அதிக அளவில் மதிப்பெண் எடுக்காத கல்லூரி மாணவர்களைப் பற்றி பேராசிரியர்களால் கூறப்படும் நக்கலான வசனங்கள் ஏராளம். ஒரு மாணவன் அதிக அளவில் மதிப்பெண் எடுக்காததற்குக் காரணம் கல்விமுறையும் பேராசிரியர்கள் பாடம் நடத்தும் லட்சணமும்தானே தவிர மாணவனல்ல. அதே சமயத்தில் அதிக அளவில் மதிப்பெண் எடுக்கக்கூடிய மாணவர்களுக்கு ஏற்படும் கதிகளை பார்க்கும்போது சிலநேரங்களில் அப்படி மதிப்பெண் எடுக்காமலேயே இருந்துவிடலாம் என்றே தோன்றுகிறது. அப்படிப்பட்ட அடிவயிறு கலங்க வைக்கும் வேலைகளைச் செய்வதும் அதே கல்லூரிப் பேராசிரியர்கள்தான். இவர்கள் பேராசிரியர்களா? அல்லது பேராசிறியர்களா?
அதிகமான மதிப்பெண் எடுத்தால்தான் ஏதேனும் வேலை பார்க்கலாம் என்பதை தலையெழுத்தாக மதித்துப் போற்றி நடக்கும் ஒரு மாணவர் தனக்குக் கிடைக்கப்போகும் ஒவ்வொரு மதிப்பெண்ணையும் கவனித்தே தேர்வுகளை எழுதுகிறார். அதுபோல தேர்வு முடிந்ததும் எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கும் என பலமுறைகளில் மதிப்பீடு செய்து பார்க்கிறார். தேர்வு முடிவு வந்து மதிப்பெண்ணைப் பார்க்கும்போது அவருக்குக் கிடைத்த மதிப்பெண் குறைவாக இருப்பதாக எண்ணினால், உடனே மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கிறார். மறுமதிப்பீடு செய்யப்பட்டு மீண்டும் வருகின்ற மதிப்பெண்ணைப் பார்த்தால் ஒன்று அதே மதிப்பெண் இருக்கவேண்டும் அல்லது சற்றுக்கூடி இருக்கவேண்டும், ஆனால் மதிப்பெண் அதலபாதாளத்திற்குக் குறைந்தால்………?
காரைக்குடி அழகப்பா பலகலைக்கழகத்தின் கீழ் வருகிற ஒரு கல்லூரியில் ஒரு மாணவர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கிறார். அவர் எடுத்த மதிப்பெண் 74. ஆனால், அவர் எதிர்பார்த்த மதிப்பெண் 83. எனவே, மறுமதிப்பீட்டிற்கு அனுப்புகிறார். ஆனால், மறுமதிப்பீடு செய்து அவருக்கு வந்த மதிப்பெண் 4. அதாவது வெறும் 4. பதறிப்போன அம்மாணவர் அந்தப் பாடத்தை நடத்திய தனது கல்லூரிப் பேராசிரியரிடம் கேட்கிறார். அவர் துறைத் தலைவரைப் போய்ப் பார்க்கச் சொல்கிறார். இவர் துறைத் தலைவரைப் போய்ப் பார்க்கிறார். அவர் முதல்வரைப் போய்ப் பார்க்கச் சொல்கிறார். இவரும் முதல்வரைப் போய்ப் பார்க்கிரார். அவரோ, இது பல்கலைக்கழக விவகாரம். அங்கே போய்க் கேட்டுக்கொள் என்கிறார். மாணவர் உடனே காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். மறுமதிப்பீட்டுத்துறையில் போய்க் கேட்கிறார். அதற்கு அங்கே அவருக்குக் கிடைத்த பதில் என்ன தெரியுமா?
“அப்படித்தான் போடுவோம். நீ என்ன செய்வ? ஒழுங்கா கிடச்ச மார்க்க வச்சுக்கிட்டு இருந்திருக்கலாம்ல. இப்ப இதுதாம்ப்பா மறுமதிப்பீட்டு மார்க்கு. நீ என்ன செய்ய முடியுமோ? செஞ்சுக்க. எங்க போக முடியுமோ? போய்க்க.”
எப்படி இந்த பதில்!. மாணவர் பதறிப்போய் மீண்டும் கல்லூரிக்கு வந்து பேராசிரியர்களிடம் சொல்கிறார். ஆனால், அதற்குக் கிடைத்த பதில்
அழகப்பா பல்கலைக் கழகம்
“அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.”
ஏன் பேராசிரியர் இப்படிச் சொல்கிறார்? இவரும் மறுமதிப்பீட்டிற்குப் போவார். நாளைக்கு இவர்மீது ஏதாவது புகார் வந்தால் யார் காப்பாற்றுவார்? பல்கலைக்கழகமா? மாணவரா?
ஆக, மொத்தமாக பட்டை நாமம் சாத்தப்பட்ட நிலையில் கொல்லங்குடிக் காளியாத்தாவிற்கு காசு வெட்டிப் போடுவதைத்தவிர மாணவருக்கு வேறு வழியில்லை.
அப்படியே காசு வெட்டிப்போட்டாலும் ஒரு பயனும் இல்லை. காரணம், இது அழகப்பா பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இதே நிலைதான் நிலவுகிறது.
மறுமதிப்பீடு செய்யும் பேராசிரியர் காலை பத்துமணிக்கு வருகிறார். ஒருநாளைக்கு அவர் 50 விடைத்தாள்கள் திருத்தவேண்டும். அதற்கு அவருக்கான கூலி 1000 ரூபாய். இந்தக்கூலி அவரது வருமானத்தில் சேராது. அதாவது இந்தக் கூலிக்காக அவர் அரசுக்கு வரி எதுவும் செலுத்துவதில்லை. ஆனால், 11 மணிக்கு டீ வருவதற்குள்ளேயே அவர் 50 விடைத்தாளையும் திருத்திவிடுவார். எந்திரன் படத்தில் இயந்திர மனிதனான ரோபோ சிட்டி புத்தகத்தை முகத்திற்கு நேரே வைத்துக்கொண்டு இப்படியும் அப்படியும் ஆட்டியதும் படித்தாகச் சொல்லுமே, அது போலக்கூடச் செய்யாமல், இந்தப் பேராசிரிய எந்திரங்கள் விடைத்தாளைக் கையில் எடுக்காமலேயே மதிப்பெண்ணை மறுமதிப்பீடு செய்து விடுகிறது. இந்த அக்கிரமம் குறித்து பல்கலைக்கழகத்திற்கு நன்றாகத் தெரியும். ஆனால், வேலை சீக்கிரமாக நடந்தால் சரி, எவன் தாலி அறுந்தால் நமக்கென்ன? என அது கல்விக் கடமையாற்றிய பொறுப்போடு இருந்துவிடுகிறது. மாணவர் கதிதான் அதோ கதியாகி விடுகிறது.
கல்வித் துறையில் கூட மாணவர்களுக்கு குறைந்தபட்ச ஜனநாயக உரிமை இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. மறு மதிப்பீடு கேட்டாலே பேராசிரியர்களும், நிர்வாகமும் ஆண்டைகள் போல நடந்து கொள்ளுகின்றார்கள். அதிகார வெறியில் ஆட்டம் போடும் இந்தஆண்டைகளுக்கு மாணவர்கள் தக்க பாடம் கற்பித்தால்தான் போதையை தெளிய வைக்க முடியும். செய்வார்களா?
ஃபோர்டு அறக்கட்டளை உருவாக்கிய ஆம் ஆத்மி அமெரிக்க ஆத்மிதான் என்பதை நிறுவிய “அமெரிக்க டாலரில் ஆம் ஆத்மி – நியாயப்படுத்தும் ஞாநி எனும் வினவு கட்டுரை பெரும் வரவேற்பைப் பெற்றது. எனினும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அபாயத்தை உணராதவர்களும், அதன் நிதியுதவியை கொண்டு வாழ்க்கையை ஓட்டும் அறிஞர் பெருமக்களும் இதை ஏற்கவில்லை. அறியாதவர்கள் அறியாமை காரணமாகவும், அறிஞர்கள் அடியாள்களுக்கே உரிய நன்றி விசுவாசம் காரணமாகவும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வால் பிடிக்கிறார்கள். பொதுவில் சந்தர்ப்பவாதமும், சரணடைவும் கோலோச்சும் இன்றைய அரசியல் வாழ்வில் என்ஜிவோக்கள் எனும் அரசு சாரா நிறுவனங்கள் அறிவையும், கலையையும், அரசியலையும் ஏகாதிபத்திய தொண்டூழியத்திற்கு ஏற்றதாக மாற்றி விட்டன.
அருந்ததி ராய் எழுதிய இந்தக் கட்டுரை இதை ஆணித்தரமாக நிறுவுகிறது. ராக்ஃபெல்லர் அறக்கட்டளை, ஃபோர்டு அறக்கட்டளை, லில்லி அறக்கட்டளை, பில்கேட்ஸ் அறக்கட்டளை உள்ளிட்ட அனைத்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் புரவலர்களும் என்ன செய்கிறார்கள்? இவர்களின் பணி கம்யூனிசத்தை முறியடிப்பதில் ஆரம்பித்து பின்னர் முதலாளித்துவத்தின் கொடூரங்களை மறைத்து நியாயப்படுத்தி, ஒட்டு மொத்தமாக இந்த உலகை அமெரிக்காவின் காலடியில் கிடத்துவதே என்பதை ராய் தரவுகளுடன் எடுத்துரைக்கிறார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவல் நாய்களாக, மூன்றாம் உலக நாடுகளின் மேட்டுக்குடி மற்றும் கலை இலக்கியவாதிகளை எலும்புத் துண்டு போட்டு வளர்க்கின்றன இந்த அறக்கட்டளைகள். சிலியில் அதிபர் அலெண்டேயை கொல்வதோ, இந்தோனேசியாவில் கம்யூனிஸ்ட்டுகளை ஆயிரக்கணக்கில் அழிப்பதோ அனைத்தும் இந்த அறக்கட்டளைகளின் பங்கில்லாமல் நடக்கவில்லை.
மேலும் ‘சுதந்திர சிந்தனை’ என்ற கவர்ச்சியான முழக்கத்துடன் கலை இலக்கியவாதிகளும், பெண்ணியவாதிகளும், ஆய்வாளர்களும் இந்த தன்னார்வ நிறுவனங்களின் பிடியில் இருந்து கொண்டு அந்தந்த நாடுகளின் வர்க்க போராட்டத்திற்கு ஊறு விளைவித்திருக்கின்றனர் – விளைவித்தும் வருகின்றனர். இத்தகைய நாடுகளில் அமெரிக்காவின் அடிமைகளாக இருக்கும் அரசுகளை எதிர்க்க கூடாது என்று கைச்சாத்திட்ட பின்னரே இந்த அறக்கட்டளைகள் இவர்களுக்கு நிதிகளை அள்ளித் தருகின்றனர். அந்த வகையில் என்ஜிவோ நிதி பெறுபவர்கள் அனைவரும் தெரிந்தோ, தெரியாமலோ ஏழை நாடுகளின் துரோகிகளாக மாறிவிடுகின்றனர்.
பில்கேட்சின் அறக்கட்டளை கல்விக்கும், எய்ட்ஸ் ஒழிப்பிற்கும் நிதி உதவி அளிக்கிறது என்று எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளும் ‘அறிஞர்’கள், இதே பில்கேட்ஸ்தான் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை அதாவது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக் கொள்கையை பரப்பும் கிளப்புகளில் உட்கார்ந்திருக்கிறார், அதற்காகவே இந்த பிச்சையை செய்து வருகிறார் என்பதை பார்ப்பதில்லை. இது பில்கேட்ஸுக்கு மட்டுமல்ல, ஃபோர்டு, ராக்பெல்லர் உள்ளிட்ட ஏனைய நிதி அறங்காவலர் நிறுவனங்களுக்கும் பொருந்தும். அந்த வகையில் அனைத்து அறக்கட்டளைகளும் ஏகாதிபத்தியத்தின் பசு வேடம் போர்த்திய டிராகுலாக்களே!
நோபல் பரிசு அமெரிக்க நலனுக்காக கொடுக்கப்படுகிறது என்றால், மகசேசே விருதை நேரடியாக அமெரிக்க அறக்கட்டளைகளே ஸ்பான்சர் செய்கின்றன. இந்த மகசேசே விருதை பத்திரிகையாளர் சாய்நாத், அண்ணா ஹசாரே, அரவிந்த கேஜ்ரிவால் உள்ளிட்டு பலரும் வாங்கியிருக்கின்றனர். என் ஜி வோக்களின் வலைப்பின்னலும், அதன் சதித்தனங்களும் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமானவை. அந்த வகையில் இவர்கள் நம்மைப் போன்ற நாட்டு மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கு இழைத்து வரும் தீங்கும் அளவற்றவை.
ஆம் ஆத்மியோ, கூத்துப்பட்டறையோ, கிரண்பேடியின் தொண்டு நிறுவனமோ, ஜெர்மன் ஏகாதிபத்தியத்திடமிருந்த நிதியுதவி பெறும் இறந்து போன காந்தியவாதி ஜெகந்நாதனின் கிராம சுயராஜ்ஜிய இயக்கமோ (லாஃப்டி), ஹென்றி திபேனின் மனித உரிமை அமைப்போ, டாடாவுக்கு கலைச் சேவை புரிந்த லீனா மணிமேகலையோ, கலை இலக்கியத்திற்கு மட்டும் அமெரிக்க அறக்கட்டளைகளில் காசு வாங்கி நக்கலாம் என்று முழங்கும் ஜெயமோகனோ, குண்டு பல்பை தடை செய்யக் கோரும் சுற்றுச் சூழல் இயக்கங்களோ அனைவரும் அமெரிக்கா வடித்திருக்கும் ஏகாதிபத்திய நலனுக்காக உழைக்கின்றனர். அந்த வகையில் இவர்களது அரசியல், கலை, சமூக முயற்சிகளை ஆதரிக்கும் அப்பாவிகள் இனியாவது புரிந்து கொள்ளட்டும்.
– வினவு
கார்னஜி ஸ்டீல் கம்பெனியின் லாபத்தில் இருந்து 1911-ல் தொடங்கப்பட்ட கார்னஜி கார்ப்பரேஷன்தான் அமெரிக்காவின் முதல் அறக்கட்டளை. ஸ்டேண்டர்டு ஆயில் கம்பெனியின் நிறுவனர் ஜே.டி. ராக்பெல்லரால் 1914-ல் ராக்பெல்லர் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் தொடங்கப்பட்ட அறக்கட்டளைகளில் இதுவே முதன்மையானது. இவர்களே அந்தக் கால அமெரிக்காவின் டாடா, அம்பானிகள்.
வழிப்பறைக் கொள்ளை முதலாளி (ராபர் பேரன்) ஜான் டி ராக்பெல்லர், பின்னர் அமெரிக்காவின் வழிப்பறி ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு உதவுகிறார்.
ராக்பெல்லர் அறக்கட்டளையின் நிதி, துவக்க மூலதனம் (seed money) மற்றும் ஆதரவு பெற்ற நிறுவனங்கள் ஏராளம். ஐ.நா சபை, அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, அயலுறவு மன்றம் (சி.எஃப்.ஆர்), நியூயார்க்கின் நேர்த்திமிகு நவீன கலை அருங்காட்சியகம் மற்றும் ராக்பெல்லர் மையம் ஆகியவை அவற்றுள் சில. (இந்த ராக்பெல்லர் மையம் அமைந்துள்ள கட்டிடத்தில் இருந்த டீகோ ரிவேராவின் நேர்த்திமிகு சுவர்ச்சித்திரங்கள் தகர்த்தெறியப்பட்ட சம்பவம் ஒன்று உண்டு. ஏனெனில் அவை விசமத்தனமான முறையில் முதலாளிகளை பாதகர்களாகவும் லெனினை வீரஞ்செறிந்தவராகவும் உயிரோவியமாகத் தீட்டியிருந்தன. அன்றைக்கு கருத்துச் சுதந்திரம் விடுப்பில் சென்று விட்டது போலும்).
ஜே.டி. ராக்பெல்லர் அமெரிக்காவின் முதல் பில்லியனரும், உலகின் மிகப்பெரிய செல்வந்தரும் ஆவார். அவர் அடிமை முறை ஒழிப்புவாதியாகவும், ஆப்ரகாம் லிங்கனது ஆதரவாளராகவும் மற்றும் மதுப்பழக்கம் அற்றவராகவும் இருந்தார். தனது செல்வத்தை எல்லாம் கடவுளே தனக்கென வழங்கியதாக அவர் நம்பினார். அத்தகைய நம்பிக்கை அவருக்கு மிகவும் பிடித்தமானதாகத்தானே இருந்தாக வேண்டும்.
இந்த ராக்பெல்லருடைய ஸ்டேண்டர்டு ஆயில் கம்பெனியைப் பற்றிய பாப்லோ நெரூடாவின் ஆரம்பகாலக் கவிதை ஒன்றில் இருந்து சில வரிகள் இதோ:
நியூயார்க்கில் இருந்து வந்திருக்கும் அவர்களது கொழுத்த பேரரசர்கள் கனிவாய்ப் புன்னகைக்கும் கொலைகாரர்கள் பட்டு, நைலான், சுருட்டு முதல் பேட்டை ரவுடிகள், பெரிய சர்வாதிகாரிகளையும் விலைக்கு வாங்கி விடுகிறார்கள்.
நாடுகள், மக்கள், கடல்கள், காவலர்கள், மாவட்ட மன்றங்கள், கருமிகள் தம் தங்கத்தைப் பதுக்குவது போல் சோளத்தைப் பதுக்கும் ஏழைகள் வாழும் தூர..தூர தேசங்கள்.. அனைத்தையும் அவர்கள் விலை பேசுகிறார்கள்.
கவிஞர் பாப்லோ நெரூடா – ராக்பெல்லரின் தர்மகத்தா வன்முறையை கவிதை மூலம் அம்பலப்படுத்துகிறார்.
ஸ்டேண்டர்டு ஆயில் அந்த மக்களைத் துயிலெழுப்புகிறது, தன் சீருடையால் அவர்கள் உடலைப் போர்த்துகிறது, எந்தச் சகோதரன் எதிரி என்று அவர்களுக்கு இனம் காட்டுகிறது.
அது நடத்தும் சண்டையைப் பராகுவேக்காரன் போடுகிறான், அது வழங்கிய இயந்திரத் துப்பாக்கியைத் தூக்கிச் சுமந்தபடி எங்கோ காட்டில் அழிகிறான் பொலிவியன்.
ஒரு சொட்டு பெட்ரோலுக்காக ஓர் அதிபர் படுகொலை, ஒரு மில்லியன் ஏக்கர் நிலம் அடமானம் போகிறது, விடியலைக் கவ்வும் இருளாய் விரைந்து நிறைவேறுகிறது ஒரு மரணதண்டனை, விறைத்துக் கல்லாய்ச் சமைகின்றனர் மக்கள், ஒரு புதிய சிறைச்சாலை, அது கிளர்ச்சியாளர்களுக்கு,
படகோனியாவில் ஒரு துரோகம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில வெடிச்சத்தம், எழும் செந்நிலவின் கீழே எரியும் பெட்ரோலியத் தீ, தலைநகரிலோ ஆரவாரமின்றி சில அமைச்சர்கள் மாற்றம் லேசான கிசுகிசுப்பு எண்ணையின் அலைபோல்,
ஒரு துப்பாக்கி வெடிப்பு. மேகங்கள் மேல், கடலின் மேல், உன் வீட்டுக்குள், எங்கும் தங்கள் ஆட்சிப் பிரதேசத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியபடி ஸ்டேண்டர்டு ஆயிலின் பொன் எழுத்துக்கள் மின்னுவதை நீ காண்பாய்.
ராக்பெல்லர் பல்கலைக் கழகம் – உலகை ஒடுக்குவது எப்படி என்று தரமாக சொல்லிக் கொடுக்கும் கல்வி நிறுவனம்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதிபெற்ற அறக்கட்டளைகள் அமெரிக்காவில் முதன்முதலாய்த் தலைதூக்கியபோது அவற்றின் ரிஷிமூலம், சட்டத்தகுதி, தன் செயலுக்குப் பொறுப்பேற்க வேண்டாத தன்மை பற்றி எல்லாம் கடுமையான விவாதங்கள் நடத்தப்பட்டன. முதலாளித்துவ நிறுவனங்களிடம் அளவுகடந்த உபரித் தொகை இருக்குமானால் அவை தமது தொழிலாளர்களின் கூலியை உயர்த்த வேண்டும் என மக்கள் பரிந்துரைத்தனர். (அமெரிக்காவிலும்கூட அந்த நாட்களில் மக்கள் இவ்வாறான அதிர்ச்சியூட்டும் பரிந்துரைகளைச் செய்திருக்கிறார்கள்). இன்று இயல்பானதாகத் தெரியும் இந்த அறக்கட்டளைகள் பற்றிய கருத்துருவாக்கம் உண்மையில் முதலாளித்துவ கற்பனைத் திறனில் நிகழ்ந்த ஒரு பாய்ச்சல் எனலாம். ஏராளமான பணமும், எல்லையற்ற செயல் களமும் கொண்ட, வரி கட்ட வேண்டாத சட்டபூர்வ அமைப்புகள் இவை. அத்தோடு, தன் செயலுக்குச் சற்றும் பொறுப்பேற்க வேண்டாதவையும், வெளிப்படையற்ற தன்மையை கொண்டவையும் கூட. பொருளாதார செல்வத்தை அரசியல், சமூக, பண்பாட்டு மூலதனமாக மாற்றியமைக்க, பணத்தை அதிகாரமாக மாற்ற இதைவிடச் சிறந்த வழி ஏதும் உண்டா? தங்களது லாபத்தின் மீச்சிறு துளியைக் கொண்டு இந்த உலகத்தை வழிநடத்த வேறு ஏதும் சிறந்த வழி உண்டா? இல்லை என்றால், தனக்கு கணினி பற்றி ஏதோ ஒன்றிரண்டு விஷயங்கள் மட்டுமே தெரியும் என்று கூறிக் கொள்ளும் பில்கேட்ஸ் கல்வி, சுகாதாரம் மற்றும் வேளாண் கொள்கைகளை அமெரிக்க அரசுக்காக மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள அரசுகளுக்காகவும் வடிவமைக்கும் நிலையில் இருக்கிறாரே, அது எப்படி சாத்தியம்?
பில் கேட்ஸ்க்கு கணினி மட்டும்தான் தெரியும் என்பதல்ல, அமெரிக்காவின் நலனை அறக்கட்டகளைகள் மூலமாக பரப்புவதிலும் நிபுணர்.
காலப் போக்கில், பொது நூலகம் நடத்துதல், நோய் ஒழிப்பு போன்ற அறக்கட்டளைகள் செய்த சில நற்செயல்களை மக்கள் கண்ணுற்றனர். இந்த நிகழ்ச்சிப்போக்கில் தொழிற்கழகங்களுக்கும் அவற்றின் அறக்கட்டளைகளுக்கும் இடையிலான நேரடித் தொடர்பு மக்கள் பார்வையில் இருந்து மங்கத் தொடங்கி, இறுதியில் மறைந்தே ஒழிந்தன. இப்பொழுதோ, தன்னையும் இடதுசாரிகளாகக் கருதிக் கொள்பவர்கள் கூட இந்த வள்ளல்களிடம் கையேந்தி நன்கொடைகளை ஏற்க வெட்கப்படுவதில்லை.
1920-களில் அமெரிக்க முதலாளித்துவம் கச்சாப்பொருட்களுக்காகவும், சந்தைக்காகவும் பிற நாடுகளை நோக்கித் தமது பார்வையைத் திருப்பத் தொடங்கியது. அறக்கட்டளைகள் உலகளாவிய கார்ப்பரேட் ஆளுகை பற்றிய கருத்துருவாக்கத்தை செய்யத் தொடங்கின. அன்று, 1924-ல் ராக்பெல்லர் அறக்கட்டளையும், கார்னிஜி அறக்கட்டளையும் இணைந்து தொடங்கிய அயலுறவு மன்றம்தான் (சி.எஃப்.ஆர்) இன்று உலக நாடுகளின் அயலுறவுக் கொள்கைகள் மீது அழுத்தம் கொடுத்து தமக்கேற்ப வளைப்பதில் மிகவும் வலிமையான அமைப்பாக திகழ்கிறது. பின்னர் ஃபோர்டு அறக்கட்டளையும் அதற்கு நிதி அளிக்கத் தொடங்கியது. 1947-ம் ஆண்டு புதிதாகத் தொடங்கப்பட்ட அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ, அயலுறவு மன்றத்தின் ஆதரவைப் பெற்று அதனுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டது. காலப்போக்கில், சி.எஃப்.ஆர் உறுப்பினர் பட்டியலில் 22 அமெரிக்க அரசுச் செயலர்களும் இடம்பெற்றனர். 1943-ம் ஆண்டு ஐ.நா. சபையை நிறுவுவதற்கான வழிநடத்தும் கமிட்டியில் (steering committee) ஐந்து சி.எஃப்.ஆர் உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். ஜே.டி. ராக்பெல்லர் அளித்த 8.5 மில்லியன் டாலர்கள் கொடையில் வாங்கிய நிலத்தில்தான் இன்று ஐ.நா.வின் நியூயார்க் தலைமையகம் நின்று கொண்டிருக்கிறது.
1946-ம் ஆண்டு முதல் உலக வங்கியின் தலைவர்களாக இருந்த ஏழைகளின் மீட்பர்களாக தம்மைக் காட்டிக் கொண்ட மொத்தம் பதினோரு பேருமே சி.எஃப்.ஆர் உறுப்பினர்கள்தான். (மேற்படி 11 பேரில் ஒரே விதிவிலக்கு ஜார்ஜ் உட்ஸ் மட்டுமே. இவரும் ராக்பெல்லர் அறக்கட்டளையின் ஒரு தாளாளராகவும், ராக்பெல்லருடைய சேஸ்-மன்ஹாட்டன் வங்கியின் துணைத் தலைவராகவும் இருந்தவராவார்).
உலகின் பொதுச் செலாவணியாக (reserve currency) அமெரிக்க டாலர்தான் இருக்க வேண்டும் என்றும், மூலதனத்தின் உலகளாவிய ஊடுருவலை விரிவாக்க, கட்டற்ற சந்தை செயல்பாட்டின் அடிப்படையில் அனைத்து நாடுகளின் வர்த்தக நடவடிக்கைகளையும் உலகளவில் பொதுமைப்படுத்தலுக்கும் தரப்படுத்தலுக்கும் உட்படுத்த வேண்டியது அவசியம் என்றும் உலக வங்கியும் ஐ.எம்.எஃப்பும் அமெரிக்காவின் பிரட்டன் வுட்ஸ் நகரத்தில் கூடி முடிவு செய்தன. இந்த இலக்கை அடைவதற்காகத்தான், சிறந்த அரசாளுமை அமைய உதவுவதற்கும் (மூக்கணாங்கயிறு தம் கையில் இருக்கும் வரை), சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் (சட்டம் இயற்றுவதில் தமக்கு அதிகாரம் உள்ளவரை), நூற்றுக்கணக்கான ஊழல் ஒழிப்புத் திட்டங்களை ஊக்குவிப்பதற்கும் (தங்கள் உருவாக்கியிருக்கும் ஆட்சி முறையை ஒழுங்கு செய்வதற்காக) அவர்கள் ஏராளமான பணத்தை வாரியிறைக்கிறார்கள். உலகிலேயே பெரியவையும் ரகசியமானவையும், தம் செயல்களுக்காக யாருக்கும் பதிலளிக்க வேண்டாதவையுமான இந்த இரண்டு நிறுவனங்கள்தான் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புணர்ச்சியையும் கோரி ஏழை நாடுகளின் அரசுகளிடம் மல்லுக்கட்டுகின்றன.
கிட்டத்தட்ட அனைத்து மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகளையும் உலக வங்கி வழிநடத்துகிறது. ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து நாடுகளையும் நிர்ப்பந்தித்து அவற்றின் சந்தையை சர்வதேச மூலதனத்திற்கு அகலத் திறந்து விட்டிருக்கிறது. இந்தச் சாதனைகளை எல்லாம் கணக்கில் கொண்டு பார்ப்பீர்களேயானால், தொலைநோக்கு கொண்ட வணிக நடவடிக்கைகள் அனைத்திலும் முதலிடம் வகிப்பது இந்த கார்ப்பரேட் தர்மகர்த்தா முறைதான் என்று நீங்கள் அறுதியிட்டுச் சொல்லிவிட முடியும்.
நியூயார்க்கில் உள்ள ஃபோர்டு அறக்கட்டளை கட்டிடம் – நாட்டுப்புறக் கலை ஆய்வு மூலம் கம்யூனிஸ்டுகளை கொலை செய்வது எப்படி என்று புரிய வைக்கும் மாட்ரிக்ஸ் நிறுவனம்.
மேட்டுக்குடி கிளப்புகள், சிந்தனையாளர் குழுக்கள் (think-tanks) போன்ற ஏற்பாடுகளின் மூலம் அதன் உறுப்பினர்கள், பல்வேறு பட்ட அதிகார நிறுவனங்களின் மீது பொருந்துகிறார்கள்; ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொன்றுக்கு சுழல் கதவின் வழியே உட்செல்வதும், வெளி வருவதுமாக இருக்கிறார்கள். இத்தகைய ஏற்பாட்டின் மூலம் தங்களுக்கு தேவையான நபர்களை சதுரங்கத்தின் பொருத்தமான கட்டத்தில் நிறுத்துவதன் மூலம் கார்ப்பரேட் கொடை பெறும் அறக்கட்டளைகள், தமது அதிகாரத்தை நெறியாண்மை செய்கிறார்கள், வணிகப்படுத்துகிறார்கள், மடை மாற்றுகிறார்கள். இவற்றை சதித்திட்டங்களாக சித்தரிக்கும் கருத்துக்கள் பரவலாகவும், குறிப்பாக இடதுசாரி குழுக்கள் மத்தியிலும் புழக்கத்தில் உள்ளன. மாறாக இந்த ஏற்பாடுகளில் ஒழிவுமறைவோ, சாத்தானியமோ, சதிக்குழுச் செயல்பாடோ ஏதுமில்லை. தங்களது பணப் பரிமாற்றத்துக்கும், நிர்வாகத்துக்கும் ‘சொர்க்க’த் தீவுகளில் வங்கிக்கணக்கையும், பெயர்ப்பலகை நிறுவனங்களையும் பயன்படுத்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் வளமையான செயல்பாடுகளிலிருந்து மேற்படி ஏற்பாடு (அறக்கட்டளை செயல்பாடு) பெரிதாய் ஒன்றும் மாறுபடவில்லை. ஒரு வித்தியாசம் என்னவென்றால், இங்கே செலவாணியில் இருப்பது பணம் அல்ல, அதிகாரம் என்பதே.
அமெரிக்க அயலுறவு மன்றத்துக்கு (சி.எஃப்.ஆர்) இணையான தேசங்கடந்த அமைப்பு, முத்தரப்பு ஆணையம் ஆகும். இந்த ஆணையம் 1973-ம் ஆண்டு டேவிட் ராக்பெல்லர், முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஸ்பிக்நியூ ப்ரிசென்ஸ்கி (இவர் இன்றைய தாலிபான்களின் பாட்டன்களான ஆப்கான் முஜாகிதீன் அமைப்பின் நிறுவன-உறுப்பினர்), சேஸ் மன்ஹாட்டன் வங்கி மற்றும் சமூகத்தில் உயர்நிலை வகிக்கும் சில தனிநபர்கள் ஆகியோரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. வட அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய மேட்டுக்குடிகளிடையே நீடித்து நிலைக்கும் நட்புறவையும், ஒத்துழைப்பையும் உருவாக்குவதே இதன் நோக்கமாகும். தற்போது சீனர்களும், இந்தியர்களும் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டு இது ஐந்தரப்பு ஆணயமாக மாற்றப்பட்டிருக்கிறது. (இந்திய தொழிற்கூட்டமைப்பின் தருண் தாஸ், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலர் (சி.இ.ஓ) என்.ஆர். நாராயணமூர்த்தி, கோத்ரெஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜாம்ஷெட் என். கோத்ரெஜ், டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஜாம்ஷெட் ஜெ இரானி மற்றும் அவந்தா குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் கௌதம் தபார் ஆகியோர் இதன் இந்தியப் பிரதிநிதிகள் ஆவர்.)
ஆஸ்பென் கழகம் (Aspen Institute) என்பது ஏராளமான நாடுகளில் தமது அங்கீகாரம் பெற்ற கிளைகளைக் கொண்ட ஒரு சர்வதேச கிளப். பிரதேச அளவிலான மேட்டுக்குடிகள், தொழிலதிபர்கள், அதிகார வர்க்கத்தினர் மற்றும் அரசியல்வாதிகள் இதன் உறுப்பினர்களாய் உள்ளனர். இந்திய ஆஸ்பென் கழகத்தின் பிரெசிடென்ட் ஆக இருப்பவர் தருண் தாஸ். கௌதம் தபார் அதன் சேர்மன். மெக்கன்ஸி குளோபல் இன்ஸ்டிட்யூட்டின் (தில்லி மும்பை தொழில் வழித்தடத்தை முன்மொழிந்திருப்பவர்கள்) மூத்த அலுவலர்கள் பலர் அயலுறவு மன்றம், முத்தரப்பு ஆணையம் மற்றும் ஆஸ்பென் கழகம் ஆகியவற்றில் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஃபோர்டு அறக்கட்டளை 1936-ல் நிறுவப்பட்டது. (பெரிதும் பழைமைவாத அமைப்பான ராக்பெல்லர் அறக்கட்டளையின் மீது போர்த்தப்பட்ட தாராளவாத மேலுறையே இது. இருப்பினும் இவை இரண்டும் தொடர்ச்சியாக இணைந்தே வேலை செய்து வருகின்றன). பொதுவாகவே ஃபோர்டு அறக்கட்டளையின் நோக்கங்கள் பெரிதும் குறைத்து மதிப்பிடப்படுகின்றன. எனினும், இது மிகத் தெளிவான, நன்கு வரையறுக்கப்பட்ட கொள்கைகளைக் கொண்டிருக்கிறது. இது அமெரிக்க வெளியுறவுத் துறையுடன் மிகமிக நெருக்கமாக இணைந்து வேலை செய்கிறது. இதன் செயல்திட்டங்களான ஜனநாயத்தைக் கீழ்மட்டம் வரை கொண்டு செல்லுதல் மற்றும் ‘சிறந்த அரசாளுமை’ ஆகியவை சாராம்சத்தில், ‘வர்த்தக நடவடிக்கைகளைத் பொதுத்தரப்படுத்துதல் மற்றும் சுதந்திரச் சந்தையில் அவற்றின் செயல்திறத்தை மேம்படுத்துதல்’ என்ற பிரட்டன் வுட்ஸ் திட்டத்தின் பிரிக்கவொண்ணாப் பகுதிகளே.
வங்கதேசத்தில் கிராமீன் வங்கி மூலம் நுண்கடன் திட்டத்தை அறிமுகம் செய்த முகமது யூனஸ் – வறுமையை வெற்றிகரமாக பிசினெஸ் செய்வது எப்படி என்பதில் முன்னோடி.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அமெரிக்காவின் முதல் எதிரியாக இருந்த பாசிஸ்டுகளின் இடத்திற்கு கம்யூனிஸ்டுகள் வந்த பின் நிழல் யுத்தத்தைத் திறம்பட நடத்த, பொருத்தமான புதிய வகை நிறுவனங்கள் தேவைப்பட்டன. அமெரிக்க இராணுவத்துக்கு ஆயுத ஆராய்ச்சிப் பணிகள் செய்வதற்கான வல்லுனர் குழுவான ‘ரேண்ட்’ (RAND – ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) அமைப்புக்கு ஃபோர்டு நிதியளித்தது. ‘சுதந்திர தேசங்களில் ஊடுருவி சீர்குலைக்க கம்யூனிஸ்டுகள் எடுக்கும் தொடர்ச்சியான முயற்சிகளை முறியடிக்க’ வேண்டி ஃபோர்டு அறக்கட்டளை 1952-ல் ‘குடியரசுக்கான நிதியம்’ ஒன்றை நிறுவியது. பின்னாளில் இந்த நிதியம் ‘ஜனநாயக அமைப்புகள் பற்றிய ஆய்வு மையமாக’ உருமாறியது. மெக்கார்த்தேயிசத்தின் அத்துமீறல்களை தவிர்த்து, சாதுரியமாக பனிப்போரை நடத்துவது இம்மையத்தின் பணியாக இருந்தது. கலைஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோருக்கு நிதியளிப்பது, பல்கலைக் கழகப் பாடத் திட்டங்களுக்குக் கொடையளிப்பது, மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவது என கோடிக்கணக்கான டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் ஃபோர்டு அறக்கட்டளையின் செயல்பாடுகளை இந்த கண்ணாடியின் வழியாகத்தான் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
”மனித இனத்தின் எதிர்காலத்துக்கான இலக்குகள்” என்ற ஃபோர்டு அறக்கட்டளையின் அறிவிக்கப்பட்ட திட்டத்தில் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் கீழ்மட்ட அரசியல் இயக்கங்களில் தலையீடு செய்வதும் அடங்கும். அமெரிக்காவில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்திய எட்வர்டு ஃபிலின் என்பவர் 1919-ம் ஆண்டு முன்னோடியாக இருந்து துவக்கிய கடனுதவி ஒன்றியத்திற்கு (Credit Union Movement) ஃபோர்டு அறக்கட்டளை பல மில்லியன் டாலர்கள் கடன் மற்றும் நிதியுதவி செய்துள்ளது.
தொழிலாளிகளுக்கு அவர்களால் தாங்கக்கூடிய அளவில் கடன் வழிவகை செய்து கொடுப்பதன் மூலம் நுகர்பொருட்களின் பெரியதொரு நுகர்வுச் சமூகத்தை ஏற்படுத்த முடியும் என ஃபிலின் நம்பினார். அக்காலத்தில் இது ஒரு முற்போக்கான கருத்தாக இருந்தது. உண்மையில், இது அவரது நம்பிக்கையின் ஒரு பாதி மட்டுமே. அவருடைய மறு பாதி கருத்து தேசிய வருமானத்தின் நியாயமான விநியோகம் பற்றியது. முதலாளிகளோ அவரது பரிந்துரையின் முதல் பாதியை மட்டும் பற்றிக் கொண்டனர். ‘தாங்கத் தக்க அளவுக்குக் கடன்’ என்று பல பத்து மில்லியன் டாலர்களைத் தொழிலாளர்களுக்குக் கொடுத்து அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்தை நிரந்தரக் கடன் வலையில் வீழ்த்தினர்; தம் வாழ்நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு அவர்கள் முடிவே இல்லாமல் ஓடும்படி செய்தனர்.
பினோசெட் – அலெண்டே: தேர்ந்தெடுக்கப்பட்ட அலேண்டேவை கொல்வதற்கு பினோசெட்டை தேர்வு செய்த அமெரிக்காவின் திரைக்கதையில் கலை இலக்கிய ட்ராக்கை ஃபோர்டு அறக்கட்டளையும் ராக்பெல்லர் அறக்கட்டளையும் கூட்டாக எழுதியது.
பல ஆண்டுகள் கழித்து இக்கருத்து மெல்லக் கசிந்து வறுமை பீடித்த வங்கதேசத்து கிராமப்புறத்தை எட்டியது. முகம்மது யூனுஸும், கிராமீன் வங்கியும் பஞ்சப்பட்ட விவசாயிகளிடம் நுண்கடனை கொண்டு வந்தனர். அதன் விளைவுகள் பேரழிவாக இருந்தன. இந்தியாவில் இயங்கும் இதுபோன்ற நுண்நிதி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான கடன் தற்கொலைகளுக்குப் பொறுப்பாளிகளாக இருக்கிறார்கள். 2010-ம் ஆண்டில் மட்டும் ஆந்திராவில் இருநூறு பேர் இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். பதினெட்டு வயதேயான ஒரு பெண்ணின் தற்கொலைக் குறிப்பை தேசிய நாளிதழ் ஒன்று சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அவளிடம் எஞ்சியிருந்த வெறும் 150 ரூபாய்களை, அதுவும் பள்ளிக் கட்டணம் செலுத்துவதற்கான தொகையை, நுண் நிதி நிறுவனத்தின் ஊழியர்களான அடியாட்கள் பிடுங்கிக் கொண்டனர். “கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதியுங்கள். கடன் மட்டும் வாங்காதீர்கள்” என்று கூறுகிறது அவளது தற்கொலைக் குறிப்பு.
வறுமையில் ஏராளமாக பணம் பார்க்கலாம், சில நோபல் பரிசுகளையும் கூட.
ஏராளமான அரசு சாரா அமைப்புகளுக்கும் (NGOs) சர்வதேச கல்வி நிறுவனங்களுக்கும் நிதியளித்து வந்த ராக்பெல்லர் மற்றும் ஃபோர்டு அறக்கட்டளைகள் 1950-களில் அமெரிக்க அரசின் பகுதியளவிலான நீட்சியாகவே செயல்படத் தொடங்கின. அந்த காலகட்டத்தில் அமெரிக்க அரசு லத்தீன் அமெரிக்க நாடுகள், ஈரான் மற்றும் இந்தோனேஷியாவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. (மேலும், அந்த காலகட்டத்தை ஒட்டித்தான் அப்போது அணிசாரா நாடாய் இருந்த, ஆனால் தெளிவாக சோவியத் யூனியன் பக்கச் சார்பு எடுத்திருந்த இந்தியாவில் இந்த அறக்கட்டளைகள் காலடி எடுத்து வைத்தன.) இந்தோனேஷிய பல்கலைக்கழகங்களில் அமெரிக்க பாணி பொருளியல் பாடத்திட்டங்களை ஃபோர்டு அறக்கட்டளை நுழைத்தது. 1965-ம் ஆண்டு சி.ஐ.ஏ. பின்புலத்தில் இருந்து இயக்கிய ஆட்சிக் கவிழ்ப்புக் கிளர்ச்சியில் அமெரிக்க இராணுவ அதிகாரிகளால் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில் பயிற்றுவிக்கப்பட்ட இந்தோனேஷிய மேட்டுக்குடி மாணவர்கள் மிக முக்கியப் பங்காற்றினர். அக்கிளர்ச்சி ஜெனரல் சுகார்த்தோவை அதிகாரத்தில் அமர்த்தியது. நூறாயிரக்கணக்கான கம்யூனிஸ்டு போராளிகளை வெட்டிக் கொல்வதன் மூலம் தன்னை உருவாக்கி வழி நடத்திய அமெரிக்க குருநாதர்களுக்கு இரத்தக் காணிக்கை அளித்தார் சுகார்த்தோ.
ராமன் மக்சேசே – மூன்றாம் உலக நாடுகளின் அறிஞர்கள் மற்றும் துரோகிகளை போராளிகளாக காட்டுவதற்கு அமெரிக்க அறக்கட்டளைகள் உருவாக்கிய விருதுக்கு பெயர் தந்த அமெரிக்க அடியாள்.
எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1973-ல், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் இறங்க அமெரிக்கா தீர்மானித்த போது, இந்த நடவடிக்கைக்கான முன் தயாரிப்பாக, பின்னாளில் சிக்காகோ பாய்ஸ் என்று அறியப்பட்ட இளம் சிலி மாணவர்கள், மில்டன் ஃப்ரீட்மேனால் புதிய தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளில் பயிற்றுவிக்கப்படுவதற்காக சிக்காகோ பல்கலைக் கழகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் (இதற்கு ராக்பெல்லர் அறக்கட்டளை நிதியளித்தது). சி.ஐ.ஏ. பின்புலத்தில் இருந்து இயக்கிய இந்த ஆட்சிக் கவிழ்ப்பு, சிலியின் பிரதமர் சால்வடார் அலண்டேயைக் கொன்று ஜெனரல் பினோசெட்டை ஆட்சியில் அமர்த்தியது. பயங்கரமும் ஆட்கள் மறைந்து போதலும் மலிந்த இந்தக் கொலைக்கும்பலின் பேயாட்சி பதினேழு ஆண்டுகள் மக்களை ஆட்டிப் படைத்தது. (ஜனநாயக முறைப்படி பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சோசலிஸ்டு என்பதும், சிலியின் சுரங்கங்களை நாட்டுடைமை ஆக்கியதுமே அலண்டே செய்த குற்றங்களாகும்).
ஆசியாவின் சிறந்த சமூகத் தலைவர்களுக்கான ராமன் மக்சேசே பரிசை 1957-ல் ராக்பெல்லர் அறக்கட்டளை நிறுவியது. தெற்காசிய நாடுகளில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அமெரிக்காவின் திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளில் அதன் அத்தியாவசிய கூட்டாளியாக இருந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ராமன் மக்சேசேயின் நினைவாக இவ்விருதுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. பரிணமிக்கும் புதிய தலைமைக்கான ராமன் மக்சேசே விருதை 2000 ஆண்டில் ஃபோர்டு அறக்கட்டளை நிறுவியது. மக்சேசே விருது என்பது இந்தியக் கலைஞர்கள், செயல் வீரர்கள், சமூகத் தொண்டர்கள் மத்தியில் பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. எம்.எஸ். சுப்புலெட்சுமியும் சத்யஜித் ரேயும் இவ்விருதை வென்றனர். அதுபோலவே ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் மிகச் சிறந்த இந்திய இதழியலாளர்களில் ஒருவரான பி. சாய்நாத் ஆகியோரும் இவ்விருதுகளை வென்றிருக்கின்றனர். ஆனால், இந்த விருது இவர்களுக்குச் சேர்த்த பெருமையைவிட இவர்கள் இவ்விருதுக்குச் சேர்த்த பெருமையே அதிகம். பொதுவாக பார்க்குமிடத்து, எந்த விதமான செயல்முனைப்பு ‘ஏற்புடையது’ எது ‘ஏற்புடையதல்ல’ என்ற புரிதலை வழங்கும் ஒரு நாசூக்கான நடுவராகியிருக்கிறது இவ்விருது.
ஒரு வேடிக்கை என்னவென்றால், சென்ற கோடையில் அண்ணா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் முன்னணித் தளபதிகளான அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கிரண் பேடி ஆகிய மூவருமே மக்சேசே விருது வென்றவர்கள். அரவிந்த் கெஜ்ரிவால் நடத்தும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஒன்று ஃபோர்டு அறக்கட்டளையில் இருந்து ஏராளமான நிதி பெறுகிறது. கிரண் பேடியின் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு கொக்கோ-கோலா மற்றும் லேமன் பிரதர்ஸ் நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகிறது.
மக்சேசே விருதும், உலக வங்கி விருதும் பெற்ற அண்ணா ஹசாரே – இவரது கொள்கையும் எமது கொள்கையும் ஒன்று என உலக வங்கியே சான்றிதழ் கொடுத்திருக்கிறது.
அண்ணா ஹசாரே தன்னை காந்தியவாதி என அழைத்துக் கொண்டாலும், அவரது கோரிக்கையான ‘ஜன் லோக்பால் மசோதா’வில் காந்தியம் ஏதுமில்லை. மேலும் அக்கோரிக்கை மேட்டுக்குடித் தன்மையதும், அபாயகரமானதும் ஆகும். கார்ப்பரேட் செய்தி ஊடகங்களின் 24-மணி நேர தொடர்ப் பிரச்சாரம் அவரை ‘மக்களின் குரல்’ எனப் பிரகடனம் செய்தது. ஆனால், அண்மையில் அமெரிக்காவில் நடந்த வால்ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டத்தைப் போலன்றி, இந்த ஹசாரே இயக்கம் தனியார் மயத்துக்கோ, கார்ப்பரேட் அதிகாரத்துக்கோ, பொருளாதாரச் சீர்திருத்தத்திற்கோ எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக, ஹசாரே இயக்கத்தை பின்புலத்தில் நின்று ஆதரித்த முதன்மையான செய்தி ஊடகத்துறையினர், அதிர்ச்சியூட்டும் பெருத்த கார்ப்பரேட் ஊழல் முறைகேடுகள் பற்றிய அப்போதைய செய்திகளில் இருந்து மக்களின் கவனத்தை வெற்றிகரமாகத் திசை திருப்பினர். (இந்த கார்ப்பரேட் ஊழல் செய்திகள் மிகப் பிரபலமான ஊடகவியலாளர்களையும் கூடத் திரை கிழித்திருந்தன). அரசாங்கத்தின் முடிவெடுக்கும் அதிகாரங்களை மேலும் சுருக்குவதற்கும், கூடுதலான சீர்திருத்தங்களையும், கூடுதலான தனியார்மயப்படுத்தலையும் சாதிப்பதற்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக பொதுமக்கள் கொண்டிருந்த கோபத்தை இந்த ஊடகத்துறையினர் பயன்படுத்திக் கொண்டனர். (அன்னா ஹசாரே 2008-ம் ஆண்டில், நிகரற்ற பொதுத் தொண்டாற்றியதற்காக உலக வங்கியின் விருது பெற்றவர் ஆவார்). வாஷிங்டனில் இருந்து உலக வங்கி விடுத்த அறிக்கையில், அன்னா ஹசாரேயின் இந்த இயக்கம் தங்களது கொள்கைகளோடு துல்லியமாகப் பொருந்துவதாகக் கூறி பாராட்டியிருந்தது.
திறமையான எல்லா ஏகாதிபத்தியவாதிகளையும் போலவே, கார்ப்பரேட் தர்மகர்த்தாக்களும், ‘தமது சொந்த நலனுக்கு உகந்தது முதலாளித்துவமும், அதன் நீட்சியாக அமெரிக்க மேலாதிக்கமுமே’ என்று நம்பும் ஒரு பெரும் சர்வதேச அணியினரை உருவாக்கி, அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதைத் தங்களது பொறுப்பாக ஏற்றிருக்கின்றனர். அவ்வாறு பயிற்றுவிக்கப்படும் அணிகள் முன்னர் அடிமை நாடுகளின் மேட்டுக்குடி வர்க்கத்தினர், காலனியாதிக்கவாதிகளுக்கு எவ்வாறு தொண்டுழியம் செய்து வந்தனரோ அதுபோலவே உலகளாவிய கார்ப்பரேட் அரசாங்கத்தை நிர்வகிக்கும் வேலைக்கு உதவுவர் என்று கருதினர். மேலும், அயலுறவு மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றுக்கு அடுத்தபடியாகத் தனது ஆதிக்கத்தின் மூன்றாவது அரணாக இந்தக் கும்பல் அமையும் என்றும் அவர்கள் அனுமானித்தனர். கல்வி மற்றும் கலைத்துறையில் அறக்கட்டளைகள் குதிப்பதென்பது இவ்வாறு தான் தொடங்கியது. இந்த நோக்கத்தை ஈடேற்றிக்கொள்ளத்தான் மில்லியன் கணக்கான டாலர்களை கல்வி நிறுவனங்களுக்காகவும், கற்பிக்கும் முறைகளை வடிவமைப்பதறக்காகவும் அவர்கள் அவர்கள் வாரி வழங்கினர், வழங்கிக்கொண்டும் இருக்கின்றனர்.
ஜோன் ரொலோஃப்ஸ் – பல்கலை ஆய்வு மாணவர்களின் ஆய்வுத் துறைகள் மற்றும் பண்பாட்டு துறை நடவடிக்கைகளிலும் சிஐஏ இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியவர்.
”அறக்கட்டளைகளும் பொதுக் கொள்கையும்: பன்மைவாத முகமூடி” [Foundations and Public Policy : The Mask of Pluralism] என்ற தனது அருமையான நூலில், அரசியல் விஞ்ஞானத்தைப் போதிக்கும் முறை பற்றிய பழைய கருத்துக்களை அறக்கட்டளைகள் எவ்வாறு மாற்றியமைத்தன என்றும், “சர்வதேச” மற்றும் “பிராந்திய” ஆய்வுகள் தொடர்பான துறைகளைத் தமது தேவைக்கேற்ப எப்படி எல்லாம் வளைத்தன என்றும் ஜோன் ரொலோஃப்ஸ் [Joan Roelofs] விவரித்திருக்கிறார். இந்தத் துறைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள், அமெரிக்க உளவுத்துறையும் பாதுகாப்புத் துறையும் தமக்குப் பொருத்தமான நபர்களைத் தெரிவு செய்துகொள்ள வசதியாக அன்னிய மொழிகள் மற்றும் பண்பாட்டுத்துறைகளில் தேர்ந்த வல்லுனர் கூட்டத்தையே வழங்கின. அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் சி.ஐ.ஏ.வும், அமெரிக்க வெளியுறவுத் துறையினரும் தொடர்ந்து வேலைசெய்கிறார்கள். இது கல்வித்திறம் என்பது குறித்தே பாரிய அறநெறி சார்ந்த வினாக்களை எழுப்புகிறது.
மக்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிப்பது என்பது எந்த ஒரு ஆளும் சக்திக்கும் அடிப்படையானது. மத்திய இந்தியாவில் தொடுக்கப்பட்டிருக்கும் நேரடியான யுத்தத்தின் நிழலில், இந்தியாவின் ஏனைய பகுதிகளில் நில அபகரிப்புக்கும், புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் எதிரான போராட்டங்கள் பரவி வருகின்றன. இந்தப் போக்கை ஒடுக்கும் வழிமுறையாக, பிரத்தியேக அடையாள எண் (யூஐடி) திட்டம் எனப்படும் மிக விரிந்த விவரச் சேகரிப்புத் திட்டதில் (biometrics programme) அரசு இறங்கியிருக்கிறது. உலகளவில் மிக விரிவான, பெருத்த செலவினம் கொண்ட திட்டங்களுள் இதுவும் ஒன்று. மக்கள் கையில் உண்ண உணவில்லை, குடிக்கத் தூய்மையான தண்ணீர் இல்லை, ஒரு கழிவறை இல்லை, கையில் காசும் இல்லை. ஆனால், அவர்கள் கையில் வாக்காளர் அடையாள அட்டைகளும், ஆதார் அட்டைகளும் அவசியம் இருக்கும்; இருக்க வேண்டும் என்பதுதான் இந்த யூ ஐடி திட்டம். ‘சேவைகளை ஏழைகளுக்கு கொண்டு சேர்ப்பது’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த யூ ஐடி திட்டம், இன்ஃபோசிஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலர் நந்தன் நீலேகேனியின் தலைமையில் செயல்படுத்தப்படுவதும், இத்திட்டம் சற்றே நொடித்துப் போயிருக்கும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு கணிசமான தொகையை கொண்டு சேர்க்கப் போவதும் ஒரு தற்செயல் நிகழ்வுதானோ? (இந்த யூ ஐடி திட்டத்தின் மிகச் சிக்கனமான செலவு மதிப்பீடு கூட இந்திய அரசின் வருடாந்திர கல்விச் செலவையும் விஞ்சுகிறது).
நந்தன் நிலேகணி – இந்திய மக்களை டிஜிட்டல் மற்றும் பயோ மெட்ரிக் வடிவத்தில் முதலாளிகளுக்கு விற்பனை செய்யும் அறிஞர்.
வரைமுறைகளில் அடங்காத, தெளிவான அடையாளங்களற்ற மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்களை – அதாவது நில ஆவணமற்ற ஆதிவாசிகள், நகர்ப்புற குடிசைவாசிகள், நடைபாதைவாசிகள் போன்றோரை – உள்ளடக்கிய மாபெரும் மக்கள்திரளைக் கொண்ட இந்நாட்டில், அனைவரின் விவரங்களையும் கணினிமயப்படுத்தி வரையறுப்பது என்பது, எதார்த்தத்தில் அந்த சாமானிய மக்களை ‘வரையறுக்க இயலாதவர்கள்’ என்ற நிலையிலிருந்து ‘சட்டவிரோதமானவர்கள்’ என்ற நிலைக்குத் தள்ளி கிரிமினல்களாகச் சித்தரிப்பதில்தான் முடியும். மக்களின் பாரம்பரிய பொது நிலங்களை அவர்களிடமிருந்து பறிக்கும் திட்டத்தில் (Enclosure of the commons – பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் விவசாயிகளின் நிலங்களை அபகரித்து முதலாளிக்குக்குக் கொடுத்து விட்டு, விவசாயிகளை ஏதுமற்ற கூலிகளாக மாற்றி நகரத்துக்கு விரட்டும் பொருட்டு ஆங்கிலேய பாராளுமன்றம் இயற்றிய சட்டத்தை ஆசிரியர் குறிப்பிடுகிறார் – மொர்) எண்ணியல் வடிவமும், மென்மேலும் கடுமையாகி வரும் காவல்துறை காட்டாட்சிக்கு அதீத அதிகாரம் வழங்குவதும்தான், குடிமக்களின் அங்க மச்ச அடையாளங்களைத் திரட்டும் அந்த ஆதார் திட்டத்தின் நோக்கம். தகவல் சேகரிப்பு குறித்த நீலேக்கேனியின் இந்த தொழில்நுட்ப பித்தானது ‘மின்னணு தரவுத்தளம்’, ‘எண்கணித இலக்குகள்’, ‘முன்னேற்றத்திற்கான ஸ்கோர் கார்டுகள்’ ஆகியவை மீது பில் கேட்ஸ் கொண்டிருக்கும் வெறிக்கு ஈடானதாகும். உலகின் பசி பட்டினிக்கெல்லாம் காலனியாதிக்கமோ, கடனோ, லாபவெறி கொண்ட கார்ப்பரேட் கொள்கைகளோ காரணங்கள் அல்ல என்பது போலவும், சரியான தரவுகள் இல்லாதது ஒன்றுதான் காரணம் என்பது போலவும் சித்தரிக்கும் முயற்சி இது.
சமூக அறிவியல் மற்றும் கலைத் துறைகளுக்கு ஏராளமான நிதி வழங்குவோர் கார்ப்பரேட் அறக்கட்டளைகளே. ‘வளர்ச்சித் திட்ட ஆய்வுகள்’, ‘சமூகக் குழுக்கள் பற்றிய ஆய்வுகள்’, ‘பண்பாட்டு ஆய்வுகள்’, ‘நடத்தை அறிவியல்கள்’ மற்றும் ‘மனித உரிமைகள்’ எனப் பலப்பல துறைகளில் ஆய்வுகளைத் தொடங்கி அதற்குக் கொடை அளிப்பதும், ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை அளிப்பதும் இந்த அறக்கட்டளைகளே. அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களின் வருகைக்காக கதவை அகலத் திறந்தவுடன் மூன்றாம் உலக மேட்டுக்குடியினரின் பிள்ளைகள் லட்சக்கணக்கில் வெள்ளமென உள்ளே பாய்ந்தார்கள். கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இன்று இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தன் ஒரு பிள்ளையையாவது அமெரிக்காவில் படிக்க வைக்காத மேல்தட்டு நடுத்தர வர்க்க குடும்பத்தைக் காண்பது அரிது. இவர்கள் மத்தியிலிருந்து நல்ல அறிஞர்கள், கல்வியாளர்கள் மட்டும் வருவதில்லை. பிரதமர்களும், நிதி அமைச்சர்களும், பொருளியலாளர்களும், கார்ப்பரேட் வழக்கறிஞர்களும், வங்கியாளர்களும், அதிகாரிகளும் வருகிறார்கள். இவர்கள் தமது நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு தொழிற்கழகங்களுக்குத் திறந்து விடவும் ஆவன செய்கிறார்கள்.
இந்த அறக்கட்டளைகளின் நோக்கங்களுக்கு உகந்த வகையில் பொருளியல், அரசியல் துறைகளில் ஆய்வு அறிக்கைகளைத் தயாரிக்கும் அறிஞர்களுக்கு பட்டங்கள், பதவிகள், ஆய்வு நிதி, கொடைகள் என ஏராளமான சன்மானங்கள் அள்ளி வழங்கப்பட்டன. அறக்கட்டளையின் நோக்கங்களிலிருந்து மாறுபட்ட கருத்துடையவருக்கு நிதி மறுக்கப்பட்டது, அவர்கள் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டனர். அவர்களது ஆய்வுப் பணி அரைகுறையாக நிறுத்தப்பட்டது.
நியுயார்க்கில் 2011-ம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று பங்குச்சந்தை கட்டிடத்தை நோக்கி செல்லும் வால் வீதி ஆக்கிரமிப்பு போராட்டம்.
இவ்வாறான நிகழ்ச்சிப்போக்கில் முற்றிலும் பன்மைவாத மறுப்புக் கொண்ட, குடையாய் கவிழ்ந்த ஒற்றை பொருளாதாரக் கொள்கையின் நிழலில் வளர்த்து விடப்பட்ட, உறுதியற்றதும், போலி நடிப்புமான ஒரு சகிப்புத் தன்மையும், பன்மைத்துவ பண்பாடும் (இது கணப் பொழுதில் நிறவெறியாக, தேசிய வெறியாக, இன வெறியாக அல்லது போர் வெறி கொண்ட இஸ்லாமிய வெறுப்பாக மாறக்கூடியது) எல்லாச் சொல்லாடல்களின் மீதும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இவ்வாறான நிகழ்ச்சிப் போக்கில் சமூக சிந்தனை வெளிப்பாட்டுகள் அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட புனைவு ஆக்கிரமிக்கத் தொடங்கியது. எந்த அளவுக்கு என்றால், இதனை ஒரு சித்தாந்தம் என்று காண்கின்ற பார்வையே அற்றுப் போகும் அளவுக்கு, இதுதான் இருக்க வேண்டிய நிலை என்றும், இயல்பான நிலை என்றும் கருதும் அளவுக்கு ஆகி விட்டது. இது சாதாரண நிலையை ஊடுருவியது, சாமானியத் தன்மையை அடிமை கொண்டது, இதனை எதிர்ப்பதென்பது அபத்தம் என்றும் எதார்த்தத்தையே நிராகரிக்கின்ற அசாதாரணத் தன்மை என்றும் கருதும் நிலை ஏற்பட்டது. இந்த இடத்திலிருந்து காலை ஒரு எட்டு வைத்தால் அடுத்த படி, ‘வேறு மாற்று ஏதுமில்லை’ (There Is No Alternative) என்ற கோட்பாடுதான்.
இப்போதுதான், ”வால்வீதியைக் கைப்பற்றுவோம்” இயக்கத்தின் தாக்கத்தால் அமெரிக்க வீதிகளிலும், கல்வி வளாகங்களிலும் மாறுபட்ட மொழியொன்று ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. “வர்க்கப் போர்!”, என்றோ அல்லது “நீ பணக்காரனாய் இருப்பதல்ல பிரச்சினை! எங்களது அரசாங்கத்தை விலைக்கு வாங்கி விட்டாய் என்பதே எம் பிரச்சினை!!” என்றோ முழங்கும் பதாகைகளுடன் மாணவர்களைக் காண்கிறோம். தடைகளின் பரிமாணத்தை எண்ணிப் பார்க்கையில், இதுவே கிட்டத்தட்ட ஒரு புரட்சிதான் என்று எண்ணத் தோன்றுகிறது.
“அந்தப் பக்கமாக பார்க்காதே, இந்த குழாயின் மீது மட்டும் கவனத்தை செலுத்துவோம்.” “இந்த பூமியை பாதுகாப்பதற்கான உங்கள் போராட்டத்துக்கு கொஞ்சம் நிதி உதவி வேண்டுமா?” இப்படித்தான் புதிய என்ஜிவோக்கள் பிறக்கின்றன.
தொடங்கி ஒரு நூற்றாண்டு கடந்திருக்கும் இன்றைய நிலையில் இந்த கார்ப்பரேட் தர்மகர்த்தா முறை என்பது, கொக்கோ கோலாவைப் போல் நமது வாழ்க்கையின் பிரிக்கவொண்ணாத ஒரு அம்சமாகவே ஆகி விட்டது. பெரும் அறக்கட்டளைகளோடு பூடகமானதும், சிக்கலானதுமான நிதித் தொடர்புகளால் பின்னப்பட்ட பல பத்து லட்சம் தொண்டு நிறுவனங்கள் இன்று களத்தில் இருக்கின்றன. இந்த ‘சுதந்திரமான’ துறையினரின் சொத்து மதிப்பு சுமார் 450 பில்லியன் டாலர்கள். இவற்றுள் தனது சொத்து மதிப்பாக 21 பில்லியன் டாலர்களைக் கொண்ட பில் கேட்ஸ் அறக்கட்டளை மிகப் பெரியது. 16 பில்லியன் டாலர்களைக் கொண்ட லில்லி அறக்கட்டளையும், 15 பில்லியன் டாலர்களைக் கொண்ட ஃபோர்டு அறக்கட்டளையும் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.
கட்டுமான மறுசீரமைப்பு (Structural Adjustment) நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் திணிக்கத் தொடங்கி பொது சுகாதாரம், கல்வி, குழந்தை பராமரிப்பு, மனிதவள மேம்பாடு போன்றவற்றுக்கு செய்து வந்த செலவை வெட்டிச் சுருக்குமாறு அரசுகளின் கையை முறுக்கத் தொடங்கியதுமே அரசு சாரா அமைப்புகள் நுழையத் தொடங்கின. அனைத்தும் தனியார்மயம் என்பது அனைத்தும் என்.ஜி.ஓ மயம் என்று பொருள் கொள்ளத் தக்கதாக ஆயிற்று. வேலைவாய்ப்பும் வாழ்வாதாரங்களும் மறைய மறைய என்.ஜி.ஓக்கள் வேலைவாய்ப்பின் முக்கிய ஆதாரமாகவே ஆகி விட்டனர். என்.ஜி.ஓ-க்களின் நோக்கம் என்ன என்று அறிந்தவர்களுக்கும் கூட இது வேலை வாய்ப்புக்கான புகலிடமாயிற்று. நிச்சயமாக அவர்கள் அத்தனை போருமே மோசமானவர்கள் அல்லர். பல பத்து லட்சம் என்.ஜி.ஓ-க்களில் ஒரு சிலர் தனிச் சிறப்பு வாய்ந்ததும் முற்போக்கானதுமான பணிகளைச் செய்கிறார்கள். எனவே அனைவர் முகத்திலும் ஒருசேரக் கரிபூசுவது உண்மைக்குப் புறம்பான விமர்சனமாகிவிடும். இருப்பினும், தொழிற்கழகங்கள் மற்றும் அவற்றின் அறக்கட்டளைகளால் நிதியளிக்கப்படும் அரசு சாரா அமைப்புகள் என்பது எதிர்ப்பு இயக்கங்களுக்குள் நுழைந்து அவற்றை விலைக்கு வாங்கும் உலகளாவிய மூலதனத்தின் வழிமுறையே. துல்லியமாகச் சொன்னால் இது ஒரு கம்பெனியின் பங்குகளை விலைக்கு வாங்கி, பின்னர் அதனை உள்ளிருந்தே ஆட்டிப்படைக்க முயலும் பங்குதாரரின் செயலுக்கு ஒப்பானதாகும்.
“நாம் எப்படி உணர்கிறோம் என்பதுதான் முக்கியம்” (இயற்கையை கொள்ளையடிக்கும் முதலாளித்துவத்தை எதிர்க்க வேண்டியதில்லை. உங்கள் கூரையில் ஒரு சோலார் பேனலை வைத்து விட்டால் நீங்களும் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர்.)
உலக மூலதனம் பாய்கின்ற பாதைகள் அனைத்திலும் மைய நரம்பு மண்டலத்தின் முடிச்சுக்கள் போல இந்த என்.ஜி.ஓக்கள் அமர்ந்திருக்கிறார்கள். செய்தி அனுப்புவோராக, சேகரிப்போராக, அதிர்வு தாங்கிகளாக, இப்பாதையில் ஏற்படும் ஒரு சிறிய துடிப்பைப் பற்றியும் எச்சரிப்பவராக, அதே சமயம் தமக்கு இடமளித்த நாடுகளின் அரசுகளுக்கு எரிச்சலூட்டக் கூடாது என்பதில் கவனம் நிறைந்தவர்களாக் என்.ஜி.ஓக்கள் பணி செய்கிறார்கள். (ஃபோர்டு அறக்கட்டளை மேற்படி செயல்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் பிரமாணப்பத்திரத்தில் நிதி பெறும் அமைப்புகளிடம் கையெழுத்து வாங்குகிறது.) இந்த என்.ஜி.ஓ-க்கள் தங்களது அறிக்கைகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் சேவை நடவடிக்கைகள் மூலமாக மென்மேலும் கடுமையாகி வரும் அரசுகளின் மென்மேலும் மூர்க்கமாகி வரும் உளவுத் துறையினரின் ஒட்டுக் கேட்கும் கருவிகளாக சில வேளைகளில் தெரிந்தும் சில வேளைகளில் தெரியாமலும் செயல்படுகிறார்கள். எந்த அளவுக்கு ஒரு பகுதி கலவரம் நிறைந்ததாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஏராளமான என்.ஜி.ஓ-க்கள் அதனை மொய்க்கிறார்கள்.
நர்மதா பள்ளத்தாக்கு பாதுகாப்புப் போராட்டம், கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டம் போன்ற ஒரு உண்மையான மக்கள் இயக்கத்தின் மீது சேறடிப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட இந்த அரசோ, கார்ப்பரேட் செய்தி ஊடகங்களின் ஒரு பிரிவினரோ விரும்பும்போது, அவற்றை வெளிநாட்டில் இருந்து காசு வாங்கும் என்.ஜி.ஓ-க்கள் என்று நயவஞ்சகமான முறையில் அவதூறு செய்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையான என்.ஜி.ஓ-க்களுக்கு, அதிலும் குறிப்பாக ஏராளமான அன்னிய நிதி பெறும் என்.ஜி.ஓ-க்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமை கார்ப்பரேட்டுகளின் உலகமயமாக்கத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே அன்றி தடுத்து நிறுத்துவதல்ல என்பது இவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
கார்ப்பரேட் அறக்கட்டளைகளின் பண மூட்டைகளால் ஆயுதபாணியாக்கப்பட்ட இந்த என்.ஜி.ஓ-க்கள் உலகின் மூலை முடுக்கெல்லாம் சிரமப்பட்டு ஊடுருவியிருக்கின்றனர். புரட்சியாளர்களாக உருவாகும் ஆற்றல் கொண்டவர்களை சம்பளம் வாங்கும் களப்பணியாளர்களாக மாற்றினர். கலைஞர்கள், அறிவுஜீவிகள், மற்றும் திரைத்துறைக் கலைஞர்களை நிதியால் வருடிக்கொடுத்து, முற்போக்கான கருத்துகள், விவாதங்களில் இருந்து திசை திருப்பினர். அடையாள அரசியல், மனித உரிமைகள் எனும் மொழியில் முன்வைக்கப்படும் பன்மைப் பண்பாட்டுவாதம், பெண்ணியம், சமூக (சாதி) முன்னேற்றம் போன்ற கருத்தாக்கங்களை நோக்கி அவர்களை அழைத்துச் சென்றனர்.
“என்னுடைய அறக்கட்டளை உங்கள் போராட்டத்துக்காக பிரச்சாரம் செய்ய காசு தரும்.”
நீதி என்ற உன்னதமான கருத்தாக்கத்தை மனித உரிமைகள் எனும் தொழிலாக மாற்றியமைத்தது என்பது கருத்தியல் தளத்தில் நடத்தப்பட்டிருக்கும் ஒரு கவிழ்ப்பு நடவடிக்கையாகும். இக்கவிழ்ப்பு நடவடிக்கையில்என்.ஜி.ஓ-க்களும், அறக்கட்டளைகளும் மிக முக்கியப் பாத்திரம் ஆற்றியுள்ளனர். மனித உரிமைகள் என்ற குறுகிய பார்வை பிரச்சினையின் விரிந்த பரிமாணத்தைப் பார்க்க விடாமல் தடுத்து, அதனைக் குறிப்பிட்ட அட்டூழியம் குறித்த ஆய்வாக மட்டும் மாற்றுவதுடன், மோதலில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையுமே – உதாரணமாக மாவோயிஸ்டுகளையும் இந்திய அரசையும் அல்லது இஸ்ரேலிய ராணுவத்தையும், ஹமாஸையும் – மனித உரிமையை மீறியவர்களாகக் கண்டனம் செய்ய வாய்ப்பளிக்கிறது.
இவ்வாறு செய்வதன் மூலம் கார்ப்பரேட் சுரங்கப் பெருநிறுவனங்களின் நில அபகரிப்போ, பாலஸ்தீனியருக்குச் சொந்தமான தாயகத்தை இஸ்ரேல் அரசு இணைத்துக் கொண்ட வரலாறோ முக்கியத்துவம் ஏதுமற்ற வெறும் அடிக்குறிப்புகளாக சுருக்கப்பட்டு விவாதத்தில் இருந்து ஓரங்கட்டப்படுகின்றன.
மனித உரிமைகள் என்பது பொருட்படுத்தப்பட வேண்டிய விசயமல்ல என்று கூறுவது இதன் நோக்கம் அல்ல. அவை முக்கியம்தான். எனினும், நாம் வாழும் உலகில் நம்மைச் சூழ்ந்துள்ள மாபெரும் அநீதிகளைப் பரிசீலிக்கவோ அல்லது சற்றேனும் புரிந்துகொள்ளவோ உதவக்கூடிய முப்பட்டகை ஆடி (prism) இது அல்ல என்றே சொல்கிறேன்.
மற்றொரு கருத்துக் கவிழ்ப்பு பெண்ணிய இயக்கங்களுக்குள் அறக்கட்டளைகளின் தலையீடு தொடர்பானது. தமது சொந்த சமூகத்தில் நிலவும் தந்தை வழி ஆணாதிக்கத்துக்கு எதிராகவும், கார்ப்பரேட் சுரங்கப் பெருநிறுவனங்களின் நிலப்பறி நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தண்டகாரண்யா காடுகளில் போராடி வரும் 90,000 உறுப்பினர்களைக் கொண்ட கிராந்திகாரி ஆதிவாசி மகிளா சங்கதன் (புரட்சிகர ஆதிவாசி பெண்கள் கூட்டமைப்பு) போன்ற அமைப்புகளிடமிருந்து இந்தியாவின் ‘அதிகாரபூர்வ’ பெண்ணியவாதிகளும், பெண்ணுரிமை அமைப்புகளும் கவனமாக விலகியிருப்பது ஏன்? இலட்சக்கணக்கான பெண்கள் தொன்று தொட்டு தங்கள் உடமையாகக் கொண்டிருந்த உழைத்து வந்த நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்படுவது ஒரு பெண்ணியப் பிரச்சனையாக ஏன் பார்க்கப்படுவதில்லை?
ஏகாதிபத்திய எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு மக்கள் இயக்கங்களில் இருந்து தாராளவாத பெண்ணிய இயக்கங்களை பிரித்து வைக்கும் வேலை, அறக்கட்டளைகளின் சதிச்செயல் காரணமாக துவங்கியதல்ல. 1960-களிலும், 1970-களிலும் பெண்களிடையே ஏற்பட்ட அதிவேகமான முற்போக்கான மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கவும், இடம் கொடுக்கவும் இம்மக்கள் இயக்கங்களுக்கு இயலாமல் போனதிலிருந்து இது துவங்கியது.
தங்களது பாரம்பரிய சமூக அமைப்பில் நிலவிய தந்தை வழி ஆணாதிக்கத்துக்கு எதிராகவும், இடதுசாரி இயக்கங்கள் எனப்படுபவனவற்றின் முற்போக்கானவர்கள் என்று கூறிக் கொண்ட தலைவர்கள் மத்தியிலும் நிலவிய இப்போக்கிற்கு எதிராகவும் பெண்கள் பொறுமை இழந்து கொண்டிருந்ததை அடையாளம் காண்பதிலும், ஆதரித்து நிதியளித்து வளர்ப்பதிலும் அறக்கட்டளைகள் தங்களது சாதுரியத்தை வெளிப்படுத்தின.
கிராந்திகாரி ஆதிவாசி மகிளா சங்கேதன்
இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில் இந்தக் கருத்துப் பிளவு, நாட்டுப்புற நகர்ப்புற பிளவை ஒட்டியதாகவும் இருக்கிறது. இங்கே மிகவும் முற்போக்கான முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கங்கள் கிராமப்புறத்தைச் சார்ந்திருக்கின்றன. அங்கோ பெரும்பாலான பெண்களின் அன்றாட வாழ்வில் தந்தை வழி ஆணாதிக்கமே கோலோச்சுகிறது. நக்சலைட் இயக்கம் போன்ற இயக்கங்களில் தம்மை இணைத்துக் கொண்ட நகர்ப்புறத்துப் பெண்கள், மேற்கத்திய பெண்ணிய இயக்கங்களின் தாக்கத்துக்கு ஆளானவர்களாகவும், அவற்றால் பெரிதும் உந்தப்பட்டவர்களாகவும் இருந்தனர்.
பெண் விடுதலை நோக்கிய தங்களது சொந்தப் பயணமானது, தம்முடைய கடமை என்று அவர்களுடைய ஆண் தலைவர்கள் கருதிய ‘மக்களுடன் ஐக்கியப்படுதல்’ என்பதுடன் பல சமயங்களில் முரண்பட்டது. பெண் செயல்வீரர்கள் பலர், தங்களது வாழ்க்கையில் சக தோழர்களிடமிருந்தும் கூட அன்றாடம் அனுபவிக்கும் ஒடுக்குமுறை மற்றும் பாரபட்சங்களை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, என்றோ வரவிருக்கும் ‘புரட்சிக்காக’ காத்திருக்கத் தயாராக இல்லை. அவர்கள் பாலின சமத்துவம் என்பதை புரட்சிக்குப் பின் நிறைவேற்றப்படும் வாக்குறுதியாக அல்லாமல், உடனடியானதாக, விவாதம் – விட்டுக் கொடுத்தல்களுக்கு இடமற்ற வகையில் புரட்சிகரப் போக்கின் ஒரு பகுதியாக வழங்கப்பட வேண்டிய முற்றொருமை கோரிக்கையாக கருதினர்.
கோபமும், ஏமாற்றமும் கொண்ட அறிவாற்றலுள்ள பெண்கள் இவ்வியக்கங்களில் இருந்து வெளியேறி தம்மையும் தமது கொள்கைகளையும் பராமரித்துக்கொள்ள வேறு வழிவகைகளைத் தேடினர். முடிவாக, ’80-களின் கடைசியில், இந்தியச் சந்தை திறந்து விடப்பட்ட அந்த காலகட்டத்தில் இந்தியாவைப் போன்றதொரு நாட்டின் தாராளவாத பெண்ணிய இயக்கம் வரம்பு கடந்த அளவில் என்.ஜி.ஓ மயமாகியிருந்தது. இந்த என்.ஜி.ஓ-க்களில் பெரும்பாலோர் பாலினம்சார் உரிமைகள், குடும்ப வன்முறை, எய்ட்ஸ், பாலியல் தொழிலாளர் உரிமை போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்துள்ளனர். எனினும், புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான இயக்கங்கள் எதிலும் – இக்கொள்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே என்ற போதிலும் – இந்தப் பெண்ணிய அமைப்பினர் முன்னணிப் பாத்திரம் ஆற்றவில்லை. நிதி வழங்கல் நடவடிக்கைகளை மிகவும் சாதுரியமாகக் கையாண்டதன் மூலம், பெண்ணிய இயக்கத்தின் அரசியல் செயல்பாட்டு எல்லை எதுவாக இருக்க வேண்டும் என்று வரையறுத்து வேலியடைப்பதில் அறக்கட்டளைகள் பெரு வெற்றி பெற்றிருக்கின்றன. எவை ‘பெண்கள் சார்ந்த பிரசினைகள்’, ‘எவை அந்த வரையறைக்குள் வராதவை’ என்பதை என்.ஜி.ஓக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான நிபந்தனைகள் வரையறுத்துக் கூறுகின்றன.
அமெரிக்காவில் இருக்கும் அயலுறவு மன்றம் – என்ஜிவோக்களின் மெக்கா
பெண்கள் இயக்கத்தின் என்.ஜி.ஓ மயமாக்கம், மேற்கத்திய தாராளவாத பெண்ணியத்தையே, எது பெண்ணியம் என்பதற்கான அளவுகோலாக ஆக்கியிருக்கிறது. (பெரும்பாலான நிதியைப் பெறும் பெண்ணியம் அதுதான் என்பதும் காரணமாக இருக்கலாம்.) போராட்டங்கள் வழக்கம் போல பெண்களின் உடல்கள் மீதுதான் நடக்கிறது. முகச்சுருக்கத்தை நீக்கும் போடோக்ஸை எதிர்ப்பது ஒரு முறையிலும் முகத்தை மூடும் புர்க்காவை எதிர்ப்பது மறுமுறையிலுமாக இப்போராட்டம் நடக்கிறது. (போடோக்ஸ், புர்கா என்ற இரண்டு தீமைகளின் கிடுக்கிப்படியில் சிக்கிய பெண்களும் இருக்கிறார்கள்).
சமீபத்தில் பிரான்சில் நடந்தது போல, ஒரு பெண் தான் விரும்புவதை தெரிவு செய்யும் வாய்ப்பைத் தருகின்ற சூழ்நிலையை உருவாக்குவதற்குப் பதிலாக, பலாத்காரமாக புர்க்காவைக் கழற்றச் செய்யும் முயற்சியில் இறங்குவது, அவளை விடுதலை செய்ததாகாது, ஆடையை அகற்றியதாகவே கொள்ளப்படும். இது ஒரு அவமானப்படுத்தும் நடவடிக்கையாகவும், பண்பாட்டு மேலாதிக்கமாகவும் ஆகி விடுகிறது. இது புர்க்கா பற்றியதாக அல்லாமல் நிர்ப்பந்தம் பற்றியதாக மாறி விடுகிறது. புர்க்காவைக் கழற்றுமாறு ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வது, புர்க்காவை அணிந்து கொள்ள நிர்ப்பந்திக்கும் செயலுக்கு ஒப்பான தவறாகும். பாலினப் பிரச்சினையை அதன் சமூக, அரசியல், பொருளாதாரப் பரிமாணங்களை எல்லாம் உதிர்த்து விட்டுப் பார்ப்பதுதான் அதனை தனித்துவமான அடையாளப் பிரச்சினையாக, ஆடை அலங்காரப் போராட்டமாக ஆக்கி விடுகிறது. இந்தப் போக்குதான் அமெரிக்க அரசு 2001-ல் ஆப்கானை ஆக்கிரமித்த போது மேற்கத்திய பெண்ணியக் குழுக்களைத் தனது தார்மீக முக்காடாகப் பயன்படுத்திக் கொள்ள அதற்கு வாய்ப்பளித்தது. அன்றும், இன்றும், என்றும் ஆப்கானியப் பெண்களுக்குத் தாலிபான்களால் பெருத்த துன்பம்தான். ஆனால் அவர்கள் மீது போடப்படும் டெய்சி கட்டர் குண்டுகள் அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கப் போவதில்லை.
என்.ஜி.ஓ-க்களின் பிரபஞ்சத்தில், அவர்களிடையே பரிணமித்திருக்கும் யாருக்கும் நோகாத, விளங்காத சுவிசேஷ மொழியில் சொல்வதானால், எல்லாமே “சப்ஜெக்ட்” ஆகி விட்டது. ஒவ்வொன்றும் தனிமுதலான, தொழில் முறையான, தனிக் கவனம் தேவைப்படும் பிரச்சினை. அவர்களுக்கு ஒவ்வொன்றும் ஒவ்வொரு சப்ஜெக்ட் தான். சமூக மேம்பாடு, தலைமைத்துவ மேம்பாடு, மனித உரிமைகள், சுகாதாரம், கல்வி, மகப்பேறு உரிமை (reproductive rights), எய்ட்ஸ், எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட அனாதைகள் – இப்படி ஒவ்வொன்றும் அதற்கே உரிய விரிவான மற்றும் துல்லியமான விளக்கங்களுடனும், நிதியளிப்புக்கான சுருக்கமான செயற் குறிப்புடனும் தத்தம் காற்றுப் புகாப் பெட்டகங்களில் அடைத்து ஆப்பறையப் படுகிறது. ஒடுக்குமுறைகளால் என்றுமே உடைக்க முடியாத வழிகளிலெல்லாம் மக்களின் ஒற்றுமையை கார்ப்பரேட்டுகளின் நிதி சுக்குநூறாக உடைத்தெறிந்திருக்கிறது.
பெண்ணியம் போலவே வறுமையும் கூட இப்போதெல்லாம், அடையாளப் பிரச்சினையாக வரையறுக்கப்படுகிறது. இவர்களது கருத்துப்படி, ஏழைகள் எனப்படுவோர் அநீதியால் தோற்றுவிக்கப்பட்டவர்கள் அல்லர். அது ஒரு தொலைந்து போன, ஆனால் இன்னமும் உயிர் வாழ்கின்ற ஒரு இனம். குறைதீர்ப்பு நடவடிக்கைகள் மூலமாக குறுகிய காலத்திலேயே அவர்களை வறுமையிலிருந்து மீட்டு விட முடியும். யாருக்கு என்ன வேண்டுமோ அதை தனிப்பட்ட முறையில் என்.ஜி.ஓ-க்கள் பார்த்துக் கொள்வார்கள். நீண்டகால நோக்கில், சிறந்த அரசாளுமை அவர்களுக்கு ஒரு புது வாழ்வை வழங்கும். எல்லாம் உலக கார்ப்பரேட் முதலாளியத்தின் ஆட்சியின் கீழ்தான் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
– அருந்ததி ராய் எழுதிய “முதலாளித்துவம் : ஒரு பேய்க் கதை” (தமிழாக்கம் : அந்திவண்ணன்) என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.
முழு நூலை வாங்கிப் படிக்க……….
வெளியிடுவோர் : மக்கள் கலை இலக்கியக் கழகம், திருச்சி பக்கங்கள் 52 நன்கொடை ரூ 30
நூல் கிடைக்குமிடம் : புதிய கலாச்சாரம்,
16, முல்லை வணிக வளாகம், 2-வது நிழற்சாலை,
அசோக்நகர், சென்னை – 600 083
தொலைபேசி – 044 2371 8706, 99411 75876
முதலாளித்துவம் ஒரு பேய்க்கதை என்ற தலைப்பில் அருந்ததி ராய் நிகழ்த்திய உரையின் வீடியோ
நாட்டை காப்பாற்றுகிறேன் என்று எல்லா கட்சிகளும் ஏப்பம் விடும் இந்த போலி ஜனநாயகத் தேர்தலால் ஒரு புல்லைக் கூட காப்பாற்ற முடியாது. இது புல்லுருவிகளின் பிறப்பிடம்! பூமிக்கே பாரம்! இயற்கைக்கே எதிரி!
மக்களின் அடிப்படைத் தேவைகளையும், மக்களுக்கான அடிப்படை சேவைகளையும் காசாக்கி உழைக்கும் மக்களை அழிக்கின்ற வேலையை மட்டும் போலி ஜனநாயகத்தின் புதல்வர்கள் செய்வதில்லை.
முதலாளித்துவம் நிகழ்த்தி வரும் சுற்றுச்சூழல் பேரழிவு
இதைவிடக் கொடூரமாக மக்களின் வாழ்வாதாரங்களான நிலம், வனம், மலை, கடல், காற்று என அனைத்தையும் அழித்து, தனிப்பட்ட முதலாளிகளின் லாபத்திற்காக சுற்றுச்சூழலை நஞ்சாக்கும் இவர்கள் இயற்பகை கிரிமினல்கள்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நாட்டை முன்னேற்றுகிறேன் என்று பஞ்சபெளதீகங்களையும் சீரழித்து நாசமாக்குவதுதான் அரசின் ‘வளர்ச்சிக்’ கொள்கை.
இயற்கையின் கருவறையையே சுரண்டும் இந்த கயவர்கள் அரசாள ஓட்டு ஒரு கேடா? தேர்தல் ஒரு கேடா?
அய்ந்தைந்து ஆண்டுகளாய் மாறி, மாறி வரும் இந்தப் பாவிகளால் நமது அய்வகை நிலத்தின் அடையாளமே மாறிவிட்டது!
மருதம் என்பது நிலமும், நிலம் சார்ந்த மாஃபியாக்களும்,
நெய்தல் என்பது கடலும், கடல் சார்ந்த மாஃபியாக்களும்,
முல்லை என்பது காடும், காடு சார்ந்த மாஃபியாக்களும்,
குறிஞ்சி என்பது மலையும், மலை சார்ந்த மாஃபியாக்களும்
பாலை என்பது நகரமும், நகரம் சார்ந்த பன்னாட்டுக் கம்பெனிகளும்
என மொத்த பூமியும் கார்ப்பரேட் முதலாளிகளின் கொடுங்கரத்தால் குதறப்படுகிறது.
இதற்கு காவலிருக்கும் சதிகாரப் படைகளான அரசியல் கட்சிகள், அதிகாரிகள், நீதிமன்றங்கள், பத்திரிகை, ஊடகங்கள், என்ற செட்டப்பை மீண்டும் நம்மீது திணிக்கத்தான் தேர்தல், வெங்காயம் என்ற இந்த கெட்அப்!
நாய்க்கு சோறு வைப்பதனாலேயே நாம் அதற்கு எஜமான் என்று நினைத்துக் கொள்வது போல, நாம் ஓட்டுப் போடுவதாலேயே இவர்களுக்கு எஜமான் என்று நினைத்துக் கொள்வது சரியா?
முதலாளித்துவம்
நாம் போடும் ஒரு ஓட்டு அம்பானிக்கு ஒரு எண்ணெய் வயலாக மாறி நம் சூழலை அழிக்கிறது!
நாம் போடும் ஒரு ஓட்டு டாடாவுக்கு கார் தொழிற்சாலையாகி நம் வயலை அழிக்கிறது!
நாம் போடும் ஒரு ஓட்டு ஜிண்டாலுக்கு கவுந்தி வேடியப்பன் மலையின் கனிமங்களாகி ஊரையே அழிக்கிறது.
கேக்குறப்ப கொடுக்காம இருக்க முடியுமா? என்று நாம் தருகிற ஒரு ஓட்டு கோக், பெப்சிக்கு தாமிரவருணி ஆறாக தாரைவார்க்கப்படுகிறது!
எனவே நமது வாழ்வாதாரங்களை அழிக்கும் இந்தப் பாதகர்களைத் தேர்ந்தெடுத்து இவர்களை தேர்தலுக்குப் பிறகு தட்டிக் கேட்டு தடுக்கவும் முடியாத இந்த வாக்குரிமை செத்தவன் கையில் வெத்தல பாக்குதான்!
எனவே நமது பூமியையே கருக்கி காசாக்கும் இந்த களவாணிகளுக்கு களம் அமைக்கும் போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்பதுதான் இயற்கையான நியதி!
எத்தனை ஆண்டு மழைவளத்தை தனது ஈர நெஞ்சில் சேமித்து வைத்திருக்கிறது நிலம். அதை தண்ணீர் வியாபாரத்திற்காக ஒரு நிமிடத்தில் உறிஞ்சி காசாக்கி விடுகிறான் முதலாளி. எந்த வரையறையும் இன்றி தொடர்ந்து ஆழ்துளை கருவிகள் மூலம் மண்ணகத்து பனிக்குடத்தையே உடைத்து நாசமாக்கி அந்தப் பகுதியையே பாலையாக்கிவிட்டு, வேறு இடத்துக்கு நீர்க்கொலை புரி்ய கிளம்பிவிடுகிறான்.
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கார்ப்பரேட் கொள்கையின் படியே இந்த கொலையும், கொள்ளையும் நடக்கிறது. நம் தாயின் மார்பைக் குதறும் இந்த தனியார்மய குரூரத்தை தடுக்க வக்கில்லாமல், இதையே வளர்ச்சியாகத் திணிக்கும் இந்த போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்பதுதான் மண்ணின் மைந்தர்களான நம் கடமை!
மலைகள் மற்றும் காடுகளில் தாதுக்கள், கிரானைட், கனிமங்கள் என பல கோடிகளில் லாபம் பார்க்க மலையரசியின் மார்பகங்கள் அறுக்கப்படுகின்றன.
வனங்களின் அடர்த்தியான மரங்களின் இதயங்கள் கருக்கப்படுகின்றன.
சுள்ளி பொறுக்குபவர்களால் வனத்திற்கு ஆபத்து என மக்களை வாழ்விடங்களை விட்டு விரட்டி விட்டு, அள்ளிக் கொடுக்கிறார்கள், பன்னாட்டு கம்பெனிகளுக்கு.
அவன், பல்லாண்டு காலம் பல்லுயிர் பெருக்கத்திற்கான சூழலைப் பேணிய காடுகள், மலைகளை ஈவு இரக்கமின்றி அழித்து, சுற்றுச்சூழலை அழித்து மழையின்றி பருவநிலை மாறுபாட்டிற்கே காரணமாகும் அளவுக்கு இயற்கையை தனிநபர் லாபத்திற்காக கொல்லுகிறான்.
தரைமட்டமாகிய நிலையிலும் தன் முயற்சியில் ஆறுகள் காத்து வைத்திருக்கும் ஊற்றுக் கண்களையே குருடாக்கும் அளவுக்கு மணலை ஒட்டச் சுரண்டுகிறார்கள் மணல் மாஃபியாக்கள்.
இவர்கள்தான் எல்லா கட்சிகளுக்கும் தேர்தல் புரவலர்கள், உள்ளூர் அரசியல் ஆதிக்க சக்திகள்.
நமது ஆற்று வளத்தை கொள்ளையிடும் இந்த மண்ணின் எதிரிகளை மறுகாலனியாக்கத்திற்கான இந்தத் தேர்தல் பாதையால் தடுக்க முடியுமா? இவர்கள் இன்னும் தீவிரமாக இயற்கையை வேட்டையாடத்தான் ஓட்டு வேட்டையே நடக்கிறது.
மழைபெய்து, ஆற்றில் நீர் பெருகி, நிலத்தடி நீர் பெருகி, கரைகள் செழித்தால்தான், வயல் வெளி பச்சை விரியும்,
அது சார்ந்த பூச்சிகள், மகரந்த சேர்க்கைகளுக்கு உதவும், மலர்களின் தாதுக்கள் தேன் சுரக்கும்,
பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், கோழிகள், மாடுகள் என பலவான உயிரியினச் சூழலின் உலகமும் சமமாகப் பேணப்படும்.
முதலாளித்துவ லாபவெறி சீரழிக்கும் சுற்றுச் சூழல்.
காடுகள் செழித்தால்தான் காட்டுயிரிகளின் சமத்தன்மை பேணப்பட்டு, இயற்கையின் உயிரியியல் சங்கிலி அறுபடாமல் மனிதன் வரைக்கும் வாழ்வு தரும்.
இயற்கை அழிந்தால் பூச்சி மட்டுமல்ல, மனிதனுக்கும் வாழ்வாதாரம் போய் அழிவுதான்.
இயற்கைக்கு பாதிப்பு தந்தால் அது பதிலுக்கு சுனாமியாக, நில அதிர்ச்சியாக, பெருவெடிப்பு மழையாக தாக்கி பழைய நிலைக்கு தன்னை நிலை நிறுத்த முயலும். மனிதன் நாம்தான் தாங்கமுடியாமல் அழிய நேரிடும், எனவே நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ளும் போராட்டம் என்பதே, இயற்கையை காப்பாற்றும் போராட்டத்துடன் இணைந்த ஒன்று.
இந்த வாழ்வினச் சூழலுக்கு வேட்டு வைக்கும் ஓட்டெதற்கு? இதை எதிர்த்து போராடுவதுதான் சரியான பாதை, இந்த உரிமையை மறுக்கும் போலி ஜனநாயகத்தை தூக்கி எறிவதுதான்சரி!
பூமியில் தன்னால் ஆன அளவு ஈரப்பதத்தை தக்க வைத்து மழைபொழிவை வரவழைக்கும் பசுமையான மரங்கள், மணல் துளைகள், நீரைத் தேக்கி வைத்து நிலத்தடி பரப்பும் மலைக்குன்றுகள் அனைத்தையும் அழித்து நாட்டை சுடுகாடாக்கும்இந்த இழவு வியாபாரிகளை அடித்து விரட்டும் ஜனநாயகம்தான் இன்று நமக்குத் தேவை.
யானைகளும், சிறுத்தைகளும் கூட தங்களது வாழ்வுரிமை பறிக்கப்படும் போது அடுத்த தேர்தலுக்கு அடுத்தவனைத் தேர்ந்தெடுக்கலாம் என்று வாக்காளர் வரிசையில் வந்து ஓட்டுப்போட நினைப்பதில்லை, அடித்து நொறுக்கு என்று உயிராதார போராட்டத்தின் வழி குடியிருப்புகளை புகுந்து தாக்குகிறது. சமநிலையை குலைத்த சமூகத்தின் அவநிலையை குலைக்கிறது. அவைகளுக்கு ஐந்தறிவாம்! நமக்கு ஒன்று கூடவாம், எதுக்கு எது நடந்தாலும் பொறுத்துக்கொண்டு இந்த போலி ஜனநாயகத்தோடே மாரடிக்கவா?
எத்தனைச் செடிகள் நமது தீராத வியாதிக்கு மருந்தாகி இருக்கும்
எத்தனை பூச்சிகள் நமது சுற்றுச்சூழலை காத்திருக்கும்
எத்தனை தேனீக்கள் தேன் சேகரித்திருக்கும்
இருமி, இருமி இளைத்துப்போன காசநோய்க்கு எத்தனை ஆடுகள் ஈரலைத் தந்திருக்கும்
பிறந்த குழந்தைக்கு பால் இல்லாத நிலையில் கறந்த பாலை எத்தனை பசுக்கள் நமக்கு தந்திருக்கும்
இன்று ஒரு வாய் தண்ணீர் கேட்டு மாடு வந்து நம் வாசலில் நிற்கிறது.
ஒண்டிக்கொள்ள ஒரு இலை, தழை இன்றி வண்ணத்துப்பூச்சி தவிக்கிறது.
மண்ணோ நஞ்சாகி மண்புழு நெளிகிறது.
ஒரு ஈரச் சுவர் தேடி எறும்பு அலைகிறது.
இறங்கி இளைப்பாற ஒரு கிளையின்றி பறவை ஊரை வெறுக்கிறது…
புதிய மகவின் நுதலில் வழியும் புன் சிரிப்பை காணாத தூரத்தில் கூலி உழைப்பு நம்மை துரத்துகிறது.
இந்த மொத்த கொடூரத்திற்கும் காரணமான, இயற்கையே மன்னிக்காத இந்த போலி ஜனநாயகம் நமக்கு எதற்கு?
தேர்தலை புறக்கணிப்போம்! பூமியெங்கும் நீரை விநியோகம் செய்யும் புவிஈர்ப்பு விசை போல, பொதுவுடமை அடிப்படையில் இந்த பூமிக்கே, அரசியல் விசை பாய்ச்சும் ஒரு புதிய ஜனநாயக அரசமைக்க இயற்கையாகப் போராடுவோம்!
கடந்த 10 நாட்களில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், சரக்கு அடிக்கும் குடிகாரனின் ரத்தத்தில் கலக்கும் ஆல்கஹால் போல, கிடு கிடுவென்று ஏறியிருக்கிறது. மார்ச் 24-ம் தேதி காலையில் 21,753 மட்டத்தில் தொடங்கிய குறியீட்டு எண் ஏப்ரல் 2-ம் தேதி வரையிலான அடுத்த 7 வர்த்தக நாட்களில் மட்டும் 3.18% அதிகரித்திருக்கிறது. அதாவது, ஆண்டு முழுவதும் இதே வீதத்தில் பங்கு விலைகள் அதிகரித்தால் (அப்படி அதிகரிக்கப் போவதில்லை என்பது தெரிந்ததே) அவற்றின் விலை இரு மடங்காகி விடும்.
குடிகாரனைப் போல தள்ளாடி நகரும் பங்குச் சந்தை குறியீட்டு எண்
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் அதிகரித்துக் கொண்டே போயிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை 1 டாலர் வாங்க ரூ 63 வரை கொடுக்க வேண்டியிருந்த நிலை மாறி இப்போது 1 டாலருக்கு ரூ 60-க்கும் குறைவாக கொடுத்தால் போதும் (சுமார் 5% மதிப்பு அதிகரிப்பு) என்ற நிலையை அடைந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ரூபாயின் மதிப்பு 1 டாலருக்கு ரூ 68 வரை வீழ்ச்சியடைந்தது நினைவிருக்கலாம்.
இந்த 10 நாட்களில் என்ன நடந்து விட்டது? இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி அதிகரித்து விட்டதா? மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி உயர்ந்திருப்பதாக தகவல்கள் புள்ளிவிபரங்கள் சொல்கின்றனவா? விவசாயத் துறையில் வளர்ச்சி பற்றிய நம்பிக்கையூட்டும் செய்திகள் வந்திருக்கின்றனவா?
அப்படி எதுவும் வரவில்லை. உண்மையில், மின்சார பயன்பாட்டை கண்காணித்து வரும் ஆய்வாளர்கள் தொழில் துறை உற்பத்தி குறைந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். கவலை தரும் விதமாக இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட குறைவாக இருக்கும் என்ற வானிலை மையத்தின் கணிப்பும் வெளியாகியிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடன் தொல்லையினால் ஒரே மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும் பங்குச் சந்தையில் பங்குகளின் விலைகள் கொடி கட்டிப் பறக்கின்றன.
பங்குச் சந்தையில் பணத்தைக் கொண்டு கொட்டுபவர்கள் அன்னிய முதலீட்டாளர்கள். அன்னிய நிறுவனங்கள் ஏப்ரல் 1-ம் தேதி மட்டும் பங்குகளை வாங்குவதன் மூலம் 3,856 கோடி ரூபாய் பணத்தை நிகரத் தொகையாக நாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றன. மார்ச் மாதம் அன்னிய நிறுவனங்களின் நிகர வாங்கல், அதாவது அவர்கள் கொண்டு வந்த பணம் ரூ 25,619 கோடியாக இருந்தது.
இந்த அன்னிய முதலீட்டாளர்கள் என்பது யார், அவர்கள் வழியாக வரும் பணம் யாருடையது என்பதை பின்னர் பார்ப்போம்.
கார்ப்பரேட் சேவையில் – ஒத்த கருத்துடன் சிதம்பரமும், மோடியும்.
இவ்வளவு பணம் இந்திய பங்குச் சந்தையில் வந்து குவியும் அளவுக்கு உலகில் ஆதிக்கம் செலுத்தும் முக்கிய வல்லரசுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போனவற்றில் பெரிய மாற்றம் ஏதாவது நடந்து விட்டதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. மாறாக, இந்திய ஏற்றுமதி ஊக்கம் இழக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரம் 2013-ன் கடைசி காலாண்டில் வெறும் 0.1% மட்டுமே வளர்ச்சி கண்டிருக்கிறது என்ற புள்ளிவிபரமும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்குள் டாலர் வருவதை குறைக்கும் விதமாக அமெரிக்க மத்திய வங்கி டாலர் அச்சடிப்பதை குறைக்கப் போகிறது என்ற செய்தியும் வெளியாகியிருக்கின்றன.
‘மோடி பிரதமராகப் போவதை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் பணத்தைக் கொண்டு வந்து இந்தியாவில் கொட்டுகிறார்கள்’ என்றார்கள் பாரதிய ஜனதா கட்சியினர். ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடப்புக் கணக்கு பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வந்ததுதான் பங்குச் சந்தை உயர்வுக்குக் காரணம்’ என்கிறார் ப சிதம்பரம். மாம்பலத்தைச் சேர்ந்த கிட்டு மாமாவோ இந்த வருடம் ஏப்ரல் 2-ம் தேதியே இந்தியாவின் ஜாதக பலன் மாறியிருப்பதுதான் காரணம் என்கிறார். இதில் எதை நம்ப வேண்டும் என்பது அவரவர் மத நம்பிக்கைகளை பொறுத்தது.
எனில் இந்த வீங்கிய பங்கு சந்தை வளர்ச்சிக்கு என்ன காரணம்? கருப்பு பணம்? காங்கிரஸ் போய், பாஜக வந்தாலும், அல்லது ஊழல் எதிர்ப்பு புகழ் ஆம் ஆத்மியே வந்து விட்டாலும் கருப்புப் பணப் புழக்கம் எந்த வகையிலும் குறைந்து விடப் போவதில்லை.
ஆனால், மும்பையைச் சேர்ந்த விஜய் ஜாதவ் என்ற நிதித்துறை குற்றங்களை கண்டுபிடிக்கும் தடயவியல் நிபுணர், இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 23 லட்சம் கோடி ரூபாய், மக்களவை தேர்தலையொட்டி நாடு திரும்பி வந்திருப்பதுதான் பங்குச் சந்தைகளில் காணப்படும் எழுச்சி, அன்னியச் செலாவணிக்கான கருப்புச் (ஹவாலா) சந்தையில் ரூபாய்க்கான கிராக்கி, அதிகரித்திருக்கும் தங்கக் கடத்தல், ரியல் எஸ்டேட் துறையில் சுறுசுறுப்பு இவற்றுக்கு காரணம் என்று கூறுவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் புள்ளிவிபரங்கள், ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான தரவுகள், தங்க வர்த்தகர்கள் தரும் தகவல்கள், மற்றும் அன்னிய செலாவணி நிபுணர்களின் கருத்துக்களை திரட்டி ஆய்வு செய்து தான் இந்த முடிவுக்கு வந்ததாக ஜாதவ் கூறுகிறார்.
முதலாவதாக, 2000-ம் ஆண்டுக்கும் 2003-ம் ஆண்டுக்கும் இடையே வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை வைத்திருந்த இந்தியர்கள் அதைப் பயன்படுத்தி 7,000 முதல் 8,000 டன் தங்கத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். 2003-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட எம்சிஎக்ஸ் ஆன்லைன் வர்த்தக சந்தையின் மூலம் தங்கத்தை இந்தியாவிற்குள் அனுப்புவதன் மூலம் கருப்புப் பணம் கொண்டு வரப்பட்டது என்கிறார் அவர்.
இரண்டாவதாக, பொதுவாக அன்னியச் செலாவணிக்கான கருப்புச் சந்தையில் (ஹவாலா) ரூபாய்க்கு எதிரான டாலரின் நாணய மாற்று வீதம் அதிகாரபூர்வ செலாவணியை விட 1.5 முதல் 2 சதவீதம் அதிகமாக இருக்கும். மாறாக 2009 முதல் 2013 வரையிலான கால கட்டத்தில் ஹவாலா வீதங்கள் அதிகார பூர்வ வீதத்தை விட 1 சதவீதம் குறைவாகவே இருந்திருக்கின்றன. சட்டத்துக்கு வெளியிலான முறைகளில் இந்தியாவுக்குள் பணத்தை கொண்டு வருவதற்கான வேண்டல் (demand) அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது என்கிறார் ஜாதவ்.
மூன்றாவதாக, மார்ச் 31, 2000 அன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 51.06 சதவீதமாக இருந்த நாட்டின் மொத்த பணப் புழக்க குறியீட்டு எண் (பணம், வங்கி வைப்புத் தொகைகள், கடன் பத்திரங்கள் இவற்றின் மொத்தம் – M3) மார்ச் 31, 2012 அன்று 73.29 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இந்திய பொருளாதாரத்தின் இயல்பான தேவைக்கான M3 உள்நாட்டு உற்பத்தியில் 55-60 சதவீதம் மட்டுமே என்று வைத்துக் கொண்டால் அதன் மதிப்பு ரூ 70.18 லட்சம் கோடியாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் கடந்த பிப்ரவரி மாத கடைசியில் ரிசர்வ் வங்கியின் புள்ளிவிபரப்படி அது ரூ 93.58 லட்சம் கோடியாக இருக்கிறது. உள்நாட்டு தேவையை விட அசாதரணமாக அதிகரித்திருக்கும் இந்த ரூ 23.39 லட்சம் கோடிதான் புதிதாக நாட்டுக்குள் நுழைந்திருக்கும் கருப்புப் பணம் என்கிறார் ஜாதவ்.
கார்ப்பரேட் தரகும், இந்துத்துவா வெறியும் கைகோர்க்கும் இடம் பாஜக.
வருவாய் கண்காணிப்புத் துறை அதிகாரி ஒருவரும் கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ 1,500 கோடி முதல் ரூ 5,000 கோடி வரையிலான கருப்புப் பணம் இந்தியாவுக்குள் வந்திருக்கிறது என்று மதிப்பிட்டுள்ளார்.
இது குறித்து எழுதியிருக்கும் இந்தியா டுடே, “மோடி பிரதமர் ஆகப் போவதால் அவர் உறுதியான நடவடிக்கை எடுத்து விடுவார் என்று பயந்து வெளிநாட்டில் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் இப்போதே பணத்தை கொண்டு வருகிறார்கள்” என்று கூறியிருக்கிறது. மேலும் சுப்பிரமணிய சாமி என்ற ஆசாமி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்திய கருப்புப் பணம் சுவிஸ் கணக்குகளிலிருந்து வெளியேறி விட்டதாக கூறியதையும் குறிப்பிடுகிறது.
கருப்புப் பணம் என்பது சுவிஸ் வங்கியின் இரும்புப் பெட்டிகளில் டாலர் அல்லது ரூபாய் நோட்டுக்களாக கட்டி வைக்கப்பட்டிருப்பவை போலவும், மோடி அல்லது அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமரானால் சுவிட்சர்லாந்து மீது படையெடுத்துச் சென்று கப்பல்களில் கருப்புப் பணத்தை அள்ளி வந்து ஒவ்வொரு கிராமத்துக்கும் சில கோடி ரூபாய் வினியோகித்து விடுவார்கள் என்றும் ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர் கார்ப்பரேட் ஊடகங்களும், பாஜக, ஆம் ஆத்மி கட்சியினரும்.
இந்த பிரச்சாரத்தில் மூன்று மோசடிகள் உள்ளன.
முதலாவதாக, உலகப் பணக்காரர்கள் பதுக்கும் கருப்புப் பணத்தை கையாள்வதில் ஸ்விஸ் 3-வது இடத்தில்தான் இருக்கிறது. வங்கித் துறை ரகசியங்களை பராமரிப்பதில் முதல் இடத்தை பிடித்திருப்பது, ஒரே முகவரியில் 2.17 லட்சம் கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டுள்ள டெலாவர் மாநிலத்தைக் கொண்ட அமெரிக்கா. 2-வது இடத்தில் இருப்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்ப்பரேட் வரி ஏய்ப்பு மற்றும் நிதி சுதந்திர மையமான லக்சம்பர்க். கேமன் தீவுகள் என்ற சில ஆயிரம் மக்கள் தொகை கொண்ட வரியில்லா சொர்க்கம் 4-வது இடத்தையும், இரண்டாம் உலகப் போருக்குப் பின் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீது நேரடி காலனிய ஆதிக்கத்தை இழந்த இங்கிலாந்து உலக கோடீஸ்வரர்களின் பணத்தை பராமரிக்கும் சுரங்கமாக கட்டமைத்திருக்கும் “சிட்டி ஆஃப் லண்டன்” என்ற தனிச் சிறப்பான மாநகரம் 5-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன.
இரண்டாவதாக, கருப்புப் பணம் என்பது நிழலான கட்டிடங்களில் ரகசியமாக சந்திக்கும் போதை மருந்து, ஆயுதக் கடத்தல் மர்ம கும்பல்களாலும், லஞ்சம் வாங்கி கொள்ளையடிக்கும் கெட்ட அரசியல்வாதிகளாலும் உருவாக்கப்படுவது என்று சொல்லப்படுவதற்கு மாறாக குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிடி என்ற அமைப்பின் இயக்குநர் ரேமண்டு பேக்கர் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, உலகளவிலான மொத்தக் கருப்புப் பணத்தில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினருடைய இலஞ்ச ஊழல் பணம் வெறும் 3 சதவீதம்தான். 33 சதவீதம் போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் சார்ந்தது. சுமார் 64 விழுக்காடு கறுப்புப் பணத்தின் பிறப்பிடமும் இருப்பிடமும் பன்னாட்டு முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள்தான்.
மூன்றாவதாக, ஏப்ரல் முட்டாள்கள் தினத்தன்று தி இந்து நாளிதழில் வெளியான ஒரு செய்தியை போல பணத்தை வெளிநாடுகளிலிருந்து கப்பல்களில் கடத்தப்பட்டு கொண்டு வர வேண்டிய தேவையில்லை. விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பப்பட்ட அளவில், யார் கொண்டு வருகிறார்கள் என்றோ யார் எடுத்துச் செல்கிறார்கள் என்றோ தெரியாத வண்ணம் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரவும் எடுத்துச் செல்லவும் சட்டபூர்வமான வழிமுறைகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்திய தரகு முதலாளிகளுக்கும் உள்ளன.
(இது தொடர்பான விரிவான விபரங்களை தெரிந்து கொள்ள வினவில் வெளியான கருப்புப் பணம் பற்றிய தொடரை படியுங்கள். 1234 ).
அவற்றில் ஒரு வழி இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் (FII) அளிக்கும் பங்களிப்பு குறிப்பு (பார்ட்டிசிபேட்டரி நோட்) என்ற வசதியை பயன்படுத்துவது. பி-நோட் மூலமாக முதலீடு செய்வது யார், என்ன என்ற விபரங்கள் இந்திய அரசுக்கோ, ஒழுங்குமுறை ஆணையங்களுக்கோ சொல்லப்படத் தேவையில்லை. உண்மையில் பணத்தை போடுபவர் யார் என்ற விபரம் முதலீட்டு நிறுவனங்களுக்கே தெரிய முடியாதபடி லெட்டர்பேட் நிறுவனங்களின் சங்கிலித் தொடர் மூலம் பணம் கையாளப்படுகிறது.
பி-நோட்டுகள் மூலம் முதலீடு செய்யப்பட்ட தொகையை கண்காணித்து வரும் மத்திய பொருளாதார புலனாய்வு அலுவலகத்தின் மதிப்பீட்டின்படி பிப்ரவரி மாதம் மட்டும் ரூ 1.73 லட்சம் கோடி ரூபாய் பணம் அந்த வழியில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்று மதிப்பிட்டுள்ளது.
இந்த வசதியைப் பயன்படுத்தி இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்களும், பண முதலைகளும், மூலதன சூதாடிகளும் தம் சார்பில் அனாமதேயமாக பதிவு செய்யப்பட்ட அன்னிய நிறுவனங்கள் மூலம் தமது கருப்புப் பணத்தை தேவைப்படும் போது நாட்டுக்குள் கொண்டு வரவும் வெளியில் எடுத்துச் செல்லவும் செய்கின்றனர். இதைத்தான் தாராளமயமாக்கம் என்ற பெயரில் காங்கிரசும், பாஜகவும் இன்னபிற ஓட்டுக் கட்சிகளும் ஆதரிக்கின்றன.
இந்திய கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்தை கையாளுவதற்கான இன்னொரு முறை வரியில்லா சொர்க்கங்களான மொரிசியஸ் போன்ற குட்டி நாடுகள் மூலம் இந்தியாவுக்குள் கொண்டு வரப்படும் நேரடி அன்னிய முதலீடுகள். 2009-ம் ஆண்டின் அன்னிய முதலீடுகளில் 21 சதவீதம் மொரிசியஸ் போன்ற வரியில்லா சொர்க்கங்களிலிருந்து நுழைந்திருக்கிறது என்கிறது ஐ.எஸ்.ஐ.டி. என்ற ஆய்வுக் கழகத்தினைச் சேர்ந்த பேரா சலபதி ராவ், பிஸ்வஜித் தர் ஆகியோருடைய ஆய்வு. 2012-ம் ஆண்டு நிதி அமைச்சகம் வெளியிட்ட கறுப்புப் பணம் குறித்த வெள்ளையறிக்கையின்படி 2000 முதல் 2011 வரையிலான காலத்தில் இந்தியாவுக்குள் வந்துள்ள அந்நிய முதலீடுகளில் 41.80% மொரிசியஸிலிருந்தும், 9.17% சிங்கப்பூரிலிருந்தும் வந்திருக்கின்றன. இந்த வரியில்லா சொர்க்கங்களில் ஒரு பெயர்ப்பலகை நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் இந்திய பணக்காரர்கள் யார் வேண்டுமானாலும் தமது கருப்புப் பணத்தை வரிச்சலுகைகள், நில கையகப்படுத்தும் உரிமை, குறைந்த விலையில் மின்சாரம் என்று இந்திய அரசால் பெரிதும் வரவேற்கப்படும் அன்னிய மூலதனத்தின் வடிவில் இந்தியாவுக்குள் கொண்டு வரலாம்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 32 முதல் 35 இலட்சம் கோடி ரூபாய் வரை கணக்கில் வராத கறுப்புப் பணம் உருவாக்கப்படுவதாகவும், மொத்தப் பொருளாதாரத்தில் பாதி கறுப்புப் பொருளாதாரமாகிவிட்டது என்றும் கூறுகிறார் “இந்தியாவின் கறுப்புப் பொருளாதாரம்” என்ற நூலின் ஆசிரியர் பேராசிரியர் அருண்குமார்.
இவ்வாறு உருவாகும் கருப்புப் பணம் டாடா, அம்பானி, அதானி முதலான முதலாளிகளால் தமக்கு சாதகமான நேரத்தில் இந்தியாவுக்குள் கொண்டு வரப்படுகிறது; தேவைப்படும் போது இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு நியூயார்க், லண்டன், சுவிட்சர்லாந்து அல்லது மொரிசியசில் உள்ள கணக்குகளுக்கிடையே நகர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
200 2-க்கும் 2011-ம் ஆண்டுக்கும் இடையே ரூ 21 லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது என்றும் 2011-ல் மட்டும் ரூ 5 லட்சம் கோடி வெளியில் எடுத்துச் செல்லப்பட்டது என்றும் வாஷிங்டனைச் சேர்ந்த ரிசர்ச் அண்ட் அட்வகசி அமைப்பு கூறுகிறது. பெயர் தெரியாத லெட்டர் பேட் நிறுவனங்களுடன் வர்த்தக, வணிக உறவுகளை வைத்திருப்பதாக கணக்கு காட்டுவது, வரியில்லா சொர்க்கங்களில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு ஈவுத் தொகை, உரிமத் தொகை அளிப்பது, அவற்றின் மூலம் முதலீடு செய்வது மற்றும் வர்த்தம் சார்ந்த கருப்பை வெள்ளையாக்கும் முறைகள் (உதாரணம் : ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருளை இன்னொரு நாட்டில் உள்ள தனது நிறுவனத்தின் கிளைக்கே பத்து ரூபாய்க்கு விற்றதாகக் கணக்கெழுதுவது) மூலம் பணம் பரிமாறிக் கொள்ளப்படுகிறது என்கிறது குளோபல் ஃபைனான்சியல் இன்டகிரிடி என்ற நிறுவனம்.
கடந்த 10 ஆண்டுகளில் பங்குச் சந்தைகளில் பங்கு விலைகளும், அன்னியச் செலாவணி சந்தையில் ரூபாயின் மதிப்பும், ஆன்லைன் வர்த்தகத்தில் உணவுப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென்று மேல் நிலையை அடைவது, அடுத்த கட்டத்தில் ஒரேயடியாக அடிமட்டத்துக்கு பாய்வது என்று மாறி மாறி நடப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடையதில்லை.
2008 ஜனவரி மாதம் 20,827 ஆக இருந்த பங்குச் சந்தை குறியீட்டு எண் 2009 மார்ச் மாதம் 8,325-க்கு வீழ்ந்து 2010 நவம்பர் மாதம் 21,000 தொட்டது. கடந்த 3 ஆண்டுகளில் 2011 டிசம்பர் மாதம் 15,454 அளவில் இருந்து கடந்த வாரம் 22,500-ஐ தாண்டியிருக்கிறது. நாட்டை பேரழிவுகள் தாக்கும் போது கூட பங்குகளின் விலை அதிகரிப்பு நடக்கிறது. உதாரணமாக, 2004-ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலை ஒட்டிய 10 நாடுகளை தாக்கிய சுனாமியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அடுத்த 72 மணி நேரத்துக்குள் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் வரலாறு காணாத உயரத்தைத் தொட்டது. இந்திய மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் பிரம்மாண்டம் தெளிவான பிறகு ஜனவரி 3-ம் தேதி அதிக பட்ச உயரத்தைத் தொட்டது. மும்பை பங்குச் சந்தை மட்டுமின்றி, சுனாமியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பெரிய பங்குச் சந்தைகள் செயல்படும் 5 நாடுகளிலும் சுனாமியை தொடர்ந்து வந்த நாட்களில் பங்குச் சந்தைகள் வளர்ச்சியைக் காட்டின என்கிறார் பத்திரிகையாளர் பி சாய்நாத். இப்படி நாடே எழவு வீடாக இருந்த போது பங்குச் சந்தை மட்டும் எகிறிப் பாய்ந்த பின்னணி என்ன?
சென்ற ஆண்டு மே, ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே 1 டாலருக்கு கொடுக்க வேண்டிய இந்திய ரூபாயிலான விலை ரூ 53.80-லிருந்து ரூ 69.50 ஆக அதிகரித்தது. ஜூலை 2008-ல் ரூ 46.2 ஆக இருந்த பரிமாற்ற வீதம் 2009 பிப்ரவரி மாதம் ரூ 39.66-க்கு வீழ்ச்சியடைந்து அடுத்த 5 ஆண்டுகளில் ரூ 69 வரை அதிகரித்திருப்பதையும் இங்கு குறிப்பிடலாம்.
இத்தகைய பணப் பாய்ச்சல்களும், முதலீடுகளும் நம்மைச் சுற்றி பொருளாதார சுனாமிகளை நடத்துகின்றன. வைகுண்டராஜன் மூலமாக தென் தமிழக கடற்கரை பகுதிகளை கொள்ளை அடிப்பதற்கும், பி ஆர் பழனிச்சாமி மூலமாக கிரானைட் மலைகளை மொட்டை அடிப்பதற்கும், ரெட்டி சகோதரர்கள் மூலமாக பெல்லாரியின் இரும்புத் தாதுவை அள்ளிச் செல்வதற்கும், இன்னும் நூற்றுக்கணக்கான வழிகளில் செத்துப் போன ஆறுகள், வறண்ட கிணறுகள், மழிக்கப்பட்ட மலைகள், அம்மணமாக்கப்பட்ட காடுகள், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் என நம் நாட்டைச் சுரண்டுவதற்கும் இந்த நிதி மூலதன பாய்ச்சல் வழி வகுத்துக் கொடுக்கிறது.
மோடி அல்லது கேஜ்ரிவால் போன்ற எந்த கேடி பிரதமரானாலும், நம்மை சிறுகச் சிறுக அரித்துக் கொண்டிருக்கும் டாடாக்களையும், அம்பானிகளையும், அதானிகளையும் தொடப் போவதில்லை; அமெரிக்காவின் டெலாவருடனும், இங்கிலாந்தின் லண்டன் மாநகருடனும் தொடர்பை துண்டித்துக் கொண்டு அங்கு வைக்கப்பட்டிருக்கும் இந்தியத் தரகு முதலாளிகளின் இலட்சக் கணக்கான வங்கிக் கணக்குகளை முடக்கப் போவதில்லை. மொரிசியஸ் நாட்டிலிருந்து வரியில்லாத அன்னிய முதலீடாக வரும் சட்டபூர்வ மோசடியையும் நிறுத்தப் போவதில்லை.
மாறாக, நாம் போடும் ஓட்டுக்களை தமக்கு கிடைத்த மக்கள் ஆணையாக காட்டிக் கொண்டு, தாம் செய்பவற்றுக்கு அங்கீகாரமாக வைத்துக் கொண்டு அமைக்கப்படப் போகும் எந்த ஒரு அரசாங்கமும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளிகளின் பணப் புழக்கத்தை சட்டரீதியாக நியாயப்படுத்த, வசதி செய்து கொடுக்க புதுப் புது வழிகளை உருவாக்குவதைத்தான் செய்யப் போகின்றன. அதனால்தான் பாஜக தேர்தல் அறிக்கை மோடிக்கு பிடித்த விதத்தில் தயாரிக்கப்படவில்லை என்று இதுவரை வெளியாகவில்லை. அதாவது முதலாளிகளுக்கு சோப்பு போடும் அறிவிப்புகள் அந்த அறிக்கையில் போதிய அளவு இல்லை என்பதே மோடியின் குறை. இந்த இலட்சணத்தில் காங்கிரசு மட்டுமல்ல, பாஜகவும் பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகளின் ஏவல் அடியாட்கள்தான்.
எனவே, இந்தத் தேர்தலில் நாம் போடும் ஓட்டு நமக்கும், நமது நாட்டுக்கும் நாமே போட்டுக் கொள்ளும் சுருக்குக் கயிறு என்பதில் இன்னமும் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா?
1.போகாதே போகாதே என் கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்!
கூட்டத்தில் மோடி பேசக் கண்டேன் – அய்யோ!
கொண்டையில் பூவும் கருகக் கண்டேன்
ஆந்தைபோல் வை.கோ. அலறக் கண்டேன் – பக்கத்தில்
கேப்டன் உளறி சாயக் கண்டேன்!
வாழைத்தோப்பும் அழியக் கண்டேன் – அய்யோ
மறுபடியும் காங்கிரசு கத்தக் கண்டேன்!
பலகட்சி ஓட்டு கேட்கக் கண்டேன் – இந்த
பாஞ்சை நகரம் அழியக் கண்டேன்!
ஜெயா, கலைஞரை பார்த்தேன் அத்தான் – அதில்
கம்பங் களியும் போச்சுதத்தான்!
கோட்டை மதிலும் இடியக் கண்டேன்
நாட்டில் பன்னாட்டுக் கம்பெனி நுழையக் கண்டேன்!
போகாதே போகாதே என் கணவா – இது
போலி ஜனநாயக தேர்தல் அத்தான்!
(வீரபாண்டிய கட்டபொம்மன் படப் பாடல் மெட்டு)
2. சட்டி சுட்டதடா! கை விட்டதடா!
பொழப்பு கெட்டதடா! நெஞ்சை தொட்டதடா!
நாலும் நடந்து முடிந்த பின்னால்
இடதும், வலதும் தெரிந்ததடா!
பாதி மனதில்
அம்மு இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில்
மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா!
அம்மா தெய்வம்
முழு மனதில் கோயில் கொண்டதடா
ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடி விட்டதடா!
அடுத்த எலக்சன் ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா
தா.பா.வின் கோயிலிலே ஒளி துலங்குதடா!
மனம்
அம்மா, அம்மா, அம்மா, என்று ஓய்வு கொண்டதடா
எங்கள் தோலை உரித்துப்பார்க்க தேர்தல் வந்ததடா!
எங்கள் இதய தெய்வம்
உரித்து பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த குழப்பம்
இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி
வந்து விட்டதடா!
( ஆலய மணி படப் பாடல் மெட்டு )
3.
ஜீ.ரா:
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
தோழனே! தோழனே! தோழனே!
இந்த நாள் அன்று போல்
இன்பமாய் இல்லையே அது ஏன் தோழனே!
தா.பா :
தேர்தல் கூட்டு ஆட்டம் பாட்டம் – இதைத்தவிர
வேறு எதைக் கண்டோம்
கொள்கையோ பையிலே புத்தியோ போயசிலே
எலக்சனைப் பார்த்ததும் ஒதுங்குவோம் இலையிலே
நித்தமும் தத்துவம், நினைவெல்லாம் சீட்டிடம்
கேப்டனும், எவனுமே இல்லையே நம்மிடம்
போயசு விட்டதும் பாதைகள் மாறினோம்
தேர்தலும் வந்தது கவலையும் வந்தது.
ஜீ.ரா :
கட்சி என்றும் தேர்தல் என்றும் தொகுதி என்றும்
ஓட்டு என்றும்
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதி எங்கே! அமைதி எங்கே!
தா.பா:
அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
அழுவதும் சிரிப்பதும் அம்முவின் விளைவுகள்
இடதிவன், வலதிவன் நல்லவன் கெட்டவன்
உள்ளவன் போனவன் நம்மிலே பார்க்கிறோம்
எண்ணமே சுமைகளால் இதயமே பாரமாய்
என்ன தவறு செய்தோம்! என்ன தவறு செய்தோம்!
( உழவரின் ஏர் ஓட்டும் ஓசை, மதகிலே நீர் வழியும் ஓசை, வரப்புகளை உடைத்து பாயும் நீரோசை, புதுப்புனலாடி கொண்டாடும் மக்களின் மகிழ்ச்சி ஆராவார ஓசை… என இரு மருங்கும் ஒலிக்க நடந்து வந்த காவிரி!).
என ஊர் செழித்த காவிரியை காண, மீண்டும் நம் நிலம் காண, விவசாயம், விவசாயி உயிர்வாழ உதவுமா இந்த பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தல்?
என்னென்னவோ வாக்குறுதிகள்! எத்தனையோ கட்சிகள்! இத்தனை ஆண்டுகாலம் ஓட்டு வாங்கிப்போன எவனாவது டெல்டா பகுதி மக்களின் உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமான காவிரியில் தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தந்திருக்கிறானா?
நாட்டின் அடிப்படைத் தேவையான விவசாயத்திற்கு உரிய நீர்ப்பாசனத்தையோ, மின்சாரத்தையோ, இடுபொருட்களின் விலைக் கட்டுப்பாட்டையோ ஏற்படுத்தித் தராமல் விவசாயக் கடனை தள்ளுபடி செய்கிறோம் என்ற பெயரில் முதலாளிகள் தயாரிக்கும் பொருள்களை ஏழை விவசாயிகளின் தலையில் கட்டி, “விவசாயி கடனோடு பிறக்கிறான், கடனோடு வாழ்கிறான், கடனோடே சாகிறான்” என்ற அவல நிலையை ஏற்படுத்தியதுதான் அனைத்துக் கட்சிகளின் சாதனை! இவர்கள் சேவை செய்யும் ஆளும் வர்க்கத்தின் சாதனை!
விவசாயிகளையும், அது சார்ந்த தொழில்களையும் ஓட்டாண்டியாக்கி நம்மை நடுத்தெருவில் வீசி எறியும் இந்த ஆட்சி அமைப்பிற்கான தேர்தலை முதலில் நாம் வீசி எறிந்தாக வேண்டும்!
முப்போகம் விளைந்திருந்த நமது டெல்டா விவசாயத்தை இப்போது ஒரு போகத்திற்கே லாயக்கில்லாமல் மண்ணை கருக்கி, நம் வாழ்வை அழிக்கும் ‘வளர்ச்சி’ க் கொள்கைதான் எல்லா ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகளின் ‘வளமான’ கொள்கையும்!
காவிரி – அன்றும் இன்றும்
நெல், வாழை, கரும்பு, மஞ்சள், மா, பனை, இஞ்சி, கமுகு, தென்னை… என பல வளம் கொழித்த காவிரியை, ”ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் நாளிலும் தன் ஊற்றுப்பெருக்கில் உலகுக்கே ஊட்டும் காவிரியை” இவர்கள் பறித்தது மட்டுமல்ல, எஞ்சியிருக்கும் நம் ஈர நிலத்தையும் பாலையாக்க மீத்தேன் திட்டம், நிலக்கரி எடுக்கும் திட்டம்.
புதிய வேலைவாய்ப்பு என்ற போர்வையில், டெல்டா மாவட்டங்களுக்கே பாடை கட்ட பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளோடு கூட்டணி சேர்ந்து வருபவர்கள்தான் எல்லா ஓட்டுக்கட்சிகளும்!
இந்த முதலாளிகளின் வளர்ச்சிக்காக பாடுபடும் ஒரு அரசை அமைக்கத்தான் நம் காலைச்சுற்றுகின்றன கரைவேட்டி பாம்புகள்!
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தின்று கொழுத்த வயல் எலிகளைப் போல வலம் வரும் கட்சிகள், அதிகாரிகளை நாம் புறக்கணித்து விரட்ட வேண்டும்!
ஏற்கனவே விவசாயப் பகுதிகளில் இறால் பண்ணைகளை உருவாக்கி விளைநிலத்தை நாசமாக்கிய கார்ப்பரேட் முதலாளிகளின் அடுத்தடுத்த திட்டம்.
டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்களுக்கு அடியில் உள்ள நிலக்கரியை எடுக்க, முதலில் மேல் அடுக்கில் இருக்கும் மீத்தேன் வாயுவை எடுப்பது.
முதல்கட்டமாக 50 ஆழ்துளை கிணறுகளை கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்த நாடு, பாபநாசம், மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல் என படிப்படியாக டெல்டா மாவட்டங்கள் முழுக்க விரிவுபடுத்தி, நிலத்தடி நீரை உறிஞ்சி, கழிவுகளை வெளியேற்றி, விவசாயத்தை அழித்து விவசாயிகளை விரட்டி அடிப்பது என்று ஒரு நாசகார திட்டத்தோடு தி கிரேட் ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற பன்னாட்டு கொள்ளைக்காரனுக்கு இந்திய அரசு 2010 லேயே உரிமம் வழங்கி விட்டது.
“காவிரியின் பிள்ளை, கடைமடையின் தொல்லை” கருணாநிதி அரசுதான் 2011-ல் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமைத்தது.
இன்று “நான் வந்தால் விவசாயிகளை காப்பாற்றுகிறேன்” என்று தேர்தல் சவடால் அடிக்கும் கருணாநிதியும், தேர்தலுக்காக திட்டத்தை அடக்கி வாசிக்கும் ஈத்தேன் தலைவி ஜெயலலிதாவும், யாராய் இருந்தாலும் இவர்களின் கொள்கை, ‘வளர்ச்சி, வல்லரசு’ என்ற பெயரில் விவசாயத்தை அழித்து நிலத்தை கையகப்படுத்தி பன்னாட்டு முதலாளிகள் லாபத்திற்கும், ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு மண்ணை விற்பதும்தான் தேசியக் கொள்கை.
கூடங்குளம் அணு உலை போராட்டத்தில், “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று பாவ்லா காட்டி கடைசியில் போராடிய மக்களை போலீசை வைத்து அடித்து, உதைத்து, பத்து வயது பையன் மீது கூட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை பாய்ச்சி ஒடுக்கியவர்தான் இந்த ஜெயலலிதா. இன்று டாஸ்மாக் எனர்ஜி கம்பெனி ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கம்பெனியை விரட்டும் என்று நம்பி, ஏமாறக்கூடாது!
தவிர, இந்தத் தேர்தலால் நமக்கு விவசாயி நலன் என்ற அளவில் கிடைக்கப்போவது என்ன?
நாம் நெடுநாளாக போராடிக் கேட்கும் விளை பொருட்களுக்கான விலை நிர்ணய உரிமையை இந்தத் தேர்தல் நமக்கு தருமா?
எங்கிருந்தோ வரும் ஒரு வெளி நாட்டுக்கம்பெனி முதலாளி, நம்ம ஊர் தண்ணியை உறிஞ்சி ஒரு பாட்டிலில் போட்டு தன் இஷ்டத்துக்கு விலை வைத்து விற்பதை அனுமதிக்கின்றன இந்த அரசும், ஆளும்வர்க்கமும், இதற்கு கடமையாற்றும் அதிகார வர்க்கமும்.
விவசாயிகள், விலை கிடைக்காமல், போண்டியாகி தற்கொலை செய்து கொள்வதை தடுத்து நிறுத்த இந்தத் தேர்தலுக்கு வக்கில்லாத போது, எதுக்கு திரும்பத் திரும்ப வாக்கு!
உலகவங்கி, உலகவர்த்தகக் கழகம் தான் இங்குள்ள எல்லா கழகங்களுக்கும் தாய் கழகம், அவன் உத்திரவுக்கு வாலாட்டும் இந்த ஓட்டுச் சீட்டு கட்சி நரிகள்.
எவன் ஆட்சிக்கு வந்தாலும், தேசிய தண்ணீர்க் கொள்கை என்ற பெயரில் மெல்ல, மெல்ல, தண்ணீரை காசுக்கு மட்டுமே விற்பது, தண்ணீரை வியாபார பொருளாக்கி விவசாயமே செய்ய முடியாமல், விவசாயிகளை விளைநிலத்தை விட்டு துரத்துவது என்ற கார்ப்பரேட் முதலாளிகளின் நில அபகரிப்பு கொள்ளைக்கு, கைக்கூலி வேலை பார்க்கும் கழிசடைகள்தான் அம்மா, அய்யா, மருத்துவர், கேப்டன், ராமதாசு, பா.ஜ.க. காங்கிரசு… எல்லா தனியார்மய, தாராளமய தவப்புதல்வர்களும்!
காவிரிப் பிரச்சனை தொடங்கி, டெல்டா மாவட்டத்தை சூறையாட வரும் மீத்தேன், அம்பானியின் நிலக்கரி எரிவாயு திட்டம், ஓ.என். ஜி.சி. பெட்ரோலியத் திட்டம் அனைத்தையும் அமல்படுத்த துடியாய், துடிக்கும் இந்தக் கட்சிகளை நம்பி இனி பயனில்லை.
எதற்கெடுத்தாலும் ஒரு கேசை போட்டு உச்சநீதிமன்றத்திடம் தள்ளிவிட்டு பிறகு உச்சநீதிமன்றமே ‘வளர்ச்சித்திட்டம்’ என்று சிங்காரித்து அனுப்புவதையும் இந்த தேர்தல் பாதையால் தடுக்க முடியாது.
அதற்கு மக்களுக்கே அனைத்து அதிகாரங்களும் உள்ள, உள்ளூரிலிருந்து உயர்மட்டம் வரை மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்திற்குட்பட்ட அரசமைப்பு நமக்கு வேண்டும்!
சட்டம் போடுபவர் ஒருவர், அதை அமல்படுத்தும் அதிகாரவர்க்கம் ஒருவர் என்ற போலி ஜனநாயகத்தின் இரட்டை ஆட்சிக்கு பதில், அரசின் எல்லா மட்டங்களிலும் மக்களின் அதிகாரத்தை செல்லுபடியாக்கும் ஒரு புதிய ஜனநாயக அரசமைப்புக்கு போராட வேண்டிய தருணம் இது!
விவசாயிகளால் தேர்வு செய்யப்பட்ட விவசாய கமிட்டியின் அதிகாரத்திற்குட்பட்டு மக்களுக்கு வேண்டிய, விவசாயத்திற்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றித்தரும் பணியாளராக அரசு ஊழியர் முதல் அரசு வரை இருக்கும் படியான ஒரு புதிய ஜனநாயகமே இனிநமக்கு தேவை!
நமக்கு தண்ணி தர மாட்டான், நமக்கு விலை தர மாட்டான், விவசாயிகளை வாழ விட மாட்டான், விளைநிலங்களை அபகரிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் பயங்கரவாத திட்டங்களையும் நிறுத்த மாட்டான்.
இவைகளை லத்தி, துப்பாக்கி முனையில் நம்மேல் அமல்படுத்தும் இவர்களுக்கு ஏன் ஓட்டு போடவேண்டும்?
பயிர் விளைய வேண்டுமானால் களைகளை பிடுங்க வேண்டும்! இனி நாம் உயிர் வாழ வேண்டுமெனில் இந்த போலி ஜனநாயகத்தை பிடுங்கி எறியவேண்டும்!
குறுவை, சம்பா, தாளடி, ஊடுபயிர்கள், என உழைத்து வாழ்ந்த நம் வாழ்க்கையை கடன், வட்டி தற்கொலை என மானமிழந்து ஊரை விட்டுத் துரத்தும், இந்த முதலாளிகளுக்கான ஜனநாயகத்தை கருவறுப்போம்!
போராடி! போராடி, பூமியை பிளந்து வரும் விதையைப் போல… போராட்டங்களின் வழி நமக்கான கண்டு முதல் காணும் புதிய ஜனநாயக அரசமைப்பை வளர்த்தெடுப்போம்!
இன்றைய சூழலில் தனியார் பொறியியல் கல்லூரிகள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அதிலும் குறிப்பாக சென்னை ஆவடி வேல்டெக் கல்லூரி தன்னளவில் ஒரு தனி அரசாங்கத்தை நடத்தி வருகிறது. மாணவர்கள் வகுப்பில் சக மாணவிகளுடன் ஏன் மாணவர்களுடன் கூட பேச முடிவதில்லை, இது போன்ற சூழலில் தான் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவை தான் பெற்றோர் மத்தியில் ஒழுக்கமாக காட்டப்பட்டு வருகின்றது. இதில் வேலை செய்யும் பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் போன்றோரின் நிலையும் கொத்தடிமைகளைவிட மோசமாக உள்ளது. அவர்களின் சான்றிதழ்களை நிர்வாகம் பறித்துக் கொண்டு மிரட்டியும் வருகின்றது. இந்த அடிமைத்தனத்திற்கு எதிராக சாந்தி என்ற பேராசிரியர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உதவியுடன் போராடினார், தற்போது நீதிமன்றத்திலும் கூட உறுதியாக போராடிக் கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தான் இரு வாரங்களுக்குமுன்னர் விடுதியில் தங்கி படிக்கும் திவ்யா என்ற மாணவி செல்பேசியில் பேசிக் கொண்டிருந்தார் என்று அனைத்து மாணவர் மத்தியிலும் வைத்து விடுதி வார்டன் அவரை மிகவும் கேவலமக பேசியுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இந்த விசயத்தை கூட வெளியில் தெரியாமல் மறைத்தது வேல்டெக் நிர்வாகம். பிரேதத்தை உடனடியாக அப்புறப்படுத்தி தனியார் மருத்துவமனையில் வைத்து அவரது தந்தையை மிரட்டி அவரிடம் பிரேதத்தை ஒப்படைத்தனர்.
வேல்டெக் ரங்கராஜன்
இந்த விசயம் மாணவர்கள் மத்தியில் தெரியவந்ததும் இதுவரை அடிமையாக இருந்ததால் எத்தனையோ உரிமைகளை இழந்தோம் இனியும் அமைதியாக இருந்தால் திவ்யா கதிதான் நமக்கும் ஏற்படும் என்று குமுறி எழுந்தார்கள் மாணவர்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
இந்த தகவல் அறிந்தவுடன் புமாஇமு இணை செயலாளர் தோழர் ஏழுமலை ஆவடி வேல்டெக் கல்லூரிக்கு சென்று மாணவர்களை சந்தித்து பேச முயன்றார். ஆனால் அதற்கு முன்பே காவல்துறையினர் அங்கு குழுமி விட்டனர். அதுவும் ஏதோ முதல்வர் வருகைக்கு பாதுகாப்பளிக்க வந்தது போன்று 8 ஆய்வாளர்கள், 14 துணைஆய்வாளர்கள், 40 காவலர்கள் என ஒரே அலப்பரையாகி இருந்தது. கல்லூரிக்குள்ளே யாரும் நுழையமுடியாதபடி போலீஸின் முற்றுகை இருந்தது.
தோழர் ஏழுமலையை கல்லூரிக்குள் அனுமதிக்க காவல்துறை மறுத்தது, அதை எல்லாம் தாண்டி நமது தோழர் உள்ளே சென்று மாணவர்களிடம் பேசி இது போன்ற பிரச்சினைக்காக நாம் ஒன்று கூடியுள்ளோம்., ஆனால் இது நம் கல்லூரிக்கு மட்டுமான பிரச்சினை கிடையாது ஒட்டு மொத்தமாக கல்வியானது தனியார்மயமானதன் விளைவு தான் இது. எனவே மாணவர்கள் அனைவரும் அமைப்பாக இணைந்து போராட வேண்டியது அவசியம் என்று பேசி பிரசுரங்களை வினியோகித்து வெளியேறிய பின்னர் மாணவர்களை எல்லோரையும் கல்லூரி வளாகத்துக்குள்ளேயே வைத்து கொடுரமாகத் தாக்கியுள்ளன காவல்துறை குண்டாந்தடிகள்.
அதிலும் ஒரு பிரிவினையினை ஏற்படுத்தியது காவல்துறை. தமிழ் மாணவர்களுக்கு குறைந்த அடியும், வடஇந்திய மாணவர்களுக்கு அதிக அடியும் என வெறியாட்டம் போட்டுள்ளனர். இதை கண்டித்தும் மாணவியின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யச் சொல்லி புமாஇமு சார்பில் சென்னை முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக தோழர்கள் 22-ம் தேதி சுவரொட்டிகளை ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் ஒட்டியுள்ளனர் அப்போது காலை 7 மணி வாக்கில் எமது தோழர்கள் திவாகர் மற்றும் செல்வம் ஆகியோரை ஏதோ பயங்கரவாதிகளை பிடிப்பது போல 2 உதவி ஆய்வாளர் 40 காவலர்கள் மற்றும் 2 ஜீப் சகிதம் வந்து பிடித்தனர். அவர்களை கைது செய்துள்ளதாக அறிவித்தனர். அதற்க்கு என்ன காரணம் என்று தோழர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் வண்டியில் ஏறும்படி ஸ்டேசனில் வைத்து பேசிக்கொள்ளலாம் என்று தோழர்களை பலவந்தப்படுத்தினர். ஆனால் நாங்கள் காவல் நிலையத்தை கண்டு அஞ்சவில்லை என்று பதிலளித்தனர்.
ஆனால் நாங்கள் உங்கள் வண்டியில் ஏற முடியாது என மறுத்தனர். நடந்து வருகிறோம் எனக் கூறி அவ்வாறு செய்தனர் அது ஒரு ஊர்வலம் போல முன்னாடி 10 போலீஸ் பின்னாடி 10 போலீஸ் என சென்றனர். இது பொதுமக்கள் மத்தியில் ஒரு பிரச்சாரமாக்கப்படுவதை காவல்துறையினரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதனால் காவல்துறையினர் தோழர்களின் சொந்த வாகனத்தில் வரச்சொல்லி அழைத்து வந்தனர். அதற்குள் தகவல் அறிந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மற்றும் புமாஇமு தோழர்கள் ஆவடிடேங்க் T-7 காவல் நிலையம் வந்து சேர்ந்தனர்.
இந்தப் பகுதியில் T-6 மற்றும் T-7 இரண்டு காவல் நிலையங்கள் உள்ளன. இவை இரண்டிற்கும் வேல்டெக் ரங்கராஜன் தான் புரவலர். அது மட்டுமல்ல ஆவடி பகுதியில் அதிக நிலங்கள் இவருக்குத்தான் சொந்தம், அங்கு அவர் ஒரு குட்டி ராஜா. அப்படி இருக்கும் போது அவரை விமர்சித்தால் காவல் துறைக்கு கோபம் வரத்தானே செய்யும். அதுதான் DC யே நேரடியாக இந்த விசயத்தில் தலையிடுகிறார். இவ்வாறு ரங்கராஜனுக்கு வாலாட்டும் போலீசு, எமது தோழர்கள் மீது என்ன பிரிவுகளில் வழக்கு போட்டுள்ளனர் என்று சொல்ல கூட மறுத்துவிட்டு தோழர்களை திடீரென்று ஜீப்பில் ஏற்றி சென்றது. பின்னர் மீண்டும் காவல் நிலையத்துக்கு வந்தனர்.
அப்போது அந்த அதிகாரி தோழரிடம் சொல்லுகிறார், “என்ன பெருசா செய்ய முடியும்? உங்களால் அதிகபட்சம் போனால் ஒரு முற்றுகை நடக்கும், அப்படி செய்தால் தடியடி நடத்துவோம்” என்று நக்கலாக சொன்னதை கேட்டு எமது தோழர்கள், “நாங்கள் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. போலீசிடம் எதை நாங்கள் எதிர்பார்க்க முடியும் நீங்கள் இப்படித்தான் நடப்பீர்கள் என்பது தெரியும்” என பதிலடி கொடுத்தார்.
பின்னர் மாலை 5:30 மணியளவில் தோழர்கள் அம்பத்தூர் நீதி மன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் அங்கு மாஜிஸ்ட்ரேட் இல்லை எனவே தோழர்கள் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள நீதிபதியின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உடனே நீதிபதி தோழர்களை சிறை வைக்க தீர்ப்பளித்துவிட்டார். அவரிடம் பிணை மனுவை பதிவு செய்யக்கேட்ட போது எதுவும் பதில் பேசாமல் கிளம்ப முற்ப்பட்டார்.
அப்போது மஉபாம வழக்கறிஞர் “தோழர்கள் ஏன் பிணை மனுவை ஏற்க மறுக்கிறீர்கள். சங்கராச்சாரிக்கு மட்டும் வீட்டில் வைத்து பிணை வழங்கப்பட்டதே, சாமானியனுக்கு ஒரு நீதி சங்கராச்சாரிக்கு ஒரு நீதி இது தான் நீதித் துறையின் இலட்சணமா” என்று கேள்வி கேட்ட பின்னர் தான் அந்த பிணை மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார். ஆனாலும் பிணை வழங்கப்படவில்லை. தோழர்கள் ஒரு வாரம் சிறை வைக்கப்பட்டனர். அதன் பின்னர் கடந்த ஏழு நாட்களுக்கு பிறகு மிகுந்த போராட்டத்துக்கு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
தோழர்கள் மீது காவல்துறை 4 of TNOPD ACT மற்றும் 7(1)C Act ஆகிய பிரிவுகளிள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் தோழர்கள் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு அராஜகம் செய்ததாகவும், அங்கிருந்த ஆட்டோக்களை தட்டி கூச்சல் போட்டதாகவும் அரசு அலுவலர்களை வேலை செய்யவிடாமல் தடுத்ததாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால் போலீசு நமது சுவரொட்டிகளை மட்டுமே இதற்கு ஆதாரமாகக் காட்டியுள்ளது
இந்த தனியார் கல்வி கொள்ளையர்களுக்கு ஆதரவாகத்தான் காவல்துறை, நீதிமன்றம் என எல்லாம் வேலை செய்து வருகிறது. இதைப்பற்றி எந்த ஓட்டுக் கட்சியும் பேசுவது கிடையாது ஏனென்றால் ஒவ்வொரு கட்சிக்கும் படியளக்கும் பெருமாளாக இந்த தனியார் கல்வி முதலாளிகள் தான் உள்ளனர் பல ஓட்டுகட்சி தலைவர்களே தனியார் கல்லூரி முதலாளியாகவும் உள்ளனர். இது தான் இன்றைய ஜனநாயகம்.
இன்றைய சூழலில் அமைப்பாக இணைந்தால் தான் மாணவர்கள் தமது உரிமைகளை மட்டுமல்ல உயிரைக்கூட காப்பற்றிக்கொள்ள முடியும் அதுவும் ஒரு புரட்சிகர அமைப்பின் கீழ் இணையும் போது தான் சாத்தியம் என்பதை நாம் அறிந்துள்ளோமோ இல்லையோ, நமது எதிரி அறிந்துள்ளான். அதனால் தான் ஒரு சுவரொட்டி அவனை தூக்கமிழக்கச் செய்கிறது.
இந்த சூழலில் மாணவர்களும் பெற்றோரும் ஏன் ஆசிரியர்கள் அனைவரும் தன்மானத்துடன் இருக்க வேண்டுமானால் புரட்சிகர அமைப்புகளின் கீழ் அணிதிரளுவது ஒன்றே தீர்வாகும். அப்போது தான் தனியார்மயக் கல்விக் கொள்ளையையும், தனியார் கல்வி முதலாளிகளின் அராஜகத்தையும் முறியடிக்க இயலும்.
தமிழக ஊடகங்களில் பெரும்பாலனவை அதிமுக, பாஜகவை ஆதரித்து செய்தியா, கருத்தா என்று இனம் காண முடியாத வகையில் எழுதி வருகின்றன. அம்மாவுக்கு வாக்கப்பட்ட குமுதம் தேர்தல் கணிப்பின் முதல் பகுதியை வெளியிட்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் அதிமுக வெல்லுமாம். அதே போல துக்ளக்கும் அதன் நிருபர்களை வைத்து தொகுதி நிலவரத்தை அதிமுகவிற்கு ஆதரவாக வெளியிடுகிறது.
வைகோ, விஜயகாந்த், மோடி, ராமதாஸ்
இன்று வந்த ஜூவியில் தமிழருவி மணியன் ஐந்து பக்கத்தில் காங்கிரசுக்கு நீதி உபதேசம் செய்கிறார். அடுத்த ஜூவியில் பெண்கள் சர்வேயாம். கண்டிப்பாக மோடியும், பாஜகவும் முதல் இடத்தில் இருக்கும் என்பதை வரும் சனியன்று தெரிந்து கொள்ளலாம். மோடியை கைவிடாத துக்ளக், அம்மாவைதான் முதன்மைப்படுத்துகிறது. கிராமங்களில் மோடி அலை இல்லை என துக்ளக் செய்தியாளர்கள் எழுதுகிறார்கள். அப்படி மோடி அலை வீசுவதாக எழுதிய ஜூவியை விட சோ-தான் மோடியை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய முதல் பிரபலம் என்பது உண்மை.
“மக்கழே, மக்கழே” என்று எங்கே ஆரம்பித்தோம், எதில் முடிப்போம் என்று யாரும் ஊகித்தறியாதபடி விஜயகாந்த் த்ரில்லர் அரசியல் பேசுகிறார். வேட்பாளரை அறிமுகப்படுத்தும் போது “ஏம்பா உன் பேரென்ன” என்று எதார்த்தமாக மூன்று மைக்குகளை வைத்துக் கொண்டே கேட்கிறார். இரவில் யாரும் ஆதித்யா சேனலை பார்க்காமல் கேப்டன் டிவியை பார்த்து சிரிக்கிறார்களாம். கேப்டனை காமடியனாக அழகு பார்க்கும் ஊடகங்கள் எழுதி வைத்து ரம்பம் போல அறுக்கும் ஜெயாவை அப்படி காமடி செய்வதில்லை. அம்மா பயம் என்றால் சும்மாவா?
மதுரை ஆதீனம் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தை செய்து வருகிறார். அம்மா பிரதமராக ஆன பிறகு ஓபி முதலமைச்சராகவும் பிறகு ஓபியின் மகன் முதலமைச்சராக வருவார் எனவும் பேசுகிறாராம். இது உளவுத் துறை மூலம் அம்மா வசம் போனால் என்ன செய்வது என்று ஓபி மகன் திகிலில் இருக்கிறாராம். பிரச்சினைகள் ஆண்டைகள் மூலம்தான் வரவேண்டுமென்பதல்ல, அது மதுரை ஆதினம் போன்ற அடிமைகளின் மூலமும் வரலாம். ஆதீனத்தின் வளர்ப்பு வாரிசு நித்தியானந்தா ஏன் இன்னும் அம்மா புகழ் பாட வரவில்லை, தெரியவில்லை.
எனினும் நக்கீரன் இதழ் மட்டும் திமுக ஆதரவு கொண்ட ஒரே பத்திரிகையாக ‘உறுதி’யுடன் வெளிவருகிறது. அந்த வகையில் அந்த நிலையில் இருந்து பத்திரிகையை சமநிலை குன்றாமல் இருப்பது போல காட்டிக் கொண்டு நடத்துவது ‘பெரிய’ விசயம்தான். அதிமுக, பாஜக ஊடகங்கள் தமிழகத்தின் தேர்தல் வெற்றி குறித்து அவரவர் கட்சி சார்பில் மட்டையடியாக சொல்லும் போது நக்கீரன் 50-50 என்று சொல்ல வேண்டியிருக்கிறது. கூடவே அதன் நியாயங்களையும் தேடி யோசித்து எழுத வேண்டியிருக்கிறது. இதனாலேயே நக்கீரனது தேர்தல் செய்திகள் மற்ற ஊடகங்களை விட கொஞ்சம் யதார்த்தமாக இருக்கிறது.
பம்பரம் தாத்தா வைகோ
“பம்பரத் தாத்தா வர்றாருடோய்..- சிறுவர்களைக் கவரும் வைகோ” என்று இன்றைய நக்கீரன் இதழில் வந்திருக்கும் விருதுநகர் தேர்தல் செய்திகள் உண்மையில் ஒரு காவியத்தின் சுவை குன்றாத கலைத் தகுதியைக் கொண்டிருக்கிறது. இந்தத் தலைப்பை பார்த்தால் வைகோவே மகிழ்ச்சியடைவார். வருங்கால இளைய சமூகத்தின் மனதில் ஒரு தலைவர் அதுவும் அவர்களது விளையாட்டு பொருளால் நினைவு கூறப்படுவது யாருக்கும் கிடைக்காத பேறுதான்.
ஆனாலும் பம்பரம் சின்னம் பட்டியலிலேயே இல்லை, ஒரே சின்னத்தில் போட்டியிடும் அங்கீகாரமும் இல்லை என்ற ஒளியில் இத்தலைப்பு கொஞ்சம் சோகம் பெறுகிறது. வைகோவின் சந்தர்ப்பவாதமும், துரோகமும் கம்பீரமாக இல்லாமல் சோகத்துடனும், அவலத்துடனும்தான் வெளிப்பட வேண்டுமா என்பது இதுவரை தத்துவஞானம் விடை அறியாத கேள்வி.
விருதுநகர் தொகுதியின் எல்லா பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்திப்பது என்று வைகோ முடிவு செய்திருப்பது ஏதோ மக்கள் பால் உள்ள அன்பினால் மட்டுமல்ல. அப்படியாவது ஒரு சோக சிம்பதியை கிளப்பி வாக்குகள் ஏதும் தேறுமா என்ற வரலாற்றுக் கட்டாயத்தில் வைகோ இருக்கிறார். ‘மாவீரன்’ பிரபாகரனுடன் வன்னிக்காட்டில் புலிக் குட்டிகளுடன் விளையாடிய இந்த புயல் இன்று கரிசல் காட்டில் முள்ளுக் காட்டில் எல்லாம் சென்றாவது தினசரி ஓரிரு வாக்குகளை சேகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதைப் பார்த்தால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கண்ணீர் விடுவார்கள். வைகோவை இப்படி அனாதரவாய் சுற்ற விட்ட தமிழ்நாட்டு மக்களை திட்டி தீர்ப்பார்கள்.
அவரது வேனில் படுக்கை வசதிகளோடு டாய்லெட் வசதியும் இல்லை. இயற்கை உபாதைகளுக்கு கூட அவர் மக்களைப் போல முள்ளுக்காட்டு பக்கம்தான் ஒதுங்குகிறார். ஒரு தொகுதிக்குள்ளேயே சுற்றி வருவதால் அவர் வீடு போன்ற வசதிகள் கொண்ட வேன் தேவையில்லை என்று நினைத்திருக்கலாம். மேலும் குண்டும் குழியுமாக உள்ள விருதுநகர் நாட்டுப்புறத் தடங்களில் செல்லும் ஆடம்பர வேன்கள், கரகாட்டக்காரனில் வரும் கவுண்டமணி கார் போல உட்கார்ந்து விட்டால் என்ன செய்வது என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது. தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து மோடி அலையில் அடுக்கு மாடிகளை கட்ட வேண்டிய வைகோ இங்கே ஆளில்லாத கரிசல் காட்டு கிராமங்களில் அம்போவென சுற்ற வேண்டிய அவசியம் ஏன் என்ற கேள்வியும் அடுத்து வருகிறது.
ஏன் இப்படி வசதிக் குறைவுகளோடு பிரச்சாரம் செய்கிறீர்கள் என்று கேட்டால், மதிமுகவை ஏழைகளின் கட்சி என்கிறார் வைகோ. இதனால் மதிமுக பணக்காரர்கள் மற்றும் முதலாளிகளிடம் பணம் வாங்காது என்பதல்ல. யார் கொடுப்பார்கள்? விருதுநகரிலிருந்து இந்தியாவிற்கே வணிகம் செய்யும் நாடார், ரெட்டியார் முதலாளிகள் பலரும் திமுக, அதிமுக என்று கனமாக கவனித்தாலும், பாஜகவும் அவர்களது குட்புக்கில் உள்ள கட்சி என்றாலும் மோடியை முதன்முதலில் தோளில் தூக்கிச் சுமந்த இந்த மறத்தமிழனை தோற்றுப் போகும் ஓய்ந்து போன குதிரையாகவே அவர்கள் பார்க்கிறார்கள். எனில் இங்கே ஏழைகள் கட்சி என்பது விரும்பிப் பெற்ற சிறப்பல்ல. சோகமாக இருந்தாலும் வைகோவே இதை மனமொப்பி ஒப்புக் கொள்வார். பண விசயத்தில் யாரும் பொய் பேச முடியாதே?
ஒவ்வொரு இடத்திலும் டிரம்ஸ் வாசிக்கிறார்கள். 500 வாலா பட்டாசு வெடிக்கிறார்கள்.
இதனால் வைகோவின் அன்றாட பிரச்சார தினங்கள் அழுது வடிவதாக அர்த்தமல்ல. அவர் பேசும் ஒவ்வொரு இடத்திலும் டிரம்ஸ் வாசிக்கிறார்கள். 500 வாலா பட்டாசு வெடிக்கிறார்கள். இரண்டும் வைகோ உலாவில் ஏற்பாடு செய்யப்பட்டு உடன் வருகின்றன. அருகில் சிவகாசி இருப்பதாலும், நமத்துப் போன பட்டாசுகளை நன்கொடையாக வாங்குமளவு அவருக்கு செல்வாக்கு இருப்பதாலும் வெடிகளுக்கு குறைவில்லை. ஆனாலும் அம்மா கட்சி போல 1000, 10,000 வாலாக்களுக்கு வழியில்லை. டிரம்ஸ் வாசிக்கும் தொழிலாளிகளும் பட்ஜெட் குறைவினால் மாதம் முழுவதும் அதே சாயம் போன கோட்டு சூட்டுகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் வைகோவின் உற்சாகத்தை இவை குறைத்து விடவில்லை. உற்சாகம் என்ற ஒன்று இருந்தால் அல்லவா குறைவதற்கு?
செல்லுமிடங்களில் கூட்டணி கட்சி பொறுப்பாளர்களோ இல்லை யாராவது வேலை இல்லாத ஊர்த் தலைவரோ வைகோவை பாராட்டி சால்வை போடுகிறார்கள். கூட்டணி பொறுப்பாளர்களில் பலர் பிளக்ஸ் பேனரில் கூட இடம்பிடிக்காத அளவுக்கு செல்வாக்கு கொண்டிருந்தாலும் வைகோ அவர்களது பாராட்டை மனம் நிறைந்து ஏற்கத்தான் செய்கிறார். இல்லை மறுத்துவிட்டால் என்ன சாதித்துவிட முடியும் நண்பா? இதன்றி செல்லுமிடங்களில் திரளான மக்கள் சேர்வதில்லை. சிறுவர்கள் மட்டும் பம்பரத் தாத்தா என்று ஓடி வருகின்றனர். கிரிக்கெட்டை மட்டுமே விளையாட்டாக பார்க்கத் தெரிந்த நாட்டில் பம்பரத்திற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கும் சிறுவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது மோடி பாணியில் சொன்னால் வளர்ச்சியா, வீழ்ச்சியா?
பத்து பேர் அல்லது இருபது பேர் நின்றாலும் அதைக் கண்டு வைகோ முகம் சிறுத்தாலும் ஒரு நிமிடம் பேசுகிறார். ஆயிரம், இலட்சங்களுக்கு ஆசைப்பட்டு ஐந்து, பத்துக்களை இழந்து விடக்கூடாது என்ற அவரது பொறுப்பு மலைக்க வைக்கிறது. ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் இரண்டு நிமிடங்கள். நூறைத் தாண்டினால் மட்டும் 8 நிமிடங்கள் பேசுகிறார். இவையெல்லாம் ஆட்களைப் பார்த்தாலே வாட்சைப் பார்க்காமலேயே கச்சிதமாக நிறைவேறி விடுகிறது. காலமும், மனிதர்களும், அரசியலும் இப்படி உயர் கணித சூத்திரங்கள் தோற்கும் அளவுக்கு கனகச்சிதமாக போடப்பட்டிருப்பது அனைவரும் வியப்படையும் ஒன்று.
வைகோ தவிர்க்காமல் பேசுவது “எனது அருமை சகோதரர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தே.மு.தி.க. ஆதரவோடு” என்பதைத்தான்
இந்த நிமிடக்கணக்கிலும் கூட அவர் தவிர்க்காமல் பேசுவது “எனது அருமை சகோதரர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தே.மு.தி.க. ஆதரவோடு” என்பதைத்தான். இதிலிருந்தே பாஜக கூட்டணியில் 14 தொகுதிகள் மட்டுமல்ல அதற்கும் மேலேயே பெறுவதற்கு விஜயகாந்திற்கு அருகதை உண்டு என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். புரட்சிப் புயல் இப்படி கேப்டனது ஆதரவிலாவது ஒரு சில வாக்குகளைத் தேற்ற முடியுமா என்று நினைத்திருப்பது வெறும் பணிவு மட்டுமல்ல, உயிர்த்திருப்பதின் போராட்டமும் கூட.
இந்த இலட்சணத்தில் தமிழகத்தில் மோடி அலை வீசுகிறது, மோடி பிரதமர் ஆவது உறுதி என்ற வழக்கமான பிரச்சாரத்தை அவர் பல கிராமங்களில் தவிர்க்கிறார். இத்தகைய கிராமப்புறங்களில்தான் மோடியே அடுத்த பிரதமர் என்று மக்கள் தெரிவித்ததாக ஜூவி எழுதியிருக்கிறது. அதை திருமாவேலனின் மனங்கவர்ந்த வைகோவே பொய் என நிரூபித்திருப்பது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.
நேர்மறையில் மோடி அலையை மட்டுமல்ல, எதிர்மறையில் எந்தக் கட்சியையும் எதிர்த்து வைகோ பேசுவதில்லை. இது நாகரீகம் என்று படித்தவர்கள் சொல்லலாம். ஆனால் மற்ற கட்சிகளைத் திட்டி, இருக்கும் இரண்டு வாக்குகளைக் கூட இழக்க விரும்பாத வைகோவின் சரணடைவு என்று நம்மைப் போன்ற பாமரர்கள் அதை கண்டுபிடிக்கலாம். மேலும் பம்பரத் தாத்தா என்று பிள்ளைகள் ஓடிவரும் போது, ‘குழந்தைகளுக்கு பிடிக்குமென்றுதான் பம்பரத்தை தேர்ந்தெடுத்தேன், அப்பா அம்மாவிடம் சொல்லி எனக்கு வாக்களிக்க செய்யுங்கள்’ என்று குழந்தைகள் சேனல்கள் மொழியில் பேசுகிறார். குழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டு பொருளை வைத்துத்தான் வாக்குகளை வாங்க முடியும் என்றால் இது என்ன வகை அரசியல்?
பெண்களை பார்த்தால் மதுவுக்கு எதிராக வெயிலிலும், மழையிலும் 1500 கி.மீட்டர் நடந்ததை சொல்லி அதை டிவியில் பார்த்திருப்பீர்களே என்று இவரே கேட்டுக் கொள்கிறார். அம்மாவின் டாஸ்மாக்கையும், குடிக்கும் ஆண்களையும் இந்த பெரியவர் என்ன செய்து விட முடியும் என்று அந்த பெண்கள் அடுத்த வேலையை பெருமூச்சுடன் செய்ய திரும்பி விடுகிறார்கள். குடி எதிர்ப்பு கூட பெருமளவு வாக்குகளை திரட்டி விடுவதில்லை.
தேவர் சாதி மக்கள் வாழும் பகுதிகளில் முத்துராமலிங்கத்தை தேசியம், தெய்வீகம் இரு கண்கள் என்ற அந்த இத்துப்போன டயாலக்கை சொல்லி முடித்து விடுகிறார். அப்படிப் பார்த்தாலும் தேவருக்கு அம்மா தங்கம் கொடுத்தார், வைகோ என்ன கொடுத்தார் என்று மக்கள் ஆய்ந்தால் என்ன செய்வது? தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் பரமக்குடி துப்பாக்கி சூட்டில் காயம்பட்ட ஜெயப்பிரகாஷ் எனும் தலித் சகோதரனுக்கு அப்பல்லோவில் சிகிச்சை பார்க்க ஏற்பாடு செய்தேன் என்று என்ஜிவோ பாணியில் பேசுகிறார். பரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டிக்காமல் மருந்து வாங்கி, பிளாஸ்திரி ஒட்டினேன் என்று பேசினாலே போதும் என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் அவ்வளவு இளித்தவாயர்களா என்ற கேள்வி வருகிறது. இங்கேயும் வைகோவின் சந்தர்ப்பவாதம் இயல்பாகவே சொதப்புகிறது.
“பெரிய கட்சிகளோடு கூட்டணி வைக்காமல் கிராமத்தில் ஆட்கள் எப்படி வருவார்கள், பட்டிக்காட்டுல பிரச்சாரம் பண்ணி, உடம்பை கெடுத்துக்கிட்டு, டயத்தை வேஸ்ட்டு பண்ணுறாரு” என்று நந்திரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சங்கர் என்பவர் அக்கறையுடன் கேட்கிறார். ஓகோ வைகோவை அரசியலில் இருந்து ஓய்வெடுக்கச் சொல்கிறாரோ? வைகோவை கேட்டால் இது ராஜபக்சேவின் சதி என்பார். வைகோவை தோற்கடிக்க ராஜபக்சே ஏதாவது செய்ய வேண்டிய அவசியம் வைகோ எனும் ஆளுமையிலும் இல்லை, விருதுநகநர் தொகுதியிலும் இல்லை. இனி சிஐஏ சதி என்று சொல்லாததுதான் பாக்கி. இருப்பினும் ஓரிரு கிராமத்து பெண்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்ட வைகோவிற்குத்தான் எனது ஓட்டு என்று காதில் தேன் பாய்ச்சாமல் இல்லை.
சாதனைகளை விட வேதனைகளையே அதிகம் முன்வைக்கிறார்.
தேவர், தலித் பகுதிகளில் பேசுபவர் நாயக்கர், ரெட்டியார் சாதி மக்கள் பகுதிகளில் என்ன பேசுவார் என்று நக்கீரன் எழுதவில்லை. மற்ற சாதி வேட்பாளர்களால் சாதி வாக்குகள் பிரிந்து தெலுங்கு பேசும் மக்கள் வாக்குகள் நம்மை காப்பாற்றிவிடாதா என்று வைகோவிற்கு ஒரு கணக்கு உண்டு. இதன்றி அவர் விருதுநகரை தெரிவு செய்ய வேறு காரணங்கள் இல்லை. ஆனாலும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் போன்ற பெரிய கட்சி பிரமுகர்கள் சொன்னால் கேட்கும் இந்த பிரிவு மக்கள் வைகோவிற்கு அனுதாபத்தை தருவார்களே அன்றி வாக்குகளை தருவார்களா என்பது கேள்விக்குறி. அந்த வகையில் சுயசாதிப் பெருமையும் இங்கே காப்பாற்றிவிடும் என்று உறுதியளிக்க முடியாது.
சின்னமூப்பன்பட்டி என்ற ஊரில் இரவு நேரத்திலும் மக்கள் ஓரளவுக்கு கூடியிருந்தார்கள். வைகோவின் உற்சாகத்திற்கு சொல்ல வேண்டுமா என்ன? வேறு எங்கும் இப்படி ஒரு கூட்டத்தை பார்க்கவில்லை என்று மனதாரா பாராட்டிவிட்டு தான் வெளிப்படையாக பேசுபவன் என்றும் பாராட்டிக் கொள்கிறார். பிறகு என்னைப் பற்றி நானே சொல்லிக் கொள்வதா என்று வெட்கத்துடன் அடுத்த கருத்துக்கு போகிறார். இந்த கூட்டத்திலும் அவர் மோடி அலை, ஆளும் கட்சி, ஊழல், மக்கள் பிரச்சினைகள் என்று எதுவும் பேசவில்லை. பிறகு என்ன பேசினார்?
“வெளிநாட்டில் யாரும் விபத்தில் மாட்டிக்கிட்டா, உடனே வைகோவுக்கு போனப்போடுன்னு சொல்றாங்க. நான் எந்தப் பதவியிலும் இல்லை. ஆனா எப்படியோ பிரதமர்ட்டயோ யார்ட்டயோ சொல்லி அவங்கள காப்பாத்த முயற்சி பண்ணுறேன்” என்று உலகத் தமிழர்கள் அனைவரும் நமக்கு ஒருத்தன் இருக்கிறான் என்று நினைப்பதை பெருமையுடன் பேசுகிறார். கடைசியில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மொழியில், “ஆபத்து வந்தால் உதவும் வைகோ” என்று சிறுத்துப் போய்விட்டார். என்றாலும் ஈழம், முல்லைப் பெரியாறு என்று வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டே இருப்பேன் என்று முழங்கவும் அவர் மறக்கவில்லை.
அதே நேரம் இந்த போராட்ட வீரத்தின் அளவும், தகுதியும் வைகோவே அறிந்த ஒன்றுதான். யாரும் அதைச் சொல்லி அவருக்கு புரியவைக்கத் தேவையில்லை. ஆதாரம்? அடுத்து அவர் பேசும் சோகப்பாட்டுதான்…..
கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ரணத்தை வைகோ இன்னமும் மறக்கவில்லை. மக்களுக்கு நினைவுபடுத்தாமலும் இருப்பதில்லை. சென்ற தேர்தலில் மற்ற கட்சிகள் அதிக பணம் கொடுத்து மக்கள் வாக்குகளை விலைக்கு வாங்கியதை அவர் தன்னெஞ்சு அழுகும் அணியலங்காரத்தில் செல்லுமிடங்களிலெல்லாம் மீண்டும் மீண்டும் விவரிக்கிறார். இந்தத் தேர்தலிலும் அதை தடுக்க முடியாது என்று பயந்து பேசும் வைகோ, என்றாலும் அந்த பணத்தை வாங்கினாலும் நீங்க நன்றாக ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று முடித்துக் கொள்கிறார்.
ஊசி போட்டார், ஆபத்திற்கு குரல் கொடுத்தார் போன்ற சாதனைகளை விட இத்தகைய வேதனைகளையே அதிகம் முன்வைக்கிறார் என்று வைகோவின் சுற்றுப்பிரயாண சாரத்தை நக்கீரன் பதிவு செய்திருக்கிறது. இதனால் நக்கீரன் திமுக ஆதரவோடு வைகோவை அம்பலப்படுத்துகிறது என்று பொருளல்ல. உண்மையில் வைகோவின் வேதனையைத்தான் நக்கீரன் பகிர்ந்திருக்கிறது.
ராம் ஜெத்மலானியைக் கூட்டி வந்து பாராட்டுக் கூட்டம் நடத்தினார். ஆனால் தமிழினவாதிகளோ அம்மாதான் எழுவர் விடுதலைக்கு காரணம் என்று பட்டம் சூட்டி விட்டார்கள். தமிழருவி மணியன் தனக்கென ஒரு தொகுதியை கேட்டு மதிமுகவிற்கு கொடுத்தார். இருப்பினும் வைகோவிற்கு ஈரிலக்க தொகுதிகள் கிடைக்கவில்லை. அழகிரியை நாணிக் கோணி சென்று பார்த்தார். விருந்தினர்களை வராதே என்று எப்படி சொல்ல முடியும் என்பதற்கு மேல் அழகிரி அருளவில்லை. மோடி கூட்டத்திற்கு சத்யாவை அனுப்பினார். மோடியை ஓட்டலில் சென்று சந்தித்தார். ராஜ்நாத் சிங்கை விமான நிலையம் சென்று வரவேற்றார். இருப்பினும் பாஜக பிரஸ் மீட்டில் அவர் அருகே அமர கூட வைகோவிற்கு வழியில்லை. தமிழக முன்னேற்ற முன்னணி ஆரம்பித்த சிவாஜி கணேசனின் இடம் இன்றளவும் வைகோவால் பிடிக்கப்பட்டிருக்கிறதோ?
சோகம் மேல் சோகம் வந்தாலும் இந்த மனிதனை வாழ வைப்பது எது? சந்தர்ப்பவாதம் அவ்வளவு பலமான ஒன்றா?
இப்படி அன்றாடம் தேர்தல் பரப்புரையில் பேசி முடித்த பின் வைகோ இரவு தங்கலுக்கு சென்று விட்டு என்ன செய்வார்? உணர்ச்சிகளின் தொடர் விளைவு மற்றும் மனித உளவியலின் அடிப்படை விதிகளின்படி அவர் விடியும் வரை கதறி கதறி அழுதிருக்க வேண்டும். அதை பதிவு செய்ய நமக்கு ஊடகங்கள் இல்லை என்பதால் வினவு அதை உரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடித்து தருகிறது.
மோடி அலையில் ஒரு சந்தர்ப்பவாதியின் மூச்சு திணறல் எந்த அளவு சித்திரவதை தரும் என்பதை உணர வேண்டுமானால் நீங்கள் வைகோவாக பிறந்து வைகோவாக வாழ்ந்து பார்க்க வேண்டும்.
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து, இந்தியா சிமென்ட்சின் தலைவர் சீனிவாசன் தற்காலிகமாக பதவி விலக வேண்டும், என்பது முதலான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட இரண்டாவது நாள்.
அந்த தொலைக்காட்சி விற்பனை அங்காடிக்கு வெளியில் சிறிய கூட்டம் கூடியிருந்தது. உள்ளே இருப்பவர்கள் பார்க்கும்படியாக ஒரு டிவி மட்டுமின்றி வெளியே தெருவை பார்த்தபடி ஒரு டிவியும் வைக்கப்பட்டிருந்தது. வெளியில் கூடி நின்றவர்கள், வீட்டில் டிவி இல்லாதவர்கள் அல்லது வீடே இல்லாதவர்கள். வட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து வேலை செய்யும் கட்டிடத் தொழிலாளர்கள்.
தொலைக்காட்சி விற்பனை கடையின் முன்பு கிரிக்கெட்
அனைவரது கவனமும் தொலைக்காட்சித் திரையில் ஓடிக் கொண்டிருந்த இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டி-20 உலகக் கோப்பை போட்டியில் நிலைத்திருந்தது. திரையில் விராட் கோலி பேட் செய்கிறார். ஆஸ்திரேலிய வீரர் வாட்சன், விராட் கோலிக்கு பந்து வீசுகிறார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியில் விழுந்த பந்தை மிட்-ஆனுக்கும், மிட் விக்கெட்டுக்கும் நடுவில் நளினமாக திருப்பி விட பந்து எல்லைக் கோட்டை தாண்டுகிறது. கேமரா பந்து வீச்சாளரின் முகத்தையும், ஆஸ்திரேலிய தடுப்பாளர்களின் முகங்களையும் காட்டுகிறது. ஏமாற்றமும், குழப்பமும் கலந்த உணர்ச்சிகள்.
தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருப்பவர்களின் முகங்களில் கிளர்ச்சி, புன்னகை, மகிழ்ச்சி. அந்த வெள்ளைத் தோல் ஆஸ்திரேலியர்களை தாங்களே தோற்கடித்து விட்டது போல ஒரு நிறைவு. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே அனைவரும் ஒருமித்த உணர்வை அடைகிறார்கள். இது கிரிக்கெட். இருபத்தியோராம் நூற்றாண்டின் மதம்.
கண்ணைக் கவரும் கிரிக்கெட் காட்சிகளில் தமது மாலைப் பொழுதை கரைத்து விட்டு தாம் வேலை செய்யும் கட்டிட வளாகத்தில் தூங்குவதற்கு போய் விடுவார்கள், அந்த தொழிலாளிகள். நேரம் இருந்தால், செல்போனில் பேலன்ஸ் இருந்தால் 1,600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டுக்கு தொலைபேசியில், மனைவியிடமும் குழந்தைகளிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசியும் விடுவார்கள். அடுத்த நாள் காலையில் தமக்காகவும், தமது குடும்பத்துக்காகவும் உழைக்கும் இன்னொரு நாளை எதிர் கொள்வார்கள். இந்த தொழிலாளிகளை மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தையும் சொக்க வைத்து கட்டிப்போட்டிருக்கும் கிரிக்கெட்டின் செல்வாக்கு அத்தனை பெரிது. ஆனால் பார்ப்பவருக்கு இருக்கும் கிரிக்கெட்டின் கவர்ச்சி, மரியாதை, புனிதம், விளையாட்டு என்ற வார்த்தைகளின் பாவனை கூட கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் முதலாளிகளுக்கு இல்லை. ஐபிஎல் மோசடிகள் மூலமும் நிரூபணமான உண்மை இது.
குருநாத் மெய்யப்பன்
பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலர் ஆதித்ய வர்மா மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கு தொடர்பான மேல் முறையீடுகளின் மீதான விசாரணை கடந்த மார்ச் 25 அன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. ஐபிஎல் 2013-ல் சூதாட்டம், மேட்ச் ஃபிக்சிங் ஆகியவற்றில் ஈடுபட்டதாக சென்னை அணி முதலாளி குருநாத் மெய்யப்பன் மீதும், ராஜஸ்தான் அணி முதலாளி ராஜ் குந்த்ரா மீதும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் குழுவே விசாரணை நடத்துவது கண்துடைப்பு வேலை என்று மனுதாரர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன முதலாளி சீனிவாசன்தான் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர். சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாதன் மெய்யப்பன் சீனிவாசனின் மருமகன். இந்நிலையில் சீனிவாசன் தலைவராக இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியமே குருநாத் மெய்யப்பன் பற்றிய விசாரணையை நடத்தினால் நியாயம் கிடைக்காது என்று இந்த வழக்கை தொடர்ந்திருந்த பீகார் கிரிக்கெட் சங்கத்தின் பின்புலமாக இருப்பவர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சுபோத் காந்த் சகாய். அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கைப்பற்ற போட்டியிட்டுக் கொள்ளும் முதலாளிகளில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜக்மோகன் டால்மியா குழுவை ஆதரிப்பவர்.
வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு வந்த போது சூதாட்டம் மற்றும் மேட்ச் ஃபிக்சிங் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையில் ஒரு விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.
சீனிவாசன் சார்பில் சென்னை அணியின் நிர்வாகியாக செயல்பட்டு வந்த அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டதை முட்கல் கமிட்டி உறுதி செய்திருந்தது; உள் தகவல்களை சூதாட்ட தரகர்களுக்கு சொல்லி ஆதாயம் பார்த்ததாகவும், சூதாடிகளின் தேவைக்கேற்ப அணியை விளையாட வைத்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் விசாரிக்கத் தகுந்தவை என்று பரிந்துரைத்திருந்தது; கூடவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதலாளி ராஜ் குந்த்ராவும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், அந்த அணி வீரர்கள் மூன்று பேர் காசு வாங்கிக் கொண்டு சூதாட்டத் தரகர்களின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட ஓவரில் குறிப்பிட்ட எண்ணிக்கை ஓட்டங்களை விட்டுக் கொடுத்ததற்கான ஆதாரங்களையும் திரட்டியிருந்தது.
இந்திய கிரிக்கெட்டையே இந்தியா சிமெண்ட்சின் துணை நிறுவனமாக நடத்தி வந்திருக்கிறார் சீனிவாசன்.
இந்திய கிரிக்கெட் என்ற இந்த சாக்கடையில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்த இன்னாள், முன்னாள் ஆட்டக்காரர்கள், நிர்வாகிகள், முதலாளிகள் அனைவர் மீதும் அழுக்குகள் ஒட்டிக் கொண்டிருந்தன. இந்த அழுக்கிலிருந்து கிரிக்கெட்டை காப்பாற்றுவது போன்ற இறுதி நம்பிக்கையாக உச்சநீதிமன்றம் களத்தில் இறங்கியிருந்ததாக நினைத்துக் கொண்டார்கள், கிரிக்கெட் ரசிகர்கள்.
மார்ச் 25-ம் தேதி விசாரணையில் இந்தியா சிமென்ட்ஸ் முதலாளி சீனிவாசன் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் ஏன் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறார் என்று அவரது வழக்கறிஞர் ஆரியமா சுந்தரத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அவர் தானாக பதவி விலகா விட்டால் அவர் பதவி விலகும்படி நாங்கள் ஆணை பிறப்பித்து விடுவோம் என்று மிரட்டினர். ஊழலில் ஈடுபட்ட சென்னை அணியையும், ராஜஸ்தான் அணியையும் ஐ.பி.எல் 7-வது பருவத்திலிருந்து விலக்கி வைக்கும்படி உத்தரவிடப் போவதாகவும் கூறினர்.
பீகார் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ஆஜரான நாட்டிலேயே மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ஹரீஷ் சால்வே, சீனிவாசனின் இந்தியா சிமென்ட்ஸ் ஊழியர்களில் பலர் இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்புகளில் இருப்பதை அம்பலப்படுத்தினார்.
தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராக இருக்கும் கே.எஸ். விஸ்வநாதன், தேசிய கிரிக்கெட் அகாடமி மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் புதிய பகுதிகளை வளர்ப்பதற்கான துணைக்குழு இவற்றின் உறுப்பினர்; கே பிரசன்னா, இந்தியன் பிரீமியர் லீகின் முதன்மை நிதி அலுவலர்; தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணைச் செயலாளரான ஆர் ஐ பழனி கிரிக்கெட் வாரிய மண்டல அகாடமிகள் குழுவின் உறுப்பினர்; தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவரான பி.எஸ்.ராமன் கிரிக்கெட் வாரியத்தின் சட்ட ஆலோசகர். இவர்கள் அனைவரும் சீனிவாசனால் படியளக்கப்படும் இந்தியா சிமென்ட்சின் ஊழியர்கள்.
அதாவது, சீனிவாசனுக்கு சொந்தமான, இந்தியா சிமென்ட்சின் ஆட்களால் நிர்வகிக்கப்படும் சென்னை அணியை ஒழுங்குபடுத்தும் பொறுப்பிலும், கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய பொறுப்புகளிலும் இந்தியா சிமென்ட்சின் ஆட்களை நிரப்பியிருந்தார் சீனிவாசன்.
குருநாதன் மெய்யப்பனுக்காக பொய் சாட்சி சொன்ன தோனி.
மேலும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இருக்கிறார். ஐபிஎல் சென்னை அணியின் கேப்டனாகவும் இருந்து வரும் தோனி, “குருநாதன் மெய்யப்பன் வெறும் விளையாட்டு ஆர்வலர் மட்டும்தான், சென்னை அணியுடன் வேறு எந்த தொடர்பும் அவருக்குக் கிடையாது” என்று முட்கல் கமிட்டியிடம் சாட்சி அளித்திருந்தார். இது முற்றிலும் பொய் என்று முட்கல் கமிட்டி ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறது. முதலாளியின் பணத்துக்காக கூசாமல் பொய் சொல்லும் தோனிதான் இந்திய இளைஞர்களின் ஆதர்ச நாயகனாம்.
மேலும் இப்போதைய ஆட்டக்காரர்களான பந்துவீச்சாளர் அஷ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக், ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், வர்ணனையாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோரும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் சம்பளப் பட்டியலில் இருக்கின்றனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய கிரிக்கெட் அணி இவற்றை கைப்பற்றி இந்திய கிரிக்கெட்டையே இந்தியா சிமெண்ட்சின் துணை நிறுவனமாக நடத்தி வந்திருக்கிறார் சீனிவாசன். சீனிவாசன் மட்டுமின்றி இதற்கு முன்பு அதிகாரத்தில் இருந்த இனிமேலும் அதிகாரத்தைப் பிடிக்கப் போகிற சரத் பவார், ஜக்மோகன் டால்மியா போன்ற மற்ற கிரிக்கெட் முதலைகளும் இதே நடைமுறையை பின்பற்றி தமது அடியாட்களை முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி கொள்ளை அடித்து வந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஐபிஎல் முதன்மை செயல்பாட்டு அலுவலரான சுந்தர் ராமன், சீனிவாசனின் கையாள். 2008-ம் ஆண்டு ஐபிஎல்-ஐ உருவாக்கிய லலித் மோடி, விளம்பரத் துறையைச் சேர்ந்த சுந்தர்ராமனை முதன்மை செயல்பாட்டு அலுவலராக பணிக்கு அமர்த்தினார். 2010-ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகள் மூலம் லலித் மோடி துரத்தி அடிக்கப்பட்ட பிறகு அவரது இடத்தைப் பிடித்திருந்த இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனுடன் சுந்தர் ராமன் ஒட்டிக் கொண்டார்.
முட்கல் கமிட்டியின் விசாரணையின் போது “ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் யார் என்று தெளிவாக சொல்வது சாத்தியமில்லை” என்று சீனிவாசனையும் குருநாத் மெய்யப்பனையும் பாதுகாக்கும் வகையில் சுந்தர் ராமன் வாக்குமூலம் கொடுத்திருந்தார். மேலும், பிற ஐபிஎல் அணிகளைப் பற்றிய தகவல்களை குருநாத் மெய்யப்பனின் சூதாட்டத்துக்கு உதவும் வகையில் சுந்தர் ராமன் சொல்லி வந்தார் என்பது சூதாட்ட தரகர்களுக்கு இடையேயான பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடலில் தெரிய வந்திருக்கிறது.
சீனிவாசனின் தயவில் ஆண்டுக்கு ரூ 3.6 கோடி வருமானம் தரும் வருணனையாளர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்த காவஸ்கர்.
இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்த உள்கமிட்டி சீனிவாசனின் மருமகன் குருநாதன் மெய்யப்பன் எந்த தவறும் செய்யவில்லை என்று நற்சான்றிதழ் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. குருநாதன் மெய்யப்பன் இப்போது தலைமறைவாக இருக்கிறார். இன்னும் சில ஆண்டுகளில் அவர் வெளியில் வந்து எதிர்காலத்தில் கிரிக்கெட் வாரிய தலைவராகக் கூட ஆகலாம். மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது 323 பிஎஸ்என்எல் இணைப்புகளை சட்ட விரோதமாக பெற்று தனது வீட்டிலேயே எக்ஸ்சேஞ்ச் நடத்தியது, ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனமான மேக்சிசுக்கு விற்கும்படி அழுத்தம் கொடுத்தது போன்ற குற்றச்சாட்டுக்களுக்குள்ளான தயாநிதி மாறன், தனது பாவங்களை கரைத்து விட்டு இப்போது தேர்தலில் நிற்கிறார்; ஜெயித்து ஒரு வேளை மத்திய அமைச்சர் கூட ஆகி விடலாம் இல்லையா?
இதற்கிடையில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களுடன் கை கோர்த்து இம்மூன்று நாடுகளையும் உலகக் கிரிக்கெட்டின் பெரியண்ணன்களாக மாற்றும் திட்டத்தை நிறைவேற்றிய சீனிவாசன் பன்னாட்டு கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பதவியை ஏற்கவும் திட்டமிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பட்னாயக் ஒரு கிரிக்கெட் ரசிகராம். ஐ.பி.எல் என்ற புழுத்து நாறும் ஊழல் விளையாட்டுக்கு மரியாதை பெயின்ட் அடிப்பது எப்படி என்று யோசித்த அவரது சட்ட மூளையில் காவஸ்கரை கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமித்தால் என்ன என்று தோன்றியிருக்கிறது.
இந்திய ஞானமரபின் நவீன வடிவமாக கட்டமைக்கப்பட்டு நடத்தப்படும் இந்திய கிரிக்கெட்டில் இப்போது விராட் கோலியும், கடந்த 20 ஆண்டுகளாக சச்சின் டெண்டூல்கரும் பிம்பங்களாக நிறுத்தப்பட்டது போல 1980-களின் புனித பிம்பமாக தூக்கி நிறுத்தப்பட்டவர்தான் சுனில் காவஸ்கர்.
நீதிபடி பட்னாயக், காவஸ்கரின் நீண்ட இன்னிங்ஸ்களை கண்டு கழித்த விசிறியாக இருந்திருக்க வேண்டும். ‘காவஸ்கர் எங்கே இருக்கிறார்? அவர் நல்லவர், வல்லவர், அனுபவமிக்கவர், நாலும் தெரிந்தவர், இந்த ஊழல் பேர்வழி சீனிவாசனை நீக்கி விட்டு காவஸ்கரிடம் கிரிக்கெட் வாரிய தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கும்படி உத்தரவிட உத்தேசித்திருப்பதாக’ அவர் கிரிக்கெட் வாரிய வழக்கறிஞரிடம் கூறினார். காவஸ்கரும் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்த சீனிவாசனின் தயவில் ஆண்டுக்கு ரூ 3.6 கோடி வருமானம் தரும் வருணனையாளர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சத்யமேவ ஜெயதே என்ற முழக்கத்தை முன் வைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் நீக்கப்பட்டால்தான் ஐபிஎல் போட்டிகள் நடக்க அனுமதிப்போம் என்று வீரம் காட்டினார்கள். “யாருக்கும் அறங்களைப் பற்றி கவலை இல்லை. இப்படி இருந்தால் அதிகாரத்தில் இருக்கும் நபர்கள் மற்றவர்கள் சொல்வதை எப்படி கேட்பார்கள்? ஆனால், வாய்மையே வெல்லும் என்று நாங்கள் நம்புகிறோம். கொஞ்ச காலம் பிடித்தாலும் உண்மை ஒரு கட்டத்தில் வெளி வந்தே தீரும்.” என்று சொல்லி கிரிக்கெட்டின் நலன்களுக்காகவும் தேசத்தின் நலன்களுக்காகவும் கறாரான முடிவுகளை எடுக்கப் போவதாக நீதிபதிகள் கூறினர்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் ஆதரித்து வந்ததோடு அதில் நாறிக் கொண்டிருக்கும் ஊழல்களைப் பற்றி ஒருமுறை கூட தன் வாயைத் திறந்ததில்லை காவஸ்கர்.
இந்தியா சிமென்ட்ஸ் ஊழியர்களை இந்திய கிரிக்கெட் வாரிய பதவிகளிலிருந்து நீக்கும்படி ஆணை பிறப்பிக்கும் உத்தேசம் இருப்பதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.
சர்வியாபகியாக இந்திய கிரிக்கெட் கம்பெனியை ஆண்டு கொண்டிருந்த சீனிவாசனின் நிலைமை ஆட்டம் கண்டது. வாரியத்தின் 5 துணைத்தலைவர்களில் 3 பேர் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.
சீனிவாசனின் இடத்தில் நியமிக்க உத்தேசிக்கப்பட்டிருந்த காவஸ்கரோ, “நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் கூறும் போது அதை கேட்டுத்தான் ஆக வேண்டும். கிரிக்கெட் வாரியத் தலைவர் பொறுப்பை நான் நிறைவேற்ற முடியும் என்று நீதிமன்றம் கூறியிருப்பது என்னை கவுரவப்படுத்துகிறது” என்றிருக்கிறார்.
சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஊழலில் ஈடுபட்டதை அடுத்து ஐபிஎல் 7 ரத்து செய்யப்பட வேண்டுமா என்று கேட்கப்பட்ட போது. “அது கிரிக்கெட்டுக்கு எப்படி உதவும் என்று எனக்குத் தெரியவில்லை. 14 ஆண்டுகளுக்கு முன்பு பணத்துக்காக போட்டிகளில் விளையாடியவர்கள் பற்றிய விவகாரம் வெடித்த போதும் கிரிக்கெட் இடைவிடாமல் தொடர்ந்தது,” என்றார். சென்னை, ராஜஸ்தான் அணிகளை நீக்கி வைப்பது குறித்து கூறுகையில், “சென்னை அணி மூன்று முறை சேம்பியன் ஆகியிருக்கிறது, ராஜஸ்தான் அணி ஒரு முறை வெற்றி பெற்றிருக்கிறது. அந்த அணிகளை விலக்கி வைக்க நேர்ந்தால் அது மிகவும் வருத்தப்படக் கூடியது” என்றிருக்கிறார்.
காவஸ்கரைப் பொறுத்த வரை அவரும் கிரிக்கெட்டும் ஒன்றுதான், அவருக்கு எது நல்லதோ அதுதான் கிரிக்கெட்டுக்கும் நல்லது. அவருக்கு கோடி கோடியாக பணத்தைக் கொட்டும் வகையில் கிரிக்கெட் சூதாட்டங்களோடும், மோசடிகளோடும் இயங்குவதுதான் கிரிக்கெட்டுக்கும் நல்லது, அவருக்கும் நல்லது.
சீனிவாசன் பதவி விலகாமல் விடாப்பிடியாக இருப்பது பற்றி கேட்ட போது, “குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை எல்லோரும் நிரபராதிகள்தான் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். சீனிவாசன் குறித்து நான் தீர்ப்பு சொல்ல முடியாது. அது தொடர்பாக எனக்கு எந்த அனுபவமும் இல்லை.” என்றார்.
உண்மைதான், 2002-ம் ஆண்டு மும்பையில் காவஸ்கரின் ஓய்வறை இழுப்பறையில் ரூ 7 லட்சம் ரொக்கம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு கூட காவஸ்கரின் கிரிக்கெட் தொடர்பான பணிகளை யாரும் நிறுத்தி வைத்து விடவில்லை. அவர் தொடர்ந்து கனவான்களின் விளையாட்டான கிரிக்கெட்டில் கோடிக்கணக்கான ரூபாய்களை ஈட்டி வருகிறார். அதற்கு விசுவாசமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் ஆதரித்து வந்ததோடு அதில் நாறிக் கொண்டிருக்கும் ஊழல்களைப் பற்றி ஒருமுறை கூட தன் வாயைத் திறந்ததில்லை.
இந்நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகப் பொறுப்பை காவஸ்கரிடம் ஒப்படைப்பது என்பது நில மோசடிகள் தொடர்பாக விசாரிக்கும் சி.பி.ஐ-யின் பொறுப்பை ராபர்ட் வதேராவிடம் ஒப்படைப்பது போன்றதுதான். ஒரு நாள் முதல்வர் போல ஒரு சீசனுக்கு இடைக்காலத் தலைவராக இருக்கும் காவஸ்கர் சீனிவாசனுக்கும், இந்தியா சிமென்ட்சுக்கும் பாதகமாக எதையும் செய்து, பதவிக் காலத்திற்குப் பிறகு வருணனையாளர் ஒப்பந்தத்துக்கு வேட்டு வைத்துக் கொள்ள மாட்டார் என்று உறுதியாக நம்பலாம். எனவே சீனிவாசனது நலன்களுக்கு குந்தகம் வராமல் எல்லாம் நல்லபடியாக நடத்தி முடிக்கப்படும்.
மேலும், கிரிக்கெட் வாரியத்தின் தலைவரை நீக்குவதற்கு வாரியத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான வழிமுறையே அதன் அமைப்பு விதிகளில் இல்லை. அவர் தானாக பதவி விலகினால்தான் உண்டு. இவ்வளவுக்கும் பிறகும் சீனிவாசன் பதவி விலக முன்வரவில்லை.
இதற்கிடையில் மேற்கு வங்க விளையாட்டுத் துறை அமைச்சர் மதன் மித்ரா, “சவுரவ் கங்குலி கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளலாம். அவர்தான் நமது மிகச் சிறந்த அணித்தலைவராக விளங்கியவர். அவருக்கு தூய்மையான இமேஜ் உள்ளது. அவர்தான் வாரியத்தின் பொறுப்பை எடுத்துக் கொள்வதற்கு சரியான ஆள்” என்று கூறி தீதியின் கட்சியையும் களத்தில் இறக்கி விட்டார்.
ஐபிஎல் முதலாளிகளின் காபி கிளப்
ஆனால் கிரிக்கெட் முதலாளிகள் தொலைக்காட்சி ரேட்டிங்குகளையும், கூட்டம் நெருக்கும் விளையாட்டு மைதானங்களையும் சுட்டிக் காட்டி ஊழல் எதுவும் இல்லை என்று மக்களே தீர்ப்பு சொல்லி விட்டார்கள் என்கிறார்கள். நடுத்தர வர்க்க அம்பிகள், ஊழல்கள் எதையும் பொருட்படுத்தாமல் மாலை நேரத்தின் மனதை கவரும் கொண்டாட்ட நிகழ்வுகளாக தொலைக்காட்சியிலும், நேரிலும் கிரிக்கெட்டை போற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற வழக்கின் அடுத்த கட்டமாக வியாழக்கிழமை நடந்த வாதங்களின் போது சீனிவாசன் பதவி ஒதுங்கத் தயார் என்று அவரது வழக்கறிஞர் நீதிபதிகளிடம் தெரிவித்தார். ஐபிஎல் ஊழல் தொடர்பான விசாரணை முடிவது வரை கிரிக்கெட் வாரிய விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கியிருப்பதாகவும், விசாரணையை காலக்கெடு விதித்து முடிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
கிரிக்கெட் வாரியம் சென்னை, ராஜஸ்தான் குத்தகைகளை ரத்து செய்ய வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக் கொண்டது. “அப்படி இரண்டு அணிகள் நீக்கினால், ஆறு அணிகள் மட்டும் விளையாடுவது போட்டித் தொடரின் கட்டமைப்பையே சிதைத்து விடும். தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள், விளம்பரதாரர்கள், புரவலர்கள், ஆட்டக்காரர்கள் ஆகிய அனைவரும் அதன் விளைவுகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்” என்றது. வாரியத்தின் வழக்கறிஞர் சி ஏ சுந்தரம், குத்தகைதாரர்களுடன் ஒப்பந்தத்தை எளிதாக ரத்து செய்ய முடியாது என்றார்.
இரண்டு அணிகள் விலக்கி வைக்கப்பட்டால், ஐ.பி.எல் அதன் கவர்ச்சியை இழந்து விடும் என்று பதறினார்கள் அணி முதலாளிகள். போட்டிகளுக்கு பெயர் இடும் உரிமையை வாங்கியிருக்கும் பெப்சி தனது குளிர்பானங்களின் ஆண்டு விற்பனையே ஐ.பி.எல் போட்டிகள் தடையின்றி முழுமையாக நடைபெறுவதில்தான் அடங்கியிருக்கிறது என்று கூறியது.
முதலாளிகளின் இத்தகைய இக்கட்டான சூழலையும், காவஸ்கரின் கருத்துகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டோ என்னவோ வெள்ளிக் கிழமை இந்த வழக்கில் இடைக்கால ஆணை பிறப்பித்த நீதிமன்ற அமர்வு, “ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கவிருக்கும் ஐ.பி.எல்-ன் ஏழாவது பருவம் தடையின்றி நடப்பதுதான் முக்கியமானது என்பதால் ஐ.பி.எல்லில் விளையாடுவதிலிருந்து எந்த ஒரு கிரிக்கெட் வீரரையும், எந்த ஒரு அணியையும், (அவர்கள் எவ்வளவுதான் ஏமாற்றியிருந்தாலும், எவ்வளவுதான் நிதி மோசடி செய்திருந்தாலும்) தாம் தடுக்கப் போவதில்லை” என்று கூறியது.
ஒரு குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்று ஆதாரம் வெளியானால், அதன் மேலாளரை மட்டும் நீக்கி வைத்து விட்டு, கையாட்களை கண்டுகொள்ளாமல் ‘மற்ற எந்த ஊழியரையும் நீக்கப் போவதில்லை. குழந்தைகளின் நன்மைக்காக இல்லம் தொடர்ந்து வழக்கம் போல நடைபெற அனுமதிப்போம்’ என்பது போல தீர்ப்பு சொல்லியிருக்கிறது உச்சநீதிமன்றத்தின் மனுநீதி.
அனுமார் பக்தரான அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராமர் சிலைக்கு பூஜை செய்ய பாபர் மசூதியின் கதவுகள் திறந்து விடப்பட வேண்டும் என்று தீர்ப்பு சொன்னது போல, தான் ஓய்வு பெறுவதற்கு முன்பு நல்ல காரியம் செய்து புண்ணியம் தேடிக் கொள்ள வேண்டும் என்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிதம்பரம் கோயிலை தீட்சிதர்கள் கையில் ஒப்படைத்து தீர்ப்பு சொன்னது போல தீவிர கிரிக்கெட் ரசிகரான பட்னாயக் ஐ.பி.எல் தடையின்றி நடக்க வழிகாட்டி தீர்ப்பளித்திருக்கிறார்.
இந்தியா சிமென்ட்சும், விஜய் மல்லையாவும், பெப்சி கோலாவும், முகேஷ் அம்பானியும், சூதாடிகளும், சூதாட்டத் தரகர்களும் இந்த தீர்ப்பினால் எந்த தொந்தரவுக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள். கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை கொக்கி போட்டு இழுக்கும் ஐ.பி.எல்லின் ஆபாச நடனம் தடையின்றி நடக்கலாம். இதுதான் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு.
உண்மையில் ஐஎம்ஜி என்ற விளையாட்டு நிர்வாக நிறுவனம்தான் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தப் போகிறது. அனுமதிச் சீட்டுகள், அணி அலுவலர்கள், போட்டிகள், போட்டி அதிகாரிகளை நியமிப்பது அனைத்தும் ஐஎம்ஜியால் நிர்வாகிக்கப்படுகிறது. எனவே தலைமையைப் பொறுத்த வரை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்கிறார் ஒரு ஐபிஎல் அணியின் மேலாளர். அதாவது உச்சநீதிமன்றம் நியமித்திருக்கும் காவஸ்கர் எந்த அதிகாரமும் இல்லாத ஒரு டம்மி பீஸ்தான்.
ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பமாகவிருக்கும் ஏப்ரல் 16-ம் தேதியை வழக்கின் அடுத்த கட்ட விசாரணை தேதியாக நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. நீதிபதி பட்நாயக் தான் ஏற்பாடு செய்து கொடுத்த போட்டிகளை கண்டு களிப்பதற்கு வசதியாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை போட்டிகள் தொடங்கும் நேரத்துக்கு முன்பே முடிந்து விடும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், அவர் ஏதாவது ஷோரூமுக்கு வெளியில் நின்று கிரிக்கெட் பார்க்க வேண்டியிருக்காது. உச்சநீதிமன்ற நீதிபதியாக இருப்பதால் சொந்தமாக ஒரு வீடும், அதில் கிரிக்கெட் பார்க்க அகலத் திரை தொலைக்காட்சியும் அவரிடம் இருக்கும்.
அரசியல் ரீதியாகச் சொன்னால், எல்லா ‘கமிசன்’களையும் ஒழுங்குபடுத்தும் ஒரு அரசு உறுப்புதான் தேர்தல் கமிசன். இதில் எல்லை தாண்டி விளையாடாமல் கட்சிகள் வரவு செலவு பண்ணி, மக்கள் காறித்துப்பி எத்தி எறிந்த இந்த போலி ஜனநாயகத்தின் மீது புதுப்புது கவர்ச்சிக் காட்டி சுண்டி இழுக்கும் திருவிழா டான்ஸ் பார்ட்டிகள்தான் தேர்தல் கமிஷன் எனும் இந்த அதிகாரவர்க்கக் கும்பல்.
லஞ்ச, ஊழலற்ற ஆட்சி – நிர்வாகத்தை நடத்த எந்த உத்திரவாதமும் இல்லாத இந்த ஜனநாயகத்தில், தேர்தலையாவது நாங்கள் சுத்தபத்தமான முறையில் நடத்திக் காட்டுகிறோம் என்று வாகனத் தணிக்கை கைகளில் அமுக்கியது போக ஊடகங்கள் வாயிலாக தினம், தினம் தனது திரில்லர் மசாலா படங்களை ஓட்டிக் காட்டுகிறது தேர்தல் கமிசன். வழக்கம் போல ஊர் சொத்தை தனதாக கைவைத்து இரண்டு எஸ்.ஐ.க்கள் மாட்டிக் கொண்டது தனி காமடி ட்ராக்!
ஏற்கனவே உள்ள அதிகாரவர்க்க கட்டமைப்பு மூலம் ஊழல் பெருச்சாளி, தேர்தல் செலவாளி யார்? யார்? எனத் தெரியாதது போலவும், சுரண்டிக் கொள்ளையடிப்பவனை வீட்டில் வெண்சாமரம் வீசி விட்டு, ரோட்டில் மடக்குவது போல பறக்கும் படை, அமுக்கும் படை என்று இந்த கறக்கும் படையில் கடமையாற்றும் புலிகள் யார்? அன்றாடம் மக்களிடம் ரூம் போட்டு மிரட்டி சம்பாதிக்கும் உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், தாசில்தார்கள், வி.ஏ.ஓ.க்கள், மாவட்ட ஆட்சியர்கள், என்ற மாமூலான பேர்வழிகள் தான் இந்த திடீர் தேர்தல்உத்தமர்கள்.
சமூக வாழ்க்கையில் அன்றாடம் பல ஊழல் காண்ட்டிராக்டர்கள், போர்ஜரி முதலாளிகள் போன்றவர்களிடம் கல்லாகட்டும் இந்த யோக்கியர்கள்தான் தேர்தல் பணப்பட்டுவாடாவை மடக்குகிறேன் பேர்வழி என்று மாட்டு வியாபாரியிலிருந்து, மளிகை சாமான் வியாபாரி வரை முறையாக ஆவணத்தை சோதிக்கிறார்களாம். வரி ஏய்ப்பு செய்து விட்டு, ஊரறிய ரோட்டு மேலேயே கடையை போட்டுக்கொண்டு உள்ளூரில் எல்லா ஓட்டுக் கட்சிகளையும் சேர்த்து அசெம்பிள் செய்து திமிராக உட்கார்ந்திருக்கும் நோக்கியா முதலாளியிடம் ஒரு சல்லிக்காசைக் கூட பிடுங்க முடியாத அதிகாரவர்க்கம் மாட்டு வியாபாரியிடம் போய் மடியைப் பார்க்கிறது. இருநூறு வாய்தா வேகத்தோடு மேலே பறக்கும் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்ளும் இந்த கண்ணியவான்கள் தான் கால் டாக்சிகளை மடக்கி கடமையாற்றுகின்றனர்.
நேர்மையாகவும், முறையாகவும் தேர்தலை நடத்தி மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்குவதற்காக கடமையாற்றுவதாக சீன்போடும் தேர்தல் கமிசனிடமிருந்தே இருக்கிற போலி ஜனநாயகத்தையும் காப்பாற்றிக் கொள்ள கட்சிகளே முனகுகின்றன. தேர்தல் நடத்தை என்ற பெயரில் பெரியார், அம்பேத்கர் சிலைகளையே கோணி போட்டு மூடுவது, பிரியாணி கடைகளை கிளறுவது, கல்யாண மண்டபங்களை நோட்டம் பார்ப்பது, பத்து மணிக்கு மேல கூட்டம் போட்டு பேசக் கூடாது, அதை பேசக் கூடாது, இதை பேசக்கூடாது என்று அரசியலில் தலையிடுவது ஒருபுறம்.
மறுபுறம் ஆளும் வர்க்க அரசியல் திட்டத்தோடு இயங்கிக்கொண்டு, ஏதோ அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்புபோல நம்ப வைக்க முயற்சி செய்கிறது தேர்தல் கமிசன். தேர்தலுக்காக மாட்டுச் சந்தையை மிரட்டும் இந்த ஆளும் வர்க்க கோமாரி கொசுக்கள் பங்கு சந்தை பண பரிவர்த்தனையை தடுக்கப் பறக்குமா? பாயுமா? தேர்தல் நடத்தைக்காக எத்தனை பிரியாணி பொட்டலம் என்று கணக்குப் பார்க்கும் இந்த கறார் அதிகாரிகள், தேர்தல் நேரத்தில் இத்தனை கோக், பெப்சிதான் முதலாளி விற்க வேண்டும், இத்தனை கார்தான் முதலாளி விற்க வேண்டும் இத்தனை செல்போன் தான் விற்கவேண்டும், என்று கட்டுப்பாடு விதிக்கத் தயாரா?
ஏற்கனவே இருக்கிற முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு ஒரு போலி ஜனநாயக அரசை தேர்ந்தெடுப்பதுதான் இவர்களின் மொத்த திட்டமே. இதில் இடையில் போடும் சீன்கள்தான் இந்த கெடுபிடி காட்சிகள். கேவலம், தேர்தல் வரை இவர்களின் அறநெறிப்படி, மக்களை ‘நிதானமாக’ சிந்திக்க விட டாஸ்மாக் கடையை மூடக் கூட தயாராயில்லாத இந்த நிரந்தரக் கொள்ளைக் கும்பல்தான், தற்காலிக திருடன், போலீசு விளையாட்டு காட்டி ஜனநாயகம் போராடிக்காமல் கிலு கிலுப்பு ஊட்டுகிறது.
தேர்தல்னாலே பணம்புரளும், கட்சிகள்னாலே ஊழல் என்று கருத்து மக்களிடம் முழுதாக அம்பலமாகிப் போனதால், இதற்குக் காரணமான இந்த ஜனநாயக கட்டமைப்பையே மக்கள் தெரிந்து, புரிந்து தூக்கி எறியாதவாறு, ‘நான் அவனில்லை’, என்று நம்மிடம் ‘நல்ல தேர்தலை நடத்திக்காட்டும்’ இந்த அதிகாரவர்க்கம்தான் நாட்டில் உள்ள கட்சிகளின் மொத்த ஊழலுக்குமே உறை கிணறு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். தேர்தல் ஜனநாயகத்தை கட்டிக் காப்பதற்கு இன்று தெருவுக்கு வந்திருக்கும் இந்த அதிகார வர்க்க படையின் உண்மையான ஜனநாயக யோக்கியதை என்ன?
மற்ற நேரங்களில் இவர்களின் அலுவலகம் தேடிப்போய் மக்கள் ஒரு குறைகளைச் சொல்லப்போனால் இந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் வர்க்கம் மக்களை மதித்ததுண்டா? ஜனநாயகப்படி மக்களை கேள்வி கேட்க அனுமதித்ததுண்டா? மக்களுக்கு எட்டாத உயரத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு மனுவை வாங்கக்கூட இழுத்தடிக்கும் இந்த அதிகாரவர்க்க கும்பல் தான், ரோட்டில் இறங்கி மக்களுக்கு ஜனநாயகத்தை சலித்து, தூசு இல்லாமல் தரப்போகிறதாம், யாராலும் நம்ப முடியுமா?
நம்ம ஊர் போலீஸ் ஸ்டேசன் தான் என்று, எஸ். ஐ.யை இயல்பாக மக்கள் சந்தித்து ஒரு புகாரைக் கொடுக்க முடிகிறதா? ஊரறிய கல்விக் கொள்ளை அடிக்கும் ஒரு முதலாளி மேல் மக்கள் புகார் கொடுத்தால், நடவடிக்கை புகார் கொடுத்தவர்கள் மேலே அல்லவா பாய்கிறது!
ஊரே குப்பை, சாக்கடை தெருவில் ஓடுது, பொது சுகாதாரமே சீரழிகிறது, போய் குறைகளைச் சொல்ல போனால், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகளைப் பார்க்க முடிகிறதா? எப்போது போனாலும் மக்களை சந்திக்க நேரமில்லாமல் எந்த குப்பையில் கிடக்கிறானோ அந்த அதிகாரி! ஜனநாயகமாக ஒரு மனுவைக் கொடுத்தால் அதையும் குப்பையாக்கும் இந்த அதிகாரவர்க்கம், மக்களை மதிக்காத இந்த திருட்டுக் கும்பல், மக்களுக்கு நேர்மையான ஜனநாயகத்தை வழங்கத்தான் தேர்தல் பணியாற்றுகிறது என்பதை விஜயகாந்தைத் தவிர வேறு எந்த சுயநினைவில்லாதவனும் கூட நம்பத் தயாராயில்லை!
இந்த நேரத்தில் நேர்மை, நடத்தை, ஜனநாயகம் என்று இவ்வளவு பரபரப்பூட்டும் இந்த அதிகாரிகள் மற்ற நேரத்தில் எங்கே போய் இருந்தார்கள்? இப்போதும் கிளைமாக்ஸ் காட்சிகள் முடிந்தபின்பு திரும்பிப்போய் நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு என்ன கிழிக்கப் போகிறார்கள்? ஏற்கனவே இவர்கள் கையில் ஜனநாயகத்தை கொடுத்து கொள்ளைக்காரனை உள்ளே தள்ளு என்று சொன்னால், அவனோடு சேர்ந்து கொண்டு ஐ.பி.எல் சூதாட்டம் வரை பங்கு போட்டு திண்ணும் அதிகாரிகள் தான் இந்த போலீசுத் துறை! உனக்குள்ள அதிகாரத்தை வைத்து ஊர் சொத்தை காப்பாற்று! ஆறுகள், ஆற்றுமணலை காப்பாற்று என்று சொன்னால் அதற்கு வக்கில்லாமல் மணல், ரியல் எஸ்டேட், கிரானைட் மாஃப்பியாக்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு ஊரை அடித்து உலையில் போடுபவர்கள் தான் இந்த தாசில்தார், வி.ஏ.ஓ, கலெக்டர்கள்…
இப்படி ஒவ்வொரு துறையிலும் நாட்டையும் மக்களையும் சுரண்டி முதலாளிகளுக்கு எடுப்பு வேலை பார்ப்பதோடு மட்டுமல்ல, எதிர்க்கும் மக்களை தடி கொண்டு தாக்கும் இந்த அதிகார வர்க்க கும்பல்தான் குடியரசை குண்டுமணி குறையாமல் நம் கைக்கு வழங்கப் போகிற மகான்களாம்! இருக்கிற ஜனநாயகத்தை வைத்து பொறுக்கித் தின்பதையே தமது பிழைப்பாக கொண்டுள்ள இந்த ஒட்டுண்ணி வர்க்கம்தான் தேர்தலை உத்தமமாக நடத்தும் காவலர்கள் என்றால் கலெக்டர் வீட்டு நாய் கூட காலைத் தூக்கி சிரிக்கும்!
இருப்பினும், கலெக்டர், தாசில்தார், போலீசு என்று பெரிய அதிகார வர்க்க படையே தேர்தல் களத்தில் முன் நின்று வேலை பார்ப்பது நமக்கு ஜனநாயகத்தை வழங்கும் கடமைக்காக அல்ல, ”இவங்கள இப்படியே விட்டா அழுகி நாறும் ஜனநாயகத்தோட, அதுல புழுத்து நாறும் நம்மளையும் சேர்த்து புதைச்சுடுவாங்க! அதுக்கு முன்னால நாம இவங்கள ஓட்டுப் பெட்டியில புதைச்சுடுவோம்!” என்ற முன் ஜாக்கிரதை தான். இது புரியாமல் இந்த அதிகார வர்க்கத்திடம் திரும்ப திரும்ப நம்மை மாட்ட வைக்கும் போலி ஜனநாயகத் தேர்தலை எச்சரிக்கையாக புறக்கணிப்பதும், மக்களுக்கு எல்லா நிலைகளிலும் அதிகாரமுள்ள ஒரு மாற்று புதிய ஜனநாயகத்தை பற்றி சிந்திப்பதும்தான் இந்த தேர்தலில் நமக்கான நல்ல நடத்தை விதியாகும்!
மோடிக்கு பகிரங்கமாக பனிக்கட்டி ராகம் வாசிக்கும் ஜூவி இதழ், அதன் ஆசிரியர் திருமாவேலன் குறித்தும் வினவில் விரிவாக எழுதியிருந்தோம். அந்தக் கட்டுரை ஆயிரக்கணக்கில் படிக்கப்பட்டதோடு, ஊடக உலகிலும் கவனிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது. திருமாவேலனது நடுநிலைமை ஊடக தர்மமும் சந்திக்கு இழுத்து வரப்பட்டது.
சைவாள் கஃபேயின் ஊசிப் போன தயிர்சாதம்
விகடனின் சினிமா செய்திகளை தவிர்த்து விட்டு பார்த்தால் அதன் அரசியல் செய்திகள், கட்டுரைகளை இணையத்தில் படிக்கும் வாசகர்களை விட வினவின் கட்டுரைகளை அதிகம் பேர் படிக்கிறார்கள் என்பது எங்கள் மதிப்பீடு. குறிப்பிட்ட கட்டுரைகள் அந்தந்த வலைத்தளங்களின் இடத்திலிருந்து, சமூக வலைத்தளங்களில் பகிரும் எண்ணிக்கையை வைத்துக்கூட இதை கண்டுபிடிக்கலாம். இப்படி ஜூவியின் நாடி, காவிக் கும்பலின் வெற்றிக்காக துடிக்கிறது என்ற உண்மையை, அதன் மோசடியான நடுநிலைமையையெல்லாம் கேள்விக்குள்ளாக்கியும் கூட இவர்களுக்கு சூடு சுரணை வரவில்லை.
காசு வாங்கிப் படிக்கும் வாசகர்களை அவ்வளவு மடையர்களாக கருதுகிறது விகடன் நிர்வாகம். இடையில் தேமுதிக, பாமக கட்சிகளெல்லாம் முரண்டு பிடிக்கும் நிலையில் பாஜக கூட்டணி அமையாது போகுமோ என்ற நிலையில் கூட ஜூவி தனது தந்திரத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அப்போது மோடிக்கு தாளமடிப்பதை கொஞ்சம் இடைக்காலமாக நிறுத்திக் கொண்டு பாஜகவுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள கூட்டணிகள், கட்சிகள், கொள்கைகள் குறித்து அம்பலப்படுத்தி எழுதினார்கள்.
பிறகு அவர்கள் எதிர்பார்த்தது போல பாஜக கூட்டணி அமைந்து விட்டதுதான் தாமதம், திருமாவேலனும், ஜூவியும் தமது நாடிகளில் காவி லேகியத்தை ஏற்றிக் கொண்டு, ஊடக அதிகாரத்தை வைத்து மீண்டும் நரியின் மொழியில் இசைக்க ஆரம்பித்து விட்டார்கள். இப்போது நேரடியாக பாஜக கூட்டணியின் வெற்றிக்காக அண்ணாசாலையில் விகடன் வளாகத்தில் தேர்தல் அலுவலகம் திறந்து 24X7 சர்வீசில் வேலை பார்க்கிறார்கள்.
02.04.2014 தேதியிட்ட ஜூவி இதழில் “கிராமப்புற மக்கள் ஆதரவு யாருக்கு” என்று ஒரு சர்வே கட்டுரை. கூட்டணிகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூவி அணி தமிழக கிராமங்களில் 5,587 பேரை சந்தித்து எடுக்கப்பட்டதாம்.
சர்வே முடிவுகள் என்ன? சைவாள் கஃபேவுக்கு போய் விட்ட பிறகு போட்டி வறுவலையா எதிர்பார்க்க முடியும். அதே ஊசிப்போன தயிர் சாதம்தான்.
அடுத்த பிரதமராக யார் வர வேண்டுமென்ற ஜூவியின் கேள்விக்கு 41.49%பேர் நரேந்திர மோடி என்றும், ராகுலுக்கு 9.95%, ஜெயலலிதாவுக்கு 16.72%, சோனியா, மன்மோகன் சிங்கிற்கு ஐந்துக்கும் குறைவாகவும் பதிலளித்தார்களாம் நமது கிராம மக்கள். நரேந்திர மோடி எனும் பெயரை கேள்விப் பட்டிருக்கிறீர்களா என்று கேட்டால் கூட அதிகம் தெரியாது என்பதே அதிக பதிலாக இருக்கும்.
பாஜ கூட்டணிக்காக பல மாதங்களாக வேலை செய்த ஜூவி.
அதே போல யாருக்கு வாக்களிப்பீர்கள் எனும் கேள்விக்கு, பாஜக கூட்டணிக்கு 27.55%, அதிமுகவுக்கு 24.34%, திமுக கூட்டணிக்கு 19.56%, காங்கிரசுக்கு ஏழு, கம்யூனிஸ்ட்டுக்கு நாலு என மக்கள் பதிலளித்தனராம். இதன்படி ஐந்து கூட்டணிகள் மோதும் போட்டியில் முதலிடத்தில் இருக்கும் ஒரு கட்சி, இரண்டாவதிருக்கும் கட்சியை விட சுமார் மூன்று சதவீதம் அதிகம் வாக்கு வாங்கும் என்றால், அனைத்து தொகுதிகளையும் வெல்ல வேண்டும். அல்லது பெரும்பான்மை இல்லை பாதி என்று வைத்தால் கூட தமிழகத்தில் 20 தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்ல வேண்டும். இது உண்மையென்றால் பொன் இராதாகிருஷ்ணனுக்கோ, இல.கணேசனுக்கோ பைத்தியம் பிடித்து விடாதா? விகடன் ரீல் விடுவதில் கூட ஒரு ‘நாகரிகத்தை’ கடைபிடிக்க தயாரில்லை. வாசகர்களை காட்டுமிராண்டிகளாக கருதும் போது அங்கே நாகரிகம் ஏது, நரம்போடு பேசும் நாக்கு ஏது?
இந்த முக்கிய கேள்விகளைத் தாண்டி ஜூவி தயாரித்திருக்கும் மற்ற பொருளாதார, வாழ்க்கை பிரச்சினை குறித்த கேள்விகளும் கூட மறைமுகமாக பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றே யதார்த்தமாக புனையப்பட்டிருக்கிறது. ஐந்தாண்டு மத்திய அரசில் விவசாயம் வளர்ச்சி எப்படி எனும் கேள்விக்கு வளர்ச்சி, மோசம், அப்படியே உள்ளது எனும் பதில்களை வைத்தால் மக்கள் மோசமென்றுதான் பதிலளிப்பார்கள். சரி, வாஜ்பாயி ஆட்சியில் இதே கேள்வி கேட்டாலும் மக்கள் மாற்றி கூறுவார்களா?
இன்னும் திமுக, அதிமுக ஆட்சிகளிலும் இதுவேதான். இருப்பினும் மத்தியில் ஆளும் கட்சிக்கு மாநிலத்தில் எதிர்ப்பலை இருப்பதாக படித்த நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திற்கு புகட்ட நினைக்கிறது ஜூ.வி. இதற்குத்தான் இந்த நாட்டுப்புறக் கண்ணீர்.
சரி இதே விவசாயத்தை சீரழித்திருப்பதற்கு மாநில அரசுக்கு பங்கில்லையா? என்று ஜூவி கேட்கவில்லை. அடுத்து மாநிலத்தை ஆளும் அதிமுகவிற்கு, வாக்குகள் போடும் மனநிலையில் மக்கள் இல்லை என்று காட்ட நினைக்கிறது ஜூ.வி. குடிநீர், கழிப்பறை, போக்குவரத்து, சாலை, கல்வி அடிப்படை தேவைகள் எப்படி எனும் கேள்விக்கு நிறைவேறியிருக்கிறது, நிறைவேறவில்லை, அப்படியே இருக்கிறது என்று பதில்களை வைத்தால் மக்கள் கண்ணை மூடிக் கொண்டு இல்லை என்றோ, மாற்றமில்லை என்றோ கூறுவார்கள். முக்கியமாக பாராளுமன்ற தேர்தலுக்கு குடிநீர், கழிப்பறை போன்ற கேள்விகள் எதற்கு? கவுன்சிலர் அல்லது ஊராட்சி வேலைகளை எப்படி பாராளுமன்ற உறுப்பினர் செய்ய முடியும்?
அதிமுக மேல் மக்கள் நாட்டத்துடன் இல்லை என்பதால் உங்கள் பொன்னான வாக்குகளை மறந்து, மயங்கி இலைக்கு போடாமல் பாஜக கூட்டணிக்கு போடுங்கள் என்று நடுத்தர வர்க்கத்திற்கு மறைமுகமாக உத்திரவு போடுகிறது ஜூ.வி. இதே போல மின்வெட்டு கேள்வியும் இருக்கிறது. திருமாவேலன் மனது விரும்பியபடி மோடி ஆட்சி அமைத்து விட்டால் தமிழகத்தில் மின்வெட்டு தீர்ந்து விடுமா? தீராது என்று விகடனுக்கு மட்டுமல்ல, விகடனை வாங்கி படிக்கும் வாசகர்களுக்கும் தெரியும். இருப்பினும் மின்வெட்டு குறித்த மக்களின் அதிருப்தியை வைத்து பாஜகவிற்கு ஆதாயம் தேடத்துடிக்கிறது விகடன் குழுமம்.
அதிமுக மேல் மக்கள் நாட்டத்துடன் இல்லை என்பதால் உங்கள் பொன்னான வாக்குகளை மறந்து, மயங்கி இலைக்கு போடாமல் பாஜக கூட்டணிக்கு போடுங்கள் என்று நடுத்தர வர்க்கத்திற்கு மறைமுகமாக உத்திரவு போடுகிறது ஜூ.வி
இதே கேள்வியை மாற்றிப் போட்டு மோடி ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் மின்வெட்டு தீரும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டால் மக்கள் என்ன கூறுவார்கள்? அல்லது பச்சமுத்து, ஏசி சண்முகம், விஜயகாந்த் போன்ற சுயநிதிக் கல்லூரிகளை நடத்தும் கல்வி முதலாளிகளைக் கொண்ட பாஜக கூட்டணி, கிராமப்புறத்தில் கல்வி வசதி கொண்டு வரும் என்று நம்புகிறீர்களா? என்று கூட கேட்கலாமே திருமாவேலன்? பதில்களை முடிவு செய்து கேள்விகளின் வரம்பை குறுக்கி கேட்டால் எல்லா கணிப்பையும் கணினியே செய்து விடுமே?
ஓட்டுக்காக பணம் கொடுத்தால்? என்று கேட்டு விட்டு வாங்குவேன், வாங்க மாட்டேன், வாங்கி விட்டு பிடித்த கட்சிக்கு போடுவேன் என்று பதில்களை வைத்திருக்கிறார்கள். இதன்படி வாங்க மாட்டேன் என்று பாதிக்கும் மேற்பட்டோரும், முப்பது சதவீதம் பேர் வாங்கிவிட்டு பிடித்த கட்சிக்கு போடுவேன் என்றும் கூறியிருக்கிறார்கள். அதாவது அதிமுக மற்றும் திமுக அதிகம் பணம் கொடுத்தாலும் அது பாஜக வெற்றியை பாதிக்காது என்று மயிலாப்பூர் பார்த்தசாரதிகளுக்கு ஆறுதல் சொல்கிறது ஜூவி. இதே பதில்களில் பணம் வாங்கிக் கொண்டு இன்னொரு கட்சிக்கு மாற்றி வாக்களிக்கும் நன்றி கெட்டத்தனம் எனக்கில்லை என்று வைத்தால் மக்கள் இதைத்தானே அதிகம் ஏற்பார்கள்?
இவர்களது நரி மூளையை அறுவை சிகிச்சை செய்து பார்ப்பதற்கு இங்கு யாருக்கும் அறிவில்லை என்று விகடன் முதலாளிகளும், ஆசிரியர்களும் எகத்தாளமாக நினைத்திருக்கிறார்கள். விகடனது இந்த பகிரங்கமான மோடி ஆதரவு என்பது வெறுமனே அதன் ஆசிரியர்களோடு முடிந்து விடும் விசயமல்ல. விகடன் முதலாளிகளும் சேர்ந்துதான் இப்படி ஒரு ஊடக யாகத்தை சிரமேற்கொண்டு வருகிறார்கள்.
ஜூவி இதழில் சில மாதங்களாக “மகாத்மா முதல் மன்மோகன் வரை!” எனும் தொடர் வருகிறது. இதை தேசபக்தன் எனும் புனைபெயரில் எழுதுவது, ஜூவியின் ஆசிரயரோ, இல்லை ஆசிரியர்கள் பெயரில் எழுதும் கோஸ்ட் ரைட்டர்களோ தெரியவில்லை. ஆனால் இந்த தொடர் காங்கிரசு கட்சி மேல் வெறுப்பை வரவழைத்து பாஜகவிற்கு செல்வாக்கை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காவே திரைக்கதை எழுதி தயாரிக்கப்பட்டிருக்கிறது.
காங்கிரசின் ஊழல்களை அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை அம்பலப்படுத்தும் ஜூவி, “காந்தி கொலை முதல் குஜராத் கொலை வரை” என்று காவிக் கூட்டத்தின் கொலைகார வரலாற்றை இன்னொரு தொடராக எழுதியிருந்தால் அதன் நடுநிலைமையை மெச்சியிருக்கலாம். மாறாக தேர்தல் காலத்தில் மோடியின் இமேஜுக்காக மட்டுமே காங்கிரசு பெருச்சாளியின் ஊழல்களை பேசுகிறது என்றால் என்ன பொருள்?
அதே போன்று இதே இதழில் வைகோவின் விருதுநகர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்திற்கு, மூன்று பக்கத்தை ஒதுக்கியிருக்கிறது ஜூ.வி. டாஸ்மாக்கை மூட வேண்டுமென்று பாதயாத்திரை சென்ற வைகோ அதில் கட்சிக்கொடி, சின்னம் இல்லாமல் அரசியல் நோக்கமில்லாமல் சென்றதை பேசுகிறார். ஆனால் இந்த அரசியல் அற்ற நோக்கத்தை தேர்தல் கூட்டமொன்றில் வாக்களிக்க வேண்டும் என்ற அரசியல் நோக்கத்திற்காக அவர் பகிரங்கமாக பேசுவதை ஒரு பத்திரிகை என்ற முறையில் கண்டித்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் எப்படியாவது அவருக்கு வாக்களியுங்கள் என்று கேட்காத குறையாக இருக்கிறது ஜூவியின் அந்த கவரேஜ்.
பாஜக கூட்டணி முடிவாவதற்கு முன்னர் இவர்கள் விஜயகாந்தை மிரட்டியது, அதற்கென்றே சர்வேக்களை வெளியிட்டதையெல்லாம் சென்ற முறை எழுதியிருந்தோம். இப்போது கூட்டணியை எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நிலை வந்துவிட்டதால் மற்ற கூட்டணிக் கட்சிகள் குறித்து கிண்டலாகவும், எதிர்மறையிலும் எழுதும் ஜூவி, பாஜக கூட்டணிகளை மட்டும் மானே, தேனே போட்டு எழுதுகிறது.
“வெற்றி தோல்வியை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை!” என்று சிபிஐ மகேந்திரன் பேட்டியைக் வெளியிட்டிருக்கும் ஜூவியின் நோக்கம் என்ன? எதற்கு அந்த கட்சிக்கு விரயமாக ஓட்டு போடுகிறீர்கள் என்பதே. இப்படித்தான் முழு ஜூவியும் தந்திரமான முறையில் ஆனால் எளிதில் கண்டுபிடிக்க முடியும் மலினமான முறையில் பாஜக ஆதரவைப் பேசுகிறது.
இதற்காக இவர்கள் அம்மாவையும் நாசுக்காக கண்டித்து எழுத தயங்குவதில்லை. முந்தைய ஆனந்த விகடன் இதழில் அம்மா சொல்லும் வாக்குறுதிகளெல்லாம் சும்மா என்று ஜெயாவின் வரலாறு, உரைகளை வைத்தே திருமாவேலன் எழுதியிருந்தார். பாஜகவிற்காக ஜெயாவை செல்லமாக கண்டிக்கும் நிலையினை தினமலரும் கூட செய்து வருகிறது. ஜெயாவே கூட மோடியையும், பாஜகவையும் விமரிசிக்காமல் பேசி வருவதன் காரணம் தேர்தலுக்கு பிறகு மோடியின் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்பதே. அந்த காரணத்தை வைத்துக் கொண்டே ஜூவி போன்ற தரகு வீரர்கள் அம்மாவையும் ‘தைரியமாக’ எதிர்க்கிறார்கள். ஆனால் என்ன, இதற்கும் அம்மா ஆசி இருக்கிறதே என்ன செய்ய!
நக்கீரன் திமுக ஆதரவு ஏடு, துக்ளக் அதிமுக ஆதரவு ஏடு போன்ற கட்சி சார்பு இல்லாமல் நடுநிலைமை என்ற பெயரில் உலா வரும் விகடன் குழுமம் இந்த தேர்தலில் அப்பட்டமான காவி ஆதரவு வேலையை செய்து வருகிறது. தற்போது குஜராத்தில் ஜூவி என்ற தொடரையும் தேர்தல் கருதி வெளியிட்டு வருகிறார்கள். மேலோட்டமாக மோடியை பற்றி விமரிசனங்கள் சிலவற்றை வைத்துக் கொண்டு, ஆழமாக மோடியை பூதாகரமாக ஆதரிக்கும் இந்த தொடர் ஒன்றே ஜூவியின் நோக்கத்தை கூறிவிடும்.
விகடன் ஏடுகளை அப்பாவித்தனமாக வாங்கி படிக்கும் வாசகர்கள், தாம் இத்தனை மலிவாக ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர வேண்டும். வாசகர்களிடம் விலையையும், முதலாளிகளிடம் விளம்பரத்தையும் வாங்கிக் கொண்டு பத்திரிகை நடத்தும் இவர்களுக்கு என்று எந்த அறமும், நடுநிலைமையும் எப்போதும் இருந்தது கிடையாது.
இந்திய ராஜபக்சே மோடியின் தமிழக ஊடக துதிபாடியாக இருக்கும் விகடனை கண்டியுங்கள்!
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன்(டிசி)-க்கும் உக்ரைன் தலைநகர் கீவ்-க்கும் இடையேயான தூரம் 7,800 கிலோமீட்டர். இருப்பினும் இவ்வளவு தொலைவில் நடக்கும் பிரச்சனைகளுக்கு அமெரிக்க அரசு குய்யோ முய்யோவென பறக்கிறது. அமெரிக்க அதிபர் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து அணி திரட்டுகிறார், சவுதி அரேபியாவுக்கு போய் ஷேக்குகளின் பண மூட்டையையும் உத்தரவாதப் படுத்திக் கொள்கிறார்.
சவுதி அரேபியாவுக்கு போய் ஷேக்குகளின் பண மூட்டையையும் உத்தரவாதப் படுத்திக் கொள்ளும் ஒபாமா.
என்ன நடக்கிறது?
‘உலகத்தில் எங்கெல்லாம் ‘தரும’த்தின் தடம் எப்போதெல்லாம் மறையத் தொடங்குகிறதோ, அப்போதெல்லாம் அங்கு நான் வருவேன்’ என்பதுதான் அமெரிக்காவின் ஏகாதிபத்திய கீதை. அப்படி ஒரு புனித கடமையுடன் அமெரிக்க குடியரசு ஏற்படுத்தப்பட்டதாக அந்நாட்டு ஆளும் வர்க்கங்கள் எப்போதும் ஜபித்து வருகின்றன. பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காக தோற்றுவிக்கப்பட்ட அந்த தருமம் எப்போதும் ஓய்வதில்லை.
“படையெடுப்புகள் மூலம் நாடுகளின் எல்லைகளை மாற்றக் கூடாது, பன்னாட்டு சட்டங்களை மதிக்க வேண்டும், ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் எதிர்காலத்தை தாமே தீர்மானிக்க உரிமை உண்டு போன்ற ஐரோப்பிய நாடுகள் அனைவரும் ஏற்றுக் கொண்ட அறங்களை ரசியா உடைத்திருக்கிறது” என்கிறார் ஒபாமா.
ஆனால், அமெரிக்க ஆதரவு கட்சிகளால் பதவி இறக்கப்பட்ட உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச் 2009-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவர். உக்ரைன் மக்களின் பிரதிநிதி என்ற முறையில் உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைக்கும் ஒப்பந்தத்தை நிராகரித்து ரசிய ஆதரவு நிலையை அவர் எடுத்திருந்தார். இப்படி உக்ரைன் மக்கள் தமது எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களது பிரதிநிதி மூலம் தீர்மானிப்பது விரோதமானது என்று முடிவு செய்த அமெரிக்கா ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு அளித்தது. இதுதான் பன்னாட்டு சட்டங்களையும், ஜனநாயகத்தையும் அமெரிக்கா மதிக்கும் இலட்சணம்.
உக்ரைன் நெருக்கடியை பற்றி எழுதும் நியூஆர்க்கின் ரட்கர்ஸ் பல்கலைக் கழக பேராசிரியரான அலக்சாண்டர் மோடில் “உக்ரைன், போஸ்னியா, தாய்லாந்து, வெனிசுலா முதலான பல நாடுகளில் பெரும்பான்மையினரின் ஆட்சி என்ற பொருளிலான ஜனநாயகத்தை ‘மக்கள்’ விரும்பவில்லை. நடுத்தர வர்க்கங்கள் தமது ஒளிமயமான எதிர்காலத்தை தடுத்து வைத்துக் கொண்டிருக்கும் ஊழல் அரசுகள் என்று தாம் கருதுபவற்றை எதிர்த்து போராடுகிறார்கள்” என்று நடுத்தர வர்க்கத்தை பாசிசமயப்படுத்தும் ‘ஜனநாயகத்தை’யே அமெரிக்கா ஆதரிக்கிறது என்று குறிப்பிடுகிறார்.
அமெரிக்கா ஆதரித்த சிலி ராணுவ சர்வாதிகாரி ஜெனரல் பினோசெட்
யனுகோவிச் அரசை எதிர்த்து போராடிய, பாசிச கட்சிகள் உள்ளிட்ட நடுத்தர வர்க்க சிறுபான்மைக்கு, அமெரிக்கா நிதி உதவியும், அரசியல் ஆதரவும் கொடுத்து ஊக்குவித்தது. 4 மாத தெரு போராட்டங்களுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் நடந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவான தரப்பு ஆட்சியைப் பிடித்தது.
மொத்தத்தில் அமெரிக்கா முன் வைக்கும் பொருளாதார பாதையை ஏற்றுக் கொண்ட கட்சிகளை ஒரு நாட்டின் மக்கள் பெரும்பான்மை ஆதரவுடன் தேர்ந்தெடுத்து விட்டால் பிரச்சனையில்லை. இல்லா விட்டால், அமெரிக்க உளவுத் துறை, அமெரிக்க நிதி பெறும் தொண்டு நிறுவனங்கள் ஆதரவுடன் சிறுபான்மை நடுத்தர வர்க்க மக்கள் ஊழலை எதிர்த்து போராடி ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவார்கள். இரண்டும் நடக்கவில்லை என்றால் அமெரிக்க ராணுவம் இருக்கவே இருக்கிறது.
ஈரானில் 1951-ம் ஆண்டு பெட்ரோலிய துறையை நாட்டுடைமையாக்கிய பிரதமர் முகமது மொசாதின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து தனது தனது கைப்பாவையாகிய ஷாவின் ஆட்சியை ஏற்படுத்தியது. அதே போல 1973-ல் தென் அமெரிக்க நாடான சிலியில் ஜனநாயக முறையில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சோசலிஸ்டு பிரதமர் சால்வடார் அலண்டே சிலியின் சுரங்கங்களை நாட்டுடமை ஆக்கியதைத் தொடர்ந்து அவரைக் கொன்று ஜெனரல் பினோசெட்டை ராணுவ சர்வாதிகாரியாக ஆட்சியில் அமர்த்தியது அமெரிக்கா. 1980-களில் ஈரானுக்கு எதிரான போரில் தான் ஆதரவளித்த சதாம் உசைனை 1990-களில் ஈராக் மக்கள் கலவரம் செய்து பதவி இறக்க முன் வராமல் போகவே, 2002-ல் தனது இராணுவத்தை அனுப்பி ஆட்சி மாற்றத்தை நடத்தியது. அமெரிக்க ‘ஜனநாயக’த்துக்கான சேவையெனும் பெயரில் அமெரிக்க ஆதிக்கம் தொடர்ந்து நடக்கிறது. இது போன்று பல டஜன் சர்வாதிகார ஆட்சிகளை உலக நாடுகளில் தூக்கிப் பிடித்து வந்திருக்கிறது அமெரிக்கா.
அதாவது, அமெரிக்க முதலாளிகளின் நலன்களை பாதுகாக்கும் சக்திகள் அதிகாரத்தில் நீடிக்கும் வரையில் ஒரு ஆட்சி நீடிக்கலாம் என்பதே அமெரிக்காவின் அறம். இதற்கு மனிதாபிமானம், ஜனநாயகம், சுதந்திர சந்தை, கம்யூனிச எதிர்ப்பு என்று பல பெயர்கள் சூட்டினாலும் சாராம்சம் ஒன்றுதான். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்கு எங்கெல்லாம் தீங்கு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் அமெரிக்காவின் நிதி, அரசியல், ராணுவ கரங்கள் நீளும் என்பதுதான் கொள்கை.
1990-களில் சமூக ஏகாதிபத்தியமான சோவியத் யூனியன் உடைந்து 15 குடியரசுகளாக பிளவுபட்ட போது, ரசியாவில் அதிகாரத்துக்கு வந்த ரசிய முதலாளிகள், ரசிய மக்களையும், அண்டை குடியரசுகளையும் சுரண்டி தாம் கொழுக்க அமெரிக்க பாணி ஜனநாயகம் வந்து விட்டதாக கொண்டாடினார்கள். ஆனால், அமெரிக்காவோ தனது ஆதிக்கத்தை ரசிய செல்வாக்குப் பகுதியாக இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு நீட்டியதோடு நில்லாமல், முன்னாள் சோவியத் குடியரசுகளையும் ஐரோப்பிய பொருளாதார ஒன்றியத்துக்குள்ளும், நேட்டோ இராணுவ கூட்டணிக்குள்ளும் இழுக்க ஆரம்பித்தது. இப்போது அதன் ஆதிக்கம் ரசியாவின் கொல்லைப்புறமான உக்ரைன் வரை நீண்டிருக்கிறது.
உக்ரைன், கிரீமியா,ரசியா வரைபடம்.
ரசிய ஆளும் வர்க்கத்திற்கு பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உக்ரைன் ஆதாரமான பகுதியாக உள்ளது. ரசியாவின் இயற்கை எரிவாயு குழாய்கள் உக்ரைன் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றன. உக்ரைனின் வளமான விவசாய நிலங்கள் முழுமையாக மேற்கத்திய கட்டுப்பாட்டில் போவதை ரசியா ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
மேற்கத்திய ஆதரவு சக்திகள் அதிகாரத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து உக்ரைனின் தென்கிழக்கில் ரசியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியான கிரீமியா சுயாட்சி பகுதி உக்ரைனிலிருந்து பிரிந்து ரசியாவுடன் சேர்வதற்கான கருத்துக் கணிப்பை நடத்தியது. அதில் 96.7% மக்கள் ரசியாவுடன் சேர்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர். பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற இந்த முடிவு உக்ரைனின் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அமெரிக்கா எதிர்க்கிறது.
ரசியா கிரீமியாவுக்குள் தன் படைகளை அனுப்பி அதன் மீது தனது ஆதிக்கத்தை ரத்தம் சிந்தாமல் நிறுவியிருக்கிறது. கிரீமியாவில் நிறுத்தப்பட்டிருந்த உக்ரைன் கடற்படை கப்பல்களை ரசியப் படைகள் கைப்பற்றி உக்ரைன் வீரர்களை தலைநகர் கீவுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். உக்ரைனுடனான தனது எல்லையில் படைகளை தொடர்ந்து குவித்து வருகிறது.
இதைக் கண்டித்து மேற்கத்திய நாடுகள் ரசியாவையும் சேர்த்து ஜி-8 என்ற வல்லரசுகள் கிளப்பிலிருந்து ரசியாவை நீக்கி அதை ஜி-7 ஆக மாற்றியிருக்கிறார்கள். ஜூன் மாதம் சோச்சியில் நடைபெறவிருந்த ஜி-8 உச்சிமாநாட்டை ரத்து செய்து, அதை ஜி-7 மாநாடாக பிரஸ்ஸல்சில் நடத்தப் போவதாக அறிவிக்கிப்பட்டது.
“ரசியா சோச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி சம்பாதித்துக் கொண்ட பன்னாட்டு நல்லெண்ணத்தை இழந்து விட்டிருக்கிறது. அதே சோச்சியில் ஜி-8 மாநாடு நடத்துவதை ரத்து செய்வதன் மூலம் ரசியாவை தண்டித்திருக்கிறோம்” என்று ‘போர்ப்பிரகடனம்’ செய்திருக்கிறார் ஒபாமா. அமெரிக்கா வகுத்த விதிகளுக்கு அடங்கி இருக்கும் நாடுகள் மட்டும்தான் இந்த வல்லரசுகளின் குழுமத்தில் இருக்க முடியும் என்று இதற்கு பொருள்.
“பல பத்தாண்டுகளாக சோவியத் யூனியனுடன் நடத்திய போட்டியில் நாம் வெற்றி பெற்றோம். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு நாம் நமது எச்சரிக்கையை தளர்த்திக் கொண்டதால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது” என்று எச்சரித்திருக்கிறார் ஒபாமா. 20-ம் நூற்றாண்டில் உலகளாவிய தனது மேலாதிக்கத்துக்கு தடையாக இருந்த சோசலிச நாடுகளுக்கு எதிராகவும், மூன்றாம் உலக நாடுகளில் தனது நலன்களுக்கு எதிரான தேசிய விடுதலை போராட்டங்களை ஒடுக்கி சர்வாதிகாரிகளை ஆட்சியில் அமர்த்தவும், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற சக வல்லரசுகளின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தவும் நடத்திய போட்டியைத்தான் ஒபாமா குறிப்பிடுகிறார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா
ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் சில ரசிய அரசு தலைவர்கள் மீது பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதித்திருக்கின்றன.
ரசியா ஏற்கனவே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் உக்ரைன் பகுதியான கிரீமியாவைத் தாண்டி கிழக்கு அல்லது மேற்கு உக்ரைனுக்குள் படைகளை அனுப்ப முயன்றால் எரிசக்தித் துறை, ஆயுதத் துறை, நிதி சேவைகள் மற்றும் வர்த்தகத் துறைகளில் இன்னும் கடுமையான, விரிவான பொருளாதாரத் தடைகளை விரிக்கத் தயங்க மாட்டோம் என்று அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் எச்சரித்திருக்கின்றன.
ஜி-8 விளையாட்டிலிருந்து விலக்கி வைப்பது, எச்சரிக்கை விடுப்பது, ஒரு சில நபர்களை தமது நாட்டுக்கு வர அனுமதி மறுக்கும் தடை போன்ற நடவடிக்கைகள் ரசியா மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தா விட்டாலும் இவற்றைத் தாண்டி இதை விட காட்டமான முறையில் ரசியாவுக்கு நெருக்கடி கொடுக்க முடியாத நிலையில் இப்போது அமெரிக்கா உள்ளது.
முதலாவதாக, முன்னாள் சோவியத் யூனியனின் வாரிசாக ஐ.நா பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர உறுப்பினர் தகுதி, அங்கீகரிக்கப்பட்ட அணு ஆயுதங்கள், அமெரிக்கா வரை பாய்ந்து தாக்கக் கூடிய ஏவுகணைகள் போன்ற கூர்மையான பற்கள் ரசியாவிடம் இருப்பதால் ராணுவ ரீதியில் தாக்கி அடிபணிய வைக்க முடியாத நிலை உள்ளது.
இரண்டாவதாக, ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்காவுக்கு பெருமளவு இழப்புகளை ஏற்படுத்திய ஆக்கிரமிப்பு போர்களைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகளை புதியதொரு ஆக்கிரமிப்பு போருக்கு அனுப்புவதற்கு பெரும்பான்மை அமெரிக்க மக்களிடையே ஆதரவு இல்லை. அமெரிக்காவில் நடந்த கருத்துக் கணிப்பு ஒன்றில் 80% மக்கள் அமெரிக்கா ராணுவ ரீதியாக உக்ரைனில் தலையிடுவதை எதிர்த்துள்ளனர்.
மூன்றாவதாக, ஐரோப்பிய நாடுகள் தமது எரிசக்தி தேவைகளுக்கு ரசியாவின் இயற்கை வாயுவை சார்ந்து இருப்பதால் ரசியாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்தால் ரசிய எரிவாயு வழங்கல் தடைப்பட்டு நெருக்கடி ஏற்படும் என்று பயப்படுகின்றன.
கிரீமியாவில் படைகள்
மேலும் அமெரிக்க ஆதிக்கம் ஐரோப்பாவுக்குள் மேலும் அதிகரித்து தமது செல்வாக்கு குறைவதை ஐரோப்பிய வல்லரசுகள் விரும்பவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின் தமது காலனி பகுதிகளை இழந்த முன்னாள் ஏகாதிபத்தியங்களில் இங்கிலாந்து அமெரிக்காவின் அடிவருடியாகி விட, பிரான்ஸ் ஐரோப்பாவுக்குள் அமெரிக்க ஆதிக்கத்தை மட்டுப்படுத்த முயற்சிக்கிறது. பொருளாதார ரீதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சக்தி வாய்ந்த நாடான ஜெர்மனி தனது செல்வாக்கு மண்டலத்துக்குள் அமெரிக்காவின் ஆதிக்கத்தை வரம்புக்குள் வைத்திருக்கவே விரும்புகிறது.
எனவே, உக்ரைன் எல்லையில் ரசிய படை குவிப்பை குறித்து கருத்து சொன்ன ஒபாமா “தனது எல்லைக்குள் படைகளை நிறுத்திக் கொள்ள ரசியாவுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அதைத் தாண்டி வரக் கூடாது” என்று எச்சரித்திருக்கிறார்.
ரசியாவும் மேற்கத்திய நாடுகளை ஒரு அளவுக்கு மேல் முறைத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது. பொருளாதார ரீதியாக மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுடன் பிணைக்கப்பட்டிருக்கும் ரசியா தீவிரமான பொருளாதார தடைகளை எதிர் கொள்ளத் தயாராக இல்லை. அதனுடைய பொருளாதாரம் வளர்ந்து வந்தாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு சவால் விடுமளவு இல்லை. கிரீமிய நெருக்கடியைத் தொடர்ந்து இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் $70 பில்லியன் மதிப்பிலான அன்னிய முதலீடு ரசியாவிலிருந்து போயிருக்கிறது என்று ரசியாவின் பொருளாதார துணை அமைச்சர் புலம்பியிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 29-ம் தேதி ஒபாமாவும் புடினும் 1 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கின்றனர். ரசியா படைக்குவியலை நிறுத்த வேண்டும், கிரீமியாவிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும், உக்ரைனில் ரசிய மொழி பேசும் மக்களுக்கு பாதுகாப்பு தருவது இவை குறித்து அவர்கள் விவாதித்தாக செய்தி வெளியிடப்பட்டது.
ராணுவ ரீதியாக ரசியாவை விட்டு வைத்தாலும், தான்தான் உலக தாதா என்று ஒபாமா தெளிவுபடுத்தியிருக்கிறார்.
“ரசியா ஒரு பிராந்திய சக்தி மட்டுமே, எங்கள் உலகளாவிய செல்வாக்கை எதிர்த்து ரசியா போட்டியிட முடியாது” என்றும் “ரசியா பலவீன நிலையிலிருந்து தனது அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. வலிமையின் அடிப்படையில் அல்ல.” என்றும் இதை விளக்கியிருக்கிறார் ஒபாமா. ‘உங்க பேட்டைக்குள்ள மட்டும் உன் அதிகாரத்தை வெச்சிக்கோ, உலகம் முழுக்க நான்தான் ரவுடி’ என்கிறார் அவர்.
ஈராக்குக்கு தனது படைகளை அனுப்பிய அமெரிக்கா “ஈராக் பகுதிகளை இணைக்கவோ, அதன் வளங்களை தனது பயன்பாட்டுக்கு அள்ளவோ செய்யவில்லை” என்று சிரிக்காமல் ரசியாவுக்கு நல்லொழுக்க பாடம் எடுக்கிறார் ஒபாமா.
ராணுவத்தை அனுப்பாமலேயே பிற நாடுகள் மீது எப்படி ஆதிக்கம் செலுத்துவது என்பதையும் ஒபாமா விளக்கியிருக்கிறார். “அமெரிக்காவும் தனது அண்டை நாடுகள் மீது கணிசமான ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால், அவர்களுடன் வலிமையான உறவை பராமரிக்க ராணுவ ரீதியாக ஆக்கிரமிப்பு நடத்துவது இல்லை” என்று அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக் கொள்கை இராணுவ வலிமையோடும், அதன் தயவில் இராணுவமற்ற முறையிலும் நிலவுவதை விளக்குகிறார் அதிபர் ஒபாமா.
புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் உக்ரைன் இடைக்கால அரசோ ஐ.எம்.எஃப் கடன் உதவியை கோரியிருக்கிறது. அந்த கடனுடன் சேர்ந்து வரும் பொருளாதார நிபந்தனைகளுக்கு நாட்டை உட்படுத்தி உக்ரைன் பொருளாதாரத்தை மேற்கத்திய கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்துக்கு சமர்ப்பித்திருக்கிறது.
அமெரிக்காவின் அண்டை நாடுகள், ஈராக், உக்ரைன் மட்டுமின்றி இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் அனைத்தின் மீதும் ஐ.எம்.எஃப்/உலக வங்கி மூலம் கொடுப்பது, நிதித்துறையை உலகமயமாக்கி கட்டுப்படுத்துவது, வர்த்தக சந்தையை திறந்து விட்டு அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை உறுதி செய்வது என்று தனது ஏகாதிபத்திய ஆதிக்கத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது அமெரிக்கா. பொருளாதார ஆதிக்க நடவடிக்கைகளுக்கு அடிபணிய மறுக்கும் நாடுகளைப் பணிய வைப்பதற்காக தனது ராணுவத்தின் உலகளாவிய தாக்கும் சக்திகளை வளர்த்துக் கொண்டே போகிறது.
தற்போது உலகின் இயற்கை வளங்கள், உற்பத்தி சாதனங்கள் மற்றும் சந்தைகளை சில நூறு பெரு நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. முதலீட்டின் மீதான லாபத்திற்கான போட்டிதான் முடிவுகளை தீர்மானிக்கின்றது. வெவ்வேறு நிறுவனங்கள் சந்தையை தமக்குள் பங்கு போட போட்டியிடுகின்றன. சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களால் விழுங்கப்படுகின்றன.
உதாரணமாக, 1990-களில் கணினி இயங்குதளம் தயாரிக்கும் சந்தையில் நுழைந்த மைக்ரோசாப்ட், இயங்கு தள சந்தையில் ஏகபோகத்தை நிறுவிய பின், இயங்கு தளத்தில் மட்டுமின்றி அலுவலக மென்பொருள் சந்தையிலும் போட்டியாளர்களை ஒழித்துக் கட்டி தனது ஏகபோகத்தை நிறுவிக் கொண்டு அடுத்தடுத்த சந்தைகளில் விரிவாக்க முயற்சித்தது. அதன் முயற்சியை ஐ.பி.எம், ஆப்பிள் முதலான மற்ற பெரு நிறுவனங்கள் சட்ட ரீதியாகவும், பிற தொழில்நுட்ப முறைகளிலும் தடுத்து நிறுத்த முயற்சித்தன.
நவீன முதலாளித்துவத்தின் பெரிதும் மெச்சிக் கொள்ளப்படும் போட்டி என்பது இல்லாமல் ஒழிக்கப்பட்டோ, 2 முதல் 3 பெரு நிறுவனங்கள் மற்ற சிறு நிறுவனங்கள் அனைத்தையும் விழுங்கி சந்தையை தமக்குள் பங்கிட்டுக் கொள்வதாகவோ முடிகிறது. பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் முதலான சமூக வலைத்தள சேவைகள் உட்பட 46 நிறுவனங்களை வாங்கி விரிவாகிக் கொண்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
100 அடிமைகளை வைத்திருக்கும் ஆண்டான், 200 அடிமைகளை வைத்திருக்கும் ஆண்டானுடன் அடிமைகளை நியாயமாக பங்கிடக் கோரி நடத்துவதுதான் உலகப் போர் – லெனின்.
கார்ப்பரேட்டுகள் வளர வளர சொந்த நாட்டில் மட்டுமல்லாமல் இயற்கை வளங்கள், மலிவான உழைப்பு, மற்றும் சந்தைக்காக உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டியிருக்கிறது.
இந்தப் போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலாளிகள், தமது உலகளாவிய விரிவாக்கத்துக்கு துணையாக தத்தமது நாட்டு அரசுகளை பயன்படுத்திக் கொள்கின்றன. ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகள் தமது சந்தை நலன்களை விரிவாக்கவும், பாதுகாத்துக் கொள்ளவும் செல்வாக்கு மண்டலங்களை உருவாக்குவதற்கான போட்டியில் இறங்குகிறார்கள்.
100 அடிமைகளை வைத்திருக்கும் ஆண்டான், 200 அடிமைகளை வைத்திருக்கும் ஆண்டானுடன் அடிமைகளை நியாயமாக பங்கிடக் கோரி நடத்துவதுதான் உலகப் போர் என்று முதல் உலகப் போர் குறித்து லெனின் வர்ணித்தார்.
இன்றைய ஒற்றைத் துருவ வல்லரசான அமெரிக்காவின் நிழலில் ஓய்ந்திருந்தாலும் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மேற்கத்திய வல்லரசுகள் அமெரிக்காவோடு முரண்படாமல் இல்லை. கிழக்கில் ஜப்பான் நலிந்திருந்தாலும் போட்டியில் இருந்து விலகி விடவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் புதிய போட்டியாளராக உருவெடுத்திருக்கும் ரசியா ஏற்கனவே ஆயுத வலிமையில் அமெரிக்காவோடு போட்டி போடுவதால் தற்போது அந்த முரண்பாடு விரியத் துவங்கியிருக்கிறது. இந்த வல்லரசு நாடுகளின் போட்டியில் சிக்கிக் கொண்டு உலக நாடுகளும், மக்களும் சுரண்டப்படுவதோடு, போர் அழிவுகளையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.
மேல் நிலை வல்லரசுகளுக்கிடையே முரண்பாடு வளர்வதையே உக்ரைன் பிரச்சினை தெளிவாக்கியிருக்கிறது. இந்த முரண்பாட்டை பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் பாட்டாளி வர்க்கம் பலமாக இல்லை என்பதோடு சோவியத் முகாம் என்ற ஒன்றும் இப்போது இல்லை. பாட்டாளி வர்க்கம் செல்வாக்கு அடையும் போதுதான் அமெரிக்கா மற்றும் இதர மேல் நிலை வல்லரசுகளின் கொட்டம் ஒடுக்கப்படும்.