Sunday, September 15, 2019
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் ஐபிஎல்லையும் மோசடியையும் பிரிக்க முடியாது யுவர் ஆனர் !

ஐபிஎல்லையும் மோசடியையும் பிரிக்க முடியாது யுவர் ஆனர் !

-

ந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து, இந்தியா சிமென்ட்சின் தலைவர் சீனிவாசன் தற்காலிகமாக பதவி விலக வேண்டும், என்பது முதலான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட இரண்டாவது நாள்.

அந்த தொலைக்காட்சி விற்பனை அங்காடிக்கு வெளியில் சிறிய கூட்டம் கூடியிருந்தது. உள்ளே இருப்பவர்கள் பார்க்கும்படியாக ஒரு டிவி மட்டுமின்றி வெளியே தெருவை பார்த்தபடி ஒரு டிவியும் வைக்கப்பட்டிருந்தது. வெளியில் கூடி நின்றவர்கள், வீட்டில் டிவி இல்லாதவர்கள் அல்லது வீடே இல்லாதவர்கள். வட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து வேலை செய்யும் கட்டிடத் தொழிலாளர்கள்.

தொலைக்காட்சி விற்பனை கடையின் முன்பு கிரிக்கெட்
தொலைக்காட்சி விற்பனை கடையின் முன்பு கிரிக்கெட்

அனைவரது கவனமும் தொலைக்காட்சித் திரையில் ஓடிக் கொண்டிருந்த இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டி-20 உலகக் கோப்பை போட்டியில் நிலைத்திருந்தது. திரையில் விராட் கோலி பேட் செய்கிறார். ஆஸ்திரேலிய வீரர் வாட்சன், விராட் கோலிக்கு பந்து வீசுகிறார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியில் விழுந்த பந்தை மிட்-ஆனுக்கும், மிட் விக்கெட்டுக்கும் நடுவில் நளினமாக திருப்பி விட பந்து எல்லைக் கோட்டை தாண்டுகிறது. கேமரா பந்து வீச்சாளரின் முகத்தையும், ஆஸ்திரேலிய தடுப்பாளர்களின் முகங்களையும் காட்டுகிறது. ஏமாற்றமும், குழப்பமும் கலந்த உணர்ச்சிகள்.

தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருப்பவர்களின் முகங்களில் கிளர்ச்சி, புன்னகை, மகிழ்ச்சி. அந்த வெள்ளைத் தோல் ஆஸ்திரேலியர்களை தாங்களே தோற்கடித்து விட்டது போல ஒரு நிறைவு. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே அனைவரும் ஒருமித்த உணர்வை அடைகிறார்கள். இது கிரிக்கெட். இருபத்தியோராம் நூற்றாண்டின் மதம்.

கண்ணைக் கவரும் கிரிக்கெட் காட்சிகளில் தமது மாலைப் பொழுதை கரைத்து விட்டு தாம் வேலை செய்யும் கட்டிட வளாகத்தில் தூங்குவதற்கு போய் விடுவார்கள், அந்த தொழிலாளிகள். நேரம் இருந்தால், செல்போனில் பேலன்ஸ் இருந்தால் 1,600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டுக்கு தொலைபேசியில், மனைவியிடமும் குழந்தைகளிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசியும் விடுவார்கள். அடுத்த நாள் காலையில் தமக்காகவும், தமது குடும்பத்துக்காகவும் உழைக்கும் இன்னொரு நாளை எதிர் கொள்வார்கள். இந்த தொழிலாளிகளை மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தையும் சொக்க வைத்து கட்டிப்போட்டிருக்கும் கிரிக்கெட்டின் செல்வாக்கு அத்தனை பெரிது. ஆனால் பார்ப்பவருக்கு இருக்கும் கிரிக்கெட்டின் கவர்ச்சி, மரியாதை, புனிதம், விளையாட்டு என்ற வார்த்தைகளின் பாவனை கூட கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் முதலாளிகளுக்கு இல்லை. ஐபிஎல் மோசடிகள் மூலமும் நிரூபணமான உண்மை இது.

குருநாத் மெய்யப்பன்
குருநாத் மெய்யப்பன்

பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலர் ஆதித்ய வர்மா மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கு தொடர்பான மேல் முறையீடுகளின் மீதான விசாரணை கடந்த மார்ச் 25 அன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. ஐபிஎல் 2013-ல் சூதாட்டம், மேட்ச் ஃபிக்சிங் ஆகியவற்றில் ஈடுபட்டதாக சென்னை அணி முதலாளி குருநாத் மெய்யப்பன் மீதும், ராஜஸ்தான் அணி முதலாளி ராஜ் குந்த்ரா மீதும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் குழுவே விசாரணை நடத்துவது கண்துடைப்பு வேலை என்று மனுதாரர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன முதலாளி சீனிவாசன்தான் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர். சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாதன் மெய்யப்பன் சீனிவாசனின் மருமகன். இந்நிலையில் சீனிவாசன் தலைவராக இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியமே குருநாத் மெய்யப்பன் பற்றிய விசாரணையை நடத்தினால் நியாயம் கிடைக்காது என்று இந்த வழக்கை தொடர்ந்திருந்த பீகார் கிரிக்கெட் சங்கத்தின் பின்புலமாக இருப்பவர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சுபோத் காந்த் சகாய். அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கைப்பற்ற போட்டியிட்டுக் கொள்ளும் முதலாளிகளில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜக்மோகன் டால்மியா குழுவை ஆதரிப்பவர்.

வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு வந்த போது சூதாட்டம் மற்றும் மேட்ச் ஃபிக்சிங் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையில் ஒரு விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.

சீனிவாசன் சார்பில் சென்னை அணியின் நிர்வாகியாக செயல்பட்டு வந்த அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டதை முட்கல் கமிட்டி உறுதி செய்திருந்தது; உள் தகவல்களை சூதாட்ட தரகர்களுக்கு சொல்லி ஆதாயம் பார்த்ததாகவும், சூதாடிகளின் தேவைக்கேற்ப அணியை விளையாட வைத்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் விசாரிக்கத் தகுந்தவை என்று பரிந்துரைத்திருந்தது; கூடவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதலாளி ராஜ் குந்த்ராவும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், அந்த அணி வீரர்கள் மூன்று பேர் காசு வாங்கிக் கொண்டு சூதாட்டத் தரகர்களின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட ஓவரில் குறிப்பிட்ட எண்ணிக்கை ஓட்டங்களை விட்டுக் கொடுத்ததற்கான ஆதாரங்களையும் திரட்டியிருந்தது.

சீனிவாசன்
இந்திய கிரிக்கெட்டையே இந்தியா சிமெண்ட்சின் துணை நிறுவனமாக நடத்தி வந்திருக்கிறார் சீனிவாசன்.

இந்திய கிரிக்கெட் என்ற இந்த சாக்கடையில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்த இன்னாள், முன்னாள் ஆட்டக்காரர்கள், நிர்வாகிகள், முதலாளிகள் அனைவர் மீதும் அழுக்குகள் ஒட்டிக் கொண்டிருந்தன. இந்த அழுக்கிலிருந்து கிரிக்கெட்டை காப்பாற்றுவது போன்ற இறுதி நம்பிக்கையாக உச்சநீதிமன்றம் களத்தில் இறங்கியிருந்ததாக நினைத்துக் கொண்டார்கள், கிரிக்கெட் ரசிகர்கள்.

மார்ச் 25-ம் தேதி விசாரணையில் இந்தியா சிமென்ட்ஸ் முதலாளி சீனிவாசன் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் ஏன் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறார் என்று அவரது வழக்கறிஞர் ஆரியமா சுந்தரத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அவர் தானாக பதவி விலகா விட்டால் அவர் பதவி விலகும்படி நாங்கள் ஆணை பிறப்பித்து விடுவோம் என்று மிரட்டினர். ஊழலில் ஈடுபட்ட சென்னை அணியையும், ராஜஸ்தான் அணியையும் ஐ.பி.எல் 7-வது பருவத்திலிருந்து விலக்கி வைக்கும்படி உத்தரவிடப் போவதாகவும் கூறினர்.

பீகார் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ஆஜரான நாட்டிலேயே மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ஹரீஷ் சால்வே, சீனிவாசனின் இந்தியா சிமென்ட்ஸ் ஊழியர்களில் பலர் இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்புகளில் இருப்பதை அம்பலப்படுத்தினார்.

தமிழ்நாடு மாநில  கிரிக்கெட் சங்கத் தலைவராக இருக்கும் கே.எஸ். விஸ்வநாதன், தேசிய கிரிக்கெட் அகாடமி மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் புதிய பகுதிகளை வளர்ப்பதற்கான துணைக்குழு இவற்றின் உறுப்பினர்; கே பிரசன்னா, இந்தியன் பிரீமியர் லீகின் முதன்மை நிதி அலுவலர்; தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணைச் செயலாளரான ஆர் ஐ பழனி கிரிக்கெட் வாரிய மண்டல அகாடமிகள் குழுவின் உறுப்பினர்; தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவரான பி.எஸ்.ராமன் கிரிக்கெட் வாரியத்தின் சட்ட ஆலோசகர். இவர்கள் அனைவரும் சீனிவாசனால் படியளக்கப்படும் இந்தியா சிமென்ட்சின் ஊழியர்கள்.

அதாவது, சீனிவாசனுக்கு சொந்தமான, இந்தியா சிமென்ட்சின் ஆட்களால் நிர்வகிக்கப்படும் சென்னை அணியை ஒழுங்குபடுத்தும் பொறுப்பிலும், கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய பொறுப்புகளிலும் இந்தியா சிமென்ட்சின் ஆட்களை நிரப்பியிருந்தார் சீனிவாசன்.

குருநாதன் மெய்யப்பன் தோனியுடன்
குருநாதன் மெய்யப்பனுக்காக பொய் சாட்சி சொன்ன தோனி.

மேலும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இருக்கிறார். ஐபிஎல் சென்னை அணியின் கேப்டனாகவும் இருந்து வரும் தோனி, “குருநாதன் மெய்யப்பன் வெறும் விளையாட்டு ஆர்வலர் மட்டும்தான், சென்னை அணியுடன் வேறு எந்த தொடர்பும் அவருக்குக் கிடையாது” என்று முட்கல் கமிட்டியிடம் சாட்சி அளித்திருந்தார். இது முற்றிலும் பொய் என்று முட்கல் கமிட்டி ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறது. முதலாளியின் பணத்துக்காக கூசாமல் பொய் சொல்லும் தோனிதான் இந்திய இளைஞர்களின் ஆதர்ச நாயகனாம்.

மேலும் இப்போதைய ஆட்டக்காரர்களான பந்துவீச்சாளர் அஷ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக், ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், வர்ணனையாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோரும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் சம்பளப் பட்டியலில் இருக்கின்றனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய கிரிக்கெட் அணி இவற்றை கைப்பற்றி இந்திய கிரிக்கெட்டையே இந்தியா சிமெண்ட்சின் துணை நிறுவனமாக நடத்தி வந்திருக்கிறார் சீனிவாசன். சீனிவாசன் மட்டுமின்றி இதற்கு முன்பு அதிகாரத்தில் இருந்த இனிமேலும் அதிகாரத்தைப் பிடிக்கப் போகிற சரத் பவார், ஜக்மோகன் டால்மியா போன்ற மற்ற கிரிக்கெட் முதலைகளும் இதே நடைமுறையை பின்பற்றி தமது அடியாட்களை முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி கொள்ளை அடித்து வந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஐபிஎல் முதன்மை செயல்பாட்டு அலுவலரான சுந்தர் ராமன், சீனிவாசனின் கையாள். 2008-ம் ஆண்டு ஐபிஎல்-ஐ உருவாக்கிய லலித் மோடி, விளம்பரத் துறையைச் சேர்ந்த சுந்தர்ராமனை முதன்மை செயல்பாட்டு அலுவலராக பணிக்கு அமர்த்தினார். 2010-ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகள் மூலம் லலித் மோடி துரத்தி அடிக்கப்பட்ட பிறகு அவரது இடத்தைப் பிடித்திருந்த இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனுடன் சுந்தர் ராமன் ஒட்டிக் கொண்டார்.

முட்கல் கமிட்டியின் விசாரணையின் போது “ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் யார் என்று தெளிவாக சொல்வது சாத்தியமில்லை” என்று சீனிவாசனையும் குருநாத் மெய்யப்பனையும் பாதுகாக்கும் வகையில் சுந்தர் ராமன் வாக்குமூலம் கொடுத்திருந்தார். மேலும், பிற ஐபிஎல் அணிகளைப் பற்றிய தகவல்களை குருநாத் மெய்யப்பனின் சூதாட்டத்துக்கு உதவும் வகையில் சுந்தர் ராமன் சொல்லி வந்தார் என்பது சூதாட்ட தரகர்களுக்கு இடையேயான பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடலில் தெரிய வந்திருக்கிறது.

சீனிவாசனுடன் காவஸ்கர்
சீனிவாசனின் தயவில் ஆண்டுக்கு ரூ 3.6 கோடி வருமானம் தரும் வருணனையாளர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்த காவஸ்கர்.

இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்த உள்கமிட்டி சீனிவாசனின் மருமகன் குருநாதன் மெய்யப்பன் எந்த தவறும் செய்யவில்லை என்று நற்சான்றிதழ் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. குருநாதன் மெய்யப்பன் இப்போது தலைமறைவாக இருக்கிறார். இன்னும் சில ஆண்டுகளில் அவர் வெளியில் வந்து எதிர்காலத்தில் கிரிக்கெட் வாரிய தலைவராகக் கூட ஆகலாம். மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது 323 பிஎஸ்என்எல் இணைப்புகளை சட்ட விரோதமாக பெற்று தனது வீட்டிலேயே எக்ஸ்சேஞ்ச் நடத்தியது, ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனமான மேக்சிசுக்கு விற்கும்படி அழுத்தம் கொடுத்தது போன்ற குற்றச்சாட்டுக்களுக்குள்ளான தயாநிதி மாறன், தனது பாவங்களை கரைத்து விட்டு இப்போது தேர்தலில் நிற்கிறார்; ஜெயித்து ஒரு வேளை மத்திய அமைச்சர் கூட ஆகி விடலாம் இல்லையா?

இதற்கிடையில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களுடன் கை கோர்த்து இம்மூன்று நாடுகளையும் உலகக் கிரிக்கெட்டின் பெரியண்ணன்களாக மாற்றும் திட்டத்தை நிறைவேற்றிய சீனிவாசன் பன்னாட்டு கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பதவியை ஏற்கவும் திட்டமிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பட்னாயக் ஒரு கிரிக்கெட் ரசிகராம். ஐ.பி.எல் என்ற புழுத்து நாறும் ஊழல் விளையாட்டுக்கு மரியாதை பெயின்ட் அடிப்பது எப்படி என்று யோசித்த அவரது சட்ட மூளையில் காவஸ்கரை கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமித்தால் என்ன என்று தோன்றியிருக்கிறது.

இந்திய ஞானமரபின் நவீன வடிவமாக கட்டமைக்கப்பட்டு நடத்தப்படும் இந்திய கிரிக்கெட்டில் இப்போது விராட் கோலியும், கடந்த 20 ஆண்டுகளாக சச்சின் டெண்டூல்கரும் பிம்பங்களாக நிறுத்தப்பட்டது போல 1980-களின் புனித பிம்பமாக தூக்கி நிறுத்தப்பட்டவர்தான் சுனில் காவஸ்கர்.

நீதிபடி பட்னாயக், காவஸ்கரின் நீண்ட இன்னிங்ஸ்களை கண்டு கழித்த விசிறியாக இருந்திருக்க வேண்டும். ‘காவஸ்கர் எங்கே இருக்கிறார்? அவர் நல்லவர், வல்லவர், அனுபவமிக்கவர், நாலும் தெரிந்தவர், இந்த ஊழல் பேர்வழி சீனிவாசனை நீக்கி விட்டு காவஸ்கரிடம் கிரிக்கெட் வாரிய தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கும்படி உத்தரவிட உத்தேசித்திருப்பதாக’ அவர் கிரிக்கெட் வாரிய வழக்கறிஞரிடம் கூறினார். காவஸ்கரும் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்த சீனிவாசனின் தயவில் ஆண்டுக்கு ரூ 3.6 கோடி வருமானம் தரும் வருணனையாளர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சத்யமேவ ஜெயதே என்ற முழக்கத்தை முன் வைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் நீக்கப்பட்டால்தான் ஐபிஎல் போட்டிகள் நடக்க அனுமதிப்போம் என்று வீரம் காட்டினார்கள். “யாருக்கும் அறங்களைப் பற்றி கவலை இல்லை. இப்படி இருந்தால் அதிகாரத்தில் இருக்கும் நபர்கள் மற்றவர்கள் சொல்வதை எப்படி கேட்பார்கள்? ஆனால், வாய்மையே வெல்லும் என்று நாங்கள் நம்புகிறோம். கொஞ்ச காலம் பிடித்தாலும் உண்மை ஒரு கட்டத்தில் வெளி வந்தே தீரும்.” என்று சொல்லி கிரிக்கெட்டின் நலன்களுக்காகவும் தேசத்தின் நலன்களுக்காகவும் கறாரான முடிவுகளை எடுக்கப் போவதாக நீதிபதிகள் கூறினர்.

சுனில் காவஸ்கர்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் ஆதரித்து வந்ததோடு அதில் நாறிக் கொண்டிருக்கும் ஊழல்களைப் பற்றி ஒருமுறை கூட தன் வாயைத் திறந்ததில்லை காவஸ்கர்.

இந்தியா சிமென்ட்ஸ் ஊழியர்களை இந்திய கிரிக்கெட் வாரிய பதவிகளிலிருந்து நீக்கும்படி ஆணை பிறப்பிக்கும் உத்தேசம் இருப்பதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

சர்வியாபகியாக இந்திய கிரிக்கெட் கம்பெனியை ஆண்டு கொண்டிருந்த சீனிவாசனின் நிலைமை ஆட்டம் கண்டது. வாரியத்தின் 5 துணைத்தலைவர்களில் 3 பேர் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

சீனிவாசனின் இடத்தில் நியமிக்க உத்தேசிக்கப்பட்டிருந்த காவஸ்கரோ, “நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் கூறும் போது அதை கேட்டுத்தான் ஆக வேண்டும். கிரிக்கெட் வாரியத் தலைவர் பொறுப்பை நான் நிறைவேற்ற முடியும் என்று நீதிமன்றம் கூறியிருப்பது என்னை கவுரவப்படுத்துகிறது” என்றிருக்கிறார்.

சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஊழலில் ஈடுபட்டதை அடுத்து ஐபிஎல் 7 ரத்து செய்யப்பட வேண்டுமா என்று கேட்கப்பட்ட போது. “அது கிரிக்கெட்டுக்கு எப்படி உதவும் என்று எனக்குத் தெரியவில்லை. 14 ஆண்டுகளுக்கு முன்பு பணத்துக்காக போட்டிகளில் விளையாடியவர்கள் பற்றிய விவகாரம் வெடித்த போதும் கிரிக்கெட் இடைவிடாமல் தொடர்ந்தது,” என்றார். சென்னை, ராஜஸ்தான் அணிகளை நீக்கி வைப்பது குறித்து கூறுகையில், “சென்னை அணி மூன்று முறை சேம்பியன் ஆகியிருக்கிறது, ராஜஸ்தான் அணி ஒரு முறை வெற்றி பெற்றிருக்கிறது. அந்த அணிகளை விலக்கி வைக்க நேர்ந்தால் அது மிகவும் வருத்தப்படக் கூடியது” என்றிருக்கிறார்.

காவஸ்கரைப் பொறுத்த வரை அவரும் கிரிக்கெட்டும் ஒன்றுதான், அவருக்கு எது நல்லதோ அதுதான் கிரிக்கெட்டுக்கும் நல்லது. அவருக்கு கோடி கோடியாக பணத்தைக் கொட்டும் வகையில் கிரிக்கெட் சூதாட்டங்களோடும், மோசடிகளோடும் இயங்குவதுதான் கிரிக்கெட்டுக்கும் நல்லது, அவருக்கும் நல்லது.

சீனிவாசன் பதவி விலகாமல் விடாப்பிடியாக இருப்பது பற்றி கேட்ட போது, “குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை எல்லோரும் நிரபராதிகள்தான் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். சீனிவாசன் குறித்து நான் தீர்ப்பு சொல்ல முடியாது. அது தொடர்பாக எனக்கு எந்த அனுபவமும் இல்லை.” என்றார்.

உண்மைதான், 2002-ம் ஆண்டு மும்பையில் காவஸ்கரின் ஓய்வறை இழுப்பறையில் ரூ 7  லட்சம் ரொக்கம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு கூட காவஸ்கரின் கிரிக்கெட் தொடர்பான பணிகளை யாரும் நிறுத்தி வைத்து விடவில்லை. அவர் தொடர்ந்து கனவான்களின் விளையாட்டான கிரிக்கெட்டில் கோடிக்கணக்கான ரூபாய்களை ஈட்டி வருகிறார். அதற்கு விசுவாசமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் ஆதரித்து வந்ததோடு அதில் நாறிக் கொண்டிருக்கும் ஊழல்களைப் பற்றி ஒருமுறை கூட தன் வாயைத் திறந்ததில்லை.

இந்நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகப் பொறுப்பை காவஸ்கரிடம் ஒப்படைப்பது என்பது நில மோசடிகள் தொடர்பாக விசாரிக்கும் சி.பி.ஐ-யின் பொறுப்பை ராபர்ட் வதேராவிடம் ஒப்படைப்பது போன்றதுதான். ஒரு நாள் முதல்வர் போல ஒரு சீசனுக்கு  இடைக்காலத் தலைவராக இருக்கும் காவஸ்கர் சீனிவாசனுக்கும், இந்தியா சிமென்ட்சுக்கும் பாதகமாக எதையும் செய்து, பதவிக் காலத்திற்குப் பிறகு வருணனையாளர் ஒப்பந்தத்துக்கு வேட்டு வைத்துக் கொள்ள மாட்டார் என்று உறுதியாக நம்பலாம். எனவே சீனிவாசனது நலன்களுக்கு குந்தகம் வராமல் எல்லாம் நல்லபடியாக நடத்தி முடிக்கப்படும்.

மேலும், கிரிக்கெட் வாரியத்தின் தலைவரை நீக்குவதற்கு வாரியத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான வழிமுறையே அதன் அமைப்பு விதிகளில் இல்லை. அவர் தானாக பதவி விலகினால்தான் உண்டு. இவ்வளவுக்கும் பிறகும் சீனிவாசன் பதவி விலக முன்வரவில்லை.

இதற்கிடையில் மேற்கு வங்க விளையாட்டுத் துறை அமைச்சர் மதன் மித்ரா, “சவுரவ் கங்குலி கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளலாம். அவர்தான் நமது மிகச் சிறந்த அணித்தலைவராக விளங்கியவர். அவருக்கு தூய்மையான இமேஜ் உள்ளது. அவர்தான் வாரியத்தின் பொறுப்பை எடுத்துக் கொள்வதற்கு சரியான ஆள்” என்று கூறி தீதியின் கட்சியையும் களத்தில் இறக்கி விட்டார்.

ஐபிஎல் முதலாளிகளின் காபி கிளப்
ஐபிஎல் முதலாளிகளின் காபி கிளப்

ஆனால் கிரிக்கெட் முதலாளிகள் தொலைக்காட்சி ரேட்டிங்குகளையும், கூட்டம் நெருக்கும் விளையாட்டு மைதானங்களையும் சுட்டிக் காட்டி ஊழல் எதுவும் இல்லை என்று மக்களே தீர்ப்பு சொல்லி விட்டார்கள் என்கிறார்கள். நடுத்தர வர்க்க அம்பிகள், ஊழல்கள் எதையும் பொருட்படுத்தாமல் மாலை நேரத்தின் மனதை கவரும் கொண்டாட்ட நிகழ்வுகளாக தொலைக்காட்சியிலும், நேரிலும் கிரிக்கெட்டை போற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உச்சநீதிமன்ற வழக்கின் அடுத்த கட்டமாக வியாழக்கிழமை நடந்த வாதங்களின் போது சீனிவாசன் பதவி ஒதுங்கத் தயார் என்று அவரது வழக்கறிஞர் நீதிபதிகளிடம் தெரிவித்தார். ஐபிஎல் ஊழல் தொடர்பான விசாரணை முடிவது வரை கிரிக்கெட் வாரிய விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கியிருப்பதாகவும், விசாரணையை காலக்கெடு விதித்து முடிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

கிரிக்கெட் வாரியம் சென்னை, ராஜஸ்தான் குத்தகைகளை ரத்து செய்ய வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக் கொண்டது. “அப்படி இரண்டு அணிகள் நீக்கினால், ஆறு அணிகள் மட்டும் விளையாடுவது போட்டித் தொடரின் கட்டமைப்பையே சிதைத்து விடும். தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள், விளம்பரதாரர்கள், புரவலர்கள், ஆட்டக்காரர்கள் ஆகிய அனைவரும் அதன் விளைவுகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்” என்றது. வாரியத்தின் வழக்கறிஞர் சி ஏ சுந்தரம், குத்தகைதாரர்களுடன் ஒப்பந்தத்தை எளிதாக ரத்து செய்ய முடியாது என்றார்.

இரண்டு அணிகள் விலக்கி வைக்கப்பட்டால், ஐ.பி.எல் அதன் கவர்ச்சியை இழந்து விடும் என்று பதறினார்கள் அணி முதலாளிகள். போட்டிகளுக்கு பெயர் இடும் உரிமையை வாங்கியிருக்கும் பெப்சி தனது குளிர்பானங்களின் ஆண்டு விற்பனையே ஐ.பி.எல் போட்டிகள் தடையின்றி முழுமையாக நடைபெறுவதில்தான் அடங்கியிருக்கிறது என்று கூறியது.

முதலாளிகளின் இத்தகைய இக்கட்டான சூழலையும், காவஸ்கரின் கருத்துகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டோ என்னவோ வெள்ளிக் கிழமை இந்த வழக்கில் இடைக்கால ஆணை பிறப்பித்த நீதிமன்ற அமர்வு, “ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கவிருக்கும் ஐ.பி.எல்-ன் ஏழாவது பருவம் தடையின்றி நடப்பதுதான் முக்கியமானது என்பதால் ஐ.பி.எல்லில் விளையாடுவதிலிருந்து எந்த ஒரு கிரிக்கெட் வீரரையும், எந்த ஒரு அணியையும், (அவர்கள் எவ்வளவுதான் ஏமாற்றியிருந்தாலும், எவ்வளவுதான் நிதி மோசடி செய்திருந்தாலும்) தாம் தடுக்கப் போவதில்லை” என்று கூறியது.

ஒரு குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்று ஆதாரம் வெளியானால், அதன் மேலாளரை மட்டும் நீக்கி வைத்து விட்டு, கையாட்களை கண்டுகொள்ளாமல் ‘மற்ற எந்த ஊழியரையும் நீக்கப் போவதில்லை. குழந்தைகளின் நன்மைக்காக இல்லம் தொடர்ந்து வழக்கம் போல நடைபெற அனுமதிப்போம்’ என்பது போல தீர்ப்பு சொல்லியிருக்கிறது உச்சநீதிமன்றத்தின் மனுநீதி.

அனுமார் பக்தரான அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராமர் சிலைக்கு பூஜை செய்ய பாபர் மசூதியின் கதவுகள் திறந்து விடப்பட வேண்டும் என்று தீர்ப்பு சொன்னது போல, தான் ஓய்வு பெறுவதற்கு முன்பு நல்ல காரியம் செய்து புண்ணியம் தேடிக் கொள்ள வேண்டும் என்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிதம்பரம் கோயிலை தீட்சிதர்கள் கையில் ஒப்படைத்து தீர்ப்பு சொன்னது போல தீவிர கிரிக்கெட் ரசிகரான பட்னாயக் ஐ.பி.எல் தடையின்றி நடக்க வழிகாட்டி தீர்ப்பளித்திருக்கிறார்.

இந்தியா சிமென்ட்சும், விஜய் மல்லையாவும், பெப்சி கோலாவும், முகேஷ் அம்பானியும், சூதாடிகளும், சூதாட்டத் தரகர்களும் இந்த தீர்ப்பினால் எந்த தொந்தரவுக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள். கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை கொக்கி போட்டு இழுக்கும் ஐ.பி.எல்லின் ஆபாச நடனம் தடையின்றி நடக்கலாம். இதுதான் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு.

உண்மையில் ஐஎம்ஜி என்ற விளையாட்டு நிர்வாக நிறுவனம்தான் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தப் போகிறது. அனுமதிச் சீட்டுகள், அணி அலுவலர்கள், போட்டிகள், போட்டி அதிகாரிகளை நியமிப்பது அனைத்தும் ஐஎம்ஜியால் நிர்வாகிக்கப்படுகிறது. எனவே தலைமையைப் பொறுத்த வரை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்கிறார் ஒரு ஐபிஎல் அணியின் மேலாளர். அதாவது உச்சநீதிமன்றம் நியமித்திருக்கும் காவஸ்கர் எந்த அதிகாரமும் இல்லாத ஒரு டம்மி பீஸ்தான்.

ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பமாகவிருக்கும் ஏப்ரல் 16-ம் தேதியை வழக்கின் அடுத்த கட்ட விசாரணை தேதியாக நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. நீதிபதி பட்நாயக் தான் ஏற்பாடு செய்து கொடுத்த போட்டிகளை கண்டு களிப்பதற்கு வசதியாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை போட்டிகள் தொடங்கும் நேரத்துக்கு முன்பே முடிந்து விடும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், அவர் ஏதாவது ஷோரூமுக்கு வெளியில் நின்று கிரிக்கெட் பார்க்க வேண்டியிருக்காது. உச்சநீதிமன்ற நீதிபதியாக இருப்பதால் சொந்தமாக ஒரு வீடும், அதில் கிரிக்கெட் பார்க்க அகலத் திரை தொலைக்காட்சியும் அவரிடம் இருக்கும்.

– அப்துல்.

மேலும் படிக்க

  1. அடப் பாவி பசங்களா….ஒரு வேளை சோத்துக்கு தடுமாறும் சீனிவாசன்&
    மருமகன் குருநாத் செட்டியர்(சிங்கிள் டீ சாப்பிட காசு இல்லாத ஏழை)…
    ரெண்டு காசு பாக்கலாம்னா, விடுறீங்களா?
    இம்புட்டு அடி அடிச்சா பய புள்ளைங்க எப்படித் தாங்கும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க