privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்மோடி அலையில் மூச்சுத் திணறும் வைகோ !

மோடி அலையில் மூச்சுத் திணறும் வைகோ !

-

மிழக ஊடகங்களில் பெரும்பாலனவை அதிமுக, பாஜகவை ஆதரித்து செய்தியா, கருத்தா என்று இனம் காண முடியாத வகையில் எழுதி வருகின்றன. அம்மாவுக்கு வாக்கப்பட்ட குமுதம் தேர்தல் கணிப்பின் முதல் பகுதியை வெளியிட்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் அதிமுக வெல்லுமாம். அதே போல துக்ளக்கும் அதன் நிருபர்களை வைத்து தொகுதி நிலவரத்தை அதிமுகவிற்கு ஆதரவாக வெளியிடுகிறது.

பாஜக கூட்டணி
வைகோ, விஜயகாந்த், மோடி, ராமதாஸ்

இன்று வந்த ஜூவியில் தமிழருவி மணியன் ஐந்து பக்கத்தில் காங்கிரசுக்கு நீதி உபதேசம் செய்கிறார். அடுத்த ஜூவியில் பெண்கள் சர்வேயாம். கண்டிப்பாக மோடியும், பாஜகவும் முதல் இடத்தில் இருக்கும் என்பதை வரும் சனியன்று தெரிந்து கொள்ளலாம். மோடியை கைவிடாத துக்ளக், அம்மாவைதான் முதன்மைப்படுத்துகிறது. கிராமங்களில் மோடி அலை இல்லை என துக்ளக் செய்தியாளர்கள் எழுதுகிறார்கள். அப்படி மோடி அலை வீசுவதாக எழுதிய ஜூவியை விட சோ-தான் மோடியை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய முதல் பிரபலம் என்பது உண்மை.

“மக்கழே, மக்கழே” என்று எங்கே ஆரம்பித்தோம், எதில் முடிப்போம் என்று யாரும் ஊகித்தறியாதபடி விஜயகாந்த் த்ரில்லர் அரசியல் பேசுகிறார். வேட்பாளரை அறிமுகப்படுத்தும் போது “ஏம்பா உன் பேரென்ன” என்று எதார்த்தமாக மூன்று மைக்குகளை வைத்துக் கொண்டே கேட்கிறார். இரவில் யாரும் ஆதித்யா சேனலை பார்க்காமல் கேப்டன் டிவியை பார்த்து சிரிக்கிறார்களாம். கேப்டனை காமடியனாக அழகு பார்க்கும் ஊடகங்கள் எழுதி வைத்து ரம்பம் போல அறுக்கும் ஜெயாவை அப்படி காமடி செய்வதில்லை. அம்மா பயம் என்றால் சும்மாவா?

மதுரை ஆதீனம் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தை செய்து வருகிறார். அம்மா பிரதமராக ஆன பிறகு ஓபி முதலமைச்சராகவும் பிறகு ஓபியின் மகன் முதலமைச்சராக வருவார் எனவும் பேசுகிறாராம். இது உளவுத் துறை மூலம் அம்மா வசம் போனால் என்ன செய்வது என்று ஓபி மகன் திகிலில் இருக்கிறாராம். பிரச்சினைகள் ஆண்டைகள் மூலம்தான் வரவேண்டுமென்பதல்ல, அது மதுரை ஆதினம் போன்ற அடிமைகளின் மூலமும் வரலாம். ஆதீனத்தின் வளர்ப்பு வாரிசு நித்தியானந்தா ஏன் இன்னும் அம்மா புகழ் பாட வரவில்லை, தெரியவில்லை.

எனினும் நக்கீரன் இதழ் மட்டும் திமுக ஆதரவு கொண்ட ஒரே பத்திரிகையாக ‘உறுதி’யுடன் வெளிவருகிறது. அந்த வகையில் அந்த நிலையில் இருந்து பத்திரிகையை சமநிலை குன்றாமல் இருப்பது போல காட்டிக் கொண்டு நடத்துவது ‘பெரிய’ விசயம்தான். அதிமுக, பாஜக ஊடகங்கள் தமிழகத்தின் தேர்தல் வெற்றி குறித்து அவரவர் கட்சி சார்பில் மட்டையடியாக சொல்லும் போது நக்கீரன் 50-50 என்று சொல்ல வேண்டியிருக்கிறது. கூடவே அதன் நியாயங்களையும் தேடி யோசித்து எழுத வேண்டியிருக்கிறது. இதனாலேயே நக்கீரனது தேர்தல் செய்திகள் மற்ற ஊடகங்களை விட கொஞ்சம் யதார்த்தமாக இருக்கிறது.

வைகோ
பம்பரம் தாத்தா வைகோ

“பம்பரத் தாத்தா வர்றாருடோய்..- சிறுவர்களைக் கவரும் வைகோ” என்று இன்றைய நக்கீரன் இதழில் வந்திருக்கும் விருதுநகர் தேர்தல் செய்திகள் உண்மையில் ஒரு காவியத்தின் சுவை குன்றாத கலைத் தகுதியைக் கொண்டிருக்கிறது. இந்தத் தலைப்பை பார்த்தால் வைகோவே மகிழ்ச்சியடைவார். வருங்கால இளைய சமூகத்தின் மனதில் ஒரு தலைவர் அதுவும் அவர்களது விளையாட்டு பொருளால் நினைவு கூறப்படுவது யாருக்கும் கிடைக்காத பேறுதான்.

ஆனாலும் பம்பரம் சின்னம் பட்டியலிலேயே இல்லை, ஒரே சின்னத்தில் போட்டியிடும் அங்கீகாரமும் இல்லை என்ற ஒளியில் இத்தலைப்பு கொஞ்சம் சோகம் பெறுகிறது. வைகோவின் சந்தர்ப்பவாதமும், துரோகமும் கம்பீரமாக இல்லாமல் சோகத்துடனும், அவலத்துடனும்தான் வெளிப்பட வேண்டுமா என்பது இதுவரை தத்துவஞானம் விடை அறியாத கேள்வி.

விருதுநகர் தொகுதியின் எல்லா பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்திப்பது என்று வைகோ முடிவு செய்திருப்பது ஏதோ மக்கள் பால் உள்ள அன்பினால் மட்டுமல்ல. அப்படியாவது ஒரு சோக சிம்பதியை கிளப்பி வாக்குகள் ஏதும் தேறுமா என்ற வரலாற்றுக் கட்டாயத்தில் வைகோ இருக்கிறார். ‘மாவீரன்’ பிரபாகரனுடன் வன்னிக்காட்டில் புலிக் குட்டிகளுடன் விளையாடிய இந்த புயல் இன்று கரிசல் காட்டில் முள்ளுக் காட்டில் எல்லாம் சென்றாவது தினசரி ஓரிரு வாக்குகளை சேகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதைப் பார்த்தால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கண்ணீர் விடுவார்கள். வைகோவை இப்படி அனாதரவாய் சுற்ற விட்ட தமிழ்நாட்டு மக்களை திட்டி தீர்ப்பார்கள்.

அவரது வேனில் படுக்கை வசதிகளோடு டாய்லெட் வசதியும் இல்லை. இயற்கை உபாதைகளுக்கு கூட அவர் மக்களைப் போல முள்ளுக்காட்டு பக்கம்தான் ஒதுங்குகிறார். ஒரு தொகுதிக்குள்ளேயே சுற்றி வருவதால் அவர் வீடு போன்ற வசதிகள் கொண்ட வேன் தேவையில்லை என்று நினைத்திருக்கலாம். மேலும் குண்டும் குழியுமாக உள்ள விருதுநகர் நாட்டுப்புறத் தடங்களில் செல்லும் ஆடம்பர வேன்கள், கரகாட்டக்காரனில் வரும் கவுண்டமணி கார் போல உட்கார்ந்து விட்டால் என்ன செய்வது என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது. தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து மோடி அலையில் அடுக்கு மாடிகளை கட்ட வேண்டிய வைகோ இங்கே ஆளில்லாத கரிசல் காட்டு கிராமங்களில் அம்போவென சுற்ற வேண்டிய அவசியம் ஏன் என்ற கேள்வியும் அடுத்து வருகிறது.

ஏன் இப்படி வசதிக் குறைவுகளோடு பிரச்சாரம் செய்கிறீர்கள் என்று கேட்டால், மதிமுகவை ஏழைகளின் கட்சி என்கிறார் வைகோ. இதனால் மதிமுக பணக்காரர்கள் மற்றும் முதலாளிகளிடம் பணம் வாங்காது என்பதல்ல. யார் கொடுப்பார்கள்? விருதுநகரிலிருந்து இந்தியாவிற்கே வணிகம் செய்யும் நாடார், ரெட்டியார் முதலாளிகள் பலரும் திமுக, அதிமுக என்று கனமாக கவனித்தாலும், பாஜகவும் அவர்களது குட்புக்கில் உள்ள கட்சி என்றாலும் மோடியை முதன்முதலில் தோளில் தூக்கிச் சுமந்த இந்த மறத்தமிழனை தோற்றுப் போகும் ஓய்ந்து போன குதிரையாகவே அவர்கள் பார்க்கிறார்கள். எனில் இங்கே ஏழைகள் கட்சி என்பது விரும்பிப் பெற்ற சிறப்பல்ல. சோகமாக இருந்தாலும் வைகோவே இதை மனமொப்பி ஒப்புக் கொள்வார். பண விசயத்தில் யாரும் பொய் பேச முடியாதே?

வைகோ பிரச்சாரம்
ஒவ்வொரு இடத்திலும் டிரம்ஸ் வாசிக்கிறார்கள். 500 வாலா பட்டாசு வெடிக்கிறார்கள்.

இதனால் வைகோவின் அன்றாட பிரச்சார தினங்கள் அழுது வடிவதாக அர்த்தமல்ல. அவர் பேசும் ஒவ்வொரு இடத்திலும் டிரம்ஸ் வாசிக்கிறார்கள். 500 வாலா பட்டாசு வெடிக்கிறார்கள். இரண்டும் வைகோ உலாவில் ஏற்பாடு செய்யப்பட்டு உடன் வருகின்றன. அருகில் சிவகாசி இருப்பதாலும், நமத்துப் போன பட்டாசுகளை நன்கொடையாக வாங்குமளவு அவருக்கு செல்வாக்கு இருப்பதாலும் வெடிகளுக்கு குறைவில்லை. ஆனாலும் அம்மா கட்சி போல 1000, 10,000 வாலாக்களுக்கு வழியில்லை. டிரம்ஸ் வாசிக்கும் தொழிலாளிகளும் பட்ஜெட் குறைவினால் மாதம் முழுவதும் அதே சாயம் போன கோட்டு சூட்டுகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் வைகோவின் உற்சாகத்தை இவை குறைத்து விடவில்லை. உற்சாகம் என்ற ஒன்று இருந்தால் அல்லவா குறைவதற்கு?

செல்லுமிடங்களில் கூட்டணி கட்சி பொறுப்பாளர்களோ இல்லை யாராவது வேலை இல்லாத ஊர்த் தலைவரோ வைகோவை பாராட்டி சால்வை போடுகிறார்கள்.  கூட்டணி பொறுப்பாளர்களில் பலர் பிளக்ஸ் பேனரில் கூட இடம்பிடிக்காத அளவுக்கு செல்வாக்கு கொண்டிருந்தாலும் வைகோ அவர்களது பாராட்டை மனம் நிறைந்து ஏற்கத்தான் செய்கிறார். இல்லை மறுத்துவிட்டால் என்ன சாதித்துவிட முடியும் நண்பா? இதன்றி செல்லுமிடங்களில் திரளான மக்கள் சேர்வதில்லை. சிறுவர்கள் மட்டும் பம்பரத் தாத்தா என்று ஓடி வருகின்றனர். கிரிக்கெட்டை மட்டுமே விளையாட்டாக பார்க்கத் தெரிந்த நாட்டில் பம்பரத்திற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கும் சிறுவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது மோடி பாணியில் சொன்னால் வளர்ச்சியா, வீழ்ச்சியா?

பத்து பேர் அல்லது இருபது பேர் நின்றாலும் அதைக் கண்டு வைகோ முகம் சிறுத்தாலும் ஒரு நிமிடம் பேசுகிறார். ஆயிரம், இலட்சங்களுக்கு ஆசைப்பட்டு ஐந்து, பத்துக்களை இழந்து விடக்கூடாது என்ற அவரது பொறுப்பு மலைக்க வைக்கிறது. ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் இரண்டு நிமிடங்கள். நூறைத் தாண்டினால் மட்டும் 8 நிமிடங்கள் பேசுகிறார். இவையெல்லாம் ஆட்களைப் பார்த்தாலே வாட்சைப் பார்க்காமலேயே கச்சிதமாக நிறைவேறி விடுகிறது. காலமும், மனிதர்களும், அரசியலும் இப்படி உயர் கணித சூத்திரங்கள் தோற்கும் அளவுக்கு கனகச்சிதமாக போடப்பட்டிருப்பது அனைவரும் வியப்படையும் ஒன்று.

விஜயகாந்த் - வைகோ
வைகோ தவிர்க்காமல் பேசுவது “எனது அருமை சகோதரர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தே.மு.தி.க. ஆதரவோடு” என்பதைத்தான்

இந்த நிமிடக்கணக்கிலும் கூட அவர் தவிர்க்காமல் பேசுவது “எனது அருமை சகோதரர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தே.மு.தி.க. ஆதரவோடு” என்பதைத்தான். இதிலிருந்தே பாஜக கூட்டணியில் 14 தொகுதிகள் மட்டுமல்ல அதற்கும் மேலேயே பெறுவதற்கு விஜயகாந்திற்கு அருகதை உண்டு என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். புரட்சிப் புயல் இப்படி கேப்டனது ஆதரவிலாவது ஒரு சில வாக்குகளைத் தேற்ற முடியுமா என்று நினைத்திருப்பது வெறும் பணிவு மட்டுமல்ல, உயிர்த்திருப்பதின் போராட்டமும் கூட.

இந்த இலட்சணத்தில் தமிழகத்தில் மோடி அலை வீசுகிறது, மோடி பிரதமர் ஆவது உறுதி என்ற வழக்கமான பிரச்சாரத்தை அவர் பல கிராமங்களில் தவிர்க்கிறார். இத்தகைய கிராமப்புறங்களில்தான் மோடியே அடுத்த பிரதமர் என்று மக்கள் தெரிவித்ததாக ஜூவி எழுதியிருக்கிறது. அதை திருமாவேலனின் மனங்கவர்ந்த வைகோவே பொய் என நிரூபித்திருப்பது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.

நேர்மறையில் மோடி அலையை மட்டுமல்ல, எதிர்மறையில் எந்தக் கட்சியையும் எதிர்த்து வைகோ பேசுவதில்லை. இது நாகரீகம் என்று படித்தவர்கள் சொல்லலாம். ஆனால் மற்ற கட்சிகளைத் திட்டி, இருக்கும் இரண்டு வாக்குகளைக் கூட இழக்க விரும்பாத வைகோவின் சரணடைவு என்று நம்மைப் போன்ற பாமரர்கள் அதை கண்டுபிடிக்கலாம். மேலும் பம்பரத் தாத்தா என்று பிள்ளைகள் ஓடிவரும் போது, ‘குழந்தைகளுக்கு பிடிக்குமென்றுதான் பம்பரத்தை தேர்ந்தெடுத்தேன், அப்பா அம்மாவிடம் சொல்லி எனக்கு வாக்களிக்க செய்யுங்கள்’ என்று குழந்தைகள் சேனல்கள் மொழியில் பேசுகிறார். குழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டு பொருளை வைத்துத்தான் வாக்குகளை வாங்க முடியும் என்றால் இது என்ன வகை அரசியல்?

பெண்களை பார்த்தால் மதுவுக்கு எதிராக வெயிலிலும், மழையிலும் 1500 கி.மீட்டர் நடந்ததை சொல்லி அதை டிவியில் பார்த்திருப்பீர்களே என்று இவரே கேட்டுக் கொள்கிறார். அம்மாவின் டாஸ்மாக்கையும், குடிக்கும் ஆண்களையும் இந்த பெரியவர் என்ன செய்து விட முடியும் என்று அந்த பெண்கள் அடுத்த வேலையை பெருமூச்சுடன் செய்ய திரும்பி விடுகிறார்கள். குடி எதிர்ப்பு கூட பெருமளவு வாக்குகளை திரட்டி விடுவதில்லை.

தேவர் சாதி மக்கள் வாழும் பகுதிகளில் முத்துராமலிங்கத்தை தேசியம், தெய்வீகம் இரு கண்கள் என்ற அந்த இத்துப்போன டயாலக்கை சொல்லி முடித்து விடுகிறார். அப்படிப் பார்த்தாலும் தேவருக்கு அம்மா தங்கம் கொடுத்தார், வைகோ என்ன கொடுத்தார் என்று மக்கள் ஆய்ந்தால் என்ன செய்வது? தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் பரமக்குடி துப்பாக்கி சூட்டில் காயம்பட்ட ஜெயப்பிரகாஷ் எனும் தலித் சகோதரனுக்கு அப்பல்லோவில் சிகிச்சை பார்க்க ஏற்பாடு செய்தேன் என்று என்ஜிவோ பாணியில் பேசுகிறார். பரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டிக்காமல் மருந்து வாங்கி, பிளாஸ்திரி ஒட்டினேன் என்று பேசினாலே போதும் என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் அவ்வளவு இளித்தவாயர்களா என்ற கேள்வி வருகிறது. இங்கேயும் வைகோவின் சந்தர்ப்பவாதம் இயல்பாகவே சொதப்புகிறது.

“பெரிய கட்சிகளோடு கூட்டணி வைக்காமல் கிராமத்தில் ஆட்கள் எப்படி வருவார்கள், பட்டிக்காட்டுல பிரச்சாரம் பண்ணி, உடம்பை கெடுத்துக்கிட்டு, டயத்தை வேஸ்ட்டு பண்ணுறாரு” என்று நந்திரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சங்கர் என்பவர் அக்கறையுடன் கேட்கிறார். ஓகோ வைகோவை அரசியலில் இருந்து ஓய்வெடுக்கச் சொல்கிறாரோ? வைகோவை கேட்டால் இது ராஜபக்சேவின் சதி என்பார். வைகோவை தோற்கடிக்க ராஜபக்சே ஏதாவது செய்ய வேண்டிய அவசியம் வைகோ எனும் ஆளுமையிலும் இல்லை, விருதுநகநர் தொகுதியிலும் இல்லை. இனி சிஐஏ சதி என்று சொல்லாததுதான் பாக்கி. இருப்பினும் ஓரிரு கிராமத்து பெண்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்ட வைகோவிற்குத்தான் எனது ஓட்டு என்று காதில் தேன் பாய்ச்சாமல் இல்லை.

வைகோ
சாதனைகளை விட வேதனைகளையே அதிகம் முன்வைக்கிறார்.

தேவர், தலித் பகுதிகளில் பேசுபவர் நாயக்கர், ரெட்டியார் சாதி மக்கள் பகுதிகளில் என்ன பேசுவார் என்று நக்கீரன் எழுதவில்லை. மற்ற சாதி வேட்பாளர்களால் சாதி வாக்குகள் பிரிந்து தெலுங்கு பேசும் மக்கள் வாக்குகள் நம்மை காப்பாற்றிவிடாதா என்று வைகோவிற்கு ஒரு கணக்கு உண்டு. இதன்றி அவர் விருதுநகரை தெரிவு செய்ய வேறு காரணங்கள் இல்லை. ஆனாலும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் போன்ற பெரிய கட்சி பிரமுகர்கள் சொன்னால் கேட்கும் இந்த பிரிவு மக்கள் வைகோவிற்கு அனுதாபத்தை தருவார்களே அன்றி வாக்குகளை தருவார்களா என்பது கேள்விக்குறி. அந்த வகையில் சுயசாதிப் பெருமையும் இங்கே காப்பாற்றிவிடும் என்று உறுதியளிக்க முடியாது.

சின்னமூப்பன்பட்டி என்ற ஊரில் இரவு நேரத்திலும் மக்கள் ஓரளவுக்கு கூடியிருந்தார்கள். வைகோவின் உற்சாகத்திற்கு சொல்ல வேண்டுமா என்ன? வேறு எங்கும் இப்படி ஒரு கூட்டத்தை பார்க்கவில்லை என்று மனதாரா பாராட்டிவிட்டு தான் வெளிப்படையாக பேசுபவன் என்றும் பாராட்டிக் கொள்கிறார். பிறகு என்னைப் பற்றி நானே சொல்லிக் கொள்வதா என்று வெட்கத்துடன் அடுத்த கருத்துக்கு போகிறார். இந்த கூட்டத்திலும் அவர் மோடி அலை, ஆளும் கட்சி, ஊழல், மக்கள் பிரச்சினைகள் என்று எதுவும் பேசவில்லை. பிறகு என்ன பேசினார்?

“வெளிநாட்டில் யாரும் விபத்தில் மாட்டிக்கிட்டா, உடனே வைகோவுக்கு போனப்போடுன்னு சொல்றாங்க. நான் எந்தப் பதவியிலும் இல்லை. ஆனா எப்படியோ பிரதமர்ட்டயோ யார்ட்டயோ சொல்லி அவங்கள காப்பாத்த முயற்சி பண்ணுறேன்” என்று உலகத் தமிழர்கள் அனைவரும் நமக்கு ஒருத்தன் இருக்கிறான் என்று நினைப்பதை பெருமையுடன் பேசுகிறார். கடைசியில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மொழியில், “ஆபத்து வந்தால் உதவும் வைகோ” என்று சிறுத்துப் போய்விட்டார். என்றாலும் ஈழம், முல்லைப் பெரியாறு என்று வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டே இருப்பேன் என்று முழங்கவும் அவர் மறக்கவில்லை.

அதே நேரம் இந்த போராட்ட வீரத்தின் அளவும், தகுதியும் வைகோவே அறிந்த ஒன்றுதான். யாரும் அதைச் சொல்லி அவருக்கு புரியவைக்கத் தேவையில்லை. ஆதாரம்? அடுத்து அவர் பேசும் சோகப்பாட்டுதான்…..

கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ரணத்தை வைகோ இன்னமும் மறக்கவில்லை. மக்களுக்கு நினைவுபடுத்தாமலும் இருப்பதில்லை. சென்ற தேர்தலில் மற்ற கட்சிகள் அதிக பணம் கொடுத்து மக்கள் வாக்குகளை விலைக்கு வாங்கியதை அவர் தன்னெஞ்சு அழுகும் அணியலங்காரத்தில் செல்லுமிடங்களிலெல்லாம் மீண்டும் மீண்டும் விவரிக்கிறார். இந்தத் தேர்தலிலும் அதை தடுக்க முடியாது என்று பயந்து பேசும் வைகோ, என்றாலும் அந்த பணத்தை வாங்கினாலும் நீங்க நன்றாக ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று முடித்துக் கொள்கிறார்.

ஊசி போட்டார், ஆபத்திற்கு குரல் கொடுத்தார் போன்ற சாதனைகளை விட இத்தகைய வேதனைகளையே அதிகம் முன்வைக்கிறார் என்று வைகோவின் சுற்றுப்பிரயாண சாரத்தை நக்கீரன் பதிவு செய்திருக்கிறது. இதனால் நக்கீரன் திமுக ஆதரவோடு வைகோவை அம்பலப்படுத்துகிறது என்று பொருளல்ல. உண்மையில் வைகோவின் வேதனையைத்தான் நக்கீரன் பகிர்ந்திருக்கிறது.

ராம் ஜெத்மலானியைக் கூட்டி வந்து பாராட்டுக் கூட்டம் நடத்தினார். ஆனால் தமிழினவாதிகளோ அம்மாதான் எழுவர் விடுதலைக்கு காரணம் என்று பட்டம் சூட்டி விட்டார்கள். தமிழருவி மணியன் தனக்கென ஒரு தொகுதியை கேட்டு மதிமுகவிற்கு கொடுத்தார். இருப்பினும் வைகோவிற்கு ஈரிலக்க தொகுதிகள் கிடைக்கவில்லை. அழகிரியை நாணிக் கோணி சென்று பார்த்தார். விருந்தினர்களை வராதே என்று எப்படி சொல்ல முடியும் என்பதற்கு மேல் அழகிரி அருளவில்லை. மோடி கூட்டத்திற்கு சத்யாவை அனுப்பினார். மோடியை ஓட்டலில் சென்று சந்தித்தார். ராஜ்நாத் சிங்கை விமான நிலையம் சென்று வரவேற்றார். இருப்பினும் பாஜக பிரஸ் மீட்டில் அவர் அருகே அமர கூட வைகோவிற்கு வழியில்லை. தமிழக முன்னேற்ற முன்னணி ஆரம்பித்த சிவாஜி கணேசனின் இடம் இன்றளவும் வைகோவால் பிடிக்கப்பட்டிருக்கிறதோ?

சோகம் மேல் சோகம் வந்தாலும் இந்த மனிதனை வாழ வைப்பது எது? சந்தர்ப்பவாதம் அவ்வளவு பலமான ஒன்றா?

இப்படி அன்றாடம் தேர்தல் பரப்புரையில் பேசி முடித்த பின் வைகோ இரவு தங்கலுக்கு சென்று விட்டு என்ன செய்வார்? உணர்ச்சிகளின் தொடர் விளைவு மற்றும் மனித உளவியலின் அடிப்படை விதிகளின்படி அவர் விடியும் வரை கதறி கதறி அழுதிருக்க வேண்டும். அதை பதிவு செய்ய நமக்கு ஊடகங்கள் இல்லை என்பதால் வினவு அதை உரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடித்து தருகிறது.

மோடி அலையில் ஒரு சந்தர்ப்பவாதியின் மூச்சு திணறல் எந்த அளவு சித்திரவதை தரும் என்பதை உணர வேண்டுமானால் நீங்கள் வைகோவாக பிறந்து வைகோவாக வாழ்ந்து பார்க்க வேண்டும்.

  1. வைகோ என்கிற சந்தர்ப்பவாத, பிழைப்புவாத, அற்பவாத உள்ளத்திற்குள் ஊடுருவி எழுதியிருப்பது சிறப்பு. ஆனால் வைகோவை ஆதரித்துவரும் திருமுருகன் காந்தி போன்ற நல்ல உள்ளங்கள் இனிமேலாவது சாக்கடையை சாக்கடையாக மட்டுமே கருதினால் நல்லது.

  2. எல்லா கட்சியையும் திட்டியாச்சு, திமுக தவிர. அப்புறம் என்ன கூச்சம்? வெளிப்படையா சொல்லுங்கோ. “அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டி, விரும்பி கேட்டுக்கொள்கிறோம்!”

    • மிச்சர் திங்கறதுக்குன்னே யாராவது இதுமாதிரி வந்துடுறாங்க

    • திமுகவை திட்டி எழுதப்படும் பதிவுகளில் நீங்கள் எங்கே காணாமல் போய் விடுகிறீர்கள். அப்படியே வந்தாலும், இன்னும் அதிகமாக திட்டவில்லை என்று புலம்புகிறீர்கள். நீங்கள் என்ன அதிமுகவா ?

    • தி.மு.க தவிர என்று நீங்கள் சொல்வது, சமீபத்தில் அழகிரி பதிவு வரை எழுதப்பட்ட அனைத்து தி.மு.க தொடர்பான பதிவுகளையும் படித்த பிறகு அறிந்தே சொல்கிற பொய் தானே?

  3. வைகோவின் சந்தர்ப்பவாதம் அவருக்கு கீஞிட்தும் பலன் தராது.பொடாவில் உள்ளே தள்ளிய செயலலிதாவை நடைப்பயணந்தில் சந்தித்து ஈழத்தமிழர்களை ஏமாற்றினார். ஈழத்தமிழர்கள் எந்த நம்பிக்கையில் இந்த காகித ப் புலியை நம்பி ஏமாறுகிறார்கள் என்று எனக்கு ப் புரியவில்லை. நான் சிங்கப்பூரில் சந்தித்த ஈழத்தமிழர்கள் அனைவரும் இவரின் நாடக உரைகளை நன்று உணர்ந்து இருக்கிறார்கள். ஐரோப்பிய மற்றும் கனடியத் தமிழர்கள் ஏன் இவரை ப் பெரிய புலி என்று கருத வேண்டும். பா ச க வுடன் கூட்டு {முதல் துண்டு} மூலம் புலி பசித்தால் புண்ணாக்கு, புடலங்காய் , புல், புதினா, பூண்டு என்று எதையும் தினன யோசனை செய்யாது காணீர் என நிரூபித்திருக்கிறார்.க்

  4. நக்கீரனின் அவதானிப்பு உண்மை தான். அதிமுக கூட்டணியில் இருந்த போது வெடித்து சிதறிய இந்த சிவகாசி பொம்மை குண்டு இந்த முறை அடக்கி வாசிப்பதற்கு வேறென்ன காரணம் இருக்க முடியும். மற்ற கட்சித் தலைவர்களை விமர்சித்து அந்த கட்சி தொண்டர்கள் வழங்க இருக்கும் அனுதாப ஓட்டுக்களை இழக்க விரும்பாத ‘பெருந்தனமை’ தான் வைகோவை எச்சரிக்கை உணர்வு கொள்ள வைத்திருக்கிறது. வைகோவின் மரபான இடத்தை இந்த தேர்தலில் ஸ்டாலின் நிரப்புகிறார். தமிழக அரசியல் சார்ந்த நீண்ட அனுபவம் அவருக்கு கைகொடுத்திருக்கிறது.

    ஒரு கட்டத்தில் விருதுநகரை பா.ஜ.கவின் மோகன்ராஜுலு குறி வைக்க அந்த தொகுதி பறிபோகும் நிலை உருவானது. விருதுநகருக்கு பதில் தேனியை வழங்க பா.ஜ.க முன்வந்தது. அப்போது தினமலர் வெளியிட்ட செய்தி ஊடக விபச்சாரத்தின் உச்சம். விருதுநகர் வைகோவுக்கு என்ற கவனத்தை மதிமுக தொண்டர்களிடமிருந்து திசைதிருப்பும் வண்ணம், பா.ஜ.க கூட்டணியில் தேனி தொகுதியிலிருந்து போட்டியிடுபவர் யார்? வைகோவா? என்று உம்மன்சாண்டியிலிருந்து கேரள அரசியல்வாதிகள் அனைவரும் கிலி பிடித்து கிடப்பதாக வெட்கமின்றி செய்தி வெளியிட்டது. வைகோவின் தியாகத்தால் மனம் புண்பட நேரும் மதிமுக தொண்டர்களின் உணர்வுகளை உசுப்பி மடைமாற்றும் கீழ்மையான தந்திரம். விருதுநகரிலாவது அனுதாப ஓட்டுக்களுக்கு வழி உண்டு.

    இன உணர்வாளர்கள் பலரும் வைகோ மட்டும் பாஜக கூட்டணியில் வெற்றி பெற வேண்டும் என்று அரசியல் விவாதம் நடக்கும் இடங்களில் கூட்டுப்பிரார்த்தனைகள் செய்கிறார்கள். உண்மையில் இவர்களின் அனுதாபத்திற்கு பாத்திரமானவர் அல்லர் வைகோ. தமிழ்த்தேசிய சக்திகள், அரசியல் சக்திகளாக எழ வாய்ப்பில்லாமல் செயல்பட்டிருப்பவர் தான் வைகோ. கடந்த வருடம் தெருப்போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள் இன்று எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் இந்த தேர்தல் குறித்து என்ன நினைக்கிறார்கள்? மாணவர்கள் போராட்டத்தின் தர்க்கவியல் முடிவையும், அரசியல் விளைவையும் பாஜக உறவு மூலம் குரூரமாக சிதைத்துள்ள வைகோவின் எதிர்காலம் குறித்து இன்னொரு சந்தர்ப்பவாத மனம் மட்டுமே கவலை கொள்ளும்.

  5. இத படிச்சு பாத்து இரக்கப்பட்டு வைகோ வுக்கு ஓட்டு போடலாமுனு பாத்தா எங்க ஓரு விருதுநகர் தொகிதில வரலயே அய்யோ பாவம் வைகோ ,உங்களுக்கு இந்த நிலமையா கனத்த நெஞ்சுடன்……

  6. அடுத்தவனின் வெற்றியில் உள்ள சறுக்கல்களை எள்ளி நகையாடும் இந்த கட்டுரை உங்களின் சாடிஸ்ட் மனோபாவத்தின் வெளிப்பாடு.

    முல்லை பெரியாற்றிற்காக நடையாய் நடந்தார். நீங்கள் சொல்லலாம் விளம்பரத்திற்கென்று.
    அந்த விளம்பரத்திற்காகக்கூட நீங்கன் ஏதாவது ஒரு போராட்டத்தை மக்களைத் திரட்டி செய்ததுண்டா?
    ஒரு 5 பேர்களை அழைத்து ஆளில்லா ஒரு மூலையில் நின்று கத்தி விட்டு வேலை முடிந்ததென்று செல்லும் உங்களுக்கென்ன தகுதி உள்ளதென முதலில் யோசியுங்கள் நண்பர்களே.!

    சரியான களம் அமையாத காரணமேயன்றி அவரின் தோல்விக்கு யார் காரணம்?

    நீங்களும்தான் இத்தனை வருடங்கள் தொண்டைத்தண்ணீர் வற்ற கத்துகிறீர்கள்.

    இதுதான் மக்களின் அடிப்படை பிரச்சினைக்காக நாங்கள் சாதித்ததென தெளிவான ஒரு பதிவை தங்களிடம் எதிர்பார்க்கிறோம்.

    உடனே பாத்ரூம் கட்ட சொல்லி போராடுனதெல்லாம் எழுதாம நேர்மையா ஒரு கட்டுரைய எழுதுங்க தோழர்களே.

    நெஞ்சில் உரமுமின்றி
    நேர்மைத் திறமுமின்றி
    வஞ்சனை சொல்வாரடி – கிளியே
    வாய்ச்சொல்லில் வீரரடி

    இந்தப் பாடல் சந்தேகத்திற்கிடமின்றி தங்களுக்குத் தான்.

  7. ராகுல் தலைமையில் நிச்சயம் மத சார்பற்ற இசுலாமியர்களை பாதுகாக்கும் நல்லாட்சி அமையும்

  8. சாதாரனமாய் அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்களின் செயல்பாடுகளை பற்றி எழுதுவதற்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலின் போது எழுதுவதற்கும் வித்யாசம் இருக்கிறது.எல்லோரும் எரியும் கொள்ளிகள்தான், சந்தேகமில்லை ஆனால் நீங்களும் ஒரு இயக்கம்தான். இந்த தேர்தலில் உங்களுக்கென இருக்கும் பக்கத்தை தைரியமாக திறந்து காட்டலாம்தானே ?! மதில் மேல் பூனையாக கட்டுரைகள் எழுதுவதைவிட, உங்களின் கண்ணோட்டத்தில் யார் சிறந்தவர் என்பதை கோடிடலாம்தானே ?

    ஆனால் ஒன்று ! ஊடகங்களின் கணிப்பை தாண்டி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வாய்ப்பை தன்னால் இயன்றமட்டும் சரியாகதான் பயன்படுத்திகொண்டிருக்கிறான் சாதாரணகுடிமகன்.

    • ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சாதாரணகுடிமக்கள் அனைவரும் சுயஉணர்வுடன் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ளும் நாள் என்று சொல்லுங்கள் சாமானியன்.

  9. Non sense katturai. Thirumavalavanium krishnasamyya vida Vaiko 100 madangu nallavar. Beacuse of people like you TN is like this. Ungalukku Kaduvetti Guru than layakku.

  10. நரவேட்டை மோடிக்கு சொம்படிப்பது இஸ்லாமியர்களை நரவேட்டையாடிய பிரபாகரன் என்ற மற்றொரு பாசிஸ்டின் அல்லக்கை வைக்கோ..நல்ல பொருத்தம் நல்ல பொருத்தம்!

    • ஜிகாத் பன்றேன்னு அப்பாவி மக்களை கொல்ற பாய்ங்க மனித உரிமை போராளிங்க.பிராபாகரன் பாசிஸிட்.இப்படி சொன்னா தமிழ்நாட்ல அதுக்கு பேரு முற்போக்கு அர்த்தம்.நடத்துங்க.

  11. ஓட்டுப்போடாதே புரட்சி செய் ! தோழரே !

    மக்கள் ஏமாறவுமில்லை, ஏமாற்றிக்கொள்ளவும் மாட்டார்கள் ! இந்திய ஓட்டாளி ஏமாளி என்றால் எமர்ஜென்சியிலேயே சுருண்டிருப்பான். பெரியாரின் கொள்கைகளுக்காகவும், அண்ணாவின் ஹிந்தி எதிர்ப்பிலும் திரண்டிருக்க மாட்டான் ! மாநிலத்துக்கு ஒரு மொழியும் கலாச்சாரமும் கொண்ட தேசத்தில் நீங்கள் சொல்லும் புரட்சி செல்லாது நண்பரே ! மாக்சிய, லெனின் புரட்சி பற்றி பேசும் நீங்கள் அந்த நாடுகளின் இன்றைய சூழலை வசதியாக மறந்தோ அல்லது மறைத்தோ விடுகிறீர்களே ! லெனின் சிலை தகர்ப்பை பேசினால் என்ன ? இன்றைய மக்கள் சீனத்தின் ஒடுக்குமுறை அரசியல் உங்களுக்கும் தெரியும் தானே ? உண்மையிலேயே தெரிந்து மறைக்கிறீர்களா அல்லது உங்களின் ஏட்டுசுரைக்காய் அறிவு புரட்சியின் பொற்கால வரலாற்றை வர்ணிக்கும் புத்தகங்களுடனேயே நின்றுவிட்டதா ?

    இன்றைய மக்கள் சீனத்தில் இருந்து கொண்டு உங்களின் இதே அடைமொழியுடன் எழுத முடியுமா ? சர்வாதிகாரத்திலும் கம்யூனிசத்திலும் அதற்கு எதிராக எழுந்தால் அடுக்குமுறைதான் ! ஜனநாயகத்தின் பலமே அதனை விமர்சிப்பவர்களும் தேர்தல் மூலம் தலைமையை வெல்ல வாய்ப்பிருப்பதுதான். உங்களின் புரட்சியை தொடங்க சிறந்த இடம் தேர்தல் களம்தான். அனைவரையும் விமர்சிக்கும் நீங்களே ஒரு மக்கள் தலைவனை தேர்ந்தெடுத்து நிறூத்துங்களேன். ஜனநாயக மக்கள் உங்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டார்கள் !!!

  12. ஓட்டுக்கட்சிகளைப் பற்றி மக்களுக்கு நன்கு தெரியும் சாமானியன், ஓட்டு கேட்டு வரும் எவனும் யோக்கியன் அல்ல என்பதும் தெரியும், பிறகு ஏன் வக்களிக்கிறார்கள் என்கிறீர்களா? ஏனென்றால் இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு மாற்று என்ன என்று மக்களுக்கு இன்னும் தெரியவில்லை. அதை மக்கள் அறிந்துகொள்ளும் போது அனைத்தும் தலைகீழாக மாறும்

    சோசலிசத்தின் மேன்மையை அறிந்துகொண்ட யாரும் முதலாளித்துவத்தை மதிப்பார்களா? சாம்சங் கேலக்சியை பயன்படுத்திய பிறகு உங்களுக்கு பேஜர் தேவைப்படுமா? தேவைப்படாது, இந்த போலி ஜனநாயக தேர்தல் என்பது அரத பழைய பேஜர் மட்டுமல்ல ரிப்பேரான பேஜர். எனவே இந்த போலி ஜனநாயக தேர்தலில் மக்கள் மகிழ்ச்சி பொங்க பொங்க வாக்களிப்பதில்லை என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். எல்லோரும் திருட்டுப்பசங்கன்னு தெரிந்து, வேறு வழியில்லாமல் அவர்களில் ஒரு சுமாரான திருடனை தேர்வு செய்கிறார்கள்.

    இரண்டாவது மார்க்சியம் என்பது ஒரு அறிவியல் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இயற்பியல் விதிகளை அமெரிக்காவுக்கு பொருந்தும்
    இந்தியாவுக்கு பொருந்தாது என்று கூறமுடியுமா? கூறமுடியாது, அப்படி கூறினால் அது (இயற்பியலாக) அறிவியலாக இருக்க முடியாது. இரண்டையும் இரண்டையும் கூட்டினால் உலகின் எந்த மூலைக்கு போனாலும் விடை நாலு தான். மாநிலத்துக்கு ஒரு மொழியும் கலாச்சாரமும் கொண்ட இந்தியாவுக்கு மட்டும் ஐந்தாக இருக்க முடியாது. அப்படித்தான் மார்க்சியமும் உலகு தழுவிய பொது விதிகளை கொண்ட அறிவியல்.

    அடுத்து, மக்கள் சீனம், சோவியத் ரசியா போன்ற சோசலிச நாடுகள் எல்லாம் இன்று சோசலிச நாடுகளாக இல்லை. 1954 ஆம் ஆண்டுடன் ரசியாவும், 1976 ஆம் ஆண்டு முதல் சீனாவும் முதலாளித்துவ நாடுகளாகிவிட்டன. எனவே முதலாளித்துவ நாடுகளை மீண்டும் மீண்டும் சோசலிச நாடுகள் என்று புரிந்துகொண்டு கேள்விகளை கேட்காதீர்கள்.

    சரி இந்த இரண்டு நாடுகளிலுமே சோசலிசம் நிலைக்கவில்லை, முதலாளித்துவம் தான் மீண்டும் வந்திருக்கிறது. சோசலிச நாடுகளின் இந்த தோல்வியிலிருந்தே மார்க்சியம் தவறு என்பதும் முதலாளித்துவம் சரி என்பதும் தெரியவில்லையா என்று ஒரு கேள்வி உங்களுக்கு இருக்கிறதா? இருந்தால் பேசலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க