Sunday, August 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 794

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2010

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1.     முதலாளித்துவம் மக்களைக் கொல்லும்! மக்களைக் காக்கும் கம்யூனிசமே வெல்லும்! – புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் சூளுரை
2.     2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!
3.    அரசை ஆட்டுவிக்கும் அதிகாரத் தரகர்கள்
4.    ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல்: இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது!
5.    நோக்கியாவின் கொலைக்கரங்கள்
6.    தோழர் சின்னசாமியின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!
7.    தோழர் வர்கீஸ் படுகொலை தீர்ப்பு: தாமதமான நீதி…
8.    பிரம்மரத மரியாதைக்குத் தடை: ஒடுங்கியது பார்ப்பனத் திமிர்! வென்றது புரட்சியாளர்களின் போராட்டம்!!
9.    தண்ணீர்க் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்! -மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆர்ப்பாட்டம்
10. அமெரிக்க பயங்கரவாதம்: புதைக்கப்பட்ட உண்மைகள்  பூதமாகக் கிளம்பின!
11.   விக்கிலீக்ஸ் தோண்டியெடுத்த ”அடுத்த பூதம்!”
12.  வெள்ள  நகரமானது, கடலூர் நகரம்!
13.  டாடா குழுமத்தின் கோர முகம் (சென்ற இதழின் தொடர்ச்சி…)
14.  இந்தியா, அமெரிக்காவின் சுமைதாங்கியானது
15.  ”ஒபாமாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு! தேசிய அவமானம்!!” -புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-ஆர்ப்பாட்டம்
16.  போஸ்கோ ஒப்பந்தம்: காங்கிரசின் கபடத்தனம்
17.  காஷ்மீர்:  காங்கிரசு – பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டு!
18.  வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்! வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

_______________________________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் – விடுதலை வீரனாகிறான் ஒரு பாளையக்காரன்!

வீரபாண்டிய கட்டபொம்மன்

நாள் : 17.10.1799
இடம் : ஆங்கிலேயர்களின் கயத்தாறு இராணுவ முகாம்
“விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தான்.

இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களைக் கடுமை நிறைந்த வெறுப்புடன் பார்த்த வண்ணம் தூக்குமேடையை நோக்கிச் சென்ற அவனுடைய நடையில் உறுதியும் துணிவும் தெரிந்தது.”

“மரத்தின் கீழே நின்ற தருணத்தில் வாய்பேச முடியாத தன்னுடைய தம்பியைப் பற்றி மட்டும் அவன் சிறிது வருத்தப்பட்டானென்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தூக்குமேடை ஏறியபோது, ‘இப்படிச் சாவதைவிட கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்று அவன் மனம் நொந்து கூறியிருக்கிறான்”.

– கட்டபொம்மன் திரைப்படத்தின் இறுதிக்காட்சியினை நினைவுபடுத்தும் இந்தச் சம்பவம் கற்பனையல்ல. கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய ஆங்கிலேயத் தளபதி மேஜர் பானர்மென் தனது இராணுவ நிர்வாகக் கடிதமொன்றில் இப்படித்தான் குறிப்பிட்டிருக்கின்றான்.

அடுத்துவந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது. தமிழகத்தில் தமது நேரடி ஆட்சியை நிறுவுவதற்குத் தடையாக இருந்த பாளையங்கள் எனும் நிர்வாக அமைப்பை ஒழிப்பதற்கு கட்டபொம்மனின் வீழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டார்கள் வெள்ளையர்கள்.

_______________________________________________

மதுரையை நாயக்க மன்னர்கள் கைப்பற்றிய 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்தமிழகத்தில் 72 பாளையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. உள்நாட்டுக் குழப்பங்களாலும், போர்களாலும் சீர்குலைந்த நாட்டுப்புறங்களில் இந்தப் பாளையங்கள் ஓரளவிற்கு அமைதியைக் கொண்டு வந்தன. பாளையக்காரர்கள் ஒரு சிற்றரசருக்குரிய உரிமைகளை அனுபவித்து வந்தனர். வரி தண்டும் உரிமை, காவல் உரிமை, நீதி வழங்கும் உரிமை முதலானவற்றை வாழையடி வாழையாகப் பெற்று வந்தனர். வசூலிக்கும் வரியில் மூன்றில் ஒரு பங்கு மன்னனுக்கும், ஒரு பங்கு படைவீரர்களைப் பராமரிப்பதற்கும், ஒரு பங்கு தனது செலவிற்கும் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தேவைப்படும் சமயங்களில் தனது படை வீரர்களை மன்னனது ஆணைக்கிணங்க அனுப்பவேண்டும். பாளையக்காரர்களை ஐரோப்பாவிலும், சீனாவிலும் இருந்த யுத்தப்பிரபுக்களோடும் ஒப்பிடலாம்.

18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாயக்க மன்னர்கள் வீழ்ச்சியடைய பாளையக்காரர்கள் தங்களது சுயேச்சைத்தன்மையை வளர்த்துக் கொண்டார்கள். இதற்கும் சற்று முன்பாகவே முகலாயப் பேரரசு தமிழகத்தைப் போரில் வென்று ஆற்காட்டு நவாப்பை தமிழகத்தின் கவர்னராக நியமித்தது. 1707இல் ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பின்னர் முகலாயப் பேரரசும் வீழ்ச்சியடைய நவாப்பு சுயேச்சையாக ஆள ஆரம்பித்தான். பாளையக்காரர்கள் அவனது கட்டுப்பாட்டின் கீழ் வந்தார்கள். பேரரசன் ஒளரங்கசீப்புக்கு முன்னதாகவே விவசாயிகள் மீதான முகலாயப் பேரரசின் வரிவிதிப்பு கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றது.

இலட்சக்கணக்கில் பெருகிவிட்ட படைகளுக்கு வேலையும், கூலியும் கொடுக்க இயலாத நிலையில் வீரர்கள் நாட்டுப்புறங்களைக் கொள்ளையடித்து காலம் தள்ளினர். மறுபுறம் மையஅரசு கேட்கும் அதிக வரிக்காக நிலக்கிழார்கள் விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்தனர். விவசாயத்தை மையமாகக் கொண்ட நாட்டுப்புற மக்களுக்கு விளைச்சலில் மிஞ்சியது ஓரளவே. இத்துடன் பஞ்சங்களும் படாதபாடுபடுத்தின. இந்தப் பின்னணியில்தான் முகலாயர்களால் நியமிக்கப்பட்ட ஆற்காட்டு நவாப் பாளையக்காரர்களிடம் அதிகவரி வசூலிக்க ஆரம்பித்தான். எதிர்த்தவர்களை அடக்க கம்பெனியின் படையை வாடகை கொடுத்துப் பயன்படுத்த ஆரம்பித்தான்.

வணிகம் செய்ய வந்த கம்பெனியோ தனது பொருட்களுக்குரிய சந்தை குறுகிய அளவில் இருந்ததால் லாபம் பெறுவதற்கும் தனது வணிக ஆதிக்கத்தை நிறுவிக் கொள்வதற்கும் உள்நாட்டு மன்னர்களின் ஆட்சி விவகாரங்களில் நுழைய ஆரம்பித்தது. தனக்காகக் கம்பெனி செய்த போர்களுக்காகச் செலுத்தவேண்டிய பணத்தை அடைக்கமுடியாத நவாப், இறுதியில் வரிவசூலிக்கும் உரிமையை நேரடியாகக் கம்பெனிக்கே கொடுக்க ஆரம்பித்தான். 1792ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி தென்தமிழகத்தின் ஆட்சியுரிமை நேரடியாகக் கம்பெனிக்குச் சென்றது. இது ஒப்பந்தமல்ல. கம்பெனியின் நிபந்தனையை நவாப் ஏற்றுக் கொண்டான் என்பதே உண்மை.

ஏற்கெனவே பாளையக்காரர்கள் வசூலித்து வந்த வரியும் அதிகமாகத்தான் இருந்தது. எனினும் மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால் அவர்கள் சற்று நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், கம்பெனி ஆட்சியில் விளைச்சல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆயுத பலங்கொண்டு கறாராக வரி வசூலிக்கப்பட்டது. நவாப் மற்றும் கம்பெனியின் இந்தக்கொடுமையினை எதிர்த்து 1750களில் பூலித்தேவன் தலைமையில் சில பாளையங்கள் போரிட்டன.

1772இல் சிவகங்கைச் சீமையின் முத்து வடுகநாதர், கம்பெனிப் படைகளை எதிர்த்துப் போரிட்டு மரணமடைந்தார். அதன் பின் விருப்பாட்சிக்குத் தப்பிச் செல்லும் வேலுநாச்சியாரும், மருது சகோதரர்களும் ஹைதர் அலியின் பாதுகாப்பில் 7 ஆண்டுகள் இருந்துவிட்டு அவரது உதவியுடன் சிவகங்கையை மீண்டும் கைப்பற்றி நவாப்பின் படையை வெளியேற்றுகிறார்கள். கட்டபொம்மனது தாத்தாவும், தந்தையும் கூட கட்டபொம்மனைப் போலப் போராடவில்லை என்றாலும் கப்பம் கட்ட இயலாமல் தலைமறைவாயிருந்திருக்கிறார்கள், கப்பம் கட்டும் வரை சில பணயக்கைதிகளையும் அளித்திருக்கிறார்கள். இப்படிப் பாளையக்காரர்கள் மட்டுமல்ல, மக்களும் கம்பெனியின் கொடூர ஆட்சி குறித்து வெறுப்படைய ஆரம்பித்தார்கள். கம்பெனி முன்னேறிய ராணுவத்தைக் வைத்திருந்த போதிலும் அவர்கள் வெல்லப்படமுடியாதவர்கள் அல்ல என்பதை ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் தென்னிந்திய மக்களுக்கு நிரூபித்துக் கொண்டிருந்த நேரம்.

_______________________________________________

இந்தச் சூழ்நிலையில்தான் 1791 ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது முப்பதாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார். இதே காலத்தில்தான் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது. வரிவசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். இன்றைக்கும் இருக்கும் மாவட்டக் கலெக்டர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தின் தோற்றுவாய் இதுதான். அன்று கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது. அதற்குத் தோதாக அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிகவரியும் விதிக்கப்படுகின்றது.

இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள் துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன. அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது. கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.

தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரிவசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை ‘கொள்ளை’ என்று குற்றம் சாட்டியது. இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் எனும் ரவுடி கலெக்டராக நியமிக்கப்படுகிறான். வணிகம் செய்து லாபமீட்டுவதைக் காட்டிலும் மக்களை நேரடியாகக் கொள்ளையடிப்பதையே தனது வணிகக் கொள்கையாக வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அதற்குப் பொருத்தமான நபர்களையே அதிகாரிகளாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. வரிவசூல் இலக்கை வசூல் செய்து தர அதிகாரிகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு, அவர்கள் சொந்த முறையில் கொள்ளையடித்துச் சொத்து சேர்த்துக் கொள்ளவும் அனுமதித்தது.

தன்னுடைய அடாவடித்தனங்களுக்குப் பணிய மறுத்த கட்டபொம்மன் மீது உடனே படையெடுக்க வேண்டுமென்று ஜாக்சன் மேலிடத்திற்கு கடிதம் எழுதுகின்றான். திப்புவை ஒழிக்க தன் சக்திகள் அனைத்தையும் திரட்டிக் கொண்டிருந்த கம்பெனி நிர்வாகம், ஜாக்சனின் கோரிக்கையை வேறு வழியின்றி மறுத்தது. கட்டபொம்மனிடம் பேசித் தீர்க்குமாறு அறிவுறுத்தியது. உடனே, ஜாக்சன் அநாகரீகமான மொழியில் கட்டபொம்மனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் வரிபாக்கி நிறைய சேர்ந்து விட்டதென்றும், கட்டபொம்மனது நடவடிக்கைகள் கம்பெனிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளதெனவும், அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் தன்னை இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் சந்திக்க வேண்டுமெனவும் குறிப்பிடுகின்றான்.

இச்சம்பவம் நடைபெற்ற 1798ஆம் ஆண்டு தென்மாவட்டங்கள் மழையின்றிப் பஞ்சத்தால் தவித்த காலம். வடமாவட்டங்களில் இருந்து மக்கள் உணவுத் தானியங்களைக் கொண்டு வருவதற்குக்கூட மாட்டு வண்டிகள் இல்லை. அத்தனையும் கம்பெனியின் மைசூர் படையெடுப்பிற்காகக் கொண்டு செல்லப்பட்டு விட்டன. சோற்றுக்கே வழியில்லாமல் தென்மாவட்ட மக்கள் மடிந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான் கட்டபொம்மனது வரிபாக்கியை ஜாக்சன் ஈவிரக்கமின்றி வசூலிக்க முற்படுகிறான்.

இந்தச் சூழ்நிலை பாளையக்காரர்கள் மத்தியில் கம்பெனி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு வித்திடுகிறது. எனினும் கிளர்ச்சிப் பாளையங்களின் ஒருங்கிணைவு உறுதியடையாதலால், தனியொரு பாளையமாய் வெள்ளையர்களை எதிர்ப்பதில் உள்ள சிக்கலை உணர்ந்த கட்டபொம்மன், ஜாக்சனை தன் படை பரிவாரங்களுடன் சந்திக்க முடிவு செய்கிறார். நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப்பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறான்.

பேசவந்த கட்டபொம்மன் மற்றும் அவரது மந்திரி தானாதிபதி சிவசுப்ரமணியபிள்ளை இருவரையும் நிற்கவைத்து மூன்று மணிநேரம் விசாரணை செய்கிறான். இறுதியில் கணக்கு பார்த்ததில் வரிபாக்கி அதிகமில்லை என்று தெரியவருகிறது. இருப்பினும் கட்டபொம்மனைக் கைது செய்ய ஜாக்சன் முற்படுகையில் அவர் தன் வீரர்களுடன் ஆங்கிலேய வீரர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிக்கிறார். பாஞ்சாலங்குறிச்சி திரும்பும் வழியில் பழிவாங்கும் நடவடிக்கையாக கம்பெனியின் ஊர்களைச் சூறையாடுகிறது கட்டபொம்மனின் படை. தானாதிபதிப்பிள்ளை மட்டும் வெள்ளையர்கள் கையில் சிக்குகிறார். அவரைச் சித்ரவதை செய்து திருச்சி சிறையில் அடைக்கிறார்கள்.

தன்னை அவமானப்படுத்திய ஜாக்சனுக்கு வீரத்துடன் பாடம் கற்பித்த கட்டபொம்மனை அடக்குவதற்கு அப்போதும் கம்பெனி தயங்கியது. காரணம், மைசூர்ப் போர் முடியவில்லை. எனவே, கட்டபொம்மனை சென்னை வந்து விளக்கமளிக்குமாறு கோரியது. அவரது நல்லெண்ணத்தைப் பெறும் வகையில் தானாதிபதியை சிறையில் இருந்து விடுவித்ததோடு, அடாவடி ஜாக்சனைப் பதவியிலிருந்தும் நீக்கியது. இதே ஜாக்சன் பின்னாளில் கம்பெனியாலேயே பொறுக்கமுடியாத அளவிற்கு ஊழல் செய்ததனால் வெளியேற்றப்படுகிறான். கட்டபொம்மனும் சென்னை சென்று சுயமரியாதையுடன் விளக்கமளித்துத் திரும்புகிறார்.

_______________________________________________

கம்பெனியின் ஒரு கலெக்டரையே மாற்றவைத்த கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூஷிங்டன் பதவியேற்கிறான். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது.

1799ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பாளையக்காரர்கள் தென்னிந்திய அளவில் கூட்டணிகளை ஏற்படுத்த முயல்கின்றனர். இதில் திண்டுக்கல் சீமைக்கு கோபால நாயக்கரும், இராமநாதபுரம் சிவகங்கைச் சீமைக்கு மருது சகோதரர்களும், நெல்லைச் சீமைக்கு கட்டபொம்மனும் தலைமையேற்கிறார்கள். இவர்களுக்கிடையே நெருங்கிய தொடர்பு ஏற்படுகின்றது. சிவகங்கையுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என்ற லூஷிங்டனது எச்சரிக்கையை மீறி மருது சகோதரர்களின் தூதர்களை பழவனேரி எனும் இடத்தில் சந்தித்து அவர்கள் அனுப்பிய 500 வீரர்களுடன் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி திரும்புகிறார்.

நெல்லைச்சீமையில் இருக்கும் கோலார்பட்டி, காடல்குடி, குளத்தூர், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை முதலிய பாளையக்காரர்கள் கட்டபொம்மனுடன் அணிசேருகின்றனர். கட்டபொம்மனுக்கு ஆதரவளிப்பதாக அவரது தூதர்களிடம் கள்ளர் நாட்டைச்சேர்ந்த பாளையக்காரர்களும் உறுதியளிக்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலிருந்த சிவகிரிப் பாளையம் போர்த்தந்திர ரீதியில் முக்கியமான பகுதி. இதன் பாளையக்காரன், கம்பெனியை ஆதரித்த போதிலும் இவனது மகன் கட்டபொம்மனை ஆதரித்தார். எனவே இவரையே பாளையக்காரராக மாற்ற முயற்சிக்கிறார் கட்டபொம்மன். மேலும் கம்பெனியின் இராணுவ நடமாட்டத்தை ஒற்றறிய தானாதிபதிப் பிள்ளையின் சகோதரரையும் சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். கட்டபொம்மனது இத்தகைய அரசியல் நடவடிக்கைகளால் ஆத்திரமடைகின்றனர் கம்பெனிக்காரர்கள். இனியும் சகிக்கமுடியாது என்ற நிலைக்கு லூஷிங்டன் வருகிறான். பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன.

_______________________________________________

உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறான் லூஷிங்டன். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார். போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப்போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார். ஆனால், கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.

இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப்படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. இவ்வளவு சீக்கிரம் படையெடுப்பு இருக்கும் என்று கட்டபொம்மன் எதிர்பார்க்கவில்லை. பெருமளவு வீரர்களும், ஊமைத்துரையும், தானாதிபதியும் திருச்செந்தூரில் நடக்கும் ஆவணிமாதத் திருவிழாவுக்குச் சென்றிருந்த நேரமது. இராமலிங்க முதலியார் என்பவனைத் தூது அனுப்பி கட்டபொம்மனைச் சரணடையச் சொல்கிறான் பானர்மேன். சரணடைய மறுத்து கோட்டையிலிருந்த 1500 வீரர்களுடன் போரிடுகிறார் கட்டபொம்மன். தூது செல்லும் சாக்கில் கோட்டையின் பலவீனங்களை இராமலிங்க முதலியார் வேவு பார்த்துச் சொல்லியிருந்தும் பானர்மென்னால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை.

முற்றுகையைப் பற்றிக் கேள்விப்பட்ட ஊமைத்துரையும், தானாதிபதிப்பிள்ளையும் சில வீரர்களும் வெள்ளையர்களின் அணிவகுப்பை உடைத்துக்கொண்டு கோட்டைக்குள் நுழைகிறார்கள். போர் தீவிரமடைகிறது. சுந்தரலிங்கம், வெள்ளையத்தேவன் முதலான வீரர்கள் வீரமரணம் அடைகிறார்கள். சில வெள்ளைத் தளபதிகளும் கொல்லப்படுகிறார்கள். இன்னும் பல இடங்களிலிருந்து வரும் கம்பெனியின் படைகளுக்காக பானர்மென் காத்திருக்கிறான். இனிமேலும் கோட்டையில் இருப்பது உசிதமல்ல என்று கட்டபொம்மனும் ஏனையோரும் முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிக்கின்றனர்.

தப்பிச் சென்றவர்களை கோலார்பட்டியில் எட்டப்பனின் படை எதிர் கொள்கிறது. அந்தச் சண்டையில் நாகலாபுரத்தின் சௌந்தரபாண்டியனும், தானாதிபதிப்பிள்ளையும் பிடிபடுகின்றனர். இருவரையும் பானர்மென் தூக்கிலிடுகிறான். தானாபதியின் தலையைத் துண்டித்து பாஞ்சாலங் குறிச்சியில் நட்டு வைக்கிறான். தனது மன்னனை விவேகத்துடன் வழிநடத்தி, அவனது துன்பங்களில் பங்கெடுத்த தானாதிபதி முதல் தியாகியானார். மருதிருவருடன் இணைந்து போரைத் தொடர்ந்து நடத்தும் நோக்கத்தில் கட்டபொம்மனும் அவரது இளவல்களும் சிவகங்கை நோக்கி விரைகின்றனர்.
இதனை எதிர்பார்த்து சிவகங்கை எல்லையில் காளாப்பூர் காட்டில் பதுங்கியிருந்த துரோகி தொண்டைமானின் படை அனைவரையும் கைது செய்கிறது. வெள்ளையனின் கையால் சாவதைவிட தற்கொலையே மேல் என்று கத்தியை எடுத்த கட்டபொம்மனின் கையை முறுக்கி கட்டி இழுத்துச் செல்கிறது தொண்டைமானின் படை.

கயத்தாறு கட்டபொம்மன் நினைவுத்தூண் - இடிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை
கயத்தாறு கட்டபொம்மன் நினைவுத் தூண் - இடிக்கப்பட்ட பாஞ்சாலக்குறிச்சி கோட்டை

கயத்தாறில் தன் மீது சுமத்தப்பட்ட ‘குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேசபக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு “ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கட்டபொம்மன் அணியிலிருந்த நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணைப் பாளையக்காரர்கள் சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே இறந்தனர். குளத்தூர் பாளையக்காரர் வயதானவர் என்பதாலும், கோலார்பட்டிப் பாளையக்காரர் கண் பார்வையற்ற இளைஞர் என்பதாலும் விடுவிக்கப்பட்டனர். கிளர்ச்சியாளர்களது பாளையங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டன. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை இடித்து உழுதுவிட்டு ஊரின் பெயரையே கூட மாற்றினார்கள் வெள்ளையர்கள்.

தனது அடிவருடிப் பாளையங்களையும் வெள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களது கோட்டைகளும் இடிக்கப்பட்டன. பாளையக்காரர்கள் அனைவரும் வெறும் ஜமீன்தார்கள் ஆக்கப்பட்டனர். “படை வைத்துக் கொள்ளக்கூடாது, அலங்காரத்துக்காகக் கூட இடுப்பில் வாள் இருக்கக்கூடாது, குடிமக்கள் கூட ஆயுதம் வைத்திருக்கக் கூடாது, மீறினால் மரணதண்டனை” என்று அறிவித்தான் பானர்மேன்.

இரண்டே ஆண்டுகளில் மரணத்தை வென்றது பாஞ்சாலங்குறிச்சி. பாளையங்கோட்டை சிறையைத் தகர்த்துவிட்டு ஊமைத்துரையும், சிவத்தையாவும் கட்டபொம்மனது கோட்டையை மீண்டும் எழுப்பினார்கள். மருது சகோதரர்களுடன் சேர்ந்து மீண்டும் போர் தொடங்கினார்கள்.

கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீரவரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது. இன்றைக்கும் சித்திரைமாதம் அங்கே நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.

இதோ, வெள்ளி முளைக்கும் நேரத்தில் தொடங்குகிறது வெள்ளையத் தேவன் மனைவி வெள்ளையம்மாளின் ஒப்பாரி. அது ஆங்கிலேயர் காலக் கொடுமைகளை எண்ணி அழும் மக்களின் இயலாமை தோற்றுவிக்கும் சோகம். காலனியாதிக்க அடக்கு முறைக்கு எதிராகப் போராடி வீழ்ந்த வீரர்களின் காப்பியச் சோகம். இன்னும் சூரியன் உதிக்கவில்லை. அந்தக் கண்ணீரும் நிற்கவில்லை.

– விடுதலைப் போரின் வீர மரபு…. தொடரும்.

______________________________________________

வினவுடன் இணையுங்கள்:

தொடர்புடைய பதிவுகள்:

டாடாவின் உயிர் வாழும் உரிமைக்கு ‘ஆபத்து’ !!

ரத்தன் டாடா

ரத்தன் டாடாஉலகப் பெரு முதலாளிகளில் ஒருவரும் இந்தியத் தரகு முதலாளிகளில் முன்னவரும் மூத்தவருமான ரத்தன் டாடா, தன்னுடைய உயிர் வாழும் உரிமைக்கு உத்திரவாதம் கேட்டு உச்சநீதிமன்ற வளாகத்தின் மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறார். அதிசயம் ஆனால் உண்மை.

“இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 21, இந்தியக் குடிமகனின் உயிர் வாழும் உரிமையை உத்திரவாதம் செய்கிறது. உயிர் வாழும் உரிமை என்பது ஒரு குடிமகன் தனது தனிப்பட்ட இரகசியங்களைப் பேணிக்கொள்ளும் உரிமையையும் (right to privacy) உள்ளடக்கியது.. தனிப்பட்ட உரையாடல்கள் பொது அரங்கில் அம்பலமாகாமல் தடுப்பது அரசின் பொறுப்பு” என்று முறையிட்டார் டாடாவின் வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே.

“தனிப்பட்ட உரையாடல் என்றால் என்னவென்று விளக்க முடியுமா?” என்று திடீரென்று நீதிபதி கேட்டுவிடவே, “எப்போது இரவு விருந்து அருந்தப் போகிறீர்கள், என்பன போன்ற உரையாடல்களை சொல்கிறேன்” என்று சமாளித்து விளக்கமளித்தார் டாடாவின் வக்கீல்.

இந்த பதிலைக் கேட்டு சட்ட அறிவும், ஜனநாயக உணர்வுமற்ற பாமரர்கள் வேண்டுமானால் சிரிக்கலாம். மாட்சிமை தங்கிய நீதிபதிகள் சிரிக்கவில்லை. உரையாடலைப் பதிவு செய்த மத்திய அரசுக்கும், அவற்றை வெளியிட்ட அவுட்லுக், ஓபன் போன்ற பத்திரிகைகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். நகைக்கத்தக்கதாயினும் இதுதான் நடந்திருக்கும் உண்மை.

ரூ. 1,76,000,00,000,000 என்று உயிரற்ற பூச்சியங்களால் குறிக்கப்பட்டு வந்த ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு இரத்தமும் சதையும் கொடுத்து, வாய்க்குள் உயிரையும் ஊதி விட்டிருக்கிறார் நீரா ராடியா என்ற அதிகாரத் தரகு தேவதை. கருணாநிதி குடும்பத்துக்குள் நடக்கும் குத்துவெட்டு சீரியல்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று நேயர்கள் ரசித்துக் கொண்டிருக்கும் போதே, “தன்னுடைய உயிர் வாழும் உரிமை பறிபோய் விட்டது” என்று அலறுகிறார் டாடா.

விபச்சார விடுதித் தலைவியின் டயரியிலிருந்து உதிரும் அமைச்சர்கள், நடிகைகள், தொழிலதிபர்களின் தொலைபேசி எண்களைப் போல, ராடியாவின் ஒலிநாடா பல உண்மைகளை உதிர்க்கிறது. ராஜா, கனிமொழி, மாறன், வெங்கைய நாயுடு முதலான அரசியல்வாதிகள், சோனியா, ராகுல், புத்ததேவ், மோடி, வாஜ்பாயி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பர்க்கா தத், வீர் சங்வி முதலான பத்திரிகை தூண்கள், பேஜாவர் சுவாமிகள் உள்ளிட்ட ஆன்மீகவாதிகள், கடைசியாக நீதிபதிகள்…!

இந்திய ஜனநாயகத்தின் ஏட்டு முதல் எஸ்.பி வரை அனைவரும் முச்சந்தியில் நிற்கிறார்கள். நீதிபதிகளின் தீர்ப்புகள், பத்திரிகையாளர்களின் அறச்சீற்றங்கள், எம்.பிக்களின் நாடாளுமன்ற உரைகள் அனைத்தும் டாடா, அம்பானிகளின் விருந்து மண்டபத்தில் வைத்து எழுதிக் கொடுக்கப்பட்டவை என்ற உண்மை அம்பலமாகி சந்தி சிரிக்கிறது.

இத்தகைய தனிப்பட்ட உரையாடல்கள் அம்பலமாவது இந்திய ஜனநாயகத்தின் உயிர் வாழும் உரிமையையே பறிக்கும் விபரீதமல்லவா? ஸ்பெக்ட்ரம், கோதாவரி எரிவாயு, சிங்குர் விளைநிலம், காடுகள், கனிவளங்கள் என பொதுச்சொத்துகளைக் கொள்ளயடித்துத்தான் முதலாளித்துவம் உயிர்வாழ்கிறது எனும்போது, அந்தக் கொள்ளையின் சூட்சுமங்களையும் சூத்திரங்களையும் வெளியிடுவது முதலாளித்துவத்தின் உயிர் வாழும் உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?

விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தும் அமெரிக்காவின் ‘இராஜதந்திரப் பரிமாற்றங்கள்’ உலகெங்கும் விரவியிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் உயிர் வாழும் உரிமையைப் பறித்துவிடும் என்று அலறியிருக்கிறது ஒபாமா நிர்வாகம். உண்மைகளும் கூட உலகமயமாகித்தான் இருக்கின்றன!

“உயிர் வாழும் உரிமை என்பது விலங்குகளைப் போல உயிர் தரித்திருக்கும் உரிமை அல்ல, மனித கவுரவத்துடன் வாழ்வதற்கான உரிமை” என்று குடிசை இடிப்பை எதிர்த்துத் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் முன்னொரு காலத்தில் வியாக்கியானம் அளித்திருக்கிறது.

“பசி என்ற விலங்குணர்வை ஆற்றிக் கொள்வதற்கு புழுத்துப் போகும் அரிசியை ஏழைகளின் வயிற்றில் எறியக்கூடாதா?” என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் கேட்டபோது, அவ்வாறு இலவசமாகக் கொடுப்பது முதலாளித்துவ சந்தையின் உயிர்வாழும் உரிமையைப் பறிப்பதாகும் என்பதால் கொதித்தெழுந்து எதிர்த்தார் மன்மோகன் சிங். அந்த உரிமைதான் இப்போது டாடா கேட்கும் உரிமை. பூனையின் காலடியோசை எலிகளின் காதில் படாத இரகசியமாக இருக்கும் வரைதானே, பூனை பசியாற முடியும்? அந்த ‘இரகசியத்தை’ அம்பலமாக்குவது பூனையின் உயிர் வாழும் உரிமையை பறிப்பதன்றி வேறென்ன?

_____________________________________________

– புதிய கலாச்சாரம் தலையங்கம், டிசம்பர் – 2010
_____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

பூலித்தேவன் – கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி!

பூலித்தேவன்
பூலித்தேவன்

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வெள்ளையர்களின் வரி வசூல் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தென்னிந்தியப் பாளையக்காரர்களின் போராட்டத்திற்கு, நெற்கட்டுஞ்செவல் பாளையக்காரரான பூலித்தேவன், 1750களில் நடத்திய போராட்டம் முன்னோடியாக இருந்திருக்கிறது. சங்கரன் கோவில் அருகே இருக்கும் இந்தப் பாளையம் அன்று நெல்லைச் சீமையின் போராட்ட மையமாக இருந்தது.

நாயக்க மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் மதுரையை ஆள்வதற்குப் பல்வேறு மன்னர்கள் முயன்றனர். மதுரையைக் கைப்பற்றுவதன் மூலம் அதன் கீழ் இருந்த பாளையங்களின் பெரும் வரிவசூல் தொகையைக் குறி வைத்தே பலரும் போட்டியிட்டனர். “தனக்கு வரவேண்டிய கப்பம் மற்றவர்களுக்குப் போவதா?” என்று ஆத்திரமடைந்த ஆற்காட்டு நவாப், மதுரையைக் கைப்பற்ற தொடர்ந்து படையெடுத்தான். அதற்கு ஆங்கிலேயர்களின் இராணுவத்தையும் பயன்படுத்திக்கொண்டான். 1755இல் ஆற்காட்டு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் கர்னல் கீரானின் ஆங்கிலேயப் படையும், கான்சாகிப் தலைமையில் உள்நாட்டுச் சிப்பாய்களடங்கிய படையும் பாளையக்காரர்களிடம் வரிவசூல் செய்யப் புறப்பட்டது.

எல்லாப் பாளையங்களையும் பணியவைத்த இந்தப்படை, பூலித் தேவனை மட்டும் வெற்றிகொள்ள முடியவில்லை. இந்தப் போருக்குப் பின்னர்தான் பூலித்தேவனது புகழ் பரவத்தொடங்கிற்று. வெற்றியடைந்த கையோடு ஏனையப் பாளையக்காரர்களை ஒன்றிணைக்க முயல்கிறார் பூலித்தேவன். பலர் பயந்து ஒதுங்க சிலர் மட்டும் ஆதரிக்கின்றனர்.

திருவிதாங்கூர் மன்னன் ஆரம்பத்தில் அவனது சுயநலத்திற்காக பூலித்தேவனை ஆதரித்து விட்டுப் பின் கம்பெனியை ஆதரிக்கின்றான். இத்தகைய சூழ்நிலையில் பூலித்தேவன் ஹைதர் அலியின் உதவியையும் கேட்டிருக்கிறார். வேறு போர் முனைகளில் வெள்ளையருடன் மோதிக் கொண்டிருந்ததால் ஹைதராலும் உதவ முடியவில்லை.

பூலித்தேவனின் மரபுவழி ஆயுதங்கள்
வெள்ளையரின் துப்பாக்கிப் படைகளை முறியடித்த பூலித்தேவனின் மரபு ரீதியான ஆயுதங்கள்

இந்நிலையில் நவீன ஆயுதங்கள் ஏதுமின்றி மரபு ரீதியான ஆயுதங்களை வைத்தே வீரத்துடன் போரிட்டார் பூலித்தேவன். தனது திறமையால் வெள்ளையர்களிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், போர் வியூகத்திற்கும், கொடூரமான போர் முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிபுவால் கூட பூலித்தேவனை ஆரம்பத்தில் வெல்லமுடியவில்லை. சுமார் 10 ஆண்டுகள் போராடிய பூலித்தேவன், 1760 – 61ஆம் ஆண்டுகளில் தோல்வியுற்றுத் தலைமறைவாகிறார். அதற்குப் பின் அவரைப் பற்றிய செய்திகளில்லை. பூலித்தேவனது காலம் முடிந்த பிறகுதான் காலனியாதிக்க எதிர்ப்பு தென்னகத்தில் பரவலாகக் கருக்கொள்ளத் தொடங்குகிறது.

அதேநேரத்தில், ஆற்காட்டு நவாப்பையும் அவனுடைய கூலிப் படையாக வந்த கம்பெனியின் படைகளையும் எதிர்த்துப் போட்ட அவரது வீரம் பின்னாளைய போராட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாகியது.

பூலித்தேவனது போராட்ட வரலாறு இன்றைக்கும் அப்பகுதி மக்களிடையே கதைப்பாடலாகப் பாடப்பட்டு வருகிறது. ஒண்டிவீரன், வெண்ணிக்காலாடி முதலான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தளபதிகள், பூலித்தேவனுக்காக வீரத்துடன் போரிட்டு மாண்டதை அப்பாடல்களின் மூலம் அறிகிறோம். பொது எதிரிக்கு எதிராக சாதிய வேறுபாடின்றி அணிதிரளும் போக்கு, அன்றைக்கு உருவெடுத்திருந்ததையும் நாம் அறிய முடிகிறது. அதேசமயம் இன்றைக்கு நடராஜன் (சசிகலா) போன்ற அரசியல் தரகர்களும், செந்தில், கார்த்திக், விவேக் போன்ற சாதிவெறிக் கோமாளிகளும், திருநாவுக்கரசர், மதுரை ஆதீனம் போன்ற அரசியல் வாழ்வில் கேவலமான பண்புகளின் ‘சொந்தக்காரர் களும்’ சாதியின் பெயரால் பூலித் தேவனுக்கு நினைவு விழா எடுக்கும் கொடுமையை என்னவென்று சொல்ல?

– விடுதலைப் போரின் வீர மரபு…. தொடரும்.

______________________________________________

இதுவரை

திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !

திப்பு சுல்தான்
திப்பு சுல்தான்

கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால், அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.

1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.

மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790 – 92) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.

எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.

பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.

மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அது வரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.

“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், ‘பிளாசிப் போரில்’ பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் ‘தைரியமாக’ திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.

இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.

திப்புவின் புலி
திப்புவின் புலி - ஆங்கிலேய சிப்பாயின் குரல்வளையை கவ்விப் பிடிப்பது போல வடிவமைக்கப்பட்ட இசைக்கருவி

திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.

ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.

துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.

பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில்தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, ‘குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.

பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு ‘மைசூர் அரசின் சார்பாக’ உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.

ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், ‘பென்சன் ராஜாக்கள்’ என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கணணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

திப்பு சுல்தான் கேலிச்சித்திரம்
ஆங்கிலேயர் படை திப்புவிடம் தோற்றதை நையாண்டி செய்து லண்டனில் வெளியான கேலிச்சித்திரம்

தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.

காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால், அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.

“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.

“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன; முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்’‘ என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர்.சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.

திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக்கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.

பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.

இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.

அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.

திப்புவின் புலிக்கொடி
திப்புவின் புலிக்கொடி

அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, “மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை’ உருவாக்கியது.

அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.

“எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதிய திப்பு, தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.

கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின், தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.

திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால், தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.

திப்பு சுல்தான்
போர் வீரர்களின் பிணக்குவியல்களுக்கு மத்தியில் திப்பு

“ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்” என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்:

“சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.”

1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன:

“இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்…”, “தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.”

– இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்

மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.

தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.

“நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.”

வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. “விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்” என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?

திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். ‘சதக்’ என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.

காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.

ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால்? “உயிர் பிழைத்தல்’ என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் “ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்” என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.

இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு.””மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

திப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:

“நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.”

“மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா”

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.

– விடுதலைப் போரின் வீர மரபு…. தொடரும்.

______________________________________________

வினவுடன் இணையுங்கள்:

தொடர்புடைய பதிவுகள்:

ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !

ஹைதர் அலி
ஹைதர் அலி - பிரெஞ்சு ஓவியம்

“ஆங்கிலேயர்களை நாம் பல முறை தோற்கடித்து விட்டோம். ஆனால், ஒரு இடத்தில் தோற்கடிப்பதன் மூலம் அவர்களை நாம் வீழ்த்த முடியாது…… காந்தகார் மற்றும் பாரசீகத்தின் மன்னர்களை வங்காளத்தின் மீதும், மராத்தாக்களை பம்பாயின் மீதும் படையெடுக்கச் செய்யவேண்டும். பிரெஞ்சுக்காரர்களையும் இணைத்துக் கொண்டு நாம் அனைவரும் மேற்கொள்ளும் கூட்டான நடவடிக்கை மூலம் ஆங்கிலேயர்கள் மீது ஒரே நேரத்தில் எல்லா முனைகளிலும் போர் தொடுக்க வேண்டும்….”
ஹைதர் அலி தன் தளபதிகளிடம் ஆற்றிய உரை, ஜனவரி, 1782.

முகலாய சாம்ராச்சியம் நொறுங்கி, அதன் கவர்னர்களாக ஆங்காங்கே நியமிக்கப்பட்ட நிஜாம், ஆற்காட்டு நவாப் போன்றவர்கள் தம்மை மன்னர்களாகப் பிரகடனம் செய்து கொள்ள, அவர்களால் நியமிக்கப்பட்ட பாளையக்காரர்களும் சிற்றரசர்களும் அவர்களது அதிகாரத்திற்குக் கட்டுப்பட மறுக்க, முடிவில்லாத போர்களால் விவசாயமும் உள்நாட்டுத் தொழில்களும் சின்னாபின்னமாக்கப்பட்டுவந்த காலம்தான் ஹைதர் காலம்.

18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியான இந்தக் காலகட்டத்தில் இந்துஸ்தானத்தின் பல்வேறு இடங்களில் தம் வணிக மையங்களை உருவாக்கியிருந்தனர் ஐரோப்பியக் கிழக்கிந்தியக் கம்பெனியினர். இந்துஸ்தானத்தின் பிரபுக்குலம் தமக்குள் கட்டி உருண்டு கொண்டிருந்ததால், ஐரோப்பாவிலிருந்து கொண்டுவந்த ஆடம்பரப் பொருட்களை இங்கே சந்தைப்படுத்தவும் முடியாமல், மலிவான தரமான இந்தியத் துணிகளின் ஆக்கிரமிப்பால் தடுமாறிக் கொண்டிருக்கும் இங்கிலாந்தின் தொழில்வளர்ச்சியைக் காப்பாற்றவும் முடியாமல் ஆங்கிலேய ஆளும் வர்க்கங்கள் தவித்து வந்த காலமும் அதுதான்.

‘இந்துஸ்தானத்’தின் பொருட் சந்தையைக் காட்டிலும் போர்ச்சந்தை பெரிதாக இருப்பதால், வணிகம் செய்து பொருளீட்டுவதைக் காட்டிலும், அந்த வணிகத்தைப் பாதுகாப்பதற்காகத் தாம் கொண்டுவந்த படையை வாடகைக்கு விட்டுப் பொருளீட்ட முடியும் என்பதை கும்பினிக்காரர்கள் புரிந்து கொண்டார்கள். போரிடும் சமஸ்தானங்களின் சார்பில் கூலிப்படையாய்ச் சென்றார்கள். வரி கட்டாத பாளையக்காரர்களை மிரட்டி வரி வசூலிக்கும் அடியாள் படை வேலையும் செய்தார்கள். பாளையக்காரர்களிடம் வரி தண்டும் உரிமையையும் வணிகம் செய்யும் உரிமையையும் பெற்றார்கள்.
கட்டுப்படாத பாளையங்கள் மீது படை நடத்திப் போர் புரிந்து வரி வசூலிக்கும் ‘சிரமம்’ கூட இல்லாமல், உட்கார்ந்த இடத்திலிருந்து கூலிப் படையை வைத்தே இராச்சியம் ஆள முடியுமென்ற இந்த அரிய வாய்ப்பை நழுவவிட விரும்பாத நவாப்பு, பூலித்தேவனுக்கெதிராகக் கும்பினிப் படையை ஏவிவிட்ட காலமும் அதுதான்.

ஆளப்பிறந்த இந்து மேல் வருணத்தினராயினும், அதிகாரம் பறிபோவதைத் தம் கண் முன்னே கண்டு கொண்டிருந்த முகலாய உயர்குடியினராயினும் மார்க்சின் வார்த்தைகளில் சொல்வதென்றால் “பழமைக்குரிய கவுரவ மனப்பான்மை கூட இல்லாதவர்கள்”. அவர்கள் தம் அதிகாரத்தின் சாசுவதத் தன்மை குறித்த கனவைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு கண்ணை இறுக மூடிக் கொண்டார்கள்.

எனவே ‘இந்துஸ்தானத்’தின் கவுரவம் குறித்துக் கவலைப்படுவதென்பது, சுய கவுரவம்கூட இல்லாத இவர்களுடைய யோக்கியதைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அதற்கு, தன் முயற்சியால் சாம்ராச்சியத்தை உருவாக்க முடிந்த ஒரு வீரன், நிலப்பிரபுத்துவ உயர்குடிப் பெருமிதங்களால் குருடாக்கப்படாமல் புதுமையைக் கற்றுத் தேர்வதில் வெறி கொண்ட ஒரு வீரன் தோன்ற வேண்டியிருந்தது.

தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் ஊற்றுக்கண்களான ஹைதரும் அவர் மகன் திப்புவும் மன்னர்குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஹைதரின் கொள்ளுப்பாட்டன் ஒரு தர்காவின் பணியாள். தாழ்தப்பட்ட முசுலிம்களின் சூஃபி வழிபாட்டு முறையையே ஹைதரின் குடும்பம் பின்பற்றியது என்பதிலிருந்து அவரது சமூகப் பின்னணியை நாம் புரிந்து கொள்ள இயலும். ஆற்காடு திப்பு மஸ்தான் தர்ஹாவில் நேர்ந்து கொண்டு அவர் நினைவாகத் தன் மகனுக்குத் திப்பு என்று பெயர் சூட்டினார் ஹைதர்.

குதிரைப்படை வீரனாக மைசூர் உடையார் மன்னரால் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஹைதர் தன்னுடைய போர்த்திறத்தால் உயர்ந்தவர். பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் தமிழகத்தில் நடைபெற்ற இரண்டாவது மூன்றாவது கர்நாடகப் போர்களில், உடையாரின் குதிரைப்படைத் தளபதியாக பிரெஞ்சுக்காரர்களுடன் இணைந்து போரிட்ட ஹைதர், திண்டுக்கல்லின் பவுஜ்தாராக (கவர்னர்) உடையாரால் நியமிக்கப்பட்டார்.

ஹைதர் அலியை சந்திக்கும் பிரெஞ்சு தளபதி ஸஃப்ரன்
ஹைதர் அலியை சந்திக்கும் பிரெஞ்சு தளபதி ஸஃப்ரன்

மன்னன் இறந்த பின் அரண்மனைச் சொகுசை அனுபவிப்பதைத் தவிர வேறொன்றும் அறியாத மன்னனின் வாரிசுகளை ‘கவுரவமான அரியணையில்’ ஓரமாக அமர்த்திவிட்டு மைசூர் அரசை விரிவுபடுத்தத் தொடங்கினார் ஹைதர்.

1761இல் அதிகாரபூர்வமாகப் பதவிக்கு வந்த ஹைதர் ஒரு அறிவுக்கூர்மை கொண்ட போர்வீரன். முறைப்படுத்தப்பட்ட தொழில் முறை இராணுவம், போர்த்தந்திரம், நவீன தொழில் நுட்பம் ஆகிய மூன்றிலும் மேம்பட்டிருந்த ஐரோப்பியப் படைகளிடம் உதிரிக் கும்பல்களாக இருந்த உள்நாட்டு இராணுவங்கள் தோல்வியடைவதை இரண்டு கர்நாடகப் போர்களிலிருந்தும் அவர் புரிந்து கொண்டிருந்தார்.

படைகளுக்கும் வரிவசூலுக்கும் பாளையக்காரர்களின் தயவைச் சார்ந்திருக்கத் தேவையில்லாத ஒரு மையப்படுத்தப்பட்ட இராணுவத்தையும் அரசையும் உருவாக்குவதை நோக்கித் திரும்பியது ஹைதரின் கவனம். மைசூர் அரசின் கீழிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பாளையக்காரர்களை நீக்கிவிட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக வரி வசூல் செய்யும் மையப்படுத்தப்பட்ட அரசு எந்திரத்தை உருவாக்கினார் ஹைதர்.

சிப்பாய்களுக்கு 40 நாட்களுக்கு ஒரு முறை ஊதியம் என்னும் முறையை இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர் ஹைதர் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ஹைதருடைய படைவீரர்களின் எண்ணிக்கையோ 1,80,000. துப்பாக்கிகள் பீரங்கிகள் ஆகியவற்றை உருவாக்கவும் இயக்கவும் 210 ஐரோப்பியர்களையும் பணிக்கு அமர்த்தியிருந்தார் ஹைதர்.

1767 – 69இல் ஹைதர் தொடுத்த முதல் காலனியாதிக்க எதிர்ப்புப் போரில் ஆங்கிலேயர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஹைதரின் உத்தரவுப்படி செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகள் மீது ஆணியறைந்து பதிக்கப்பட்டது ஒரு ஓவியம். அதனைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறான் லாலி என்ற கும்பினி அதிகாரி:

“நொறுக்கப்பட்ட பீரங்கிகளின் குவியல் மீது அமர்ந்து கொண்டு, தன் காலடியில் மண்டியிட்டிருக்கும் கும்பினி அதிகாரி டூப்ரேயின் மூக்கைப் பிடித்து உலுக்குகிறான் ஹைதர். வாயிலிருந்து தங்க நாணயங்களைக் கக்குகிறார் டூப்ரே. ஆங்கில இராணுவ அதிகாரியின் பதக்கம் அணிந்த ஒரு நாய் ஹைதரின் பின்புறத்தை நக்கிக் கொண்டிருக்கிறது.”  ஹைதரின் காலனியாதிக்க வெறுப்புக்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?

முதல் போரில் தோல்வி கண்டபின் நிஜாமுக்கு எதிராகக் கூட்டணி அமைக்க ஆங்கிலேயர்கள் ஹைதரை அழைத்தபோது அவர் அதற்கு இணங்கவில்லை. அதேபோல, பிளாசிப் போரில் ஆங்கிலேயர் வென்றுவிட்ட செய்தியறிந்த கணம் முதல் மராத்தியர்களையும் ஹைதர் எதிரியாகக் கருதவில்லை.

1780இல் தொடங்கி 1784இல் முடிந்த இரண்டாவது காலனியாதிக்க எதிர்ப்புப் போர்தான் ஹைதரின் கனவுப்போர். தன்னந்தனியே ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் நடத்திக் கொண்டே, மராத்தாக்களையும் நிஜாமையும் இணைத்து ஒரு ஐக்கிய முன்னணி அமைத்து ஆங்கிலேயரைத் துடைத்தொழிக்க முயன்றார் ஹைதர். ஆனால், முதுகெலும்பில் தோன்றிய புற்றுநோய் அவரை 60வது வயதில் காவு கொண்டுவிட்டது.

மரணத்திற்குச் சில மணி நேரங்கள் முன், 1782 டிசம்பர் சித்தூர்ப் போர்க்களத்தில் இருந்தபடியே, மலபாரில் வெள்ளையனை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த தன் மகன் திப்புவுக்கு ஹைதர் எழுதிய கடைசி கடிதம் நெஞ்சை உருக்கும் ஓர் ஆவணம்.

அந்தக் கடிதத்தில் மைசூர் அரசின் பாதுகாப்பைப் பற்றி ஹைதர் கவலைப்படவில்லை. ஆசியாவில் கவுரவமான இடத்தைப் பெற்றிருந்த ‘இந்துஸ்தானம்’ சிதறிச் சின்னாபின்னமாகி விட்டதே என்று கலங்குகிறார். ‘இந்துஸ்தானத்’தின் மக்களுக்கு நாட்டின் மீதான நேசம் போய்விட்டதே என்று வருந்துகிறார். கவுரவத்தை இழந்து அந்நியனுக்கு நாட்டைக் காட்டிக் கொடுக்கும் நிலப்பிரபுத்துவ மன்னர்களின் துரோகமும், சூழ்ச்சியாலும் நயவஞ்சகத்தாலும் அவர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் ஆங்கிலேயர்கள் மீதான வெறுப்பும் காலனியாதிக்க எதிர்ப்புணர்வாக ஹைதரிடம் கருக்கொள்வதை நாம் காண்கிறோம்.

ஆங்கிலேயக் காலனியாதிக்கத்தின் நெஞ்சைப் பிளக்கும் ஈட்டி முனையாக மைசூர் விளங்கவேண்டும் என்பதுதான் திப்புவுக்கு ஹைதர் விட்டுச் சென்ற உயில்.

– விடுதலைப் போரின் வீர மரபு…. தொடரும்.

______________________________________________

வினவுடன் இணையுங்கள்:

தொடர்புடைய பதிவுகள்:

விடுதலைப் போரின் வீர மரபு – அறிமுகம்

விடுதலைப் போரின் வீர மரபு

காலனிய எதிர்ப்பு விடுதலைப் போர் என்றாலே காந்தி, நேரு, காங்கிரசு என்று ஆரம்பப் பள்ளி முதல் அனைத்து வகை கல்வி நிறுவனங்களாலும் கூறப்படும் பொய்யான வரலாறே இங்கே உண்மையென நம்பப்படுகிறது. ஆயினும் வரலாற்றின் வீரஞ்செறிந்த அந்த பக்கங்கள் இதை மறுக்கின்றன. கிட்டத்தட்ட 250 ஆண்டுகளாக வெள்ளையர்களை எதிர்த்து போர் புரிந்து தன்னுயிரை ஈகம் செய்து மறைந்த்து போயிருக்கும் அந்த வரலாற்று மாந்தர்களையும், காலகட்டத்தையும் புதிய கலாச்சாரத்தின் இந்த சிறப்பிதழ் மீட்டு கொண்டு வருகிறது.

ஊழலும், காரியவாதமும், நம்பிக்கையின்மையும் கோலேச்சும் இந்தச் சூழலில் இந்த வரலாற்றை நினைவு கூர்வது என்பது மீண்டும் மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான சுதந்திரப் போரை நாம் நடத்த வேண்டிய கடமையை கற்றுத் தேர்வதோடு அதில் பங்கேற்பதும் ஆகும். புத்தகக் கண்காட்சியை  முன்னிட்டு கீழைக்காற்றின் வெளியீடாக வரும் இந்த கட்டுரைகளை இங்கே அறிமுகம் செய்கிறோம். வரும் வாரம் முழுவதும் இந்த தொடர் வெளியிடப்படும்.

– வினவு

_______________________________________________________

விடுதலைப் போரின் வீர மரபு

1800 – 1801 இல் தென்னகத்தில் கிளர்ந்தெழுந்த முதல் இந்தியச் சுதந்திரப் போர், 1806 வேலூர் சிப்பாய்ப் புரட்சியில் முடிவடைந்தது. அந்த வேலூர்ப் புரட்சிக்கு இது 200ஆம் ஆண்டு. இதனைத் தொடர்ந்து 1857இல் கிளர்ந்தெழுந்த வட இந்தியச் சுதந்திரப் போருக்கு இது 150வது ஆண்டு துவக்கம். 1906இல் வ.உ.சி துவக்கிய சுதேசிக் கப்பல் கம்பெனி எனும் மக்கள் இயக்கத்திற்கு இது நூற்றாண்டு. ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் பகத்சிங்கின் பிறந்த நாளுக்கு இது நூற்றாண்டுத் துவக்கம்.

சத்தியாக்கிரகம் எனும் போராட்ட வடிவத்தை தென் ஆப்பிரிக்காவில் காந்தி அறிமுகப்படுத்தியதற்கும், ‘வந்தே மாதரம்…’ என்ற இந்து தேசியப்பாடல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கும் கூட இது நூற்றாண்டுதான். தேதிகள் பொருந்தி வருவதனால் தியாகமும் துரோகமும் ஒன்றாகி விடுவதில்லை. எனினும் நம் விடுதலைப் போராட்டத்தின் ஒளிவீசும் மரபுகள் அனைத்தையும் இந்து தேசியவாத, அகிம்சாவாத ஜோதிக்குள் அமிழ்த்துகின்றன ஆளும்வர்க்கங்கள். நம் விடுதலைப் போராட்ட மரபு, காந்தியின் வருகைக்குப் பின்னர்தான் திசையறிந்த ஒரு மக்கள்திரள் இயக்கமாக உருப்பெற்றதைப் போன்றதொரு தோற்றத்தை அதிகாரபூர்வ வரலாறு நம் சிந்தனையில் பதித்து வைத்திருக்கிறது.

பெருமிதம் கொள்ளத்தக்க விடுதலைப் போராட்டத்தின் வீர மரபை நம் வரலாற்றுப் பிரக்ஞையிலிருந்தே துடைத்தொழிப்பதற்கான இந்தச் சதி மிகவும் தந்திரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. வன்முறைக்குப் பதிலாக அகிம்சை என்ற வாதத்திற்குள் காந்திகாங்கிரசின் ஏகாதிபத்திய அடிவருடித்தனமும் துரோகமும் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. ஒரு தபால் தலை வெளியீடு மற்றும் அரசு விழாவின் மூலம் கட்டபொம்மன் முதல் பகத்சிங் வரையிலான போராளிகள் அனைவரும் துக்கடாக்களாக நிறுவனமயமாக்கப்படுகிறார்கள்.

இந்த வரலாற்றுப் புரட்டிற்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. 1857 எழுச்சிதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்கிறது வரலாறு. ஆனால், வெள்ளையர்களுக்கு எதிராக திப்பு நடத்திய போர்களும் இந்துஸ்தானத்திலிருந்தே ஆங்கிலேயரை விரட்ட திப்பு மேற்கொண்ட முயற்சிகளும் விடுதலைப் போராட்டத்தின் துவக்கப்புள்ளியாகக் கூட அங்கீகரிக்கப்படுவதில்லை. கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணிறந்த முன்னணியாளர்கள் இணைந்து தீபகற்பக் கூட்டணி என்றொரு கூட்டணியை அமைத்திருந்ததையும், அந்தக் காலனியாதிக்க எதிர்ப்பு முன்னணி மகாராட்டிரத்தின் தென்பகுதி உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளை ஊடுருவிச் சென்றதையும், பல்லாயிரம் விவசாயிகளின் பங்கேற்புடன் நடந்த அந்த மக்கள் போர் 1799 முதல் 1806 வேலூர் புரட்சி வரை தொடர்ந்ததையும் அதிகாரபூர்வ வரலாறு பதிவு செய்வதில்லை. இந்த மாபெரும் மக்கள் போரை முதல் சுதந்திரப் போராகவும் அங்கீகரிப்பதில்லை. தென்னிந்திய வரலாற்றை அலட்சியப்படுத்துவது, இசுலாமியர்களைப் புறக்கணிப்பது என்ற இந்து தேசியவாதக் கண்ணோட்டமே இந்த இருட்டடிப்புக்குக் காரணம். இந்த உண்மையைக் கூறுவது, 1857 சுதந்திரப் போரின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவது ஆகாது.

இந்தச் சிறப்பிதழில் தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப் போரின் வரலாற்றை அதன் நாயகர்களின் வழியாக உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். எனினும் இது பத்திரிக்கை எனும் வடிவ வரம்புக்குட்பட்ட ஒரு பறவைப் பார்வை மட்டுமே. திப்பு, மருது, 1857 எழுச்சி முதல் வ.உ.சி, பகத்சிங் வரையில் நாம் காணும் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்த மண்ணின் அரிய புதல்வர்கள் தமக்குள் அதிசயிக்கத்தக்கதோர் ஒற்றுமையைக் கொண்டிருக்கிறார்கள். இந்த மண்ணின் இறையாண்மையும் மக்களின் நலனும் பிரிக்கவொண்ணாதவை என்ற கருத்து இவர்கள் அனைவரிடமும் இழையோடுகிறது. தியாகிகளை மட்டுமின்றி சமகால துரோகிகளையும் தெரிந்து கொள்வதன் மூலம்தான் தியாகத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள இயலும் என்பதால் துரோகிகளுக்கும் சில பக்கங்களை ஒதுக்கியிருக்கிறோம். இந்தத் துரோகத்தின் மரபணுக்கள் நிகழ்காலத் துரோகிகளை அடையாளம் காண்பதற்கும் வாசகர்களுக்குப் பயன்படும்.

துப்பாக்கிகளுக்கு எதிராக வேல்கம்புகளையும், பீரங்கிகளுக்கு எதிராக நெஞ்சுரத்தையும் நிறுத்திக் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட இந்த வீரப் புதல்வர்களுக்கு நாம் வேறென்ன காணிக்கை செலுத்த முடியும், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போரிடுவதைத் தவிர.

______________________________________________

புதிய கலாச்சாரம் – தலையங்கம் – நவம்பர் 2006
______________________________________________

வினவுடன் இணையுங்கள்:

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம் !

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம்
 ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம்
இந்திய இராணுவம் மணிப்பூர் மாநிலத்தில் நடத்தி வரும் மனித உரிமை மீரல்களை அம்பலப்படுத்தி பெண்கள் நடத்திய நிர்வாண போராட்டம்

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்று ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதாகும். காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமின்றி, கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்திலும் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இச்சட்டத்தைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு அம்மாநிலத்தில் இந்திய இராணுவம் நடத்திவரும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தாய்மார்கள் ஜூலை 15, 2004 அன்று நடத்திய நிர்வாணப் போராட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா என்ற பெண் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி கடந்த பத்தாண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

  • தடா, பொடா போன்ற கொடிய கருப்புச் சட்டங்களைக்கூடத் தூக்கிச் சாப்பிட்டு விடக்கூடிய இப்பயங்கரவாதச் சட்டம், இந்தியா ‘குடியரசாக’ அறிவிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே கொண்டு வரப்பட்ட பெருமையுடையது. 1950 களில் அசாமிலும், அப்பொழுது யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூரிலும் அதன் பின்னர் நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதோடு, அதன் அதிகார வரம்புகளும் விரிவுபடுத்தப்பட்டன.
  • இச்சட்டம் ஒரு மாநிலம் முழுவதிலுமோ அல்லது ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியிலோ மைய அரசால் மாநில அரசின் ஒப்புதலோடு அமுல்படுத்தப்படும். இச்சட்டம் அமலில் இருக்கும் பகுதி கலவரம் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.
  • இச்சட்டம் அமுலில் இருக்கும் பகுதியில் பணிபுரியும் இராணுவம், பொது அமைதியைப் பாதுகாப்பதற்காக, சட்டத்தை மீறுபவர்களாகத் தான் கருதும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தலாம். அத்துப்பாக்கிச் சூடு மரணத்தை விளைவிப்பதாகக்கூட இருக்கலாம். இப்படி சட்டத்தை மீறுபவர்களை எவ்வித முன் அனுமதியின்றிச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்தின் கீழ் அதிகாரிகளுக்கும் இச்சட்டம் வழங்கியிருக்கிறது.
  • ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடங்களில் கூடுவதை இராணுவமே தடை செய்யலாம். ஒரு பொருளை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பிருப்பதாக இராணுவம் கருதினால், அதனை எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கலாம்.
  • இராணுவம் குற்றமிழைத்தவர்களை மட்டுமல்ல, குற்றமிழைத்தவராகச் சந்தேகிக்கும் எவரையும் அல்லது எதிர்காலத்தில் குற்றமிழைக்கக்கூடும் என சந்தேகப்படுவோரையும் நீதிமன்ற பிடியாணையின்றிக் கைது செய்ய முடியும். அப்படிக் கைது செய்யப்பட்டவர்களை அருகிலுள்ள போலீசு நிலையத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும் என இச்சட்டம் கூறினாலும், அதற்குக் காலக்கெடு எதுவும் கிடையாது.
  • இராணுவம் நீதிமன்ற உத்தரவின்றியே எந்த இடத்திலும் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தி அங்கிருப்போரைக் கைது செய்யலாம்; பூட்டியிருக்கும் வீட்டையோ அல்லது அலமாரி, பெட்டகம் உள்ளிட்ட மற்றவற்றையோ உடைத்துத் திறந்து சோதனையிடலாம்; எந்தவொரு வாகனத்தையும் தடுத்து நிறுத்திச் சோதனை செய்வதோடு, அவ்வாகனத்தைக் கைப்பற்றவும் செய்யலாம். எந்தவொரு சொத்தையும், அது திருடப்பட்ட சொத்தாக இராணுவம் கருதினால், அச்சொத்தை இராணுவமே பறிமுதல் செய்யலாம்.
  • ‘‘தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரான செயல்கள்; மக்கள் மத்தியில் பயபீதியை உருவாக்கும் நடவடிக்கைகள்; பல்வேறு பிரிவு மக்களிடையே பகைமையைத் தோற்றுவிக்கும்படியான செயல்பாடுகள்; சமூக அமைதியைக் குலைக்கும்படியான நடவடிக்கைகள்; இந்திய இறையாண்மையையும், இந்திய ஒருமைப்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகள்; இந்திய யூனியனில் இருந்து பிரிவினை கோரும் நடவடிக்கைகள்; தேசிய கீதம், தேசியக் கொடி, இந்திய அரசியல் சாசனம் ஆகியவற்றை அவமதிக்கும்படியான நடவடிக்கைகள்” ஆகிய அனைத்தையும் இச்சட்டம் பயங்கரவாதம், தீவிரவாதமென முத்திரை குத்துகிறது. சுருங்கச் சொன்னால், அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடுவது மட்டுமல்ல, அரசுக்கு எதிரான சிறு முணுமுணுப்பைக்கூடப் பயங்கரவாதமாக முத்திரை குத்துவதற்கு ஏற்றவாறு இச்சட்டத்தின் வரம்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • இச்சட்டம் அமலில் உள்ள பகுதியில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய்கள் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது மாநில அரசுகூட வழக்கோ, விசாரணையோ, ஒழுங்கு நடவடிக்கையோ உடனடியாக எடுத்துவிட முடியாது. இதற்கு மைய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் எனச் சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டால் மாநில அரசும் அதன் அதிகாரமும் செல்லாக்காசாகிவிடும் என்பதுதான் இதன் பொருள்.
  • இந்திய அரசியல் சாசனத்தின் 21 – ஆவது பிரிவு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உயிர்வாழும் உரிமையை அளிப்பதாகப் பீற்றிக் கொள்கிறது. ஆனால், இச்சட்டமோ யாரை வேண்டுமானாலும் நாயைப் போலச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்திற்கு வழங்குகிறது. எனினும், இச்சட்டம் அரசியல் சாசனத்திற்கே எதிரானதல்ல எனத் தீர்ப்பளித்துத் தனது ஒப்புதலை இச்சட்டத்திற்கு வழங்கியிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

ஐரோம் சர்மிளாஏ.ஜி.நூரனி என்ற அரசியல் விமர்சகர், “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆட்சி செய்தபொழுதுகூட, இப்படி அப்பட்டமாக இந்தியர்களைச் சுட்டுக் கொல்லும் உரிமையைத் தனது இராணுவத்துக்கு வழங்கியதில்லை” என ஒப்பிட்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கொடூரத்தை அம்பலப்படுத்தியுள்ளார். அவ்வளவு பின்னோக்கிக்கூடப் போக வேண்டியதில்லை. தற்பொழுது இராணுவ சர்வாதிகார ஆட்சி நடக்கும் பாகிஸ்தான், பர்மா போன்ற நாடுகளில்கூட இராணுவம் குடிமக்களைக் கேள்விக்கிடமின்றி நாயைப் போலச் சுட்டுக் கொல்வதற்குச் சட்டபூர்வ அதிகாரம் அளிக்கபட்டிருப்பதாகத் தெரியவில்லை.

இராணுவம் இச்சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதிகளையும் தீவிரவாதிகளையும்தான் சுட்டுக் கொல்வதாக ஒரு புளுகுணிப் பிரச்சாரத்தை அரசும் இராணுவமும் நடத்தி வருகின்றன. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு வெளியே வாழும் ‘இந்தியர்களும்’ இந்தப் புளுகுணிப் பிரச்சாரத்தை நம்புகின்றனர். ஆனால், உண்மையோ இதற்கு நேர் எதிரானதாக உள்ளது.

இச்சட்டம் அமலில் இருக்கும் ஜம்மு காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் தீவிரவாதிகளைக் கண்டறிந்து சுட்டுக் கொல்வதைவிட, தான் சுட்டுக் கொல்லும் அனைவரையும் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளென முத்திரை குத்தி விடுகிறது, இராணுவம். இன்னார் என அடையாளம்கூடக் காட்ட முடியாத ஒருவரைத் தீவிரவாதியாக முத்திரை குத்துவது வேடிக்கையானது மட்டுமல்ல; கடைந்தெடுத்த அயோக்கியத்தனமானதும் ஆகும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஐந்தாறு மாதங்களாக நடந்துவரும் போராட்டங்களின்பொழுது மட்டும் இதுவரை ஏறத்தாழ 108 காஷ்மீரிகள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களுள் ஒருவர் கையில்கூட ஏ.கே.47 துப்பாக்கி இருக்கவில்லை. அதிகம் போனால், அவர்களின் கைகளில் ஒரு கல் இருந்திருக்கலாம். “அவர்களை ஏன் காலுக்குக் கீழே சுடவில்லை?” என்ற கேள்விக்கு, அவர்கள் லஷ்கர் இ தொபாவின் கூலியாட்கள் எனத் திமிராக விடையளிக்கிறது, இராணுவம்.

சட்டபூர்வமான வழிகளில் போராடுபவர்களை மட்டுமல்ல, தெருவில் நடந்துபோவோரைக்கூடச் சுட்டுக் கொல்லும் அதிகாரத் திமிரை இச்சட்டம் இராணுவத்திற்கு வழங்கியிருக்கிறது.

சிறீநகரைச் சேர்ந்த 16 வயதான ஜாஹித் ஃபரூக் என்ற சிறுவன் கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தபொழுது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் நடுத்தெருவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டான். எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்களை எதிர்த்துக் கேள்வி கேட்டான் என்பதுதான் இச்சிறுவனைப் பயங்கரவாதி ஆக்கிவிட்டது. இச்சிறுவன் மட்டுமல்ல, 14 வயதான வாமிக் ஃபரூக், 16 வயதான பஷாரத் அகமது, 14 வயதான முஷ்டாக் அகமது மிர் உள்ளிட்டு எண்ணற்ற சிறுவர்கள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் கொல்லப்பட்டுள்ளனர். சிறுவர்களைக் கொன்றதற்காகக்கூட எந்தவொரு அதிகாரியும் தண்டிக்கப்பட்டதில்லை.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம்

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் செயல்படும் இராணுவச் சிப்பாய்களை விசாரிக்க மைய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற விதியும்; அத்துமீறல்களில் ஈடுபடும் சிப்பாய்களை இராணுவமே விசாரிக்கும் என்ற நடைமுறையும் இராணுவத்தின் இத்தகைய அத்துமீறல்கள் அனைத்தையும் நியாயப்படுத்துவதற்கும் அரசு பயங்கரவாத குற்றவாளிகளைத் தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்குமே பயன்படுகின்றன என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

பத்தாண்டுகளுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பத்ரிபால் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஐந்து அப்பாவிகள் இந்திய இராணுவத்தால் கடத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த அப்பாவிகளை எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகளாகச் சித்திரித்து இப்படுகொலையை மூடி மறைத்துவிட எத்தணித்தது, இந்திய இராணுவம். உலகெங்கும் அம்பலப்பட்டுப் போன இவ்வழக்கில், இப்படுகொலையை நடத்திய இராணுவத்தினரை விசாரிக்கும் அனுமதியை இன்றுவரை வழங்க மறுத்து வருகிறது, மைய அரசு.

2004 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தங்ஜம் மனோரமா என்ற இளம் பெண்ணை அவரது வீட்டில் இருந்து கடத்திக் கொண்டு போன அசாம் துப்பாக்கிப்படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள், அப்பெண்ணை பாலியல் பலாத்காரப்படுத்திய பின் சுட்டுக் கொன்றனர். தங்ஜம் மனோரமாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்ற அப்பட்டமான பொய்யைக் கூறியே, இப்படுகொலை பற்றி விசாரிப்பதற்கு ஒத்துழைக்க மறுத்துவருகிறது, இராணுவம். மைய அரசோ, இச்சம்பவம் பற்றி விசாரிக்க மாநில அரசு நியமித்த விசாரணைக் கமிசனை ஒத்துக்கொள்ள மறுத்து வருவதோடு, அக்கொலை வழக்கில் தொடர்புடைய சிப்பாய்களை விசாரிப்பதற்கான அனுமதியையும் தர மறுத்து வருகிறது.

அரசாங்கம் அறிவிக்கும் பரிசுப் பணத்தைப் பங்கு போட்டுக் கொள்ளவும், பதவி உயர்வு பெறுவதற்கும் அம்மாநிலத்தில் ஏராளமான போலி மோதல் கொலைகளை நடத்தியிருக்கிறது, இராணுவம். நாடெங்கும் அம்பலமான போலி மோதல் கொலை வழக்குகளும்கூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைத் தாண்டி நகர்ந்ததில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலுக்கு வந்த கடந்த இருபதாண்டுகளில் ஏறத்தாழ 60,000 பேர் பல்வேறு சட்டவிரோத வழிகளில் அரசுப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். அதே சமயம், அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இராணுவச் சிப்பாய்கள் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையோ வெறும் 1,514 தான். இவற்றுள் 1,473 வழக்குகள் பொய்யானவை என்று கூறி இராணுவமே தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த அநீதியை எதிர்த்துதான், அரசு பயங்கரவாதக் கொலைகளைச் சட்டபூர்வமாக்கும் இச்சட்டத்தை விலக்கக் கோரித்தான் கடந்த நான்கைந்து மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இராணுவமோ, தீவிரவாதத்தை ஒழிக்கும் வேலையை போலீசிடமிருந்து மாற்றித் தன்னிடம் ஒப்படைக்கும்பொழுது, சிவில் நிர்வாகப் பணிகளில் இராணுவம் ஈடுபடுத்தப்படும்பொழுது இச்சட்டம் தனக்குத் தேவை என வாதாடுகிறது. இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரினாலோ, அல்லது இச்சட்டத்தில் சில சில்லறை சீர்திருத்தங்கள் செய்யக் கோரினாலோ, அதனைத் தேச விரோத செயலாகக் குற்றஞ்சுமத்துகிறது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம்

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் பொருத்தவரை பா.ஜ.க.வின் கருத்தும் இராணுவத்தின் கருத்தும் ஒன்றுதான் என்பது வியப்புக்குரிய விசயமல்ல. காங்கிரசோ இப்பிரச்சினை பற்றி விவாதிப்பதற்காக ஒரு ஆலோசனை நாடகத்தை நடத்தி முடித்திருந்தாலும், அதன் உண்மையான நோக்கம் இச்சட்டத்தைத் திரும்பப் பெறவும் கூடாது, திருத்தங்களையும் அனுமதிக்கக்கூடாது என்பதுதான்.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக மைய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஜீவன்ரெட்டி கமிசன், ” ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு இணையாக வேறு சட்டங்கள் இருப்பதால் இச்சட்டத்தை நீக்கிவிடலாம்” என ஐந்தாண்டுகளுக்கு முன்பே அறிக்கை அளித்து விட்டது. எனினும், இந்த அறிக்கையைக்கூட வெளியிடாமல் புதைத்து வைத்திருக்கிறது காங்கிரசு அரசு. அதனின் நயவஞ்சகத்தை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

இப்பொழுது பாதுகாப்பிற்கான அமைச்சர்கள் குழுவைக் கூட்டி, இச்சட்டத்தைத் திருத்துவது தொடர்பாக காங்கிரசுக்குள்ளேயே இரு வேறு கருத்துகள் நிலவுவதாகக் காட்டிக் கொண்ட அக்கட்சி, பின்னர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களில் இருந்து இச்சட்டத்தை விலக்கிக் கொள்ள ஆலோசிப்பதாக பாவ்லா காட்டியது. அதன் பின்னர், நகரங்களில் இருக்கும் தேவையற்ற பதுங்கு குழிகளைக் கைவிடுவது என இந்த நாடகம் சுருங்கிப் போனது. காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எட்டு அம்ச சலுகைத் திட்டத்தை அறிவித்த கையோடு காஷ்மீர் மக்களின் இக்கோரிக்கையை ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளிவிட்டது, காங்கரசு. சிவில் நிர்வாகம் இராணுவத்திற்கு அடிபணிந்துவிட்டது என்றே இதனைக் கூறலாம்.

இச்சட்டத்தைத் திரும்பப் பெறுவதைவிட, சில சில்லறை பொருளாதார சலுகைகள் வழங்குவதன் மூலம் இந்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைப் பிசுபிசுக்கச் செய்துவிடலாம் என காங்கிரசு கணக்குப் போடுகிறது. ஆனால், ஜம்மு காஷ்மீரிலும் மணிப்பூரிலும் நடந்து வரும் போராட்டங்கள் வேறொரு உண்மையைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.

தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் அம்மாநிலங்களில் ஒரு மறைமுகமான இராணுவ ஆட்சிக்கு வழி கோலியிருக்கிறது என்பதும்; இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் துப்பாக்கி ஏந்திய நான்கைந்து தீவிரவாதிகள் நடத்தும் திடீர்த் தாக்குதலாக மட்டும் இல்லாமல், இலட்சக்கணக்கான மக்கள் பங்குபெறும் அரசியல் ஆர்ப்பாட்டங்களாகவும் வளர்ந்துவிட்டன என்பதும்; இச்சட்டத்தையும் இராணுவத்தையும் திரும்பப் பெறுவதன் மூலம்தான் அம்மாநிலங்களில் குறைந்தபட்ச அமைதியைக்கூட ஏற்படுத்த முடியும் என்பதும்தான் அவ்வுண்மை.

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்:

தொடர்புடைய பதிவுகள்:

 

காங்கிரசின் இந்துமதவெறி எதிர்ப்பு: காரியவாதிகளின் வெற்றுக் கூச்சல்!

காங்கிரசின் இந்துமதவெறி எதிர்ப்பு: காரியவாதிகளின் வெற்றுக் கூச்சல்!

காங்கிரசின் இந்துமதவெறி எதிர்ப்பு: காரியவாதிகளின் வெற்றுக் கூச்சல்!“பல்வேறு குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்டிருக்கும் காவி பயங்கரவாதம் நமது நாட்டில் புதிதாகத் தலை தூக்கியுள்ளது” என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூறினார். இந்து பயங்கரவாத அமைப்பினர் உடனே துள்ளிக் குதிக்கத் தொடங்கினர். அவர் மீது மானநஷ்ட வழக்கு போட்டனர். நாடாளுமன்ற மேலவையை ஒருநாள் இயங்கவிடாமல் முடக்கினர்.

காங்கிரசுக் கட்சியின் இளைய தலைவரான ராகுல் காந்தி அண்மையில், “ஆர்.எஸ்.எஸ்., சிமி இரண்டு அமைப்புகளுமே அடிப்படைவாதக் கொள்கைகளைக் கொண்டவை. சிமி தடை செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்படவில்லை. அவ்வளவுதான் வித்தியாசம்”என்று பேட்டி அளித்தார். பா.ஜ.க. கட்சியோ, “வரலாறு தெரியாமல் பேசாதே” எனக் கூச்சல் போட்டு ராகுலுக்கு சில நூல்களையும் அனுப்பி வைத்தது.

அயோத்தி தீர்ப்பு வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன், “ராமர் கோவில் கட்டுவது என்பது பெரும்பாலான இந்துக்களின் உணர்வு” என அத்வானி குறிப்பிட்டதற்கு காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி, “பழைய காயத்தை அத்வானி கிளற வேண்டாம்” எனச் சீறினார். அயோத்தி தீர்ப்பு வெளிவந்தவுடன் ப.சிதம்பரம், “மசூதி இடிக்கப்பட்டதைத் தீர்ப்பு நியாயப்படுத்தவில்லை. என்னைப் பொருத்தவரையில் அந்த குற்றச்செயல் அப்படியேதான் இருக்கிறது” எனக் ‘கடுமையாக’ப் பேசினார்.

இவ்வாறு ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிராகச் சீறுவதாக ப.சிதம்பரமும், ராகுல் காந்தியும் தீவிரமாக நடிக்கிறார்களே, அவர்களின் கட்சிதான் இந்த நாட்டில் இந்து மதவெறிப் பாசிசம் உருவாகி வளர்வதற்கு அடிக்கொள்ளியாக இருந்து வருகிறது. காந்தி படுகொலையில் இருந்து குஜராத் இனப்படுகொலை வரை இந்துமதவெறியைச் சீராட்டி வளர்த்தும் இருக்கிறது.

“ராமராஜ்ஜியம் அமைப்போம்”, “பசுவதை தடுப்போம்”, “கிறித்துவ மதமாற்றத்தை எதிர்ப்போம்”, “வர்ணாசிரம தர்மம் காப்போம்” போன்ற ஆர்.எஸ்.எஸ்.-க்கு நெருக்கமான கொள்கைகள்தான் காந்திக்கும் நெருக்கமானதாக இருந்தன. ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபையைச் சேர்ந்த மத வெறியர்கள் காங்கிரசிலும் உறுப்பினராவது, காந்தி காலத்தில் முரண்பாடானதாக இருந்ததில்லை. பாபர் மசூதி இடிப்புக்குத் துணை நின்ற காங்கிரசின் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவே அப்போதைய காக்கி டவுசர்வாலாதான். முசுலீம் மதவாத தேசியத்தை வளர்த்தது முசுலீம் லீக் என்றால், இந்து தேசியத்தை வளர்த்தது காங்கிரசு.

காந்தி படுகொலையை ஒட்டி ஆர்.எஸ்.எஸ். மீது விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கத் துணைநின்றவர், காங்கிரசின் துணைப்பிரதமர் பட்டேல். 1947 -இல் சோமநாதபுரம் கோவிலைப் புதுப்பிக்கும் அரசியலைக் கையில் எடுத்தவர்களும் காங்கிரசின் வல்லபாய் பட்டேலும், குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்தும்தான். இக்கோவிலில் இருந்துதான் 1990 -&இல் அத்வானி ரதயாத்திரை தொடங்கினார்.

பெரும்பாலான வட மாநிலங்களில் தற்போது நடைமுறையில் உள்ள “பசுவதைத் தடைச் சட்டம்”, காங்கிரசு அந்தந்த மாநிலங்களில் ஆட்சியில் இருந்தபோதுதான் நிறைவேற்றப்பட்டன. குஜராத், உ.பி., பீகார் மாநிலங்களில் நடந்த மதக் கலவரங்களில் இளைஞர் காங்கிரசு, ஆர்.எஸ்.எஸ்.ஸூம் கைகோர்த்துக் கொண்டு முசுலீம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கும்; மீரட், கான்பூர், தில்லி நிஜாமுதீன் ஆகிய இடங்களில் 80-களில் நடத்தப்பட்ட முஸ்லிம் படுகொலைகளில் காங்கிரசின் சேவாதளம் ஆற்றிய பங்குகள் பற்றியும் எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. நெருக்கடி காலத்தில் சஞ்ச காந்தி முசுலீம் மக்களைக் குடும்பக் கட்டுப்பாடு செய்யக் கட்டாயப்படுத்தியதும், துருக்மான் கேட் பகுதியில் இருந்து ஏழை முசுலீம்களை அடித்து விரட்டியதும் என்றென்றும் மறக்க முடியாதவை.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபொழுது, இந்துக்களை தாஜா பண்ணுவதற்காக பாபர் மசூதி வளாகத்தினுள் திருட்டுத்தனமாக வைக்கப்பட்டிருந்த ராமர் சிலையை வழிபட அனுமதிக்கும் வண்ணம் பூட்டப்பட்டுக் கிடந்த அந்த மசூதி வளாகத்தை இந்துக்களுக் குத் திறந்துவிட்டார். இதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் ராமஜென்ம பூமியை முன்வைத்து இந்து மதவெறிப் பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்துவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார், அவர். அதன் தொடர்ச்சியாக வட இந்தியாவெங்கும் பதற்றமும், படுகொலைகளும் பற்றிப் படர்ந்தன. 1990-இல் ரத யாத்திரை நடத்திய அத்வானி பீகாரில் கைதானதைத் தொடர்ந்து வி.பி.சிங்கின் அரசுக்கு பா.ஜ.க. ஆதரவை விலக்கிக்கொண்டபொழுது, பா.ஜ.க.-வோடு காங்கிரசும் கைகோர்த்துக் கொண்டது.

காங்கிரசின் இந்துமதவெறி எதிர்ப்பு: காரியவாதிகளின் வெற்றுக் கூச்சல்

1992-இல் மசூதி இடிப்பின்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசு, ஒரு இலட்சம் துணை இராணுவத்தினரை மசூதிக்கு அருகில் நிறுத்தி வைத்து மசூதி முற்றிலுமாகத் தகர்க்கப்படுவதற்குப் ‘பாதுகாப்பு’ கொடுத்தது. ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் ஆகிய இந்து மதவெறி அமைப்புகளைத் தடை செய்வது போலப் போக்குக் காட்டி விட்டு, ஆறே மாதங்களில் தடையை விலக்கியது

மசூதி இடிப்பைத் தொடர்ந்து மும்பை நகரத்தில் சிவசேனா, பா.ஜ.க. கும்பல் ஒரு பயங்கர கலவரத்தை நடத்தி நூற்றுக்கணக்கான முசுலீம்களின் உயிரைப் பறித்தபொழுது, காங்கிரசுதான் அம்மாநிலத்தில் அதிகாரத்தில் இருந்தது. அக்கலவரம் நடந்தபொழுது அதனைத் தடுக்காத காங்கிரசு, பின்னர் அதனை விசாரிக்க சிறீகிருஷ்ணா கமிசனை நியமித்தது. அக்கமிஷன் பால் தாக்கரே முதல் போலீஸ் கமிஷனர் ஆர்.டி.தியாகி வரை பலரைக் குற்றஞ்சாட்டி இருந்தது. கலவரத்தின் பின் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. – சிவசேனா கும்பல் அக்கமிசனின் அறிக்கையை முடக்கி வைத்தது.

“கிருஷ்ணா கமிசன் அறிக்கையை நிறைவேற்றுவோம்” என வாக்குறுதி அளித்து தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்த காங்கிரசு கூட்டணி பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களின் முதுகில்தான் குத்தியது. பால் தாக்கரே உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்யாததோடு, கிருஷ்ணா கமிசனால் குற்றஞ்சாட்டப்பட்ட பல போலீசு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்து கௌரவித்தது, காங்கிரசு.

ரோஹிண்டன் மிஸ்த்ரி என்ற நாவலாசிரியர், இருபது ஆண்டுகளுக்கு முன்பு சிவசேனாவின் இனவெறி அரசியலை விமர்சித்து எழுதிய “சச் எ லாங் ஜர்னி” (Such AS Long Journey) என்ற ஆங்கில நாவல் மும்ப பல்கலைக்கழகத்தின் இளங்கலை ஆங்கில பட்டப்படிப்புக்கான பாடத் திட்டத்தில் இருந்து வந்தது. தற்பொழுது அப்பல்கலைக்கழகத்தில் படித்து வரும் பால் தாக்கரேயின் பேரன் ஆதித்யா தாக்கரே அந்நாவலைப் பாடத்திட்டத்தில் இருந்து விலக்கக் கோரி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியவுடனேயே, அந்நூலைப் பாடத்திட்டத்திலிருந்து விலக்கிக்கொண்டு சிவசேனாவிடம் அடிபணிந்தது, காங்கிரசு.

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரித்துப் பேசியதற்காக எழுத்தாளர் அருந்ததிராய் மீது தேசத் துரோக வழக்குப் போடத் தயாராகும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைக் கக்கி வரும் நரேந்திர மோடி, பிரவீண் தொகாடியா போன்றோர் மீது ஒரு பெட்டி கேஸைப் போடக்கூடத் துணிந்ததில்லை. இது மட்டுமா, சோராபுதீன் ஷேக், இஷ்ரத் ஜஹன் ஆகியோரைப் போலி மோதலில் நரேந்திர மோடி அரசு கொன்றதில் காங்கிரசிற்கும் கணிசமான பங்குண்டு.

இவ்வாறு இந்து தேசியவெறிக்கு அடிக்கொள்ளியாக இருந்தும், இந்து மதவெறிப் பயங்கரவாதிகளைத் தப்பவைத்தும், காவி பயங்கரவாதத்தின் பங்காளியாகவும் விளங்கும் காங்கிரசின் முசுலீம் விரோத அரசியலை 50 ஆண்டுகளாகப் பார்த்துவரும் முசுலீம் வாக்காளர்கள் காங்கிரசு, பா.ஜ.க. அல்லாத பிராந்தியக் கட்சிகளின் வாக்காளர்களாக மாறிப்போ விட்ட சூழலில் அவர்களை எப்படியாவது தாஜா செய்து, பீகார், உ.பி. போன்ற மாநிலங்களில் மறுபடியும் வேரூன்றுவதற்காகத்தான் சிதம்பரமும், ராகுலும் இப்போது ஆர். எஸ்.எஸ்., பா.ஜ.க.-வுக்கு எதிராகச் சவடால் அடிக்கின்றனர்.

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்:

தொடர்புடைய பதிவுகள்:

பாண்டிச்சேரி: இந்துஸ்தான் லீவர் அடக்குமுறையை எதிர்த்து போராட்டம்!

புதுச்சேரி வடமங்கலம் பகுதியில் இந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (DETS DIVISION)  என்ற பிரிட்டிஷ் கம்பெனி இயங்கி வருகிறது. இக்கம்பெனியில் சுமார் 515 நிரந்தர தொழிலாளர்களும், ஒப்பந்த தொழிலாளர்களும் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு மூன்று தொழிற்சங்கங்கள் இயங்கி வருகின்றன. அதில் ஒன்றுதான் இந்துஸ்தான் யூனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன் என்ற மூன்றாவது தொழிற்சங்கம். இத்தொழிற்சங்கம் கடந்த 2008ன் மத்தியில் புரட்சிகர தொழிற்சங்கமான புதியி ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி உடன் இணைந்து செயல்பட தொடங்கியது.

தொடங்கிய நாள் முதல் நிர்வாகத்தின் அடக்குமுறைகளையும் சட்டவிரோத முறைகேடுகளையும் தொழிலாளர்கள் மத்தியில் அம்பலப்படுத்தியும் 2002-06 ஊதிய ஒப்பந்தத்தம் மற்றும் 2007-11 ஊதிய ஒப்பந்தத்திலும் HUL நிர்வாகம் தொழிலாளிகளை ஏமாற்றி நயவஞ்சகமாக வயிற்றில் அடித்ததை அம்பலப்படுத்தியும் தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வை ஊட்டி அரசியல்ரீதியாக அணிதிரட்டியும் தனது புரட்சிகர கால்தடங்களைப் பதித்தது.

தொழிலாளிகள் தமது பிரச்சினைகளோடு அரசியல் ரீதியில் அணிதிரளத் துவங்கியது இந்துஸ்தான் லீவர் நிறுவனத்துக்கு பெரும் ஆத்திரத்தை அளித்தது. இதன் விளைவாக நிர்வாகம் முதலில் தொழிற்சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த முன்னணித் தோழர் முத்துக்கிருஷ்ணன் அவர்களை வேலை நீக்கம் செய்தது. அடுத்து மற்ற இரண்டு தொழிற்சங்கத்தையும் பு.ஜ.தொ.முவு க்கு எதிராக களம் இறக்கியது. தொழிலாளர்கள் மத்தியில் சாதி ரீதியானப் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்தது. எதிர் கிளர்ச்சியை கிளப்பிவிட்டது.

தொடர்ந்து தோழர்கள் நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கும் சதிவேலைகளுக்கும் எதிர் கிளர்ச்சிகளுக்கும் தக்க பதிலடிக் கொடுத்து தொழிலாளர்களை வர்க்கமாக அணிதிரட்டி முன்னேறிக் கொண்டே சென்றார்கள். இதைக் கண்ட HUL நிர்வாகம் அடுத்த முன்னணித் தோழரும் இத்தொழிற்சங்கத்தின் தலைவருமான தோழர் அய்யனாரை அடியாள் வைத்து மிரட்ட ஆரம்பித்தது. பு.ஜ.தொ.மு தொழிற்சங்க பலகையை அடித்து நொறுக்கியது. இதோடு முடிந்தது என்று பெருமூச்சு விட்டது நிர்வாகம் ஆனால் தொழிலாளிகள் முடித்துக் கொள்வதாக இல்லை.

”முதலாளித்துவத்தின் ஒடுக்குமுறையும் சுரண்டலும் இருக்கின்ற வரையில் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் ஓயாது” என்ற மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் மீண்டும் தோழர்கள் போராட்டத்திற்கு ஆயத்தமானார்கள். தடைகளையும் அச்சுறுத்தல்களையும் காலில் போட்டு மிதித்து நிமிர்ந்து நின்றார்கள். பு.ஜ.தொ.மு தோழர்களின் நெஞ்சுரமும் நேர்மையும் தொழிலாள வர்க்கத்தின் நலனுக்கான இடையறாத போராட்டமும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் விளைவாக மற்ற 2 தொழிற்சங்கங்களும் சரியத் தொடங்கின.

தொடர்ந்து அடிமேல் அடி வாங்கிய நிர்வாகம் இத்தொழிற்சங்கத்தின் தலைவர் தோழர் அய்யனாரை பொய்க்காரணங்கள் கூறி 10 நாள் பணியிடை நீக்கம் செய்தது. அடுத்து ஒரு பொய்யான காரணத்தைச் சொல்லி மெமோ கொடுத்தது. பிறகு அவரது இரு சக்கர வாகனத்தை ஆள் வைத்து உடைத்தது. சில முன்னனி தொழிலாளிகளை பணி மாற்றமும் செய்தது. பிறகு பு.ஜ.தொ.மு தொழிற்சங்கமானது “நக்சலைட் தொழிற்சங்கம், பயங்கரவாத தொழிற்சங்கம், அதற்கு செல்லாதீர்” என பயமுறுத்தியது. பிறகு தொழிலாளிகளைத் தனித்தனியே அழைத்து மிரட்டியது.

இதைக் கண்டித்து பு.ஜ.தொ.மு  தொழிற்சங்கம் வாயிற்கூட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், சுவரொட்டி, பிரசுரம் என தொழிலாளர்களை அணிதிரட்டவும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்திடவும் களத்தில் இறங்கியது. இதையொட்டி கடந்த 25.11.2010 அன்று நிர்வாகத்தின் அடக்குமுறைகளையும், தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது. ஆனால் நிர்வாகம் இக்கண்டன ஆர்ப்பாடம் நடக்க்க் கூடாது என்று முடிவு கட்டியது.

இதன் விளைவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த இடத்தில், HUL  நிர்வாகத்திற்கு சொந்தமில்லாத அரசுக்கு சொந்தமான இடத்தில், 20திற்கும் மேற்பட்ட நிர்வாகத்தின் லாரிகளை நிறுத்தி வைத்து தடையை ஏற்படுத்தியது. தோழர்கள் போலீசிடம் முறையிட்டு அவ்விடத்தில் இருந்த லாரிகளை அப்புறப்படுத்த கோரினார்கள். போலிஸ் சென்று நிர்வாகத்திடம் பேசியும் நிர்வாகம் மயிரளவும் போலீசை மதிக்கவில்லை.

எனவே தோழர்கள் நிர்வாகத்தின் அதிகாரிகளது கார்கள் மட்டும் செல்வதற்கு இருந்த வழியை மறித்து கூட்டத்தை நடத்த தயாரானார்கள். ஒன்று திரண்ட தொழிலாளிகளது உறுதியை கண்டு அஞ்சிய நிர்வாகம் வேறுவழியின்றி லாரிகளை அப்புறப்படுத்தியது. கூட்டம் ஆரம்பித்த நேரம் மழை பொழிய ஆரம்பித்தது. மழையில் கூட்டம் நடைபெறாதென சந்தோஷத்தில் நிர்வாகம் குதூகலமிட்ட்து. ஆனால் தொழிலாள வர்க்க உணர்வு நிர்வாகத்தின் தடையை மட்டுமல்ல இயற்கையின் தடையையும் அலட்சியப்படுத்தியது.

கொட்டும் மழையிலும் கூட்டம் நடக்கத் தொடங்கியது. தொழிற்சங்கத்தின் பொருளாளர் தோழர் லோகு தலைமை தாங்கினார். இவரைத் தொடர்ந்து புதுச்சேரி பு.மா.இ.மு வின் அமைப்பாளர் தோழர் கலை அவர்கள் புதுவை மாநிலத்தின் இன்றைய தொழிலாளர்கள் நிலைமைகளைப் பற்றியும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றியும் பேசினார். இக்கண்டன ஆர்ப்பட்டத்திற்கு சிறப்புப் பேச்சாளராக வந்திருந்த மனித உரிமை பாதுகாப்பு மையத்தின்,HRPC யின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் ராஜூ அவர்கள் நிர்வாகத்தின் சட்டவிரோத போக்குகளையும் அதற்கு ஆதரவாக இருக்கும் அரசின் மெத்தனப் போக்கையும் அதை எதிர்கொண்டு எப்படித் தொழிலாளர் வர்க்கம் போராட வேண்டும் என்பதைப் பற்றியும் விளக்கிப் பேசினார்.

நிர்வாகத்தின் முகத்தில் கரியைப் பூசும் வகையில் மழையில் நனைந்து கொண்டே இக்கூட்டத்தினை பெரும்பாலான தொழிலாளர்கள் வர்க்க உணர்வோடு கலந்துகொண்டு சிறப்பித்தனர். மழையில் நனையாமல் ஒதுங்கியிருந்த சில தொழிலாளர்களின் மத்தியிலும் இனி இந்த போராட்டத்திலிருந்தும், இந்த சங்கத்திலிருந்தும் ஒதுங்கியிருக்க கூடாது என்ற உறுதியை அந்த ஆர்ப்பாட்டம் ஏற்படுத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் வெற்றியைக் கண்டு அஞ்சிய நிர்வாகம் எங்கு தோற்றுவிடுவோமோ என்று மறுநாளே தொழிலாளர்களை மிரட்ட ஆரம்பித்துவிட்டது. மேலும் பு.ஜ.தொ.மு தொழிற்சங்கத்தின் பலத்தை குறைக்க தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களை மிரட்டி இத்தொழிற்சாலையில் இயங்கிவரும் தனது கைப்பாவைத் தொழிற்சங்கமான WEL’S யூனியனில் இணையக் கூறி HUL  நிர்வாக அதிகாரிகளே நேரடியாக தொழிலாளர்களிடம் சென்று கையழுத்து வாங்கி உறுப்பினர் சேர்க்கின்றனர்.

இப்படிச் செய்வதின் மூலம் HUL  நிர்வாகம் ஒரு கல்லில் மூன்று மாங்காய் அடிக்க திட்டமிட்டுள்ளது.
1. முதல் தொழிற்சங்கத்திற்கும் பு.ஜ.தொ.மு தொழிற்சங்த்திற்கும் மோதலை உருவாக்க முயலுகிறது.
2. WEL’S யூனியன் அதிக உறுப்பினர்களைக் கொண்டதாக மாற்றினால் 2007-11 ஊதிய ஒப்பந்தத்தில் தொழிலாளர்களை ஏமாற்றியதுபோல் 2011ல் போடப்போகிற ஊதிய ஒப்பந்த்த்திலும் ஏமாற்றி விடலாம் எனத் திட்டம் தீட்டுகிறது.
3. தொழிலாளர்களுக்குள் பிரச்சினைகளைக் கிளப்பி விடுவதன் மூலம் தொழிலாளர்களுக்குள் பிளவை ஏற்படுத்தி வர்க்க ஒற்றுமையை சீர்குலைத்து பு.ஜ.தொ.மு தொழிற்சங்கத்தை ஒழிக்க முடிவு செய்துள்ளது.

ஆயினும் இந்த அடக்குமுறைகளை மீறி தொழிலாளர்களிடையே வர்க்க உணர்வை வளர்ப்பதிலும், போராடுவதிலும் பு.ஜ.தொ.மு தொழிற்சங்கள் உறுதியாக இருக்கிறது. இந்தியாவில் மிகப்பெருமளவில் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் இந்துஸ்தான் யூனிலிவர் கம்பெனி, நூற்றுக்கணக்கான கோடிகளை இலாபமாக ஈட்டும் பகாசுரக் கம்பெனி இங்கே தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி சுரண்டுவதிலும் முனைப்பாக இருக்கிறது. ஆயினும் கோலியாத்துக்கள் வீழ்த்தப்படுவார்கள். தொழிலாளர்கள் வெல்வார்கள்!

பாண்டிச்சேரி: இந்துஸ்தான் லீவர் அடக்குமுறையை எதிர்த்து போராட்டம்! -பாண்டிச்சேரி: இந்துஸ்தான் லீவர் அடக்குமுறையை எதிர்த்து போராட்டம்! -பாண்டிச்சேரி: இந்துஸ்தான் லீவர் அடக்குமுறையை எதிர்த்து போராட்டம்! -

_____________________________________

புதிய ஜனநாயகம் செய்தியாளர், புதுச்சேரி
_____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஹர்மத் வாகினி – சி.பி.எம் கட்சியின் குண்டர் படை !!

சட்டிஸ்கருக்கு சல்வாஜூடும் மே.வங்கத்துக்கு ஹர்மத் வாகினி

ஹர்மத் வாகினி - சி.பி.எம் கட்சியின் குண்டர் படைஎங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, இத்தனை நாளும் தங்களுக்கு ஹர்மத் வாகினி என்ற பெயரில் எந்தக் குண்டர் படையும் இல்லை என்று கோயபல்ஸ் பாணியில் புளுகி வந்த சி.பி.எம். கட்சி, இப்போது அது உண்மைதான் என்று வேறு வார்த்தைகளில் ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த முகாம்கள் மாவோயிஸ்டு தாக்குதலிலிருந்து சி.பி.எம். ஊழியர்களைக் காப்பதற்கானது என்றும், இந்த ஊழியர் முகாம்களில் ஆயுதங்களோ, ஆயுதப் பயிற்சியோ கிடையாது என்றும் மே.வங்க சி.பி.எம். கட்சித் தலைமை அண்மையில் அறிவித்துள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டில், மே.வங்கத்தின் லால்கார் வட்டாரத்தில் பழங்குடியின மக்களின் பேரெழுச்சியைத் தொடர்ந்து அதுநாள் வரை அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திவந்த சி.பி.எம். கட்சியின் ஊழல் பெருச்சாளிகளும் சமூக விரோதிகளும் போலீசாரும் மக்களால் அடித்து விரட்டப்பட்டனர். சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இப்போராட்டத்தை மாவோயிஸ்டுகள் ஆதரித்து முன்னெடுத்துச் செல்லத் தொடங்கியதும், பயங்கரவாத பீதியூட்டி மத்திய-மாநில அரசுகளின் கூட்டுப்படைகள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டன. “போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி’’யை நிறுவிப் போராடிவந்த பழங்குடியின முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்டும், மோதல் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டும் அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டும் போராட்டம் கடுமையாக ஒடுக்கப்பட்டது.

அரசு பயங்கரவாத அடக்குமுறையால் மாவோயிஸ்டுகள் பின்வாங்கியுள்ள நிலையில், இப்போது அப்பகுதிகளில் தமது குண்டர் படைகளைக் கொண்டு மீண்டும் அதிகாரத்தை நிலைநாட்டி வருகிறது, சி.பி.எம். கட்சி. போலீசும் துணை இராணுவப் படைகளும் தேடுதல் வேட்டையை முடித்துக் கொண்டு புறப்பட்டதும், சி.பி.எம். குண்டர்படையினர் அப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் துப்பாக்கிகளுடன் வந்து வெற்றி ஊர்வலங்களை நடத்துகின்றனர். இது எல்லாப் பகுதிகளிலும் சொல்லிவைத்தாற் போன்று நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் தாரம்பூர், ராம்கார், பிராகடா முதலான பகுதிகளில் தமது கட்சி அலுவலகங்களை மீண்டும் திறந்து, லால்கார் மக்களின் பேரெழுச்சியில் விரட்டியடிக்கப்பட்ட சி.பி.எம். கட்சியின் குண்டர்படைத் தலைவன் அனுஜ்பாண்டே தலைமையில் வெற்றி ஊர்வலங்களை நடத்தி, லால்கார் பகுதியை மாவோயிஸ்டுகளிடமிருந்து விடுவித்து விட்டதாக சி.பி.எம். கட்சி அறிவித்தது.

இவ்வாறு ‘விடுவிக்கப்பட்ட’ கிராமங்களில்கூடப் பத்திரிகையாளர்கள் உள்ளே நுழைந்துவிட முடியாது. ஊர் எல்லையில் சி.பி.எம். குண்டர்படை காத்திருக்கும். ஊருக்குள் நுழைந்தால் மாவோயிஸ்டுகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அச்சுறுத்தியும் மிரட்டியும் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர்; அல்லது அப்பகுதியின் சி.பி.எம். குண்டர்படைத் தலைவரின் துணையோடு மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

லால்கார் மக்களின் பேரெழுச்சியில் சி.பி.எம். கட்சி விரட்டியடிக்கப்பட்டதைச் சாதகமாக்கிக் கொண்டு இப்பகுதியில் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தோடு திரிணாமுல் காங்கிரசு காலூன்றத் துடிக்கிறது. நந்திகிராமத்தில் கிழக்கு எல்லைப்புற துப்பாக்கிப் படையின் துணையோடு சி.பி.எம். கட்சியினர் எவ்வாறு மீண்டும் அப்பகுதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனரோ, அவ்வாறே மேற்கு மித்னாபூரின் ஜங்கல் மகால் பகுதியையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரத் துடிக்கின்றனர். சி.பி.எம். கட்சியின் இந்தக் குண்டர்படைகள் மாவோயிஸ்டு மற்றும் திரிணாமுல் காங்கிரசு கட்சி ஆதரவாளர்களைத் தாக்குவது, வீடுகளைச் சூறையாடுவதுடன் ஆள்காட்டி வேலையையும் செய்து வருகின்றன. மேலும், இப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தைப் பற்றிக் கூட்டுப் படைகளுக்குத் தகவல் தெரிவிக்கும் உளவுப் படையாகவும் செயல்பட்டு வருகின்றன என்பதை அம்மாநிலத்தின் உள்ளூர் நாளேடுகளே அம்பலப்படுத்தியுள்ளன.

இப்போது மீண்டும் இப்பகுதியில் சி.பி.எம். குண்டர்களின் கை மேலோங்கியதும், பழிவாங்கும் வெறியோடு எதிர்க்கட்சியினரும் ஜனநாயக சக்திகளும் இக்குண்டர்படையால் தாக்கப்பட்டு வருகின்றனர். மேற்கு மித்னாபூர் மாவட்டம், புரிபால் எனும் கிராமத்தின் ஆரம்பப் பள்ளி, சி.பி.எம். குண்டர்படையின் முகாமாக மாற்றப்பட்டுள்ளது என்றும் அந்தப் பள்ளியைச் சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்த மண்டல் எனும் பத்திரிகையாளரின் இடது கை சி.பி.எம். குண்டர்களால் முறிக்கப்பட்டது. இப்பகுதியின் உள்ளாட்சித் தேர்தல்களில் திரிணாமுல் கட்சி கணிசமாக வெற்றி பெற்றுள்ள போதிலும் தமது ஆதிக்கத்தை இழக்க சி.பி.எம். தயாராக இல்லை. திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த உள்ளூராட்சித் தலைவர்கள் அடித்து விரட்டப்பட்டுகின்றனர்; அல்லது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு முடக்கப்படுகின்றனர்.

ஹர்மத் வாகினி - சி.பி.எம் கட்சியின் குண்டர் படை

கடந்த செப்டம்பரில் கேஜூரி நகரைக் கைப்பற்றுவதற்கான போட்டாபோட்டியில் சி.பி.எம். கட்சி குண்டர்களும் திரிணாமுல் குண்டர்களும் நடத்திய மோதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இரு தரப்பும் வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலை வெறியோடு நடத்தின. தொடரும் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களால், வருமாண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் கொடிய வன்முறைத் தேர்தலாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.

சி.பி.எம்.கட்சி பல பகுதிகளில் ஹர்மத் வாகினி எனப்படும் ஆயுதமேந்திய குண்டர்படைகளைக் கட்டியமைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது என்று திரிணாமுல் காங்கிரசு தலைவி மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றஞ் சாட்டி வருகிறார். கூட்டுப் படைகளை இப்பகுதியிலிருந்து விலக்க வேண்டும் என்றும் சி.பி.எம். குண்டர்படைகளை வெளியேற்றி ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் கோரி திரிணாமுல் காங்கிரசு கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது. திரிணாமுல் காங்கிரசின் நிர்பந்தம் காரணமாக மைய அரசின் உளவுத்துறை இது பற்றி கடந்த ஏப்ரலில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

மேற்கு மித்னாபூரில் சி.பி.எம்.கட்சி ஆயுதமேந்திய குண்டர் படையைக் கொண்டு ஆயுதப் பயிற்சி நடத்துவதையும், பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகங்கள் முதலானவை குண்டர் படையின் முகாம்களாக மாற்றப்பட்டிருப்பதையும், சி.பி.எம். குண்டர்படைத் தளபதி அனுஜ் பாண்டேவின் சகோதரர் ஷியாம் பாண்டே தலைமையில் குண்டர்படை இயக்கப்படுவதையும் உளவுத்துறை அறிக்கையே அம்பலப்படுத்தியுள்ளது. பீகாரின் மூங்கீரிலிருந்து அசன்சால் வழியாக ஆயுதங்கள் வருவதும், மே.வங்க அமைச்சர் தபன்கோஷின் மகன் நிர்மல்கோஷ் இதற்கு ஏற்பாடுகள் செய்து ஆயுதமேந்திய குண்டர் படையை நடத்துவதும் இந்த அறிக்கையில் அம்பலமாகியுள்ளன. இந்த அறிக்கையிலுள்ள விவரங்கள் “தெகல்கா” வார இதழிலும் வெளிவந்துள்ளன. இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் மே.வங்க அரசுக்கு அண்மையில் அனுப்பியுள்ள கடிதத்தில், மாநிலத்தின் சில பகுதிகளில் சி.பி.எம். கட்சி ஊழியர்களின் ஆயுத முகாம்கள் நிலவுவதைக் குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் காரணமாகவே இப்போது ‘தற்காப்புக்காக ஊழியர்களின் முகாம்கள்’ உள்ளதாக சி.பி.எம். கட்சி பசப்புகிறது.

குண்டர் படை இல்லாமல் பாசிஸ்டுகளால் ஒரு நிமிடம் கூட அதிகாரத்தில் நீடிக்க முடியாது. அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் இழந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றவும் சமூக பாசிஸ்டுகளான சி.பி.எம். கட்சி பெரிதும் நம்பியிருப்பது குண்டர் படைகளைத்தான். பாசிஸ்டுகள் ஆளும் சட்டிஸ்கருக்கு சல்வாஜூடும்! சமூக பாசிஸ்டுகளான சி.பி.எம். ஆளும் மே.வங்கத்துக்கு ஹர்மத் வாஹினி!

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்:

தொடர்புடைய பதிவுகள்:

“எங்கள் வேதனையை உணருங்கள்” என்கிறார்கள் காஷ்மீர் மக்கள் – நிருபமா சுப்ரமணியன்

53

எதிர்ப்புகள் தணிந்த பின்னரும் மக்களின் சாவுகள் பற்றிய கோபம் கனன்று கொண்டுதான் இருக்கிறது.

நிருபமா சுப்ரமணியன் – தி இந்து 24.11.2010

____________________________________________________

“ஷமீர் இந்தா, போய் பேரிக்கா வாங்கிக்க,” என்று தந்தை கொடுத்த 10 ரூபாய் நோட்டுடன் வாசலுக்கு ஓடிய சிறுவன், தள்ளுவண்டிக்காரரிடம் வாங்கிய கொழுத்த 5 பேரிக்காய்களுடன் திரும்பினான்.  அதில் ஒன்றைக் கவ்விக்கொண்டு, “அப்பா நான் மாமா வீட்டுக்குப் போயிட்டு வர்ரேன்” என்று கத்திக் கொண்டே மறுபடியும் வெளியே ஓடினான். ஸ்ரீநகர் பத்மலூ பகுதியில் வாழ்பவரும், பக்கத்து பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்பவருமான ஃபியாஸ் அகமத் ராஹ் என்ற தந்தையும் அவரது எட்டு வயது மகன் ஷமீரும் ஆகஸ்ட் 2 அன்று நண்பகலில் பேசிக்கொண்ட கடைசி சொற்கள் இவைதான். அடுத்த சில மணிகளில் அச்சிறுவன் ஷமீர் இறந்து கிடந்தான்.

புறக்கடை சந்தில் வைத்து நாலைந்து சி.ஆர்.பி.எஃப் ஜவான்கள் அவனை லத்திக் கம்புகளால் விளாசியதையும், அவன் தொண்டைக் குழியில் கம்பை வைத்து அழுத்தியதையும் பார்த்ததாக அக்கம் பக்கத்து மக்கள் ராஹிடம் தெரிவித்தனர்.

”ஏழு வயது சிறுவனை, எங்கள் குல விளக்கை அவர்கள் அணைத்துவிட்டனர்.  அவன் தனது கையில் துப்பாக்கியை அல்ல, கல்லைக்கூட அல்ல, பேரிக்காயைத்தானே வைத்திருந்தான்” என்று கதறுகிறார் தந்தை.

சிறுவன் அடித்துக் கொல்லப்படவில்லை; அன்று அந்த பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டபோது தலைதெறிக்க ஓடிய கூட்டத்தில் மாட்டி மிதிபட்டு செத்தான் என்று மறுத்துரைக்கிறது ஸ்ரீநகர் போலீசு.  சட்டத்தை அமல் படுத்துவோருக்கும் மக்களுக்கும் இடையிலான பிளவு கடந்த நான்கு மாதங்களாய் படுபாதாளமாகி இருக்கும் நிலையில் போலீசின் இந்தக் கூற்றைக் கொள்வாரில்லை.  ஷமீர் மரணம் தொடர்பாகப் போலீசால் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஏற்க மறுக்கிறார் அவனது தந்தை.

”அன்று அப்படி எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் நடக்கவில்லை.  என் மகனது மரணத்துக்குப் பின்னர்தான் எதிர்ப்புகள் கிளம்பின”  என்று விவரிக்கும் தந்தையின் கண்ணீர் வழிந்தோடுகிறது.  ”என் மகனைக் கொலை செய்த சி.ஆர்.பி.எஃப் ..காரர்களைத் தண்டிக்காமல் விடக்கூடாது” என்கிறார் ஃபயாஸ்.

ஸ்ரீநர் மற்றும் காஷ்மீரின் பிற பகுதிகளில் கல்லெறியும் மக்கள் போராட்டத்தை எதிர்கொண்ட போலீசு மற்றும் சி.ஆர்.பி.எஃப் படையினரின் தாக்குதலால் ஜூன் 11 அன்று கொல்லப்பட்ட 17 வயது பள்ளிச் சிறுவன் துஃபயில் மட்டூ தொடங்கி, ஜூன் முதல் அக்டோபர், 2010 வரையிலான மூன்று மாதங்களில் கொல்லப்பட்ட 112 பேர்களில் ஷமீரும் ஒருவன்.  ஒவ்வொரு சாவும் பல போராட்டங்களைக் கிளர்ந்தெழச் செய்கிறது.  ஒவ்வொரு போராட்டமும் சாவு எண்ணிக்கையை உயர்த்துகிறது.

போலீசுத் தரப்பு மறுமொழி

“இந்த சாவுகளில் சில நியாயப்படுத்த முடியாத வகையில், தவறான நடவடிக்கைகளால் விளைந்ததாக இருப்பினும், பெரும்பாலான சம்பவங்களில் கிளர்ந்தெழும் கும்பலின் நோக்கம் வன்முறையாகவே இருந்தது. துப்பாக்கி சூடு நடத்துவதைத் தவிற வேறு தெரிவு இல்லை” என்கிறது போலீசு தரப்பு.

அமைதிவழிப் போராட்டத்தின் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள் என்ற விமர்சனத்துக்கு, “தீ வைப்பு எல்லாம் என்று முதல் அமைதிவழிப் போராட்டம் ஆனது?” , “ துப்பாக்கி அற்ற, காந்திய வழியில் நாங்கள் வன்முறையை எதிர்கொள்ளவேண்டும் என்று சொல்லுவதெல்லாம் அதீத கற்பனை” என்கிறார் ஸ்ரீநகர் காவல்துறை அதிகாரி.

போலீஸ் தரப்பு நியாயங்கள் எதுவாயினும், போராட்டம் சற்றே ஓய்ந்திருப்பினும், இந்த மரணங்கள், “இந்தியப் படைகளுக்கும்”, புது டில்லி அரசுக்கும்,  மற்றும் ஒமர் அப்துல்லா தலைமையிலான மாநில அரசுக்கும் எதிராக நீறுபூத்ததொரு கோபக் கனலை விட்டுச் சென்றுள்ளன.  இப் படுகொலைகளை விசாரிக்க ஜூலை இறுதி நாட்களில் இரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.  இதில் வெறும் 17 சாவுகள் குறித்து மட்டுமே விசாரிக்கப்பட இருப்பது மேலும் ஒரு கசப்பான முடிவு.

நிகழ்ந்த எல்லாப் படுகொலைகள் பற்றியும் ஆய்வு செய்யப்படவேண்டும் என்பது மக்கள் கோரிக்கை. ஆனால்,  அதே சமயம், கடந்த கால விசாரணைக் கமிஷன்களில் தாங்கள் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், குற்றவாளிகள், அதிலும் குறிப்பாக பாதுகாப்புப் படையினர், தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் எள்ளளவும் இல்லை.

1990 முதல் 2006 வரையிலான காலத்தில் 458 வழக்குகளில் ஆய்வு முடிவுகள் பாதுகாப்புப் படையினர் மீது குற்றம் சுமத்தின. ஆனால் அவர்கள் மீது குற்ற வழக்குத் தொடுப்பதற்கான அனுமதி இதுநாள் வரை வழங்கப்படவில்லை என ஹிந்து நாளேட்டுக்குத் தெரிவிக்கிறார் ஜம்மு-காஷ்மீர் குடிமக்கள் கூட்டணியைத் தலைமையேற்று நடத்தும் வழக்கறிஞர் பர்வேஸ் இம்ரோஸ்.

மற்றொரு உதாரணம்

தங்கள் முன் வாக்குமூலம் அளிக்குமாறு விசாரணைக் கமிஷனில் இருந்து வந்த இரண்டு தாக்கீதுகளுக்கும் கொலையுண்ட சிறுவன் துஃபயிலினின் தந்தை அர்ஷத் மட்டூ செவிசாய்க்கவில்லை. மாறாக, தனது மகன் சாவுக்கு ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வலியுறுத்தி அவர் சொந்த முறையில் நீதிமன்றப் போராட்டம் நடத்துகிறார்.

12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் வகுப்பு முடிந்து வீடு திரும்புகையில் இறக்கிறான்.  முதலில் அவன் தனது நண்பர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றது போலீசு.  ஆனால், தலையில் கண்ணீர்ப் புகைக் குண்டடி பட்டதால் ஏற்பட்ட மரணம் இது என்றது பிரேதப் பரிசோதனை அறிக்கை. அவன் கல்லெறியும் போராட்டத்தில் எல்லாம் கலந்துகொண்டதில்லை என்கிறார் அவனது தந்தை.

தான் பெற்ற நீதிமன்ற ஆணையைக் கொண்டு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய போலீசை நிர்ப்பந்திக்கிறார் மட்டூ. ஆனால் அவ்வாறு பெறப்படும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போலீசின் முதல் தகவல் அறிக்கையோ, இரு தரப்புத் துப்பாக்கிப் பிரயோகத்தின் இடையே நிகழ்ந்த மரணம் இது என்கிறது.  மட்டூ இதை மறுக்கிறார். வழக்கு இன்னமும் சி.ஜெ.எம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.

வசதியான கம்பள வியாபாரியான அவர் அரசு அளித்த 5 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை ஏற்கவில்லை.  அக்கம்பக்கத்து வீட்டுச் சுவர்களில் எல்லாம் “இந்தியாவே வெளியேறு” என்ற முழக்கங்கள் கிறுக்கப்பட்டிருக்கின்றன.   ”என் மகன் சிந்திய குருதியை விலைபேசவா நான் இருக்கிறேன். என் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இந்த அரசு உடனடியாக முனைந்திருக்குமானால் ஏனைய 111 பேர் தம் உயிரை இழக்கும்படி நேர்ந்திருக்காது”  என்கிறார் மட்டூ.

”இந்தியா என்னை ஏமாற்றிவிட்டது. செய்தி ஊடகங்கள் உள்ளிட்ட இந்திய ஜனநாயகத்தின் பல அம்சங்களை நான் மதித்து வந்தேன்… ஆனால், இனி என்றும் அதற்கு இடமில்லை” என்கிறார் அவர்.

இந்த மனநிலைதான் பரந்த அளவில் அங்கு காணப்படுகிறது. “உ.பி. போலீசு துப்பாக்கி சூட்டில் இரு விவசாயிகள் இறந்ததற்குப் பாராளுமன்றத்தில் கூப்பாடு போட்டார்களே; காஷ்மீரில் 112 பேர் செத்ததற்கு மட்டும் எதையும் காணோமே, ஏன்?” என்று கேட்கிறார்கள் மக்கள்.  ஊழல் விவகாரத்தால் மகாராட்டிர முதல்வர் இராஜினாமா செய்கிறார்;  ஊடகங்களின் கூச்சலால் ரத்தோரி சிறைக்கு அனுப்ப்ப்படுகிறார்; ஆனால், இங்கே காஷ்மீரில் ஏராளமான படுகொலைகள் நிகழ்ந்த பின்னும் இதுபற்றி ஒரு சலசலப்பு கூட இல்லையே ஏன் என்கிறார்கள் அவர்கள்.

“இந்தியாவின் பிற பகுதிகளில், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையிலும் கூட, மக்கள் சமூகம் தனது அக்கறையை வெளிப்படுத்திய விதம் காரணமாக இந்த அரசு தன் இஷ்டம்போல் செயல்பட முடியாது என்பதை உணர்ந்திருக்கிறது. ஆனால், காஷ்மீரில் இந்தப் பாதுகாப்புப் படை சட்ட ரீதியான பாதுகாப்பை மட்டுமல்ல, இந்திய மக்கள் சமூகம் மற்றும் ஊடகத் துறையின் அரசியல் மற்றும் தார்மீக பலத்தையும் பெற்றுத்தான் எங்கள் மீது பாய்கிறது” என்கிறார் வழக்கறிஞர் இம்ரோஸ்.

காஷ்மீரின் அரசியல் பிரச்சினைகள் சிக்கலானவை;  உணர்ச்சிபூர்வமான பலவற்றை உள்ளடக்கியதாக, ஓருநாளில் தீர்வுகாண இயலாததாக இருக்கிறது என்பதை எல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது; ஆயினும், அதே வேளையில் இந்த அரசு குறைந்த பட்சம் மனித உரிமை விசயங்களையாவது உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்கிறார் இந்த வழக்கறிஞர். “நீங்கள் இதைக்கூட செய்யவில்லை என்றால், இந்திய ஜனநாயகம் தன் மூஞ்சியில் தானே கரி பூசிக்கொள்கிறது என்பதைத் தவிர வேறென்ன” என்கிறார் அவர்.

தெருநாய்களைக் கொல்வது தடை செய்யப்பட்டிருப்பதையும், ஒரு கரடியைக் கொன்ற குற்றத்துக்காக 2007-ம் ஆண்டுமுதல் சிறையில் கிடக்கும் இரண்டு காஷ்மீரிகளையும் குறிப்பிட்டு, ”இந்தியாவில் காஷ்மீரிகளைவிட விலங்குகளுக்குக் கூடுதல் நியாயம் கிடைக்கிறது” என்று ஷமீரின் நினைவில் கண்ணீர் வடித்தபடி அவனது தந்தை கூறுகிறார்.

நியாயம் இல்லை

”இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருக்கலாம். ஆனால், காஷ்மீர் விசயத்தில் அது ஜனநாயக விழுமியங்கள் அனைத்தையும் மறந்துவிடுகிறது. இந்திய அரசியல் அமைப்பில் காஷ்மீரிகளுக்கு நீதி இல்லை” என்கிறார் குலாம் நபி ஹகிம். போலீசு மற்றும் சி.ஆர்.பி.எஃப் துப்பாக்கி சூட்டில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்ட்த்தில் கலந்துகொண்டு குண்டடிபட்டு இறந்த சுகில் அகமத் தார் என்ற 15 வயது சிறுவனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு துப்பாக்கி சூட்டுக்கு பலியான ஃபிதா நபி என்ற 19 வயது சிறுவனின் தந்தை இவர்.

நுரையீரல் சிதைந்து சின்னாபின்னமானதால் மரணத்தைத் தழுவினான் உமர் கயாம் என்ற 17 வயது சிறுவன். “ஆகஸ்ட், 22 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு போலீசு நடத்திய தாக்குதலுக்கு ஆளாகி அவன் இறந்தான். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நாங்கள் விடுத்த வேண்டுகோள்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இறந்தோர் பற்றிய அதிகாரபூர்வப் பட்டியலில் அவனது பெயர் சேர்க்கப்படவில்லை” என்கின்றனர் அவனது குடும்பத்தார்.

“காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கவொண்ணா அங்கமாக இருப்பது உண்மையானால், இந்தியா எங்களுக்காக ஏன் வருந்தவில்லை? உடலின் ஒரு உறுப்பு காயமுறுமானால் பிற உறுப்புகள் அதன் வலியை உணரவேண்டும். தயவுசெய்து எங்கள் வலியை உணருங்கள்” என்கிறார் அச் சிறுவனின் தந்தை அப்துல் கயாம்.

_________________________________________

நன்றி: தி ஹிந்து, தமிழாக்கம் – அனாமதேயன்
_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

காரியக் கிறுக்கனிலிருந்து தோழராக….. ஒரு அனுபவம்!!

11

ம.க.இ.க-வின் மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் தலைமையில் தாலி, வரதட்சிணை, மொய் போன்ற சம்பிரதாய சடங்குகளை புறக்கணித்து  அஷ்டமி-நவமி என்று சொல்லப்படுகின்ற ‘அபசகுணமான’ நாளில் ரூ 9125/- செலவில் நடுவீதியில் மேடையமைத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில்  புரட்சிக்கர திருமணம் செய்துக்கொண்டு 10-ஆண்டுகளை கடந்து வந்துவிட்டேன்.

இன்று தோழர் விஜியின் கட்டுரையை படித்தவுடன் சில மணித்துளிகள் எனது கடந்தகால நிகழ்வுகளை சிறிது நேரம் நினைத்துப்பார்த்ததை பதிவர்களோடு முன்வைத்து என் கருத்தாக இங்கே பதிவிடுகிறேன் ……

அந்நாளில் எனது தந்தை  சி.பி.எம் கட்சியிலிருந்து விலகி ம.க.இ.க-வில் இணைந்திருந்தார்.  நானோ அரசியலே நமக்கு வேண்டாமென ஒதுங்கி காரியக் கிறுக்கனாக இருந்தேன். ஏனென்றால் கம்யூனிச   சாயலில் வெளிவந்த விஜயகாந்த் படங்களைப் பார்த்து பார்த்து விஜயகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்திலும், நேருயுவக்கேந்திரா, ஆர்.எஸ்.எஸ் மற்றும் DYFI-யின் கிளைச் செயலாளர் வரையிலும் செயல்பட்டிருக்கிறேன்.எனது தந்தை MGRன்ADMK, DMK, CP(I)M வரைசெயல்பட்டிருக்கிறார்.

இவையாவற்றிலும் உதவாக்கரையையும், துரோகத்தையும், பிழைப்புவாதத்தையும் கண்டதால் எதிர்மறை அனுபவத்திலிருந்து காரியக்கிறுக்கனாக உயர்ந்திருந்தேன். ஊரிலுள்ள சாதிவெறித் தலைவர்கள், நாட்டாமை, ஊர்பெரியவர்கள் ஆகிய அனைவராலும் புத்திசாலிப் பையன், பிழைக்கத் தெரிந்தவன் என பாராட்டவும் பட்டேன். அதுவும் வெளியூரில் வேலை கிடைத்து செட்டில் ஆகிவிட்டதால் ஊர் சென்றபோதெல்லாம் விசேடமாக வந்து பார்த்துவிட்டு குசலம் விசாரித்துவிட்டு செல்வார்கள்.

கூடவே “உன் மேல் அதிகாரி காலால் இட்டதை நீ கையால் செய்யவேண்டும்” என்றெலாம் பொன்மொழிந்து வெத்தலைவாய்-பொக்கைவாயோடு வாழ்த்துவார்கள். இந்த ஒலியும் ஒளியும் நிகழ்சியில் என் தந்தை தூற்றப்படுகிறார் என்பதை நான் அன்று அறியாமலும் இல்லை.

இந்ந்லையில் எனது வீட்டில் எனது தந்தையுடன் சேர்ந்து தோழர்கள் இரவெல்லாம் கண்விழித்துக்கொண்டு ஆர்வமுடன் அரசியல் விவாதிப்பதும், விடிந்தப்பிறகு எவ்வித அயற்சியுமின்றி பிற வேலைகளில் பொறுப்பாக ஈடுபடுவதையும் கண்ணுற்ற நான் “தோழர்களிடம் இப்படி நீங்க மட்டும் உங்களை வருத்திக்கொண்டு சிரமப்படுகிறீர்கள்?பெரும்பாலானோர் இப்படி இல்லையே? நீங்க மட்டும் இந்த உலகத்தை மாற்றிடப் போறீங்களா?உங்களால் முடியுமா?நீங்க தேர்தல்ல ஓட்டுப்போடலைன்னா தேர்தலே நடக்காம போய்விடுமா? மக்களில் பெரும்பாலோனோர் சுயநலவாதிகள், அவர்களை திருத்தமுடியாது. ஏன்?…உங்க அமைப்பிலே கூட நீங்கமட்டும் இப்படி உண்மையாக இருக்கலாம், மற்றவர்களும் இருப்பார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?” என என் சிறுவயது அனுபவத்திலிருந்து கேள்விகளால் துளைத்தெடுத்தேன்.

அதற்கெலாம் பொறுமையாகவும், பொறுப்புடனும் சலிக்காமல் தோழர்கள் விளக்கமளித்தனர். இதையெல்லாம் கேட்டுவிட்டு நான் இம்சை அரசன் வடிவேல் மாதிரி  “இல்லைஇல்லை இதையெல்லாம் ஏதோ என் மனம் ஏற்க மறுக்கிறது” என்ற தொனியில் ஒதுக்கிவிட்டு என் அம்மாவின் ஆதரவுடன் தோழர்களை வசைபாடும் அணிவரிசையில் பயணித்தேன்.

நாட்கள் பல கடந்து பிறகு என் தங்கைத் திருமணம் தந்தையின் ஏற்பாட்டில் சாதி மறுப்பு புரட்சிகர திருமணமாக இனிதே நடந்தேறியது (பு.மா.இ.மு-வின் பகுதி நேர ஊழியர்தான் மணமகன்). அதில் தோழர்கள் தங்களின் குடும்ப விழாவாக கருதி உற்சாகத்துடன் உழைத்தனர். இதற்கு நேர் எதிராக எனது உறவினர்கள் நெருங்கிவந்து அக்கறையோடு பேசுபவர்களாக நடித்து, “குலம்,கோத்திரம்,சாதி பார்க்காம தாலி,பூ பொட்டு இல்லாம முண்டமா அனுப்புறீங்க” என்று கடிந்து கொண்டனர்.

எனது சித்தப்பா ஒருவர் ஒரு படி மேலே சென்று “பார்! இன்னும் எண்ணி ஐந்தே வருசத்துல நம்ம பொண்ணை வாழாவெட்டியா வீட்டுக்கு அனுப்பிடறாங்களான்னு பார்! நாங்க சொல்றத கேட்கமாட்டேங்கிறீங்க, பின்னால அவதிப்படப்போறீங்க’ என்றெல்லாம் குறி சொன்னார். இதைக்கேட்டு எனக்கும் என் அம்மாவுக்கும்தான் மன உளைச்சல்.

பிறகு நாள் முழுவதும் யோசிச்சேன்! யோசிச்சேன்! இறுதியாக எனது உறவினர்களிடமிருந்து வெளிப்பட்ட அற்பத்தனங்களைப் புறந்தள்ளி தோழர்களின் உழைப்பு, தியாகத்துக்கு அஞ்சாமை போன்ற பண்புகளைப் பார்த்து “இதுதான் சரி” என முடிவெடுத்தேன். தொடர்ந்து தோழர்களிடம்
விவாதிப்பதும், அவர்களிடம் இணைந்து ஓரிரு வேலைகளில் பங்கேற்பதுமாக இருந்தேன். பிறகு நான் பணிபுரியும் ஆலைப்பகுதியில் உள்ள தோழர்களை வலிய சென்று சந்தித்து அவர்களுடனான தொடர்பில் என்னை இணைத்துக்கொண்டேன்.

பிறகு ஓராண்டு கழித்து எனது திருமணம். எனது உறவினர்களில் பணக்கார உறவினர்கள் ஓடோடிவந்து “பையன் படித்தவன், எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லாதவன், எல்லாவற்றுக்கும் மேலாக கைநிறைய சம்பளம் வாங்குகிறான்” என்றெலாம் வெளிப்படையாகவே கூறிக்கொண்டு கால்குலேசன்களோடே என்னை பார்த்தார்கள். இவையனைத்தையும் எள்முனையளவும் பொருட்படுத்தாமல் என் குடும்பத்தையொத்த(என் தந்தை கைத்தறி நெசவாளி) உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி –யின் நான்கு மகள்களில் மூத்த மகளை மணந்தேன்.

எனது மகள்கள் இருவருக்கும் பூ,பொட்டு,நகை நட்டு,பக்தி,மூடநம்பிக்கைகள் அண்டாத,மேலும் மக்களை மதித்து போற்றும் சூழலை தந்து, தோழர்கள் புடைசூழ பராமரித்துவருகிறேன். அன்று விலகிய எமது சொந்தங்கள் இன்று எம்மை ஏற்று அங்கீகரித்து, எமது லட்சியத்திற்கு வழிவிட்டும், உதவிசெய்தும் நெருங்கி உறவாடி வருகின்றனர்.

“உறவினர்கள் கொண்டுள்ள பிற்போக்கு பண்பாட்டிலிருந்து நம்மை முறித்துக்கொள்வதால் ஏற்படும் தனிமைப்படுதல் என்பது தற்காலிகமானதே” என்பது என் அனுபவம்.

இந்நிலையில் தோழர் விஜியின் கடிதத்தை வினவில் படித்தவுடன் சில மணித்துளிகள் என்னை திரும்பிப்பார்க்க வைத்து அனுபவத்தை பரிசீலிக்கும்படி செய்தது மட்டுமின்றி புரட்சிகர திருமணம் செய்துகொண்ட, செய்துகொள்ளவிருக்கின்ற ஏராளமான தோழர்களுக்கும், இதனைப் படிக்கின்ற இளைஞர்களுக்கும் புது உத்வேகத்தையும்,நெஞ்சுரத்தையும்,துணிவையும் தூவி விதைக்கும் என்றால் மிகையல்ல. வெளியிட்ட வினவுக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

____________________________________
– சுடலை
____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்!!

42
பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்

பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்

ஜனநாயகம் என்றால் என்ன? இதை பீகார் தேர்தல் முடிவுகளை வைத்தே பார்க்கலாம். மொத்த தொகுதிகள் 243. இதில் நிதீஷ் குமார் கட்சி 115 தொகுதிகளும், அவரது கூட்டணி கட்சியான பா.ஜ.க 91 தொகுதிகளிலும் மொத்தத்தில் இந்தக் கூட்டணி 206 தொகுதிகளில் 4/5 பங்கு வெற்றியை பெற்றிருக்கிறது. அடுத்து லல்லுவின் கூட்டணி 25 தொகுதிகளிலும், காங்கிரசு நான்கிலும், மற்றவர்கள் எட்டு தொகுதிகளிலும் வென்றிருக்கின்றனர்.

அடுத்து இந்த முடிவுகளின் பின்னே உள்ள வாக்கு விகிதத்தை பார்க்கலாம். நிதீஷ் குமாரின் கூட்டணி சுமார் 40% வாக்குகளையும், லல்லு கூட்டணி 25%, காங்கிரசு 8%, மற்றவர்கள் 27% வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். அதாவது வெற்றி பெற்ற நிதீஷ் குமாரை விட அவருக்கு எதிர்த்து விழுந்த வாக்குகளின் விகிதம் 60%. மேலும் இது பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் விகிதம் மட்டும்தான். அதாவது பீகார் தேர்தலில் வாக்கு விகிதம் 52சதவீதம். அதில் நாற்பது விழுக்காட்டை மட்டுமே நிதீஷ் கூட்டணியோடு பெற்றிருக்கிறார். அதன்படி மொத்த வாக்காளர்களின் விகிதத்தை கணக்கிட்டால் நிதீஷ் பெற்றிருப்பது சுமார் 20 முதல் 25 சதம் வாக்குகளை மட்டும்தான். இதில் பா.ஜ.கவின் வாக்கு விகிதத்தை கழித்தால் இந்த அமோக வெற்றி பெற்ற தலைவரின் மக்கள் ஆதரவு பத்து விழுக்காட்டைக் கூட தாண்டாது.

5,50,46,093 மக்களைக்களைக் கொண்ட பீகாரில் வாக்குரிமை உள்ளவர்கள் 2,90,17,537. இதில் நிதீஷ் குமார் கட்சிக்கு கிடைத்திருக்கும் வாக்குகள் 65,61,903 மட்டுமே. லல்லு கட்சிக்கு கிடைத்திருக்கும் வாக்குகள் 54,66,693. இருவருக்கும் வித்தியாசம் வெறும் ஒன்பது இலட்சம் மட்டுமே. வேறு வழியில் சொன்னால் வாக்களிக்கு தகுதி கொண்ட ஆறு பீகாரிகளில் ஒருவர் மட்டுமே நிதீஷ் கூட்டணிக்கு வாக்களித்திருக்கிறார்.

எனில் இதுதான் ஜனநாயகமா என்று அதிர்ச்சியடையாதீர்கள். இன்னும் நிறைய இருப்பதால் அதிர்ச்சியை தவணை முறையில் வைத்துக் கொள்ளுங்கள்

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வென்றிருக்கிறது என்றால் யாருக்கும் தெரியாது. நிதீஷ் குமார் என்றால்தான் தெரியும். ஒரு தெரியாத கட்சியை வைத்துக் கொண்டு ஒரு தெரிந்த தலைவரின் வெற்றி என்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதா என்று அறிஞர்களிடம் கேட்டால் என்ன சொல்வார்கள்?

அவசர நிலை காலத்திற்கு பிறகு காங்கிரசுக்கு மாற்றாக வந்த கதம்பக் கூட்டணிகள் உருவாக்கிய ஜனதா கட்சி பின்னர் கந்தல் கந்தலாக உடைந்து போனது. அந்த துண்டுகளில் ஒன்றான ஐக்கிய ஜனதா தளம் பீகாரில் மட்டும் உயிர் வாழ்கிறது. அதுவும் நிதீஷ் குமார் என்ற தலைவரது நிழலில் காலத்தை ஓட்டுகிறது. பீகாரில் அந்த கட்சிக்கென்று தொண்டர்கள், அணிகள், இரண்டாம், மூன்றாம் நிலைத் தலைவர்கள் அதிகமில்லை. எல்லாம் ஒன்மேன் ஷோதான்.

ஒரு தலைவரின் பிரபலத்தை வைத்து மட்டும் ஒரு கட்சி இயங்குகிறது என்றால் அந்த கட்சி மக்கள் திரளோடு துண்டிக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். ஏற்கனவே நமது இந்திய ஜனநாயகத்தில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் இல்லை. அது அதிகார வர்க்கத்திற்கு மட்டும்தான் உண்டு. இந்நிலையில் கட்சி அமைப்பே இல்லாத நிதீஷ் குமார் கடந்த ஐந்தாண்டுகள் எப்படி ஆட்சி செய்தார்? இனி எப்படி ஆட்சி செய்வார்? எல்லாம் அதிகார வர்க்கத்தின் தயவில் நடப்பதுதான். அதாவது பெயருக்கு கூட மக்கள் தலைவர்கள் துணையின்றி முழுமையாக அதிகார வர்க்கம் மட்டுமே அனைத்தையும் தீர்மானிக்கின்ற நிலை.

மக்களால் விரும்பப்படும் தலைவரான நிதீஷ் குமார் அதே மக்களை ஆட்சி செய்வதற்கு மக்களை ஆட்டிப்படைக்கும் அதிகார வர்க்கத்தின் மூலம் தான் முடியும். நிதீஷ் குமார் கையில் வரம்பற்ற அதிகாரம் (இப்படி ஒன்று இல்லை) இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அது மக்கள் பிரதிநிதிகள் மூலம் செயல்படப் போவது இல்லை.

சரி, இந்த வெற்றியை நிதீஷ் குமாரும், அவரது ஆதரவாளர்களும் ஊடகங்களும் எப்படிப் பார்க்கிறார்கள்? இது வளர்ச்சி திட்டங்களுக்கான, முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட அரசாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று சொல்கிறார்கள். அப்படி என்ன பீகார் வளர்ந்திருக்கிறது? இந்தியாவின் மிகவும் பின்தங்கிய ஏழை மாநிலங்களில் ஒன்று என்ற தகுதியை பீகார் இன்னும் இழந்துவிடவில்லை. நிதிஷ் குமார் பீகாரில் 2000 கி.மீட்டருக்கு சாலை போட்டிருக்கிறாராம். இந்த சாலைகள் மக்களுக்கு என்ன மாற்றத்தை கொண்டுவர முடியும்?

இந்தச் சாலைகளை புறக்கணித்து விட்டு பீகார் இளைஞர்களெல்லாம் ரயில் ஏறி வேறு மாநிலங்களுக்கு சென்று பிழைக்கிறார்கள். பீகாரின் வாழ்வே இந்த ‘நாடோடி’களின் பொருளாதாரத்தால்தான் தீர்மானிக்கப்படுகிறது. மறுகாலனியாக்கத்தின் விளைவாக தமிழகத்தின் விவசாயம் திட்டமிட்டு நசுக்கப்பட்டு அதன் விளைவாக மக்களெல்லாம் பிழைப்பிற்காக நகரங்களை நோக்கி நகருவது போன்ற மாற்றம் இப்போது பீகாரில் வேகமாக நடந்து வருகிறது. இந்தியா முழுவதும் கடுமுழைப்பு வேலைகளுக்கு பீகாரிகள் பொருத்த்தமானவர்கள் என்ற பெயரே இருக்கிறது என்பதிலிருந்து இதை புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் ஊடக அறிவாளிகள் இதை ஒத்துக் கொள்வதில்லை. மூன்று சதவீதத்திலிருந்த பீகாரின் வளர்ச்சி இன்று 11 சதவீதத்தை அடைந்து விட்டது என்றும் பீகாரிலிருந்து பிழைக்க செல்வோர் எண்ணிக்கை குறைந்து விட்டது என்றும் கூறுகின்றனர். ஆனால் சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பீகார் உழைப்பாளிகளை இப்போது சகஜமாக பார்க்க முடியும்.

பீகாரில் இதற்கு முன் அரசு என்ற ஒன்றே ஆயுதக்குழு நிலப்பிரபுக்களால் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இருந்து இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறது. மேலும் நிதீஷ் குமார் ஆட்சியில் கொஞ்சம் சீர்திருத்தங்கள் நடந்திருக்கின்றன என்பதும் உண்மைதான். ஆயினும் அற்புதம் ஏற்பட்டு அந்த மாநிலமே செல்வத்தில் திளைப்பதான வருணிப்பில் உண்மை இல்லை. நிலவுடமை உறவுகள் ஆதிக்கம் செலுத்தும் பீகாரில், பெரும்பான்மையான மக்கள் நிலமற்ற விவசாயிகளாக இருக்கும் நேரத்தில் அங்கே வளர்ச்சி என்பது யாருக்கு பயன்படும்?

பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்
தோர்தல் தோல்வியில் லாலு பிரசாத்

எனில் இந்த வளர்ச்சிப் பாதை என்ற சொற்றொடர் எதை, யாருடைய நலனைக் குறிக்கிறது? அதற்கு லல்லுவின் மூலம் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

ஏழைப் பங்காளன் என்ற மாயை மூலம் பீகாரில் பதினைந்து காலம் ஆண்ட லல்லுவும், இப்போது வெற்றி பெற்றிருக்கும் நிதிஷும் சோசலிச கொள்கைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரே கட்சியில் இருந்தவர்கள்தான். பொதுவில் ஏழைகள், ஒடுக்கப்பட்ட சாதிகள், சிறுபான்மையினர் நலன் என்ற வகையில்தான் அவர்களது ஆளுமை உருவானது. இதில் சாதாரண மக்களின் தலைவராக லாலுவும், நடுத்தர வர்க்கத்தின் அபிமானம் பெற்ற அறிவாளி தலைவராக நிதீஷூம் உருவெடுத்தார்கள்.

லாலுவின் ஆட்சியில் தாதாயிசமும், ஊழலும் கொடிகட்டிப் பறந்தது. அவரே மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிறை சென்றார். மனைவி, மகன், மச்சான் என முழுக் குடும்பத்தையும் அரசியலில் இறக்கி பெரும் சொத்துக்களை சுருட்டினார். எம்.ஜி.ஆர் ஏழைக் கிழவிகளை கட்டிப்பிடிப்பது போன்ற மலிவான நடிப்புக்கு லாலுவும் பெயர் போனவர். சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட லாலுவின் ஆட்சி மீது பீகார் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதும் அந்த வெறுப்பை நிதீஷ் குமார் அறுவடை செய்து கொண்டார் என்பதும் உண்மையே.

சென்ற முறை லாலு ரயில்வே அமைச்சராக இருந்த போது என்ன நடந்தது? ஏதோ லாலு பயங்கரமாக வேலை செய்து ரயில்வேயே இலாபம் கொழிக்கும் துறையாக மாற்றினார் என்று ஊடகங்களே வியந்தன. அமெரிக்காவிலிருந்து வந்த எம்.பி.ஏ மாணவர்களுக்கு லாலு வகுப்பு கூட நடத்தினார். இதில் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் பீகாரில் நிதீஷ்குமார் செய்த வளர்ச்சி திட்டங்களைப் போன்று லாலு இரயில்வேயில் செய்து காட்டினார் என்று ஏன் கூறக் கூடாது?

ஆனால் உண்மை என்ன? லாலுவுக்கு முந்தைய பத்தாண்டுகளில் இரயில்வேயின் அடிக்கட்டுமான திட்டங்கள், புதிய இரயில் பாதை, குறுகிய பாதையை அகல பாதையாக மாற்றுவது போன்ற திட்டங்கள் வேகமாக நடந்தன. இதனால் அப்போது இலாபம் இல்லாமல் இருந்தது. இது முடிந்த பின்னர் இரயில்வேயின் இலாபம் அதிகரித்தது. கூடவே இந்தியாவெங்கும் மக்கள் பிழைப்பிற்காக இரயில்கள் மூலம் இடம்பெயர்வதும் நடந்தது. இப்படி காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாகத்தான் லல்லுவின் இரயில்வே இலாபம் ஈட்டியதும். இந்தக் கதை கொஞ்சம் நிதிஷின் பீகாருக்கும் கூட பொருந்தும்.

ஆகவே வளர்ச்சித் திட்டங்கள், முன்னேற்றம் என்பதெல்லாம் நடுத்தர வர்க்கத்தின் மொழியில் சொல்லப்படும் விசயங்கள். அன்றாட வாழ்க்கைத் தேவைகளை பொருட்படுத்தாமல் வாழும் ஏழைகளுக்கு நல்ல சாலை, நல்ல மருத்துவம், நல்ல கல்வி இருப்பதால் என்ன பயன்? அவர்களுக்கு அவை ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை. அவை கையருகே இருந்தாலும் அந்த மக்கள் அவற்றை எட்டிக்கூட பார்ப்பதில்லை. ஆக பீகாரின் நடுத்தர வர்க்க அவாதான் அந்த வளர்ச்சித் திட்டங்கள். வளர்ச்சித் திட்டங்களின் கட்டுமான பணிகள் மூலம் முதலாளிகளுக்குத்தான் பலன் அதிகம்.

லாலு ஆட்சியில் கொடிகட்டிப் பறந்த சாதி அரசியலுக்கு நிதீஷ் குமார் வேட்டு வைத்து விட்டார் என்று கூறுகிறார்கள். லாலுவின் கூட்டணியில் யாதவ் சாதியும், முசுலீம்களும்தான் பிரதானமானவர்கள். யாதவ் சாதியில் உள்ள பண்ணையார்களே லாலு ஆட்சியில் கொழித்தார்கள் என்பதால் ஏழை யாதவ மக்கள் லாலுவை இப்போது புறக்கணித்திருப்பதும் இயல்பானதுதான். இசுலாமிய மக்களைப் பொறுத்தவரை இந்து மதவெறியரை யாரும் எதிர்க்க முடியாது என்ற அவலமான யதார்த்தத்தில் அவர்களுக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை. மத ஒடுக்குமுறையை விட பொருளாதார ஒடுக்குமுறை அதிகம் இருக்கும் காலத்தில் அவர்கள் அரசியல் பார்வையும் தேவையும் கூட மாறத்தான் செய்யும்.

எனவே பீகாரில் உள்ள சாதி ஆதிக்கம் இன்னமும் மாறிவிடவில்லை. ரன்பீர் சேனா முதலான ஆதிக்க சாதி கிரிமினல் படைகள், மற்றும் சங்கங்களில் பா.ஜ.க, ஜனதா தளம், காங்கிரசு கட்சியினர்தான் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர். ஆக வர்க்க ரீதியில் நடுத்தர வர்க்கத்தையும் சாதி ரீதியில் ஆதிக்க சாதிகளையுமே நிதீஷ் குமார் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இயல்பாகவே ஆதிக்க சாதியை முன்னிறுத்தும் பா.ஜ.க இந்த தேர்தலில் பெருவெற்றி பெற்றிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது. எனவே நிதிஷ் குமார் வெற்றி சாதியை ஒழித்திருக்கிறது என்று கூறுவது அறியாமை. உண்மையில் மீண்டும் ஆதிக்க சாதிகள் தழைத்தோங்குவதையே இந்த வெற்றி அமல்படுத்தப் போகிறது.

ஆனால் இந்த முறை அது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அதாவது ஆதிக்க சாதியின் ஒடுக்குமுறை சமூக அளவில் இருப்பதை விட அரசு எந்திரத்தின் மூலமாக நடந்தேறும். என்ன இருந்தாலும் நிதிஷ் குமாரின் ஆட்சி சட்டத்தின் ஆட்சியல்லவா?

பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு நரேந்திரமோடியை அனுமதிக்க கூடாது என்று நிதீஷ் குமார் தடை போட்டது சிறுபான்மை மக்களிடத்தில் கொஞ்சம் அபிமானத்தை பெற்றிருக்கலாம். ஆனால் அதனாலேயே பா.ஜ.க சைவப்புலி என்றாகி விடாது. அவர்கள் இந்துத்வ கொள்கைகளில், கலவர வழிமுறைகளில் இன்னமும் உறுதியாகத்தான் இருக்கிறார்கள். பீகாரைப் பொறுத்தவரை சந்தர்ப்பவாதமாக மதவெறி முகத்தை மறைத்துக் கொள்கிறார்கள், அவ்வளவே.

பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்
கொண்டாட்டத்தில் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள்

பீகார் அனுபவத்தை வைத்துக் கொண்டு பா.ஜ.க தனது மதத் தீவிரவாதத்தை கைவிட வேண்டுமென ஊடக அறிவாளிகள் விரும்புகின்றனர். அப்படிப்பார்த்தால் குஜராத் அனுபவத்தை என்ன செய்வது?  குஜராத்திலும் பெருங்கலவரத்தின் மூலம் இசுலாமிய மக்களை இனப்படுகொலை செய்து பின்னர் வளர்ச்சித் திட்டங்கள் என்று பேசி மோடி இருமுறை ஆட்சியை பிடிக்க வில்லையா? வளர்ச்சித் திட்டங்களும், வன்முறைக் கலவரங்களும் குஜராத்தில் பலித்திருப்பதை வைத்து அதையே முழு இந்தியாவுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று தீவிர ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் சொல்கிறார்கள்.

மேலும் குஜராத்தில் பேசப்படும் வளர்ச்சித் திட்டமும் கணிசமாக முதலாளிகள், மேட்டுக்குடியினர், நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியலோடு சம்பந்தப்பட்டதுதான். ஏற்கனவே முன்னேறிய மாநிலமாக இருக்கும் குஜராத்தில் மதவெறியும், பொருளாதார முன்னேற்றமும் வியக்கத்தக்க அளவில் ஒன்று சேர்ந்திருக்கிறது. எனவே பா.ஜ.க இன்னமும் இந்த பாதையிலேயே பயணிப்பதற்கு குஜராத் முன்னுதாரணமாக இருக்கிறது.

ஆனால் குஜராத் மாதிரியை வைத்து வட இந்தியாவில் பா.ஜ.க காலூன்ற முடியாது என்பது பீகாரைப் பொறுத்த வரையில் உண்மைதான். குஜராத்தை தாண்டி செல்வாக்கு இல்லாத மோடியை பிரதமர் ஆக்கும் கனவும் சில இந்து மதவெறியர்களுக்கு உண்டு. அதை தாராளமய ஆதரவு பா.ஜ.க தலைவர்கள் விரும்புவதில்லை. அவர்களுக்கு வேண்டுமானால் பீகார் வெற்றி இனித்திருக்கலாம். எனினும் முழுமையில் இந்துமதவெறியை அடிப்படையாக கொண்டுஇயங்கும் பா.ஜ.கவை அனைத்து பிரிவு இந்து மதவெறியர்களும் ஒரே மாதிரிதான் பயன்படுத்துகிறார்கள். காங்கிரசு, லாலுவை எதிர்ப்பதற்காக பா.ஜ.க உடன் ஒரு விரும்பாக் கூட்டணியை வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நிதீஷ் குமார் இருப்பதாகவும் சொல்ல முடியும்.

ஆக கூட்டிக் கழித்து பார்த்தால் சந்தர்ப்பவாதம் என்ற ஒன்றைத் தவிர இந்தக் கூட்டணியில் வேறு எதுவுமில்லை. நடுத்தர வர்க்க நலனுக்கு பொருத்தமாகவும் பா.ஜ.க கூட்டணி அமைந்திருப்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். முக்கியமாக பா.ஜ.க என்ற மதவெறி கட்சிக்கு கூட்டணி அந்தஸ்தும், பெருவெற்றியும் அளித்திருக்கும் நிதீஷ் குமாரின் சந்தர்ப்ப வாதம் அவரது நேர்மையின் இலட்சணத்தை வெளிக்காட்டுகிறது.

நிதீஷ் குமாரின் எளிமை, ஊழலின்மை,  போன்ற இமேஜை வைத்து பா.ஜ.க இது ஊழலுக்கு எதிரான மக்கள் தீர்ப்பு என்று கூவுகிறது. பீகார் வெற்றிக்காக இனிப்பு சாப்பிட்டு கொண்டாடும் தலைவர்கள் அந்த இனிப்பு தொண்டைக்குள் இறங்குதற்குள் ஊழல் மன்னன் எடியூரப்பா பதவியில் தொடரலாம் என்று கூறுகிறார்கள். ஏனிந்த இரட்டை நிலை? இங்கும் கொள்கையல்ல, சந்தர்ப்பவாதமும், சாதியவாதமும்தான் காரணங்கள். எடியூரப்பாவை விலக்கினால் லிங்காயத்து சாதி மக்களது அதிருப்தியை பெறவேண்டியிருக்கும் என்பதாலும், அடுத்து ஊராட்சி தேர்தல்கள் வர இருப்பதாலும் பா.ஜ.க இந்த ஊழல் மன்னனை தெரிந்தே ஆதரிக்கிறது. இது தெரிந்தே எடியூரப்பாவும் தெனாவெட்டாக பேசுகிறார்.

சந்தடி சாக்கில் நிதீஷ் குமார் அடுத்த பிரதமர் போட்டிக்கு வருவாரா என்று ஊடகங்கள் அவரை உசுப்பி விடுகின்றன. ஆனால் பீகாரில் ஒன்மேன் ஷோ நடத்தும் அவர் இந்தியாவிலும் அப்படி நடத்துமளவு செல்வாக்கு கொண்டவர் அல்ல. சாதிகளாலும், மதங்களாலும், மொழிகளாலும் பிளவுண்டிருக்கும் மக்களை இணைக்க வல்ல அரசியலை கொண்டிராத ஓட்டுக் கட்சிகள் குறிப்பிட்ட அளவில் அத்தகைய இனபேதங்களை தூண்டி விட்டே கட்சி நடத்துகின்றனர். அதனால் இவர்கள் வட்டார அளவில்தான் வண்டி ஓட்ட முடியுமே அன்றி தேசிய அளவில் எழ முடியாது.

அதற்கு காங்கிரசு கட்சி வாங்கியிருக்கும் மரண அடியைக் கூறலாம். ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் எல்லோரும் ஹெலிகாப்டரில் பறந்து படையெடுத்து பிரச்சாரம் செய்தார்கள். கடைசியில் நான்கு தொகுதிகளைத்தான் தேற்ற முடிந்தது. ராகுலை அடுத்த பிரதமர் என்று பேசுபவர்கள் எல்லாம் பீகாரில் அவரை எவரும் சீண்டக்கூட வில்லை என்ற உண்மையை அறிந்தவர்கள்தான். நாளைக்கு ராகுலே அப்படி ஒரு பிரதமராக வந்தால் கூட அது அவரது சொந்த செல்வாக்கில் நடக்கப் போவதில்லை. சந்தர்ப்பவாதக் கூட்டணிதான் அதை தீர்மானிக்கப் போகிறது.

அதன்படி நிதீஷ் குமார் பா.ஜ.கவை கழட்டிவிட்டு காங்கிரசு கூட சேர்வதற்கும் புரோக்கர்கள் முயல்வார்கள். அப்படி ஒரு புரளி உலாவந்தால் பா.ஜ.கவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்று நிதீஷும் அதை உசுப்பி விடலாம்.

ஆக பீகாரின் தேர்தல் முடிவுகள் எந்த நல்ல செய்தியையும் கொண்டிருக்கவில்லை. ஜனநாயகத்தின் அதே அழுகுணி ஆட்டங்கள்தான் தொடருகின்றன. உண்மையான மாற்று அரசியல் சக்தி இல்லாதவரை மக்களும் இந்த ஆட்டத்தையே ஆடியாக வேண்டும். வேறு வழி?

அயோத்தி தீர்ப்பு – நீதித்துறை பேசும் காவி மொழியை அம்பலமாக்கும் அரங்ககூட்டம்!

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு எழுப்பும் சில கேள்விகள்!!!

  • மசூதியை பாபர் தான் கட்டினார் என்பதற்கு ஆதாரம் கேட்ட நீதிமன்றம், ராமன் அங்கு தான் பிறந்தான் என்பதற்கு நம்பிக்கையை ஆதாரமாக ஏற்றது ஏன்?
  • ராமஜென்ம பூமி இந்து நம்பிக்கை என்றால், சூத்திரன் (தேவடியாள் மகன்), தலித்துகள், பார்பனர் அல்லாதோர் அர்ச்சகர் ஆகக் கூடாது, தமிழ் – நீச பாசை, இவற்றையெல்லாம் இந்துமத நம்பிக்கை என ஏற்று நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்குமா?
  • நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு என்றால், உயர்நீதி மன்றம் இருக்கும் இடத்தை நம்பிக்கை அடிப்படையில் யாராவது உரிமை கோரினால் கரசேவை நடத்தி இடித்துவிடலாமா?
  • ப.ஜ.க ஆட்சியின் போது (2003) தொல்லியல் துறை முன்வைத்த அகழ்வாராய்ச்சி அறிக்கையே தீர்ப்புக்கு முக்கிய ஆதாரம் என்றால் அதை ரகசியமாக வைத்திருப்பது ஏன்?
  • 1886 லேயே இரண்டாம் மேல் முறையீட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்ட பாபர் மசூதி இடத்திற்கான வழக்கு, மீண்டும் 1950ல் புதிதாக தொடரப்பட்டதே, ராமனுக்கு மட்டும் முன் தீர்ப்பு தடை (Res judicata) கிடையாதா?
  • கடவுளர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்களா? அப்பாற்பட்டவர்களா? கடவுளர்களுக்கு சொத்துரிமை, குற்றவியல் நடவடிக்கைகள் பொருந்துமா? பொருந்தாதா? ராமாயணம் வரலாறா? கற்பனை கதையா?
  • இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மதசார்பற்றது என்பது உண்மைதானா?
  • அயோத்தி தீர்ப்பு ஒரு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு என்ற உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், முன்னால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜீந்தர் சச்சார் போன்றவர்களின் விமர்சனம் சரியானதா? தவறானதா?
  • 1949 ல் பாபர் மசூதிக்குள் ராமன் சிலை வைக்கப்பட்டதை ஒப்புக்கொள்ளும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அதனை அகற்ற உத்தரவிடாமல் சட்ட அங்கீகாரம் வழ்ழங்கியது ஏன்?
  • 1992 ல் பாபர் மசூதி சங்பரிவார கும்பலால் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது குறித்து தீர்ப்பு மவுனம் காக்கும் மர்மம் என்ன?
  • 500 ஆண்டுகளுக்கு ராமன் கோவில் இடிக்கப்பட்டதாக கூறி மசூதியை இடிக்கலாம் என்றால், நாகப்பட்டினத்தில் இருந்த புத்த விகாரத்தை கொள்ளையடித்து தான் திருச்சி திருவரங்க கோவில் (ஸ்ரீரங்கம்) கட்டப்பட்டதாக “கோயியொழுகு” என்ற வைனவ வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளதே, எனில் திருவரங்கம் கோவிலை இடித்து புத்தவிகாரம் கட்டலாமா?
  • அயோத்தி பிரச்சனை சட்டப்பிரச்சனையா? அரசியல் பிரச்சனையா?
  • இடித்தவனுக்கு மூன்று பங்கு, இழந்தவனுக்கு ஒரு பங்கு – இது தான் சமூக நீதியா?
  • அயோத்தி தீர்ப்பு சட்டப்படியான தீர்ப்பா? அல்லது கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பா?

கேள்விகளுக்கு விடை காண வாருங்கள்…

நிகழ்ச்சி நிரல்:

அரங்கக்கூட்டம்

தலைமை : திரு.க.சுரேஷ், வழக்குரைஞர்,  செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

கருத்துரை :

”நீதித்துறை பேசும் காவி மொழி” திரு.எஸ்.பாலன், வழக்குரைஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.

“அயோத்தி முதல் ராமன் பாலம் வரை” திரு.ஆர்.சகாதேவன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

“அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தீ பரவட்டும்” திரு.எஸ்.ராஜு, வழக்குரைஞர், மாநில ஒருங்கினைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

விவாத அரங்கம் :

வாக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்ப்பு! அனைவரும் வாரீர்!

நாள் : 28.11.2010, ஞாயிறு மாலை 4.30 மணி

இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை -17.

தோழமையுடன் அழைக்கும்,

மனித உரிமை பாதுகாப்பு மையம்

தொடர்புக்கு :
க.சுரேஷ் – 98844 55494
வினவு – 97100 82506

________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: