ம்மாவுக்கு கேன்சர்.. காப்பாற்ற 15 லட்சம் வேண்டும்.. கையில் பணம் இல்லை. விற்க சொத்து இல்லை. நேர்மையாக வேலை செய்து சம்பாதிக்கலாம் என்றால், பார்ப்பவன் எல்லாம் ‘படுக்க வர்றியா?’ என்று கூப்பிடுகிறான். என்ன செய்வாள் நாயகி? போதைப் பொருள் கடத்துகிறாள். நான்கைந்து முறை தனியாக கடத்தி கிடைத்த அனுபவத்தில் மெருகேறி, பிறகு குடும்பத்தோடு கடத்துகிறாள். எந்தக் குடும்பம்? கேன்சர் வந்த அம்மா, வாட்ச்மேன் வேலை செய்யும் அப்பா, கல்லூரி படிக்கும் தங்கை. மொத்த குடும்பத்தையும் இணைத்துக் கொண்டு போதைப்பொருள் கடத்தி அம்மாவின் கேன்சர் செலவுக்கு பணம் சேர்க்கிறாள். இதுதான் ’கோலமாவு கோகிலா’படத்தின் கதை.

“அறம்”  படத்தில் சமூகத்தின் ஒட்டுமொத்த அற மதிப்பீடுகளையும் ஒரு கலெக்டராக தன் தோளில் தூக்கிச் சுமந்த நயன்தாரா இதில் மாஃபியா ராணியாக வந்து, அறத்தின் கழுத்தைப் பிடித்து கரகரவென அறுக்கிறார். தியேட்டரே கைகொட்டி சிரிக்கிறது.

“அது வேற ஜானர்; இது வேற ஜானர்”  என்பது சினிமாக்காரர்களின் பொழிப்புரை. ஏதாவது ஒரு தமிழ் இயக்குநரை முற்போக்காக படம் எடுத்திருக்கிறீர்கள் என்று பாராட்டி விட்டு ஒரு மசாலா தமிழ்ப்படத்தை விமர்சித்தீர்கள் என்றால் அவர்களுக்கு கோபம் வரும். பிறகு மேற்படி இந்த ஜானர் எனப்படும் சினிமாக்களின் வகைகளை விளக்கி எல்லாமும் வேண்டுமென படுத்தி எடுப்பார்கள்.

ஆனால், “அறம்”  படத்தில் நயன் தாராவின் சீற்றத்தை கண்டு கை தட்டிய அதே சினிமா ரசிகன்தான், “கோலமாவு கோகிலா” வையும் ரசிக்கிறான் என்றால், இது நமக்கு புரியாத ஜானராக இருக்கிறது. அவன் உண்மையா? இவன் உண்மையா?

ஆனால், “அறம்”  படத்தில் நயன் தாராவின் சீற்றத்தை கண்டு கை தட்டிய அதே சினிமா ரசிகன்தான், “கோலமாவு கோகிலா” வையும் ரசிக்கிறான் என்றால், இது நமக்கு புரியாத ஜானராக இருக்கிறது. அவன் உண்மையா? இவன் உண்மையா? பின்நவீனத்துவம் சொல்வதைப் போல, உண்மை என்ற ’பெருங்கதையாடலை’புரிந்து கொள்ளாத ’வன்முறை மனங்களுக்கு’ இந்த வேறுபாடு புரியாதா? எனில் எழவு வீட்டில் பாயாசம் வைக்கவில்லை என்று மக்களை திட்ட முடியுமா?  இல்லை எழவு வீட்டில் பாயாசம் வைக்கக் கூடாது என்பதை மனித நேயம் உருவாக்கிய இயல்பான நேசமாக ஏற்பதில் என்ன சிக்கல்?

போதைப்பொருள் பயன்படுத்தி சீரழியும் மனித உயிர்கள், சித்தரவதைப்படும் குடும்பங்கள், போதையின் பிடியில் நிகழும் வன்முறைகள், போதையில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள், போதையில் வாகனம் ஓட்டி கொல்லப்படும் மனித உயிர்கள், வீணாகும் மதிப்புமிக்க மனித ஆற்றல்… இவை எதுபற்றியும் இயக்குனருக்கு எந்த கவலையும் இல்லை. தப்பித்தவறி சின்னஞ்சிறு குற்றவுணர்ச்சி கூட திரைக்கதையின் எந்த இடத்திலும் எட்டிப் பார்ப்பதை அவர் அனுமதிக்கவில்லை. அப்படி ஒரு நீதியுணர்ச்சி பார்வையாளனின் மனதில் துளிர்விடுமானால், கோலமாவு கோகிலா காலி. அவன் கைதட்ட மாட்டான். அதனால் கோட்டின் அந்தப் பக்கமாக திட்டவட்டமாக ஒதுங்கி நிற்கிறார் இயக்குனர்.

போதைப்பொருள் கடத்தல் என்பது மாபெரும் மாஃபியா நெட்வொர்க். இதனால் பாதிப்படுவதுதான் ஏழைக் குடும்பங்களேத் தவிர, இப்படத்தில் சித்தரிக்கப்படுவதைப் போல இதில் ஈடுபடுவோர் அல்ல.

“நீ போதைப்பொருள் கடத்தி உன் அம்மாவை கேன்ஸரில் இருந்து காப்பாற்றிவிட்டாய்.. நீ விற்ற போதைப்பொருளால் பல்லாயிரம் பேர் நோய் வந்து சாவார்களே… போதையில் பலரை சாகடிப்பார்களே”  என்பது இயல்பாக நமக்குள் எழும் கேள்வி. ஆனால் இந்த கேள்விக்கு, தான் பதில் சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறார் இயக்குனர் நெல்சன். ஏனெனில் ரசிகனின் மனதில் இதற்கான பதில் தயாராக இருக்கிறது. “தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால்; தன் பிரச்னையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எந்த எல்லைக்கும் போகலாம்’ என்ற பொதுப்புத்தியை நம்பும் இயக்குனரின் கணிப்பு வீண்போகவில்லை என்பதை தியேட்டரில் ஒலிக்கும் கை தட்டல்களே சொல்கின்றன.

எளிமையாகச் சொல்வதென்றால் ஊழலை ஒழிக்க ஊழல் வாங்கு, திருடனைப் பிடிக்க திருடு, பொய்யை மறுக்க பொய்யுரை, கருப்புப் பணத்தை பிடிக்க கருப்புப் பணம் வாங்கு என்று பட்டியலிடலாம். இதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றால் போதை பொருள் விற்பதையே கேன்சரின் மருந்தாக மக்கள் ஏற்பார்களா என்ன?

அப்படி ஏற்கமாட்டார்கள் என்பது தெரிந்தேதான் இயக்குநர் மலிவான நகைச்சுவையை திரைக்கதையில் இயல்பாக சொருகுகிறார். அதனால்தான் மக்கள் கேன்சரை விட கொடிய விசயமான போதை பொருளை, மெய் மறந்து கடத்தும் நாயகியோடு சேர்ந்து சிரிக்கிறார்கள். நாயகி போதை பொருளை விற்பதையும் ஏற்கிறார்கள். ஒரு முக்கியமான மக்கள் பிரச்சினையை இப்படி நகைச்சுவையில் கடத்தி மறைப்பது என்பது கலையின் பெயரால் செய்யப்படும் கொலையே அன்றி வேறென்ன? வாழைப்பழம் வழுக்கி விழுபவனைப் பார்த்து எவ்வளவு தூரம் சிரிக்க முடியும்? விழுந்தவன் பெரிய அடிபடாமல் பின்புறத்தை தட்டி விட்டு எழுந்து சிரித்தால் மற்றவர்கள் கொஞ்சம் சிரிப்பார்கள். விழுந்தவன் இடுப்பெலும்பு முறிந்து பின் மருத்துவமனையில் செத்தே போனான் என்றாலும் அதை எப்படி சிரிக்க வைப்பது என்று யோசித்திருக்கிறார் இயக்குநர்.

ஆம். இந்த கலைக் கொலைக்கு இயக்குநருக்கு கை கொடுத்த அந்த நகைச்சுவையும் கூட தர்க்க ரீதியாக நாற்றமெடுக்கும் அநாகரீகமாகவே அமைந்திருக்கிறது.

இன்று தமிழ் சினிமாவில் யோகிபாபு என்ற நடிகருக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளுமே அவரது உருவத்தின் நிமித்தம் கிடைப்பவையே. அவரது நடிப்புக்கு கிடைக்கும் வரவேற்பு அனைத்துமே அந்த உருவகேலிக்கு ரசிகர்கள் வழங்கும் அங்கீகாரமே.

“கோலமாவு கோகிலா”  படத்தின் கேவலமான, அருவருப்பான மற்றொரு விசயம் நகைச்சுவை என்ற பெயரில் வரும் உருவ கேலி. சொல்லப் போனால், படத்தின் ஒட்டுமொத்த கதையோட்டமும் இந்த உருவகேலியின் மீதுதான் நகர்கிறது. யோகிபாபுவை கேலிக்குரியவராக சித்தரிக்க எந்த காட்சி அமைப்பும், தர்க்க நியாயமும் கதையில் இல்லை.  அப்படி ஒரு தர்க்கத்தை சிரிப்புக்காக வைத்தாலே கூட அது பிழைதான்.

சமூக உளவியலில் ஏற்கெனவே கேலிக்குரியதாக நிருவப்பட்டிருக்கும் உருவ தோற்றமே யோகிபாபுவை கிண்டல் செய்வதற்குப் போதுமானதாக இருக்கிறது. சொல்லப்போனால், இன்று தமிழ் சினிமாவில் யோகிபாபு என்ற நடிகருக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளுமே அவரது உருவத்தின் நிமித்தம் கிடைப்பவையே. அவரது நடிப்புக்கு கிடைக்கும் வரவேற்பு அனைத்துமே அந்த உருவகேலிக்கு ரசிகர்கள் வழங்கும் அங்கீகாரமே. நிஜத்தில் இந்த உருவங்கள், அதன் அழகியல் அனைத்தும் திட்டமிடப்பட்டு பெரும் வணிகமாக இறக்கப்படும் சூழலில்தான் கருப்பு நிறம், ‘அவலட்சணமான’ முகங்கள், பெரும் தலைகள், கறைபடிந்த பற்கள் என்பவை மக்களிடையே அழகின் மேன்மைக்கான எதிர்மறைப் பிரச்சாரங்களாக விதைக்கப்படுகின்றன.

இன்றைய தொலைக்காட்சி விளம்பரங்களை ஒரு குழந்தை ஒரு நாளில் பார்த்தாலே போதும், மேற்கண்ட உருவம், வண்ணமுடையவரை பிடிக்காது என்று ஒரே வார்த்தையில் கூறிவிடும். இத்தகைய அநாகரீக அழகைத்தான் யோகிபாபுவை கிண்டல் செய்யப்படுவதற்கான களமாக கட்டியமைத்து புகுந்து விளையாடுகிறார் இயக்குநர். நமக்கு குமட்டுகிறது.

இந்தப் படத்திலும் யோகிபாபு, நயன்தாராவை காதலிக்கிறார் என்ற தகவலே நகைச்சுவையாக மாறுகிறது. அதே இடத்தில் சிவகார்த்திகேயன் இருந்திருந்தால் அது ஹீரோயிசம். யோகி பாபு இருப்பதால் நகைச்சுவை. செய்யும் செயல்களால் அல்ல, செய்யும் நபர்களால் இங்கு நகைச்சுவையா, ஹீரோயிசமா என்பது தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், ’கோலமாவு கோகிலா’ படக் கதையின்படி, யோகிபாபு, உழைத்து முன்னேறி மளிகை கடை வைத்திருப்பவர். நயன்தாராவோ, போதைப்பொருள் கடத்தும் ‘குடும்பப் பெண்.  இதை ரசிக மனம் கேள்விகளின்றி ஏற்கிறது. ’அடிடா அவளை, கொல்றா அவளை  என பொறுக்கித்தனம் செய்பவனைக் கூட ஹீரோவாக ஏற்போம்… உழைத்து முன்னேறியிருந்தாலும் தாங்கள் கேலிக்குரியதாக நம்பும் உருவத்தில் இருந்தால் கிண்டல் செய்வோம் என்ற ஊடகங்கள் கட்டியமைத்த பொதுப்புத்தி இது. இத்தகைய காட்சிகளுக்கு தியேட்டரில் இடைவிடாமல் கிடைக்கும் கைத்தட்டல்  என்பது, பொதுப்புத்தியின் பொறுக்கித்தனம் என்பதன்றி வேறில்லை. இதை மலிவாக பயன்படுத்தியிருப்பதால் ரசிகர்களை விட இயக்குநரே முதன்மைக் குற்றவாளியாகிறார்.

யோகி பாபுவின் உருவம் கேலிக்குரியதாக… நயன் தாராவின் அப்பாவி முகத் தோற்றம் சந்தேகம் வராத வகையில் போதைப்பொருள் கடத்த ஏற்றதாக… சரண்யாவின் நோய்வாய்ப்பட்ட தோற்றம்… போதைப்பொருள் கடத்தும்போது போலீஸிடம் பரிதாபத்தைக் கோருவதற்காக… – என பல வகைகளில், தனது திரைக்கதையில் மனித வெளித்தோற்றங்களை கையாள்கிறார் இயக்குனர். ஆனால் அதே கதையில் நேர்மையாக இருக்க முயன்று அடிவாங்கி வரும் நயன்தாராவின் வாட்ச்மேன் அப்பா, கேலிக்குரிய ஏமாளியாக சித்தரிக்கப்படுகிறார். மிக திட்டவட்டமாக அறம், நேர்மை, நீதி ஆகியவற்றை எதிர்வரிசையில் நிறுத்தி வைக்கிறார் இயக்குனர். சிரிப்பு எனும் போர்வையில் வரும் இந்த அற்பத்தனங்கள் ஒரு படைப்பாளியின் எழுத்தில் நுழையும் வித்தையை தனியாக ஆய்வு செய்ய வேண்டும் போல!

படத்தின் இறுதிக் காட்சி இதன் உச்சம். வில்லன், நயன் தாராவை வன்புணர்ச்சி செய்ய ஓர் அறைக்கு அழைத்துச் செல்கிறான். நாயகியோ, தான் ரேப் செய்யப்படும்போது தன் குடும்பமும் தன்னைச்சுற்றி இங்கே இருக்க வேண்டும் என்கிறாள். குடும்பம் அழைக்கப்படுகிறது. பிறகு, நயன் தாராவை ரேப் செய்வதற்காக வில்லன்களை ஒவ்வொருவராக அறைக்குள் வரவழைத்து குடும்பம் சகிதமாக கொலை செய்கிறார்கள். உள்ளே சென்ற ஒருவர் கொல்லப்பட்டதும், நயன் தாராவின் தங்கை வெளியில் வந்து ‘தண்ணீ… தண்ணீ’ என்கிறார். உடனே அடுத்த ஆள் உள்ளே செல்கிறார். தியேட்டரே சிரித்து மாய்கிறது.

“பெண் என்றாலே உலகம் செக்ஸுக்கான பண்டமாக பார்க்கிறது. அதையே பயன்படுத்திக்கொண்டு, ஒவ்வொருவராக தன்னை ரேப் செய்ய வரவழைத்து, குடும்பம் சகிதமாக சேர்ந்து கொலை செய்கிறார்கள். இதில் என்ன தப்பு?’ என இதற்கு வேறொரு கோணம் சிலர் சொல்கின்றனர். அது கற்பு என்ற புனித கண்ணோட்டத்தில் இருந்து இதை அணுகுவோருக்கான பதில். மாறாக, ஒரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்படும் கொடூரத்தை சிரித்து ரசிப்பதற்கு உரிய காட்சியாக அமைத்திருக்கும் வக்கிரத்தை எப்படி ஏற்க முடியும்? ஒரு பெண் அடுத்தடுத்து பல ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதை ஒரு நகைச்சுவை காட்சியாக்கி சிரிக்கச் சொல்கிறார்கள். ஒரு பெண்ணை இதைவிட வக்கிரமான காட்சி அமைப்புகளால் கேவலப்படுத்த முடியாது.

“பெண்களின் முடிவெடுக்கும் திறன்” என புகழும் பி.பி.சி., போதைப்பொருள் கடத்துவதை மிகவும் நேர்மறையில் சித்தரிப்பது குறித்தோ, அருவருப்பான உருவகேலி குறித்தோ ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை. நரகலில் நல்ல நரகலைத் தேடும் நல்லவர்களாக பிபிசியை வாழ்த்துவோம்!

ஆனால், இந்தப் படத்துக்கு மிகவும் நேர்மறையில் பாராட்டித் தள்ளி விமர்சனம் எழுதியிருக்கும் பி.பி.சி., “படத்தில் முக்கிய முடிவுகளை பெண்கள் எடுக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறது. “நான் போதைப்பொருள் கடத்துகிறேன்” என்ற முடிவை நயன்தாரா எடுக்கிறார்.  “ஓ.கே., வா, என்னை ரேப் பண்ணு” என வில்லனை அறைக்குள் செல்லும் முடிவை நயன் தாரா எடுக்கிறார். “குடும்பத்தோடு கொலை செய்யலாம்” என்ற முடிவை நயன் தாரா எடுக்க, முதல் ஆளாய் ஆயுதத்தை பயன்படுத்தும் முடிவை எடுக்கிறார் கேன்சர் நோயாளியான சரண்யா. இத்தகைய முடிவுகளை  “பெண்களின் முடிவெடுக்கும் திறன்” என புகழும் பி.பி.சி., போதைப்பொருள் கடத்துவதை மிகவும் நேர்மறையில் சித்தரிப்பது குறித்தோ, அருவருப்பான உருவகேலி குறித்தோ ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை. நரகலில் நல்ல நரகலைத் தேடும் நல்லவர்களாக பிபிசியை வாழ்த்துவோம்!

உண்மையில் கோலமாவு கோகிலா என்ற இந்தப் படத்தின் கதையைவிட, இதை ரசித்து பார்க்கும் ரசிகர்களின் மனநிலைதான் அச்சம் தருவதாக இருக்கிறது. இந்த மனநிலைதான் அனைத்தையும் எளிமைப்படுத்தி உணர்ச்சிவசப்பட்டு கரணம் தப்பினால் மரணம் என பிற்போக்கில் சிக்கிக்கொள்ளும்.

லைக்காவின் தயாரிப்பில் வந்திருக்கும் இத்திரைப்படம் தயாரிப்பாளர் சுபாஷ்கரண் அல்லிராஜாவின் ’பெருமை மிகு’ ஐரோப்பிய தொழில் மோசடிகளுக்கு பொருத்தமானதுதான்.

கோலமாவு கோகிலா வாழ்க்கை எனும் பெருங்கோலத்தை அலங்கோலமாக்கும் ஒரு அயோக்கியத்தனமான அற்பத்தனம் என்பதே இதற்கு நாம் அளிக்கும் அதிகபட்ச நாகரீக விமரிசனம்!

– வழுதி