Sunday, October 6, 2024
முகப்புஉலகம்அமெரிக்காதமிழக மீனவர் படுகொலை: வளைகுடாவில் அமெரிக்காவின் அடாவடி!

தமிழக மீனவர் படுகொலை: வளைகுடாவில் அமெரிக்காவின் அடாவடி!

-

மீனவர்-கொலை-டந்த ஜூலை 16ஆம் தேதியன்று,  துபாய் அருகேயுள்ள  ஜாபல்அலி துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த, 6 இந்தியர்களும் 2 துபாய்காரர்களும் அடங்கிய மீன்பிடி படகை எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி அமெரிக்கக் கடற்படையினர் எந்திரத் துப்பாக்கி மூலம்  கண்மூடித்தனமாகச் சுட்டதில் இராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினத்தைச் சேர்ந்த சேகர் என்ற மீனவர் கொல்லப்பட்டுள்ளார். முத்து முனிராஜ் என்ற மீனவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் சொற்பக் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். தமிழக மீனவர்கள் எதற்காக துபாய் செல்ல வேண்டும்?

சிங்களக் கடற்படையினர் தொடர்ந்து தாக்கி தமிழக மீனவர்களைக் கொன்று வருவதாலும், பொதுவில் மீன்பிடித் தொழில் நசிவடைந்துள்ளதாலும், தமிழக மீனவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக வளைகுடா நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலைக்குச் சேர்ந்து பாரசீக வளைகுடா பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அங்கேயும் அவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை செய்த பின்னரும் அந்தப் படகு தங்களை நோக்கி வேகமாக வந்ததால், இரானியப் படை அல்லது அல்கய்தா தீவிரவாதிகளின் தற்கொலைப்படைத் தாக்க வருவதாகச் சந்தேகித்து, தற்காப்புக்காகச் சுட்டதாக அமெரிக்கக் கடற்படை திமிராக விளக்கம் அளிக்கிறது. ஆனால், கப்பலிலிருந்து பைனாகுலர் மூலம் பார்த்தாலே வருவது மீனவர்களா, தீவிரவாதிகளா என்று தெரிந்துவிடும்.

மேலும், இந்திய மீனவர்கள் சென்ற படகு யாருக்கும் அபாயத்தை ஏற்படுத்தாத வகையில் சரியான திசையில் சென்றுள்ளதாகவும், அமெரிக்கக் கடற்படையினர்தான் தவறிழைத்துள்ளனர் என்றும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக துபாய் போலீசுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அமெரிக்கா, இதை ஏற்க மறுத்து விசாரணைக்குப் பின்னர்தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறது.  பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் எதற்காக அமெரிக்கக் கடற்படை நிறுத்தப்பட்டிருக்கிறது?

லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போரைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள், இப்போது இரானைக் குறிவைத்துள்ளன. இரானை அச்சுறுத்திப் பணிய வைக்கும் நோக்கத்துடன் பாரசீக வளைகுடாவில் அமெரிக்க மேலாதிக்க வல்லரசு தனது படைகளைக் குவித்து வருகிறது. பாரசீக வளைகுடாவின் ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் உலகின் 40%க்கும் மேலான எண்ணெய் ஏற்றுமதி வணிகம் நடக்கிறது என்பதால், இப்பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் நாடுகளின் இறையாண்மைக்கும் பெருத்த அச்சுறுத்தலாக உள்ள அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்கிறது இரான்.

இரானில் இராணுவத் தலையீடு செய்வதை நியாயப்படுத்த, அந்நாடு அணு ஆயுதங்களை இரகசியமாகத் தயாரித்து வருவதாகப் பொய்க்குற்றம் சாட்டி அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் பல பொருளாதாரத் தடைகளை போட்டுள்ளன. தனது எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தை முற்றிலும் முடமாக்கும் இப்பொருளாதாரத் தடை நடவடிக்கையை எதிர்க்கும் இரான், ஹோர்முஸ் நீரிணை கால்வாய் பகுதியை மூடப்போவதாக  எச்சரித்தது. இரான் அப்படிச் செய்தால், அதை உடனடியாக முறியடிப்போம் என்று நான்கு விமானந்தாங்கிப் போர்க்கப்பல்களை வளைகுடா பகுதியில் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் பதற்றநிலையை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா, இரானை ஆத்திரமூட்டி வம்புக்கு இழுத்து போர்த் தாக்குதலைத் தொடுக்க முயற்சித்து வருகிறது.

நேற்றுவரை இராக்கில் பயங்கரவாத அச்சுறுத்தல் என்று  அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திவந்த அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள், இப்போது பாரசீக வளைகுடாவில் இரானின் தற்கொலைப் படகுத் தாக்குதல் என்ற பயங்கரவாதப் பீதியூட்டி கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தக் கிளம்பியுள்ளதன் வெளிப்பாடுதான் மீனவர் சேகரின் படுகொலை.  ஒருக்கால், தமிழக மீனவர்கள் இரானிய ஒப்பந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தால், அவர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி இப்படுகொலையை அமெரிக்கா இந்நேரம் நியாயப்படுத்தியிருக்கும். ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் அமெரிக்காவின் நட்பு நாடாக இருப்பதால், மீன்பிடி படகின் மீதான தாக்குதல் பற்றிய விசாரணைக்கு வேறுவழியின்றி அமெரிக்கா ஒப்புக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் அடாவடித்தனங்களைத் தடுக்கக்கூட முன்வராத இந்தியா, ஏகாதிபத்திய எஜமானரான அமெரிக்காவின் அட்டூழியத்துக்கு நியாயம் கேட்கும் என்று எதிர்பார்க்க முடியாது. பாரசீக வளைகுடாவில் இன்று ஒரு  தமிழக மீனவர் அமெரிக்க மேலாதிக்க வெறியர்களால் கொல்லப்பட்டுள்ளார். நாளை, எந்தவொரு ஏழை நாட்டைச் சேர்ந்த மீனவரும் அமெரிக்கப் படையினரால் சுட்டுக் கொல்லப்படலாம் என்ற பேரபாயம் ஏற்பட்டுள்ளதை உலகுக்கு உணர்த்திவிட்டு, மீனவர் சேகரின் உடல் இந்தியாவுக்குத் திரும்பியிருக்கிறது.

__________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க