Tuesday, August 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 772

நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம்: நரியைப் பரியாக்கும் காங்கிரசின் மோசடி!

நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம் : நரியைப் பரியாக்கும் காங்கிரசின் மோசடி !தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தமது நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளும், பழங்குடியின மக்களும் போராடி வரும் வேளையில், 1894ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது, மைய அரசு. இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்வதோடு, நிலத்தை இழக்கும் விவசாயிகளை மீளக் குடியமர்த்தவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான சட்டத்தையும் இம்மழைக்கால கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் போவதாகவும் மைய அரசு கூறியிருக்கிறது.

ஆங்கில ஏகாதிபத்திய எஜமானர்களால் 117 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு, இன்று வரை நடைமுறையில் இருந்துவரும் இந்நிலக் கையகப்படுத்தும் சட்டம், விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலங்கள் அபகரிக்கப்படுவதைப் பொது நோக்கம் என்ற அடிப்படையில் நியாயப்படுத்துகிறது. மைய அரசு கொண்டுவரவுள்ள திருத்தங்கள் இப்‘பொது நோக்கத்தை’க் கைகழுவவில்லை. கிராமப்புறங்களை மேம்படுத்துவது, பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது, ஏழைகள் மற்றும் நிலமற்ற கூலி விவசாயிகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பது, அரசின் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவது முதலானவற்றுக்காக நிலங்களைக் கையகப்படுத்தலாம் என வரையறுக்கப்பட்டிருந்த இடத்தில், அவற்றுக்குப் பதிலாக, தந்திரோபாய நோக்கங்களுக்காகவும் (Strategic purpose), பொது மக்களின் பயன்பாட்டிற்கான அடிக்கட்டுமானத் திட்டங்களுக்காகவும் நிலங்களைக் கையகப்படுத்தலாம் என இரண்டு பூடகமான திருத்தங்களை முன்மொழிந்துள்ளது, காங்கிரசு கூட்டணி அரசு.

போஸ்கோ நிறுவனம் ஒரிசாவில் வனப்பகுதி நிலங்களைக் கையகப்படுத்த, வன உரிமைச் சட்டத்தை மீறி அனுமதி அளித்த சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம், தந்திரோபாய நோக்கங்களின் அடிப்படையில் இத்திட்டத்திற்கு அனுமதி அளித்ததாகக் கூறியது. உ.பி. மாநிலத்திலுள்ள நொய்டா பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தி ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்த அம்மாநில அரசு, மக்களுக்குக் குடியிருப்புகளைக் கட்டித் தருவதற்காகவே நிலங்களைக் கையகப்படுத்தியதாகக் கூறி, நில அபகரிப்பை நியாயப்படுத்தியது.

இந்த அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால், கார்ப்பரேட் நிறுவனங்கள் நாடெங்கும் நடத்திவரும் சட்டவிரோத நில அபகரிப்புகளைச் சட்டபூர்வமாக்கிவிடும் நோக்கத்தோடுதான் இந்த இரண்டு திருத்தங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன என உறுதியாகச் சொல்லிவிடலாம். மேலும், மேட்டுக்குடி கும்பல் உல்லாசமாகப் பொழுதைக் கழித்துவிட்டுச் செல்வதற்காக உருவாக்கப்படும் பொழுதுபோக்கு பூங்காகள், “மசாஜ் பார்லர்கள்சுகளும், சுற்றுலா துறையும் இத்திருத்தத்தில் அடிக்கட்டுமானத் திட்டங்களாக வரையறுக்கப்பட்டிருப்பது அரசின் நோக்கத்தைப் பச்சையாகவே புட்டு வைக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தமது தொழில் திட்டங்களைச் செயற்படுத்த தேவைப்படும் மொத்த நிலப்பரப்பில் 30 சதவீதத்தை மட்டுமே அரசு கையகப்படுத்தித் தரும்; அதுவும்கூட, கார்ப்பரேட் நிறுவனங்கள் அம்மொத்த நிலப்பரப்பில் 70 சதவீதத்தைப் பொது மக்களிடமிருந்து வாங்கியிருக்க வேண்டும்; மேலும், அந்நிறுவனங்கள் கொண்டுவரும் திட்டம் பொது மக்களுக்கும் பயன்தரக் கூடியது என அரசு கருதினால் மட்டுமே, இந்த 30 சதவீத நிலப்பரப்பை அரசு பொது மக்களிடமிருந்து கையகப்படுத்தித் தரும் என்றொரு திருத்தத்தையும் மைய அரசு முன்மொழிந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் குறிவைக்கும் நிலங்கள் அனைத்தையும் தானே விவசாயிகளிடமிருந்து அபகரித்துக் கொடுத்து வந்த அரசு, இனி அந்தப் ‘பொறுப்பை’ கார்ப்பரேட் நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுதான் இது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாயிகளிடமிருந்து நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுக்க இந்த நடைமுறையைதான் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் பின்பற்றி வருகிறார். நொய்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரிக்க துப்பாக்கிச் சூடு நடத்திய மாயாவதியும்கூட, இதே போன்ற ஒரு சட்ட திருத்தத்தைத் தனது மாநிலத்தில் கொண்டு வந்திருக்கிறார். இந்தத் திருத்தம் அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் புரோக்கராகச் செயல்படவில்லை எனக் காட்டிக் கொள்ளுவதற்குப் பயன்படுமேயொழிய, விவசாயிகளுக்கு இதனால் எந்தப் பாதுகாப்பும் கிடைத்துவிடாது. இப்பொழுது அரசின் அதிகாரிகளாலும், போலீசாரலும் தமது நிலத்திலிருந்து விசிறியெறியப்படும் விவசாயிகள், இச்சட்டத் திருத்தத்தின் பின் கார்ப்பரேட் நிறுவனங்களின் குண்டர் படையால் துரத்தப்படும் மாற்றம்தான் நடக்கும்.

விவசாயிகளை ஆசை காட்டி மயக்கவே, “கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து நிலத்தைச் சந்தை விலைக்கு வாங்க வேண்டும்; நிலத்தை இழக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது திட்டத்தில் வேலைவாய்ப்பு அளிக்க முன்னுரிமை தர வேண்டும்; தமக்கு நிலத்தை விற்கும் விவசாயிகளைத் தமது திட்டத்தில் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலம் விற்கப்படுவதால், வேலையிழக்கும் விவசாயக் கூலிகள், கைவினைஞர்கள் ஆகியோருக்கும் நட்ட ஈடு வழங்க வேண்டும்சு என்றெல்லாம் பலவிதமான பொறிகள் இச்சட்டத் திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

நிலத்தின் சந்தை விலை என்னவென்பதை விவசாயி தீர்மானிக்கப் போவதில்லை. இன்னொருபுறமோ, ரியல் எஸ்டேட் புரோக்கர்களால் தீர்மானிக்கப்படும் சந்தை விலைக்குத் தமது நிலத்தை விற்க மறுக்கும் உரிமையையும் விவசாயிகளிடமிருந்து தட்டிப் பறித்துவிடும்படி இச்சட்டத்தில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. குறிப்பாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டத்திற்கு மிகவும் அவசரமாக நிலத்தைக் கையகப்படுத்துவது அவசியம் என அரசு கருதினால், திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அடுத்த 15 நாட்களுக்குள் நிலத்தைக் கையகப்படுத்தும் உரிமையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு அளிக்கும். இந்த அவசர நிலை உத்தரவுக்கு எதிரான விவசாயிகளின் கருத்துக்களை அரசு கேட்க வேண்டிய அவசியமில்லை எனத் திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம் : நரியைப் பரியாக்கும் காங்கிரசின் மோசடி !கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து 70 சதவீத நிலங்களைக் கையகப்படுத்துவதில் ஏதேனும் தடங்கல்கள், சிக்கல்கள் ஏற்பட்டால், அரசு, தான் ஏற்கெனவே கையகப்படுத்தி வைத்திருக்கும் நிலத்திலிருந்து 70 சதவீதத்தை அளித்துவிட்டு, மீதி 30 சதவீத நிலத்தை விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்திக் கொடுக்கவும் இச்சட்டத்திருத்தத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகப் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மைய அரசு கொண்டுவரவுள்ள மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வுக்கான சட்டத்தின்படி, கார்ப்பரேட் நிறுவனங்கள் கொண்டுவரும் திட்டங்கள் பழங்குடியினப் பகுதிகளில் 200  க்கும் மேற்பட்ட குடும்பங்களையும், சமவெளிப் பகுதிகளில் 400  க்கும் மேற்பட்ட குடும்பங்களையும் பாதித்தால்தான், அவர்கள் இச்சட்டத்தின்படி நிவாரணம் கோர முடியும். ‘வளர்ச்சி’த் திட்டங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதன் மூலம் நிவாரண உதவிகள் வழங்கும் பொறுப்பிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களைத் தப்ப வைக்கும் ஏற்பாடுதான் இது.

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நிலத்தை விற்கும் விவசாயிகளின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அக்கார்ப்பரேட் நிறுவனம்தான் செய்து கொடுக்க வேண்டும். அரசு, இந்தப் பிரச்சினையில் தலையிடாது. கார்ப்பரேட் நிறுவனங்கள் இம்மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளைக் குறிப்பிட்ட கால இலக்கிற்குள் செய்து கொடுக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது; வேண்டுமென்றே இழுத்தடித்துத் தாமதமாக மறுவாழ்வு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தால்கூட, திட்டத்தால் பாதிப்படைந்தவர்கள் கொடுப்பதை வாயை மூடிக் கொண்டு வாங்கிக்கொண்டு போக வேண்டுமேயொழிய, தாமதத்திற்காக நட்ட ஈடு கோர முடியாது.

இந்நிவாரணம் குறித்து எழும் பூசல்களை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது. அரசு நியமிக்கும் உயர் அதிகார வர்க்க கமிட்டிதான் இப்பூசல்களைத் தீர்த்து வைக்கும். இதேபோல, கார்ப்பரேட் நிறுவனங்கள் கொண்டுவரும் திட்டங்கள் பொது மக்களுக்குப் பயன் அளிக்கக்கூடியதா, இல்லையா என்பதையும் அதிகாரிகள்தான் தீர்மானிப்பார்கள்.

1947 தொடங்கி 2004 முடிய, அரசு தனியாகவோ அல்லது தனியாருடன் கூட்டுச் சேர்ந்தோ நடைமுறைப்படுத்திய ‘வளர்ச்சி’த் திட்டங்களுக்காக ஏறக்குறைய 2.5 கோடி ஹெக்டேர் நிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு, 6 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் தமது வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ‘வளர்ச்சி’த் திட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்த 6 கோடி பேரில், 40 சதவீதம் பேர் பழங்குடியின மக்கள்; 20 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். இந்த 6 கோடி பேரில் வெறும் 18 சதவீதம் பேருக்குதான் பெயரளவுக்கு நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5 கோடி பேர் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மைய அரசு கொண்டு வரவுள்ள புதிய மறுவாழ்வுச் சட்டம் இந்த அகதிகளைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளை நசுக்கும் இயந்திரமாக உள்ளது என்பது இப்பொழுது தெள்ளத்தெளிவாக அம்பலமாகிவிட்டது. எனவே, நரியைப் பரியாக்கிக் காட்ட வேண்டிய கட்டாயத்தில்தான் காங்கிரசு கும்பல் இச்சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய முன்வந்திருக்கிறது. மேலும், நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்களால் 5 இலட்சம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள பல திட்டங்களை அரசாலும் கார்ப்பரேட் நிறுவனங்களாலும் செயற்படுத்த முடியவில்லை. அடுத்த பத்தாண்டுகளில் அடிக்கட்டுமான துறையில் ஏறத்தாழ 1,70,000 கோடி அமெரிக்க டாலர்களை மூலதனமாக ஈர்க்க வேண்டும் என்றும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் வம்பு, வழக்கு, வாய்தா எனச் சிக்கிக் கொள்ளாமல், கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து எளிதாக நிலங்களைக் கைப்பற்றிக் கொள்ளும் நோக்கத்திற்காகதான் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்களும், மறுவாழ்வுக்கான புதிய சட்டமும் கொண்டு வரப்படுகிறதேயொழிய, விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கம் எதுவும் காங்கிரசு கும்பலுக்குக் கிடையாது.

போலி கம்யூனிஸ்டுகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் இந்த உண்மையை அம்பலப்படுத்தாமல், இந்தச் சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்கள் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டுமென காங்கிரசுக்கு உபதேசித்து வருகிறார்கள். “ கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நிலங்களைக் கையகப்படுத்தும் உரிமை யாரிடம் இருக்க வேண்டும்? அரசிடமா, கார்ப்பரேட் நிறுவனங்களிடமா? விளைநிலங்களைக் கையகப்படுத்தும்பொழுது கிராம சபையின் ஒப்புதலைப் பெற வேண்டுமா, கூடாதா? நிலத்தின் விலையை எப்படித் தீர்மானிப்பது? நிலம் கையகப்படுத்தும் சட்டத்தையும், மறுகுடியமர்வு, மறுவாழ்வு குறித்த சட்டத்தையும் ஒன்றாக இணைப்பதா, கூடாதா?சு  இவை போன்ற இரண்டாம்பட்ச பிரச்சினைகளைப் பற்றிதான் மைய அரசு, போலி கம்யூனிஸ்டுகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த அறிவுஜீவிகள் ஆகியோருக்கு இடையே மயிர்பிளக்கும் வாதங்கள் நடைபெற்று வருகின்றன.

நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம் : நரியைப் பரியாக்கும் காங்கிரசின் மோசடி !விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும்படி நிலம் கையகப்படுத்தும் சட்டம் திருத்தப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் அச்சட்டத்தை இம்மி பிசகாமல் மதித்து நடப்பார்கள் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா? கிராம சபையின் ஒப்புதலின்றி பழங்குடியின மக்களுக்குச் சொந்தமான நிலங்களை, வனப் பகுதிகளைக் கையகப்படுத்தக் கூடாது என்கிறது வன உரிமைச் சட்டம். ஆனால், போஸ்கோவிற்கு அனுமதி அளிப்பதற்காக, கையகப்படுத்த வேண்டிய வனப் பகுதி நிலங்களில் பழங்குடியின மக்களே வசிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் சான்றளித்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் வனப் பகுதி நிலங்களைக் கையகப்படுத்த ஒப்புதல் அளிக்க மறுத்த கிராமப் பஞ்சாயத்துகள் கலைக்கப்பட்டு, அவை அருகிலுள்ள நகராட்சியோடு இணைக்கப்பட்டு, வன உரிமைச் சட்டம் மீறப்பட்டது. சுற்றுப்புறச் சூழல் விதிகளை மீறிதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழிற் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்பதற்கும் ஓராயிரம் உதாரணங்கள் உள்ளன.

இதுவொருபுறமிருக்க, கார்ப்பரேட் நிறுவனங்கள் தனியாகவோ அல்லது அரசுடன் கூட்டுச் சேர்ந்தோ செயல்படுத்த முனையும் தொழில் திட்டங்கள், வேலை வாய்ப்பை உருவாக்கவும், பொது மக்களின் நன்மைக்காகவும், நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும்தான் கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுவது மிகப்பெரிய பொய், மோசடி, இத்திட்டங்கள் அனைத்தும் நமது நாட்டின் இயற்கை வளங்களை, மக்களின் உழைப்பை மிகவும் மலிவான விலையில் உள்நாட்டை மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடித்துச் செல்வதற்காகவே கொண்டு வரப்படுகின்றன. ஆங்கிலேய ஏகாதிபத்திய முதலாளிகள் நாட்டை அடிமைப்படுத்திக் கொள்ளையடித்துச் சென்றதைப் போல, இப்பொழுது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிற்கழகங்கள் நமது நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்துச் செல்கின்றன. ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் இந்த கார்ப்பரேட் பகற்கொள்ளையை, மறுகாலனிய சுரண்டலை வளர்ச்சி என்ற பெயரில் மூடிமறைத்து வருகின்றன.

இந்நிலையில், விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கு ஏற்றவாறு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் எனக் கோருவது புண்ணுக்குப் புனுகு தடவும் மோசடித்தனம் தவிர, வேறெதுவுமில்லை; நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகளும், பழங்குடியின மக்களும் நடத்திவரும் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் தந்திரம் தவிர, வேறெதுவுமில்லை. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கோருவதற்கு மாறாக, இந்த வளர்ச்சியையும், இதற்காக நிலங்களைக் கையகப்படுத்துவதையும் எதிர்த்துப் போராட வேண்டும். அது ஒன்றுதான் நமது நாட்டின் விவசாயத்தையும், வனப் பகுதிகளையும், இயற்கை வளங்களையும் காப்பாற்றுவதோடு, நாடு மறுகாலனியாவதையும் தடுத்து நிறுத்தும்.

_________________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2011

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் நவம்பர் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

1. வால் ஸ்டிரீட் முற்றுகை: முன்னேற்றத்தின் முதல் தேவை புரட்சிகரக் கட்சி!

2. மூவர் தூக்கு: கிழிந்தது அம்மாவின் கருணை முகம்!

3. ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் செந்திலுக்கு வீரவணக்கம்!

4. மாதம் இரண்டு லாக்-அப் கொலை: ‘ பச்சை’யான போலீசு ஆட்சி!

5. தண்ணீர்க் கொள்ளையருக்கு எதிராக…..

6. சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றங்களைத் திணறடித்த ஜெயாவின் வாய்தா புரட்சி!

7. உரவிலையேற்றம்: விவசாயத்தைச்சூறையாடும் தனியார்மயத் தாக்குதல்!

8. மோடியின் குஜராத்: காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள்!

9. மாருதி சுசுகி: முதலாளித்துவ பயங்கரவாத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர்!

10. மனித உரிமை வேடதாரி மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன் கும்பலின் ரவுடித்தனம்!

11. ” பொறுக்கித் தின்னப் போட்டிபோடும் உள்ளாட்சி தேர்தலைப் புறக்கணிப்போம்!” – புரட்சிகர அமைப்புகளின் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம்!

12. ஏர்- இந்தியா ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்!

13. ஈமு கோழி வளர்ப்பு: கவர்ச்சிகரமான மோசடி!

14. ஆப்கான் – இந்தியா – பாக்கிஸ்தான்: அமெரிக்க மேலாதிக்கத்தின் அடியாளாக இந்தியா!

15. சங்கபரிவாரம் வழங்கும் ” இதுதாண்டா ராமாயணம்!”

புதிய ஜனநாயகம் நவம்பர் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS)

________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

மோடிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு!

மோடிக்கு எதிரான வழக்கு : உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு !குஜராத் மாநிலத்தில் 2002-ஆம் ஆண்டு இந்து மதவெறிக் கும்பல் கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலையின்பொழுது கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியும், இவ்வினப்படுகொலைகளுக்கு நீதி வேண்டிப் போராடி வரும் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பும் இணைந்து, “இவ்வினப்படுகொலை தொடர்பான வழக்கில் மோடியையும் மற்றும் அவரது சக அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேரையும் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும்; இவ்வழக்கை மையப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்’’ எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த நான்காண்டுகளாக இம்மனு மீதான விசாரணையை நடத்தி வந்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு மன்றம், “இது நாள்வரை தமது கண்காணிப்பின் கீழ் நடந்துவந்த விசாரணை முடிவுகளின் அடிப்படையில் ஜாகியா ஜாஃப்ரியின் புகார் மீதான இறுதி முடிவை விசாரணை நீதிமன்றம் எடுக்க வேண்டும்; சிறப்புப் புலனாய்வுக் குழு தனது இறுதி அறிக்கையையும், இவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விசாரணை நீதிமன்றத்திடம் அளிக்க வேண்டும்; இனி, இந்த வழக்கைத் தாம் கண்காணிக்கப் போவதில்லை’ எனத் தீர்ப்பளித்து, இவ்வழக்கைத் தொடங்கிய இடத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டது.  இத்தீர்ப்பின் சாதக  பாதக அம்சங்களுக்குள் புகுவதற்கு முன், ஜாகியா ஜாஃப்ரியின் புகார் மனுவின் பின்னணியையும், அவர் எந்த நிலையில் நீதி வேண்டி உச்ச நீதிமன்றத்தை அணுகினார் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது.

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இனப்படுகொலைகளுள் ஒன்று, குஜராத் படுகொலை.  இந்து மதவெறிக் கும்பல் இப்படுகொலைகளை எவ்வளவு கொடூரமாகவும், வக்கிரமாகவும் நடத்தியது என்பதற்கு, குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு முக்கியமான  சாட்சியமாக உள்ளது.  இந்து மதவெறிக் கும்பல் இக்குடியிருப்பைச் சுற்றி வளைத்துத் தாக்கியபொழுது, அங்கு வசித்து வந்த இஹ்ஸான் ஜாஃப்ரி, அக்காலனியில் வசித்து வரும் முசுலீம்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறும், தங்களது உயிர்களைக் காக்குமாறும் மோடியையும், உயர் போலீசு அதிகாரிகளையும் திரும்பத்திரும்ப, பலமுறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கெஞ்சியிருக்கிறார்.  அதற்கு எந்தப் பலனும் கிட்டவில்லை.  இஹ்ஸான் ஜாஃப்ரியைத் தெருவுக்கு இழுத்துவந்து, அங்கஅங்கமாக வெட்டி, உயிரோடு நெருப்பில் வீசியெறிந்து கொன்றது, இந்து மதவெறிக் கும்பல்.  ஜாஃப்ரி மட்டுமின்றி, அக்காலனியில் வசித்து வந்த மேலும் 69 முசுலீம்களும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.  இந்த குல்பர்க் சொசைட்டி படுகொலை முதலமைச்சர் மோடிக்கும், உயர் போலீசு அதிகாரிகளுக்கும் தெரிந்தே, அவர்களின் ஆசியோடுதான் நடந்தது என்பது அப்பொழுதே அம்பலமான உண்மையாகும்.

இப்படுகொலை தொடர்பான ஆதாரங்களைத் திரட்டிய ஜாகியா ஜாஃப்ரி, இவ்வழக்கில் மோடியையும் அவரது சக அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேரையும் குற்றவாளிகளாகச் சேர்க்கக் கோரி, குஜராத் மாநில போலீசு தலைமை இயக்குநரிடம் அளித்த மனு நிராகரிக்கப்பட்டது.  பின்னர், ஜாகியா தனது கோரிக்கையை விசாரிக்கக் கோரி குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  அவரது மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு ஜாகியாவுக்கு அறிவுறுத்தியது. இத்தீர்ப்பை எதிர்த்து கடந்த 2008 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனுவொன்றை, நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்புடன் இணைந்து தாக்கல் செய்தார், ஜாகியா.

மோடிக்கு எதிரான வழக்கு : உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு !இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உச்ச நீதிமன்றம், ஜாகியாவின் குற்றச்சாட்டுகள் பற்றிய புலன்விசாரணையை சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்தது.  நரேந்திர மோடி உள்ளிட்டுப் பலரையும் விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, நரேந்திர மோடிக்கு எதிரான சாட்சியங்கள் வலுவாக இல்லாததால், அவரைக் குற்றவாளியாகச் சேர்க்க முடியாது என உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்தது.  இந்த அறிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றபோதும், தெகல்கா வார இதழ் இதனை வெளியிட்டுச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவுகளை அம்பலப்படுத்தியது. ( பார்க்க: புதிய ஜனநாயகம், மார்ச் 2011)

இதையே மறைமுகமாக உச்ச நீதிமன்றமும் ஒப்புக் கொண்டது. சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணையில் கண்டறிந்துள்ள  உண்மைகளும், அந்த உண்மைகளிலிருந்து அது வந்தடைந்துள்ள முடிவும் ஒன்றுக்கொன்று பொருந்துவதாக இல்லை என விசாரணையின்பொழுது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.   இதனிடையே, இவ்வழக்கின் அமிகஸ் கியூரியாக (நீதிமன்ற நண்பன்) ராஜு ராமச்சந்திரன் என்ற வழக்குரைஞரை நியமித்த உச்ச நீதிமன்றம், சிறப்புப் புலனாய்வுக் குழு அளித்த இரு அறிக்கைகளை ஆய்வு செய்து, தனது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அவரைப் பணித்தது.  அவர் அளித்த அறிக்கை சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மோசடியை அம்பலப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.  இதனால், அமிகஸ் கியூரி  நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையைக் கருத்திற்கொண்டு, புதிய அறிக்கை அளிக்குமாறு சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம்.

சிறப்புப் புலனாய்வுக் குழு இவ்வழக்கு தொடர்பான  விசாரணைகளை முடித்து மூன்றாவது அறிக்கையை உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. மீண்டும் அவ்வறிக்கைகளை ஆய்வு செய்யுமாறு அமிகஸ் கியூரி ராஜு ராமச்சந்திரனிடம் கூறியது உச்ச நீதிமன்றம். அதுமட்டுமின்றி, நேரடியாக குஜராத்திற்குச் சென்று சாட்சிகளிடமும் விசாரணை நடத்தித் தனக்கு அறிக்கை அளிக்குமாறும் ராஜு ராமச்சந்திரனைக் கேட்டுக் கொண்டது.  இதன் அடிப்படையில் குஜராத்துக்கு நேரில் சென்ற அமிகஸ் கியூரி, சாட்சிகளிடம் நடத்திய விசாரணையை, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நடந்த இரண்டாவது விசாரணை என்றுதான் சொல்ல வேண்டும்.  இவ்வழக்கு தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையை உச்ச நீதிமன்றம் முழுமையாக நம்பவில்லை என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது.

இப்படிபட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் தன்னிடமுள்ள இரண்டு அறிக்கைகளின் தகுதியின் அடிப்படையில் இவ்வழக்கில் ஒரு முடிவை அறிவித்திருக்க முடியும்.  தற்பொழுது கிடைத்துள்ள சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில், ஜாகியா கோரியபடி மோடியைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருக்க முடியும்.  ஆனால், உச்ச நீதிமன்றமோ வழக்கை விசாரணை நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டது.  முடிவு சொல்ல வேண்டிய தருணத்தில் சட்டத்தைக் காட்டி தந்திரமாக நழுவிவிட்டது.  “வழக்கின் விசாரணை முடிந்துவிட்ட நிலையில் சட்டப்படி உச்ச நீதிமன்றம் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது.  வாதி, பிரதிவாதி இருவரின் சட்ட உரிமைகளையும் காக்கும் வகையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக” சட்ட வல்லுநர்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வியாக்கியானம் சொல்கிறார்கள்.

உச்ச நீதிமன்றம் இந்து மதவெறி பயங்கரவாதக் குற்றங்களை மென்மையாக அணுகுவதை மூடிமறைப்பதற்கே இந்த நியாயவாதமெல்லாம் பயன்படுகிறது.  தற்பொழுது உச்ச நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் நடந்து வரும் அலைக்கற்றை விசாரணை தொடர்பாக நீதிபதிகள் வெளியிடும் கருத்துக்களை இந்த வழக்கின் தீர்ப்போடு ஒப்பிட்டால், உச்ச நீதிமன்றத்தின் காவித்தனம் அப்பட்டமாகத் தெரியும்.

அலைக்கற்றை ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு மீது நடந்துவரும் விசாரணையில் மைய அரசின் வழக்குரைஞர் பி.பி. ராவ், “விசாரணை முடிந்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின், உச்ச நீதிமன்றம் வழக்கை கண்காணிப்பது முடிவுக்கு வந்துவிடும்.  எனவே, நீதிபதிகள் இந்த இலட்சுமணன் கோட்டைத் தாண்டக் கூடாது” என வாதிட்டு, இதற்கு ஆதரவாக ஜாகியா ஜாஃப்ரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் மேற்கூறிய தீர்ப்பையும் எடுத்துக் காட்டினார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி கங்குலி, “இலட்சுமணன் கோடு புனிதமானதல்ல.  சீதை, இலட்சுமணன் கோட்டைத் தாண்டியிருக்காவிட்டால், இராவணனைக் கொன்றிருக்க முடியாது.  ஒரு வழக்கைக் கண்காணிப்பதற்கோ அல்லது அவ்வழக்கை மேலும் விசாரிக்க வேண்டும் எனக் கோருவதற்கோ உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரத்திற்கு முற்றாகத் தடை போட முடியாது.  ஊழல் என்ற நோய் எங்கும் பரவியிருப்பதால், மரபைப் புதுப்பிக்க வேண்டும்” எனக் கூறினார்.

ஊழலைவிட, இந்து மதவெறி பயங்கரவாதம் கொடிய ஆட்கொல்லி நோய் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் புரிந்து கொள்வதற்கு இன்னும் எத்தனை முசுலீம்களின் உயிர்கள் பலியாக வேண்டும்? அலைக்கற்றை ஊழல் வழக்கில், நீதியை நிலைநாட்டுவதுதான் முக்கியம் என்றும், அதன் பொருட்டு மரபுகள், நெறிமுறைகள் என்ற ‘லட்சுமணன் கோட்டை’ தாண்டலாம் என்றும் வியாக்கியானம் அளிக்கும் உச்சநீதிமன்றம், குல்பர்க் சொசைட்டி வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழு மோடிக்கு சாதகமாக நடந்து கொள்கிறது என்று பச்சையாகத் தெரிந்தபோதும், சட்டத்தையும் நெறிமுறையையும் பின்பற்றுவதாக பம்மாத்து செய்து நீதியைப் பலியிடுகிறது.

பாபர் மசூதி வழக்கில், “இந்து என்பது மதமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை” என ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கையையே தீர்ப்பாக அளித்ததில் தொடங்கி, தற்போது மோடி தப்புவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தத் தீர்ப்பு வரையில், உச்ச நீதிமன்றத்தின் இந்து மதவெறிப் பாசத்துக்கு பல உதாரணங்களைக் காட்ட முடியும்.  இந்து மதவெறிப் படுகொலைகளால் பாதிக்கப்படும் முசுலீம்களை நம்பவைத்து கழுத்தறுப்பதன் மூலம், அவர்களைப் பயங்கரவாதத்தின் பக்கம் தள்ளி விடுகிறது நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் மோடியை நிரபராதி என்றும் கூறிவிடவில்லையே எனச் சட்ட வல்லுநர்கள் இத்தீர்ப்பின் ‘மேதமை’யை எடுத்துக் காட்டுகிறார்கள்.  கேள்வியைப் புரட்டிப் போட்டால்தான் இத்தீர்ப்பின் ஆபத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

மோடியின் அதிகாரத்தின் கீழுள்ள ஒரு கீழமை நீதிமன்றம் மோடியைக் குற்றவாளியாக அறிவிக்கும் என நம்புவதற்கு ஏதாவது இடமுண்டா?  குஜராத் கலவர வழக்குகளில் ஒன்றான பெஸ்ட் பேக்கரி வழக்கு மும்பய் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றத்தால் மாற்றப்பட்ட பிறகுதான், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்.  இவ்வினப்படுகொலை தொடர்பான ஒன்பது முக்கியமான வழக்குகளில் புலன் விசாரணையே ஒழுங்காக நடைபெறாததால், அவ்வழக்குகளின் விசாரணையை உச்ச நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்திருக்கிறது.  குஜராத் போலீசும் அம்மாநில நீதிமன்றங்களும் சேர்ந்து ஊத்தி மூடிவிட்ட 1,958 கலவர வழக்குகளை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், 117 வழக்குகளில் மட்டும்தான் குஜராத் அரசு விசாரணையை நடந்துவருகிறது.  இவை அனைத்திற்கும் மேலாக, குல்பர்க் சொசைட்டி வழக்கு நடந்துவரும் விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி, குற்றவாளிகளை மென்மையாக அணுகி வருகிறார் என இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.கே. ஷா வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியுள்ளார்.  இத்தனைக்குப் பிறகும் மோடிக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் பொறுப்பை அதே விசாரணை நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதும் ஜாகியா ஜாஃப்ரியின் மனுவைத் தள்ளுபடி செய்வதும் ஏறத்தாழ ஒன்றுதான்.

மோடிக்கு எதிரான வழக்கு : உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு !அலைக்கற்றை வழக்கிலும், கருப்புப் பண வழக்கிலும் சி.பி.ஐ. விசாரணை குறித்து ‘துருவித் துருவி’ விசாரிக்கும் உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ராகவன் தலைமையில் இயங்கிவரும் சிறப்புப் புலனாய்வுக் குழு மோடிக்குச் சார்பாக நடந்து வருகிறது என்பது அம்பலப்பட்டுப் போன பிறகும், ராகவன் மீது மென்மையாகக் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. தனது முதல் அறிக்கையில் மோடியை நிரபராதி என்று சொல்லியிருக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது இறுதி அறிக்கையை விருப்பம் போலத் தயாரித்து, அதனை விசாரணை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கலாம் என்ற சுதந்திரத்தை நீதிபதிகள் வழங்கியிருக்கிறார்கள்.  மோடிக்கு எதிரானதாக இருக்கக்கூடும் எனப் பரவலாகக் கருதப்படும் அமிகஸ் கியூரி ராஜு ராமச்சந்திரனின் விசாரணை அறிக்கை, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியும், சட்டத்தின்படியும் ஒரு காகிதக் கட்டு என்பதற்கு மேல் எந்த மதிப்பையும் விசாரணை நீதிமன்றத்தில் பெறப் போவதில்லை.

இனி என்ன? சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை மோடியைக் குற்றவாளியாக அறிவிக்காவிட்டால், ஜாகியா ஜாஃப்ரி அதனை எதிர்த்து விசாரணை நீதிமன்றத்திலேயே வாதிடலாம்.  விசாரணை நீதிமன்றம் இவ்வழக்கிலிருந்து மோடியை விடுவித்துவிட்டால், ஜாகியா ஜாஃப்ரி அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்திற்கும், பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கும் போகலாம். இதெல்லாம் இத்தீர்ப்பிலேயே தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறதாம்.  ஜாகியா ஜாஃப்ரி நீதி வேண்டி உச்ச நீதிமன்றத்தை அணுகினார்; நீதிமன்றமோ, மோடி உயிரோடு இருக்கும் வரை வழக்கு முடியாமலிருப்பதற்கான வழியைத் திறந்துவிட்டிருக்கிறது. குஜராத்திலேயே ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டிருக்க வேண்டிய ரத்தக்காட்டேரியிடம், தேசிய அரசியலில் கால் வைப்பதற்கான ஆசையையும் கிளறிவிட்டிருக்கிறது.

யூதர்களைக் கொன்ற இட்லரைப் போல, போஸ்னியா முசுலீம்களைக் கொன்ற மிலோசேவிக் போல இனப்படுகொலை குற்றவாளியாக இந்திய மக்கள் முன் நிறுத்தப்பட வேண்டிய மோடி, வளர்ச்சியின் நாயகனாக, எதிர்காலப் பிரதம மந்திரி வேட்பாளராக ஊடகங்களால் மக்கள் முன் நிறுத்தப்படுகிறார்.ஜெயா திருந்திவிட்டாரெனப் புளுகி வரும் பார்ப்பன பத்திரிகைகள் அனைத்தும் மோடியும் திருந்திவிட்டதாகப் பிரச்சாரம் செய்கின்றன.

‘‘கோத்ரா கலவரத்தில் நேர்ந்த தவறுகளுக்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்கும் விதத்திலா முதல்வர் மோடி உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்” எனத் தலையங்கம் தீட்டுகிறது, தினமணி.  (20.09.2011)

ஒரு ரயில் விபத்து நடந்தாலே சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலகுவதைத் தார்மீகப் பொறுப்பாகச் சுட்டிக் காட்டும் இப்பத்திரிகைகள், இனப்படுகொலையின் தளபதியாகச் செயல்பட்ட மோடிக்கோ வேறொரு அளவுகோலை முன்வைக்கின்றன.  “குஜராத் மாநிலம் கடந்த பத்து ஆண்டுகளில் பல துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும், வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதையும் அந்த மாநிலத்துக்குச் சென்று திரும்பும் அனைத்துத் தரப்பினரும் உறுதிப்படுத்துகிறார்கள். . .  ஊழலில்லா நிர்வாகத்தைத் தருகிறார் என்பதாலும்தான் கோத்ரா கலவர நினைவுகளைப் புறந்தள்ளிவிட்டு, அனைத்துத் தரப்பினராலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பாராட்டப்படுகிறார்” என எழுதி மோடியின் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிட முயலுகிறது, தினமணி. (20.09.11)  இந்து மதவெறி அரசியலைப் பேசி ஓட்டுப் பொறுக்க முடியாதென்பதால், ‘வளர்ச்சி’ அரசியலைப் பேசி மோடிக்கு மகுடம் சூட்டப் பார்க்கிறது, பார்ப்பனக் கும்பல்.

“மதச்சார்பின்மையைப் பற்றிப் பேச நரேந்திர மோடிக்கு அருகதை உண்டா?” என வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, “கடந்த காலத் தவறுகளிலிருந்து மோடி பாடம் கற்கக்கூடாதா?  பிராயச்சித்தம் தேடுவதற்கு எல்லா மனிதர்களுக்கும் உரிமை உண்டு.  ஆனால், அவர் திருந்திவிடக் கூடாது என்று சிலர் நினைப்பது ஏன் என்று புரியவில்லை” என மோடிக்காக வரிந்துகட்டிக் கொண்டு எழுதுகிறது, ஜூனியர் விகடன்.  (28.9.11, பக்.15)

பொதுமக்களுக்கு எதிரான எந்தவொரு கலவரமும் அரசின் ஒத்துழைப்பின்றி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்துவிட முடியாது என்பது உலகமே அறிந்த உண்மை. குஜராத்தில் முசுலீம்களுக்கு எதிரான இந்து மதவெறியாட்டமோ ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்தது. இந்த ஒரு சாட்சியமே, 2002 குஜராத் இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியவர் மோடி என்பதை நிரூபித்து விடுகிறது.

அந்தக் குற்றத்தை மோடி ஒப்புக்கொண்டதில்லை என்பது மட்டுமல்ல, அதைத் தவறு என்று கனவிலும் கருதவில்லை. மாறாக, கொலைகாரர்களைச் சட்டபூர்வமாகத் தண்டிக்க முயன்றவர்களை வேட்டையாடினார். சாட்சிகளை மிரட்டி குற்றவாளிகள் அனைவருக்கும் விடுதலை வாங்கித் தந்தார். மோடியை எதிர்த்த அவரது அமைச்சர் ஹரேன் பாண்டியா கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முசுலீம் தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டுவிட்டதால், அந்தக் கொலையை யார் செய்தது, அந்தக் கொலை எப்படி நடந்தது என்பது சி.பி.ஐ. ஆலும் ‘கண்டுபிடிக்க’ முடியாத மர்மமாக உள்ளது.  கலவரத்தில் மோடியின் பாத்திரத்தை அம்பலப்படுத்திவரும் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் வேலைநீக்கம் செய்யப்பட்டு சிறை வைக்கப்படுகிறார். நம் கண் முன்னால் நடக்கும் உண்மை இதுதான்.

மோடி திருந்திவிட்டதாக ஒப்புக் கொள்ளவேண்டும். ஒப்புக் கொள்ளாதவன் குற்றவாளி என்று ஜூனியர் விகடனும் தினமணியும் இரட்டை நாயனம் வாசிக்கின்றனர். தமிழகத்தில் இருக்கும்போதே இந்தப் போடு போடும் இந்த உத்தமர்கள், ஒருவேளை குஜராத்தில் இருந்திருந்தால் சஞ்சீவ் பட்டையும் ஜாகியா ஜாப்ரியையும் கத்தியால் குத்திக் கொன்று விட்டு, ‘மாடு முட்டிச் சாவு’ என்று செய்தி போடவும் தயங்க மாட்டார்கள்.

குஜராத் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறதாம். கலவர நினைவுகளை புறந்தள்ளிவிட்டு அனைவரும் பாராட்டுகிறார்களாம். அது யாருக்கான வளர்ச்சி என்பது ஒருபுறமிருக்கட்டும். உங்கள் வீட்டிற்குள் ஒருகாலிகள் கும்பல் நுழைந்து, பெண்களை நிர்வாணப்படுத்தி, வன்புணர்ச்சி செய்து, ஆண்களைக் கொன்றுவிட்டு எல்லாம் முடிந்த பின், “நாங்களே குடும்பத் தலைவராக இருந்து உங்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கிறோம்” என்று கூறினால், பதிலுக்கு நீங்கள் காறித் துப்புவீர்களா, செருப்பால் அடிப்பீர்களா என்று தெரியவில்லை.

மோடிக்கு எதிரான வழக்கு : உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு !ஜூனியர் விகடன் கழுகார் என்ன சொல்கிறார் என்றால், அவரும் அவரது குடும்பத்தினரும் அப்படி அநாகரிகமாக நடந்து கொள்ள மாட்டார்களாம். அந்தக் காலிகளின் பிராயச்சித்தத்தை அங்கீகரித்து, அவர்களைக் குடும்பத் தலைவர்களாக ஏற்றுக் கதவைத் திறந்துவிடுவார்களாம். தினமணி குடும்பத்தினரோ, பழைய கலவர நினைவுளை மறந்து விட்டு, இனிய கனவுகளோடு புதிய குடும்பத் தலைவரைத் தழுவி வரவேற்பார்களாம். இவ்வளவு பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் ஆ.ராசா விசயத்தில் மட்டும் ஏன் குறுகிய மனோபாவம் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை.

குற்றம் என்று எடுத்துக் கொண்டாலும், கொலை, தீவைப்பு, வன்புணர்ச்சி போன்ற குற்றங்களை ஆ.ராசா தலைமை தாங்கி நடத்தவில்லையே. புறங்கையை நக்கியிருக்கிறார். எவ்வளவு நக்கினார் என்பதை சி.பி.ஐ. இனிமேல்தான் கண்டு பிடிக்க வேண்டும். மோடி விசயம் அப்படியில்லை. எத்தனை பிணங்கள் விழுந்திருக்கின்றன என்று உலகத்துக்கே தெரியும்.

‘வளர்ச்சி’ என்று எடுத்துக் கொண்டால், மோடியின் குஜராத் அடைந்திருக்கும் வளர்ச்சியைக் காட்டிலும், ராசாவின் காலத்தில் மொபைல் போன்கள் அடைந்த வளர்ச்சி அதிகமில்லையா? மோடி பிரதமராகலாம். ராசாவுக்கு திகாரா? அல்லது ஆ.ராசாவும், நேரு உள்விளையாட்டு அரங்கை மூணு நாட்களுக்கு வாடகைக்கு எடுத்து, ஒரு ‘சூப்பர் டீலக்ஸ் உண்ணாவிரதம்’ நடத்திவிட்டால், அதனை பிராயச்சித்தமாகக் கருதி விடுவிக்கப்படுவாரா?

___________________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2011

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

உழைப்பு சுரண்டலால் கசந்து போன பாதாம் பருப்பு!

வருடத்திற்கு ஒரு முறை ஒரு வாரம்  “குழந்தை தொழிலாளர் ஒழிப்பு“, “இளம் குருத்துக்களை படிக்கச் செய்வோம்என்பது போன்ற படாடோபமான விளம்பரங்கள்குழந்தை தொழிலாளர் முறை அறவே ஒழிக்கப்பட்டது போன்ற மாயத் தோற்றம்ஆனால் எதார்த்ததத்தில் அமைப்பு சார்ந்த தொழில்களில், வரையறுக்கப்பட்ட நிறுவனங்களில், தனியார் பெருமுதலாளிகளிடம் நெருங்க மறுக்கும் தொழிலாளர் துறைஅதிகாரம் மிகக் குறைவாக உள்ள அத்தகைய தொழிலாளர் நலச்சட்டங்களைக் கூட திருத்த துடிக்கும் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் உள்ள பெரு முதலாளிகள்மறுபுறம் உலக மயமாக்கலின் கோர விளைவுகளினால், இந்த சட்டங்கள் எதற்குள்ளும் எங்கள் தொழில் வராது என ஏமாற்றும் அமைப்பு சாரா தொழிலின் தரகு முதலாளிகள்இவற்றை அம்பலப்படுத்தும் விதத்தில் பணக்காரர்கள் உண்டு மகிழும்பாதாம் பருப்பிற்குபின்னால் திரைமறைவில் உள்ள உழைப்பு சுரண்டலை விவரிக்கும் கட்டுரை இதன் கீழே விரிகிறது

உழைப்பு சுரண்டலால் கசந்து போன பாதாம் பருப்பு!
படம் thehindu.com

ஏழுவயதான கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மலைபோல் குவிக்கப்பட்டிருந்த பாதாம் கொட்டைகளின் மேல் குதித்தாள்.  முதல் பார்வையில் அவளது சிறு வயதோடு ஒப்பிடுகையில் அது அவளுக்கு ஒரு விளையாட்டு என உங்களுக்கு தோன்றலாம்.  ஆனால் சற்று கவனித்துப் பார்த்தால் கீதாவின் உடற்பயிற்சி போன்றதான நடவடிக்கை சிறுவயது விளையாட்டல்ல என்பது தெரியவரும்.  அவள் வாழ்வதற்காக சம்பாதிப்பதற்காக பார்க்கும் வேலை அது.

அங்கு பணிபுரியும் பல குழந்தைகளைப் போல, தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வரும் பாதாம் கொட்டை உடைக்கும் பணியில் வேலைபார்க்கும் கீதாவும் ஒரு தொழிலாளி.  அவளின் மென்மையான பாதங்கள் ஏறக்குறைய ஒரு இயந்திரம் போல செயல்பட்டு கலிபோர்னியாவிலிருந்து இறக்குமதியாகும் பாதாம் கொட்டைகளை உடைக்க பயன்படுகிறது.

தூசிகள் நிரம்பிய அறைகளில் அடைக்கப்பட்டு வேலை வாங்கப்படும் இந்த சட்ட விரோத குழந்தை தொழிலாளர்கள் மூலம் மில்லியன்-டாலர் தொழிற்சாலை நடைபெறுகிறது.  குழந்தைகள் தரையில் அமர்ந்து அமைதியாக சாக்குகளில் உள்ள பாதாம் கொட்டைகளை தங்களது செயல்திறன் மிக்க விரல்களாலும், மலைபோல் உள்ள குவியல்களில் குதித்தும் உடைத்து குவிக்கின்றனர்.

வடகிழக்கு டெல்லி பகுதியான காரவால்நகர் காலனியில் பாதாம் கொட்டைகள் உடைப்பு என்பது பெரிய வணிகம் ஆகும்.  ஏறக்குறைய 45 முதல் 50 பாதாம் பருப்புகளை பிரித்து பொட்டலமிடும் பிரிவுகள் அந்த பகுதியில் வருடம் முழுவதும் நடைபெறுகிறது.  அவ்வாறு உடைக்கப்படும் பருப்புகள் மாநகரின் காரிபாவோலி பகுதியிலுள்ள மொத்த சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அமெரிக்காவில் முழுமையும் இயந்திரங்களால் நடைபெறும் இந்த தொழில் இங்கு மனித தொழிற்சாலையாக, கொட்டைகளை உடைத்து ஓடுபிரித்து, பருப்பை தரம் பிரித்து சந்தைப்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் இங்கு மனிதர்கள் செய்கிறார்கள்.

உயரிய ஏற்றுமதி:

அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதியாகும் விவசாய விளைபொருளில் பாதாம் முன்னணியில் உள்ளது.  தகவல்களின்படி பார்த்தால் 95% பாதாம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  1970 களில் மிகச்சிறியதாக துவங்கிய இந்த தொழிலில் தற்போது 100 மில்லியன் டாலர் அளவிற்கு இந்தியாவில் கலிபோர்னியா பாதாம் இறக்குமதி செய்யப் படுகிறது. ஒருபுறம் பாதாம் பருப்பின் விலை சராசரியாக ஒரு கிலோ ரூ 360 முதல் 400 வரை என்றிருக்கையில், மறுபுறம் இதில் பணிபுரியும் குழந்தைகளுக்கு ஒரு கிலோ பருப்பு உடைத்து எடுத்தால் ரூ 2 கூலியாக வழங்கப்படுகிறது.

வினய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புலம்பெயர்ந்து (இடம் மாறி) டெல்லிக்கு வந்த சிறுவன் தனது 11 வயதில் இந்த தொழிலில் பணிபுரிய துவங்கினான்.  10 வருடம் கழித்து தற்போது காரவால் நகரிலுள்ள கிடங்கு ஒன்றில் தற்போது அவர் சுமை ஏற்றுபவராக இருக்கிறார்.  அவர் சுமை ஏற்றும் பணிக்கு சம்பளமாக பணம் எதையும் பெறுவதில்லை.  பணத்திற்கு பதிலாக இரண்டு சாக்குகள் பாதாம் கொட்டை உடைக்க அவருக்கு கொடுக்கப்படும்.  அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமாக ஒரு சாக்கிற்கு ரூ 60 கூலி என்ற அடிப்படையில், ஓடு பிரித்து பருப்பு எடுப்பார்கள்.  அதாவது 6 பேர் கொண்ட அந்த குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு நாளைய கூலி ரூ 20/-.

பாதாம் கொட்டை உடைத்து பருப்பு வியாபராம் என்பது வருடம் முழுவதும் நடைபெறும் என்றாலும், வழங்கல் மற்றும் தேவை என்பது தீபாவளி மற்றும் கிறித்துமஸ் பண்டிகைகளின் போது மிக அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் வேலை நேரம் ஒரு நாளைக்கு 12 முதல் 15 மணி நேரம் வரை இருக்கும்.  ஆரம்பம் முதல் இறுதி வரையிலான பணிகள் என்பது பல தொழிலாளர்களிடம் பிரிந்து இருக்கும்.  குழந்தைகள் குறிப்பாக பாதாம் கொட்டைகளை உடைக்கும் பணிக்கு நியமிக்கப்படுகின்றனர்.  அரை குறையாக உடைந்த கொட்டைகள் குப்பையிலிருந்து கவனமாக பிரித்தெடுக்கப்படுகிறது.  இந்த நிலையில் குறிப்பாக பெண்கள் குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டு ஓடு, முழுப்பருப்பு, அரை பருப்பு என தரம் பிரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

ஓடு பிரிக்கப்படாத பாதாம் ஒரு சாக்கு என்பது சராசரி 22 கிலோ இருக்கும்.  அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பருப்பு 16 முதல் 17 கிலோ தேறும்.  பிரித்தெடுக்கப்படும் ஓட்டு துகள்கள் சமைப்பதற்கான எரிபொருளாக தொழிலாளிகளுக்கே சாக்கு ஒன்று ரூ 30 முதல் 35 வரை என்றி வீதத்தில் முதலாளிகளால் விற்கப்படும்.

பின்னர் சில பிரிவுகளில் மிகவும் தேவையான காலங்களில் கொட்டைகள் உடைத்து பிரித்தெடுக்க தானியங்கி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.  ஒன்றுக்கு மேற்பட்ட இயந்திரம் பயன்படுத்தினால் ஒரு மணி நேரத்தில் 20 சாக்குகள் ஓடுபிரிக்க முடிந்தது.  விழாக்காலங்களில் ஒரு நாளைக்கு 350 முதல் 400 சாக்குகளும், தேவை குறைவான காலங்களில் 80 முதல் 100 சாக்குகள் அளவிலும் உடைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

டிசம்பர் 2009-ல், கடுமையான குளிர் காலத்தில் காரவால் நகரில் பாதாம் மஸ்தூர் சங்கம் என்ற அமைப்பின் கீழ் சுமார் 3000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.  சம்பள உயர்வு, பணி நிரந்தரப்படுத்துவது, மற்றும் பாதாம் தொழிலி்ல் தொழிலாளர் நலச்சட்டங்களை பின்பற்றக் கோருவது ஆகியவை அவர்களது கோரிக்கைகளாக இருந்தது.  அந்த போராட்டத்தின் காரணமாக ஒரு நாளைய கூலி என்பது ரூ 45 லிருந்து 60 ஆக உயர்ந்தது.  இருந்த போதிலும் டெல்லி நகரின் செயல்திறனுடைய தொழிலாளி ஒருவரின் குறைந்தபட்ச கூலி ரூ 247/- என தொழிலாளர் துறையினால் நிர்ணயிக்கப்பட்டிருப்பதோடு ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிய கூலிதான் அது.

ஒழுங்கு முறை ஏதுமில்லை:

சொல்லப்போனால் தற்போது இந்த தொழிலில் ஒழுங்குமுறை எதுவுமில்லை.  பாதாம் கொட்டை உடைக்கும் தொழில் என்பது தெளிவான விளக்கமின்றி ‘வீட்டு உற்பத்தி’ தொழிலாக சொல்லப்படுகிறது.  அதன் காரணமாக இந்த தொழில் தொழிலாளர் நலச்சட்ட வரம்பிலிருந்து வெளியில் இருப்பதாக கருதப்படுகிறது. டெல்லி தொழிலாளர் துறையின் பதிவுகளின்படி இந்த தொழில் பிரிவுகள் ‘முறைப்படுத்தப்பட்ட பிரிவுகளில்’ சேர்க்கப்படாமல் சிறு பிரிவுகளாக ’10 நபர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள், இயந்திர சக்தியுடன்’, அல்லது ’20ற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இயந்திர சக்தியின்றி’ என்ற வகையில் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த காரணங்களினால் (இந்த குறிப்பிட்ட விஷ‌யங்களை மாற்றியமைக்க எந்த ஒரு மாற்று யோசனையும் சொல்லப்படாத நிலையில்) இந்தியாவில், ஏறக்குறைய மொத்த உழைப்பாளிகளில் 94 சதவீத தொழிலாளர்களைக் கொண்டுள்ள, வளர்ந்து வரும் பல தொழில்கள் தொழிலாளர்நலச் சட்ட வரம்புகளுக்கு வெளியில் அதன் ஒழுங்கு முறைகளுக்கு கட்டுப்படாத நிலையில் உள்ளது.

உலகமயமாக்கல் மற்றும் உற்பத்தி பிரிவுகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் தொழிலாளர்களை முறை சாராப் பிரிவில் வகைப்படுத்துவது என்பது வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் பொதுவாக அதிகரித்து வருகிறது.  முறை சாரா தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம் (2008) சமர்ப்பித்த ஒரு அறிக்கையின்படி இந்திய உழைப்பாளிகளின் எண்ணிக்கையில் 77 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு ரூ 20/-ற்கும் குறைவாக கூலி பெறுகின்றனர். பைனா மோஸ்லி என்பவர் தமது ‘தொழிலாளர்கள் உரிமைகள் மற்றும் பன்னாட்டு உற்பத்தி’ என்ற (2011) தலைப்பிலான ஆய்வில் தொழிலாளர்கள் உரிமைகளுக்கும், உலகளாவிய உற்பத்தியில் பின்பற்றப்படும் பல்வேறு நடைமுறைகளுக்குமான தொடர்புகளை விவரித்துள்ளார்.  உற்பத்தி சார்ந்த பல பணிகளை வெளியில் கொடுப்பதன் மூலம் தொலைவிலுள்ள நாடுகளிலுள்ள சிறிய தொழில் மையங்களின் சாதக சூழல்களை பன்னாட்டு முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.  அதன் மூலம் உற்பத்தி செலவை குறைத்துக் கொள்வதோடு நேரடி முதலாளித்துவத்தினால் விளையும் இடர்களை தவிர்த்தும் கொள்கின்றனர் என குறிப்பாக அவர் சுட்டிக் காண்பிக்கின்றார்.

சட்ட விரோதமாக குழந்தை தொழிலாளர்களிடம் பணிவாங்குதல், குறைந்த கூலிக்கான வயது வந்த தொழிலாளர்கள் பணி ஆகியவை டெல்லி காரவால் நகரில் நடைபெறுவது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.  வளர்ந்து வரும் உலகமயமாக்கல்  சூழலில், பெரும்பாலான மாநகரங்களில் முறை சாரா மற்றும் கணக்கிடலங்காத இது போன்ற உற்பத்தி பிரிவுகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.  டெல்லியில் மட்டுமே தொழில் வாரியாக பிரிக்கப்பட்ட சிறப்பு மையங்களில் எண்ணிக்கைக்கேற்ற தொகை பெற்று (பீஸ் ரேட்) பணிமுடித்துக் கொடுக்கும் பிரிவுகள் ஏராளமாக செயல்பட்டு வருகிறது.  பெரிய உற்பத்தியாளர்கள் மற்றும் மிகத்தெரிந்த பன்னாட்டு நிறுவனங்களும் இத்தகைய பணிகளை செய்கின்றன.

கடைசி புகலிடம்:

பெரும்பாலான மக்கள் முறைசாரா தொழில்களை விரும்பி ஏற்பதில்லை.  மாறாக அவர்கள் பசிக் கொடுமையிலிருந்து தப்பித்து வாழ்க்கைக்கான வழிமுறைக்கு கடைசி புகலிடமாக இவற்றை தேர்வு செய்கின்றனர்.  பெரும்பாலான முறைசாரா பிரிவு தொழிலாளர்கள் சொந்தமாக நிலமில்லாமல், புலம்பெயர்ந்து வந்தவர்களே. அவர்களின் சொந்த கிராமங்களில் வறட்சி, வெள்ளம் போன்ற நிலைகளினால் வேலைக்கு வழியின்றி இவ்வாறு இடம் மாறி வருகின்றனர்.  பல முறைசாரா தொழில் நிறுவனங்களில் நிலவி வரும் புறக்கணிப்பு நடவடிக்கைகள் ஏழைகள் தங்கள் வருவாயை மேலும் குறைத்துக் கொண்டு வேலை கேட்கும் சூழலை உருவாக்குகிறது.  முறைசாரா தொழில் வணிக நடவடிக்கைகளை தொழிலாளர் நலச்சட்ட வரம்பிற்குள் கொண்டு வர விடா வண்ணம் எதிர்ப்புகள், தவறிழைக்கும் ஆலை முதலாளிகளின் மீதான புகார்களை வாங்க மறுக்கும் உள்ளூர் காவல்துறை, தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளின் ஒட்டுமொத்த அக்கறையின்மை இவையெல்லாம் சேர்ந்து வெட்கப்படும் விதத்திலான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கிறது.  தலைநகரின் இதயப்பகுதியில் செயல்பட்டு வரும் பாதாம் பருப்பு எடுக்கும் தொழிலளர்களின் கதையிலிருந்து முறைசாராத் தொழிலின் மீது உள்ள நாட்டின் அக்கறையின்மை விளங்குவதோடு, இத்தகைய தொழிலாளர்களை காக்கும் விதத்தில் தொழிலாளர் சட்ட நடைமுறைகளை இந்த பிரிவிற்கு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது.

_______________________________________________________

நன்றி – தி இந்து, 15 அக் 2011 – திரு. மவுஷ்மிபாசு,

பேராசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம்.

தமிழில் – சித்ரகுப்தன்.

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

October 1928 – உலகை குலுக்கிய பத்து நாட்கள் – வீடியோ !

11

உலகை குலுக்கிய பத்து நாட்கள் (அக்டோபர் திரைப்படம்) – வீடியோ! இன்றைய சினிமாவில் நாம் பார்ப்பது என்ன? பொறுக்கி ஹீரோ, பாடலுக்காக – கவர்ச்சி உடையில் ஆட கதாநாயகி; பொய்யும் புரட்டுமான வரலாறுகள், தாலி முதல் மெட்டி வரை சகலவிதமான சென்டிமென்டுகள்,துப்பாக்கி எடுத்து சகட்டு மேனிக்கு சுட்டுக்கொண்டே இருக்கும் ஜேம்ஸ்பாண்ட், ஒரு வயதானவர் எழுந்து, நடந்து, திரும்பி படுப்பதை அரை மணி நேரம் காட்டும் கலைப்படங்கள், ஒருவர் பேசுவதையே அரை மணி நேரம் சுற்றி சுற்றி காட்டும் காமிரா (பிரச்சார படமாம்), பஞ்ச் டையலாக், ஃபாரின் லொக்கேஷன்….

இதில் உண்மையான  உழைக்கும் மக்கள் எங்கே? அவர்களின் எழுச்சி எங்கே? அவர்கள் ஏமாற்றப்படுவதை பற்றிய விழிப்பு எங்கே?

சுரண்டப்படும் வர்க்கத்தை, போதையில் ஆழ்த்தும் இன்னொரு அபினி தான் இந்த சினிமா. ஆனால், அந்த உழைக்கும் வர்க்கத்திற்கு எழுச்சியையும், போராட்ட குணத்தையும் ஊட்டுவதற்கு, உழைக்கும் வர்க்கத்தின் முதல் புரட்சியை ஆவணப்படுத்திய ஒரு படம் உள்ளது – அது தான் “உலகை குலுக்கிய பத்து நாட்கள் (அக்டோபர்).

ரஷ்ய தொழிலாளர் புரட்சியின், 10- ஆம் ஆண்டு நிறைவையொட்டி, 1927-ல் செர்ஜி ஐசன்ஸ்டீனால் உருவாக்கப்பட்ட மவுனப் படம் – ஆனால் உன்னத திரைப்படம்.

ஆண்டானுக்கு அடிமையாகவும், பண்ணையாருக்கு கூலியாகவும், முதலாளிக்கு தொழிலாளியாகவும் எப்பொழுதும் உழைத்து ஓடாய் தேய்ந்த பாட்டாளி வர்க்கம் ஆட்சியை பிடிக்கும் என்றும், அதிகாரத்தை கைப்பற்றும் என்றும் மனித சமூக வரலாற்றில் யாரேனும் நினைத்திருப்பார்களா? ஆனால், அந்த பாட்டாளி வர்க்க எழுச்சி நடந்தேறியது. ரஷ்ய காலண்டர்படி, அக்டோபர் 28- ம் நாள் – உலக பாட்டாளிகளின் பிரதிநிதிகளாக ரஷ்ய பாட்டாளி வர்க்கம், அதிகாரத்தை கைப்பற்றிய நாள். உலக முதலாளித்துவத்திற்க்கு சவால் விட்ட நாள். ஆயிரமாயிரம் காலம் அடிமைகளாக இருந்தவர்கள் நினைத்துப்பார்த்திருப்பார்களா, அவர்கள் ஆளுவார்கள் என்று? எவ்வளவு ரத்தம், எத்தனை துயரம், அத்தனையும் மீறி பாட்டாளி வர்க்கத்தின் செங்கொடி பட்டொளி வீசிப் பறந்த தினம்.

அமெரிக்காவில், ஒரு நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்த ஜான் ரீட், சோஷலிசத்தின்பால் ஈர்க்கப்பட்டு ஒரு பத்திரிக்கை நடத்தினார். மார்க்சியத்தை நன்கு உணர்ந்த ஜான், அமெரிக்காவில் சோஷலிச அரசை நிறுவ வேண்டும் என்ற கனவை கொண்டிருந்தார்.

உலக சோஷலிஸ்டுகளின் நிகழ்வுகளை ஆய்ந்தறிந்து வந்த அவர் ரஷ்யாவில் பாட்டாளி வர்க்கம் எழுச்சியடைவதையும், அங்கு போல்ஷ்விக் எனும் கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கை புரட்சியை நோக்கியிருப்பதையும் கண்டறிகிறார்.

ரஷ்யாவில் நடந்த, முதல் புரட்சியின் பலனை மென்ஷ்விக்குகள் அறுவடை செய்ய முனைகிறார்கள். ஜார் மன்னனை விரட்டி முதலாளிகளை ஆட்சியில் அமர்த்தியதுதான் மிச்சம் என்கிற நிலையில், போல்ஷ்விக்குகள் தாக்கப்படுகிறார்கள். லெனின் தலைமறைவாகிறார்.ஆனால், போல்ஷ்விக்குகள் புரட்சியை நோக்கிய தங்கள் நகர்வை திட்டமிட்டு நடத்துகிறார்கள்.

முதலாம் உலக போரில் ஜார் மன்னனின் படையாக களத்தில் இறங்கும் ரஷ்ய ராணுவம், மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது. துப்பாக்கியில்லை, குண்டுகள் இல்லை, உணவில்லை, போதுமான காலுறைகள் கூட இல்லை, மொத்தத்தில் ஏன் போராடுகிறோம் என்றே தெரியாமல் வெறுப்புற்றிருந்தனர். மொத்த உலகமும் போரில் கவனம் செலுத்தி வந்தது. முதலாளித்துவ நாடுகள் தங்களுக்கான காலனிகளை பிடிப்பதில் தீவிரமாக போரிட்டுக்கொண்டிருந்த்னர்.

ரஷ்யாவில் புதிதாக வந்த மென்ஷ்விக்குகளின் அரசு, மக்களுக்கு ஏதும் புதிதாக செய்யவில்லை, சுகபோகமாக இருப்பதிலேயே கவனமாக இருந்தனர். ராணுவத்தை பற்றியும் கிஞ்சித்தும் கவலை இல்லை.மேலும் அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டனர். இந்த நேரத்தில் போல்ஷ்விக்குகள் புரட்சியை நோக்கிய தங்கள் வேலைகளை மீண்டும் செய்துகொண்டிருந்த்னர்.

இதையெல்லாம் கேள்விபட்ட ஜான் ரீட் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு ரஷ்யா வந்தார். ரஷ்யாவிலேயே தங்கி ரஷ்ய புரட்சியின் ஒவ்வொரு நிகழ்வையும், ரஷ்ய மக்களின் நிலை, ராணுவத்தின் நிலைப்பாடுகள், அரசின் ஏகபோகம் என்று சகல விடயங்களையும் பதிவுசெய்துகொள்கிறார்.எந்த நேரத்திலும் புரட்சி வெடிக்கும் என்ற சூழ்நிலையில், அந்த நிகழ்வுகளை கண்காணிக்கும் ரீட், லெனின் தலைமையிலான ரஷ்ய பாட்டாளிவர்க்கத்தின் எழுச்சியை நேரிலேயே காண்கிறார்.

அமெரிக்கா திரும்பிய ரீட்,  இந்த நிகழ்வுகளை தன் அரசியல் பார்வையில் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடுகிறார். பிற்காலத்தில், லெனினாலேயே பாராட்டப்பட்ட அந்த புத்தகம் தான் “உலகை குலுக்கிய பத்து நாட்கள்”.

ரஷ்ய புரட்சியின், 10 ஆம் ஆண்டு நிறைவையொட்டி, ரஷ்ய திரைப்பட இயக்குனரான செர்ஜி ஐஸன்ஸ்டின் தலைமையில், ரஷ்ய புரட்சியை பற்றிய படங்களை எடுக்க, அரசு கோரிக்கை விடுத்தது. ஐஸன்ஸ்டீனும், ”உலகை குலுக்கிய பத்து நாட்கள்” புத்தகத்தை மையமாக கொண்டு இத்திரைப்படத்தை இயக்கினார்.

ஜார் மன்னனை எதிர்த்து, அவனை வீழ்த்துவதிலிருந்து தொடங்கும் இந்த திரைப்படம் மென்ஷ்விக்குகளின் போலி அதிகார ஆடம்பரங்களை அம்பலபடுத்தி, அவர்கள் புரட்சியை கெடுக்க வந்த பாதகர்கள் என்பதை விளக்குகிறது. அதை தொடர்ந்து மக்களின் எழுச்சி, ராணுவத்தின் மக்கள் ஆதரவு,போல்ஷிவிக்குகள் இதை சரியாகக் கணித்துத் திட்டமிட்டு லெனின் தலைமையில் அதிகாரத்தை கைப்பற்றுவதுடன் படம் முடிவடைகிறது.

உலக வரலாற்றில் பாட்டாளிகளின் எழுச்சியை ஆவணப்படுத்தும் அதே நேரம், ஒரு சிறுபிழையோ, திருத்தலோ இல்லாமல் திரைப்படத்தை இயக்க வேண்டிய பெரிய பொறுப்பு ஐஸன்ஸ்டீனிடம் இருந்த்து. ரஷ்ய எழுச்சியை தொடர்ந்து, உலக பாட்டாளிவர்க்கத்தை தட்டி எழுப்ப வேண்டிய சீரிய கடமை ரஷ்ய பாட்டாளிவர்க்கத்திற்க்கு இருந்த்து.

சினிமா என்கிற இந்த விஞ்ஞான தொழில்நுட்பம், முதலாளிகளிடம் இருந்த போது வெறும் பொழுதுபோக்குக்காக பார்க்கப்பட்டதை கம்யூனிஸ்ட்டுகள் நன்கு அறிவார்கள். அதே நேரம், அந்த சினிமாவை ஊடகமாக மாற்றும் முயற்சியில் ரஷ்ய அரசு இயங்கியது. மக்களுக்கான பிரச்சார படங்களை தயாரிக்க முனைந்தனர். குறிப்பாக, ’கலை மக்களுக்காக’ என்பதை உணர்ந்து கலைப்படைப்புகளை உருவாக்கினார்கள்.

மோசமான உள்ளடக்கத்தை வைத்திருப்பவர்கள்தான், அதை மக்களுக்குத் திரும்பக் கொடுப்பதற்கு, வடிவத்தில் ஆடம்பரத்தையும், வித்தைகளையும், மாய்மாலங்களும் செய்ய வேண்டும். ஒரு சிறந்த உள்ளடக்கம் அதற்கு பொருத்தமான வடிவத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. அதன்படி,ரஷ்ய படைப்பாளிகளிடம் இருந்த சிறப்பான உள்ளடக்கம் அதற்கு பொருத்தமான விஞ்ஞான வடிவத்தை தேடிக்கொண்டது.

முதல் காட்சியில், ஜார் மன்னனின் பெரிய சிலை மக்களால் அடித்து நொறுக்கப்படுகிறது. பின்னர், கெரன்ஸ்கி பதவியேற்றபோது அவரின் மோசமான ஆட்சியைக் குறிக்க ஐஸன்ஸ்ட்டீன் ஒரு எளிய உக்தியை கையாண்டார்- ரிவர்ஸ் ஷாட். மென்ஷ்விக்குகள் பதவியேற்றவுடன் அடுத்த காட்சியாக உடைந்த மன்னன் சிலை ரிவர்ஸ் ஷாட்டாக வந்து முழு சிலையாக காட்சியில் தோன்றும்.

கெரன்ஸ்கியை, அறிமுகம் செய்யும் போது, தொடர்ந்து, கெரன்ஸ்கியின் முகமும், நெப்போலியனின் சிலையும் காட்டப்படும். பிரஞ்சுப் புரட்சியை நசுக்கி, அதிகாரத்தின்  மூலம் ஆட்சியை பிடித்த நெப்போலியன் எப்படி புரட்சியை நசுக்கினானோ – அதேபோல்தான் ரஷ்ய மக்கள் எழுச்சியை தொடர்ந்த கெரன்ஸ்கியின் தலைமையும் என்பதை இரண்டு ஷாட்டில் சொல்லி முடித்துவிட்டார்.

பேட்டல்ஷிப் பொடம்கேனில் உள்ள ஒடேஸா படிகட்டுகள் காட்சியை போன்று இந்த படத்திலும் போல்ஷ்விக்குகளின் போராட்டம், அதை அடக்கும் மென்ஷ்விக் ராணுவத்தின் காட்சியைச் சொல்லலாம்.போராடும் மக்களை சிதைப்பதும் அதை மத்தியவர்க்கம் பார்த்து ரசிக்கும் காட்சியும் வர்க்க தன்மையையும், ரஷியாவின் அன்றைய நிலையையும் குறிக்கும் அழுத்தமான காட்சிகள்.

இறுதியில், லெனின் ரஷ்யான் அதிகாரத்தை கைப்பற்றி, அதை அறிவிக்கும் போது ஒரு வயதான ஏழை மனிதர் ஆனந்தமாக கை தட்டி மகிழும் காட்சியை காட்டியிருப்பார் ஐசன்ஸ்ட்டின். குறிப்பிடத்தகுந்த காட்சி அது. லெனினின் ஆட்சி – ஏழைகளின் ஆட்சி, பாட்டாளிகள் பதவிக்கு வந்துவிட்டனர். அதை உணர்த்துவிதமாக, அந்த ஏழை முதியவரின் பரவசத்தை பதியவைத்த ஒரு காட்சி போதும் – ஐஸன்ஸ்ட்டின் திரைப்பட ஆளுமையை சொல்ல;பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சியை சொல்ல.

சினிமா என்பது கோடிகள் புரளும் ஒரு தொழில்,அங்கு பணம் முதலீடு செய்யப்பட்டு லாபம் ஈட்ட வேண்டும் என்பது தான் கொள்கை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எதையும் விற்கும் தேர்ந்த வியாபாரிகள் தயாரிப்பாளர்கள். ’குடியை கொடுத்து, குடியை கெடுத்தால் லாபம்’ என்றவுடன் அரசே டாஸ்மாக்கை நடத்தும் போது, எத்தகைய கீழ்த்தரமான படங்களையும் மக்களுக்கு காட்டி பணம் சம்பாதிப்பதா பெரிய குற்றமாகிவிடப்போகிறது?

ஆனால், சாதாரண மக்களையும், அவர்களின் வாழ்வையும், சுரண்டப்பட்டும் ஒடுக்கபட்டும் வாழும் அவர்களை எழுச்சியடையச் செய்து, போராட தூண்டும் படங்கள் தான் இப்போதைய அவசர தேவை. சமூகம் அவலமாக நாறிகிடக்கும் போது அழகை ரசிக்கும் மனநிலை என்பது ரோம்நகரம் பற்றி எரியும் போது பிடில்வாசித்த நீரோவின் மனநிலை. கலையில் இருக்கும் நீரோக்களை துரத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது..

பாட்டாளிவர்க்க சமூகத்தின் எழுச்சியை பாருங்கள், போராடுங்கள்!!

நவம்பர் 7 புரட்சி தின வாழ்த்துக்கள்!

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

முதலாளித்துவத்தின் கருவறையில் அமெரிக்க மக்கள் முற்றுகை!

முதலாளித்துவத்தின் கருவறையில் அமெரிக்க மக்கள் முற்றுகை!

முதலாளித்துவத்தின் கருவறையில் அமெரிக்க மக்கள் முற்றுகை!

“பட்டினி கிடப்போரே பணக்காரனைத் தின்று பசியாறுங்கள்!”
“பறித்துக் கொண்டோரிடமிருந்து பறிமுதல் செய்வோம்!”
“நமது அரசியல்வாதிகள் முதலாளித்துவத்தின் பூசாரிகள்!”
“வால் ஸ்டிரீட்டில் இருக்கின்றன பேரழிவு ஆயுதங்கள்!”
“மார்க்ஸ் கூறியது உண்மை உண்மை!”

-இவை நியூயார்க் நகரின் வால் வீதியில் திரண்டிருக்கும் அமெரிக்க மக்கள்,  செப் 17 முதல் எழுப்பி வரும் முழக்கங்களில் சில. வால் வீதியென்பது அமெரிக்க முதலாளித்துவத்தின் தலை வீதி. பங்குச் சந்தையும், முதலீட்டு வங்கிகளும் குடி கொண்டிருக்கும் உலக முதலாளித்துவத்தின் புனிதக் கருவறை. அந்தக் கருவறையில் நுழைந்திருக்கும் அமெரிக்க மக்கள், முதலாளித்துவத்தின் சூதாட்டத் தேவதைகளை ஏசுகிறார்கள். தம்மைப் பீடித்திருந்த முதலாளித்துவப் பிரமைகளையும் ஒவ்வொன்றாய்த் தூக்கி வீசுகிறார்கள்.

செப் 11, 2001 இல் நியூயார்க் இரட்டைக் கோபுரங்களின் மீது விமானங்கள் வெடித்துச் சிதறியபோது அதனை பயங்கரவாதம் என்றது அமெரிக்க அரசு. சரியாகப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், இன்று அதே நியூயார்க்கில் வெடித்திருக்கும் இந்த மக்கள் போராட்டத்தைக் கண்டு இது வர்க்கப் போர் என்று கூக்குரலிடுகின்றனர் அமெரிக்க முதலாளிகள்.
போர்தான். எந்த வால் ஸ்டிரீட் கொள்ளையர்களுக்காக ஆப்கான், இராக், லிபியா போன்ற நாடுகளின்மீது அமெரிக்க அரசு போர் தொடுத்ததோ, யாருக்காக உலக மக்களின் வளங்களையெல்லாம் கைப்பற்றுகிறதோ, அந்த வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம்  என்று போர்க்குரல் எழுப்புகிறார்கள் அமெரிக்க மக்கள்.

செப்டம்பர் 17 ஆம்தேதியன்று வால் ஸ்டிரீட்டில் சில நூறு பேர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு அங்கேயே கூடாரமடித்துத் தங்கியபோது, அதனை ஏளனமாகப் புறந்தள்ளின அமெரிக்காவின் கார்ப்பரேட் ஊடகங்கள். போராட்டக்காரர்கள் மீது மிளகுத்தூளை பொழிந்து விரட்டியடித்தது போலீசு. அவர்கள் ஓடவில்லை. பின்னர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பின்வாங்கவில்லை. ஒரு மாத காலத்திற்குள் பல்லாயிரக் கணக்கான மக்கள் அங்கேயே குவிந்து விடுவார்கள் என்றோ,அமெரிக்காவின் எல்லா நகரங்களுக்கும் இந்தப் போராட்டம் பரவும் என்றோ அரசு எதிர்பார்க்கவில்லை.

“ஒரு முனையில் செல்வம் குவிவதன் விளைவாக, அதே நேரத்தில் இன்னொரு முனையில் வறுமைத்துயர் குவிகிறது” என்றார் மார்க்ஸ். அந்த இன்னொரு முனைதான் வால் ஸ்டிரீட்டில் குவிந்து கொண்டிருக்கிறது. செல்வம் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குப் பொசியும் என்ற முதலாளித்துவப் பித்தலாட்டம் அதன் தலைமையகத்திலேயே எள்ளி நகையாடப் படுகிறது.

“கடன் பாக்கிக்காக வீடுகளைப் பறிமுதல் செய்து எங்களை விரட்டுகின்றன வங்கிகள். வீட்டு வாடகை அல்லது மளிகை சாமான் இரண்டில் ஒன்று என நாங்கள் நெருக்கப்படுகிறோம். சோற்றுக்காக தெருவில் கிடக்கிறோம். வேலை இல்லை. இருந்தாலும் நியாயமான கூலி இல்லை. மருத்துவ வசதி இல்லை. ஒரு சதவீதத்தினருக்கு மட்டும் எல்லாம்  இருக்கின்றது. எங்களுக்கு எதுவும் இல்லை. நாங்கள் 99% பேர். நாங்கள்தான் அமெரிக்கா!” என்று முழங்குகின்றனர் மக்கள்.

“நாம்தான் 99%. ஆனால் 1% நம்மை ஆள்கிறது. அரசாங்க கணக்கின்படி 5 கோடிப் பேர் (உண்மையில் 10 கோடி) வறுமையில் தவிக்கிறார்கள். 5 கோடிப்பேருக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. 2.5 கோடிப் பேருக்கு வேலை இல்லை. இருப்பினும் பணக்காரர்களுக்கு வரிவிலக்கு. நமக்கு சிக்கன நடவடிக்கை. குடியரசுக்கட்சியும் ஜனநாயகக் கட்சியும் முதலாளிகளின் கட்சிகள். வால் ஸ்டிரீட் நம் வாழ்க்கையைக் கைப்பற்றிவிட்டது. நாம் வால் ஸ்டிரீட்டை கைப்பற்றித்தான் ஆகவேண்டும்”

எளிய மொழியில் வெளிப்படும் இந்த வர்க்க அரசியலின் தர்க்கம் அமெரிக்க ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்துகிறது. ‘இது வர்க்கப்போர்’ என்று அலறுகிறார் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தல் களத்தில் நிற்கும் மிட் ரோம்னி. இது முதலாளித்துவப் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்கு நடக்கும் உலகு தழுவிய கம்யூனிஸ்டு சதி என்று அச்சுறுத்துகிறார் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியைச் சேர்ந்த கிலென் பெக். வால் ஸ்டிரீட்டை எது தாக்குகிறதோ அதுதான் உலகின் முதன்மை அபாயமாம்! இசுலாமிய பயங்கரவாதம்  கம்யூனிசத்துக்கு வழி விட்டு ஒதுங்கிவிட்டது போலும்!

கம்யூனிச எதிர்ப்பின் தலைமையகத்திலேயே வர்க்கப் போராட்டமா? அமெரிக்காவில் இத்தீயை மூட்டிய சக்தி எது? பிரிட்டன், பிரான்சு,  கிரீஸ், ஸ்பெயின், போர்த்துகல், இத்தாலி என்று கடந்த 3 ஆண்டுகளாக நாடு விட்டு நாடு தாவிப்பரவும் போராட்டத்தீயை மூட்டிய சக்தி எதுவோ அதே சக்திதான்!

‘நம்முடைய எதிர்காலமும் லண்டனைப் போன்றதுதானா?’ என்ற கேள்விக்கு பதிலளித்த உலகின் 3வது பெரிய பணக்கானரரான வாரன் பப்பெட் “அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது மக்கள் வேகமாக நம்பிக்கை இழந்து வருகிறார்கள். விரக்தியாக மாறுவதற்குள் அதனைத் தடுக்க வேண்டும். இல்லையேல் அந்த விரக்தி தனக்குப் பொருத்தமான எதார்த்தத்தை உருவாக்கிக் கொள்ளும்” என்று எச்சரித்தார். பழம் தின்று கொட்டை போட்ட அந்த ஊகவணிகச் சூதாடியின் ஊகம் பொய்க்கவில்லை.

ஏன் எதற்கு என்ற விளக்கமில்லாமல், வெடித்துத் தெறிக்கும் கோபமாக சுழன்றடித்தது லண்டன் கலகம். வால் ஸ்டிரீட் போராட்டமோ அழுத்தமாக, விடாப்பிடியாக, தொடர்ச்சியாகத் தனது எதிர்ப்பைக் காட்டுகிறது. வால் ஸ்டிரீட் பகுதியின் சாலைகள் பூங்காக்கள் எங்கும் மக்கள் கூட்டம். கல்வி உரிமை பறிக்கப்பட்ட மாணவர்கள், வேலையில்லாதவர்கள், நியூயார்க் நகரின் போக்குவரத்து, துப்புறவுப் பணியாளர்கள், வங்கிகளிடம் வீட்டைப் பறி கொடுத்தவர்கள், மருத்துவக் காப்பீடு இல்லாதவர்கள், ஊனமுற்றவர்கள், ஓய்வூதியக்காரர்கள், முன்னாள் இராணுவத்தினர், போர் எதிர்ப்பாளர்கள் எனப் பலதரப்பு மக்கள்! திரள் திரளாகக் கூடிநிற்கும் மக்களிடையே நூற்றுக்கணக்கான கூட்டங்கள் நடந்தவண்ணமிருக்கின்றன.

வெட்ட வெளியில் கூடாரம் அமைத்து 30 நாட்களாக வாழ்ந்து வரும் மக்களுக்கு உணவு உறக்கம் அனைத்தும் அங்கேயேதான். இலவச உணவுக்கூடங்கள், இலவச முடி திருத்துமிடங்கள், இலவச மருத்துவ முகாம்கள் என ஒரு புதிய சமூகமாகவே அவர்களைத் திரட்டுகிறது இந்தப் போராட்டம். தம்மிடம் உள்ள நூல்களைக் கொண்டு இலவச நூலகம் அமைக்கிறார்கள். மார்க்ஸ் முதல் நோம் சாம்ஸ்கி வரையிலான பலரது நூல்கள் விவாதிக்கப்படுகின்றன. இடது சாரி அறிஞர்களும், பல நாட்டு செயல்வீரர்களும் உரையாற்றுகிறார்கள். கார்ப்பரேட் ஊடகங்களின் இருட்டடிப்பை மீறி போராட்டச் செய்தியை உலகெங்கும் கொண்டு செல்கிறது திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ள இணைய மையம். முர்டோச்சின் வால் ஸ்டிரீட் ஜர்னலை ஏளனம் செய்யும் விதத்தில், ‘கைப்பற்றப்பட்ட வால் ஸ்டிரீட்டின் ஜர்னல்’ என்றொரு பத்திரிகையைத் தொடங்கி 50,000 பிரதிகள் அச்சிடுகிறார்கள் போராட்டக்காரர்கள்.

தங்களுடைய உடைமைகளையும், உரிமைகளையும் பறித்துக் கொண்டது கார்ப்பரேட் முதலாளித்துவம்தான் என்ற கருத்து எங்கும் பரவி நிற்கிறது. அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், அதிகரிக்கும் மாணவர்களின் கல்விக்கடன்கள், அதிகரிக்கும் இராணுவச் செலவுகள், அதிகரிக்கும் வரிகள்.. இவையெல்லாம் ஏன் என்பது குறித்து யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. அட்டைகளும் காகிதங்களும் பேனாக்களும் வண்ணங்களும் தூரிகைகளும் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டிருக்கின்றன. முழக்கங்களை, ஓவியங்களை வரைந்து தள்ளுகிறார்கள் மக்கள்.

‘நாம் அனைவருமே பாலஸ்தீனியர்கள்தான்’ என்று ஒரு முழக்கம். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பினால் வீடிழந்த பாலஸ்தீனியர்களையும், அமெரிக்க வங்கியிடம் கடன் வாங்கி வீட்டைப் பறிகொடுத்த அமெரிக்கர்களையும் பிரிக்கின்ற  எல்லைக்கோடு எது? அமெரிக்க நிதிமூலதனமும் இஸ்ரேலின் ஜியோனிசமும் கைகோர்த்து நிற்கும்போது வீடிழந்த அமெரிக்கனும் பாலஸ்தீனியனும் கைகோர்ப்பதில் என்ன தடை இருக்கிறது?

தம் துயரத்தையும் அதற்கான காரணத்தையும் விவாதிப்பதன் ஊடாக, தங்கள் பொது எதிரி உலக முதலாளித்துவம்தான் என்ற கருத்தொற்றுமைக்கு அவர்களைக் கொண்டு வருகிறது இந்தப் போராட்டம். வால் ஸ்டிரீட்டில் கூடியிருக்கும் இம்மக்கள் எந்த ஒரு அமைப்பினாலும் திட்டமிட்டுத் திரட்டப்படாதவர்கள். இது தன்னியல்பான போராட்டம் என்பதால், இதனைத் தம் நோக்கத்திற்கேற்ப வளைப்பதற்கு கூட்டத்தில் கலந்திருக்கும் தன்னார்வக் குழுக்கள் முயற்சிக்கின்றன. ஆனால் தன்னார்வக் குழுக்களின் அடையாள அரசியல், நுண் அரசியல் அனைத்தையும் பின்தள்ளி தம் சொந்த அனுபவத்தினூடாக வர்க்கப்போராட்ட அரசியலை உயர்த்துகிறது இந்தப் போராட்டம். “இப்போராட்டம் நிதிச்சந்தையின் செயல்பாடு குறித்த மக்களின் விரக்தியைக் காட்டுகிறது” என்று கூறி, அரசியல் ஆதாயம் தேட ஒபாமா முயன்று கொண்டிருக்கும்போதே, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ரூபர்ட் முர்டோச், கோச் போன்ற அமெரிக்க கோடீசுவரர்களின் வீடுகளை முற்றுகையிடுகின்றனர். இரண்டு கட்சிகளும் மக்களின் பிரதிநிதி இல்லை என்று முழங்குகின்றனர்.

“வங்கிகள் நம் வீடுகளைப் பறிமுதல் செய்தால், வங்கிகளைப் பறிமுதல் செய்வோம்! நகர அரசு பள்ளிகளை மூடினால் நாம் அரசை இழுத்து மூடுவோம்!” என்று முழங்குகிறார்கள். “கல்விக்கும், மருத்துவத்துக்கும், ஓய்வூதியத்துக்கும், மக்கள் நலத்திட்டங்களுக்கும் பணம் இல்லை. இந்த நெருக்கடியின் சுமையை நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளவேண்டும்” என்ற அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கூற்றை மக்கள் ஏற்கவில்லை.

வங்கிகளும் நிதிமூலதனச் சூதாடிகளும் உருவாக்கிய 2008 சப் பிரைம் குமிழி வெடிப்பையும், திவாலாக்கப்பட்ட வங்கிகளைக் காப்பாற்ற அம்முதலாளிகளுக்கு அரசு கொட்டிக் கொடுத்த பல இலட்சம் கோடி டாலர் மானியத்தையும் ‘நெருக்கடி’ என்ற சொல்லால் குறிப்பிடுவதையே மக்கள் ஏற்கவில்லை.

“உன்னுடைய நெருக்கடிக்கு நாங்கள் பணம் கொடுக்க மாட்டோம்” என்ற முழக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இத்தாலியில் நடைபெற்ற முதலாளித்துவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் முழக்கம். அங்கிருந்து அது கிரீஸுக்கும் பிரான்சுக்கும் பரவியது. அதே முழக்கம் வால் ஸ்டிரீட்டில் எதிரொலிக்கிறது.

‘சந்தை விதிகள் எனப்படுபவை, இயற்கை விதிகள் அல்ல, மாற்றவொண்ணாத புனிதக் கோட்பாடுகளும் அல்ல’ என்ற புரிதலை தம்முடைய நடத்தையின் மூலம் மக்களுக்குப் புரியவைத்திருக்கிறார்கள் வால் ஸ்டிரீட்டின் நிதிமூலதனச் சூதாடிகள். தற்போது நடைபெறும் வால் ஸ்டிரீட் முற்றுகை அமெரிக்க முதலாளித்துவத்தையோ, உலக முதலாளித்துவத்தையோ நாளையே வீழ்த்திவிடப் போவதில்லை. ஆனால் முதலாளித்துவ ஜனநாயகம் குறித்த பிரமையிலிருந்து மக்கள் விடுபட்டு வருவதை இப்போராட்டம் காட்டுகிறது.

ஒரே மாதத்திற்குள் வால்ஸ்டிரீட்டின் முழக்கங்கள் உலகெங்கும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. அக்டோபர் 15 ஆம் தேதியன்று உலகின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், ‘முதலாளித்துவம் ஒழிக’ என்ற ஒரே முழக்கத்தை பல்வேறு மொழிகளில் முழங்கின. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், தைவான், ஹாங்காங், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றிருக்கின்றனர்.

லண்டன் பங்குச்சந்தையைக் கைப்பற்றுவோம் என்ற முழக்கத்துடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும், பாரிசில் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டு வளாகத்தின் எதிரிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருக்கின்றனர். கிரீஸ் விற்பனைக்கல்ல என்ற முழக்கத்துடன் நாட்டின் பொதுச்சொத்துகளை முதலாளிகளுக்கு விற்பதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான கிரேக்க மக்கள் கிளர்ச்சி செய்திருக்கின்றனர். இத்தாலியில் வேலைவாய்ப்பில்லாதவர்கள், மாணவர்கள், ஓய்வூதியம்பெறுபவர்கள் போன்றோர், ‘அவமதிக்கப்பட்டோர் அணி’ என்ற பெயரில் திரண்டு கிளர்ச்சியில் இறங்கியருக்கின்றனர். வங்கிகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன, போலீசு வாகனங்கள் எரிந்திருக்கின்றன.

ரோம் எரிந்து கொண்டிருக்கிறது. வால் ஸ்டிரீட் எரியக் காத்திருக்கிறது.

______________________________________________________

– மருதையன், புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை!

காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை!

தீவிரவாத  பிரிவினைவாத எதிர்ப்பு என்ற பெயரில் காஷ்மீரில் நடத்தப்பட்டுவரும் ‘தேசபக்த’ இனப்படுகொலைகள் பற்றிய உண்மைகள், அண்மையில் ஜம்மு  காஷ்மீர் மாநில மனித உரிமைகள் கமிசன் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காஷ்மீரில் அப்பாவிகளான 2730 பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டு பாரமுல்லா, பண்டிபோரா, ஹந்த்வாரா, குப்வாரா ஆகிய நான்கு மாவட்டங்களில் 38 இடங்களில் ‘அடையாளம் தெரியாதவர்கள்’ என்ற பெயரில் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இரகசியமாக இடுகாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, காஷ்மீர் போலீசாரால் புதைக்கப்பட்டுள்ளன.

1990  களில் காஷ்மீரில் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் புதிய வேகத்தில் முன்னேறத் தொடங்கியதிலிருந்து இதுவரை பல்லாயிரம் பேர் ‘காணாமல் போயுள்ளனர்’. ஆனால், மாநில அரசாங்கமோ 3744 பேர் மட்டுமே காணாமல் போயுள்ளதாகவும், 1990லிருந்து அவர்கள் பாகிஸ்தானில் தங்கி ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டுத் தீவிரவாதிகளாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தது. இதை ஏற்க மறுத்து கணவரையும் புதல்வர்களையும் உறவினர்களையும் பறிகொடுத்த காஷ்மீரிகள் “காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்க’’த்தின் மூலம் தொடர்ந்து போராடியதன் விளைவாக, அம்மாநிலத்தின் மனித உரிமை கமிசன் தனது புலனாய்வுப் பிரிவைக் கொண்டு விசாரணையை மேற்கொண்டது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில், அடையாளம் தெரியாதவர்கள் என்று புதைக்கப்பட்ட கல்லறைகளில் 574ஐத் தோண்டிப் பிணங்களைச் சோதித்தபோது, அனைவரும் காஷ்மீரின் உள்ளூர்வாசிகள் என்று இப்போது ஆதாரத்துடன் நிரூபணமாகியுள்ளது.

காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, கடந்த 1989 முதல் 2009 வரையிலான காலத்தில் 70,000 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.  அம்மாநிலத்தை ஆக்கிரமித்துள்ள 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவ மற்றும் துணை இராணுப்படைகள் கண்மூடித்தனமாக இப்படுகொலைகளை நடத்தியுள்ளன. தீவிரவாதிகளைக் கொன்றொழித்தால் பரிசுகளும் பதவி உயர்வும் இந்திய அரசால் அளிக்கப்படுவதால் போட்டிபோட்டுக் கொண்டு மோதல் என்ற பெயரில் உதிரத்தையே உறைய வைக்கும் படுகொலைகளும், போலீசு கொட்டடிக் கொலைகளும் கேள்விமுறையின்றி நடத்தப்பட்டுள்ளன.

இந்திய இராணுவத்தின் அரசு பயங்கரவாத இனப்படுகொலை அம்பலமானதைத் தொடர்ந்து, அனைத்துலக பொதுமன்னிப்புக் கழகமும் (ஆம்னஸ்டி), அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் மனித உரிமைக் கங்காணி அமைப்புகளும் மாநிலம் முழுவதுமுள்ள அடையாளம் தெரியாதவர்களின் கல்லறைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அக்கல்லறைகளும் பாதுகாப்புப் படையினரால் பாதுகாக்கப்பட்டு, மரபணுவியல்  தடயவியல் நிபுணர்கள் மூலம் சிதைந்த எலும்புகளைக் கொண்டு சோதனை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது. மனித உரிமைகள் கமிசனிடம் சாட்சியமளித்தவர்களுக்கும், மனித உரிமை இயக்கச் செயல்வீரர்களுக்கும், கமிசனின் புலனாய்வுப் பிரிவினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்; காணாமல் போனவர்கள் பற்றி முழுமையான நீதியான வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்; குற்றம் சாட்டப்பட்டவர்களும் சந்தேகப்படுபவர்களும் அனைத்துலக நீதிமன்றத் தரத்தின்படி விசாரிக்கப்பட வேண்டும்; பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசைக் கோரியுள்ளன.

காஷ்மீர் மாநில அரசும் மைய அரசும் இது குறித்து இன்றுவரை மௌனம் சாதிக்கின்றன. மனித உரிமைக்கும் உயிர் வாழும் உரிமைக்கும் இந்திய அரசு பயங்கரவாதிகளால் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள போதிலும், நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்தியுள்ள இந்த இனப்படுகொலையைக் குறித்து அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் இன்னமும் வாய்திறக்காமல் இருப்பதுதான் அதைவிடப் பெருத்த அவமானம்.

காஷ்மீரில் மட்டுமல்ல, இதற்கு முன் பஞ்சாபில் பயங்கரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் 1984 முதல் 1995 வரை இதேபோல மோதல் படுகொலைகளும் சாமானியர்கள் காணாமல் போவதும் நடந்துள்ளன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இத்தகைய அரசு பயங்கரவாதப் படுகொலைகளும் அட்டூழியங்களும் இன்றும் கேள்விமுறையின்றித் தொடர்கின்றன.

ஈழத்தில் இனப்படுகொலை பயங்கரவாதத்தை நடத்திய ராஜபக்சே அரசு போர்க்குற்றவாளி என்றால், காஷ்மீரில் துடிக்கத் துடிக்க இனப்படுகொலைகளை இரகசியமாக நடத்தியுள்ள இந்திய அரசும் அதன் இராணுவமும் புனிதர்களா? இத்தகைய அட்டூழியங்களை நடத்திவரும் போலீசு  இராணுவத்துக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, காஷ்மீரில் காலனிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதுதான் தேசிய ஒருமைப்பாடா?  ஜனநாயக உணர்வு கொண்ட ஒவ்வொருவரையும் உலுக்கும் கேள்விகளே இவை.

______________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2011

_____________________________________________________

ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார்மயத்தின் கோரமுகம்!!

40

ஐஐடி மாணவர்களின் தொடர் தற்கொலைகள்

உயர்கல்வி தனியார்மயமாக்கலின் விளைவும், கடோட்கர் குழு அறிக்கையும் !

ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார் மயத்தின் கோரமுகம்!!தொடர்ச்சியாக​ கடந்த​ சில​ மாதங்களில் ஐஐடிக்களில், குறிப்பாக​ பார்ப்பன​ மேலாண்மை தலைவிரித்தாடும் ஐஐடி கான்பூரிலும் சென்னையிலும் நடக்கும் மாணவர் தற்கொலைகள், செய்தி ஊடகங்களையும், பொதுமக்களையும், ஏன் விட்டேத்தியான இந்த​ அரசையும் கூட மாணவர் தற்கொலைக்கான​ காரணங்களை நோக்கி சற்று தலை திருப்ப​​ வைத்துள்ளது. 2011 மே மாதம் 4-ஆம் தேதி, ஐஐடி சென்னையில் எம்டெக் மாணவன் நிதின் குமார் ரெட்டி விடுதியில் தற்கொலை செய்துகொண்டதும், அதன்பின் இதுகுறித்து நடந்த​ போராட்டங்களும், விவாதங்களும் அனைத்து முதலாளித்துவ​ ஊடகங்களாலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இரண்டாமாண்டின் இறுதியில் முடிக்கப்படவேண்டிய​ பிராஜெக்ட்டை அடுத்த​ ஆறு மாதங்களுக்கு நீட்டித்ததால் ஏற்பட்ட​ மன​ உளைச்சலே இந்த​ தற்கொலைக்கு காரணமாக​ ஊடகங்களால் பேசப்பட்டது.  கடந்த​ ஒருவருடத்தில் இதே காரணத்தால் 2010 மே மாதம் சந்தீபும், 2011 பிப்ரவரியில் அனூப் வலப்பாரியாவும் தற்கொலை செய்தபோதும், நிதின் குமாரின் தற்கொலைக்கு மட்டும் இவ்வளவு ஊடகக் கவனஈர்ப்பு கிடைத்தது யதேச்சையாக​ நடந்துவிடவில்லை. ஏழை மாணவனான சந்தீபின் தற்கொலையை  காவல்துறையின் உதவியுடன் ஒரு பத்தி செய்தியாக​ மறைத்தது போல், DRDO இயக்குனரின் மகனான​ நிதினின் தற்கொலையை மூடிமறைக்க​ ஐஐடி நிர்வாகத்தால் முடியவில்லை.

2008-ல் சிஃபி வெளியிட்ட​ செய்தியில் 2005-2008 ஆம் ஆண்டிற்குள் ‘கல்விசார் நிர்பந்தத்தால்’ ஐஐடி கான்பூரில் மட்டுமே ஏழு தற்கொலைகள் நடந்ததாகக் கூறுகிறது.  2008-ல்  நடந்த​ ரித்திகா தோய​ சாட்டர்ஜி என்ற எம்டெக் மாணவியின் தற்கொலையின் போதே ஐஐடி நிர்வாகத்தின் ரகசியத் தன்மை வாய்ந்த​ மாணவர் தர​ மதிப்பீட்டு முறை (grading system) மற்றும் மாணவர் குறை தீர்க்கும் அமைப்பின் (grievance forum) கேவலமான​ நிலை குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது.

கல்விசார் நிர்பந்தங்களினால் நடக்கும் தற்கொலைகளுக்கு இணையாக ஐஐடிக்களில் நடக்கும் சாதிய​ ஒடுக்குமுறையாலும் ஏழை தலித் மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள்.  பிப்ரவரி 2011-ல் நடந்த​ ஐஐடி ரூர்க்கி மாணவன் மனீஷ் குமாரின் தற்கொலை இதற்கு மிக​ சமீபத்திய​ உதாரணம். ஐஐடி நிர்வாகம் மாணவர்களின் உணர்ச்சிவயப்படும் தன்மையும் மன​ அழுத்தமுமே தற்கொலைக்கான​ காரணமாகக் கூறுகிறது.  ஐஐடி சென்னையின் மாணவர்களுக்கான​ நிர்வாக​ முதல்வர் (Dean of Students) கோவர்த்தன், தற்கொலை செய்த​ நிதினைப்பற்றிக் கூறும்போது, அவர் பள்ளிப்பருவத்திலிருந்தே மன அழுத்ததால் பாதிக்கப்பட்டவர் என​ சேறடித்தார்.

இதற்கு முன்னும் 2010-ல் ஐஐடி கான்பூரில் ஸ்நேஹல் என்ற​ பிடெக் மாணவி தற்கொலை முயற்சி செய்ததற்கு அம்மாணவியின் மனநிலையை காரணங்காட்டினார் அதன் பதிவாளர் கஷேல்கர்.  டெக்கான் குரோனிக்கிளில் வந்த​ நிதின் குமாரின் தற்கொலை செய்திக்கு பின்னூட்டமிட்டிருந்த​ நிதின் குப்தா என்பவன் இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோய், ஒரு நடைபாதைப் பயணி மேல்  கார் ஏற்றிச் சென்றால் அதெப்படி டிரைவரின் குற்றமாகாதோ அது போலவே நிதின் குமாரின் தற்கொலைக்கும் ஐஐடி நிர்வாகம் பொறுப்பல்ல​ என்கிறான். இதற்கு டார்வினின் “தக்கன பிழைத்து வாழ்தலை” (survival of the fittest) உதாரணம் காட்டுகிறான்.

இன்னொரு பக்கம் ஐஐடி நிர்வாகமோ மாணவர்களை குஷிப்படுத்தி தற்கொலை எண்ணத்தைப் போக்க​ ஒரு தலைமை மகிழ்ச்சி அதிகாரியை (Chief Happiness Officer!?!?!?) முழுநேரமாக​ நியமித்துள்ளது. இச்சூழலில், கடந்த​ ஐந்து வருடங்களில் மட்டும் ஐஐடிகளில் நடந்த​ மொத்த​ மாணவர் தற்கொலைகளின் எண்ணிக்கை 15-ஐத் தாண்டும் போது, இதன் பின்னணியை தனிநபர் பிரச்சினையாகவன்றி சமூகப்பொருளாதார​ நோக்கில் ஆராய​ வேண்டியுள்ளது.

தற்கொலைக்கு தூண்டும் சமூகப் பொருளாதாரக் காரணிகள்

காட்ஸ் (GATT) மற்றும் டப்ளியூடிஓ (WTO)-ன் பரிந்துரைப்படி, உயர்கல்வியை பண்டமயமாக்கும் முகமாகவும் உலகசந்தையின் மனிதவளத் தேவையை பூர்த்தி செய்யவும், இந்திய​ அரசு உயர்கல்வியில் உட்கட்டுமான​ சீர்த்திருத்தங்களை கொண்டுவருகிறது. இச்சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தி சோதனை செய்வதன் முதற்கட்டமாக​,   ஐஐடிக்களை அரசு-தனியார் கூட்டு (Public-Private Partnership) கல்வி நிறுவன​ மாதிரிகளாகவும் அதேநேரம் NIT, ISER, பல்கலைக்கழகங்கள் போன்ற​ உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளில் வட்டார​ அளவில் ஆதிக்கம் செலுத்தும் அமைப்பாகவும் ஆக்கும் பொருட்டு, கடந்த​ பத்தாண்டுகளில் மனிதவள​ மேம்பாட்டுத்துறையின் கீழியங்கும் 15 ஐஐடிகளிலும், நிதிசார்  (financial autonomy) தன்னாட்சியை பகுதியளவிலும், கல்விசார் தன்னாட்சியை (academic autonomy) முழுவதுமாகவும் அமுல்படுத்தப்பட்டுவருகிறது.

நிதிசார் தன்னாட்சியென்பது மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் போன்றவற்றை நிர்ணயித்தல், மாணவர்களுக்கான விடுதி, ​ உணவகங்கள் மற்றும் அங்காடிகளின் நிர்வாகம், உட்கட்டுமானம், பிற​ நிறுவனங்களிடம் பெற்றுக் கொள்ளும் நன்கொடை போன்றவற்றில் அரசின் தலையீடின்றி நிர்வாகக் குழுமத்தின் (Board of governance) நேரடியாட்சிக்குட்பட்டிருப்பது போன்றவற்றைக் கூறலாம்.  ஆனால் ஆசிரியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் காப்பீடு, மாணவர்களுக்கான​ கல்வி உதவித் தொகை, உட்கட்டுமானத்திற்கான​ நிதி ஒதுக்கீடு, நிறுவன உபரிநிதியை முதலீடு செய்வது போன்றவற்றில் மைய அரசின் பங்களிப்பு மற்றும் தலையீடு, முதன்மை தணிக்கை ஆய்வாளரின் தணிக்கைக்கு உட்பட்ட​ நிறுவன​ வரவுசெலவுகள் போன்றவை நிதிசார் ஆட்சியின் ஒருபகுதியை இன்னும் மைய​ அரசின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.

கல்விசார் தன்னாட்சியென்பது, பாடத் திட்டங்களை வடிவமைப்பது, புதிய​ பாடப்பிரிவுகளை அறிகமுகப்படுத்துவது, மாணவர் சேர்க்கைக்கான​ தகுதிகளை நிர்ணயிப்பது, ஆசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்விற்கான​ தகுதிகளை தீர்மானிப்பது போன்றவற்றில் அரசின் தலையீட்டை முழுவதுமாக​ நீக்கி, முழுக்க​ முழுக்க​ நிர்வாகக் குழுமத்தின் நேரடி ஆட்சிக்கு ஒப்படைப்பதாகும்.  இக்குழுமத்தின் உறுப்பினர்களாக​ இருந்து ஆட்சிசெய்வது, கல்வியாளர்களான ஐஐடிக்களின் ​ மூத்த​ பேராசிரியர்களே.  இந்த தன்னாட்சி அமைப்பு கல்விசார் புலத்தில் பேராசிரியர்களுக்கு வரைமுறையற்ற​ அதிகாரத்தை வழங்கியுள்ளது.

இதனால் ஒரு மாணவனின் எதிர்காலம் பட்டப்படிப்பின் இறுதியாண்டில் ஆய்வு வழிகாட்டியாக​ (project guide) இருக்கும் குறிப்பிட்ட பேராசிரியரை மட்டுமே சார்ந்துள்ளது.  அதுபோல​ ஐஐடிக்களை பொறுத்தவரை பாடத்திட்டம் பற்றிய​ மையப்படுத்தப்பட்ட​ விதிமுறைகளில்லை.  உதாரணமாக​ பல​ துறைகளிலும் கடைசி செமஸ்டரில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வேட்டையும் (thesis) வாய்மொழித்தேர்வையும் (viva voce) பொறுத்தே மாணவனுக்கு கிரேடு (grade) வழங்கப்படுகிறது. ஆனால் ஒருசில​ துறைகளில் ஒரு எம்டெக் மாணவன் ஆய்வு முடிவுகளை ஏதாவது ஆய்விதழில் (journal) வெளியிட்டாலன்றி  அம்மாணவனுக்கு வாய்மொழித்தேர்வு நடத்தமாட்டார்கள். வாய்மொழித்தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு மட்டுமே எஸ் (S) அல்லது ஏ (A) கிரேடு வழங்கப்படும். மற்ற​ மாணவர்களுக்கு பி (B), சி (C) கிரேடுகள் வழங்கப்பட்டு பட்டமளிக்கப்படும்.

ஒரு மாணவன் எடுக்கும் உயர்ந்த​ கிரேடைப் பொறுத்தே கார்ப்பரேட் நிறுவனங்கள் அவனுக்கு வேலை வாய்ப்பளிக்கின்றது.  இந்த​ மாதிரி துறை சார்ந்த​ மையப்படுத்தப்படாத விதிமுறைகளினால், ஒரு மாணவனை குறிப்பிட்ட​ ஆய்வுவழிகாட்டி அறிவு சுரண்டல் செய்யும் போது அதை புரிந்து கொள்வதற்கோ, புரிந்தாலும் அச்சுரண்டலை எதிர்த்து அம்மாணவன் கேள்வி கேட்கவோ முடியாத​ சூழலே இங்கு நிலவுகிறது.  இதையெல்லாம் தாண்டி ஒரு மாணவன் தனது பாடம் சார்ந்த​ காரணங்களுக்காகவோ அன்றி மாணவர்கள் அன்றாடம் அனுபவிக்கும் விடுதி அல்லது நிறுவனம் சார்ந்த​ பிரச்சனைகளுக்காகவோ​ நிர்வாகத்திடம் முறையீடு செய்தால் அவனது ஆய்வுவழிகாட்டியாலே மிரட்டப்படுவான்.  இது அவனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் கிரேடில் கைவைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

ஐஐடி போன்ற​ உயர்கல்வி நிறுவனங்கள் இன்னும் பார்ப்பனர்களின் கோட்டையாக​ உள்ள நிலையில், ஆசிரியர் நியமனத்தில் நிகழும் பார்ப்பன​ மேலாண்மை காரணமாக,​ மெரிட்டிலோ, இட​ஒதுக்கீட்டிலோ படிக்க​ வரும் பார்ப்பனரல்லாத​ மாணவனின் கிரேடைத் தீர்மானிப்பதில் அவனது சாதியும் முக்கிய​ பங்களிக்கிறது. (டாக்டர் உதய் சந்த் என்பவர் மனிதவள மேம்பாட்டுத் துறையிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவலடிப்படையில் உயர்கல்வித்துறை ஆசிரியர் நியமனத்தில் மைய அரசால் எஸ்டி எஸ்சிக்கு வழங்கப்பட்டுள்ள​ 22.5% இடஒதுக்கீட்டில் இதுநாள்வரை வெறும் 5.03% மட்டுமே அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக​ மானியக்குழு வலியுறுத்தும் எஸ்டி எஸ்சிக்கான பிரதிநிதித்துவம் எந்த​ ஐஐடி நிர்வாகத்திலும் வழங்கப்படவில்லை.) இதனால் ஒரு மாணவன் தான் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக​ தனது பேராசிரியர்களையோ நிர்வாகத்தையோ அணுகுவது குதிரைக் கொம்பாகிறது.

பொதுவாக​ ஐஐடியில் நுழைவதே கௌரவமாகவும் அதற்குமேல் வேலைக்கான உத்தரவாதமாகவும் பெற்றோர்களாலும் பொதுமக்களாலும் பார்க்கப்படுகிறது.  இந்த​ பொதுப்புத்தி, பட்டப்படிப்பு முடித்ததும் கார்ப்பரேட் கம்பெனிகளில் கிடைக்கப்போகும் வேலை உத்தரவாதத்தைப் பற்றியும் வெளிநாட்டு சொகுசு வாழ்க்கை பற்றியும் கனவுகளை மாணவனுக்குள் உருவாக்கிறது. ஐஐடி மாணவர்களில் 80%ற்கும் மேலானோர் வங்கிக்கடனை நம்பி படிக்கும் நடுத்தர​ வர்க்கத்தினர்.  பட்டப்படிப்பை முடித்ததும் இக்கடனை திருப்பி செலுத்த​ வேண்டிய​ நிர்பந்தமும் அம்மாணவனுடைய​ உடனடி வேலைத் தேவைக்கு காரணமாகிறது. ஒரு மாணவன் பட்டப்படிப்பை முடிப்பதில் தாமதம் ஏற்படும் போதும் அல்லது குறைந்த​ கிரேடுகளுடன் பட்டம் பெறும்போதும் கார்ப்பரேட் கம்பெனிகளில் கிடைக்கப்போகும் வேலை பற்றிய​ அவனது ஆகாயக்கோட்டை தகர்கிறது. வங்கிக்கடனின் சுமைவேறு அழுத்துகிறது.

இந்த​ கல்விமுறை மாணவனுக்கு சமூகம் சார்ந்த​ எந்த​ புரிதலையும் உருவாக்கிக் கொடுக்காமல் இருப்பதும், சமூக​ யதார்த்தங்களிலிருந்து அன்னியப்பட்ட​ நடுத்தர​ வர்க்கப் பின்னணியும், அம்மாணவன் பட்டப்படிப்பை முடிப்பதில் சிக்கல் ஏற்படும் போது அதை தனக்கு மட்டுமே உரிய​ பிரச்சனையாகப்பார்ப்பதும், அவனது சமூகப்பொருளாதார​ நிலைமைகளுமே அவனை தற்கொலைக்குத் தூண்டுகிறது.

ஆய்வுமாணவர்களின் பரிதாபநிலை

ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார் மயத்தின் கோரமுகம்!!இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களின் நிலையே இப்படியென்றால் ஆய்வுமாணவர்களின் நிலை மிகப் பரிதாபத்துக்குரியதாக​ இருக்கிறது.  ஐஐடியில் பொறியியல் துறைகளில் முனைவர் பட்டம் மேற்கொள்ள​ ஐஐடி நுழைவுத் தேர்வு மற்றும் நேரடித் தேர்விலும், அடிப்படை அறிவியல் துறைகளில் சேர​ நெட் (NET), கேட் (GATE) போன்ற​ தேர்வுகளில் தகுதியடைந்திருப்பதுடன் ஐஐடித் தேர்வுகளிலும் வெற்றி பெறவேண்டும்.  இந்தியாவில் உயர்கல்வித் துறையில் இருக்கும் பலஅடுக்கான​ கல்விமுறையும், மையப்படுத்தப்படாத​ பாடத் திட்டங்களும் காரணமாக​ முதுநிலை பட்டம் பெற்ற​ மாணவன் மேலும் இரண்டு முதல் மூன்று வருடங்கள் தீவிரமாகப் பயிற்சியெடுத்தால் மட்டுமே இத்தேர்வுகளில் தகுதியடைந்து ஐஐடிக்குள் நுழையமுடியும்.

தனது வயதையொத்த​ நண்பர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் கை நிறைய​ சம்பாதிக்கும் போது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின்பாலுள்ள  அதீத​ ஈடுபாடும் தன் சுதந்திர சிந்தனைகளுக்கு ​ஆய்வுலகு ஏற்படுத்திக் கொடுக்கப்போகும் வாய்ப்புக​ளையும் பற்றியுள்ள ஏராளமான​ கற்பனைகளினாலே பொதுவாக​ மாணவர்கள் இத்துறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆனால் இந்திய​ தத்துவ​ மரபில் காலங்காலமாக​ ஆதிக்கம் செலுத்திவரும் அதீதக் கருத்துமுதல்வாதத்தின் (இதற்கு மிகச் சிறிய​ உதாரணமாக​ நம்ம​ கணிதமேதை ராமானுஜத்திற்கு கணித சூத்திரங்களெல்லாம் சொந்த​ புத்தியிலிருந்தன்றி திருவுடைநாயகியம்மாளின் திருவருளால் வந்ததைக் கூறலாம்) தொடர்ச்சியாக​ பார்ப்பனர்கள் கேள்விக்கே இடமற்ற வகையில் உயர்கல்வியில் முக்கிய​ இடத்தைக் கைப்பற்றினர்.​  காலனிய​ காலத்திலிருந்து சாதி சமூகமுறையின் அடிப்படையான​ கருத்துநிலைச் சட்டத்தை உடைத்தெறிவதற்கான விருப்பமில்லாமலேயே அவர்க​ளுடன் முதலாளித்துவம் சமரசம் செய்த காரணத்தால்,  இந்திய அறிவுத்துறையில் இன்று வரை மந்தமும் தேக்கமும் நிலவிவருகிறது.

பி.சி ராய் 1902-ல் எழுதிய ‘இந்து வேதியியலின் வரலாறு’ என்ற நூலில் “இந்தியாவில் அறிவியல் மனப்பாங்கின் வீழ்ச்சிக்கான முதன்மைக் காரணி சாதி சமூக முறையின் கோட்டைக் கொத்தளங்களும், அவை தொழில்நுட்ப வல்லுநர், கைவினைஞர் உள்ளிட்ட உடல் உழைப்பாளிகளின் சமூக மதிப்பை மிக மோசமான வகையில் கீழிறக்கியதுமுமே” என்கிறார். இதை நூறு சதவீதம் நிரூபிப்பது போலவே ஐஐடிக்களின் இன்றைய​ கல்வி மற்றும் ஆய்வுமுறை உள்ளது.

உதாரணமாக​ ஐஐடி சென்னையைப் பொறுத்தவரை இங்கு நிலவிவரும் ஐயர் – ஐயங்கார் மேலதிக்கத்தின் பிரதிபலிப்பாக​, கோட்பாட்டு (theoretical) மற்றும் கணிப்பிய (computational)​ ஆய்வுகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், சோதனைவழி (experimental) மற்றும் தொழிற்நுட்ப​ (technological)  ஆய்வுகளுக்கு கொடுக்காமல் ‘மூளை உழைப்பை உடல் உழைப்பிலிருந்து பிரித்து’ அதை கேவலப்படுத்தும் போக்கு இருக்கிறது.  ஒரு சில​ துறைகளில் சோதனை வழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை இறக்குமதி செய்யப்பட்ட​ பல​ கோடி ரூபாய் மதிப்பிலான​ சோதனைக்கருவிகளையும், வணிக நோக்கம் மட்டுமே கொண்ட​ பன்னாட்டு பதிப்பகங்களையும்  மட்டுமே நம்பியுள்ளதால், மாணவர்கள் தங்கள் சொந்த​  மூளையை உபயோகித்து ஒரு விளக்குமாறு செய்யும் தொழில் நுட்பத்தைக்கூட​ உருவாக்க​ முடியாத​ ஒட்டுண்ணிச் சூழல் தான் இந்திய​ தொழில்நுட்பத்துறையில் நிலவுகிறது.

ஆனால் உலகளாவிய​ ரீதியில் அடிப்படை அறிவியலும் தொழில்நுட்பமும் ஒத்தியங்கும் ஆய்வு முறையே அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கியக் கூறாக​ இருக்கும் போது, இந்த​ சாதிய சமூக அமைப்பின் வெற்றி, இந்திய​ அறிவியலின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய​ முட்டுக்கட்டையாக​ இன்றளவும் இருந்து வருகிறது. இது ஒரு ஆய்வுமாணவனின் அறிவுத் தேடலுக்கான​ தாகத்தை முளையிலே கிள்ளிவிடுவதோடு, அம்மாணவனது கருத்தை வறளச்செய்து (brain drain) ஆய்வில் எப்போதும் பெருவளர்ச்சியற்றதொரு மந்தநிலையை உருவாக்குகிறது.

சராசரியாக​ இருபத்தைந்தாவது வயதில் முனைவர் பட்ட​ ஆய்வில் நுழையும் ஆய்வுமாணவர், தன் வாழ்க்கையின் மிக​ நல்ல​ நாட்களான​ ஐந்திலிருந்து ஏழு வருடங்களை ஆய்வுவழிகாட்டியான​ பேராசிரியருக்கு அடிமைசாசனம் எழுதிக்கொடுத்து விடுகின்றார். பேராசிரியரின் அறிவு மற்றும் சாதியச் சுரண்டலுக்குள்ளாகி, ஆய்வில் பெருவளர்ச்சியெதுவுமில்லாமல் கல்வி உதவித்தொகைக்காக​ நித்தம் போராடி,  சமூகரீதியான​ உறவுகளையும் நட்புகளையும் இழந்து உள்நோக்கியாகி (introvert), குடும்பத்தினரால் ‘சம்பாதிக்கத் துப்பில்லாதவன்’ என்று முத்திரைகுத்தப்பட்டு, நிரந்தர​ வருமானமில்லாததால் திருமணம் என்ற​ கனவே கானல் நீராகி,  எதிர்காலம் பற்றிய​ எந்த​ நம்பிக்கையுமற்று மனச்சிக்கலுக்கும்  உள்ளாகி, செயல் வீரியமிழந்த​ நடைபிணங்களாகவே ஐஐடி ஆய்வுமாணவர்கள் வாழ்கின்றனர்.

இதற்கிடையில் வழிகாட்டிக்கு செய்யும் சேவையில் ஏதேனும் குறையேற்பட்டாலோ  ஆய்வில் பெரிய முன்னேற்றமில்லாமலிருந்தாலோ, ஆய்வின் எந்த​ கட்டத்தில் வேண்டுமென்றாலும் அம்மாணவரை எவ்வித​ நட்டஈடுமின்றி, கேட்பாரும் கேள்வியுமற்ற​ கையறு நிலையில் வெளியேற்ற​ இவ்வமைப்பு வழிவகை செய்துள்ளது. இந்நிரந்திரமற்ற​ தன்மை, ஆய்வு மாணவர்களுக்கு தற்கொலையெண்ணத்தைக்கூட​ உருவாக்குவதில்லை! இப்படி இந்திய​ உயர்கல்வித் துறையைப் பொறுத்தவரை, பேராசிரியர்கள் சுரண்டுபவர்களாகவும், மாணவர்கள் அறிவுத்தளத்திலும், பொருளாதார​ரீதியாகவும், கலாச்சாரத்தளத்திலும் ஒட்டச்சுரண்டப்படுபவர்களாகவும் எதிரெதிர் திசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

ஐஐடிக்களின் நிலைமை இப்படியிருக்க​, இவ்வமைப்பை அம்பலப்படுத்தி, நிதின் குமார் உட்பட​ ஐஐடி சென்னையில் நடந்த​ அனைத்து தற்கொலைகளுக்கும் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டுமென்றும், தற்கொலைகளுக்கு காரணமான​ டீன் மற்றும் ஆய்வுவழிகாட்டி ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கவேண்டுமென்றும் கோரிக்கைகளுடன் மாணவர்களை ஒருங்கிணைந்து போராட​ வலியுறுத்தி புரட்சிகர​ மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.  ஐஐடி மாணவர்கள் ஓரணியில் திரண்டு இதற்கெதிராகப் போராடவில்லையென்றால் தற்கொலைகள் வரும் காலங்களிலும் தொடரத்தான் செய்யும்.

இந்நிலையில் ஐஐடிக்களின் தரத்தை உயர்த்தும் பொருட்டு அவற்றை தனியார் மயமாக்கப் பரிந்துரைக்கும் கடோட்கர் குழு அறிக்கையை அமுல்படுத்தப்போவதாக​ மனிதவள​ மேம்பாட்டுத்துறை கடந்த​ மாதம் அனைத்து செய்திதாள்களிலும் செய்தி வெளியிட்டு, அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு இணையத்திலும் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் சுற்றுசூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ், ரிலையன்ஸின் கடல்சார் ஆய்வு நிறுவனத்துடன் கூட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததை நியாயப்படுத்திப் பேசும் போது, ‘இந்தியாவில் ஐஐடி, ஐஐஎம் உட்பட​ எந்த​ அரசுசார் கல்விநிறுவனங்களும் உலகத்தரம் வாய்ந்ததாக​ இல்லை. உயர்கல்வித் துறையில் தனியாரின் பங்களிப்பு ஒன்றே இந்திய​ உயர்கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்தும்’ என்றார்.  இதற்கு பதிலளித்த​ மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல், ‘கடோட்கர் குழுப் பரிந்துரைகளை அமுல்படுத்தினாலே உயர்கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்த முடியும்’ என்றார்.  உடனே அனைத்து செய்தி நாளேடுகளும் ஐஐடியின் தரத்தைச் சொல்லி மத்திய​ அமைச்சரவையே இரண்டுபட்டு குடுமிப்பிடி சண்டைபோடுகிறது என்றெல்லாம் பரபரப்பு செய்தி வெளியிட்டது.

ஆனால் மைய அமைச்சரவையும் நாளேடுகளும் அரங்கேற்றிய​ இந்த​ நாடகத்தில் மைய​ இழை ஒன்றுள்ளது. இவர்களின் கூற்றுகளை கூர்ந்து கவனிக்கும் எவருக்கும் அது புரியும். அதாவது, அரசு-தனியார் கூட்டில் மட்டுமே உயர்கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்த​ முடியும் என்றும் இதற்கு கடோட்கர் குழு பரிந்துரைக்கும் ஐஐடி தனியார்மயமாக்கலே ஒரேவழி என்பதை மக்களை ஏற்க​ வைப்பதே இந்நாடகத்தின் நோக்கம்.

‘அரசு-தனியார் கூட்டு’ என்ற​ வண்ணத்தாளில் பொதியப்பட்டுள்ள​ இந்த​ நஞ்சின் உண்மையான​ தன்மை நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு காத்துக் கிடக்கும்  பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய​ உயர்கல்வித் துறையை லட்டு மாதிரி அப்படி அலேக்காக​ தூக்கி கொடுப்பதே!. இதனை முழுமையாக​ உணர்ந்தும் எந்த​ ஐஐடி பேராசிரியர்களும் இதற்கெதிராக​ வாயைத் திறக்காமல் இருப்பதன் ரகசியம் தங்களுக்கும் ‘பிராஜக்ட்’ என்ற​ பேரில் சில​ எச்சில் எலும்புகள் வீசப்படும், மாணவர்களின் உழைப்பை   ஒட்டச் சுரண்டி ரிப்போட் எழுதி பிழைத்துக் கொள்ளலாம் என்ற​ நப்பாசை தான்.

இன்றைக்கு உயர்கல்வித்துறை தனியார்மயமாக்கலின் முதல் பலிகடாக்களாக​ மாணவர்கள் இருந்தாலும் அது தன் ஆக்டொபஸ் கரங்களால் பேராசிரியர்களையும் அழுத்தி திணறடிக்கும் காலம் வெகு தூரமில்லை.  இலவசக் கல்வியை அமல்படுத்து, தனியார் கொள்ளையை தடுத்து நிறுத்து, என்ற கோரிக்கையின் கீழ் மாணவர்கள் அணிதிரண்டு போராடாத வரை ஐஐடி மட்டுமல்ல ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும் விமோச்சனமில்லை.

ஆனால் சாதாரண அரசு கல்லூரிகளில் இருக்கும் மாணவர்களின் அரசியல் விழிப்புணர்வு ஐஐடி போன்ற உயர்கல்வி மாணவர்களுக்கு இல்லை என்பதை அவர்கள் உணரும் வரை, உணர்ந்து போராடாத வரை விடிவில்லை. அந்த விடியலுக்கான விதையை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி விதைத்துள்ளது. அறுவடைக்கான ஆதரவை மாணவர்கள் தரவேண்டும்.

_______________________________________________________

– ஆலங்கட்டி

______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

சல்வா ஜூடும் கலைப்பு: உச்ச நீதிமன்றத்தின் கோணல் பார்வை!

சல்வாஜூடும் கலைப்பு: உச்ச நீதிமன்றத்தின் கோணல் பார்வை!சிறப்புப் போலீசு அதிகாரிகள் (SPO)சு என்று சட்டிஸ்கர் மாநில அரசாங்கத்தால் அழைக்கப்படும் சல்வா ஜூடும் அமைப்பை கலைத்து விடும்படியும் நிராயுதபாணியாக்கிவிடும்படியும் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது  அரிதிலும் அரிதான வழக்கு என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்றும் மனித உரிமை மற்றும் ஜனநாயகப் போராளிகளால் போற்றப்படுகிறது.

இத்தீர்ப்பை சட்டவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது அவ்வாறானதுதான் என்று தோன்றும். ஆனால், சட்டவாதத்திற்கு அப்பாற்பட்டு சற்று ஆழமாக தீர்ப்பின் உள்ளடக்கத்தைப் பரிசீலிக்கும்போது மிகவும் எச்சரிக்கையாகவும் எதிர்மறையிலும் வரம்புக்குட்பட்டும் இந்த வழக்கு அணுகப்பட்டிருப்பதாகவே புரியும்.

நந்தினி சுந்தர், தில்லியைச் சேர்ந்த சமூகவியல் பேராசிரியர்; ராமச்சந்திர குகா, ஒரு வரலாற்று அறிஞர்; இ.ஏ.எஸ். சர்மா, மத்திய அரசின் முன்னாள் செயலாளர் ஆந்திர அரசின் பழங்குடி நல ஆணையாளர். இந்தியக் குடிமக்கள் முனையம் என்ற சமூக அமைப்பு சட்டிஸ்கருக்கு அனுப்பிய உண்மை அறியும் குழுவில் இம்மூவரும் பங்கேற்க சென்றிருந்தபோது, சல்வா ஜூடுமின் அட்டூழியங்களைப் பற்றி அறிந்தனர். சட்டிஸ்கரில் சல்வா ஜூடுமின் மனித உரிமை மீறல்கள் குறித்து, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையங்களிடம் முறையிட்டும் அவர்களுக்கு உரிய, பொறுப்பான விடையோ, விளைவோ எதுவும் கிடைக்கவில்லை.

எனவே, 2006ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தின் நீண்ட படிகளில் ஏறினர். 26 நாட்கள் மட்டுமே விசாரணை நடப்பதற்கு 5 ஆண்டுகள் ஆகின. வெவ்வேறு அமர்வுகளில் பதினோரு நீதிபதிகள் மாறிமாறி வெவ்வேறு சமயங்களில் வழக்கு விசாரணையைக் கேட்டனர். 20102011ஆம் ஆண்டில் தொடர்ந்து, 16 நாட்கள் வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுதர்சன ரெட்டியும், சுரீந்தர் சிங் நிஜ்ஜாரும் கடைசியாகத் தீர்ப்பு வழங்கினர்.

சல்வா ஜூடும்  சிறப்பு போலீசு அதிகாரிகள் பாதுகாப்புப் படையினரோடும், மாவட்ட போலீசாருடனும் பழங்குடி கிராமங்களுக்குள் போனார்கள்; வீடுகளைக் கொளுத்தினார்கள்; தானியங்கள், ஆடு,மாடு  கோழிகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டார்கள்; பெண்கள் மீது பாலியல் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர்; பழங்குடி இனத்தவர்கள் பலரைப் படுகொலை செய்தார்கள் என்று குற்றச்சாட்டுகள் மனுதாரர்கள் மூவராலும் ஆதாரங்களுடன் உச்ச நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டது. மனித உரிமைகள் கண்காணிப்பகம், குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணயைம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகள் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தின.

இவற்றோடு சல்வா ஜூடும்  சிறப்புப் போலீசு அதிகாரிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பலியானவர்களின் வாக்குமூலங்கள் நீதிபதிகளின் முன் வைக்கப்பட்டன. பிரிட்டனின் சேனல்4 தயாரித்த ஆவண ஒலிஒளிப்படம், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடமிருந்து பெற்று இணைப்புச் சாட்சியம் எம்.எப்3 ஆக குற்றச்சாட்டுப் பட்டியலுடன் இணைக்கப்பட்டிருந்தது.

2005-07 ஆண்டுகளில் மட்டும் 644 பழங்குடி கிராமங்களில் இருந்து சுமார் 50,000 பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு 20 சல்வா ஜூடும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர். இவர்களுக்கு தினமும் ரூ. 50 மட்டுமே தரப்படுகிறது. உணவு, மருத்துவம், கல்வி வசதி எதுவும் கிடையாது. ஆனால் சட்டிஸ்கர் அரசோ, இவையெல்லாம் நிவாரண முகாம்கள் என்று வாதிடுகிறது.

2007 ஜூனில், ஆந்திராவின் கம்மம் மாவட்டம் சேர்லாவில் நடந்த பழங்குடி மாநாட்டில் திறந்தவெளியில் அளிக்கப்பட்ட 110 பழங்குடி கிராமங்களின் பிரதிநிதிகளுடைய வாக்குமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவை பெருமளவில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதையும் அரச பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாக சல்வா ஜூடும் அட்டூழியங்களையும் பற்றி தெளிவாகப் படம் பிடித்துக் காட்டின. அந்த வாக்குமூலங்கள் எல்லாம் பழங்குடி மக்களின் கோண்டி மொழியிலும், இந்தியிலும் ஆதாரங்களாக நீதிபதிகள் முன்பு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இக்குற்றச்சாட்டுகள் எதற்கும் உச்ச நீதிமன்றத்திடம் இருந்து பதில் ஏதும் இல்லை. இவை எதையும் உச்சநீதி மன்றம் கணக்கில் எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை.சல்வா ஜூடும்  சிறப்புப் போலீசு அதிகாரிகளின் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தற்போது வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தக்க நிவாரணமும், நீதியும் கிடைக்கவில்லை. குற்றவாளிகளுக்குத் தண்டனையும் விதிக்கப்படவில்லை.

அதற்குப் பதிலாக சல்வா ஜூடும்  சிறப்புப் போலீசு அதிகாரிகள் உருவாக்கப்பட்ட முறை, அவர்களின் தகுதி, கல்வி, பயன்பாடு, பயிற்சி, ஊதியம்,மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரில் அவர்களுக்குள்ள ஆபத்துகள், இவற்றிலெல்லாம் அரசின் சட்டத்துக்கு முரணான நிலைஇவை பற்றித்தான் நீதிபதிகள் கணக்கில் எடுத்துக் கொண்டனர். சல்வா ஜூடும்  சிறப்புப் போலீசு அதிகாரிகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகள், பாதுகாப்பின்மை, ஆபத்து, மக்கள் நலன்கள், உரிமைகளை விட, சல்வா ஜூடும்  சிறப்புப் போலீசு அதிகாரிகளின் பாதுகாப்பின்மை, நலன்கள், உரிமைகள் பற்றிய கூடுதலான அக்கறை என்ற நோக்கில் இருந்துதான் பரிசீலித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. முதலாளிய ஊடகங்களும் அம்மாதிரியான அக்கறையைத்தான் மேலும் கூடுதலாக வெளிப்படுத்தியிருக்கின்றன.

சல்வாஜூடும் கலைப்பு: உச்ச நீதிமன்றத்தின் கோணல் பார்வை!மாவோயிஸ்டுகளுக்கு எதிரான அரசின் போரில் சல்வா ஜூடும்  சிறப்புப் போலீசு அதிகாரிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பழங்குடி இளைஞர்கள் “பீரங்கித் தீனியாகப்சு பலியிடப்படுகிறார்கள் என்று நீதிபதிகளும் ஊடகங்களும் கண்ணீர் வடிக்கிறார்கள். அவர்கள் குறைந்தபட்சக் கல்வி அறிவு இல்லாதவர்கள். போதிய பயிற்சியில்லாமல் சக்தி வாய்ந்த, நவீன ஆயுதங்களோடு போரில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சல்வா ஜூடும் அமைப்பை உருவாக்கியதன் மூலம் தேவையான ஆயுதங்களும் போதிய எண்ணிக்கையில் நிரந்தர போலீசு மற்றும் பாதுகாப்புப் படையையும் நிறுவி, குடிமக்களைக் காக்க வேண்டிய பொறுப்பிலிருந்து அரசு ஒதுங்கிக் கொண்டது, என்கிறார்கள். போலீசு செய்ய வேண்டிய வேலைகளில் சல்வா ஜூடும்  சிறப்புப் போலீசு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டது, அரசியல் சட்டத்தின் 14வது விதி (சட்டத்தின் முன் அனைவரும் சமம்) மற்றும் 21வது விதி (குடிமகனின் உயிருக்கும் சுதந்திரத்துக்கும் உறுதி) ஆகியவற்றை மத்தியமாநில அரசுகள் மீறியுள்ளன என்கிறது, உச்ச நீதி மன்றத் தீர்ப்பு.

அதாவது, பயங்கரவாதக் கிரிமினல் குற்றச் செயல்களில் ஈடுபடும் சல்வா ஜூடும் சிறப்புப் போலீசு அதிகாரிகள், அவற்றுக்குப் பலியாகிற பழங்குடி மக்கள் ஆகிய இரு தரப்பையும் சமமாக வைத்தே பார்க்கும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை அனுகியுள்ளனர்.

மேலே சென்று, சல்வா ஜூடும் சிறப்புப் போலீசு அதிகாரிகளை நிராயுதபாணிகளாக்கியும், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்துவதை நிறுத்தியும் அவர்களின் உயிர்களை மாநில அரசாங்கம் காத்திட வேண்டும் என்றும் உச்சநீதி மன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

நாட்டின் ஐந்து மாநிலங்களில் 40,000க்கும் மேலான பழங்குடி இளைஞர்கள் வெவ்வேறு பெயர்களில் சல்வா ஜூடும் போன்ற அரச பயங்கரவாத கொலைப் படைகளாகத் திரட்டப்பட்டிருக்கிறார்கள்; நாங்கள் மட்டுமா இதைச் செய்கிறோம், என்கிறார் சட்டிஸ்கர் மாநில பா.ஜ. க. முதல்வர். அதற்கு உச்ச நீதிமன்றத்தின் பதில் என்ன?

தேர்தல் அரசியலில் நாய்ச் சண்டை போடும் காங்கிரசும் பா.ஜ. க.வும் மக்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தை மூர்க்கமாகத் தொடர்வதில் கை கோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள். உச்சநீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து மறுசீலனை வழக்குப் போடப்போவதாகக் கூட்டுமுடிவு செய்துள்ளார்கள். சல்வா ஜூடும் ஒரு அமைதி இயக்கம் என்று சாதிக்கிறார்கள். உச்சநீதி மன்றத் தீர்ப்பும் ஒருவகையில் இக்கருத்தையே கொண்டிருக்கிறது.

_____________________________________________________________

புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2011

_____________________________________________________________

குஜராத்: கார்ப்பரேட்மயமாகும் விவசாயம்! ஓட்டாண்டிகளாகும் விவசாயிகள்!!

குஜராத்: கார்ப்பரேட்மயமாகும் விவசாயம்! ஓட்டாண்டிகளாகும் விவசாயிகள்!!“குஜராத்தைப் பார்! மோடி ஆட்சியின் சாதனையைப் பார்!சு என்று மோடி ஆட்சியை உச்சந்தலையில் வைத்துக் கொண்டாடுகிறது, இந்தியா டுடே. “இந்தியாவின் ஆண்டுச் சராசரி விவசாய வளர்ச்சி 2.9 சதவீதம் மட்டுமே; ஆனால், குஜராத்தின் வளர்ச்சியோ 9 சதம்! மத்திய அரசு மோடியைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்சு என்கின்றன, செய்தி ஊடகங்கள். உணவு விவசாயக் கழகத்தின் துணை நிறுவனமான பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையம் (International Food Policy Research Institute, Rome) குஜராத்தைப் பின்பற்றுமாறு இந்தியாவின் இதர மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ள பாசிச ஜெயா கும்பலோ, குஜராத்தை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்தின் விவசாயத்தில் மாற்றத்தைக் கொண்டுவர ஒரு நிபுணர் குழுவை குஜராத்துக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளது.

இப்படி நாடு முழுவதும் முதலாளித்துவ நிறுவனங்களும் ஊடகங்களும் பார்ப்பனபாசிச மோடியைச் சிறந்த அரசாளுமை கொண்டவர் என்றும், விவசாயத்தில் வளர்ச்சியைச் சாதித்தவர் என்றும் கொண்டாடுகின்றன. எனில், விவசாயிகளுக்கு குஜராத் சொர்க்கபுரியா? மோடி அரசு விவசாயத்தில் அப்படி என்ன ‘புரட்சியை’ச் செய்துள்ளது?

கடந்த 2005ஆம் ஆண்டு மோடி அரசு விவசாயம் தொடர்பாக இரண்டு சட்டங்களைக் கொண்டுவந்தது. அதில் ஒன்று, ஒப்பந்த விவசாயத்தைப் பரவலாக்கும் திட்டம். இத்திட்டத்தில் தனியார் நிறுவனங்களும் மாநில அரசும் கூட்டுச் சேர்ந்து விவசாயிகளுக்குத் தேவையான பொருட்களை வழங்கும். விவசாயிகள் 1 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும். இதற்காக, மாநில அரசின் விவசாய உற்பத்தி விற்பனைக் குழு தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது.

இரண்டாவது, கார்ப்பரேட் விவசாயத்திற்கும் மற்றும் உயிர்ம எரிபொருள் (Bio Feul) விவசாயத்திற்கும் (அதாவது, காட்டாமணக்கு பயிரிட) தரிசு நிலங்களை முதலாளிகளுக்குத் தாரைவார்த்துக் கொடுப்பதற்கான சட்டமாகும். இதன் மூலம் அரசுக்குச் சொந்தமான சுமார் 42 இலட்சம் ஹெக்டர் நிலம், அடிமாட்டு விலையில் பெருமுதலாளிகளுக்கு 20 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது. மேலும், நன்செய் நிலங்களையும் இம்முதலாளிகள் கையகப்படுத்திக் கொள்ள நில உச்சவரம்பு மற்றும் குத்தகைச் சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன.

இவ்விரு சட்டங்கள் மூலமாக குஜராத் அரசு பாரம்பரிய விவசாயத்தை நாசமாக்கி, கார்ப்பரேட்மயமான விவசாயத்தைத் திணித்து வருகிறது. அதாவது, விதை, உரம், பூச்சி மருந்துகள், சேமிப்புக் கிடங்குகள், கொள்முதல், விநியோகம்  என அனைத்தையும் கட்டுப்படுத்தி, பெருந்தொழில் குழுமங்கள் ஆதிக்கம் செய்யக் கதவை அகலத் திறந்துவிட்டுள்ளது. பாரம்பரிய விவசாயத்தையும் விவசாயிகளையும் ஒழித்துக் கட்டிவிட்டு உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கம் செய்யும் இத்தகைய முறையைத்தான் விவசாய வளர்ச்சி என்றும் வறுமையும் வேலையின்மையும் குறைந்து குஜராத் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுவதாகவும் முதலாளித்துவ முண்டங்களும் ஊடகங்களும் கதையளக்கின்றன.

2003ஆம் ஆண்டிலிருந்து உள்நாட்டுவெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை உணவு மற்றும் உணவுப் பதப்படுத்தல் துறையில் முதலீடு செய்ய அழைத்துவரும் குஜராத் அரசு, கடந்த 2009ஆம் ஆண்டில் மட்டும் 204 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. இதன் மூலமாக, சுமார் 32,450 கோடி ரூபாய் அளவுக்கு இம்மாநிலத்தில் தனியார் முதலீடுகள் குவிந்துள்ளன. குறிப்பாக, ரிலையன்ஸ் நிறுவனம் உற்பத்திநுகர்வு சங்கிலியை ஒருங்கிணைக்க சுமார் 3000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இத்தகைய புதிய சட்டங்களாலும் பெருமுதலாளிகளின் முதலீடுகளாலும் குஜராத்தின் விவசாயம் புதிய பரிமாணத்தை எட்டி வருகிறது.

2000ஆவது ஆண்டில் அக்ரோசெல் என்ற நிறுவனம் பருத்தி மற்றும் எள் ஒப்பந்த விவசாயத்தைத் தொடங்கியது. அப்பொழுது 500 விவசாயிகளைக் கொண்டு 2,500 ஹெக்டரில் ஒப்பந்த விவசாயத்தை செயல்படுத்தியது. இது 2008இல் 45,000 விவசாயிகள், 2,18,000 ஹெக்டர் பரப்பளவு என அதிகரித்துள்ளது. தேசாய் , பார்தி முதலான நிறுவனங்கள் சுமார் 7,000 ஏக்கர் பரப்பளவில் ஒப்பந்த விவசாயத்தின் மூலம் மாம்பழம் மற்றும் வாழைப்பழங்களை உற்பத்தி செய்து ஐரோப்பியச் சந்தைக்கு அனுப்புகின்றன. மெக்டொனால்ட் என்ற நிறுவனம் ஆயிரக்கணக்ககான ஏக்கரில் உருளைக்கிழங்கு ஒப்பந்த விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றது. ஏ.சி.ஐ.எல். என்ற நிறுவனம் ஒப்பந்த விவசாய அடிப்படையில் பருத்தியை உற்பத்தி செய்து வருகிறது. சொட்டு நீர்ப்பாசன நிறுவனமான ஜெயின், ஒப்பந்த விவசாயத்தின் மூலமாக வெங்காய உற்பத்தியை மேற்கொள்கிறது. இவ்வாறு குஜராத்தில் பல இலட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் ஒப்பந்த விவசாயத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலத்தில் சிறு உடைமையாளர்கள், பெரும் உடைமையாளர்களுக்கு நிலங்களைக் குத்தகைக்கு விடுதலும், விற்பதும் அதிகரித்துள்ளதோடு, சராசரி நில உடைமையின் அளவும் அதிகரித்து குஜராத்: கார்ப்பரேட்மயமாகும் விவசாயம்! ஓட்டாண்டிகளாகும் விவசாயிகள்!!வருவதாகக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1990 களில் சிறு விவசாயிகளே பெரும் பண்ணையாளர்களிடம் இருக்கும் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து விவசாயத்தில் ஈடுபட்டனர். ஆனால், 2000ஆவது ஆண்டுக்கு பிறகு நவீன பண்ணையாளர்கள், சிறு விவசாயிகளிடம் இருக்கும் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து, பெரும் பண்ணை ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் சிறு விவசாயிகள் படிப்படியாக விவசாயத்திலிருந்தே விரட்டப்பட்டு நாடோடிகளாக்கப்பட்டு வருகின்றனர். நவீன உழுபடைக் கருவிகள் மூலம் பண்ணை விவசாயம் மேற்கொள்ளப்படுவதால், கூலி விவசாயிகளுக்கும் வேலை கிடைப்பதில்லை. மேலும் ஒப்பந்த விவசாயத்தின் ஓரினப் பயிர் சாகுபடியால், மண் வளம் இழப்பும் பாசன வசதிகள் சூறையாடப்படுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பும் தீவிரமாகி வருகின்றன.

இன்னொரு பக்கம், கார்ப்பரேட் கம்பெனிகள் நிலத்தைக் கையகப்படுத்தி நேரடியாக விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளன. திடீர் விவசாயியாக அவதாரம் எடுத்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், அரசின் துணையோடு கையகப்படுத்தியுள்ள 1,700 ஏக்கரில் மா பயிரிட்டுள்ளது. இதில் உற்பத்தியாகும் மாம்பழத்தை “ரிலையன்ஸ் மேங்கோஸ்சு என்கிற பெயரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியச் சந்தைக்கு ஏற்றுமதி செய்கிறது. ஏ.சி.ஐ.எல். நிறுவனம் அரசின் தரிசு நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து, பருத்தி விவசாயத்தை நேரடியாகச் செய்து வருகிறது.

மேலும், உயிர்ம எரிபொருள் விவசாயத்திற்கு என்கிற பெயரில் , ரிராயல் எனர்ஜி, டாட்டாலையன்ஸ், எஸ்ஸார், அரவிந்த் மில்ஸ், அவினி சீட்ஸ் போன்ற நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் குஜராத்தில் உள்ள தரிசு நிலங்களைக் கையகப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளன. இம்மாநிலத்தின் கணிசமான தரிசு நிலங்கள் கட்ச், சௌராஷ்டிரம் மற்றும் வடக்குப் பகுதியில் உள்ளன. அங்கு வாழும் மக்கள் இந்நிலங்களை கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களாகத் தொன்றுதொட்டு பயன்படுத்தி வருகிறார்கள். இவர்கள் குஜராத்தின் மக்கள் தொகையில் 5 முதல் 8 சதமாக உள்ளனர்; சுமார் 25 முதல் 40 இலட்சம் குடும்பங்கள் இந்நிலங்களைச் சார்ந்து வாழ்கின்றன. இவர்களின் வாழ்வாதாரமாக உள்ள மேய்ச்சல் நிலத்தின் அனுபோக உரிமை பறிக்கப்பட்டு வருவதால், இப்பகுதிவாழ் மக்கள் கால்நடைகளை விற்றுவிட்டு நகர்புறங்களில் நாடோடிகளாக வேலை தேடி அலைகின்றனர்.

ஏற்றுமதி மற்றும் மேட்டுகுடிக்கான விவசாயம் (High value agriculture) ஆகிய வகைகளுக்கு குஜராத்தில் முன்னுரிமை தரப்பட்டு வருகிறது.1990களில் 4 இலட்சம் ஹெக்டராக இருந்த காய்கறிபழ உற்பத்திக்கான விவசாயம், 200708இல் 6 இலட்சம் ஹெக்டராக உயர்ந்திருக்கிறது. அதேபோல் பருத்தி 15 இலட்சம் ஹெக்டரில் இருந்து 24 இலட்சம் ஹெக்டராக உயர்ந்திருக்கிறது. இதன் விளைவாக தானிய உற்பத்தி பின்னுக்குத் தள்ளப்பட்டு உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.

குஜராத்தின் ஒட்டுமொத்த பருத்தி விவசாயத்தில் 54 சதம் பி.டி. பருத்தி விதை (மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி) கொண்டு பயிரிடப்படுகிறது. 30க்கும் மேற்பட்ட தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் பி.டி. பருத்தி விதையை விற்பனை செய்கின்றன. இருப்பினும், இந்நிறுவனங்கள் அனைத்தும் பி.டி. பருத்தி விதைக்குக் காப்புரிமை கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோவின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களாகும். மான்சான்டோதான் விலையைத் தீர்மானிக்கிறது. இதனால் பருத்தி விவசாயிகளுக்குச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இலாபமில்லை; காய் புழு நோயையோ கட்டுப்படுத்தவும் முடியவில்லை.

இவை தவிர, குஜராத் அரசு பல்வேறு பயிர்களுக்கான உற்பத்தி மண்டலங்களை உருவாக்கி வருகிறது. மாம்பழம், சப்போட்டா, அனொலா, எலுமிச்சை, வாழை, பப்பாளி, அன்னாசி, பேரிச்சை, கொய்மலர்கள், வாசனை பயிர்கள் போன்றவை, ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட மாவட்டம் அல்லது வட்டங்களை உற்பத்தி மண்டலங்களாக அறிவித்துள்ளது. அங்கு அப்பயிர் உற்பத்திக்கு ஊக்கம் கொடுக்கப்படுகிறது. தேவைப்படும் நிறுவனம் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் ஒப்பந்தம் போட்டுக் கொள்முதல் செய்து கொள்ளலாம்; அங்கு பழக்கூழ் மற்றும் பதப்படுத்தல் தொழிற்சாலையை ஆரம்பித்துக் கொள்ளலாம். மேலும், அரசு  தனியார் கூட்டிணைவுடன் பரோடா (வடோதரா) நகரத்தை ஒட்டி, விவசாய விளைபொருட்களைச் சேகரித்தல், தரப்படுத்தல், பதப்படுத்தல், மதிப்பூட்டல் மற்றும் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்க “மீப்பெரும் உணவுப் பூங்காக்களை (Mega food parks)” உருவாக்க குஜராத் அரசு முனைந்துள்ளது. இந்த “மீப்பெரும் உணவு பூங்காசுவை ஒட்டிய விவசாய பகுதிகளில் வட்டாரச் சேகரிப்பு மையங்கள் உருவாக்கப்படுவதோடு, இவற்றில் அந்நிய முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன. மேலும், தனியார் நிறுவனங்களின் பங்கேற்புடன் 20 க்கும் மேற்பட்ட விவசாய ஏற்றுமதி மண்டலங்களை குஜராத் அரசு உருவாக்கியுள்ளது. இலாபம் உத்திரவாதப்படுத்தப்பட்ட உற்பத்தி  கொள்முதல்  நுகர்வு மற்றும் சந்தைப்படுத்தலைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்காகவே இவை வேகவேகமாக நிறுவப்பட்டு வருகின்றன.

குஜராத்: கார்ப்பரேட்மயமாகும் விவசாயம்! ஓட்டாண்டிகளாகும் விவசாயிகள்!!

இன்று குஜராத்தில் ரிலையன்ஸ், அய்.டி.சி., கோத்ரெஜ், ஃப்யூச்சர், மஹிந்திரா, ஹரியாளி கிசான் பஜார், ஏ.சி.அய்.எல்., மகேந்திரா, டீ.சி.ம்.ஸ்ரீராம் போன்ற நிறுவனங்கள் கிராமப்புற சில்லறை வர்த்தகம் மற்றும் விவசாய இடுபொருட்கள் வர்த்தகத்தில் இறங்கி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றின் விளைவாக, முறைசாரா சிறு உற்பத்தி, கொள்முதல், சில்லறை விற்பனை ஆகியவை ஒழிக்கப்பட்டு அவ்விடத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் காலூன்றி விட்டன.

இவை தவிர, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழில் வளர்ச்சி மையங்கள் என்ற பெயரில் வெளிப்படையாக நிலப்பறிப்பிலும் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. நிர்மா லிமிடெட் என்ற சிமெண்ட் நிறுவனத்திற்கு பாவ்நகர் மாவட்டத்தில் சுமார் 3500 ஹெக்டர் வளமிக்க விவசாய நிலத்தைப் பறித்தெடுக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் சுமார் 50,000 விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல, டாடா நானோ கார் உற்பத்தி உதிரிப் பாக உற்பத்திக்காக ஏழு கிராமங்களில் சுமார் 8000 ஏக்கர் நிலம் பறிக்கப்படவுள்ளது.

குஜராத்: கார்ப்பரேட்மயமாகும் விவசாயம்! ஓட்டாண்டிகளாகும் விவசாயிகள்!!இத்தகைய தனியார்மயதாராளமய தீவிரமாக்கலால், குஜராத் மாநிலத்தில் நகரமயமாக்கம் 43 சதவீத அளவுக்கு நடந்தேறியுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நகரமயமாக்கமும் விவசாயத்தின் அழிவும் தனியார்மயம்  தாராளமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கையினால் திட்டமிட்டே முன்தள்ளப்படுபவையாகும். ஒப்பந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகளைப் போண்டியாக்கி, பின்னர் அவர்களே நிலத்தை விற்று ஓடுமாறு நிர்பந்தித்து, இன்று எதிர்ப்பே இல்லாமல் கார்ப்பரேட் விவசாயத்தை குஜராத்தில் மோடி அரசு நிலைநாட்டியுள்ளது. மறுபுறம், மோடி அரசின் நிலப்பறிப்பையும் கொத்தடிமைத்தனத்தையும் எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடிவரும் தொழிற்சங்க முன்னணியாளர்களும் மனித உரிமை அமைப்புகளின் செயல்வீரர்களும் ‘மாவோயிஸ்டுகள்’ என்று குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனால்தான், ஒருபுறம் கார்ப்பரேட் சேவையும், மறுபுறம் தொழிற்சங்க  ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் பாசிச அடக்குமுறையும் கொண்டுள்ள இந்துவெறி பயங்கரவாத மோடி அரசை முன்னுதாரணமாகக் காட்டி, முதலாளித்துவவாதிகளும் அவர்களது ஊடகங்களும் புகழ்ந்து தள்ளுகின்றன.

பாரம்பரிய விவசாயத்தை அழிப்பது, உலகமயமாக்கலுக்கு ஏற்ப விவசாயத்தை ஏற்றுமதிக்கானதாக மாற்றுவது, ஏழை  நடுத்தர விவசாயிகளை நிலமற்ற கூலிகளாகச் சிதறடிப்பது, பன்னாட்டு ஏகபோக விவசாயக் கம்பெனிகளின்  தரகுப் பெருமுதலாளிகளின் வரம்பற்ற ஆதிக்கத்தை நிறுவுவது, இதற்காகப் பெயரளவில் இருந்துவந்த தடைகளை நீக்குவது என்பதுதான் மோடி அரசு செய்துவரும் ‘முன்னுதாரணமிக்க சாதனைகள்’. கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் இன்று குஜராத்தில் விவசாய இடுபொருட்களின் விலை விண்ணை முட்டுகிறது. இதுதவிர, பொதுவில் நிலவும் விலைவாசி உயர்வானது, உலகத் தரத்துக்கு உயர்ந்துவிட்டது. இவற்றால் விவசாயிகள் கடன் சுமையால் போண்டியாகி, விவசாயத்தை விட்டே விரட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது, இதை ‘விவசாயத்தின் வளர்ச்சி’ எனக்குறிப்பிட்டு முதலாளித்துவவாதிகளும் அவர்களின் ஊடகங்களும் காதில் பூச்சுற்றுகின்றனர். இந்த ‘விவசாய வளர்ச்சி’, விவசாயிகளின் வாழ்வில் எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவரவில்லை. மாறாக, அவர்கள் தமது துண்டு நிலத்தையும் இழந்து நாடோடிகளாகவும் நிலமற்ற கூலிகளாகவும் மாறியதுதான் நடந்துள்ளது. குஜராத்திலிருந்து பிழைப்பு தேடி சென்னையில் கொத்தடிமைகளாக உழலும் குஜராத் உழைக்கும் மக்களின் அவலமே மோடி அரசின் யோக்கியதையை நிரூபித்துக் காட்டுகிறது.

__________________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2011

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

இலண்டன்: ‘தற்குறிகளின்’ கலகமும் கனவான்களின் கலக்கமும்!

லண்டம் கலவரம்

லண்டம் கலவரம்

வெடிமருந்து நிரம்பிய கப்பல் தீப்பிடித்து எரிவதைப் போன்ற நிலைமையில்தான் இங்கிலாந்து உள்ளது என்பதை அங்கு நடந்த இளைஞர்களின் கலகம் எடுத்துக் காட்டியிருக்கிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 6 அன்று இலண்டனின் புறநகர்ப் பகுதியான டாட்டன்ஹாம் என்ற இடத்தில் தொடங்கிய இக்கலகம், காட்டுத் தீ போல அந்நகரில் அடித்தட்டு மக்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு பகுதிகளுக்கும், மேட்டுக்குடி கனதனவான்கள் வசிக்கும் மேற்குப் பகுதிகளுக்கும்; பிர்மிங்ஹாம், மான்செஸ்டர், லிவர்பூல், பிரிஸ்டால் எனப் பிற நகரங்களுக்கும் பரவியது.

இக்கலகம் நடந்த பகுதிகளில் எல்லாம் கலகக்கார இளைஞர்கள் போலீசாருடன் நேரடியான மோதலில் ஈடுபட்டனர். இக்கலகத்தின்பொழுது பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆடம்பர நுகர்பொருட்களை விற்பனை செய்யும் சங்கிலித் தொடர் விற்பனை நிலையங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. ஆசியர்களுக்குச் சொந்தமான சில சில்லறை விற்பனைக் கடைகளும் இளைஞர்களின் தாக்குதலுக்கு ஆளாயின. சங்கிலித் தொடர் விற்பனை நிலையங்களுக்குள் புகுந்த இளைஞர்கள் பகட்டு வாழ்க்கையின் சின்னங்களாக அறியப்படும் நைக் ஷூ, கூச்சி ஜீன்ஸ் (Gucci jeans) போன்ற “பிராண்டட்” (Branded) நுகர்பொருட்களைத் ‘திருடி’ச் சென்றனர்; தெருவோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் இவர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

ஏறத்தாழ ஒரு வார காலம் நடந்த இக்கலகத்தை கிரிமினல் கும்பலின் நடவடிக்கை எனச் சாடியது, இங்கிலாந்து அரசு. கலகத்தின் சமூகப் பின்னணியை ஆராயாமல், அதனை ஒடுக்க ரப்பர் குண்டுகளையும், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் பீரங்கிகளையும் இறக்கி விடுங்கள் என ஓலமிட்டது, இங்கிலாந்து பணக்கார வர்க்கத்தின் பிரதிநிதிகளான வலதுசாரி கும்பல். மற்ற நகரங்களைவிட, சர்வதேச வர்த்தக கேந்திரமான இலண்டனில் கலகம் தீவிரமாக நடந்ததால், அதனை ஒடுக்குவதற்கு 16,000 போலீசார் இறக்கிவிடப்பட்டனர். அந்நகரில் மட்டும் கலகத்தில் இறங்கிய குற்றத்திற்காக 1,200  க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். குப்பைத் தொட்டியைத் திருடிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட 11 வயது சிறுவனும் இவர்களுள் ஒருவன். இங்கிலாந்து நீதித்துறையும் போலீசுக்கு இணையாகப் பணக்கார வர்க்கத்தின் கையாளாகச் செயல்பட்டது. நூறு ரூபாய்கூடப் பெறாத “மினரல் வாட்டர்” பெட்டியொன்றைத் திருடிய குற்றத்திற்காக, 23 வயதான நிக்கோலஸ் ராபின்சனுக்கு ஆறு மாத சிறை தண்டனையை விதிக்குமளவு நீதித்துறை பயங்கரவாதம் தாண்டவமாடியது.

கடந்த ஆகஸ்ட் 4 அன்று இரவில் இலண்டன் நகரின் டாட்டன்ஹாம் பகுதியைச் சேர்ந்த மார்க் டக்கன் என்ற 29 வயதான கருப்பின இளைஞர், இலண்டன் மாநகரப் போலீசாரால் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். மார்க் டக்கன் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி, டக்கனின் உறவினர்கள் போலீசு நிலையம் முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டம் ஏறத்தாழ நான்கு மணி நேரம் நடந்ததெனினும், ஒரு கீழ்நிலை போலீசுக்காரன்கூட டக்கனின் உறவினர்களைச் சந்தித்து விளக்கம் அளிக்க முன்வரவில்லை. போலீசு நடத்திய இப்படுகொலையும், டக்கனின் உறவினர்களை அலட்சியப்படுத்திய போலீசாரின் திமிரும்தான் இக்கலகத்தைத் தொடங்கி வைத்த சிறுபொறியாக அமைந்தன.

டக்கனின் உறவினர்களை போலீசார் அலட்சியப்படுத்தாமல் இருந்திருந்தால் இக்கலகம் நடந்திருக்காது என சில அதிபுத்திசாலிகள் கூறிவருகின்றனர். இந்த விளக்கத்தை “ஒருவேளை” என்ற நிபந்தனையோடு மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும். எனினும், அமைதியான முறையில் கோரிக்கை வைத்தவர்களிடம் போலீசார் விளக்கம் அளிக்க ஏன் முன்வரவில்லை என்ற கேள்வியை எழுப்பினால், இக்கலகத்தின் பின்னணியைப் புரிந்து கொள்ள முடியும்.

நகர்ப்புறக் குற்றங்களைத் தடுப்பதற்காக இங்கிலாந்து போலீசாருக்கு, யாரையும் தடுத்து நிறுத்திச் சோதனையிடும் (Stop and search) அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இலண்டன் மாநகர போலீசார் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்திப் புறநகர்ப் பகுதிகளில் வசித்து வரும் கருப்பின இளைஞர்களுக்கு எதிராக நடத்திவரும் அத்துமீறல்கள் ஏராளம். நகர்ப்புறச் சேரிகளில் வசித்து வரும் இளைஞர்கள், கும்பல் கும்பலாகச் சேர்ந்துகொண்டு அடிதடிகளில் இறங்குவதையும், சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும் காட்டித் தனது அத்துமீறல்களை நியாயப்படுத்தி வருகிறது, இங்கிலாந்து போலீசு.

1970-களில் இறுதியில் இங்கிலாந்தின் பிரதமராகப் பதவிக்கு வந்த மார்க்கரெட் தாட்சர், தனியார்மய  தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்துத் தீவிரமாக அமல்படுத்தத் தொடங்கினார். இதன் காரணமாக பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்ததோடு, வேறு வேலை தேடவும் வழியற்றவர்களாக, முதலாளித்துவ சமூகத்திற்குத் தேவையற்றவர்களாக ஒதுக்கித் தள்ளப்பட்டனர். அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியோ, அரசனை விஞ்சிய விசுவாசியாக, இத்தாராளமயக் கொள்கைகளை முன்னைக் காட்டிலும் தீவிரமாக அமல்படுத்தியது. ஒருபுறம் வேலையிழப்பு, வேலையில்லாத் திண்டாட்டம்; மறுபுறம், சமூக நலத் திட்டங்களுக்கு வெட்டு என்ற இரட்டை நுகத்தடி அடித்தட்டு மக்களின் மீது சுமத்தப்பட்டது.

குறிப்பாக, பள்ளிப் படிப்பு முடிந்த பின், இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டிய மேநிலைப் பள்ளிப் படிப்புக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் நிறுத்தப்பட்டது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிப்பதற்காக ஒதுக்கப்பட்டு வந்த மானியமும் வெட்டப்பட்டது. இதனின் தொடர்ச்சியாக, ஓரிரு மாதங்களுக்கு முன்பு கல்லூரி படிப்புக்கான கட்டணம் மூன்று மடங்காக உயர்த்தப்பட்டது. அரசு செலவுகளைக் குறைப்பது என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இம்மானிய வெட்டுகள், அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களைத் தற்குறிகளாக, வேலை வாய்ப்பற்ற விட்டேத்திகளாக மாற்றியது.

இங்கிலாந்தில் 1984-க்கும் 2007-க்கும் இடைப்பட்ட 13 ஆண்டுகளில், 16 முதல் 24 வயது வரையுள்ள இளைஞர்களுக்குக் கிடைத்துவந்த வேலைவாய்ப்புகளில் 40 சதவீத வேலைகள் ஒழித்துக் கட்டப்பட்டன. அந்நாட்டில் தற்பொழுது 18 சதவீத இளைஞர்கள் பள்ளிக்கோ, வேலைக்கோ செல்ல வழியற்றவர்களாக ஆக்கப்பட்டு, சமூகத்தின் கடைகோடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, நகர்ப்புறத்தில் வசிக்கும் அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 வயது சிறுவன்கூட ஏதாவதொரு கும்பலில் சேர்ந்து ஊரைச் சுற்றுவது சர்வசாதாரணமாகிவிட்டது. அந்நாட்டில் கும்பல் நடவடிக்கைகள் (gand activity) வேரூன்றியதன் பின்னணி இதுதான்.

போலீசின் அத்துமீறல்களுக்கு எதிராகவும், தம்மை வஞ்சித்துவிட்ட சமூகத்திற்கு எதிராகவும் நகர்ப்புற ஏழை இளைஞர்கள் மத்தியில் கனன்று கொண்டிருந்த கோபம்தான், டக்கனின் கொலையையடுத்துக் கலகமாக மாறியது. இக்கலகத்தில் கருப்பின இளைஞர்கள் மட்டுமின்றி, நடுத்தர வெள்ளையின இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள், பள்ளி  கல்லூரி மாணவர்கள் மற்றும் குறைவான சம்பளத்திற்கு வேலை பார்த்துவரும் ஊழியர்கள் எனப் பலத் தரப்பட்டவரும் கலந்து கொண்டதால், இதனை இன மோதலாகச் சித்திரிக்க முடியாமல் போனது. எனினும், சங்கிலித் தொடர் கடைகள் சூறையாடப்பட்டதை மட்டும் பெரிதுபடுத்தி, இக்கலகத்தைச் சமூக விரோத கிரிமினல் நடவடிக்கையாக முத்திரை குத்தியது, இங்கிலாந்தின் ஆளும் கும்பல்.

பொதுமக்களின் சாலை மறியல் போராட்டங்களைக்கூடத் தனக்கு ஏற்படும் இடையூறாகக் கருதும் குறுகிய புத்திகொண்ட நடுத்தர வர்க்கத்திற்கு, கடைகளைச் சூறையாடுவது அரசியல் நடவடிக்கையாக, ஏழைகளின் வர்க்க கோபமாகத் தெரியப் போவதில்லை. இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே பிரிட்டிஷ் வானொலிக்கு பேட்டியளித்த இரண்டு கலகக்கார்கள், “நாங்கள் எதை விரும்புகிறோமோ, அதை எங்களால் செய்ய முடியும் எனப் பணக்காரக் கும்பலுக்குக் காட்டுவதுதான் இந்தக் கலகம்” எனத் தெளிவுபடுத்தினார்கள். “இக்கலகம் சமூக எதிர்வினை என்றால், குக்கி ஜீன்ஸ் பேண்ட் எங்களுக்கும் தேவை என்பதற்கான சமூக எதிர்வினைதான் இது’’எனப் புரிய வைத்தார், கருப்பின இளைஞர் ஒருவர்.

‘‘கலகம் நடந்த இடங்களிலெல்லாம் போலீசாரோடு மோதுவதுதான் இளைஞர்களின் முதல் நோக்கமாக இருந்தது. கடைகளில் புகுந்து சூறையாடுவதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம்பட்சமானதுதான். இக்கலகத்தின்பொழுது நடந்த மோதல்  எதிர்மோதல் என்ற அடிப்படையில்தான் தனிநபர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும், பிர்மிங்ஹாமில் மூன்று முசுலீம் இளைஞர்கள் கொல்லப்பட்டதையும் பார்க்க முடியுமே தவிர, இச்சம்பவங்களைத் தனியாகப் பிரித்தெடுத்து கிரிமினல் நடவடிக்கையாகச் சித்தரிப்பது ஆளும் கும்பலின் வர்க்க வெறுப்புணர்வைத்தான் காட்டுகிறது” என மைக் மார்குஸீ என்ற பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார்.

1970-களில் தாராளமயக் கொள்கைகளைப் புகுத்தி, பேராசையே சிறந்தது எனப் பிரச்சாரம் செய்து, நுகர்வுவெறிக் கலாச்சாரத்தில் சமூகத்தையே மூழ்கடித்த பிரிட்டிஷ் ஆளும் கும்பல், இக்கலகத்தைக் காட்டி இளைஞர்கள் மத்தியில் ஒழுக்கக் கேடு மலிந்துவிட்டதாகக் குற்றஞ் சுமத்துகிறது. வீட்டு மனைக் கடன் சூதாட்டத்தின் மூலம் பொதுமக்களின் சேமிப்புகளையெல்லாம் சுருட்டிக் கொண்ட பிரிட்டிஷ் வங்கிகளுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் பெறுமான அரசு மானியங்களையும் வாரிக் கொடுத்த பிரிட்டிஷ் அரசு, ஜீன்ஸ் பேண்டையும், சாக்லெட்டையும் எடுத்துச் சென்ற இளைஞர்கள் மீது திருட்டுப் பட்டம் கட்டுகிறது. சாத்தான் வேதம் ஓதுகிறதோ?

__________________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2011

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

சாதி, சமயம் குறிப்பிடாமல் பள்ளிகளில் சேர்க்க முடியும்!

22

எமது தோழர்கள் அவர்களது குழந்தைகளை பள்ளியில் சாதி, மதமற்றோர் என்று சேர்க்கும் போது அநேக பள்ளி நிர்வாகங்கள் – அரசு பள்ளிகளையும் உள்ளிட்டு – மறுத்து விடுவது வழக்கம். பின்னர் தோழர்கள் அப்படிச் சேர்க்க முடியுமென்ற அரசாணையை நகலெடுத்து நிர்வாகத்தினருக்கு எடுத்துச் சொல்லி சேர்ப்பது வழக்கம். இது போக தோழர்கள் கைதாகி காவல் நிலையத்திற்கோ, சிறைக்கோ செல்லும் போதும் சாதி குறிப்பிடச் சொல்லி அதிகாரிகள் மிரட்டுவது வழக்கம். அங்கேயும் ஒவ்வொரு முறையும் போராட்டத்தின் மூலமே சாதி அடையாளங்களை மறுத்து தமது விவரங்களை தோழர்கள் பதிவிடுகிறார்கள்.

பள்ளிகளில் சேரும் போது மட்டுமல்ல, பள்ளிச் சான்றிதழ், இடமாற்ற சான்றிதழ் ஆகியவற்றிலும் சாதி, மதம் இல்லை என்றோ, வெற்றிடமாக விட்டோ தர இயலும். இதற்க்காக அரசு வெளியிட்டுள்ள ஆணையை இங்கு படமாகவும்,  பிடிஎஃப் கோப்பாகவும் இணைத்திருக்கிறோம். தோழர்கள், நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

உள்ளாட்சித் தேர்தல்கள்: உள்ளூரைக் கொள்ளையடிக்க ஒரு ஏற்பாடு!

உள்ளூராட்சி முறையும் தேர்தல்களும், அவற்றுக்குத் தாழ்த்தப்பட்டபழங்குடி மக்கள் மற்றும் மகளிருக்கான இடஒதுக்கீடுகளும் ஜனநாயகத்தைப் பரவலாக்குவதாகவும் ஆழமாக்குவதாகவும், ஒரு பம்மாத்து தொடர்ந்து நடந்து வருகிறது.

உள்ளூராட்சித் தலைவர் முதல் வட்டப் பிரதிநிதிகள் வரை எங்கெல்லாம் மகளிருக்கான இட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவோ, அங்கெல்லாம் அவர்கள் வெறும் பொம்மைகளாக்கப்பட்டு அவர்களுடைய கணவன்மார்கள் தாம் பதிலிகளாகச் செயல்பட்டு வருகிறார்கள். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி அமைப்புகளில் வேறுமாதிரி நடக்கிறது.

ஆதிக்க சாதியினர் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் தங்களுடைய கைப்பொம்மைகளாகவும் தமது ஆதிக்கத்துக்குக் கீழ்படிபவர்களை மட்டும் தேர்தல்களில் நிறுத்தி ‘வெற்றி’ பெறுமாறும் பார்த்துக் கொள்கிறார்கள்; அவர்களிலும் உள்ளூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள்ளேயே மிகச் சிறுபான்மை, அங்குள்ள ஓரிரு குடும்பங்களைச் சேர்ந்தவர்களைத் தாமே தேர்தல்களில் நிறுத்தி ‘வெற்றி’ பெறுமாறு செய்கின்றனர்.

இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தமது இருக்கைகளில் அமர்ந்து பணியாற்றக்கூட அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு ஓரத்தில் கைகட்டி நின்று, ஆதிக்க சாதியினரும், அதிகார வர்க்கத்தினரும் நீட்டிய இடங்களில் கையொப்பம் அல்லது கை நாட்டுப் போடுவதுதான் அவர்களுக்குள்ள “அதிகாரமாக” இருக்கிறது. இந்த “விதி”யை மீறுபவர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகிறார்கள். கொலை கூடச் செய்யப்படுகிறார்கள். தங்கள் கிராமங்களை இடஒதுக்கீடு செய்வது கூடாதென்று ஆரம்ப நிலையிலேயே ஆதிக்க சாதியினர் நடத்திய அட்டூழியங்கள் பாப்பாபட்டி, கீரிப்பட்டி போன்ற சில கிராமங்களில் பகிரங்கமாகவே நடந்திருக்கின்றன.

இவ்வளவு சிரமங்கள் கூடாதென்று உசிலை, திருமங்கலம் மட்டுமல்ல; பரவலாக பல கிராமங்களில் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட உள்ளூராட்சித் தலைவர் பதவிகளை ஆதிக்க சாதியினர் ஏலத்தில் விடுகின்றனர். அவர்களில் வசதி படைத்தவர்களே தலைவர் பதவிகளை ஏலத்தில் எடுத்து, தங்களது கைப்பாவைகளையோ, அடியாட்களையோ கிராமக்  கட்டுப்பாட்டின்படி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கும்படி செய்துவிட்டுத் தாம் துணைத் தலைவர் பதவிக்கு வந்து விடுகிறார்கள். தலைவர் பதவியை ஏலத்தில் எடுத்தவர்களைத்தான் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது கிராமக் கட்டுப்பாடு. பிறகு தாமே தலைவருக்குரிய அதிகாரங்களைப் பறித்துக் கொண்டு செயல்படுகிறார்கள். ஒரு தலைவர் பதவியை ஏலத்தில் எடுத்தால் (இப்போதைய சந்தை நிலவரப்படி அது 5 இலட்சம் ரூபாய்) ஒரு துணைத் தலைவர் பதவி இலவசம். இப்படி ஏலம் போகிறது உள்ளூராட்சி ஜனநாயகம்.

உள்ளூராட்சிப் பதவிகளை ஏலத்தில் விடுவது உள்ளூர் அளவுக்கு சாதிய அமைப்புகளால் நடத்தப்படுவது மட்டுமல்ல; மிகப் பெருமளவுக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகளால்  விலைக்கு விற்கப்படுவதும் நடக்கிறது. இது முக்கியமாக ஆளும் ஜெயலலிதா கும்பலாலும் எதிர்க்கட்சியான விஜயகாந்த் கட்சியாலும் பெரும்பாலும் நடத்தப்படுகிறது. முதல் சுற்று வசூலாக, தேர்தல்களில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விண்ணப்பங்களே ஏராளமாக விற்கப்பட்டு, பல கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

அடுத்து, சீட்டு வாங்கிக் கொடுப்பதாக கட்சி நிர்வாகிகள் ஒரு வசூல்வேட்டை நடத்துகிறார்கள். அப்புறம், சீட்டுக் கொடுப்பதற்கு முன்பு, தொகுதியில் இல்லாவிட்டால் கூட கூடுதலான தொகை கொடுப்பவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள். இப்படி, வசூல் நடத்தி ஏமாற்றி விட்டதாக அந்தந்த நிர்வாகிகளுக்கும் தலைமைக்கும் எதிராக சம்பந்தப்பட்ட கட்சிக்காரர்களே புகார் கொடுப்பதும், முற்றுகைப் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் இருப்பதும், ஒருபடி மேலே போய் உட்கட்சி விவகாரத்துக்காக சாலை மறியலில் ஈடுபடுவதும் கூட நடக்கிறது.

தேர்தல்களில் போட்டியிடுவதற்கான தகுதிகளாகத் தலைமைக்கு விசுவாசத்தைக்கூடப் பார்ப்பதில்லை. சாதிபலம்,  பணபலம் மட்டுமல்ல; அடியாள்குண்டர் பலம், இதற்கு ஆதாரமாக கிரிமினல் குற்ற நடவடிக்கைகள்  வழக்குகளும் பார்க்கப்படுகின்றன. ஆளும் கட்சிகள், முக்கிய எதிர்க்கட்சிகளில் மட்டுமல்ல; விடுதலைச் சிறுத்தைகள் முதலான சிறு கட்சிகளிலும்கூட இதுதான் நிலைமை; பலகோடி ரூபாய்க்கு நிலமோசடி செய்த வேலாயுதம் என்பவர் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு அக்கட்சியால் நிறுத்தப்பட்டதும், செல்வப்பெருந்தகை என்பவர் தான் கட்சிமாறிப் போகும் எல்லா தலித் அமைப்புகளிலும் தலைவராக்கப்படுவதுமே இதற்குச் சான்றாகும்.

தேர்தல் ஜனநாயகம் இந்த அளவுக்கு நாறிப் போயிருக்கையில், சிறிய கட்சிகளுடன் ஜனநாயக முறையில் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்ததையும், தனித்துப் போட்டியிடப் போவதாக  கருணாநிதி அறிவித்ததையும் தொடர்ந்து, கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக விஜயகாந்த்தும், போலி கம்யூனிஸ்டுகளும் திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் ஒப்பாரி வைக்கிறார்கள். காங்கிரசு மீதான கோபத்தால் கூட்டணியைக் கலைத்து விட்டார் என்று கருணாநிதியைக் குறைகூறும் திருமாவளவன், தேசிய இனப் பிரச்சினை அடிப்படையில் கூட்டணி அமைப்போமென்று கடைவிரிக்கிறார்; ஆனால், அதைக் கைக்கொள்வார் எவரும் இல்லை. சாதியைத் தாண்டி அரசியல் நடத்தத் துணியாத இராமதாசு, அதிலும் சாதியரீதியில் முக்கியமான உள்ளூராட்சித் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து, திருமாவளவனின் அழைப்பை நிராகரித்து விட்டார்.

ஜெயலலிதா கட்சியுடன் கூட்டணி, பங்கீடு என்று கனவு கண்டிருந்த விஜயகாந்த் மற்றும் போலி கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட உதிரிக் கட்சிகளை ஜெயலலிதா தனக்கே உரிய பாணியில் அவமானப்படுத்தி விரட்டியடித்தார். விஜயகாந்தையும் அவரது அரசியல் சகுனி பண்ருட்டி ராமச்சந்திரனையும் போயசு தோட்டத்துக்குள்ளேயே நுழைய விடவில்லை. ஒருபுறம் வேட்பாளர் பட்டியலை அறிவித்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, மறுபுறம் தனது எடுபிடிகளிடம் தொகுதி கேட்டு மன்றாடி மனுக் கொடுப்பதற்கு மட்டுமே போலி கம்யூனிஸ்டு கட்சிகளை அனுமதித்தார்.

சட்டப் பேரவை தேர்தல்களுக்கான சந்திப்பின்போது நட்சத்திர விருந்து போட்ட ஜெயலலிதா கட்சி, இந்த முறை போலி கம்யூனிஸ்டுகள் வெட்கத்தை விட்டுக் கேட்டும் குடிக்கத் தண்ணீர்கூடக் கொடுக்கவில்லை என்று புலம்பு கிறார்கள். சோரம் போய்விட்டு, அதற்குரிய ஊதியத்தையும் பெற்றுக் கொண்டு விட்டு, பின்னர் தாம் பாலியல் வன்முறைக்குப் பலியாக்கப்பட்டதாகக் கூப்பாடு வேறு போடுகிறார்கள் இந்த அரசியல் விபச்சாரிகள். போயசு மாளிகையில் அரசியல் போதையில் கிடக்கும் “அம்மா” இவை பற்றி எதுவும் கூறாதபோது, அவரது துதிபாடிகளான பத்திரிக்கைகள், தமது ஊகங்கள், வதந்திகள், கிசுகிசுக்களை எழுதி வியாபாரம் பார்க்கின்றன.

ஜெயலலிதாவோ வழக்கம்போல ஏறிய ஏணியை எட்டி உதைக்கிறார். எட்டி உதைத்தாலும் அந்தக் கால்களைப் பிடித்துக் கெஞ்சுவதை இந்த முறை தவறாமல் செய்தவர்கள், போலி கம்யூனிஸ்டுகள். கூட்டணி இல்லாவிட்டாலும் ஜெயலலிதாவுக்குச் சேவை செய்வதற்கு சௌந்தரராஜன், ரங்கராஜன் மற்றும் தா.பாண்டியன் மகேந்திரன் ஆகிய இரண்டு போலி கம்யூனிஸ்டு கட்சிகளின் “ரத்தத்தின் ரத்தங்கள்” தயாராய் உள்ளனர் என்பதை இந்த முறையும் காட்டிவிட்டனர்.

கட்சி அணிகளே இல்லாமல், சினிமா கவர்ச்சி, அரசியலற்ற கூட்டத்தின் ஆதரவோடு கட்சிப் பதவிகள் முதல் வேட்பாளர்கள் சீட்டு  உள்ளிட்டு எல்லாவற்றையும் விற்பனை செய்து ஆதாயம் அடையும் விஜயகாந்த் மற்றும் பிழைப்புவாத தொழிற்சங்கவாதத்தில் மூழ்கிப் போன அணிகளை வைத்து அரசியல் நடத்தும் போலி கம்யூனிஸ்டுகளின் பார்வையில் உள்ளூராட்சித் தேர்தல்கள் வேறு; ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் பார்வையில் வேறு.

நாடாளுமன்ற, சட்டப் பேரவை மற்றும் அமைச்சர் பதவிகளை ஜெயலலிதா, கருணாநிதி வகையறாக்களுக்குப் பாடுபட்டுப் பெற்றுத்தருகிறார்கள், அணிகள். அவர்கள் அரசு பதவிகளையும் ஆதாயங்களையும் கீழ்மட்ட நிலைகளில் பெற்றுத் தருவதற்கான வாய்ப்புகளை வழங்குபவை உள்ளூராட்சித் தேர்தல்கள்தாம். இதன்மூலம் பெறும் பல ஆயிரக்கணக்கான பதவிகளை எலும்புத் துண்டுகளாகப் போட்டுத்தான் தமது அணிகளின் விசுவாசத்தை இவர்கள் தக்கவைத்துக் கொள்ள முடிகிறது.

ஜெயலலிதா, கருணாநிதியின் அரசியல் சவடால்களுக்கும் பேரணிகளுக்கும் கூட்டம் சேர்ப்பது முதல் சாவடிகளுக்கு வாக்காளர்களைக் கொண்டு வந்து சேர்ப்பது வரை அடிமட்டப் பணிகளை செய்து தருபவர்கள் “உடன்பிறப்புகளும்”, “ரத்தத்தின் ரத்தங்களும்”தாம். அதற்கு நன்றிக் கடனாக வீசப்படுபவை தாம் உள்ளூராட்சிப் பதவிகள். ஆனால் அணிகளோ, தாம் சட்டப்பேரவை, நாடாளுமன்ற மற்றும் அமைச்சர் பதவிக்குப்  போவதற்கான படிக்கட்டாகவே உள்ளூராட்சிப் பதவிகளைக் காண்கிறார்கள். அதற்காக அம்மாவின் காலில் விழுந்து கும்பிடுவதற்கும், சொறிந்து விடுவதற்கும் காத்துக் கிடக்கிறார்கள். இவ்வாறுதான் ஜனநாயகம் பரவலாக்கப்படுகிறது! ஆழமாக்கப்படுகிறது!

______________________________________________________

–  புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2011

_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

ரவுடியிசத்தால் படுகொலையான தோழர் செந்திலுக்கு வீரவணக்கம்!

ரவுடியிசத்தால் படுகொலையான தோழர் செந்திலுக்கு வீரவணக்கம்!
தோழர் செந்தில்

மதுரை மாவட்டம், யா.ஒத்தக்கடையைச் சேர்ந்த சில்வர் பாத்திர வியாபாரியும், 27 வயது மட்டுமே நிரம்பிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இளம் தோழர் செந்தில் கடந்த அக்_26 அன்று ரவுடியாக வளர்ந்து வர விரும்பும் இளம் கிரிமினல் கும்பலால் (வயது 17,18,19,) கொல்லப்பட்டார் .

அக்டோபர்_26, அன்று கார்த்திக், நாகேந்திரன் என்ற இளம் கிரிமினல்கள் இருவரும் மது அருந்திவிட்டு தோழர் செந்தில் வசித்து வரும் குறுகலான தெருவில் இரு சக்கர வாகனத்தில் அதிவிரைவாக போவது, சாகசம் செய்வது என பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தார்கள். உடனே தோழரும், வேறு சிலரும் கண்டித்தும், எச்சரித்தும் அனுப்பி உள்ளனர். தோழரின் எச்சரிக்கையை தங்களுக்கு விடப்பட்ட சவாலாக கருதிய அந்த‌ கும்பல். அன்று இரவே தங்கள் கூட்டாளிகளையும் சேர்த்துக் கொண்டு தோழரை கொல்ல வந்துள்ளனர். அன்று இரவு 10.30 மணியளவில் சாப்பிட்டு விட்டு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த தோழரை கிரிமினல் கும்பல் வயிற்றில் கத்தியால் குத்தி சாய்த்து ஒடிவிட்டனர்

குத்துப்பட்டு உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த தோழரை மதுரை அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் முன் உயிர் அடங்கி விட்டது. பின்பு உடலைப் பிரேதப் பரிச்சோதனை முடித்து அக்டோபர் 27ம் தேதி அன்று மதியம் பெறப்பட்டு, யா.ஒத்தக்கடையில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இறுதி நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்களும், சில்வர் பட்டறைத் தொழிலாளர்களும் கலந்துக்கொண்டு சுடுகாடு வரை ஊர்வலமாக விண்ணதிர முழக்கமிட்டனர்.

தோழரைக் கொன்ற குற்றவாளிகளில் இருவரை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை.  மற்றவர்களை சாட்சியங்கள் இல்லை என பூசி மெழுகி வருகிறது. மறுநாள் பிற குற்றவாளிகளையும் கைது செய்யக் கோரி மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராடினார்கள். இந்த படுகொலையினால் மக்கள் மிகுந்த ஆத்திரத்துடன் இருக்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யா.ஒத்தக்கடையில் அமைந்துள்ள யானை மலையை சிற்ப நகரம் உருவாக்கப் போகிறோம் என்று கடந்த தி.மு.க ஆட்சியில் ஒரு திட்டம் போடப்பட்டது.  இத்திட்டத்தை எதிர்த்து “யானை மலை பல்லாயிரம் கோடி மதிப்புடைய கிரானைட் கற்களால் ஆனது”,   “அதை கொள்ளையடிப்பதற்கான சதி தான் சிற்ப நகரம்” என்றும் , ” இத்திட்டம் எவ்வாறு மக்கள் விரோதமானது” என்றும் அம்பலப்படுத்தி பு.ஜ.தொ.மு மக்களிடையே இயக்கம் எடுத்தது. அந்த இயக்கத்தில் பு.ஜ.தொ.முவின் சரியான அரசியல் நிலைப்பாடும், செயல்பாடு கண்டு ஈர்க்கப்பட்டு அமைப்போடு அறிமுகமாகி நெருக்கமானார் தோழர் செந்தில்.

அமைப்பில் இணைந்த பின் அவர் பங்களிப்பு இல்லாமல் எந்த ஒரு அமைப்பு, அரசியல் வேலையும், அது புதிய ஜனநாயகம் பத்திரிகையை மக்களிடம் அறிமுகபடுத்துவதிலாகட்டும், நிதி வசூலாகட்டும், சுவரொட்டிகள் ஒட்டுவதிலாகட்டும், அனைத்திலும் அவர் இல்லாமல் நடந்ததில்லை என்கிற அளவிற்கு தோழர் உற்சாகத்தோடும், முனைப்போடும், முன்னணியாகவும் செயல்ப்பட்டார்.

சம‌ச்சீர் கல்வியை அமுல்படுத்தக் கோரி நடந்த போராட்டங்களில் தனி ஆளாக நின்று மக்களிடையே பிரசுரம் வினியோகிப்பது, அரசு பள்ளிகளின் ஆசிரியர்களிடம் இந்த போராட்டங்களில் கலந்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கியும் பேசி அப்போராட்டங்களுக்கு ஆதரவை திரட்டினார். அரசு பள்ளி மாணவர்களை திரட்டி போராட முயற்சி எடுத்தார்.

ஒரு முறை வியாபார விசயமாக வெளியூர் சென்று திரும்பும் போது, சாலையில் விபத்தில் சிக்கி அடிப்பட்டு கிடந்தவரை பார்த்தவுடன், தான் வந்த பேருந்தை நிறுத்தி இறங்கி கொண்டு ஆம்புலன்ஸை வரச் செய்து விபத்துக்குள்ளானவரை மருத்துவமனைக்கு ஏற்றி அனுப்பி பின் தான் வீடு வந்து சேர்ந்தார். முகம் தெரியாத நபர்களை கூட நேசிக்கும் பண்பாளர்.

ஒரு விசயம் தவறு என்று கருதினால் அதற்கு எதிராக விடாப்பிடியாக போராடக் கூடியவர், அதில் நண்பர்கள் என்றாலும் சமரசம் செய்துக் கொள்ளாத நேர்மையாளர். ஒரு முறை தனியார் பள்ளியின் வேனை தோழரின் நண்பர் ஒருவர் மது அருந்திவிட்டு மாணவர்களை வீட்டிற்கு விட டிரிப் அடிக்க போனார், அதை கண்டித்து, “மது அடித்து விட்டு டிரிப் அடிக்க கூடாது பல குழந்தைகள் உன்னை நம்பி வருகிறது” என்று வேனை எடுக்கவிடவில்லை. பள்ளி நிர்வாகத்திடமும் போராடி வேனை எடுக்கவிடவில்லை, பின்பு வேறு ஒரு ஒட்டுநரை வைத்து வேன் எடுக்கப்பட்டது.தோழரின் நடவடிக்கையை பார்த்த பொதுமக்களில் பலரும் பாராட்டினர்.

அதே போல மற்றொரு நண்பர் ஒரு பெண்னை காதலித்து ஏமாற்றி விட்டார். இதை பொறுத்துக்கொள்ள முடியமால் அந்த நபருக்கு எதிராக காவல்துறை வரை சென்று போராடினார்.

தோழர் அமைப்பில் இணைந்த பிறகு சாதி சங்கத்தினர் ஒரு நிகழ்ச்சியில் தனது புகைப்படத்தை பேனரில் போட்டதற்கு எதிராக சாதி சங்கத்தினரை அம்பலப்படுத்தி, சண்டையிட்டு தனது புகைப்படத்தை பேப்பர் வைத்து அவர்களை வைத்தே ஒட்டி மறைக்க‌ வைத்தார்.

யார் எப்போது உதவி கேட்டாலும் செய்வது, அவசர தேவைக்கு இரத்ததானம் செய்வது, இரத்த கொடையாளர்களை ஏற்பாடு செய்து தருவது என மனிதாபிமான இதயத்தொடும்  இருந்தார்.

தனது வியாபாரத்தில் எப்போதும் நேர்மையையும், மக்களின் மீது அக்கறையும் கொண்டிருந்தார். டிமாண்ட் அதிகம் உள்ள சரக்குகளுக்கு கூட எப்பொதும் வைக்கும் லாபத்திலேயே விற்பனை செய்வார், கூடுதலாக லாபம் வைக்க மாட்டார், கேட்டால் இதனால் பாதிக்கப்படப் போவது மக்கள் தானே என்று ஈரம் சொட்ட பேசுவார்.

டீ கடைகளில் பிளாஸ்டிக் கப்பிற்கு பதில் பேப்பர் கப்பை பயன்படுத்த தொடர்ந்து வலியுறித்தி சுற்று சூழலை நேசித்தார்.

காவ‌ல்துறையினரையும், அதிகாரவ‌ர்க்க‌ங்களையும் எதிர்க்கொள்வதில்  துணிச்ச‌லும், போர்க் குணமும் கொண்ட‌வ‌ர். ஒரு முறை உய‌ர்நீதிம‌ன்ற சுவ‌ரில் அமைப்பு சுவ‌ரொட்டியை ஒட்ட சென்றபோது இங்கே சுவ‌ரொட்டி ஒட்ட‌ கூடாது என காவ‌ல்துறையின‌ர் எச்ச‌ரித்த‌ன‌ர். நீதிப‌திக‌ளை பாராட்டி சுவ‌ரொட்டி ஏன் இங்கே ஒட்ட‌ப்ப‌ட்டுள்ளது என காவ‌ல‌ரை கேள்வி கேட்டு திணறடித்தார். பின் நாங்க‌ள் மக்களுக்கு க‌ருத்துக்க‌ளை பிர‌ச்சார‌ம் செய்ய‌தான் சுவ‌ரொட்டி ஒட்டுகிறோம் ஆகையால் இங்கே தான் ஒட்டுவோம் என்று போராடி சுவ‌ரொட்டியை அங்கேயே ஒட்டி விட்டுவ‌ந்தார்.

தோழர் அமைப்பிற்க்கு வந்த இரண்டு ஆண்டுகளில் தனது பழைய   வர்க்க பண்புகளை துச்சமாக தூக்கியெறிந்து பாட்டாளிவர்க்க பண்புகளுக்கு வெகுவிரைவில் தன்னை போர்க்குணமாகவும், எளிமையாகவும் மாற்றிக் கொண்டார். தோழர் எந்த இடத்திற்கு போனாலும் அங்கே யாராவது அவருக்கு அறிமுகமானவர் இருப்பார்கள், அந்த அளவிற்கு மிகவும் சரளமாக பழகக் கூடியவர். எந்த ஒரு சூழலிலும் ஒரு விசயத்தை முடியாது என்று கைவிடமாட்டார்.

சோர்வுற்றிருக்கும் தோழர்களையும் உற்சாகப்படுத்தி அமைப்பு வேலைகளுக்கு அழைத்து செல்வார். வியாபார‌ விச‌ய‌மாக‌ செல்கிற‌ ஊர்க‌ளில் கூட‌ புர‌ட்சிக‌ர‌ அர‌சிய‌லை பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடிய‌வ‌ர். விரைவில் மிக‌ச்சிற‌ந்த‌, த‌குதிவாய்ந்த‌ தோழ‌ராக‌ வளர்வார் என்று அமைப்பின் முழு நம்பிக்கையை பெற்றிருந்தார்.

த‌ன‌து குடும்ப‌த்தையும் கூட‌ அர‌சிய‌ல்ப‌டுத்தினார், காத‌ல் ம‌னைவி க‌லைவாணியையும் அமைப்பு , அர‌சிய‌லை ஏற்க‌ச் செய்து வேலைக‌ளில் ஈடுப‌ட‌ச்  செய்தார். அமைப்பு போராட்ட‌ங்க‌ளுக்கு, கூட்ட‌ங்க‌ளுக்கு குடும்ப‌த்தோடு ப‌ங்கேற்று ம‌ற்ற தோழ‌ர்க‌ளுக்கு எல்லாம் முன் உதார‌ணமாக‌ திக‌ழ்ந்தார். தோழ‌ருக்கு 3 வயதேயான ஒரு குழந்தையும், பிறந்த‌ ஏழு நாள்க‌ளே ஆன ஒரு குழ‌ந்தையும், என‌ இர‌ண்டு ஆண் குழ‌ந்தைக‌ள் உள்ளன‌.

தோழ‌ர் கொல்ல‌ப்படுவதற்கு சற்று முன் கூட‌ அத்வானியின் ர‌த‌ யாத்திரையை அம்பலப‌டுத்தி அச்ச‌டிக்க‌ப்ப‌ட்ட‌ சுவ‌ரொட்டிகளை மறுநாள் அதிகாலை ஒட்டுவ‌த‌ற்கு தேவையான‌ ப‌சையை க‌ரைத்தும், சுரொட்டிக‌ளை த‌யாராக‌ வைத்து விட்டும் சென்றார். இறுதியில் அவ‌ர் க‌ரைத்த‌ ப‌சையிலேயே அவ‌ரின் அஞ்ச‌லி சுவ‌ரொட்டி ஒட்ட‌ப்ப‌டும் துய‌ர‌ம் தோழ‌ர்க‌ளின் நெஞ்சை பிழிந்த‌து.

” துரோகிக‌ளின் ம‌ர‌ண‌ம் இற‌கை விட‌ இலேசானது, ம‌க்க‌ளின் ந‌லன்க‌ளுக்காக வாழ்ந்த‌வ‌ர்க‌ளின் ம‌ர‌ணம் மலையை விட‌ க‌ன‌மான‌து”
என்றார் மாவோ. அதேபோல‌ ந‌ம்மை எல்லாம் யானை ம‌லையை விட‌ க‌ன‌மான‌ துய‌ர‌த்தில் ஆழ்த்தி விட்ட‌து தோழ‌ரின் ம‌ர‌ணம்.

தோழ‌ரின்  உயிரைப் ப‌றித்த‌து நான்கு இள‌ம் கிரிமின‌ல்க‌ள் என்றாலும், அவ‌ர்க‌ள் ஒரு க‌ருவி ம‌ட்டுமே. க‌ருவி த‌யாரான‌ இட‌ம் இந்த‌ செல்ல‌ரித்த‌ சமூக‌ம் தான். வாழ்க்கையைப் ப‌ற்றி எந்த‌ ம‌திப்பிடுக‌ளும் இல்லாம‌ல், எப்ப‌டி வேண்டுமானாலும் வாழ‌லாம் என்ற க‌ண்ணேட்ட‌மும், ர‌வுடியிச‌த்தை கொண்டாடுகிற சினிமாக்க‌ள், ம‌னித‌ பண்புக‌ளை இழ‌க்க‌ச் செய்யும் சாராய வியாபார‌மும் தான் க‌ருவி த‌யாராகும் க‌ளம்.

இந்த‌ கொலைக்க‌ளங்க‌ளை ஒழிக்காத‌ வ‌ரை நாம் இன்னும் இத்த‌கைய‌ இழ‌ப்புக‌ளை ச‌ந்திக்க‌ வேண்டியிருக்கும் என்ற எச்ச‌ரிக்கையோடும், இந்த‌ அழுகி நாறும் ச‌மூக‌த்தை வெட்டி வீசும் வ‌ரை தோழ‌ர் செந்திலின் புர‌ட்சிக‌ர‌ உணர்வையும், போர்க்குணத்தையும், இல‌ட்சிய‌க்க‌ன‌வுக‌ளையும், நற்ப‌ண்புக‌ளையும் நெஞ்சில் ஏந்தி போராட‌ உறுதியேற்போம்.

____________________________________________________________

– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மதுரை

____________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

லிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி!

லிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி!

லிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி!

லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போர், ஏகாதிபத்திய எண்ணெய் முதலாளிகளின் ஆதாயத்துக்காகவே நடத்தப்பட்ட போர் என்பதையும், ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசும் ஏகாதிபத்திய நாடுகளின் தலைவர்கள் எண்ணெய் முதலாளிகளின் பாக்கெட்டில் இருக்கிறார்கள் என்பதையும் போருக்கு முன்பாக நடந்துள்ள நிகழ்ச்சிகள் மெய்ப்பித்துக் காட்டுகின்றன.

உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் லிபியாவின் பங்கு 2 சதவீதமாகும். லிபிய எண்ணெயில் கந்தகத்தின் அளவு குறைவாக உள்ளதால், சுத்திகரிப்பதற்கான செலவு குறைவாக இருப்பதன் காரணமாக ஐரோப்பிய எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் லிபிய எண்ணெய் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருந்தன. லிபிய பாலைவனப் பகுதிகளில் எண்ணெய் வளம் அகழ்ந்தாராயப்பட்டு, புதிய எண்ணெய் வயல்களில் உற்பத்தி தொடங்கப்பட்டால், அடுத்த பத்தாண்டுகளில் லிபியாவின் எண்ணெய் உற்பத்தி இருமடங்கு அதிகரிக்கும் என்பதால், ஐரோப்பாவின் மிகப்பெரிய எண்ணெய் கம்பெனிகளான ஈனி, டோட்டல், பிரிட்டிஷ் பெட்ரோலியம், ரெப்சால் ஆகியன இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் துடித்தன.

அதிபர் கடாபியின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முன்புவரை, லிபியாவின் தேசிய எண்ணெய்க் கழகம், அமெரிக்க  ஐரோப்பிய ஏகபோக எண்ணெய் நிறுவனங்களை அகழ்வு  சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடுத்தி வந்த போதிலும், நாட்டுடமையாக்கப்பட்ட அந்நிறுவனம் சுயேட்சையாக எண்ணெய் வர்த்தகத்தை நடத்தி வந்தது. ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்களின் நிர்ப்பந்தம் ஒருபுறம் இருந்தாலும், முற்றாக ஐரோப்பிய சந்தையை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்று கருதிய லிபியா, எண்ணெய் அகழ்வு  சுத்திகரிப்பு, வர்த்தகம் முதலானவற்றில்,  சீனா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளையும் அனுமதித்தது. இதனால் ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்களின் நிர்ப்பந்தங்கள் லிபியாவில்  செல்லுபடியாகவில்லை.

எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பிடம்(OPEC) தமது நாட்டின் எண்ணெய் விலையை டாலரில் அல்லாமல் தினாரில் தீர்மானித்து, அதன்படி வழங்குமாறு கடாபி கோரிவந்தார். நாட்டின் செல்வத்தை டாலரில் அல்லாமல் தினாரில் சார்ந்திருக்கச் செய்ய அவர் முயற்சித்தார். அந்நிய கடனுதவியைச் சார்ந்திராமல் நிலத்தடி நீர் திட்டங்களை அவர் நிறைவேற்ற முயற்சித்தார். வளைகுடா நாடுகளின் சில வங்கிகளைத் தவிர,  மேற்கத்திய பன்னாட்டு ஏகபோக வங்கிகளை லிபியாவில் நுழைய அவர் அனுமதிக்கவில்லை. டாலரை மையமாகக் கொண்ட ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்தின் கீழ் லிபியா வராததும், எண்ணெய் வளங்களும் வர்த்தகமும் முழுமையாக ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கொள்ளைக்குத் திறந்துவிடப்படாமலிருந்ததும் ஏகபோக எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இடையூறாக இருந்தன.

இந்நிலையில், பிரிட்டனின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் வர்த்தக நிறுவனமான விடோல், லிபியாவின் எண்ணெய் வர்த்தகத்தைக் கைப்பற்றத் துடித்தது. இதற்காக பிரிட்டிஷ் அனைத்துலக வளர்ச்சித்துறை அமைச்சரான அலன் டங்கனுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இவர் அமைச்சராவதற்கு முன், விடோல் நிறுவனத்தின் ஆலோசகராகச் செயல்பட்டவராவார். இன்னொருபுறம், பிரான்ஸ் நாட்டின் எண்ணெய் வர்த்தக நிறுவனங்களும் லிபியா மீது குறிவைத்தன. எண்ணெய் நிறுவனங்களின் நோக்கம் இந்நாட்டு அரசுகளின் கொள்கையாக மாறியது. பிரிட்டனும் பிரான்சும் லிபியாவில் கடாபியின் ஆட்சியை நீக்கிவிட்டு, தமது விசுவாச ஆட்சியைக் கொண்டுவரத் தீர்மானித்தன.

பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் அலய்ன் ஜூப்பி, கடாபி எதிர்ப்புக் கலகப் படையினருக்கு ராணுவ உதவி செய்வதாகவும், அதற்கீடாக அப்படையினர் எதிர்காலத்தில் லிபியாவின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 35 சதவீதத்தைப் பிரான்சுக்குத் தர வேண்டுமெனவும் ஒரு இரகசிய ஒப்பந்தம் போட்டிருந்தார். இது ஊடகங்களில் அம்பலமாகி நாறியது. கடந்த மார்ச் மாதத்தில் பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோசி, தனது சொந்த மக்களையே கொன்றொழிக்கும் கடாபியின் சர்வாதிகார ஆட்சி சட்டபூர்வமாக நீடிக்க எவ்வித அருகதையும் இல்லை எனக் கொக்கரித்தார். பிரிட்டன் இப்படி வெளிப்படையாகக் குறிப்பிடவில்லையே தவிர, அந்நாட்டின்  உளவுப்படையினர் கடாபி எதிர்ப்பு படையினருடன் இரகசிய பேரங்கள்  பேச்சுவார்த்தைகளை  நடத்தி வந்தனர்.

ஆப்பிரிக்க கண்டத்தில் செல்வாக்கு பெற்றுவரும் சீனாவை வெளியேற்றிவிட்டால், மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்கா தனது எண்ணெய்த் தேவையில் 25 சதவீதத்தைப் பெறமுடியும் என்றும், இது வளைகுடா நாடுகளிலிருந்து பெறும் எண்ணெயைவிட அதிகமாக இருக்கும் என்றும் அமெரிக்காவின் வலதுசாரி பிற்போக்கு அமைப்பான ஹெரிடேஜ் பவுண்டேசனின் தலைவர்கள் தெரிவித்தனர். அந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் லிபியா மீது அமெரிக்கா தனது மேலாதிக்க ஆக்கிரமிப்புப் போரை நடத்தியுள்ளது என்று இப்போது மெதுவாகக் கசிந்துள்ளது.

கடந்த பிப்ரவரியிலிருந்தே கலகக்காரர்களுக்கு ஆலோசனை வழங்குவது என்ற பெயரில் ஏகாதிபத்திய நாடுகளின் உளவுப்படையினர், குறிப்பாக சி.ஐ.ஏ. லிபியாவின் கிழக்குப் பகுதியில் நுழைந்து ஆயுதங்களை எகிப்தின் வழியாகக் கடத்தி வந்து கொடுத்தனர். சொந்த நாட்டு மக்களைக் கொடூரமாகக் கொன்றொழிக்கிறார் என்று குற்றம் சாட்டி, கடாபி அரசை முடக்கும் நோக்கத்துடன் ஏகாதிபத்திய வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த லிபியாவின் சேமிப்புகள் முடக்கப்பட்டன. ஐ.நா. தீர்மானத்தைக் கொண்டு, ஜனநாயகத்தை நிலைநாட்டுவது என்ற பெயரில் நேட்டோ கூட்டணி நாடுகள் வான்வழியேயும் கடல் வழியேயும் லிபியா மீது தாக்குதலைத் தொடங்கின.

கடாபி எதிர்ப்புக் கலகப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த எண்ணெய் நிறுவனமான “அகோகோ’’வின் தலைவராக இருந்த அகமத் மஜ்பிரி, விடோல் நிறுவனம் ஏறத்தாழ 100 கோடி டாலர் அளவுக்கு கலகப் படையினருக்கு உதவியதாகவும், அதற்கீடாக அகோகோ மூலமாக கச்சா எண்ணெயையும் நாப்தாவையும் விடோலுக்குக் கொடுப்போம் என்றும் பச்சையாகவே அறிவித்தார். “எங்களுக்கு இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டிஷ் கம்பெனிகளுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், சீனா, ரஷ்யா, பிரேசிலுடன் அரசியல் ரீதியாக சில பிரச்சினைகள் உள்ளன” என்று ஏகாதிபத்தியவாதிகளின் குரலை எதிரொலிக்கிறார், இடைக்கட்ட அரசின் தலைவரும் கலகப்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள அகோகோ எண்ணெய் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான அப்தல் ஜலீல் மயோஃப்.

கலகப் படைகளின் வெற்றியைத் தொடர்ந்து,  ஸ்பெயின் நாட்டின் ரெஸ்பல் நிறுவனமும் இத்தாலியின் ஈனி நிறுவனமும் லிபியாவில் எண்ணெய் உற்பத்தியைத் தொடங்கிவிட்டன. எதிர்காலத்தில் ஈனி நிறுவனம் லிபியாவின் எண்ணெய் உற்பத்தியில் முதலிடத்தை வகிக்கும் என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார், இத்தாலிய வெளியுறவு அமைச்சரான பிரான்கோ பிராட்டினி. ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்களின் நிர்ப்பந்தத்தைத் தொடர்ந்து, ஏறத்தாழ 70 சதவீத எண்ணெய் உற்பத்தியும் வர்த்தகமும் புதிய ஒப்பந்தங்கள் மூலம் ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் எண்ணெய் நிறுவனங்களிடம் கைமாறியுள்ளன.

ஏதோ கடாபியின் சர்வாதிகாரம்தான் பிரச்சினை என்பதாகவும், லிபிய நாட்டின் மக்களைக் காக்கப் போவதாகவும், அதற்காகத்தான் இந்தப் போர் என்றும் ஏகாதிபத்தியவாதிகள் கூப்பாடு போட்டனர். ஆனால், இவற்றின் பின்னே ஒளிந்திருப்பது எண்ணெய் கொள்ளைதான் என்பதை அவர்களின் சதித் திட்டங்கள் அம்பலப்படுத்திக் காட்டிவிட்டன.

__________________________________________

புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2011

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்