Friday, August 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 723

விவசாயிகளை விரட்டியடிக்கும் ‘வளர்ச்சி’!

8

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தமிழகத்தின் வழியாக கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு இயற்கை எரிவாயுவைத் தரைவழியாகக் கொண்டு செல்லும் திட்டமொன்றை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது, பொதுத்துறை நிறுவனமான இந்திய எரிவாயு ஆணையம் (கெய்ல்). தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களிலுள்ள 138 கிராமங்களின் வயல்வெளிகளில் இக்குழாய்களைப் பதித்து எரிவாயுவைக் கொண்டு செல்லும் வண்ணம் இத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

10-farm-landவிளைநிலங்களில் வெறும் 20 மீட்டர் அகலத்திற்கு மட்டுமே இடத்தை எடுத்துக் கொள்ளப் போகிறோம் என கெய்ல் சாதாரணமாகக் கூறுகிறது. சிறு விவசாயிகளுக்குச் சொந்தமாயுள்ள ஒரு ஏக்கர், அரை ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொண்ட பிறகு அவர்களுக்குப் பயிர் செய்வதற்கு என்ன மிஞ்சியிருக்கும்? அந்தத் துண்டு நிலம் இரண்டு துண்டாகிப் பயிர் செய்வதற்கு வாட்டமில்லாமல் போகும்.

“குழாய் பதிக்கப்பட்ட விவசாய நிலத்தின் அருகே வண்டிப் பாதை அமைக்கக் கூடாது; பாசனக் குழாய்களை அமைக்கக் கூடாது; மரம் வளர்க்கக் கூடாது; பாசனக் குழாய்களை அமைக்கக் கூடாது; மரம் வளர்க்கக் கூடாது” என ஏகப்பட்ட நிபந்தனைகளையும்; “பதிக்கப்படும் குழாய்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிலத்தின் விவசாயியைக் கைது செய்யவும், மூன்றாண்டுகள் வரை சிறையில் தள்ளுவதற்கும்” வகை செய்யும் அநியாயமான சட்டங்களையும் இயற்றி வைத்திருக்கிறது, கெய்ல்.

“வெறும் 20 மீட்டர் அகலத்துக்கு மட்டுமே நிலத்தை எடுத்துப் பயன்படுத்துவதால், நிலத்தின் சந்தை மதிப்பில் 10 சதவீதம் மட்டுமே இழப்பீடாக கம்பெனி வழங்கும்” என அறிவித்திருக்கிறது, கெய்ல். இந்த அற்பத்தனமான கணக்கின்படி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராஜி என்ற விவசாயிக்குக் கிடைத்துள்ள இழப்பீடு 13 ரூபாய்!

அம்மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு தொடங்கியே நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராகப் போராடி வருகின்றனர். இப்போராட்டத்தையடுத்து நிலம் கையகப்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்த கெய்ல் நிறுவனம், “நிலத்தைக் கையகப்படுத்த போலீசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று கோரி கடந்த ஆண்டு வழக்குத் தொடுத்தது.

இவ்வழக்கில், “விவசாய நிலங்களின் வழியாகக் குழாய் அமைப்பதற்குப் பதிலாக தேசிய நெடுஞ்சாலைகளின் வழியே எரிவாயுவைக் கொண்டு செல்வது உள்ளிட்ட மாற்று வழிமுறைகள் குறித்து விவசாயிகள், கெய்ல நிறுவனம், தமிழக அரசு ஆகிய முத்தரப்பும் கலந்து பேச வேண்டும்; கெய்ல் நிறுவனம் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு உதவியாக போலீசைப் பயன்படுத்தக் கூடாது” என உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து கெய்ல் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கிலும் சென்னை உயர்நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பையே உறுதி செய்தது.

கெய்ல் நிறுவனமோ இத்தீர்ப்பை மயிரளவுக்குக் கூட மதிக்காமல் நிலப்பறிப்பு நடவடிக்கைகளை மீண்டும் எடுத்தது. தமிழகத்தின் உரிமைகளுக்காக மைய அரசோடு தினமும் மோதுவதாகக் கூறும் அம்மா அரசு, இந்த விசயத்திலோ உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, கெய்ல் நிறுவனத்தின் நிலப்பறிப்புக்கு உதவியாகத் தனது போலீசு பட்டாளத்தை அனுப்பி வைத்தது. நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து விவசாயிகள் பிப்ரவரி மாத இறுதியில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததையடுத்து நிலம் கையகப்படுத்துவதற்கு 3 வாரம் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தவிர்க்க முடியாதது என ஆட்சியாளர்கள் நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், சொல்லிக் கொள்ளப்படும் இந்த வளர்ச்சி நிலத்தைப் பறி கொடுத்த விவசாயிகளுக்குத் திருப்பித் தருவதென்ன? வேலைக்காக நகரங்களை நோக்கி ஓடும் அகதி வாழ்க்கையைத் தவிர!

____________________________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2013
____________________________________________________________________________________________________

காவிரி: சிக்கல் தீரவில்லை!

3

மிழக மக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள், ஆட்சியாளர்களின் துரோகங்கள், வறட்சி, விவசாயிகளின் தற்கொலைகள் – இவற்றுக்குப் பின்னர் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை இந்திய அரசு கடந்த பிப்ரவரியில் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

ஆறாண்டுகளுக்கு முன்பு 2007-இல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியானபோது, “இத்தீர்ப்பு தமிழகத்துக்குப் பாதகமானது, மைனாரிட்டி தி.மு.க. துரோக அரசு பதவி விலக வேண்டும்” என்று கூப்பாடு போட்டார் பாசிச ஜெயலலிதா. அப்படிக் கூறியவர்தான் இப்போது, “எனது 30 ஆண்டுகால அரசியல் வாழ்வில் கிடைத்த மகத்தான வெற்றி, இது எனக்குக் கிடைத்த பிறந்தநாள் பரிசு, இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாவதற்கு நானே காரணம்” என்று தனக்குத் தானே பெருமை கொண்டாடுகிறார்.

காவிரியில் நீரின்றி சம்பா பயிர்கள் கருகி, அடுத்தடுத்து விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதிலும், தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளே கிடையாது என்று திமிராக அறிவித்ததோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கூட தராமல் அலட்சியப்படுத்தியது ஜெயா அரசு. விவசாயிகளின் போராட்டங்களுக்குப் பின்னரே, 50 சதவீதத்துக்கு மேல் பயிர் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு மட்டும், ஒரு ஏக்கருக்கு ரூ. 15,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதிலும் பயிர் காப்பீடு நிறுவனம் வழங்கும் இழப்பீட்டை அரசே எடுத்துக் கொண்டு மீதமுள்ள ரூ. 5,808 தான் விவசாயிகளுக்குத் தரப்படும். தஞ்சையில் இந்த அற்ப இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சியில், ஜெயாவின் அடிமை அமைச்சர் வைத்தியலிங்கம், விவசாயிகள் கைதட்டாததைக் கண்டு ஆத்திரமடைந்து “உங்களுக்கு அறிவு இல்லையா? நீங்கள் எல்லாம் உணர்ச்சியற்ற பிண்டங்களா?” என்று விவசாயிகளை இழிவுபடுத்தி ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இப்படி விவசாயிகளின் நலனில் மயிரளவும் அக்கறையில்லாத இந்த கும்பல்தான் பாசிச ஜெயாவை “காவிரித் தாய்” என்று துதிபாடிக் கொண்டு அவருக்கு ஒளிவட்டம் போட்டுக் கொண்டு திரிகிறது.

காவிரி போராட்டம்
நிபந்தனைகளின்றி அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகளைக் கைது செய்ததைக் கண்டித்தும், அவர்களை விடுவிக்கக் கோரியும் திருவாரூர் ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தும் விவசாயிகள்.

கடந்த பிப்ரவரி 2007-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இந்த நடுவர் மன்றத் தீர்ப்பு 6 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மிகத் தாமதமாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதன் மூலம், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு நாட்டின் சட்டங்களில் ஒன்றாகியுள்ளது. இருப்பினும், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள முடிவின்படி கர்நாடகம் இச்சட்டத்தை மதித்து செயல்படுமா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அனுமதிக்க மாட்டோம்; காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்தவும் விடமாட்டோம்” என்கிறது கர்நாடக பா.ஜ.க. “காவிரி மேலாண்மை வாரியத்தை இப்போது அமைக்க முடியாது” என்று அடாவடியாகப் பேசுகிறார், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவத். தற்போது இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரும், தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் ஷெட்டர் பகிரங்கமாகக் கொக்கரிக்கிறார்.

எனவே, காவிரி நடுவர் மன்றத் இறுதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, தன்னாட்சி அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அதன் கட்டுப்பாட்டில், கர்நாடகத்திலுள்ள நான்கு அணைகளையும் நீர்ப்பாசன நிர்வாகத்துக்கு உட்படுத்தி கண்காணித்தால்தான், இந்த இறுதித் தீர்ப்பு நடைமுறைக்கு வருவதற்கான வாப்பு இருக்கிறது. ஆனால், இதற்கு எவ்வித காலக்கெடுவையும் நிர்ணயிக்காத உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 25 அன்று காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது மைய அரசின் கடமை என்று கூறி எவ்வித உத்தரவும் பிறப்பிக்காமல் நழுவிக் கொண்டுள்ளது. கர்நாடக முதல்வர் ஷெட்டர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்டு, தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் சார்பில் தாக்கல் செயப்பட்ட துணை மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்துள்ளது.

இவையும் போதாதென்று, தமிழகத்தின் குறுவை சாகுபடிக்கு ஜூன் மாதத்தில் தண்ணீர் வேண்டும் என்பது கூடத் தெரியாமல், விவசாயத்தைப் பற்றிய பொதுஅறிவுகூட இல்லாமல், இறுதித் தீர்ப்பு குறித்த வழக்கின் இறுதி விசாரணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. காவிரி நீரில் தமிழகத்தின் நியாயவுரிமையை அலட்சியப்படுத்தி, தமிழக விவசாயிகளின் உயிராதமான இப்பிரச்சினையைத் தட்டிக்கழிக்கும் வகையில்தான் உச்ச நீதிமன்றம் அதிகாரவர்க்கத் தோரணையில் அணுகி வருகிறது.

காவிரி போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரி, திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி. பெட்ரோலிய கிணறுகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தும் காவிரி மீட்புக் குழுவினர்.

உச்ச நீதிமன்றம் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்து நழுவிக் கொள்வதையும், அடாவடித்தனமான கர்நாடக அரசு மீது தனது அதிகாரத்தை ஏவி கட்டுப்படுத்த இந்திய அரசு தொடர்ந்து மறுப்பதையும் இவையனைத்தும் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன. எனவே, அரசிதழில் இறுதித் தீர்ப்பு வெளியிடப்படுள்ளதால் அதிசயம் ஏதும் நடந்துவிடப் போவதில்லை. ஏற்கெனவே1991-இல் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டபோது, கர்நாடக அரசு அதைச் செயல்படுத்த மறுத்தது. மைய அரசோ கைகட்டி நின்றது. கன்னட இனவெறியர்களோ, தமிழர்களுக்கு எதிராக மிகக் கொடிய கலவரத்தை அரங்கேற்றினர்.

இந்நிலையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் போலவே காவிரி இறுதித் தீர்ப்பானது இன்னுமொரு காகிதச் சட்டமாகவே இருக்கும். தமிழகத்தின் நியாயவுரிமையை நிலைநாட்ட வேண்டிய உச்ச நீதிமன்றமும், கர்நாடகத்துக்கு உத்தரவிட்டு செயல்படுத்த வேண்டிய அதிகாரத்தைக் கொண்டுள்ள மைய அரசும் எந்த நடவடிக்கையுமின்றி நழுவிக் கொள்ளும் தற்போதைய அரசியலமைப்பு முறையில், இந்தச் சட்டம் ஒரு அங்குலம் கூட நகராது. ஆனாலும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் இந்த அநீதிக்கும், கர்நாடகத்தின் அடாவடிக்கும், மைய அரசின் செயலற்ற நிலைக்கும் எதிராக வாய் திறக்காமல், தங்களால்தான் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாகக் காட்டி மலிவான அரசியல் நாடகத்தை நடத்துகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஓட்டுக்குத்தான் விவசாயிகள் தேவையாக உள்ளனரே தவிர, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயமும் விவசாயிகளும் தேவையில்லை என்பதுதான் ஆளும் கும்பலின் மறுகாலனியாதிக்கக் கொள்கையாக உள்ளது. ஏற்கெனவே காவிரி கடைமடைப் பகுதிகளில் இறால் பண்ணைகளை அமைத்து விவசாயத்தை நாசமாக்கிய இக்கும்பல், இப்போது விவசாயிகள் மாற்றுப் பயிர்களுக்கும், நவீன விவசாயத்துக்கும் மாற வேண்டுமென உபதேசிக்கிறது. விவசாயத்தையும் விளைநிலங்களையும் அழித்து வீட்டுமனைகளாக மாற்றுவதையும், கிழக்குக் கடற்கரைப் பகுதி முழுவதிலும் கார்ப்பரேட் கொள்ளைக்கான மின்நிலையங்களையும் அணு மின் நிலையங்களையும் அமைப்பதையும் ஆளும் கும்பல் நோக்கமாகக் கொண்டுள்ளது. இவற்றின் நடுவே நிலத்தடி நீரையும் உறிஞ்சி டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கிவரும் தண்ணீர் வியாபாரிகள் பெருகி வருவதோடு, உலகவங்கி – உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைப்படி தண்ணீரை வர்த்தகப் பொருளாக்கும் வகையில் மைய அரசு தேசிய நீர்க் கொள்கையை வகுத்துக் கொண்டுள்ளது. மொத்தத்தில் விவசாயிகளை விவசாயத்திலிருந்தே விரட்டியடிப்பதும், இனி விவசாயமே செய முடியாத நிலையை உருவாக்குவதுமான மறுகாலனியாதிக்கக் கொள்கைகள் வேகமாகத் திணிக்கப்பட்டு வருகின்றன.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகியுள்ளதைக் காட்டி, தமிழகத்துக்கு நியாயம் கிடைத்துவிட்டதைப் போன்றதொரு தோற்றத்தை ஓட்டுப் பொறுக்கி பிழைப்புவாதிகள் ஏற்படுத்திவரும் இன்றைய நிலையில், இதனை அம்பலப்படுத்தி காவிரியில் தமிழகத்தின் நியாயவுரிமைக்காகவும், தீவிரமாகிவரும் மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராகவும் தமிழக உழைக்கும் மக்கள் விடாப்பிடியான தொடர் போராட்டங்களை நடத்துவதே இன்றைய முதன்மைத் தேவையாக உள்ளது.

– கதிர்

____________________________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2013
____________________________________________________________________________________________________

அதிதியின் கதை!

0
பாலியல் தாக்குதல்
படம் உதவி : இந்து நாளிதழ்

ணி இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களிலிருந்து, பாதுகாப்பு வழங்குவதற்கான மசோதா 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இரண்டு வருடங்களாக நிலுவையில் இருந்த இச்சட்டம், லோக்சபாவில் செப்டம்பர் 3 2012 அன்றும், ராஜ்யசபாவில், பிப்ரவரி 26 2013 அன்றும் ஏற்கப்பட்டு இப்போது நடைமுறையில் உள்ளது.

பாலியல் தாக்குதல்
படம் உதவி : இந்து நாளிதழ்

இந்த சட்டத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை, ஒழுங்குபடுத்தப்பட்டு நடத்தப்படுவதாக சொல்லப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நடைமுறையிலிருந்து பரிசீலிக்கலாம். பன்னாட்டு நிறுவனங்களானாலும் சரி, உள்ளூர் பெருநிறுவனங்களானாலும் சரி பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் பெண்களின் புகார்கள் பெரும்பாலும் உதாசீனப்படுத்தப்பட்டு அவர்கள் பணியிலிருந்து தூக்கியெறியப்படுகின்றனர் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது கே.பி.எம்.ஜி என்ற பலம் பொருந்திய நிதி மேலாண்மை நிறுவனம்.

உலகம் முழுவதும் 156 நாடுகளில் கிளைகளைக் கொண்ட கே.பி.எம்.ஜி.யின் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத். கொல்கத்தா, புனே, கொச்சி, சண்டிகர், அகமதாபாத்பாத் நகரங்களில் இயங்கும் அலுவலகங்களில் 4,800 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

30 வயதுகளின் இறுதியில் இருந்த சார்டட் அக்கவுண்டன்ட் ஆன, அதிதி போஜ்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  2006ம் ஆண்டு கே.பி.எம்.ஜி, மும்பை கிளையில் பணியாற்றிவந்தார். அவர் பணியிடத்தில் சக ஊழியர்களாலும், மேல் அதிகாரிகளாலும் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளானர். ஆபாச மின்னஞ்சல்கள், உடைகளையும் உடலையும் விமர்சிக்கும் அருவருக்கத்தக்க பேச்சுகள், முன்னாள் மேல் அதிகாரியுடன் இருந்த உறவினை கொச்சைப்படுத்தி அநாகரிகமாக பேசுதல் போன்ற மூன்றாம் தரமான நடத்தையை இவர் மேல் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர்.

தனக்கு நடந்த தாக்குதல்களைக் குறித்து மனித வளத் துறையினரிடம் முறையிட்ட அதிதிக்கு நியாயம் கிடைக்கவில்லை. ‘குழுவாக இணைந்து வேலை செய்யும் தன்மை இல்லாதவர்’ என்று குற்றம் சாட்டப்பட்டு அந்த இயல்பை மாற்றிகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளார். இதனால் அதிதி தன் வேலையை ராஜினாமா செய்தார். முதலில் அதை ஏற்க மறுத்த நிறுவனம், பின்பு அவரை நிரந்தர பணி நீக்கம் செய்து, அவரது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது.

ஊடகங்களில் விஷயம் வெளியில் வந்ததும் கே.பி.எம்.ஜி நிறுவனம், உச்சநீதிமன்றத்தின் ‘விசாகா வழிகாட்டல் முறைக்கு’ ஏற்ப விசாரணை கமிட்டியை உருவாக்கியது. ‘தன்னை வேலையிலிருந்து தூக்கி எறிந்தவர்களுக்கு, தன்னைக் கட்டுப்படுத்த எந்த அதிகாரமும் இல்லை’ என்று கூறி விசாரணை கமிட்டியை அதிதி புறக்கணித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜூலை மாதம் 2007-இல், பாலியல் தொல்லைகள் தந்த மூன்று பேரின் மீதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கண்டிக்காமல் விட்ட ஏழு மேலதிகாரிகளின் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார்.

அவினாஷ் விஜயசங்கர் – சி.ஏ., விக்ரம் உத்தம் சிங் – நிதித் துறை தலைவர், அபிசர் திவானி -பார்ட்னர், அனீஷ் மலூ – இணை இயக்குனர் ஆகிய குற்றவாளிகள் மீதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக நிலோபர் ஈரானி – இயக்குனர், ரிச்சர்ட் ரெக்கி – சி.ஈ.ஓ., ரஸ்ஸல் பெரேரா, சமீத் மாத்துர் ஆகிய உயர் அதிகாரிகள் மீதும் புகார் பதிவு செய்யப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.எஸ். கந்தேபார்கர், வி.கே.தகில்ரமணி ஆகியோரைக் கொண்ட அமர்வு ஆகஸ்ட் 2008-இல் இந்த வழக்கினை விசாரித்தது. ‘நடந்த பாலியல் குற்றங்களைக் குறித்து, அலுவலகத்தில் அதிதி புகார் செய்ததற்கான ஆதாரங்கள் இல்லையென்றும், நிறுவனத்தின் உட்கட்ட விசாரணையில் அவர் பங்கேற்கவில்லை என்றும்’ காரணங்களை கூறி, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தனர்.

வெற்றி கண்ட கே.பி.எம்.ஜி நிறுவனம், ‘அதிதியின் சார்பாக மகாராஷ்டிரா மாநில பெண்கள் கமிஷன் நடத்திய ஆய்வு நியாயமானதாக இல்லை’ என்று உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. செப்டம்பர் 2008-இல் வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான அமர்வு, ஆய்வு நடவடிக்கைகளை தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. நவம்பர் 2008 உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்க்கும் அதிதியின் மேல் முறையீட்டை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் பன்சல் தள்ளுபடி செய்தனர்.

மூன்று பாலியல் குற்றவாளிகளும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மேலாளர்களும் எந்த விதமான தண்டனையும் இல்லாமல் உயர்ந்த பதவிகளில், லட்சங்களில் சம்பாதித்துக் கொண்டு சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர்.

அதிதி நடந்த கொடுமைகளுக்கு நியாயம் கேட்டு, தேசிய பெண்கள் கமிஷன், மகாராஷ்டிரா மாநில பெண்கள் கமிஷன், மும்பை உயர்நீதி மன்றம், போலீஸ் என்று எல்லாரையும் அணுகியும் நியாயம் கிடைக்காமல் போராடிக்கொண்டிருக்கிறார். மதிப்புடன் வாழும் உரிமையையும் வேலை செய்யும் உரிமையும் இத்தனை ஆண்டுகளாக இழந்துள்ள அதிதி ‘அரசு தன்னை முழுமையாக கைவிட்டுள்ளது’ என்று குமுறுகிறார்.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான, விக்ரம் உத்தம் சிங் கே.பி.எம்.ஜி.யில் முக்கிய பதவி வகித்து வந்திருக்கிறார். பெண்கள் மீதான வன்முறை பற்றிய  ஊடக கவனம் அதிகமான பிறகு அண்மையில் இச்சம்பவம் தொடர்பான செய்திகளும் வெளிவந்து, வழக்கு உயிர்ப்பிக்கப்பட்ட நிலையில்தான் தன் பதவியை சென்ற ஆண்டு இறுதியில் ராஜினாமா செய்துள்ளார்.

நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் ‘பெண்களின் நலன்களை பாதுகாக்கும் நடைமுறைகள் நிறுவனத்தில் இல்லை’ என்பதைக் குறித்து பற்றி மாநில பெண்கள் கமிஷனுக்கு எழுதிய கடிதம் காணாமல் போயிருக்கிறது. அனகா சர்போத்தார் என்ற இக்கமிஷனின் முன்னாள் உறுப்பினர், தான் அந்த கடிதத்தை பார்த்தாக உறுதி செய்தும், கமிட்டியின் மற்ற இரண்டு, பெண் உறுப்பினர்கள் அதை அந்த கடிதத்தை பார்த்ததில்லை என்று கூறுகின்றனர்.

இப்படி எல்லா தரப்பிலும் கே.பி.எம்.ஜி நிறுவனத்தின் செல்வாக்கு கோலோச்சியிருக்கிறது.

ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் அலுவலகங்களை கொண்டிருக்கும் ஐ.எஸ்.எஸ். குழுமத்தை சேர்ந்த ஐ.எஸ்.எஸ். ஹைகேர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணி புரிந்த பெண் ஊழியர் சகானா வில்லியம்ஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாலியல் தாக்குதல்களைப் பற்றி புகார் கொடுத்துள்ளார். உடனே அவரை நிரந்தர பணி நீக்கம் செய்து பல தவறுகளுக்கு அவரை பொறுப்பாக்கி  குற்றவாளியாக்கியுள்ளது அந்நிறுவனம். சகானா மீது அவதூறு வழக்கையும் தொடுத்துள்ளது.

சகானா வில்லியம்ஸ் நிறுவனத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கூட உயர் நீதிமன்றத்தை அணுகவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

‘பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பண பலம், செல்வாக்கு மூலம் எந்த விதமான சட்ட மீறல்களிலிருந்தும் தப்பித்து விட முடிகிறது. அவர்களுக்கு எதிராக போராடும் பாதிக்கப்பட்டவர்களை பலியாக்கி, பொருளாதார ரீதியாகவும், நேரடியாகவும் சுரண்டுகிறார்கள்’ என்கிறார் ஜனநாயக மாதர் சங்கத்தின் மகாராஷ்டிரா மாநிலச் செயலாளர் சோனியா கில்.

“பெண்களுக்கு பணியிடங்களில் நடக்கும் பாலியல் கொடுமைகளிலிருந்து காப்பாற்ற உருவாக்கப்பட புதிய மசோதாவில், நிறுவனங்கள் அதன் விதிமுறைகளை பின்பற்றத் தவறினால் அதைப்பற்றி பாதிக்கப்பட்ட பெண் நீதி மன்றதை அணுக முடியும் என்ற வசதி செய்யப்பட்டிருக்கிறது” என்கிறார் சமூக ஆர்வலர் அனாகா சர்போதார்.

ஆனால், “உட்பிரிவு 10ல் வழக்காடலுக்கு முன் சமரச பேச்சு வார்த்தைக்கு இடம் அளிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் புகாரை திரும்பப் பெற நிர்ப்பந்திக்கப்படும் வாய்ப்பும், அச்சுறுத்தப்படும் சூழலும் ஏற்படும்” என்கிறார் அவர்.

பெண்களின் உழைப்பை மட்டுமின்றி பாலியல் ரீதியாகவும் சுரண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களை எத்தனை புதிய சட்டங்களும் கட்டுப்படுத்தப் போவதில்லை என்பதுதான் நிதர்சனம்.

மேலும் படிக்க
At MNCs sexual harassment complainants face uphill battle

தென்பெண்ணையை தடுக்கும் கர்நாடகாவின் அடாவடித்தனம்!

2

தென்பெண்ணை ஆற்றின் தண்ணீரை தடுக்கின்ற கர்நாடக அரசின் அடாவடித்தனத்தை முறியடிப்போம்!

தென்பெண்ணை போஸ்டர்என்ற முழக்கத்தின் அடிப்படையில் ஓசூர் தாலுக்கா பாகலூரில் உள்ள சர்க்கிள் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 01.04.2013 மாலை 5 மணியளவில் இங்கு செயல்படும் புரட்சிகர அமைப்புகளான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மற்றும் அதன் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக நடத்தப்பட்டது. இவ்வமைப்பின் பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் சின்னசாமி, சங்கர், நாகராஜ், மற்றும் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

விண்ணதிர முழக்கங்கள் எழுப்பி பகுதிவாழ் பொதுமக்களை இந்த ஆர்ப்பாட்டத்தை கவனிக்க செய்தது பொருத்தமாக இருந்தது. இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியின் சூளகிரி பகுதி பொறுப்பாளர் தோழர் முருகேசன் நன்றியுரையாற்றினர், திரளான மக்கள் கூடிநின்று ஆதரவளித்து நன்கொடையும் தந்துச் சென்றனர்.

ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதற்குமுன் பாகலூர் பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகள் அச்சிட்டு ஆலைவாயில்கள், கடைவீதிகள், குடியிருப்புப் பகுதிகள், அரசுமருத்துவமனை, போன்று மக்கள் திரளாக கூடும் இடங்களிலெல்லாம் கூடி தெருமுனைப்பிரச்சாரம் செய்து விநியோகிக்கப்பட்டுள்ளன. பரவலான மக்கள் ஆதரவைப் பெற்று அவர்களிடம் விவாத்தை தூண்டிய அந்த துண்டறிக்கையில் வெளியிடப்பட்ட செய்திகளை அப்படியே இங்கே தருகிறோம்.

நன்றி!

துண்டறிக்கை

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

இயற்கையின் கொடையான தண்ணீர் உயிரின் ஆதாரம் இயற்கையின் விதிப்படி தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும், இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. தற்போதைய தலைமுறைக்கு மட்டுமின்றி வரவிருக்கும் தலைமுறைக்கும் தண்ணீரின் மீது முழு உரிமை உண்டு. கர்நாடகா மாநிலத்தில் சிக்கப்பல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திமலையில் உற்பத்தியாகி ஒசகோட்டம், ஒரத்தூர் வழியாக வரும் “தட்சிணப் பிணாகினி ” ஓடை, கொடியாளம் பகுதியில் தமிழகத்தை தொட்டு தென்பெண்ணை ஆறாக தமிழக எல்லைக்குள் நுழைகிறது.

தென்பெண்ணை ஆர்ப்பாட்டம்இந்த தென்பெண்ணை ஆறு கொடியாளம் தடுப்பாணையைத் தாண்டி ஓசூரில் உள்ள கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை, பாடூர் ஏரிகளை நிரப்பி, தருமபுரியின் சில பகுதிகளை நனைத்து திருவண்ணாமலையில் உள்ள சாத்தனூர் அணையில் வழிந்து விழுப்புரம் வழியாகச் சென்று கடலூரில் கடலில் சென்று கலக்கிறது. வழிநெடுக 2000-த்திற்கும் அதிகமான ஏரிகளை நிரப்பி விவசாயத்திற்கு பாசன வசதியை உருவாக்கியுள்ளது. இதனால் பல லட்சம் விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள். கிருஷ்ணகிரியில் மட்டும் 3 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் நெல், தென்னை,கரும்பு, வாழை, காய்கறிகள், பூ என பயிரிட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். மேலும் கெலவரப்பள்ளி அணையில் தண்ணீரை சுத்திகரித்து குடி தண்ணீராக பெருமளவு ஒசூர் மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் ஓசூரிலுள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் இந்த நீராதாரத்தை நம்பித்தான் செயல்பட்டு வருகின்றன.

இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டுக்கு வரும் ஒட்டுமொத்த தண்ணீரையும் சதித்தனமாக கர்நாடகா அரசு ஒரத்தூர் ஏரியில் மிகப் பெரிய அளவில் ஒரு பம்ப்பிங் ஸ்டேசன் அமைத்து அதன் மூலம் முழுத் தண்ணீரையும் ஒசகோட்டா ஏரிக்கே திருப்பி அங்கிருந்து கோலார் தங்கவயல், மாலூர் பகுதிகளில் உள்ள 200 க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கும், குண்டூர், மானியங்கிரி, சிக்கத்திருப்பதி ஏரிகளுக்கு கால்வாய் மூலம் கொண்டுச் செல்ல 54- கோடி நிதி ஒதுக்கீடும் செய்து அடிக்கல் நாட்டி இப்போது அதனை கடந்த மார்ச் 11ம்தேதி முதல் தீவிரமாக அடாவடித்தனமாக அமுல்படுத்தியும் வருகிறது. ஏற்கனவே தென்பெண்ணையாற்றில் பெங்களூருவின் கழிவுநீர் முழுவதும் கலக்கப்படுகிறது. அவ்வாறு கலக்கப்படுவதால் ஆற்று நீர் அணைத்தும் நாற்றமெடுத்து நாறுகிறது. இந்நிலையில் கர்நாடக அரசின் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால்…பட்டுவேட்டிக்கு கனவு கண்டிருந்தபோதே மிஞ்சியிருந்த கோவணமும் களவாய்போன கதையாக தென்பெண்ணையாறு மற்றொரு கூவமாகி கழிவுநீர் மட்டும் பாயும் சாக்கடையாக மாறிவிடும் அபாயத்தில் உள்ளது.

ஏற்கனவே, காவிரியில் தமிழகத்திற்கு நியாயமாக தர வேண்டிய தண்ணீரை மறுத்து அடாவடி செய்த கர்நாடக அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பை கூட காலில் போட்டு மிதித்துவிட்டு காவிரி டெல்டா விவசாயிகளை பசியாலும், பட்டினியாலும் வதைத்து நாடோடிகளாக்கியது. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியைக் கைப்பற்ற பலமுறை இனவெறியைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்தியது இந்துமதவெறி பாரதிய ஜனதா கட்சியின் அரசு. இப்போது தென்பெண்ணை ஆற்றை தடுத்து அரைகுறை விவசாயத்தையும் ஒழித்துக்கட்டி, தமிழகத்தை முழு பாலைவனமாக மாற்ற அராஜகமாக களமிறங்கியுள்ளது கர்நாடக இனவெறி பி.ஜே.பி அரசு. தினமும் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் தமிழகத்துக்கு வரும் தென்பெண்ணை ஆற்றின் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. ஓசூரிலுள்ள கெலவரப்பள்ளி அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென குறைந்துவருகிறது.

கெலவரப்பள்ளி அணையில் இருந்து ஓசூர் நகராட்சி குடிநீர் தேவைக்கு வழங்கப்படும் தண்ணீர் தற்போது 5 லட்சம் லிட்டரும், சிப்காட் தொழிற்பேட்டைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீராகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது.

1892 ம் ஆண்டு மெட்ராஸ்-மைசூர் மாகாணங்களின் ஒப்பந்தத்தில் இரு மாநிலங்களின் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு புதிய நீர்த்தேக்கம் கட்டவோ, பாசனத் திட்டத்தை செயல்படுத்தவோ முயற்சி செய்தால் அதுகுறித்து தமிழக அரசிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் இதையும் மதிக்காமல் கர்நாடக அரசு அடாவடியாக இந்த தண்ணீர் உறிஞ்சும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு, வாழை, ராகி, உள்ளிட்ட பயிர்கள் மற்றும் முட்டைகோஸ், காலிஃபிளவர், கேரட், குடை மிளகாய், ரோஜா உள்ளிட்ட காய்கறிகள், மலர்செடிகள் அனைத்தும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

காவிரியை தொடர்ந்து தற்போது தென்பெண்ணை ஆற்று நீரையும் உறிஞ்சுகிறது. மின்சாரம் இல்லையென்றாலும்கூட ஜெனரேட்டரை பொருத்தி 24 மணிநேரமும் வக்கிரமாக உறிஞ்சிவருகிறது கர்நாடக இனவெறி பி.ஜெ.பி அரசு.

கர்நாடக அரசின் இனவெறி நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஆளும் காங்கிரசு அரசு துணை போகிறது. தி.மு.க., அ.தி.மு.க போன்ற தமிழக ஓட்டுக் கட்சிகள் கர்நாடக அரசின் இந்த இனவெறி நடவடிக்கையை எதிர்க்கவோ, தடுத்து நிறுத்தவோ செய்யாமல் அறிக்கை விடுத்து நாடகமாடிவருகின்றனர்.

பாதிக்கப்பட இருப்பது தமிழக விவசாயிகளும், தமிழக உழைக்கும் மக்களும்தான்! ஆகையால், தமிழக விவசாயிகளையும், தமிழக உழைக்கும் மக்களையும் ஓரணியில் திரட்டி, மத்திய-மாநில அரசுகளுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும். அந்த வகையிலான போராட்டம்தான் தமிழகத்தின் உரிமையை தற்காத்துக் கொள்ள உதவும்! அதற்கான மக்கள் எழுச்சியை உருவாக்க ஓட்டுக்கட்சிகளை புறக்கணித்து நக்சல்பாரிகளின் தலைமையின்கீழ் ஓரணியில் மக்கள் திரட்டப்படவேண்டும்!

முழக்கங்கள்:

தமிழக அரசே!
தென்பெண்ணை ஆற்றை பாதுகாத்திடு!
தண்ணீரை தனியார்மயமாக்கும் தேசிய நீர்கொள்கை 2012 ஒப்பந்தத்தை திரும்பப் பெறு!

உழைக்கும் மக்களே!
தென்பெண்ணை ஆற்றில் தமிழகத்தின் நீர்ப்பாசன உரிமையை மீட்டெடுப்போம்!
விவசாயிகளின் வாழ்வுரிமையை பாதுகாக்க வீதியில் இறங்கிப் போராடுவோம்!
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் தனியார்மய- தாராளமய- உலகமயம் என்கின்ற மறுகாலனியாக்க கொள்கைகளை முறியடிப்போம்!

விவசாயிகள் விடுதலை முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. தமிழ்நாடு.

தொடர்புக்கு: தோழர். ரவிச்சந்திரன், சூடாபுரம் – கைபேசி எண்: 8883092572.
தகவல் : புதிய ஜனநாயகம் செய்தியாளர், ஓசூர்.

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

1

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2013
புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

1. ஈழத் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும் பங்காளி ஐ.நா.வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்! தமிழகத்தில் மீண்டும் மக்கள் எழுச்சியைத் தோற்றுவிப்போம்!
– தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்

2. ஈழம் : மாணவர் எழுச்சியில் ஒளிந்து கொள்ளும் துரோகிகள், பிழைப்புவாதிகள்!

3. ஹியுகோ சாவேஸ் (1954-2013) – அமெரிக்காவை மண்டியிட வைத்த வெனிசுலாவின் வீரப்புதல்வன்!
மக்கள் சக்தியின் முன், அமெரிக்க மேலாதிக்கம் காகிதப்புலிதான் என்பதைத் தனது ஆட்சி நெடுகிலும் நிரூபித்துக் காட்டியவர் சாவேஸ்.

4. பெண்கள் மீதான வன்கொடுமைநீர்த்துப் போன சட்டமும் திருந்தாத அதிகார வர்க்கமும்!
பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கண்டு ஆணாதிக்க வெறியர்கள் அஞ்சிவிடவில்லை. சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளும் போலீசும் குற்றங்களைத் தடுப்பதுமில்லை.

5. ஆள்மாறாட்டக் குற்றவாளிக்கு உடந்தையாக நிற்கும் அரசியலமைப்பு முறை!

6. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்!
– புரட்சிகர அமைப்புகளின் தொடர் பிரச்சாரம்

7. “அய்யங்கார்” என்பது டிகிரியா, டிப்ளமோவா? – இந்து அறநிலையத் துறையே பதில் சொல்!

8.  ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் எழுச்சிமிகு பேரணி – ஆர்ப்பாட்டம்!

9. நில அபகரிப்பே இனி விவசாயக் கொள்கை!
விளைநிலங்களை அபகரித்துப் போடப்படும் ‘வளர்ச்சி’த் திட்டங்களுக்கும் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கும் இடையே எந்தவொரு சம்பந்தமும் கிடையாது.

10. விவசாயக் கடன் தள்ளுபடி ஊழல்: கோமான்கள் நடத்திய வக்கிரக் கொள்ளை!
கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளின் பெயரால் நடந்துள்ள இந்த ஊழல், காங்கிரசு ஆட்சியின் கேடுகெட்டத்தனத்தைக் காட்டுகிறது.

11. பட்ஜெட் 2013-14 : பன்னாட்டு நிதிச் சூதாடிகளுக்குச் சமர்ப்பணம்!
பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்க அந்நிய நிதிமூலதனமே கதி என்கிறார், ப.சி.

12. ஹைதராபாத் குண்டுவெடிப்பு: காக்கிச் சட்டை வெளியே! காவிப்புத்தி உள்ளே!!
அப்பாவி முசுலீம்கள் எவ்வித ஆதாரமும் இன்றித் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு வேட்டையாடப்படுவது நாடெங்கிலும் கேள்விமுறையின்றி நடந்து வருகிறது.

13. இஸ்லாமிய மதவெறியர்களுக்கு எதிராக வங்கதேச மக்களின் எழுச்சி!
போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இஸ்லாமிய மதவெறியர்களைத் தண்டிக்கக் கோரி வங்கதேச மக்கள் நடத்திவரும் போராட்டங்கள் முசுலீம்கள் குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளை உடைத்தெறிகிறது.

14. மார்ச் 15 மற்றும் 20-ஆம் தேதிகளில் தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள்.

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

பாலியல் குற்றங்களில் நம்பர் 1 இராணுவம் எது?

10

மெரிக்காவின் முன்னாள் இராணுவ வீரர்கள் நான்கு பேர், பணியிடத்தில், இராணுவ அதிகாரிகளாலும், சக ஊழியர்களாலும் அவர்கள் மேல் ஏவப்பட்ட பாலியல் தாக்குதல்களைப் பற்றிய அதிர்ச்சியுட்டும் அனுபவங்களை, அண்மையில் நடந்த செனட் விசாரணையில் பகிர்ந்து கொண்டனர்.  அமெரிக்க இராணுவ நீதிமுறைகளை கேள்விக்குள்ளாக்கி, அதை மாற்றி அமைக்கவும் கோரியுள்ளனர்.

அமெரிக்க இராணுவம்பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் பெண்கள், ஒரு ஆண். ‘இராணுவ சட்ட விதிகள், பாதிக்கப்பட்டவர்கள் மீது எதிர்த்தாக்குதல்களையும், அச்சுறுத்தல்களை தொடுத்து, குற்றவாளிகளை தண்டனை ஏதுமின்றி தப்பிக்க உத்திரவாதம் செய்தன’ என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ரெபேக்கா ஹவ்ரில்லா என்ற பெண் இராணுவ வீரர், ‘இராணுவ கிரிமினல் நீதித்துறை முற்றிலும் ஒழுங்கற்றது’ என்கிறார். இராணுவ சார்ஜண்டாக இருந்த ஹார்வில்லா, 2007 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் போர்முனையில், வெடிகுண்டு அகற்றும் நிபுணராக பணியாற்றியுள்ளார்.

அங்கு ஒரு சக இராணுவ வீரன் அவரை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளான். அவன் மீது புகார் கொடுத்த ஹார்வில்லாவை, பழிவாங்கும் நோக்கில், அவருடைய அந்தரங்க படங்களை சமூக இணைய தளங்களில் வெளியிட்டுள்ளான். தொடர்ந்து, மேல்அதிகாரிகளிடம் முறையீடு செய்தும், எந்தவித பாதிப்பும் தண்டனையுமின்றி குற்றவாளி தப்பித்துவிட்டான்.

ஆனால் குற்றப்பதிவு செய்த ஒரே காரணத்தால், மணிக்கணக்கில் விசாரணை என்ற பெயரில் தொல்லைகளும், கேட்கத்தகாத கேள்விகளும் தான் ஹார்வில்லாவிற்கு மிஞ்சின.

இறுதியில் இராணுவ மத குருவான சாப்லனை அணுகியிருக்கிறார் ஹார்வில்லா. ஆறுதலாக பேசியவ அவர், ‘இந்த பாலியல் தாக்குதல்கள் கடவுளின் விருப்பத்தின் பேரில் நடந்துள்ளன என்றும் கடவுள் மீது முழு கவனமும் திரும்பி, மீண்டும் தடையின்றி தேவாலயத்திற்கு வருவதற்காகவே இத்திருவிளையாட்டை நடத்தியுள்ளார்’ என்று கடவுள் மீது பழியை போட்டுள்ளார்.

பிரையன் லூயிஸ் என்ற பாதிக்கப்பட்ட ஆண், இராணுவத்தில் பணியாற்றும் ஆண் சேவை பிரிவினர் இவ்வாறான பாலியல் தாக்குதல்களுக்கு பெரும்பாலும் ஆளாவதாக கூறுகிறார். 1997-இல் இராணுவ கப்பல் படையில் இணைந்த இவரின் முதல் கடல் பயணத்திலேயே, மேல் அதிகாரி ஒருவரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதைப் பற்றி புகார் செய்யக்கூடாது என்று மேல் அதிகாரி அச்சுறுத்தியும், கேளாமல், செயல்பட்டதால், பிரையனுக்கு ஆளுமை சிதைவு (personality disorder) ஏற்ப்பட்டுள்ளது என்று முத்திரை குத்தி பதவி நீக்கம் செய்துள்ளனர்.

இராணுவ அதிகாரிகளை எதிர்க்கும், பலரின் எதிர்காலம் இப்படித்தான் சீரழிக்கப்படுகிறது என்றும் எதிர்காலத்தில் அவர்களுக்கு எப்போதும் வேலை கிடைக்காமல், உளவியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி பதவி நீக்கம் செய்யப்படுகின்றனர், என்கிறார் பிரையன்.

பாதிக்கப்பட்ட பிரிகெட் மெக்காய் என்ற பெண்மணி, தன்னுடைய 19 வயதில் இராணுவத்தில் சேர்ந்துள்ளார். பணியின் ஆரம்பத்திலேயே, தன் சக படைவீரனால் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு, பின் தன்னுடைய இரு மேல் அதிகாரிகளால் தொடர்ச்சியான பாலியல் தொல்லைகளுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.

மேல் அதிகாரி ஒருவர், தன்னுடைய நேரடி கண்காணிப்பில் இயக்கப்படும் பிரிவில் இவரை மாற்றுவதற்கு கோரியிருந்தானாம். அயோக்கியனான அவனுடன், ஒரு நாள் முழுவதும் ஒரே அறையில் இருப்பதைப்பற்றி நினைத்து கூட பார்க்கமுடியவில்லை என்று குமுறுகிறார்
மெக்காய்

‘இராணுவத்தை பொறுத்தவரை இவ்வாறான சீருடை அணிந்த குற்றவாளிகளுக்கு தண்டனை என்பது கிடையாது’ என்றும் ‘பாலியல் ரீதியான தாக்குதல்கள், இராணுவத்தில் ஆள் தேர்வின் போதே, ஆணுக்கும், பெண்ணுக்கும் துவங்கிவிடுகின்றன’ என்கிறார் அவர்.

பணியாற்றும் பெண்களுக்கான நடவடிக்கை கூட்டமைப்பின் இயக்குனராக இருக்கும் அனு பகவதி என்பவர், தான் கடல்துறை அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் தினமும், பிற இராணுவ வீரர்களாலும் அதிகாரிகளாலும் வேலைகளில் வித்தியாசப்படுத்துதலையும், பாலியல் தொந்தரவுகளையும் சந்தித்தாக கூறியிருக்கிறார்.

இளம் சிறார் பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்த போது பிற இராணுவ வீரர்களினால், பல பாலியல் வல்லுறவு தாக்குதல்கள் நிகழ்ந்ததை, கண்ணால் பார்த்து, நீங்கா சாட்சியமாக மனதில் அவை இன்றும் உள்ளன என்று வேதனைப்படுகிறார்.

தவறிழைத்தவர்களுக்கு பதவி உயர்வு, பணி – இடம் மற்றும் பிரிவு மாற்றம் கொடுத்து தண்டனையிலிருந்து தப்பிக்க வைப்பதும், புகார் செய்யும் பாதிப்புக்கு உள்ளானவர்களை ‘பொய் பேசுகிறார்கள், அவதூறு பரப்புகிறார்கள், ஆண்களின் நன்மதிப்பை கேலிக்கூத்து ஆக்குகிறார்கள்’ என்று கூறி வாய்மூடச் செய்யும் முறைதான் இராணுவ நீதிமுறையின் வழக்கமாக இருந்துள்ளது என்று சென்ட் குழுவினர் முன்பு எடுத்து கூறியுள்ளார்.

செனட்டர்களின் குழு, இராணுவ வழக்கறிஞர்களையும், அதிகாரிகளையும் விசாரித்தது. அதில் முக்கியமாக, விமானப்படை ஜெனரல் கிரைக் பிரான்க்ளின் என்பவர் தன் துணை தளபதியான ஜேம்ஸ் வில்கர்சன் என்பவரின், தவறான பாலியல் நடத்தைக்காக, வழங்கப்பட்ட ஒரு ஆண்டு சிறைத்தண்டனையை, தன் அதிகாரத்தின் முலம் ரத்து செய்துள்ள, வழக்கு விசாரிக்கப்பட்டது.

எல்லாவிதமான சாட்சியங்கள் மூலம் ஜேம்ஸ் வில்கர்சன் செய்த குற்றங்கள் நிரூபணம் செய்யப்பட்டும், குற்றவாளியை தப்பிக்க வைக்கும் நோக்கில் தன் அதிகாரத்தைக் கொண்டு ஜேம்ஸினை காப்பாற்றியிருக்கிறார் ஜெனரல் பிரான்க்ளின்.

இவ்வழக்கு இப்போது மறு பரிசீலனைக்கு அனுப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 19,000 ஆண், பெண் இராணுவ ஊழியர்கள் இவ்வாறான பாலியல் தாக்குதலுக்கு ஆளாவதாகவும் அதில் 3,200 தாக்குதல்கள் தான் பதிவு செய்யப்படுகின்றன என்றும் தெரிவிக்கிறார் முன்னாள் பாதுகாப்பு செயலர் லியோன் பனேட்டா.

உலகெங்கும் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்வதற்காக பெரும் செலவில் இராணுவத்தை உருவாக்கி பராமரிக்கும் அமெரிக்கா, தனது இராணுவ வீரர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட பாதுகாக்காமல் ஆளும் வர்க்க ஏவல் படையாகவே வைத்திருக்கிறது என்பதை இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன!

மேலும் படிக்க
Rape victims say US military justice failed them
Mlitary sexual assault

அரசு மருத்துவமனைகளை சீரழிக்கும் மறுகாலனியாக்கம்!

2

ரசு மருத்துவமனைகளை சீரழிக்கும் மறுகாலனியாக்க கொள்கைகளை மோதி வீழ்த்துவோம் என்ற தலைப்பில் திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் 27.03.13 அன்று மாலை 6 மணிக்கு மணலி அண்ணாசிலை அருகில் தெருமுனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் தொடங்கிய தெருமுனைக்கூட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் சொ. செல்வகுமார் தலைமை தாங்கினார். தலைமையுரையில், உலக அளவில் சிறந்த மருத்துவத் துறை என்று பெயரெடுத்துள்ள இந்திய மருத்துவமனைகளின் அவலத்தை அம்பலப்படுத்தத் தொடங்கி, மணலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மாதம் நடந்த பெண் சிசுக் கொலையை போலவே தமிழ்நாடெங்கும், இந்தியாவெங்கும் உழைக்கும் மக்கள் நித்தமும் கொலை செய்யப்படுகின்றனர் என்றும், சென்னை மகப்பேறு மருத்துவமனையில் ஒரு குழந்தையை எலி கடித்ததையும், சரியான பராமரிப்பில்லாததால் விக்னேஷ் என்ற மாணவனை காவு கொண்ட அரசு மருத்துவமனையின் அவலத்தையும், இம்மாதிரியான கொலைகளுக்கு காரணம் அரசின் தனியார் மய கொள்கைகளே. இந்த கொள்கைகள்தான் அரசு மருத்துவமனைகள் திட்டமிட்டு சீரழிக்கப்படுவதற்கும், குடிதண்ணீர், கல்வி, சுகாதாரம் போன்ற அனைத்தும் தனியார்மயமாக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று பதிய வைத்தார்.

சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச்செயலாளரும் திருவள்ளூர் மாவட்ட செயலாளருமான தோழர் ம.சி.சுதேஷ்குமார், அரசு மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தை மாற்றி மாற்றி செயல்படுத்தி வரும் அரசு,  இதன் மூலமாக மக்களை தனியார் மருத்துவமனையை நோக்கி தள்ளுகின்றது. மக்களை ஒடுக்க ராணுவத்துக்கு ரூ 1,60,000 கோடி ஒதுக்கும் அரசு சுகாதாரத் துறைக்கு வெறும் ரூ 24,000 கோடி மட்டும் ஒதுக்குகிறது. கஜானா காலி, பணமில்லாததால்தான் மருத்துவமனையை சீரமைக்க முடியவில்லை என்று கூறுவது அயோக்கியத்தனம். சேவைத்துறையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு “காட்” ஒப்பந்தத்தின்படி அனைத்தையும் தனியார்மயப்படுத்த துடிக்கின்றது அரசு. மருத்துவத்துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் இந்த அரசினுடைய கொள்கைகள் உழைக்கும் மக்களுக்கு எதிரானதாக உள்ளது. அனைத்து ஓட்டு கட்சிகளும் இந்த கொள்கைகளுக்கு துணை நிற்கின்றன. இதற்கு எதிராக போராடாமல் நமக்கு விடிவில்லை. அது நக்சல்பாரி தலைமையில்தான் சாத்தியம் என்று அறைகூவினார்.

திருவள்ளூர் மாவட்ட பிரச்சார குழு சார்பாக புரட்சிகர கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தனியார்மய கொள்கைகளுக்கு சேவை புரியும் ஓட்டுக்கட்சிகளை அம்பலப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்த கலை நிகழ்ச்சி உழைக்கும் மக்களிடையே வரவேற்பை பெற்றது. அரசு மருத்துவமனைகள் சீரழிக்கப்படுவதற்கான காரணம் அரசின் தனியார்மய கொள்கைகளே என்பதை பகுதி மக்களிடத்தில் பதிய வைக்கும் விதமாக அமைந்தது.

இணைப்பு சங்கத் தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் என்ற 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த தெருமுனைக் கூட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தோழர் ஆனந்த்பாபு நன்றியுரைக்கு பின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மாவட்டம்

பத்திரிகையாளர்களே – மிக்சர் சாப்பிடவா சங்கம், காது குடையவா பேனா ?

16
ராஜா கைது

சன் டிவி ராஜான் நியூஸ் தொலைகாட்சியின் ஆசிரியர் ராஜா, செய்தி வாசிப்பாளர் அகிலாவுக்கு கொடுத்த பாலியல் தொந்தரவு குறித்தும், இதற்கு எதிராக துணிவுடன் அகிலா நடத்திவரும் போராட்டம் குறித்தும் அறிந்திருப்பீர்கள். சன் சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்திகளில் ஒருவராக 15 ஆண்டு காலமாக ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய ராஜா, புழல் சிறையில் சில நாட்களை கழித்துவிட்டு, நிபந்தனை பிணையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தினசரி கையெழுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறார். ராஜாவுக்குப் புரோக்கர் வேலைப் பார்த்த வெற்றிவேந்தன் என்ற நிருபர் இன்னமும் காவல்துறையால் தேடப்பட்டுவருகிறார். இது அகிலா என்ற தனியொரு பெண்ணின் பிரச்னை இல்லை. சன் டி.வி. என்ற தனியொரு நிறுவனத்தின் பிரச்னையும் அல்ல. தமிழ் ஊடகங்களின் அவலநிலைக்கு அகிலா ஓர் துலக்கமான உதாரணம்.

ராஜா போன்ற ஊடகப் பொறுக்கிகளுக்கு எதிராக வெளிப்படையாக களமிறங்கியிருக்கும் இந்தப் பெண்ணுக்கு அமைப்பு ரீதியாகவும், தனி நபர் என்ற அளவிலும் சிலர் உதவி வருகின்றனர். ஆனால் இதற்காகத் திரண்டு போராடியிருக்க வேண்டிய கடப்பாடுள்ள பத்திரிகையாளர் சங்கத்தில் இருந்து  இதுவரையிலும் ஒரு சவுண்டும் இல்லை. இந்தப் பிரச்னை எங்கேயோ சிங்கப்பூர் பக்கம், தாய்லாந்து பக்கம் நடப்பதைப் போலவே மௌனமாக இருக்கிறார்கள். இது அருவெறுப்பான மௌனம்; அச்சம் தரும் அமைதி. தங்கள் சொந்த வலிக்காகக் கூட போராடத் திராணியற்ற இவர்கள்தான் ஜனநாயகத்தின் நான்காவது தூண்களாம். ஊருக்கு நியாயம் சொல்கிறார்களாம். மக்களுக்கு உண்மைகளை உரக்கச் சொல்கிறார்களாம். என்ன வேடிக்கை இது?

சென்னையில் மட்டும் ஏழெட்டு பத்திரிகையாளர் சங்கங்கள் செயல்படுகின்றன. சென்னை பத்திரிகையாளர் மன்றம், பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு, மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் உள்ளிட்ட இந்த சங்கங்களுக்கு சென்னையின் பிரதானமான இடங்களில் அலுவலகங்கள் இருக்கின்றன. அதற்கு நிர்வாகிகள் இருக்கிறார்கள். குறைந்தது சென்னையில் மட்டும் 500 பத்திரிகையாளர்கள் இருப்பார்கள். மாநிலம் முழுவதும் கணக்கிட்டால் மாவட்டத்துக்கு ஒரு சங்கம் என வைத்துகொண்டாலும் இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டும். இந்த சங்கங்கள் மத்தியிலிருந்து இதுவரை ஈனஸ்வரத்தில் கூட ஒரு எதிர்ப்புக் குரல் எழவில்லை. ஏன்?

சன் டி.வி. என்ற பிரமாண்டம் இவர்களை அச்சுறுத்துகிறதா? ஏதாவது பேசினால் எதிர்கால வாய்ப்புகள் மறுக்கப்படும் என்று அஞ்சுகிறார்களா? வாய் திறந்தால் இருக்கும் வேலையும் பறிபோய்விடும் என்று அடங்கிக் கிடக்கிறார்களா? விடை எதுவாயினும், கேள்வி ஒன்றுதான். சொந்தத் துறையில், உடன் பணிபுரியும் ஒரு பெண் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சிறுகுரல் கூட எழுப்ப முடியவில்லை என்றால், காது குடையவா பேனாமுனை? மிக்சர் சாப்பிடவா சங்கம்?

பத்திரிகையாளர்களுக்கு தன்மானம் இல்லையா?

சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்துக்கும், ‘ஏர்போர்ட்’ பாலு என்ற பத்திரிகையாளருக்கும் மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் பஞ்சாயத்து ஆனது. பாலுவை ‘நாய், நாய்’ என்று திட்டிய விஜயகாந்த், ‘நீங்களா எனக்கு சம்பளம் தர்றீங்க?’ என்று கோபமாக கேட்டார். அதைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு சம்பளம் கொடுக்கும் போராட்டம் நடத்தினார்கள் பத்திரிகையாளர்கள். அதற்கும் முன்பாக தினமலரில் சினிமா நடிகைகளை தவறாக சித்தரித்து ஒரு கட்டுரை எழுதினார்கள். அதற்காக சினிமாக்காரர்கள் ஒரு கண்டனக் கூட்டம் நடத்தினர். அதில் பேசிய நடிகர் விவேக் பத்திரிகையாளர்களை அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சித்தார். உடனே ஊடக உலகமே சேர்ந்து அதற்கு ஆவேச கண்டனம் தெரிவித்தது.

மிக அண்மையில் சென்னை ஐ.ஐ.டி.யில் ஒரு பத்திரிகையின் புகைப்படக்காரர் தாக்கப்பட்டார். அதற்காக வெகுண்டெழுந்த பத்திரிகையாளர் சங்கத்தினர் சாலை மறியல் செய்து நீதி கேட்டனர். கடந்த வாரம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. அப்போது ‘புதிய தலைமுறை’ தொலைகாட்சியின் நேரடி ஒளிபரப்பு வாகனத்தை தள்ளி நிறுத்துமாறு காவல்துறையினர் சொல்ல, அது தொடர்பாக இரு தரப்புக்கும் வாய்த் தகராறு மூண்டது. உடனே அங்கேயே பத்திரிகையாளர்கள் சாலை மறியல் செய்தனர். ‘தூத்துக்குடியில் நடந்த பிரச்னைதானே’ என சென்னை பத்திரிகையாளர் மன்றம் மௌனம் காக்கவில்லை. அதை கண்டித்து கண்டன அறிக்கை வெளியிட்டது.

பத்திரிகையாளர் மன்றம் சும்மா இருக்கிறது என்று நாம் “அபாண்டமாக” குற்றம் சாட்ட முடியாத அளவுக்கு அவர்கள் மேற்கண்ட வேலைகளை செய்திருக்கிறார்கள்தான். ஆனால் யாருக்காக? மேற்கண்ட கண்டனங்களும், போராட்டங்களும் பத்திரிகையாளர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்காக நடத்தப்பட்டவையா? வேலை கெட்டு முதலாளிக்கு நஷ்டம் வந்துவிடக்கூடாது, பத்திரிகையுலக முதலாளிகளின் கெத்துக்கு பங்கம் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இவை பேனாமுனையின் வலிமையை நிரூபிக்கும் போராட்டங்களா, பத்திரிகை முதலாளிகளின் வலிமையை ஒரு அரசியல்வாதிக்கும், நடிகருக்கும், போலீசுக்கும் நிரூபித்துக் காட்டும் போராட்டங்களா?

வேறு மாதிரி சொன்னால், வேலை செய்வதில் வெளியார்களால் இடையூறு நேரும்போது கூக்குரல் எழுப்பும் சங்கங்கள், தங்களை வேலையையே முதலாளிகள் பறிக்கும்போது பொத்திக்கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு ஊடக நிறுவனத்தில் இருந்தும் கொத்து, கொத்தாக பலர் வெளியேற்றப்படுகின்றனர். நீக்கத்துக்கான நியாயமான காரணம் எதுவும் சொல்லப்படுவது இல்லை. முறையான நோட்டீஸ் தரப்படுவதில்லை. ஒரு டீக்கடைக்காரர் தன்னிடம் வேலைபார்க்கும் டீ கிளாஸ் பையனை வேலையை விட்டு நிறுத்துவதாக இருந்தால் கூட நூறு ரூபாயை கையில் கொடுத்து அனுப்புவார். அந்த கருணைகூட ஊடக முதலாளிகளுக்கு கிடையாது. திடீர் என்று ஒருநாள் வேலை பறிபோகும் அவலம் இங்குதான் நடக்கும்.

எல்லோருக்கும் இது பொருந்தும்; பர்மனன்ட், காண்ட்ராக்ட், புரோபேஷனர்.. என்பதெல்லாம் சும்மா பெயருக்குத்தான். தானாக வேலையை விட்டுப் போனாலும் அதுவரையிலான பிடித்தத் தொகையை முறையாக தருவதில்லை. வேறு நிறுவனத்தில் வேலையில் சேர விடாமல் போட்டுக்கொடுக்கிறார்கள். இந்தக் கேடுகெட்ட நிலைக்கு எதிராக என்றைக்கேனும் பத்திரிகையாளர் சங்கங்கள் பேசியதுண்டா? கொடிபிடித்து கோஷம் போடவேண்டாம். குறைந்தபட்சம் லேபர் கோர்ட்டுக்குப் போகும் திராணியாவது உண்டா? இல்லை. தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்படும்போது தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாததுபோல் நடந்து கொள்ளும் சங்கம், முதலாளியின் தொழில் பாதிக்கப்படும்போது மட்டும் கிளர்ந்தெழுகிறது என்றால், அதற்குப் பெயர் தொழிற்சங்கமா?

தங்கள் தொழிலையும் வணிகத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக பல்வேறு துறைகளிலும் முதலாளிகள் சங்கம் வைத்திருக்கிறார்கள். டெலிகாம், ஆட்டோமொபைல் போன்ற கார்ப்பரேட் பெருந்தொழில் முதலாளிகளில் தொடங்கி, கோயம்பேடு சந்தையின் காய்கனி வியாபாரிகள் வரையிலான அனைவருக்கும் இது பொருந்தும். பத்திரிகை முதலாளிகள் மட்டும்தான் தங்களுடைய தொழிலைக் காப்பாற்றும் பொறுப்பை பத்திரிகையாளர்களிடம் விட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

கோயம்பேடு முதலாளி தக்காளி விற்கிறார். பத்திரிகை முதலாளி கருத்தை அல்லவா விற்கிறார்! தக்காளி கூடை உடைந்தால், “நசுங்குவது முதலாளியின் இலாபம்தான்” என்று படிப்பறிவில்லாத லோடு மேனுக்குக் கூடத் தெரிந்திருக்கிறது. ஆனால் பத்திரிகையாளர்கள் படித்தவர்கள் என்பதால், நசுக்கப்படுவது கருத்து என்றும், அதனால் ஏற்படும் இழப்பு தங்களுடையது என்றும் நம்புகிறார்கள். அல்லது அப்படி நம்பிக் கொள்வது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது என்றும் கொள்ளலாம்.

சென்னையிலும் சரி, இதர மாவட்டங்களிலும் சரி… நடைமுறையில் பத்திரிகையாளர் சங்கங்கள் என்னதான் செய்கின்றன? லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டி பிடிபட்டால் போலீஸுக்குப் போன் செய்து விடுவிப்பது, குடித்துவிட்டு வம்பு செய்தால் சிபாரிசுக்குப் போவது, பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு ஓ.சி. பாஸ் வாங்குவது, புதுப்பட ரிலீஸ் அன்று கியூவில் நிற்காமலேயே டிக்கெட் வாங்குவது, அரசு அலுவலகங்களில் ‘பிரஸ்’ என்று சொல்லி குறுக்கு வழியில் காரியம் சாதித்துக்கொள்வது, போலீஸ் ஸ்டேஷனில் கட்டப்பஞ்சாயத்து செய்வது… இவற்றையெல்லாம் செய்யாத ஒரு சங்கமேனும் உண்டா?

சம்பளத்தை குறைவாகக் கொடுத்துவிட்டு ‘கவர்’ வாங்குவதை கண்டுகொள்ளாமல் விடுவது பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்படும் சலுகை அல்ல. அது சுய மரியாதையை மழுங்கச் செய்வதற்கான ஏற்பாடு. “சிரிப்பு போலீசு” போல “சிரிப்பு பத்திரிகையாளன்” என்ற காரெக்டர் இன்னும் சினிமாவில் வரவில்லை. அவ்வளவுதான். அப்படியே வந்தாலும் அதற்காக யாரும் அசரப்போவதில்லை.

கடந்த கருணாநிதி ஆட்சியில் ஒவ்வொரு ஊரிலும் பத்திரிகையாளர்களுக்கு அரை கிரவுண்ட் நிலம் கொடுத்தார். அதை வாங்குவதற்கு நீ, நான் என அடித்துக்கொண்டார்கள். இப்படி அரசு சலுகைகளை நேர்வழியிலும், குறுக்குவழியிலும் பெறுவதில் மட்டும்தான் அக்கறை காட்டுவோம் என்றால் அதற்கு பெயர் சங்கமா?

சென்னை ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் பிரமாண்ட கட்டடத்தில் ‘எஸ்.ஆர்.எம். மாளிகை’ என்ற பெயரில் சென்னை பத்திரிகையாளர் மன்றம் செயல்படுகிறது. இதைக் கட்டிக்கொடுத்தது ‘புதிய தலைமுறை’ முதலாளியும், கல்வி வியாபாரியுமான பச்சைமுத்து. அந்த நன்றி விசுவாசத்தை காட்டவேனும் சன் டி.வி. ராஜா கைது குறித்து பேசியிருக்கலாம். ஆனால் பேசவில்லை. அருகிலேயே இன்னொரு கட்டடடத்தில் இயங்கும் பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டும் கமுக்கமாக இருக்கிறது. ரிச்சி தெருவில் செயல்படும் எம்.யு.ஜே.வும் சைலண்ட் மோடுதான்.

சரி, சங்கங்கள்தான் இப்படி… தனிப்பட்ட வகையில் (ஓரிரு விதிவிலக்குகள் தவிர்த்து) பத்திரிகையாளர்கள் மௌனமாக இருக்கிறார்களே எதனால்? சன் டி.வி.யில் பணிபுரியும் ஒருவர் அந்தப் பெண்ணுக்காக பரிந்துபேசினால் அவரது வேலைக்குப் பிரச்னை வரும; அதனால் அங்கிருப்போர் பேசமுடியாது. மற்ற தொலைகாட்சிகள், செய்தித்தாள்கள், வார இதழ்களில் இருந்தும் சத்தமில்லை. பேசினால் சன் டி.வி.யில் இருந்து அழுத்தம் தந்து வேலையில் இருந்து நீக்கிவிடுவார்களா? நடக்கலாம். சன் டி.வி.யின் தலையீடே கூடத் தேவையில்லை. தான் ஆடாவிட்டாலும் தசையாடும் என்பதைப் போல, என்ன தான் போட்டியாளனாக இருந்தாலும், சக முதலாளிக்காக வர்க்க பாசத்துடன் முதலாளிகள் இப்படிப்பட்ட ஊர் நாயம் பேசும் நபர்களை களையெடுக்கலாம். அது முதலாளிகளின் வர்க்க உணர்வு. பத்திரிகையாளர்களிடம் இல்லாமல் போய்விட்ட உணர்வு.

பல பத்திரிகையாளர்களின் மூளை, ‘இவற்றை பேசினால் நமக்கு ஆபத்து’ என்று “டிஃபால்ட்டாக” சுய தணிக்கை செய்துகொள்கிறது.  ‘தன்னளவில் நேர்மையாக இருப்பது’ என்ற குறைந்தபட்ச அம்சம் கூட இப்போதைய பத்திரிகையாளர்களுக்கு இல்லை. ‘என்னால இந்த நியூஸை எல்லாம் எழுத முடியாது’ என எடிட்டரின் முகத்துக்கு நேரே சொல்லும் துணிவு இன்று யாருக்கும் இல்லை. ‘இந்தப் பிரச்னையை இந்த கோணத்தில் இருந்து அணுகக்கூடாது. இது ஒரு சார்பானது’ என ஆசிரியர் குழு கூட்டத்தில் குரல் உயர்த்தி விவாதிப்பதெல்லாம் அந்தக் காலத்து சினிமாக் காட்சிகளாகிவிட்டன. தனக்கென்று சொந்த கருத்து இருந்தாலும் கூட, அதை அலுவலக வாயில் டீ கடையில் அதிருப்தியாகப் பேசி கலைகிறார்களே தவிர அறவுணர்ச்சியுடன் சண்டையிடுவதில்லை. பத்திரிகையாளர்கள் என்பவர்கள் நிர்வாகத்தின் வசனத்துக்கு வாய் அசைக்கும் நடிகர்களாக மாறி வருகின்றனர்.

அலுவலகத்துக்கு வெளியே ‘நாங்கெல்லாம் பிரஸ்ஸு’ என்று வீராப்புக் காட்டும் இவர்கள், அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் ஓர் அடிமையின் உடல்மொழிக்கு மாறிவிடுகின்றனர். கிட்டத்தட்ட ஒரு போலீசு கான்ஸ்டபிளின் காரெக்டர்தான். உயர் அதிகாரிகள் கெட்ட வார்த்தைகளால் திட்டினாலும் சகித்துக்கொள்கிறார்கள்.

”நீ எல்லாம் இந்த வேலைக்கு வரலன்னு எவன் அழுதான்? ஊர்லயே மாடு மேய்க்க வேண்டியதானே?”, ”நீ எல்லாம் டீ கிளாஸ் கழுவதான் லாயக்கு”, ”இதை விட வேற என்ன புடுங்குற வேலை?” – இவை எல்லாம் தொலைகாட்சி, பத்திரிகை அலுவலகங்களில் ‘எடிட்டர் சார்’களால் நிருபர்களை நோக்கி, உதவி ஆசிரியர்களை நோக்கி வீசப்படும் வார்த்தைகள். அறிவு இருக்கிறதோ இல்லையோ… தன்மானமும், சுய மரியாதையும் உள்ள யாரும் இந்த வார்த்தைகளை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். வேறொரு துறையில் ஒரு ஊழியரைப் பார்த்து மேலதிகாரி இப்படிப் பேசினால் அடுத்த நொடி அதே வார்த்தையில் அந்த ஊழியர் பதிலடி கொடுப்பார் அல்லது அடி கொடுப்பார். இதற்கு படித்திருக்க வேண்டும்; அரசியல் அறிவு இருக்க வேண்டும் என்று அவசியமெல்லாம் இல்லை. தன்மானமும், சுய மரியாதையும் கொண்டவர்களால் இவ்விதம்தான் வினைபுரிய முடியும்.

நீலாங்கரை போராட்டம்
நீலாங்கரை துப்புவுத் தொழிலாளர் போராட்டம்

சமீபத்தில் சென்னை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை சென்றார். அப்போது மாநகராட்சியின் 185-வது வார்டு துப்புறவுப் பணியாளர் மல்லீஸ்வரி, தீனைய்யா ஆகியோர் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனர். முதல்வர் அம்மாவின் கண்களில் குப்பை பட்டுவிட்டால் கண்கள் அவிந்துவிடும் என பதறிய நீலாங்கரை காவல்துறை ஆய்வாளர் புகழேந்திக்கு டென்ஷன். உடனே அகற்றச் சொல்லி கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்க… தீனைய்யா ‘‘அப்படி எல்லாம் பேச வேண்டாம்” என ஆய்வாளரை கண்டித்தார். ‘‘என்னையே எதிர்த்துப் பேசுறியா?” என்று தீனைய்யாவை அடித்து, உதைத்து போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்று அங்கும் அடித்து உதைத்து அனுப்பப்பட்டார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி செங்கொடி தொழிலாளர் சங்கம் சார்பாக நீலாங்கரை உதவி கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. பத்து நாட்களாகியும் நடவடிக்கை எதுவுமில்லை. ஆத்திரமடைந்த துப்புறவுப் பணியாளர்கள் 500 பேர் ஒன்று சேர்ந்து தங்களது குப்பை லாரிகள் மற்றும் டிரை சைக்கிள்களுடன் நீலாங்கரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டார்கள். மூன்று மணி நேரம் அந்த பகுதியே ஸ்தம்பித்தது. ‘குப்பை அள்ளுரவனுங்கதானே?’ என இளப்பமாக எடைபோட்ட அந்த போலீஸ் பொறுக்கிக்கு தங்கள் வர்க்கத்தின் போராட்டக் குணத்தைக் காட்டினார்கள் தொழிலாளர்கள்.

தீனைய்யாவிடம் ஆள் அம்பு சேனை இல்லை. தெரிந்தவர்கள் செல்வாக்கான பதவியில் இல்லை. பணம் இல்லை. ஆனால் தன்னை அசிங்கப்படுத்தி பேசுபவன் போலீஸாகவே இருந்தாலும் முகத்துக்கு நேரே எதிர்த்துப் பேசும் தைரியமும், சுய மரியாதையும் அவரிடம் இருந்தது. ‘இப்போ அவசரப்பட்டு கோபப்பட்டுப் பேசினா நாளைக்கு இந்த இன்ஸ்பெக்டர் தொந்தரவு கொடுப்பானே?’ என்று எதிர்காலம் குறித்து காரியவாதமாக அவர் கவலைப்படவில்லை. ஆனால் பத்திரிகையாளர்களோ ‘எதிர்த்து பேசினால் வேலைபோய்விடும்’ என்று அஞ்சுகிறார்கள். அவர்களுடைய அச்சம் பொய்யானது என்று நாம் சொல்லவில்லை. அநீதியானது, நேர்மையற்றது என்கிறோம்.

கிராமப்புறங்களில் ஆதிக்க சாதி வெறியை எதிர்த்துப் பேசும்போது, “நீங்கபாட்டுக்கும் சாதி, அது இதுன்னு பேசிட்டு போயிடுவீங்க. ஊருக்குள்ள இருக்கப்போறது நாங்கதானே?” என்று ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த முதியவர்கள் பேசுவார்கள்.

அதுபோல “நீங்கபாட்டுக்கும் வெளியே இருந்துகிட்டு என்ன வேணும்னாலும் பேசலாம், எழுதலாம். உள்ளே இருந்துகிட்டு அதையெல்லாம் பண்ண முடியுமா? நாங்க இங்கே தொடர்ந்து வேலைப் பார்க்கனும்ல”  என்று பத்திரிகையாளர்கள் சிலர் கேட்க கூடும்.

இதை எப்படி புரிந்துகொள்வது? இவர்களுக்குள் நடுக்கத்துடன் துடித்துக்கொண்டிருக்கும் நற்குணத்தை பாராட்டிவிட்டு நகர்ந்து செல்வதா? ‘வேறு எதுவும் செய்ய முடியாத கையறு நிலை’ என இதை ஓர் அவலமாக எண்ணி கடந்து செல்வதா? இரண்டும் இல்லை. வெளிப்படையாகப் பேசினால் வரும் இன்னல்களை எதிர்கொண்டு, நேருக்கு நேர் மோதித்தான் இதை தீர்க்க முடியும். இரண்டில் ஒன்று… பொறுக்கி ராஜா… பாதிக்கப்பட்ட பெண்… இருவரில் யாருக்கு ஆதரவு என்று வெளிப்படையாக முடிவெடுக்க வேண்டும். மதில் மேல் பூனையாக இருந்து கொண்டு, “வெளியில் இருந்து ஆதரவு” தருவதற்கு இது ஒன்றும் மன்மோகன் சிங்கின் அமைச்சரவை அல்ல. அல்லது தார்மீக ஆதரவு தருகிறோம் என்று தலைமுழுகும் ஓட்டுக்கட்சிகளின் நாடகம் அல்ல.

இது சிந்திக்க வேண்டிய தருணம். மற்ற துறைகளை போலவே ஊடகங்களிலும் ஆட்குறைப்பு அதிவேகமாக நடக்கிறது. மின்னணு ஊடகத்தின் வளர்ச்சி, அச்சு ஊடகங்களின் ஊழியர் எண்ணிக்கையை காவு கேட்கிறது. காட்சி ஊடகங்களில் இளமைத்துடிப்பும், உத்வேகமும் இருக்கும் நாற்பதுகளின் முன்பகுதி வரையிலும் வேலைக்கு வைத்துக்கொண்டு, அதன்பிறகு துரத்தி அடிக்கப்படுகின்றனர். எப்ப்டி சமாளிப்பது இதை? ஒரே வழி சங்கம். ஒரு நேர்மையான, சுயமரியாதையுள்ள, சமரசமற்ற, போர்க்குணம் மிக்க ஊடகவியலாளர் சங்கம்தான் இன்றைய உடனடித் தேவை.

ராஜா கைதுபொறுக்கி ராஜாக்கள் சட்டங்களுக்குப் பயப்படமாட்டார்கள். “சங்கம் இருக்கிறது” என்ற அச்சம் மட்டுமே பொறுக்கி ராஜாக்களை தடுக்கும். வேலை உத்திரவாதமின்மை எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெண் ஊழியர்கள் மீது மேலாளர்களின் பாலியல் தொந்திரவுகள் தீவிரமடையும். ஆண் ஊழியர்கள் மத்தியில் அடிமைகளும் அதிகரிப்பார்கள்.

இன்று பெரும்பாலான பத்திரிகை அலுவலகங்களில் அச்சகப் பிரிவில் உறுதியான சங்கங்கள் செயல்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் நடத்தும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையின் பலன்தான் பத்திரிகையாளர்களுக்கு கிடைக்கிறது. அந்த நெல்லுக்குப் பாயும் தண்ணீர் இல்லை எனில் இந்த புல்லுக்கும் எதுவும் கிடைக்காது. அந்த அச்சக ஊழியர்களிடம் இருக்கும் ஒற்றுமையும், உறுதியும் பத்திரிகையாளர்களிடம் ஏன் இல்லாமல் போனது என்று சிந்திக்க வேண்டும்.

ஒரு ஆலைத் தொழிற்சங்கப் போராட்டம் அந்த ஆலைத்தொழிலாளிகளுக்கு மட்டுமே உரிமைகளை பெற்றுத் தரும். பத்திரிகையாளர்களுடைய போராட்டம் வேறு வகையானது. கருத்துரிமை, ஜனநாயகம் என்ற முகமூடிகளின் பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் முதலாளிகளின் முகவிலாசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம், மக்களிடம் உருவாக்கப்பட்டிருக்கும் பிரமைகளை இது உடைக்க முடியும்.

ராஜாவின் மீது புகார் கொடுத்த காரணத்தினால், வேறு பொய்க் குற்றங்களை ஜோடித்து, அகிலாவை தற்காலிகப் பணி நீக்கம் செய்திருக்கிறது சன் நிர்வாகம். இழப்புகளை சந்திக்காமல் தொழிலாளர்களின் உரிமைகள் எங்கும் நிலைநாட்டப்பட்டதில்லை. எப்படி யோசித்துப் பார்த்தாலும் கடைசியில் இதுதான் உண்மை. சண்டையில் கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?

அடிவாங்கி அடிவாங்கியே கிழியிற சட்டை, ஒரு வாட்டி சண்டை போட்டுத்தான் கிழியட்டுமே!

தனியார் கல்லூரி லாபவெறிக்கு 8 மாணவிகள் பலி!

2

8 அப்பாவி மாணவிகள் பலியானதற்கும், 40 பேர் படுகாயம் அடைந்ததற்கும் முக்கிய காரணம் ஜெயம், வெங்கடேஷ்வரா கல்வி முதலாளிகளின் லாபவெறியே! கண்டன ஆர்ப்பாட்டம்

1.3.2013 அன்று மாலை 6 மணி அளவில் இண்டூர் அருகே ஜெயம் பொறியியல் கல்லூரியின் பேருந்தும், வெங்கடேஷ்வரா கலை அறிவியல் கல்லூரியின் பேருந்தும் நேருக்குநேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 மாணவிகள் இறந்தனர்.

இக்கொடுமையை எதிர்த்து கொதித்தெழுந்த தோழர்கள் பலியான மாணவியின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பானுஸ்ரீயின் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் கூறி, கல்லூரிகளின் இக்கொடுமைகளுக்கு எதிராக உறுதியாக போராட வேண்டும் என்று முடிவு செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவ மாணவியரை சந்தித்து பேசிய தோழர்கள் இந்த விபத்து தனியார் கல்லூரிகளின் லாபவெறியால் விளைந்தது என்று விளக்கி பேசி இதற்கு எதிராக போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

3-ம் தேதி விவசாயிகள் விடுதலை முன்னணி பென்னாகரம் டெம்போ ஸ்டாண்டில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு கேட்டு கல்லூரி நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைக்கக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி பென்னாகரம் காவல் நிலையத்தில் விண்ணப்பித்தனர். போலீஸ், “நாளைக்குச் சொல்கிறோம்” என்று கூறிவிட்டு ஆர்ப்பாட்டம் நடக்கும் நாளான 5ம் தேதி காலை 11 மணி வரை அனுமதி கொடுக்கவில்லை.

தோழர்களையும் மாணவ-மாணவியரையும் பெண் தோழர்களையும் அணி திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த தயாராகிக் கொண்டிருக்கும் போது போலீசார் போன் செய்து ‘உங்களுக்கு இன்றைக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை, 8-ம் தேதி வெள்ளிக்கிழமை நடத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினர். தோழர்கள், “பிரசுரம் அச்சிட்டு தேதி போட்டு பிரச்சாரம் செய்துள்ளோம். போஸ்டர் அச்சிட்டு மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ளோம். பேனர் அச்சிட்டு கொண்டு வந்து விட்டோம். அதனால் ஆர்ப்பாட்டத்தை நிறுத்த முடியாது, ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்” என்று தொலைபேசியிலேயே கூறினார்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிந்த காவல்துறை காவல் துறை தோழர்களை அழைத்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தருவதாக கூறியது.

கண்டன ஆர்ப்பாட்டம் 12 மணிக்கு தொடங்கியது. ஜெயம் பொறியியல் கல்லூரி, வெங்கடேஷ்வரா கலைக் கல்லூரி ஆகியவற்றின் முதலாளிகளின் லாபவெறிக்கு எதிரான முழக்கங்கள் விண்ணில் காற்றலைகளாக பொதுமக்களின் காதுகளுக்கு பறந்தன.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற தோழர் பிரகாஷ், “பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சரியாக மருத்துவம் கொடுக்காமல் அவர்களை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றத் துடிக்கும் கல்நெஞ்சத்தை” அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்து கண்டன உரையாற்றிய தோழர் வனிதா, “இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரண்டு வந்த மாணவர்களை கல்லூரி நிர்வாகம் கைக்கூலி பேராசிரியர்களைக் கொண்டு 3 இடங்களில் தடுத்து நிறுத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளது. அயோக்கியத்தனமில்லையா? இப்படிப்பட்ட பேராசிரியர்களின் தங்கையோ மகளோ இறந்திருந்தால் இப்படி செய்வார்களா” என்று வினவியது வேலை கொடுக்கிறான் என்பதற்காக பச்சை படுகொலைக்கு துணைபோகும் கைக்கூலி பேராசிரியர்களின் கொலைபாதகத்தை, இரக்கமற்றத் தன்மையை அம்பலப்படுத்தியது.

அடுத்து பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணியின் தோழர் ஆம்பள்ளி முனிராஜ், “எந்த தனியார் முதலாளியும், மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்ற சேவை நோக்கத்தோடு செயல்படுவதில்லை. பணம் பறிக்க வேண்டும், அதிக கட்டணம் வாங்கி மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் கொள்ளை அடிக்க வேண்டும்” என்ற நோக்கத்திலேயே தனியார் பள்ளி-கல்லூரிகளை தொடங்குகின்றனர், நடத்துகின்றனர். மக்களும் பெற்றோர்களும் தனியார் கல்லூரிகளில் பிள்ளைகளை சேர்க்காமல் புறக்கணிக்க வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார்.

விவசாயிகள் விடுதலை முன்னணியின் பென்னாகர் வட்டாரச் செயலாளர் தோழர் கோபிநாத் உரையாற்றும் போது, “குறைவான பேருந்துகளை வைத்துக் கொண்டு இரண்டு மடங்கு மாணவ-மாணவியரை ஏற்றி அதிகமான வேகத்தில் வண்டியை ஓட்ட நிர்பந்தித்ததே கல்லூரி நிர்வாகம்தான். அதனால்தான் இந்த படுகொலை நடந்துள்ளது. இதுவரைக்கும் 12க்கும் மேற்பட்ட மாணவிகள் இறந்துள்ளதாக மாணவர்கள் கூறுகிறார்கள். ஆனால் மாவட்ட நிர்வாகம், போலீஸ், கல்லூரி நிர்வாகம், எல்லாம் கூட்டு சேர்ந்து கொண்டு உண்மை விபரத்தை வெளியில் சொல்லாமல் தடுத்து வருகிறனர். அரசும், போலீசும் பலியான-படுகாயமடைந்த மாணவர்கள் பக்கம் நிற்காமல் கல்லூரி முதலாளியின் பக்கம் நின்று கொண்டு சாதகமாக செயல்பட்டு வருவது வேதனையான விஷயமாகும். பலியான மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் இழப்பீடு பெறும் வரையும், தனியார் பள்ளி-கல்லூரிகளின் படுகொலை கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் விவசாயிகள் விடுதலை முன்னணியின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்” என்று உறுதியளித்தார்.

உயிரிழந்த மாணவிகளில் ஒருவரான பானுஸ்ரீயின் தந்தை குமாரவேல் பேசும் போது, “கல்லூரி நிர்வாகம் பணம் என்று கேட்கும் போதெல்லாம் தவறாமல் கொடுத்ததையும், மகளுக்கு தேவைப்பட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தையும் கூறும் போது துக்கத்தில் தொண்டை அடைத்தது. மகள் இறந்து விட்டாள் என்று கேள்விப்பட்ட போது என்னால் நம்பவே முடியவில்லை. இறந்த உடலைக் கூட பார்க்க தான் அலைக்கழிக்கப்பட்டதையும், இதுவரை கல்லூரி நிர்வாகம் சார்பில் யாரும் ஆறுதல் சொல்லக் கூட வரவில்லை” என்பதையும் உருக்கமாக விளக்கினார்.

இறுதியில் முதலாளிகளின் லாபவெறியின் கோரப்பசிக்கு உயிரிழந்த மாணவிகளுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
: பு.ஜ. செய்தியாளர், பென்னாகரம்

ஈழம் : புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்!

1

1. திருச்சி

திருச்சியில் ஈழ மக்களுக்கான ஆதரவு குரல், மாணவர்கள் தொழிலாளர்கள், உழைக்கும் மக்களிடம் பெருகி திருச்சி நகரமே ஸ்தம்பித்து போகும் வண்ணம் போராட்டம் தொடர்கிறது.

இதன் ஒரு பகுதியாக மக்களிடம் ஐ.நா தீர்மானத்தின் போலித்தனத்தையும், மன்மோகனின் கபட நாடகத்தையும் தோலுரிக்கும் வண்ணம் திருச்சி பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக 3 பெண் தோழர்களுக்கு மன்மோகன், ராஜபக்சே, ஒபாமா போன்றோரின் முகமூடியை அணிவித்து, நிற்கவைத்து, தமிழினவாதிகளும், அரசியல்வாதிகளும் ஈழமக்களின் கொடுமைக்கு நியாயம் கேட்கும் வண்ணம் மன்மோகனிடம் கையேந்தி கெஞ்சி நீதிகேட்கின்றனர்.

பஞ்சாபில் கருவாகி…
உலகவங்கியில் உருவாகி…
கான்வென்டில் கல்விகற்ற…
எங்கள் இந்திய மேதையே போற்றி போற்றி!

தங்கமே தலைவா வாழ்க!
எங்கள் பிரதமரே போற்றி போற்றி!
ஆட்சியில் உள்ள நாள் மட்டும் போற்றி போற்றி!
பூ தூவி சாம்பிராணி புகை போட்டு, மன்மோகனை…
வாயத் தொறந்து பதில் சொல்லுகள் என கெஞ்சி கேட்கின்றனர்,
இதை கெஞ்சி மன்மோகனிடம் மன்றாடுகின்றனர்,

இந்தக் காட்சியை அம்பலப்படுத்தி ஈழக் கொலையாளிகளில் மன்மோகனும் ஒருவன் ஆக மன்மோகன், ராஜபக்சே ஒபாமாவின் கூட்டுக் கலவாணித் தனத்தை அமைப்பு அரசியல் கருத்துடன் பேசி மக்கள் முன் நடித்து காண்பித்தனர்.

15 பெண் தோழர்கள், 7 குழந்தைகள், சிவப்பு வெள்ளை சீருடையுடன், பறை அடிப்பதும், ஈழத்தின் கொடுமையை விளக்கும் பாடல்களும் என, பேச்சு என பெண்களே செய்தனர், திருச்சி நகர் முழுவதும் காலை முதல் இரவு வரை நடத்தினர், ஒவ்வொரு இடத்திலும் மக்கள் 50 முதல் 100 பேர் கூடி நின்று ஆதரவு கொடுத்தனர்.

இவ்வகையான பிரச்சாரம் மக்களிடையே எளிமையாக கருத்துக்களை எடுத்துச்செல்லவும் நமது நிலைபாட்டை விளக்கவும் ஏதுவாக அமைந்தது.


[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல் : பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி கிளை

2. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – சத்தியபாமா கிளை

ஈழ மக்களுக்கு ஆதரவாக சோழிங்கநல்லூரில் புஜதொமு ஆர்ப்பாட்டம்.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
: பு.ஜ.தொ.மு.

usilai-1

3. உசிலை ஆர்ப்பாட்டம்

சிலம்பட்டி வட்டம்; முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு சார்பாக உசிலை தாலுகா அலுவலகம் அருகில்

குற்றவாளி ராஜபக்சேவோடு துணைநின்ற இந்திய அரசையும் விசாரணைக் கூண்டில் ஏற்றுவோம்!
முல்லைப் பெரியாறு அணைiயை உடைக்க 50 கோடி ஒதுக்கியுள்ள கேரள அரசின் அடாவடித்தனத்தைக் கண்டு கொள்ளாத மத்திய அரசின் மௌனத்தைக் கலைப்போம்!

என்ற தலைப்பின் கீழ் இலங்கையின் சிங்கள இனவெறியன் ராஜபக்சேவின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை போட்டு அதனை மக்களின் பார்வைக்கு வைத்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை 22.03.2013 மாலை 5 மணியளவில் நடத்தியது.

2009 முள்ளிவாய்க்கால் இறுதி நாள் இனப்படுகொலையாளி ராஜபக்சேவோடு துணை நின்ற இந்திய அரசையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!
அமெரிக்கா தலைமையிலான விசாரணையை ஏற்க மறுப்போம்!
நூரம்பர்க் போன்ற நீதி விசாரணை கோருவோம்!

என்ற கோரிக்கையோடு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணை கட்ட கேரள அரசு சென்ற வாரம் பட்ஜெட்டில் 50 கோடி நிதி ஒதுக்கி அடாவடித்தனம் செய்வதையும் இ அதனைக் கண்டுகொள்ளாத காங்கிரஸ் மத்திய அரசின் மௌனத்தைக் கலைப்போம் என்றும் தேசிய நீர்க்கொள்கை மக்கள் விரோதமானது என்றும் அது விவசாயத்தை அளிப்பதற்கான திட்டம் என்றும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முல்லைப் பெரியாறு அணைப்பாதுகாப்புக் குழு ஆர்வளர் திரு ஜோதிபாசு தலைமை தாங்கினார். கண்டன உரையாக பொறியாளர் திரு மாயத்தேவர் (வல்லரசு பார்வர்டு பிளாக்) மற்றும் வழக்கறிஞர் ரெட் காசி (தேவர் தேசியப் பேரவை),  தங்கப்பாண்டி, மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் தென்னரசு மற்றம் வழக்கறிஞர் விநோத்குமார் மற்றும் வி.வி.மு செயலாளரும் முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் குருசாமி இறுதியல் சிறப்புரையாற்றினார்.

ஆப்பாட்டத்தின் பேசிய அனைவரும் பெரும்பாலும் காங்கிரசை ஒழித்தால்தான் நமக்கும் ஈழத்திற்கும் உண்மையான நீதி கிடைக்கும் என்று பேசினார்கள்.

தோழர் குருசாமி அமெரிக்கா என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன? ஏன் அது தமிழர்களுக்கு எதிராக உள்ளது. இந்திய முதலாளிகளின் நலன்தான் தமிழர்களின் நலனை விட இந்திய அரசிற்கு முக்கியமாகப் படுகிறது. இதன் பின்னனியைப் புரிந்து கொண்டு நமது போராட்டம் இருக்க வேண்டும் என்று விளக்கினார்.

இறுதியில் ராஜபக்சே கொடும்பாவி எரிக்கப்பட்டது. சுமார் 300 பேர்கள் வரை பார்வையாளர்களாக கலந்து கொண்டு ஆதரவு தந்தார்கள்.

காங்கிரசை ஒழிப்பதில் முதல் கவணம் இருப்பது அவசியம் என்று ஏகமனதாக பேசி முடிக்கப்பட்டது. சுய நிர்ணய உரிமைதான் உண்மையான தீர்வு தரும் அதற்கு 80 களின் எழுச்சியைபோல் மீண்டும் தமிழகத்தை உருவாக்குவோம் என பேசி முடிக்கப்பட்டது.

தகவல் : பு ஜ செய்தியாளர், உசிலை.

4. வலையங்குளம் தெருமுனைக் கூட்டம்

மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை மாவட்டக்கிளை, வலையங்குளம் பகுதி சார்பாக ஈழத் தமிழினப் படுகொலைக்குக் காரணமான சிங்கள இனவெறியன் ராஜபக்சேவைத் தண்டிக்கவும், ஈழமக்களிடையே தன்னுரிமைக்கான வாக்கெடுப்பு நடத் தவும் கோரி 27.03.13 அன்று மாலை 6.00 மணியளவில் தெருமுனைக் கூட்டம் நடை பெற்றது.

இக்கூட்டத்திற்கு வலையங்குளம் பகுதி ம.உ.பா.மைய உறுப்பினர் பெ.ரா.பெருமாள் தலைமை தாங்கினார். வலையங்குளம் ஊராட்சித் தலைவரும், ம.உ.பா.மைய உறுப்பினருமான வெ.பிச்சை, திருக்குறள் வளர்ச்சிக் கழக அமைப்பாளர் ஐயா கூ.கிருஷ்ணன், ம.உ.பா.மைய உறுப்பினர் செ.கணேஷ் ம.க.இ.க.மதுரை அமைப்பாளர் தோழர் ப.ராமலிங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இலங்கையில் 2009ல் நடைபெற்றது இனப் படுகொலை. அதற்குப் பின்பு தமிழர்கள் வதைமுகாம்களில் அடிமைகளாக வைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு விடுதலை வழங்கும் முகமாக அங்கே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்காகத் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற கருத்துக்களை அனைவரும் வலியுறுத்திப் பேசினர்.

சிறப்புரையாற்றிய ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்ட செயலாளர் லயனல் அந்தோணிராஜ், ராஜபக்சே ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளன், சிங்கள இனவெறியைத் தூண்டிவிட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ஈழத் தமிழர்களின் குருதிக் கடலில் குளித்துக் கொண்டிருப்பவன். அதற்குத் துணை நின்று படு கொலை நடத்தியது இந்திய ராணுவம். இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி ஆகியோர் ஈழ விடுதலைப் போராளிக் குழுக்களை ஆதரித்து, ஆயுதம். நிதி வழங்கி, பயிற்சியும் கொடுத்து தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முயற்சி செய்தனர். தனி ஈழம் கோரிக்கையை நிராகரித்தனர். இலங்கை அரசோடு சேர்ந்து ஈழ மக்களுக்கு துரோகம் இழைத்தனர். அமெரிக்காவும் விடுதலைப் புலிகளை ஆதரித்து ஆயுதம் வழங்கியது. ஆனால் விடுதலையை விரும்பவில்லை. இலங்கையில் தங்களது மேலாதிக்கம் மட்டுமே இவர்களது குறிக்கோளாக இருந்தது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது மவுனமாகப் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கா இன்று தனது மேலாதிக்கத்தை இலங்கையில் உறுதி செய்து கொள்வதற்காகவும் இந்திய முதலாளிகளின் முதலீடுகளைக் காப்பாற்று வதற்காகவும் ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்தது.

அந்தத் தீர்மானம் உப்புச்சப்பில்லாத மொன்னையான தீர்மானம். அந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி தான் தமிழகத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் ஈழ ஆதரவு மற்றும் தமிழ் தேசியக் கட்சிகளும் இயக்கங்களும் போராட்டம் நடத்துகின்றனர். ஐ.நா.சபை அமெரிக்காவின் கைக்கூலி. அது அமெரிக்காவின் நலனுக்கு செயல்படுகிறது. ஐ.நா.விடமும் கோரிக்கை வைப்பது பயனளிக்காது.

27.03.13 அன்று சட்டசபையில் ஜெயலலிதா தான் நிறைவேற்றிய தீர்மானங்களுக் காகத்தான் மாணவர்கள் போராடுகிறார்கள். ஒருமனதாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டதால் இனி மாணவர்கள் போராடத் தேவை இல்லை என்று ஜெயலலிதா அறிவிக்கிறார். ஏற்கனவே மாணவர்களின் போராட்டத்தை வரம்புக்குட்பட்டு ஜெயா போலீசு அனுமதித்தது. கட்டுப்பாட்டுக்குள் வைத்தது மட்டும் அல்லாமல், மாணவர்களது கோரிக்கை இவர்களையும் தாண்டி ராஜபக்சே இனப் படுகொலையாளி, தண்டிக்கப்பட வேண்டும். ஈழமக்களின் தன்னுரிமைக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்து வருகின் றனர். அனைத்து கல்லூரிகளையும் காலவரையின்றி மூடிவிட்டு மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று இப்பொழுது கோரிக்கை விடுக்கின்றார் ஜெயலலிதா. இது மாணவர் போராட்டத்தை நேரடியாக ஒடுக்குவதற்கான ஆரம்பம்.

ஈழ விடுதலையை எவ்வாறு சாதிப்பது என்பதில் தெளிவற்ற நிலை உள்ளது. ஆனால் முள்வேலி வதைமுகாம்களுக்குள் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி வரும் ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டுமென்றால் ஒட்டு மொத்த தமிழகமும் கொதித்து எழுந்து போராட வேண்டும். 80 களின் எழுச்சியைத் தமிழகத்தின் வீதிகளில் மக்கள் உருவாக்க வேண்டும். அதுவே ஆட்சியாளர்களுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும், இந்தி எதிர்ப்பு போராட்டம், முல்லைப் பெரியாறு போராட்டம், ராஜிவ் காந்தி படுகொலையில் மூவர் தூக்குத் தண்டனைக்கு எதிரான போராட்டங்கள் எழுச்சி பெற்ற தைப் போல ஓட்டுக்கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒருமித்த மக்கள் எழுச்சியே தீர்வாகும் என்று பேசினார்.

வழக்கறிஞர் சி.மன்மதன் நன்றி கூறினார். மக்கள் இறுதி வரை இருந்து ஆதரவளித்தனர்.

தகவல்:- மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக்கிளை

அத்வைதமும் அர்ஷத் மேத்தாவும்!

56
ஹர்ஷத் மேத்தா

ட விருட்சத்தின் நிழலில்
வேதங்களின் மறைபொருளை
விரல் நுனியில் காட்டியபடி
வீற்றிருந்தான் சங்கரன்-
ஆதி சங்கரன்ஆதி சங்கரர்

பிறவிப் பெருங்கடல் நீந்தி
பிறவாமைப் பேறுபெற,
சத்தியம் உணர்ந்து
முக்தி நிலை பெற- முனைந்த
சீடன் கேட்டான்:

“ஸ்வாமி…!
நான் யார்? அது எது?”
மோனம் கலைந்த
முனிவன் சொன்னான்;

“இரண்டில்லை,
அ-த்வைதம்”

“அர்த்தமாகவில்லை ஸ்வாமி”

மோகனச் சிரிப்புடன்
சங்கரன் தொடர்ந்தான்:
“அகம் பிரம்மாஸ்மி
நானே அதுவாக இருக்கிறேன்
நான் உருவமில்லாதவன்
நான் எங்குமிருப்பவன்
நான் சுதந்திரமானவன்
நானே பிரம்மம்
நானே சத்யம்”

நானே பங்கு மார்க்கெட்!

*

“அதென்ன சார்
பங்கு மார்க்கெட் ஊழல்?”

தம்பி…
ஊழலே பங்குச் சந்தை
பங்குச் சந்தையே ஊழல்.

“புரியலியே”

புரியாது.
உனக்குப் புரிவதற்காக
உண்டாக்கப்பட்டதல்ல
பங்குச் சந்தை.

கதைகேட்டு கதைகேட்டு
கனவில் வளர்ந்த \ அழிந்த தேசமே
நானும் ஒரு கதை சொல்வேன்-
கேள்!

ஒரு ஊரில்
ஒரு கணவன்.
மனைவியையும் கூட்டிக்கொடுக்கும்
கணவன்
ஒருநாள்
வாடிக்கைக் காரனொருவன்
அந்தப் பெண்ணோடு இருப்பதைப்
பண்பாடில்லாத
ஒரு வழிப்போக்கன்
பார்த்துவிட்டான்…

“அப்புறம்”

அநியாயம்…. அநியாயம் – என்று
கத்தினான்.
“புத்திசாலி” புருசன்காரனும்
அவன் கூடவே சேர்ந்து கத்தினான்.
சிக்கிக் கொண்ட வாடிக்கையாளன்
ஹர்ஷத் மேத்தா.

“புருசன்காரன்?”

ஒரு பெயராயிருந்தால்
சொல்வது சுலபம்
அவனுக்கு ஆயிரம் நாமங்கள்
கிருஷ்ணமூர்த்தி, சிதம்பரம்,
வெங்கடரமணன், சீதாராமன்,
கீதகிருஷ்ணன்…

“சரி, வுடுங்க சார்….
ஏதோ ஊழல்…
ஒண்ணும் புரியல
நமக்கு சம்பந்தமில்லை”

சம்பந்தமில்லை!
கோடிக்கு எத்தனை பூச்சியம்
என்று புரியாத
அறுபது கோடியே,
உனக்கு சம்பந்தமில்லை.
திருடனுக்கு
ஊதுபத்தி கொளுத்தவும்
வேசைக்கு மகுடம் சூட்டவும்
புரிந்த
ஓட்டு வங்கியே,
உனக்கு சம்பந்தமில்லை.

சிந்திக்காதபோது
புரிந்து கொள்ளும் தேசம்,
புரியாதபோது
சிந்திக்கச் சுணங்கும் தேசம்.

ஆதிசங்கரனே!
இதோ…
நீ காண விரும்பிய தேசம்.
தம்மின் மெலியாரை
(மெலியாரை மட்டுமே)
தாம் நோக்கித்
தம் நிலைமை
அம்மா பெரிதென்று
அகமகிழும் தேசம்-
கர்மயோகிகளின் தேசம்.
ஊண் இழந்தும்
உடுக்கை அவிழ்ந்தும்
உறக்கம் கலையாத தேசம்-
ஞான யோகிகளின் தேசம்.
இந்தப்
பண்பாடற்ற விதண்டாவாதி
வழிப்போக்கனை மட்டும்
ஒழித்து விட்டால்…

*

என்னே விதியின் விளையாட்டு!
அல்லாடி
ஆச்சாரியார்
சர்.சி.பி.ராமசாமி அய்யர்
ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி..
என்று நெஞ்சை விடைத்த
அக்கிரகாரமே,

அய்யர், அய்யங்கார்
ஆச்சாரியார்
முதலியார்
செட்டியார் – என்று
கம்பீரமாக
வாலை அசைத்த கூட்டமே
எங்கே இப்போது
வாலைக் காணோம்?

ரிசர்வ் வங்கி கவர்னர்
வெங்கட ரமணன் (அய்யர்)
நிதித்துறைச் செயலர்
கீத கிருஷ்ணன் (அய்யர்)
அட்டர்னி ஜெனரல்
ராமசாமி (அய்யர்)
யூ.கோ.வங்கித் தலைவர்
மார்க்க பந்து (முதலியார்)
திட்டக்குழு உறுப்பினர்
கிருஷ்ணமூர்த்தி (அய்யர்)
அமைச்சர்
ப. சிதம்பரம் (செட்டியார்)
ஸ்டேட் வங்கி
சீதாராமன் (அய்யர்)

வாலறுத்த நரிகளே
இதென்ன அஞ்ஞாதவாசம்?
காலதேச வர்த்தமானம்
சரியில்லையோ?
இட ஒதுக்கீட்டு ராகுவை
விழுங்கிய உங்கள்
அனல் கக்கும் நிலவுகள் எங்கே?

இட ஒதுக்கீட்டை
குழாய்த் தண்ணீரில் மூழ்கடித்த
சுஜாதா அவர்களே (1),
உழைப்பால் உயர்ந்த உத்தமர்
கிருஷ்ணமூர்த்தி அய்யரைப் பற்றி
‘கணையாழி’யின்
கடைசிப் பக்கத்திலாவது
நாலு ‘நறுக்’கெழுத்து
எழுதக் கூடாதா?

முதலியார் கண்ணீர் வடித்த
சிந்தனை சந்தர்,
சினா தானா
தென்னை மரமேறிய கதையை
நாலு ரீல் சுற்றலாமே!

ஏன் இந்த மயான அமைதி?
நேற்று முன்தினம் வரை
‘திறமை’யான ஜனாதிபதிக்காக
வாதாடிய உங்கள்
தர்க்கசாஸ்திர சிரோன்மணிகள்
எங்கே?

மண்டலாசுரனை வீழ்த்திய
பிரம்மாஸ்திரம்
பூமராங்காய்த் திரும்பிப் பாய்கிறதோ!

புரிகிறது.
தர்க்க சாத்திரத்தில்
தோல்வி கண்டவர்கள்
தர்ம சாத்திரத்தில்
தஞ்சம் புகுந்து விட்டீர்கள்.
இதுவல்லவோ
சங்கரன் வகுத்த வழி!

சட்டப் பிரிவு -8 உட்பிரிவு -9ன் படி(2)
ஒழுக்க சீலர்களை
விசாரிக்கும் அதிகாரம்
ஒழுக்க சீலர்களுக்கு மட்டுமே
உரியது.

கிருஷ்ணமூர்த்தி அய்யரை
மணிசங்கர் அய்யர்
விசாரிக்கட்டும்

வெங்கட ரமணய்யரின்
தவறுகளை
ஜானகி ராமய்யர் ஆராயட்டும்

ஜானகி ராமய்யரின்
நடத்தைக்கு
நரசிம்மராவ்
(சந்தேகம் வேண்டாம் – நம்மவர்தான்)
உத்திரவாத மளிக்கட்டும்.

நரசிம்மராவின் யோக்யதைக்கு
எல்லாம் வல்ல இறைவன்
(அல்லது ஜார்ஜ் புஷ்)
சான்று பகரட்டும்!

*

“சட்டத்தின் ஓட்டைகளை
ஹர்ஷத் மேத்தா
திறமையாகப்
பயன்படுத்திக் கொண்டார்
அவ்வளவுதான்” –
ராம் ஜேத்மலானி

ஓட்டை…!
பெருச்சாளிகளும்
பன்றிகளும் மட்டுமே
தப்பவியலும்
பிரம்மாண்டமான ஓட்டை.

ஆனால்
எலிகள் எலிகள் மட்டும்
என்றுமே தப்பவியலாத ஓட்டை.

பௌதீக விதிகளை மறுக்கும்
இந்த தெய்வீக ஓட்டைகளை
சிருஷ்டித்தவன் யார்?

மயனா
பிரம்மனா
பரந்தாமனா
அல்லாடியா அல்லது
ஆனந்த பவனத்துக்
குற்றப் பரம்பரையா?

கன்னம் வைப்பதும்
திறமையென்றால்…
நீங்கள் திறமைசாலிகளே.

சட்டப் பிரிவு 10 உட்பிரிவு 84-ன் படி(3)
இரும்பினால் செய்த
கலப்பையைத்தான்
பிராமணன் தொடக் கூடாது
கன்னக் கோலுக்கு
தோஷமில்லை.

மிருச்சகடிகத்தின்
பார்ப்பனத் திருடன் கூறியது போல(4)
பூணூலும்
கன்னக்கோல் சுற்றும்
ஓர் ஆயுதமே.

எது திறமை
எது திருட்டு
என்ன வேறுபாடு?

அ-த்வைதம்!

துவாபர யுகத்தின் திருட்டு
கலியுகத்தில் திறமை

துவாபர யுகத்திலேயே
சகுனியின் நயவஞ்சகம்-
கண்ணனுக்கு லீலாவிநோதம்

துச்சாதனனின் துகிலுரிதல்-
துவாரகா பாலனின் ராசலீலை.

ஆனந்த விகடனின்
கேலிச்சித்திரத் திருடர்கள்
கிருஷ்ணமூர்த்தி அய்யரை
ஒத்திருந்ததுண்டா?

கேடி கந்தன்
பிளேடு பக்கிரி
பத்மவிபூஷன் கிருஷ்ணமூர்த்தி

ஆதி சங்கரனிடம்
நீதி கேட்டுப் பார்ப்போம்.

சாமி!
எது திறமை? எது திருட்டு?

“அத்வைதம்-
கயிற்றரவம்.”
விளங்கலையே சாமி.

“மூடனே கேள்
பகலில் கயிறு
இரவிலே பாம்பு
உன் பார்வையில்தான் பேதம்”

ஆதி சங்கரன்
குழப்புகிறான்
மணி சங்கரனை (ஐயர்)
கேட்போம்.

“கிருஷ்ணமூர்த்தி என் நண்பர்
அவர் குற்றவாளி அல்லர்
குற்றம் சாட்டப்பட்டவர்
அவ்வளவுதான். நண்பனும் நானே
நீதிபதியும் நானே”
பகலில் நீதிபதி
இரவில் நண்பன்
அத்வைதம்!

*

திறமையே திருட்டு
திருட்டே திறமை
அத்வைதம்!

அற்புதம்!
யுக யுகாந்திரங்களாய்
பாரதத்தை இணைத்து நிற்கும்
அந்தப் பண்பாட்டு இழையை,

பாரத மக்களின்
கழுத்தைச் சுற்றிப் பின்னியிருக்கும்
ஹிந்து தர்மம் எனும்
சுருக்குக் கயிற்றை
(மீண்டும் அத்வைதம்)
கண்டு கொண்டோம்.

என்ன ஒற்றுமை!
தத்துவ சாத்திரம்
தவிடு பொடியானவுடன்
தரும (மனு) சாத்திரத்தில்
சரண் புகுந்தான்
அந்த சங்கரன்

“நண்பனே நீதிபதியா?” என்று
ஒழுக்க மரபுகளைச்
சுட்டிக் காட்டினால்
குற்றவியல் சட்டத்தில்
ஒளிகிறான்
இந்த சங்கரன்.

ஒழுக்க சாரதிகளே,
முகத்தில் உதித்த
முதல் வருணத்தோரே,
என்னே உங்கள் அவலம்!

சமூகத்தின்
முகத்தில் விழிக்க அஞ்சி
சட்டத்தின்
பிட்டத்திற்குப் பின்னே
பதுங்குகிறான் உங்கள் சங்கரன்

குற்றவுணர்வுக்குப் பதில்
சட்ட உணர்வு.

சட்டம்!
நீங்கள் வகுத்த சட்டம்.
ஒழுக்கம் ஓரடி பாயுமுன்
பாதாளம் நோக்கி
பதினாறடி பாயும் சட்டம்.

சீரழிவுத் தொடர் ஓட்டத்தில்
ஒழுக்கத்தின் கையிலிருந்து
கட்டையைப் பறித்துக் கொண்டு
பாய்ந்தோடக்
கால் துடிக்கும் சட்டம்.

“குற்றம் சாட்டுபவன்தான்
நிரூபிக்க வேண்டும்-
குற்றம் சாட்டப்பட்டவன்
தன்னை நிரபராதியென
நிரூபித்துக் கொள்ள வேண்டுமென்றால்
அது பாசிசம்”-
மணிசங்கர் அய்யர்.

ஆகா!
அப்பழுக்கற்று ஜொலிக்கும்
இந்த
தூய ஜனநாயகத்தின் ஒளி,
பகல்பூரிலும், வாரணாசியிலும்
காஷ்மீரிலும், பஞ்சாபிலும்
அஸ்ஸாமிலும், தமிழகத்திலும்
…அண்ணாமலை நகரிலும்
படாமல் போனது ஏன்
சாத்தானே?
மன்னிக்கவும்.
தேவரே! பூதேவரே!

சட்டத்தின் முன்
அனைவரும் சமம்
கிருஷ்ணமூர்த்தி அய்யர்
கொஞ்சம் அதிகமாக சமம்.

சம்புகனுக்கு சிரச்சேதம்
அஜமிலனுக்கு சொர்க்கம்(5)

தென்னை மரத்தில்
புல் பிடுங்க ஏறிய
சிதம்பரம் செட்டியார்
இறங்கி விட்டார்.
வெற்றி…! வெற்றி…!
நல்லொழுக்கத்திற்கு வெற்றி!

“என்னுடைய மந்திரிகளை
யாரேனும்
தென்னை மரத்தின் உச்சியில்
கண்டால் சொல்லுமய்யா
இறக்கி விட்டு விடுகிறேன்”-
கர்ஜிக்கிறார் நரசிம்மராவ்

“அபாரம்! என்ன துணிச்சல்!
என்ன கண்டிப்பு!”
புல் அரிக்கிறது தினமணிக்கு.

ஏறிய குற்றத்திற்கு
இறங்குவதே தண்டனை!

எப்படியும் நாம்
சட்டப் பிரிவு – 8 உட்பிரிவு-380 ஐ
மீற இயலாது.(6)

*

ஹர்ஷத் மேத்தா“யார் செய்யவில்லை?
நான் மட்டுமென்ன
பலிகடாவா?”-
ஹர்ஷத் மேத்தா

அப்படிப் போடு!
யார் செய்யவில்லை?

ஆட்டுப் பாலை
பிர்லா மாளிகையில் அமர்ந்து
பருக நேரிட்டதையும்,

வேர்க்கடலையை
பஜாஜ் வீட்டிலிருந்தபடி
(மாட்டுக் கொட்டிலாகத்தான் இருக்கட்டுமே)
கொறிக்க நேர்ந்ததையும் பற்றி

மகாத்மாவை
யாரேனும்
கேள்விக்குள்ளாக்கியதுண்டா?

அவரது
பிரம்மச்சரிய சோதனை பற்றி
குறைந்த பட்சம்
குமுதம் ‘லைட்ஸ் ஆன்’ பகுதியில்
ஒரு வரி
கிசுகிசு செய்தியாவது உண்டா?

தாத்தாவுக்கு ஒரு நீதி
பேரன்
மேத்தாவுக்கு ஒரு நீதியா?

அல்லது
பிரம்ம சூத்திரத்திற்கு
பாஷ்யம் எழுதிய
திருக்கரத்தால்
சௌந்தரிய லஹரியும்
கனகதாரா ஸ்தோத்திரமும்(7)
எழுதியதற்காக
ஆதி சங்கரனைக்
குற்றம் சொல்வார்தான் உண்டா?

அன்று முதல்
இன்று வரை
சத்திய சோதனையில்
விஞ்சி நிற்பது
வியவகாரிக சத்யம்தானே!(8)

“இது நம்
அமைப்பு முறையின் தோல்வி
நாம் எல்லோருமே பொறுப்பு”
–மன்மோகன் சிங்

எதிர்மறைகளின்
ஒற்றுமை குறித்த
இயங்கியல் விளக்கத்தை
இதை விடத் துல்லியமாக
யாரால் விளக்க முடியும்?

பறிகொடுத்தவனின் குற்றம்-
அஜாக்கிரதை

பறித்தெடுத்தவனின் குற்றம்-
திருட்டு

இருவருமே தவறிழைத்துள்ளனர்.
மொத்தத்தில் இது
நம் அனைவரின் தவறு.

“திருப்பதி உண்டியலில்
திருடன்
காணிக்கை செலுத்தினால்
அதற்கு
திருவேங்கடத்தானைக்
குற்றம் சொல்ல முடியுமா?”
என்கிறார்
கல்கி – ராஜேந்திரய்யா(9)

முடியாது.
மன்மதக் கலையைக்
கற்றுத் தேற
மாற்றான் மனையைப்
புணர்ந்ததற்காக
அந்த மகானை-
ஆதிசங்கரனை
நாம் எங்ஙனம்
குற்றம் கூறவியலும்?

உவமானங்கள்
உருவகங்கள்
நீதிக் கதைகள்…

கனவான்களே,
இடியாக முழங்கும்
உங்கள் வாதங்கள்
எங்களை
ஒழுக்க செவிடர்களாக்குகின்றன.

வானவில்லாய் ஒளிரும்
உங்கள் அறிவோ
எம்மை
வண்ணக் குருடர்களாக்குகிறது.

என்ன இருந்தாலும்
நீங்கள் படித்தவர்கள்
தர்ப்பைப் புல் முதல்
சூப்பர் கம்ப்யூட்டர் வரை
உங்கள்
மடி சஞ்சியில் அடக்கம்.

நீங்கள்
அறிவாளிகள்
எனவே
திறமை சாலிகள்
எனவே
ஒழுக்க சீலர்கள்

‘சட்டப்படி’
ஒழுக்க சீலர்கள்.

மூடர்களும், தற்குறிகளும்
நிரம்பிய இந்த தேசத்தைப்
பரிபாலிக்க
நீங்கள் சகித்துக் கொண்ட
இன்னல்கள்தான் எத்தனை?
எங்களுடைய கைம்மாறை,
தட்சிணையை,
நீங்கள்
ஏற்றுத்தான் தீர வேண்டும்.

அதற்கு முன்,
அத்வைதிகளே
ஒரே ஒரு ஐயம்!

உங்கள் பட்டங்கள்
வேசியின் அலங்காரத்தை
ஒத்திருப்பதை
நீங்கள் கவனிக்கவில்லையா?

வேதம், புராணம்,
இதிகாசம், உபநிடதம்,
எம்.ஏ, எம்,பி.ஏ,
மின்னணு அறிவியல்
இன்ன பிற… இன்ன பிற…

எதற்கு?
உங்களை விற்றுக்கொள்வதற்கு.

என்றாலும்
தரும சாத்திரத்திலிருந்து
நீங்கள் வழுவுவதில்லை.

தான் கற்ற கல்வியைத்தான்
பார்ப்பனன் – காசுக்கு-
விற்கக் கூடாது.
தன்னையே விற்றுக்கொள்ள
தடையேதுமில்லை.

எங்கள்
கண்ணீரைக் குடித்து,
பெருமூச்சை சுவாசித்து,
பெருங்குடலைத் தின்று
எம் குழந்தைகளின்
அரிச்சுவடியைத் திருடிய,

உங்கள் திறமையின்
கால் தடங்கள்
எப்போது
சொர்க்கத்திலேயே முடிந்தன
இப்போது
அமெரிக்காவில் முடிகின்றன.

உங்கள்
புத்திரர்களும்
பௌத்திரர்களும் (பேரன்கள்)
அமெரிக்காவில்.

உங்கள
வானப் பிரஸ்தமோ(10)
மிலேச்சனின்
உலக வங்கியில்.

நீங்கள்
வெளிநாட்டில் குடியேறிய
இந்தியர்கள்.
நாங்கள்
சுதேசி அகதிகள்.

உங்கள் ஈசானம் டெல்லி
எங்கள் ஈசானம் சுடுகாடு.
உங்கள் மேற்திசை நியூயார்க்
எங்கள் மேற்திசை கட்டுமரம்.

திறமைசாலிகளே,
எங்கள் பாதங்களில்தான்
சீழ் வடிகிறது
உங்களுக்கோ
ஆன்மாவில் சீழ் வடிகிறது.

அதை
அத்தர் புனுகு சவ்வாது என்று
நாங்கள் பூசித்திரிந்த காலம்
முடிந்தது.
முடிந்தது.

தேசத்துரோகிகளே!
மனிதப் பதர்களே!!

“பழிக்குப் பழி என்று முழங்கி
நாங்கள்
வீதிகளில் சீறி வரும்போது

உங்கள்
கருணை மனுக்கள்
மழுப்பலான சமாதானங்கள்
எல்லாம் ஒதுக்கித் தள்ளப்படும்.

பிரமுகர்கள், பிரபலங்களின்
சிபாரிசுகள் செல்லுபடியாகாது.

தண்டனையும் பரிசும்
தெருவிலேயே தீர்மானிக்கப்படும்

சொர்க்கமா நரகமா
அங்கேயே முடிவாகி விடும்.

இறுதித் தீர்ப்பின் நாள்
இன்றே, இப்பொழுதே, இக்கணமே!”(11)

கயிறு அல்லது அரவம்.

திறமைசாலிகளே
தெரிவு செய்து கொள்ளுங்கள்!

என்ன துரதிருஷ்டம்!
இரண்டுமே
வியவகாரிக சத்யம்!!

– மருதையன்

அடிக்குறிப்பு

  1. கல்கியில் மத்தியமர் என்ற தொடரில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக சுஜாதா எழுதிய சிறுகதை. அதிகாரியின் மகளான நவநாகரீக தாழ்த்தப்பட்ட மங்கைக்கு தகுதியில்லாமலேயே வேலை கிடைக்க, தகுதியுள்ள முற்பட்ட சாதி இளைஞன் வாய்ப்பை இழந்து துவண்டு, காசில்லாததால் குழாய்த் தண்ணீரைக் குடித்து விட்டுச் செல்வதாக மேல்சாதி அவலத்தைச் சொல்லும் சிறுகதை.
  2. மனு நீதி நூல்: கொடுங்குற்றம் செய்திருந்தாலும் ஒரு பார்ப்பனனை அரசன் அல்லது வேறு ஒரு படித்த பார்ப்பனன் மட்டுமே விசாரிக்க முடியும்.
  3. மனுநீதி நூல் : எத்தனை வறுமைக்கு உள்ளானாலும் பார்ப்பனன் விவசாயத்தில் ஈடுபடக் கூடாது எனும் விதி.
  4. கி.பி.6-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வடமொழி நாடகம் மிருச்சகடிகம், அதாவது பொம்மை வண்டி. இந்த நாடகத்தில் திருடச் செல்லும் பார்ப்பனன் ஒருவன் கன்னக்கோலின் ஒரு முனையில் முடிந்து சுவற்றில் வட்டமிடுவதற்குத் தேவையான கயிறை எடுத்துச்செல்ல மறந்து விடுவான். கயிறுக்குப் பதிலாகப் பூணூலைப் பயன்படுத்துவான். அப்போது அவன் கூறும் வசனம் ”பார்ப்பனனுக்குத்தான் பூணூல் எவ்வளவு விதங்களில் பயனுள்ளதாக இருக்கிறது! முதுகு சொறிய, கன்னம் வைக்க…”
  5. சம்புகன்: சூத்திரனுக்கு தவம் செய்யும் உரிமையில்லை என்ற சநாதன தருமத்தை மீறி இறைவனைத் துதித்ததற்காக ராமனால் கொல்லப்பட்ட சூத்திர வருணத்தவன்.
    அஜமிலன்: பார்ப்பன குலத்தில் பிறந்து, சூத்திரப் பெண்ணை மணந்ததால் சாதி நீங்கம் செய்யப்பட்டவன். சாகும் தருவாயில் தனது மகன் நாராயணனை அழைக்க ”நாராயணா” என்று கூப்பிட்ட ஒரே காரணத்தினால் மோட்சம் பெற்றவன்.
  6. மனுநீதி: மிக மோசமான பாவம் செய்திருந்தாலும் அவன் திருடிய சொத்துக்களுடன் பார்ப்பனனை காயமின்றி நாடு கடத்த மட்டுமே முடியும்.
  7. சௌந்தரிய லஹரி: தேவியின் மீது ஆதிசங்கரன் எழுதிய தோத்திரம். தாயான தேவியை வருணிக்கும் வரிகள் காமசூத்திரத்தை விஞ்சக் கூடியவை.
    கனகதாரா ஸ்தோத்திரம்: கூரையைப் பிய்த்துக் கொண்டு தங்கம் கொட்டுவதற்காக ஆதிசங்கரன் எழுதிய பாடல்கள்.
  8. வியவகாரிக சத்யம்: ”உலகமே மாயை (பொய்) என்றால் உனக்கு சோறும், துணியும், பொன்னும், பொருளும் எதற்கடா?” என்று ஆதிசங்கரனை அன்றைய பொருள்முதல்வாதிகள் கேட்டபோது, ஆதிசங்கரன் சொன்னான்: ”இவையெல்லாம் வியவகாரிக சத்யம் (நடைமுறையில் உள்ள தற்காலிக உண்மைகள்) மட்டுமே; இறுதி ஆய்வில் பிரம்மமே சத்யம்; இவையெல்லாம் மாயை” என்றான்.
  9. ராஜீவ் நினைவு அறக்கட்டளைக்கு ஹர்சத் மேத்தா 25 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளான். அதை (சோனியா) வாங்கியது எங்ஙனம் சரி என்ற கேள்விக்கு கல்கியின் பதில்.
  10. வானப் பிரஸ்தம்: இல்லற வாழ்க்கையின் இறுதியில் (பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்) பிராமண, சத்திரிய, வைசிய குலத்தவர்கள் காட்டுக்குச் சென்று தவம் செய்ய வேண்டும் என்கிறது சநாதன தருமம். இந்தக் கட்டத்திற்குப் பெயர் வானப் பிரஸ்தம்.
  11. ஃபெய்ஸ் அகமது பெய்ஸ் கவிதையிலிருந்து.

___________________________________________________
புதிய கலாச்சாரம் அக்கடோபர் 1992
____________________________________________________

பெண்களுக்கு எதிரான வன்முறை – தமிழகம் தழுவிய போராட்டம்!

0

1. கரூர் சிவகிரியில் நடைபெற்ற அரங்கக் கூட்டம்

பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறைகளை கண்டித்து பிப்ரவரி 24ம் தேதி சிவகிரி பாலவிநாயகர் திருமண மண்டபத்தில் யில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் நடைபெற்ற அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

தலைமை :தோழர் கோவிந்தசாமி
வரவேற்புரை : தோழர் புஸ்பராஜ், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
சிறப்புரை : தோழர் வாஞ்சிநாதன், மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை
நன்றியுரை : தோழர் இராஜா, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

இக்கூட்டத்தில் பகுதி உழைக்கும் மக்கள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் கரூர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. காட்சி விளக்கப்படமும் தயாரித்து வைக்கப்பட்டிருந்தது.

தகவல் : பு.ஜ.தொ.மு.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

2. நல்லம்பள்ளி தெருமுனைக் கூட்டம்

தருமபுரி மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி பிப்ரவரி 25ம் தேதி மாலை 5 மணிக்கு நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் ‘பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்’ என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் நடத்தியது.

தலைமை : தோழர் ராமலிங்கம், விவசாயிகள் விடுதலை முன்னணி
கண்டன உரை:
தோழர் கோபிநாத், வட்டச் செயலாளர், விவசாயிகள் விடுதலை முன்னணிதோழர் பழனியம்மாள், விவசாயிகள் விடுதலை முன்னணி
தோழர்கள் செல்வராஜ், கீதா, முத்துக்குமார், மாயாண்டி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தகவல் : புதிய ஜனநாயகம் செய்தியாளர், தருமபுரி

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

3. மனித உரிமை பாதுகாப்பு மையம் திருநெல்வேலியில் நடத்திய கருத்தரங்கம்

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான கருத்தரங்கம் மனித உரிமை பாதுகாப்பு மையத்தால் திருநெல்வெலி ஏ. டி. எம். எஸ் அரங்கத்தில் வைத்து 23.02.2013-ம் தேதி மாலை நடைபெற்றது. கருத்தரங்கில் சுமார் 60 பேர் கலந்து கொண்டனர். கருத்தரங்கிற்கு திருநெல்வெலி மாவட்ட அமைப்பாளர் தோழர் செ. தங்கபாண்டியன், வழக்குரைஞர் தலைமை தாங்கினார்.

கருத்தரங்கில் பேசிய தோழர் இராமச்சந்திரன், தூத்துக்குடி கிளை செயலாளர் பெண்களை போகப் பொருளாக பாவிக்கும் சமூக சிந்தனையை சட்டத்தால் தடுக்கமுடியாது என்பதாலேயே இவ்வாறு தலைப்பிட்டுள்ளோம் என்று உதாரணங்களுடன் பேசினார். பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் போலீஸ் இராணுவத்தை தண்டிக்கக் கூடாது என்பதற்காகவே பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் போலீஸ், இராணுவத்தை சிவில் சட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டும் எனும் பரிந்துரை உட்பட வர்மா கமிசனின் எந்த ஒரு பரிந்துரையையும் அரசு ஏற்கவில்லை என்று பேசினார்.

அடுத்தாக பேசிய தோழர் லயனல் அந்தோணிராஜ், மதுரை மாவட்ட கிளை செயலர் மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு எவ்வாறு ஏனைய மனித உரிமை அமைப்புகளிலிருந்து வேறுபட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட அரசியல் திசையில் செயல்படுகிறது என்றும் மனித உரிமை பாதுகாப்புமையம் ஏற்று மக்களை திரட்டியும் நீதிமன்றத்திலும் வென்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க சிதம்பரம் கோவில் போராட்டம் முதல் சமச்சீர் கல்வி போராட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று கருணாநிதி இயற்றிய சட்டத்திற்கு மதுரை பட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் பெற்ற தடை ஆணையை எதிர்த்து போராட்டம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு எஸ். பி. பிரேம் குமாரை எதிர்த்து நல்லனாமனுடன் நடத்திய போராட்டம், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளிட்ட குறிப்பான போராட்டங்கள் அனுபவங்களை எளிதாக விளக்கினார்.

அடுத்ததாக பேசிய தோழர் காளியப்பன் ம.க.இ.க இணைப் பொது செயலாளர் காரைக்கால் மாணவி வினோதினி மீது ஏவப்பட்ட வன்கொடுமை பற்றியும், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் பெண்களை ஆண்களுக்கு அடிமையானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளன என்றும் பெரும்பாலும் பாலியல் வன்கொடுமை குடும்ப உறவினர் மூலமே நடைபெறுகிறது, பெண்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையை வெளியே கூறினால் தங்களுக்கு அவமானம் என்று கருதி வெளியே கூறாமல் தன்னை தாழ்த்திக் கொள்கின்றனர், ஆனால் அவ்வாறு அல்லாமல் தனக்கு ஏற்பட்ட கொடுமை வேறு பெண்களுக்கு நடக்கக்கூடாது, இது ஒரு சமூகப்பிரச்சினை என்பதை புரிந்து கொண்டு குற்றம் புரிந்த நபர் மீது புகார் கொடுக்கவேண்டும், அப்போது தான் இதை தடுக்க முடியும். மேலும் ஒரு சோசலிச சமூகத்தை நோக்கிய நமது பாதை தான் இதற்கு நிரந்தர தீர்வு என்று பேசினார்.

இறுதியாக வழக்குரைஞர் அப்துல் ஜப்பார், நெல்லை ம.உ.பா உறுப்பினர் நன்றி தெரிவித்தார்.

தகவல்
செ. தங்கபாண்டியன், அமைப்பாளர்,
திருநெல்வேலி மாவட்டம்
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

தருமபுரி

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

4. பி.அக்ரகாரத்திலும், இண்டூரிலும் தெருமுனைக்கூட்டம்

பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமா மது ஆபாசங்களை தடை செய் என்ற தலைப்பில் என்ற தலைப்பில் தெருமுனைக்கூடம் நடந்தது.

நாள் : 27.02.2013
தலைமை
: தோழர் சிவா, வட்டக்குழு உறுப்பினர், விவசாயிகள் விடுதலை முன்னணி
உரை : தோழர் பிரகாஷ், தோழர் பழனியம்மாள், தோழர் வனிதா

தோழர்கள் கோபிநாத், தோழர் குயில் ஆகியோல் கலந்து கொண்டனர்.

தகவல் : புதிய ஜனநாயகம் செய்தியாளர், தருமபுரி

 

 

5. திருமங்கலம் பொதுக்கூட்டம்

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்!

என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருமங்கலம் பகுதி அமைப்பாளர் தோழர் வீரணன் தலைமை உரையும் தோழர் ஆசை வி.வி.மு அவர்கள் சிற்றுரையும்,  தோழர் சி.ராஜூ மாநில அமைப்பாளர் மனித உரிமை பாதுகாப்பு மையம் அவர்கள் சிறப்புரையும் ஆற்றினார்கள்.

சிறப்புரைக்குப்பின் தோழர் வீரணன் திருமங்கலம் பகுதி அமைப்பாளர் அவர்களின் மகன் மணமகன் ராஜாவிற்கும் மணமகள் ஜோதிலட்சுமிக்கும் பொதுக்கூட்ட மேடையில் சீர்திருத்தத் திருமணம் தோழர் சி.ராஜூ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு தோழர் மோகன் வி.வி.மு அமைப்பாளர் தேனி மாவட்டம்,  உசிலை வி.வி.மு செயலர் தோழர் குருசாமி, திரு மு.சி.சோ.முருகன், தி.மு.க திருமங்கலம் மற்றும் பெ.லெட்சுமணன் தி.மு.க திருமங்கலம் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இறுதியில் ம.க.இ.க வின் புரட்சிகரக் கலைநிகழ்ச்சி எழுச்சியூட்டும் படி அமைந்தது.

தகவல் : வி.வி.மு.
[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

6. பென்னாகரம் பொதுக்கூட்டம்

01.03.2013 அன்று மாலை 6 மணிக்கு பென்னாகரம் டெம்போ ஸ்டேண்ட் அருகில் நடைபெற்றது.

தலைமை: தோழர் சிவா, வட்டக் குழு உறுப்பினர், விவசாயிகள் விடுதலை முன்னணி
உரை : தோழர் வனிதா, தோழர் பழனியம்மாள், தோழர் பிரகாஷ்,
சிறப்புரை
: தோழர் காளியப்பன், மாநில இணைச்செயலாளர், மக்கள் கலை இலக்கிய கழகம்

தோழர் காளியப்பன் தன் உரையில்

“இரண்டு நாளைக்கு முன்பு பென்னாகரம் அருகே 8 வயது லோகேஷ் என்ற சிறுவன் தனியார் பள்ளி வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியாளியுள்ளான். இன்று மாலை இண்டூர் அருகே ஜெயம் பொறியியல் கல்லூரி பேருந்தும் வெங்கடேஷ்வரா கலை அறிவியல் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதி 8 பேர் வரை உயிரிழந்ததாக சொல்கிறார்கள். ஒரு தனியார் பள்ளி – கல்லூரியின் லாபவெறிக்காக பெற்றோர்கள் தங்களின் அன்புச் செல்வங்களை இழந்து வருவது தினசரி நடக்கிறது.

அதே போலத்தான் பத்திரிகை, டிவி, சினிமா, இன்டர்நெட் முதலாளிகளின் லாபவெறிக்காக விளம்பரங்களில் பெண்களை ஆபாசமாக காட்டி வருகிறனர். முதலாளிகள் சமூகத்தை சீரழிப்பதன் மூலம் வாழ்ந்து வருகிறார்கள்.” என்று விளக்கினார்

இறுதியில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏன்னா நா ஒரு ஆம்பள
திண்ண தட்ட கழுவ மாட்டேன்
தண்ணி மொண்டு குடிக்க மாட்டேன்
படுத்த பாய சுருட்ட மாட்டேன்
உடுத்த துணிய துவைக்க மாட்டேன்
ஏன்னா நா ஒரு ஆம்பள

என்ற பாடல் ஆணாதிக்கத் திமிரை சாடியது.

தகவல் : புதிய ஜனநாயகம் செய்தியாளர், தருமபுரி
[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

7. சிவகங்கை

பெண்கள் மீதான வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோம்!
ஆணாதிக்கத் திமிரை ஒழிப்போம்!
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

27 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சிவகங்கை அரண்மனை வாசலில் பிரச்சாரக்கூட்டம் தொடங்கியது. புஜதொமு தோழர் கணேசன் தலைமை தாங்க தோழர்கள் தோழர் மோகன், தோழர் ஆனந்த், தோழர் குருசாமிமயில்வாகனன் ஆகியோர் உரையாற்றினார்கள். முடங்காதே! முடங்காதே! பெண்ணினமே முடங்காதே! / திருப்பி அடி! திருப்பி அடி! ஆணாதிக்கப் பொறுக்கிகளைப் பெண்ணினமே திருப்பியடி! என்று பகுதியை அதிரவைத்தன முழக்கங்கள். ஆங்காங்கே நின்று சற்று நேரமே கேட்டுக்கொண்டிருந்த சில பெண்களின் முகத்தில் தோன்றியது வியப்புணர்வு!

மறுநாள் 28 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அரசு போக்குவரத்துப் பணிமனையின் எதிரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்திற்கு புஜதொமு தோழர் சுரேஷ் கண்ணன் தலமை தாங்கினார். தோழர் கணேசன், தோழர் ஆனந்த், தோழர் குருசாமிமயில்வாகனன் ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சி முடிந்ததும் கூட்டத்தைக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் சொன்னார், “இருந்தாலும் நீங்களும் ஆம்பிளைகளா இருந்துக்கிட்டு இப்பிடி ஆம்பிளைகளையே ரொம்பத் தாக்கிப் பேசக்கூடாது.” இன்னொருவர் சொன்னார், “ப.சிதம்பரத்தின் 2013 பொருளாதார ஆய்வறிக்கையிலிருந்து துவங்கி அது இன்றைய ஆணாதிக்கப்பொறுக்கித்தனத்தின் அடிப்படையாக எப்படி இருக்கிறது என்பதை விளக்கிய தோழர்களின் உரை மிகவும் புதிது.”

banner-1

தகவல் : பு.ஜ.தொ.மு.
[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

த.நா தமிழனுக்கு 1ரூபாய் இட்லி! ஈழத்தமிழனுக்கு இலவச ஈழம்!

56

தா-பாண்டியன்“யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது நாம் அறிந்த முதுமொழி. வலது கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் என்று கூறப்படும் தா.பாண்டியன்தான் யானையின் கழுத்தில் தொங்கும் மணி.

மார்ச் 20 ஆம் தேதியன்று, இராஜபக்சேவின் இனப்படுகொலைக்கும் போர்க் குற்றத்துக்கும் எதிரான மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்திருந்த சூழலில் தா.பா ஒரு அறிக்கை விட்டிருந்தார். “மாணவர்கள் இப்படி தனித்தனியாகப் போராடுவதால் பயனில்லை, எல்லோருடைய போராட்டத்துக்கும் முதல்வர் தலைமை தாங்கி நடத்த வேண்டும்” என்ற விசித்திரமான கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தார்.

“மணி தானாக ஆடாதே” என்று நாம் யோசித்து முடிப்பதற்குள் சீனுக்கு யானை வந்து விட்டது. “ஐ.பி.எல் போட்டியில் இலங்கை ஆட்டக்காரர்கள் சென்னைக்கு வரக்கூடாது. இலங்கையை நட்பு நாடாக இந்தியா கருதக்கூடாது. தனி ஈழம் குறித்த வாக்கெடுப்பை ஈழத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் நடத்த வேண்டும்.” என்று அடுக்கடுக்கான அம்மாவின் தீர்மானங்களால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் சுவர்கள் அதிர்ந்து விரிசல் விடத் தொடங்கி விட்டன.

அம்மாவுடைய சட்டமன்ற உரையின் கடைசி வரிகள்தான் மிகவும் கவனிக்கத்தக்கவை. மாணவர் போராட்டத்துக்குப் பயந்துதான் கருணாநிதி ராஜினாமா செய்து விட்டார் என்று எல்லோரும் கருணாநிதியை கலாய்த்துக் கொண்டிருக்கும் சூழலில், இந்த தீர்மானமும் மாணவர்களுக்குப் பயந்து கொண்டு அம்மா போட்ட தீர்மானம் என்று யாராவது எண்ணி விட்டால்? குறிப்பாக மாணவர்களிடம் அப்படி ஒரு ஆணவம் வந்துவிடக்கூடாதே என்பது தாயுள்ளத்தின் கவலை. எனவேதான், “இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கும் வகையில் மாணவ மாணவியரின் போராட்டம் அமைந்திருந்தது” என்ற உண்மையைத் தனது உரையில் அவர் அழுத்தம் திருத்தமாகவும் அதே நேரத்தில் பணிவுடனும் சுட்டிக் காட்டியிருந்தார்.

“அம்மாதான் சத்யம், தமிழகம் மாயை ; தமிழகம்தான் அம்மாவைப் பிரதிபலிக்க வேண்டுமேயன்றி, தமிழகத்தை அம்மா பிரதிபலிக்க முடியாது. இந்த பிரம்மஞானம் கைவரப் பெற்றவர்கள் தமிழகத்தில் ஓ.ப, தா.பா போன்ற வெகுசிலர்தான். (ஓ.ப = ஓ. பன்னீர் செல்வம்)

“பிரதிபலித்தது போதும், போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்றும் தனது சட்டமன்ற உரையில் அம்மா அன்புடன் உத்தரவிட்டிருக்கிறார். “அம்மா தலைமை தாங்கவேண்டும்” என்று தா.பா சொன்னதன் உட்பொருளும் இதுதான். தோளில் “சிவப்பு” துணியைத் தொங்கவிட்டிருக்கும் ஒரு மனிதர், “போதும், போராட்டத்தை முடியுங்கள்” என்று “பச்சை”யாக சொல்ல முடியாதல்லவா?

போராட்டம் இப்படியே தொடர்ந்து, எங்காவது ரெண்டு ஊரில் தடியடி-கைது என்று ஏடாகூடமாகிவிட்டால், “செக்கா சிவலிங்கமா என்று வித்தியாசம் தெரியாத மாணவர்கள் ஜெயலலிதாவுக்கும் ஒரு கொடும்பாவி தயார் செய்து பற்ற வைத்து விடுவார்கள்; புரட்சித்தலைவியின் கொடும்பாவி என்பதால் போலீசார் அதனை மிதித்து அணைப்பதற்கும் அஞ்சுவார்கள்; இதெல்லாம்  “களம் பல கண்ட கம்னிஸ்டான” தா.பாவுக்கு தெரியாதா என்ன? அதனால்தானே கொண்டை தெரிந்தாலும் பரவாயில்லை என்று அவரைத் தன்னுடைய ஒற்றர் படையின் தலைமைத் தளபதியாக அம்மா நியமித்திருக்கிறார்.

தாபா வாக இருக்கட்டும், பிற ஐந்தாம் படைத் தளபதிகளான வைகோ, பழ. நெடுமாறன், சீமான், டி.கே. ரங்கராஜன் போன்றோராக இருக்கட்டும். ஒரே நேரத்தில் எட்டுத் திக்குகளிலிருந்தும், வெவ்வேறு கட்டையில், நாளுக்கொன்றாகப் புரட்டிப் பேசும் இவர்களை அம்பலப் படுத்துவதென்பது மிகமிகக் கடினம். அது ரோலர் கோஸ்டரில் சவாரி செய்பவன் மீது குறி பார்த்து எறிவதற்கு ஒப்பானது.

“போரில் இலங்கையின் கூட்டாளியாக இந்திய அரசு செயல்பட்டிருக்கிறது என்ற உண்மையை ராஜபக்சே சொல்லிவிடுவார் என்பதால்தான் இந்திய அரசு ஐ.நா விசாரணையை எதிர்க்கிறது” என்று முழங்கினார் தா.பா – இது மார்ச் 6-ம் தேதி.

இந்திய அமைதிப்படைக்கு டவாலி வேலை பார்த்தவரான தா.பா,  இப்படி “அநியாயத்துக்கு”  நியாயமாகப் பேசுகிறாரே, என்று நாம் ஆச்சரியப்பட்டு முடிவதற்குள், “அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து இலங்கை அரசுக்கு புத்தி புகட்டும் வரையில் இந்தியா திருத்தம் கொண்டு வர வேண்டும் என்கிறார். இது 12 ஆம் தேதி.

“திருத்தமாவது ஒண்ணாவது, இந்தியாவே தீர்மானத்தை கொண்டு வரவேண்டும்” என்று ஆங்கில சானல்களில் சீறுகிறார் தேசிய செயலர் டி. ராஜா. சி. மகேந்திரனோ, சன் டிவி விவாத மேடையில், “சுயநிர்ணய உரிமை, தேசிய இனப்போராட்டம்” என்று ஏ.கே 47 துப்பாக்கியாய் வெடிக்கிறார்.

“செய்த பாவத்துக்கு இந்தியா பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும்” என்கிறார் நெடுமாறன். “அதெல்லாம் முடியாது, இந்தியாவின் டவுசரைக் கழட்டாமல் விடமாட்டேன்” என்று மேல் ஸ்தாயியில் ஒரு சவுண்டு விட்டு, அப்படியே மத்திய ஸ்தாயிக்கு இறங்கி வந்து, “தமிழக சட்டமன்றத் தீர்மானம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது” என்கிறார் வைகோ.

இன்னொரு பக்கம் மார்க்சிஸ்டு எம்.பி டி.கே ரங்கராஜன். அவர் அம்மாவின்  முதுகுப் பக்கம் முளைத்திருக்கும் கை. “ராஜபக்சேவை ராஜபக்சேவே விசாரித்தால் போதும், என்பதும், வாக்கெடுப்பு கூடாது என்பதும்தான் அவர் கொள்கை. மார்க்சிஸ்டு கட்சியின் கொள்கையும் அதுதான். 2009 ஏப்ரல் வரையில் ஜெயலலிதா பேசியதும் இதைத்தான். காங்கிரசு அரசின் கொள்கையும் அதுதான். ஆனால் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகியதை, நாடகம் என்று சாடிய ரங்கராஜன், சட்டமன்றத்தில் ஜெ போட்டிருக்கும் தீர்மானத்தை நாடகம் என்று சாடவில்லை. கட்சி மட்டும் சம்பிரதாயமாக தனது கருத்து வேறுபாட்டை தெரிவித்திருக்கிறது.

தேசிய இனப்பிரச்சினையைப் பொருத்தவரை “இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட உலகின் எந்த நாட்டிலும் எந்த தேசிய இனத்தின் பிரிந்து போகும் உரிமையையும் அங்கீகரிக்க முடியாது” என்பதுதான் வலது இடது கம்யூனிஸ்டு கட்சிகளின் கொள்கை. இப்படி ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் காஷ்மீரை எதிர்த்தும், ஈழத்தை ஆதரித்தும் எப்படி இவர்களால் வாள் சுழற்ற முடிகிறது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். இதென்ன பிரமாதம், ஒரே நேரத்தில் ஈழத்தை ஆதரித்தும், எதிர்த்தும் அம்மா கம்பு சுற்றி வூடு கட்டவில்லையா?

“ராஜீவைக் கொன்ற புலிகளை கருணாநிதி ஆதரிக்கிறாரே, சோனியா ஏன் மவுனம் சாதிக்கிறார், அவர் ராஜீவின் பெண்டாட்டிதானே?” என்று ஏப்ரல் 2009 இன் முற்பகுதியில் பேசிய ஜெயலலிதா, அதே ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் “இராணுவத்தை அனுப்பி ஈழம் வாங்கித் தருவேன்” என்று தேர்தல் கூட்டங்களில் முழங்கவில்லையா?”

“இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது” என்று அக்டோபர் 2008 இல் பேசிய ஜெயலலிதா, இன்று ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போடவில்லையா?

“இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் பிடித்து வைத்துக் கொண்டு, விடுதலைப் புலிகள் அவர்களைப் ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறி ஜனவரி 2009 இல் ராஜபக்சேவுக்கு வக்காலத்து வாங்கிய ஜெயலலிதா, இன்று ராஜபக்சே மீது இனப்படுகொலைக் குற்ற விசாரணை கேட்கவில்லையா?

இத்தனை தகிடு தத்தங்களையும் மறைத்து அம்மாவை ஈழத்தாயாக காட்டுவதென்பது, பச்சை ஆடை ஜெயலலிதாவை வெண்ணிற ஆடை ஜெயலலிதாவாக காட்டுவதற்கு ஒப்பான சவால். இதனை சாதிப்பதற்கு வைகோ, தாபா, சீமா, நெடுமா உள்ளிட்ட ஒப்பனைக் கலைஞர் சங்கமே களத்தில் இறங்கியிருக்கிறது. எனினும், இது சும்மா அரிதாரத்தை மாற்றிப் பூசும் வேலை மட்டுமல்ல என்பதால், கிராபிக்ஸ், அனிமேசன், ஈவென்ட் மானேஜ்மென்ட், மீடியா மேனேஜ்மென்ட், பிராண்ட் புரமோசன் வல்லுநர்களான ஃபீரீலான்ஸ் போராளிகளும் களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்கள்.

000

ட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மை வழங்கிய சென்னைத் தமிழனுக்கு அம்மா ஒரு ரூபாய் இட்டிலி வழங்கவில்லையா? 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 40 சீட்டையும் அம்மாவுக்கு வழங்கியிருந்தால் அன்றைக்கே அம்மா ஈழம் பெற்றுத் தந்திருக்க கூடும். “வரவிருக்கும் தேர்தலில் 40 எம்.பி தொகுதிகளையும் பெற்றுத் தந்தால், இலவச ஈழம் உறுதி” என்று சொல்வதற்குத்தான் இந்த சட்டமன்றத் தீர்மானம்.

ஆனால் இலவச ஈழத்தை வழங்கவிருக்கும் மஞ்சள் பையில், புலி படத்தை அச்சிட அம்மா சம்மதிக்க மாட்டார். அம்மா படத்தை மட்டும் போட்டு, புலி படத்தை புறக்கணிப்பதற்கு புலி ஆதரவாளர்களுக்கு மனம் ஒப்பாது. புலி மேல் அம்மா சவாரி செய்வது போல போடலாம். நல்ல கருத்துப் படமாகவும் இருக்கும்.

–   தொரட்டி

 

திருச்சியில் மகளிர் தின ஆர்ப்பாட்டம்!

4

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோம்!
ஆணாதிக்க திமிரை ஒழிப்போம்!
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலணியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

என்கிற தலைப்பில் சிந்தாமணி அண்ணாசிலை அருகில் காலை 10.30 மணி அளவில் விண்ணதிரும் பறை முழக்கத்துடனும், பெண் தோழர்களின் அரசியல் முழக்கத்துடனும் ஆர்ப்பாட்டம் துவங்கியது.

தலைமை உரையாற்றிய பெ.வி.மு தலைவர் தோழர்.நிர்மலா மார்ச்-8 பெண்கள் தினத்தை போராட்ட தினமாக கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், பெ.வி.மு, திருச்சியில் எடுத்த போராட்டங்கள் பற்றியும் அதில் சில வகையான, கம்பியூட்டர் எஞ்சினியர் லியாகத் அலியின் ஆபாச பொறுக்கித் தனத்தை கண்டித்தும், வரதட்சணைக் கொடுமைக் கெதிராகவும், பேருந்தில் பெண்களை இழிவுபடுத்தும் ஓட்டுனர், நடத்துனரின் ஆணாதிக்க பொறுக்கி தனத்திற்கு எதிராகவும், 4 வயது சிறுமியை பாலியல் வன்முறைக் குள்ளாக்கிய காமப் பொறுக்கியை கண்டித்து போராட்டம் நடத்திய பெண்கள் விடுதலை முன்னணியின் செயல்பாடு பற்றியும் விளக்கி பேசினார்.

கண்டன உரையாற்றிய பெ.வி.மு தோழர் மலர், ஆரம்ப காலங்களில் பெண் என்பவள் மதிப்புக்குரியவளாக கருதப்பட்டாள், தனிச் சொத்துடைமை வந்த பின்னரே, ஆணாதிக்கம் வந்தது, மார்ச்-8 என்பது போராட வேண்டிய ஒரு தினம், ஆனால் இன்று கோல போட்டி, சமையல் போட்டி என போராட்ட நாளை சிதைக்க கூடிய வகையில் தான் நடத்துகின்றனர். இந்த தினத்தை கொண்டாடும் வகையில் பெண்கள் இல்லை, ஏனெனில் மறுகாலனியாக்க விளைவால் பாலியல் சுரண்டல், உழைப்பு சுரண்டல், உரிமையை மறுக்கும் ஆணாதிக்க சுரண்டல் என பல்வேறு சுரண்டல்களால் சிக்குண்டு கிடக்கின்றனர், அவர்களுடைய போராட்ட குணமென்பது கூடங்குளம், முல்லை பெரியாறு சம்பவங்களில் கண்கூடாக பார்க்க முடிகிறது, ஆனாலும் இந்த போர்க்குணம் மழுங்கடிக்கப்படும் விதமாக டிவி சீரியல்கலும் நுகர்வு வெறியும் திட்டமிட்டு புகுத்தப்படுகிறது. இதிலிருந்து மாறி பெண்கள் அமைப்பாக திரள வேண்டியதன் அவசியம் பற்றியும் பேசினார்.

இறுதியில் சிறப்புரையாற்றிய ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சிறப்பு தலைவர் தோழர்.தர்மராஜ் பெண்கள் தினமான மார்ச்-8 இந்த தினத்தை கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலையிலா பெண்கள் இருக்கிறார்கள். டெல்லி பாலியல் வன்முறை பற்றிய பிரச்சினையில் ஆண்கள் சும்மா இருந்தாலும் பெண்களின் உடை நடை ஆண்களின் உணர்ச்சியை தூண்டும் விதமாக உள்ளது, பெண்களின் உடை சரியில்லை போய் தொடலாம் எனும் உரிமையை யார் கொடுத்தது. இப்படி சொல்வது ஆண்களின் ‘கெத்து’ அல்ல பொறுக்கிதனம், எனக்கு கிடைகலன்னா யாருக்கும் கிடைக்கக் கூடாதென்கிற ஆணாதிக்க திமிர், சமூகம் முழுமைக்கும் இதுதான் ஆதிக்கம் செய்கிறது. கருணாநிதி, அண்ணா இருவரும் பெண்களைப் பற்றி இழிவாக பேசியவர்களே, முல்லை பெரியாறு, கூடங்குளம் போராட்ட மக்கள் அடக்கக் கூடிய இந்த அரசால் காமப் பொறுக்கிகளை அடக்கமுடியாதா? அடக்க கூடாது என வளர விடுவதே அரசுதான், இந்த சமூக அமைப்பே அநீதியானது இதை மாற்றியமைப்பதன் மூலம் பெண்களுக்கான விடுதலை கிடைக்கும் என உணர்த்தினார்.

இடையிடையே ம.க.இ.க மையக் கலைக்குழுவினரின் எழுச்சிமிகு பாடல்கள் பாடப்பட்டன. பெண்கள், தோழர்கள் 100 பேர் அளவில் கலந்து கொண்டனர்.

[படங்களை பெரிதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்]

செய்தி: பெ.வி.மு.திருச்சி

 

கோவை மாணவர்களின் எழுச்சி!

32

கோவை மாணவர்களின் எழுச்சி

ஜெனிவாவில் கூட இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வர இருக்கும் தீர்மானத்தை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். போராட்டத்தின் மூன்றாவது நாள் அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மாணவர்களின் போராட்டமும் கைவிடப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை துவக்கினர். அதன் ஒரு பகுதியாக கோவை சட்டக்கல்லூரி மாணவர்களும் போராட்ட களத்திற்கு வந்தனர். சட்டக்கல்லூரிக்கு உள்ளேயே போராட்டத்தை நடத்தினால் பெரிய அளவில் தாக்கம் இருக்காது என்பதால் நகரத்தின் மையத்தில் இடம் தேடினர். இடம் கிடைக்காததால் ம.தி.மு.க. அலுவலகத்தில் அனுமதி பெற்று சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர்.

மாணவர்கள் எதிர்பார்த்தபடியே ஊடகங்களின், மக்களின் கவனத்தை ஈர்த்தது. சமூக ஆர்வலர்கள் அமைப்புகள் தலைவர்கள் என பலரும் வந்து வாழ்த்தி உற்சாகமூட்டினர். இதே வேளையில் தமிழகம் முழுவதும் அரசு சட்டக்கல்லூரி கலைக்கல்லூரி மாணவர்கள் வீச்சாக போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதை தடுக்க இயலாத தமிழக அரசு அனைத்து அரசு சட்டக்கல்லூரிக்கும், கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் காலவரை இன்றி விடுமுறை விட்டது.

விடுமுறை விட்டால் போராட்டம் பிசுபிசுத்துப்போய்விடும் என்று தமிழக அரசு மனப்பால் குடித்த வேளையில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு உண்ணாவிரத பந்தலுக்கு வந்தனர். முதலில் இந்துஸ்தான் கல்லூரி மாணவர்களும் அவர்களுடன் எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்களும் வந்தனர். இரண்டு கல்லூரி மாணவர்களும் இணைந்து ஒரு பேரணி நடத்தினர் பின் இதில் திருப்தியடையாத மாணவர்கள் வீரியமான போராட்டத்தில் இறங்கும் விதமாக ரயில் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

இதே வேளையில் சட்டக்கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவு மாணவர்கள் போராட்டத்தை தீவிரபடுத்தும் விதமாக விமான நிலையத்தை முற்றுகையிட்டு அங்குவைத்தே ராஜபக்சேஷவின் உருவபொம்மையை எரித்தனர். இப்போராட்டம் எளிதில் நடந்துவிட வில்லை. விமானநிலையத்தில் இருந்த மாணவர்களை தடுக்க முயல அதை மீறி மாணவர்கள் உள்ளே நுழைய போலீசார் தாக்க துவங்கியுள்ளனர். மாணவர்கள் அதை முறியடித்து உள்ளே நுழைய வட இந்திய போலீஸ் துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவோம் என்று மிரட்டியும் பணியாமல் உள்ளே நுழைந்து அமெரிக்க அரசு, இந்திய அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிரான முழக்கமிட்டு தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர். இந்த வேளையில் அனைத்து தனியார் கல்லூரி மாணவர்களும் போராட்ட களத்திற்கு வந்துவிட்டனர்.

ஆங்காங்கே சாலைமறியல், உண்ணாவிரதம், உள்ளிருப்பு போராட்டம், வகுப்பு புறக்கணிப்பு, பாரதியார் பல்கலைகழகத்தின் தொடர் உண்ணாவிரத போராட்டம் என போராட்டம் தீவிரமடைந்ததை கண்டு பீதியுற்ற தமிழக அரசு அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை விட்டது. ஆனால் மாணவர்கள் இதற்கெல்லாம் பின்வாங்குவதும் இல்லை. உடனடியாக மாணவர்கள் தங்களுக்குள் கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.

மாணவர்கள் கூட்டமைப்பு துவக்கம்

தமிழீழ விடுதலைக்காக மாணவர்கள் கூட்டமைப்பு கோவை பகுதியை மையமாக முன்வைத்து மாணவர்களின் முன்முயற்சியில் துவக்கப்பட்டது. கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்களின் தலைமையின் கீழ் வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் பல்வேறு பகுதியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறத் துவங்கின. மாணவர்கள் ஓர் அமைப்பாக ஒருங்கிணைந்தபின் போராட்டம் முன்னிலும் பலமடங்கு வீரியத்துடன் நடைபெறத்துவங்கியது. குறிப்பாக நேரு மாணவர்கள் நடத்திய போராட்டம்.

நேரு கல்லூரி மாணவர்களின் எழுச்சி

முந்தைய நாள் இரவு திட்டமிட்டு குறைந்தது நூறில் (100) இருந்து இருநூறு(200) பேர் பங்கேற்பர் என்ற எதிர்பார்ப்புடன் மறுநாள் காலை அணிதிரட்ட ஆயிரத்து ஐநூறு பேர் கலந்து கொண்டது மாணவர்களின் உணர்வையும் வளர்ச்சியையும் காட்டுகிறது. இதில் பெருமகிழ்ச்சிக்குறிய மற்றொரு செய்தி என்னவென்றால் கலந்து கொண்டவர்களில் பாதிபேர் மலையாளிகள் மேலும் கணிசமான அளவு தெலுங்கு மற்றும் கன்னடம் பேசுபவர்கள்.

இனவெறி, மொழிவெறி, மாநில மனோபாவத்தையும் கடந்து மாணவர்கள் ஓர் வர்க்கமாய் ஒன்றிணைந்து போராட்ட களத்திற்கு வந்தனர். துவக்கத்தில் உண்ணாவிரதம் இருப்பது அல்லது அடையாள போராட்டம் நடத்துவது என்ற எண்ணத்தில் வந்தவர்கள் பின்பு போராட்டத்தை தீவிரப்படுத்த எண்ணினர். எனவே அருகில் உள்ள தனலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்களையும் இணைத்துக்கொண்டு மதுக்கரையில் உள்ள மத்திய அரசின் இராணுவ ஆயுதக்கிடங்கை முற்றுகையிடக் கிளம்பினர். கல்லூரியிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கரைக்கு பேரணியாகவே முழக்கமிட்டபடி கிளம்பினர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுச்சியுடன் கிளம்ப நான்கு இடங்களில் காவல்த்துறை தடுத்து நிறுத்த முயன்றது.

தடுப்புகளை வீசி எரிந்துவிட்டு போலீசையும் இடித்து தள்ளி விட்டு முன்னேறியது மாணவர் பட்டாளம். ஆயுதக்கிடங்கை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். சுமார் இரண்டுமணி நேரம் போராட்டம் தொடர்ந்தது. இந்திய  ராணுவம் துப்பாக்கியை காட்டி மிரட்டிப்பார்த்தனர், போலீஸ் லத்தியை காட்டி மிரட்டி பார்த்தது எதற்கும் அஞ்சாமல் மாணவர்கள் துணிந்து நின்றபோது துப்பாக்கிகளும், லத்திகளும் பணிந்தன. மாணவர்களிடம் கெஞ்சின. மாணவர்கள் எழுச்சியுற்று வீதிக்கு வந்தால் அரசின் அடக்குமுறைக் கருவிகள் அஞ்சி நடுங்குவதையும் கெஞ்சிப்பணிவதையும் நேரில் பார்க்க வேண்டுமே அந்தக் காட்சி வீரியமான போராட்டங்களின் மூலம் அதிகார வர்க்கத்தை பணிய வைக்கமுடியும் என்பதை மாணவர்கள் தங்கள் போராட்ட அனுபவத்தின் மூலம் உணர்ந்தனர்.

பின் போராட்டத்தை முடித்துக்கொண்டு கிளம்பிய மாணவர்கள் மன நிறைவு இன்றி பிரிந்து சென்று சென்று சாலைமறியல் ரயில் மறியலிலும் ஈடுபட்டனர். மாணவர்களை கைது கூட செய்ய முடியாமல் விட்டு சென்றது போலீஸ்.

என்.ஜி.பி. கல்லூரி மாணவர்களின் போர் !

மறுநாள் போராட்டச் செய்திகள் பல்வேறு இடங்களில் இருந்து வந்துகொண்டே இருந்தன. எஸ்.என்.ஆர். கல்லூரி, சி.எம்.எஸ்., பி.எஸ்.ஜி. மாணவர்களின் போராட்டம், பள்ளி மாணவர்கள் +2 தேர்வெழுதிவிட்டு தொண்டாமுத்தூர் சாலைமறியல், ஆலாந்துறை பள்ளி மாணவர்களின் போராட்டம், குனியமுத்தூர் பள்ளி மாணவர்களின் போராட்டம், கிருஷ்ணா கல்லூரி, கற்பகம் கல்லூரி கிராமப்புறங்களில் தன்னெழுச்சி போராட்டம், ஈரோடு, திருப்பூர் மாணவர்களின் போராட்டம் என பரவிக்கொண்டிருந்தது. இவ்வேளையில் என்.ஜி.பி. கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆயத்தமாகி போராட்ட கமிட்டிக்கு அழைப்பு விடுத்தனர்.

போராட்டகமிட்டி பிரதிநிதி சென்று பேசிய போது ஏதாவது பிரச்சினை வருமா? போலீஸ் அடிக்குமா? கொஞ்சம் பயமாக இருக்கிறது இயல்பாக தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர். இவ்வேளையில் நூற்றுக்கணக்கில் போலீஸ் மாணவர்களை சுற்றி வளைத்து நின்றிருந்தது. இதை உடைத்துக் கொண்டு எப்படி வெளியேறுவது. நாம் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறோம்.என்பதை உணர்ந்து அருகாமை கல்லூரி மாணவர்களை துணைக்கு அழைத்தனர். மாணவர் கூட்டமைப்பும் மாணவர்களை அழைத்து வந்தது.

கல்லூரிக்குள் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து செல்வது போல் வெளியேறி விமானநிலையத்தை நோக்கி சென்றனர். விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு மாணவர்கள் வருவார்கள் என எதிபார்த்து போலீஸ் படை காத்திருந்தது. திடீரென்று முழக்கமிட்டு உள்ளே நுழைந்த மாணவர்களை தடுப்புகளை வைத்து (பேரிகார்டு) தடுக்க முயன்றது. ஒல்லியான மாணவன் ஒருவன் எட்டி உதைக்க பேரிகார்டு எகிறியது.

தடுப்பை உடைத்துக் கொண்டு மாணவர்கள் உள்ளே செல்ல பின்னே போலீஸ் ஓட போர்க்களமானது விமானநிலையம். ஒரு வழியாக மாணவர்கள் ஒவ்வொருவரையும் பிடித்து நிறுத்தியது போலீஸ். ஒரு மாணவனை பிடிக்க மூன்று போலீஸ் நான்கு போலீஸ் என தேவைப்பட்டது. ஒரு வழியாக தடுத்து நிறுத்தி விட்டோம் என போலீஸ் நினைத்து பெருமூச்சு விட எங்கிருந்தோ வந்த மற்றொரு மாணவர் பட்டாளம் விமானநிலையத்துக்குள் பாய்ந்து முன்னேற செய்வதறியாது நிலைகுலைந்து போனது போலீஸ் படை. “போதும் நிறுத்திக் கொள்ளுங்கள் எங்களால் முடியவில்லை என்று கெஞ்சத் துவங்கி விட்டார்கள்”.

கமிஷனர் போலீசின் அதிகாரம் மாணவர்களின் காலைப் பிடித்து கெஞ்சிக்கொண்டிருந்தது. “நாங்கள் உடனே நிறுத்தமாட்டோம் பதினைந்து நிமிடம் முழக்கமிட்டபின் செல்வோம்” என்றனர் மாணவர்கள். வேறு வழியின்றி அனுமதித்தது போலீஸ். போராட்டத்திற்கு பின் கைதான மாணவர்களை மண்டபத்திற்கு அழைத்துச் சென்ற போது வழிநெடுக முழக்கமிட்ட படியே மாணவர்கள் சென்றனர்.

மாணவர்களை கைது செய்து வைத்திருந்த மண்டபத்தை சுற்றி இருந்த பொதுமக்கள் விஷயத்தை கேள்விப்பட்டு மாணவர்களை சந்திக்க வந்தனர். வரும் போது பலகாரம், உணவு, தேநீர் போன்றவற்றை கொடுத்து தங்களின் ஆதரவையும் வாழ்த்துதளையும் தெரிவித்தனர். உங்களின் போராட்டம் சிறப்பானது நீங்கள் இத்துடன் நிறுத்தக்கூடாது நாட்டையே நீங்கள் மாற்ற வேண்டும் என்று வாழ்த்தினர்.

பேரணிக்கு  திட்டமிடல்

மாணவர்கள்  போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் மாணவர்களை ஒருங்கிணைந்து  மாணவர் கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்ட நிலையில் இதற்கு தலைமை தாங்கிய கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர்.

பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்தேறின குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டாலும் மார்ச் 19 அன்று  காவல் துறையின் அனுமதி மறுத்த நிலையில் தான் ஏற்பாடுகள் நடந்தேறின. தடையை மீறி நடத்துவது என்று மாணவரகள் உணர்வு பூர்வமாக தீர்மானித்திருந்தனர். மாணவர்களின் உறுதியை கண்டு அஞ்சிய காவல்துறை மார்ச் 18 அன்று இரவு அனுமதியளித்தது.

வெற்றிகரமான பேரணி:

மார்ச் 19 அன்று  காலை முன்னணியாளர்கள் பேரணி துவங்கும்  இடத்திற்கு வந்தனர். உளவுத் துறை அவர்களை கேமராவில் படமெடுத்து. அதன் மூலம் மிரட்ட முயன்றது. மாணவர்கள் அதற்கு அஞ்சாமல் படம் எடுப்பதை தடுத்து நிறுத்தினர். முந்தைய நாள் பத்திரிகையில் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் பெயர், முகவரிகள் சேகரிக்கப்படுகின்றன. பின்னாளில்  அரசு வேலைகளில் சேரும்போது அரசுக்கு எதிராக போராடியது தெரிந்தால் வேலை கிடைக்காது என்ற செய்தியை வெளியிட்டு மாணவர்களை பயமுறுத்த முயன்றது.

இவை அனைத்தையும் மீறி மாணவர்கள் பேரணி துவங்கும் இடத்தில் குவியத் துவங்கினர். சுமார் 6,000 மாணவர்கள் கலந்து கொண்ட பேரணி எழுச்சியுடன் துவங்கியது. இந்திய அரசையும் அமெரிக்க தீர்மானத்தையும் ஐக்கிய நாடுகள் சபையின் மோசடியையும் அம்பலபடுத்தியும், தேசிய கட்சிகள், ஒட்டு கட்சிகளின் துரோகத்தையும் தோலுரித்தும் முழக்கங்கள்  எழுப்பினர்.   பறை இசை முழக்கத்துடன் பேரணி துவங்கியது. சாலையின் இரு பக்கத்திலும் கூடி நின்று கவனித்தனர். “வேடிக்கை பார்க்கும் தமிழினமே வீதிக்கு வந்து போராடு என்ற முழக்கம் அவர்களையும் போராட அழைத்தது.

போலீஸ் ஏற்படுத்திய தடையை முறியடித்த மாணவர்கள்:

மாணவர்கள் போராட்டம் பிரதான சாலையில் முன்னேறிச் சென்ற போது, போலீஸ் வழிமறித்து. தடுப்புகளையும், 2 தனியார் பேருந்துகளையும் நிறுத்தி வைத்து எதிரே போலீஸ் பட்டாளத்தையும் நிறுத்தி வைத்து ஆள் அரவமற்ற மாற்று பாதையில் செல்லச் சொன்னது. மாணவர்கள் மறுத்தனர். “முன்னேறுவோம் முன்னேறுவோம் தடைகளை உடைத்து முன்னேறுவோம் என்ற தொடர் முழக்கம் மாணவர்களை எழுச்சியுறச் செய்தது. மாணவர்களிடமிருந்து கற்கள் பறந்தன. பேருந்துகளின் கண்ணாடிகள் நொறுங்கியது, உடனே பேருந்தை எடுத்து விட்டனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு, போலீஸ் படையை விலக்கிக் கொண்டு மாணவர் படை வெற்றி முழக்கமிட்டு முன்னேறியது.

போலீஸ் படையோ எதுவும் செய்ய இயலாமல் கையை பிசைந்து கொண்டு விலகி நின்றது. காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டு பின் உண்ணாவிரதப் பந்தலுக்கு சென்று சட்டக் கல்லூரி மாணவர்களின்  உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.  உண்ணாவிரதப் போராட்டம் அரசை நிர்பந்திக்காது எனவே தீவிர போராட்டதிற்கு தயராகும் விதமாக உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் உண்ணாவிரதத்தை  கைவிட்டு தீவிர போராட்டத்திற்கு  மாணவர்களை அரை கூவி அழைத்து பேரணியை நிறைவு செய்தனர்.

சுமார் மூன்று மணிநேரம் நடந்த பேரணி மாணவர்களையும் மக்களையும் எழுச்சியுற செய்து அடுத்தகட்ட போராட்டத்திற்கு உணர்வூட்டியது.

பேரணி முடித்து சென்ற மாணவர்களில் ஒரு பிரிவினர் ரயிலை மறித்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். மறுநாளும் போராட்டங்களும் தீவிரமடைந்தன. தற்போதைய போராட்டங்கள் அனைத்தும் போர்குணமான, துணிச்சலான போராட்டங்கள் ஆகும்.  மாணவிகள் மட்டுமே பங்கேற்ற ஆர்பாட்டம், 14 மாணவிகள் மட்டும் பங்கேற்று காட்டூர் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை போராட்டம், ராணுவ பயிற்சி கல்லூரி முற்றுகைப் போராட்டம் அதை வீடியோ படம் எடுத்த மத்திய உளவுத் துறைக்கு அடி உதை அவருடைய பேண்ட் கிழிந்து போனது, சொட்டைத் தலையிலேயே அடித்துள்ளனர். இதர சீருடை போலீசார் வந்து காப்பாற்றி செல்லவேண்டி வந்தது. அதன் பின் போலீஸ் தரப்பில் யாரும் போட்டோ பிடிக்கவில்லை. தந்தி அலுவலகம் முற்றுகை, வருமானவரி அலுவலகத்தை கைப்பற்றி 1 ½    மணி நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. வங்கி பி.எஸ்.என்.எல்., முற்றுகை என மத்திய அரசின் நிர்வாக அதிகார மையங்கள் அனைத்தையும் இலக்கு வைத்து போராடினர். போலீஸ் துறையோ வெந்து நொந்து போனது.

தொடர்ச்சியான இந்த போராட்டம் மாணவர்களை  வெகுவாக பயிற்றுவித்துள்ளது.

  • ஜாதி, மதம், இனம் கடந்து மாணவர்களை ஒரு வர்க்கமாய் ஒன்றிணைத்துள்ளது.
  • அமைப்பாக இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியது.
  • சமூக பிரச்சினையின்பால் கவனத்தையும், அக்கறையும் கொள்ள செய்தது.
  • போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருக்க கூடாது என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. தானும் இதில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற சமூக பண்பை விதைத்துள்ளது.
  • குறிப்பாக சமூகம் சார்ந்த எந்த போரட்டத்திலேயும் பங்கேற்காத மருத்துவக் கல்லூரி மாணவர்களையும், விவசாய கல்லூரி மாணவர்களையும், பள்ளி மாணவர்களையும் வீதிக்கு வரவைத்தது.
  • பெண்களை கணிசமான அளவு ஆண்களுக்கு இணையாக போராட்ட களத்திற்கு கொண்டு வந்துள்ளது.
  • பல மாணவ தலைவர்களை, போராளிகளை, கவிஞர்களை, பேச்சாளர்களை உருவாக்கி சமூகத்துக்கு அளித்துள்ளது.
  • நீண்ட நேரம் அமர்ந்து அரசியல் சார்ந்த சொற்பொழிவுகளை கவனிக்க, விவாதிக்க வைத்துள்ளது.
    ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளை தானும் நம்பாது சமூகத்துக்கும் போதிக்க வைத்துள்ளது.
  • கல்லூரி நிர்வாகத்தை கண்டு, போலீசை கண்டு, அதிகாரிகளை கண்டு அஞ்சாமல் அடக்குமுறைகளை தன் வர்க்கத்தின் ஒற்றுமையின் மூலம் எதிர்கொள்ள பயிற்றுவித்தது.
  • கல்லூரி விட்டு தங்கள் சொந்த ஊருக்கு சென்றாலும் அங்கும் எழுச்சிகளை ஏற்படுத்த முனைவது.

எனினும் இத்தகைய எழுச்சி பெற்ற மாணவர் வர்க்கம் இனவாத கண்ணோட்டத்தில் பீடிக்கப்பட்டும், அரசியல் அறியாமையுடனும் சரியான அமைப்பை தேர்ந்தெடுக்க தெரியாமலும் குழப்பத்தில் இருப்பது ஒரு யதார்த்தம். எனினும் தனக்கான புரட்சிகர கடமையை விரைவில் உணர்ந்து தயாராகும் என நம்பலாம் ஏனெனில் தேசத்தின் எதிர்காலம் அவர்கள் கையில்.

பின்குறிப்பு: 1.  நாம் தமிழர் கட்சியின் தலையீடு காரணமாக மாணவர்களின் ஒற்றுமையில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதை விரைவில் உணர்ந்து மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும்.

2. இனி போராட்டம் நடைபெறாது என்ற தைரியத்தில் கல்லூரியை திறந்தது சி.எம்.எஸ். கல்லூரி நிர்வாகம். மீண்டும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம், ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு என போராட்டம் வளர கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

தடைகளை கடந்து தொடர்கிறது மாணவர்கள் போராட்டம்…. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!!!

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் : கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள்