Saturday, August 2, 2025
முகப்பு பதிவு பக்கம் 793

கோவைத் தொழிலாளி வர்க்கத்திடையே ஒரு புத்தெழுச்சி!

37

கோவை என்.டி.சி தொழிற்சங்கத் தேர்தல்: பு.ஜ.தொ.மு மாபெரும் வெற்றி!

கோவை என்.டி.சி தொழிற்சங்கத் தேர்தல்: பு..தொ.மு மாபெரும் வெற்றி!

தமிழகத்திலுள்ள என்.டி.சி. எனப்படும் தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமான 7 ஆலைகளிலும் டிசம்பர் 18ம் தேதியன்று தொழிற்சங்க அங்கீகாரத்துக்காக நடைபெற்ற தேர்தலில், கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (இணைப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி) பெருவெற்றி பெற்றிருக்கிறது.

மொத்த வாக்குகளில் முதலிடத்தை தொ.மு.ச வும் (2 பிரதிநிதிகள்) இரண்டாமிடத்தை பு.ஜ.தொ.மு வும், (ஒரு பிரதிநிதி)  மூன்றாமிடத்தை சி.ஐ.டி.யு வும் (ஒரு பிரதிநிதி), நான்காம் இடத்தை ஐ.என்.டி.யு.சி யும் (ஒரு பிரதிநிதி) பெற்றிருக்கின்றன.

1974 இல் தேசிய பஞ்சாலைக் கழகத்தின் ஆலைகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து கடந்த 36 ஆண்டுகளில் தேர்தல் என்ற ஒன்றை என்.டி.சி மில் தொழிலாளிகள் கண்டதில்லை. தேர்தலை நடத்தவேண்டும் என்பதற்காக கோவையில் இருந்த எந்த கட்சியின் தொழிற்சங்கமும் போராடியதில்லை. தேர்தலே நடக்காமல் இருப்பது நிர்வாகத்துக்கு மட்டுமல்ல, தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் வசதியானதாகவே இருந்தது. தொழிலாளர்களின் அங்கீகாரத்தைப் பெறாமலேயே,. அவர்களுக்கு பதில் சொல்லும் தேவை இல்லாமலேயே, அவர்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கும் அதிகாரத்தை இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் பெற்றிருந்தனர். நிர்வாகமும் தேர்தலே இல்லாமல் இவர்களையெல்லாம் பிரதிநிதிகளாக அங்கீகரித்திருந்தது.

தொழிலாளி வர்க்கத்தின் மீது சதித்தனமாகத் திணிக்கப்பட்டிருந்த இந்தக் கட்டைப் பஞ்சாயத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், தேர்தலை நடத்த வைப்பதற்கும் பு.ஜ.தொ.மு தொடர்ந்து போராடியது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, தேர்தல் நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தியது.

தேர்தல் நடத்தப்பட்டால் பு.ஜ.தொ.மு வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சத்தினாலும், 36 ஆண்டுகளாக வழக்கத்தில் இல்லாத ஜனநாயக உரிமையை தொழிலாளி வர்க்கத்துக்கு வழங்கினால் நேரக்கூடிய அபாயம் குறித்த கவலையினாலும் உறக்கம் இழந்த தொழிற்சங்கத் தலைமைகள், ஒரு கூட்டுக் கமிட்டி அமைத்து தேர்தலுக்கு இடைக்காலத் தடையாணை வாங்க அரும்பாடு பட்டனர். இன்று தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றிருக்கும் சங்கங்கள்தான் தேர்தலை முடக்குவதற்கு மும்முரமாக வேலை செய்தன. சட்டத்தில் சந்து கண்டுபிடித்து தேர்தலை தடுப்பதற்கு இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் முறியடித்த பின்னர்தான் இந்த தேர்தல் நடைபெற்றிருக்கிறது.

எனவே, நடந்து முடிந்த தேர்தலில் பு.ஜ.தொ.மு பெற்ற வெற்றியினைக் காட்டிலும், இந்தத் தேர்தலை நடத்த வைத்ததுதான் பு.ஜ.தொ.மு வின் முதன்மையான வெற்றி.

தேர்தலை நடத்தியாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு நிர்வாகம் பணிய நேர்ந்த போதிலும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்று சண்டித்தனம் செய்தது. ஆண்டுக்கணக்கில் தற்காலிகத் தொழிலாளர்களாக வைக்கப்பட்டிருக்கும் சுமார் 1600 தொழிலாளர்களின் வாக்குரிமையை மறுக்க முடியாது என்றும் 240 நாட்கள் வேலை செய்த எல்லாத் தொழிலாளிகளுக்கும் நிரந்தரத் தொழிலாளிகளுக்குரிய உரிமைகள் உண்டு என்றும் போராடி, சுமார் 600 தற்காலிகத் தொழிலாளிகளுக்கு வாக்குரிமை பெற்றுத் தந்தது பு.ஜ.தொ.மு.

மீதமுள்ள சுமார் 1000 தற்காலிகத் தொழிலாளிகளுக்கு வாக்குரிமையை மறுப்பதன் மூலம் தேர்தலைத் தள்ளிப்போட சதி செய்தது நிர்வாகம். இந்தச் சதியைப் புரிந்து கொண்டதனால், தேர்தலை நடத்த வைத்து, 1000 தொழிலாளிகளின் வாக்குரிமை குறித்த பிரச்சினைக்கு அதன் பின் போராடுவது என்று முடிவு செய்தது பு.ஜ.தொ.மு. தற்காலிகத் தொழிலாளிகள் என்று வரையறுக்கப்பட்ட சுமார் 600 தொழிலாளிகளுக்கு வாக்குரிமையைப் பெற்றதன் மூலம், அவர்களுடைய பணி நிரந்தரத்துக்கான உரிமைக்கு கால் கோள் இடப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் பு.ஜ.தொ.மு ஈட்டிய இரண்டாவது வெற்றி இது.

மூன்றாவது வெற்றிதான் பு.ஜ.தொ.முவின் தேர்தல் வெற்றி. இந்த வெற்றியும் எளிதில் அடையப்பட்டதல்ல. தேர்தல் நடைபெற்ற 7 மில்களில் ஒரு மில்லில் மட்டுமே கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் இயங்கி வருகிறது. அதனுடைய செயல்பாடு ஏற்படுத்திய தாக்கம்தான் எல்லா மில்களிலும் உள்ள தொழிலாளர்களை பு.ஜ.தொ.மு வை நோக்கி ஈர்த்திருக்கிறது.

பல என்.டி.சி ஆலைகள் நட்டம் என்று பொய்க்கணக்கு காட்டி மூடப்பட்டும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டும், இருக்கின்ற மில்களில் 20 ஆண்டுகளாக ஊதிய உயர்வு ஒப்பந்தமே இல்லாமல் கிடப்பில் போடப்பட்டும், எதுவும் செய்ய இயலாமல், 36 ஆண்டுகளாக தொழிற்சங்கத் தேர்தல் கூட இல்லாமல், கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வந்த தொழிலாளர்களைத் தனது பிரச்சாரத்தின் மூலம் தட்டி எழுப்பியது பு.ஜ.தொ.மு. வெறுமனே எங்களுக்கு வாக்களியுங்கள் என்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரங்கள் அல்ல இவை.

தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் எவை, அவை மறுக்கப்படுவதற்கான காரணங்கள் என்ன, இன்றைய ஜவுளித்துறை நெருக்கடியின் ஊற்றுமூலம் எது என்று தொழிலாளர்களுக்கு விளங்க வைத்தன இப்பிரச்சாரங்கள். எண்ணற்ற ஆலை வாயிற்கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள், துண்டறிக்கைகள்… அனைத்துப் பிரச்சார செலவுகளுக்கும் நிதி கொடுத்து ஆதரித்தவர்கள் தொழிலாளர்கள். தொழிலாளர்களிடம் பு.ஜ.தொ.மு பெற்றது கொள்கை ரீதியான ஆதரவு.

இத்தேர்தலில் தற்போது 2 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தி.மு.கவின் தொ.மு.ச, தனது கொள்கையான “பிரியாணியையும் பாட்டிலையும்” வைத்து சுமார் 10 இலட்ச ரூபாய் செலவு செய்து பிரச்சாரம் செய்தது. ஒரு ஓட்டுக்கு அவர்கள் செய்த செலவு சுமார் 1600 ரூபாய்.

பிரியாணியையும், பாட்டிலையும், சாதியையும் காட்டி, அந்த ஒரு நாளில் மயக்கத்திலாழ்த்தி தொழிலாளிகளின் ஓட்டை அவர்கள் அபகரித்திருக்கலாம். ஆன்ல் தொழிலாளி வர்க்கத்தின் நம்பிக்கையை அவ்வாறு அபகரிக்க முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் யாரோ, போராடக் கற்றுக் கொடுப்பவர்கள் யாரோ அவர்கள் மட்டும்தான் தொழிலாளியின் நம்பிக்கையைப் பெற முடியும்.

பிரியாணிப் பொட்டலக்காரர்களுக்கு இந்த உண்மை தெரியாததல்ல. அது தெரிந்ததனால்தான் முடிந்த வரையில் தேர்தலே நடக்காமல் அவர்கள் தடுக்கப் பார்த்தார்கள்; முடியவில்லை. “அவர்கள் தீவிரவாதிகள்” என்று முத்திரை குத்தி அச்சுறுத்திப் பார்த்தார்கள்; தொழிலாளிகளுக்கு தங்களது எதிர்காலத்தைக் குறித்த அச்சத்தைக் காட்டிலும் பெரிய அச்சத்தை இந்த தீவிரவாதப் பூச்சாண்டி ஏற்படுத்திவிடவில்லை. “அவர்களுக்கு எம்.எல்.ஏ, எம்.பி இல்லாததால் அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்தி கோரிக்கைகளைப் பெற இயலாது” என்று சொல்லிப்பார்த்தார்கள்; “எம்.எல்.ஏ இல்லை” என்ற உண்மை, தொழிலாளிகள் மத்தியில் பு.ஜ.தொ.மு வின் செல்வாக்கை அதிகரிப்பதற்கே பயன்பட்டது.

கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (பு.ஜ.தொ.மு) வெற்றியும் பெற்று விட்டது. “இந்த வெற்றி கோவையில் உள்ள தனியார் பஞ்சாலைத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தோற்றுவித்திருக்கிறது என்றும் தங்கள் மில்லில் சங்கம் தொடங்க வருமாறு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன” என்றும் கூறுகிறார், கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் செயலர், தோழர் விளவை இராமசாமி.

கோவை நகரின் பஞ்சாலை முதலாளிகளிடம் இந்த வெற்றி என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்? ரங்கவிலாஸ், ஸ்டேன்ஸ் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டத்தையும், சின்னியம்பாளையம் தியாகிகளின் போர்க்குணத்தையும் அவர்களுக்கு நினைவு படுத்தியிருக்குமோ? அல்லது, பிரட்டிஷ் காலனியாதிக்க ஆட்சியில் நடைபெற்ற போராட்டங்கள் என்பதால் அவை பழங்கதைகள் என்று முதலாளிகள் இறுமாந்திருப்பார்களா?

காலனியாதிக்கம், இன்று புதிய வடிவில் மறுகாலனியாக்கமாகத் திரும்பியிருக்கும்போது, தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாறு மட்டும் திரும்பாதா என்ன? திரும்ப வைப்போம்!

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஓசூர் கமாஸ் தொழிலாளர்களின் மாபெரும் வெற்றி ! பொதுக்கூட்டம்!!

ஓசூர் கமாஸ் வெக்ட்ரா ஆலையில் தொடர்ச்சியான போராட்டத்திற்கு பிறகு நிர்வாகத்தை பணிய வைத்து ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஒன்றை போட வைத்திருக்கிறார்கள், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள். ஓசூர் தொழிலாளர் வரலாற்றில் இது ஒரு மைல் கல் என்றால் மிகையல்ல. அதை ஒட்டி பு.ஜ.தொ.மு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதற்காக தொழிலாளர்களிடம் விநியோகிக்கப்பட்ட பிரசுரத்தை இங்கே வெளியிடுகிறோம்

– வினவு


ஓசூர் கமாஸ் தொழிலாளர்களின் மாபெரும் வெற்றி! பொதுக்கூட்டம்!!

அன்பார்ந்த தொழிலாளர்களே,

ஓசூரில் செயல்படும் கமாஸ் வெக்ட்ரா ஆலையில் சென்ற மார்ச் மாதம் 33 தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் பெறுவதற்கும், சங்கம் வைக்க அங்கீகாரம் பெறுவதற்கும் நாங்கள் மேற்கொண்ட போராட்டங்களைப் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இன்று பணி நிரந்தரம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கும் ரூ. 11000 நேரடி ஊதிய உயர்வு பெற்றுத் தந்துள்ளோம். மேலும், மூன்று வகைக் காப்பீடுகள் மற்றும் கிப்ட் என்ற வகையில் ஆண்டு தோறும் ரூபாய் 5000, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூபாய் 2400 மதிப்புள்ள ஜெர்கின், நல்லெண்ணத் தொகை என்ற வகையில் ரூபாய் 5500 மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றுத் தந்துள்ளோம். இது ஒரு மாபெறும் வெற்றி! ஓசூரில் உள்ள ஒட்டுமொத்த தொழிலாளர்களும், “ஒசூர் வரலாற்றிலேயே இந்த ஒப்பந்தம் மாபெறும் சாதனை, இப்படி ஒரு ஒப்பந்தத்தை இதுவரை நிறைவேற்றிப் பார்த்ததில்லை. தொழிலாளி என்ற வகையில் பெருமையாக இருக்கிறது.” எனப் பாராட்டுகிறார்கள், வியக்கிறார்கள்!

முதலாளித்துவப் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட போராடி வரும் எங்களுக்கு ஒரு பன்னாட்டுக் கம்பெனி நிர்வாகத்தைப் பணிய வைத்தது என்ற வகையில் இது மாபெரும் வெற்றியே!  அதாவது பணி நிரந்தரத்திற்காக கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர்க்ளின் வெற்றி ஓசூரில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு விழுந்த முதல் அடி என்றால், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின் வெற்றி என்பது அதன் அடுத்த படி!

கமாஸ் வெக்ட்ராவில் இதற்கு முன்பு இரு முறை சங்கம் கட்ட முயன்று தொழிலாளர் தலைமையில் இருந்தவர்களின் துரோகத்தால் கலைந்து விட்டது. இதனால், தொழிலாளர்கள் தொழிற்சங்கம் கட்டுவதிலேயே நம்பிக்கையின்றி இருந்தனர். எமது தோழர்களின் கடுமையான முயற்சியால் மட்டுமே தொழிற்சங்கம் கட்டப்பட்டது. தொழிற்சங்கம் கட்டியது முதல் இன்று வரை நிர்வாகத்தின் சூழ்ச்சிகளுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றுள்ளோம். பணி நிரந்தரம் செய்வதற்காக நாங்கள் சட்டத்தை மட்டும் நம்பி இருக்கவில்லை. அரசையும், ஆலை நிர்வாகத்தையும் நிர்பந்திக்கும் வண்ணம் பல போராட்டங்களை நடத்தினோம். எங்களது முதல் கட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றோம்.

அடுத்து, ஊதிய உயர்வு ஒப்பந்தம், நாங்கள் கோரிக்கை மனு கொடுத்தவுடனேயே நிர்வாகம் ஒப்பந்தத்தை எளிதாக முடித்துவிடவில்லை. “2500 ரூயாய்தான் ஊதிய உயர்வு தரமுடியும், வேணும்ணா நீங்க ஸ்ட்ரைக் பண்ணிக்கங்க.” என்று அடாவடித்தன் செய்தது நிர்வாகம். தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியது. தினமும் ஒரு காரணத்தைக் கூறி ஒப்பந்தத்தை தள்ளிப் போட்டது. இவற்றை எதிர்கொண்டு பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைமையின் வழி காட்டுதலின்படி செயல்பட்டோம். ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஐந்து மாதத்திலேயே பேசி முடித்தோம். நிர்வாகத்தின் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து வெற்றி பெற்றோம்!

நிரந்தத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் பேசி முடிப்பதோடு நாங்கள் நின்று கொள்ளவில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் போனசு வழங்கக் கோரி நிர்வாகத்திடம் போராடி வருகிறோம். தற்காலிகத் தொழிலாளர்களுக்கு ரூ.4500 லிருந்து ரூ.6000 ஆக ஊதியத்தை பேசு முடித்துள்ளோம். ஆலையில் புதிதாக ஆள் எடுப்பு செய்வதாக இருந்தால் இவர்களுக்கு மட்டும்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை பேசி முடித்துள்ளோம்.

__________________________________________________

“நக்சல்பாரிகள் என்றால் தீவிரவாதிகள்; குண்டு வைப்பவர்கள்; அவர்களுடன் சேர்ந்தால் நாளைக்கு உங்களுக்கு நல்லதல்ல; இப்பப் பிரச்சினை இல்லைன்னாலும் என்னைக்கும் பிரச்சினைதான்” என்று கமாஸ் தொழிலாளர்களுக்கு உபதேசிக்காதவர்கள் இல்லை. உண்மையில் யாரை தீவிரவாதிகள், யாருடன் சேர்ந்தால் வாழ்க்கை பறிபோகும் என்றெல்லாம் பேசினார்களோ, அந்த நக்சல்பாரிகளாகிய எங்கள் சங்கத்தில் சேர்ந்துள்ளதால்தான் கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர்களின் வாழ்க்கை உத்தரவாதம் செய்யப்பட்டது. நிரந்தர வேலை, எல்லோரும் மெச்சும்படியான ஊதிய உயர்வு கிடைத்துள்ளது. இதுதான் உண்மை!

நக்சல்பாரிகளாகிய நாங்கள்தான் உண்மையான கம்யூனிஸ்டுகள். நாங்கள் முதலாளிகளுக்கு அழிவு சக்தி! உழைக்கும் மக்களுக்கு ஆக்க சக்தி!  அதனால்தான் முதலாளிகள் எங்கள் பெயரை கேட்டவுடனேயே ஓங்கிக் கூச்சலிடுகிறார்கள்.

உற்பத்தியை சீர்குலைப்பவர்கள் நக்சலைட்டுகள் என்று முதலாளிகள் சொல்கிறார்கள். உற்பத்தியை சீர்குலைப்பதல்ல, எங்களது நோக்கம்.முதலாளித்துவ உற்பத்தி தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் பஞ்சத்திலும் பட்டினியிலும் தள்ளுகிறது என்பதைதான் எதிர்க்கிறோம்! அன்னிய பன்னாட்டுக் கம்பெனிகளால், உள்நாட்டு தரகு முதலாளித்துவ கம்பெனிகளால் ஒட்டு மொத்த உள்நாட்டுத் தொழில்கள் அழிக்கப்படுவதையும் விவசாயம் அழிக்கப்படுவதையும் எதிர்க்கிறோம். மக்கள் அனைவருக்கும் இயற்கையில் உள்ள எல்லாப் பொருள்களும் பொது என்பதே எங்கள் கொள்கை. இதனால் எல்லோரும் எல்லா நன்மைகளும் பெறவேண்டித்தான் போராடுகிறோம்.

நாங்கள் எப்போதும் முதலாளிகளுடன் சமரசம் செய்து கொள்வதில்லை. நாங்கள் கொண்ட கொள்கைக்கு நேர்மையாக செயல்படுபவர்கள்.“அட்ஜெஸ்மெண்ட் இல்லாம தொழிற்சங்கத்தை நடத்த முடியாது” என்று எங்களுக்கு பிழைப்புவாதத் தலைவர்கள் உபதேசிக்கிறார்கள்.ஆனால்முதலாளிகளுடன்சமரசம்செய்துகொள்வது தொழிலாளர்களுக்கு துரோகத்தில்தான் முடியும் என்பது கண்முன்னே நாம் காணும் அனுபவம்!

“எப்பப்பார்த்தாலும் போராட்டம்  பொதுக்கூட்டம்னு கூப்பிட்டுகிட்டே இருப்பாங்க!” என்று எங்களுக்கு எதிராக எங்கள் சங்கத்தில் இணைந்தவர்களிடம் பேசி தீர்த்தார்கள். சங்கத்தைவிட்டு வெளியே வரச்சொல்லி அழைத்தும் பார்த்தார்கள். இவ்வாறு பேசுபவர்கள் வேறுயாரும் அல்ல.முதலாளிகள் பரப்பும் கலாச்சார சீரழிவுகளையே வாழ்க்கையாகக்கொண்ட சுயநலவாதிகள், அவர்களுக்கென்றே உருவாக்கப்பட்டுள்ள முதலாளித்துவ ஊடகங்கள்.

ஆம்,நாங்கள் அடிக்கடி போராட்டம், பொதுக்கூட்டம் நடத்துபவர்கள்தான். யாருக்காக? இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்காக! அன்னிய பன்னாட்டுக் கம்பெனிகளால் நமது நாடு மீண்டும் அடிமையாக்கப்படுகிறதே அதற்கு எதிராக! தினம்தோரும் என்னற்ற தொழிலாளர்கள் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு பலியாகிறார்களே அதற்கு எதிராக! விவசாயிகளின் வாழ்வு பறிக்கப்படுகிறதே அதற்கு எதிராக! நீதிமன்றம்,சட்டமன்றம், போலீசு என்ற பெயரில் உழைக்கும் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறதே அதற்கு  எதிராக!  இந்த நாட்டில் உண்மையான ஜனநாயகம் படைக்கவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வு விடியவேண்டும் என்பதற்காகத்தான் போராடுகிறோம்.

எங்களது அமைப்பின் தலைவர்கள் புகழையும் பணத்தாசையையும் விரும்பாதவர்கள்! சுகபோகத்தை விரும்பாதவர்கள்; எளிமையானவர்கள்; கட்டுப்பாடானர்வர்கள் எங்களை பாராட்டி விளம்பரங்களை நாங்களே செய்துகொள்வதுமில்லை! பிறர் எங்களுக்கு தனி நபர் விளம்பரங்கள் செய்தால் அதனை நாங்கள் அனுமதிப்பதுமில்லை! தலைமை முதல் கீழே உள்ள அணிகள் வரை துதி பாடும் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள். ஏனென்றால், நாங்கள் நக்சல்பாரிகள். உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடுபவர்கள். கம்யூனிசம் எங்களது கொள்கை!

நாங்கள் மக்களை நேசிப்பவர்கள்; மக்கள் மட்டும்தான் வரலாற்றைப் படைக்கும் மாபெரும் உந்து சக்தி என்பதை நம்புகிறவர்கள்; உழைக்கும் மக்களின் ஒற்றுமையின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்; எங்களுடைய எல்லாப்  போராட்டங்களையும் நாங்கள் மக்களிடம் கொண்டு செல்பவர்கள். அதனால்தான் எங்களின் போராட்டம் வெற்றியடைகிறது.

நாங்கள் எங்கள் அமைப்புக்கும், தலைமைக்கும் கட்டுப்பட்டவர்கள். உண்மையான ஜனநாயகத்தை நீங்கள் எங்கள் அமைப்பில் மட்டும்தான் பார்க்க முடியும். அதனால்தான், ஒரு முன்னுதாரணமிக்க ஒப்பந்தத்தை எங்களது அமைப்பின் தலைமையின் கீழ் கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர்களால் சாதிக்க முடிந்தது.

_________________________________________________

நாடு இன்று மறுகாலனியாக்கப்பட்டு வருகிறது. அன்னியப் பன்னாட்டுக் கம்பெனிகளும், உள்நாட்டுத் தரகு முதலாளித்துவக் கம்பெனிகளும் நமது நாட்டை ஒட்டச் சுரண்டுகின்றனர். தனியார்மயம்- தாராளமயம்- உலகமயம் என்ற பெயரில் நமது நாட்டின் பொதுச் சொத்து சூறையாடப்படுகிறது. கனிம வளங்கள், காடுகள், கடல் என எல்லாமே முதலாளிகளுக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளது. விவசாயம், நெசவு, சிறு தொழில்கள், வியாபாரம் மற்றும் வர்த்தகம் என எல்லாமே ஒழிக்கப்பட்டு முதலாளிகளின் நலனிற்கேற்ப மறுவார்பு செய்யப்படுகிறது. பல ஆண்டுகள் போராடிப் பெற்ற  உரிமைகள் எல்லாம் பறிக்கப்படுகிறது. கல்வி, சுகாதாரம், மருத்துவம், குடிநீர் என அரசியல் சாசனத்தில் சொலப்பட்ட எல்லா அடிப்படை உரிமைகளும் காசு உள்ளவர்களுக்கு மட்டும் சொந்தமாக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் சங்கம் வைக்க அனுமதிக்கப்படுவதில்லை. மீறி வைத்தால் சங்கம் வைக்க முயற்சிப்பவர்கள் வேலையை விட்டு விரட்டியடிக்கப்படுகிறார்கள். ஆலை மூடல் செய்து ஆட்டம் போடுகிறது முதலாளித்துவம். இதற்கு சட்டமும், நீதியும் சேவை செய்கிறது. அரசோ வாழ்த்தி வரவேற்கிறது.

இன்றுள்ள பிழைப்புவாத தொழிற்சங்க தலைமையோ முதலாளிகளின் வாதத்தையே தொழிலாளர்களுக்கு உப்தேசிக்கிறார்கள். போராட்டம் செய்யக் கூடாது என்று வழி நடத்துகிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள், தற்காலிகத் தொழிலாளர்கள், அமைப்பு சாராத் தொழிலாளர்கள் என்று தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்துகிறார்கள். இந்த உலகத்தையே படைத்த தொழிலாளி வர்க்கத்தை புழுக்களைவிட கேவலமாக நடத்துகிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் எதிர் திசையில் போராட வேண்டிய கடமை தொழிலாளர் வர்க்கத்திற்கு உள்ளது. தொழிலாளர்கள் ஓரணியில் திரளவேண்டியுள்ளது. அந்த வகையில் போராடும் பு.ஜ.தொ.மு.வில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்!

  • முதலாளித்துவ பயங்கரவாதத்தை புதைக்குழிக்கு அனுப்புவோம்!
  • ஓசூரை தொழிலாளர் வர்க்கக் கோட்டையாக்குவோம்!
  • நாட்டின் விடுதலைக்காகவும் தொழிலாளர் உரிமைகளை மீட்பதற்காகவும் போராடுவோம்!
  • புதிய ஜனநாயகக் குடியரசமைப்போம்!
  • 19-12-2010

    மாலை 3 மணிக்கு

    இரயில் நிலையத்திலிருந்து ஊர்வலம்

    தலைமை: தோழர் சங்கர் மாவட்டச் செயலர், கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்

    மாலை 4.30 மணிக்கு

    ராம்நகர் அருகில் பொதுக்கூட்டம்

    தலைமையுரை;

    தோழர்.பரசுராமன்.மாவட்டத்தலைவர்,கிருஷ்னகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்

    மாலை 4.45 மணிக்கு வாழ்த்துரை;

    தோழர்.மாதையன்.செயலர்,ஏடிசி தொழிலாளர் சங்கம்,ஓசூர்,

    தோழர்.ஜி.விஜயகுமார்,செயலர்,எக்சைடுதொழிலாளர்சங்கம்,ஓசூர்,

    தோழர்.முரளி,துணைத்தலைவர்,பேட்டாதொழிலாளர் சங்கம்,ஓசூர்,

    தோழர்.மாதையன், துணைத்தலைவர்,டிடிகே தொழிலாளர் சங்கம்,ஓசூர்,

    தோழர்.அகஸ்டின்,வெக்ட்ராஅசாத்  கம்பெனி,அத்திப்பள்ளி,கர்நாடகா,

    தோழர்.சம்பங்கி ராமப்பா,தலைவர்,குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கம்,ஓசூர்,

    தோழர்.ஜெயராமன்,ஒப்பந்தத் தொழிலாளி,ஓசூர்,

    தோழர்.கண்ணன்,செயலர்,பு.ஜ.தொ.மு கிளை,ஜிடிபி கிரானைட் தொழிலாளர் சங்கம்,சேலம்,

    தோழர்.செல்வராசு,ஓட்டுனர்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,

    தோழர்.ம.சி..சுரேஷ்குமார்,மாவட்டச் செயலர்,பு.ஜ.தொ.மு.திருவள்ளூர்,

    தோழர்.ராஜன்,எஸ்.ஆர்.ஐ,பு.ஜ,தொ.மு,கோவை,

    தோழர்.கலை.பு.ஜ.தொ.மு. புதுவை,

    மாலை 6.15 மணிக்கு

    ஏற்புரை:தோழர்.முருகன்.தலைவர்,கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர் சங்கம்,ஓசூர்,

    மாலை 6.30 மணிக்கு சிறப்புரை;

    தோழர்.சுப.தங்கராசு, மாநிலச் செயலர்,பு.ஜ.தொ.மு,தமிழ்நாடு,

    மாலை 7.45 மணிக்குபுரட்சிகர கலைநிகழ்ச்சி

    மையக்கலைக்குழு,மகஇக தமிழ்நாடு,

    மாலை 8.40 மணிக்கு நன்றியுரை;

    தோழர்.முரளி,செயலர்,கமாஸ்வெக்ட்ரா தொழிலாளர் சங்கம்,புஜதொமு,ஓசூர்.

    ______________________________________

    புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

    தொடர்புக்கு;செல்-9788011784,ஓசூர்.
    ______________________________________

    வினவுடன் இணையுங்கள்

    தொடர்புடைய பதிவுகள்

    தங்கம்: அழகா, ஆபாசமா, மகிழ்ச்சியா, வதையா?

    கோவை டவுண்ஹால் வழியாக நடந்து கொண்டிருந்தேன். பள்ளி நாட்களின் போது இங்கே ஜோலித்துக் கொண்டிருந்த தங்க நகைப் பட்டறைகளையோ, அதனால் சற்றே வளமாக வாழ்ந்து வந்த தங்கநகை ஆசாரி இளைஞர்களையோ இப்போது காணவில்லை. முழு இடமும் தன் உருவத்தை தலைகீழாக மாற்றியிருந்தது. தங்கத்தை நம்பி வாழ்ந்த அந்த மக்கள் எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்?

    பாரம்பரிய தங்கநகைத் தொழிலின் அழிவு!

    கோவையிலும் சரி, பொதுவாக நமது நாட்டிலும் சரி, தங்க நகை உருவாக்கம் என்பது முழுவதுமாக ஒரு நிலபிரபுத்துவ பாணியிலான உற்பத்தியாகவே இருந்துள்ளது. தங்க ஆசாரிகள், தமது வீடுகளிலேயே பட்டறைகளை அமைத்திருப்பர்; அவர்களது மொத்த குடும்பமும் சேர்ந்து நகை உருவாக்கத்தில் ஈடுபடும். நகை தேவைப்படுவோர் தங்கத்தை (நகையாகவோ, நாணயமாகவோ) ஆசாரியிடம் கொடுத்தால் அவர் நகையாக வார்த்துத் தருவார்.

    ஒரு நகையின் டிசைன்/ மாடல் போன்றவற்றைத் தீர்மானிப்பதிலிருந்து அதில் கல்பதிப்பது, அந்த நகையில் இருக்கும் பால்ஸ், கம்பி போன்றவைகளை டிசைனுக்குத் தகுந்தவாறு நுணுக்கமாக பொருத்துவது, மெருகூட்டுவது என்று அதன் உருவாக்கத்தின் சகல அம்சத்திலும் அந்த ஆசாரியே பங்குபெற்றிருப்பார்.

    இவ்வகையான உற்பத்தி முறையில் ஒரு நகையை உருவாக்க அதன் வேலைப்பாடுகளின் நுணுக்கத்தைப் பொருத்து ஒருவாரமோ பத்துநாளோ ஆகலாம்.

    இந்தப் பழையகால உற்பத்திமுறையில் தங்க நகை வடிவமைப்புத் தொழில் பல நூற்றாண்டுகளாக அப்படியே தேங்கி நின்றது. ஏனென்றால் நுகர்வு குறைவு. தேவைக்கதிகமாக வாங்கிப் பூட்டி வைப்பது என்பது போன்ற வழக்கங்கள் மிக மிக சில மேட்டுக்குடி குடும்பங்களிலேயே இருந்தது. மேலும் உற்பத்தி அதிகமாகி அதை சந்தையில் தள்ளியாக வேண்டும் எனும் கட்டாயமும் எழவில்லை.

    புதிய தாராளவாதக் கொள்கையின் அறிமுகம் இந்த நிலையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது. நடுத்தர வர்க்கத்தினருக்கும் புதிதாக உருவாகி வந்த சேவைத்துறை ஊழியர்களுக்கும் ஐந்திலக்க சம்பளம் என்பது சாதாரணமாகிவிட்டபடியால்ல், அத்துறைகளின் மாப்பிள்ளைமார்களுக்கும் பெற்றோர்களுக்கும் மணப்பெண் வீட்டை ரத்தம் வர கறப்பதற்கான வாய்ப்பும் கூடியது. தங்கம் ஒரு சேமிப்பு என்ற நடுத்தர வர்க்க மனோபாவத்தைக் கடந்து, அது இப்போது அந்தஸ்தின் அடையாளமாகி விட்டது.

    நகை நுகர்வின் அதிகரிப்பு, அதன் உருவாக்க முறையில் மாற்றத்தை தோற்றுவித்தது. இதன் விளைவாக அத்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடையேயும் தொண்ணூறுகளின் இறுதியிலிருந்து பெரும் மாற்றங்கள் உருவாகத் துவங்கின.

    நகைத் தொழில் அதிகமாக நடந்து வந்த கோவையில் தொண்ணூறுகளின் இறுதியில் நகைப் பட்டரைத் தொழிலாளிகள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். முன்னொரு காலத்தில் ‘ஜே ஜே’ என்று நகைப் பட்டறைகள் நடந்து வந்த சலீவன் வீதி, குரும்பர் வீதி போன்ற பகுதிகள் எழவு விழுந்த வீடுகள் போன்று ஆனது. 98ல் இருந்து இரண்டாயிரத்திரண்டாம் ஆண்டுக்குள், நான்கே ஆண்டுகளில் சுமார் 300 நகைத் தொழிலாளிகளுக்கும் மேற்பட்டோர், நகையைக் கழுவப் பயன்படும் சயனைடைத் தின்று தற்கொலை செய்துகொண்டார்கள்.

    முப்பதாயிரம் பேர்களுக்கு மேல் ஈடுபட்டிருந்த நகைத் தொழிலில் இருந்து இருபதாயிரம் பேர் காணாமல் போயினர். 2002 வாக்கில் வெறும் பத்தாயிரம் பேர் தான் ஈடுபட்டிருந்தனர். இந்த வீழ்ச்சி 98க்குப் பின்னர்தான் உணரப்பட்டது என்ற போதிலும், வீழ்ச்சிக்கான விதை அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தூவப்பட்டுவிட்டது.

    தாராளமயமும், நுகர்வுக் கலாச்சாரமும் ஊட்டிய தங்க போதை!

    1991இல் என்.ஆர்.ஐ இந்தியர்கள் இந்தியாவுக்குள் தங்கம் கொண்டு வருவதில் இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. மேலும் தங்கம் இறக்குமதி செய்வதில் இருந்த மற்ற கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ன. 1990ல் இருந்து 1998 காலகட்டம் வரை தங்கத்தின் தேவை ஆண்டுக்கு 15 சதவீதமாக வளர்ச்சியுற்றது. இது அதே காலகட்டத்தில் வளர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட, எண்ணை, சர்க்கரை உள்ளிட்ட மற்ற பொருட்களுக்கான தேவை அதிகரித்த விகிதத்தை விட, உலகளவில் தங்கத்தின் தேவை அதிகரித்த விகிதம் மிகவும் அதிகமாகும்.

    இப்படி வெள்ளமென உள்நுழைந்த தங்கம், நகை உருவாக்கத் தொழிலில் மாற்றத்தைக் கோருகிறது. அதே காலகட்டத்தில் சிறிய அளவிலான நகைக் கடைகளுக்குப் போட்டியாக வட்டார அளவிலான வீச்சு கொண்ட நகை மாளிகைகள் உருவாகத் தொடங்கின. வாடிக்கையாளர்களில் ஒரு பெரும் பகுதியினர் இனிமேலும் ஆசாரிகளிடம் சென்று நாட்கணக்கில் காத்திருந்து அவர்கள் செய்து தரும் டிசைனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற நிலை மாறத் துவங்கியது.

    கடைக்குச் சென்றோமா பத்துக்கு இருபது டிசைன்களைப் பார்த்தோமா அதில் ஒன்றைப் பொறுக்கியெடுத்தோமா என்று வேலை சுளுவாகியது. இத்தகைய மாளிகைகள், தமது ஷோரூம்களில் வைத்து விற்கும் நகைகளை ஏதாவது ஒரு பட்டறையில் தங்கப் பாளங்களைக் கொடுத்து முழு நகையாக செய்து வாங்கி வந்தன.

    இது நகைப் பட்டறைகளுக்கு விழுந்த முதல் அடி. தமது வாடிக்கையாளர்களில் பெரும் பகுதியினரை கவர்ச்சிகரமான ஷோரூம்கள் கொண்ட நகை மாளிகளிடம் அவர்கள் இழந்தனர்.

    நகை மாளிகைகளுக்கு இவர்கள் செய்து கொடுத்தாலும், லாபம் முன்பை விடக் குறைவு தான். ஆனாலும் ஓரளவுக்கு வேலையிழப்பை சமாளித்து வந்தவர்களுக்கு இன்னுமொரு இடி சங்கிலித்தொடர் நகை மாளிகைகளின் வரவால் ஏற்பட்டது. தனியார்மய, தாராளமயக் கொள்கைகளால் கொழுத்து விட்ட மேட்டுக்குடி வர்க்கம், வாழ்க்கைத்தரமும் சேமிப்பும் மேம்பட்ட நடுத்தர வர்க்கம், இவர்கள் அனைவரிடமும் நிலவிய பிற்போக்குத்தனமான நகை மோகமும், நகை முதலாளிகளுக்கு பொன்னானதொரு வாய்ப்பை, மெய்யாகவே தங்கத் தாம்பாளத்தில் வைத்து வழங்கியது.

    நகைக்கடையை சுமக்கும் மணமகள்கள்: செல்வத்தின் செருக்கு!

    நுகர்வு மோகத்துக்கான வடிகாலாகவும், அந்தஸ்தைக் காட்டிப் பீற்றிக் கொள்ளத் தோதான பகட்டாகவும், அதே நேரத்தில் எச்சரிக்கை உணர்வு மிக்க இந்திய நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புப் பெட்டகமாகவும், லஞ்ச ஊழல் கருப்புப் பணத்தைப் பதுக்குவதற்கும் வரி ஏய்ப்பு செய்வதற்குமான கையடக்கமான முதலீடாகவும் இருந்த தங்கம், தனிச்சிறப்பானதொரு இடத்தை சந்தையில் பிடித்தது.

    ஜாய் ஆலூக்காஸ், கல்யாண் ஜுவல்லரி, ஸ்ரீ குமரன் நகை மாளிகை, ஜோ ஆலுக்காஸ்  சன்ஸ், மலபார் கோல்ட், ஆலாபட் ஜுவல்லரி, தனிஷ்க் என்று புற்றீசல் போலக் கிளம்பின சங்கிலித் தொடர் நகைக்கடைகள். இவர்களில் பலர் பாரம்பரிய நகை வியாபாரிகள் அல்ல என்பதுடன்,கார்ப்பரேட் நிறுவனங்களும், கறுப்புப் பண மாஃபியாக்களும்தான் இன்று இத்தொழிலில் கோலோச்சுகின்றனர்.

    இவர்களுடைய விற்பனைக்கு ஏற்கெனவே வாடிக்கையாளர்களிடம் நிலவி வந்த தங்க மோகம் போதுமானதாக இல்லை. வாழ்த்து அட்டை வியாபாரிகளும் பரிசுப்பொருள் வியாபாரிகளும், “தந்தையர் தினம், தனயர் தினம், தமக்கையர் தினம், காதலர் தினம், காதல் கைகூடாதவர்கள் தினம்” எனப் பலவகையான தினங்களை உற்பத்தி செய்வதைப் போல நகை வியாபாரிகள் புதிய சம்பிரதாயங்களை உருவாக்கத் தொடங்கினர். ‘உயர்’சாதிகளிலிருந்து மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட சாதிகளிலிருந்தும் நடுத்தர வர்க்கம் பரவலாகத் தோன்றி விட்டதால், இன்ன ஜாதிக்கு இன்ன தாலி என்றும், இன்ன ராசிக்கு இன்ன ராசிக்கல் என்றும் பரிந்துரைக்க ஜோதிட ‘வல்லுநர்களை’ பெரும் நகைக் கடைகள் அமர்த்திக் கொண்டனர்.

    ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் கேள்வியே பட்டிராத அக்ஷய த்ரிதியை என்ற ஒரு பண்டிகையை பரணிலிருந்து தூசு தட்டி எடுத்தனர். அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் என்று மாறி மாறி மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர். அட்சய திரிதியை நாளில் நகை வாங்கினால் ‘நல்லது’ என்றும் ‘ஐசுவரியம்’ பொங்கும் என்றும் மக்கள் நம்பவைக்கப்பட்டனர்.

    மேல் வர்க்கத்தாரின் மீது பிரமிப்பு கொள்ளும் அடித்தட்டு வர்க்கத்து மக்களும் கூட அந்த நாளில் “ஒரு குந்துமணி அளவுக்காவது வாங்கித்தான் வைப்போமே” என்று சிந்திக்கும் அளவுக்கு அக்ஷய த்ரிதியை ஒரு சடங்காகவே மாறிப்போனது. நல்லதோ கெட்டதோ ஒரு தேவைக்குப் பயன்படும் என்ற நியாயத்தைக் கூறிக்கொண்டு, கடன் வாங்கியாவது அந்த நாளில் தங்கத்தை வாங்குவது ஒரு பழக்கமானது. போதும் போதாதற்கு மக்களிடையே நிலவும் சினிமாக் கவர்ச்சியும் துணைக்கழைத்துக் கொள்ளப்பட்டது. துணிக்கடைகளைப் போலவே நகைக்கடைகளுக்கும் பிரபல நடிகைகள் நடிகர்கள் பிராண்டு அம்பாசிடர்களாகினர்.

    கூலிகளாய் ஆக்கப்பட்ட தங்கநகை பட்டறை முதலாளிகள்!

    இந்த நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் பரவலாக சிறிய யூனிட்டுகளில் நவீன இயந்திரங்கள் இடம்பெறத் துவங்கின. இதற்கிடையில் பாரம்பரிய நகைத் தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து வேலைச் சந்தையின் போட்டியில் தங்களை தக்கவைத்துக் கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சிகளை சங்கிலித் தொடர் நகை மாளிகைகள் தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் ஒழித்துக் கட்டின.

    ஓரளவுக்கு நவீன நகை மாளிகைகளின் தாக்குதலை சமாளித்து குற்றுயிரும் குலை உயிருமாக மிஞ்சிய நகைப்பட்டறைகள் பெரும் நகைக்கடைகளுக்கு குறைந்த கூலிக்கு வேலை செய்து தரும் யூனிட்டுகளாக மாறிப்போயின. மொத்தமாக அவர்களின் வாடிக்கையாளர் அடித்தளமே ஆட்டம் கண்டு நொறுங்கிப் போனது. சிறுபட்டரைகளிடம் மிச்சம் மீதியிருந்த சுயேச்சைத் தன்மையையும் முற்றாக ஒழிந்து முழுக்க முழுக்க பெரிய நகைமாளிகைகளை அண்டியிருக்கும் அத்துக் கூலிகளாக முழுமையாக மாறிப்போயினர். சிறு பட்டறை முதலாளிகள் எல்லாம் வேலை எடுத்துச் செய்யும் ஏஜென்டுகளாக மாற்றம் பெற்றனர்.

    இந்தக் கால கட்டத்திற்குப் பின் ஒரே நகையை ஒரே பட்டரையில் தயாரிக்கும் பாணிக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. ஒரு நகையில் பல்வேறு அம்சங்களை வெவ்வேறு பட்டறைகளில் தயாரித்து பின்னர் இன்னொரு பட்டறையில் இணைத்துக் கொள்வது என்ற பாணி உருவெடுத்தது. நாடெங்கும் பரவிக்கிடந்த தங்கநகைத் தொழிலாளர்கள் தமது சொந்த ஊர்களில் இருந்து ஒருசில நகரங்களில் வந்து குவிந்தனர். புகழ் பெற்ற ஜெய்பூர் மாடல், பெங்காலி மாடல், கேரள காசு மாலை, மாங்கா மாலை நகைகள் கோவையில் இருந்து தயாராகிறது என்ற செய்தியின் பின்னே உள்ள நிதர்சனம் என்னவென்றால், ஆயிரக்கணக்கான கேரள நகைத் தொழிலாளர்களும், பெங்காலித் தொழிலாளர்களும் கோவையில் வந்து குவிந்துள்ளனர் என்பதாகும்.

    சுரண்டப்படும் பல்தேசிய  தொழிலாளிகள்!

    இப்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ப்பட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் என்பது நிரந்தரமானதல்ல  மூன்றிலிருந்து நாலாயிரத்துக்குள் சம்பளம் இருக்கும்  மற்றபடி இன்செண்டிவ் அடிப்படையில் தான் வேலை செய்கிறார்கள். அதாவது இத்தனை கிராம் ஆபரண உற்பத்திக்கு இத்தனை இன்செண்டிவ் எனும் அடிப்படையில். கோவை நகரம் என்பது சென்னையை ஒப்பிடும் போது அதிகம் செலவு பிடிக்கும் நகரம். எத்தனை சிக்கனமாக வாழ்க்கை நடத்தினாலும் கூட நாலாயிரம் என்பது மாதத்தின் இருபதாவது நாளிலேயே தீர்ந்து போகும். எனவே இன்செண்டிவ் தான் தாக்குப்பிடிப்பதற்கும் ஊருக்கு ஏதோ கொஞ்சம் பணம் அனுப்புவதற்கும் இருக்கும் ஒரே வழி.

    இந்தப் பட்டறைகளில் நவீன முதலாளித்துவ பாணியிலான உற்பத்தி முறை பழைய நிலபிரபுத்துவ பாணி உறவுகளோடு கைகோர்த்துக் கொண்டு, தொழிலாளிகளை கசக்கிப் பிழிகிறது. அதாவது, 8 மணி நேரம் அல்லது குறிப்பிட்ட நேர அளவிலான வேலை என்று கிடையாது; நிலையான சம்பளமும் கிடையாது. மாறாக அட்சய திரிதியை, தீபாவளி, முகூர்த்த தினங்கள் போன்று எப்போது பரபரப்பான விற்பனை நடைபெறும் நாள் வருகிறதோ அப்போது பெரு நகைக்கடைகள் தங்கக் கட்டிகளை இது போன்ற பட்டறைகளுக்குக் கொடுத்து நகையாக வாங்குவார்கள்.

    அந்த சமயத்தில் மட்டும் ஊழியர்களை கசக்கிப் பிழிவது; அதுவும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தூங்காமலும், இடையில் பட்டறையை விட்டு வெளியேற தடை விதிப்பதும் (தங்கத் துணுக்குகளை நக இடுக்குகளில் மறைத்து எடுத்துச் சென்று விடுவார்கள் என்ற சந்தேகத்தில்) கழிவறை வரையில் கண்காணிப்பதும் என்று குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட காட்டுவதில்லை. தொழிலாளிகளும் அந்த நாட்களில் சம்பாதித்தால் தான் உண்டு. சீசன் அல்லாத நாட்களில் சம்பளம் கிடையாது.

    இப்படிப்பட்ட பட்டறைகள் பொதுவில் காற்றோட்டம் இல்லாமலும் அடைசலாகவும் தான் இருக்கும். தப்பித்தவறிக்கூட தங்கத் துகள்கள் பட்டறை முதலாளிகளுக்குத் தெரியாமல் வெளியேறுவதைத் தடுப்பதற்கே இந்த ஏற்பாடு. தொடர்ந்து உட்கார்ந்தே வேலை செய்வதால் மூலவியாதி, முதுகுவலி, தங்கம் உருவாக்குவதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்களின் விளைவாய் ஆஸ்துமா போன்ற உபாதைகளோடு தான் பெரும்பாலான நகைத் தொழிலாளிகள் தமது வாழ்வை கழிக்க வேண்டியுள்ளது. சிறிய பட்டறைகளில் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தியிருந்தாலும் அவர்களோடு சேர்ந்து சிறு முதலாளிகளும் வேலை செய்கிறார்கள்.

    முதலாளித்துவ பாணி இயந்திர உற்பத்தியாய் இருப்பதால் பால்ஸ் ஒரு பட்டறை, மோதிரம் ஒரு பட்டறை, கம்மலுக்கு ஒரு பட்டறை, கல் பதிக்க, கம்பி நீட்ட என்று உதிரி உதிரியாகத் தயாராகி, கடைசியில் ஒரு பட்டறையில் இணைக்கப்படுகிறது. இதன் உடன் விளைவாக ஒரு நகைத் தொழிலாளிக்கு முழுமையான ஒரு ஆபரணத்தை உருவாக்கும் நுட்பம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாது போகிறது.

    டிசைன்களை உருவாக்க பட்டைய படிப்பு, கம்ப்யூட்டர் வடிவமைப்புக்கான படிப்பு என்று ஏற்பட்டதால் பாரம்பரிய தொழில் நுட்ப அறிவு முழுமையாக நிராகரிக்கப்பட்டு கிட்டத்தட்ட அழியும் தருவாயில் உள்ளது. முழுமையான ஆபரண உருவாக்கத் திறனும் நுட்பமும் கொண்ட தொழிலாளி வெறும் கம்பி இழுக்கும் வேலையோ கல்பதிக்கும் வேலையோ செய்யும்படிக்கு நிர்பந்திக்கப்படுகிறார். வேறு எந்த வழியும் இல்லாத நிலையில் குறைகூலிக்கு இது போன்ற பட்டறையில் தொழிலாளியாய்வேலைக்குச் செல்கிறார்.

    சீசன் நாட்களில் சம்பாதித்தால் தான் உண்டு எனும் நெருக்கடி காரணமாக, நாட்கணக்கில் தூக்கமில்லாமலும் ஓய்வின்றியும் இவர்கள் உழைக்க வேண்டியிருக்கிறது. தூக்கம் வராமல் இருக்க கனமான உணவைத் தவிர்த்தும், பிஸ்கட்டுகள் சாக்லேட்டுகள் போன்ற நொறுக்குத் தீனிகளைத் தின்று இரண்டு மூன்று நாட்கள் தாக்குப் பிடித்தும் வேலை செய்கிறார்கள் தொழிலாளர்கள். தொடர்ந்து தூங்காவிட்டால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும், ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரிக்கும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஆனால் தண்ணீர் குடித்தாலோ அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்து போக வேண்டியிருக்கும் என்பதால் அவ்வப்போது உதடுகளை மட்டும் நனைத்துக் கொள்ள மட்டுமே தண்ணீர்.

    தங்கத்தின் சூதாட்டமும், இரத்தக்கறை படிந்த வரலாறும்!

    தென்னாப்பிரிக்க தங்கச் சுரங்கத்தில் ஒரு தொழிலாளி

    சென்ற ஆண்டு மட்டும் இந்தியாவில் 800 டன் தங்க நகைகள் விற்பனையாகியுள்ளது. இதில் கேரளம், ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் பங்கு மட்டுமே அறுபது சதவீதத்திற்கும் அதிகம். உலகளவில் ஆண்டுதோறும் விற்பனையாகும் தங்கத்தில் 15% இந்தியாவில்தான் விற்பனையாகிறது. எனவே இந்தியாவை ‘தங்கத்தின் இதயம்’ என்கிறார்கள் தங்க வியாபாரிகள்.

    தங்கம் இப்போது முன்பேர ஊக வணிகத்தில் பட்டியலிடப்பட்டிருப்பதாலும், டாலரின் வீழ்ச்சி காரணமாக பாதுகாப்பான முதலீட்டின் அடுத்த புகலிடமாகத் தங்கம் இருப்பதாலும், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அதன் விலை மூன்று நான்கு மடங்கு எகிறியுள்ளது. தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அபரிமிதமான  செயற்கையான விலையேற்றம் என்பது உழைக்கும் மக்களை அதன் அருகில் கூட வர முடியாமல் விரட்டியடித்துள்ளது.

    பளபளக்கும் இந்த உலோகத்தின் வெளிச்சத்தில் தமது பகட்டினைக் காட்டும் சீமான்கள் இந்த வெளிச்சத்தின் கீழே இருண்டு கிடக்கும் கோடிக்கணக்கானோரின் வாழ்வை அறிந்திருக்கவே மாட்டார்கள்.

    அழிந்து போன கோவை தங்க நகை தொழிலாளிகளை எண்ணியபடி காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தேன். கல்யாண் ஜுவல்லர்ஸ் கடையின் முன் கூட்டம் அடைத்துக் கொண்டிருந்தது. சிலர் முகமெல்லாம் சிரிப்பாக கடையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். பஞ்சடைந்த நகைத் தொழிலாளின் கண்கள் நினைவிலாடியது. இந்தப் பழைய உலகத்தின் அற்பத்தனங்கள் வைக்கும் செலவு என்பது ஊகபேர சூதாடிகள் நிர்ணயிக்கும் விலையான பவுனுக்கு பதினாறாயிரம் ரூபாய்கள் மட்டும் தானா…?

    எங்கோ தென்னாப்ரிக்காவின் தங்க வயலின் பொந்துகளுக்குள் எவ்வித பாதுகாப்பு வசதிகளும் அற்று, நச்சுவாயுக்களை சுவாசித்து டன் டன்னாக பாறையை வெட்டி குந்துமணி குந்துமணியாக தங்கத்தைச் சேர்க்கும் அந்தக் கறுப்பினத் தொழிலாளியின் வியர்வைக்கும் இங்கே ஏதோவொரு சந்தினுள் ஒரு இருட்டு அறையினுள் குண்டு பல்பின் வெளிச்சத்தில் வெளியாகும் ஆஸ்துமா இருமலுக்கும் என்ன விலை வைக்க முடியும்? ஸ்பெயின் நாட்டுக் காலனியவாதிகள் கொன்றொழித்த இருபது கோடி செவ்விந்தியர்களின் ரத்தத்திலும் எண்ணி மாளாத கறுப்பின அடிமைகளின் ஏக்கப் பெருமூச்சின் வெப்பத்திலும் தோய்ந்த தங்கம் உங்கள் கழுத்தில் ஊறுகிறது.

    இது அழகா, புனிதமா, ஆபாசமா?

    _______________________________________________________________

    கார்க்கி, புதிய கலாச்சாரம், டிசம்பர் – 2010

    _______________________________________________________________

    வினவுடன் இணையுங்கள்

    தொடர்புடைய பதிவுகள்:


    மவுனமோகன் சிங் என்கிற கல்லுளிமங்கன் !

    15
    மன்மோகன்சிங் என்கிற கல்லுளிமங்கன்

    மன்மோகன்சிங் என்கிற கல்லுளிமங்கன்

    “பிரதமர் நாற்காலியின் கவுரவத்தை குலைத்து விடாதீர்கள்” என்று எதிர்க்கட்சிகளை எச்சரித்திருக்கிறார் அன்னை சோனியா.

    நாற்காலி என்ற அஃறிணைப் பொருளுக்கு  கவுரவம் ஏது என்று நீங்கள் குழம்ப வேண்டாம்.

    “வி வாண்ட் ஜே.பி.சி” “வி வாண்ட் ஜே.பி.சி” என்று கடந்த பல நாட்களாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அலைகடலாகக் குமுறிக் கொந்தளிப்பதையும்,  ஆழ்கடலின் அமைதியும் புன்னகை மாறாத முகமும் கொண்ட அவைத்தலைவர் மீரா குமார், அமைதி அமைதி என்று 4 முறையும், இருக்கைக்கு செல்லுமாறு 2 முறையும் மென்மையாக கையசைத்து விட்டு, பிறகு அவையை ஒத்தி வைப்பதாக கூறி ஒரு முறை கைகூப்பி வணக்கம் சொல்வதுடன் படம் முடிவதை அன்றாடம் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அரங்கம் நிறைந்த காட்சியாகத் தொடங்கி, மெல்ல மெல்ல கூட்டம் குறைந்து, .. நேற்றோடு படம் தூக்கப்பட்டுவிட்டது.

    நடந்து முடிந்த இந்தக் களேபரத்தை ஆடாமல் அசையாமல், அலட்டிக் கொள்ளாமல் எதிர்கொண்டவை நாடாளுமன்றத்தில் இருந்த இரண்டு பொருட்கள் மட்டுமே. முதலாவது நாடாளுமன்ற நாற்காலி. இரண்டாவது மன்மோகன்சிங்.

    எனவே, “நாற்காலியின் கவுரவத்தை குலைத்து விடாதீர்கள்” என்று அன்னை இரு பொருள்படவே கூறியிருக்க வேண்டும். பிரதமரை இழிவு படுத்துவது நமது நோக்கமல்ல. தனது கூற்றை சோனியாவே தெளிவு படுத்தியிருக்கிறார். ”Ms.Gandhi complimented the Prime minister on ‘his wise leadership’, on his ‘remaining calm amidst the storm” என்று சோனியா சொன்னதாக எழுதியிருக்கிறது இந்து பத்திரிகை. “பிரதமருடைய இந்த முயற்சி யில் காங்கிரசு கட்சி அவருக்குப் பின்னால் உறுதியாக நிற்கும்” என்றும் அன்னை சோனியா அறிவித்திருக்கிறார்.

    இன்று நாம் காணும் நாடாளுமன்றக் காட்சிகளைப் போன்ற காட்சிகளை முன்னர் தமிழக சட்டமன்றத்திலும் நாம் கண்டிருக்கிறோம். ஊழல் வழக்குகளின் காரணமாக அன்னை ஜெயலலிதாவால் அமர முடியாத முதல்வர் நாற்காலியில், ஒரு ஓரத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஒண்டிக் கொண்டிருந்தபோது தமிழக சட்டமன்றத்திலும் இதுதான் நடந்தது.

    முதல்வர் நாற்காலியாக இருந்தாலென்ன, பிரதமர் நாற்காலியாக இருந்தாலென்ன, அஃறிணைப்பொருட்கள் என்ற வகையில் அவையிரண்டும் சமமே. அதே நேரத்தில் அவற்றில் அமர்ந்திருந்த மன்மோகன் சிங்கும் பன்னீரும் சமம் என்று கூறிவிடமுடியாது.

    பன்னீர் அமைச்சராவதற்கு முன் டீக்கடை முதலாளி. மன்மோகன் சிங்கோ உலக வங்கி அதிகாரி. பன்னீருக்கு விவரம் பத்தாது என்பதால் பேசுவதில்லை. மன்மோகன் சிங் ரொம்ப விவரமறிந்தவர் என்பதால் பேசுவதில்லை. மவுனமாக இருப்பதனால் முட்டாளும் அறிவாளியும் சமமாகி விட முடியாதில்லையா? அதனால்தான் ‘அறிவார்ந்த தலைமை’ என்று அன்னை சோனியா அழுத்திக் கூறியிருக்கிறார்.

    ”நம்முடைய அரசாங்கத்திடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை, நாம் பயப்படுவதற்கும் எதுவும் இல்லை” என்றிருக்கிறார் சோனியா. உண்மைதானே. தேசிய நெடுஞ்சாலைகளின் கப்பிக்கல் முதல் கான்கிரீட் தூண்கள் வரை அனைத்திலும் கமல்நாத்துக்கு கழிவுத்தொகை 15 சதவீதம் என்பது வெளிவந்து விட்டது. முகேஷ் அம்பானிக்கு கொடுக்கப்பட்ட 91,000 கோடி வரிச்சலுகை ரகசியம் வெளிவந்து விட்டது.  ராஜா மட்டுமல்ல, கமல்நாத், ஆனந்த் சர்மா, பிரபுல் படேல் முதலான அமைச்சர்கள் யார் யாருடைய சிபாரிசின் பேரில் பதவியைப் பெற்றார்கள் என்பது ராடியா டேப்பில் வெளிவந்துவிட்டது. மற்ற அமைச்சர் பெருமக்களின் நியமனம் குறித்த ரகசியங்கள் பாக்கி உள்ள டேப்புகள் ஒலிபரப்பாகும்போது தெரியவரக் கூடும்.

    அமைச்சர்களை நியமிப்பவர் பிரதமர். டேப்புகளில் பேசியிருக்கும் பிரமுகர்கள் எல்லோரும் “மேலிடத்தில் பேசிவிட்டேன்” என்று சொல்லும்போது, பிரதமரிடம் பேசிவிட்டதாகத்தான் அதற்கு நாம் பொருள் கொள்ள முடியும். தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியாக ராஜாவை நியமிக்க பிரதமரிடம் சிபாரிசு செய்த டாடா மாட்டிக் கொண்டு விட்டார். சிபாரிசை அமல்படுத்திய மன்மோகன் மவுனம் சாதிக்கிறார். லாபியிங் செய்த ராடியா மீது விசாரணை. விசாரணையை நடத்துவது லாபியிங்குக்கு இடம் கொடுத்து மடமும் கொடுத்த மன்மோகன் சிங் அரசு. இந்தக் கேலிக்கூத்தை எங்கே போய் சொல்ல?

    எந்த மந்திரிக்கு எந்த கார்ப்பரேட் சிபாரிசு என்று இப்போது தெரிந்து விட்டது. பிரதம மந்திரியாக மன்மோகன் சிங்கை நியமிக்க யார் யாருக்கு சிபாரிசு செய்திருப்பார்கள்? மேற்படி உண்மை ராடியா டேப்பில் வருமா என்று சொல்ல முடியாது. அது ஒருவேளை விக்கி லீக்ஸில் வெளிவரக்கூடும். ஏனென்றால், பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை சிபாரிசு செய்தவர்கள் உலக வங்கியும், அமெரிக்க முதலாளிகளுமாயிற்றே.

    அந்த ரகசியம் வெளியில் வந்துவிட்டாலும் மன்மோகன் சிங் பேசமாட்டார். அன்னை சோனியா சொல்லியிருப்பது போல காங்கிரசு கட்சியும் அதற்கெல்லாம் பயந்து விடாது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று அத்தனை கட்சிகளின் அம்மணப் படங்களும்தான் ராடியா டேப்பில் ஓடுகின்றன. யாரைப் பார்த்து யாரும் கூச்சப்படுவதற்கோ தலை குனிவதற்கோ என்ன இருக்கிறது? “இன்று நீ நாளை நான்” என்று டவுசர் கழட்டப்பட்டவர்களும், கழட்டப்பட இருப்பவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து புரிந்துணர்வுடன் புன்னகை பூத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான். பயப்படுவதற்கு வேறெதுவும் இல்லை.

    இந்த இரைச்சல்கள் கூச்சல்களெல்லாம் சிறுபிள்ளைத் தனமானவை என்பதை மன்மோகன்சிங் அறிவார். அதனால்தான் நாடாளுமன்ற அமளி துமளிகளைக் கண்டு அவர் அதிரவில்லை. மவுனமாகப் புன்னகை பூக்கிறார். இது முற்றும் உணர்ந்தவரின் மவுனம். அறிவார்ந்த மவுனம்.

    இதற்கு முன் எத்தனை ராடியா டேப்பை அவர் பார்த்திருக்கிறார்?

    1994 இல் நாட்டுக்கும், நாடாளுமன்றத்துக்கும் தெரியாமலேயே காட் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவைத்தார் மன்மோகன் சிங். அன்றைக்கும் நாடாளுமன்றம் சலசலக்கத்தான் செய்தது. அறிவாளி மன்மோகன் சிங் அசைந்து கொடுக்கவில்லை.

    2005 இல் அமெரிக்காவுக்கு கிளம்பிய மன்மோகனிடம், “ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகப் போகிறதா?” என்று கேள்வி எழுப்பினார்கள் இடதுசாரிகள். “இல்லவே இல்லை” என்று சாதித்தார் மன்மோகன். வாஷிங்டனிலிருந்து வெளிவந்த பிரணாப்-ரம்ஸ்ஃபீல்டு, மன்மோகன்-புஷ் கூட்டறிக்கைகள் இந்தப் பொய்யை அம்பலமாக்கின. இராணுவ, அணுசக்தி ஒப்பந்தங்கள் இறுதியாக்கப்பட்டிருந்தன.

    பிறகு அணுசக்தி ஒப்பந்தத்தின் மீதான நாடாளுமன்ற விவாதம் வந்தது. “ஹைட் சட்டமா, நான் கேள்விப்பட்டதே இல்லையே” என்றார் பிரதமர். அமெரிக்க செனட் உறுப்பினர்கள் குட்டை உடைத்தனர். நாடாளுமன்றத்தில் கூச்சல். அன்றும் மவுனமாய் இருந்தே சாதித்தார் மன்மோகன்சிங்.

    இன்று ஐயப்பன் பஜனையைப் போல அரசியல் முச்சந்திகள் தோறும் அலறுகிறது ராடியா டேப். அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ராடியாவுடன் தொடர்பு கொண்டிருந்த பிரபலங்கள் அனைவரும் “டேப்பில் என்னுடைய குரலை மட்டும் அழித்து விடு இறைவா” என்று மனதுக்குள் மன்றாடுகின்றனர். கோட்டு சூட்டு போட்ட கார்ப்பரேட் கனவான்கள் ” நீ 50,000 கோடி, நீ 10,000 கோடி” என்று ரோட்டில் கட்டி உருளுகின்றனர். அரசியல் வாதிகளை டிவியில் உரித்தெடுக்கும் ஊடக நட்சத்திரங்களெல்லாம் உளறுகின்றனர். ஊரே அமர்க்களப்படுகிறது.

    உத்தமர் மன்மோகன்சிங் மட்டும் மவுனம் சாதிக்கிறார். இந்த மவுனத்தின் பொருள்தான் என்ன? இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று. வாய் திறந்து பேசினால் அந்த வார்த்தைக்கு ஒரு அர்த்தம்தான். மவுனமோ இரவைப் போன்றது. அதற்கு ஆயிரம் அர்த்தங்கள். பல்லாயிரம் பொழிப்புரைகள்.

    “நடப்பது எதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் அவர் மவுனமாக இருக்கிறார்.”

    “அவர் ஊழல் என்ற சொல்லைக்கூட உச்சரித்து அறியாத உத்தமர். தன்னைச் சுற்றி இத்தனை ஊழலா என்ற அதிர்ச்சியில் ஊமையாகிவிட்டார்.”

    “பதவியே வேண்டாம். என்னை விட்டு விடுங்கள் என்று சோனியாவிடம் விக்கி விக்கி அழுதும் பயனில்லாததால் விக்கித்து நிற்கிறார்.”

    –   மன்மோகனின் மவுனத்துக்குத்தான் எத்தனை விளக்கங்கள்!

    மற்றவர்களையெல்லாம் விடுங்கள். “பிரதமரைப் பேசச் சொல்” என்று சுப்ரீம் கோர்ட்டில் பெட்டிசனே போட்டார் ஒரு ஆசாமி. அந்த சு.சாமியே சொல்கிறார்: பிரதமர் நல்லவர்.

    நல்லவருக்கு அடையாளம்தான் என்ன?

    அடிஅடின்னு அடிச்சாலும், டமாரம் வச்சி அடிச்சாலும் கல்லுளி மங்கனாட்டம் கம்முன்னு இருக்காரே, அதிலேர்ந்தே தெரியல, அவரு ரெம்ப ..நல்லவரு.

    ஓ. பன்னீரை விட, வடிவேலுவை விட,  ரெம்ப….ரெம்ப  நல்லவரு!

    ______________________________________________________________

    வினவுடன் இணையுங்கள்

    தொடர்புடைய பதிவுகள்:

     

     

     

    பழைய பேப்பரே வெட்கப்படுது!!

    “ஹிந்து சிக்ஸ் பிஃப்டி, தினமணி தினமலர் ஃபோர் பிஃப்டி, தினத்தந்தி த்ரீ ஃபிப்டி, விகடன், குமுதம், இந்தியாடுடே ஃபைவ் ருபீஸ்..” கடகடவென அதிகாரமாக குரல் வந்து விழ, நான் பழைய பேப்பர் வியாபாரியா?இல்லை அவர் வியாபாரியா என ஒருகணம் நிலைகுலைந்து போனார் பழைய பேப்பர் வியாபாரி.

    “சார்!சார்! கொஞ்சம் நிறுத்து சார். விட்டா எங்கூட வியாபாரத்துக்கே வந்துருவ போல இருக்கு, அவ்ளோளாம் வராது சார்! எனக்குக் கிடைக்கறதே கிலோவுக்கு ஐம்பது பைசாவோ, ஒரு ரூவாயோதான்.. நீ இப்படி ரேட்டுப் போட்டா நான் பழைய பேப்பர் வியாபாரத்தையும் வுட்டுட்டு இனிமே எங்க போறதுன்னு தெரியல..”

    “ஏம்ப்பா நான் என்ன தப்பாவா சொல்லிட்டேன். விவரந் தெரியாதவங்ககிட்ட நீ எப்படி வேணாலும் வியாபாரம் பண்ணிக்கோ… வீட்ல கம்ப்யூட்டர் இண்டர்நெட்டுனு வெச்சுகிட்டு நான் இது கூட தெரியாமலா இருப்பேன்.. நெட்ல பாத்தா இன்னைய ரேட்டு கரெக்டா வருது.. நான் ஒண்ணும் உன் கண்ணக் கட்டி ஏமாத்துல.. வேண்ணா பாக்குறியா.. ”

    “காயலாங்கடைய பாக்கவே நேரம் பத்துல.. இதுல கம்ப்யூட்டர பாக்கணுமா.. நீ வேற சார்.. அதெல்லாம் தெரிஞ்சா நான் ஏன் இப்படி லோல்படுறேன்.. வண்ணாரபேட்ட வந்து பாரு சார்.. குடோன்ல இந்தக் கம்ப்யூட்டரையெல்லாம் குடலை உருவிப் போட்டா எடைக்குக் கூட தேறல.. என்னா கம்ப்யூட்டரோ! கம்பியூட்டர விடு சார், என் வயித்தப் பாரு.. காலைலேர்ந்து வெறும் டீயிலயே மூணு சக்கர வண்டிய மிதிச்சுக்கிட்டு,மூணு நாலு மெத்தைல ஏறி பழைய பேப்பர வாரியாந்து வலி நோவுது சார். ஏமாத்திப் பொழைக்கணும்னா எனக்கு ஏன் சார் இவ்ளோ பாடு..”

    “நோ..நோ.. இந்த ஆர்க்யூமெண்டே வேணாம். நாட்ல யார்தான் கஷ்டப்படல.. நான் கூடத்தான் காலைல எழுந்து சாப்பிட்டனோ, சாப்பிடலயோ டயத்துக்கு ஆபிசு ஓட வேண்டியிருக்கு.. நீ த்ரீ வீலர்னா நான் டூ வீலர்.. எல்லாருக்கும் கஷ்டந்தான்.. அதுக்காக ஒரு நியாயம் வேண்டாமா.. கட்டுப்படியானா எடு! ஒத்து வரலயா விடு.. டோண்ட் வொர்ரி!”

    “இப்படிப் பேசினா எப்புடி சார்! மூணாவது மெத்தைல இருந்து வேற இவ்வளவையும் தூக்கியாந்தாச்சு, கம்ப்யூட்டர்ல அவன் ஆயிரம் போடுவான்.. காயிலாங் கடக்காரன் ஒத்துக்கணும்ல…”

    “சரிசார், வேற என்ன பண்றது, நேரு சீரா போட்டுக்கலாம்.”

    “என்ன நேரு சீரோ! நம்ம நாட்லயே இது ஒரு பெரிய ப்ராப்ளம்… தொழிலே இல்லேங்கறது, கொடுத்தா ஏட்டிக்குப் போட்டி பேசுவீங்க.. உன்ன சொல்லி குத்தமில்ல… ஸ்டேட் கவர்மெண்ட்டே சரியில்ல… சரி காலைல காட்டியும் வம்பு வேணாம்.. நீ மொதல்ல எடயப் போடு…”

    “உங்கிட்ட நூறு ரூபா பேப்பர போடுறதுக்குல்ல நான் பத்து ரூபாய்க்கு பால் குடிக்கணும் போல இருக்கு.. ஓகே.. போடு..போடு..”

    “என்னா சார்! பழைய பேப்பர்காரன்கிட்ட போயி இவ்ளோ வலி படுற, வீடு வந்து வாங்கிட்டுப் போறனே சார்… அம்பது பைசா, ஒரு ரூபா விட்டுக்கொடு சார்..”

    “பாத்தியா, பேச ஆரம்பிச்சுட்ட, பேசாம எடயப் போடு! பழைய பேப்பர்னா சும்மாவா? ஐ நோ எவரிதிங்… பழைய அட்டப்பெட்டிய வெச்சுதான் அம்பானியே பணக்காரணானான் தெரியுமா? ஏதோ ஹிண்டு பேப்பர படிச்சிட்டு சும்மா வீட்ல கெடக்குற ஜடம்னு என்ன நெனச்சியா? ஐ எம் ஏ ப்ராஞ்ச் மேனேஜர் ஆஃப் சிட்டியூனியன் பேங்க்… எபவ் டொண்ட்டி ஃபைவ் இயர்ஸ் சர்வீஸ்!”

    “சரளமாக கல் வந்து விழுவது போல ஆங்கிலத்தில் வார்த்தைகள் வந்து விழ.. பழைய பேப்பர் வியாபாரிக்கு எடை குழறியது… இரு சார்.. ஒரு கிலோ கல்ல எடுத்துட்டு வந்துர்றேன்,” என்று வண்டியை நோக்கி நகர்ந்தார்..

    “இவனுகள சாதாரணமா நெனக்காதீங்க, இந்தத் தராசு, கல்லு எல்லாமே ஃப்ராடு.. கிலோ கணக்குல நம்மகிட்ட அடிச்சுட்டுப் போயிடுவான்! நம்ம அபார்ட்மெண்ட்டு மாதிரி எத்தன பேரு? எத்தன கிலோ அடிப்பாங்க, கணக்குப் போட்டு பாருங்க.. சும்மா நடிப்பாங்க சார்… இங்க சம்பாரிச்சு ஊர்ல போயி வட்டிக்கு விடுவான், வீடு கட்டுவான். ஒண்ணு தெரியுமா, அவன் லைஃப்ப என்ஜாய் பண்ற மாதிரி நாம கூட பண்ண முடியாது… இந்த காச வாங்கி நாம ஒண்ணும் பேங்க்ல போடப் போறது கெடயாது.. சனங்கள ஏமாத்த முடியாதுன்னு அவன் தெரிஞ்சுக்குனும் பாருங்க.. அதுக்குத்தான் கொஞ்சம் ஸ்டிரிக்டா இருக்கறது…” பக்கத்து வீட்டுக்காரரிடம் எச்சரிக்கை கொடுத்துக் கொண்டிருந்தார்..

    “தோ சார்!…” பேப்பர், பத்திரிகையை வகைப்படுத்தி நிறுத்துப் போட்ட வியாபாரி, “குறிச்சுக்க சார்.. இங்கிலீசு ஆறு கிலோ, தமிழ் மூணு கிலோ, புத்தகம் நாலு கிலோ” என்று லாவகமாக மனதுக்குள்ளேயே கூட்டிக் கொண்டு எதிரில் நிற்பவரை கண்களால் எடை போட்டுக் கொண்டே சாக்குப் பைக்குள் பேப்பரை அசக்கி அசக்கி திணித்தார். கூடவே கின்லே காலி பாட்டிலை நசுக்கி உள்ளே திணித்தார்.

    “என்னப்பா நீ பாட்டுக்கும் எடை போடாமயே நசுக்கிப் போடுற.. அதயும் நிறு” என்றார் பேங்க்காரர் படபடப்பாக…

    “சார் அதுக்கல்லாம் எட கெடயாது சார்… மொத்தமா ஒரு ரூபா போட்டுக்க.”

    “என்னப்பா, பத்து பாட்டில் போட்டுருக்கேன். ஒரு ரூபாங்கற..”

    “நீ அம்பது போட்டாலும் அது தலையெழுத்து அவ்ளோதான் சார்.. காயலாங்கடைல வந்து பாரு.. உன் கம்பியூட்டரு மண்ட ஓடுக்கே அங்க மதிப்பு கெடயாது.. சும்மா ஒடச்சுதான் போடுவோம்.”

    “ஏமாந்தவனா இருந்தா இன்னும் நீ அள்ளி விடுவ.. உங்கிட்ட போட்டது மொதல்ல என் தப்பு, சரி.. சரி.. பணத்தக் குடு…”

    “உன்ன ஏமாத்தி நா என்ன அம்பானியா ஆகப்போறேன். ஏன் சார் நீ வேற.. பேசக்கூடாதுன்னு வேற சொல்ற.. இந்தா சார் உன் பணம் அறுபத்தேழு..”

    “பாத்தியா திரும்பவும் வேலயக் காட்டுறியே, எவ்ளோ கணக்கு சரியா சொல்லு…”

    “என்னா சார், உன் கண்ணயா மறைச்சுட்டேன். அறுபத்தேழு ரூபா எழுபத்தஞ்சு காசு வந்துச்சு.. சில்லறை இல்லையேன்னு நோட்டா குடுத்தேன்.. இந்தா ஒரு ரூபாயா வெச்சுக்கோ…”

    “என்னமோ, நீ எனக்கு பிச்ச போடற மாதிரி சொல்ற.. நாலு தெரு அலையாம உனக்கு லம்ப்பா இங்க கெடைக்குது.. இதுல நீ சலிச்சுக்குற, இதையே கார்ல போறப்ப மவுண்ட்ரோட்ல மொத்த வியாவாரிகிட்ட போட்டேன்னு வெச்சுக்க, எனக்கு நூறு ரூவா கெடச்சிருக்கும். சரி.. சரி.. உங்கிட்ட பேசப் பேச பிரச்சனைதான், ஒரு எழுபது ரூபாயா எடு… வேஸ்ட் ஆஃப் மை டைம்.. வேஸ்ட் ஆஃப் மை எனர்ஜி, ஒண்ணு தெரிஞ்சுக்க.. என்னிக்கும் நேர்மையா வாழப் பழகு… லைஃப் கடைசி வரைக்கும் சந்தோஷமா இருக்கும்… தொழில சுத்தமா செய்யி… செய்யும் தொழிலே தெய்வமுன்னு சும்மாவா சொன்னான்..” பேசிக் கொண்டே போக பழைய பேப்பர்காரர் சடாரென எழுபது ரூவாயாக கணக்குத் தீர்த்தார்.

    வேண்டாத சுமையாக சாக்குப் பையை சுமந்தவர் முணகிக் கொண்டார், “என் பைலேர்ந்து ஒரு மூணு ரூவாய புடுங்கறதுக்கு தத்துவம் வேற! அடச்சே..” ஒரு கணம் துருபிடித்த இரும்பை உதறிப் பார்ப்பது போல மௌனமாக இமைகளை உதறி பேங்க்காரரை உற்று நோக்கியவாறு நகர்ந்தார்.

    “என்ன அப்படிப் பாக்கறீங்க, காசு பெருசில்ல சார்.. நம்மள ஒண்ணுந் தெரியாத முட்டாள்னு நெனக்கிறாம் பாருங்க, அதான் நானும் விடல…” ஹி..ஹி..ஹி. பக்கத்து வீட்டுக்காரரிடம் தனது சாமர்த்தியத்தைப் பகிர்ந்து கொண்டு டக் டக் கென்று மாடியேறினார் பேங்க்காரர்…

    ________________________________________________________________________

    – சுடர்விழி, புதிய கலாச்சாரம், டிசம்பர் – 2010

    ________________________________________________________________________

    கோவை என்.டி.சி தேர்தல்: கைக்கூலிகளை எதிர்த்து புரட்சியாளர்களின் சமர்!

    29

    அந்த வாக்குச் சீட்டுகள் டிசம்பர் 18ம் தேதிக்காக காத்திருக்கின்றன. அன்றுதான் தமிழகத்திலுள்ள என்.டி.சி. எனப்படும் தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமான 7 ஆலைகளிலும் தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தல் நடைபெறப் போகிறது. இந்த 7 ஆலைகளில் 5 ஆலைகள் கோவையிலும், மற்ற இரண்டு ஆலைகள் முறையே சிவகங்கையிலும், இராமநாதபுர மாவட்டத்திலும் இருக்கின்றன.

    தேர்தல் அன்று தன் மீது எழுதப்படும் வாசகங்கள் என்னவாக இருக்கும் என்று அச்சடிக்கப்பட்ட அந்த வாக்குச் சீட்டுகளுக்கு நன்றாக தெரியும். மறுநாள் – அதாவது டிசம்பர் 19ம் தேதி அன்று – வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போது, எந்த திசையை நோக்கி வருங்காலம் நகரப் போகிறது என்பதையும் அவைகள் துல்லியமாக அறியும்.

    அதனாலேயே ஆவலுடன் டிசம்பர் 18ம் தேதிக்காக வாக்குச் சீட்டுகள் காத்திருக்கின்றன.

    அதனாலேயே இந்தத் தேர்தலில் நாம் தோற்றாலும் பரவாயில்லை. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் மட்டும் வெற்றி பெறக் கூடாது என ஒவ்வொரு ஓட்டுக் கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்களும் முழுமூச்சுடன் போராடி வருகின்றன. ‘எங்க தொழிற்சங்கத்துக்கு ஓட்டுப் போடலைனாலும் பரவால. அவனுங்களுக்கு மட்டும் தயவு செஞ்சு ஓட்டுப் போடாதீங்க…’ என ஒவ்வொரு தொழிலாளியின் காலிலும் விழுந்து கெஞ்சுகின்றன, கையெடுத்து கும்பிடுகின்றன.

    இப்படி ஓட்டுக் கட்சிகளை சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்களும் நடந்துக் கொள்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கோவை பஞ்சாலைகளில் பிடிப்பு இருந்தால்தான் கோவையை சுற்றியிருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் ஓட்டுக் கட்சி தொறிசங்கங்களால் கோலோச்ச முடியும். தொழிலாளர்களை ஏமாற்றி, முதலாளிகளுக்கு சாதகமாக நடக்க முடியும். முதலாளிகள் வீசும் எலும்புத் துண்டை பாய்ந்து கவ்வ முடியும்.

    அப்படியென்ன கோவை பஞ்சாலை தொழிற்சங்கங்களுக்கு முக்கியத்துவம் இருக்கின்றன என்பதை அறிய சுருக்கமாக ஆங்கிலேயர் காலம் தொட்டு கோவையின் வரலாற்றை தெரிந்து கொள்ளவேண்டும்.

    இந்தியாவில் வேளாண்மைக்கு அடுத்து பலகோடி குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருப்பது ஜவுளித்துறைதான். லாபம் கொழிக்கும் இந்தத் துறையை குறித்து ஆங்கிலேயர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள். சுற்றுப் புறங்களில் பருத்தி விளைய வேண்டும். விளைந்த பருத்தியை நூலாக நூற்பதற்கு மிதமான தட்பவெப்பம் நிலவ வேண்டும். இப்படி இந்தியாவில் எந்தெந்த பகுதிகள் இருக்கின்றன என துல்லியமாக கணக்கிட்டு 3 பகுதிகளை தேர்ந்தெடுத்தார்கள். அந்தப் பகுதிகளில் சாலைகளையும், இரயில் பாதைகளையும் அமைத்து ஜவுளித்துறை சாதனை மையங்களாக உருவாக்கினார்கள். அப்படி தோன்றியதுதான் ஏ,பி,சி எனப்படும் 3 நகரங்கள். இதில், ஏ – அகமதாபாத்; பி – மும்பை; ஆகியவை வடமாநிலங்களில் இருக்க, சி – கோயமுத்தூர் மட்டும் தென்னகத்தில் – அதிலும் தமிழகத்தில் இருக்கிறது.

    குறைவான கூலியில் பல மணிநேரங்கள் வேலை செய்ய கோவையில் தொழிலாளர்கள் கிடைப்பார்கள் என்பதை புரிந்துக் கொண்ட சர்.ராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேயர், 1888ல் கோவையில் முதல் பஞ்சாலையை தொடங்கினார். ஸ்டேன்ஸ் மில் என்றழைக்கப்பட்ட இந்த பஞ்சாலையை அன்று ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் மக்கள் பார்த்தார்கள். அங்கிருந்த பஞ்சை நூலாக்கும் இயந்திரங்களை ஒரு அணா செலுத்தி மக்கள் பார்க்கலாம் என நிர்வாகம் அனுமதித்தது. அதாவது இந்த வகையிலும் மக்களை சுரண்டியது. அப்படி சென்று பார்த்த ஜி.குப்புசாமி நாயுடு, தானும் ஒரு பஞ்சாலையை தொடங்க விரும்பினார். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் இன்று பல கிளைகளாக வளர்ந்து நிற்கும் லட்சுமி மில்ஸ்.

    ஸ்டேன்ஸ் மில்லை தொடர்ந்து 1900ல் மால் மில், 1906ல் காளீஸ்வரர் மில், ரங்க விலாஸ் மில், ராதாகிருஷ்ணா மில்… என 1930 வரை 8 மில்கள் தோன்றின. பைகாரா திட்டத்தின் மூலம் மின்சாரம் கிடைப்பதற்கு முன்புவரை இந்த பஞ்சாலைகள் நீராவி சக்தியினாலேயே  இயங்கி வந்தன. 1930க்கு பிறகு மின்சாரம் முன்பை விட மலிவாக கிடைக்க ஆரம்பித்தப் பின் பஞ்சாலைகள் வேகமாக வளர்ந்தன. இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும், இங்கிலாந்தின் உற்பத்தி இலக்குகள் யுத்த சேவையை நோக்கி திரும்பின. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நூலுக்கும், துணிகளுக்கும் உருவான தேவையை கோவை பஞ்சாலைகள் பயன்படுத்திக் கொண்டன.

    இதற்கு முன்பாகவே மில் அதிபர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இங்கிலாந்தில் ஜவுளித் தொழில்நுட்பம் கற்க அனுப்பப்பட்டனர். தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து சுரண்டும் கல்வியை – மேலாண்மைத் திறனை, வணிக நுட்பங்களை – அவர்கள் கற்று வந்து கோவையில் அமல்படுத்தினார்கள்.

    இதன் தொடர்ச்சியாக 1940களில், ஆங்கிலேய அரசு, நேசநாடுகளின் இராணுவத்துக்குத் தேவையான ஆடைகள் மற்றும் ஜவுளி உற்பத்தியை ஊக்குவிக்கவும், உறுதி செய்யவும் இந்திய தரகு முதலாளிகளை உருவாக்கி அதிகாரங்களை வழங்கியது.

    இந்தக் காலகட்டத்தில்தான், கோவையிலிருந்து ஏறக்குறைய 8 கி.மீ தொலைவிலுள்ள சின்னியம்பாளையம் ரங்கவிலாஸ் மில்லில் வேலைப் பார்த்து வந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காகவும், பணி நேரங்களை ஒழுங்குப்படுத்தவும் போராட்டத்தை நடத்தினார்கள். இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய 4 தொழிலாளர்களையும் கைது செய்த ஆங்கிலேய காவல்துறை, ஒருவருக்கு தூக்கு மற்ற மூவருக்கு ஆயுள்தண்டனை என தீர்ப்பு வழங்கியது. ஆனால், நெஞ்சுரம் மிக்க அத்தொழிலாளர்கள், எங்கள் நால்வருக்கும் ஒரே தண்டனைதான் வழங்க வேண்டும் என்று அழுத்தமாக சொல்லி தூக்குக் கயிறை ஒன்றாக முத்தமிட்டார்கள். வீரம் செறிந்த இந்த சின்னியம்பாளைய தியாகிகளின் போராட்டத்தை இன்றளவும் கோவை பஞ்சாலை தொழிலாளர்கள் மறக்கவில்லை.

    அதேபோல் கோவையில் தொடங்கப்பட்ட முதல் பஞ்சாலை நிறுவனமான ஸ்டேன்ஸ் மில்லில் ஊதிய உயர்வுக்காகப் போராடிய பெண் தொழிலாளர்கள், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான சம்பவத்தையும் கோவை பஞ்சாலை தொழிலாளர்கள் மறக்கவில்லை. இந்த இரு ஆலைகளிலும் நடைபெற்ற போராட்டங்கள் ஒட்டுமொத்தமான அனைத்து கோவை பஞ்சாலைகளுக்கும் சேர்த்துத்தான் என்பது தொழிலாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.

    இப்படியாக நீளும் கோவை பஞ்சாலைகளின் வரலாற்றில், அடுத்தகட்டமாக 1974ம் ஆண்டு வந்து சேர்ந்தது. இந்திரா காந்தி தலைமையிலான அரசு, இக்காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான பஞ்சாலைகளை நாடு முழுவதும் நாட்டுடைமையாக்கியது. அதில், தமிழகம், புதுச்சேரியில் இருந்த 15 பஞ்சாலைகளும் அடக்கம். இப்படித் தோன்றிய தேசிய பஞ்சாலைக் கழகத்தில் இன்று கோவையில் 5ம், சிவகங்கை மற்றும் இராமநாதபுர மாவட்டங்களில் தலா ஒன்றுமாக சேர்த்து மொத்தம் 7 பஞ்சாலைகளே இயங்கி வருகின்றன. மீதமுள்ளவை அனைத்தும் ‘நஷ்டத்தில் இயங்குவதாகக்’ கூறி மூடப்பட்டு விட்டன. அதற்காக இயங்கி வரும் மற்ற 7ம் லாபத்தில் இயங்குவதாக அர்த்தமில்லை. இவையும் நஷ்டத்தில்தான் இயங்கி வருவதாக அரசு கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறது.

    ஆனால் இந்த ஆலைகள் எதுவும் நஷ்டத்தில் இயங்கவில்லை என்பதும், செயற்கையாக அப்படியான தோற்றத்தைத் தருகிறது என்பதும் தொழிலாளர்களுக்கு நன்றாகவே தெரியும். சான்றாக, இன்றையதினத்தில் இந்திய அளவில் ஜவுளி ஆலைகளுக்கு தேவைப்படும் பஞ்சின் அளவு 246 இலட்சம் பேல்கள். (ஒரு பேல் என்பது 176 கிலோவைக் கொண்டது). ஆனால், இந்தாண்டு இந்திய அளவில் விளைந்துள்ள பஞ்சின் அளவு 295 இலட்சம் பேல்கள். அதாவது தேவையைவிட, 50 இலட்சம் பேல்கள் அதிகம் விளைந்துள்ளது. இதுதவிர, சென்ற ஆண்டு கூடுதலாக விளைந்த 55 இலட்சம் பேல்களும் கையிருப்பில் உள்ளன. இப்படி கிட்டத்தட்ட 105 இலட்சம் பேல்கள் கையிருப்பில் இருக்கும்போதும், பஞ்சின் விலை ஏன் உயர்கிறது? ஏன் பஞ்சாலைகள் நஷ்டத்தில் இயங்குவதாக அரசு கணக்குக் காட்டுகிறது? எதனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதிய உயர்வு வழங்காமல் இருக்கிறது?

    இந்தக் கேள்விகளை முன்னிறுத்தி எந்த ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களை அணிதிரட்டவில்லை. அரசுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. பேச்சுவார்த்தை நடத்தி நியாயமாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியத்தை பெற்றுத் தரவில்லை.

    இதை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம், குரல் கொடுத்தது. 30 ஆண்டுகளாக தொழிற்சங்க அங்கீகாரத்துக்காக தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதை எதிர்த்து நீதிமன்றம் சென்றது. தேர்தலை நடத்த வழிவகை செய்தது.

    ஆனால், ஒரேநாளில் ஏதோ ‘ஜீ பூம்பா’ கதையாக இது நடந்துவிடவில்லை. இந்தத் தேர்தலை நடத்துவதற்காகவே கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர் சங்கம், மிக நீண்ட போராட்டத்தை சந்தித்திருக்கிறது.

    பொதுவாக ஓர் ஆலை அல்லது நிறுவனத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியை (புஜாதொமு) தொடங்க வேண்டும் என அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் விரும்பினால், உடனே சங்கம் தோன்றிவிடாது. அதே ஆலை அல்லது நிறுவனத்தில் இருக்கும் மற்ற தொழிற்சங்கங்களில் – அது ஓட்டுக்கட்சிகளின் தலைமையிலான தொழிற்சங்கமாக இருந்தாலும் – இணைந்து செயலாற்றும்படியாகவே அறிவுறுத்தப்படுவார்கள். காரணம், தொழிலாளர்களின் ஒற்றுமையை ஒவ்வொரு விநாடியும் வலியுறுத்தும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தானாகவே ஒரு பிளவை உருவாக்க ஒருபோதும் விரும்பியதுமில்லை; செயல்படுத்தியதும் இல்லை.

    அந்தவகையிலேயே கோவை என்.டி.சி. ஆலைகளில் பணிபுரிந்த விளவை இராமசாமி உட்பட பல தோழர்கள், புஜாதொமு-வை தொடர்பு கொண்டபோது, ஏற்கனவே அங்கு செயல்பட்டு வந்த ஏஐடியுசி (சி.பி.ஐ), சிஐடியு (மார்க்சிஸ்ட்) தொழிற்சங்கங்களில் ஒன்றில் இணைந்து செயல்படும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். தோழர்களும் அதன்படியே ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்களில் இணைந்து நியாயமான கோரிக்கைகளை பெற்றுத் தரும்படி தொழிற்சங்க தலைமையை வலியுறுத்த ஆரம்பித்தார்கள்.

    இயங்கி வரும் 7 என்.டி.சி. மில்களிலும் 2,500 ஆண் – பெண் நிரந்தரத் தொழிலாளர்களும், இதே எண்ணிக்கையிலான தினக்கூலி ஆண் – பெண் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். பொதுத்துறை நிறுவனங்களான இந்த மில்கள் அனைத்திலும் அரசாங்க சட்டங்கள் எதுவும் கடைப்பிடிக்கப் படுவதில்லை. 240 நாட்கள் தொடர்ச்சியாக வேலைப் பார்க்கும் தினக்கூலி தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டுமென சட்டம் சொல்கிறது. ஆனால், 15 முதல் 20 ஆண்டுகளாக என்.டி.சி. ஆலைகளில் தினக்கூலிகளாகவே அவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தோழர்கள் குரல் கொடுத்தபோது ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்க தலைமை ஏதேதோ காரணங்களைச் சொல்லி தட்டிக் கழித்தது.

    அதேபோல் ஒரு வருடத்தில் ஒரு நாள் பணிபுரிந்தாலும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு கிராஜுவிட்டி எனப்படும் பணிக்கொடை வழங்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால், நிர்வாகத்துடன் கூட்டு சேர்ந்து ஓட்டுக் கட்சிகளின் தொழிற்சங்கத் தலைமை அதை வருடத்துக்கு 240 நாட்களுக்கு பணிபுரிந்தால்தான் பணிக்கொடை என மாற்றியிருக்கிறது. அத்துடன் 215 நாட்களுக்கு குறைவாக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இன்சென்டிவ் இல்லை என்றும் அறிவித்துவிட்டார்கள்.

    இவையனைத்துக்கும் மேலாக இன்னொரு கொடுமை என்.டி.சி. ஆலைகளில் நடக்கிறது. இங்குள்ள அதிகாரிகள் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை பெறுகிறார்கள். ஆனால், தொழிலாளர்கள் – அவர்கள் நிரந்தர தொழிலாளர்களாக இருந்தாலும் சரி – மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை பெறவில்லை. ஒரே மில்லுக்குள், ஒரே காம்பவுண்ட்டுக்குள் நிலவும் இந்த ஏற்றத் தாழ்வு இந்தியாவிலுள்ள எந்த பொதுத்துறையிலும் கிடையாது என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

    என்.டி.சி. நலிவடைந்துவிட்டது என்று சொல்லி 20 ஆண்டுகளாக எந்தத் தொழிலாளிக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. ஆனால், நிர்வாகிகளுக்கு மட்டும் மற்ற மத்திய அரசு நிறுவனங்களில் ஊதிய உயர்வு வழங்கப்படும் போதெல்லாம் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. இது என்ன நியாயம்? என்.டி.சி. நஷ்டத்தில் இயங்குகிறது என்றால், அதற்கு நிர்வாகிகளும்தானே பொறுப்பு? அவர்களுக்கு சம்பள உயர்வை வழங்கும் அரசு, ஏன் தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்காமல் இருக்கிறது?

    அதேபோல் பிற மாநிலங்களில் இயங்கும் என்.டி.சி. ஆலைத் தொழிலாளர்களுக்கும் தமிழக என்.டி.சி. ஆலைத் தொழிலாளர்களுக்கும் கேண்டீன் முதற்கொண்டு மருத்துவ இழப்பீடு, மானியவிலையில் பொருட்கள் வாங்குவது வரை அனைத்து சலுகைகளிலும் வித்தியாசம் காணப்படுகிறது. ஏன் இந்த ஏற்றத் தாழ்வு? இதை ஏன் அகற்றக் கூடாது? இருக்கும் உரிமைகளை எல்லாம் நிர்வாகத்துடனும், அரசுடனும் போராடி ஏன் பெற்றுத் தரக் கூடாது? 30 ஆண்டுகளாக ஏன் மவுனமாக இருக்கிறீர்கள்… என ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்க தலைமையிடம் தோழர்கள் கேட்டார்கள். கேட்டவர்களை அத்தலைமை அலட்சியப்படுத்தியது.

    பதிலாக, தொழிலாளர்களிடம் வி.ஆர்.எஸ். வாங்கித் தருகிறோம் என நைச்சியமாக பேசி லஞ்சம் வாங்க ஆரம்பித்தார்கள். என்.டி.சி. குவார்ட்டர்ஸ் பெற்றுத் தருகிறோம் என கமிஷன் பெற தொடங்கினார்கள். தினக்கூலி தொழிலாளர்களிடம், உங்களை பணி நிரந்தரம் செய்ய குரல் கொடுக்கிறோம் என்று சொல்லாமல், நாளொன்றுக்கு ரூபாய் 250 பெற்றுத் தருகிறோம்… அதற்கு இவ்வளவு ஆயிரம் லஞ்சமாக கொடுங்கள் என பிச்சை கேட்க ஆரம்பித்தார்கள்.

    இதற்கு மேலும் ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்களை நம்பிப் பயனில்லை என்ற நிலை உருவான பிறகே சென்ற ஆண்டு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் உதயமானது. பெரும்பான்மையான தொழிலாளர்கள் இச்சங்கத்தில் ஆர்வத்துடன் வந்து இணைந்தார்கள்.

    காரணம், பிற ஓட்டுக்கட்சி தொழிற்சங்கங்களை பொறுத்தவரை ஒரு மாவட்டம் முழுக்க இருக்கும் ஆலைகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் செயல்படும் அவர்களது தொழிற்சங்கங்கள் அனைத்துக்கும் ஒருவரே தலைவராக இருப்பார். ஒருவரே செயலாளராக இருப்பார். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இதுதான் நிலமை. அதுமட்டுமல்ல, மாவட்ட தொழிற்சங்க தலைமையில் இருப்பவர்கள், சொந்தமாக ஆலைகளையும் வைத்திருக்கிறார்கள். அதாவது தொழிற்சங்க தலைமையே முதலாளியாகவும் இருக்கிறது. இவர்களால் எப்படி இன்னொரு முதலாளியிடம் தொழிலாளர்களுக்கு சாதகமாக பேச முடியும்? உரிய உரிமைகளை பெற்றுத் தர முடியும்?

    ஆனால், புதிய ஜனநாயக தொழிலாளார் முன்னணி ஒருபோதும் இப்படி செயல்படுவதில்லை. எந்த ஆலை அல்லது தொழிற்சாலை அல்லது நிறுவனத்தில் சங்கம் ஆரம்பிக்கப்படுகிறதோ அந்த ஆலை அல்லது தொழிற்சாலை அல்லது நிறுவனத்தில் பணிபுரிபவர்களே அந்தந்த சங்கத்துக்கு தலைவர், செயலாளராக இருப்பார்கள். கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளார் சங்கமும் இப்படித்தான் இயங்கி வருகிறது. தொழிலாளர்கள் மனமுவந்து இச்சங்கத்தில் இணைய இதுதான் காரணம். தங்களில் ஒருவர் அரசுடனும், நிர்வாகத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பது அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை தந்திருக்கிறது.

    ஆக, டிசம்பர் 18 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் எந்த தொழிற்சங்கம் அங்கீகாரம் பெறப் போகிறது என்பது உறுதியாகிவிட்டது. அதுவேதான் ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நாடி நரம்புகளில் ஜன்னி கண்டு பிதற்றவும் காரணமாக அமைந்துவிட்டது.

    ‘புஜதொமு-க்கு எம்.எல்.ஏ., எம்.பி. இல்லை. எனவே இவர்களது இணைப்புச் சங்கமான கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தால் உங்களுக்கான உரிமையை பெற்றுத் தர முடியாது…’ என என்.டி.சி. தொழிலாளர்கள் மத்தியில்  தீவிரமாக பிற ஓட்டுக்கட்சி தொழிற்சங்கங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், இதைக் கேட்டு தொழிலாளர்கள் வாய்விட்டு சிரிக்கிறார்கள். சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் இவர்கள் இதுவரை என்ன உரிமைகளை பெற்றுத் தந்திருக்கிறார்கள்? 20 ஆண்டுகளாக ஒருமுறைக் கூட நியாயமாக கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வை பெற்றுத் தரவில்லையே? அதுமட்டுமா… 30 ஆண்டுகளாக தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலைக் கூட நடத்த அனுமதி பெறவில்லையே..? எம்.எல்.ஏ., எம்.பி. இல்லாத கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம்தானே நீதிமன்றம் சென்று, தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலை நடத்த வழிவகை செய்திருக்கிறது… என்று கேட்கிறார்கள்.

    இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல திராணியற்ற ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்கள், புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து பிரச்சாரத்தில் அடுத்த கேள்வியை கேட்கின்றன.

    ‘சட்டமன்ற – நாடாளுமன்ற தேர்தலை போலி ஜனநாயகத் தேர்தல் என்று சொல்லி புறக்கணிக்கும் படி சொல்லும் இவர்கள், தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலில் மட்டும் பங்கேற்ப்பது ஏன்? இதிலிருந்தே இவர்களது இரட்டை வேடம் புரியவில்லையா? என தொண்டைத் தண்ணீர் வற்ற கூக்குரல் இடுகிறார்கள். ஆனால், இப்படி கூக்குரல் இடுபவர்கள்தான் இரட்டை வேடம் பூண்டிருக்கிறார்கள் என்பது என்.டி.சி. தொழிலாளர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

    சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ ஒரு தொகுதியில் தேர்தல் நடந்தால், அத்தொகுதியில் இருக்கும் அனைவரும் ஓட்டுப் போடுவதில்லை. 40% ஓட்டு பதிவானாலே அதிகம். இந்த 40% வாக்கிலும் 20 முதல் 30 சதவிகித வாக்கு பெறுபவர்களே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். இந்தவகையில் மொத்தமாகப் பார்த்தால், வெற்றி பெற்றவரை எதிர்த்து வாக்களித்தவர்களே அதிக சதவிகிதமாக இருப்பார்கள். அப்படி வெற்றி பெற்றவரும் அடுத்த தேர்தல் வரும்வரை தொகுதி பக்கம் எட்டிப் பார்ப்பதுமில்லை. தொகுதி மக்களின் முன்னேற்றத்துக்காக குரல் கொடுப்பதுமில்லை.

    ஆனால், தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தல் என்பது அப்படியில்லை. அனைத்து தொழிலாளர்களும் சேர்ந்துதான் எந்தத் தொழிற்சங்கம் தங்கள் சார்பாக நிர்வாகத்துடனும் அரசுடனும் பேச வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தேர்தலில் பங்கேற்கும் கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தை பொறுத்தவரை – இவர்கள் வெற்றி பெற்றால் அரசுடனும், நிர்வாகத்துடனும் பேச்சு வார்த்தை நடத்தப் போகிறவர்கள், அதே தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள்தான். அதாவது வெளியிலிருந்து வரும் மூன்றாவது நபரல்ல. தினமும் தொழிற்சாலைக்கு வந்து தங்களைப் போலவே பணிபுரியப் போகிறவர்தான் சங்கத்தின் தலைவராகவும், செயலாளராகவும் இருக்கிறார். தாங்கள் அனுபவிக்கும் அதே சிரமங்களைத்தான் அவரும் அனுபவிக்கிறார். எனவே தொழிலாளர்களின் நிலை – கஷ்டம் – அவருக்கும் தெரியும்.

    ஒருவேளை அவர் விலைபோய் விட்டாலும் அவரை நேருக்கு நேர் கேள்வி கேட்கலாம். பெரும்பான்மை பலத்துடன் பதவியிலிருந்து அவரை நீக்கவும் செய்யலாம்… என்ற உண்மை என்.டி.சி. தொழிலாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.

    இதே உண்மையின் காரணமாகத்தான் புஜாதொமு தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலில் பங்கேற்கிறது. இதன் வழியாக தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. அவர்களுக்குள்ளேயே பிரச்னைகளை களைய கற்றுத் தருகிறது. சுருக்கமாக சொல்வதென்றால், சோஷலிசத்துக்கான பயிற்சியாகவே தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலை புஜாதொமு கருதுகிறது.

    இப்படி மிக வலுவாக ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நினைத்த இரு அஸ்திரங்களும் வலுவிழந்த நிலையில் மூன்றாவதாக ஒரு அஸ்திரத்தை எடுத்திருக்கிறது. ‘இவர்கள் தீவிரவாதிகள். இவர்கள் வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த என்.டி.சி. ஆலைகளையும் மூடிவிடுவார்கள். உங்களை குடும்பத்துடன் நடுத்தெருவில் நிறுத்துவார்கள்…’

    இதை வேறு யாரிடமாவது சொன்னால் ஒருவேளை நம்பலாம். ஆனால், என்.டி.சி. தொழிலாளர்களிடமே சொல்வதுதான் மிகப்பெரிய நகைச்சுவையாக அமைந்துவிட்டது. காரணம், என்.டி.சி.ஆலைகளில் ஓர் அங்கமான முருகன் மில்லில் வலுவாக கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் இருப்பதால்தான் 2009 – 2010ல் 100 சதவிகித இலாபத்தை அந்த மில் அடைந்திருக்கிறது. இதை தொழிலாளர்கள் சொல்லவில்லை. தன் கைப்பட மேலிடத்துக்கு அனுப்பிய ரிப்போர்ட்டில் அந்த மில்லின் நிர்வாகியே இதை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். ஆக, ஆலைகளை மூடுவது ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கத்தின் வேலைதான் என்பது என்.டி.சி. தொழிலாளர்களுக்கு அனுபவப்பூர்வமாக தெரியும். சமீபகாலத்தில் ஏறக்குறைய 50 நிறுவனங்களை கோவையில் மூடியது இவர்கள்தானே!

    ஆனால், இதற்கு நேர்மாறாக புதிய ஜனநாயக தொழிலாளார் முன்னணி செயல்பட்டிருக்கிறது என்பது என்.டி.சி. தொழிலாளர்களுக்கு நன்றாகத் தெரியும். உதாரணமாக ஓசூர் கமாஸ் பெக்ட்ரா தொழிற்சாலையில் புஜாதொமு இயங்க ஆரம்பித்தப் பிறகுதான் சட்டவிரோதமாக அத்தொழிற்சாலை புரிந்து வந்த பல காரியங்களை தடுத்து நிறுத்தியது. பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு கிடைக்காமல் இருந்த தொழிலாளர்களுக்கு ரூபாய் 15 ஆயிரம் ஊதிய உயர்வை பெற்றுத் தந்திருக்கிறது.

    அதேபோல் புதுச்சேரியில் இயங்கி வரும் குட்நைட் ஆலையில் இதுவரை இருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. காரணம், புஜாதொமு.

    சென்னை அம்பத்தூரில் இயங்கி வரும் அய்யப்பன் இண்டஸ்டிரீஸில் இதுவரை 6 முறை ஊதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக போடப்பட்டு, 6 முறையும் அமலுக்கு வந்திருக்கிறது. காரணம், புஜாதொமு.

    இவையனைத்தையும் கவனித்தபடி டிசம்பர் 18 அன்று தன் மீது எழுதப்படும் வாசகங்கள் என்னவாக இருக்கும் என்று உணர்ந்தபடி காத்திருக்கின்றன வாக்குச்சீட்டுகள்.

    அனைத்து பொய்ப் பிரச்சாரங்களும் வலுவிழந்த நிலையில் இறுதியாக ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்கள், ‘படித்தவர்கள் தலைமைக்கு வந்தால்தான் நல்லது நடக்கும்’ என ஒவ்வொரு தொழிலாளியின் செவியிலும் ஓதி வருகின்றன.

    அப்படி ஓதப்படும் செவிகளுக்கு சொந்தமான தொழிலாளர்களின் இதயத்துக்கு மிகப்பெரிய வரலாற்று உண்மை ஒன்று தெரியும் என்பது பாவம் ஓட்டுக்கட்சி தொழிற்சங்கங்களை சேர்ந்த மெத்த படித்தவர்களுக்கு தெரியவில்லை.

    பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம்தான். அதுமட்டுமல்ல, ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்றும் உணர்த்தியது லெனின் உருவாக்கிய ரசிய கம்யூனிஸ்ட் கட்சிதான்.

    அப்படி செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனாக 1878ம் ஆண்டு டிசம்பர் 18 அன்று பிறந்த ஜோசிப் விசாரியோனவிச் ஸ்தாலின் என்கிற ஜோசப் ஸ்டாலினின் திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கையும், புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களாலும்தான் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது. மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை 15 ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும், பத்து சதவீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும், உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930களில் ரசியா மட்டும் முன்னேறியதும், இட்லரிடம் இருந்து உலகையே காப்பாற்றியதும் ஸ்டாலின் தலைமையில் ரசிய தொழிலாளர் வர்க்கம் சாதித்த வெற்றிகள். இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது.

    இவையனைத்தையும் சாதித்தது, மெத்தப் படித்த அறிவாளிகள் அல்ல. விவசாயிகளை உள்ளடக்கிய ரசிய தொழிலாளர் வர்க்கம்தான். அதை தலைமையேற்று வழிநடத்திய செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்த ஜோசப் ஸ்டாலின்தான்.

    அவர் பிறந்த அதே டிசம்பர் 18 அன்றுதான், என்.டி.சி.க்கு சொந்தமான 7 ஆலைகளிலும் தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தல் நடக்கப் போகிறது. அன்றைய தினம் தன் மீது எழுதப்படும் வாசகங்கள் என்னவாக இருக்கும் என்று அச்சடிக்கப்பட்ட அந்த வாக்குச் சீட்டுகளுக்கு மட்டுமல்ல, எழுதப்போகும் என்.டி.சி. தொழிலாளார்களுக்கும் நன்றாகத் தெரியும்.

    சின்னியம்பாளைய தியாகிகளைக் கண்ட ரங்கவிலாஸ் மில்லும், துப்பாக்கிச் சூட்டில் பலியான தோழர்களின் நினைவை ஏந்தியபடி வலம் வரும் ஸ்டேன்ஸ் மில்லும், என்.டி.சி.யின் அங்கமாகத்தான் இன்று இருக்கின்றன என்பது தொழிலாளர்களுக்குத் தெரியாதா என்ன?

    கோவை மாவட்டத்தில் புதிய விடியலுக்கான அத்தியாயத்தை எழுதப் போகும் கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளார் சங்கத்துக்கு புரட்சிகர வாழ்த்துகள்.

    வினவுடன் இணையுங்கள்

    தொடர்புடைய பதிவுகள்


    போஸ்கோ ஒப்பந்தம்: காங்கிரசின் கபடத்தனம்

    போஸ்கோ ஒப்பந்தம் : காங்கிரசின் கபடத்தனம்

    தென்கொரியாவின் தேசங்கடந்த தொழிற்கழகமான போஸ்கோ, ஒரிசா மாநிலத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ள இரும்பு உருக்காலைக்கு எதிராக கடந்த ஐந்தாண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது.  ஒரிசா மாநில அரசு பல்வேறு விதமான அடக்குமுறைகளை ஏவிவிட்ட பின்னும், அப்போராட்டம் பின்னடைவுக்கு உள்ளாகவில்லை.  போஸ்கோவின் திட்டங்களுக்கு உறுதுணையாய் நிற்பதாக நவின் பட்நாயக்கிற்கு உறுதியளித்திருக்கிறார், பிரதமர் மன்மோகன் சிங்.  இப்படிபட்ட நிலையில் இப்பிரச்சினையில் மைய அரசு திடீர் உத்தமர் வேடம் போடக் கிளம்பியிருக்கிறது.

    தென்கொரியாவின் தேசங்கடந்த தொழிற்கழகமான போஸ்கோ, ஒரிசா மாநிலத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ள இரும்புச் சுரங்கம், இரும்பு உருக்காலை மற்றும் இரும்புத் தாதுவை ஏற்றுமதி செய்வதற்கான துறைமுகம் ஆகியவற்றுக்கு விதிமுறைகளின்படி சுற்றுப்புறச் சூழல் அனுமதி பெற்றுள்ளதா?  அந்நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டபொழுது இந்திய வனச் சட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா? இத்திட்டத்தால் தங்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளதா?  அவர்களின் மறுவாழ்வுக்கான திட்டங்கள் உள்ளனவா? – ஆகியவை குறித்து ஆராய மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் நான்கு பேர் கொண்ட கமிட்டியொன்றை அமைத்தது.

    பழங்குடியின விவகாரங்கள் குறித்த ஆராய்ச்சியாளர் ஊர்மிளா பிங்க்ளே, முன்னாள் இந்திய வன அளவை இயக்குநர் ஜெனரல் தேவேந்திர பாண்டே, சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞரும் மனித உரிமை ஆர்வலருமான வீ.சுரேஷ் ஆகிய மூவரும் இக்கமிட்டியின் உறுப்பினர்களாகவும், மீனா குப்தா என்பவர் இக்கமிட்டியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.

    மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் போஸ்கோ திட்டத்திற்குத் தேவைப்பட்ட அனுமதிகளை வாரிவழங்கியபொழுது, மீனா குப்தா அத்துறையில் செயலராக இருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  இப்படிபட்ட பின்னணி கொண்டவரை கமிட்டியின் உறுப்பினராக மட்டுமின்றி, தலைவராகவும் நியமித்ததில் இருந்தே மைய அரசின் எண்ணவோட்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.

    மீனா குப்தாவும் மைய அரசை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கவில்லை.  அவர் இது தொடர்பாக அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில், “போஸ்கோவிற்கு சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனச் சட்டங்களை மீறி அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், அத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை.  இத்திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க போஸ்கோவிற்கு கால அவகாசம் அளிப்பதன் மூலமும், சுற்றுப்புறச் சுழல் பாதிப்பு தொடர்பாக இன்னும் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுமாறு போஸ்கோவிற்கு உத்திரவிடுவதன் மூலமும் இத்திட்டத்தைத் தொடர அனுமதிக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  அதேபொழுதில் மற்ற மூன்று உறுப்பினர்கள், “உண்மைகளை மூடிமறைத்தும் சட்ட விரோதமான முறையிலும் போஸ்கோ திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக’’த் தமது அறிக்கையில் நிரூபித்துள்ளதோடு, போஸ்கோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

    * போஸ்கோ ஒரிசாவில் அமைக்கத் திட்டமிட்டுள்ள உருக்காலை ஆண்டொன்றுக்கு 1.2 கோடி டன் இரும்பை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.  ஆனால், இத்திட்டம் தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள சுற்றுப்புறச் சூழல் ஆய்வறிக்கையோ, போஸ்கோ ஆலையின் முதல் கட்டத்தின் உற்பத்தி இலக்கான 40 இலட்சம் டன் இரும்பு உற்பத்தியை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.  அதாவது, 1.2 கோடி டன் இரும்பை உற்பத்தி செய்வதால் ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யாமல், 40 இலட்சம் டன் இரும்பை உற்பத்தி செய்வதால் ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதன்படி இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    * போஸ்கோவின் இரும்பாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1,620 ஹெக்டேர் நிலப்பரப்பில் 1,253 ஹெக்டேர் நிலப்பரப்பு பல்லுயிர்களும், விதவிதமான தாவர வகைகளும் நிறைந்த வனப்பகுதியாகும்.  இத்திட்டத்தால் ஏறத்தாழ 8 கிராமங்கள் அழிந்துபோகும் வாய்ப்புண்டு.  இப்படிபட்ட நிலையில் இத்திட்டம் குறித்து முழுமையான சுற்றுப்புறச் சூழல் ஆய்வு நடத்தியிருக்க வேண்டும்.  ஆனால், இத்திட்டத்தால் மழைக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மட்டுமே ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.  மேலும், போஸ்கோ அமைக்கவுள்ள இரும்பு உருக்காலை, மின் உற்பத்தி நிலையம், துறைமுகம் ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேரத்து, அவை சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை ஆராயாமல், தனித்தனியாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.  இப்படி ஆய்வு நடத்துவது சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு குறித்த விதிகளுக்குப் புறம்பானது.

    * கடற்கரை ஒழுங்குமுறை விதிகளின்படி,  பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ள கடற்கரைப் பகுதிகளில் இரும்பு உருக்காலைகளை அமைக்க முடியாது.  போஸ்கோவின் இரும்பு உருக்காலை இப்படிபட்ட கடற்கரைப் பகுதியில்தான் அமையவுள்ளது என நன்கு தெரிந்திருந்தும், விதிமுறைகளுக்கு முரணாக அந்நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    * போஸ்கோ இரும்பாலை அமையவுள்ள பகுதி பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்களையும் உள்ளடக்கியிருப்பதால், ஆலை அமைவதற்கான தடையில்லாச் சான்றிதழை கிராமப் பஞ்சாயத்திடமிருந்துதான் பெற வேண்டும்.  ஆனால், ஒரிசா மாநில அரசோ இப்பகுதிகளில் பழங்குடியின மக்கள் வாழ்ந்துவருவதை மறைத்துவிட்டதோடு, தடையில்லாச் சான்றிதழையும் கிராமப் பஞ்சாயத்திற்குப் பதிலாக ஜகத்சிங்பூர் மாவட்ட நீதிபதியிடமிருந்து பெற்றுள்ளது.

    * இத்திட்டத்தால் தமது வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும் பழங்குடியின மக்கள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தட்டு மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து எந்தவொரு திட்டமும் போஸ்கோவிடமும் இல்லை என்பது மட்டுமல்ல, மறுவாழ்வு அளிப்பது குறித்த சிந்தனையே போஸ்கோவிடம் இல்லை.

    மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை உள்ளிட்டு பல்வேறு  முறைகேடுகளைச் சுட்டி காட்டியுள்ள அம்மூவரும், “சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் போஸ்கோவிற்கு அனுமதி அளித்துள்ள விவகாரத்தில் தனது விதிகளைத் தானே பின்பற்றவில்லை” என்றும் அம்பலப்படுத்தியுள்ளனர்.  “வளர்ச்சி என்ற பெயரில் சட்டம் ஓரங்கட்டப்படுவதற்கு போஸ்கோ நல்ல உதாரணமாகும்; இத்தகைய முயற்சிகள் வெற்றி அடையுமானால், அதனால் கொள்ளை இலாபப் பேர்வழிகள்தான் பலனடைவார்களே தவிர, நாட்டின் வளர்ச்சியையும் சாதிக்க முடியாது; சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாக்க முடியாது” என இம்மூவரும் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

    போஸ்கோ ஒப்பந்தம் : காங்கிரசின் கபடத்தனம்

    இந்த மூவர் அளித்த அறிக்கை ஒருபுறமிருக்க, வெளிநாட்டு வாழ் இந்தியர்களால் நடத்தப்படும் சுரங்கப் பகுதி மக்கள் ஒற்றுமை இயக்கம் போஸ்கோ திட்டத்தால் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள், வரி வருமானம் ஆகியவற்றை ஆராய்ந்து, இத்திட்டத்தால் இந்தியாவுக்குக் கிடைக்கும் இலாபங்களைவிட நட்டமே அதிகம் என அம்பலப்படுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

    போஸ்கோ திட்டத்தால் கிடைக்கும் சமூக நலன்களை ஆராய்ந்த பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில் என்ற அமைப்பு, இது தொடர்பாக 2007-ஆம் ஆண்டு அளித்த அறிக்கையில், “இத்திட்டத்தால் 8,70,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் 2017 ஆம் ஆண்டில் ஒரிசா மாநிலத்தின் மொத்த வருவாயில் போஸ்கோவின் பங்கு 11.5 சதவீதமாக இருக்கும் என்றும்” கூறி, இத்திட்டத்தைப் புகழ்ந்து தள்ளியது.  ஒரிசா மாநில அரசும் இப்புள்ளிவிவரங்களைக் காட்டிதான் இந்தத் திட்டத்தின் அவசியத்தைத் தூக்கிப் பிடித்து வந்தது.

    ‘‘இந்த அறிக்கை சுதந்திரமாகத் தயாரிக்கப்பட்டதல்ல; போஸ்கோ நிறுவனத்திடம் காசு வாங்கிக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை” என்ற உண்மையை சுரங்கப் பகுதி மக்கள் ஒற்றுமை இயக்கம் அம்பலப்படுத்தியிருக்கிறது.  பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில் போஸ்கோ குறித்த அறிக்கையைத் தயாரிப்பதில் அரசனை விஞ்சிய விசுவாசியாக நடந்து கொண்டுள்ளது.  போஸ்கோ நிறுவனம் தனது இணைய தளத்தில் ஒரிசாவில் அமையவுள்ள தனது ஆலைகளின் மூலம் அடுத்த 30 ஆண்டுகளில் 4,67,000 பேருக்கு வேலை கிடைக்கும் எனக் குறிப்பிட்டிருக்கும்பொழுது, பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சிலின் அறிக்கையோ போஸ்கோ திட்டத்தின் மூலம் 8,70,000 பேருக்கு வேலை கிடைக்கும் என ஊதிப் பெருக்கியுள்ளது.

    இவ்விரண்டு புள்ளிவிவரங்களுமே மோசடியானவை எனக் குறிப்பிட்டுள்ள சுரங்கப் பகுதி மக்கள் ஒற்றுமை இயக்கம், “போஸ்கோ திட்டத்தின் மூலம் 48,000 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்; அதுவும் கட்டுமான வேலைகள் நடக்கும்பொழுது மட்டும்தான் இவ்வளவு பேருக்கும் வேலை கிடைக்கும்; போஸ்கோ திட்டத்தால் ஜகத்சிங்பூர் பகுதியில் நடந்து வரும் பணப் பயிர் விவசாயம் உள்ளிட்ட உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை போஸ்கோ நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட  அறிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை; போஸ்கோ திட்டத்தின் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் எனக் காட்டுவதற்காக, உற்பத்திச் செலவு குறைத்துக் காட்டப்பட்டுள்ளது” எனத் தனது அறிக்கையில் அம்பலப்படுத்தியிருக்கிறது.

    போஸ்கோ திட்டம் நமது நாட்டின் இரும்புக் கனிம வளத்தைக் கொள்ளையடிப்பதற்கான திட்டம்தான் என்பது மேலும்மேலும் அம்பலமாகி வருகிறது.  இப்படிபட்ட நிலையில் இத்திட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் ரத்து செய்து, போஸ்கோவை நாட்டைவிட்டுத் துரத்துவதுதான் நாணயமிக்க செயலாக இருக்க முடியும்.  ஆனால், சுற்றுப்புறச் சூழல் அமைச்சகமோ இப்பிரச்சினையில் பாம்பும் சாகக் கூடாது, தடியும் நோகக்கூடாது என்ற நிலையில் உள்ளது.  இதற்கு, போஸ்கோ திட்டம் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட கமிட்டியின் நான்காவது உறுப்பினர் அளித்த அறிக்கையைப் பயன்படுத்திக் கொள்ள முயலுகிறார், சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

    போஸ்கோ ஒப்பந்தம் : காங்கிரசின் கபடத்தனம்

    போஸ்கோ திட்டம் குறித்து சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்திடம் எதிரும் புதிருமான இரண்டு அறிக்கைகள் உள்ள நிலையில், அத்துறையின் அமைச்சர் ஜய்ெராம் ரமேஷ், “இந்த இரண்டு அறிக்கைகளும் அடிப்படையில் வேறுபடவில்லை; விளக்கம் அளிப்பதில்தான் வேறுபட்டுள்ளன” எனப் புளுகியிருப்பதோடு, போஸ்கோவிற்கு அளிக்கப்பட்ட அனுமதியை, கிழக்காசிய நாடுகளோடு பொருளாதார உறவு கொள்ளும் இந்திய அரசின் கொள்கையோடு இணைத்துப் பார்க்க வேண்டும் எனக் கூறி இந்த சட்டவிரோதமான அனுமதியை நியாயப்படுத்த முயன்றுள்ளார்.  இந்த இரண்டு அறிக்கைகள் பற்றியும் ஒரிசா மாநில அரசிடமும் கலந்து ஆலோசித்துவிட்டுத்தான் இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்திருப்பதன் மூலம் போஸ்கோ திட்டம் பற்றி அரசின் உள்ளக்கிடக்கையைச் சூசகமாக விளங்க வைத்துவிட்டார், அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

    பி.டி. கத்திரிக்காய்க்கு அனுமதி அளிப்பதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியபொழுது, கருத்துக் கேட்பு நாடகங்களை நடத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்,  போஸ்கோ பிரச்சினையிலும் அதே தந்திரத்தைக் கையாளுகிறார்.  போஸ்கோவிற்கு எதிராகப் போராடிவரும் மக்கள் மத்தியில் அத்திட்டத்திற்கு எதிராக ஏதோ செய்யப்போவது போலக் காட்டிக் கொள்ளவும், அதேசமயம், நைச்சியமான வழியில் போஸ்கோவிற்கு வழங்கப்பட்டுள்ள சட்டவிரோதமான அனுமதியைத் தொடரவும்தான் இந்தக் கமிட்டியை அமைத்திருக்கிறது சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம்.

    நியம்கிரி மலையில் பாக்சைட்டைத் தோண்டுவதற்கு மட்டும் வேதாந்தாவிற்குத் தடை விதித்து கோந்த் பழங்குடி இன மக்களின் சிப்பாயாக ராகுலுக்கு முடிசுட்டியதைப் போல, போஸ்கோ பிரச்சினையையும் தனது ஓட்டு வேட்டைக்குப் பயன்படுத்திக் கொள்ள முயலுகிறது, காங்கிரசு கும்பல்.  போஸ்கோவிற்கு எதிராகப் போராடி வரும் ஒரிசா மாநில மக்கள் காங்கிரசின் இந்த நயவஞ்சகத்திற்கு எதிராகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

    __________________________________

    – புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010
    __________________________________

    வினவுடன் இணையுங்கள்

    தொடர்புடைய பதிவுகள்:

    சந்தி சிரிக்குது இராணுவத்தின் தேசபக்தி !

    ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல் : இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது !

    ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல்: இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது!

    பல நூறு இந்தியச் சிப்பாய்களைப் பலிகொண்ட கார்கில் போர் மக்களுக்கு இலவசமாக வழங்கியது வெறும் தேசபக்தியை மட்டும்தான். ஆனால் இப்போர் வீரர்களுக்குக் காலணிகள் வாங்கியதிலும், செத்துப்போன வீரர்களுக்குச் சவப்பெட்டி வாங்கியதிலும், பல கோடிகளை சுருட்டிக்கொள்ள  ஆளும் கட்சிக்குப் பயன்பட்டது. எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத ஊழல்களை அரங்கேற்ற இன்னும் அப்போர் பயன்படுகிறது என்பதற்கு இன்னொரு ஆதாரம் ஆதர்ஷ் ஊழல்.

    மும்பை-கொலாபா பகுதியில் இருக்கும் இராணுவத்துக்கு சொந்தமான நிலத்தில் ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டி கார்கில் போர்வீரர்களுக்கும், அப்போரில் மாண்டவர்களின் மனைவிகளுக்கும் தரப்போவதாக ஒரு திட்டத்தை முன்வைத்து ஆதர்ஷ் கூட்டுறவு குடியிருப்பு சொசைட்டியை உருவாக்கியது மகாராட்டிர அரசு.  இது தொடர்பாக எழுந்துள்ள ஊழல் விவகாரத்தில், நாளுக்கு ஒரு மோசடி குறித்த விவரம் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கிறது.

    மகாராட்டிர முதல்வர் அசோக் சவான் தனது மாமியாருக்கும் மருமகளுக்கும் இந்தக் குடியிருப்பில் வீடு ஒதுக்கியிருப்பது அம்பலமாகவே, சவானைப் பதவி விலக வைத்து அதைக் காட்டியே உத்தம வேடம் போட முனைந்தது, காங்கிரசு. ஆனால் உள்ளே செல்லச்செல்ல, காங்கிரசு, பாரதிய ஜனதா, சிவசேனா, அதிகார வர்க்கம், இராணுவ உயர் அதிகாரிகள் என்று மிகப் பிரம்மாண்டமானதொரு ஊழல் வலைப்பின்னல் அம்பலமாகத் தொடங்கியிருக்கிறது.

    முதலில் 6 மாடிகள், 40 வீடுகள் என்று போடப்பட்ட திட்டம், சுற்றுச்சூழல் விதிகளுக்கு முரணாக 31 மாடிகள், 103 வீடுகள் என்று அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு அதிகரிக்கப்பட்டபின், 60% வீடுகளை கார்கில் தியாகிகளுக்கும் மீதமுள்ள 40% வீடுகளைப் பொதுமக்களுக்கும் ஒதுக்குவது என்று விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 103 வீடுகளில் 34 பேர் மட்டும்தான் இராணுவத்தை சேர்ந்தவர்கள். அதிலும் வெறும் 3 பேர் மட்டும்தான் கார்கில் போர் முனையில் இருந்தவர்கள்.

    முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு (சிவசேனா), முன்னாள் முதல்வர் சுசில் குமார் ஷின்டே (தற்போது மத்திய அமைச்சர்), பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் நிதின் கட்காரி போன்ற சர்வகட்சிப் பிரமுகர்களும் ஆதர்ஷில் வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றிருப்பது அம்பலமாகியிருக்கின்றது.

    ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல் : இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது !

    ஓட்டுப்பொறுக்கிகளின் மோசடியைக் காட்டிலும், செத்துப்போன சிப்பாய்களின் உடலைக் காட்டி இராணுவ உயர் அதிகாரிகள் இதில் நடத்தியிருக்கும் கொள்ளைதான் மிகவும் கீழ்த்தரமானது.  தரைப்படை முன்னாள் தலைமை தளபதிகள் என்.சி.விஜ், தீபக் கபூர், முன்னாள் கடற்படை தளபதி  மாதவேந்திர சிங், வைஸ் அட்மிரல் மதன்ஜித் சிங், மேஜர் ஜெனரல் ஆர்.கே.ஹூடா ஆகிய அதி உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இக்குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

    குடியிருப்பில் இடம் ஒதுக்க வேண்டுமானால், மும்பையில் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் குடியிருந்திருக்க வேண்டும். ஏற்கெனவே சொந்த வீடு இருக்கக் கூடாது என்ற விதிமுறைகள் இருந்த போதிலும், குர்கானில் 6 பிளாட்டுகளும் மும்பையில் லோகன்ட்வாலாவில் ஒரு வீடும் வைத்திருக்கும் முன்னாள் தலைமைத் தளபதி தீபக் கபூர், அவை அனைத்தையும் மறைத்துப் பொச்சான்றிதழ் கொடுத்துள்ளார். ஆண்டு வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் வீடு ஒதுக்கப்படும் என்று விதிமுறை இருந்ததால், எல்லா இராணுவத் தளபதிகளும் தங்களது சம்பளச் சான்றிதழை மறைத்து, போர்ஜரி வேலை செய்து சம்பளத்தைக் குறைத்துக் காட்டிச் சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

    பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், நாக்பூரைச் சேர்ந்த பெரும் தொழிலதிபருமான அஜய் சஞ்சேதியின் மகன், மற்றும் அவரது கார் ஓட்டுனர் ஆகியோரது பெயர்களிலும் ஆதர்ஷ் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. “மாதச்சம்பளம் ரூ.8000 என்று குறிப்பிட்டுள்ள கார் டிரைவர் சுதாகர் மட்கே, 60 இலட்சம் மதிப்புள்ள ஆதர்ஷ் வீட்டை எப்படி வாங்க முடியும்? இந்த நபர் கட்காரியுடைய பினாமி” என்று குற்றம் சாட்டியிருக்கிறார் காங்கிரசின் மனிஷ் திவாரி.

    விதிமுறைகளை மீறி இந்தக் குடியிருப்புக்கு அனுமதி அளித்த, 2004-இல் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரதிப் வியாஸின் மனைவி நீனா வியாஸ், நகர்ப்புற வளர்ச்சித்துறையின் துணைச் செயலர் பி.வி. தேஷ்முக் என ஒரு பெரிய அதிகார வர்க்கக் கும்பலும் இக்குடியிருப்பில் தமக்கு இடம் ஒதுக்கிக் கொண்டுள்ளது.

    கடலிலிருந்து 500 மீட்டர் தூரம் வரையில் கடலோர ஒழுங்குமுறைப் பிராந்தியம் என்றும் அந்த இடத்தில் வீடுகளோ கட்டிடங்களோ கட்டுவது சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் கூறி மீனவர் குடியிருப்புகள் மற்றும் சேரிப்பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரம் வீடுகள் மும்பையில் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், தடை செய்யப்பட்ட இந்தப் பகுதியில் ஏற்கெனவே கட்டப்பட்டிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் எவற்றின் மீதும் அரசு கைவைக்கவில்லை.

    மேற்கு கடற்கரை ஓரம் மும்பை முதல் கோவா வரையிலான இயற்கை எழில் கொஞ்சும் கடலோரப் பகுதி, உலகிலேயே ரியல் எஸ்டேட் விலை உச்சத்திலிருக்கும் பகுதிகளில் ஒன்று. இந்தக் கடலோரப் பகுதியில் சுற்றுச்சூழல் துறையின் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புதான் ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு.

    ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல் : இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது !

    கடற்படை துணை அட்மிரல் சஞ்சீவ் பாசின், “இக்குடியிருப்பு கட்டப்பட்டுள்ள இடம், கப்பல்தளத்துக்கு வெகு அருகில் தாக்குதல் எல்லைக்குள் இருப்பதால், கடற்படைத் தளத்தை உளவு பார்ப்பது எளிதென்றும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும்” இராணுவ அமைச்சகத்துக்கு எழுதியதால்தான் இத்திட்டம் விசாரிக்கப்பட்டு,  தளபதிகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. சஞ்சீவ் பாசின், இத்திட்டத்தைச் செயல்படுத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீதும் அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை தேவை என்றும் குறிப்பு எழுதியிருந்தார்.

    ஆதர்ஷ் மோசடிகள் பற்றி அறிவதற்காக பூனாவைச் சேர்ந்த விஹார் துர்வே என்பவர், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் இத்திட்டத்தில் பயனடைந்தவர்கள் பற்றிக் கேட்டிருந்தார். அவருக்கு இரண்டுமுறை தகவல் மறுக்கப்பட்டது. காரணம், மராட்டிய அரசின் தகவல்  கமிஷனர் ரமானந்த் திவாரியின் மகனுக்கும் ஆதர்சில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது பின்னர் தெரியவந்தது.

    தற்போது முதலமைச்சர் மாற்றம், சி.பி.ஐ விசாரணை என்ற நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கொலாபாவில் உள்ள இராணுவ எஸ்டேட் அலுவலகத்தின் கோப்புகளில் முக்கியமான ஆவணங்கள் பல காணாமல் போயிருக்கின்றன. இராணுவத்துக்குச் சொந்தமான அந்த நிலத்தில் அடுக்குமாடி வீடு கட்டுவதற்கு மார்ச் 2000-இல் வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழைக் காணவில்லை. முதன்முதலில் எந்தெந்த சிப்பாய்களுக்கு வீடு ஒதுக்குவதாகச் சொல்லி இந்தத் திட்ட முன்வரைவு முன்வைக்கப்பட்டதோ, அதனையும் காணவில்லை.

    மகாராட்டிர அரசின் நகர்ப்புற வளர்ச்சிச் துறையில் ஆதர்ஷ் சொசைட்டி தொடர்பான கோப்புகளிலும் முக்கியமான காகிதங்களைக் காணவில்லை என்று சி.பி.ஐ. கூறியிருக்கிறது.

    இரண்டு முன்னாள் முதல்வர்களும், மூத்த அதிகாரிகளும் கையொப்பமிட்ட ஆணைகள், சுற்றுச்சூழல் விதிகளைத் தளர்த்தி நகர்ப்புற வளர்ச்சி இலாகா கொடுத்த தடையில்லாச் சான்றிதழ், சாலையின் அகலத்தை 60 மீட்டரிலிருந்து   18 மீட்டராக குறைத்துக் கொண்டு, மீதியுள்ள 42 மீட்டர் சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதற்கு ஆதர்ஷ் சொசைட்டிக்கு அரசால் வழங்கப்பட்ட அனுமதி, 6 மாடிகளை 31 மாடிகளாக உயர்த்தி கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி – இவை தொடர்பான ஆவணங்கள் காணவில்லை என்று சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது.

    ஆதர்ஷ் ஊழலைத் தொடர்ந்து, இதைவிடப் பிரம்மாண்டமான ரியல் எஸ்டேட் ஊழலான லவாசா ஊழல் அம்பலமாகியிருக்கிறது. விவசாய நிலங்கள், பழங்குடி மக்களின் நிலங்கள் அடங்கிய சுமார் 12,316 ஏக்கர் மலைப்பிராந்தியத்தை மகாராட்டிர அரசு 2001-இல் தாரை வார்த்திருப்பது அம்பலமாகியிருக்கிறது.

    “சிறு கடை வியாபாரிகளையும், குடிசை வாசிகளையும் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அவர்களுடைய கடைகளையும் வீடுகளையும் இடித்துத் தள்ளும் அரசு, ஆதர்ஷ் உள்ளிட்ட சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க மறுப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்புகிறார், மேதா பட்கர். தனக்குச் சொந்தமான நிலத்தையே காப்பாற்றிக் கொள்ளமுடியாத இராணுவம், தேசத்தை எப்படிக் காப்பாற்றும் என்று எள்ளி நகையாடுகிறார். மும்பை சாந்தாகுரூஸ் விமான நிலையத்திற்கு அருகிலேயே இராணுவத்துக்குச் சொந்தமான நிலம் ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு விலை பேசப்பட்டு கட்டிடங்களாக மாறியிருப்பதையும் அம்பலமாக்கியிருக்கிறார்.

    நாடு முழுவதும் இராணுவத்துக்கு சொந்தமாக இருக்கும் பல இலட்சம் ஹெக்டேர் நிலங்களில் விலை பேசப்பட்டவை எத்தனை, எத்தனை ஆயிரம் கோடிகளை இராணுவ அதிகாரிகள் விழுங்கியுள்ளார்கள் என்ற விவரங்கள் ஒருக்காலும் வெளியே வரப்போவதில்லை.

    ஆதர்ஷ் ஊழல் அம்பலமானவுடன்  தலைமைத் தளபதிகள் கபூர், விஜ் ஆகியோர் “இந்த வீடுகள் சிப்பாய்களுக்கு ஒதுக்கப்பட்டவை என்று எங்களுக்குத் தெரியாது” என்று பச்சையாகப் புளுகியிருக்கின்றனர். வீடுகளைத் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் அறிவித்திருக்கின்றனர். தற்போதைய இராணுவத் தலைமைத் தளபதியோ, “இந்த சிறிய விசயத்தை வைத்துக் கொண்டு இந்திய இராணுவத்தின் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது” என்று பேசியிருக்கிறார்.

    நேர்மை, கட்டுப்பாடு, தியாகம், ஒழுக்கம் என்றெல்லாம் கதை சொல்லித்தான், சிவில் சமூகத்துக்கு மேம்பட்ட கேட்பாரற்ற அதிகாரமாக இராணுவம் பாதுகாக்கப்படுகிறது. பச்சைப் படுகொலைகள் பல அம்பலமாகி, காஷ்மீரே பற்றி எரியும் சூழ்நிலையிலும், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை எக்காரணம் கொண்டும் இரத்து செய்யக்கூடாது என்றும், தாங்கள் செய்யும் சட்டவிரோதப் படுகொலைகளுக்காக எல்லோரையும்போல நீதிமன்றத்தில் நின்று இராணுவம் பதில் சொல்ல முடியாது என்றும் திமிர்த்தனமாகப் பேசி வருகிறது இராணுவத்தின் அதிகார வர்க்கம்.

    ஆனால், கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதப்பசுவாகச் சித்தரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் இராணுவத்தின் யோக்கியதை ஆதர்ஷ் ஊழலில் சந்தி சிரிக்கிறது. போர் முனையில் உயிர் விட்ட தனது சிப்பாய்களுடைய பிணத்தைக் காட்டி, கோடிக்கணக்கில் சுருட்டியிருக்கும் இராணுவ உயர் அதிகாரிகள், ஓட்டுப் பொறுக்கிகளைக் காட்டிலும் தாங்கள் கேவலமானவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

    பொதுச்சொத்தை கொள்ளையிடுவதற்கான வாய்ப்பைத் திறந்து விட்டிருக்கும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் இராணுவத்தின் உடுப்பையும் களைந்து நிர்வாணமாக்கியிருக்கின்றன. ஆயுதம் முதல் சிப்பாய்களுக்கான அன்றாட ரேசன் வரையில் இராணுவத்துக்காக செய்யப்படும் அனைத்துச் செலவுகளிலும், 10% கமிஷன் என்பது இந்திய இராணுவத்தில் அமல்படுத்தப்படும் எழுதப்படாத விதி.  ஆதர்ஷ் ஊழலில் இந்த சதவீதக் கணக்கு கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. 103-க்கு 100 ஊழல். அதாவது, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 103 வீடுகளில் 3 பேர் மட்டும்தான் கார்கில் போர்முனையில் இருந்தவர்கள்.

    ஆதர்ஷ் என்ற இந்திச் சொல்லுக்கு முன்மாதிரி என்று பொருள். தேசத்துக்கே இராணுவம்தான் முன்மாதிரி எனும்போது, இராணுவம் சம்பந்தப்பட்ட ஊழலும் முன்மாதிரியாகத்தானே இருக்கவேண்டும்?

    __________________________________

    – புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010
    __________________________________

    வினவுடன் இணையுங்கள்

    தொடர்புடைய பதிவுகள்:

     

     

     

     

     

     

     

    தண்ணீர்க் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்!

    தண்ணீர்க் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்! மனித உரிமை பாதுகாப்பு மையம் - ஆர்பாட்டம்
    மனித உரிமை பாதுகாப்பு மையம் - ஆர்பாட்டம்

    விருதை மினரல்ஸ் என்ற நிறுவனம் விருத்தாச்சலம் நகரிலுள்ள ஆலடி ரோடு, எம்.ஆர்.கே. நகர் குடியிருப்புப் பகுதியில் ஆழ்குழாய் கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து விற்கும் வியாபாரத்தை 2008-ஆம் ஆண்டு தொடங்கியது.

    இத்தண்ணீர் வியாபாரத்தால் எதிர்காலத்தில் உருவாகும் அபாயங்களை உணர்ந்துகொண்ட அப்பகுதி மக்கள் அப்பொழுதே அத்தண்ணீர்க் கொள்ளையர்களை எதிர்த்து ஊர்வலம், சாலை மறியல் எனப் போராடத் தொடங்கினர். இப்போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையம் இந்நிறுவனத்தை மூடக் கோரி மக்களின் சார்பாக நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தது. இதனையடுத்து அந்நிறுவனம் திறக்கப்பட்ட உடனேயே இழுத்து மூடப்பட்டது.

    தற்போது அதே பகுதியில் மீண்டும் தண்ணீர்க் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். பெயர்ப் பலகையின்றி, இரவில் நிலத்தடியில் இருந்து தண்ணீரை உறிஞ்சுவதும், பகலில் தண்ணீரை ஏற்றிச் செல்வதுமென தண்ணீர் வியாபாரம் நடைபெறத் தொடங்கியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து விருதை மினரல்ஸ் நிறுவனத்தை மூட உத்தரவிட்ட விருத்தாச்சலம் நகராட்சி இப்பொழுது தண்ணீர்க் கொள்ளையர்களுக்குச் சலாம் போடுகிறது.

    ஒரு நிறுவனம்தானே என்று இன்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால், நாளேயே தண்ணீர்க் கொள்ளையர்கள் புற்றீசல் போல இப்பகுதியில் புகுந்துவிடுவார்கள். ஓரிரு ஆண்டுகளிலேயே நிலத்தடி நீரை ஒட்ட உறிஞ்சி எடுத்து, ஆலடி ரோட்டுப் பகுதியில் அமைந்துள்ள எம்.ஆர்.கே. நகர், முல்லை நகர், வீ.என்.ஆர். நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பல குடியிருப்புப் பகுதிகளைப் பாலைவனமாக்கி, அங்கு வாழும் மக்களைக் குடிதண்ணீருக்கு அலைய வைத்து விடுவார்கள்.

    இந்நிலையில் எம்.ஆர்.கே. பகுதியில் இயங்கும் தண்ணீர் கம்பெனியை அகற்றக் கோரியும், மக்கள் நலனில் அக்கறையின்றி இத்தண்ணீர்க் கொள்ளையர்களுக்கு அனுமதியளித்த நகராட்சியைக் கண்டித்தும் கடலூர் மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக 29.10.2010 அன்று விருத்தாசலம் – பாலக்கரை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் மட்டுமின்றி, சமூக அக்கறை கொண்டோரும், குடியிருப்பு நலச் சங்கத்தைச் சேர்ந்தோரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
    _______________________________________________
    – மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம்.
    _______________________________________________

    வினவுடன் இணையுங்கள்

    தொடர்புடைய பதிவுகள்:

    டாடா குழுமத்தின் கோர முகம் -2

    டாடா குழுமத்தின் கோர முகம்

    டாடா குழுமத்தின் கோரமுகம் -1

    டாடா குழுமத்தின் கோர முகம்நச்சுப் பொருட்களின் கிடங்கு உப்புக் கழிவு:

    2003 – செப்டம்பரில், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் குஜராத் மாநிலம் மித்னாபூர் சோடா உப்பு ஆலையில் கழிவு நீர்க் கசிவு ஒன்று ஏற்பட்டது. கட்ச் வளைகுடாவில் உள்ள தேசியக் கடற்பூங்காவில் 150 ஏக்கருக்கு மேலான கடற்பகுதிக்கு அது பரவியது. மாந்தோப்புகள், பவளப்பாறைகள், களிமண் வாழ் உயிரினங்கள், திமிங்கலம், சுறா போன்றவைகளைக் கொண்ட மிகவும் பல்வகை உயிரினங்களுக்காக இந்தக் கடற்பூங்கா அமைந்துள்ளது. இங்கு டாடா கெமிக்கல்ஸ் ஆலையின் கழிவுகளால் படிந்த திடப் பொருட்கள் காரணமாக 10 கிலோமீட்டர் தூரத்துக்கு கடல் வாழினங்கள் பாதுகாக்கப்படும் பகுதி மாசுபட்டும் சீரழிந்தும் போவிட்டதென்று தேசியக் கடலியல் ஆய்வு நிறுவனம் கூறுகிறது. மித்னாபூர் பகுதியில் உள்ள டாடா கெமிக்கல்சின் உப்பளங்கள் அங்குள்ள நிலத்தடி நீரைப் பெருமளவு உப்பு நீராக்கிவிட்டன. டாடா கம்பெனியின் உப்புக் கழிவு நீரைக் கொட்டி வைக்கும் திறந்தவெளிக் கிடங்குகளுக்காக பல கிராமங்கள் விவசாய நிலங்களை இழந்துவிட் டிருக்கின்றன.

    ஜூக்சாலை-கழிவுப் பொருட்களின் மலைகள்:

    ஜாம்சேத்பூர் மாநகரில் உள்ள ஜூக்சாலைப் பகுதியின் மையத்தின் திறந்தவெளியில் ஆயிரக்கணக்கான டன்கள் கொதிகலன் சாம்பலைக் கொட்டி மலை மலையாகக் குவித்திருக்கிறது, டாடா எஃகு ஆலை. கோடை காலத்தில் அச்சாம்பல் மலைகளில் இருந்து பறந்துவரும் கனரக உலோகத் துகள்கள் நிரம்பிய காற்று சாலைகளில் வாகனங்கள் செல்லமுடியாத அளவுக்கு பார்வையைப் பதிப்பதோடு, சுவாச நோய்களையும் பரப்புகின்றது. டாடா எஃகு நிறுவன ஒப்புதல்படியே அப்பகுதி நிலத்தடி நீர் மாசுபட்டு, அனுமதிக்கப்படும் அளவைவிட மிகையாகக் கடினநீராகி, திடப்பொருட்களின் கரைசல் நிரம்பியதாக உள்ளது.

    ஜோடா சுரங்கங்கள்:

    டாடா, பிர்லா, மற்றும் ஜிண்டால் போன்ற குழுமங்களின் இரும்புக் கனிமச் சுரங்கங்கள் அமைந்துள்ள ஜோடா நகரம் 1950-களில் கனிமவளம் கொழிக்கும் நகராக விளங்கி, பல கூட்டுப்பங்கு நிறுவனங்களின் செல்வவளங்களைப் பெருக்கியது; ஆனால், அதனால் அந்த நகரம் ஒரு பயனும் பெறவில்லை. பத்திரிக்கையாளர் தரும் விவரப்படி, ஜோடா நகரமும் அதற்குச் செல்லும் சாலையும் ஒரு பெரிய பாதாளக் குழியாக உள்ளது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக கனிமச் சுமையேற்றிய லாரிகள், இரவுபகலாக 24 மணிநேரமும் நடக்கும் சுரங்கம் வெட்டுதல் ஆகியவை காரணமாக உள்ளூர்வாசிகள், தொழிலாளர்கள், பயணிகள் சுவாசிக்க நல்ல காற்றே கிடையாது. மிக மோசமாகத் தூசு கிளப்பும் இந்தச் சுரங்கங்கள் யானைகளும் புலிகளும் புகலிடமாகக் கொண்டுள்ள சித்தமாதா ரிசர்வ் காடுகளின் எல்லையில் அமைந்துள்ளன என்பது வியப்புக்குரிய ஒன்றாகும்.

    கரிக்குழம்புகளின் குவியல்:

    மேற்கு பொக்காரோவில் டாடா எஃகு நிறுவனத்தின் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. பொக்காரோவில் உள்ள நிலக்கரி கழுவுமிடத்திலிருந்து நிலக்கரி தூசுகள் நிறைந்த கரிக் குழம்புகள் பொக்காரோ ஆற்றுக்குள் கொட்டப்படுகிறது; இதனால் ஆற்றுப்படுகை முழுவதும் நிலக்கரி சாம்பல் படிந்து ஆறே நாசமடையச் செய்து அழிக்கப்பட்டு விட்டது. ஆற்றில் இருந்து பெருமளவு தண்ணீர் உறிஞ்சப்பட்டு, நிலக்கரி தூசுக் குழம்பும் கழிவும் கொட்டப்படுகிறது.

    பேராபத்து விளைவித்த நிகழ்வுகள் – நிறுவனர் நாள் தீ:

    1989 மார்ச் மூன்றாம் நாள், டாடா குழுமத்தின் நிறுவனர் நாள் விழாக் கொண்டாட்டம் நடந்தது. அப்போது பிரபலங்களின் இருக்கைப் பகுதியில் திடீரென்று தீப்பற்றிக் கொண்டு விட்டது. அலட்சியம் காரணமாக ஏற்பட்ட இத்தீவிபத்தில் 60 குழந்தைகள் மாண்டு போயினர்; 111 பேர் படுகாயமுற்றனர்; மோசமான ஏற்பாடுகள் காரணமாக உரிய நேரத்தில் விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வண்டிகள் போச் சேர முடியாமல் போனது. தீ விபத்து சம்பவத்தை மூடி மறைப்பதற்காக, படுகாயமுற்று- தீக்காயத்தில் செத்துக் கொண்டிருந்தவர்களுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதை டாடாக்கள் மறுத்துவிட்டதால் பிரச்சினை மேலும் கடுமையாகியது. டாடா எஃகு நிறுவனம்தான் விபத்துக்கு முழுப்பொறுப்பாகும் என்று ஆலைகளுக்கான ஆய்வகம் அறிக்கை அளித்துள்ளது. ஆனால், இத்துயரச் சம்பவம் நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகியும் பலியானவர்களின் உறவினர்களுக்கோ, படுகாயமுற்றவர்களுக்கோ டாடா நிறுவனம் இன்னமும் நட்டஈடு வழங்கவில்லை. டாடா இரும்பு எஃகு நிறுவனம் ஆலை விபத்துகளுக்குக் கொடுத்து வந்த நட்டஈடுகளை சுட்டிக் காட்டி, அதே அளவு நீதிமன்ற நடுவரிடம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் பிறப்பித்த ஆணையைக் கூட டாடா நிறுவனம் மதிக்காது மறுத்து வருகிறது.

    டாடா குழுமத்தின் தொழிலாளர் விரோத முன்னுதாரணங்கள்

    1920-கள் மற்றும் 1930-களில், டாடா இரும்பு எஃகு கம்பெனியின் ஐரோப்பிய பார்சி நிர்வாகத்துக்கு எதிராகப் பழங்குடித் தொழிலாளர்கள் போர்க்கோலம் பூண்டு பலமுறை போராடியிருக்கிறார்கள். வேலை நிலைமைகள், சங்கம் அமைத்துக் கொள்ளும் உரிமை ஆகியன அவர்கள் ஒன்று திரண்டு போராடுவதற்கான முக்கியமான மையப் பிரச்சினைகளாக இருந்தன. ஆனால், பல ஆண்டுகளாக, தொழிற்சங்கங்களை உடைப்பதற்கு அடிக்கடி வன்முறை வழிகளில் ஈடுபடுவதில் டாடா கம்பெனி பெயர்பெற்றதாக விளங்கியது.

    தொழிலாளர் தற்கொலைகள்:

    1991-இல் ரத்தன் டாடா தலைமைப் பொறுப்பேற்றபிறகு ஆட்குறைப்பு மற்றும் நெறிப்படுத்துவதை மூர்க்கமாக டாடா குழுமம் மேற்கொண்டது. 2003-ஆம் ஆண்டு, டாடா ஹைட்ரோ கம்பெனிகள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே மண்ணெண்ணெ ஊற்றிக் கொண்டு டாடா நிறுவனத்தின் தலைமையகத்தின் முன்பு தீக்குளித்தார்கள். டாடா மின்சக்தி கம்பெனியிலிருந்து சட்டவிரோதமாக ஒப்பந்தத் தெழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத்தான் அவ்விரு தொழிலாளர்களும் தீக்குளித்து மாண்டனர்.

    1980-களில் வீட்டுமனை நிலங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தன; மும்பையின் முதன்மை வீட்டுமனை இடங்களில் இருந்த துணி ஆலைகள் அப்போது நலிவடைந்திருந்தன. துணி ஆலைகளைத் தேவைக்கேற்ப புதுப்பிக்கவும் நவீனப்படுத்தவும் ஆலை நிர்வாகங்கள் தவறிவிட்டன. செல்வம் கொழிக்கும் வீட்டுமனை பேரங்கள் ஆலைகளை மூடி பெரும் பணம் பார்க்க உதவும் என்று நம்பிய ஆலை நிர்வாகங்கள், ஆலைகளை இடித்துத் தள்ளுவது என்று முடிவு செய்தார்கள். மும்பையில் இருந்த மிகப் பழமை வாய்ந்த துணி ஆலைகளில் ஒன்றான சுதேசி ஆலையை நடத்திவந்த டாடாக்கள், தமது சொந்த நிலத்தில் நான்கில் ஒரு பகுதியை விற்பதற்கான அனுமதியை ஏற்கெனவே பெற்றிருந்தது; அதற்கு டாடாக்கள் சொல்லியிருந்த காரணம், தமது ஆலையில் ஆட்குறைப்பால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஒரு பொதுத்துறை ஆலை, ஒரு பொழுதுபோக்கு மையம், ஒரு பொதுமக்களுக்கான வீட்டுவசதித் திட்டம் ஆகியவற்றுக்குப் பாதிக்கும் மேலாக நிலம் அளிக்கப்படும் என்பதுதான். ஆனால், அந்த நிலம் விற்கப்பட்டபோது இவையெதுவும் நடக்கவில்லை. விற்கப்பட்ட நிலமும் குறைமதிப்பீடு செய்து விற்கப்பட்டு, ஆலையைப் புனரமைப்பு செய்வதற்காக அல்லது தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கென்றிருந்த நிதி டாடாக்களின் வேறு வர்த்தக நிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுவிட்டதென்று தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினார்கள். 2000-ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டு, 28000 ஆலைத் தொழிலாளர்கள் அகதிகளாக வீசப்பட்ட போது, சுதேசி ஆலையின் ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

    தொழிலாளர் முறை ஒப்பந்தம் – வேலைப் பாதுகாப்பின்மையைப் புகுத்துதல்:

    செலவுகளைக் குறைக்கும் ஒரு முயற்சியாக, ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பெருமளவு வேலைக்கு அமர்த்தும் காரியத்தில் டாடாக்கள் ஈடுபட்டார்கள் என்று அக்கம்பெனியின் உயர்நிலை அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளார்கள். ஒப்பந்தத் தொழிலாளர் மற்றும் நிரந்தரமாக்கும் சட்டத்திற்கு முரணாக, பயிற்சி பெற்ற நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலைகளையும் மற்றும் நிரந்தர நீண்டகால வேலைகளையும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்யக்கூடாதவை என்று தடைவிதிக்கப்பட்ட பணிகளையும் கூடச் செய்யும்படி ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தினர். தனது நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இடையே டாடா கம்பெனி பாராபட்சம் காட்டுவதாகத் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஜாம்சேத்பூர் டாடா எஃகுக் கம்பெனியின் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களை விடக் கூடுதல் தரமுடைய உணவைப் பெறுகிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்யும் வேலை, கம்பெனியின் நிரந்தரத் தொழிலாளர்களுடையதைவிட தன்மையில் மாறுபாடானது அல்லவெனினும், சம்பள வித்தியாசம் பெருமளவு வேறுபாடானது. கடினமான வேலைகளை நீண்டநேரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் செய்கிறார்கள். திறமைக் குறைவு மற்றும் வேலைநிர்பந்தங்கள் காரணமாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூடுதலான விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.

    கதவடைப்பு:

    தொழிற்பாதுகாப்பு தருபவர்கள் என்ற டாடாக்கள் பெற்றிருக்கும் “நல்ல” பெயருக்கு மாறாக, டாடா குழுமத்தின் கார்ப்போரேட் நிறுவனம் பெரிய அளவுக்கு ஆட்குறைப்பில் ஈடுபடுகிறது. இதற்கு முதன்மை நிறுவனமான டாடா எஃகு ஆலை எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 1994-இல் டாடாக்களின் நிறுவனங்களில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 78,000 ஆக இருந்தது. அதுவே, 1997-இல் 65,000 ஆகக் குறைக்கப்பட்டது. 2002-க்குள் மேலும் 15,000 வேலைகள் ஒழித்துக் கட்டப்பட்டன. 2006-ஆம் ஆண்டில் டாடா நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் தொகை 38,000 ஆனது; அதாவது தாராளமயமாக்கம் தொடங்கிய போதிருந்ததில் பாதியளவுக்குச் சற்று மேலாகும். வேலை இழந்தவர்களில் (40,000 பேர்களில்) 25,000 பேர் விருப்பு அடிப்படையில் விலகி அதற்குரிய ஈட்டுத்தொகை பெற்றார்கள். இருப்பினும், அனைவரும் தாமே முன்வந்து விலகும் திட்டத்தின் கீழ் விலகியவர்கள் அல்ல என்று பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். திடகாத்திரமான தொழிலாளர்கள் கூட கடும் உணர்வு நிலை அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வேலையிழந்தார்கள். விருப்பு விலகல் முறையை ஏற்கவில்லையானால், சாலைகளைப் பெருக்கும்படி ஆசிரியர்கள் கூட நிர்பந்திக்கப்பட்டார்கள் என்று செய்திகள் குற்றஞ்சாட்டுகின்றன.

    தொழிற்சங்கங்களை உடைப்பது:

    1989-இல், பூனேயில் உள்ள டாடாவின் டெல்கோ ஆலையில் உள்ள டெல்கோ தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்தார்கள். போட்டித் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு கொடுத்தும், தொழிலாளர் அமைதியின்மை நீடித்ததால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று போராடும் தொழிலாளர்களை மிரட்டியும் வேலை நிறுத்தத்தை உடைப்பதற்கு, டாடா நிர்வாகம் முயன்றது. 1989, செப்டம்பரில் 3000 தொழிலாளர்கள் காலவரையறையற்ற உண்ணாநோன்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் மயங்கி விழுந்ததோடு சமரசத்துக்கான அறிகுறியே இல்லாமல் வேலை நிறுத்தம் முன்னேறியபோது, டாடாக்கள் மற்றும் பிற முதலாளிகளின் கடுமையான நிர்பந்தத்துக்கு மாநில அரசாங்கம் ஆளானது. செப்டம்பர் 29 அன்று இரவு, இருள் சூழ்ந்ததைப் பயன்படுத்திக் கொண்டு மாநில ரிசர்வ் மற்றும் பூனே நகரப் போலீசார் “தகர்ப்பு நடவடிக்கை”யைத் தொடங்கினர். உண்ணா நோன்பிருந்த தொழிலாளர்களை வளைத்துக் கைது செய்வதற்காக 80 பேருந்துகள் கொண்டு வரப்பட்டன. போலீசின் உதவியோடு வேலைநிறுத்தத்தை டாடாக்கள் உடைத்தனர்.

    படுகொலைகள்:

    குறைந்தது இரண்டு தொழிலாளர் முன்னணியாளர்கள் கடந்த காலத்தில் கொல்லப்பட்டனர். அப்துல் பாரி மற்றும் வி.ஜி. கோபால் ஆகிய இருவரும் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தைக்குச் சென்றபோது போட்டி தொழிற்சங்கத்துக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்விரு சம்பவங்களிலும் டாடா நிர்வாகம் பின்னணியில் இருந்து செயல்பட்டதாக டாடா தொழிலாளர்களும் சுயேச்சையான பார்வையாளர்களும் குற்றஞ்சாட்டினர்.

    டாடாவுக்கு டாடா:

    நாட்டின் பல்வேறு இடங்களிலும் வர்த்தக நிறுவனங்கள் அமைப்பதற்கு டாடா கம்பெனி முயற்சித்தபோது, உள்ளூர் மக்கள் அம்முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தனர் என்ற உண்மையிலிருந்து டாடாவுக்குள்ள அவப்பெயர் தானே விளங்கும். இதற்கு மே.வங்கம் சிங்கூரில் நடந்த போராட்டமும், ஒரிசா கலிங்கா நகரில் நடந்துவரும் போராட்டமும் சமீபத்திய பிரபலமான இரு எடுத்துக்காட்டுகள். ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரிசா பழங்குடி மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக இராயகடா மாவட்டத்தில் உள்ள புனித பாஃபிளி மாலி மலைகளில் பாக்சைடு கனிமச் சுரங்கம் அமைக்கும் முனைப்பைக் கைவிடும்படி டாடாக்கள் தள்ளப்பட்டார்கள். 2000-ஆம் ஆண்டு அந்த சுரங்கம் அமையவிருந்த பகுதியில் ஒரு அமைதியான ஆர்ப்பாட்டம் நடந்தபோது மூன்று பழங்குடி இளைஞர்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2000-ஆம் ஆண்டு, ஒரிசாவில், கோபால்பூர்-கடல் என்ற கடற்கரை நகரில் ஒரு எஃகு ஆலையை அமைக்கும் முயற்சியில் டாடாக்கள் ஈடுபட்டனர். அந்த ஆலையை நிறுவுவதற்கு அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் 20,000 பேருக்கு மேல் திரண்டு நடத்திய மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து அத்திட்டம் கைவிடப்பட்டது. இந்த ஆலைத்திட்டமும் கூட மக்கள் இரத்தம் சிந்திப் போராடிய பிறகுதான் முடிவுக்கு வந்தது. 1997 ஆகஸ்டில் சிந்திகோவன் நகரில் நடந்த டாடா எதிர்ப்புப் பேரணிக்கு எதிராக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது, சிதறி ஓடிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர்.

    ஒரிசாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள சர்வதேசப் புகழ் பெற்ற சில்கா கடல்நீர் ஏரியின் பெரும் பகுதியை மீன்பண்ணை அமைப்பதற்கு டாடாக்கள் வளைத்துப் போட முயன்றனர். அதற்கு எதிராக 1990-களின் பிற்பகுதியில், சில்கா ஏரியைத் தமது வாழ்வாதாரத்துக்காகச் சார்ந்துள்ள 1,20,000 மீனவர்கள் கடுமையாகப் போராடிய பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது.

    டாடாக்களின் தரகு வரலாறு போதை மருந்து கடத்தல்:

    1850-களில் இருந்து அந்நூற்றாண்டின் இறுதிவரை சீனாவிற்கு “ஓபியம்” என்ற கஞ்சா போதை மருந்து ஏற்றுமதி செய்வதில் டாடா குடும்பம் ஈடுபட்டிருந்தது; இதை ஜாம்சேத்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடாவின் புகழ்பாடும் ஆவணங்கள் பதிவு செய்யாமல் போவிட்டன. ஓபியம் இந்தியாவில் விளைவிக்கப்பட்டு, ஆங்கிலேயக் காலனியவாதிகளுக்காக டாடா போன்ற தரகர்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தார்கள். (சீன மக்களை ஓபியம் போதைப் பழக்கத்தில் மூழ்கடித்து அடிமைப்படுத்திக் காலனியாக்கிக் கொள்ள ஆங்கிலேயர்கள் எத்தணித்தபோது அதற்கு எதிராக சீன மக்கள் நடத்தியதுதான் பிரபலமான ஓபியம் போர். ஓபியம் கடத்திக் குவித்த மூலதனத்தைக் கொண்டுதான் துணி ஆலைகளையும் இரும்பு-எஃகு ஆலையையும் டாடா குடும்பம் நிறுவியது – மொ-ர்)

    எம்ப்ரஸ் (பேரரசி):

    1877, ஜனவரி முதல் நாளில், பருத்தி விளையும் மத்திய இந்தியாவில் ஒரு பருத்தி துணி ஆலையை நிறுவியதுதான் டாடாவின் முதல் ஆலை முனைப்பு ஆகும். அந்த நாள்தான் விக்டோரியா மகாராணியை இந்தியாவின் பேரரசியாகப் பிரகடனம் செய்த நாள்; அதைக் கொண்டாடும் முகமாக துணி ஆலைக்கு பேரரசி ஆலை என்று டாடா கம்பெனி பெயர் சூட்டியது.

    பிரிட்டானிய விரிவாக்கத்துக்குத்  தூபம் போடும் வேலை:

    முதல் உலகப் போரின்போது வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் பிரிட்டனின் போர் முன்னெடுப்புகளுக்கு முக்கியத் தேவையாக ஆங்கிலேயப் பேரரசுக்கு ரயில் தண்டவாளங்கள் சப்ளை செய்யும் வேலைக்காக 1906-ஆம் ஆண்டு ஜாம்சேத்பூரில் டாடா இரும்பு எஃகு கம்பெனி தொடங்கப்பட்டது. இந்தியாவில் வைசிராயாக இருந்த செம்ஸ்போர்டு பிரபு, போர் முடிந்த பிறகு சொன்னார், “மெசபடோமியா (ஈராக்) மட்டுமல்ல; எகிப்து, பாலஸ்தீனம் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவுக்குக்கூட டாடா கம்பெனி எஃகுத் தண்டவாளங்கள் கொடுத்துதவ முடியாமல் போயிருந்தால், நாங்கள் என்ன செய்திருப்போம் என்று கற்பனை கூடச் செய்ய முடியவில்லை.”

    பிரிட்டானியப் படைக்கு டாடா சப்ளை:

    1865-இல் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றது; அது அமெரிக்காவின் தென்மாநிலங்களில் இருந்து இங்கிலாந்தின் துணி ஆலைகளுக்கான பருத்தியை சப்ளை செய்வதற்கு வழிவிட்டது; அந்த ஆலைகளில் இருந்து இந்தியாவுக்கு நூலை அனுப்ப முடிந்தது. இருப்பினும் பல ஆலைகள் இன்னமும் மீள முடியாத நிலையில், 1868-இல் அபிசீனியா (இப்போதைய எத்தியோப்பியா)வில் மக்டாலாப் போரை நடத்திக் கொண்டிருந்த ஆங்கிலேயப் படைக்கு உடை, உணவு சப்ளை செய்யும்-லாபம் கொழிக்கும் ஒப்பந்தங்களைப் பெற்று டாடா குடும்பம் மட்டும் வெற்றிகரமாக தொழில்புரிய முடிந்தது.

    (முற்றும்)
    (போபாலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சர்வதேசப் பிரச்சாரம் என்ற இணையத்தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்.)

    அரசை ஆட்டுவிக்கும் அதிகாரத் தரகர்கள்!!

    12
    நீரா ராடியா
    நீரா ராடியா

    மக்கள் தொடர்பு அதிகாரி, லயசன் ஆபீசர் என்றெல்லாம் குறிப்பிடப்படும் அதிகாரத் தரகர்கள்,  அரசாங்கத்தில் எந்தக் காரியமானாலும் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்கள்; அதிகாரத் தரகர்கள் மூலமாகப் போனால்தான் அரசாங்கத்தின் நெடிய கதவுகள் திறக்கும். பெருமுதலாளிகள் ஒரு ஒப்பந்தத்தை முடிக்கவோ, போட்டியாளர்களைக் கழுத்தறுக்கவோ, விதிமுறைகளை மீறி ஒரு புதிய தொழில் உரிமம் பெறவோ, தங்களுக்குச் சாதகமாக அரசின் கொள்கைகளை மாற்றவோ அதிகாரத் தரகர்களை அமர்த்திக் கொள்கிறார்கள். அதிகாரத் தரகு வேலைக்கான செலவுகளை பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் “அபிவிருத்தி வேலைகளுக்கான செலவுகள்” என்று குறிப்பிடுகின்றன. முதலாளித்துவ அரசியலமைப்பு முறையின் பிரிக்க முடியாத அங்கம்தான் இந்த அதிகாரத் தரகர்கள். இத்தகைய அதிகாரத் தரகர்களில் ஒருவர்தான் நீரா ராடியா. குறிப்பாக ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி நிறுவனங்களுக்கு உரிமங்கள், ஒப்பந்தங்கள் முதலானவற்றை அதிகார வர்க்கத்துடன் பேசி முடித்துத் தரும் வேலைகளை இவர் செய்துள்ளார். இப்போது நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவகாரமாகியுள்ளது.

    2009-இல் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்த போது,  யார் யாருக்கு என்ன அமைச்சர் பதவி, என்ன துறை ஒதுக்கப்படும், தொலைத்தொடர்பு அமைச்சர் நியமனத்தின் பின்னணியில் அம்பானியும் டாடாவும் எப்படி  கா நகர்த்துகிறார்கள் என்ற விவரங்களும், நீரா ராடியா இதில் முக்கிய பங்காற்றியிருப்பதையும் அவரது தொலைபேசி உரையாடல்கள் நிரூபித்துக் காட்டுகின்றன. பத்மசிறீ விருது பெற்ற என்.டி.டிவி-யின் நிர்வாக ஆசிரியரான பர்கா தத், பிரபல பத்திரிகையாளரான வீர் சங்வி ஆகியோர் நீரா ராடியாவுடன் நடத்தியுள்ள தொலைபேசி உரையாடல்கள், பத்திரிகையாளர்கள் எப்படி கார்ப்பரேட் தரகர்களாக உள்ளனர் என்பதை அம்பலப்படுத்தியுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களும் பத்திரிகையாளர்களும் கள்ளக்கூட்டுச் சேர்ந்து உருவாக்கும் செய்திகளே நாளேடுகளிலும் ஊடகங்களிலும் பிரபலமாக்கப்படுவதையும் இது நிரூபித்துக் காட்டுகிறது.

    முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில் அம்பானி, தனது அண்ணனுடன் ஏற்பட்ட தொழில் போட்டியின் காரணமாக, நீராவைச் சிக்க வைத்தால் முகேஷின் வேகமான வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்று கணக்கிட்டுச் சில ஊடகங்களுக்கு கோடிகளை வாரியிறைத்ததன் விளைவாக, இப்போது நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் கசியத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    மறுபுறம் தரகுப் பெருமுதலாளியான டாடா, தனது நிறுவனத்தின் மக்கள்தொடர்பாளராக – அதிகாரத் தரகராகச் செயல்பட்ட நீரா ராடியாவுடன் தான் உரையாடியதை அமலாக்கத் துறையும் வருமானவரித் துறையும் இரகசியமாகப் பதிவு செய்து, அலைக்கற்றை ஊழலுக்குத் தொடர்பில்லாத தனிப்பட்ட விவகாரங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும் என்று சாடுகிறார். அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகத் தனிநபர் உரிமையையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிடுவதால்,  நீரா ராடியாவுடன் தான் தொலைபேசியில் உரையாடியாதை ஊடகங்களில் வெளியிடுவது தன்னுடைய தனிநபர் உரிமையில் தலையிடும் மனித உரிமை மீறலாகும் என்று சீறுகிறார். அரசின் பொறுப்பிலுள்ள இந்த உரையாடல் பதிவுகளை வெளியே கசிய விட்டது யார், அல்லது யார் திருடினார்கள் என்பதைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார். இதையொட்டி, உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்துள்ளார்.

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது அரசுத்துறை நிறுவனங்களிடமிருந்து விளம்பரம் திரட்ட அரசே இத்தகைய அதிகாரத் தரகு நிறுவனங்களை அமர்த்திக் கொண்டது. அந்தத் தரகர்கள் மூலம் பல அந்நியக் கம்பெனிகள் கோடிகளை விழுங்கிக் கொள்ளையடிக்க அரசே உடந்தையாக நின்றுள்ளது. அது நியாயம் என்றால், அதே தரகு வேலையைச் செய்துள்ள நீரா ராடியா மட்டும் எப்படிக் குற்றவாளியாக முடியும்?  இப்போது அமலாக்கப்பிரிவும் மையப்புலனாவுத் துறையும் நீரா ராடியாவிடம் விசாரிப்பதாக ஊடகங்கள் பரபரப்பூட்டினாலும், கொள்ளையடித்த முதலாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யவோ, தண்டிக்கவோ அடிப்படை ஏதாவது இருக்கிறதா?  டாடா போன்ற தரகுப் பெருமுதலாளிகளின் பொதுக்கருத்துக்கு எதிராக அரசும் நீதித்துறையும் விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொணரும் என்று நம்பத்தான் முடியுமா?

    __________________________________

    – புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010
    __________________________________

    வினவுடன் இணையுங்கள்

    தொடர்புடைய பதிவுகள்:

    2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!

    ஸ்பெக்ட்ரம் ஊழல் : தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!

    ஸ்பெக்ட்ரம் ஊழல் : தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!

    நாட்டையே அதிரவைத்து எல்லோரையும் மிரள வைத்திருக்கிறது, இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களில் இதுவே மிகப் பெரியது என்று சித்தரிக்கப்படும் அலைக்கற்றை ஊழல். இந்த ஊழலால் அரசுக்கு ரூ. 1,76,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

    கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை ஊழல் பற்றி ஊடகங்களில் அவ்வப்போது வெளிவந்த போதிலும், இதில் மக்களின் கவனம் திரும்பிவிடாதபடி காங்கிரசும் தி.மு.க.வும் கவனித்துக் கொண்டன. கருணாநிதி குடும்பச் சண்டையில் இந்த ஊழல் மீண்டும் புகையத் தொடங்கிய போதிலும், பங்காளிகளுக்கிடையே ஏற்பட்ட தற்காலிக சமரசத்துக்குப் பின்னர் அது ஈரப் போர்வையால் மூடப்பட்டது. நீதிமன்றத்தின் கண்டங்கள், கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்த தொலைபேசி உரையாடல்கள் முதலானவற்றைத் தொடர்ந்து இந்த ஊழல் மீண்டும் பரபரப்பாகி, தொலைத்தொடர்புத் துறையின் தி.மு.க. அமைச்சரான ராசா இப்போது பதவி விலகியுள்ளார்.

    ஒயர்லெஸ் எனப்படும் கம்பியில்லா செல்போன்கள் இயங்க ஸ்பெக்ட்ரம் என்ற அலைக்கற்றைக் கதிர்கள் அவசியம். வான்வெளியில் உள்ள ரேடியோ ஃபிரீக்வன்சி ஸ்பெக்ட்ரம் எனும் அலைவரிசையைக் கொண்டு செல்போன்களை இயக்க முடியும். தனியார்மயமும் தாராளமயமும் திணிக்கப்பட்ட பிறகு, 2001 முதல் பொதுச்சொத்தான அலைக்கற்றைத் தனியாருக்கு ஒதுக்கித் தரப்பட்டதில் அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தி, அனைத்து ஓட்டுக்கட்சிகளும் கோடிகளைக் குவித்துக் கொண்டன.

    பின்னர், புகைப்படங்கள் – வீடியோக்கள் போன்றவற்றைப் பரிமாறிக் கொள்ளும் புதிய அம்சங்கள் கொண்ட இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) அறிவியல் வளர்ச்சியில் வந்தது. இதற்கான ஒதுக்கீட்டில் தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சரான ராசா, தனியார் நிறுவனங்களுக்கு செய்த ஒதுக்கீட்டில் ரூ. 1,76,000  கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குற்றச்சாட்டு. இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்திய ராசாவோ, “நான் எந்தக் கையாடலும் செய்யவில்லை, சட்டபூர்வமாகத்தான் செய்துள்ளேன், பிரதமரிடம் தெரிவித்துவிட்டுத்தான் செய்தேன்” என்கிறார்.

    ஆனால், 2ஜி அலைக்கற்றை விற்பனை குறித்து அரசின் தணிக்கைச் செயலாளரின் யோசனைகள், பிரதமரின் கடிதம், சட்டம் மற்றும் நிதி அமைச்சகங்களின் கருத்துக்கள், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துக்கள் எனப் பலவற்றையும்  அமைச்சர் ராசா புறக்கணித்துள்ளார். 2001-இல் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்ட அதே விலைக்கு எந்த மாற்றமும் இல்லாமல் 2008-இல் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்துள்ளார். வெளிப்படையான ஏல முறையைப் புறக்கணித்து முதலில் வருபவர்களுக்கு மட்டுமே உரிமம் என்ற அடிப்படையில் 122 பேருக்கு ஒரே நாளில் அதிரடியாக உரிமம் வழங்கினார்.  தொலைத் தொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத பெயர் தெரியாத தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கும் வீட்டுமனை நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்து கொடுத்தார். அந்த நிறுவனங்கள் அடுத்த நிமிடமே அந்த ஒதுக்கீட்டை வேறு நிறுவனங்களுக்கு விற்றுக் கொள்ள தாராள அனுமதியும் அளித்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ராசா இதுவரை பதிலளிக்கவில்லை. இதில் ராசாவும் ராசாவுக்குப் பின்னால் உள்ளவர்களும் ஆதாயமடைந்தது எத்தனை கோடிகள் என்பதும் இதுவரை தெரியவில்லை.

    ராசாவின் ஒப்புதலுடன்தான் தொலைத்தொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத ஸ்வான், யுனிடெக் முதலான வீட்டுமனை நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டன.  ஷாகித் பாவ்லா, வினோத் கோயங்கா ஆகியோருக்குச் சொந்தமான ஸ்வான் டெலிகாம், 1,537 கோடி கொடுத்து 13 தொலைத்தொடர்பு வட்டங்களைப் பெற்றது. மொரீஷியசைச் சேர்ந்த எடிசலாட் என்ற நிறுவனத்துக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தனது 44.73 சதவீதப் பங்குகளை ரூ.3,217 கோடிகளுக்கு விற்றது. இதன்படி பார்த்தால், ஸ்வான் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றையின் மதிப்பு ரூ.7,192 கோடிகளாகும். இப்படி யுனிடெக், எஸ் டெல், டாடா டெலிசர்வீஸ்  – எனப் பல்வேறு நிறுவனங்கள் தமது பங்குகளைப் பல்லாயிரம் கோடிகளுக்கு உடனடியாகவே விற்று ஏப்பம் விட்டன. இந்த உத்தேச மதிப்பை வைத்துத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை 1,76,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது. ஆனால் அரசுக்குக் கிடைத்ததோ வெறும் ரூ.9,014 கோடிகள்தான்.

    ஒரு முதலாளி இலஞ்சம் கொடுத்து உரிமம் அல்லது ஒப்பந்தத்தைப் பெறுவது தவறல்ல; அது அந்த முதலாளியின் தொழில் முனைப்பு; அந்த உரிமத்தை அந்த முதலாளி ஊக வணிகத்தில் விட்டு, கூடுதலாக மூலதனத்தைத் திரட்டிக் கொள்ளலாம், இலாபமடையலாம்; அது தவறில்லை என்பதுதான் தனியார்மய- தாராளமயக் கொள்கை. அதன்படியே 2ஜி அலைக்கற்றையை அடிமாட்டு விலைக்கு வாங்கி, அதை ஊக வணிகத்தின் மூலம் பல்லாயிரம் கோடிகளுக்குபப் பல முதலாளிகள் விற்றுக் கொழுத்த ஆதாயம் அடைந்திருப்பதை எப்படித் தவறானது, முறைகேடானதென்று குற்றம் சாட்டமுடியும் என்பதுதான் தனியார்மயத் தாசர்களும் கார்ப்பரேட் முதலாளிகளும் எழுப்பும் கேள்வி.

    அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை, அவற்றின் உண்மை மதிப்பைவிடக் குறைந்த விலைக்குத் தனியார் முதலாளிகளுக்கு விற்றதன் மூலம் தனியார்மயம்-தாராளமயம் தொடங்கப்பட்ட 1991-92 ஆம் ஆண்டிலேயே அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ,3442 கோடிகள். 2000 ஆண்டு முதல் 2002 -க்குள் பால்கோ, இந்துஸ்தான் துத்தநாக நிறுவனம், வி.எஸ்.என்.எல், ஐ.பி.சி.எல், உள்ளிட்ட 9 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்றபோது, அந்நிறுவனங்களின் உண்மை மதிப்பை வேண்டுமென்றே குறைத்துக் காட்டி அரசுக்குப் பல்லாயிரம் கோடி இழப்பையும் முதலாளிகளுக்குக் கொழுத்த ஆதாயத்தையும் ஏற்படுத்தியதாக அரசின் கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையே குற்றம் சாட்டியது.

    நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில்  தொலைத்தொடர்புத் துறையில் பன்னாட்டு நிறுவனங்களும் தரகுப் பெருமுதலாளிகளும் நுழைந்து சூறையாடுவதற்கு வசதியாக தேசியத் தொலைத்தொடர்புக் கொள்கை கொண்டுவரப்பட்டது. அப்போது நடந்த ஏலத்தில் அடுத்த பத்தாண்டுகளில்  ரூ.9,45,000 கோடி வருமானம் தரத்தக்க இச்சேவைப் பிரிவுகள் டாடா, எஸ்ஸார், ரிலையன்சு, பார்தி ஏர்டெல் நிறுவனங்களுக்கு வெறும் 1,15,000 கோடி ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்கு தாரை வார்க்கப்பட்டன. மக்கள் வரிப்பணத்தில் உருவான தொலைத்தொடர்புத் துறையின் வலைப்பின்னலைப் பயன்படுத்திக் கொண்டு கொழுத்த ஆதாயமடைந்த இத்தகைய நிறுவனங்கள், அரசுக்குச் செலுத்த வேண்டிய உரிமத் தொகை நிலுவையான ஏறத்தாழ 8,000 கோடிகளைக்கூடத் தள்ளுபடி செய்ய வைத்து ஏப்பம் விட்டன. பின்னர் வந்த வாஜ்பாய் அரசு தனியார்மய-தாராளமயத்தைத் தீவிரப்படுத்தி புதிய தொலைத்தொடர்புக் கொள்கையை அறிவித்தது. இக்கொள்கையால் அடுத்த பத்தாண்டுகளில் அரசுகக்கு ரூ.50,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று குற்றச்சாட்டுகளும் புகார்களும் வந்த போதிலும் அவசரஅவசரமாக இதை அறிவித்து முதலாளிகளின் கொள்ளைக்குக் காவடி தூக்கியது, பா.ஜ.க.

    இப்படி காங்கிரசு மற்றும் பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சிகள் தொலைத் தொடர்புத் துறை மட்டுமின்றி, காடுகள், மலைகள், கனிம வளங்கள், ஆறுகள், குளங்கள், மணல், தண்ணீர் முதலான அனைத்தையும் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அற்ப விலைக்குத் தாரைவார்த்துக் கொடுத்தன. கிருஷ்ணா-கோதாவரி இயற்கை எரிவாயுப் படுகையை அம்பானிக்குத் தாரைவார்த்துக் கொடுத்ததோடு, வரிச் சலுகைகளையும் வாரியிறைத்தது அரசு. வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாகக் காட்டி  ரிலையன்சு நடத்திய மோசடியால் அரசுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்ட போதிலும், ரிலையன்சுக்கு வெறும் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது. போஸ்கோ நிறுவனம், ஒரிசாவில் ஆலையை நிறுவுவதற்கான வெகுமதியாக, ஓராண்டுக்கு ஏறத்தாழ 96,000 கோடி மதிப்புடைய இரும்புத் தாதுவை அள்ளிச் செல்ல ஒப்பந்தம் போடப்பட்டது.

    அதேபோலத்தான் விண்வெளியில் உள்ள பொதுச் சொத்தான அலைக்கற்றையும் அற்ப விலைக்கு பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தொலைத் தொடர்பு அமைச்சர்களாக இருந்த சுக்ராம், பிரமோத் மகஜன், தயாநிதி மாறன் ஆகியோர் பெருமுதலாளிகளின் சூறையாடலுக்குத் துணைநின்று ஆதாயமடைந்துள்ளனர். பெருமுதலாளிகளுக்கிடையிலான நாய்ச்சண்டையாலும், பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறினாலும் இப்போது அமைச்சர் ராசா சிக்கிக் கொண்டு பலிகிடாவாக்கப்பட்டுவிட்டார். பல்லாயிரம் கோடிகளை ஏப்பம் விட்ட பன்னாட்டுக் கம்பெனிகளும், தரகுப் பெருமுதலாளித்து கும்பல்களும், அதிகார வர்க்கமும், காங்கிரசும், ஊடகங்களும் இப்போது விவகாரம் அம்பலமானவுடன், பந்தி பரிமாறிய ராசாவை மட்டும் பலிகொடுத்துவிட்டு, மற்றவர்களைத் தப்புவிக்க முயற்சிக்கின்றன. ஊழல் மோசடியில் சிக்கியுள்ள அமைச்சர் ராசாவைத் தண்டிப்பதென்பது மொத்த விவகாரத்தின் ஒரு பகுதிதான். ஆனால், இத்தகைய தனியார்மயச் சூறையாடல்களைக்  கொள்கையாகக் கொண்டு அரசு நடைமுறைப்படுத்தி வருவதுதான் அதைவிட முக்கியமானது.

    இத்தகைய கொள்ளைகள் அம்பலமாகி, விசாரணையின் போது நீதித்துறை கேள்விகள் எழுப்புவதை வைத்து ஏதோ கிடுக்கிப்பிடி போடுவதாகவும் குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது என்பது போலவும் ஊடகங்கள் சூடேற்றுகின்றன. நீதித்துறையின் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இவை ஊதிப் பெருக்கப்படுகின்றன. ஆனால்,விசாரணயின் முடிவில் வழங்கப்படும் தீர்ப்பு வேறு விதமாகவே உள்ளது. அரசுத்துறை நிறுவனங்கள், பொதுச் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு விற்று காசாக்குவது என்பதுதான் அரசின் கொள்கை. அக்கொள்கை விசயத்தில் நாங்கள் தலையிட முடியாது என்பதுதான் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் நீதித்துறை தெரிவித்துள்ள கருத்து. தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளையிடுவது சட்டப்படி குற்றமல்ல, ஒரு முதலாளித்துவ நிறுவனத்தின் வர்த்தகச் சுதந்திரத்தில் நீதித்துறை தலையிட முடியாது என்று கோகோ கோலாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது, கேரள உயர்நீதிமன்றம்.

    இப்போது நாடாளுமன்றத்தில் பெருங்கூச்சல் போடும் ஓட்டுக்கட்சிகள் எவையும் அலைக்கற்றை ஊழலால் ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.1.76 லட்சம் கோடிகளைக் கொள்ளையடித்த பெருமுதலாளிகளிடமிருந்து அதனைப் பறிமுதல் செய் என்று கோரவில்லை. தொடரும் இத்தகைய பகற்கொள்ளைக்கும் சூறையாடலுக்கும் காரணமான தனியார்மய -தாராளமயக் கொள்கையை எதிர்க்க முன்வரவுமில்லை. மாறாக, கூட்டுச் சேர்ந்து கும்மியடிக்க நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழுவை நிறுவக் கோருகின்றன. ஆனால், 1987-இல் போபர்ஸ் ஊழல் தொடங்கி இதுவரை அமைக்கப்பட்ட நான்கு நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழுக்களின் விசாரணையில் ஒருவர்கூடக் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்படவில்லை.

    பெருகிவரும் இத்தகைய கொள்ளைகளுக்கும் ஊழல்களுக்கும் மோசடி முறைகேடுகளுக்கும் ஊற்றுக் கண்ணாக இருப்பது, தனியார்ம-தாராளமயக் கொள்கை. அதைச் சட்டபூர்வமாக்குவதுதான் இன்றைய முதலாளித்துவ நாடாளுமன்ற அரசியலமைப்பு முறை. இத்தகைய கொள்ளைக்கும் ஊழலுக்கு உரிமம் கோருவதுதான் ஓட்டுச்சீட்டு முறை. மோசடிகளை மூடிமறைக்கவும், ஊழலில் ஊறித்திளைக்கவும்தான் இன்றைய நாடாளுமன்ற அரசியல் அமைப்பு முறையும் அதன் சட்டம், நீதி, போலீசு, புலனாவு அமைப்புகளும் துணை நிற்கின்றன. இந்நிலையில், ஓட்டுப் பொறுக்கிகளைப் புறக்கணித்துவிட்டு, தனியார்மயம்-தாராளமயம் என்னும் மறுகாலனியாதிக்கக் கொள்கையையும் அதைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் இன்றைய அரசியலமைப்பு முறைக்கும் எதிராகப் போராடுவது ஒன்றுதான், தொடரும் இத்தகைய தனியார் பெருமுதலாளிகளின் கொள்ளையையும் சூறையாடல்களையும் தடுப்பதற்கான ஒரேவழி.

    __________________________________

    – புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010
    __________________________________

    வினவுடன் இணையுங்கள்

    தொடர்புடைய பதிவுகள்:

     

     

    வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்!

    வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்! வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!
    வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்! வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!

    மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி நடத்தி வரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், கடந்த நவம்பர் 4-ஆம் தேதியன்று பத்தாவது ஆண்டைக் கடந்துவிட்டது.

    பத்தாண்டுகளுக்கு முன்பு, மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலுக்கு அருகேயுள்ள மாலோம் என்ற புறநகர்ப் பகுதியில் அசாம் துப்பாக்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள் நடத்திய கண்மூடித்தனமானத் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்; 34 பேர் படுகாயமுற்றனர்.  சுட்டுக்கொல்லப்பட்ட அனைவரும் சாலையோரத்தில் பேருந்துக்காகக் காத்து நின்ற அப்பாவிகள்.

    மாலோம் படுகொலை என்று அழைக்கப்படும் இந்த அரசு பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய சிப்பாய்களுள் ஒருவன்கூட இதுநாள்வரை தண்டிக்கப்படவில்லை.  இன்னும் சொல்லப்போனால், இந்தப் படுகொலை நீதிமன்ற விசாரணையைக்கூட இன்னும் எட்டவில்லை.  ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்தான் அச்சிப்பாய்கள் விசாரிக்கப்படுவதையும் தண்டிக்கப்படுவதையும் தடுத்து, அவர்களுக்குச் சட்டபூர்வ பாதுகாப்பை வழங்கி வருகிறது.

    ஐரோம் ஷர்மிளா, மாலோம் படுகொலை நடந்து முடிந்த மூன்றாவது நாளே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரித் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.  அவரின் போராட்ட உறுதியையும், அவரது போராட்டத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் கண்டு அரண்டு போன மணிப்பூர் மாநில அரசு, ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஒருசில நாட்களிலேயே அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவுசெய்து கைது செய்தது.  அவரை மருத்துவமனையில் அடைத்து வைத்து அவருக்கு வலுக்கட்டாயமாகத் திரவ உணவை மூக்கின் வழியாகச் செலுத்தி வருகிறது. அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை அறை, கிளைச் சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஐரோம் ஷர்மிளா, தனது போராட்டத்தைத் தொடங்கிய பின் கடந்த பத்தாண்டுகளில் ஒருமுறைகூடத்  தனது வீட்டிற்குச் செல்லவில்லை.  மணிப்பூர் மாநில அரசு அவரை விடுதலை செய்யும்பொழுதெல்லாம் – அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ் அவரை ஓராண்டு மட்டுமே சிறையில் அடைத்துவைக்க முடியும் – அவர் தனது போராட்டத்தை ஆதரித்து வரும் மேரா பாபி என்ற மகளிர் அமைப்பின் அலுவலகத்துக்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவார்.  உடனே, மணிப்பூர் மாநில அரசு அவரை மீண்டும் கைது செய்து மருத்துவமனையில் அடைத்துவிடும்.

    அவர் கடந்த பத்தாண்டுகளாக எந்தவிதமான திட உணவையும் உட்கொள்ள மறுத்து வருவதால், அவரது முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு எந்த வேளையிலும் அவர் மரணத்தைச் சந்திக்கக் கூடும் என்ற அபாயகரமான கட்டத்தில் இருந்து வந்தாலும், அவர் தனது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார்.

    ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவது பற்றி ஆராய கமிட்டி அமைக்கிறோம்; எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு மாநில அரசு நடத்திய பேரத்தையெல்லாம் ஐரோம் ஷர்மிளா ஒரு பொருட்டாக மதிக்கவேயில்லை.  அவரைப் பொருத்தவரை, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே வீட்டிற்குச் சென்று வயது முதிர்ந்த தனது தாயாரின் மடியில் தலை சாப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

    மியான்மர் இராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சான் சூ கி-யைப் பதினைந்து ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருந்ததற்கும் இந்தியக் ‘குடியரசு’ ஐரோம் ஷர்மிளாவைப் பத்தாண்டுகளாக மருத்துவமனை என்ற கிளைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கும் பெரிய வேறுபாடு கிடையாது.

    போராளிகளின் மனவுறுதியையும் கொள்கைப் பற்றுறுதியையும் அடக்குமுறைகளின் மூலம் சிதைத்துவிட முடியாது என்பதற்கு ஐரோம் ஷர்மிளா வாழும் உதாரணமாகத் திகழ்கிறார்.  வெல்லட்டும் அவரது போராட்டம்!  வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!!

    _____________________________
    புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010
    _____________________________

    வினவுடன் இணையுங்கள்

    தொடர்புடைய பதிவுகள்:


    காஷ்மீர் : காங்கிரசு – பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டு !

    டெல்லியில் நடந்த காஷ்மீர் குறித்த கருத்தரங்கில் புகுந்து வன்முறையில் ஈடுபடும் இந்துத்வ குண்டர்கள்

    டெல்லியில் நடந்த காஷ்மீர் குறித்த கருத்தரங்கில் புகுந்து வன்முறையில் ஈடுபடும் இந்துத்வ குண்டர்கள்

    அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கமிட்டி என்ற அமைப்பு காஷ்மீர் பிரச்சினை குறித்து, “விடுதலை: ஒரே வழி” என்ற கருத்தரங்கை கடந்த அக்டோபர் 21 அன்று டெல்லியில் நடத்தியது.  இக்கருத்தரங்கில் காஷ்மீரைச் சேர்ந்த ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான சையத் அலி ஷா கீலானி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நக்சல்பாரி புரட்சியாளரான தோழர் வரவர ராவ், எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இக்கருத்தரங்கைச் சீர்குலைக்கும் திட்டத்தோடு அரங்கத்தில் நுழைந்திருந்த இந்துத்துவா பாசிசக் கும்பல் கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுதே ரகளையில் ஈடுபட்டதோடு, சையத் ஷா கீலானி, அருந்ததி ராய் ஆகியோரைத் தாக்கவும் முனைந்தது.  இக்கருத்தரங்கையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காஷ்மீரின் வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சியையும் அடித்து நொறுக்கியது, அக்கும்பல்.

    தில்லி போலீசின் அனுமதி பெற்று, சட்டபூர்வமான முறையில்-அமைதியான வழியில் நடைபெற்றுக் கொண்டிருந்த இக்கருத்தரங்கின் மீது வன்முறைத் தாக்குதலை நடத்திய இக்கும்பல், அக்கருத்தரங்கில் உரையாற்றிய அருந்ததி ராயையும் சையத் ஷா கீலானியையும் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் சாமியாடி வருகிறது.  சில ‘தேசிய’ப் பத்திரிகைகள் இந்துத்துவா கும்பலின் இந்த பாசிச கோரிக்கைக்கு ஆதரவாக செய்திகளையும், தலையங்கக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளன.  சில தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள் அருந்ததி ராயைத் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய வேண்டிய அவசியம் குறித்து புதுப் பணக்கார கும்பலைக் கூட்டிவைத்து “டாக் ஷோ’’க்களை நடத்தித் தூபம் போட்டன.

    அருந்ததி ராய் அக்கருத்தரங்கில், காஷ்மீர் மக்கள் நடத்தும் போராட்டத்தை, இந்தியாவின் மையப் பகுதியில் நக்சல்பாரிகள் நடத்தும் போராட்டத்தோடும், நர்மதை அணையை எதிர்த்துப் பழங்குடியின மக்கள் நடத்தும் போராட்டத்தோடும் ஒப்பிட்டுப் பேசியதோடு,  “போராடும் பழங்குடியின மக்களின் கரங்களில் உள்ள வில்லும் அம்பும், காஷ்மீர் இளைஞர்களின் கரங்களில் உள்ள கற்களும் அவசியமானவைதான்.  ஆனாலும், அதற்கு மேலும் நமக்குத் தேவைகள் உள்ளன.   நாகலாந்து, மணிப்பூர், சட்டிஸ்கர், ஒரிசா, காஷ்மீர் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நீதிக்காகப் போராடி வரும் மக்கள் ஐக்கியப்பட வேண்டிய அவசியத்தை’’த் தனது உரையில் சுட்டிக் காட்டினார்.

    காஷ்மீர் பிரச்சினை குறித்து அம்மாநில மக்களின் கருத்தை அறிவதற்காக மைய அரசு நியமித்துள்ள மூவர் குழுவைப் புறக்கணிக்கக் கோரி அக்கருத்தரங்கில் அறைகூவல் விடுத்த சையத் ஷா கீலானி, “சுயநிர்ணய உரிமை, காஷ்மீர் மக்கள் அனைவரின், காஷ்மீரில் வாழும் சீக்கியர்கள், இந்துக்கள், புத்த மதத்தினர் உள்ளிட்ட அனைவரின் அடிப்படை உரிமையாகும்;  காஷ்மீர் மக்களின் போராட்டத்தை இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் மக்கள் ஆதரிக்கத் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறியாகும்” என உரையாற்றினார்.

    நீர், நிலம், கனிம வளம் என நாட்டின் பொதுச் சொத்துகள் அனைத்தையும் ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு பட்டா போட்டுக் கொடுப்பது தேசத் துரோகமா? இல்லை, அந்த அநீதியைத் தடுப்பதற்குப் போராடி வரும் மக்களிடம் ஐக்கியப்பட்டுப் போராடுங்கள் எனக் கோருவது தேசத் துரோகமா?  சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவைப் பகுதிபகுதியாக ஆட்சியாளர்கள் பட்டா போட்டுக் கொடுப்பதைக் காட்டிலும், காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிக்க வேண்டும் எனக் கோருவது எந்த விதத்தில் தேசத் துரோகமாகிவிடும்?

    சண்டிகரில் காஷ்மீர் தொடர்பான கூட்டத்தை அச்சுறுத்திய இந்துத்வ கும்பல்

    இந்துத்துவா கும்பலோ அருந்ததி ராயைத் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்வதை நியாயப்படுத்துவதற்காக, “காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்ததில்லை ” என அருந்ததி ராய் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும், பிரிவினைவாதத்தை ஆதரித்துப் பேசியதாகவும் குறிப்பிடுகிறது.  சில முதலாளித்துவ அறிஞர்கள், “அருந்ததி ராய் தேச ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசியிருந்தாலும், அவர் வன்முறையில் ஈடுபடவில்லை; எனவே, அவரைக் கைது செய்ய வேண்டியதில்லை” என இப்பிரச்சினை குறித்துக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.  இந்த இரண்டு கருத்துகளும் ஒன்றுக்கொன்று எதிரானது போலத் தோற்றமளித்தாலும், சாரத்தில் இந்துத்துவா கும்பலும், இந்த முதலாளித்துவ அறிஞர்களும் காஷ்மீரின் வரலாற்றை மூடிமறைக்கிறார்கள் என்பதே உண்மை.

    ‘‘காஷ்மீர் 1947-இல் இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்டதே தவிர, அம்மாநிலம்  இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது கிடையாது” என்பது அருந்ததி ராயின் சொந்தக் கற்பிதம் கிடையாது.  அது ஒரு வரலாற்று உண்மை.  மேலும், காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருப்பது குறித்து அம்மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அப்பொழுது இந்திய அரசு ஒத்துக் கொண்டது.  இந்த வரலாற்று உண்மைகளை இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் மக்களிடம் எடுத்துக் கூறுவதல்ல, அவ்வரலாற்று உண்மையை மூடிமறைத்துவிட  முயலுவதுதான் துரோகமும் நயவஞ்சகமும் ஆகும்.

    டைம்ஸ் நௌ, நியூஸ் 24, பயோனீர் உள்ளிட்ட சில ஊடகங்கள் அருந்ததி ராயைத் தண்டிக்கக் கோரும் விவகாரத்தில் இந்துத்துவா கும்பலைவிடக் கேவலமாக நடந்து கொண்டன.  அருந்ததி ராய் அக்கருத்தரங்கில் இந்திய இராணுவத்தை வன்புணர்ச்சி வெறிகொண்ட கும்பலாகச் சித்தரித்ததாக இந்த ஊடகங்கள் செய்திகளைத் தயாரித்து வெளியிட்டன.  அருந்ததி ராய் இந்த அண்டப்புளுகை அம்பலப்படுத்திய பின்னும், இந்திய தேசியவெறி பிடித்த இந்த ஊடகங்கள் ஒரு புளுகுணிச் செய்தியை வெளியிட்டதற்காக வெட்கப்படவுமில்லை; மறுப்பு வெளியிடவும் இல்லை.

    அக்கருத்தரங்கில் காஷ்மீருக்குச் சென்று மடிந்து போகும் ஏழை இந்தியச் சிப்பாய்களின் அவல நிலையைச் சுட்டிக் காட்டிப் பேசிய அருந்ததி ராய், அதற்கு மாறாக, இந்திய இராணுவத்தை வன்புணர்ச்சி வெறிகொண்ட கும்பலாகச் சித்தரித்துப் பேசியிருந்தாலும்கூட  அதில் தவறொன்றும் காண முடியாது.  துப்பாக்கிச் சூட்டில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள கற்களை வீசும் காஷ்மீர் இளைஞர்களைப் பிடித்துக் கொண்டுபோ அதற்குத் தண்டனையாக அவர்களின் விரல் நகங்களைப் பிடுங்கி எறியும் இந்திய இராணுவம், காஷ்மீரத்துப் பெண்களிடம் மட்டும் கண்ணியத்துடன் நடந்து கொண்டிருக்குமா?

    அருந்ததி ராய், கீலானிக்கு எதிராக இந்துத்துவா கும்பல் சாமியாடியவுடனேயே காங்கிரசு கூட்டணி அரசு அவர்கள் இருவர் மீதும் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரும் ஏற்பாடுகளில் இறங்கியது.  பின்னர், அம்முயற்சியைக் கைவிட்டுவிட்டதாக மைய அரசு கூறினாலும், எந்த நேரத்திலும் அருந்ததி ராய் மீது வழக்குத் தொடுக்கும் நிலையில்தான் இப்பிரச்சினையை தில்லி போலீசிடம் விட்டு வைத்துள்ளது.  உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், “இப்பிரச்சினை பற்றி முடிவு செய்யும் சுதந்திரம் டெல்லி போலீசுக்கு உண்டு” எனக் கூறியிருப்பதில் இருந்தே காங்கிரசின் கபடத்தனத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.

    காங்கிரசின் இந்த ஜனநாயக வேடத்தைக்கூட இந்துத்துவா கும்பலால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  அருந்ததி ராய் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர உத்தரவிடக் கோரி அக்கும்பல் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதில் வெற்றியும் பெற்றுவிட்டது.

    ஏதோ சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும் கண்ணியவான் போல வழக்குத் தொடுத்துள்ள இந்துத்துவா கும்பல், இன்னொருபுறம் தனது மகளிர் அணியை இறக்கிவிட்டு அருந்ததி ராய் வீட்டின் மீது தாக்குதல் தொடுத்து, அவரை மிரட்டிப் பணிய வைக்க முயன்றது.  இத்தாக்குதல் ஏதோ யாருக்கும் தெரியாமல் சதித் திட்டம் தீட்டப்பட்டு, அதன்பின் நடத்தப்பட்ட திடீர்த் தாக்குதல் அல்ல.  “ஓவியர் ஹுசைனை வேட்டையாடியதைப் போலவே அருந்ததி ராயையும் வேட்டையாடுவோம்” என பஜ்ரங் தள் கும்பல் பத்திரிகைகளுக்கு செய்தியளித்துவிட்டு நடத்திய தாக்குதல் இது.

    குறிப்பாக, என்.டி.டிவி., டைம்ஸ் நௌ, நியூஸ் 24 ஆகிய மூன்று தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர்களும், ஒளிப்பதிவாளர்களும் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாகவே அருந்ததி ராயின் வீட்டின் முன் குவிந்துவிட்டனர்.  இதனைத் தாக்குதல் செய்தியை முதல் ஆளாக ஒளிபரப்பிவிட வேண்டும் என்ற ஆர்வக் கோளாறாகப் பார்ப்பதா? இல்லை,  இந்துத்துவா கும்பலுக்கும் சில தேசிய செய்தி ஊடகங்களுக்கும் இருக்கும் நெருக்கத்தைக் காட்டும் சான்றாகப் பார்ப்பதா?  மைய அரசு, முன்னரே அறிவித்துவிட்டு நடந்த இத்தாக்குதலைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. இதன் மூலம், இவ்விவகாரத்தில் காங்கிரசும், பா.ஜ.க.வும் ஜாடிக்கேத்த மூடியாய்ச் செயல்படுவதாகக் கூறலாம்.

    அருந்ததிராயின் வீட்டையும் அவரையும் தாக்க முயற்சித்த இந்துத்வ கும்பல்

    டெல்லிக்கு அடுத்து, ஒரிசா மாநிலத்திலுள்ள புவனேஷ்வர் நகரில் நடந்த காட்டு வேட்டைக்கு எதிரான கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த அருந்ததி ராய்க்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டிய இந்துத்துவா கும்பல், அக்கருத்தரங்கை நடத்தவிடாமல் ரகளையிலும் இறங்கியது.  இவ்வன்முறையில் ஐந்து பேர் காயமுற்றனர்.  அருந்ததி ராய், இந்துத்துவா கும்பலின் இந்த சலசலப்புகளுக்கு அஞ்சாததோடு, காஷ்மீர் பிரச்சினை குறித்து தான் கூறிய கருத்துகளைத் திரும்பப் பெற முடியாது என்றும் அறிவித்திருக்கிறார்.

    ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான மிர்வாயிஸ் உமர் பாரூக் அரியானா மாநிலத் தலைநகர் சண்டிகரில் காஷ்மீர் பிரச்சினை குறித்த நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு, உரையாற்றத் தொடங்கும் முன்பே ரகளையில் ஈடுபட்ட இந்துத்துவா கும்பல், அவரை நெட்டித் தள்ளி வன்முறையில் இறங்கியது.  “அவரின் அரசியல் கருத்துக்களுக்காகத்தான் மிர்வாயிஸ் தாக்கப்பட்டதாக’’க் கூறி, இந்துத்துவா கும்பலின் இந்த வன்முறையை விசிறிவிட்டுள்ளார், காங்கிரசின் கூட்டாளியும் ஜம்மு-காஷ்மீர் முதல்வருமான ஒமர் பாரூக்.

    அருந்ததி ராயும், சையத் ஷா கீலானியும், மிர்வாயிஸ் உமர் பாரூக்கும் காஷ்மீர் பிரச்சினை குறித்து என்ன பேசி வருகிறார்களோ, அதுதான் காஷ்மீர் மக்களின் பொதுக் கருத்தாகும்.  இந்திய அரசின் காஷ்மீர் கொள்கைக்கு எதிரான இக்கருத்தைப் பேசுபவர்கள் மீது வழக்கு பாயும்; தாக்குதல் தொடுக்கப்படும் என ஒருபுறம் காட்டிவிட்டு, இன்னொருபுறம் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் கருத்துக் கேட்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது, காங்கிரசு கும்பல்.

    இந்துத்துவா கும்பலோ, முசுலீம் தீவிரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் எதிர்ப்பதில், தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டிக் காப்பதில் காங்கிரசைவிடத் தனக்குத்தான் அதிக அக்கறை உண்டு எனக் காட்டிக் கொள்ள தற்பொழுது காஷ்மீர் பிரச்சினையைப் பயன்படுத்திக்கொள்ள முனைகிறது.  அருந்ததி ராயின் பேச்சை மட்டுமல்ல, காங்கிரசு அரசு அமைத்துள்ள மூவர் குழுவின் சில்லறை ஆலோசனைகளை எதிர்ப்பதன் மூலமும்; அருந்ததி ராயைக் கைது செய்யாத காங்கிரசு அரசு, அஜ்மீர் வெடிகுண்டு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைக் கைது செய்வதாகப் புலம்புவதன் மூலமும் தனது இந்து-இந்திய தேசிய வெறியைக் காட்டி வருகிறது, அக்கும்பல்.
    _____________________________
    புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010
    _____________________________

    வினவுடன் இணையுங்கள்

    தொடர்புடைய பதிவுகள்:

     

    புதிய ஜனநாயகம் டிசம்பர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

    புதிய ஜனநாயகம் டிசம்பர் 2010

    புதிய ஜனநாயகம் டிசம்பர் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

    இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

    1.     முதலாளித்துவம் மக்களைக் கொல்லும்! மக்களைக் காக்கும் கம்யூனிசமே வெல்லும்! – புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் சூளுரை
    2.     2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!
    3.    அரசை ஆட்டுவிக்கும் அதிகாரத் தரகர்கள்
    4.    ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல்: இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது!
    5.    நோக்கியாவின் கொலைக்கரங்கள்
    6.    தோழர் சின்னசாமியின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!
    7.    தோழர் வர்கீஸ் படுகொலை தீர்ப்பு: தாமதமான நீதி…
    8.    பிரம்மரத மரியாதைக்குத் தடை: ஒடுங்கியது பார்ப்பனத் திமிர்! வென்றது புரட்சியாளர்களின் போராட்டம்!!
    9.    தண்ணீர்க் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்! -மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆர்ப்பாட்டம்
    10. அமெரிக்க பயங்கரவாதம்: புதைக்கப்பட்ட உண்மைகள்  பூதமாகக் கிளம்பின!
    11.   விக்கிலீக்ஸ் தோண்டியெடுத்த ”அடுத்த பூதம்!”
    12.  வெள்ள  நகரமானது, கடலூர் நகரம்!
    13.  டாடா குழுமத்தின் கோர முகம் (சென்ற இதழின் தொடர்ச்சி…)
    14.  இந்தியா, அமெரிக்காவின் சுமைதாங்கியானது
    15.  ”ஒபாமாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு! தேசிய அவமானம்!!” -புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-ஆர்ப்பாட்டம்
    16.  போஸ்கோ ஒப்பந்தம்: காங்கிரசின் கபடத்தனம்
    17.  காஷ்மீர்:  காங்கிரசு – பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டு!
    18.  வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்! வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!

    புதிய ஜனநாயகம் டிசம்பர் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

    கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

    _______________________________________________________________________________________________________

    வினவுடன் இணையுங்கள்

    தொடர்புடைய பதிவுகள்