத்தியமா? – என்பவை போன்ற கேள்விகள் முதல் ஆறு மாதங்களுக்குள்ளாகவே மறைந்து அவர்களும் இந்தக் கலாச்சாரத்தில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு வகையில் ஒரு தனித்தீவைப் போல அமைந்திருக்கும் ஜே.என்.யு வளாகத்தின் தனிச் சிறப்புகளில் இதுவும் ஒன்று. வளாகத்தினுள் செயல்படும் ஏ.பி.வி.பி உறுப்பினர்கள் கூட வெளியிலிருக்கும் தங்கள் அமைப்பிலிருந்து நிறைய வேறுபடுகிறார்கள் என்பதை பின்னர் வரும் பகுதிகளில் நாம் காணப் போகிறோம்.

பார்ப்பனிய விழுமியங்களில் ஊறிப் போன வட இந்தியாவின் இதயப்பகுதியில் ஜே.என்.யு ஒருவிதமான ஐரோப்பிய பாணியிலான சுதந்திரத்தை இத்தனை NEHRU_jnuஆண்டுகளாக பாதுகாத்து வருகின்றது. ஜே.என்.யு பல்கலைக்கழகத்தை கனவு கண்ட நேருவோ பின்னர் அதை செயல்படுத்திய இந்திரா காந்தியோ கூட இதைக் கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள். முதலாளிய ஜனநாயகத்தின் மீதான தனது காதலையும் சோசலிசத்தின் மேலான ஃபாண்டசி கனவுகளையும் ஏதோவொரு சமன்பாட்டில் இணைத்து ’உலகத்தரமான’ ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறார் நேரு.

பின்னர் கூட்டு சேரா நாடாகவும், ரசிய சார்பு நாடாகவும் இரண்டு முகங்களைக் காட்டி வந்த இந்திராவின் காலத்தில் இது செயல்வடிவம் பெறுகிறது. ஜே.என்.யுவின் இலச்சினையே இரண்டு (சிந்தனை) உலகங்களின் சந்திப்பிலிருந்து ஒரு சுடர் எழுதுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசத்தைப் புரிந்து கொண்ட மாணவர்களை உருவாக்குவதும் அவர்களை தேச நிர்மாணத்தில் ஈடுபடுத்துவதுமே தங்கள் நோக்கங்கள் என்று அப்போது சொல்லிக் கொண்டார்கள். எனினும் எதார்த்தத்தில் அன்றைக்குப் நாடெங்கிலும் பரவலாக எழுந்து வந்த சோசலிச சிந்தனைகளை நிறுவனமயப்படுத்தும் முயற்சியாகவே அது இருந்தது.

பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட துவக்க காலத்தில், அதாவது எழுபதுகளில், வியட்நாம் போரின் பாதிப்புகள் மேற்கில் மட்டுமின்றி உலகெங்கும் மிகப் பெரும் அதிர்வலைகளை எழுப்பியிருந்தன. ரசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பனிப்போர் முற்றியிருந்தது. இதன் பின்னணியில் உலகெங்கும் எழுந்த போராட்டங்கள் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிலைப்படுத்தின. அந்தக் குரல்களில் மாணவர் சமுதாயத்தின் குரல் தனித்துவத்தோடு ஓங்கி ஒலித்தது.

அமைப்பு முறைக்குள்ளேயே ஒரு வடிகால் என்கிற எல்லையை உடைத்துக் கொண்டு இடதுசாரி அரசியலின் பக்கம் மாணவர்களின் அரசியல் நகர்ந்தது. அதன் பின்னணியில் தான் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போதும் அதிகாரத்தின் காலடியில் பணிய மறுத்து ஜே.என்.யு மாணவர்கள் வீறு கொண்டு எழுந்து நின்றனர். மாணவர்களின் கோரிக்கைகளுக்காக மட்டும் போராடுவது என்கிற அளவில் தம்மை சமூகத்திலிருந்து துண்டித்துக் கொள்ளாமல் அரசியல், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் ஒரு கலாச்சாரத்தை ஜே.என்.யு வரித்துக் கொண்டது.

அந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகத் தான் தற்போதைய ஜே.என்.யு போராட்டங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது இந்துத்துவ பாசிசம் முழுமையாக தன்னை ஆயுத பாணியாக்கிக் கொண்டு எதிர்ப்புக் குரல்களை முழக்கும் குரல்வளைகளின் மீது வெறி கொண்டு ஏறி மிதிக்கும் நிலையிலும் ஜே.என்.யு வளாகம் அஞ்சாமல் அடிபணியாமல் நிமிர்ந்து நிற்பதற்கு அதன் அரசியல் பாரம்பரியமே காரணம்.

எதிர்க் குரல்களைக் கூட மதித்து இடம் கொடுத்து விவாத மேடைக்கு அழைத்து வந்து கருத்து ரீதியில் வீழ்த்த வேண்டும் என்று கருதும் ஜே.என்.யுவின் அரசியல் பண்பு தனித்துவமானது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள கண்ணையா குமார் தனது ஏ.பி.வி.பி நண்பர்களை நோக்கி நீங்கள் சுப்பிரமணிய சுவாமியைக் கூட அழைத்து வாருங்கள் விவாதிக்கலாம் என்கிறார். ஜே.என்.யுவில் நிலவும் இந்த விவாத சுதந்திரம் இந்துத்துவவாதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்த அரசியல் சூழல் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(தொடரும்)

– வினவு செய்தியாளர்கள்