தேனி மாவட்டம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ”காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு , நீர்நிலைகளின் மீதான அதிகாரத்தை மக்கள் கைப்பற்றவேண்டும்” என்ற கருத்தை வலியுறுத்தி கடந்த 13-10-2016-அன்று வாணியர் திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. ஒரு வாரகாலமாக முற்போக்கு ஜனநாயக சக்திகளை சந்திப்பது, விவசாயிகள், அரசு ஊழியர்கள் மத்தியிலும், கம்பம் நகரில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடமும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
கருத்தரங்குக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் கம்பம் ஒருங்கிணைப்பாளர், தோழர். ஈஸ்வரன் காவிரிப் பிரச்சனையின் வரலாறை விளக்கி தலைமை உரையை துவக்கி வைத்தார்.
தோழர்.வி.இராசேந்திரன்
அடுத்து பேசிய ஏ.ஐ.டி.யு.சி. தேனிமாவட்ட துணைத் தலைவர் தோழர்.வி. இராசேந்திரன், ”காவிரி என்பது வெறும் ஆறு மட்டுமல்ல, சங்ககாலப் பாடலாக, குழந்தைகளின் பெயராக, சினிமாப் பாடலாக, தமிழர்களின் கலாச்சாரத்துடன் நெருக்கமான தொடர்புடையது. சேது சமுத்திரக் கால்வாய்க்கு எதிராக மாநிலமக்கள் நடத்திய பந்தை அன்றைய தமிழக அரசு ஆதரித்ததால், உச்சநீதிமன்றம் ஆட்சியைக் கலைப்போம் என்று நேரடியாக மிரட்டியது. ஆனால் இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த முடியாது என்று கர்நாடகா சவால் விடும்போது மவுனமாக வேடிக்கைப் பார்க்கிறது.” என்று அமபலப்படுத்தினார்.
எஸ்,ஆர்.கணேசன்
பென்னிகுயிக் விவசாயிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் எஸ்.ஆர். கணேசன், ‘நம் நாட்டின் பரம எதிரியாக சொல்லப்படும் பாகிஸ்தானுடன் எவ்விதப் பிரச்சனையுமில்லாமல் சிந்துநதி நீரைப் பகிர்ந்துகொள்கிறோம். உண்மையில் நமக்கு எதிரியாக இருப்பவர்கள் நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த மத்திய-மாநில அரசுகள்தான். இதைப் புரிந்துகொண்டு போராடும் மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளால்தான் இதற்கு தீர்வு காணமுடியும்” என்றார்.
திரு.செங்குட்டுவன்.
தமிழக விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் துணைத் தலைவர் திரு.செங்குட்டுவன், “ பல்லாண்டுகளாக தொடரும் காவிரி நீர் பிரச்சனையை நம் அரசியல்வாதிகளால் தீர்த்து வைக்க முடியாது என்பதுதான் நமக்கு அனுபவமாக இருக்கிறது. மீத்தேன்வாயு,கெயில் திட்டம் என அடுத்தடுத்து தமிழக மக்களின் வாழ்வுரியைப் பறிக்கும் மத்திய அரசு, பெரும் கார்ப்பரேட்டுகளின் கைப்பாவையாகப் போய்விட்டது. நாடு விடுதலையானாலும் விவசாயிகள் இன்னும் விடுதல் பெறவில்லை! எனவே நமது நீர்நிலைகளைப் பாதுகாக்க விவசாயிகள்தான் ராணுவம் போல களத்தில் இறங்க வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார்.
திரு.மணிகண்டன்.
பாலார்பட்டி கிராம பென்னிகுயிக் விவசாயிகள் சங்க செயலாளர் திரு,மணிகண்டன்,”அரசியல்வாதிகள் பணம் கொடுத்து ஓட்டுப் போடச்சொல்லி நமது விவசாயிகளைக் கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டார்கள். ஓட்டுக்குப் பணத்தை வாங்குவதையும், அதை அடுத்தவனுக்குப் பிரித்துக் கொடுப்பதையும் பெருமையாகப் பேசுகிறான். இந்த அடிமைப் புத்தியினால்தான் காவிரிப் பிரச்சனையில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழக அரசியல்வாதிகள் எதுவும் செய்யாமல் இருப்பதைப் பார்த்தும் மவுனமாக இருக்கிறோம். ஆளுங்கட்சி எம்.பி.க்கள் எல்லாம் வாத்துகூட்டம் மாதிரி டில்லிக்கு மொத்தமா போயிட்டு மொத்தமா திரும்பி வர்றாங்க. அங்க இவங்கள ஒரு பயலும் திரும்பிப் பார்க்கல. இதுக்குப் பிறகும் இவங்கள நம்பி என்ன ஆகப் போகுது? என ஒரு விவசாயியின் மனக்குறையை வெளிப்படுத்தினார்.
திரு.குரு இளங்கோ
திமுக-வின் முன்னாள் ஒன்றியச்செயலாளர் திரு.குரு இளங்கோ அவர்கள்,” நீராதாரம் செழித்திருக்கும் நாட்டில்தான் மக்களின் வாழ்வும், கலாச்சாரமும், நாகரீகமும் செழித்திருக்கும். ஒரு காலத்தில், கோயில் இருக்கும் இடமெல்லாம் குளமிருக்கும். பாசனக் குளங்கள் தனியாக இருக்கும்.ஆனால் இன்று 5௦௦ குளங்களுக்கு மேல் நான்குவழிச் சாலைக்கும்,அடுக்குமாடி வீடுகளுக்கும் அழிக்கப்பட்டுவிட்டது.1௦,௦௦௦க்கும் மேற்பட்ட குளங்கள் தூர்ந்து போய்விட்டன. இதனால்தான் நிலத்தடிநீர் வற்றிப்போய் விட்டது. இந்தியா ஒரு பல்தேசிய இனங்களின் கூட்டமைப்பு. கூட்டமைப்பு என்பது கண்ணாடிப் பாத்திரம் மாதிரி. ஒரு இனத்தின் தேவையும், உரிமையும் மறுக்கப்படும்போது ஒருமைப்பாடு என்பது சிதறிவிடும்! இதுவரை ஆண்ட மத்திய அரசுகள் நம்மை இதை நோக்கியே தள்ளுகின்றன!” என்றார்.
விவசாயிகள் விடுதலை முன்னணியின் தாலுக்கா செயலர் தோழர் முருகன், மாநிலத்தின் உள்நாட்டுக் குளம் ஏரிகளின் பராமரிப்பில் மாநில அரசியல்கட்சியினரின் அலட்சியத்தையும், ஆக்கிரமிப்புகளையும் எடுத்துக் கூறி,நீர்நிலைகளின் அதிகாரத்தை விவசாயிகள் கைப்பற்றுவதுதான் தீர்வு என்று விளக்கினார்.
இறுதியாகப் பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன், “பாக்கட் தண்ணீருக்கும், பாட்டில் தண்ணீருக்கும் நாட்டில் பஞ்சமில்லை! இலவச நீருக்குத்தான் இப்போது பிரச்சனை. காசில்லாதவனுக்கு தண்ணீர் இல்லை என்பதுதான் பிரச்சனை! காவிரி வெறும் ஆறு மட்டுமல்ல. தமிழர்களின் தாய்.! வாழ்வு!. பண்பாடு!. பொருளாதாரப் பிணைப்பு!”
தோழர்.காளியப்பன்
“1970 வரை 5 லட்சம் ஏக்கர்தான் கர்நாடகாவின் பாசனப்பரப்பாக இருந்தது. ஆனால் இன்று ஒப்பந்த விதிமுறைகளை மீறி 2௦ லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தி விட்டார்கள். காவிரி நீரைப் பதுக்குவதற்காக ஏராளமான ஏரிகளை வெட்டி வைத்துள்ளனர். 2007-ல் வந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட 3 வருடமாகிறது. வெளியிட்ட பின்னும் தீர்ப்பை அமுல்படுத்த முடியவில்லை!
நிர்வாகப் பொறுப்பிலுள்ள மத்திய அரசு, கர்நாடகாவின் அடாவடியைக் கண்டிக்கவில்லை. மாறாக சட்டவிரோதமாக செயல்படும் கர்நாடகாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது!
கர்நாடகாவில் தனது தீர்ப்பை அமுல்படுத்த முடியாமல் தோற்றுப்போய் நிற்கிறது உச்சநீதிமன்றம்! சட்டத்தின் ஆட்சியை இவர்களால் நிலைநாட்ட முடியவில்லை. சட்ட விரோதமாக செயல்படும் கர்நாடகாவை ஆதரிப்பதன் மூலம் சட்டவிரோதமான நிலைக்கு அரசு அமைப்பே சீரழிந்துவிட்டது! இனிமேலும் இந்த அமைப்பு முறைக்குள் தீர்வுகாண முடியாது!” என்று விரிவாகப் பேசினார்.
சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள், குறிப்பாக மாற்றுக் கட்சியை சேர்ந்த ஜனநாயகவாதிகளும், இளைஞர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக, கம்பம் அறநிலையத்துறை வளாகத்தில் உள்ள கருப்பத்தேவர் மண்டபத்தில் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தோம். நமது போஸ்டரில் “மோடி அரசு” என்ற வாசகம் இருப்பதைக் கண்டு கொதித்துப்போன இந்துமுன்னணி கும்பல் வழக்கம்போல பேடித்தனமான வேலைகளில் இறங்கியது. அறநிலையத்துறை மீது மண்டப உரிமையாளர் வழக்கு போட்டிருப்பதைக் காரணமாக வைத்து, “தீவிரவாதிகளின் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கிறார்” என்று மேலதிகாரிகளுக்கு புகார் செய்தனர். தனது வழக்குக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறிய மண்டப உரிமையாளர், நிகழ்ச்சி நாளன்று நமக்கு அனுமதி மறுத்துவிட்டார். உடனடியாக மாற்று மண்டபம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கும்போதே, பெயர் சொல்லத் துப்பில்லாத ஒரு அனாமத்து தோழர் மோகனுக்கு போன்செய்து “காவிரி பிரச்சனையில் எப்படி மோடி அரசைக் குற்றம் சொல்லலாம்? திமுக-அதிமுக-காங்கிரசுதான் காரணம்.” என்று வாக்குவாதம் செய்தான். தோழர் பொறுமையாக கூறிய விளக்கத்தைக் கூட கேட்காமல், “அடுத்து எங்க கூட்டம் நடத்தப் போறீங்க? உங்கள்கூட்டத்திற்கு நாங்கள் வரலாமா? எங்களுக்கு பேச வாய்ப்பு தருவீர்களா?” என்று மிரட்டும் தோரணையில் கேட்டான். “தாராளமாக வாங்க. ஆனால் பேச அனுமதிக்க முடியாது” என்று கூறிவிட்டார், ஒருவேளை கூட்டத்திற்கு வந்து கலாட்டா செய்வார்கள் என்று ஆவலோடும், தயாரிப்புடன் காத்திருந்தோம். இறுதிவரை ஒரு வானரமும் வரவில்லை!
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், தேனி மாவட்டம் ஒருங்கிணைப்புக் குழு.
உலக வங்கியின் முன்முயற்சியில் 1960-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கையெழுத்தான சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம், மிகச் சிறந்த அரச தந்திரத்திற்கு உதாரணமாக காட்டப்படுகிறது. மேற்படி ஒப்பந்தம் 1965, 1971 மற்றும் 1999-ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர்களையும் அவை உண்டாக்கிய ரத்த வெள்ளத்தையும் கடந்து இன்றும் நடைமுறையில் உள்ளது.
ஆனால் கடந்த 2016 செப்டெம்பரில் நடந்த ஊரி தாக்குதலைத் தொடர்ந்து இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவு முறுகல் நிலையை அடைந்துள்ளது. இந்தியத் தரப்பில் வாதாடும் சிலர் சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோருகின்றனர். அதன் மூலம் இராணுவ வழித் தீர்வுக்கு வெளியே பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமெனக் கருதுகின்றனர்.
பரந்து விரிந்துள்ள சிந்து நதி
காஷ்மீரின் கோடைகாலத் தலைநகரான ஸ்ரீநகரிலிருந்து 75 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது ஊரி நகரம். இந்திய பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள இந்நகரத்தில் பல இராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. கடந்த செப்டெம்பர் 18-ம் தேதி அங்குள்ள இராணுவ முகாம் ஒன்றின் மேல் தீவிரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளில் நால்வரும், இந்திய வீரர்களில் 18 பேரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என இந்தியா குற்றம் சாட்டியது.
காஷ்மீர் பிரச்சினையை ஒட்டி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த மூன்று போர்களையும், அதையொட்டிய முரண்பாடுகளையும் கடந்து சிந்து நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தமும் அது வழங்கும் நீர் பங்கீட்டுக்கான முறைமைகளும் எந்தச் சிக்கலும் இன்றி பின்பற்றப்படுகிறது.
மேற்படி ஒப்பந்தத்தின் அடிப்படையில், மேற்கு நோக்கிப் பாயும் ஜீலம், செனாப் ஆகிய கிளை நதிகளின் நீரைப் பெரும்பான்மையாக பாகிஸ்தான் பயன்படுத்தி வருகின்றது. அதே நேரம், ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் நதிகளின் நீர் இந்திய பயன்பாட்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
தண்ணீரை ஆயுதமாக பயன்படுத்துவது
ஊரி தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு சிந்து நீர் பங்கீடு தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான கட்டுரை ஒன்றில் “சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை கைவிடுவோம் என்கிற அச்சுறுத்தலை இந்தியா கையில் எடுக்க வேண்டும். பாகிஸ்தானின் தடையற்ற குடிநீர் தேவை மற்றும் அந்த நதி உற்பத்தியாகும் நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பாகிஸ்தானுக்கு உள்ள பொறுப்பை இணைக்க வேண்டும்” என்று எழுதினார் பிரம்மா செலானே.
வெளியுறவு மற்றும் நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட மற்றவர்களும் இந்திய-பாகிஸ்தான் நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் காலாவதியாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தனர். இந்திய அரசாங்கம் இது குறித்து மிகக் குறைவாக அதிகாரப்பூர்வமாக எதிர்வினையாற்றி உள்ளது. “அதைப் போன்ற ஒப்பந்தங்கள் செயல்பட வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினருக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பும் நல்லெண்ணமும் இருக்க வேண்டியது அவசியம்” என்று இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், மேலும் விவரங்களுக்குள் செல்லவில்லை.
நடுவர்
நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்ததோடு அது தொடர்பாக எழும் முரண்பாடுகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் ஆணையம் ஒன்றை நியமிக்கும் பொறுப்பில் உள்ள உலக வங்கியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தைப் பொருத்தவரை, உலகவங்கியின் பாத்திரம் விதிகளுக்கு உட்பட்டதாகவும் குறைவாகவுமே உள்ளதாக உலக வங்கியின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்வீடனின் உப்சலா பல்கலைக்கழகத்தில் அமைதி மற்றும் போர் ஆராய்ச்சித் துறையில் ஆசிரியராக பணியாற்றும் அஷோ ஸ்வய்ன், உலக வங்கியின் நிலைப்பாடு குறித்து ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறார். சிந்து நதி நீர்பங்கீட்டு ஒப்பந்தத்தின் சில அம்சங்களில் கையெழுத்திட்டுள்ள உலக வங்கி, அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் முடிவில் தலையிட முடியாதென்றும், மாறாக அமல்படுத்தும் போது எழும் முரண்பாடுகளை மட்டுமே கையாளும் என்றும் தெரிவிக்கிறார். முரண்பாடுகள் எழும் போது அதிகபட்சமாக ஒரு “நடுநிலையான வல்லுநரையோ” அல்லது தீர்ப்பாயம் ஒன்றையோ நியமிக்க முடியும். தண்ணீரைத் தடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியாவால் பாதிப்பு உண்டாக்க முடியுமா என்று கேட்ட போது, பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீரை உடனடியாக தடுத்து நிறுத்தும் அளவுக்கு இந்தியாவிடம் தண்ணீரைத் தேக்கி வைக்க போதுமான கட்டமைப்புகள் இல்லை என்கிறார் ஸ்வய்ன்.
“இந்தியா தனது அணைகளின் மட்டத்தை உயர்த்த வேண்டும். அதற்கு நீண்ட காலமாகும். இதில் இன்னொரு கோணமும் உள்ளது. ஒருவேளை இந்தியா அவ்வாறு முடிவு செய்தாலுமே கூட, காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து நீரை வெளியே கொண்டு வர முடியாது. புவியியல் காரணங்கள் குறுக்கே நிற்பதால் இம்மூன்று நதிகளின் (சிந்து, ஜீலம், செனாப்) நீர் அவற்றின் படுகைகளிலேயே தேங்கி விடும். இந்தியாவால் சில காலத்திற்கு அந்த ஆறுகளின் சப்ளையை தடுக்க முடியும், ஆனால் அவற்றை மடைமாற்ற முடியாது” என்கிறார் ஸ்வய்ன்.
ஒப்பந்தத்திற்கு உட்பட்டு செயலாற்றுவது
புதுதில்லியைச் சேர்ந்த “பாதுகாப்புக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தைச்” சேர்ந்த உத்தம் சின்ஹாவும் ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும் என்கிற கருத்துடையவர்களோடு முரண்படுகிறார்.
”பாகிஸ்தானுக்கு புரிதல் உண்டாக்க வேண்டும் என்பதற்காக சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை கைவிடும் அளவுக்குச் செல்ல வேண்டியதில்லை. ஒப்பந்த சரத்துகளில் உள்ளபடியே சிந்து நதியின் மேற்கத்திய படுகையின் நீரை விவசாயத்திற்கும், மின் உற்பத்திற்கும் பயன்படுத்துவது மற்றும் 36 லட்சம் சதுர ஏக்கர் பரப்பிற்கு நீரைத் தேக்குவது போன்ற நடவடிக்கைகளின் மூலமாகவே பாகிஸ்தானுக்கு உணர்த்த முடியும்” என்கிறார் உத்தம் சின்ஹா.
”ஒப்பந்தத்தை முற்றாக கைவிடுவது என்பது நமது சொந்த நலன்களுக்கும் சர்வதேச நிலைபாடுகளுக்குமே கூட எதிராக முடியும். அவ்வாறு செய்வது நம்முடன் நதிநீர் பகிர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற அண்டை நாடுகளிடையே அச்சத்தை உண்டாக்குவதுடன் சர்வதேச அளவில் நமக்கு அவப்பெயரையும் பெற்றுத் தந்து விடும்” என்கிறார் உத்தம் சின்ஹா.
”ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்திலிருந்து விலகுவது உலகவங்கியை இந்த தாவாவிற்குள் இழுத்து விட்டு விடும். மேலும் பாகிஸ்தானியர்களிடம் வெறுப்புணர்வைத் தூண்டி மேலும் வன்முறைக்கு அடிகோலி விடும்” என்கிறார் சர்வதேச நீர் மேலாண்மை மையத்தின் ஆராய்ச்சியாளரும், லாகூரைச் சேர்ந்தவருமான அசீம் அலி ஷா.
ஊடகங்களில் பரபரப்பாக விவாதம் நடந்து வரும் நிலையில், ஒப்பந்தத்தில் முக்கிய தரப்புகளான இந்திய அரசு மற்றும் உலகவங்கி ஆகியோர் தரப்பில் கடைபிடிக்கப்படும் மௌனமானது, ஒப்பந்தம் தற்போதைக்கு பாதுக்காப்பாகவே உள்ளது என்பதை உணர்த்துகிறது. ”சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை காப்பாற்ற எனது தலையைக் கூட அடமானம் வைப்பேன். அந்த ஒப்பந்தம் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒருமனதான தீர்மானத்தையும் நான்கு போர்களையும் சமாளித்து இன்னும் உயிருடன் தான் இருக்கிறது” என்று ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா.
இம்மூன்று நதிகளின் பிறப்பிடமான தங்கள் மாநிலத்தின் தேவையைக் கணக்கில் கொள்ளாத சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என 2003-ல் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் ஒருமனதான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
”ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும் என்பது போன்ற அறிக்கைகளை வெறுமனே பிரச்சாரமாகத் தான் பார்க்க முடியுமே தவிர அதில் ராஜதந்திர தெரிவு ஏதுமில்லை” என்கிறார் தெற்காசிய பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறையின் பேராசிரியர் மேதா பிஷ்ட். இந்தியா மேற்படி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆறு நதிகளில் இரண்டின் நதிக்கரை தேசமாக இருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். சிந்து நதியும் சட்லெஜும் திபெத்தில் உற்பத்தியாகி இந்தியா வழியாகப் பாய்கிறது. இந்த நதிகளின் நீரைப் பங்கிடுவது தொடர்பாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை.
இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரை திசைதிருப்புமானால், இந்தியாவுக்குச் செல்லும் நீரைத் திசைதிருப்புவோம் என சீனா மறைமுகமாக உணர்த்தியுள்ளது என்கிறார் ஒரு மூத்த விமர்சகர். அவ்வாறான ஒரு சூழல் இம்மூன்று நாடுகளிலும் வெள்ளத்தையும் கடும் சேதத்தையும் விளைவிக்கக் கூடும். இது போன்ற ஒப்பந்தங்கள் நல்லெண்ணங்களின் அல்லது பரஸ்பர நம்பிக்கைகளின் அடிப்படையில் அன்றி அந்தந்த தேசங்களின் நலன்களின் அடிப்படையிலேயே உயிர்ப்புடன் உள்ளதை இது உணர்த்துகிறது.
காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு மத்திய அரசு செய்யும் துரோகம், கர்நாடக அரசின் அடாவடித்தனமான நடவடிக்கை, தற்போது காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என திமிராக நடந்துகொள்ளும் மத்திய அரசின் செயல்பாடு, எதையும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் உச்சநீதிமன்றம், ஆகமொத்த ஒட்டுமொத்த இந்த அரசு கட்டமைப்பே மக்களை ஆள தகுதியிழந்துவிட்டது; இதனை விளக்கும் வகையில் “காவிரி பிரச்சினையில் எதிரி யார்? செய்யவேண்டியது என்ன? ” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் கோவை மண்டலம் சார்பாக கரூரில் 09-10-2016 அன்று மாலை 4.00 மணியளவில் திருநீலகண்டர் சத்திரத்தில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்திவேல் தலைமை வகித்தார். விளக்க உரையாக கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட சங்கத்தின் தலைவர் மு.ராமசாமி, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் தோழர் ளு.சண்முகசுந்தரம், ஆதித்தமிழர் பேரவையின் கரூர் மாவட்ட செயலாளர் இரா.முல்லையரசு, கரூர் மக்கள் அதிகாரம் தோழர் இராமசாமி, மக்கள் அதிகாரம் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு விளக்க உரையாற்றினார்கள்.
கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்திவேல் தனது தலைமை உரையில், “தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் கர்நாடகா அரசு அடாவடித்தனமாக நடந்து கொள்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் தண்ணீர் தரும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது. இருமாநில பிரச்சினைகளை சுமூகமாக பேசி தீர்க்காமல், ஓரவஞ்சனை செய்கிறது மோடி அரசு. எனவே தேசிய கட்சிகளை விரட்டிவிட்டு, மக்களே அதிகாரத்தை கைபற்றும் வகையில் திரண்டு போராட வேண்டும்” என்று அறைகூவி அழைத்தார்.
கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட சங்கத்தின் தலைவர் மு.ராமசாமி, “அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக மக்களுக்கு குவாட்டரும் பிரியாணியும் கொடுத்து மக்களை சீரழித்துள்ளனர். அரசியல் கட்சிகள் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று எண்ணியிருப்பதில் எந்த பயனுமில்லை. கரூர் மாவட்டத்தில் நீரின் நிறம் மாறி சாக்கடையாக ஓடுகிறது. அமராவதி ஆறு இன்று பொய்த்துப் போய் பொட்டல்காடாகவும், சுடுகாடாகவும் மாறிவருகிறது. பொதுப் பணித்துறை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உள்ளிட்ட அனைத்து அரசு நிர்வாகமும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிராகவே உள்ளன. குடிக்க நீர் இல்லாமல் சாக்கடை நீரை குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மாசுபடுகிறது. இதற்கு எதிராக சங்கத்தின் சார்பில் நாங்கள் பல போராட்டங்களை நடத்தியும் இருக்கிறோம். அரசியல் கட்சிகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். முதலாளிகளுக்கு சேவை செய்யும் இக்கட்சிகளை விரட்டுவோம்” என்று ஆதங்கத்துடன் பேசினார்.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் தோழர் சண்முகசுந்தரம், “காவிரியில் விவசாயம் செய்து வரும் டெல்டா மாவட்டங்கள் இன்று அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் குறைந்த அளவிலேயே விவாசயம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் விவசாய சங்கங்கள் சார்பில் பல போராட்டங்கள் நடத்தியுள்ளோம். மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் வேலைகளை செய்து வருகிறது. கர்நாடக அரசு பல கம்பெனிகளுக்கு காவிரி நீரை தருகிறது. ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு மட்டும் பிரச்சினை செய்து வருவது நாடகமே. இவற்றையெல்லாம் சரிசெய்யாமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. எனவே காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் வரை, தொடர்ந்து போராட வேண்டும்” என்று கூறினார்.
ஆதித்தமிழர் பேரவையின் கரூர் மாவட்ட செயலாளர் இரா.முல்லையரசு, “காவிரி பிரச்சனையை எப்பொழுது மக்கள் அதிகாரம் கையில் எடுத்ததோ, அப்பொழுதே இந்த அரசின் குலை நடுங்க ஆரம்பித்துவிட்டது. ஆமாம் தோழர்களே மக்கள் அதிகாரம் ஒரு பிரச்சினையில் தலையிட்டால் முடிவு காணும்வரை பின்வாங்க மாட்டார்கள் என்று எங்களுக்கும் தெரியும், அரசு நிர்வாகத்திற்கும் தெரியும். மக்கள் அதிகாரம் சுவரொட்டி ஒட்டினாலே அடுத்து என்ன செய்வது என்று தூங்காமல் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு தனது பணியை செய்கின்றனர் காவல் துறையினர். அதனால்தான் கடந்த வாரம் சுவரொட்டி ஒட்டிய தோழர் சக்திவேல், விக்னேஷ்வரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தது காவல் துறை. இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது மக்கள் அதிகாரம் என்பது அவர்களுக்கும் தெரியும். இன்று தமிழகத்தில் 2 மணிநேரம் டாஸ்மாக் கடையின் வேலை நேரம் குறைக்கப்பட்டதற்கு முழுமையாக காரணம் மக்கள் அதிகாரம்தான் என பெருமையாக கூறுகிறேன். மக்கள் அதிகாரம் பேராட்டம் நடத்தி ஆதித்தமிழர் பேரவை எப்பொழுதும் துணைநிற்கும்” என்று கூறி தனது விளக்கவுரையை நிறைவு செய்தார்.
மக்கள் அதிகாரம் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ், “காவிரி பிரச்சினையில் தேசிய கட்சிகள் மாநிலத்திற்கு ஒரு நிலைப்பாட்டை முன்வைக்கின்றன. இயற்கை வளங்களை அழித்தும், காடு மலைகளை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்துவிட்டு, முதலாளிகளுக்கு எப்படி இயற்கை வளங்களை அள்ளித் தரலாம் என்று இந்த அரசு திட்டம் தீட்டுகிறதே தவிர மக்களின் உயிராதாரமான பிரச்சனை என்ன? அதனை எவ்வாறு சரி செய்யலாம் என்று எண்ணாமல், அதைப்பற்றி அக்கறை கொள்ளாத யோசிக்காத அரசு நிச்சயமாக மக்களுக்காக அரசகாக இருக்க முடியாது” என்று பல சான்றுகளுடன் விளக்கி பேசினார்.
கரூர் மக்கள் அதிகாரம் தோழர் இராமசாமி, “டெல்டா பகுதிகளில் பெரும்பாலான விவசாய நிலங்கள் பொட்டல் காடுகளாகவே காட்சியளிக்கிறது. கரூர் அருகில்உள்ள வாங்கல், தளவாபாளையம், வேலாயுதம்பாளையம் போன்ற பகுதிகளில் இன்று கோரை பயிரிட்டு விவசாயம் செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். வெறும் 150 ஆண்டுகளே விவசாயம் செய்து வருகிறது கர்நாடக அரசு. ஆனால் தமிழகமோ 1000 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி நீரில் விவசாயம் செய்து வருகிறது. காவிரி நீர் விவசாய நிலங்களை சென்றடைவதற்குள் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களை ஆள்வதற்கு இந்த அரசு தகுதி இழந்த நிலையில், மக்களே அதிகாரம் படைத்தவர்களாக களம் இறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என்றுகூறி தனது உரையை நிறைவு செய்தார்.
சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன், “மக்கள் தேவை என்ன என்பதை புரிந்துகொள்ளாத ஒரு அரசு நிச்சயமாக அது மக்களுக்கானதாக இருக்க முடியாது. காவிரி நீரில் தமிழகத்திற்கு உரிமை உள்ளது என்று வரலாற்று ஆதாரங்கள் இருந்தும், தண்ணீரை பிச்சை போடுவது போல கர்நாடக அரசு செய்வதும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களுக்கு ஓரவஞ்சனை செய்கிறது மத்தியில் ஆளும் மோடி அரசு. அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் உச்சநீதிமன்றம், இவை அனைத்துமே இன்று மக்களுக்கு எதிராக நிற்கின்றது என்பதை நம் கண்முன்னே பார்க்கிறோம். இயற்கை வளங்கள், காடுகள், மலைகள், ஆறுகள், நதிகள் என்று சர்வதேச அளவில் பிரித்து கையாள பல விதிகள் இருந்தும், அவற்றையெல்லாம் சட்டவிரோதமாக, இயற்கை விதிகளுக்கு முரணாக இந்த அரசாங்கம் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு கோடான கோடி உழைக்கும் மக்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை செய்து வருகின்றது. வெளிநாடுகளில் நீதிமன்றங்களில் மக்கள் நலனுக்கு எதிராக இருக்கும் நீதிமன்ற தீர்ப்புகளை, மக்களே அதிகாரத்தை நிறுவி நீதிமன்றங்களின் தீர்ப்புகளை செல்லா காசாக்கி இருக்கிறார்கள். ஆகவே மக்களை திறம்பட ஆளுகின்றோம் என்று இந்த அரசு, நீதிமன்றம், காவல்துறை, மற்றும் அனைத்து அரசு நிர்வாகமும் எப்படி மக்களுக்கு எதிராக உள்ளது என்பது மட்டுமல்லாமல் முழுமையாக மக்களுக்கு எதிராக வேலையை செய்துகொண்டிருக்கிறது. மக்களே அதிகாரத்தை கைப்பற்றி இந்த அரசை தூக்கி வீசும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று சிறப்புரையாற்றினார்.
இறுதியாக புரட்சிகர மாணவ இளைஞர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் பாக்கியராஜ் அரங்க கூட்டத்தில் பேசிய அனைத்து பேச்சாளர்களுக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுக்கட்சி நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ம.க.இ.க.வின் புரட்சிகர பாடல்களோடு கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
மக்கள் அதிகாரம் கோவை மண்டலம் சார்பாக நடந்த மேற்கண்ட அரங்க கூட்டத்தில் கோவை, கரூர், உடுமலைப்பேட்டை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதி தோழர்கள் கலந்துகொண்டனர்.
சுமார் 1500 பேர் வசிக்கும் அந்த கிராமத்தின் டீக்கடையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். தற்செயலாக மகளிர்குழு பற்றி பேச்சு திரும்பியது. 20 பேர் ஒருகுழு வீதம் 25 குழுக்கள் இருப்பதாகவும் சராசரியாக ஒவ்வொருவரும் 25,000 ரூபாய் கடன் வாங்கியிருப்பதாகவும் ஒருவர் கூறினார். கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு கோடி 25 லட்சம் ரூபாய்! இவ்வளவு ரூபாயா நம்ம ஊருக்குள்ள புழங்குது? என்று நண்பர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்!
“என்னப்பா சொல்றீங்க…நம்ம ஊரே பெரிய கடன்காரப்பய ஊரால்ல இருக்கு” என்று ஒருவர் வாயைப் பிளக்க, அருகில் இருந்தவரோ, பேப்பர் பேனாவை எடுத்து ஊரில் நிலத்தை அடகுவைத்து பேங்கிலும், தனியாரிடமும் கடன்வாங்கியவர்கள் பட்டியலை தயாரித்தார். அந்தக்கணக்கும் ஒருகோடி ரூபாயை தாண்டி நின்றது!
ஒரு சிறிய விவசாயகிராமம் இரண்டு கோடிரூபாய் கடனில் உயிர்வாழ்கிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை!
அப்படியானால், நம்ம ஊரின் கடன் எவ்வளவு இருக்கும்? என்று மனதிற்குள் கணக்குப் போடுவதற்கு முன், நம்மில் யாரும் குடும்பத்தோடு சென்று இவர்களிடம் கையேந்தி கடன் கேட்காமலே வீடு தேடிவந்து கடன் கொடுக்கிறானே யார் இவன்? ஏன் கொடுக்கிறான்? அவன் பின்னணி என்ன? நம்மை கடனாளி ஆக்குவதால் அவனுக்கு என்ன லாபம்? என்று அறிந்துகொள்வது அதைவிட முக்கியமானது!
20 பேர் ஒரு குழு வீதம் 25 குழுக்கள்
கடன் கொடுப்பவர்கள் யார்?
இவர்கள் இரண்டு பிரிவுகளாக செயல்படுகிறார்கள்.
1) சுயஉதவிக் குழுக்கள் (SHG):
குறிப்பாக பெண்கள் மட்டும் 10,15,20 பேர் கொண்ட குழுவாக இணைந்து சுயஉதவிக் குழுக்கள் என்ற பெயரில் இயங்குபவர்கள். பெரும்பாலும் தன்னார்வக்குழுக்கள் தலைமையில் செயல்படும் இவர்கள், நேரடியாக பொதுத்துறை மற்றும் வணிக வங்கிகளில் சேமிப்புக் கணக்குத் தொடங்கி, அதில் தங்களின் மாத சந்தா பணத்தைச் சேமித்து, அதனை தங்களுக்குள் வட்டிக்குவிட்டு, பிறகு அதனை முறையாக வசூலித்து வங்கிக் கணக்கில் திருப்பிச் செலுத்த வேண்டும்! இதே காலத்தில், குழு உறுப்பினர்களுக்கு கூடை பின்னுதல், மண்புழு உரம் தயாரிப்பு, தையல், கம்ப்யூட்டர் பயிற்சி போன்ற சுயதொழில் பயிற்சிகள் வழங்கப்படும். இவ்வாறு 6 மாதகால நடைமுறைக்குப் பின் சம்பந்தப்பட்ட வங்கியில் குழுவின் பெயரில் கடன் பெற்று, கற்றுக்கொண்ட சுய தொழில்கள் மூலம் சம்பாதித்து, கடனைத் திருப்பிச் செலுத்தவேண்டும்! வாங்கும் கடனுக்கும், தவணை செலுத்தாதவர்களுக்கும் மொத்தக்குழுவும் பொறுப்பு ஏற்கவேண்டும்! நாடுமுழுவதும் சுமார் 30 லட்சம் சுய உதவிக்குழுக்கள் இயங்குகின்றன!
2) வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC):
இவர்கள் “பொதுமக்களிடமிருந்து சேமிப்பு நிதி திரட்டக்கூடாது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை மக்களுக்கு மட்டுமே கடன் வழங்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிதி நிறுவனங்கள்! ஏற்கனவே செயல்பட்டுவரும் சுய உதவிக்குழுக்களைத் தவிர்த்து, இவர்கள் தனியாக பெண்கள் குழுக்களை அமைத்து, நேரடியாக கடன்வழங்கி வருகிறார்கள். ‘மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள்’ என்று அழைக்கப்படும் 500-க்கும் மேற்பட்ட இத்தகைய நிறுவனங்கள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன! சமீபகாலமாக, அரசு வங்கிகளுடன் இணைந்து செயல்படும் சுயஉதவிக் குழுக்களின் எண்ணிக்கையை விட, இந்த தனியார் நிறுவனங்களின் குழுக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது!
இவ்விரு பிரிவினரும் சேர்ந்து “கடந்த ஆண்டில் மட்டும் (2015) நாடுமுழுவதும் வழங்கிய மொத்த கடன்தொகை சுமார் 48,882 கோடி ரூபாய்! இதில், வங்கி அல்லாத தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கியது மட்டும் 34,298 கோடி ரூபாய்!” என்று, வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் கூட்டமைப்பான சன்-தன் (SAN-DHAN) கூறுகிறது!
1,000 ரூபாய் முதியோர் பென்சனுக்கும், ஆதார் கார்டுக்கும், ரேசன் கார்டுக்கும், அப்பாவிகளை தெருநாயாக அலையவிடும் நாட்டில், இவ்வளவு பெரிய தொகையை ஏழைகளின் வீடுதேடிவந்து கடனாகக் கொடுக்க நோக்கி காரணம் என்ன? இவர்களுக்கு ஏனிந்த திடீர் அக்கறை?
கடன் கொடுப்பது எதற்காக?
“கிராமப்புற ஏழை மக்களை வறுமையிலிருந்து மீட்டு, நிரந்தரமான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், வறுமையை ஒழிக்கப் போகிறோம்!” என்கின்றன நம் மத்திய-மாநில அரசுகள்!
இவர்களிடம் பல ஆண்டுகளாக கடன்பெறும் பெண்கள் என்ன சொல்கிறார்கள்?
“குறிப்பாக, கிராமப்புற பெண்கள் ஆடு-மாடு வளர்ப்பு, சிறுவியாபாரம், மற்றும் கைத்தொழில்களில் ஈடுபடுத்துவதன் மூலம் தங்கள் வறுமையை தாங்களாகவே ஒழித்து கொள்வதற்கு உதவுவதுதான் இதன் நோக்கம்” என்று ‘பெண்களுக்கான உலகவங்கி’(WOMENS WORLD BANKING -WWB) என்ற அமைப்பு கூறுகிறது!
“கிராமப்புற ஏழைகளை சிறுதொழிலில் ஈடுபடுத்தி, உற்பத்தியை சந்தைப்படுத்த உதவுவதன் மூலம், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது” என விளக்கமளிக்கிறது மதுரை- கருமுத்து தியாகராஜன் செட்டியார் குடும்பத்தின், மதுரா மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம்!
ஆக, கிராமப்புற ஏழைகளின் வறுமையை ஒழித்து, அவர்களின் வாழ்வில் 10,000 வாட்ஸ் பல்பை ஒளிர விடுவதுதான் எங்கள் நோக்கம் என்கிறார்கள்! ஆனால், இவர்களிடம் பல ஆண்டுகளாக கடன்பெறும் பெண்கள் என்ன சொல்கிறார்கள்?
கடனாளிகளின் அனுபவம் என்ன?
வறுமையை ஒழிக்க திருச்சியில் அன்னிய முதலீட்டாளர்கள்
“நான் மூணுமுறை கடன் வாங்கியிருக்கேன். முதல்முறையா 5,000, அடுத்து ஒருவருசம் கழிச்சு 15,000, அடுத்து ஒருவருசம் கழிச்சு இப்போ 25,000 ரூபாய் வாங்கியிருக்கேன். இதுல என்ன தொழில் பண்ண சொல்றீங்க? ஆடு-மாடு வளர்க்கனும்னா அதை மேய்க்கிறதுக்கும், பராமரிக்கிறதுக்கும் ஒரு ஆளு தனியா வேணும். ஆறு மாசம் கழிச்சுதான் அதை விக்க முடியும். மாடுன்னா வருமானம் பார்க்க ஒரு வருசமாவது ஆகும். அதுவரைக்கும் எப்படி தவணை கட்டுறது?”என்று எதார்த்தமாக கேட்கிறார் ஒரு உஜ்ஜிவன் நிறுவன பெண் பயனாளி!
“இந்தத் தெருவுல நாலுகடை இருக்கு. இதுல நான் ஐந்தாவதா ஒரு கடை வச்சா என்ன வியாபாரம் நடக்கும்? தெருவுல நாலுபேரு கடன் சொல்லிட்டு போயிருவா…அப்புறம் எந்தக்காசுல கடைக்கு சாமான் வாங்குறது? எதை வச்சு தவணை கட்டுறது? கூலிவேலைக்கு போயி கட்டுறதுதான் எங்களுக்கு ஈசியான வழி. வேற வழியில்லைங்க!” என்கிறார் இன்னொருபெண்!
12-வது படித்துவிட்டு தையல் தொழில்செய்யும் இரு குழந்தைகளுக்கு தாயான மீனா, “நைட்டி, சுடிதார், லெக்கின்ஸ், பாவாடை, கடைசியா ஜாக்கட் கூட ரெடிமேடுல வந்துருச்சு. வயசான பொம்பளைகள்தான் இன்னமும் பாவாடை- ஜாக்கட் போடுறாங்க. அன்றாடம் கைச்செலவு அளவுக்கு கிடைக்கும். ஆம்பளைங்க மாதிரி ரெடிமேடு கடைக்குப் போனா கொஞ்சம் சம்பாதிக்கலாம். ரெண்டு புள்ளைகளை வச்சுக்கிட்டு எப்படி வெளியே போகமுடியும்?” என்று புலம்புகிறார்!
நுண்கடன் முறையின் தந்தை முகமது யூனுஸ்
வாய்ப்புள்ள சில பெண்கள், வாங்கிய கடனை முதலீடு செய்து சிறு வியாபாரம், கந்துவட்டி கொடுப்பது ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். அப்படி ஒரு பெண்ணிடம் பேசியபோது, “எம்புருசன் செத்து ரெண்டு வருசமாச்சு தம்பி! பொம்பளைப் பிள்ளையை கட்டிக்கொடுத்துட்டேன். இன்னொரு ஆம்பளைப்பய இருக்கான். இன்னும் ரெண்டு வருசம் அவன படிக்கவச்சு, அவனுக்கு நல்லது கெட்டது செய்யனும்னா எங்கப்பா போறது? ஒருஆள் வருமானத்துல குடும்பத்த ஓட்டனும்ல. அதான், கூட வேலைசெய்யிற நாலு பொம்பளைகளுக்கு கொடுத்து வாங்குறேன். நான் வேற என்ன தொழில் செய்யிறது?” என்று பரிதாபமாக கேட்கிறார்!
ஒரு பெண் பயனாளியின் கணவர்,”காலேஜில படிக்கிற பையனுக்கு பீஸ் கட்ட 15,000 ரூபாய், பத்து வட்டிக்கு வாங்கினோம். பொண்டாட்டி வாங்குன கடன்ல, அதை அடைச்சிட்டு இப்ப இவங்களுக்கு தவணை கட்டுறோம்! மகளிர் கடனில் மாதம் 2 ரூபாய் வட்டிதான். நம்மளுக்கு 8 ரூபாய் வட்டி மிச்சம்!” என்று தன் வறுமையை சாதுரியமாக வென்றுவிட்டதாக சந்தோசப்படுகிறார்!
இவ்வாறு தங்களின் அன்றாட வாழ்க்கை செலவுகளுக்குத்தான் கடன் பயன்படுகிறது என்ற உண்மை, கடன் வழங்கும் நுண்கடன் நிறுவனங்களுக்கும், அரசுக்கும் தெரியாத விசயமில்லை!
“கிராமங்களில் கடன் பெறுபவர்களில் 7 முதல் 15% பேர்தான் தொழில் செய்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் நட்டத்தில்தான் உள்ளனர். எனவே நுண்கடனால் எவ்வித சமூகப்பயனும் ஏற்படுவதில்லை” என்று தனது வாடிக்கையாளர்களிடம் நடத்திய மதுரா நிறுவனத்தின் ஆய்வின் முடிவு கூறுகிறது! மேலும், ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட மலேகாம் கமிட்டியின்(MALEGAM COMMITTEE)-யின் அறிக்கை இன்னும் வெளிப்படையாக, “பெரும்பாலான கடன்கள் நுகர்வுக்கு மட்டுமே செலவு செய்யப்படுகிறது” என்று கூறுகிறது! எனவே, கடன் தொகையையும் அதற்கான கந்து வட்டியையும் பெண்களின் கூலி உழைப்பிலிருந்துதான் வசூலித்துக் கொள்கின்றன நிதிமூலதன நிறுவனங்கள்.
ஆக, நுண்கடன் திட்டங்கள் மூலம் ஏழ்மை ஒழிப்பு-வறுமை ஒழிப்பு- பெண்களின் சுயமுன்னேற்றம் என்பதெல்லாம் நடைமுறைக்கு உதவாத நடவடிக்கைதான் என்பதை ‘வளர்ச்சித்திட்ட அறிவாளிகளே’ ஒத்துக்கொள்கிறார்கள்! என்றால், இத்திட்டத்தின் உண்மையான நோக்கம்தான் என்ன?
நுண்கடன் என்றால் என்ன?!
“நுண்கடன் என்றால், சந்தை மற்றும் வர்த்தக அணுகுமுறைக்கு உதவும் வகையில், ஏழைகளுக்கு வழங்கும் பலவித பொருளாதார சேவையை குறிக்கிறது! இது சேமிப்பு, ஆயுள்காப்பீடு, பணபரிமாற்றம் மற்றும் கடன் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்” என்று அமெரிக்க பொருளாதார நிபுணர் RP.கிறிஸ்டன், துறைசார்ந்த விளக்கம் தருகிறார்!
முதன்மை நுண்கடன் நிறுவனங்கள்
நுண்கடன் முதலீட்டு நிகழ்முறை
மண்டலவாரியாக நுண்கடன் நிறுவனங்கள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
“பொருள்கள் மற்றும் சேவைத்துறையின் சங்கிலித்தொடர் சந்தையில், பொதுமக்களை இணைக்காவிட்டால் நவீன பொருளாதார முறையே நொறுங்கிவிடும் என்பதிலிருந்துதான் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் என்ற தத்துவம் தொடங்குகிறது!” என்று நுண்கடன் தத்துவத்தின் ஆணிவேரை அடையாளம் காட்டுகிறார் மதுரா மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் KM.தியாகராஜன்!
மேலும், ”கிராமப்புறங்களில் சொத்து ஏதுமற்ற ஏழைகள் (UNDOCUMENTED COMMUNITIES) 40% பேர் உள்ளனர். இவர்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் இவர்களை நவீன பொருளாதார அமைப்பு முறைக்குள் கொண்டு வருவதுதான் முதல்படி! அடுத்து, பயனாளிகளின் (கடனாளிகள்!) அடையாள ஆவணங்களை (ரேசன், வாக்காளர், ஆதார் அட்டைகள்) சேகரிப்பது மூலம், கடன்பெறுவதை ஒழுங்குபடுத்தி, அதனை கண்காணிக்கும் அமைப்புகளையும் உருவாக்குவது இதன் 2-வது படி!” என்று விவரிக்கிறார் KM.தியாகராஜன்!
அமெரிக்க நிபுணரின் வரையறையும், அதற்கு விரிவுரையாக மதுரையின் KM.தியாகராஜன் கூறும் விளக்கமும் ஒரே அலைவரிசையில் இருக்கிறது! அதாவது, இல்லாதவன் கையில் கடனாக காசைக் கொடுத்து கடையில் விற்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் தயாரிப்புப் பொருள்களை வாங்க வைப்பதுதான் இக்கடன் திட்டத்தின் நோக்கம் என்கின்றனர்! ஆனால், இந்தியாவில் நுண்கடன் நிறுவனங்களின் செயல்பாடுகளையும், அவற்றின் விரிவான பின்னணியும் நெருங்கிப் பரிசீலித்தால் இவர்கள் கூறுவதையும் தாண்டி, வேறுசில நோக்கங்களும் இருப்பதைக் காணலாம்!
வறுமை ஒழிப்பின் பின்னணியில் அமெரிக்க கவுச்சி!
நாட்டில் செயல்படும் 500 நுண்கடன் நிறுவனங்களில் முதல் 10 பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் மற்றும் இயக்குனர்களில் பெரும் பான்மையினர் இந்தியாவில் பிறந்திருந்தாலும், அமெரிக்காவின் “ஞானப்பால்” குடித்து வளர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்! மதுரா நிறுவனத்தின் தலைவர், தாரா தியாகராஜன், கிராம விடியலின் வினோத் கோஸ்லா, பி.எஸ்.எஸ் –நிறுவனர் டாக்டர். ரமேஷ் பெல்லம்கொண்டா, உஜ்ஜிவன் நிறுவனர் சமித்கோஷ், பந்தன் நிறுவனர் சந்திரசேகர்கோஷ் ஆகிய அனைவரும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் எம்.பி.ஏ.பட்டம் பெற்றவர்கள்! இவர்கள்தவிர, இந்தியாவின் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஆகியவற்றின் முன்னாள் மாணவர்கள், அரசு மற்றும் நபார்டுவங்கியின் ஓய்வுபெற்ற உயரதிகாரிகள்தான் இந் நிறுவனங்களின் இயக்குனர்களாக உள்ளனர்!
கிராம விடியல் முதலீட்டாளர் கோஸ்லா
இலா பட்
பந்தன் பேங்க்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, வெறும் 100 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கும் இந்த நுண்கடன் நிறுவனங்கள், பல்லாயிரம் கோடிகளை கடனாக வழங்குவதற்குத் தேவையான பெருமளவு நிதியை வெளிநாடுகளின் நிதி முதலீட்டு வங்கிகள், மற்றும் நிறுவனங்கள் மூலமாகவே திரட்டுகின்றன! உதாரணமாக,
1) சென்னையில் செயல்பட்டுவரும் ஆசீர்வாத் மைக்ரோபைனான்ஸ் நிறுவனத்தில், (மணப்புரம் கோல்டு பைனான்சுக்கு சொந்தமானது) அமெரிக்காவின் ராக்பெல்லர் அறக்கட்டளையின் உதவியுடன் இயங்கும் லோக்-கேப்பிட்டல் என்ற நுண்கடன் முதலீட்டு நிறுவனம் முதல்கட்டமாக 7 கோடியை முதலீடு செய்துள்ளது!
2) உஜ்ஜிவன் நிறுவனத்தில், மொரீசியஸ் யுனைடட் கார்ப்பரேசன், நெதர்லாந்து டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் ஆகியவையும் உலகவங்கியின் முன்னாள் தலைவர் வொல்ஃபென்ஷனும் முதலீடு செய்துள்ளார்!
3) திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிராம விடியல் நிறுவனம், உலக அளவில் லாபகரமாக இயங்கிவரும் சிறு-நடுத்தர நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதைத் தொழிலாகக் கொண்ட மைக்ரோவெஸ்ட் என்ற அமெரிக்க நிதி முதலீட்டு நிறுவனத்திடமிருந்து நிதி பெறுகிறது! (கிராம விடியல் நிறுவனத்தை தற்போது ஐ.டி.எஃப்.சி என்ற தனியார் நிதி நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது)
4) நாட்டின் மிகப்பெரிய நுண்கடன் நிறுவனமான பந்தன் நிறுவனம், கலடியம் இன்வெஸ்ட்மென்ட் என்ற சிங்கப்பூர் நிதி நிறுவனம், மற்றும் சர்வதேச நிதிக் கழகம் என்ற உலக வங்கியின் துணை நிறுவனத்திடமிருந்தும் முதலீடு திரட்டுகிறது!
5) தென்னிந்தியாவின் முன்னணி நிறுவனமான ஸ்மைல் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில், DEVELOPING WORLD MARKETES-DWM என்ற அமெரிக்க நிறுவனம் முதல் கட்டமாக 50 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது!
இவ்வாறு, ஏழைகளை வறுமையிலிருந்து மீட்கப் போவதாக சொல்லும் நுண்கடன் நிறுவனங்களில், உலக கந்துவட்டிக் கம்பெனிகளான சர்வதேச நிதி முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வது ஏன்?
ஏழ்மையை அல்ல…ஏழைகளை ஒழிப்பதே நோக்கம்!
இந்தியாவில் நுண்கடன் பரவல்
மனித சமூகத்தின் ஒவ்வொரு அசைவையும் தனது மூலதனத்தை பெருக்கிக் கொள்வதற்கான சந்தையாக மாற்றிக்கொள்ளத் துடிக்கும் பன்னாட்டு முதலாளிகள், பின்தங்கிய நாடுகளின் வறுமையையும் ஒரு சந்தையாகவே பார்க்கிறது!
“இந்தியாவில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் தேவை” (THE DEMAND FOR MFI IN INDIA) என்ற உலகவங்கியின் 1994, 1998-ம் ஆண்டின் ஆய்வறிக்கை, இந்தியாவில் உள்ள “ஏழைகளின் சந்தையை” எவ்வளவு துல்லியமாக கணக்கிடுகிறது பாருங்கள்: “இந்தியாவில் 7.5 கோடி குடும்பங்களில் உள்ள 40 கோடிபேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்! இதில் 6 கோடிபேர் கிராமங்களிலும்,1.5 கோடிபேர் நகர்ப்புறங்களிலும் வசிக்கின்றனர். இவர்களின் ஒருவருட கடன்தேவை 12 பில்லியன்டாலர்! (இன்றைய மதிப்பில் 79,200 கோடி ரூபாய்)” இதன் தற்போதைய மதிப்பீடு 2 லட்சம் கோடிரூபாய் என்கிறது நபார்டு வங்கி!
இவ்வளவு பெரிய சந்தையை இழக்க விரும்பாததாலும், சிறு முதலீடு என்றாலும் உத்தரவாதமான கடன் வசூலும், லாபமும் இதில் இருப்பதாலும்தான் சர்வதேச நிதி நிறுவனங்கள் இந்திய நுண்கடன் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றன! இதனை ஊக்கப்படுத்தும் வகையில்தான் மத்திய அரசின் கொள்கை முடிவுகளும் உள்ளன!
நவீன கந்துவட்டி நிறுவனங்கள்!
அரசின் பொதுத்துறை வங்கிகளின் சராசரி வட்டி விகிதம் 9% தான்! சுயஉதவிக் குழுக்களுக்கு இவ்வங்கிகள் 7 முதல் 9.65% வட்டிக்குத்தான் கொடுக்கின்றன! செய்முறைக்கட்டணம், அபராதம், கட்டாய இன்சூரன்ஸ் ஏதும் அரசு வங்கிகளில் பிடிப்பதில்லை. ஆனால் நுண்கடன் நிறுவனங்களை மட்டும் 26% வரை வட்டி வசூலித்துக்கொள்ள இந்திய ரிசர்வ்வங்கி அனுமதியளித்துள்ளது! ஆனால், நடைமுறையில் பல நிறுவனங்கள் 40% அளவுக்கு வட்டி வாங்குகின்றன!
உஜ்ஜீவன் நிறுவனம், 15,000 ரூபாய் கடன்பெறும் தனது பயனாளியிடம் ஒருவருட வட்டியாக 2117 ரூபாய் (23%) வசூலிக்கிறது. இதில் 70% வட்டியை முதல் 5 மாத தவணையிலேயே பிடித்துக் கொள்கிறது! இதுதவிர, ஒவ்வொருவரிடமும், செய்முறைக் கட்டணம் 171 ரூபாயும், கட்டாய இன்சூரன்சாக 208 ரூபாயும் பிடித்துக் கொள்கிறது! இதன்படி நாடுமுழுவதும் இந்நிறுவனத்திற்கு 22 லட்சம் பயனாளிகள் இருப்பதைக் கணக்கிட்டால் தோராயமாக, வட்டியாக மட்டும் ஆண்டுக்கு 9300 கோடி ரூபாய் வருமானம் வருகிறது! செய்முறை கட்டணமாக மட்டும் கிடைப்பது 37 கோடி ரூபாய்! இந்தியாவில் செயல்படும் முதல் 10 பெரிய நிறுவனங்கள் சுமார் 4.50 கோடி பயனாளிகளைக் கொண்டுள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. அப்படியானால் நுண்கடன் நிறுவனங்களின் ஒருவருட லாபத்தை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! மேலும், சிறுகடன் மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற ரிசர்வ்வங்கியின் விதிமுறைக்கு மாறாக, செல்ஃபோன், லேப்டாப், மளிகை சாமான்கள் விற்பனையிலும் ஈடுபட்டு கொள்ளையடிக்கின்றன இந்நிறுவனங்கள்!
“கந்துவட்டிக்காரனிடம் கூட இன்னைக்கு இல்லைனா நாளைக்கு தர்றேன்னு சொல்லாம். ஆனால் இவர்களிடம் அது நடக்காது. ஒரு ரூபாய் பாக்கின்னாலும் வாங்காமல் வீட்டைவிட்டு நகர மாட்டன். அந்த அவமானத்திற்குப் பயந்தே நகையை அடகுவைத்து ஒருமுறை தவணை கட்டினேன்” என்கிறார் கூலிவேலை செய்யும் ஈஸ்வரி! ஈஸ்வரிகளின் தன்மானமும், வாங்கிய கடனை திருப்பிக்கட்ட வேண்டும் என்ற நேர்மை யும்தான் நுண்கடன் நிறுவனங்கள் மற்றும், சர்வதேச நிதி முதலீட்டாளர்களின் வளர்ச்சிக்கு உரமாக இருக்கிறது!
தமிழக அரசின் கந்துவட்டித் தடைச்சட்டத்தால் சிறிதுகாலம் அடங்கியிருந்த கந்துவட்டிக் கும்பல், தற்போது நுண்கடன் நிறுவனங்களின் பாணியில் தனியாக பெண்கள்குழு அமைத்து தங்கள் ‘பைனான்ஸ்’தொழிலை சட்டபூர்வமாக நடத்திவருகிறார்கள்!
ஜார்கண்ட், சத்தீஸ்கரில் நுண்கடன்
கந்துவட்டி கார்ப்பரேட்டுகள்!
2013-ம் ஆண்டில் வங்கித்துறையைத் தனியாருக்கு திறந்துவிடுவது என கொள்கை முடிவை அறிவித்தது. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட. எஸ்.கே.எஸ், பந்தன், உஜ்ஜிவன் போன்ற 10 முக்கிய நுண்கடன் நிறுவனங்கள், லாப நோக்கமற்ற நிறுவனங்கள் (NON-PROFIT) என்பதிலிருந்து விலகி, லாபநோக்கிலான (FOR PROFIT) சிறுநிதி வங்கிகள் (SMALL FINANCE BANKS) என்ற பெயரில் ரிசர்வ்வங்கியின் அனுமதியுடன் தனியார் வங்கிகளாக மாறிவிட்டன! இந்திய வங்கித்துறையின் இம்மாற்றத்திற்கு பிறகுதான் இதுநாள் வரை, பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து கொள்ளையடித்த சர்வதேச நிதிநிறுவன முதலாளிகள், நுண்கடன் நிறுவனங்களிலும் முதலீடு செய்வதை தீவிரப்படுத்தி யுள்ளனர். இதன்மூலம் அதிக முதலீடுகளையும், செயல்படும் பரப்பையும் அதிகரித்துக் கொண்டு பெரும்நிதி நிறுவனங்களாக நுண்கடன் நிறுவனங்கள் உருமாறி வருகின்றன!
உதாரணமாக, ஆசியாவின் இரண்டாவது பெரிய நுண்கடன் நிறுவனமான எஸ்.கே.எஸ் என்ற இந்திய நுண்கடன் நிறுவனத்தில், சர்வதேச முதலீட்டு நிறுவனமான குவாண்டம் குரூப் ஆஃப் ஃபண்ட் 26% பங்குமுதலீடு செய்துள்ளது! மேலும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி 28.12 கோடியும், ஜேபி.மோர்கன், மோர்கன் ஸ்டான்லி, ரிலையன்ஸ், பிர்லாசன் போன்ற பங்குசந்தை சூதாட்டக் கம்பெனிகள் மட்டும் இதில் 300 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன! இதனால் இந்த நிறுவனம் ஒருலட்சம் கிராமங்களில், 46 லட்சம் பயனாளிகளுக்கு சுமார் 11,000 கோடிக்குமேல் கடன் வழங்கும் பெரும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது! (காண்க: times of India business/Jul 29, 2010 மற்றும் http://www.vccircle.com/news/micro-finance/2010/03/26)
அன்னிய முதலீட்டைப் பெற்ற நுண்கடன் நிறுவனங்கள், கிராமங்களில் ஓரளவு பணப்புழக்கம் அதிகமுள்ள, பணப்பயிர் விவசாயம் நடக்கும் பகுதிகளை மட்டும் தக்கவைத்துக் கொண்டு, புதிதாக தங்களின் கடன் வலையை நகர்புறங்களில் உள்ள பெட்டிக்கடை, டீக்கடை, போன்ற சிறுவணிகர்களை குறிவைத்து வீசத்தொடங்கி விட்டனர்! இவ்வாறு கிராமப்புற ஏழைகளின் வறுமையை ஒழிப்பதற்காக மத்திய-மாநில அரசுகளால் கொண்டுவரப்பட்ட நுண்கடன் திட்டங்கள், இறுதியில் வெறும் வட்டி-லேவாதேவி நிறுவனங்களாக சீரழிந்துவிட்டன!
இக்கொடுமையைக் கண்ட நுண்கடன் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பங்களாதேஷின் முகம்மது யூனுஸ் என்பவர், “நுண்கடன் என்பது உள்ளூர் வட்டித்தொழில் செய்பவர்களை ஒழிப்பதற்குத் தானே தவிர, வட்டித்தொழில் செய்பவராக மாறுவதற்கல்ல” என்று நொந்துகொள்ளும் அளவில்தான் நம் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது!
கொள்ளையர்களின் கூட்டாளிகள்!
“ஸ்மைல்”
நுண்கடன் திட்டம் என்பதே, உலகவங்கியும், சர்வதேச நிதிமுதலீட்டு நிறுவனங்களும் கூட்டுசேர்ந்து நடத்தும் ஒரு கொள்ளைத் திட்டம்! இதற்கு இந்தியாவின் புரோக்கராக செயல்படுவது சிட்பி- என்ற சிறுதொழில் வளர்ச்சி வங்கியும், நபார்டு வங்கியும்தான்! இதற்கு சட்டரீதியான அங்கீகாரம் தருவதுதான் மத்திய அரசின் வேலை!
இந்தியாவில் நுண்கடன் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக “நீண்டகால மற்றும் பொறுப்பான நுண்கடன் விரிவாக்கத் திட்டம்”-ன் கீழ் உலகவங்கி 2686 கோடி ரூபாயை கடனாக வழங்கியது! இதில் 23% அளவுக்கு சிட்பி வங்கி முதலீடு செய்யும்! இரண்டு தொகையையும் சேர்த்து நுண்கடன் நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச வட்டியில் கொடுத்து, முறையாக செயல்படுத்துவது சிட்பி வங்கியின் பொறுப்பு! உலகவங்கி கொடுக்கும் கடனுக்கு 0.75% வட்டியுடன் 35 வருட காலத்தில் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்கிறது இதற்கான ஒப்பந்தம்! ஆசிய வளர்ச்சி வங்கி, ஜெர்மன் வளர்ச்சி வங்கி ஆகியவையும் இதுபோல, சிட்பி-யுடன் பல்வேறு நிதி ஒப்பந்தங்களை செய்துள்ளன!
தவிர,“தேசிய கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு இயக்கம்”(NATIONAL RURAL LIVLIHOOD MISSION) என்ற 2011-ல் கொண்டுவரப்பட்ட திட்டத்திற்கு மத்தியஅரசு 33,000 கோடியை ஒதுக்கியது! உலகின் மிகப்பெரிய வறுமை ஒழிப்புத்திட்டம் என்று வர்ணிக்கப்படும் இதற்கு, உலகவங்கி 6,600 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளது! ஏனென்றால் கிராமப்புற ஏழைப்பெண்களை சுயவேலை வாய்ப்புள்ளவர்களாக உயர்த்துவதுதான் இத்திட்டத்தின் நோக்கம் என்று மத்திய அரசு கூறுகிறது! அதாவது நுண்கடன் நிறுவனங்கள் செய்த அதே வேலையை, தன்னார்வக் குழுக்கள் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்தப் போகிறார்கள். அதனால்தான் உலகவங்கிக்கு இதில் ஆர்வம் பொங்கி வழிகிறது! (2015 முதல் இத்திட்டத்தை “தீன்தயாள் அந்யோதயா யோஜனா” என பெயர் மாற்றம் செய்துள்ளது தேசபக்த மோடிஅரசு!!)
உலகில் நுண்கடன் நிறுவனங்களின் சராசரி கடன்திருப்புதல் திறன் அல்லது கடன்வசூல் திறன் என்பது 95 சதவீதமாக உள்ளது! உலகளவில் சுமார் 10,000 நிறுவனங்கள் செயல்படுகின்றன! இவற்றின் லாபவிகிதம் ஆப்பிரிக்க நாடுகளில் 30.90 சதவீதம்! ஆசிய நாடுகளில் 30.20 சதவீதமாக உள்ளது! இதுதவிர, செய்முறைக் கட்டணம், சேவைவரி, தவணை தவறிய கடனுக்கு அபராதம், இடைக்காலக் கடன் என பலவழிகளில் 30 முதல் 60 சதவீதம்வரை வட்டி வசூலிக்கின்றன! நுண்கடன் நிறுவனங்களின் இத்தகைய அசுர வளர்ச்சியால் ஈர்க்கப்பட்டுத்தான் சர்வதேச நிறுவனங்கள் இதில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன! இந்த உண்மையை மறைப்பதற்காக, பாசிச ஜெயலலிதாவை ‘புரட்சித்தலைவி!’ என்பதைப்போல, ஏழைகளைச் சுரண்டும் கொள்ளைத் திட்டங்களுக்கு “வறுமை ஒழிப்பு” “பெண்களின் சுயமுன்னேற்றம்” என்று பெயரிட்டு மக்களை ஏய்க்கிறார்கள்!
வலைப்பின்னல் கூட்டணி!
மிக எளிதாக தோன்றும் நுண்கடன் நிறுவனங்களின் செயல்பாடுகள் கடந்த 30 ஆண்டுகளாக உலகளவில் வெகு கவனமாக திட்டமிட்டு கட்டியமைக்கப்பட்டவை! நுண்கடன் நிறுவனத்தை தொடங்குவது எப்படி என்பதில் தொடங்கி, மக்களை அணுகும் முறை, பண நிர்வாகம், தவணை வசூலிக்கும் முறைகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவங்களுடன் உறவை வளர்த்துக் கொள்ளும் நுட்பங்கள், வங்கி நிர்வாக முறைகள் ஆகியவை பற்றி உலகத்தரத்தில் பயிற்சியளிக்கும் சிறப்பு பயிற்சி மையங்கள் (ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி.தேர்வுக்கான பயிற்சி மையங்கள் போல) மேற்கத்திய நாடுகளில் ஏராளமாக உள்ளன!
பில்கேட்ஸ், ராக்பெல்லர், மூடி, வால்மார்ட், மெட்லைஃப், இன்டெர் அமெரிக்கன் வளர்ச்சிவங்கி, ஐரோப்பிய மறுகட்டமைப்பு வளர்ச்சி வங்கி ஆகிய கார்ப்பரேட்டுகளின் நன்கொடைகளில்தான் இம்மையங்கள் இயங்குகிறது! இதில், நுண்கடன் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்களை பிடித்துதரும் புரோக்கர் நிறுவனங்களும் தனியாக உள்ளன! இவற்றில் அக்சியன் (ACCION) மற்றும் பெண்களுக்கான உலகவங்கி (WWB) ஆகியவை முக்கியமானவை! இவை பல்வேறு வழிகளில் இந்திய ஆளும்வர்க்கத்துடனும் அரசியல், மற்றும் அதிகார வர்க்கத்துடனும் மிக நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளன!
உதாரணமாக, பெண்களுக்கான உலக வங்கியை (WWB) உருவாக்கியவர்களில் ஒருவர் எலாஃபட் (ELA BHATT) என்ற இந்திய குஜராத்திப் பெண்! இவர் இந்திய திட்டக்கமிசனின் முதல் பெண் உறுப்பினர் (1989)! பத்மஸ்ரீ, பத்மவிபூசன், இந்திராகாந்தி அமைதி விருது, ராமன் மக்ஸசே ஆகிய அனைத்து விருதுகளையும் பெற்றவர்! மேலும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்!! மத்திய அரசின் பல்வேறு பெண்கள் அமைப்புகளில் இன்றும் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்! இந்தியாவில் இயங்கும் தன்னார்வக் குழுக்களின் நம்பிக்கை நாயகி என்பதால் ஹிலாரி கிளிண்டனின் ‘கதாநாயகி’ ஆனவர்!
ACCION- என்ற அமெரிக்க நிறுவனம், தனது நிர்வாகப் பயிற்சி மையங்களை இந்தியாவில் 9 மாநிலங்களில் நிறுவி தமிழ்,மலையாளம் உட்பட பிராந்திய மொழிகளில் பயிற்சியளித்து வருகிறது! தன்னிடம் பயிற்சி பெற்ற நுண்கடன் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்களையும் ஏற்பாடு செய்து தருவதுதான் இதன் சிறப்பம்சம்!
குழப்பமாகத் தெரியும் நுண்கடன் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒரு சித்திரமாக வரையத் தொடங்கினால், கிராமத்திற்கு கடன்வசூலிக்க வரும் நிறுவன ஊழியரில் ஆரம்பித்து, நிறுவனத் தலைவர்- அமெரிக்க படிப்பு- வங்கி நிர்வாகப் பயிற்சி- சர்வதேச நிதி நிறுவனங்கள்- உலகவங்கி என்று படிப்படியாக மேலே சென்று, பிறகு மத்திய அரசு- ரிசர்வ் வங்கி- சிட்பி, நபார்டு வங்கிகள்- 26% வட்டி- நுண்கடன் நிறுவனக் கிளைகள் என்று படிப்படியாக கீழிறங்கி நம் கிராமத்திற்கே வந்து நிற்கிறது! இதில் ஏழைகளுக்கு இருக்கும் ஒரே வேலை கடன் வாங்குவது, வட்டிகட்டுவது மட்டும்தான்!
தோற்றுப்போன அரசமைப்பை தூக்கி எறிவோம்!
புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக, நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமாக இருந்த விவசாயத் தொழிலே முற்றாக சீரழிக்கப்பட்டு விட்டது! இதனால் வாழ்விழந்த சிறு-குறு விவசாயிகளும், விவசாயக் கூலித் தொழிலாளிகளும், தங்களின் சொற்ப வாழ்வை தக்கவைத்துக் கொள்வதற்காக திருப்பூர், கோவை, கேரளா, ஆந்திரா, மும்பை என்று ஓடிச்சென்று, கொத்தடிமைகளாக 12-14 மணிநேரம் உழைத்துச் சாகிறார்கள். அங்கும் அவர்களை விடாமல் வறுமை துரத்துகிறது! அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம், எட்டாக் கனியாகிவிட்ட கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள், ஆகியவற்றை இரவுபகலாக குடும்பத்தோடு உழைத்து சம்பாதித்த பணத்தால் சமாளிக்க முடியாத அவல நிலையில் தான், கையேந்தி கடன்வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்!
உழைக்கும் மக்களின் இந்த அவலம்தான் நேற்றுவரை வாரவட்டி, மீட்டர்வட்டி கொள்ளையர்களுக்கு சாதகமாக இருந்தது! இதையே வர்த்தகரீதியில் ஒழுங்குபடுத்தி, கார்ப்பரேட்டு பாணியில், சட்டபூர்வமாகக் கொள்ளையடிக்க உருவானவைதான் இந்த நுண்கடன் நிறுவனங்கள்!
நுண்கடன் நிறுவனங்களில் முதலீடு செய்யும் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் லாபவெறிக்காகத்தான் நம் உணவுப்பொருள் உற்பத்தியை பாழடித்து, ஏற்றுமதிக்கான விவசாயம் ஊக்குவிக்கப்பட்டது! விதை, உரம், பூச்சிமருந்துகளுக்கான மானியங்கள் ரத்து செய்யப்பட்டது!
இதனால்தான் நிலத்தை இழந்த சிறு விவசாயிகளும், வேலையிழந்த கூலிவிவசாயிகளும் கிராமத்தைவிட்டு விரட்டியடிக்கப்பட்டனர்!
இன்று வறுமை ஒழிப்புத்திட்டத்திற்கு நிதிஉதவி செய்யும் உலகவங்கிதான், பேனா, பென்சில், தீப்பெட்டி, மற்றும் கைத்தறி, நெசவு, கைவினைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுவந்த சிறுதொழில்கள்களை நாசமாக்கியது! அன்னியப்பொருள்களை தாராள இறக்குமதி செய்யுமாறு மத்திய அரசை மிரட்டியது!
“விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்! கிராமப்புற வறுமையை விரட்டுவேன்!” என்று முழங்கும் மோடி அரசுதான், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை ஈடுபட அனுமதி வழங்கியது! கிராம வங்கிகளையும், கூட்டுறவு, பொதுத்துறை வங்கிகளையும் தனியாருக்கு தாரைவார்க்க சட்டம் இயற்றுகிறது!
இப்படி பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை எல்லாம் ஒழித்துக்கட்டிய மக்கள் விரோத கிரிமினல்களே இவர்கள்தான்!
வாழ்விழந்து, வறுமையின் பிடியில்சிக்கி விழிபிதுங்கி நிற்கும் ஏழைகளுக்கு, 5,000, 10,000-ஐ வீசியெறிந்து “நீயே உன் வறுமையை ஒழித்துக்கொள்!” என்று இழிவுபடுத்துகிறார்கள்!
நைரோபி பல்கலை.யின் (கென்யா) பொருளாதாரப் பேராசிரியர் ஜாய் கீரு
80-களில் கொண்டுவந்த ‘ஒருங்கிணைந்த ஊராக வளர்ச்சித் திட்டத்தில்’ தொடங்கி, இன்றைய ‘தீன்தயாள் அந்யோதயா யோஜனா திட்டம்’ மற்றும் தமிழகஅரசு கொண்டுவந்த, ‘புது வாழ்வு’ ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டங்கள் உட்பட எண்ணற்ற வறுமையொழிப்பு திட்டங்களும் அதிகாரிகளையும், கிரிமினல் அரசியல்வாதிகளையும் தான் வாழவைத்தது.! ஏழைகளை வறுமையிலிருந்து மீட்பதற்குப் பதிலாக, மேலும் கடன்காரனாக்கி, மீளவேமுடியாத வறுமையின் கோரப்பிடியில் மாட்டிவிட்டுள்ளன!
நுண்கடன் நிறுவனங்கள் என்பது, தனது நாட்டு மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து, சுதந்திரமாக வாழவைக்க முடியாத இந்த அரசுக் கட்டமைப்பின் அவமான சின்னங்கள்! இனிமேலும் நாட்டையும், மக்களையும் ஆள அருகதையற்ற அரசின் அடையாளங்கள்!
வறுமையின் கொடுமையில் நிற்கும் அப்பாவிகளின் ஒரே சொத்தான உழைப்பையும், வட்டியின் பெயரால் சுரண்டித்தின்று உயிர்வாழும் அளவுக்கு இக்கட்டமைப்பு தோற்றுப் போய்விட்டதன் குறியீடுகள்!
இக்கட்டுரையின் தொடக்கத்தில் நடந்த டீக்கடைப் பேச்சுவார்த்தையின் முடிவில் ஒருவர், “திடீர்னு எல்லாப்பயலும் ஒன்னாவந்து எங்க கடனையெல்லாம் இப்பவே திருப்பிக் கொடுங்கடான்னு கேட்டா என்னா செய்யுறது?” என்று கிண்டலாகக் கேட்டார். அதற்கு ஒரு பெரியவர் “ஒன்னு கடன் வாங்குனவய்ங்க எல்லாம் மருந்தக் குடிச்சு சாகணும். அல்லது, நாம எல்லாம் ஒண்ணா சேர்ந்து அவய்ங்களை சுட்டுக் கொன்னுபுடனும். இதான் ஒரேவழி!” என்று பதில் கூறினார்.
இந்த அரசுக் கட்டமைப்பின் மீது மக்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதற்கு, வேறு என்ன ஆதாரம் வேண்டும் உங்களுக்கு?
“நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகம் தழுவிய அளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து மதுரையில் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமையுரையில் பேசியதாவது
தோழர் குருசாமி
“பல ஆண்டுகளாகவே கர்நாடகாவிடம் கேட்டு கேட்டுதான் தமிழகம் தண்ணீர் பெற்று வந்துள்ளது. ஆனால் கன்னட இனவெறியர்கள் தமிழகம் அவர்களிடம் மிரட்டி பெறுவதாகவே இனவெறியை தூண்டுகிறார்கள்.
ஆனால் இங்கு நிலைமை சென்ற 1 மாத காலமாக அ.தி.மு.க.வை தவிர ஏறக்குறையாக அனைத்து கட்சிகளும் போராடி வரும் சூழ்நிலையில் அங்கு இனவெறியை திட்டமிட்டு தூண்டுகின்ற பா.ஜ.க.வும் அனைவரிடமும் கைகோர்த்து கொண்டு இங்கு போராடுவதை போல் காட்டிக்கொள்கிறது. ஆகையால் இங்கு இந்த போராட்டத்தை எப்படி எடுத்துச் செல்வது, இதில் யார் நண்பர், யார் எதிரி என்று எப்படி இனம் காணுவது? எப்படி பிரித்து அறிவது?
தாலி கட்டியதற்காகவே ஒரு பெண் தன் கணவர் எவ்வளவு சித்ரவதை செய்தாலும் அடங்கிபோக வேண்டும் என்று கூறும் ஆணாதிக்க சிந்தனை போல் தேசிய ஒருமைப்பாடு தேசிய ஒருமைப்பாடு என்று சொல்லும் மத்திய அரசு போடும் கூப்பாட்டை எப்படி பார்ப்பது”
தோழர் கிட்டுராஜா, தந்தை பெரியார் திராவிடக் கழகம்
தோழர் கிட்டுராஜா
“இந்த இந்திய அரசு ஒரு ஆரிய பார்ப்பன அரசு, வெள்ளைக்காரன் காலத்தில் 450 டி.எம்.சி தண்ணீர் பெற்று வந்துள்ளதாக தெரிகிறது. சுதந்திரத்திற்கு பின்பு 1972-ல் இருந்து 1992 வரை போராடி உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 205 டி.எம்.சி கிடைக்க உத்தரவிட்டது. மறுபடியும் 2007ல் இறுதி தீர்ப்பாக 192 டி.எம்.சி நீர் தமிழகத்திற்கு தரவேண்டும் என உத்தரவிட்டது.
தமிழகம் எப்போதுமே ஆரிய பார்ப்பனர்களுக்கு எதிராகவே வந்துள்ளது. 47-க்குப் பின் மொழிவாரி மாநிலம் பிரிக்கும் போதுகூட தமிழகத்திடம் ஓரவஞ்சனையோடு தான் நடந்துள்ளார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காடுகளின் பரப்பளவோடு தமிழகத்தின் காடுகள் குறைவாகவே பகிரப்பட்டன. ஆறுகளின் பரப்பளவும் அவ்வாறே சூழ்ச்சியோடு பகிரப்பட்டது. எல்லா காலங்களிலும் மத்திய அரசு மற்ற மாநிலங்களுக்கு ஒரு நீதி தமிழகத்திற்கு ஒரு நீதி என்று தான் தன் நிலை எடுத்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் நாம் சாதி, மதம் கட்சிகள் கடந்து ஒரு அணியில் நின்று போராட வேண்டும். இந்த முயற்சியை யார் செய்தாலும் அதில் தந்தை பெரியார் திராவிட கழகம் துணைநிற்கும். அப்படியொரு வாய்ப்பை வழங்கிய மக்கள் அதிகாரம் அமைப்புக்கு என்றைக்கும் நாங்கள் துணை நிற்போம்” என்று கூறி முடித்தார்.
தோழர் கனியமுதன், வி.சி.க மாநில துணை பொது செயலாளர்
தோழர் கனியமுதன், வி.சி.க மாநில துணை பொது செயலாளர்.
“நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும் என்ற முழக்கத்தை மக்கள் அதிகாரம் முன்வைத்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களிடம் இருந்ததற்கு பல்வேறு ஆதாரங்கள் நமக்குக் கிடைக்கின்றனஅப்படி நீர்நிலைகளை மக்கள் பராமரித்தபோது அவை சீராக இருந்து வந்துள்ளது. ஆனால் இன்று ஆற்றுமணல் கொள்ளை காடுகளை அழித்தல் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என அனைத்தையும் அரசோ(அ) அரசின் துணையோடு பெருமுதலாளிகள் கொள்ளையடிக்கின்றனர். இதனால் மேலும் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் வற்றி வருகிறது. சில வருடங்களில் தண்ணீர் மிகபெரிய அச்சுறுத்தலாக மாறபோகிறது. தங்கம் காணாமல் போனது என்று இல்லாமல் 2 குடம் தண்ணீர் காணவில்லை என்றுதான் காவல் நிலையத்திற்கு புகார் வரப்போகிறது. இந்நிலையை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வை மக்கள் அதிகாரம் இன்று துவக்கி வைத்துள்ளது. அதில் எந்தச் சூழலிலும் வி.சி.க மக்கள் அதிகாரத்தோடு துணை நிற்கும்.”
தோழர் பேரறிவாளன், தமிழ் புலிகள் பொது செயலாளர்
தோழர் பேரறிவாளன்
“நீர்நிலைகள் மீதான அதிகாரம் மட்டும் இல்லை அனைத்து விதமான அதிகாரங்களும் மக்களுக்கு புறக்கணிக்கப்படுகிறது. நம் தமிழக முதல்வர் அப்பல்லோவில் இன்று உள்ளதால் அதன் கட்சிக்காரர்கள் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் மருத்துவமனையின் முன்பு பூஜை நடத்திக் கொண்டுள்ளனர். வெள்ளைக்காரன் காலத்தில் பொருளாதார சமத்துவத்திற்காக கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் தாழ்த்தப்பட்ட மக்களிடம் இல்லை. அதேபோல் நீர் நிலைகளும் ஆதிக்க சக்திகாரர்களின் கையில்தான் உள்ளது. அவற்றிற்கெதிராக போராடி அனைத்து அதிகாரமும் மக்களுக்கே வழங்க வேண்டும். அதில் நாங்கள் எப்பவுமே மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு துணையாக இருப்போம்”
எஸ்.மகபூப் ஜான்
எஸ்.மகபூப் ஜான், மாநில இணைப்பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி
72-ல் நடந்த காவேரி பிரச்சனையில் நடந்த கலவரத்தின் போது பெங்களூருவில் மாட்டிக்கொண்டு காடுகளில் வழியே தப்பி வந்ததையும் ஒவ்வொரு முறை ஏற்படும் இந்த கலவரத்தில் தமிழ் மக்கள் பெரும் துன்பங்களை தன் நேரடியான அனுபவத்தின் மூலமாக வெளிப்படுத்தினார். “எங்கள் தலைவர் வைகோவாகட்டும், ம.தி.மு.க தொண்டகர்களாகட்டும் மக்கள் பிரச்சனை எங்கும் நாங்கள் முதலில் நிற்போம் என்பது அனைவருக்கும் தெரியும் இந்த மக்கள் அதிகாரம் எடுத்துள்ள இந்த போராட்டத்தில் நாங்கள் என்றைக்கும் துணை நிற்போம்” என்று கூறினார்.
தோழர் விஜயராஜன், CPM மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தோழர் விஜயராஜன்
“தமிழ்நாட்டின் இயற்கை வடிவமைப்பு இயல்பாகவே நீர் வேண்டி மற்ற மாநிலங்களை நம்பி உள்ளோம். தனியார் மயம் தாராள மயம் உருவாக்கிய சிக்கலில் இன்று அனைத்து துறைகளும் வேலை இழந்து மாநிலம் விட்டு மாநிலம் பல்வேறு இளைஞர்கள் வேலை தேடி செல்கின்றனர். தமிழகத்திலும் வேறு மாநிலத்து இளைஞர்களும் வந்து தங்கி வேலை செய்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் இந்த நீர்ப்பரச்சனையில் ஏதோ கர்நாடகம், தமிழகம் தான் பிரச்சனை என்பது போல் இதை எடுத்துக் கொள்ளாமல் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் ஒன்று பட்டு போராடி நாம் சாதிக்க வேண்டும். அதை மக்கள் அதிகாரம் இன்று துவங்கியுள்ளதை நான் பாராட்டுகிறேன். இந்த முயற்சியில் நானும் நான் சார்ந்துள்ள சி.பி.எம் கட்சியும் துணை நிற்போம்.”
தோழர் கணேசன், பு.மா.இ.மு ( மாநில ஒருங்கிணைப்பாளர்)
தோழர் கணேசன்
“வான் பொய்த்தாலும் தான் பொய்யா காவிரி என்பது பொன்மொழி. ஆனால் அந்த காவிரியின் நிலை தணிகைச் செல்வன் என்று கவிஞர் தனது கவிதையில் ஒரு வரியில் குறிப்பிட்டுள்ளார், ‘காவிரியில் பயணம் செய்ய இப்போது ஓடம் தேவையில்லை ஓட்டகம் ஒன்றே போதும்.” தமிழகத்தின் 19 மாவட்ட மக்களுடைய நீராதாரமான குடிநீரான காவிரியின் நிலை ஏறக்குறைய 25 லட்சம் ஏக்கர் விவசாயிகளுடைய காவிரியின் நிலை, ராஜஸ்தான் பாலைவனத்தை போல மோசமான நிலையில் இருப்பதைத்தான் அந்த கவிதை குறிப்பிடுகிறது.
1991-ல் 192 டி.எம்.சி தண்ணீர் காவிரி நடுவர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி அதற்கு முன்னதாக இருந்த இடைக்கால தீர்ப்பில் 205 டி.எம்.சி தண்ணீரென்பதை அதற்கு மேலாக கிடைக்கும் என்று நினைத்திருந்த நிலையில்192 டி.எம்.சி தான் என்று இறுதி தீர்ப்பு வழங்கி காவிரிநதி நீர் நடுவர் மன்றம் கூறி பிரச்சனையை முடித்து வைத்தது.
ஆனால் உண்மை என்ன? அங்கு கர்நாடகம் கொதித்து எழுகிறது. கர்நாடகத்தில் மிகப்பொரிய வன்முறை வெறியாட்டம் தமிழர்களுக்கு எதிராக ஒரு சிறுபான்மையினரான தமிழகத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக (அ) சிறுபான்மையினராக வாழக்கூடிய அந்தப் பகுதியில் கன்னட இன வெறியாளர்கள் மிகப்பெரிய வெறியாட்டத்தை நடத்தினார்கள்.
அதற்குப் பிறகு உச்சநீதிமன்றம் பல முறை தமிழக மேல்முறையீடு கர்நாடக மேல்முறையீடு என்று இப்படியும் அப்படியுமாக சென்று இறுதியாக அதில் சொல்லப்பட்ட காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம், ஒருங்காற்றுக் குழு இரண்டையும் சேர்த்து அமைக்கலாம் என்று பலமுறை வாய்தாவிற்கு சென்று வந்துவிட்டோம். இறுதியாக தமிழகம் எதிர்பார்த்து ஏங்கிக்கிடக்கும் காவிரி நீர் எப்போது வரும்? எப்படி வரும்? தஞ்சாவூருக்கு வருமா? டெல்டாவுடைய கடைமடை பகுதிக்கு வருமா? வந்து சேர வாய்ப்பு இருக்கிறதா? குறுவை சாகுபடி போய்விட்டது. அடுத்து சம்பா காத்திருக்கிறது. விவசாயம் செய்ய முடியுமா விளைச்சல் வீட்டிற்கு வருமா என்று எதிர்பார்த்து விவசாயிகளின் இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்ததாக உச்சநீதிமன்றம் கருதிவிட்டது.
3-ம் தேதியே கர்நாடக அரசு சட்டசபையைக் கூட்டி தீர்மானம் போட்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று தெளிவாக சொல்லி விட்டது. காவிரி நடுவர் நீதிமன்றத்தினுடைய தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் இனி கனவிலும் இல்லை என்று நாங்கள் கூறவில்லை, மத்திய அரசு தெளிவாக அறிவித்து விட்டது. அதில் 108 சட்ட சிக்கல் இருக்கிறது. அதனை சரிகட்டி வருவதற்குள் தமிழகம் பிணக்காடாக மாறிவிடும். மேலும் அதற்கு உத்தரவாதமும் இல்லை. அப்படி அமைப்பதென்றால் 2005-ல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்த போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்கலாம். அதில் என்ன பிரச்சனை?
56 அங்குலம் மார்பளவு கொண்ட தேசிய நாயகன் மோடிக்கு இது சாதாரண பிரச்சனைதானே, காங்கிரஸ்தான் சரியில்லை என்று பிரச்சாரம் செய்யும் பி.ஜே.பி இந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டியதுதானே, ஆனால் அப்படி செய்ய மாட்டோம் என காங்கிரஸைப் போல தடுமாறாமல் தெள்ளத் தெளிவாக மத்திய பி.ஜே.பி அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதிச் சான்று வழங்கியிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், இந்தப் பிரச்சனையை பாராளுமன்றத்தில் வைத்துதான் தீர்க்க முடியும், எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க நீ யார்? என்று கேட்கும் வகையில் தெள்ளத் தொளிவாக உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க முடியாது என்று ஆளும் மத்திய பி.ஜே.பி அரசு கூறிவிட்டது.
இதற்குப் பிறகு அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு சென்று தமிழகத்தின் உரிமையை மீட்டெடுப்போம் என்று கூறுவது பி.ஜே.பி அரசின் நாடகத்தை தெளிவாக புரிய வைப்பதாக உள்ளது. நம்மால் கூட இவ்வளவு அருமையாக மக்களுக்கு பி.ஜே.பி.யை பற்றி விளக்கியிருக்க முடியாது. இந்த 1 ½ மாத கால போராட்டத்தில் பி.ஜே.பி தனிமைப்பட்டு நிற்கிறது. ஆனால் அதன் உள்நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்பதற்குள் நாள் செல்ல வேண்டியிருக்கிறது.
சமீபத்தில் நடந்த உரி தாக்குதலுக்கு பாகிஸ்தானிற்கு பதிலடி கொடுப்பதாக கூறி சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியதாக மோடி அரசு நாடகமாடி வருகிறது. ஆனால் முதலில் மோடி அரசு சிந்து நதி ஒப்பந்தத்தை பரிசீலிக்கத்தான் எத்தனித்தது. இதுவரை பாகிஸ்தானுடன் நடந்த எந்த போரின்போதும் இந்த ஒப்பந்தத்தை இந்தியா பரிசீனை செய்ததில்லை. இந்த சிந்து நதி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதன் மூலம் பாகிஸ்தானிற்கு பதிலடி கொடுத்து விடலாம் என்று மோடி அரசு வேண்டுமானால் நினைக்கலாம். ஆனால், பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை ஆலோசகர். ‘உலகில் ஐ.நா-வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இரண்டு மாநிலங்களுக்கோ அல்லது நாடுகளுக்கோ இடையேயான நீர் ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக ஒரு அரசு மீறுமானால் அது போர்க்குற்றத்திற்கு சமம். எனவே, சிந்து நதி ஒப்பந்தத்தை மீறினால் இந்தியா மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று நினைவுபடுத்திவிட்டார். ஆனால் மத்திய அரசிற்கு அதெல்லாம் தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம், தேசிய ஒருமைப்பாடு என்றால் பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது, நாட்டின் தேசிய வெறியை தூண்டிவிடுவது என்பதுதான். ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான கருத்துக்கள், முழக்கங்கள் யாவும் தேசத்திற்கு எதிரானவை என்பது மட்டுமே அவர்கள் கொள்கை.
அந்த அமைப்பைச் சேர்ந்த ஏதோ ஒரு கடைக்கோடி தொண்டன் இறந்தாலும் (சமீபத்தில், கோயம்புத்தூரில் சசிக்குமார் இறந்தது போல) சங் பரிவார அமைப்புகளின் இந்து இனவெறியை கிளப்புவதுபோல் இந்துத் தலைவரைக் கொன்றுவிட்டார்கள், என்று துக்ளக், சோ போன்றவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு எழுதுகின்றனர். சிந்து நதி ஒப்பந்தத்தை பரிசீலிக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் மீதான நிலைப்பாடுதான் மத்திய அரசிற்கு தமிழகத்தின் மீதும் இருக்கிறது. 1 ½ மாதங்களுகுக்கு முன்பு 65 டி.எம்.சி தண்ணீர் நமக்கு வரவேண்டியிருந்தது. இந்த ஆண்டு நமக்கு சேரவேண்டிய 100 டி.எம்.சி தண்ணீர்ல் 35 டி.எம்.சி தண்ணீர்தான் வந்துள்ளது. மீதி 65 டி.எம்.சி நீரில் 20 டி.எம்.சி நீரையாவது கொடு என்று உச்சநீதி மன்றம் ஒரு உத்தரவு பிறப்பிக்கிறது. அந்தக் கட்டாயத்தின் பேரில் கர்நாடக அரசு 20 டி.எம்.சி தண்ணீரை திறந்து விடுகிறது. அதற்குள் பெங்களுரு, மைசூர் போன்ற நகரங்களில் பா.ஜ.க காலிகள் ஒரு வெறியாட்டத்தை நிகழ்த்தினர்.
கர்நாடக வாழ் தமிழர்கள் பாகிஸ்தானியர்களா? அல்லது முஸ்லீமா? அப்போது அந்த கலகக்காரர்களுடன் ஒரு பெண் கைது செய்யப்படுகிறார். அவர், தனக்கு 100 ரூபாயும் பிரியாணியும் வாங்கித்தருவதாக கூறிதான் பா.ஜ.க.காரர்கள் அழைத்தார்கள் என்று கூறியுள்ளார். மேலும் இந்தத் தாக்குதலை பா.ஜ. அமைப்பினர்தான் நடத்தவேண்டும், என்பதல்ல. நாடு முழுவதும் 200-துணை அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கிறான். கட்டுவிரியன் போட்ட குட்டிகள் போல அனைத்திலும் விஷம் நிரம்பியிருக்கும். தமிழகத்தில் இல.கணேசனும், தமிழிசை சவுந்தர்ராஜனும் தமிழகத்திற்கு ஆதரவாக முழங்கிக் கொண்டிருந்த வேளையில்தான் கர்நாடகத்தில் பா.ஜ.க-ன் வெறியாட்டம் அரங்கேறியது.
ஈழத்தில் போர்க்காலத்தில் ஈழத்தமிழர்கள் தவித்ததுபோல் கர்நாடகத்தில் தமிழர்கள் அகதிகளாக தவிக்கிறார்கள். மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. கர்நாடக பி.ஜே.பி.யின் கர்நாடக மாநில தலைவர் ஜெகதீஷ் ஷட்டர், தமிழகத்திற்கு தண்ணீர் தருவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்ற வாக்குறுதியை மோடி காப்பாற்றிவிட்டார் என்று பேசுகிறார். வெங்கையா நாயுடு, நிர்மலா சீத்தாராமன் மற்றும் சட்ட அமைச்சர் சதாநந்த கௌடா ஆகியோர் காங்கிரசுடன் சேர்ந்து பேசி தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்ற தீர்மானத்தை முன்கூட்டியே நிறைவேற்றிவிட்டார்கள். அதனால்தான் அணையை திறந்தவுடன் அங்கே வன்முறை வெறியாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. ஆனால், என்த ஒரு கர்நாடக மக்களோ, விவசாயிகளோ பேராடவில்லை. பா.ஜ. மற்றும் இதர இனவெறி கும்பல்கள்தான் போராடியிருக்கின்றனர்.
1991-ம் ஆண்டு தண்ணீருக்கு வழியில்லாமல் டெல்டாவைச் சேர்ந்த மக்கள் எலிக்கறியைத் தின்ற போது இந்த பார்ப்பன ஜெயலலிதா அரசு இரங்கவில்லை, இப்போது காவிரி பிரச்சனையில் மட்டும் தனது பார்ப்பன பற்றை வெளிப்படுத்துகிறது. காவேரி, 40 லட்சம் விவசாயிகளின் பிரச்சனை. தமிழக அரசு இதற்காக துரும்பைக்கூட அசைக்கத் தயாராக இல்லை, ஆனால் தமிழன் அங்கே செத்து மடிந்துகொண்டிருக்கிறான். எனவே பி.ஜே.பி.க்கும் அ.தி.மு.க-விற்கும் பெரிய வேறுபாடில்லை, அது ஏ-டீம், இது பி-டீம்.
சுப்பிரமணிய சுவாமி, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தச் சொல்கிறார். இன்னும் 1 வாரத்தில், மோடி ஜெயலலிதாவை சந்திக்க விருப்பதாக சொல்கின்றனர். எனவே சுப்பிரமணியின் பேச்சை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதுதான் சுப்பிரமணிய சாமியின் பேச்சு. அவர்களுடைய அஜெந்தாவிலே, அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளதாக்கைப் போன்றது இந்தியாவின் கர்நாடகா, பெங்களுர் போன்ற பகுதிகள் இந்தப் பகுதியில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு, அவை காங்கிரஸ் ஆட்சியில் இருப்பது ஆபத்தானது என்பதை சொல்லியிருக்கிறார்கள். மேலும் சில முக்கியமான கருத்துக்களைக் கூறி எனது உரையை முடிக்கிறேன்.
மீத்தேன் திட்டம், கெயில்திட்டம், நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் மற்றும் அணுமின் நிலையத் திட்டம் போன்றவற்றை வேண்டாம் என்ற போதிலும் வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது மோடி அரசு. அதற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது ராஜதுரோக வழக்கு பதிவு செய்துள்ளது இந்த அரசு. இருப்பினும் இந்த டெல்டாமாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராடிய வண்ணம் உள்ளனர். எனவே, டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் விடாமல் காவிரி பிரச்சனையை 2 வருடங்களுக்கு நீட்டித்தால் அந்த நிலங்கள் தரிசாகிவிடும். பிறகு இயல்பாகவே விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள் என்ற உள்நோக்கமும் இதில் அடங்கியுள்ளது. அடுத்த முக்கியமான பிரச்சனை, காவிரியில் நீரைத் திறந்தே விட்டாலும் கடைமடைப்பகுதி வரை நீர் செல்லும் அளவிற்கு தமிழகத்தில் காவிரி ஆற்றின் நிலை இல்லை. 30 அடி ஆழத்திற்கும் கீழ் மணற்கொள்ளை நடத்தப்பட்டிருக்கிறது, சில இடங்கள் தூர்வாரப்படாமல் புதர்மண்டிக் கிடக்கிறது. அதையும் மீறி தண்ணீர் வந்தால் விளைவித்த நெல்லுக்கு விலையில்லை. கரும்புக்கு பல கோடி கடன் பாக்கி என்ற நிலையில் தண்ணீர் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? என்ற மனநிலையே விவசாயிகளிடையே நிலவுகிறது.
இவ்வாறு வளர்ச்சி என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் 905 மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடுவதாக உள்ளது. வளர்ச்சி என்றால் இது யாருக்கான வளர்ச்சி? மதுரையில் கூட ஏரிகளை ஆக்கிரமித்துத்தான் நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது. அத்தகைய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியுமா? மதுரை மாநகராட்சி அலுவலகமும் ஒரு ஏரியில்தான் அமைந்துள்ளது. அங்கு சென்று புகாரளிக்க முடியுமா? இப்படி எல்லாவற்றையும் ஆக்கிரமித்து நிற்கும் இந்த அரசு அதிகாரம் தோற்றுப்போய்விட்டது. தோற்றுப்போனவர்களிடம் நீதி கிடைக்காது. நம் நீர் நிலைகளைப் பாதுகாக்க நம் கையில் அதிகாரம் இல்லாமல் அவனிடம் அதைக் கொடுத்துவிட்டு கெஞ்சிக்கொண்டிருக்க முடியுமா? இந்தப் பிரச்சனையில் உள்ள உண்மையைப் புரிந்துகொண்டு மக்கள் அதிகாரம் நடத்தும் அனைத்துப் போராட்டங்களிலும் இணைந்து கொண்டு அனைத்து கட்சிகளும் மக்கள் அதிகாரத்தை நிறுவவதற்கு துணை நிற்போம். குறிப்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி என்றென்றும் களத்தில் நிற்கும் என்று கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.
மாநில செயற்குழு உறுப்பினர் மக்கள் கலை இலக்கிய கழகம் தோழர் கதிரவன்
தோழர் கதிரவன்
“கடந்த 20-ம் தேதி சுப்ரீம் கோட் ஒரு தீர்ப்பை வழங்குகிறது. அதில் அக்டோபர் 4-க்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் மத்திய அரசோ இது 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு அதற்கு அதிகாரம் இல்லை இதில் சட்ட சிக்கல் உள்ளது என கர்நாடக முதல்வர் சீத்தராமையா எதை சொன்னாரோ அதையே மோடி அரசும் சொல்கிறது. எப்போதுமே தமிழ் இனம் சார்ந்த பிரச்சனைக்கு மத்திய அரசு எதிராகவே செயல்பட்டு உள்ளதை பல ஆதாரங்களோடு விளக்கிய அவர் மேலும் இங்கு உள்ள ஆட்சியாளர்கள் சாதி ஆதிக்க சக்திகளிடம் தான் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு உள்ளது அதை அவர்களிடமே கோரி எப்படி பெறமுடியும் என கேள்வி எழுப்பினார். ஆகையால் மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மீதான அதிகாரத்தை நிலைநிறுத்துவது தான் ஒரே தீர்வு அதைத்தான் மக்கள் அதிகாரம் அமைப்பு வலியுறுத்துகிறது. அதற்கு என்றைக்கும் ம.க.இ.க களத்தில் நிற்கும்”
மதுரையில் போலிசின் நெருக்கடியில் பல இடங்களில் நமக்கு அரங்குகள் கிடைக்கவில்லை. பின்பு மாட்டுத் தாவணியில் செய்தியாளர்கள் அரங்கம் நமக்கு கொடுக்க ஒப்புக்கொண்டனர். 100 பேர் மட்டுமே அமரக்கூடிய அந்த இடத்தில் 200-க்கும் மேற்பட்டோர் அமர முடியாது என்பதால் காணொளி மூலம் வெளியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு 100-க்கும் மேற்பட்டவர்களை வெளியில் அமர வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
இறுதி நிகழ்ச்சியாக மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மருது அவர்கள் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி முடிவடைந்தது.
செய்தி மக்கள் அதிகாரம் மதுரை மண்டலம் தொடர்புக்கு – 9894312290
எல்லை தாண்டிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் உரி தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியச் சிப்பாய்களின் சடலங்களைக் காட்டித் தேசிய வெறியைத் தூண்டும் முயற்சி.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு நடத்திக் கொண்டிருப்பது, சண்டையா, அல்லது இது வெறும் சண்டைக் காட்சியா? இந்தக் கேள்விக்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன. மோடி அரசைப் பொருத்தவரை இது சண்டைக் காட்சி. உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்தர்கண்ட் சட்டமன்றத் தேர்தல்களைக் குறிவைத்து நடத்தப்படும் நாடகம். “நல்ல காலம் பொறக்குது” என்று கூவிப் பார்த்துக் காசு கிடைக்கவில்லையென்றால், “நாச காலம் வருது” என்று மிரட்டிக் காசு பறிக்கும் குடுகுடுப்பைக்காரனைப் போல, வாக்களித்த மக்களுக்கு ‘அச்சே தின்’ எதையும் காட்ட முடியாத மோடி, ‘சண்டைக் காட்சி’யைக் காட்டி ஓட்டு அறுவடைக்கு முயற்சிக்கிறார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் உரி தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியச் சிப்பாய்களின் சடலங்களைக் காட்டித் தேசிய வெறியைத் தூண்டும் முயற்சி.
உரி இராணுவ முகாம் மீதான தாக்குதல், காஷ்மீர் மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த மோடியை, ஒரு விதத்தில் காப்பாற்றியிருக்கிறது. வேறொரு விதத்தில் இக்கட்டிலும் ஆழ்த்தியிருக்கிறது. “56 அங்குல மார்பு கொண்ட மாவீரன்” என்ற முறையில் மோடி ஏதாவது செய்தாக வேண்டும். அதே நேரத்தில் பாக். இராணுவத்திற்கு உண்மையிலேயே ஆத்திரமூட்டும்படி ஏதும் செய்துவிடவும் கூடாது. இவ்விரு நிபந்தனை களுக்கு இடைப்பட்ட சந்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உருவாக்கிய “கலைப்படைப்பு”தான் செப் 29 அன்று அரங்கேற்றப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக்.
“அடி பின்னிவிட்டோம்” என்கிறது மோடி அரசு. “இல்லவே இல்லை” என்கிறது பாகிஸ்தான். இப்படி ஒரு நகைச்சுவையான யுத்தக் காட்சியை உலகம் கண்டதில்லை என்கிறார்கள் பத்திரிகையாளர்கள். தனது கூற்றை நிரூபிக்கும் பொருட்டு, தம் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில், இந்திய இராணுவம் பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதாக கூறப்படும் பகுதிகளுக்கு சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று மக்களிடம் பேச விட்டிருக்கிறது பாக். அரசு. பிம்பேர், சம்ப், சமானி ஆகிய மூன்று மாவட்ட எல்லைப்புறக் கிராமங்களைப் பார்வையிட்ட வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டின் நிருபர் பமேலா கான்ஸ்டபிள், “எல்லைப்புறத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது என்று மக்கள் சொல்கிறார்களே தவிர, பல போராளிகள் கொல்லப்பட்டதாக இந்தியா சொல்வதை உறுதி செய்யும் விதத்தில் அவர்கள் எதுவும் கூறவில்லை” என்கிறார். காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கும் ஐ.நா குழுவினரும், “இந்தியா கூறுவதைப் போன்ற துப்பாக்கிச் சண்டை எதையும் நாங்கள் பார்க்கவில்லை” என்றே கூறியிருக்கின்றனர்.
சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற சண்டைக் காட்சியை வடிவமைத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.
“அதிக பட்சம் 200 மீட்டர் தூரத்துக்கு பாக். எல்லைக்குள் சென்று சுட்டிருக்கக் கூடும்” என்று சில பாக். பத்திரிகையாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஷான் ஸ்நோ என்ற இராணுவத்துறை வல்லுநர், “துல்லியமாக இலக்கைத் தாக்கு வதற்கான (Surgical Strike) ஆற்றலை இந்திய இராணுவம் இன்னமும் பெற்றுவிடவில்லை. அப்படியொரு தாக்குதல் நடத்தியதற்கான விவரங்கள் எதையும் இந்தியா அளிக்கவுமில்லை” என “டிப்ளமாட்” என்ற பத்திரிகையின் இணைய தளத்தில் தரவுகளுடன் எழுதியிருக்கிறார்.
செப் 29 தாக்குதலைப் பற்றி இந்திய இராணுவத் தலைமையகம் (DGMO) வெளியிட்ட அறிக்கையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளதேயொழிய, கோட்டைக் கடந்து சென்று தாக்கியதாக அந்த அறிக்கை கூறவில்லை. எத்தனை இலக்குகள் தாக்கப்பட்டன என்றோ, என்ன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்றோ, எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்றோ, கொல்லப்பட்டவர்கள் யார் என்றோ எந்த விவரமும் கூறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. “அடிவாங்கிய பாக். இராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் தெரிந்திருக்கக் கூடிய மேற்படி விவரங்களை, இந்தியர்களுக்கு ஏன் மறைக்க வேண்டும்?” என்று பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விக்கும் மோடி அரசிடம் பதில் இல்லை.
இருந்த போதிலும் “வெற்றி, வெற்றி” என்று ஊடகங்கள் மூலம் சவுண்டு கிளப்பி, பாக். எதிர்ப்பு தேசவெறியை நாடு முழுவதும் பா.ஜ.க. தூண்டியிருப்பதால், ராகுல் காந்தி முதல் கருணாநிதி வரையிலான அனைவரும் மோடிக்கு ஒரு பாராட்டைத் தெரிவித்து விட்டனர். இருப்பினும் நடந்து கொண்டிருப்பது நாடகம் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இல்லை.
எங்கள் ஆட்சிக் காலத்தில் பலமுறை இராணுவம் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. நாங்கள் அரசியல் ரீதியில் அதற்கு உரிமை கொண்டாடியதில்லை. இராணுவத்தின் செயலுக்கு மோடி அரசு உரிமை கொண்டாடுவதாலும், பாகிஸ்தான் அதனை மறுப்பதாலும், வீடியோ ஆதாரத்தை வெளியிடுவதுதான் சரியானது என்று கூறியிருக்கிறார் ப.சிதம்பரம். “வீடியோ ஆதாரம் இருக்கிறது, தக்க நேரத்தில் வெளியிடுவோம்” என்று முழங்கிய ராஜ்நாத் சிங் பதிலளிக்கவில்லை. “நம்முடைய இராணுவத்தின் வீரத்தில் நம்பிக்கையில்லாமல் ஆதாரம் கேட்கிறீர்களா?” என்று ரவி சங்கர் பிரசாத் ஆஜராகிறார். “ஆதாரம் கேட்பவனெல்லாம் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்” என்கிறார் உமா பாரதி.
“வீடியோ ஆதாரத்தை வெளியிட மோடி அரசு ஏன் அஞ்ச வேண்டும்? அது சொல்லிக் கொள்ளும்படியான ஆதாரமாக இல்லாமல் இருக்க வேண்டும். ஒருவேளை பா.ஜ.க.வினர் சொல்வது போல, அது பயங்கரமான தாக்குதலாக இருக்கும் பட்சத்தில், அந்த வீடியோ காட்சி பாகிஸ்தான் மக்களின் கோபத்தைத் தூண்டி, அதனைச் சமாளிக்கும் பொருட்டு, பாக். இராணுவம் இந்தியா மீது போர் தொடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிடும் என்று மோடி அரசு அஞ்சுவதாக இருக்க வேண்டும். அப்படி ஒரு அச்சம் இருக்கும் பட்சத்தில், சர்ஜிகல் ஸ்டிரைக் பற்றி ஊடகங்களில் அன்றாடம் அடித்து விடப்படும் சரக்குகள், ஒரு போருக்கு வழி வகுக்கும் என்று மோடி அரசுக்குத் தெரியவில்லையா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன்.
“சவுண்டு மட்டும்தான் வரவேண்டும், சண்டை வரக்கூடாது” என்றுதான் இந்த ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் மோடி. இருப்பினும் “சர்ஜிகல் ஸ்டிரைக்” என்பதற்கு பயங்கரமான வியாக்கியானங்கள் ஊடகங்களில் உலா வருகின்றன. “இது பாக். இராணுவத்தின் மீதான தாக்குதல் அல்ல, ஆக்கிரமிப்பும் அல்ல, தீவிரவாதிகளைத் தடுத்து அழிக்கும் நடவடிக்கை மட்டுமே” என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகத்தான் “துல்லியத் தாக்குதல்” என்று இராணுவம் இதற்குப் பெயரிட்டிருக்கிறது. தாக்குதல் முடிந்த மறு கணமே பாக். இராணுவத் தலைமையையும், சர்வதேச பிரதிநிதிகளையும் அழைத்து, “இந்த நடவடிக்கை இத்துடன் முடிந்து விட்டது” என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறது மோடி அரசு.
காஷ்மீரிலிருந்து இந்தியாவை வெளியேறக் கோரி காஷ்மீர் மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்ட ஊர்வலம்: முற்றுப் பெறாத போர். (கோப்புப் படம்)
அதாவது சண்டை 29 இரவே முடிந்து விட்டது. ஆனால், சவுண்டு மட்டும் ஊடகங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர் கிஷாலய் பட்டாசார்ஜி கூறுவது போல “இந்த யுத்தம், சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் தகவல் ஊடகங்கள் வழியே நடத்தப்படும் உளவியல் யுத்தம்.” வல்லரசு இந்தியா குறித்த போதையில் திளைக்க விரும்பும் நடுத்தர வர்க்கத்தினருக்காக, அர்னாப் கோஸ்வாமியைப் போன்ற ஆங்கிலம் பேசும் பார்ப்பன மேட்டுக்குடி லும்பன்கள், டி.வி. ஸ்டூடியோக்களில் நடத்திக் காட்டும் யுத்தம். தினமணி மதியைப் போன்ற அசடுகளை ஆனந்த பரவசத்தில் ஆழ்த்தும் யுத்தம்.
மற்றபடி நடப்பது சண்டையா, காட்சியா என்று அம்பானிக்கும் அதானிக்கும் தெரியும் என்பதால், இது பற்றி பங்குச்சந்தை அலட்டிக் கொள்ளவில்லை. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த “சலுகை பெற்ற நாடு” என்ற வணிக அந்தஸ்தை மோடி ரத்து செய்தது குறித்து அந்நாட்டு முதலாளிகளும் கவலைப்படவில்லை. இந்திய பாக். வணிகத்தில் அதிக ஆதாயமடைபவர்கள் இந்திய முதலாளிகள்தான் என்பதால், இதனை ரத்து செய்ததில் அவர்களுக்கு மகிழ்ச்சியே.
வெறும் சண்டைக் காட்சியாகவே இருக்கும் நிலையிலும் இது எல்லையோர கிராம மக்களைத்தான் பாதித்தது. 553 கி.மீ எல்லையுள்ள பஞ்சாப் – பாக். எல்லைப்புறத்தில், பத்து கி.மீ. சுற்றுவட்டாரத்தில் இருக்கின்ற 1,871 கிராமங்களிலிருந்து அறுவடைக்கு நிற்கும் பயிர்களை அப்படியே விட்டுவிட்டு வெளியேறுகிறார்கள் விவசாயிகள்.
“சிப்பாய்களெல்லாம் முகாமில் இருக்கும்போது எங்களை மட்டும் ஏன் வெளியேற்றுகிறீர்கள்?” என்று கேட்பவர்களிடம், “நாங்கள் கிராமத்தைக் காலி செய்யச் சொல்லவில்லை. உங்களுக்கு உத்தரவிட்டிருப்பது மாவட்ட நிர்வாகம்” என்று கூறுகிறார் எல்லைப் பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரல் எஸ்.எஸ்.சர்மா (The Hindu, 5.10.2016). இது பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து அம்மாநிலத்தின் பா.ஜ.க. கூட்டணி அரசு நடத்தும் இரக்கமற்ற நாடகம் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
“எல்லையில் போர் மேகங்கள் சூழ்கின்றனவா, அப்படியென்றால் தேர்தல் நெருங்கி விட்டது என்று பொருள்” என்ற பஞ்சாபி கவிதையை காங்கிரசு கட்சியினரே தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துகின்றனர். “பாகிஸ்தானுக்கு எதிராகப் போர் தொடங்குவதன் மூலம் உ.பி. தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்பது மோடியின் திட்டம்” என ஆகஸ்டு மாதத்திலிருந்தே அம்பலப்படுத்தி வருகிறார் மாயாவதி. இப்படியெல்லாம் பேசினாலும், போர்வெறி மோடிக்கு தரக்கூடிய ஆதாயத்தை எண்ணி எதிர்க் கட்சிகள் அஞ்சவும் செய்கின்றனர்.
“பாகிஸ்தானின் அணு ஆயுதத்தைப் பார்த்து அஞ்சிய காலமெல்லாம போய்விட்டது. அணு ஆயுதப் போர் மூண்டால், பத்து கோடி இந்தியர்கள் ஒருவேளை சாகலாம். அப்புறமும் 110 கோடிப் பேர் மிச்சமிருப்போம். ஆனால், பாகிஸ்தான் என்ற நாட்டைத் துடைத்து ஒழித்துவிடுவோம்” என்று பார்ப்பனக் கொழுப்பெடுத்த சு.சாமி உளற, “போர் என்று வந்துவிட்டால் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தவும் தயங்கமாட்டோம்” என்று பதிலுக்குப் பிதற்றினார் பாக். இராணுவ அமைச்சர்.
இவையெல்லாம் செயலுக்கு வர முடியாத உளறல்கள் மட்டும்தானா? ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பல் எழுப்பி வரும் போர்வெறிக் கூச்சலும், இராணுவ மோதல்களும் அவர்கள் விரும்புவது போல, தேர்தலுக்கு மட்டும் பயன்படும் துருப்புச் சீட்டுகளாக முடிந்து விடுமா அல்லது இந்த சண்டைக்காட்சி அபாயகரமான ஒரு சண்டைக்கு வழி வகுத்து விடுமா? இதற்குத் தீர்மானமான ஒரு பதிலைக் கூற இயலாது.
பாகிஸ்தானை மட்டம் தட்டிச் செய்யப்படும் பிரச்சாரத்தின் காரணமாக ஆத்திரம் கொண்ட இசுலாமிய தீவிரவாதக் குழுக்களோ, அல்லது இந்தியாவிலேயே இருக்கும் அவர்களுடைய ஆட்களோ, ஒரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்தக் கூடும் என்ற அச்சம் பா.ஜ.க. தலைமைக்கு இருக்கத்தான் செய்கிறது. அதனால் மக்களுக்கு ஏற்படும் அழிவு பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அத்தகைய தாக்குதல், தங்களுக்கு இந்து வாக்குகளைப் பெற்றுத் தருமா, அல்லது தோல்விக்குத் தள்ளிவிடுமா என்பது மட்டுமே அவர்களது கவலை.
தமக்குக் கடுகளவும் உரிமையில்லாத காஷ்மீரை மையப்படுத்தி இந்தியாவும் பாகிஸ்தானும் நடத்தி வரும் இந்தச் சண்டையில் காஷ்மீர் மக்களின் உரிமையை இரு நாட்டு அரசுகளுமே நிராகரிக்கின்றன. அதேபோல, பாகிஸ்தானை முறியடித்து, காஷ்மீரை இந்தியா தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தில் மோடிக்கும், மோடியைத் தோற்கடிக்க விரும்புகின்ற காங்கிரசு முதல் ஆம் ஆத்மி வரையிலான கட்சிகளுக்குமிடையில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டைக்காட்சியாகத் தோற்றம் தரும் தற்போதைய மோதல், சண்டையாக மாறலாம், மாறாமலும் போகலாம். ஆனால், ஒரு உண்மையான சண்டை, உள்நாட்டுப் போர் -ஏற்கெனவே காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கிறது. அது நான்கு மணி நேரத்தில் முடிந்து விட்ட சர்ஜிகல் ஸ்டிரைக் அல்ல. பல பத்தாண்டுகளாக நடந்து வரும் போர்.
அந்தப் போர் முடிவுக்கு வரும் வரை அல்லது காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை, பாகிஸ்தானுடனான போர் அபாயத்திலிருந்து நாம் தப்பிக்க இயலாது. “எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்ற சொற்றொடரை இந்திய ஆளும் வர்க்கம் நெடுநாளாகப் பயன்படுத்தி வருகிறது. “காஷ்மீரின் சாபம் என்று இதனை அழைப்பது, உண்மைக்கு நெருக்கமானதாக அமையும்.
கோவையில் கடந்த செப்டம்பர் 22 அன்று இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் வெட்டிக் கொல்லப்பட்டதை முகாந்திரமாகக் கொண்டு, கோவையின் பல பகுதிகளில் வீடுகளை விட்டு மக்கள் வெளியேவர முடியாத அளவுக்குப் போலீசின் ஆசியுடன் பகிரங்கமாகவே வெறியாட்டம் போட்டிருக்கிறது, இந்து முன்னணி. கோவை மட்டுமின்றி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களிலும் கடைகளையும் பேருந்துகளையும் தாக்கி வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறது.
இந்த வெறியாட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, எண்ணற்ற இரு சக்கர வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. ஏராளமான கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. திருப்பூரில் கல்வீச்சைக் கண்டு பதறி பேருந்திலிருந்து இறங்கிய ஒரு பெண்மணியின் மீது பேருந்து சக்கரம் ஏறி கால் முறிந்து பின்னர் மரணமடைந்திருக்கிறார்.
இந்து முன்னணியின் பொதுச் செயலாளரான காடேஸ்வரா சுப்பிரமணியன், சசிகுமாரின் மரணத்தைத் தொடர்ந்து செப்டம்பர் 23 அன்று தமிழகம் தழுவிய கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து, கொலைகாரர்களை காவல்துறை கைது செய்யாவிட்டால் தமிழ்நாடு குஜராத்தாக மாறும் என பகிரங்க மிரட்டல் விடுத்தார். இந்நிலையில், சசிகுமாரின் உடற்கூறாய்வை உடனடியாக முடித்து சவத்தை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யாமல், இந்து வெறியாட்டத்துக்கான அணிதிரட்டல் முழுமையாக நடக்கும்வரை தாமதப்படுத்தி, இப்பாசிசக் கும்பல் வன்முறை வெறியாட்டங்களை நடத்த தொடக்கம் முதல் இறுதிவரை உறுதுணையாக இருந்துள்ளது, கோவை போலீசு.
தொழில் நகரமான கோவையில் தொழிலாளர்களும், அடிப் படைப் பிரச்சனைகளுக்காக சாமானிய மக்களும் போராட்டம் நடத்தும்போது, அவற்றை ஒடுக்கி, போராடுபவர்களைச் சிறையில் அடைக்கும் போலீசு, கற்கள், சோடாபாட்டில்கள், பெட்ரோல் குண்டுகள், உருட்டுக் கட்டைகளுடன் தயாரிப்போடு வந்து இந்த ரவுடித்தனங்களை இந்து முன்னணி நடத்துவதற்கு உறுதுணையாக நின்றது. ஆணவக் கொலை என்றால் சவ ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்து அவசரமாக சுடுகாட்டுக்குக் கொண்டு செல்ல கட்டாயப்படுத்தும் போலீசு, தாழ்த்தப்பட்டோரின் இறுதி ஊர்வலத்தை பொதுப்பாதை வழியாகக் கொண்டு செல்ல அனுமதிக்காததை எதிர்த்துப் போராடுவோரை ஒடுக்கி சவத்தை தானே அடக்கம் செய்யும் போலீசு, இந்துவெறி குண்டர்கள் துடியலூர் வரை 18 கி.மீ. தொலைவுக்கு சவ ஊர்வலம் நடத்த அனுமதி அளித்தது. வேறு எந்த ஓட்டுக் கட்சிக்காரர்களுக்கும் இப்படி சவ ஊர்வலம் நடத்த அனுமதிக்காத போலீசு, கோவை, திருப்பூர் பகுதிகளிலிருந்து திரட்டப்பட்ட குண்டர்களுடன் பிணத்தை வைத்துக் கொண்டு இந்துவெறி பயங்கரவாதிகள் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த தாராள அனுமதியளித்தது.
1998 கோவை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, அந்நகரைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இந்து வெறியர்கள் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டபோது, அதற்கு உறுதுணையாக இருந்ததைப் போலவே, இப்போதும் போலீசு துணை நின்றுள்ளது. துடியலூர் மயானத்துக்கு வரும்வரை நூற்றுக்கணக்கான
கடைகளைத் தாக்கிச் சூறையாடி, வாகனங்களை அடித்து நொறுக்கி, கண்ணில்பட்ட பள்ளிவாசல்கள் அனைத்தின் மீதும் கல் எறிந்து வெறியாட்டம் போட்டது, இந்து முன்னணி. போலீசின் முன்னிலையிலேயே துடியலூரில் மட்டும் ஏறத்தாழ 20 கடைகளைச் சூறையாடி 6 கடைகளுக்கு தீ வைத்தது.
இருப்பினும், தங்களது தலைவர் கொல்லப்பட்டதற்கு ஊர்வலம் நடத்தி இப்படி தாக்குகிறார்கள் என்றால் அவர்களின் கோபத்தில் ஒரு நியாயம் இருப்பதாகக் கூறி, ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் இந்த வன்முறை வெறியாட்டத்தைக் கண்டிக்கக்கூட முன்வராமல் ஊடகங்கள் பூசி மெழுகின. முஸ்லீம் ஒருவரின் செல்போன் கடையில் இந்துவெறி குண்டர் திருடிய காட்சி கண்காணிப்பு கேமராவில் சிக்கி வெளிவந்து நாறியபோதிலும், இதை மூடிமறைத்து இந்து முன்னணி போர்வையில் சமூகவிரோத கும்பல் என தலைப்பிட்டு நியாயப்படுத்துகிறது தமிழ் இந்து.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால், கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுவோர் தமது கட்சிக்குள்ளேயே வெட்டு குத்துகளில் இறங்குவது அன்றாடச் செய்தியாகியுள்ளது. ரியல் எஸ்டேட், கந்துவட்டி, சினிமா, கல்லூரிகள், காண்டிராக்ட், கட்டப் பஞ்சாயத்து போன்ற பணம் கொழிக்கும் தொழில்களைச் செய்வோராக அனைத்து ஓட்டுக் கட்சிப் பிரமுகர்களும் சீரழிந்துள்ள நிலையில், பல்லாயிரம் கோடி புழங்கும் இத்தகைய தொழில்களில் ஏற்படும் மோதல்கள் படுகொலைகள் மூலம் தீர்த்துக் கொள்ளப்படுகின்றன.
ஏற்கெனவே பா.ஜ.க. மாநில மருத்துவ அணிச் செயலாளரான டாக்டர்அரவிந்த் ரெட்டியின் கொலைக்குக் காரணம் பணம் மற்றும் பெண் விவகாரம் என்றும், பரமக்குடி நகர பா.ஜ.க. செயலாளர் தேங்காய்கடை முருகனின் கொலைக்குக் காரணம் நிலத் தகராறு என்றும் அம்பலமானது. சென்னை கோயம்பேட்டில் கந்துவட்டித் தொழில் நடத்திவந்த விட்டல் என்ற பா.ஜ.க. பிரமுகர், கடன் வாங்கியவரது வீட்டுப் பெண்களை வேசிகள் என்று ஆபாசமாகத் திட்டியதால் கடந்த 2013 கொல்லப்பட்டார். ஓசூரில் கடந்த செப்.19 அன்று விசுவ இந்து பரிசத்தின் மாவட்டச் செயலாளர் சூரி வெட்டிக் கொல்லப்பட்டதற்கு கட்டப் பஞ்சாயத்து மற்றும் ரியல் எஸ்டேட் தகராறு என்று போலீசே கூறுகிறது.
கொல்லப்பட்ட சசிக்குமார் என்பவரும் ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து மற்றும் விநாயகர் ஊர்வலத்துக்கான களிமண் பொம்மைகளை வைத்து, அதற்கான வசூல்களை ஒழுங்குபடுத்துவது போன்ற ‘தொழில்’களையும் செய்து வந்தவர்தான். மற்றைய ஓட்டுக் கட்சிகளைச் சேர்ந்த கிரிமினல்கள் வெட்டிச் சாய்க்கப்படும்பொழுது, அவை வெறும் முன்விரோதக் கொலைச் சம்பவங்களாகப் பதிவாகி மறைந்து விடுகின்றன. ஆனால், இந்துத்துவ கும்பலைச் சேர்ந்த கிரிமினல்கள் கொல்லப்படும்போதெல்லாம், தமிழகத்தில் இந்துத்துவ தலைவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாகவும், கொல்லப்பட்டவர்கள் நாட்டுக்காக உழைத்த மாபெரும் தியாகிகளைப் போலவும், இந்து சமூகத்தைப் பாதுகாக்க வந்த மாமனிதரைப் போலவும் சித்தரிப்பதைத் திட்டமிட்டே இந்துத்துவ பரிவாரங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. இதன் மூலம் முஸ்லிம்கள் மீது அபாண்டமான சந்தேகம், பழிபோட்டு மதவெறிக் கலவரத்தை அரங்கேற்றி, இந்து முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தி தமிழகத்தில் காலூன்றுவது என்ற திட்டத்துடன் இந்துவெறி கும்பல் இயங்கி வருகிறது.
தற்போதைய வன்முறை வெறியாட்டங்களில் முஸ்லிம் கடைகள் மட்டுமின்றி, ஏராளமான இந்து வியாபாரிகளின் கடைகளையும் தாக்கி இந்துவெறி குண்டர்கள் சூறையாடியுள்ளனர். இப்பாசிச கும்பலின் நோக்கம் சிறுபான்மையினரான முஸ்லிம்களை அச்சுறுத்தி அடிபணிய வைப்பது மட்டுமல்ல. பயங்கரவாதத்தை ஏவி ஒட்டு மொத்த சமூகத்தையும் பீதியில் உறைய வைப்பதுதான் என்பதை இந்த வெறியாட்டங்கள் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.
இந்நிலையில், எத்தகையதொரு அபாயத்தை தமிழகம் எதிர்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து, இந்துவெறி பாசிச கும்பலை முளையிலேய கிள்ளியெறியும் வகையிலான போராட்டங்களைக் களத்திலே தொடுப்பதும், இக்கும்பலின் கோயபல்சு பிரச்சாரத்துக்குப் பக்கமேளம் வாசிக்கும் ஊடகங்களையும், துணைநிற்கும் அம்மா போலீசையும் விழிப்புடனிருந்து அம்பலப்படுத்தி முறியடிப்பதுமே இன்று தமிழக மக்களின் முன்னுள்ள முக்கிய கடமையாக உள்ளது.
பழங்கால அடிமைகளுக்கும், தொழில்நுட்பத்தின் நவீன அடிமைகளுக்கும் என்ன வேறுபாடு? தமக்கு சுதந்திரம் இல்லை என்பதை பழங்கால அடிமைகள் அறிந்திருந்தார்கள். நவீன அடிமைகளோ தாம் அடிமைப்பட்டிருப்பதையே சுதந்திரம் என்று நம்புகிறார்கள்!
_________________________
அமெரிக்க வீட்டுப் பாடத்திற்கும் இந்தியா ?
இல்லை மகனே, உன்னுடைய பள்ளி வீட்டுப்பாடத்திற்கெல்லாம் இந்தியாவுக்கு ‘அவுட்சோர்ஸ்’ கொடுக்க முடியாது!
_________________________
செல்லுமிடமெல்லாம் சிவப்புக் கம்பள வரவேற்பு!
இஸ்ரேல் செல்லுமிடமெல்லாம் சிவப்புக் கம்பள வரவேற்பு !
இஸ்ரேல் செல்லுமிடமெல்லாம் சிவப்புக் கம்பள வரவேற்பு!
நெதர்லாந்து செல்லும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமென் நெதன்யாகூ-வுக்கு அங்கே சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்கும் என்பதில் என்ன சந்தேகம்?
கார்ட்டூன்: Anthony Garner (Ant), Spain, City: Barcelona
நன்றி: Cartoon Movement
_________________________
காங்கிரீட் காடுகளாய் புடைத்து நிற்கும் நகரங்கள் !
காங்கிரீட் காடுகள்
காங்கிரீட் காடுகளாய் புடைத்து நிற்கும் நகரங்களில் பொது மக்களின் பொதுப்பயன்பாட்டிற்கு இடமேது?
கேலிச்சித்திரம்: ஐரோப்பாவின் மால்டா நாட்டைச் சேர்ந்த Steve Bonello.
நன்றி: Cartoon Movement
_________________________
மோடிக்காக (அக்கப்)போரில் இறங்கும் ஊடகங்கள்!
மோடிக்காக அக்கப்போரில் ஈடுபடும் ஊடகங்கள்
கார்ட்டூன் நன்றி : Tanmaya Tyagi
வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள் மற்றும் படங்கள்.
கானல் நீராகும் காவிரி நீர்… நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்!
தருமபுரியில் மக்கள் அதிகாரம் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கம்
மாவட்டம் முழுவதும் வீச்சான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு 10-10-2016 அன்று மாலை மக்கள் அதிகாரம் சார்பாக கருத்தரங்கம் எழுச்சியுடன் நடந்தது.
மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார்
இக்கூட்டத்துக்கு மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், “தண்ணீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பருவமழை பொய்த்தும், குறைந்தும் வருகிறது. அச்சு ஊடகங்கள் மாதத்திற்கு 4,5 பத்திரிகைகளை கொண்டு வருகின்றனர், இதற்காக மரங்களை அழித்துதான் காகிதத்தை பெறுகின்றனர், அதோடு பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள், எஸ்டேட் கட்டுவதும், மேட்டுக்குடியினர் கும்மாளம் அடிப்பதற்கும் என்று மேற்கு தொடர்ச்சி மரங்களை அழித்துவருவதும் அதிகரித்திருக்கிறது, அதோடு இந்தியாவிலேயே நகரமயமாக்கத்தில் முதலிடத்தில் இருப்பது தமிழகம்தான். தமிழகத்தில் ஒர் ஆண்டிற்கு மழையினால் கிடைக்கும் தண்ணீர் 4,323 டி.எம்.சி. இந்த மழை நீரை சேமிக்க நீர் நிலைகள் இல்லை, எல்லாம் அழிக்கபட்டிருக்கிறது. தமிழகத்தின் இலக்கியமும் பொருளாதாரமும் காவிரியோடு பிணைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதனை பாதுகாக்க சமூக போராளிகள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.
அடுத்தாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் தருமபுரி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜானகிராமன் பேசுகையில், “காவிரி ஆற்றில் 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு தாழம்பூவும், மூலிகைச் செடிகளும் பூத்துக் குலுங்கும், பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும், அதோடு தண்ணீரை குடித்தால் போது வாசனையாக இருக்கும். அந்த வாசனைகள் எல்லாம் அழித்து இன்றைக்கு கழிவு நீரை கலந்து பச்சை நிறமாக வருகிறது. காவிரி நீருக்கும், தருமபுரிக்கும் தொடர்பு இருக்கிறது. தஞ்சாவூரில் விளையும் நெல்லை இன்றைக்கு 60 சதவீத மக்கள் பயன்படுத்துகிறோம். அப்படி இருந்தும் பெரிய அளவில் போராட்டம் இல்லாமல் இருப்பது வேதனையான விஷயம்.
கெயில் குழாய் திட்டத்தால் விவசாயிகளுக்கு பிரச்சினை இல்லை என்றும், டாஸ்மாக் பிரச்சினையில் ரெட் ஒயின் உடலுக்கு நல்லது என்றும், பாலியல் இணையங்களை தடை செய்ய முடியாது நடைமுறையில் சாத்தியமில்லை என்றும் மக்களுக்கு எதிரான தீர்ப்புகளை வழங்குகிறது நீதித்துறை. இப்படி மேட்டுக்குடி நலன்களுக்காவே பேசுகிறார்கள், பார்ப்பன நீதிபதிகள் இதுபோன்ற தீர்ப்புகளை வழங்குகிறார்கள். எனவே தோல்வியடைந்த நீதிமன்றத்தை வைத்துக்கொண்டு நீதியை பெறமுடியாது மாற்று மக்கள் அதிகாரம் சொல்லும் தீர்வால்தான் தீர்க்க முடியும்” என்றார்.
முன்னாள் இராணுவ அதிகாரி கர்னல் திருப்பதி
கடந்த ஒருவருட காலமாக கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நலன்களுக்காக அங்குள்ள நீர், நிலைகளை பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை நடத்திவருபவர் முன்னாள் இராணுவ அதிகாரி கர்னல் திருப்பதி. ஓய்வு பெற்றவுடன் பல அரசு உயர் பதவிகளுக்காக அவரை அழைத்த போதிலும் அதற்கு செவிசாய்க்காமல் மக்கள் நலனில் அக்கறைக்கொண்டு போராடி வருபவர். அவர் பேசுகையில்,
“தண்ணீருக்காக உலகப் போரே நடக்கும் என்கிறார்கள். அதுதான் உண்மை. ஏனென்றால் 10,20 ஆண்டுகளுக்கு முன்பு குளம், குட்டை, ஏரி, ஆறுகளில் நாமெல்லாம் நீச்சல் அடித்து மகிழ்ந்தோம். அதுமட்டுமல்லாமல் 30,40 ஆண்டுகளுக்கு முன்பு 10 அடியில் நிலத்தடி நீர் இருந்தது. ஆனால் இன்றைக்கு 1000 அடி போட்டால் தான் தண்ணீர் கிடைக்கிறது. காரணம் மேலை நாடுகள் அவர்களின் வளர்ச்சிக்காக நம்முடைய இயற்கை வளத்தை அழித்து நம்மை குப்பைத்தொட்டி போல பயன்படுத்துகிறார்கள். இதனால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்படியே பெய்யக்கூடிய மழைநீரையும் சேமிக்கவில்லை.
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் எந்த அரசும் செய்யவில்லை. இந்தக் காலத்தில் அரசு அதிகாரிகள் அனைவரும் லஞ்ச ஊழலில் திளைக்கிறார்கள். உயிர் காப்பது நீர் இதை பாதுகாப்பதை விட வேறு என்ன வேலை இருக்கிறது? 1 குவார்ட்டருக்கும், 1 பொட்டலம் பிரியாணிக்கும் தன்மானத்தை இழக்காமல் வாழ வேண்டும் அதற்கு ஒரு நல்ல அரசாங்கத்தை அமைத்தால் தான் நம்ம பேரக் குழந்தைகளையாவது இந்த அபாயத்தில் இருந்து மீட்டெடுக்க முடியும்” என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன்
அடுத்தாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன் பேசுகையில், “தமிழகத்திற்கு சாபகேடாக இருப்பது தண்ணீர் பிரச்சினை, பல நாடுகளில் சண்டையில்லாமல் தண்ணீரை பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் தமிழகத்திற்கு காவிரி பிரச்சினை தீராத பிரச்சினையாக இருக்கிறது. தழிழகத்தில் உருவாகும் நீர் நிலைகள் இல்லை. இதனால் அண்டைய மாநிலங்களை நம்பியே இருக்கிறோம். இப்பிரச்சினையில் நடுநிலையாக இருந்து தீர்க்க வேண்டிய மத்திய அரசாங்கம், மதவாதம் பிடித்த பி.ஜே.பி அரசாங்கம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று வருகின்ற சட்ட மன்ற தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறார்கள். விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை என்கிறார்கள், ஆனால் பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையடிக்க தண்ணீர் தர மறுப்பதில்லை. ரியல் எஸ்டேட், பள்ளி, கல்லூரி கட்டி நீர் ஆதாரங்களை அழித்து வருகிறார்கள். எனவே இப்பிரச்சினைக்கு தீர்வாக எல்லா நதிகளையும் இணைக்க வேண்டும், தேசியமயமாக்க வேண்டும்” என்றார்.
திராவிட கழகம் தருமபுரி மாவட்ட முன்னாள் தலைவர் கிருஷ்ணன்
திராவிட கழகம் தருமபுரி மாவட்ட முன்னாள் தலைவர் கிருஷ்ணன் பேசுகையில், “யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே கவிஞன் பூங்குன்றனார் பாடினார். காவிரிப்பிரச்சினை கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக நீதி மன்றத்திலே வழக்கு நடந்து வருகிறது, ஒரு வழக்கு தொடுத்தவனே செத்து போனாலும் வழக்கு நடக்கிறது. நீதி மன்றங்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிகாரம் இல்லை என மோடி அரசு அறிவித்து உள்ளது. நீதி மன்றத்துக்கு அதிகாரம் இல்லாத போது இத்தனை ஆண்டு காலமாக மத்திய அரசுகளும், நீதி மன்றமும் மக்கள் வரிப்பணத்தை சூறையாடி ஏமாற்றி உள்ளனர் என்பது இப்போது தெளிவாக தெரிந்து விட்டது.
1924-ல் நீர் நிலைகளை பகிர்ந்து கொள்வது குறித்து ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. காவிரி ஆறு 800 கிலோ மீட்டர் ஓடுகிறது, நம்ம தமிழ் நாட்டில் 417 கிலோ மீட்டர் ஓடுகிறது. அங்கே தமிழ்நாடு அரசு, மத்திய அரசு ஒப்புதல் இல்லாமல் தடுப்பணை கட்டக்கூடாது என்பதுதான் ஒப்பந்தம். 1947-லிருந்து 1967 வரைக்கும் 20 ஆண்டுகளாக காங்கிரசு ஆட்சியில் கபிணி அணை, சொர்ணமுகியில் ஒரு அணை என்று பல அணைகள் கட்டப்படுகிறது. அமைச்சர்களோ, அதிகாரிகளோ யாரும் இதை கேட்கவில்லை, மற்றொரு புறநாநூறு பாடல் வரிகளை போல தீதும் நன்றும் பிறர் தரா வாரா என்று தமிழர்கள் தூங்கிக் கொண்டதனால் பல அணைகளை கட்டிவிட்டனர். இன்றைக்கு சாதிக்கு, கட்சிக்கு, சாராயத்துக்கு அடிமையாகி இருக்கிறோம். வரலாற்று ரீதியாக பார்த்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். எனவே நாம் தேசியக் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். மாநிலக் கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டாட்சி உருவாக்க வேண்டும். இதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.
மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கினைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன்
மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் பேசுகையில்,
சுயசார்பாக இந்த நாட்டை வழிநடத்துகின்ற, தீர்மானிக்கின்ற திறமை அரசுக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் இருக்கிறதா என்றால் இல்லை. காரணம் மக்களுக்கு கடமையாற்ற வேண்டும், நேர்மையாக இருக்க வேண்டும் என்ற தகுதியை இழந்து நிற்கின்றனர். இந்த உண்மையைத்தான் நாம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் இப்பிரச்சினையை தீர்க்க முடியாது என்று இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சசிசேகர் சொல்கிறார். நீதி மன்றம் சட்ட விதியில் இருந்து நீதி வழங்காமல் சொந்த விருப்பத்திற்கு செயல்படுகிறார்கள். அதுவும் ஒரு சாரருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். இந்தியா முழுவதும் நீர் நிலைகளை அழித்து பெருநகரமாக மாற்றிவிட்டனர். நகரமயமாக்கலால் நீர் நிலைகள் அனைத்தும் கழிவு நீர் குட்டைகளாக மாறிவிட்டன. சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம், பச்சமுத்து கல்லூரி இவையெல்லாம் ஏரிகளை அழித்துதான் கட்டப்பட்டிருக்கிறது. இதனை எல்லாம் யார் அழித்தது. நீர் நிலைகளும், நீர் வழித்தடங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருக்கும் ஐ.டி துறைக்காக சதுப்பு நிலங்களை அழித்துதான் கட்டியிருக்கிறார்கள். இது அரசுதான் செய்கிறது. 1970 வரை நீர் நிலைகள் கிராம மக்கள் பராமரிப்பில் இருந்தது. அதன் பிறகு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் போன பிறகு நகரமயமாக்கலுக்கு, கிராமப்புற பொருளாதாரத்தை அழித்தது, நீர் நிலைகளை அழித்து பன்னாட்டு முதலாளிகளின் தேவைக்காக ஆடுகின்ற அரசாங்கமாக இருக்கிறது. எனவே மக்கள் அதிகாரத்தை நிறுவததுதான் ஒரே மாற்று” என்றார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் நீர் நிலைகள் மீதான ஆக்கிரமிப்பிற்கு யார் காரணம் என்பதையும், அதற்கு எதிராக நாம் எப்படி போராடுவது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்தது.
தகவல் மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டலம் தொடர்புக்கு 8148573417
மானியங்கள், கல்வி, முதியோர் உதவித் தொகைகள் உள்ளிட்ட அரசின் சேவைகளைப் பெறுவதற்கு, ஆதார் எண் வைத்திருக்க வேண்டும்; இல்லையென்றால், இந்த உதவிகள்/சேவைகள் மறுக்கப்படும் என்ற இடியை, மைய, மாநில அரசுகள் அதிரடியாகப் பொதுமக்கள் மீது இறக்கி வருகின்றன. மானிய உதவிகள் பெறுவதற்கு மட்டுமல்ல; வேலையில் சேருவதற்கு, வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு, ஓய்வூதியம் பெறுவதற்கு, புதிய தொலைபேசி இணைப்பிற்கு, ஏன் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்குக்கூட ஆதார் எண் கேட்கப்படுகிறது. சுடுகாட்டில் அடக்கம் செய்ய பிணத்தின் ஆதார் எண் என்ன எனக் கேட்காதிருப்பது மட்டும்தான் பாக்கி. அந்த அளவிற்கு அரசின் அனைத்து மட்டங்களிலும் ஆதார் எண் இந்தியக் குடிமகனின் அடையாளமாகிவிட்டது.
சாலவன்பேட்டை என்ற ஊரில் ரேஷன் கார்டோடு ஆதார் எண்ணை இணைக்கக் காத்திருக்கும் பொதுமக்கள்
அரசின் மானியங்கள் மற்றும் உதவிகளைப் பெறுவதற்கு, ஆதார் எண்ணைக் கட்டாயம் வைத்திருக்கத் தேவையில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒருபுறம் இருந்தாலும், அது பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் இதுவரை 147 சேவைகளை ஆதார் எண்ணுடன் இணைத்துவிட்டது, அரசு. ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, மனுசனைக் கடிச்ச கதையாக, தற்போது ரேசன் அட்டைகளை ஆதார் எண்ணோடு இணைக்கும் நடைமுறை தமிழகத்திலும் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.
இதுவரை நாடெங்கும் 69% ரேசன் அட்டைகள் அவற்றுக்கான ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்திருக்கும் மைய அரசு, மீதம் உள்ள அட்டைகளை விரைந்து இணைப்பதற்குக் கெடு தேதிகளையும் நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது. இதுவரை நடந்த இணைப்பின் மூலம், ”2.33 கோடி போலி ரேசன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மூலம் 14,000 கோடி ருபாய் அளவிற்கு மானியம் மிச்சமாகியிருப்பதாகவும்” மைய அமைச்சர் பஸ்வான் கூறியிருக்கிறார். அதாவது, போலி ரேசன் கார்டுகளை ஒழித்து, ரேசன் கடை அரிசி கள்ளச் சந்தைக்குக் கடத்தப்படுவதைத் தடுக்கும் உயர்ந்த நோக்கில்தான் இந்த இணைப்பு கட்டாயமாக்கப்படுவதைப் போல நியாயவாதம் கற்பிக்கப்படுகிறது.
பொதுமக்களைப் பொருத்தவரையில், ஆதார் எண்ணைக் கொடுக்கவில்லை என்றால்,நைந்து, கிழிஞ்சு போன கார்டுக்குப் பதிலாக புது கார்டு கிடைக்காது, பொருள் கிடைக்காது என்ற பரிதவிப்பில் அரசின் இந்த வலுக்கட்டாயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், ஆதார் எண்ணைப் பதிந்து வருகிறார்கள். ஆதார் எண் இல்லாதவர்கள், அந்த எண்ணை வாங்குவதற்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆதார் எண்ணை ரேசன் அட்டையோடு இணைத்துவிட்டால் போலி ரேசன் கார்டுகள் ஒழிந்துவிடும் என்பது, கள்ளன் பெரிசா, காப்பான் பெரிசா என்ற புதிரைப் போன்றது. சமையல் எரிவாயு பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைத்தபோதும் இதைத்தான் சொன்னார்கள். ஆனால், வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளைகள் டீக்கடைகளிலும், ஓட்டல்களிலும் மடைமாற்றப்படுவது நின்றுபோய்விட்டதா, என்ன?
மதுரை மாவட்டத்தில் ஆதார் அட்டைக்காகப் புகைப்படம் எடக்க அரசு சேவை மையம் முன் காத்திருக்கும் பொதுமக்கள்
அரசின் உண்மையான இலக்கு போலி ரேசன் கார்டுகளை ஒழிப்பது அல்ல; மாறாக, உணவு மானியத்தைப் படிப்படியாக வெட்டுவது. இதன் முதல்படியாக, ரேசன் கார்டுகளோடு குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களையும் குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்கையும் இணைக்கிறார்கள். அடுத்து, மானிய விலையில் ரேசன் கடை மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை விநியோகிப்பதை நிறுத்திவிட்டு, அவற்றை ரேசன் கடையில் சந்தை விலையில் வாங்கிக் கொள்ளுமாறும், அதற்கான மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் உத்தரவு வரும். ஏற்கெனவே புதுச்சேரி, சண்டிகர், தாத்ரா-நாகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த நேரடி மானியத் திட்டம் இனி நாடெங்கும் நடைமுறைப்படுத்தப்படும். இதன் வெள்ளோட்டமாக, 39 மாவட்டங்களில் மண்ணெண்ணெய்க்கான மானியம் இனி வங்கிக் கணக்கில்தான் செலுத்தப்படும் என அறிவித்துவிட்டார், நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
மானிய விலையில் பொருளைக் கொடுத்தால் என்ன, மானியத்தை வங்கியில் போட்டால் என்ன – இரண்டும் ஒன்றுதானே எனச் சமப்படுத்துவதென்பது, போத்திகிட்டு படுத்தால் என்ன, படுத்துகிட்டு போத்திக்கிட்டால் என்ன என்பது போல சாதாரணமானது அல்ல. கையில் ஒரு நூறு ரூபாயோ, நூற்றைம்பதோ இருந்தால் ரேஷன் கடைக்குப் போய் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் – என அனைத்தையும் இன்று வாங்கிவிட முடியும். மானியத்தை வங்கியில் போடும் நேரடி உணவு மானியத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால், இந்தப் பொருட்களை வாங்குவதற்கு குறைந்தது நானூறு, ஐநூறு ரூபாயாவது தேவைப்படும். மாதச் சம்பளம் வாங்கும் நகர்ப்புறத்து நடுத்தர வர்க்கத்திற்கு வேண்டுமானால் இந்தத் தொகை பெரிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், தினக் கூலி தொழிலாளர் குடும்பத்திற்கு, கிராமப்புற ஏழைகளுக்கு அப்படி இருக்கப் போவதில்லை.
இந்திய கிராமப்புறங்களில், குறிப்பாக வட இந்திய கிராமப்புறங்களில் ரேசன் கடைகள் தினந்தோறும் திறக்கப்படுவதில்லை. ரேஷன் கடை திறக்கப்படும் நாளன்று கையில் பணம் இருக்க வேண்டும். மானிய விலையில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களை வாங்குவதற்கே பணத்தைப் புரட்ட முடியாமல் திண்டாடும் ஏழைகள் – பழங்குடியின மக்களை, சந்தை விலையில் பொருட்களை வாங்குமாறு தள்ளுவதென்பது, அவர்களைப் பட்டினிக்குள் தள்ளுவதற்கு ஒப்பானது.
நேரடி உணவு மானியத் திட்டத்தின்படி, ஒரு ரேஷன் அட்டைதாரர் பொருள் வாங்காவிட்டால், மானியம் வங்கிக் கணக்கில் சேராது. இதன் விளைவு என்னவென்றால், சந்தை விலையில் பொருளை வாங்குவதற்குரிய பணத்தைப் புரட்ட முடியாத ஏழைகள் பொது விநியோகத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். வறுமைக் கோட்டுக்கான வரையறையை மாற்றி அமைத்து ஏழைகளை ஒழித்துக் கட்டியதுபோல, ஏழைகளைப் பொது விநியோகத்திலிருந்து அப்புறப்படுத்துவதன் மூலம் மானியத்தைச் சேமிக்கப் போகிறது அரசு.
ரேஷன் கடைகளுக்கு மூடுவிழா நடத்தாமலேயே, நைச்சியமான வழியில் அவற்றை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களாக மாற்றும் ரசவாதம்தான் நேரடி உணவு மானியத் திட்டம். பொதுமக்களைச் சந்தை விலைக்கு பொருட்களை வாங்குவதற்குப் பழக்கப்படுத்துவதன் மூலம், உணவுப் பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை, அவர்கள் அறியாமலேயே வெட்டுவது அரசுக்கு மிகவும் எளிதாகவிடும். வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல, ரேஷன் கடையில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கும் அவற்றின் சந்தை விலைக்கும் இடையிலான வித்தியாசம் மெல்லமெல்ல வெட்டப்படும். சமையல் எரிவாயு உருளைக்கான மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தும் நடைமுறை வந்த பிறகு, மிகச் சமீபமாக எரிவாயு உருளையின் விலையை மாதந்தோறும் இரண்டிரண்டு ரூபாயாக அரசு ஏற்றி வருவதை யாராலும் அறியமுடிகிறதா?
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மானிய விலையில் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் கொள்கையும் நடைமுறையும் இருப்பதால்தான், திறந்த சந்தையில் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிடாமல் ஓரளவிற்காவது கடிவாளம் போட முடிகிறது. இந்தக் கொள்கையைக் கைவிடுவதென்பது, உணவுப் பொருட்களின் விலையை இனி வர்த்தகச் சூதாடிகள் தீர்மானிப்பதற்குத் தரப்படும் சுதந்திரமாகும். சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் இறங்குவதற்குக் காத்திருக்கும் சூழலில் பொது விநியோக முறையில் வரவுள்ள நேரடி உணவு மானியத் திட்டம், மக்களுக்கு இதுவரை கிடைத்து வந்த உணவுப் பாதுகாப்பைக்கூட இல்லாது ஒழித்துவிடும். அப்படிபட்ட அபாயகரமான நிலை வந்த பிறகு எதிர்ப்பதைவிட, மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் அரசின் நயவஞ்சகத் திட்டத்தை இன்றே எதிர்த்துப் போராட பொதுமக்கள் தயாராக வேண்டும். வருமுன்னர் காவாதான் வாழ்க்கை என்னவாகும் என்பதைப் பட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா?
எச்சரிக்கை: பெட்ரோல், பைப் வெடிகுண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்கும்பல்! விழிப்புடன் இரு!
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டு, பைப் வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டு சம்பவங்களில் இந்துத்துவ பயங்கரவாதிகள் நேரிடையாக சம்பந்தப்பட்டிருப்பதை பல செய்திகள் வெளிக்கொண்டுவந்தும் காவல்துறையும் அரசும் கண்டும் காணாமல் இருக்கின்றன.
மிகச் சமீபத்தில் கோவையில் சசிக்குமார் கொலையை முன்னிட்டு இந்துத்துவக் காலிகள் திட்டமிட்டு அரங்கேற்றிய தாக்குதல்களில் கடையுடைப்பு, பிரியாணி திருட்டு, செல்போன் கொள்ளை, வாகனங்களுக்கு தீ வைப்பு என்ற பட்டியலில் குண்டு வைப்பும் அடங்கியிருக்கிறது.
30-09-2016 அன்று தெற்கு கோவை, பொடனூர் பகுதி பள்ளிவாசல் மீது அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. குண்டு வெடிக்கும் சத்தம் கேட்ட பொதுமக்கள் உயிருக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். நாளிதழ்களில் பொடனூர் குண்டு வெடிப்பு சம்பவம் பெட்டி செய்தி அளவிற்கு கூட வரவில்லை.
காவிக்காலிகளின் வெடிகுண்டு பயங்கரவாதம் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் இந்தியாவின் வடமாநிலங்களில் வலுவாக வேரூன்றியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் பொதுமக்கள் இனி மிக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். அதற்கு காவிக்கூட்டம் வெடிகுண்டு சம்பவங்களை இதுவரை எவ்விதம் அரங்கேற்றியிருக்கின்றனர் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம்.
பொடனூர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பாக திருப்பூர் மாவட்டம் அடுத்தடுத்த பெட்ரோல் வெடிகுண்டு சம்பவங்களால் கலகலத்துப் போயிருந்தது. 29-02-2016 அன்று திருப்பூர் இந்து முன்னணி தலைவர் கோபிநாத் காரில் செல்லும் போது தன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக புகார் கூறியிருந்தார். காரின் முன்பகுதி எரிந்த நிலையில் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வேகமாக பரவின. இந்த குண்டுவெடிப்பிற்கு பின்னணியில் ஜிகாதி பயங்கரவாதிகள் இந்து தலைவர்களை குறிவைத்து கொல்கிறார்கள் என்று காவிக்கும்பல் வழக்கம் போல தன் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டது. இதை வைத்து திருப்பூரில் கலவரச் சூழலை உருவாக்க முனைந்தார்கள். வழக்குபதிவு செய்து முருகன் என்பவரை கைது செய்து விசாரித்ததில் கோபிநாத்தின் ஆலோசனையின் பெயரிலேயே கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட முருகன் அதே இந்துத்துவ கும்பலைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபிநாத் இதற்கு முன்பாக தனக்கு தபால் வெடிகுண்டு வந்ததாக புரளியைக் கிளப்பியிருக்கிறார். பிடிபட்ட முருகன் தபால் வெடிகுண்டும் கோபிநாத்தின் திட்டம் தான் என்று தெரிவித்திருக்கிறார். தற்பொழுது முருகன் சிறையிலும் கோபிநாத்தும் பிற காவிக் கும்பலும் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கோபிநாத்தை தேடிவருகிறோம் என்று சொன்னதுடன் காவல்துறை தன் கடமையை முடித்துக் கொண்டது.
வேலூர் சத்துவாச்சேரியில் இந்து பயங்கரவாதிகளே குண்டு வீசிய பேருந்து
கோபிநாத்தைப் போன்றே இந்துமுன்னணியின் பல்வேறு நிர்வாகிகள் பெட்ரோல் குண்டுவீச்சு நாடகத்தில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர். வேலூர் சத்துவச்சாரி இந்து முன்னணி நிர்வாகி மகேஷ், தன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக புகார் கொடுத்திருக்கிறார். சங்கரன்பாளையத்தைச் சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன், தனக்குச் சொந்தமான பேருந்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார். விசராணை தரப்பு இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாக நடந்திருப்பதாகச் சொல்கிறது.
கோபிநாத், சீனிவாசன், மகேஷ் போன்ற காவி வானரங்களின் வெடிகுண்டு அரங்கேற்றங்கள் தமிழ்நாட்டிற்கு புதிதல்ல. 2008 தென் காசி குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஆர்.எஸ்.எஸ் காலிகளே ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வீசி கலவரத்தை நடத்த முயன்றனர் என்பதிலிருந்து இந்துத்துவ கும்பல் இதை ஓர் உத்தியாகவே செயல்படுத்திவருவதைக் காணலாம். இதில் தென்காசி குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த ரவி பாண்டியன், குமார் மற்றும் நாராயண சர்மா ஆகிய மூவரில் நாரயண சர்மாவிற்கு பைப் வெடிகுண்டு தயாரிப்பதில் மிகுந்த நிபுணத்துவம் உண்டு என்பது தனிக்கதை.
இந்த சம்பவங்களை தொகுப்பாக பார்க்கிற பொழுது, ஒவ்வொரு கலவரச் சூழலிலும் முன் தயாரிப்பாக பெட்ரோல் மற்றும் பைப் வெடிகுண்டுகள் எங்கிருந்து வருகின்றன? காவிக்கூட்டம் தமிழ்நாட்டில் வெடிகுண்டுகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன.
சான்றாக மிகச் சமீபத்தில் 11-09-2016 அன்று இரவு, திருப்பூர் உகையனூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் நடத்திவரும் பனியன் கம்பெனியில் தீடிரென்று பெட்ரோல் குண்டு வெடிக்கிறது. இந்த சண்முகம் திருப்பூர் மாவட்ட இந்து முன்னணியின் பொருளாளர் ஆவார். இக்குண்டுவெடிப்பை முன்னிட்டு திருப்பூரில் கடையடைப்பு நடத்துவதாக இந்துவானரங்கள் கலவரச் சூழலைக் கட்டியமைத்தன. இச்சம்பவத்தின் விசாரணை நமக்கு அதிர்ச்சியான விசயத்தை முன்வைக்கிறது. அதாவது பெட்ரோல் குண்டு வெடித்த சமயத்தில் குண்டு வெடித்த பனியன் கம்பெனி வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்ததாம். இதில் இரண்டுவாய்ப்புகள் உள்ளன. ஒன்று காவி ஓநாய் ஹெச். ராஜா சொல்வதைப் போன்று பங்களாதேஷ் பயங்கரவாதிகள் கம்பெனியின் கதவைப் பூட்டிவிட்டு குண்டு போட்டிருக்க வேண்டும். அல்லது பனியன் கம்பெனியில் முன்கூட்டியே பதுக்கி வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்திருக்க வேண்டும்.
பனியன் கம்பெனி போர்வையில் வெடிகுண்டு முன் கூட்டியே பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா? அல்லது வெடிகுண்டை அசெம்பிள் செய்யும் போது வெடித்ததா? என்பதை காவல் துறை இதுவரை விசாரிக்கவேயில்லை! இதுவரை பல்வேறு வெடிகுண்டு புகார்கள் பொதுவெளிக்கு வந்துவிட்ட பிறகு இந்து முன்னணியாளர்களின் வீட்டிலும் தொழிற்சாலையிலும் முறையான சோதனையை காவல் துறை செய்திருக்க வேண்டும்.
ஏனெனில் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் பிற மாநிலங்களில் காவிக் கும்பல் வீட்டிலேயே வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. முதன்முறையாக 2006 ஆம் ஆண்டு மகராஷ்ட்ரா மாநிலம் நாண்டட் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் வீட்டிலயே வெடிகுண்டு தயாரித்த பொழுது தற்செயலாக வெடித்ததில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவத்திற்கு பிறகுதான் காவிக்கும்பல் வெடிகுண்டு தயாரிப்பது வெளிச்சத்திற்கு வந்ததது. நாட்டையே உலுக்கிய மகராஷ்ட்ராவில் நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு, மத்திய பிரதேசம் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, சம்ஜூதா விரைவு ரயில் குண்டுவெடிப்புகளை ஆர்.எஸ்.எஸ் தான் திட்டமிட்டு இயக்கியது என்பது அம்பலமாகிப் போனது.
கோவை இந்து முன்னணி கலவரம் – புதிய வீடியோ ஆதாரம்:
வடமாநிலங்கள் அல்லாது கேரளாவிலும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பலைச் சேர்ந்தவர்கள் வீட்டிலேயே வெடிகுண்டு தயாரித்து வருவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. 20-08-2016 அன்று கேரளா கண்ணூர் மாவட்டம் பிஜேபி கட்சியைச் சேர்ந்த தீக்ஷீத் (வயது 23) வீட்டிலேயே வெடிகுண்டை அசெம்பிள் செய்து பொழுது வெடித்துச் சிதறி இறந்தார். 2008லும் இதே போன்று கண்ணூரில் பஜ்ரங்தளைச் சேர்ந்த பியுஸ் மிஸ்ரா மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்த புபீந்தர் சிங், வீட்டில் வெடிகுண்டை கையாண்ட பொழுது வெடித்துச் சிதறி இறந்தனர். காவல் துறை இவர்களது வீட்டில் வெடிக்கப்படாமல் இருந்த பதினோறுக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை பின்னர் கைப்பற்றி இருந்தனர்.
அடுக்கடுக்கான இவ்வளவு சம்பவங்களுக்குப் பிறகு ஜமீன்தார் வீட்டு நாய்கணக்காக ஆர்.எஸ்.எஸ் காலிகள் வலம் வருகின்றனர். ஒரு பிரச்சனையின் முகாந்திரம் வெளியே தெரியும் பொழுதே, அதில் தலையிட்டு காப்பாற்ற வேண்டிய அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. நீதிமன்றம் இத்தகைய ஆர்.எஸ்.எஸ் ரவுடிகளுக்கு டவுசர் போடாமல் பேண்ட் போட்டு ஊர்வலம் நடத்தலாம் என்று அனுமதி அளிக்கிறது. பிரச்சனை டவுசர் பேண்டு தான் என்று வழக்காடு மன்றமே ஆர்.எஸ்.எஸ் விசயத்தில் அம்மணமாக நிற்கிறது!
மேலும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் தி இந்து, தினமலர், தினமனி போன்ற பார்ப்பன பத்திரிக்கைகள் உண்மைகளை மறைத்து இந்துத்துவ காலிகளுக்கு போர்வை போர்த்துகின்றனர். இவ்வளவிற்கும் பிறகு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் இருப்பது பொதுமக்களுக்கு ஆபத்தானதாகும். இனியும் எங்காவது பெட்ரோல் வெடிகுண்டு, பைப் வெடிகுண்டு நடைபெற்றால் அதற்கு இந்த நீதிமன்றமும் அரசும் தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம்.
இதுவரை, ஆர்.எஸ்.எஸ் கும்பல் ‘ஆடி மாத கூழ் ஊற்றுகிறோம்’, ‘விளக்கு பூஜை நடத்துகிறோம்’, ‘மாரியம்மனுக்கு மாவிளக்கு வைக்கிறோம்’ என்று ஊர்திருவிழாக்களை கைப்பற்றிதான் வெடிகுண்டு கலாச்சாரத்தை இந்த அளவிற்கு வளர்த்து எடுத்து இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டியிருக்கிறது. திருவிழாக்களில் ஒவ்வொரு ஊர்மக்களும் காவிக் கூட்டத்தை அப்புறப்படுத்த வேண்டியது அவசியமாகும். வரவிருக்கும் பூஜை விடுமுறை, மொகரம் பண்டிகைகள் இந்துத்துவக் காலிகளுக்கு மிக வாய்ப்பான ஒன்று. தமிழ்நாட்டில் பேரணியாகச் செல்லும் இவர்கள் பெட்ரோல் மற்றும் பைப் வெடிகுண்டுகள் வைப்பதில் கவனம் செலுத்தவே செய்வர். எனவே மக்கள் மற்றும் இளைஞர்கள் வீதிக்கொரு கமிட்டியை அமைத்து இந்து முன்னணியினர் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்களா என்பதை கண்ணும் கருத்துமாக ஆராய வேண்டும். அரசு தோற்றுப்போன பிறகு காக்கித்துறை காவித்துறையாக மாறிவிட்ட பிறகு நம்மை நாமே காத்துக்கொள்வதுதான் நம் முன் இருக்கும் ஒரே வழி!
“பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தொடரப் போவதில்லை” என்று சொன்ன மோடி அரசுக்கு உடனே பதிலடி கொடுத்தார், பாக். அரசின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஸ் அஜீஸ். “ஒருதலைப்பட்சமாக நதிநீர் ஒப்பந்தத்தை மீறுவதாகச் சொல்வதே போர்ப் பிரகடனம் ஆகும். கார்கில், சியாச்சின் போர்களின்போதுகூட சிந்து தடுக்கப்பட்டதில்லை. எனவே, இது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும், சர்வதேச நீதிமன்றத்திலும் பாக். முறையிடும்” என்றார்.
“போரிடும் பகை நாடாக இருப்பினும், நதிநீரைத் தடுப்பதென்பது அந்நாட்டு குடிமக்களைப் பட்டினிக்குத் தள்ளும் போர்க் குற்றம் என்று கூறுகிறது ஜெனிவா ஒப்பந்தத்தின் 54 பிரிவு. காவிரியைச் சார்ந்திருக்கும் 25 இலட்சம் ஏக்கர் விவசாயத்தை, 40 இலட்சம் தஞ்சை விவசாயிகளை, குடிநீருக்குச் சார்ந்திருக்கும் 19 மாவட்ட மக்களை மரணத்துக்குத் தள்ளும் பாரதிய ஜனதா, தமிழகத்தை பாகிஸ்தானைவிடக் கொடிய பகைநாடாக நடத்ததுகிறதென நீங்கள் கருதவில்லையா?
பாகிஸ்தானுக்கு எதிரான போர்ப் பதற்றம் நிலவுகின்ற சூழலிலும் வாகா எல்லை வழியாக சுமார் 185 லாரிகளில் சரக்குகள் வந்து போகின்றன; பேருந்துகள் செல்கின்றன. ஆனால், கர்நாடக எல்லைக்குள் தமிழகப் பேருந்துகளோ, லாரிகளோ அனுமதிக்கப்படுவதில்லை. தடுப்பவர்கள் கன்னட அமைப்பு என்ற போர்வையில் உலவும் பாரதிய ஜனதா காலிகள். ஒருமைப்பாடு பேசும் இந்தப் பிரிவினைவாதிகள், பாகிஸ்தானைக் காட்டிலும் கேவலமாகத் தமிழகத்தை நடத்துவதை நீங்கள் காணவில்லையா?
தமிழர்கள் கட்டிய கோவிலில் எந்தப் பார்ப்பான் மணியாட்ட வேண்டும் எனத் தீர்ப்பு கூறவும், நீட் தேர்வு மூலம் தமிழகத்தின் மருத்துவ இடங்களைத் ‘தேசியமயமாக்கவும், பேரழிவு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைக்கவும், சேதுக்கால்வாய்க்காக நடைபெற்ற கடையடைப்பைக் காட்டி, தி.மு.க. ஆட்சியைக் கலைத்துவிடுவதாக மிரட்டவும் நாக்கைச் சுழற்றிக் கொண்டு பேசிய உச்சநீதி மன்றம், காவிரி விவகாரத்தில் நீதிமன்றத்தைத் தொடர்ந்து அவமதித்துவரும் கர்நாடக அரசிடம் வாலைக் குழைக்கிறதே, சட்டம், நீதி என்ற இந்தப் பித்தலாட்டத்தை இனிமேலும் நாம் நம்புவதும், கட்டுப்படுவதும் மடமையில்லையா?
எல்லா நெறிமுறைகளையும் மீறி சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன், வெங்கய்யா நாயுடு என ஒரு கும்பல், கர்நாடகத்துடன் சேர்ந்து கொண்டு தமிழகத்துக்கு எதிராகச் சதி செய்கிறது. மோடி தங்களுக்கு அளித்த வாக்கை காப்பாற்றிவிட்டதாகச் சொல்லி ஆனந்தக் கூத்தாடுகிறார் கர்நாடக பா.ஜ.க.வின் ஜெகதீஷ் ஷெட்டர். “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்றத்தின் பரிந்துரை அடிப்படையில் உத்தரவிட உச்சநீதி மன்றத்துக்கு அதிகாரம் இல்லை; அதனை ஏற்பதும் நிராகரிப்பதும் மத்திய அரசின் விருப்பம் என்று உச்சநீதி மன்றத்தில் பேசுகிறது மோடி அரசு. “இதைவிட காவிரித் தண்ணீர் தமிழகத்துக்கு கிடையாது என்று மைய அரசு நேரடியாகச் சொல்லியிருக்கலாம் என்று பா.ஜ.க. அபிமானியான தினமணியே புலம்புகிறது. இது தமிழ்நாட்டுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் நடத்தும் போர் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா?
பா.ஜ.க.வும் காங்கிரசும் தமிழகத்தில் தலையெடுக்கவே இயலாததுதான், இந்த தேசியக் கட்சிகளின் ஓரவஞ்சனைக்கு காரணம் என்பது பகுதியளவே உண்மை. தமிழகத்தின் ஆரிய பார்ப்பன எதிர்ப்பு, இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு, திராவிட இயக்க மரபுதான் இந்த மதவெறியர்கள் இங்கே காலூன்ற முடியாததற்குக் காரணம். இவர்களை இந்துக்களின் பிரதிநிதிகளாக எண்ணியிருந்தவர்களும் கோவையில் அவர்கள் நடத்திய காலித்தனத்தைப் பார்த்தபின் தெளிந்து விட்டார்கள். ஆர்.எஸ். எஸ். பா.ஜ.க. கும்பல்தான் தமிழ்ச் சமூகத்தின் கொடிய எதிரி. இந்தச் செய்தியைத் தமிழகம் முழுதும் கொண்டு செல்வோம். எதிரிக்குரிய இடத்தை அவர்களுக்குக் காட்டுவோம்.
_____________________________________ புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________
நீர்நிலைகளின் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்
கடலூரில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் “நீர்நிலைகளின் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்” என ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகள் கடைவீதிகள், பேருந்துகள், தேநீர் விடுதிகள், அரசு அலுவலகங்கள் என மக்கள் கூடுமிடங்களில் எல்லாம் கடந்த ஒருவார காலமாக கடலூர் வட்டாரத்தில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
கடலூர் மஞ்சக்குப்பம் விக்னேஷ் மகாலில் 9.10.2016 அன்று கருத்தரங்கம் நடைபெற்றது. பகுதிவாழ் மக்கள் பல்வேறு அமைப்புகள், கட்சிகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு அரங்கத்தை நிரப்பினர்.
இதில் கலந்து கொண்டு பேசிய மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கத்தின் பொருளாளர் திரு.பூங்குன்றன்,
சைமா சாயப்பட்டறை கழிவு (கோப்புப் படம்)
“சாயப்பட்டறைகளின் கழிவுகளால் கோவை, திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளை நாசமாக்கி நஞ்சாக்கியவர்கள் சவுத் இந்தியன் மில்ஸ் அசோசியசன் என்கிற சைமா சாயப்பட்டறை கொலைகாரர்கள். தங்கள் பகுதியில் விளை நிலங்களையும், நீர் நிலைகளையும் அழித்து உருவான சாயப்பட்டறைகளை எதிர்த்த மக்களின் போராட்டங்களை அரசும், போலிசும் முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு ஒடுக்கியது. இங்கே அரசு மக்களின் நலனுக்காக எங்கே உள்ளது. எனவே உண்மையில் மக்களுக்கான அரசு வேண்டும். அதற்கு மக்கள் அதிகாரம் வேண்டும்” என்று பேசினார்.
அடுத்து பேசிய ஏ.ஐ.டி.யு.சி பொதுச் செயலாளர் சேகர்,
“இப்ப ஆயுத பூஜைநேரம், இன்றைக்குக் கூட இவ்வளவு கூட்டம் வந்திருக்கிறீர்கள் என்றால் உண்மையில் என்னால் நம்மவே முடியவில்லை. இப்போதல்லாம் பக்தி முத்தி போயி எல்லாம் குறிசொல்லும் காலமாகி போய்விட்டது. இப்ப நமக்கு இரண்டு பிரச்சனைக்கு விடை தெரியாமல் தவிக்கிறோம். அது காவேரி பிரச்சனை அது நம்ம பிரச்சனை அதாவது தமிழ் நாட்டோட பிரச்சனை. இன்னொரு பிரச்சனைக்கு கோயில் கோயிலா போவது, மொட்ட போடறது, பால்குடம் எடுப்பது, மண்சோறு சாப்பிடறது என்று கரைவேட்டி போட்ட கட்சிக்காரங்க இப்ப அப்பல்லோவ சுத்தி மஞ்ச வேட்டியா தெரியுது. போனவருடம் இதே சீசனில் மழையில் தவித்தோம் அரசாங்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை, இந்த வருடம் அரசாங்கம் அப்பல்லோவிலேயே செயல்படுது. காவேரி பிரச்சனைக்கும், காவேரி தாயோட பிரச்சனைக்கும் ஒரே தீர்வு, சாமி வந்து குறிசொன்ன சரியா இருக்குமா?” என்ற போது அரங்கம் முழுக்க கரவொலி எழுப்பினார்கள் மக்கள்.
பன்னாட்டு முதலாளிகளுக்கு மோடியின் சேவை (கோப்புப் படம்)
“சிங்கிள் பெஞ்ச், டபுள் பென்ச், ட்ரிபில் பென்ச் என்று பல பென்ச் வந்தாலும் உமாபாரதி, மல்லிகா அர்ஜீன் கார்கே போன்றவர்களின் கண் பார்வையில்தான் அது இயங்குது. கர்நாடகாவில் பி.ஜே.பி ஆட்சியை பிடிக்க எத்தகைய கீழ்த்தரமான வேலைகளையும் செய்து இனவெறியை தூண்டும் சதிவேலையில் ஈடுபட்டுள்ளது என்பதை நிரூபித்துள்ளன சமீபகால சம்பவங்கள். எனவே இனியும் நாம இப்படி இருந்தோம்னா செத்து மடிந்துதான் போகவேண்டும். மொத்த தமிழ்நாடும் கார்ப்பரேட்டு கம்பனிகளோட வளர்ச்சிக்காக மாறிபோய் விட்டது. வேதாந்தா கம்பெனியை விரட்ட ஆதிவாசி மக்கள் வில்லின் நுனியில் அதிகாரத்தை செலுத்தினார்கள். விரட்டியடிக்கப்பட்டது வேதாந்தா நிறுவனம். இங்கே நம்முடைய கனிமவளங்களை சுரண்டி நீர்நிலைகளை அழிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளையும், பயங்கரவாத பூச்சாண்டி காட்டி பயங்கரவாதம் செய்யும் காவி தீவிரவாதிகளை வீழ்த்த வேண்டும்” என்று உரையாற்றினார்.
பெருமாள் ஏரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்க செயலாளர் திரு சண்முகம் பேசியபோது, “நீர்நிலைகள் பாதுகாப்பை அரசாங்கம் எந்த வகையிலும் சரிசெய்யாது. 25 வருடமா வெள்ளம் வடிவதற்கு யோசன சொல்லி போராடிவருகிறோம். மழைக்காலத்தின்போது மொத்த தண்ணீயும் இங்கதான் வந்து சேருது. இதுக்கு கடல்ல கலக்கிற இடம் ஒரேவழி தான். அதுவும் வளைந்து நெளிந்து போவும், வாய்க்காவும் எதுவும் சுத்தமா இருக்காது, தண்ணீ தேங்கிப் போயி பயிரெல்லாம் அழிந்து நாங்க சாகிறோம். இந்த வெள்ள தண்ணீயை வடியவைக்க இரண்டு முகத்துவாரம் வேணும்முன்னு போராடி வருகிறோம். எந்த அதிகாரியும் செய்யல, ஒன்னு ஒன்னுக்கும் மனுகொடுத்து கேட்டாலும் விவசாயிகள் அலையணும், லஞ்சம் கொடுக்கணும் அப்பதான் ஃபைல் அதிகாரிங்க டேபிளில் இருந்து நகரும்.
கடலூர் வெள்ளம் (கோப்புப் படம்)
பொதுப்பணித்துறைன்னு ஒன்னு இருக்குது, ஆனால் அது பொதுப்பணியை செய்யறது இல்ல, மணல் அள்ளறதுலயும், கட்டட காண்ட்ராக்டிலேயும், கமிசன் பணியைதான் பார்க்குது. அப்பறம் எப்படி நாம நல்லாயிருப்போம். எங்க கிராமத்த சுத்தி இருக்கிற குளங்கள எங்க சொந்த முயற்சியில நாங்களே ஜே.சி.பி வைத்து பல கிலோமீட்டர் சுத்தம் செய்து இருக்கிறோம். அடுத்த மழைக்கு பெருமாள் ஏரியை சுத்த செய்யலைன்னா பெரிய அழிவு வரும்.
போன மழையின்போது புதிய தலைமுறை டிவி வந்ததது. நீர்நிலைகளை சுத்தம் செய்வது சம்மந்தமாக விவாதம் நடத்துச்சி. அப்போ என்னை பேட்டி எடுத்தாங்க. அவங்க தேர்வு செய்து இருக்கிற குளத்தை சுத்தம் செய்வதற்கு எங்க ஊரில் இருக்கும் ஆட்களையும் என்னையும் கூப்பிட்டாங்க. எங்க ஊரு பெருமாள் ஏரியையே சுத்தம் செய்ய காணோம். 14 கிமீ நீளம் 1 கிமீ அகலம் 20 மீட்டர் தண்ணீரை தேக்கலாம். இதச் செய்யறதுக்கு அரசாங்க அதிகாரிங்க கிட்ட கேட்டுக்குட்டு இருக்கிறோம். எங்க ஊருகாரங்க வருவது இருக்கட்டும், அப்படியே வந்தாலும் ஒருநாள் இரண்டுநாள் வரலாம். ஆனால் இப்ப உள்ள நிலைமையில சாத்தியமில்ல, இதுக்கு எஸ்.ஆர்.எம் பல்கலைகழக மாணவர்கள் வருவார்களா? இல்ல பச்சமுத்து வருவாரா? அவர் மகன்தான் வருவாரா? நீங்க சொல்லி கொடுப்பதை பேசறதுக்கா நாங்க இருக்கிறோம். எங்க பிரச்சனை எல்லாம் உங்களுக்கு தெரியாது, உங்க விளம்பரத்துக்காக எங்ககிட்ட வராதிங்க என்று சொன்னதுபோது அவர் கோபித்து கொண்டார்” என்று அம்பலப்படுத்தியபோது அரங்கில் சிரிப்பொலியுடன் கைதட்டினர்.
அடுத்து பேசிய தி.மு.க மாணவரணி செயலாளர் திரு இள.புகழேந்தி, “வரலாறு என்பது கங்கைக் கரையில் இருந்து துவங்குவதாக தவறாக உள்ளது, அது காவேரியில் இருந்து துவங்கப்பட வேண்டும். ஏற்கனவே நம் திராவிடன் வரலாறும், தமிழன் வரலாறும் இரட்டடிப்பு செய்ததுபோல் இப்போது இந்த கயவர்கள் நம்முடைய ஆறுகளையும், ஏரிகளையும் அழித்து நம்முடைய விவசாயத்தை அழித்து நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி ஆட்சியாக மாறிபோய்விட்டது.
“காவேரிக்காக ஏன் போராட்டம், கடல் தண்ணியை நல்ல தண்ணீயாக்கினால் விவசாயம் செய்யலாம், குடிக்கலாம், குளிக்கலாம்” என்று நக்கல் செய்கிறான்” (சுப்பிரமணியசாமி)
இயற்கை அழிந்தால் உயிரினம் அழியும், ஆசியாவிலேயே மிகப்பெரிய டெல்டா பகுதியாக உள்ள இப்பகுதியில் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்கள் அழிந்துள்ளன. இந்நிலையில் ஒருவர் பறந்துகொண்டு இருக்கிறார், இன்னொருவர் படுத்து கொண்டு இருக்கிறார். பறந்து கொண்டு இருப்பவர் தன்னுடைய நாடு எது என்று தெரியாமல் உலக நாடுகளை சுற்றிகொண்டிருக்கிறார். அவர்தான் நரேந்திர மோடி. இன்னொருவர் படுத்துக் கொண்டு அப்பல்லோவில் இருக்கிறார். எல்லா பிரச்சனைகளையும் மறைப்பதற்கு ஏதோ ஒரு பிரச்சனையை பெரிதாக்கி அதையே பேசவைத்து திசைமாற்றுவது இவர்கள் குணம். நபர்கள் வேறு என்றாலும் இவர்கள் சிந்தனையும், செயலும் ஒன்றுதான். கர்நாடகாவில் கலவரம் செய்கின்ற காவேரி நீரை தர மறுக்கின்றவர்களின் நோக்கமும் ஒன்றுதான். அது என்ன நோக்கம்? தமிழன், தமிழர்கள் மீதான வெறுப்புணர்ச்சியையும், பகையுணர்ச்சியையும் வளர்ப்பதன் மூலம் ஆட்சியை பிடிக்க அவர்கள் செய்யும் சூழச்சி. அங்கே ஆட்சியை பிடிக்க சூழ்ச்சி, இங்கே ஆட்சியை தக்க வைக்க சூழ்ச்சி.
நாம் போராடுகிறோம். பேருந்துகளை நிறுத்துகிறோம், கடைகளை மூடுகிறோம், மறியல் செய்கிறோம், ஆர்ப்பாட்டம் செய்கிறோம், கைது செய்யப்படுகிறோம். ஆனால் ஒரு பார்ப்பனிய பயங்கரவாதி அமைதியாக இருந்துகொண்டு பேசுகிறான். “காவேரிக்காக ஏன் போராட்டம், கடல் தண்ணியை நல்ல தண்ணீயாக்கினால் விவசாயம் செய்யலாம், குடிக்கலாம், குளிக்கலாம்” என்று நக்கல் செய்கிறான். இவனைப் போன்ற நாய்களையெல்லாம் பார்த்த இடத்தில் செருப்பால் அடிக்க வேண்டும்.
நான் தி.மு.க-வைச் சேர்ந்தவன் என்பதற்காக அப்படி சொல்லவில்லை. உண்மையிலேயே தமிழர்கள் நாத்திகவாதிகள், சுயமரியாதைகாரர்கள், அவர்கள் இழிவானவர்கள், என்கிற விசமத்தனமான பார்வைதான் சுப்பிரமணிய சுவாமிக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் உள்ளது. இங்கே எத்தனை ஆணையங்கள், வாரியங்கள், ஆய்வுக் குழுக்கள், நிபுணர் குழுக்கள் வந்தாலும் அரசியல் ஆதாயத்தின் கீழ்தான் நிறைவேற்றலாமா? வேண்டாமா என்பதை முடிவெடுக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாடு என்று பேசிக்கொண்டே நமக்கு ஓரவஞ்சனை செய்கிறார்கள். எனவே ஆணையங்கள், தீர்ப்புகள், நிபுணர் குழுக்கள், மேலாண்மை வாரியம் போன்றவை தீர்வை தராது.
நாலு பேரு இருந்தா டிமாண்டு 400 பேர் இருந்தால் கமாண்டு இதுதான் மக்கள் அதிகாரம். இந்த நாட்டை பாதுகாக்கவும், இயற்கையை பாதுகாக்கவும், போராடுவோம். வ.உ.சி, சுப்பரமணிய சிவா, திருப்பூர் கொடிகாத்த குமரன் போன்றவர்கள் பாதையில் நாட்டை காப்போம். தந்தை பெரியாரின் பாதையில் ஆர்.எஸ்.எஸ், மோடி, சுப்பரமணியசாமி போன்ற பயங்கரவாதிகளை வீழ்த்த மக்கள் அதிகாரமாக ஒன்றிணைவோம்” என்று முடித்தபோது அரங்கில் நீண்டநேர கரவொலி ஒலித்தது.
இறுதியாக மக்கள் அதிகார மாநில தலைமைக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் பேசுகையில்,
“காவேரி சிக்கல் என்பது தண்ணீர் சிக்கல், நதிநீர் சிக்கல்களை உள்ளடக்கியது. கடந்த 150 கால வரலாற்றில் எப்போதுமே இருதேசிய இனங்களுக்கும் இடையில் இப்படிப்பட்ட மோசமான பதற்றம் இருந்ததில்லை. தமிழர்களை அடித்த ஒவ்வொருவனும் 91 கலவரத்தை தெரியுமா என்று சொல்லி சொல்லி அடித்துள்ளார்கள், வாட்டாள் நாகராஜன் என்ற கன்னட இன வெறியனின் அடியாட்கள். பி.ஜே.பி, ஆர்,எஸ்,எஸ்-காரர்கள் உண்மையிலேயே கர்நாடக மக்கள்மீது உள்ள பாசத்தால் செய்யவில்லை. இவர்கள் இனவெறியை தூண்டுவதன் மூலம் அரசியல் உள்நோக்கத்தை நிறைவேற்றுகிறார்கள். எங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. உங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வேண்டுமா என்று கர்நாடக மக்களுக்கு வெறியூட்டுகிறார்கள்.
உண்மையில் தண்ணீர் வேண்டும் என்பவர்கள் கர்நாடகாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர விடுதிகள், உல்லாச மாளிகைகள், நீச்சல் குளங்கள் போன்றவற்றிற்கு தண்ணீர் தேவை, இதற்காகவே காவேரியை சீரழித்து உள்ளார்கள். இவை மட்டுமின்றி பெங்களூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 900 ஏரி, குளங்கள் இருந்தன. அவை எல்லாம் இன்று குடியிருப்புகளாக மாறிவிட்டன. உலகமயமாக்கலின் விளைவாக பெரிய குடியிருப்புகள், மேட்டுக்குடியினருக்கு தண்ணீர் தேவையாக உள்ளது. இதற்காகவே தமிழகத்தின் டெல்டா அழிக்கப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் காடுகள் அழிக்கப்பட்டு உள்ளன. ஆற்றின் நீர்நிலைகள் அனைத்தும் தொழிற்சாலைகளால் நஞ்சாக்கப்பட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக மக்கள் பயன்படுத்தி வந்த நீராதாரங்கள் அழிக்கப்படுவதோடு அதோடு விவசாய நிலங்களும் அழிந்து போய்வருகின்றன. இதை செய்கின்றவர்கள் அரசியல், அதிகாரவர்க்க கிரிமினல்கள், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், போலீசு கிரிமினல்கள். இந்த கூட்டணிதான் அனைத்தையும் இயக்குகிறது.
தோழர் காளியப்பன் உரை
இன்று தமிழகத்தின் ஆறுகளில் மணல்கொள்ளை, நீலகிரி மற்றும் ஆந்திர காடுகளில் மரங்கள் வெட்டி காடுகள் அழிப்பு, மீத்தேன் எரிவாயு திட்டம், கெயில், செயில் குழாய் பதிப்பு கூடங்குளம் அணுஉலை என்று மொத்த நாடும் இந்த கிரிமினல் கும்பலால் அழிக்கப்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் உத்தரவுகளை அதிகாரிகளே மதிப்பதில்லை, நீதித்துறையின் உத்தரவுகளை எந்த மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நாட்டைகாக்கும் அரசு கட்டமைப்பு என்பது எதையும் பாதுகாக்க முடியாமல், அமுல்படுத்த முடியாமல் தோற்றுபோய் விட்டன என்பதை ஒவ்வொரு போராட்டங்களும், சம்பவங்களும் உணர்த்துகின்றன.
காவல்துறையும், நீதித்துறையும் மக்களுக்காக தாம்செய்ய வேண்டிய கடமையிலும், பொறுப்பிலும் இருந்து விலகி ஓடிபோனது மட்டுமல்லாமல் நியாயமான கோரிக்கைகளுக்காக மக்கள் போராடும்போது அடக்கி ஒடுக்குகின்ற கட்டமைப்பாக மாறிவிட்டது.
இனி இவர்கள் செய்ய தவறியதை நாம் செய்வோம், தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் இரட்டை வேடம்போடும் தமிழினத்தின் மீதான வெறுப்புடன் ஓரவஞ்சனை செய்யும் மோடி அரசுக்கு எதிராக போர்க்குரல் எழுப்புவோம். தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களான வருமானவரித் துறை, ரயில்வே, தொலைபேசி, கஸ்டம்ஸ், தபால் அலுவலகங்கள் போன்ற மத்திய அரசு சம்மந்தப்பட்ட அனைத்து அலுவலகங்களையும் முற்றுகையிட்டு மூடுவதன் மூலமாகத்தான் இந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை பணிய வைக்க முடியும். எங்கெல்லாம் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டுமோ, எங்கெல்லாம் ஆக்கிரமிப்பில் உள்ளதோ அங்கெல்லாம் மக்களே அதிகாரத்தை கையிலெடுத்து கொள்ளும், மாற்று அரசு நிர்வாகமாய் நாமே முன்னேறுவோம்” என்று கூறி முடித்தார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
சென்னை வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் நடந்து வந்தேன். நிழலுக்காக தேடியதில் கிடைத்த ஒரு சர்ச் வளாகத்தில் ஒதுங்கினேன். என் களைப்பறிந்து தண்ணி தந்தது மட்டுமல்லாமல் மின் விசிறியை போட்டவரைப் பார்த்தேன். உழைப்பறிந்த ஒருவருக்கு மற்றவரின் களைப்பை புரிந்து கொள்வது மிகவும் எளிது என்பதை சொல்லாமல் உணர்த்தியது அந்தோணியின் செய்கை.
திருத்தணியை அடுத்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி. 36 வயதாகும் இவருக்கு 28 வயதுடைய மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். விவசாயத்தை பின்னணியாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த அந்தோணி சென்னையில் உள்ள இந்த தேவாலயத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்கிறார்.
திருத்தணியில இருந்து இங்க எப்படி வேலை கிடைச்சு வந்திங்க?
மாதிரிப் படம்
திருத்தணியில உள்ள திருச்சபையில மெம்பரா இருக்கேன். நான் பிள்ளைகள வச்சுகிட்டு படுற கஸ்டம் எல்லாம் ஃபாதருக்கு தெரியும். அங்க சொல்லி வச்சுருந்ததால இங்க வேலை இருக்கு போறியான்னு கேட்டாங்க. அவங்க ஏற்பாட்டுலதான் இங்க வேலைக்கு வந்தோம்
குடும்பத்தோடவா வந்துருக்கிங்க?
ஆமா! சர்ச்சு நிர்வாகத்துலேயே பள்ளிக்கூடமும் இருக்கு. பசங்கள அதுல சேத்துருக்கேன். என் சம்சாரமும் பள்ளிக்கூடத்துல பசங்கள பாத்துக்கற ஆயா வேலை பாக்குது.
நீங்க என்னென்ன வேலை செய்றீங்க?
இந்த சர்ச்சு வளாகம் முழுசும் கூட்டி பெருக்கி சுத்தமா வச்சுக்கனும். ஃப்ரேயர் ஹால நீட்டா வச்சுக்கனும். மொத்த இடத்துக்கும் தண்ணி டேங்குல ஏத்தனும். செடிகளுக்கு தண்ணி விடனும். கேன் வாட்டர் எடுத்து வந்து ஆபிஸ் ரூம், க்ளாஸ் ரூம், ஃப்ரேயர் ஹால் எல்லா எடத்துலயும் போடனும். எலக்ட்ரிக், ப்ளம்பிங், கார்பெண்டர் வேல எதுல பிரச்சனையின்னாலும் சரி செய்யனும்.
சர்ச்சுல கல்யாணம், ஞானஸ்தானம், இப்படி ஏதாவது விசேசம் நடந்தா சாமினா பந்தல், சேரு, சமையல் பாத்திரம் எல்லாம் சர்ச்சு நிர்வாகத்து மூலமா வாடகைக்கு கொடுக்குறாங்க. அதை பொறுப்பா கணக்கு பாத்து கொடுக்கனும். திருப்பி வாங்கனும். இது போக எந்த வேலை சொன்னாலும் செய்வேன்.
உங்க சம்சாரம் என்ன வேலை பாப்பாங்க?
சம்சாரம் பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம், டாய்லெட் சுத்தப்படுத்தனும். பிள்ளைங்கள பாத்துக்கனும், சோறு ஊட்டனும், ஒன்னுக்கு ரெண்டுக்கு போனா அதை பாக்கனும்.
எவ்வளவு சம்பளம் குடுக்குறாங்க?
எனக்கு 5000 என் சம்சாரத்துக்கு 2000 தாராங்க.
சென்னையில் இந்த சம்பளம் உங்களுக்கு குடும்பம் நடத்த போதுமானதா இருக்கா?
நன்கொடையா வர்ற அரிசியில 20 கிலோ கொடுப்பாங்க. மத்தபடி குடும்பத்துக்கான செலவு நம்மளது. மூணு பிள்ளைகளுக்கும் படிப்புக்கு காசு கிடையாது. உடம்புக்கு எந்த நோயி வந்தாலும் வயித்தியம் பாக்கறதா சொன்னாங்க. அட்டை ஓடு போட்ட ரூமு குடுத்துருக்காங்க (அஸ்பெஸ்டாஸ்). கரண்டுக்கு காசு கெடையாது. இது எல்லாத்தையும் கணக்கு போட்டா முன்ன பாத்த வேலைக்கி இது எவ்வளவோ மேலு. ஆண்டவர் நல்ல வழியத்தான் காட்டிருக்காருன்னு படுது.”
இதுக்கு முன்னாடி என்ன வேலை பாத்திங்க?
சமையல் மாஸ்டரா இருந்தேன்.
அந்த வேலையை பத்தி சொல்லுங்க?
அந்த வேலையை பத்தி என்னத்தங்க சொல்றது. 8 வருசமா இந்த வேலைதான் பாத்தேன். 2000 பேருக்கு ஆடர் எடுத்து சமைப்பேன். சீசனுக்கு 4, 5 கல்யாணம் வரும். மத்த மாசத்துல 1, 2 வர்ரதே தடுமாற்றம்தான். சம்சாரமும் கூட ஹெல்பரா வருவாங்க. இருந்தும் கட்டுபடி ஆகலை.
என்ன வகை சமையல் செய்வீங்க? வருமானம் என்ன கிடைக்கும்?
சைவம் அசைவம் ரெண்டும் செய்வேன். கறியும் அரிசியும் ஒன்னா கலந்த தம் போட்ட பிரியாணி செய்ய 1 கிலோ அரிசிக்கி 70, 80 பேசுவோம். சோறு தனி கிரேவி தனியா செஞ்சு ரெடி பன்ற பிரியாணின்னா 100 ஆகும். 100 இல்லேன்னா 150 கிலோ அரிசிக்கிதான் ஆடர் கிடைக்கும். 4 ஹெல்பர் வேணும். சைவமுன்னா ஹெல்பரு இன்னும் அதிகமாகும். அவங்க சம்பளம் போக என்னத்த மிஞ்சும் சொல்லுங்க.
பெரிய ஆர்டர் எல்லாம் ஏன் உங்க கைக்கு கிடைக்கிறதில்லை?
இப்பெல்லாம் இணையத்துலேயே ஆர்டர் எடுக்குறாங்க. அந்த வசதியெல்லாம் நமக்கு கெடையாது. எனக்கு கிடைச்ச சின்ன ஆர்டர் கூட பல நேரம் நேரடியா வராம இணையத்துல உள்ள தரகருங்கதான் பேசிவிடுவாங்க. எல்லாம் தரகர் இல்லாம நடக்காது.
விவசாயி ஆன நீங்க எப்படி சமையல் கத்துகிட்டிங்க?
என்னத்தங்க விவசாயம். எங்க அப்பாதான் விவசாயம் பாத்தாரு. நான் கூடமாட எல்லா வேலையும் செய்வேன். எங்களுக்கு கொஞ்சம் நிலம் சொந்தமா இருந்துச்சு. குத்தகைக்கு கொஞ்சம் விவசாயம் செஞ்சோம். பாடு பட்டதுதான் மிச்சம். நாங்க நாலு பிள்ளைங்க வயித்துக்கு சாப்பாடு நல்ல துணிமணி வாங்கிக்க முடியாது.
பிறகு அப்பா கூட சேந்து விவசாய கூலி வேலைக்கி போனேன். நண்பர்களோட சேந்து பெயிண்டிங் வேலைக்கி போனேன். 18 வயசு ஆச்சு என்னடா பொழப்பு இது கையுக்கும் எட்டாமெ வயித்துக்கும் பத்தாமென்னு வெறுத்துப் போயி வீட்ட விட்டு வேலை தேடி வெளிய வந்தேன். ரயில்வே கேண்டின்ல வேலைக்கி சேந்தேன்.
சமையல் தெரியாதப்ப எப்படி கேண்டின்ல வேலைக்கி சேந்திங்க?
சமையல்காரரா சேரல. கேண்டின்ல உள்ள சாப்பாட்ட ரயில் பயணிகள்ட்ட விக்கற சேல்ஸ் மேனா வேலைக்கி சேந்தேன்.
அதுல எப்படி மாச சம்பளமா?
மாதிரிப் படம்
மாச சம்பளமா? வயித்தெரிச்சல கெளப்பாதிங்க. ஒரு சாப்பாட்டுக்கு 2, 3 ரூபா கெடைக்கும். ஒரு நாளைக்கி 200 அல்லது 300 கிடைக்கும். விஜயவாடவுல இருந்து சென்னைக்கி வர்ர ரயில்ல, நாங்க அஞ்சு பேரு சேந்து இந்த வேலையை பாத்தோம். லாப நஷ்டத்த பிரிச்சு எடுத்துக்குவோம். சாப்பாட்டுக்கு மூனு மணி நேரத்துக்கு முன்னமே யாருக்கு என்ன சாப்பாடு தேவையின்னு ஆர்டர் எடுத்து ஸ்டேசன்ல இருக்குற கேண்டினுக்கு போன்ல சொல்லிருவேம். தயாராயிரும்.
சாப்பிடறவங்கள பாத்துட்டு பக்கதுல இருக்கவங்க திடீர்னு சிலபேர் சாப்பாடு கேப்பாங்க. அதுக்காக கூடுதலா 100 சாப்பாடு எடுப்போம். ஆர்டர் குடுத்த சிலபேர் பாதி வழியிலேயே இறங்கிருவாங்க. இல்ல வேணாம்னு சொல்லுவாங்க. மிஞ்சுன சாப்பாட்ட வந்த வரைக்கும் லாபன்னு அன்ரிசர்வேசன்ல கூட பாதி விலைக்கி தருவோம். இப்படி எது வேணுனாலும் நடக்கும் சூழ்நிலைக்கு தகுந்தபடி லாப நஷ்டம் வரும். உத்தரவாதமா எதுவும் சொல்ல முடியாது.
விக்கலேன்னா சாப்பாட்ட என்ன செய்வீங்க?
குப்பையில போட வேண்டியதுதான். ஆனா எடுத்த சாப்பாட்டுக்கு பைசா கொறையாம தெண்டம் கட்டியாகனும். பழக்கப்பட்டதால முன் பணம் கட்டாம கேண்டின் மாஸ்டர் மேற்பார்வையில சாப்பாடு எடுத்துக்கலாம். ஆனா எத்தன சாப்பாடு எடுக்குறோமோ அத்தனைக்கும் நாமதான் பொறுப்பு. விக்கலேன்னு திருப்பிக் கொடுக்க முடியாது. கொஞ்சமா எடுக்க வேண்டியதுதானேன்னு திட்டுறது மட்டும் இல்லாமெ மறு நாளைக்கி சாப்பாடு குடுக்க மாட்டாங்க.
சாப்பாடு குடுக்கறது, நம்ம கிட்ட காசு வாங்கறது இதுக்கு எல்லாம் இன்சார்ஜ் கேண்டின் மாஸ்டர்தான். அவரை தாசா பண்ணிகிட்டு சமையல் கட்டு வரைக்கும் போவேன். கூடமாட ஒத்தாசை பன்னுவேன். காய் நறுக்குவேன், அரிசி கழுவுவேன், மாவு பெசஞ்சு குடுப்பேன். இதுக்கெல்லாம் காசு கிடையாது. விக்காத சாப்பாட்டுக்கு மறு நாள் காசு குடுக்குறேன்னு சொன்னா சரி போடான்னு சொல்வாரு அவ்வளவுதான்.
இருவது வயசுல இந்த வேலைக்கி போனேன். அப்படியே அவர் கூட இருந்து சமையலையும் கத்துகிட்டேன். கல்யாணம் வேற ஆச்சு. இதுலேயே இருந்தா சரிபட்டு வராதுன்னு வெளிய வந்தேன்.
எந்த வயசுல உங்களுக்கு கல்யாணம் ஆச்சு?
இருவத்தி ஆறு வயசுல கல்யாணம் ஆச்சு. காலையில 4 மணிக்கி வேலைக்கி போனா ராத்திரி மணி 1, 2 ஆயிரும் வீடு திரும்ப. சம்சாரம் சொன்னுச்சு “நீ மட்டும் சிரமப்படுற உனக்குதான் சமையல் தெரியும்ல நீ வந்துரு நானும் உதவியா வேலை செய்றேன் விசேசங்களுக்கு சமைப்போம்”ன்னு சொன்னதும் கரண்டிய கையில எடுத்துட்டேன்.
இத்தன வேலை செஞ்சதுல ஒரு மன அமைதிங்கறதே இருக்காது. சம்பாதிக்கிறது ஒரு மடங்குன்னா கடன் ரெண்டு மடங்கா இருக்கும். கடனை அடைக்கனும் பிள்ளைங்க படிப்பு அதுங்களுக்கு தேவையான நல்லது கெட்டது எதுவுமே முடியாம பரபரன்னு ஓடிகிட்டே இருந்தேன். ஒரு கட்டத்துல வாழ்க்கையே வெறுத்து போச்சு. பிள்ளைங்கள பெத்துட்டு வாழ்கைய வெறுத்துட்டு ஓட முடியுமா அதுங்களுக்காக வாழந்து தானே ஆகனும்.
இங்க வேலைக்கி வந்த பிறகு மனசு கொஞ்சம் அமைதியா இருக்கு. சம்சாரம் மொகத்துல சிரிப்ப பாக்குறேன். பிள்ளைங்க இங்கிலீசு படிப்பு படிக்கிறாங்க. எல்லாத்துக்கு மேல ஆண்டவர் கூட இருக்குற பாக்கியம்.