டாடா இன்னபிற கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மைய அமைச்சரவையில் யார் இடம்பெற வேண்டும் என்று பர்கா தத்தும், நீரா ராடியாவும் ‘ஆத்மார்த்த’மாக உரையாடுவதைப் பார்க்கும் தமிழக ஊடக ஆசாமிகளுக்கும் அந்த ஆசை வராமலா இருக்கும்? இதனால் அதிமுக அமைச்சரவையில் யார் இடம் பெற வேண்டும் என்று இவர்கள் முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். ‘அம்மா’வை சும்மா என்று எழுதினாலே சுளுக்கும், வழக்கும் உறுதி என்பதால் இவர்கள் பார்க்கும் தரகு வேலையில் கூட ஒரு எச்சரிக்கை உணர்வும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதாவது அடிமைத்தனம் கண்டிப்பாக இருக்கும்.

பர்கா தத்
திருமாவேலனின் இலட்சிய பத்திரிகையாளர் தரகு வேலை பார்க்கும் பர்கா தத்

ஜூனியர் விகடனின் வெளியீட்டாளரும், ஆசிரியருமான ப.திருமாவேலன் தமிழ்நாட்டின் பர்கா தத்தாக படியேறுவதற்கு ஒரு தரம் தாழ்ந்த வேலையில் இறங்கியிருக்கிறார். தமிழகத்தில் இந்துமதவெறி பாசிஸ்ட்டுகளான பாஜகவை ஆளாக்குவதற்கு காவி போதையில் திளைக்கும் கண்றாவி காந்தியவாதி தமிழருவி மணியன் மாமா வேலை பார்த்து வருவது அனைவரும் அறிந்ததே. இதில் மீடியா பார்ட்டனர்களாக தினமலர், தினமணி, புதிய தலைமுறை, துக்ளக், குமுதம் இன்னபிற ஊடகங்கள் தீவிரமாக கதை எழுதி வருகின்றன. எனினும் மோடி பிரதமர் ஆக முடியவில்லை என்றால் ஜெயா பிரதமராக பாஜக உதவவேண்டும் என்ற நிபந்தனையுடன் சோ போன்றவர்கள் பாஜகவை ஆதரிப்பது போன்று மற்ற பத்திரிகைகளும் அதிமுகவையும் விட்டுக் கொடுக்காமல் செய்திகளை படைத்து வருகின்றன.

இதில் மோடிக்கு பக்க மேளம் வாசிக்கும் கார்ப்பரேட் தமிழ் ஊடங்களையெல்லாம் விஞ்சும் தலைமைப் பார்ட்டனராக ஜூவியின் திருமாவேலன் அல்லும் பகலும் பொய்யும் புனைவுமாக பாடுபாட்டு வருகிறார். மோடிதான் அடுத்த பிரதமர் என்று பாஜக கும்பல், கார்ப்பரேட் மற்றும் ஊடக, இணைய விளம்பர நிறுவனங்களோடு கிளப்பி விட்ட புகையின் போதே திருமாவேலனும் ஜூவியை அதற்கு கச்சிதமாக பயன்படுத்தி வருகிறார். முத்தாய்ப்பாக “எந்தக் கூட்டணி ஜெயிக்கும்…. அடுத்த பிரதமர் யார்? ஜூ.வி மெகா சர்வே ரிசல்ட்” என்ற தலைப்பில் 19.01.14 தேதியிட்ட இதழில் ஒரு அட்டைப்பட செட்டப் கட்டுரை வந்திருக்கிறது.

இந்த ‘மெகா’ சர்வேக்காக ஜூ.வியின் 90-க்கும் மேற்பட்ட நிருபர் படை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி சுழன்று 9,174 பேர்களை சந்தித்து தமிழக மக்களின் எண்ண ஓட்டத்தை ‘துல்லியமாக’ கண்டு பிடித்திருக்கிறதாம். ஒரு நிருபர் தலா 100 பேர்களை சந்தித்து, விரும்பிய பதில்களை வரவழைப்பதற்காகவென்றே திருமாவேலனால் தயாரிக்கப்பட்டிருக்கும் கேள்விகளை கேட்டு, பின்பு உதவி ஆசிரியர்களால் தொகுத்து இறுதியில் ஜூவியின் ஆசிரியர் மேஜையில் திருத்தம் போட்டு சிம்பிளாக அச்சடித்து விட்டார்கள். ஒரு பொய்யை உண்மையென காட்ட வழக்கமாக செய்யப்படும் தகிடுதத்தங்களையும், ஜிகினா வேலைகளையும் செய்யாமலேயேக் கூட மிகுந்த அலட்சியத்துடன் இந்த சர்வே நம் முன் வைக்கப்படுகிறது. படிப்பவன் நம்புவான் என்று அவனது அறிவு குறித்த எகத்தாளமான நம்பிக்கை இவர்களுக்கு.

jv-3
அட்டைப்பட செட்டப் கட்டுரை

இந்த சர்வேயில் எட்டு கேள்விகளுக்கான பதில்களை சதவீதக் கணக்கிலும், வரைபடமாகவும் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் முத்தாய்ப்பான கேள்வி “நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பீர்கள்?”.

அதற்கு ஜூவியின் செட்டப் தயாரிப்பு படி பாஜக கூட்டணி 40.88% சதவீதமும், அதிமுக கூட்டணி 22.70%, திமுக கூட்டணி 21.77%, காங்கிரஸ் கூட்டணி 10.21%, பாமக கூட்டணி 4.44%மும் பெற்றிருக்கிறதாம். அதாவது வரும் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி சுமார் 16 தொகுதிகளில் வெற்றி பெறும் வண்ணம் முதலிடத்தில் இருக்கிறதாம். தமிழகத்தில் இரண்டு அல்லது இரண்டே கால் சதவீத வாக்கு வங்கி கூட இல்லாத காவிக் கூடாரம், மதிமுக, பச்சமுத்து, கொங்கு வேளாளக் கட்சி போன்ற அனாமதேயங்களோடு சேர்ந்து இத்தகைய பெரு வெற்றி பெருமாம். ஒரு வேளை தேமுதிக, பாமக வந்தால் கூட இந்த கூட்டணிக்கு ஓரிரண்டு தொகுதிகளில் டெபாசிட் கிடைக்கலாமே ஒழிய வேறு ஒன்றும் கிடைத்து விடாது.

‘இல்லை இது உண்மை’ என்றால் அதற்குரிய அறிவியல்பூர்வமான முறையில் சர்வே நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்திய அளவில் ஆங்கில கார்ப்பரேட் ஊடகங்கள் நடத்தும் கருத்து கணிப்பு கூட பாதிக்கு பாதி தவறாகவே நடந்திருக்கிறது. இருப்பினும் அந்த சர்வேக்கள் மிகுந்த தொழில்முறையில் நடப்பதாகவாவது கூறிக் கொள்கிறார்கள். தேர்தல் முடிவுகள் குறித்த வரலாறு, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் பிரச்சினைகள், தேசிய நலன்கள், சாதி, மதம், மொழி இன்னபிற காரணங்கள், வயது, பாலினம், நகரம், கிராமம்,தொழில், வர்க்கம் போன்ற பிரிவுகள், கூட்டணி யதார்த்தங்கள், இன்ன பிறவற்றையெல்லாம் தொகுத்து யாரை, எங்கே, எப்போது சந்தித்து கணிப்பு நடத்த வேண்டும் என்பதிலிருந்து முடிவுகளில் தவறுகளுக்கான வாய்ப்பு எத்தனை சதவீதம் என்பது வரை சொல்லி விடுகிறார்கள். இதற்கு மேலும், சம்பந்தப்பட்ட ஊடகங்களின் கட்சி சார்பு, கார்ப்பரேட் நலனும் இதைத் தீர்மானிக்கும் என்பதோடு பல முடிவுகள் தவறாகவும் இருந்திருக்கின்றன.

இந்த இலட்சணத்தில் திருமாவேலனது சர்வே தரத்தை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். இதை ஆம் ஆத்மியின் யோகேந்திர யாதவ் போன்ற தொழில்முறை தேர்தல் ஆய்வாளர்களிடம் காட்டினால் காறித் துப்புவார்கள். இப்படி ஒரு அபாண்டத்தை, அயோக்கியத்தனத்தை துணிந்து செய்ய வேண்டுமென்றால் ஜூவிக்கு ஒரு நோக்கம் இருந்தே ஆக வேண்டும். அது மோடி மற்றும் மோடியோடு கூட்டணி சேரும், சேர்ந்தே ஆக வேண்டிய கட்சிகளின் நலனோடு இணைந்திருக்கிறது.

பிப் – 5, 2014 தேதியிட்ட இந்தியா டுடேவிலும் அடுத்த தேர்தல் குறித்து ஒரு சர்வேயை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணி 103 இடங்களிலும், பாஜக 212, இதர கட்சிகள் 228 இடங்களிலும் வெற்றி பெறலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக 29 இடங்கள், திமுக 5, காங்கிரஸ் 0, பிற கட்சிகள் 5 என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இதில் பிற கட்சிகள் என்பதில் போலிக் கம்யூனிஸ்டுகள் தொடங்கி பாஜக கூட்டணி வரை பலர் இருக்கின்றனர்.

திருமாவேலன்
ஜூனியர் விகடன் ஆசிரியர் திருமாவேலன் – பாஜக கூட்டணி வெற்றிக்காக பொய்யும் புரட்டுமாக வேலை செய்கிறார்

இந்தியா டுடே போன்ற இந்திய பத்திரிக்கைகளுக்கு, தங்களின் கணிப்பை சரியாகக் கொடுத்தாக வேண்டிய சந்தை நிர்ப்பந்தம் இருக்கிறது. அவர்களது தொலைக்காட்சிகளிலும் இந்தக் கணிப்பை வெளியிடுவார்கள். அதனால் அவர்களுடைய கணிப்பின் எதிர்பார்ப்பும் எடை போடப்படுவதும் அதிகம். ஆக தில்லிக்காரன் கூட இங்கே பாஜக கூட்டணி பெறு வெற்றி பெறும் என்பதை மறுக்கும்போது அண்ணாசாலை அம்பி பத்திரிகை இப்படி பொய்யாக பொளந்து கட்ட வேண்டிய தேவை என்ன? இவ்வளவிற்கும் இந்திய அளவில் காங் கூட்டணியை விட பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என்று இந்தியா டுடே கணித்திருக்கிறது. அது அவர்களின் விருப்பமாக கூட இருக்கலாம் என்றாலும், தமிழக நிலவரத்தை அவர்கள் சாதகமாக காட்ட முடியாத அளவு யதார்த்தம் வேறாக இருக்கிறது என்பதே உண்மை. பொய் கூறுவதைக் கூட பொருத்தமாக சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதே ஜூவி ஆசிரியரின் நம்பிக்கை.

இந்த சர்வேக்கு ஜூவி தயாரித்திருக்கும் கேள்விகள் கூட திருமாவேலனது எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் வண்ணம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. திமுக – தேமுதிக கூட்டணி அமைந்தால் எனும் கேள்விக்கு பதில்களாக  பலமான கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி, மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று வைத்தவர்கள், தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் பிஜேபி அணியில் சேர்ந்தால் எனும் கேள்விக்கு பதில்களாக, முரண்பாடாக இருக்கும், பலமான அணியாக இருக்கும், இது காங்கிரஸ் எதிர்ப்பு அணி என்று வைத்திருக்கிறார்கள். ஏன் திமுகவிற்கு வைத்த பதில்களை இங்கே வைக்கவில்லை? திமுகவிற்கு சந்தர்ப்பவாதம், பாஜகவிற்கு முரண்பாடு என்று யோசிப்பதற்கு ஒரு நோக்கம் இல்லாமல் சாத்தியமில்லை.

மேலும் விஜயகாந்த் எப்படியாவது பாஜக அணிக்கு வரவேண்டும் என்று கிட்டத்தட்ட மூன்று கேள்விகளை வைத்திருக்கிறார்கள். மூன்றாவது கேள்வியான “விஜயகாந்த் எந்தக் கூட்டணியில் இடம்பெற வேண்டும்?” என்பதற்கு, பாஜகவுடன் சேர வேண்டும் என்று 26.59% பேரும், திமுகவுடன் சேர வேண்டும் என 20.91% பேரும்,  தனித்துப் போட்டியிட வேண்டும் என 33.14% பேரும் சொல்லியிருக்கிறார்களாம். இதன்படி விஜயகாந்த் பாஜக கூட்டணியோடு சேர்ந்து போட்டியிடுவதே சாலச்சிறந்தது என்று சுட்டிக் காட்டுகிறார்களாம். இந்த சர்வேயைப் பார்த்து சாலிகிராமம் கேப்டன் மனசு மாற வேண்டும், சீக்கிரம் பாஜக கூட்டணியில் துண்டை போட வேண்டும் என்று அண்ணா சாலை எடிட்டர் சர்வேயைக் காட்டி வற்புறுத்துகிறார்.

ஜூவி - பாஜக கூட்டணி
பாஜக கூட்டணியில் தொகுதி உடன்பாடு, சண்டை என்று எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்று தொகுதிகளின் எண்ணிக்கையோடு அதற்குரிய நியாயத்தையும் இட்டுக் கட்டி எழுதியிருந்தார்கள்.

26.1.14 தேதியிட்ட ஜுவியில் பிஜேபி கூட்டணி கணக்கு என்ற அட்டைப் படமே வெளியாகியிருந்தது. அதில் தேமுதிக – 11 இடங்கள், பாஜக -10, மதிமுக – 9, பாமக – 9 இடங்கள் என்று போட்டிருந்தார்கள். சரி, உள்ளே ஏதாவது பயங்கரமான ஆய்வு கட்டுரை வந்திருக்கும் என்று பார்த்தால் கடைசி பக்கத்தில் தமிழக இதழ்களில் அரசியலை கிசுகிசுவாக மாற்றிய அற்பம் கழுகாரின் அந்தப்புரத்தில்தான் இதை சொருகியிருந்தார்கள். அதாவது பாஜக கூட்டணியில் தொகுதி உடன்பாடு, சண்டை என்று எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்று தொகுதிகளின் எண்ணிக்கையோடு அதற்குரிய நியாயத்தையும் இட்டுக்கட்டி எழுதியிருந்தார்கள். நீரா ராடியா – பர்கா தத் வழியில் திருமாவேலன் எவ்வளவு தொலை நோக்கோடு சிந்திக்கிறார் பாருங்கள்.

கூட்டணியில் அதிக இடத்தில் போட்டியிடும் கட்சி என்பது விஜயகாந்த விருப்பமாம். அந்த வகையில் அவருக்கு 11 ஓகே, பாஜக இரட்டை இலக்கத்தில் போட்டியிட விரும்புவதால் அவர்களுக்கு 10, கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையை விட தமக்கு மிகவும் குறைவாக இருக்கக் கூடாது என்று கருதும் வைகோவின் நம்பிக்கையை வீணடிக்காமல் அவருக்கு 9, பிறகு பாமக தற்போதே பத்து தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவித்திருப்பதால் அதற்கு பழுதில்லாமல் 9 என்று முடிவாகியிருக்கிறதாம். இதில் பாமகவிற்கு பாஜக கூட்டணி விருப்பமில்லை என்றாலும் அன்புமணி வலியுறுத்துகிறாராம். இல்லையேல் அவர் போட்டியிடுவது இல்லை என்னுமளவு அந்த போராட்டம் நடக்கிறதாம்.

விஜயகாந்த் மலேசியா சென்று எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை எழுதும் ஜூவி இதனால் திமுகவினர் நிம்மதி அடைய முடியாது என்பதாக செய்திகளை நெய்து போடுகிறது. மலேசியாவில் மமகவினர் பார்த்து பேசினாலும் அவர் திமுக கூட்டணிக்கு வருவதாக எந்த உத்திரவாதமும் அளிக்கவில்லையாம். எல்லாம் விழுப்புரம் மாநாட்டில் அறிவிப்பதாக மழுப்பினாராம். இப்படி பாஜக கூட்டணி சிக்கலில்லாமல் அமைய வேண்டும் என்று இதழுக்கு இதழ் தினுசு தினுசாக போட்டுத் தாக்குகிறார் திருமாவேலன்.

எது எப்படியோ அவர் விரும்பியபடி விஜயகாந்த் இன்னமும் பிடிகொடுக்கவில்லை என்பதால் 2.2.14 தேதியிட்ட ஜூவியில் “விஜயகாந்த் செல்வாக்கு பெரும் சரிவு” ஜூவி சர்வே ஷாக் ரிசல்ட் எனும் அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டிருந்தார்கள். அதில் ஒட்டு மொத்தமாக விஜயகாந்த் செல்வாக்கு இழந்து வருகிறார் என்பதாகவும் அதே நேரம் அவருக்கு ஓட்டு போடுவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்பதாகவும் பெரும்பாலானோர் தெரிவித்தனராம். இதுவும் ஜூவி நிருபர் படை 8,721 பேர்களை சந்தித்து எடுத்த சர்வேயாம்.

விஜயகாந்த் சரிவு
விஜயகாந்திற்கு செல்வாக்கு குறைகிறது என்பது குச்சி ஐஸ் சாப்பிடும் குழந்தைக்கு கூட தெரியும். ஜூவியின் நோக்கம் அதுவல்ல!

விஜயகாந்திற்கு செல்வாக்கு குறைகிறது என்பது குச்சி ஐஸ் சாப்பிடும் குழந்தைக்கு கூட தெரியும். ஆனால் திருமாவேலனது நோக்கம் என்ன? “கேப்டன் உங்களது செல்வாக்கு சரிந்து வருகிறது, உடனே பாஜக கூட்டணியில் வந்து சேருங்கள், இல்லையேல் உங்கள் எதிர்காலம் பணால்” என்று மிரட்டிப் பார்க்கிறது ஜுவி. நாளையே அவர் பாஜக கூட்டணியில் சேர்ந்தால் அவரது சரிந்த செல்வாக்கு ஜூவியால் சைக்கிள் சுற்றும் நேரத்தில் பிரம்மாண்டமாய் எழும். எல்லாம் கணினி தட்டச்சுப் பலகையில் உள்ள வார்த்தைகள் தானே. தேவைப்படும் போது மாற்றி மாற்றி எழுதமுடியாமல் இருப்பதற்கு இது ஒன்றும் கல்வெட்டல்ல அல்லவா!

தமிழக நிலவரத்தின்படி யதார்த்தமாக யோசித்துப் பார்த்தால் விஜயகாந்த் விரும்பினாலும் இனி அதிமுக கூடாரத்தில் நுழைய முடியாது. காங்கிரஸ், பாஜக இரண்டு கூட்டணியில் சேர்ந்தால் புது தில்லியில் தேமுதிக வாங்கிய வாக்குகளை விட கொஞ்சம் அதிகம் பெறலாம். இறுதியாக திமுக கூட்டணியில் சேர்ந்தால் மட்டுமே ஓரிரு தொகுதிகளில் வெற்றியோ இல்லை கொஞ்சம் மரியாதையையோ அதாவது டெபாசிட்டையோ காப்பாற்றிக் கொள்ளலாம்.அதைத்தாண்டி அவருக்கு வேறு போக்கிடம் ஏதுமில்லை. எனினும் தனது பேரத்தை அதிகப்படுத்த அவர் நாட்களை கடத்துகிறார். வைஸ் கேப்டன் பிரேமலதாவும் அதற்கேற்றபடி திமிராக பேசுகிறார். இதெல்லாம் விஜயகாந்திற்கு தெரியாத ஒன்றல்ல என்றாலும் தமிழருவி மணியனும், திருமாவேலனும் அவரது மனதை ஊடக பலத்தால் மாற்ற முடியும் என்று தவமிருக்கிறார்கள்.

திருமாவேலனது மனங்கவர்ந்த அரசியல் தலைவர் வைகோவிற்கு இந்த தேர்தலில் ஏதாவது போக்கிடம் கிடைக்காதா என்ற சிக்கல் உள்ளது. இந்திய ராஜபக்சேவான மோடியின் தமிழக அடியாளாக 2002-லும் இப்போதும் கர்ஜிக்கிற இந்த கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியை ஒரு முன்மாதிரித் தலைவனாக இதயத்தில் போற்றுவதற்கு நிச்சயம் கொலவெறி மனது வேண்டும். அது திருமாவேலனுக்கு நிறையவே இருக்கிறது. ஒருவேளை இந்தக் கூட்டணியே வைகோவை கடைத்தேற்றுவதற்காக திருமாவேலன் செய்யும் முயற்சியோ என்று சிலருக்கு தோன்றலாம். ஜூனியர் விகடனை திறந்தாலே வாரம் ஒருமுறை வைகோ போட்டோவை போட்டு ஏதோ ஒரு அற்பமான விசயம் நேர்மறை செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. யாருமே சீந்தாத இந்த புரட்சிப் புயலுக்கு வலிந்து அடைக்கலம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

திருமாவேலன் புத்தகம்
ஈழப் பிரச்சனையில் போலி கம்யூனிஸ்டுகள் எந்தப் பக்கம் என்று தொடர் எழுதிய திருமாவேலன், இந்து மத வெறி மோடி பக்கம் போனது குறித்து யார் எழுதுவது?

இப்படி கடந்த ஆறு மாதங்களாக பச்சையாக பாஜகவிற்கும், மோடிக்கும் சொம்படிக்கும் திருமாவேலனது நோக்கம் என்ன? இதனால் என்ன ஆதாயம்? 21-ம் நூற்றாண்டு நிலவரப்படி கார்ப்பரேட் ஊழல் என்பது சிவப்பு சூட்கேசில் பறிமாறப்படும் பச்சைப் பணம் அல்ல. இத்தகைய நேரடி பொருளாதார ஆதாயங்களை விடுத்து அதிகாரம், செல்வாக்கு, பதவி போன்றவையும், எதிர்காலத்தில் சட்டப்பூர்வமாகவே ஆதாயம் கிடைக்கும் வசதிகளும்தான் இப்போதைய ட்ரெண்ட். இவை எதுவும் யாருக்கு, எதற்கு, எப்போது என்று நமக்கு உடனடியாக தெரியப் போவதல்ல. 2ஜி, நிலக்கரி ஊழல்களில் கூட ஊழல் என்பது கொள்கை முடிவு, சந்தை போட்டி என்று நியாயப்படுத்தப்படும் காலத்தில் நீரா ராடியாக்களை பொறி வைத்து பிடிப்பது கடினம்.
ஒரு ஏஜென்சி, ராஜ்ய சபா உறுப்பினர், பதவி மாற்றம், அதிகாரத் தரகு என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒருவேளை இல்லாமலும் இருக்கலாம். ஏனெனில் நீரா ராடியாக்கள் தமது சதுரங்க ஆட்டத்தின் விளைவுகளில் இருந்தே பலனை எதிர்பார்ப்பதால் அது முன்கூட்டியே ஒப்பந்தம் ஆகியிருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல.

இவற்றைவிட தமிழகத்தில் ஏதுமற்று கிடந்த பாஜகவிற்கு ஒரு கூட்டணி அமைத்து அங்கீகரிக்கப்பட்ட வாழ்வு கிடைப்பதற்கு பணியாற்றி வரலாறு படைத்திருக்கிறேன் என்பதற்காக கூட திருமாவேலன் ஆசைப்படலாம். அப்படி தப்பித் தவறி பாஜக கூட்டணி ஒரு சில தொகுதிகளை வென்று மத்தியிலும் ஆட்சி அமைத்தால் அவரது ஆளுமை எப்படியெல்லாம் பொங்கி வழியும் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

சரி, இதெல்லாம் விகடன் நிர்வாகம், முதலாளிகளுக்கு தெரியாதா, அவர்களுடைய நிலை என்ன என்ற கேள்வி எழலாம். முதலாளிகளைப் பொறுத்தவரை மோடி வெற்றி பெறுவார் என்பதற்காக தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும் என்று பொய் சொல்வதெல்லாம் பிரச்சினை அல்ல. அந்த பொய்யினால் ஒரு முதலாளி என்ற முறையில் அவர்கள் அடையும் நிலை, ஆதாயம் என்ன என்பதுதான் முக்கியம். மத்தியிலே ஆட்சியை பிடிக்கப் போகும் ஒரு குதிரையில் செலவே இல்லாமல் மூலதனமிடுவது ஒன்றும் குறையல்லவே?

நாளை தேர்தல் முடிந்து பாஜக கூட்டணி தமிழகத்தில் மண்ணைக் கவ்வியிருந்தாலும் அதை நியாயப்படுத்தி தட்டச்சு விரல்கள் எழுத முடியாதா என்ன? இல்லை ஜூவி வாங்கும் வாசகர்கள்தான் செருப்பை எடுத்துக் கொண்டு அண்ணா சாலைக்கு கிளம்பி விடப் போகிறார்களா? ஆனால் ஓரிரு இலட்சம் விற்கும் ஜூவியை வைத்து ஐந்து கோடி தமிழக மக்களின் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கலாம் என்று திருமாவேலன் நினைக்கிறாரே, உண்மையில் இதே ஜூவி இலட்சக்கணக்கிலோ, கோடிக்கணக்கிலோ விற்பனை ஆனால் இவர் நூறு ஜெயலலிதா, ஆயிரம் மோடிகளுக்கு சமமாக இருப்பார் என்பது மட்டும் உண்மை.

பாஜகவையோ, வைகோவையோ தனிப்பட்ட முறையில் திருமாவேலன் ஆதரிப்பது அவரது ஜனநாயக உரிமை. அதை அநீதியான ஆதரவு என்று நாம் விமரிசிக்கலாம். ஆனால் ஒரு பத்திரிகையை அவரது தனிப்பட்ட விருப்பத்திற்காக பொய்யும், புனைவும் கலந்து பயன்படுத்துவது, இது வெறுமனே தனிப்பட்ட உரிமை என்பதைத் தாண்டி ஒரு சதித்திட்டம் என்ற எல்லையில் நுழைந்து விடுகிறது. முதலாளித்துவ ஊடகங்களுக்கென்று சொல்லிக் கொள்ளப்படும் நடுநிலைமை, செய்திகளை கருத்து சார்பு இன்றி வெளியிடுவது போன்ற மாய்மாலங்கள் கூட ஜூவிக்கு இல்லை. திருமாவேலன் அப்பட்டமாக தனது ஆசிரியர் பதவியை முறைகேடாக பயன்படுத்துகிறார்.

இசுலாமிய மக்களை நரவேட்டையாடிய மோடி எனும் கொலைகார பாசிஸ்ட்டை நெஞ்சில் ஏந்தி, பொய்யுரைத்து, மக்களை மாற்ற நினைப்பதிலிருந்து ஒன்று தெரிகிறது, ஈழத்திற்காக திருமாவேலன் எனும் இந்த ஆசிரியர் உகுத்ததெல்லாம் முதலைக் கண்ணீர் என்று.

தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று முத்திரை வாக்கியத்துடன் வெளிவரும் ஜூவி எனும் இதழும் அதன் ஆசிரியரும் மோடிக்காக செய்யும் இந்த அயோக்கியத்தனத்தை தமிழக மக்கள் காறி உமிழ வேண்டும்.

சந்தா செலுத்துங்கள்

உங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா? வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.

18 மறுமொழிகள்

 1. உண்மை தான். பிஜேபி கூட்டணிக்கு ஓவர் பில்டப் கொடுக்கிறார்கள்.

  ————————

  ஆனால், நாடாளும் மக்கள் கட்சி இந்த கூட்டணியில் சேர்ந்து விட்டால் நாப்பதிலும் ஜெயிப்பார்கள் என தோன்றுகிறது!

 2. தமிழில் பெரும்பாலும் பத்திரிக்கைகளின் தரம் குப்பை .ஓசியில் கிடைத்தாலும் கூட படிக்க பிடிக்கவில்லை .எரிச்சல்தான் வருகிறது .

  • His “Neutral” Stand point shall be questioned with the stright forwardness of the SIT report which he takes for references.

   Some of the Other links left out of his “neutral” Eyes are below

   http://www.scribd.com/doc/165974436/Sanjeev-Bhatt-Letter-to-SIT-re-fabrication-of-faxes

   SIT’s approach over Zakia jafri’s statements can be compared with the news papers news.

   For SIT report Check the links in the “neutral gentle men’s” article

   and by the way…

   You are also seemed to be more “NEUTRAL” .. Please be charged .. Come out open with your white band

   • // Come out open with your white band //

    இதற்கு முன் சொன்ன வாதங்களோடு நிறுத்தியிருக்கலாமே? எதற்கு ஜாதி ரீதியான தாக்குதல்? அல்லது இதை மட்டும் சொல்லி, மற்ற வாதங்களை சொல்லாமல் இருந்திருக்கலாம். தர்க்கம், சாணி வாரி அடித்தல் என்ற முரண்பட்ட இரண்டு வழிமுறைகளை ஏன் கலந்து கட்டி அடித்து இரண்டையும் நாசம் செய்கிறீர்கள்?

   • http://guruprasad.net/posts/part-3-modi-phenomenon-propaganda-or-reality/

    In another shocking revelation from SIT report, a journalist from Times of India was in constant touch with Sanjiv Bhatt and helped him in arranging/drafting the affidavit against Modi. It might come as a surprise to find that journalists who are supposed to be neutral have gone to the extent of even hatching false complaints as proven in this case. He not only helped but also advised Bhatt to incorporate a few more paragraphs as the following excerpt from SIT report

    Sanjiv Bhatt’s wife contested election for Congress.Is it not a reward?

    http://zeenews.india.com/news/gujarat/congress-fields-sanjiv-bhatts-wife-against-modi_813723.html

 3. விகடனில் பாப்பானையே டம்மியாக்கிவிட்டு ஜாதிவெறியோடு திரியும் ஒரு சூத்திரக் கும்பலின் ஒரு அங்கம் தான் இந்த திருமா. அந்த கும்பலின் இன்னொரு உறவின் முறையாக இயங்கும் நீயா நானா கோபியின் செட்டப்பில் சிறந்த அரசியல் நிருபர் விருது திருமாவாலனுனுக்கு உறுதி.

  • கட்டுரையில் பாப்பான் வரவில்லையே என்ற குறையை பின்னோட்டத்தில் தீர்த்ததற்கு நன்றி !

   ஆனா எங்கியோ இடிக்குதே !

   பாப்பானை மட்டும்தானே திட்ட வேண்டும் ?!

 4. காங்கேயம் மாட்டு சந்தையில், மாட்டு தரகு செய்வதில்
  துக்லக் சோ கில்லாடி……
  இப்போது தொழிலில் திருமாவேலன் சேர்ந்துள்ளார்….

 5. அருமையான கட்டுரை. திருமாவேலனின் எழுத்துக்கள் எப்போதும் விஷமம் நிறைந்ததாகவே இருக்கும். அதை பலமுறை படித்த, உணர்ந்த அனுபவம் உள்ளது. மோடியின் கொலைவெறியை, மதவெறியை தெரிந்து கொண்டும் யார் மோடியை தூக்கிக் கொண்டாடுகிரார்களோ. அவர்கள் மனிதநேயம் அணுவளவு கூட இல்லாத மனிதர்கள்.

 6. அதாவது வரும் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி சுமார் 16 தொகுதிகளில் வெற்றி பெறும் வண்ணம் முதலிடத்தில் இருக்கிறதாம். தமிழகத்தில் இரண்டு அல்லது இரண்டே கால் சதவீத வாக்கு வங்கி கூட இல்லாத காவிக் கூடாரம், மதிமுக, பச்சமுத்து, கொங்கு வேளாளக் கட்சி போன்ற அனாமதேயங்களோடு சேர்ந்து இத்தகைய பெரு வெற்றி பெருமாம். ///like///

 7. 10% கூட இல்லாத உயர்சாதி ஆரியர்களின் பேராசையே அகண்ட பாரதம் என்ற பகல்கனவு .எல்லோரையும் ஒன்றாக இணைக்க அவர்கள் பயன்படுத்தும் வார்த்தை ஹிந்து .அப்படி ஒரு வார்த்தையே அவர்கள் வேதங்கள் என்று சொல்லக்கூடியவைகளில் கிடையாது .
  அந்தக்காலங்களில் இருந்தே கூழைக்கும்பிடு போட்டே வசதியாக வாழ்ந்த கும்பல் .
  அவாள்களுடைய ஜால்ராவை நம்பாமல் ஒதுக்கி வைத்தவர்கள் முகலாய மன்னர்கள் .சகமனிதர்களையே சமமாக மதிக்காமல் தான் தலையிலிருந்து வந்தவர்கள் உயர்ந்த ஜாதி. மற்றவர்கள் தங்களுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது .அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது .தங்களுடைய அடிமைகள் மற்ற ஜாதியினர் என்ற எண்ணம் அவர்களுக்கு இன்றும் உண்டு .
  தனி டம்ளர் முறை கடைபிடித்தது யார் ? அவாள்களுடன் சமமாக அமர்ந்து சாப்பிட முடியுமா ? தேவதாசி முறை, உடன்கட்டை கொண்டு வந்தது யார் ? இதை எல்லாம் அவர்கள் செய்தது நாம் எல்லோரும் ஹிந்துக்கள் என்று சொல்லும் சக மனிதர்களிடமே .புத்தர் இந்தியர் .ஆனால் ஆசியாவில் பெரிய அளவில் இருப்பவர்கள் புத்தரை பின்பற்றுபவர்களே .இந்துக்கள் அல்ல .ஆனால் இந்தியாவில் அவர்கள் அடையாளமே இல்லாமல் லட்சக்கணக்கில் அழிக்கப்பட்டது அன்றைய ஆரிய மன்னர்களால் தான் .அது பெரும்பாலும் மறைக்கப்பட்ட வரலாறு .அதை கிண்டினால் நாறிவிடும் .
  இன்றும் கூட இந்தியாவில் 80% பெரிய பதவிகளில் இருப்பவர்களை கணக்கெடுத்தால் அவாள்கள் மட்டுமே .அவர்கள் மக்கள் தொகையோ 10% கூட கிடையாது .இந்திய கிரிக்கெட் டீம் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு அயோக்கிய அமைப்பில் 90% உயர்சாதி இந்துக்கள் மட்டுமே .அதை நடத்தும் தனியார் அமைப்பான BCCI யிலோ 100% அவாள்களே .தெண்டுல்கர் உட்பட .இதுதான் இந்திய அணியாம் .மண்டையில் களிமண் இருப்பவர்கள் மட்டுமே அதை நம்புவார்கள் . இப்போது புரிகிறதா ? அடிமைத்தனத்தை நமக்கு பன்னெடுங்காலமாக நமக்கு ஊட்டியதை நாமும் மறக்காமல் கண்ணிருந்தும் குருடர்களாக இருக்கிறோம் .
  எல்லோரும் சமமே என்ற வார்த்தையை கேட்டாலே அவாள்களுக்கு வாந்தி வரும் .காரணம் எல்லாவற்றிலும் பங்கு கொடுக்க வேண்டி வருமே .ஹிந்து காவி வெறியர்களுக்கு அறவே பிடிக்காத மனிதர் அண்ணல் காந்தி .இந்தியாவிற்கு விடுதலை கிடைத்து விட்டாலும் அவர்களுடைய பேராசையில் மண்ணை அள்ளி போட்டு விட்டதால் அவரையே கொன்று விட்டவர்கள் .
  அந்த நாசக்கார அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு விஷம்தான் மோடி .பிரதமர் ஆசையில் இன்று நாட்டை வலம் வந்து கொண்டிருப்பவர் .மக்களை எப்படி சூழ்ச்சியால் முட்டாளாக்க முடியும் என்பதற்கு நல்ல ஒரு உதாரணம் .
  முஸ்லீம்களை தங்கள் வழிக்கு அவர்களால் கொண்டு வரமுடியாமல் பெரும் தோல்வி அடைந்தது அவர்கள் சரித்திரத்தில் ஒரு பெரும் கரும்புள்ளி .முகலாயர் ஆட்சி காலத்திலிருந்து இன்று வரை .அதற்கு பழிவாங்க அவர்கள் பல சமயங்களில் முயன்றிருக்கிறார்கள் .அதிலும் அவர்களுக்கு தோல்வியே .
  காந்தியை கொன்று விட்டு பழியை முஸ்லீம்கள் மேல் போட்டுவிட்டு ,அப்படி அதை மக்கள் நம்பி விட்டால் படை படையாக முஸ்லிம்களை சாகடித்து அவர்களை இந்தியாவில் இருந்தே முழுதும் துடைத்து விடலாம் என்ற மிக பயங்கரமான சதியும் தோல்வி அடைந்தது நேருவால் . புத்த மதத்தினரை இந்தியாவில் இருந்து முழுதும் துடைத்து வெற்றி கண்டதைப்போல்.ஆனால் அவர்களுக்கு இன்னும் வெற்றி கிடைக்கவில்லை .
  காங்கிரசிலும் அவர்களுடைய ஆதிக்கம் இருப்பதால்தான் மோடி போன்றவர்களுக்கு தண்டனை கிடைக்கவில்லை .நீதித்துறையில் அவாள்களின் ஆதிக்கம்தான் . காலம்பூராவும் சிறையில் களிதின்ன வேண்டிய நபருக்கு இன்று காவடி தூக்க வேண்டிய ஒரு கேவலமான வினோதமான ஒரு நிலை .
  தேசத்தந்தை அண்ணல் காந்தியாம்.அவரது சிலைக்கு மாலை போடப்போவது அவரை கொன்ற நாசக்கார கும்பலின் பிள்ளையாம் .அந்த கொடுமையான காட்சியை பார்க்கத்தான் இன்று எல்லா உயர் ஜாதி மற்றும் கார்பரேட் அமைப்புகள் எல்லா வழிகளிலும் நம்மை மூளை சலவை செய்து கொண்டிருக்கிறார்கள் .
  பார்த்து விடுவோம் ஜெயிப்பது நீதியா ? காவியா ? என்பதை .

 8. ஹா ஹா… பாஜக-வுக்கு ஆதரவாக திருமாவேலன் எழுதியிருப்பதாக நினைக்கும் வினவு, அவரை மோடிக்கு ஆதரவா வேலை செய்யுறார்னு நினைக்கும் போது, பாஜவை எதிர்ப்பதாக கூறும் வினவு காங்கிரஸ் ஆதரவாளாரா? #டவுட்டு 😀 😀 😀

 9. //மத்தியிலே ஆட்சியை பிடிக்கப் போகும் ஒரு குதிரையில் செலவே இல்லாமல் மூலதனமிடுவது ஒன்றும் குறையல்லவே?//

  அப்படின்னா மத்தியில ப.ஜ.க. ஆட்சிய புடிக்கும்னு சொல்றீயளா??

 10. மோடிக்கு சொம்படித்த ஜீ.வியை செருப்பால் அடிக்க வேண்டும். தமிழகத்தில் மோடியின் கதி என்ன என்பது நாறிவிட்டது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க